Thursday, August 27, 2020

 

இலக்கணம்

 

 இலக்கணமாவது, நம் தமிழ்ப்பாஷை மட்டுக்கு மல்ல; மற்றெல்லாப் பாஷைகட்கு முரியதே. இது, பாஷையின் இலக்ஷணமாகும். வட மொழியில் உள்ள வியாகரணத்தைவிட, நந்தமிழ் மொழி இலக்கணமே சாலச் சிறந்ததாகும். ஏனெனில், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐந்திலக்கணங்களினும் நடுநாயகமாக விளங்கும் பொருள் இலக்கணம், நம் தமிழ்ப்பாஷைக்கு மட்டுமே யுண்டு. அத்தகைய பொருளிலக் கணத்தையே நம் கண்ணுதலவரும் சிறந்ததெனக்கருதி,'' இறையனா ரகப்பொருள்" என்னு நூலிலியற்றி யிருக்கின்றனரென்னில், இதன் மேம்பாடு வரைதற் பாலதோ! நங் கவிச்சக்கரவர்த்தியான கம்பநாட்டாழ் வாரும்,

 

''செவ்விய மதுரம் சேர்ந்தநற் பொருளிற்

சீரிய கூரிய தீஞ் சொல்''              என்று சிறப்பித்துக் கூறியுள்ளார்.

 

இத்துணைச் சிறப்பின் பாலதாய இவ்விலக்கணம், மேனாளில், திங்க ளங்குழவி வேய்ந்த சடைமுடிப் பெம்மானுக்கும், மலையரையன் புத்திரி யான உமைக்கும், மணம் நிகழ்ந்துழி, இம்வரையின்கண், ஈண்டிய பெருங் கூட்டத்தால், இந்நிலவுலகின் வடதிசை தாழ்ந்தும், தென் திசை யுயர்ந் தும், சமனாