Thursday, August 27, 2020

 

இல்லறம்

 

சிவானந்தசாகர யோகீஸ்வரர்

 

மாத இதழ்

1920 ஜுலை யில் இருந்து 1921 மே வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 

 

 

 

 

 

சில இதழ்கள் கிடைக்காமையால் எல்லா அத்தியாயங்களுக்கும்  உரிய பகுதிகள் இல்லை.

 


 

தொகுப்பில் உள்ள தலைப்புகள்

 

விவாகம்.. 3

தானம்.. 12

கிரகணகாலபலன்.. 16

விக்கிரகாராதனை. 24

மறுஉலகம்.. 35

 


 

விவாகம்

குறிப்பு:- இதற்க்கு முன் உள்ள பகுதிகள் தொகுப்பிற்கு கிடைக்க வில்லை

 

      மேலே கூறியபடி இந்த விவாகத்தால் பெண்களுக்குப் பயன்யாதோ வெனிற் கூறுதும். விவாகமே ஸ்திரீகளுக்கு உபநயன ஸம்ஸ்காரமாம். உப நயனமென்பது உதவி நேத்திரமென்று பொருள் தரும். அதாவது பரப்பிரமத்தைத் தரிசித்தற்குரிய ஞானக்கண். இந்த உபநயன ஸம்ஸ்காரம் புருஷர்களுக்குக் கர்ப்பத்திலிருந்து எட்டாம் வயது, அல்லது பிறந்தது முதல் எட்டாவது வயதில் செய்யப்பட வேண்டும். அப்பொழுதே பிரமோபதேசமும் செய்வது. அது முதல் அவன் பிரமசரிய விரதத்தை யனுஷ்டித்து வேதாந்த கலைகளையோதி குரு சிஸ்ருஷையைச்செய்யவேண்டும். இதைத்தான் குருகுலவாசம் என்பர். அது முதல் அவன் தன் மாதாபிதாக்களை விட்டுப் பிரிந்து ஒரு குருவையடைந்து, அவரைவிட்டுப் பிரியாம லிருக்க வேண்டும். குருவின் பணிவிடைகளைத் தவறாமல் செய்யவேண்டும். குருவின் கட்டளையை அதிக்கிரமித்து நடக்கக்கூடாது. அந்தக் குருவையே தெய்வமாக வழிபட வேண்டும். அப்படிச் செய்து காயத்திரியா தி மந்திர சித்தியையடைய வேண்டும்; ஊரும் பெயரும் உருவமும் குணமுமில்லாத பரப்பிரமத்தை ஊனக்கண்களால் காண முடியாது. ஆகையால் குருவையே தெய்வ வடிவமாகப் பாவிக்கவேண்டும். இது பிரமத்தின் சகுணசொரூப உபாசனையாம். அவ்வுபாசனையில் நிலைபெற்று மனச்சலன மொழிந்தபின் ஞானத்தால் அறியப்படும் நிர்க்குணப் பிரமோபாசனை செய்ய வேண்டும். இதுவே மோட்சத்துக்கு வழியாகும். அன்றியும் சகல சித்திகளுக்கும் வழியாகும்.

 

ஸ்திரீகளுக்குத் தனியே உபநயன ஸம்ஸ்காரம் கிடையாது. விவாகமே உபநயனமாகும். அதனாலே தான் புருஷர்களுக்கு உபநயனஞ்செய்ய விதிக்கப்பட்ட எட்டாவது வயதிலே பெண்களுக்கு விவாகம் செய்ய வேண்டு மென்கிற விதியேற்பட்டது. இதனாலே விவாகமும் உபநயனமும் ஒன்றே யென்பது புலப்படும். இது பற்றியே, 'உபநயனத்திற் குரியகால மெதுவோ அதுவே ஸ்திரீகளில் விவாகத்துக்கு ஏற்றகாலம்'' என்று வியாக்கிரபாதர் கூறினார். பெண்களுக்கு உபநயனத்திற்குப் பதிலாக விவாகம் நியமிக்கப்பட்டது'' என்று மநு கூறினார். “பெண்களுக்கு விவாகம் செய்வதே உபநயனமாக இருப்பதால் கர்ப்பமுதல் எட்டாவது வயது அல்லது ஜனனம்தொடங்கி எட்டாவது வயது தான் அவர்களுக்கு விவாகத்துக்குரிய காலமென்று யமஸ்மிருதிகூறியது. பெண்கள் பிரமவாதினி, சத்தியோவது என்று இருவகையாவார். பிரமவாதினிக்குக் கிரமமான உபநயனமும், அக்கினியாராதனையும், வேதமோதுதலும், தன் சுற்றத்தார் வீட்டில் பிக்ஷை யெடுத்துப் புசித்தலும் விதிக்கப்பட்டன. சத்தியோவதூ என்பவர்களுக்கு விவாக காலத்தில் உபநயனச் சடங்குகளைச் சுருக்கமாகச் செய்து உடனே முடித்துவிட்டு விவாகச் சடங்கு தொடங்கி நடத்தவேண்டும். இது முன் கற்பங்களில் நடந்தது என்று ஹாரீத ஸ்மிருதி கூறுகின்றது. “முன்கற்பத்தில் ஸ்திரீகளுக்கு மௌஞ்சீபந்தனம் (உபநயனம்) இருந்ததுடன் வேதமோதுதலும், காயத்திரி ஜபஞ்செய்தலு மிருந்தன. அவர்களுக்கு வேதாதி கலைகளை யோதுவிப்பவர் சகோதரர், பிதா, சிற்றப்பன் பெரிய தகப்பன் இவர்களுள் ஒருவரா யிருக்கவேண்டுமே யன்றி அந்நியர் கூடாது. அவ்வாறு படித்துவருகிற பெண் கன்னியாகத்தன் பிதாவின் வீட்டிலிருந்து கொண்டே பிக்ஷையெடுத்துப் புசிக்கவேண்டும். இவைகள் மட்டும் அவர்களுக்கு விதிக்கப்பட்டனவேயன்றிப், பிரமசாரிகளுக் குரியமான்தோல், மாவுரி, சடை முதலியன விதிக்கப்படவில்லை.'' என்று யமஸ்மிருதி கூறுகின்றது. புருஷர்களுக்குச் செய்யவேண்டிய ஸம்ஸ்காரங்களெல்லாம் ஸ்திரீகளுக்கும் செய்ய வேண்டும். ஏனெனில் இவை கர்ப்பத்தாலுண்டாகும் தோஷங்களைப் போக்குமாதலால். ஆனால் விவாகம் ஒன்று மாத்திரமே ஸ்திரீகளுக்கு வேதமந்திர பூர்வகமாகச் செய்விக்க வேண் டும்'' என்று ஸ்மிருதியர்த்தசாரம் கூறுகின்றது. இதனால் பூர்வகற்பங்க ளில் ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்குப் போலவே உபநயனமும் வேதாத் தியயனமும் விதிக்கப்பட்டிருந்தன என்பதும், அவை கர்ப்பந்தொடங்கி அல்லது ஜனனந்தொடங்கி எட்டாம் வயதிலேயே செய்யப்பட்டன வென்பதும் அறியலாகும். ஆதலால் கௌரி விவாகம் பூர்வ கற்பங்களிலும் சிரேஷ்டமாகக் கொண்டாடப்பட்டு வந்தது என்று முணரலாம். இதுகாறும் கூறிய வதனாலே ஸ்திரீகளுக்கு விவாகமே உபநயனம் என்பது புலப்படும்.

 

நாமரூபக் கிரியையற்ற சுத்தப்பிரமத்தைத் தரிசிப்பிப்பதே உபநயனக் கிரியை என்று வேதாதி நூல்கள் கூறுகின்றன. எவ்வாறு தரிசிப்பிப்பது எனில் பிரமத்துக்கு நிர்க்குணம் சகுணம் என்று இருவகைச் சொரூபமுண்டு. நிர்க்குண சொரூபமாவது மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாத சச்சிதானந்த சொரூபம். அந்தச் சொரூபத்தையறிவதே மோட்சமெனப்படும். அது பூர்வமெடுத்த அநந்தகோடி ஜனனங்களிற் செய்த மஹாபுண்ணியாத்மாக்களுக்கே எளிதில் சித்திக்கும். ஏனையர்க்குச் சித்திப்பது அரிது. அவர்கள் சகுணோபாசனை செய்து அதனால் ஞானத்தை யடைந்து பின் நிர்க்குண சொரூபத்தைத் தரிசிப்பது முறை. சகுணமென்பது மனிதரைப்போலக் காசரணாதி அவயவங்களுடன்கூடிய சொரூபம். அதுவேதங்கூறிய உமாசகாயன், இலட்சுமிகாந்தன் முதலிய சொரூபங்கள். இந்திரன் பிரமன் முதலிய பல சொரூபங்களுமாம். இது உபாசனாபலத்தினால் பிரத்தியட்சமாகக் கூடியது. ஆதலால் கஷ்டசாத்தியமாம். விக்கிரகம் முதலிய சொரூபங்களும் அவ்வகையிற் சேர்ந்தனவே. இவையெல்லாம் நெடுநாட்கள் பக்தி செய்து சித்திபெறத்தக்கன. பின்னை உபநயனகாலத்தில் தரிசிப்பிக்கப்படும் சொரூபம் யாதெனில் குரு சொரூபமேயாம். இம்மூன்று சொரூபங்களையும் குருலிங்க பக்தியென்பர். பரப்பிரமசொரூபத்தை யுணர்த்துவது அதையறிந்தவர்க்கே தகுதியாம். இந்தக் குரு சதானந்த நிஷ்டையினால் பிரமத்தோடு ஏகோபவித் திருப்பர். இவரது சரீரம் பிரமத்துக் காலயம் போலும். ஆதலால் குருவே பிரமமாம். அவரை யாராதித்துப் பேறு பெற்றவர்களே பூர்வகாலத்திலுள்ள மஹாரிஷிகள் எல்லாரும். அக்காலத்தில் வேதமோதிக் குருகுலவாசம் செய்து, குருபணிவிடை முடித்து, அவரது அனுக்கிரகத்தினால் சகல சித்திகளையும் அடையாத பிராமணர்கள் காணப்படுவதருமை. தனக்கு எந்தக் குரு கிடைத்தாரோ அவரையே பரப்பிரமமாகக்கருதி வழிபடுவதே பிரமசரிய விரதத்தின் பயனாம். பிராணாயாமத்தினால் வாயுவையடக்கி, மனதையலையாமல் நிறுத்திப் பிரமத்தின் சகுண சொரூபமாகிய குருவடிவை யாராதிப்பதே புருஷர்களுக்கு விதிக்கப்பட்டது.

 

இனி மனதை யலையவிடாமல் ஒரு நிலையில் நிறுத்தி நிர்க்குண சொரூபத்தையோ சகுண சொரூபத்தையோ சிந்திப்பதே யோகமும் தவமுமாம். அம்மனநிலை பெறுவதற்குப் பிராண வாயுவையடக்குவதே உபாயமாமென்பர் ஒரு சாரார். மற்றொருசாரார் வாயுவையொடுக்கி மனதை வசப்படுத்துவது கஷ்டசாத்தியமாதலால், அந்தக் கஷ்டம் சிறிதுமில்லாமலே மனதை ஒடுக்கப்பயில்வதே தகுதியாமென்பர். அதற்குபாயம் ஆசையை அடக்குவதேயா மென்பர். இவற்றுள் பிராணவாயுவை யொடுக்கி யோகசித்தி பெற்றவர் கோரக்கர் முதலியோர். மனதை விஷயங்களிற் செல்லவொட்டாமல் தடுத்து யோக சித்திபெற்றவர் சங்கராசாரியார், அருணகிரிநாதர் முதலியோர்.'' ஆயின் மிக்க அறிவோர் செயலெலாம், நேயமிக்க மனத்தை நிறுத்தல் காண், வாயு நிற்க மனமு முடனிற்கும், தோய நிற்குறி னிற்குந் துரும்புமே. '''காட்டுக் குறத்தி பிரான்பதத்தே கருத்தைப் புகட்டின், வீட்டிற் புகுதல் மிகவெளிதே விழி நாசிவைத்து, மூட்டிக் கபால மூச்சையுள்ளே, யோட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே'' என்பவற்றால் அவ்விருமுறையுங் காண்க.

 

ஆசையை அடக்குவதினாலே மனமடங்கு மென்ற முறையே சிறந்ததாம். மனவுறுதி யுடையவர்களுக்கு இதுவே சிறந்தது. “யாதனின் யாதனி னீங்கியா னோதல், அதனின தனி னிலன்'' என்றதனால் ஒவ்வொரு பற்றும் விடுவது மிகவுநன்று. இம்முறையே பெண்களுக்கு விதிக்கப்பட்டது. எவ்வாறெனின் ஆடவர்க்குக் குருவே தெய்வமாமென்று கூறினோம். பெண்களுக்கு விசேஷமாய்ப் பிதாவே ஏற்படுவர். உபநயனகாலத்தில் குருவைத் தெய்வமாக வழிபடக் கற்பிப்பது போலப் பெண்களுக்கு நாயகனையே தெய்வமாகவும் தரிசிப்பதே விவாகத்தின் முறையாம். பெண்களுக்கு நாயகனே குருவும் தெய்வமுமாம். புருஷன் தன் குருவைத் தெய்வமாகப் பாவித்துத் தியானிப்பது போலப் பெண்கள் தங்கள் நாயகனையே குருவாகவும் தெய்வமாகவுமதித்துத் தியானிக்கவேண்டும். மேலே கூறியபடி பெண்களுக்கு நிலையற்ற மனமே யியல்பாயிருத்தலால் வேறு புருஷர்களைக் குருவாகக் கொள்ளுதல் மறுக்கப்பட்டது. சதா தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதாலும், அவனைச் சிந்திப்பதாலும், அவனுடன் கூடிக்களித்து விளையாடுவதாலும் மனம் ஒரு நிலைப்படும். பெண்கள் அழகு யௌவனம் முதவியவற்றைக் கவனிப்பார்கள். புருஷர்கள் எப்படியிருந்தாலும் அவர்களைக் கண்ட மாத்திரத்தில் ஆசை கொள்வார்கள்'' என்று மநு கூறினார். இந்த விவாகம் அவ்வெண்ணத்தைத் தடுக்கும். இளம் வயதிலே தனக்கென்று ஏற்பட்ட கணவனிடத்தில் அன்பு உண்டாவது இயற்கை. இவ்விவாக சம்பந்தத்தா லிருவர் சரீரமும் ஒருசரீர மாக்கப்படுதலால், கணவனுடனொத்து அவனுடன் கூடிவாழ்வது சாதாரணமாம். ஏனெனில் அவளுடைய காதலெல்லாம் தன் நாயகன் ஒருவனிடத்திலேயே நிலைபெறும். சதாகணவனைச் சிந்திப்பது பெண்களுக்கு இயல்பு. தன் புருஷன் குணங்களையும், செய்கைகளையும், அவன் தனக்குச் செய்யும் உபதேசங்களையும், அவன் சொரூபத்தையும் நினைத்து அதுவே பரப்பிரம்மத்தின் சகுண சொரூபமென்று கருதி யிருப்பது தான் பெண்களுக்கு மனதை விஷயங்களில் செல்லவிடாமல் ஒருவழிப் படுத்தும் உபாயமாம். இதுபற்றியே, ''ஸ்திரீகளுக்கு விவாகமே யுபநயனமாகும். புருஷன் இஷ்டப்படியிருந்து அவனுக்கு ஊழியஞ்செய்வதே குருகுலவாசமாகும். வீட்டின் வேலையைப் பார்த்து வருவதே ஒளபாசனமும் அக்கினி ஹோத்திரமுமாகும்'' என்று மநு கூறினார். இவ்வாறு புருஷனைத் தெய்வமாகப் பார்த்து அவனுடைய பணிவிடைகளைச் செய்வதே பெண்களுக்கு வைதிக கிருத்தியமாகுமென்று வேறு நூல்களுங் கூறின. அவன் கூறியவற்றைத் தடையின்றிக் கேட்டு நடப்பதே வேத மோதுவதாம். இது பற்றியே "கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை" என்று ஒளவையாருங் கூறினார். இதுகாறுங் கூறியவதனால் பெண்கள் உலக ஆசையை ஒழித்துத் தமது மனதை ஒரு நிலையில் நிறுத்துவதற்குத் தகுந்த உபாயங் கூறியவாறாயிற்று. தன்னிடத் தன்புள்ளவனும், தன்னுடைய அன்புக்குப் பாத்திரமானவனும், தான் விரும்பியவற்றை யுதவும் தெய்வமானவனும், இகபர சாதனமானவைகளைப் போதிக்கிற குருவானவனும் இன்ப நாயகனுமான இனிய நாயகனிடத்தில் மனதைச் செலுத்தி, அதன் மூலமாகப் பேரின்ப முத்தியைப் பெறுவதே யிந்தப் பாலிய விவாகத்தால் பெறப்படும் பயனென்று நமது முன்னோர்கள் தமது பேரறிவால் கண்டு கூறினர். யாம் கூறியது பிரத்தியட்சப் பிரமாணங்களைக் கொண்டே யாதலால் பதார்த்தகுண சோதகர்கள் எளிதில் கண்டு கொள்ளக் கூடும். இப்பொழுது கூறிவந்தனவெல்லாம் முதல் வருணத்தாராகிய அந்தணர் மரபைக்குறித்தனவே யாயினும் நால்வருணத்தாருக்கு மொக்கும். ருதுகாலத்துக்குப் பிறகு விவாகம் நடத்து மியல்புள்ள வரும் ருதுவானவுடனே அந்தப் பெண்ணைக் கன்னியாமாடத்தில் வைத்தோ, அதற்குச் சக்தியில்லாதவர்கள் ருதுவான பெண்களை வெளியில் விடாமலும், புருஷர்கள் கண்களுக்குப் படாமலும் காவல் செய்தோ பாதுகாப்பது பிரத்தியட்சம். இந்தக் கௌரி விவாகத்தில் அந்தக்கஷ்டங்களெல்லாமில்லை விவாகம் செய்த அந்தத் தினம் முதல் கணவனுடன் கூடியிருந்து அவனுடைய பணிவிடைகளையும், வீட்டு வேலைகளையும், அக்கினி காரியங்களையும், அருகு பூசையையும், யாசகர்க்குப் பிச்சை யிடுவது முதலான வேலைகளையும், வீட்டில் வேலைக்காரர்களிருந்தால் நயபயங்களால் அவர்களிடத்தில் வேலை வாங்குதலையும் தேவபிதுர் ஆராதனைகளுக் குரியவைகளையும் செய்துகொண்டிருக்க நேர்தலாலும், கணவன் பக்கத்திலேயே யிருந்து கொண்டிருப்பதினாலும் விவாகமான பெண்களுக்கு வேறுவிஷயங்களில் சிந்தை செலுத்துவதற்கிடமில்லை. தாய் வீட்டிலிருந்த போது மாதா பிதாக்களாலும், வம்ச குருவினாலும் கணவனே தெய்வமென்று கருதிப் பூஜிக்க வேண்டு மென்கிற உபதேசத்தைப் பெற்றிருப்பதால் அவர்கள் தங்கள் கணவனையே தெய்வமாக வழிபடுவதில் ஐயமில்லை. விவாகமான பின் கணவனிடத்தில் அவசியமாக வேண்டிய தைவீக சம்பந்தமான விஷயங்களையும் குடும்பப் பாதுகாப்புக்கு வேண்டிய விஷயங்களையும், இதிகாச புராண சாரங்களையும், தர்மசாஸ்திர விதிகளையும் கேட்டுத் தெளிவதிலேயே சித்தம் நாடுமாதலாலும், கணவனுடன் சம்பாஷிப்பதில் அதிகப் பிரிய முண்டாகுமாதலாலும் அப்பெண்ணின் மனம் வேறு விஷயத்தில் செல்லக் காரணமில்லை. மேலே போஜன விதியில் கூறியபடி பிராமணர்கள் போஜனமானபின் இதிகாச புராணங்களைப் படிப்பதிலும் சாஸ்திர விசாரணை செய்வதிலுமே பிற்பகலைக் கழிக்க வேண்டுமென்கிற விதியுளதென்று கூறினோம். அப்போது மனைவியுங் கூட இருந்து அவற்றையுணர்ர்து கொள்வது வழக்கம். இதனால் சகல சாஸ்திரார்த்தங்களுங் கேள்வியாலேயே தெரிந்துகொள்வது நமது பெண்களினியற்கை. இனி முடிந்தது முடிப்பது என்பதனால், கணவனைத் தெய்வமென்று போதித்து அவனை வழிபட்டு மோட்சானந்தத்தைப் பெறும் மார்க்கத்தை உபதேசிப்பதே விவாகத்தின் கருத்தாமென்க, ஆதலால் அதுவே பெண்களுக்கு "உபநயனம்'' என்று சாஸ்திரங்கள் கூறியது பொருத்தமுடையது என்பதும், கணவனும் மனைவியும் ஒரு சரீரத் தன்மையைப் பெறுவார்கள் என்பதும் நன்கு புலப்படும். பெண்களுக்கு மோட்சமடையும் மார்க்கத்தை யெளிதாகக் கண்டு பிடித்துக் கூறிய நமது முன்னோர்களைத் தெய்வமாகவே வழிபடவேண்டும். யாதொரு கஷ்டமுமில்லாமல் உலகத்துக்குரிய சிற்றின்பங்களை வேண்டியவாறே யனுபவித்துக் கொண்டு இகபர வாழ்வுகளிரண்டையும் பெறுவதற்காகவே நமது முன்னோர்கள் இந்த விவாகத்தைச் சிலாக்கியமாக ஏற்படுத்தினார்கள்.

 

குறிப்பு: - மனம் வாயு அம்சமாதலின் வாயு வடங்கின் மன மடங்கும் என்று ஒரு விதியுளது. ஆயினும் பிராணவாயு சூக்கும பஞ்ச பூதங்களின் இரஜோ குண கற்பனையா லுண்டானதாலும், அநித்தியம் ஜடம் ஆதலாலும், அதன் உறவையடியோடு விட்டு அது நாமல்லவென்று தள்ளி, மனத்தின் உற்பத்தி ஸ்தானத்தை யறிய முயன்று, அவ்வழி மனதையடியோடொழிக்கப் பழகுவதே ஞானாப்பியாசியின் உத்தம மார்க்கமாகும். வாயுவை யடக்குவதால் அடங்கும் மனம், வாயு உதிக்கின் மீண்டுதானும் உதிக்கும். மனதிற்கு இச்சை அதாவது ஆசையே சொரூபம்- நினைப்பே வேர்-ஆதலின் ஆசையை யொழிக்க மனமொழியும். இச்சையின்றேல் மனமில்லை. இச்சையுள்ள ஒரு பொருளிலேயே நினைவு எழும் என்பது அனுபவம். ஆகையால் இச்சையை யொழிப்பதாலும், ஆரம்பத்தில் மனம் ஒரேயிடத்தில் நிலைக்கும் வண்ணம் விடாது பழக்கம் செய்வதாலும், பக்தியாலும் ஜபத்தாலும் மனதையுபாசனா மூர்த்தியிடம் நிலைக்கச் செய்யும் பழக்கத்தாலும் உருவமனத்தை (அதாவது மனதின் இரஜோ தமோ குணங்களையடியோ டொழிக்கவேண்டும் - பிறகு நிஷ்டானுபவத்தால் அருவ மனமும் ஒழியும் நிலையில் வந்துவிடும். ஒழிவி லொடுக்கம் யோகக் கழற்சியில் வாயுவை யடக்கும் முறையின் இழிவைத் தெளிவாகக் காணலாம். விரிக்கிற் பெருகும்.

 

பத்திரிகாசிரியர்.

 

இகம் பரம் என்பன விரண்டும் ஒன்றோ டொன்று மாறுபட்டு நிற்பன. இகலோக வாழ்வினையே பெரிதாக மதித்திருப்போர்களுக்குப் பரலோக போக இச்சை விரோதம் செய்யும். அங்ஙனே பரலோக வாழ்வுக்கு இகலோக வாழ்வு விரோதம் செய்யும். இகலோகத்தில் கர்ம தர்மானுஷ்டானங்களை யொழுங்காகச் செய்தாலன்றிப் பரலோக வாழ்வு சித்திப்பதருமை. பரலோகங்களில் சிறந்து வாழ்ந்தாலன்றி மறுபடி நல்ல ஜன்மங் கிடைப்பதருமை. ஏனென்றால் பரலோக வாழ்வுக் குரிய புண்ணிய பாவ சேஷங்களாலேயே உயர்வுந் தாழ்வுமான ஜன்மங்கள் கிடைக்கின்றன; புண்ணிய சேஷத்தால் உயர்ந்த பிறவிகளையும் பாவசேஷத்தால் பசு பட்சி தாவரங்களாதி ஈன ஜன்மங்களையும் ஜீவாத்மாக்களடைகின்றன என்று வைதிக நூல்களெல்லாங் கூறுகின்றன.

 

"வேதக னோதிய வேத விதிக்கே

சாதகர் வானவர் தம்பதிபுக்கே
      மோதக ராயதன் வாழ்வு முடித்தே

வேதிய ராவர்கண் மேதினி மீதே.
          

முன்னைய நல்வினை வாதனை மூளத்
      துன்னுவர் நூல்விதி யான தொடர்ந்தே
      யென்னிலர் மண்மிசை நல்வள மீயத்
      தன்னிகரில்லிதன் னாணை தரித்தே.''
          

முற்றுவர் நல்வினை முற்றிய பின்னர்ப்
      பற்றுவர் வானுய ரும்பதி பற்றித்

துற்றுவர் போக விதம்பல துற்றிப்
      பற்றுவர் பற்றற வீசனற் பாதம்.''

 

என்ற பிரமாண வசனங்களால், வேதநாயகனாகிய சர்வேசுவரனாலருளிச் செய்யப்பட்ட வைதிக விதிகளை யனுசரித்து நடப்பவர்கள் தேவலோகம் சென்று ஆநந்தமுடையவர்களாய் அங்குள்ள போகங்களை நுகர்ந்து, அவை முடிந்த பின் பூலோகத்தில் மானிட வகுப்பில் வேதியராதி உயர் வகுப்பினராய்ப் பிறப்பார்கள். அப்போது பூர்வஜன்ம கன்ம வாசனையால் வேத விதிகளை யனுசரித்துச் சன்மார்க்கத்தி லொழுகிச் சகல ஐசுவரியங்களையு மீசனருளாற் பெற்றுச் சிறந்து வாழ்ந்து ஆனந்த முறுவார்கள். அவர்கள் எடுக்கும் ஜன்மந்தோறு மிப்படியே வைதிகாநுஷ்டானம் செய்து, சொர்க்கத்துக்கு மேலான பிரம விஷ்ணு ருத்திரர்களுடைய பதவிகளையடைந்து அங்கங்குள்ள இன்பங்களை நுகர்ந்து, பின் அந்தப் போகங்களில் வெறுப்புண்டாக, அது காரணமாக மீளாப்பதியாகிய மோட்சமடைவார் கள் என்றும்,

 

"ஈட்டினர் பாவ பேத மிரக்கமி லியமதூதர்

கூட்டிய நரக பேதக் குழிவிழுந் தழுங்கி யாழ்ந்து

மீட்டும் ணிழிந்த யோனி விதமெலாம் விரவி முன்ன
மீட்டிய வரத்தினாலு நரர்தனு வெடுக்கும் போதும்
      

வஞ்சக மனத்தராயும் வாக்கினை யிழந்தோ ராயுஞ்
செஞ்சொலைக் கேட்டு மற்றைச் செவியினை யிழந்தா ராயுந்
தஞ்செயற் கிசையவாணை வழியினிற் சரிப்பர் தாமே.''

 

எனப் போந்த பிரமாணங்களால் பாவங்களைச் செய்தவர்கள் எமதூதர்களால் தள்ளப்பட்ட நரகக் குழிகளில் விழுந்து அழுந்திக் கிடந்து, மறுபடியும் பூமியில் வந்து பலவிதமான ஈன சரீரங்களை யெடுப்பார்கள். அந்த ஜன்மங்களில் ஏதேனும் சிறிது புண்ணியம் செய்திருந்தார்களானால், அது காரணமாக மானிட ஜன்மத்தையு மடைவார்கள். அடைந்தாலும் வஞ்சக நெஞ்சமுடையவர்களாயும், ஊமைகளாயும், செவிடர்களாயும், கண் முதலிய அவயவப் பழுதுடையவர்களாயும், கொடியவியாதியாற் பீடிக்கப் படுகிறவர்களாயுமிருந்து வருந்துவார்கள். இப்படியே பல வகையான தாழ்ந்த பிறவிகளையெடுத்து அலைந்து கொண்டே யிருப்பார்கள் என்றும் பெறப்பட்டது காண்க. அன்றியும்,


      "அறைந்த வதிபா தகமாதி யடைந்தா ரியம னுலகதனைச்
     செறிந்து சிவந்த விழிகண்டு சித்தங் கலங்கிச் செயலழிந்து
     பிறிந்து புணர்ந்து பிலவழியைப் பிடித்துத் தூத ரடித்தெறிய
     மறிந்து நிரயக் குழி வீழ்ந்து வருந்தும் விதத்தை வகுப்பதன் முன்.
    

அறிகமுனிவ வறம் புரிந்தா ரவரு மியம னுலகதனை
     நெறியிற் றரும் பலனிகழ நீடு மகிழ்ச்சி கூடியிடச்
     செறியு முறையு மவர்க்கவனுஞ் செய்யுஞ் சிறப்புந் துறக்கத்தி
     னுறையு முறையுந் தொகை செய்தே யுரைப்பா முலக முவப்புறவே.''

 

என்ற ஆப்த வசனங்களால் மஹாபாதகங்களைச் செய்த பாவிகள் எமலோகம் போய், அங்கே கோபத்தினாலே சிவந்திருக்கிற எமனுடைய குரூரமாகிய திருஷ்டியைப் பார்த்து மனங்கலங்கி, யாதொன்றுஞ் செய்ய முடியாதவர்களாய் நடுங்கி நின்று, பின் எமனுடைய கட்டளையால் தூதர்கள் பிடித்துத் தள்ளத் தலைகீழாக நரகக் குழியில் விழுந்து வருந்துவார்கள். புண்ணியஞ் செய்தவர்களும் மனமகிழ்ச்சியுடன் எமலோகம் சென்று அந்த எமதர்மராஜனுடைய மலர்ந்த சௌந்தரியமான முகத்தைத் தரிசிப்பார்கள். எமன் அவர்களுக்கு உபசாரஞ் செய்து சொர்க்கத்துக்கு அனுப்புவான் என்றும் பெறப்பட்டது.


       "புரிந்துளார் பாவ முன்னும் புக்குமா நிரய மீண்டு

மிகுந்தவா தனையி னாலே யியற்றுவர் பாவம் பின்னும்
      விரிந்திடு மனேக கோடி விதமுறப் பாவ மெல்லாந்
     தெரிந்திடிற் றூல் மாதி திரிவித மாகிச் சேரும்.''

 

என்றதனால் ஒரு ஜன்மத்தினாற் பாவம் புரிந்தவர்கள் நரகம் புகுந்து, அந்தப் பாவத்தின் பயனாகிய துன்பத்தை நுகர்ந்து, அந்தப் பாவ சேஷமாகிய வாசனா பலத்தினால் மறுபடியும் பூமியிற் பிறந்து அளவில்லாத பாவங்களையே மேலுமேலுஞ் செய்வார்கள் என்று பெறப்பட்டது. இந்தப் பிரமாணங்களால் முன் ஜன்மத்தில் செய்த பாவத்தினால் நரக மெய்தினோர் மறு ஜன்மத்தினால் வாசனா பலத்தினாலே இழிந்த ஜன்மங்களையடைந்து நரகமே யடைவார்கள் என்றும், புண்ணியஞ் செய்தவர்கள் சொர்க்கத்தி லின்பநுகர்ந்து, மீண்டும் பூமியில் உயர்ந்த குலத்தில் பிறந்து, அந்த வாசனா பலத்தினால் மேலு மேலும் புண்ணிய கன்மங்களையே செய்து கடைசியில் மோட்சத்தையடைவார்களென்றும் நன்கு புலப்படுகின்றது. இதிற் கண்டபடியே புண்ணிய கன்மங்களைச் செய்ய மனம் ஒருமைப்பட வேண்டும். அங்ஙன் மொருப்படுத்தலுக்குத் தெய்வசகாயம் வேண்டும். அதையடைவதற்குத் தெய்வத்தினிடத்தில் மனமொழிமெய்களால் பத்தி செலுத்த வேண்டும். அந்தப் பக்திக்குச் சகுண பாவனையே சிறந்தது. அந்தச் சகுண பாவனையே பெண்களுக்குப் பதி பக்தியாம். அந்தப் பக்தியை யுபதேசிப்பதே யாம் கூறிய விவாகத்தின் பயனாம்.

 

பதி பக்தியே தெய்வாராதனையாம். சாணத்திலும் மண்ணிலும் கல்லிலும் உலோகங்களிலும் ஆவிர்ப்பவித்து அன்பர்க்கு அனுக்கிரகம் செய்யும் பரம் பொருள் சேதனனாகிய மனிதனிடத்தில் எளிதிற் பயன்படும். அது பற்றியே ஆடவர் மகளிரிருவருக்கும் மனிதனாகிய குரு சொரூபத்தைத் தியானித்துச் சிந்தித்து வழிபட விதிக்கப்பட்டது. அந்தக் குருவடிவமே சகுண தெய்வ வடிவமாம். இவ்வாறு சதிபதிகள் இருவருந் தத்தங் குருவடிவான தெய்வத்தை யாராதனை செய்ய வேண்டு மென்பதே ஆரியோத்தமர் கண்டு பிடித்த சன்மார்க்கமாம். முன் சரீர வியல்பிற் கூறியபடியே பெண்களுடைய சரீரத்தில் உதர பேதமாகிய இரஜஸ் அதிக அளவினையுடையதா யிருக்குமென்றும், அது பேதைப் பருவங் கடந்த பொழுது சிரசினின்றும் மனோவேக மென்ற நாடியின் வழியே கீழ்நோக்கி யிறங்குமென்றும், அப்போது முகத்தில் பளபளப்பு முதலிய அழகும் வசீகர சக்தியு முண்டாமென்பதும், அது மார்பினிடத்திலுள்ள இரண்டு பைகளை நிரப்பி அதனைப் பூரிக்கச் செய்து பின் கீழ் நோக்கிச் செல்லும் என்பதும், அது செல்வதற்கு அடையாளம் அது செல்லும் மார்க்கத்தில் உரோமம் வளரும் என்பதும், அதுவே ரோம ரேகை யென்று பண்டிதர்களாற் புகழ்ந்து வர்ணிக்கப்படு மென்பதும், கர்ப்பாசயத்தில் பிரவேசித்து அதைப் பூரிக்கச் செய்து அதன் வாயிலைத் திறந்து பின் வெளிப்படு மென்பதும், அதனையே இருது என்று கூறுவது என்பதும் ஈண்டு பயன் படுத்தத்தக்கது; இவ்வாறு வெளிப்படுதற்கு, எட்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையுமாகிய ஆறு வருஷங்களாகும். ஏழு எட்டு ஆகிய இரண்டு வருடங்களும் பெண்களுக்குப் பேதைப் பருவமென்று கூறப்படும். ஏனென்றால் உலக வழக்கு இன்னது என்று அறியாமலே, புருஷன் பெண்சாதியாகத் தானுமிருக்க வேண்டு மென்கிற கருத்துமுண்டாகும். அப்பருவத்தில் பெண்ணின் மனம் களங்கமற்றதாயும், கபடமற்றதாயும், பரிசுத்தமானதாயும், காரணம் தெரியாமலே, மற்றைய மங்கை மடந்தைப் பருவத்தினரைப் போலவே தானும் நாயகனுடன் கூடி வாழவேண்டு மென்கிற ஒரே எண்ண முண்டாகும் பருவம் அப்பருவமாதலால், அதுவே தன் பதியாங் குரு நாயகனையடைதற்குரிய பருவமாம். உலக வழக்கு அறிந்தும் அறியாமலு மிருக்குங்காலமாதலால் அதனைப் பேதைப் பருவமென்று கூறினர். "உலா' என்னும் பிரபந்தங்களில் பெண்களின் ஏழு பருவ விலக்கணம் நன்கு விளக்கப்பட் டிருப்பது காண்க.

 

களங்க மற்றதாயும், வேறு சொரூப சிந்தனை யில்லாததாயு மிருக்கிற பருவத்தில் தனக்கென ஏற்பட்ட நாயகனிடத்தில் அதிக அன்பும் பயமும் விசுவாசமும் இயல்பாகவே ஜனிக்கும். அப்போது தன் நாயகனுடைய சொரூபம் நன்றாய்ப் படியும்; பசுமரத் தாணிபோல் நிலை பெறும். அது வயது ஏற ஏற மனமாதிக்கருவிகள் உறுதி பெறும் போது இதுவும் உறுதிப்படும். வேறிடத்தில் சித்தம் நாடாது. தன் நாயகனிடத்திலேயே மனம் நிலைபெறும். பெறவே மன மொருமைப்பட்டதாம். படவே பரம யோகிகளாற் சாதிக்கப்படும் மனவடக்கமென்பது சித்திக்கும். இந்த மனவடக்கம் பெற்ற பெண் தன் புருடனுக்குச் செய்யும் பணிவிடைகளெல்லாம் தெய்வாராதனையாகவே முடியும். இத்தன்மை வாய்ந்த மனைவி யிடத்தில் நாயகனுக்கும் கரை கடந்த அன்பும் ஆசையு முண்டாம். அப்போது இருவர் மனமும் ஒரே மனமாகும். இவ்வாறு ஒருமைப்பட்ட மனத்துடன் சதிபதிகளிருவருங் கூடிச்செய்யும் கருமங்க ளெல்லாம் சித்தி பெறும்.

 

அநசூயை துவாதச வருஷக்ஷாமத்தில் தன் ஆசிரமத்தில் வளங்குன்றா திருக்கும்படி மேகங்களை யுண்டாக்கி மாத மும்மாரி பெய்யும்படி செய்ததும், நளாயினி சூரிய னுதியாம லிருக்கும்படி சபித்ததும், தமயந்தி வேடனைச் சாம்பலாம்படி யெரித்ததும், சாவித்திரி இயமனை வென்று தன் கணவனை மீட்டதும், அக்கினி தேவனுடைய மனைவி அருந்ததியின் சொரூபத்தை அடைய முடியாமற் செய்ததும், சந்திரமதி காட்டுத் தீயை அணைத்துச் சென்றதும், சீதையும் திரௌபதியும் பகைவரை வென்று சீர்பெற்றதும், இன்னம் கூறப்படும் கற்புடைய அற்புத வனிதையரின் மகிமைகளும் இந்த மாதிரியான தெய்வ ஆராதனையால் தான் உண்டாயின. சரியான நெறியில் நடக்கும் மனத்திண்மை யுடைமை மாதா பிதாக்களின் உபதேச மகிமையாலும் இதுண்டாகும். இதுக்ஷத்திரிய வைசியராதி யோர்க்கேயாம். இதன் பிரிவு ஊகித் துணரக் கூடியதாம். இத்தகைய விவாகத்தால் ஒருமைப்பட்ட தம்பதிகளே சகல கருமங்களையு மியற்றவும் இகபர மோட்ச வாழ்வுகளைப் பெறவும் தக்கவர்களாவர்.

 

வதூவரர் இருவரும் தாமே மனமொத்துக் கலப்பதாகிய ஓர் விவாகம் கேட்கப் படுகின்றது. அது காந்தர்வ விவாகத்திலடங்கும். கந்தர்வர் என்பவர் தேவஜாதியில் ஒரு கூட்டத்தார். அச்சாதியில் கொள்வாரும் கொடுப்பாருமின்றி வதூவரர் இருவரும் மனமொத்துக் கலப்பது வழக்கம். அப்படியிருந்தாலும் அவர் ஜாதியிலும் பிராம்ம விவாகமே சிலாக்கிய மென்று கொண்டு, முறைப்படி நடத்தப்படுவதை நூல்களாற் காண்கிறோம். இந்த விவாகம் பூவுலகில் க்ஷத்திரியரால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. யாதாவதோர் காரணத்தால் தன் கூட்டத்தாரை விட்டுப் பிரிந்து வந்த பெண்ணும், அவ்வாறு வந்த பிள்ளையும் கண்ட மாத்திரத்திலேயே காதல் வசப்பட்டவர்களாய் இருவரும் மனமொத்துக் கலப்பதும் காந்தர்வ முறையாம். இதனைத் தெய்வப் புணர்ச்சியென்பர். இங்ஙனம் கூடிய இவர்களும் பிறகு அக்கினி சாட்சியாக விதிப்படி மணம்புரிந்து கொள்ள வேண்டியவர்களே.

 

இதையன்றி மாதா பிதாக்களின் உதவியின்றிப் பெண்ணும் பிள்ளையும் ஒருவரோ டொருவர் தத்தம் காதலைக் கூறி யிருவரும் சம்மதப்பட்டு மணம் புரிவது மோர் வழக்கம். அது இக்காலத்தில் அந்நிய நாட்டாரால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது வைதீகர் கூறும் எண்வகை மணங்களில் சம்பந்தப்படாத ஓர் முறை. இதில் அநேக கெடுதிகளுள. அவைகளைப் பற்றி நாம் ஈண்டுக் கூறுவது அவசியமன்று. அம்முறை வைதீகர்களாகிய நமக்குத் தகாது என்பது மாத்திரமே யீண்டு நாம் கூறத்தக்கது.

 

நாம் முற்கூறியவை யெல்லாம் பாவபுண்ணிய கன்மங்களுண்டென்றும், அவற்றின் பயனையனுபவிக்க நரகசொர்க்கங்களுளவென்றும், அது காரணமாக மாறி மாறிப் பற்பல வகையான ஜன்மங்களை ஜீவாத்மாக்களடையு மென்றும், இவற்றை யெல்லாம் கூட்டுவிக்க ஒரு தெய்வ முண்டென்றும் வேதாதிகள் கூறும் பிரமாணங்களை நம்பியே யேற்படுத்தப் பட்டன. யோக சித்தியால் சர்வாண்டங்களையு மிருந்த விடத்திலிருந்தே யுணரும் பரமசக்திவாய்ந்த நமது முன்னோர்கள் தமது பேரறிவால் கண்டறிந்து யாவும் கூறினார்கள். இதனை ஒப்பியே நித்திய நைமித்திக காம்யகர்மங்கள் ஏற்பட்டன. கிரமப்படி விவாக சம்பந்தம் பெற்ற புருஷன் மேற்குறித்த மூவகைக்கன்மங்களையும் செய்யத் தக்கவன். இவற்றுள் நித்தியகன்மமே விடாது செய்யத்தக்கது. நைமித்திகம் ஒரு நிமித்தம் பற்றிச் செய்வதால் அது ஏனையவற்றுக்குப் பயன்படாது. காமிய கர்மம் சொர்க்காதிபுவனங்களையும் இகலோக வாழ்வையும் உத்தேசித்துச் செய்வதால் அதுவும் அவ்வளவு சிறந்ததன்று. அது கருதிய பயனை மாத்திரம் கொடுத்து ஒழியும். நித்தியகன்மமோ அவ்வாறன்றி மோட்சத்துக்குச் சாதகமானதால் அதை விடாது செய்யவேண்டும். அது சந்தியோபாசனை, அக்கினி ஆராதனை வேள்விகளா தியன. தானம் கொடுப்பதும் காமியத்திலேயே யடங்கும். ஆயினும் அர்த்தோதயம் மகோதயம் கிரகண புண்ணியகாலம் இவற்றில் செய்யப்படும் கர்மங்கள் அனந்த பலனைத் தருமாதலால் இக்காலத்தில் தேவிபிதுர் தர்ப்பணங்களைச் செய்து, சற்பாத்திரத்தில் தானம் செய்வது தகுதியுடையது. அர்த்தோதயமாவது தைமாதம் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திருவோண நட்சத்திரம் மூன்றுங் கூடிய காலம். இது திங்கட்கிழ மையில் நேர்ந்தால் மகோதயம். இத்தினங்களில் உதயகாலத்தில் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சற்பாத்திரத்தில் தன்னாலியன்றதைத் தானம் செய்வது கிரகஸ்தர்களுக்குப் பெரும்பயனைத் தருமென்று நூல்கள் கூறுகின்றன. இப்புண்ணியகாலம் பலவருஷங்களுக் கொருமுறை உண்டாகக்கூடியது. இம்மூன்றும் அடிக்கடி கூடிவருவது கிடையாது. ஆதலால் மறுமையை உத்தேசித்த கிரகஸ்தன் இந்தப் புண்ணிய தினங்களில் விதிப்படி தானங்களைச் செய்ய வேண்டும். தினந்தோறுந் தானம் செய்வதை முன்னரே கூறினோம். இனிக்கிரகண புண்ணியகாலத்தைப்பற்றிச் சிறிது கூறுவாம்.

தானம்

இல்லறம் புரிவார்க்குத் தானம் என்பது சிறந்த தர்மம். தான மென்பதைச் சகலரும் புகழ்கிறார்கள். தானத்தால் சாதிக்க முடியாத தொன்றுமில்லை. உலகத்தி லெல்லாருங் கொடுப்பவனையே யடுத்துப் பிழைக்கிறார்கள். தானத்தால் பகைவர்களையும் விலக்குகிறார்கள். தானத்தால் சத்துருவும் நண்பராகின்றனர்.'' என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.'' ஒருவன் தன்னை யாசித்தவுடனே அசூயை யின்றிக் கிஞ்சித்தேனும் கொடுக்க வேண்டும்'' என்று மனு கூறினார்." தன் சக்திக்குத் தக்கபடி தினந்தோறும் தானம் செய்ய வேண்டும்'' என்று யாக்ஞவல்கியர் கூறினார்.'' தானம் நித்தியம், நைமித்திகம், காமியம், விமலம் என்று நான்கு வகைப்படும். பிரதி பிரயோசனத்தை விரும்பாமலும், அவனிடத்தில் உபகாரத்தை அடையாமலும் சத்பாத்திரத்தில் தினந்தோறுங் கொடுக்கப்படும் தானம் நித்தியமெனப்படும். பாப நிவிர்த்திக்காக வேத முணர்ந்த வித்வானுக்குக் கொடுக்கப்படும் தானம் நைமித்திகம் என்னப்படும். சந்ததி, ஜயம், ஐசுவரி யம் இவற்றை விரும்பிச் செய்யப்படுந்தானம் காமியதானம் என்னப்படும். கடவுளின் அருளை உத்தேசித்து வேத வேதார்த்தங்களை உணர்ந்தவர்கருக்குக் கொடுக்கப்படுவது விமல மென்று கூறப்படும்" என்று வியாசர் கூறினார்.'' குருக்ஷேத்திரம் முதலிய புண்ணிய க்ஷேத்திரங்களிலும் தீர்த்தக்கரைகளிலும், சூரிய சந்திரகிரகணம் முதலிய புண்ணிய காலங்களிலும் தனக்கு உபகாரம் செய்யாத ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகமாம். பிரதியுபகார முதலிய பிரயோசனத்தை விரும்பிச் செய்யப்படுந்தானம் ராஜஸமாம். தேசகால நியமமின்றித் துர்ப்பாத்திரத்தில் கொடுப்பது விதிமுறை தவறியதாதலால் அது தாமஸ மென்னப்படும். ஸாத்விக் தானத்தால் தேவத் தன்மையை யடைவான். ராஜஸ தானத்தால் மனுஷ்யதத்துவத்தைப் பெறுவான். தரமஸ தானத்தால் மிருகதத்துவத்தை யடைவான்'' என்று கூறினார்.

 

அதிர்ஷ்டத்தினாலும் பிரயத்தினத்தினாலும் ஒருவனுக்குப் பொருள் கிடைத்தால் அதைச் சற்பாத்திரத்திலும் நன்மார்க்கத்திலும் செலவிட வேண்டும். தானம் கொடுப்பவன் தற்புகழ்ச்சி செய்து கொள்ளக் கூடாது. கொடுத்த பின் மனம் வருந்தவும் கூடாது. அப்படிச் செய்தவன் நரகத்தையடைவான். வேதம் சர்வ தர்ம மயமாயும், சர்வ தேவ சொரூபமாயுமிருப்பதினால் வேத முணர்ந்தவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். அவன் வேதமோதுவதினால் சகல பாபங்களையுமெரித்துத் தன்னையும் கொடுத்தவனையும் காப்பாற்றுவான். முன் ஜன்மத்தில் யாசகர்களுக்கு இல்லை இல்லை'' என்று சொன்ன சொல்லே இந்த ஜன்மத்தில் பிறரைக்'' கொடு கொடு' என்பதாகப் பரிணமிக்கின்றது. ஆதலால் தானம் அவசியம் செய்ய வேண்டும். அதுவும் சத்பாத்திரத்திலேயே கொடுக்க வேண்டும். காராம் பசு, குதிரை, எள்ளு, கஜம், இரதம், பணிவிடைப் பெண், வீடு, கன் னிகை, சொர்ணம், இரத்தினம் இவை பத்தும் மஹா தானங்கள் என்னப் படும். யாசகன் எதை விரும்புகிறானோ அதுவும், தன் வீட்டில் எது அதிகமாக இருக்கிறதோ அதுவும் பாத்திர மறிந்து கொடுக்கத் தக்கவைகளாம். ஜலம், எள்ளு, தீபம், சொர்ணம், வீடு, வஸ்திரம், வெள்ளி, குதிரை, எருது, கோ, வாகனம், படுக்கை, கன்னிகை, நவதானியம், இவை எல்லாம் தான யோக்கியமானவை. பாதரக்ஷை, குடை, சந்தனம், புஷ்பம் இவைகளையுந் தானங் கொடுக்கலாம். எல்லா தானங்களிலும் மேலானது அன்னதானம். ஏனென்றால் சகல பிராணிகளும் அதனாலேயே நிலைபெறுகின்றன. "தானம் கேளாதவனுக்கே கொடுக்க வேண்டும். ஆனால் அன்னம், வித்தை, கன்னிகை இவைகளைக் கேட்பவனுக்கே கொடுக்க வேண்டும்'' என்று சாண்டில்யர் கூறினார். "தானம் செய்யப்படுவது சொற்பமாயினும், அதிகமாயினும் மேன்மையில்லை. பக்திசிரத்தையுடன் கொடுப்பதினாலேயே பலனுண்டாகின்றது. தானத்துக்கு ஆறு அங்கங்களுண்டு. அவை கொடுப்பவன், ஏற்பவன், சிரத்தை, தெய்வம், தேசம், கால மென்பனவாம். கொடுப்பவன் களங்க மற்றவனாயும் கொடுப்பதில் சிரத்தை யுள்ளவனாயு மிருக்க வேண்டும்; ஏற்பவன், யாசியாதவனாயும், வேத முணர்ந்தவனாயும், ஆஸ்திக புத்தியுள்ளவனாயும், ஏழையாயும் இருக்க வேண்டும். அன்னதானம் எல்லாருக்கும் செய்யலாம். நைமித்திக தானமும், காமிய தானமும் வேதமுணர்ந்தவர்களுக்கே செய்ய வேண்டும். பொய் கூறுகிறவன், பேராசையுள்ளவன், திருப்தி யில்லாதவன் இவர்களுக்குக் கொடுப்பது பலன் தாராது'' என்று தேவலர் கூறினார். ஜலதானம் உத்தமமென்றும், அதற்காகக்கிணறு குளங்களை வெட்டி வைக்க வேண்டும் " என்றும் மனு கூறினார். ஆதலால் இகலோக பர வாழ்வுகளை விரும்புகிறவன் சற்பாத்திரத்தில் தானம் செய்ய வேண்டும்.

 

"சற்பாத்திரமாவது - வேதம் வேதார்த்த மறிந்தவன், அத்துடன் நித்திய கர்மானுஷ்டானந் தவறாமல் நடப்பன் தானபாத்திரமாவான்'' என்று ஸ்மிருதிசாரம் கூறுகின்றது.'' ஒன்றுந் தெரியாத மூடர்களை விடப் படிக்கமாத்திரந் தெரிந்தவர்கள் உயர்வு; அவர்களை விடப் படித்துப் பொருளுணர்ந்தவர்க ளுயர்வு; அவர்களைப் பார்க்கிலும் அதன் அர்த்த முணர்ந்தவர்களுயர்வு; அவர்களை விடப் படித்து அறிந்து அவைகளின் அர்த்தங்களைப் பிறர்க்குத் தெளிவாய் விளக்கத்தக்கவர்க ளுயர்வு'' என்று ஸ்மிருதியர்ணவம் கூறுகின்றது. வித்வானும், தர்மசீலனும், இந்திரியங்களை ஜயித்தவனும், பொறுமை, சாத்தியம், நன்றியறிவு, வேதாத்தியயனம், நிலை பெற்ற புத்தியிவைகளுடன் பிரமானுஷ்டான முள்ளவனுமே தானபாத்திரமா மென்று யமஸ்மிருதி கூறுகின்றது. நற்குலத்திற் பிறந்து, பாபத்திற்குப் பயந்து கர்மானுஷ்டானம் செய்பவன் தான பாத்திரமாம் என்றும், அவன் பெண்டிர் வழியில் நடவாதவனாயு மிருக்க வேண்டும் என்றும் பெரியோர் கூறுகின்றனர். தபசு, வித்தை இவ்விரண்டையும் உடையவனே தான பாத்திரமா மென்றும், இவ்விரண்டில் ஒன்று குறைந்திருந்தாலும் அவன் தான் பாத்திரமாகானென்றும் யாக்ஞவல்கிய ஸ்மிருதி கூறுகின்றது, சிலர் தவம் செய்கிறவன் தான் தானபாத்திர மென்றும் வேறு சிலர் வேதமறிந்தவனே தானபாத்திரமா னென்றும் கூறுகின்றார்கள்; ஆயினும் பரான்ன போஜனம் செய்யாமலும், இழிந்தவர்களிடத்தில் ஒன்றும் வாங்காதவனு மெவனோ அவனே தானபாத்திர மாவான் என்று சாதாதபஸ்மிருதி கூறுகின்றது. 'சீலம், சௌசம், அறிவு இம்மூன்றுடன் வேதா த்தியாயன முள்ளவனே தான பாத்திர மாவான். சீலம் அவனுடன் கூடவே வசித்தலாலும், சௌசம் நடக்கயைப்பற்றி நிற்கும்; அறிவு அவன் வசனங்களால் விளங்கும். ஆதலால் இம்மூன்றாலும் பரிட்சித்துத் தான பாத்திரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்'' என்று தேவலர் கூறினார். "அப்பிராமணன், சுரோத்திரியன், வேதத்தை முற்றிலுமறிந்தவன் இவர்களுக்குக் கொடுப்பது முறையே சமம், ஆயிரம், அனந்தம் என்கிற பலனைக்கொடுக்கும்'' என்று கௌதமர் கூறினார் "முதலில் குருவுக்குக் கொடுக்க வேண்டும், பிறகு பாத்திரமறிந்து பிறருக்குக் கொடுக்க வேண்டும் " என்றும், "குருவில்லாவிட்டால் அவர் புத்திரன், அல்லது அவரது மனைவி, பெண், பெளத்திரன், தெளஹித்திரன், அவர்களில்லாவிட்டால் குருவின் குலத்திற் பிறந்தவன் இவருக்குக் கொடுக்க வேண்டும். இவர்களை விட்டுப்பிறருக்குக் கொடுத்தவன் நரகத்தை யடைவான் " என்றும், தகப்பனுக்குக் கொடுப்பது நூறு பங்கு பலனையும், தாயாருக்குக் கொடுப்பது ஆயிரம் பங்கு பலனையும், புத்திரிக்குக் கொடுப்பது குறைவற்ற பலனையும், சகோதரி, சகோதரி மகன், மாமன், அத்தை, ஏழையான பந்துக்களிவர்களுக்குக் கொடுப்பது கோடி பங்கு பலனையும் அளிக்கும்! என்றும் வியாசர் கூறினார். ''உபகாரஞ் செய்பவன், தீனன், அநாதன், சிஷ்டன் இவர்களுக்குக் கொடுபடுவது குறைவற்ற பலனைக் கொடுக்கும்; இராஜஹிம்சையால் சொத்து மனைவிகளை யிழந்து வருந்துகிறவர்களுக்குக் கொடுப்பது மகத்தான பலனைத் தரும்'' என்று தக்ஷ ஸ்மிருதி கூறுகின்றது. விசனம், கசடன், தன் குடும்பரக்ஷணம் இவற்றினால் வருந்துகிறவர்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டுமென்று அவரே கூறினார். "தன் சமீபத்திலிருக்கும் தான பாத்திரத்தைவிட்டு வேறொருவனுக்குக் கொடுப்பானானால் அவனும் அவனுடைய எழுதலை முறைகளும் பாபத்தையடைந்து நரகில் வருந்துவார்கள். தன் சமீபத்திலிருக்கும் வித்வானை விட்டு, அயலூரிலிருப்பவனையழைத்துக் கொடுப்பவன் ஜன்மம் கழுதையாய்ப் பிறப்பான். மூடன் சமீபத்திலும் வித்வான் தூரதேசத்திலுமிருந்தாலும் அந்தவித்வானுக்கே கொடுக்க வேண்டும். அதனால் தோஷம் வாராது " என்று ஆபஸ்தம்பரும் சாதாதபரும் கூறினார். இதனால் தானபாத்திரத்தையறிந்து தகுந்த தேசகாலங்களில் கொடுக்கப்படும் தானத்தினால் கர்த்தா பாபத்தினின்றும் விடுபட்டுச் சொர்க்கத்தை யடைவான் என்று விளங்குகிறது. இதனால் யாம் அறிந்து கொள்ளத்தக்கது வித்வானும் கர்மானுஷ்டான முள்ளவனுமே தான பாத்திரமாமென்பது. இவர்கள் வேதாத்தியாயனத்தினாலும் கர்மானுஷ்டானத்தினாலும் கொடுத்தவருடைய பாபத்தையு மெரித்து விடுவார்களென்பது நூல்களின் கருத்தா மென்பதே. வேதத்தில் பாபஹரமான மந்திரங்களும், சகல தேவ சொரூபங்களும், அவர்களுக்குரிய மந்திரங்களும், ஞானமும் கூறப்பட் டிருக்கின்றன. அவ்வேதத்தை இடைவிடாமல் ஓதுகிறவர்கள் அம்மந்திரங்களை ஆவர்த்தி செய்தும் தெய்வ சொரூபங்களைச் சிந்தித்தும் வருவார்கள். ஆதலால் அவர்களைப் பாவம் அணுகாது. அன்றியும் அவர்கள் பரிகிரக தோஷ நிவிர்த்திக் குரிய பிராயச்சித்தங்களை யுணர்ந்து பரிகாரமும் செய்து கொள்வார்கள். ஆதலால் எந்தப்பாப நிவிர்த்திக்காகத் தானங் கொடுக்கப் படுகிறதோ, அந்தப்பாபத்தை நெருப்புத் துரும்பை யெரிப்பது போல் எரித்து விடுவார்கள். அதனால் கொடுத்தவனும் தன் பாபத்தினின்றும் விடுபடுகிறான். வாங்கினவனும் வாங்கின பாபத்தினின்றும் விடு படுகிறான். இதனையறிந்து தானம் செய்ய வேண்டு மென்பதற்காகவே தரனம் தான பாத்திர மிவற்றை நூல் முறை கொண்டு விரித்தோம். இக்கலி காலத்திலும் வைதிக முறை பற்றி யொழுகுவோர் அநேகராதலால் அவர்கள் முறையறிந்து செய்து கொள்ளும் பொருட்டே விரிக்கப்பட்டது.

 

இனி இந்தத் தானத்திற்குத் தேசமும் காலமும் வேண்டும். புண்ணிய க்ஷேத்திரங்களும் புண்ணிய தீர்த்தக் கரைகளுமேயிடமாம். தெய்வ சந்நிதியுமாம். காலமோ பல. அவை அர்த்தோதயம், மஹோதயம், அயனப் பிறப்பு, மாதப் பிறப்பு, விஷு, அமாவாசை, பூர்ணிமாவாசை, சூரிய சந்திரக் கிரகண காலம், முதற் பலவாம். அர்த்தோதய, மகோதயம் முன்னமே கூறப்பட்டன. அயனப் பிறப்பு என்று உத்தராயண தக்ஷணாயனப் பிறப்புக் காலங்களாம். உத்தராயணம் தேவர்களுக்குப் பகலென்றும், தக்ஷிணாயனம் இரவென்றுங் கூறப்படும். இரவு சந்திரனுக் குரியது. பகல் சூரியனுக் குரியது. இக்காலங்களின் ஆரம்பத்தில் செய்யப்படுந் தானம் சிரேஷ்டமான தென்று நூல்கள் கூறுகின்றன. இக்காலத்தில் விசேஷமாய்ப் பிதிர்த்தேவர்களை யுத்தேசித்துத் தர்ப்பணாதிகள் செய்து தானம் கொடுப்பது முறை. இதில் பிதிர்க்களும், தேவர்களும் திருப்தியடைகிறார்கள். அமாவாசை பூர்ணிமாதிதிகளும் அவ்வாறேயாம். இதில் யாருக்கும் சந்தேகமிருப்பதில்லை. ஆதலால் அதை விடுத்துக் கிரகணகாலத்தைச் சிறிது கவனிப்பாம்.

 

கிரகண காலமென்பது சூரிய சந்திரர்கள் மறைபடுங் காலமாம். மேகத்தினால் சூரிய சந்திரர்கள் மறைபடுவது போலவே கிரகண காலமுமாதலால் இதில் விசேஷம் யாது? சூரிய சந்திரர்களை இராகு கேதுக்க ளென்னும் பாம்புகள் விழுங்குகின்றன வென்று, கூறுவ துண்மையோ? இக்காலத்தில் என் உபவாச மிருக்க வேண்டும்? தான தர்ப்பணங்கள் செய்வானேன்? அவற்றால் பயன் யாது? என்பது பெருஞ் சந்தேகமாம். இதில் சம்சயப்படுகிறவர்கள் நாஸ்திகர்களும் புற மதஸ்தர்களுமாம். அதனால் பல பல யுக்திகளடங்கிய கேள்விகள் கேட்கப் படுகின்றன. அக்கேள்விகளால் ஆரியர்களிலும் பலர் மயங்குவார்கள். அது பற்றிக் கிரகண காலத்தைப் பற்றிச் சிறிது ஆராய்ச்சி செய்வாம்.

 

முன்னமே சூரிய கிரகணங்கள் வெப்பமுடையதாதலால் அது விஷமுடைய தென்றும், குளிர்ச்சியுள்ள சந்திர கிரகணங்கள் அமுதமயமாமென்றுங் கூறினோம். இதைக் கவனத்தில் வைக்க வேண்டும். இராகு கேதுக்களென்பன சாயா கிரகங்க ளென்னப்படும். அதாவது நிழல் சொரூபம் எனவே அவற்றுக்கு ஒரு தனி வடிவம் கிடையாது. இதனாலேயே கேரள ஜோதிஷ சாஸ்திரத்தில் இராகு கேதுக்களை நீக்கிச் சூரியாதி ஏழுகிரகங்களைப் பற்றியே பலன் கூறப்படுகின்றது. பாம்புக ளென்பன சாயையாதலால், அவை கிரகங்களாகா வென்பதே அதன் கருத்து. அவை யவற்றின் நிழல் என்றால் பூமி சந்திரன் இவற்றின் நிழலேயாம். அந்நிழல் பாம்பைப்போலிருக்கும். பூமியிலோ சந்திரனிலோ இருந்து வருகிற நிழல் அவற்றின் சமீபத்தில் அதிக விசாலமாய்ப் பரவி யிருக்கும். கீழே போகப் போகக் குறுகிச் செல்லும். போகப் போகக் குறுகுதலால் அது பாம்பைப் போல தலைப்புறம் பருத்துப் கீழ்ப்புறம் சிறுத்தும் பாம்பைப்போல நீண்டிருக்கும். நுனி எலியின் வாலைப்போலச் சிறுத்துக்கடைசியில் நிழலேயில்லாமற் போம். அதிகாலத்துச் சோதிடர் இதனை உவமை பற்றிப் பாம்பு என்று கூறினார். கவிவாணர்களும் காவியகர்த்தர்களும் தங்கள் வர்ணனைக்கு யோக்கியமாயிருப்பது பற்றிப் பாம்பென்றே சாதித்து அதன் குணம் தொழில் சொரூபம் முதலியவற்றைப் புகழ்ந்து பேசினார்கள். சோதிடம் முதலிய சாஸ்திர வாராய்ச்சியும் அதிற் பயிற்சியுமற்றுப் போனபின் உள்ளவர்கள் அவற்றைப் பாம்பென்றே நிச்சயித்து விட்டார்கள்.

கிரகணகாலபலன்

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் செல்லும் போது சந்திரனிபடத்திலுண்டாகும் நிழல் சூரியகிரணங்களால் சிவந்து தோன்றுமாதலால் அதைச் செம்பாம்பு என்றார்கள்; இது கேதுவாம். கேது என்பது நெருப் பைப்போன்ற நிறமுடையது என்றர்த்தந்தரும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் மத்தியில் பூமி வரும்போது பூமியினாலுண்டாகும் நிழல் கறுத்துத்தோன்று மாதலால் அதைக் கரும்பாம்பு என்று கூறுகின்றார்கள். இதுவே இராகுவாம். கிரகங்கள் சுழல்வதனா லுண்டாகும் மாறுதலால் இந்நிழல்கள் முறையே பன்னிரண்டுராசிகளிலும் தாக்குதலால் அது அவ்வவிராசியில் வசிப்பதாகக் கூறப்படும். அவ்விராசியில் வசிக்கும் மற்றக் கிரகங்களை மூடம் என்று கூறப்படும். இதை அந்தர்க்கதம் என்றும் நூல்கள் கூறுகின்றன அவ்விரண்டிற்கும் மறைவு என்பது பொருள். அவ்விருவகையான நிழல்களுக்கும் ஒரு சக்தி உண்டு. அச்சக்தியே அந்நிழல்களுக்கு அதிதெய்வமாம். அவற்றையே இராகு கேதுக்களென்று கூறுவது. அவைகளேயிப்பொழுதும் கிரகங்களென்று நூல்கள் கூறுகின்றன. நிழல்களுக்குச் சக்தியுண்டென்பதை வைத்திய நூல்களாலுணாலாம். அரசமரத்தினிழல் பகற்காலத்தில் பித்தத்தை யதிகப்படுத்துமென்றும், வேப்பமரத்தினிழல் பித்தத்தையும், அது சம்பந்தமான பலவியாதிகளையும் போக்குமென்றும், மா, புளி, முதலியவற்றினிழல் உஷ்ண பித்தங்களை அபிவிருத்தியாக்கி வியாதிகளை வளர்க்கு மென்றும் இப்படியே பலமரங்களி னிழல்களுக்கும் கூறப்பட்டுள்ளன அரசமரத்தினிழல் உஷ்ணங் குறைவாகிய காலை வேளைகளில் ஜீரணத்திற்கு வேண்டிய பித்தத்தைக் கொடுக்கும். அது ஒருஜாமம் வரைக்குமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதனாலேதான் ஜாமத்துக் குள்ளாகவே அரசமரப் பிரதட்சிணம் விதிக்கப்பட்டது. சூரியனுச்சியிலிருக்கும் போது அரசநிழலில் தங்குவதால் மதிமயக்க முதலிய வியாதிகளுண்டாகும். அது மெலின சரீரத்தையுடைய பெண்களுக்குச் சீக்கிரத்திலுண்டாகும். புளியமரமும் அவ்வாறேயாம். இதனையே அரசமரப் பேய் புளியமரப் பேய் என்பார்கள். பலதரம் பகற்பொழுதிற் செல்வதினால் பெண்களுக்கு ஒருவிதமான மதிமயக்கமான வியாதி தோன்றுவது இயல்பாதலால் பெண்களுக்குப் பேய் பிடித்தது என்பார்கள். இளம் பெண்களுக்கு (மங்கை மடந்தைப் பருவப் பெண்களுக்குச்) சீக்கிரந்தாக்கும். உஷ்ணமதிகமுள்ள நமது தேசத்துப் பெண்களுக்கே யன்றிக் குளிர்மிகுந்த பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு அல்ல வென்பது கண்டு கொள்க. ருதுகாலங்களில் நமதுதேசத்து இளம் பெண்கள் அரசு, புளி, மா முதலிய மரநிழல்களில் தங்குவது வழக்கம். இயல்பிலேயே மெலிந்த சரீரமுள்ளவர்களுக்கு ருதுகாலங்களில் சரீரம் மிகவு மெலிந்திருக்கு மாதலால் அப்பொழுது அந்தவியாதி சீக்கிரம் பற்றும். இவ்வியாதி தீர மந்திரங்களும் ஒளஷதங்களும் கூறப்பட்டன. மந்திர ஒளஷதங்களாலன்றி இவற்றுள் ஒன்றால் மட்டும் அவ்வியாதியை நிவர்த்தி செய்ய முடியாது. இதுகாறுங் கூறியது ஈண்டைக்குப் பயனில்லாமற் போனாலும், பெண்களுக்கு அவசியங் கூற வேண்டியது. வேறு சந்தர்ப்பம் நேர்வது அருமையாதலால் ஈண்டுச்சிறிது கூறினம். விளக்கு நிழல், மனிதர் நிழல் முதலியவற்றிற்கும் ஓர் வகையான துர்க்குணமுண்டென்றும், மனிதர்கள் அந்நிழல்களில் நெடுநேரம் இருக்கக்கூடா தென்றும், வைத்திய நூல்களும் ஸ்மிருதிகளுங் கூறுகின்றன. நிழல்களுக்கு ஒருவகைச் சக்தியுண்டென்பதே மீண்டு நாம் முக்கியமாய்க் கொள்ளவேண்டியது.

 

அச்சத்தியே யீண்டு இராகு கேதுக்களென்று கூறப்படுவதென்றும், அது மஹாசக்தியாதலால் தெய்வமாகவே யுபசரிக்கப் படுமென்பதுங் கொள்க. ஆயின், அதனைப் பாம்பென்று கூறுவதேனெனின், அதுகூறுதும். பூமியோ அல்லது சந்திரனோ சூரியனை மறைக்கும் போது உண்டாகும் நிழல் பாம்பின் வடிவம் போலிருக்கும். எவ்வாறெனின், பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் மத்தியஸ்தானத்தில் நிற்கும் போது சூரியன் மறை பட நிழலுண்டாகின்றது. எதிலிருந்துண்டாகின்றது? பூமியிலிருந்து. அப்போது பூமியின் மேற்பரப்பும், சற்றேறக்குறைய பக்கங்களும் சூரிய கிரணங்களால் வியாபிக்கப்படும். கீழ்ப்பாகம் வியாபிக்கப் படாமையால் ஆண்டு நிழலுண்டாகும். அதிகநிழல் தோன்றுமிடம் பூமியின் அடிப்பாகமே யாதலால் அவ்விடத்து அது அதிக விசாலமாக இருக்கும். அது பாம்பின் தலைப்பாகம் போலத் தோன்றும். இந்நிழல் அநேக மைல் தூரம் செல்லுமாகையால் மிக நீண்டிருக்கும். தோன்றிய இடத்திலிருந்து செல்லச்செல்ல அது விசாலத்தில் குறுகும். இவ்வாறு குறுகிக்கொண்டே செல்லும் போது, அதன் நுனி எலிவால் போல் அதிக மெல்லிதாகவிருப்பதால் அது பாம்பின் வால் போலத் தோன்றும். உற்றுப் பார்க்கும் போது பூமியின் கிட்ட உள்ளது தலைபோலவும், நடுப்பக்கம் உடல் போலவும், நுனி மிகக் குறுகி வால்போலவுமே காணப்படும். இதனால் அந்நிழலின் உருவத்தை உற்று நோக்குவோமாயின் அது பாம்பு போலவே காணப்படும். இது பற்றியே அந்நிழலைப் பாம்பு என்று கூறுவது. இவ்வாறே சந்திரனிழலுக்குங் கொள்க.

 

இது நூதன வான சாஸ்திரிகளின் கொள்கையென்று சிலர் கருதக் கூடும். அங்ஙனமன்று; சில தேசத்து வான சாஸ்திரிகள் சூரியன் தந்நிலையில் தானே சுற்றிக்கொண்டே நிற்கிறதென்றும், மற்றைய கிரகங்களெல்லாம் அதைச் சுற்றி ஓடுகின்றனவென்றும் கூறுவார்கள். சிலர் பூமிநிலையாக நிற்கச் சூரிய சந்திராதிகள் அதைச்சுற்றி ஓடுகின்றன வென்றும் கூறுவார்கள். நமது தேசத்தில் இவ்விருவகைக் கொள்கைகளும் உண்டு. முக்கியமாகச் சூரியன் தன்னிலையிற் பிரியாது சுழன்று கொண்டே நிற்கின்றதென்றும், மற்றைய கிரகங்கள் அதன் வேகத்தால் சுழற்றப்பட்டு அதைச் சூழ்ந்து செல்கின்றன வென்பதுமே கொள்ளப்படும். இது வேத சம்மதமாம். ஒரு அண்டத்திலிருந்து நோக்குவோர் எட்டுச் சூரியனைக்காணலா மென்பதும், அவை ஒன்றைவிட ஒன்று பெரிதாயிகுக்குமென்றும், எட்டாவது சூரியன் மஹா பெரிதென்றும் அதனாலேயே மற்றைய சூரியர்கள் சுழற்றப்பட, அவை சுழலும் வேகத்தினால் அவற்றைச் சூழ்ந்திருக்கும் அண்டங்கள் சுழன்று ஓடுமென்றும் கூறப்படுகின்றது. எட்டாவது சூரியன்றான் துருவன் எனப்படுவான் என்பது வேதசம்மதம். அதனாற்றான் துருவன் கையில் சகல அண்டங்களிலுங் கட்டப்பட்ட கயிறுள்ளதென்றும், அக்கயிற்றினால் துருவன் எல்லா அண்டங்களையும் சுழற்றுகிறானென்றும், அப்படிச் சுழற்றுவதினாலேயே வருஷம், மாதம், நாள், பகல், இரவு முதலிய காலபேதங்கள் உண்டாகின்றனவென்றும் புராணங்கள் கூறுகின்றன. அந்தத் துருவனையே கசியப சூரியனென்று நூல்கள் கூறுகின்றன. ஒரு அண்டத்துக்கு எட்டுச் சூரியர் காணப்படுவது போலவே மற்றைய அண்டங்களுக்கும் கொள்ள வேண்டு மென்றும், இங்ஙனமாயின் கணக்குக் கடங்காத சூரியர்கள் உண்டு என்றும், நூல்கள் கூறுகின்றன. தற்காலத்திலுள்ள சில வான சாஸ்திரிகள் இரண்டு சூரியர்களைக் கண்டதாகக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. யோகப் பயிற்சியில் முதிர்ந்த நமது முன்னோர்கள் தமது வல்லபத்தால் கண்டறிந்து எட்டுச் சூரியர்களைக் காணலாமென்றார்கள். இக்காலத்தவர்க்கு அச்சக்தி யின்மையால் இரண்டு சூரியர்களையே கண்டார்கள். நிற்க, இதனால் நாமறிவது யாதெனில், சூரியனைச் சூழ்ந்து பல அண்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனவென்பதும், அதில் ஒன்றையொன்று மறைக்கும் என்பதுமே. சூரியனைப் பூமியும் சந்திரனும் சுற்றி வருகின்றன என்று கொண்டாலும், பூமியைச் சந்திர சூரியர்கள் சுற்றுகின்றார்கள் என்று கொண்டாலும் அவைசுழலுங் காலவளவை ஒரே தன்மையாக இருத்தலால் கிரகணகாலங்கள் தவறாமற் குறிப்பிட்டெழுதப்படுகின்றன. எவ்வாறாயினுமாகுக; மேகத்தால் சூரிய சந்திரர்கள் மறைபடுவது போலவே இந்நிழல்களாலும் மறைபடுவதாகவே கருதப்படுதலால் இந்தத் கிரகணகாலத்து நிழலுக்கு விசேஷம் யாது ஏனின், அது கூறுதும்.

 

முன்னமேயே சூரிய கிரணங்கள் வெப்ப முடைமையால் விஷத்தன்மையுடையனவென்றும், குளிர்ந்ததன்மையையுடைய சந்திரன் அமிர்தமயமாமென்றும் கூறினோம். அதை அனுசரித்தே கிரகண பலன் கூறப்படுமென்பது கொள்க. இனிப் பௌர்ணமியிரவில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமிசெல்வதனாலேயே சந்திரகிரகண முண்டாகிறதென்பது யாவருக்கும் ஒப்பமுடிந்தது. சூரியனுக்கு நடுமத்தியில் பூமியும், அதன்கீழ்ச் சந்திரனும் கூடும் போது சந்திரகிரகண முண்டாகின்றது. பூமிக்கு அதிக சமீபத்தில் சந்திரன் செல்லும் போது அங்கே பூமியின் நிழல் அதிக விசாலமிருக்குமாதல், அதைக் கடந்து செல்ல, அதிக நேரம் செல்லும். அப்போதுதான் ஒன்றே முக்கால், ஒன்றரை முதலிய கிரகண பாகுபாடுகள் கூறப்படுகின்றன. தூரத்தில் நிழல் குறுகியிருக்கு மிடத்தில் செல்லும்போது முக்கால், அரை, கால் என்ற பாகு பாடுகள் கூறப்படுகின்றன.

 

இனிப் பிரகிருதத்தைக் கவனிப்போம்: பூமியால் சூரியன் மறைபடும் போது சூரிய கிரகண சம்பந்தம் சந்திரனுக்கு இல்லை. சந்திரனுக்கும், பூமிக்கும் மத்தியிலுமில்லை. இல்லாமையால் ஆண்டு விஷசம்பந்தமில்லை. விஷசம்பந்தமில்லாத போது ஆண்டுள்ளது என்ன? சந்திரனோடு சம்பந்தமான அமிர்தமே. ஆகையால், பூமிக்கும் சந்திரனுக்கும் மத்தியில் அமிர்தமே தங்கியிருக்கின்றது. இந்த அமிர்தமே சகல ஜீவராசிகளுக்கும் சமஸ்த அசரங்களுக்கும் ஆதாரமாயுள்ளது. இக்காலத்தில் சராசரங்கள்யாவும் அமிர்தத்தில் முழுகி அமிர்தமயமாகின்றன. இயல்பிலேயே அமிர்தத்தன்மையுள்ள நீருக்கு இப்போது அதிக சக்தியுண்டாகின்றது. அமிர் தம், பசிதாகங்களை அடக்கும் சக்தியுடையது; விஷங்களை நீக்கும் சக்தியுள்ளது. எல்லாப் பொருள்களையும் பாவனமாக்குந் தன்மையுள்ளது. பசிதாகங்களை நீக்கக் கூடியதானால், அக்காலத்தில் புசித்த பதார்த்தங்கள் ஜீரணமாகாத தன்மையுடையனவாம். அதனாலேயே கிரகணகாலங்களில் போஜனம் விலக்கப்பட்டது. அப்போது ஜீரண சக்தி குறையு மென்பது முன்னோர் கொண்ட கொள்கை. அதனால் பல வியாதிகள் உண்டாவதற்கு இடமுண்டு. இது பிரத்தியட்சத்தில் காணப்பட வில்லையே யென்று கேட்பது கூடாது. ஏனென்றால், கீரைத்தண்டு, வாழைக்காய் முதலியவற்றை அதிகமாகத் தின்றால் வாயுவுண்டாகுமென்று கூறினால், அது தவறென்று கூறப்படாதவாறு போலும். மங்கையர் கலவியால் சுகஜன்னியுண்டாமென்றால், அஃதில்லையென்று மறுக்கப்படாதவாறு போலுமாம். ஏனென்றால், சில சரீரங்களுக்கு ஒன்று மில்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு அஃதுண்டாவது பிரத்தியட்சமாதலால், மறுக்கப்படாததே. அதுபோலவே, இக்கிரகண புண்ணியகால போஜன விஷயமும் கொள்ளத்தக்கது. விசேஷமாக ஜீரண சக்தி குறைந்துள்ளவர்களுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும்.

 

அன்றியும் அறிவொன்றனையே பிரதானமாகக் கொண்டொழுகுவோர்க்கு அதிக சீக்கிரத்தில் கெடுதியைச் செய்யும். ஏனெனில் அவர்களுக்குச் சரீரபுஷ்டியையும் வீரத்தையும் விருத்தியாக்கும் பதார்த்தங்கள் விலக்கப்பட்டன. அறிவை மாத்திரம் விளக்கக்கூடியவையும், சீக்கிரத்தில் சீரணமாகக்கூடியவையுமான பதார்த்தங்களே போசனத்துக்கு விதிக்கப்பட் டன. உபவாசங்களும் அதிகமாக விதிக்கப்பட்டன. கிருஷ்ண சுவேத சதுர்த்தசி, திரயோதசி, ஏகாதசி, அஷ்டமி, மாதப்பிறப்பு இந் நாட்களில் ஒரே வேளை புசிக்க வேண்டு மென்கிற விதியுளது. இவ் விதியைக்கைக்கொண் டொழுகுபவரே வைதிகராவார். பக்தி மார்க்கத்தில் நிற்பவரும், உபாசனாநெறியில் நிற்போரும், யோக நிலையில் கூடியுள்ள வரும் எப்பொழுதும் ஒருபோதே புசிக்க வேண்டும். இவர்களுக்குக் கிரகணகால போஜனம் பெருந்தீமையை விளைக்குமென்பதி லையமே யில்லை. உடனே தெரியாவிட்டாலும் நாளடைவில் தெரியும். பிதிர்க்களை யுத்தேசித்துத் தர்ப்பணம் செய்பவர் அநேகருளராதலால் அவர்கள் கிரகணந்தொடுவதற்கு மூன்று ஜாமங்களுக்கு முன்னரே புசித்துவிட வேண்டும். புசித்த உணவு முற்றும் ஜீரணிக்க அவ்வளவு நேரம் செல்லுமென்று வைத்திய நூல்கள் கூறுகின்றன. சில பதார்த்தங்கள் ஜீரணமாக ஐந்து ஜாமங்கள் செல்லுமென்று கூறுகின்றன. பசியைத் தாங்கமுடியாத பாலர், விருத்தர், நோயாளிகள் இவர்கள் கிரகணந்தொடுவதற்கு ஒரு ஜாமத்துக்கு முன் சீக்கிரம் ஜீரணமாகக் கூடிய கஞ்சி முதலிய புசிக்கலாமென்றுங் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கிரகணகால போஜனம் மெலிந்த சரீரமுடையவர்களுக்கேயன்றிச் சரீர வலிமையுடையார்க்கும் ஜீரண பலமுடையார்க்கும் அநாவசியமாமென்று சிலர் கூறுவர். இது அசங்கத மென்க. ஈண்டு கிர கணகால வேறுபாட்டாற் கூறியதேயன்றிச் சரீரவன்மை மேன்மை பற்றியன்று. யாம் அவ்வாறு கூறியது மென்மைத் தன்மை யுடையார்க்குத் தீமைசீக்கிரத்தில் வெளிப்படு மென்றும் ஏனையர்க்குக் காலாந்தரத்தில் தீமை விளைக்கு மென்பதும் விளக்குதற்கே. ஆதலால் ஒவ்வொருவரு மிவ்விதியை யனுசரிக்க வேண்டுவ தவசியம்.

 

திருக்குறளில் மருந்து' என்னும் அத்தியாயத்தில் "அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து" என்ற செய்யுளுரையில் "துவரப்பசித்து" என்ற தன் விசேஷவுரையில், 'உண்டது அற்றாலும் அதன் இரதம் அறாது ஆகலான் அதுவு மறல் வேண்டுமென்பார் மிகப்பசித்து என்றார் " என்றும், "மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றியுணின்" என்ற செய்யுளில் "அற்றது போற்றி'' என்றதனுரையில் அற்றது போற்றலாவது குறிகளாற் சீரணித்ததை யறிந்து எனவும், குறிகளாவன: யாக்கை நொய்மை, தேக்கின் (ஏப்பம்) தூய்மை, கரணங்கள் தொழிற் குரியவாதல், பசிமிகுதல் எனவு மோதினார் பரிமே லழகியார். இவற்றாற் புசித்த பதார்த்தங்கள் அற்றாலும் அதன் இரதம் ஜீரணமாவது கடின மெனவும், அதுவும் ஜீரணமானாலே மிகப்பசிக்கும் எனவும் விளக்கங்பட்டமையால் பசியுண்டான மாத்திரத்தாலேயே யாவும் ஜீரணமாயிற் றென்று கருதுவது கூடாது. அப்பதார்த்தங்களின் இரதமு மறவேண்டும். அதனை யுணர்தல் எல்லார்க்கு மெளிதன்று. இக்காரணம் பற்றியே பகலிற்பதினைந்து நாழிகை யளவிலும், இரவில் ஜாமத்துக்குள்ளுமான நீடித்த காலத்தை ஸ்மிருதிகளும் விதித்தன. இரவிலுண்டது சீக்கிரம் ஜீரணமாதலால் ஐந்து ஆறு ஜாமங்களிடையிட்டும், பகலில் சூரிய வெப்பத்தால் ஜீரணமாகக் கூடுமாதலால் நாலு ஜாமமிடையிட்டும் இரண்டு வேளை போஜனமே செய் யத்தக்கதென்றும் நூல்களிற் கூறப்பட்டது. இரதமும் நன்றாயறாக்கால் அது வாதபித்த சேத்துமங்களுடன் கூடிப்பலவகையான நோயாகச் செய்யுமென்பது வைத்தியப் பெரியார் அனுபவத்திற் கண்டறிந்தது. ஆதலால் கிரகணகால போஜன விதி கட்டாயமான தென்று கொள்ளத்தக்கது.

 

இந்தக் கிரகண காலத்தில் சகல பதார்த்தங்களும் அமிர்தமயமாமென்று கூறினோம். அதனுள் சராசரப் பகுதிக ளிரண்டு மடங்குமாதலால் பசு, பட்சி, மானிடர்களும் அமிர்தத் தன்மையை யடைவார்கள். இயற்கையிலேயே அமிர்தத் தன்மை யமைந்திருக்குந் தண்ணீருக்கு அதிகமாம். ஆதலால், கிரகணந் தொட்டவுடன் சுத்த நீரில் ஸ்நானஞ் செய்வது அவசியமாயிற்று. விடுகிற பரியந்தம் மந்திரங்களைத் தியானித்துக்கொண்டிருக்க வேண்டும். தியானித்தால் நாதவடிவமான மந்திரம் அதிகமான சித்தியைக் கொடுக்கும் ஒரு ஆவர்த்தி அனந்த மாகுமென்று பெரியோர் கூறுவர். இதனை விட மந்திரங்களினாலே காணலாம். பாம்பு, தேள் முத லிய விடங்களைத் தீர்த்தற் குரிய மந்திரங்களை ஜபித்தால் அதிக பலிதம் உண்டாகும். நீரில் நின்றுகொண்டு ஜபித்தால் அதிலும் அதிக பலிதம். கழுத்தளவு நீரில் நின்று ஜபித்தால் இன்னும் மிகும். தண்ணீருக்குள் முழுகிக்கொண்டே ஜபிக்கும் புண்ணியவான்களு முண்டு. அவர்களுக்குண்டாம் பலன் சொல்லியடங்காது. இவர்கள் கையால் தொட்டவளவில் விஷங்களெல்லாம் பறந்துவிடும். இங்ஙனம் செய்வதற்கு மனத் தூய்மை அதிகம் வேண்டு மென்பதைக் கவனிக்க வேண்டும். மனத்தூய்மையோடு தண்ணீரில் நின்று ஜபிக்கும் போது பூமிக்கு மேலும், மதிகதிர்களுக்குக் கீழும் நிறைந்திருக்கும் அமிர்தத்தினால் சரீரந் தூய்மையாய் அமிர்த மயமா மாதலால் மந்திரசித்தி யுடனே யுண்டாகும். இதுநமது தேசவாசிகளான ஜனங்கள் எளிதிற் கண்டு கொள்ள வேண்டுமென்பது பற்றி யீண்டுச் சிறிது கூறப்பட்டது.

 

அமிர்தமய சரீரமுடையவர்கள் தேவரென்று கருதப்படுதலால் கொடுப்பானுங் கொள்வானும் தேவர்களை யொப்பாவார்கள். சர்வ தேவமயமான வேதங்களைச் சதா ஓதிக்கொண்டேயிருக்கிற சன்மார்க்கர்களுக்குக் கொடுக்கப்படுகிற தானம் ஒன்று அனந்தமாகப் பலன் தரும். கொடுக்கிறவன் பரிசுத்தனாய் மனத் தூய்மையுடன் களங்கமின்றிக் கொடுப்பானானால் அவன் தேகாந்தத்தில் திவ்விய சரீரம் பெற்றுத் தேவர்களுடன் வாழ்வான் என்பதில் தடையில்லை. பலனைக் கருதாமற் கொடுத்தால் அவன் மோட்ச நெறியை அடைவானென்பது திண்ணம். காய், கனி, தானியம், சொர்ணம், வஸ்திரம், பசு முதலியவெல்லாம் தானம் செய்யலாம். பூதானம், கன்னிகாதானம் செய்வதுமுண்டு. இவை யெல்லாம் அனந்த பலனைத் தருமென்பர்.

 

இது முடிந்தபின் தேவாலயங்களிற் சென்று தேவாராதனை செய்து தரிசித்து ஏழைகளுக்கு மன்னமிட்டுத் தாமும் புசிக்க வேண்டும். கிரகண மத்தியகாலத்தில் யாகம் செய்வது கூடாது. விட்ட பின்பாகஞ் செய்வதே யுத்தமமாம். சிலர் கிரகணந் தொடுவதற்கு முன்னாலேயே பாகம் செய்து வைத்து அதில் இரண்டொரு தர்ப்பைப்புற்களையிட்டு மூடிவைத்தால் தோஷமில்லை யென்று கொள்வதுண்டு. அதுவும் அதம பட்சமேயாம். பனிக்காலத்தில் எவ்வாறு மூடிவைத்தாலும் அது குளிர்ந்து விடுவது போலவே யிதுவுமாய். ஆயின் ஜீரணிப்பது கடினப்படும். சந்திரகிரகணம் விடுவதற்கு முன் பொழுது விடிந்துவிட்டால் அன்றிரவு சந்திரனைத் தரிசித்த பின்னரே புசிக்கவேண்டும். ஏனென்றால், சூரிய கிரணங்களால் விஷத்தன்மை யெய்துமாதலால், உட்கரணங்கள் அமிர்தமயமாய் இருந்தாலும் புறக்கரணங்கள் விஷத்தன்மையை யடைந்து விடும். இரண்டு மாறுபடும் சமயமான அக்காலத்தில் விதிக்கப்படவில்லை. அமிர்த சொரூபியான சந்திரனைத் தரிசித்த பிறகே விதிக்கப்பட்டது. இவற்றை யெல்லாம் விரித்தெழுதப்புகின் நாட்கள் கழியுமாதலால் சுருக்கி யுரைத்தாம். நூல்களிற் பழகிய நுண்ணறிவுடையார் தமது புத்தி கோசரத்தால் உணர்ந்து கொள்வார்கள் என்பது கருதி, பதார்த்தகுண முணர்ந்த மேதாவிகளுக்கு அதிகங் கூறவேண்டுவதில்லை.

 

சூரியகிரகணமும் இது போலக்கொள்ளத்தக்கதேயானாலும் அதில் விசேஷங்களுண்டு. அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரனிருந்து சூரியனை மறைப்பதினாலே சூரிய கிரகணமுண்டாகும். சூரியனை விடப்பூமி மிகச்சிறிது. அதைவிடச் சந்திரன் சிறிது. ஆதலால் சூரியனு க்கு நேர்மத்தியில் சந்திரனிற்கும் போது சூரியனுடைய நடுப்பாக மட்டும் மறைபடும், விளிம்பின் பிரகாசம் மறைபடாது. அப்போது சூரியன் ஒரு தங்கக்காப்பைப்போலத் தோன்றும். அதைக் கங்கணக்கிரகண மென்பார்கள். பக்கங்களில் நிற்கும் போது கால் பாகம், அரைப்பாகம் மறைபடும். அதனைப் பார்சுவகிரகண மென்பார்கள். முன்பு கூறிய சந்திர கிரகனத்தில் பூமிக்கும் சந்திரனுக்கு மிடையில் சூரியகிரகண சம்பந்தமேயில்லை யாதலால் முற்றும் அமிர்த மயமாகுமென்றோம். சூரியகிரகணத்திலோ அங்ஙனமன்று. சூரியன் மேற்புறத்தும் பூமி கீழ்ப்புறத்தும் நிற்க இரண்டுக்கும் நடுவில் சந்திரனிற்கின்றது. அப்போது சூரியகிரகணங்கள் சந்திர மண்டலத்தை யூடுருவிப்பாயும். அதனால் அமிர்தமயமான சந்திரகிரகணங்கள் சூரியகிரகணங்களின் குணத்திற் சிறிது அம்சத்துடன் கலந்து வெளிவரும். பூமிக்கும் சந்திரனுக்குமிடையில் முன்பு நிறைந்திருக்கும் அமிர்தகுணத்தோடு கலக்கும். சூரியகிரகணங்களுக்கு வலிமையில்லாத இச்சமையத்தில் சந்திராமிர்தம் சூரியகிரகணங்களால் மேலேயிழுக்கப்படாமல் அப்படியே நிற்கும். அதனால் சூரியனுடைய குண மாகிய வெப்பம் சிறிது கலந்து பரவ, அவற்றின் கலப்பினால் ஒரு அற்புத குணமுண்டாய்ச் சகல ஜீவாத்மாக்களையும் பரிசுத்தப்படுத்தும். சுயமான சந்திரகிரணத்தைவிட இதற்கு அதிக குணமிருப்பதினால் சூரியகிர கணம் விசேஷித்தது என்று கூறப்படும். இது அமாவாசையில் நேர்வது அமாவாசை பிதிர்த்தேவர்களுக் குரிய சிறந்தநாள். அது பின்னால் கூறப்படும். சந்திரகிரகணகாலத்தைப் போலவே யிதிலும் ஸ்நானம், தர்ப்பணம், தானம் எல்லாம் கிரமமாகவே விதிக்கப்பட்டன. கிரகணம் விட்ட பின் தேவாலயங்களில் விசேஷ ஆராதனை நடக்குமாதலால், அங்கே போய்த் தெய்வ சொரூபத்தைத் தரிசித்து, அர்ச்சனை நைவேத்தியங்கள் செய்வித்துப் பிறகு மனைக்குச் சென்று, தேவ பூசை செய்து புசிக்க வேண் டும். இப்படிச் செய்வதனால் அன்று தினம் செய்யப்பட்ட கன்மங்களில் அறிந்தும் அறியாமலும் நேர்ந்த குறைபாடுகள் நீங்கிக் கன்மம் பூர்த்தி பெறும். செய்த கன்மங்களின் பலாபலங்களைத் தெரிந்தாருக்கும் தெய்வாராதனை மிகவும் சிறந்த தென்பர். இந்தக் கிரகண காலங்களில் தேவாலயத்திற் சென்று தேவனுக்குச் செய்யப்படும் ஆராதனை அநந்தமான பலனைத்தரும். கிரகணத்திற் செய்யப்படும் ஆத்மார்த்த ஆராதனை அதிக பல னைத் தரும் என்று நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு கிரகண விசேஷங்களை யாம் சுருக்கி யுரைத்தமையால் மேலான அறிவுடையோர் தமது பேரறிவினால் அதில் குற்றங் குறைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறோம். விக்கிரகாராதனையாற் பயனில்லை யென்று பெரியோர்கள் கூறியிருக்க ஈண்டு விக்கிர காராதனை மஹாபலன் தருமென்று கூறியது யாங்ஙனமெனின், அது அடுத்தமுறை விக்கிர காராதனையென்னும் மகுடத்தின் கீழ்ச் சிறிது விரிக்கப்படும்.

 

விக்கிரகாராதனையைப் பற்றி எழுதுவதாக முன் சஞ்சிகையில் கூறினோம். இனிக் கிரகண விஷயத்தில் சிறிது கூறி முடிக்க வேண்டியிருப்பதால் அதனைப் பூர்த்தி செய்துவிட்டுப் பிறகு மேல்விஷயத்தை யெடுப்போம்.

 

இதுவரையிலும் பிரத்தியட்சாதி வகைகளால் கூறினோம். அது இதிகாச புராணாதிகளுக்கு மாறுபடும் என்று சிலர் கூறுவதற்கிடமுண்டாதலால் அவ்விஷயத்திற் சிறிது ஆராய்வோம். சூரிய சந்திரர்களைப் பாம்புகள் விழுங்குகின்றனவென்று இதிகாச புராணங்கள் கூறுகின்றன. அமிர்தங்கடைந்த காலத்தில் மாறா விஷ்ணுவானவர் அசுரர்களை யேமாற்றி விட்டுத் தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளிக்கும் போது சகோதரர்களாகிய இரண்டு அசுரர்கள் தேவரூபங்கொண்டு தேவர்களுக்கு மத்தி யில் உட்கார்ந்து கொண்டு அமிர்தத்தைப் புசிக்கும் போது சந்திர சூரியர்கள் ஜாடை காட்ட, விஷ்ணு மூர்த்தி கைச் சட்டுவத்தால் அவர்கள் மண்டையிலடித்து அவர்களுடைய உருவைக் குலைத்தாரென்றும், அதன் பிறகு அவர்கள் பாம்பின் வடிவமாக இருந்து கொண்டு சூரிய சந்திரர்களைப் பீடிக்கின்றார்களென்றும், அவர்களுக்குத் திருமால் கிரகாதிகாரம் கொடுத்தருளினாரென்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன. அதனோடு மாறுபடுத்தலால் இதனை யெவ்வாறு கொள்ளலாமெனின் அது கூறுதும்.


       "இந்துவிற் பானுவி லிராகுவைக் கண்டாங்குச்
       சிந்தையிற் காணிற் சிவன் கண்ணா - முந்தவே

 காட்டத்தொறீ யென்னக் கனல்சே ரிரும்பென்ன
       வாட்டானா மோதஞ் செழுத்து "

என்று சிவஞான போதத்தில் மெய்கண்டார் கூறியருளினார்.

 

இதற்குரையாசிரியர் பாண்டிப் பெருமாள், இந்துவிற் பானுவிலிராகு வைக கண்டாங்கு " என்பதற்குக் கண்ணுக்குக் கரிதாகிய இராகு கேதுக்களைச் சந்திரனிடத்தும் ஆதித்தனிடத்துங் கண்டாற்போல " என்று உரை கூறினார். இதனால் இராகு கேதுக்குச் சுபாவத்தில் ஒரு சொரூபங்கிடையாதெனவும், கிரகண காலத்தில் சந்திர சூரியர்களிடத்திற் காணலாமெனவும் பெறப்பட்டது. சந்திர சூரியர்களிடத்தில் காணப்படுவது யாதெனவாராயின் ஒரு பொருளினிழலே யென நன்கு புலப்படும். சில ஞான முனிவர், "இராகுவை இந்துவில் கண்டாங்கு'' என்றதற்கு " அந்தரத்தியங்கு நவக் கோள்களுள, ஏனைய போலக் காணப்படாத இராகு கேதுக்களை உபராகத்திற் சந்திராதித்தர் மாட்டுக் கண்டாற்போல " என்றுரைத்து, கேது சாயா கிரகமாகலின் வேறு கூறாதாயினார் " என்று விசே டவுரையுங் கூறினார். இதனால் சாயாக் கிரகமாகிய இராகுவைக் கூறவே, "ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே'' என்ற உபலட்சண விதியால் மற்றொரு சாயா கிரகமாகிய கேதுவையுங் கொள்ள வைத்தாரென்பது விளக்கினாராயிற்று. ஆகவே இராகு கேதுக்களிருவரும் சாயாக் கிரகங்களே யென்பது விளங்கிக் கிடந்தது.

 

அங்ஙனமாயினும் புராணங் கூறியதற்கு யாதுகதி யெனின், அஃதுண்மையே. நிழல் வடிவாகிய இராகு கேது மண்டலங்கட்கொரு சக்தியுண் டென முனனாக் கூறினோம். அச்சக்தியே யதற்கு அதிதெய்வமா மென்றும் கூறினோம். திருமாலாலடியுண்ட இராகு கேதுக்கள் சிறிது அமிர்த மருந்திய மகிமையால சாகவில்லை. சாவுண்டாகாமற் சீவித்திருந்தால் அவர்களும் அமரர்களாய்த் தேவஜாதி யாவார். அசுரர் தேவராவது கூடாமையாலும் அவர்களுக்கு மரணமின்மையாலும் அவர்களுக்கு ஒரு கதி வேண்டும். ஆதலால் அவர்களையும் அரூபியாக்கி மேற்குறித்த நிழல்களக்கு அதிதேவதையாக்கி அங்கேயே வசிக்கும்படி நியமித்தருளினார். அரூபியாக வெயிலொடு கலந்து நிற்கும் முனிவர்களைப்போலவென்க. "விண் செலன் மரபினையர்க் கேந்திய தொருகை'' என்ற திருமுருகாற்றுப் படை வசனத்தாலும்,'' ஒருகை யெக்காலத்து மாகாயத்தே யியங்குகின்ற முறைமையினையுடைய தேவ விருடிகளுக்குப் பாதுகாவலாக வெடுத்தது " என்றும், "ஞாயிறின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றாவென்று கருதித் தமதருளினாற் சுடரொடு திரிந்தவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனியரைப் பிள்ளையார் காக்கவே யுலகத்தைத் தாங்கிக் காத்தாராயிற்று" என்னும் உரையாலு முணர்க. அரூபியாகிய நிழல் மண்டலத்தொடு வேற் றுமையின்றிக் கலந்து வசித்து விற்றலால் அபேதம் பற்றியந்நிழலையே இராகு கேதுக்களென்று உண்மை நூல்கள் கூறுகின்றன வென்க. அதனாலே தான் "இந்துவிற் பானுவி லிராகுவைக் கண்டாங்கு" என்று திருட்டாந்தங் கூறப்பட்டதென்க. மந்திர சாஸ்திரங்களில் இராகு கேதுக்களை யுபாசிப்பதற்காக ஏற்பட்டுள்ள மாலா மந்திரம் தியானம் முதலியவற்றிற் சிறிது விளங்கும். காவியக்கர்த்தர்கள் தங்கள் கற்பனைக்கு வேண்டிய வாறே கூறுவராதலால் அவை பிரமாணமாகா வென்க. கற்பனை யென்பது வித்வான்களுடைய புத்தி கோசரத்தை விளக்கும் ஒருவித ஊகமேயென்றும், அதனை யெம்மட்டிற் கொள்ள வேண்டுமோ அம்மட்டே கொள்ளப்படுமென்பதும் ஆன்றோர் கருத்து. நிழலும் இராகு கேதுக்களும் ஒன் ஊடாங்குக்கு கேதுவற்றிற்றாகவே யிருத்தலால் எவ்வகையான ஆக்ஷேபனைகளுக்கு மிடமாகாது. இதிகாச புராணங்கள் கூறியதும் பழுதுபடாதென்க. விரிக்கிற் பெருகுமாதலால் இவ்விஷயத்தை யித்துடனிறுத்தி, இனி, முன் பிரதிக்கினையிட்ட விக்கிரகாராதனையைச் சிறிது ஆராய்வோம்.

விக்கிரகாராதனை.

 

''மக்கண் மானிட ரென்று மனத்தினான்
மிக்க மேன்மை விளங்கின ரின்றெனிற்

பொக்க மேவும் பொறிகளோ ரைந்தினா

லொக்கி மாவினை யொத்துயர் வெய்திடார்.''

 

இதனால் மனிதர்கள் மனவறி வொன்று அதிகமாக வுடையராதலால் மிகவுஞ் சிறந்து விளங்குகின்றார்கள். அவ்வறி வொன்றில்லாவிடில், பஞ்சேந்திரிய வறிவினால் தமக்குச் சமானமாக விருக்கும் மிருகங்களுக்கு ஒப்பாய்ப் பெருமை பெறார் என்று புலப்படுதலால் மனிதர்களுக்கு மனமே சிறந்த அறிகருவியாகக் கொள்ளப்படும். அதனாலே தான் மனதுக்கு இந்திரிய ராஜன் என்று ஒரு பேர் கூறப்படும் (இந்தியங்களுக்கிராஜனிதயமாம்... கைவல்யம்) இந்த மனம் வசப்படுமானால் அதனால் சாதிக்கப்படாத காரியமொன்றுமில்லை. எவ்விதமான இரகசியங்களையுந் தெரிந்து கொள்ளலாம். காணப்படாதவைகளையும் ஊகத்தினாலறிந்து கொள்ள லாம்; திவ்விய சரீரம் பெற்றுத் தேவர்களாகவும் வாழலாம். தேவர்களையும் ஏவல் கொள்ளலாம். பிரபஞ்சத்தோடு. வேற்றக் கலந்து நிற்கும் பரம் பொருளையும் பிரித்துக் கண்டு தரிசிக்கலாம். சரீரத்துக்குள் மறைந்து நின்று அச்சரீரத்தை நடத்தும் ஆன்மாவையும் கண்டு கொள்ளலாம். இது பற்றியே

 

"நல்ல செய்து நரரை யுயர்த்தவும்,

அல்ல செய்தங் களற்றிடை யாழ்த்தவும்,

வல்ல திந்த மனபலதையனே, யில்லை

யென்ன மறைகளிசைக்குமால்"

 

என்று பெரியோருங் கூறியுள்ளார். ஆதலால் நன்மையைச் செய்து மேன் மையைப் பெறவும், தீமையைச் செய்து தாழ்வை யடையவும் மனமே காரணமாக நிற்கின்றது. இம்மன மநாதி சிருஷ்டியிலிருந்தே ஜீவான்மாவைப் பற்றித் தொடர்ந்து வருகின்றது பாவ புண்ணிய கன்மவசத்தினால் பலவ கையான சரீரங்களை யெடுத்து அநந்த கோடியண்டங்கள் தோறு மலைந்து வரும் ஜீவான்மாவைப் பிரியாது உடன் செல்லும் மனதுக்குச் சகலவறிவுமுண்டு. எல்லா விஷயங்களையு மறிந்திருக்கின்றது. ஆனுயிம் கன்மவாசனையால் மறைப்புண்டு மலின மடைந்துள்ளது. அதனை மாற்றுவதற்கே சகல கன்மங்களும் விதிக்கப்பட்டுள்ளன. அக்கன்மங்க ளில் தேவாராதனை யொன்று. தேவாராதனை சகல கன்மசித்திகளையும் கொடுக்கும். பிறகு காணப்படாத கடவுளையுந் தரிசிப்பிக்கும். ஆதலால் மனமே மனிதனுக்குச் சிறந்த துணையாம். அதற்கு மேற்பட்ட துணையொன்றுமேயில்லை. அவ்வளவு சிறந்த துணையான மனமோ எதையும் சீக்கிரத்திற் பற்றிக்கொள்ளக் கூடியது. ஆதலால் அது நன்மை தீமை யென்று கவனியாமல் எதையும் பற்றி உடனே புலன் வழியாக ஆன்மாவைப் புசிக்கச் செய்யும். அறிவே சொரூபமாய் மலவசத்தால் மயங்கிக்கிடக்கும் ஜீவான்மா மனதாற் செலுத்தப்பட்டவற்றை யனுபவித்து, தன்மையாலின்பத்தையும், தீமையால் துன்பத்தையு மெய்தி மகிழ்ந்து வருந்தாநிற்கும். அறிவுள்ள ஆன்மா அத்தகைய சிறந்த துணையான மனதைத் தீயவழியிற் செல்லாமல் விலக்கி, நல்வழியிற் செலுத்துமானால் அம்மனம் வசப்பட்டுச் சகல நன்மைகளையு மளித்துத் தேகாந்தத்திலோ, ஜன்மாந்தரத்திலோ, சில நூல்களின் உண்மையான அபிப்பிராயப்படி தேகமுள்ள பொழுதேயோ முத்தியின்பத்தையும் கொடுக்கும். பிரத்தியட்சத்திலும் நல்ல மனமுடையவர்கள் நன்மை பெற்றுக் கீர்த்தியுடைவர்களாய் வாழ்ந்திருப்பதையும், தீயமன முடையவர்கள் துன்பத்துக்காளாய் வருந்துவதையும் காண்கின்றோம். தீமையால் நன்மையையும் நன்மையால் தீமையையும் அடைகின்றதையுங் காண்கின்றோ மென்றால், அது பூர்வ ஜன்மகன்ம பலமாமென்று கொள்ளத்தக்கது.'நன்மை விதைத்தால் நன்மைவிளையும், தீமை விதைத்தால் தீமை விளையும்'என்னும் இவ்வசனம் மஹா திருடர்கள், கொலைகாரர்கள் வாயாலும் கேட்கப்படுமாதலால் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுமுண்டாவதே யியற்கையாமென்று கொள்க. இத் துணைச் சிறந்த மனத்தை யடக்கி ஒருவழிப் படுத்துவதற்கே சகல கன்மங்களுமுண்டாயின வென்போர் பெரியோர்.

 

இதற்காகவே யோகங்கள் எற்பட்டன. யோகங்களும் பலவகைப்படும். அவற்றுள் அஷ்டாங்கமே சிறந்த தென்பர். அது வாசியை மடக்கி மனவியாபாரத்தை யொடுங்கச் செய்வதாம். இது சர்வ சாதாரண மன்று. யோகமும், நிராலம்பம் சாலம்பமென விருவகைப்படும். நிராலம்பமே முத்திக்கு நேரில் ஏதுவாம். அது மன அடக்கத்தாற் சித்திக்கப்படுவது. மனவடக்கமின்றேல் அது சித்தியாது. மனதை யொடுக்குவதற்கு முதற்காரணம் சாலம்ப யோகமேயாம். அதாவது, ஏதேனுமொரு குறியைப் பாவித்துத் தியானித்து அதன் மூலமாக மனதை வசப்படுத்துவதாம். அதற்கென்றே பக்தியோகம், மந்திரயோக முதலியன ஏற்பட்டன. இவ்விரண்டு மொரு குறியைப் பாவித்துத் தியானிப்பதால் பாவனைக்கடங்காத பரம்பொருளைத் தரிசிக்கு முறைமையாம்.

 

எதைக் குறிப்பது என்றால் பரப்பிரம்மத்துக்கு வேதத்திற் கூறப்பட்ட சொரூபங்களையே குறிப்பது. பிரம்மத்துக்குச் சொரூபமுண்டோ வென்றால் உண்டு என்க. எவ்வாறு கொள்வது எனில், வேதங்களில் கூறப்பட்ட சொரூபங்களையேயாம். வேதங்களில் பிரம்மத்துக்குச் சொரூபமே யில்லையென்று கூறப்படு மென்பரே, வேறு சொரூபமேது எனில், பிரம்மத்துக்குரிய இயல்பிலக்கணமது. ஆயினும் பக்தானுக்கிரகார்த்தமாக ஆனந்த சொரூபங்களுண்டென்றே வேதங்கள் கூறுகின்றன. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்களும், சூரியன், சந்திரன், அன்மா இவைகளும் பரமான்மாவுக்குச் சரீரமென்று வேதங்கள் கூறுகின் றன. இவைகளே அஷ்ட வடிவங்க ளெனப்படும்.

 

 

அன்றியும் சராசரமயப் பிரபஞ்ச முற்றுமே யவனுக்குச் சரீரமாகக் கூறப்பட்டது. மஹாத்மாக்களா யுள்ளவர்கள் சராசரங்க ளெல்லாவற்றிலும் பரம்பொருளைப் பாவித்துத் தியானிப்பார்கள். உருவமேயில்லாத வாகாசத்திலும் பாவிப்பார்கள். ஆயினும் சகலரும் பரப்பிரமத்தை யாராதிப்பதற்குரிய பல ரூபங்களை வேதங்களே கூறின. அவற்றையே வைதிகர்கள் உறுதியாகக் கொண்டு பாவிக்கின்றார்கள்.


      “அக்னெள திஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி திருஷ்டதியோகி
     பிரதிமாசவப் பிரபுத்தானாம் சர்வத்திர லிதிதாத்மநாம்
"

 

"பிராமணர்களுக்கு அக்கினியில் (கடவுள்) தோன்றுவர்; யோகிகள் இருதயத்திற் காண்கிறார்கள்; மற்றைய (பக்திமான்களுக்கு) விக்கிரகத்தில் சாட்சியாயிருக்கின்றார்" என்று கண்ணபிரான் கீதையிற் கூறியருளினார். (பக்திமான்கள் என்றதனால் முதற்கூறிய பிராமணர் யோகிகளை விலக்கியதல்ல. அவர்களும் விக்கிரகத்தில் தரிசிக்கிறார்கள் என்பதே பொருளாகக் கொள்ள வேண்டும்.) அடுத்தவசனத்தில் ஞானிகளுக்கு எங்கும் காணப்படுகிறான் என்று கூறியருளினர். இதில் எங்கும் என்பது சகல பிரபஞ்சத்தையும் குறிக்குமாதலால், இதனுள் விக்கிரகமும் அடங்கும். இதனால் பண்டிதர், பாமரர், ஞானிகள் எல்லாருக்கும் விக்கிரகாராதனை மிகச்சிறந்ததென்று புலப்படுவதைப் பேரறிவாளர் காணாமற் போகார்கள். பூர்வகாலத்துப் பெரியோர்கள் எல்லாரும் விக்கிரகாராதனையி னாலேயே சகல சித்திகளையும் பெற்றார்கள் என்று நன்றாய்ப் புலப்படுகின்றது.

 

எங்ஙனமெனின், நமது பெரியோர்களுக் காதாரமாயிருந்த வேதமே விக்கிரகாராதனையை விதித்தது. ''பரப்பிரமம் உருவமற்றது, கைகால் முதலிய அவயவமில்லாதது, கண் முதலிய இந்திரியங்களால் காணப்படாதது, காட்சிக்கெட்டாதது" என்று பிரமத்தின் நிர்க்குண சொரூபத்தைக் குறித்துக் காட்டிய வேதமே, " அவன் சூரிய மண்டலத்தில் வசிக்கிறான். சொர்ணமயமான சரீரத்தையுடையவன், ஹிரண்யபாகு, பிநாகபாணி, திரிநேத்திரன், உமாசகாந்தன், சங்கரன், நீலகண்டன்,'' என்பனவாதி அநந்த வசனங்களால் பரம்பொருளின் சகுண சொரூபத்தையும் வருணித்தது. இதனால் பரம்பொருளுக்குச் சகுண நிர்க்குணமாகிய இருவகைச் சொரூபங்களு முண்டென்று விளங்குகின்றது. இதனால் தான் ஸ்ரீ இராமா நுஜாசாரியரும் தமது விசிஷ்டாத்வைத பாஷ்யத்தில் பிரமத்துக்குச் சகுணம் நிர்க்குணமென விருவகைச் சொரூபங்களுள. அவற்றுள் நிர்க்குண சொரூபம் பாவனைக் கெட்டாதாதலால் அது உபாசனை செய்வதற் கேற்றதல்ல. சகுணசொரூபமே பாவனைக் கெட்டத்தக்கது. அது உபாசிக்கக்கூடியது" என்று கூறியருளினர். அத்வைத சித்தாந்த பிரவர்த் தகாசாரியராகிய ஸ்ரீசங்கர முனி பிரஜனும் பரப்பிரமத்துக்குச் சகள சொரூபமுண்டென்று ஒப்பித் தமது மடாலயங்களில் சந்திரமௌளீசுவர மூர்த்தியை ஆராதிக்க வமைத்தனர். ஸ்ரீஹரதத்தாசாரியர், "தமுஷ்திகி'' என்ற மந்திரத்தினால் மானசிகம், வாசிகம், சாயிகம் என்கிற மூவகை ஆராதனை விதிக்கப்பட்டதென்று கூறி விக்கிரகாராதனையை விளக்கினார். இவற்றால் கற்றார், கல்லார் எல்லார்க்கும் விக்கிரகாராதனம் விதிக்கப்பட்டது.

 

இதன் காரனம், மனமோ எத்தைத் தான் ஒருத்தரங் கண்டதோ அதை மறவாமற்கருதும் சாத்தியுடையது. காணாததும் இல்லாததுமான பொருளை யொருபோதும் சிந்தியாது. இங்ஙனமாயின் உருவமே யில்லாததும், ஒருபோதும் காணப்படாததுமான பொருளை யெப்படிச் சிந்திக்கும்? ஒருபோதும் சிந்தியாது. கண்டறிந்த பொருளைச் சிந்திப்பினும் ஒன்றிலேயே நிலைத்து நில்லாது, ஒன்றைவிட்டொன்றில் தாண்டிச் செல்லுமியல்புடையது. எவ்வாறாயினும் அறிந்த பொருள்களில் செல்லுமேயொழிய அறியப்படாத பொருள்களை ஒருபோதும் சிந்தியாது. இது எல்லாரும் சுயானு பவத்தால் அறியக்கூடிய தேயாம். இங்ஙனமாக உருவமற்ற பரம்பொருளை யாம் சிந்திக்கின்றே மென்பார் கூற்று "ககனார விந்தங் கலத்தேன் சொரிந்தது, மலடிமகன் வயிறாரக் குடித்தான்" என்ற வசனத்தோடொக்கும். நிர்க்குண பிரமத்தை மனதிலேயே சிந்திக்கின்றேம் என்பார், தம்மைப் பிறரெல்லாரும் ஞானியென்று கருதுமாறு செய்விக்க எண்ணும் வஞ்சகரோடொப்பாவர்.

 

இப்பொழுது ஐவகை மதங்களே உலகத்தில் பிரபலமாக வழங்கி வருகின்றன. அவையாவன; -ஆரியம், பெளத்தம், யவனம், மகம்மதியம், கிரிஸ்துவமத மென்பனவேயாம். இவ்வைவகை மதஸ்தர்களும் பிம்பாராதனையை ஒப்பினவர்களேயாம். ஆரியர்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. பெளத்தர்கள் கடவுளை நம்பாதவர்களாயினும், தமது ஆசாரியர்களை விக்கிரக சொரூபமாகச் செய்து வழிபடுகின்றார்கள். அவர்களுக்கு ஆலயங்களும் மடங்களுமுண்டு. யவனர்களோ அக்கினியின் கண் கடவுளை வழிபடுகின்றார்கள்; அன்றியும் நமது தேசத்தில் வழங்கும் சிவலிங்கம் போன்ற ஒரு சொரூபத்தைச் செய்து அதற்கு ஷிவ்ப என்று பேரிட்டுப்பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றார்கள். மகம்மதியர்களும் மனிதர் கை போன்ற சொரூபத்தைச் செய்து வைத்து வணங்குகின்றார்கள். பெரியோர்கள் சமாதியிலும் தொழுகின்றார்கள். கிறிஸ்துவர்களும் கடவுளுக்குப் பலிபீடத்தைக் கட்டியும், ஏதோ ஒருவகையான சொரூபத்தை ஸ்தாபித்தும் வணங்கி வந்தார்கள். கிறிஸ்துவர்களுள் "காத்தலிக்கர் " என்ற ஒருபட்சத்தார் இன்னும் தேவாலயங்களிற் சொரூபாராதனை செய்து வருகிறார்கள். புரோடெஸ்டான்ட்' என்ற ஒரு கட்சியார் மாத்திரமே விக்கிரகாராதனையை மறுப்பவர்கள். நம்மவருள்ளும் சிலர் அக்கொள்கையை அனுசரித்து விக்கிரகாராதனையை மறுத்து வருகிறார்கள். நாமிது கூறிவந்ததனால் விக்கிரகாராதனை அளவு கடந்த காலமாகவே வழங்கிவருகிறது என்பதும், அது வைதிகமே யென்பதும், அது மோட்ச நெறியாமென்பதும், காலசக்தியால் சிலர் அதனை மறுத்துத் தமது புத்திக்குத் தோன்றியவாறே கூறுகிறார்க ளென்பதும் இனிது விளங்கும்.

 

இனி ஆலோசிக்குமிடத்தில் பாவனையாலேயே யாவும் சித்திக்கின்றன. ஆதலால் ஈசுவரன் விஷயத்திலும் அந்தப்பாவனையே சித்தியைக் கொடுக்கும். வேதமும், "அவர் பாவனையாற்றா னறியத்தக்கவர்'" பாவனை யாலேயே அறியப்படுவான் மஹேசன்'' “அவனுருவம் ஒருவருக்குந்குதான் ருது " " அவரைக்கண்ணாற் கண்ட வனில்லை'' என்று கூறிப்பின்னும், “அந்தப்பரமான் மாவைக் காண்டல் வேண்டும்; கேட்டல் வேண்டும்; சிந்தித்தல் வேண்டும்; நிஷ்டையில் தரிசிக்கவேண்டும் " என்பனவாதி வாக்கியங்களால் உபாசனையையும் விதித்தது. எப்படி வழி பட்டுச் சிந்திப்பதெனில், நீல கண்டன், திரிலோசனன், உமாசகாயன், பொன்மயமேனியன், பிநாகபாணி, கிருஷ்ணபிங்களன் என்றும், சங்கு சக்கிராதி பஞ்சாயுதங்களையுடையவன், லக்ஷ்மீபதி, பீதாம்பரதாரி, சேஷசயனன் என்றுங் கூறிப் பிரமத்தின் சகுண சொரூபத்தை வியந்து அத்திருவுருவைப் பூசித்துப் போற்றிச் சிந்தித்து வழிபடுகவென்று விதித்தது. ஈசனுக்குப் பக்தாநுக்கிரக காரணமா? அளவற்ற நமேனி wள வேனும், சகல பிரபஞ்சமும் அவனுக்குச் சொரூபமாயி, வேகம் எடுத்தோதிய மேற்குறித்த சொரூபங்களையே, ஆரியர் வழிபட்டு வருகின்றனர். இச்சொரூபத்தில் ஏதேனும் ஒன்றை. தனது கருப்பத்தின படி கல்லினாலோ. பொன்னினாலோ செய்தாயினும், படத்தில் வரைந்தாயி தாம் தன்னெழிரில் வைத்து, மனதை மற்றெங்கும் செலுத்தாது நிழத்திச் சுரபி முக்திரை யாதிகளாற் கைகளைக்குவித்து மந்திரத்தை யுச்சரித்து அப்பிம்பத்தின் கண் தன் மனதில் நிற்கும் பக்திலயச் செலுத்துவானேல் அக்கம் பரம்பொருள் அதில் ஆவிர்ப்பவிக்குமென்பதில் தடையேயில்லை. அப்போது அவன் சரீரத்தி லமைந்த ஜீவசக்தி அந்தப் பிம்பத்தில் பிரவேசிக்கும். இப்படிச் செய்வதனால் எங்கும் வியாபித்து நிற்கும் பரம் அந்தப் பிம்பங்களில் நீண்ட காலம் நிற்கும். அப்போது தன்னைத் தரிசிக்கும் தொண்டாது மனமொழி மெய்களை யப்பிம்பம் கிரகிக்கும்.

 

இப்படி பிம்பத்தை நோக்கி வணங்கும்போது கண் விக்கிரகத்தை நோக்கினாலும் மனம் அதில் ஆவிர்ப்பவித்திருக்கும் பிம்பத்தின் சொரூபத்தையே நோக்கும். அப்பிம்பமும் அத்தொண்டருளத்தில் ஆநந்தத்தை விளைவித்து நிற்கும். சிறிது சிறிதாக அந்தப் பிம்பமே பிரம சொரூபமாகக் காணப்படும். ஆகவே பிரம சொரூபத்தை மனமும், கண்ணும் ஏககாலத்தில் கண்டு களிக்கும். வாய் ஸ்தோத்திரம் கூறி மகிழும். கைகாலாதி அவயவங்கள் ஆர்ச்சித்துப் பிரதட்சணம் செய்து மகிழும்; சரீரம் அஷ்டாங்க சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பயன் பெறும். இதனால் மனோவாக்குக் காயங்களென்கிற திரி கரணங்களும் ஈசுவரனுக்கே அர்ப்பிக்கப்படும். இதனால் திரி காணங்களாலும் செய்யப்பட்ட பாப கன்மங்கள் பறக்கும். சரீரமெல்லாம் நிர்மலமாம். மனம் களங்கமற்றுச் சுத்தஸ்படிகம் போலத்துலங்கும். அப்போது பரம் பொருளின் சிதக்னானந்தத்திருமேனி அதில் பிரதிபிம்பித்துப் பேரானந்தத்தை விளைவிக்கும். இவ்வாறு பல நாட்கள் நிஷ்டைகூடியிருக்க அந்தச் சிக்கனானந்தத் திருமேனி நிர்க்குண சொரூபமாய்த் திகழும். அப்போது ஆன்மாபரம்பொருளோடு தானது வென்னும் வேற்றுமையறக் கலக்கும். அப்படிக்கலத்தலே ஜீவன் முத்தியாம். ஆதலால் விக்கிரகாராதனத்தினாலுண்டாகும் நன்மைகளளவிலடங்கா. அதுபற்றியே அநாதி காலந்தொடங்கி நமது ஆரியப் பெரியோர்கள் எல்லாரும் விக்கிரகாராதனத்தைச் சிரேஷ்டமாகக் கைக்கொண்டு மகிழ்ந்து வருகிறார்கள். இனி ஆலயங்களிலும், கிருகங்களிலும் பிம்பாராதனம் செய்வதைப்பற்றிச் சிறி தெழுதுவாம். ஆலயங்களில் கடவுளை வழிபடுதல் நற்கதியை அளிக்குமென்பதை நன்றாய் விளக்குவோம்.

 

சிலர் பெண்கள், பிள்ளைகள் விளையாடுகிற மரப்பாவை, கற்பாவைகளுக்கும், இந்தத் தெய்வ சொரூபமாகிய விக்கிரகங்களுக்கும் பேதம்யாதெனகக்கூறி மகிழ்வர். அதனை யிவவாறு மறுக்க; விளையாட்டுக் கருவிகளாகிய சொரூபங்களுக்கும், கோவில் மடம் முதலிய வற்றில் அடித்து வைத்திருக்கும் சொரூபங்களுக்கும் விக்கிரகமென்று பேரில்லை. அவற்றைப் பிரதிபையென்று கூறவர் வடமொழி வல்லோர்; அந்தச் சொல்லே தமிழில் பதுமையென்றும், பொம்மையென்று கிராமியச் சொல்லாகவும் திரிந்து நிற்கின்றது. இச்சொரூபங்கள் தெய்வமென்று கருதி ஒருவரும் வணங்கியதில்லை. வணங்கியதாகக் கேள்விப்பட்டதுமில்லை. ஆதலால் அது தெய்வ சொரூபமாகாது; வினோதப் பதுமைகளேயாம். நாமிங்கெடுத்துக் கொண்ட விக்கிரக மென்பது அதுவல்ல. வேதங்கள் புகழ்ந்து கூறிய தெய்வ சொரூபங்களைக் கல்லாலோ, மரத்தினாலோ, உலோகங்களாலோ சித்திரப்படமாகவோ செய்து பிராணப் பிரதிஷ்டாதி வேதமந்திரங்களால் தெய்வத்தை அதனிடம் வருவித்து வணங்கப்படுவது எதுவோ அதுவே விக்கிரகமென்று பேர் பெறும். விக்கிரகமென்பதற்குச் சொரூபமென்று பொருள். ஆராதிக்கப்படும் சொரூபத்துக்கே விக்கிரகமென்பது சாஸ்திரங்களின் அபிப்பிராயம்.

 

விக்கிரக மகிமையைக் கூறுவதற்கு முன் பார்ப்பதாலும், தொடுவதாலும், தொனியாலும் மனிதசக்தி மற்றோர் பொருளினிடம் சென்று சேருமென்று முன்னர்ப் பல விடங்களிற் கூறியதை நினைப்பூட்டுகின்றோம். அப்படியே பூதப்பொருள்களின் சக்தியும் அவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கும் மற்றோர் பொருளினிடம் சேரு மென்பதையும் ஞாகப்படுத்துகிறோம்: அச்சக்தி மூவகைப்படும்: அவை ஒளஷதம் (புல்பூண்டு செடிகளின் சக்தி), பாசுகம் (ஜீவப்பிராணிகளிலுள்ள சக்தி), லௌகீகம் (உலோகங்களிலுள்ள சக்தி), இம் மூவகை சக்திகளையும் ஒன்று படச் சேர்த்துப் பிராண சக்தி யுண்டாக்கப்பட்ட சொரூபமே விக்கிரகமென்னப்படும். சிலைகளில் உலோகாம்ச முள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து விக்கிரகம் செய்யப்படும். உலோகங்களில் எல்லா உலோகங்களிலும் செம்பு, பித்தளை முதவிய தேயு அம்சம் நிறைந்ததும், திராகிய (மின்சார) சக்தி யுள்ளதுமான ஐந்து வகை உலோசங்களை முறைப்படி கூட்டியே செய்யப்படும். பஞ்ச லோகங்கள் சேர்ந்த இச்சொரூபம் நமது சரீரத்திலுள்ள பல சக்தியைலிலக்கவும், இரத்த சுத்தி செய்வும், ஆரோக்கியக்தை யுண்டாக்கவும் வல்லதென்பது பிரத்தியட்சம். இதை யுணர்ந்தே தற்காலத் தவரும் பஞ்சலோகங்களாற் செய்யப்பட்ட மோதிரத்தைக் கையில் மாட்டிக்கொண்டும், பதக்கம் போலச் செய்து கழுத்தில் கட்டிக்கொண்டும் மகிழ்கின்றார்கள். இதனால் இரத்தமும், நாடிகளும் சுத்தமாகுமென்பதே அவர்களின் கருத்து. அப்படியானால் அவற்றைவிடப் பெரிதாகச் செய்யப்பட்ட சொரூபங்களுக்கு அதிக சக்தியுண்டென்பது விளங்கும். சில சிலைகளிலும் சீதோஷ்ண சக்திகள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன. அச்சிலைகளுக்குக் கிராகிய சக்தி (மின்சார சகதி) சுபாவத்திலேயே யமைந்திருத்தலால் அச்சிலைகளால் தெய்வ சொரூபமாகிய விக்கிரகம் செய்யப்படுகின்றது.

 

இந்த விக்கிரகத்துக்கு முன் கூறிய மூவகைச் சக்தியையும் சேர்க்கவேண்டும். முதலில் அந்த விக்கிரகத்தைத் தானியங்களில் புதைத்து வைக்கின்றார்கள். குறிப்பிட்ட காலம் வரைக்கும் தானியத்திலேயே யிருக்கும். இதனால் அந்த விக்கிரகத்தில் பிரதிவி பூத சக்சி சேர்க்கப்படுகின் றது. பிறகு அப்புவின் சக்தி சேரும் பொருட்குச் சிறிது காலம் அந்த நீரில் போட்டுவைக்க வேண்டும். இப்படிச் செய்வதற்கு அதிவாச ஸம்ஸ்காரம் என்று கூறுவர். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை ஹோ மாக்சினியின் மீச பத்தில் வைப்பார்கள். அந்த ஹோமாக்கினியில அற்புதமான நல்ல பூண்டுகளையும், தேயு சக்தியுள்ள மரக் கொப்புகளையும், நெய் பால் தேன் பொரி எண்ணெய் பழம் இவைகளை பம் யந்திர பூர்வமாக ஹோமம் செய்வார்கள். அவற்றினானுண்டாகும் புகையை முன்ன பூத சக்தியுள்ள அந்த விக்கிரகம் தன்னிடம் ஆகர்ஷித்துக்கொள்ளும். அதே சமையத்தில் பல அந்தணர்கள் சேர்ந்து பிரமத்தியானத்துடன் வேத மந்திரங்களை யிரைந்து ஓதுவார்கள். இவ்வந்தணர்களின் நோக்கத்தாலும் தொனியாலும் மனித சக்தி விக்கிரகத்திற் சாரும்.

 

இந்த விக்கிரகத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்வதற்கென்று ஓர் அந்தணன் நியமிக்கப்பட்டிருப்பன். அவன் இதற்கென்றே. கையிற் கங்கணங்கட்டிக்கொண்டு விரதத்திலிருப்பான். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படுகின்றதோ அந்தத் தெய்வத்தின் மந்திரத்தைச் சிந்தித்துக் கொண்டேயிருப்பான். பட்டு கம்பளி முதலிய உடைகளைத் தரித்துக்கொண்டும், பலவகையான இரத்தினமாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டும், தத்தம் மதத்துக்குரிய விபூதியையும் திருநாமங்களையும் தரித்துக்கொண்டுமிருப்பன். பற்பல முத்திரைகளால் தன் சரீரசக்தியைச் சமப்படுத்திக் கொண்டுமிருப்பான். அவன் குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் எங்கும் நிறைந்த பரம்பொருளின் சர்வ வியாபக சக்தியை மனதிற் பாவித்துக்கொண்டு தெய்வ மந்திரோச்சாரணத்தினால் அந்த விக்கிரத்துக்குப் பிராணப்பிரதிஷ்டை செய்வன். இப்படிச் செய்வதனால் பூதசக்தி, லோகசக்தி, ஜீவசக்தி மானிடசக்தியாகிய இவைகள் அந்த விக்கிரகத்தில் சேர்க்கப்படும். அதனால் பிராண சக்தியுண்டாம். அதன் பின் பூஜை செய்வார்கள். இவ்விதமாகச் செய்யப்படும் சொரூபமே விக்கிரகம் என்னப்படும். அவ்விக்கிரகத்தில் எங்கும் நிறைந்த பரம்பொருள் சாந்நித்தியமாயிருக்கும். இதையே தெய்வமென்று நமது பெரியோர்கள் வணங்கி வந்தார்கள். பரம்பொருள் எங்கும் நிறைந்திருந்தாலும் ஜீவ சக்தியுண்டாக்கப்பட்ட பிம்பத்தில் அதிகமாகப் பிரகாசிக்கும். அதைத் தரிசித்து வணங்குகிறவர்களுக்குப் பரம்பொருள் அந்தச் சொரூபமாகவே காட்சியளிக்கும். அதைத் தரிசிப்பதினால் அதன் சக்தி நமது நோக்கத்தின் வழியே நமது சரீரத்தில் வந்து சேரும். அப்போது நமது சரீரம் நிர்மலமாகும். இதயம் சுத்தியாம். அவ்விதயத்தில் அந்த விக்கிரக சொரூபம் நிலைபெறும். அதை மறவாமல் தியானிக்க அதுவே திவ்ய சொரூபமாகக் காட்சி தரும். இவ்விதமாகப் பிராண சக்தி உண்டாக்கப்பட்டுத் தெய்வ சான்னித்திய முள்ள விக்கிரகமே ஆலயங்களில் விளங்குவது. இதனை எல்லாரும் தரிசிக்கலாம். இதற்கு ஞானி அஞ்ஞானியென்னும் வேறு பாடில்லை. இவ்வாறு இதைத் தரிசிப்பவர்கள் இதில் அமைந்திருக்கும் சக்தியை நோக்கத்தால் கிரகித்துக்கொள்வார்கள். இதனால் நாடோறும் இதன் சக்தி குறைந்து கெடுமே யெனின், அவ்வாறு கெடாதவாறு அதைப் பூர்த்தி செய்விக்கும் உபாயமாகவே பூஜை நியமிக் கப்பட்டுள்ளது.

 

அதற்காகவே அது பால், நெய், தேன், முதலியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். பில்வம், துளசி பலவகை மலர்கள் முதலியவற்றால் அர்ச்சகர்கள் அதை அர்ச்சிப்பார்கள். சொர்ணாபரணம் இரத்தினாபரணம், முதலியவற்றாலும் பலவகை மலர்களாலும் அலங்கரிப் பார்கள். பட்டுகளை ஆடையாக உடுத்துவார்கள். நூல் வஸ்திரமும் உபயோகிக்கப்படுகின்ற தென்றாலும் பட்டாடையே சிறந்தது. பருத்திநூலைப் பித்தளை முதலிய தட்டுகளி லிட்டு நெய் வார்த்துக் கொளுத்திப் பிரதட்சணமாகவும் பிரணவ சம்பிரதாயமாயும் ஆராத்தி செய்கின்றார்கள். சாம்பிராணி, கற்பூரம் முதலியவற்றின் புகையையும் சேர்க்கின்றார்கள். ஐசுவரியத்துக்குத் தக்கபடி ஒரு நாளைக்கு எட்டுவேளை, ஆறுகாலம், நாலு காலம், மூன்றுகாலம், இரண்டுகாலம் பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜைகளால் விக்கிரகசக்தி குறையாமற் காக்கப்படுகின்றது. பிராணப்பிரதிஷ்டை செய்தபோது அவ்விக்கிரகத்தினிடம் சேர்ந்த ஜீவசக்தி குறையாமலிருக்கும் பொருட்டே பாசுகம், ஒளஷதம், லௌகீகம் என் னப்படும் மூவகைச் சக்திகளும் தினந்தோறும் சேர்க்கப்படுகின்றன. பிராணப் பிரதிஷ்டை செய்யும் போதே விக்கிரகத்தின் கீழே ஏராளமான இரத்தினம் சொர்ணம் முதலியன இட்டு வைக்கப்படுகின்றன. தினந்தோறும் சொர்ணமாலை இரத்தின மாலைகள் சாத்தப்படுவதினாலும் லௌகீக சக்தி விர்த்தியாகும், அபிஷேகத்தினால் அப்புவின் சக்தி சேர்க்கப்படுகின்றது. அலங்கார தீபம், தீபம், தூபம், கற்பூராத்தி முதலியவற் றால் தேயுவின் சக்தி கூட்டப்படுகின்றது. இவ்வாறு பஞ்சபூத சக்திகளும் ஜீவசக்தியும் தினந்தோறும் சேர்க்கப்படுவதினால் விக்கிரகம் ஜீவசக்தியுள்ளதாகவே விளங்கும். ஆதலால் சாதாரண பிரதிமைகளுக்கும் ஆராதிக்கப்படும் விக்கிரகத்துக்கும் வெகு பேதமுண்டு. முற்கூறிய மூவகைச்சக்திகளும், பூதசக்திகளும் எவ்விடத்தில் நிறைந்திருக்கின்றனவோ அந்த விடத்தில் சர்வவியாபகப் பரம்பொருள் அதிகமாகப் பிரகாசித்துக்கொண் டிருக்கும் ஜீவசக்தி ஸம்ஸ்காரத்திலன்றி யியற்கையி லமைந்திருக்கும் மானிடரிடம் தெய்வப் பிரகாசம் அதிகமாக விளங்கும். இந்தக் கருத்தினாலே தான் குருவைத் தெய்வ சொரூபமாக பாவித்து வணங்குதலும், மாதா பிதாக்களைத் தெய்வமாகக் கொண்டு ஆராதித்தலும், பெண்கள் தங்கள் கணவனையே தெய்வமாகக் கொண்டு வழிபடுதலும் விதிக்கப்பட்டன. ஏனைய மதஸ்தர்களிலும் சிலர் குருவை வணங்குவதும் காணலாம். நிற்க, ஸம்ஸ்காரத்தினால் தெய்வீக சக்தி அமையப்பெற்ற விக்கிரகத்தை வணங்குவது தெய்வத்தை வணங்கு ஆதலே யன்றி வேறல்ல. இவ்வுண்மையை யுணர்ந்த சைவ வைணவப் பெரியோர்களும் விக்கிரகாராதனை செய்து பெறும் பேறு பெற்றார்கள். இப்பொழுது யாம் கூறியது பூஜைக்குரியதாய் ஆலயங்களில் விளங்கும் விக்கிரகங்களையே. ஆத்மார்த்தமாகச் செய்யப்படுவதும், கிருகத்துக்குள்ளேயே ஆராதிக்கப்படுவதுமாகிய விக்கிரகங்களுக்கு அதிக பூஜை வேண்டுவதில்லை. ஏனெனில், அவ்விடத்தில் அதைத் தரிசிப்பார் அதிகமில்லாமையால் அதன் சக்தி குறையாது. நித்திய பூஜையில்லாத கோவில்களில் தெய்வீக மகிமை குறையும். அவ்வகைப்பட்ட ஆலயங்களில் ஆரியர்கள் தெய்வ வழிபாடு செய்வதில்லை. எந்த இடத்தில் நித்திய பூஜை நடக்கின்றதோ, எந்த இடத்தில் சதாதீபம் எரிந்து கொண்டிருக்கிறதோ அந்த ஆலயத்திலேயே ஆரியர்கள் கடவுள் வழிபாடு செய்கிறார்கள். அதனாலே பெரிய பக்திகளையும் பெறுகின்றார்கள். சாதாரணமான சொர்ணம் இரத்தினங்களை யணிவதினாலே மனிதர் பெரிய சக்தியையடைவார்களென்று முன் ஒரு சந்தர்ப்பத்தில் பதார்த்தகுணமுறைப்படி பிரமாணங்களால் நிரூபித்திருக்கின்றோம். அப்படியானால் ஸம்ஸ்கார மூலமாக அதிக சக்தி யமையப் பெற்ற லோக விக்கிரகங்களில் மஹா சக்தி விளங்குமென்பது கூறவேண்டுவதில்லை. இதை முன்னிட்டே புண்ணிய காலங்களில் தேவாலய தரிசனம் விதிக்கப்பட்டது.

 

நித்தியோத்ஸவ மாதோற்சவ மகோற்சவ காலங்களில் விக்கிரகங்கள் வெளியிற் கொண்டுவரப்படும். அக்காலத்தில் அநேக ஜனங்கள் கூடித் தரிசிப்பதினால் விக்கிரகத்துக்குச் சக்தி குறையும். அதைப்பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அக்கினி காரியங்களும் அபிஷேகாதிகளும் செய்யப்படும். பிரதிஷ்டா காலத்திற் செய்யப்பட்டது போலவே விசேஷமாகச் செய்யப்படும். பெரிதான சில தேவாலயங்களில் நடக்கும் உற்சவங்களில் அநேக ஜனங்கள் கூடுவதனால் அத்தினம் விசேஷ ஹோமாதிகள் செய்யப்படும். இரதோற்சவ காலத்தில் வரணாசிரம பேதமில்லாமல் பல ஜனங்களுங்கூடி இரதத்தை யிழுப்பார்கள். அதனால் விக்கிரகம் அசுத்தப்பட்டுச் சிறிது சக்தி குறையும். அதைப்பூர்த்தி செய்வதற்காகச் சண்டாள அபிஷேக மென்று ஒரு பெருங்கிரியையும் செய்யப்படும். இதனால் விக்கிரகத்தில் எப்போதும் தெய்வ வியாபகம் நிறைந்திருக்கும். அதைத் தரிசித்து வணங்குவதனால் பெரும்பயனுண்டாகு மென்பதில் ஐயமேயில்லை.

 

கண்காணாததை மனது சிந்தியா தென்பது நிச்சயமாதலால், தெய்வ தியானத்துக்கு விக்கிரக தரிசனம் மிக அவசியமேயாம். தியானசமாதி முதலியவற்றாலும் சத்தியம் முதலிய குணங்களாலும், ஸ்நானாதிகளினாலும் சுத்தி பெறாமலிருக்கும், சரீரத்திலுள்ள மனமென்னுங் கருவியும் அசுச்தமாய்ப் பிரகாசமற்றேயிருக்கும். மலினமான மனதினால் தேஜோ மயானந்த திவ்ய சொரூபத்தைச் சிந்திப்பது கூடாத காரியம். ஒருகால் மனம் சிந்தித்தாலும் ஏனைச் சரீரம் பயனடையாது. ஏனெனில், மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலுமே கர்மங்கள் செய்யப் படுகின்றன. திரிகரணங்களும் சுத்தமாய்ப் பயன் பெறுவதற்கு விக்கிரகாராதனையைத் தவிர வேறு மார்க்கமில்லை.

 

மனிதசக்தி யென்றது ஜீவசக்தியையேயாம். பரமாத்மாவின் சக்தியதனுடன் கலந்து பிம்பங்களில் பிரவேசிக்கும். அப்பொழுதுதான் அந்த விக்கிரகம் தெய்வமென்று புகழ்ந்து கூறப்படுகின்றது. அதில் தெய்வ சாந்நித்தியமிருப்பதால் அதையே தெய்வமாக வழிபடுக வென்று பெரியோர்கள் கூறினார்கள். இதனால் மனம், ஆத்மா, சரீரம் மூன்றும் சுத்தியாகின்றன. ஆதலாலிதுவே மோட்சத்துக்குரிய சிறந்த மார்க்கமாம்.

 

இனி தெய்வ வழிபாட்டுக்குரிய ஆலயங்களைக் கவனிப்போம். பாசுபதம் (சிவாகமம்) பாஞ்சரார்த்திரம் என்ற நூல்களிற் கூறியபடியே ஆலயங்கள் கட்டப்படுகின்றன. அவ்வாலயமோ சரீரத்தைக் குறிப்பிக்கின்றது. சரீரத்திலுள்ள தத்துவங்களே இதிலடக்கிக் காட்டப்படுகின்றன. சரீரத்தில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை யென்று கூறப்படும் ஆறாதாரங்கள் முக்கியமானவை. அவ்வாறே தேவாலயங்களிலும் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், ஸ்நபனமண்டபம், மஹாமண்டபம், பூர்வவேதி, சபாமண்டபம் என்ற ஆறுஸ்தலங்கள் முக்கியமாம். இவ்வாறும் ஆறாதாரங்களையே குறிக்கின்றன. ஆலயங்கட்டத் தொடங்குமுன் அந்தப் பூமி நன்றாய் உழுது சுத்தி செய்யப்படும். இந்த ஆலயத்துக்கு இதயஸ்தானம் போல விமானம் நிர்மிக்கப்படும். அதில் ஆதாரசக்தி முதல் துவாதசாந்தம் வரையிலுள்ள தத்துவங்க ளமைக்கப்படும். அந்த விமானத்தில் தெய்வசொரூபம் ஸ்தாபிக்கப் படுகின்றது. சரீரத்தை விர்த்தியாக்குவதும், இரத்தத்தைச் சுத்திசெய்வதுமான இதயஸ்தானத்தில் கடவுள் வழிபாடு விதிக்கப்பட்டது போல், இவ்வாலயத்திலும் இதயஸ்தானத்தில் கடவுளாராதனை விதிக்கப்பட்டது. இதயஸ்தானத்தைச் சுற்றி நிற்கும் இரத்தக்குழல்களை யனுசரித்து அதைச்சூழ ஒரு பிரகாரம் அமைக்கப்படும். அதில் வலமாகச் சுற்றி வந்து கடவுளை வணங்குவதே முறைமை. தெய்வசந்நிதியில் நந்திபிரா னெழுந்தருளியிருப்பார். அவ்விடம் ஆக்கினாசக்கரமாம். தெய்வமிருக்குமிடம் பிரமரந்திரமாம். இவ்விரண்டுக்கும் நெருங்கின சம்பந்தமுண்டு. ஆதலால் நந்திக்கும் தெய்வத்துக்கும் மத்தியில் ஒருவரும் செல்லக்கூடாது. எதனாலென்றால் நந்திக்கும் தெய்வத்துக்கும் ஒன்றையொன்று கிரகிக்கும் சக்தியிருப்பதினால் அவ்விடம் தெய்வவியாபக நிறைந்த இடமாம். அதில் மனிதர்கள் புகுந்து செல்வது கூடாதென்பது முன்னோர் கொள்கை. இதனால் தேவாலயம் சரீரம் போன்றதென்றும், அதில் பிரமாவுக்கு அறிகுறியாக லிங்கம் முதலிய திவ்ய சொரூபங்களென்றும், ஜீவாத்மாவுக் கொப்பாகவே நந்தி முதலாயினார் கருதப்படுகிறார்க ளென்றும் அறிய வேண்டும். ஜீவாத்மாவென்றது ஜீவாத்மாவுக்குப் பிரதிநிதியையாம். இதனால் ஆலயம் பரமாத்மாவுக்குச் சரீரம் போல்வதென்று விளங்கும். அதனாற்றான் அநேக பக்திமான்கள் ஆலயங்களைக் கண்டவுடன் கடவுளைப்போல வணங்கித் துதிக்கின்றார்கள். இவ்வாறு கட்டப்பட்ட ஆலயங்களினாற் பெரும்பயனுண்டாம். ஆஸ்திகனாயுள்ளவன் வெகு தூரத்தி லிருந்து ஒரு கோபுரத்தைக் கண்டானானால் அவன் உடனே தெய்வத்தைத் தியானிக்கிறான். அக்கோபுரம் அவனுக்கு அந்தச் சக்தியையுண்டாக்கிற்று. பூஜாகாலத்தில் அடிக்கப்படும் மணி ஓசை, வாத்திய ஓசை முதலியவற்றைக் கேட்பதினாலும் தெய்வஞாபக முண்டாகின்றது. உற்சவகாலங்களில் போடப்படும் அதிர்வெடி சப்தத்தைக் கேட்டுப் பலர் தெய்வத்தைச் சிந்திக்கிறார்கள். இங்ஙனமும் ஆலயம் மனிதர்களுக்குப் பேருபகாரஞ் செய்கின்றது. ஆதலால் ஆலயம், பண்டிதர், பாமரர் எல்லார்க்கும் தெய்வ ஞாபகத்தை யுண் டாக்கி வழிப்படுத்துகின்றது. இவற்றால் அதன் பெருமை அளவிலடங்காததேயாம்.

 

இனிப் பூஜையைப்பற்றிச் சிறிது கவனிப்பாம். பூஜை என்பது ஆன்மார்த்தம், பரார்த்தம் என்று இருவகைப்படும். ஆன்மார்த்தத்துக்கு ஸம்ஸ்காரங்கள் குறைவுபடும். பரார்த்தத்துக்கு ஸம்ஸ்காரங்கள் மிகுதி யாம். இவற்றுள் ஆன்மார்த்தம் சரம் ஸ்திரமென்று இருவகைப்படும். சரம் என்பது நீர்நில முதலியவை. ஸ்திரமென்பது லிங்க முதலிய சொரூபங்கள். இப்பூஜைகளில் சிலையாலாகிய மூர்த்தியே சிறந்தது. சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரையுட்கொண்டால் அநேக நற்குணங்களுண்டாம். " சிலையோடு கலந்து சுத்தியான நீர் பத்தியமாகும்" என்று வைத்தியசாஸ்திரப் பரமாசாரியரான வாக்பட்டர் கூறினர். உலோகத்தாற் செய்யப்பட்ட பிம்பங்களில் வெள்ளி பொன்னாற் செய்யப்பட்ட விக்கிரகாபிஷேக தீர்த்தமும் நன்மையாக்கும். மற்றைய லோகங்கள் பயன் செய்யா.

 

ஆன்மார்த்த பூஜைக்குரிய பிம்பத்தை ஒருவனே பிரதிஷ்டை செய்வான். அவன் ஒருவனே அதைஸ்பரிசிப்பான். அவன் ஒருவனே ஆராதித்து வழிபட்டுத் தரிசிப்பான். ஆதலால் அப்பிம்பத்துக்கு அபிஷேகாதிகள் குறையும். பூஜைக்கென் றேற்பட்டுள்ள சுசியான இடத்தில், லோகங்களாற் செய்யப்பட்ட பாத்திரங்களையும், நற்குணமுள்ள பத்திர புஷ்பங்களையும், நன்றாய் வடிக்கட்டின தீர்த்தத்தையும் கொண்டு பூஜிப்பான். தன்மனம் ஒரு நிலையில் நிற்கும் பொருட்டுத் தனது வழிபடு தெய்வத்தைச் சிந்தித்துப் பிராணாயாமஞ் செய்து, மனதை வேறிடத்தில் செல்லாமல் நிறுத்தித் தான் செய்யக் கருதியிருக்கிற கைங்கரியத்தைக் குறித்துச் சங்கற்பஞ் செய்து கொண்டு பூஜை தொடங்க வேண்டும்.

 

அபிஷேக கலசத்தை முன்வைத்து அதை நீரால் நிரப்பிச் சந்தன புஷ்பாக்ஷதைகளை யதில் தூவித் தன் கையை அதன்மேல் வைத்துத் தன் சக்தியையு மதில் செலுத்தித் தேனுவாதி முத்திரைகளால் அநேக தீர்த்தாம்சங்களைச் சிந்தித்து அதில் பாவிப்பது வழக்கம். இந்த தீர்த்தமே அபிஷேகத்துக்குரியதாம். அன்றியும் வேறு ஐந்து கலசங்களை வைத்து நீர் நிரப்பிப் பத்திர புஷ்பாட்சதைகளால் பூசித்து வைக்க வேண்டும். பிறகு அவ்வித தேவதைக்குரிய மந்திரத்தை யுச்சரித்துப் பரம்பொருளைத் தியானிக்க வேண்டும். மனதை யடக்கித் தியானிக்கும் போது பரம் பொருள் மனம் ஜீவன் மூன்றும் ஒன்றுபட்டுச் சரீரத்தையும், உலகத்தையும் மறக்கும்படி எப்போது பரவசமாகின்றதோ அச்சமையமே ஆவாஹனம் செய்தற்குரிய சமையமாம். அப்பொழுது துளசி, வில்வம் முதலிய தழைகளைக் கையிலெடுத்துக் கொண்டு இதயம் முதல் சிரசுவரையும் மேல் நோக்காகப் பாவித்துத், தன்னிடம் ஆவிர்ப்பவித்திருக்கும் பரபிரம சக்தியை அத்தழைகளின் மூலமாகப் பிம்பத்தில் செலுத்திக் கையாற்றொட்டு, இரு விழிகளாலும் நன்றாய் நோக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பரமான்மா அப்பிம்பத்தி லெழுந்தருளும். இவ்வாறு வந்த சக்தி யிதய கமலத்திலுள்ள அழுக்குகளுடன் கலந்து வந்திருக்குமாதலால் முன் பூஜித்து வைத்திருக்கும் கலச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவேண்டும். அப்பொழுது அசுத்தம் நீங்கும். பிறகு முன் பூஜை செய்து வைத்திருக்கும் பஞ்ச கலசநீரால் அபிஷேகித்து ஈரம் புலரத் துடைத்துப் பருத்தி பட்டுகளால் செய்யப்பட்டனவும், பிறரால் தொடப்படாதனவுமான வஸ்திரங்களைச் சாத்திச் சந்தனமிட்டுப் பத்திர புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவேண்டும். பின் வீடுமுழுவதும் பரிமளிக்கும்படி சாம்பிராணி முதலியவற்றால் தூபங் காட்ட வேண்டும். தீபோபசாரஞ் செய்து, புதிதாய்ச் சமைக்கப்பட்டவைகளை நைவேத்தியம் செய்து கற்பூராரத்தி காட்டிப் பிரதட்சிண நமஸ்காரங்கள் செய்து ஸ்தோத்திரம் செய்து தனதிஷ்டார்த்த சித்தியாம்படி பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே யான்மார்த்த பூஜையாம். இப்பூஜையால் பூஜை செய்கிறவர் பயன் பெறுகிறது மன்றி வீட்டிலுள்ள சகல பிராணிகளையும் பயன்பெறச் செய்கிறான். அது முன்னரே கூறினோம்.

 

பரார்த்த பூஜை ஆலயங்களில் செய்யப்படுவது. ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படும் பிம்பத்தின் பெருமையை முன்னரே கூறினோம். இது தனக்குப் பயன்படும் பொருட்டுக் கிரகத்துக்குள் இரகசியமாகச் செய்யப்படாமல், பல ஜனங்களும் ஈடேறும் பொருட்டுப் பொதுவிடமாகிய ஆலயங்களில் நடத்தப்படுவதனால் இது பரார்த்த பூஜை யென்று பேர் பெற்றது. வேதத்தில்'' தேவர் உள்ள தேரை யிழுப்பவன் பாவத்தினின்றும் விடுபடுவான் " என்ற வசனமும் உண்டு. இத்தகைய பெரிய பிரமாணங்களை ஆதாரமாகக் கொண்டே அநேக ஆரியப் பெரியோர்கள் ஆலயங்களிற் சென்று தேவனைப் பிரார்த்திக்கின்றனர்கள். இவ்வாலய தரிசனத்தாற் பலனுண்டென்பதை யெளிதில் அறியலாம். ஒரு தகட்டையடித்து அதில் எழுத்தமைத்து ஆலயத்துக்குக் கொண்டு போய் விக்கிரகத்தின் பாதத்தில் வைத்துச் சிலகாலம் பூசித்துச் சங்கரதோஷம் கொண்ட பெண்ணுக்குக் கட்டினால் அவளிடத்திலுள்ள பேய் பிசாசுகள் ஓடிப்போவதைப் பிரத்தி யட்சமாகக் காணலாம். காளியம்மன் முதலிய தேவி சந்நிதிகளில் கத்தி வெட்டு முதலிய துன்பமும் செய்யாமலிருப்பதும், கல்லடி உபத்திரவம் செய்யாமலிருப்பதும் பிரத்தியட்சம். சில சந்நிதிகளில் தீ சுடுவதில்லை. சில சந்நிதிகளில் காத்திருப்பதினால் தீராத கன்ம வியாதிகளுந் தீர்வதும் பிரத்தியட்சம். சிந்தையைச் சிதற விடாமல் ஒரு மண்டலம் தேவனைப் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து ஆராதிக்க இஷ்ட சித்தி கைகூடுவது கண்கூடு. உண்மையான சில பக்தர்களுக்கு அவர்கள் தரிசிக்கும் விக்கிரகமே சொற்பனத்தில் வந்து இதம் கூற அது சாக்கிரத்தில் பலிப்பதும் பிரத்தியட்சம். பரிபாக முதிர்ச்சியுடைய பெரியோர் அதனைப் பரப்பிரமமாகவே கருதி வழிபட்டு மோட்சானந்த மடைவதும் அவர் வாயாற் கேட்டறியலாம். இன்னம் அளவு கடந்த பிரத்தியட்சமுண்டு. இதனை நமது ஜனங்கள் அறிந்திருப்பார்களாதலால் விஸ்தரிக்க வேண்டியதில்லை. இத்தகைய மகிமை வாய்ந்த விக்கிரகாராதனை நமது பெரியோர்களாற் சம்பாதித்து வைக்கப்பட்டுள்ள சேமநிதி போல்வதாம். இதனை அலட்சியம் செய்யாமல் கைக்கொண்டு நடந்து வருவது நமது முக்கிய கடமைகளிலொன்றாம். ஸ்மிருதி புராண இதிகாசங்களில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளவைகளையென தறிவிற்கு எட்டினமட்டும் எடுத்துக் காட்டினதே யன்றி, எமது சொந்தப் புத்திகொண்டு கூறியது ஒன்றுமில்லை. அநேக வேதவாக்கியங்களையு மெடுத்துக் காட்டினோம். இதில் ஐயங் கொள்ளாமல் அனுஷ்டிப்பவர்கள் பெரும் பேறு பெறுவதில் ஆக்ஷேபனை யில்லை. விசேஷமாக யதார்த்த குணங்களாகிற பிரத்தியட்சப் பிரமாணங்களை யாதாரமாகக் காட்டி யெழுதப்பட்டுள்ள படியால் யதார்த்த சோதகர்கள் அதனுண்மையை யுணர்ந்து கொள்வார்க ளென்பதிலையமில்லை. இத்தகைய விக்கிர காராதனையை யிகழாதனுஷ்டித்து இம்மை மறுமைப் பயன்களை யடைந்து ஜீவாத்மாக்களுய்யுமாறு செந்திலாண்டவன் திருவடி பணிவோமாக.


மறுஉலகம்

 

உஷக்கால முதலாகப்பட்ட இந்த நித்தியவிதிகளை வழுவாமல் அனுஷ்டித்துப் பரிசுத்தமான சித்தத்தை யுடையவர்கள் திவ்வியசரீரம் பெற்று மேலுலகங்களிற் சென்று அங்கங்குள்ள போகங்களை யனுபவித்து, மீண்டும் பூலோகத்தில் உயர்ந்த வருணத்தில், உயர்ந்த குலத்தில் ஜனித்துச் சதாசார சீலர்களாய் ஒழுகி அந்தத்தில் மோட்சத்தையும் பெறுவார்கள். இவ்விதிகளுக்கு மாறாக நடந்து தம்மனம் போனபடி ஒழுகுகிறவர்கள் யாதனா சரீரத்தைப் பெற்று எமனுடைய ஆக்கினையாலே இரௌரவ கும்பிபாகாதி நரகங்களையடைந்து நெடுங்காலம் துன்பமுற்றுப் பிறகு பாவசேஷத்தால் ஈன ஜந்துக்களாகவும், கனகுலத்தில் தரித்திரர்களாகவும், பலவியாதிகளை யுடையவர்களாகவும் பிறந்து வருந்தி மேலும் மேலும் பாவங்களைச் செய் து நரகலோகந்தோறு மலைந்து துன்பமுறுவார்கள். ஆதலால் பாவநெறியை விட்டு விலகி, நன்னெறியி லொழுகி மகிமை பெறுவதே சற்குணமாந்தர்க்குத் தக்கது. இந்த நன்னெறி பற்றி யொழுகுகிறவர்கள் ஆஸ்திக புத்தியுடையவர்களாகவும், தெய்வபக்தி யுள்ளவர்களாகவும், பெரியோரை வணங்குகிறவர்களாகவும், மாதா பிதாக்களை வழிபடுகிறவர்களாகவும், குருசேவை செய்கிறவர்களாகவும், பதிவிரதையான மனைவியினிடத்தில் உள்ளன் புடையவர்களாகவும், ஜீவ இம்சை செய்யாதவர்களாகவும், சகோதர வாஞ்சை யுடையவர்களாகவும், சகல பிராணிகளிடத்திலும் இரக்கமுள்ளவர்களாகவும், பரோபகார சிந்தை யுடையவர்களாகவும், நித்தியா நித்தியவஸ்துக்களின் தன்மையை யுணர்ந்தவர்களாகவும், சொர்க்க நரகாதிபுவன இரகசியங்களை வேதங்களாலும் பெரியோர்களாலும் தெரிந்து கொண்ட வர்களாகவும், கோபம், பொறாமை, பொய், பகை, வஞ்சகம், காமமாதி துர்க்குணங்களை யொழித்தவர்களாகவும், இவற்றுக்கு மாறான சற்குணங்களை யுடையவர்களாகவு மிருக்க வேண்டும். இவர்கள் தேகாந்தத்தில் புண்ணிய லோகங்களையே யடைவார்கள். இவைகளை யெல்லாம் நமது பூர்வ பிதாக்கள் தபோமகிமையாலும், யோகமகிமையாலும் சுயானுபவமாகக் கண்டறிந்து நமக்குபகரித் திருக்கின்றார்கள். தமது யோகவல்லமையால் பல வுலகங்களையும் நேராகப் பார்த்து அவற்றின் உண்மைகளை யுணர்ந்து வெளிப்படுத்தினார்கள். ஆதலால் நாம் அவ்வா றொழுகுவதே தகுதி. அப்படியாயின் அவ்வலகங்கள் எங்குள்ளன? சரீரத்தை விட்ட ஜீவாத்மா அவ்வுலகங்களை யெவ்வாறடையும்? அவ்வுலகங்களுக்குச் செல்லும் மார்க்கம் யாது? என்று பல கேள்விகள் நிகழலாம். அது சிறிது கூறுவாம்.

 

காயவிரிவில் காணப்படுகிற நட்சத்திரங்க ளெல்லாம் உலகங்களே. அவற்றில் பவ்வண்டங்களிலும் ஜீவாத்மாக்கள் சஞ்சரிக்கின்றன. ஆனால் மனிதர்களுடைய சொரூபத்தைப் போல அவர்களுக்கும் உருவமிருக்கு மென்று துணிந்து கூற முடியாது.

 

தேவர்களுட் சிலர்க்கு நான்கு புயங்களுண்டென்றும், அவர்கள் வடிவம் சூரியனைப்போலக் காந்தியுடையதாயிருக்கு மென்றும், நிருதர்களிற் பலர் பற்பல கோரரூப முடையவர்களென்றும் மனித சொரூபத்துக்கு மாறாகக் கூறப்படுதலா லென்க. அர்ஜுனன் தேவலோகம் சென்ற போது அவனை நோக்கிக் " குந்தி குமாரனே! புண்ணிய பாரதமக்கள் வசிக்கும் இவ்வுலகங்கள் தான் பூலோகத்திலிருந்த போது நமக்கு நட்சத் திரங்களாகக் காணப்பட்டன வென்று இந்திர சாரதியாகிய மாதலி கூறினதாகப் பாரதங் கூறுகின்றது. அன்றியும் " பூலோகத்தி லிருக்கும் போது நமக்கு நட்சத்திர ரூபமாகக் காணப்பட்ட அநேக உலகங்களை அர்ஜுனன் பார்த்தான் " என்றும், " அவைகள் பூமிக்கு வெகு தூரத்திலிருக்கின் றமையால் மிகச் சிறியனவாயும், தீபங்களைப்போலவும் காணப்படுகின்றன. இப்போது அவைகள் மிகப் பெரியனவாயும், தமது சுயப்பிரகாசத்தால் விளங்குகின்றனவாயும் காணப்பட்டன " என்றுங் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே, காசி காண்டத்திலும் 'சிவசன்மா என்பவர் விஷ்ணு சொரூபத்தை மடைந்து, வைகுண்டம் செல்லும் போது எமலோகம், தேவலோகம், சூரியலோகம், அக்கினிலோகம், நிருதியுலகம், வருணனுலகம், வாயுலோகம், குபேரலோகம், ஈசானனுலகம், சந்திர னுலகம், தாரகையுலகம், புதனுலகம், சுக்கிரனுலகம், செவ்வாய், வியாழம், சனி யுலகங்கள் சத்தரிஷி யுலகங்களைப்பார்த்து மகிழ்ந்து சென்றார்" என்று கூறப்பட்டுள்ளது. மாறாகக் கூ நோக்கிக் ''குந்தி குமாருந்த போது நமக்கு இவ்வாறு பல நூல்களுங் கூறுகின்றன. ஆதலால் ஆகாயத்தில் நட்சத்திரவடிவமாகக் காணப்படுகிறவைகளும், கிரகங்களென்று கூறப்படுகிறவைகளும் உலகங்களேயாம். இப்பொழுது கூறிய இவை யெல்லாம் புண்ணியர்கள் அடையும் போது பூமிகளேயாம் அவ்வுலகங்கள் வெய்யில், நிலவில் லாமலும் சுயம்பிரகாசமுடையவைகளென்றும், பாவத்தினின்றும் நீங்கியபரிசுத்த புண்ணியாத்மாக்களே வசிப்பதால் அவ்விடத்தில் பசிதாகம் முதலியவும், வியாதிகளுமில்லை யெனவும், அங்கு அனுபவிப்பது முற்றும் இன்பமேயென்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன.

 

சம்பாதித்த பொருளைச் சற்பாத்திரத்தில் தானம் கொடுத்தவரும் ஒருவருக்குந் துன்பஞ் செய்யாதவர்களும், கிஹ்ய லோகத்தில் வசிப்பார்கள். அரிய விரதஞ் செய்தவர்கள், யாழினால் தேவதைகளின் புகழைப் பாடினவர்கள், கீதங்களைப் பாடி யதனாற் சம்பாதித்த பொருள்களைத் தருமத்திற் செலவழித்தவர்களாய்க் கந்தர்வராய்க் கந்தர்வ லோகத்தில் வசிப்பார்கள். ஒரு பயனைக் கருதித் தேவராராதனை செய்வோரும், வித்தியார்த்திகளுக்கு அன்னம், ஆடை முதலிய வளித்துப் பொருளை விரும்பாமற் கல்வி கற்பித்தவர்களும் வித்தியாதர வுலகத்தில் வசிப்பார்கள். அந்தராதித்திய வித்தையால் சூரியோபாசனை செய்பவரும், காயத் திரியை முறைப்படி ஜபிப்பவரும், காலை பகல் மாலை யாகிய மூன்று பொழுதும் முறைப்படி சூரியனுக்கு அர்க்கியங் கொடுப்பவரும், சூரிய கிரகணகாலத்தில் சற்பாத்திரத்தில் தானங்கொடுப்பவர்களும், ஓமம் தானம் ஜபம் இவைகளைத் தவறாமற் செய்கிறவர்களும் சூரிய லோகத்தை யடைவார்கள். போர் முகத்தில் பின்னிடையாமற் பொருது ஜீவனை விட்ட வீரர்களும், வேள்வி செய்பவர், செய்விப்பவர், அசுவமேதஞ் செய்தவர், துலாபார தானஞ் செய்தவர், அளவில்லாத சொர்ணதானஞ் செய்தவர், தவம்புரிந்த வர்களும், நீதி தவராமல் அரசு செலுத்திப் பிரஜா பரிபாலனஞ் செய்த அரசர்களும், இந்திரன் வாழ்கின்ற சொர்க்கலோகத்தை யடைந்து வாழ்வார்கள். அக்கினிப்பிரவேசம் செய்த மாதரும், வேள்விகள் செய்த அந்தணரும், குளிர் நீங்கும்படி கம்பளம் சால்வை முதலிய தானஞ் செய்தவர்களும் அக்கினி யுலகத்தை யடைவார்கள். இழிகுலத்திற் பிறந்தும் அறநெறிதவறாமல் அந்தணரைப் பணிந்தொழுகுபவர் நிருதியுலகையடை வார்கள். அந்தணர்க்குப் பூமிதானம் கொடுத்தவர், ஆறு குளங்களில் படித்துறை கட்டினோர், சிறைப்பட்டவர்களையும் விலங்கிட்டவர்களையும் விடுவித்தவர், குளம் கிணறு வெட்டினவர், தண்ணீர்ப்பந்தல் வைத்தவர் இவர்கள் வருணவுலகத்தை யடைவார்கள். திருமால் சேவடியை மெய் யன் போடு வழிபடுவோர் மஹலோகத்தில் வசிப்பார்கள். தவத்திற் சிறந்த பெரியோர்கள் தவலோகத்தில் வசிப்பார்கள். இந்தப் பலவுலகங்களிலும் புண்ணியம் புரிந்தோர் சென்று போகம் நுகர்ந்து வாழ்வார்களெனப் புராணங்களும், ஏனைய நூல்களும் கூறுதலால், புண்ணியம் புரிந்தோர் போக பூமிகளிற் சென்று வாழ்வார்கள் என்னும் நிச்சயமுண்டு.

 

இதுகாறும் எடுத்துக் கூறியவை நூல்களிற் கூறப்பட்டவைகளே எதனானெனில் அவ்வுலகங்களிற் சென்று அங்கங்குள்ள வற்புதங்களைக் கண்டு மீண்டு வந்துரைத்த மஹாத்மாக்கள் அநே ருளர். அவைகளெல்லாம் நூல்களிலேயே யமைந்து கிடக்கின்றன. சந்திர வம்சத்துக் கரசனாகிய ஸம்வருணன் சூரியன் புத்திரியாகிய தபதியின் மேற் காதல் கொண்டான். அதனை யுணர்ந்த அவன் குருவாகிய வசிஷ்டர் சூரியலோகம் போய்ச் சூரியனைக்கண்டு பேசி யவன் புத்திரியை யழைத்துக் கொண்டு வந்து ஸம்வருணனுக்கு மணம்புரிவித்தார். அவ்விருவருக்கும் பிறந்த புத்திரனே குரு என்னும் பிரபல அரசன். அவன் பெயரை யனுசரித்து அவன் பின் சந்ததியார் குருகுலத்தார், அல்லது கௌரவர் என்னப் பட்டார்கள். பாண்டவனாகிய அர்ஜுனன் தேவலோகம் போய் ஐந்து வருஷம் வசித்து மீண்டும் பூலோகம் வந்தான் விசுவாமித்திரரும் வசிஷ்டரும் தேவலோகம் சென்று தேவராஜன் சந்நிதியில் சபதஞ் செய்து கொண்டு மீண்டு பூலோகம் வந்தார்கள். சோசோழ பாண்டியர்கள் தேவலோகம் போய்த் தேவேந்திரனைத் தரிசித்து மீண்டு வந்தார்கள். சாநந்தகணேசர் நாகலோகம் போய் அங்கே நரகத்தில் வருந்துகிற ஜீவாத்மாக்களைத் தமது தவவலிமை யால் மீட்டுக் காப்பாற்றி யருளினார். விசுவாவசு என்பவர் எமலோகம் போய்த் தருமராஜனைத் தரிசித்து இறந்து போன தமது மருமகளைப் பிழைப்பித்தார். இவை முதலிய அருந்த சரித்திரங்கள் உண்மை நூல்களிலுள்ளன. அந் நூல்களைக் குருமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள் சொர்க்க நரகலோகங்களுண்டு என்பதி லையப்படார்.

 

அப்படியானால் நரகமெங்குள்ளது? சொர்க்க மெங்குள்ளது? இதில் பெருஞ் சந்தேகமுண்டு. ஏனெனில், சொர்க்கலோகம் வானிலுள்ளது என்பர். அது சொர்ணமயமாதலால் அதிக பிரகாசமுள்ளது. அங்ஙன மாகவும், வியாழம் செவ்வாய் என்னும் கிரகங்களைப்போல ஏன் காணக் கூடாத்தா யிருக்கின்றது? கண்ணாற் சண்டதாயினும் கருவிகளாலு மறியமுடியாம லிருப்பதேன்? நரகலோகம் தென்திசையிலுள்ளது என்று எல்லா நூல்களங் கூறுகின்றன. தென்திசையை ஆராய்ந்து பார்த்தும் அகப்படவில்லை. இதனால் இவற்றின் உண்மையில் பெருஞ் சந்தேகமே யெனின், அது கூறுதும். இவையெல்லாம் சூரியனை மையஸ்தானமாகக் கொண்டு கூறப்பட்டதென்று உண்மை நூல்களாற் பெறப்படுகின்றது. சொர்க்கலோகம் அக்கினிலோகம் முதலிய ஒளியுலகங்கள் சூரியனைச் சூழ உளன. இவற்றுள் சொர்க்கலோகமானது சூரியனுக்குச் சற்று வடகீழ் திசையிலுள்ளது. சூரியனுக்கும் மேலேயுள்ளது. சூரியனுக்குச் சமீபத்திலிருக்கிறது. அது இயற்கையிலேயே ஒளியால் விளங்குவது. அவ்விடத்தி லிருளேயில்லை. ஒளிமயமாகிய அவ்வுலகம் சூரியனது பேரொளியோடுகந்து அதிலழுந்தி மறைந்திருக்கும். சூரியனுக்கு முன் வைக்கப்பட்ட தீபம் சற்றுத் தூரத்தி லிருந்து காண்பவர்களுக்குக் காண முடியாமல், அச்சூரியன் ஒளியில் மறைந்திருப்பது போலவே, அவ்வுலகமும் சூரியனோடு கலந்து ஒளிமயமாகவே யிருத்தலால் எவ்வித கருவிகளாலுங்காண முடியாது சூரியனுக்கு மேலாகவே யிருத்தலால் அதிக தூரத்திலிருந்து காண்பது ஒரு போதுங் கூடாததேயாம். அதற்குக் கீழாக அநேக  ஒளி யுலகங்களிருக்கின்றன. அவைகளும் காண முடியாதவைகளே; இவை யெல்லாஞ் சூரியனைச் சூழ்ந்திருப்பதனால். இங்வுலகங்கள் எல்லாவற்றுக்கும் மேலாகச் சொர்க்கலோக முள்ளது. இப்படியாக ஒளி மயமான பல தேவலேகங்களையுங் கடந்து அர்ஜுனன், இந்திரன் வசிக்கும் அமராவதியைக் கண்டான் என்று பாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே முற்றத் துறந்த சந்நியாசிகளும், யுத்தத்தில் முதுகு திப்பாமல் பொருதுமடிந்த வீரர்களும் சூரிய மண்டலத்தைப் பிளந்து கொண்டு சொர்க்கலோகத்தை யடைகின்றார்க ளென்று உண்மை நூல்க ளெல்லாங் கூறுகின்றன. அஷ்டதிக்குப் பாலகர் வசிக்கும் உலகங்களில் பல, சூரியனைச் சூழவேயுள்ளன. இதனை "வளங்கெழு மாயாபுரியிற் சிவசன்மனெனு மறையோன் மாய்தறன்னாற், களங்கனிபோன் மேனியான் சாரூபமடைந்து வருகணங்களோடு, முளங்கவரு மரமகளிரொண் மணிச்சாமரை யிரட்ட வொளிருஞ் செம்பொன், விளங்குமணி விமானத்து விண்ணவர் பூமழை தூவ விசும்பிற் போனான்" " என்று கூறியுட னேகுதலு மோருலகுகண், டொன்று மிவ்வுலகமியாது விகடங்கொளுரவுங், குன்று செல்வமுமுள்ளா ரெவர்கள் கூறுகெனலும், நன்றுகேளென மகிழ்ந்து கணநாதர் நவில்வாரா " என்று போந்த பிரமாண வசனங்களால் வானத்திலேயே அவ்வுலகங்களுள்ளன வென்பது விளங்கும். இஃதேயன்றிப் பூவுலகத்திலேயே கிழக்கு முதலிய திசைகளிலுள்ளன வென்பதில்லை.

 

இனி நரகலோகத்தைச் சிறிது கவனிப்போம். நரகலோகமிரண்டுவகை: ஒருவகை பூமியிலுள்ளது. மற்றொன்று வானத்திலுள்ளது. பூமியிலுள்ளதை முதலில் கவனிப்போம்: பூமியானது கோழியண்டத்தின் வடிவாய்த் திரண்டுள்ளது; எல்லா அண்டங்களு மிவ்வாறே முட்டை வடிவ மாகவே யிருக்கும். அதனாலேயே யவற்றுக்கு அண்ட கோளங்க ளென்று பெயர் கூறப்படுவது. நிற்க, பூமியானது உட்புறத்தில் ஏழுமடிப்புகளுடன் கூடியிருக்கின்றது. முதல் மடிப்பில் பாம்புகள் வசிக்கும்; இரணடாம் மடிப்பில் புழுக்கள் பிறக்கும், தேள் முதலிய ஜந்துக்கள் வசிக்கும்; மூன்றாவதில் நீரோடிக்கொண்டிருப்பதால் நீரில் பசிக்கும் ஆலம் முதலியன வசிக்கும்; நான்காவதில் அக்கினியே நிறைந்து எரிந்து கொண்டிருககும்; இந்த மடிப்புகள் வட்டமாகவே யிருத்தலால் எங்கு மிப்படி யிருக்குமாதலால், பூமியில் மேற்புறத்தில் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் அதன்கீழ் ஏழுமடிப்புகளிருந்தே தீரும். இதனையே கீழேழுலகமெனறு நூல்கள் கூறுவது. இவை பூமிக்குக் கீழ் முறையே அதல, விதல், சுதல், ரசாதல, தராதல, மஹதல, பாதலவுலகங்க ளெனனப்படும். நடுவிலிலிருக்கும் ரசாதலமாகிய நெருப்புக்குச் சமீபத்திலுள்ள வுலகங்களில் அக்கினியின் தன்மையால் அதிகதுன்ப முள்ளதாயிருக்கும்; அக்கினியைப் பற்றிப் பேசவேண்டுவதில்லை.

 

இதனைச் சிறிது விளக்குவாம். சோதிட சாஸ்திரத்தில் எண்களைப்பற்றிப் பேசும்போது அ கரம் ஒன்று என்னும் எண்ணுக்குப் பிரதியாக வுபயோகிக்கப்படும். இ கரம் இரண்டு, உ கரம் மூன்று என்பனவற்றைக் குறிக்கும். இதுவும் சோதிடமே யாதலால் அமமுறை கொண்டு ஆராயுங்கால், அதல என்பதில் அகரம் ஒன்று; விதல என்பதில் வகரத்தின் மேலுள்ள இ கரம் இரண்டு; சுதல் என்பதில் " சு'' என்பதிலுள்ள உகரம் மூன்று. பூமியின் மேற்புறத்தி லிருந்து அதனுட்பிரிவுகளை நோக்குவோமாயின் அதலவுலகமே முதலிற் காணப்படும். அதல என்று பிரித்து ஒன்று உலகமென்று கொள்க. அதென்னவெனில், பூமியின் கீழுலக்மானது ஒருபங்கு துன்பத்தையுடையது என்பதாகச் சோதிட சாஸ்திரங் கூறுகின்றது. பூமியிலுள்ள துன்பத்தை விட ஒரு பங்கு அதிக துன்பமுள்ள வுலகமென்பது கொள்க. விதல் என்பதில் இ கரம் இரண்டு ஆதலால் இரண்டு பங்கு துன்பமதிக மென்பதை விளக்கும். சுதலவென்பது மூன்று பங்கு துன்பமுள்ளது என்பதை விளக்கும். ரசாதலம் அக்கினி மயமாதலால் முற்றுந் துன்பமுள்ளது என்று கொள்ளப்படும். எவ்வாறெனில் ரசம் - துன்பரசம். துன்பரசத்தையே முழுமையுங் கொண்டிருக்கு முலகமென்பது கொள்க. தராதலம் என்பதில் தகர ராகாரங்களிலுள்ள அ ஆ காரங்களில் அ ஒன்று, ஆ இரண்டு ஆக மூன்று. மூன்று பங்கு துன்பமுள்ளது என்பது பொருளாம். அதற்கடுத்த மஹதலத்தில் இரண்டு அ கரங்களிருத்தலால் இரண்டு துன்பமென்று கொள்க. அதற்கடுத்த பாதலம் என்பது பதலமென்றிருக்க வேண்டியதைப் பாதலமென்று மருவு வழக்காய் உபயோகிக்கப் படுகின்றது. பதலம் என்று கொண்டு ஒருபங்கு துன்பமுள்ளதென்று கொள்ளப்படும். இவ்வாறு அண்ட நிர்ணயங் கூறிய சோதிட நூல்கள் கூறுகின்றன. பூமிக்கடுத்த கீழ்வட்டத்தில் ஒரு பங்கு துன்பமும், இரண்டாம் வட்டத்தில் இரண்டு பங்கு துன்பமும், ரசாதலத்தைச் சூழவிருக்கும் மூன்றாம் வட்டத்தில் மூன்று பங்கு துன்பமும் எப்போது முள்ளதென்றும், ரசாதலத்தில் எப்போதும் முழுத் துன்பமே யென்றுங் கொள்ளப்படும்.

 

சிவானந்த சாகர யோகீஸ்வரர்.

 

ஆனந்த போதினி – 1920, 1921 ௵,

 

ஜூலை, - டிசம்பர், ஜனவரி, - மே, ௴

 

No comments:

Post a Comment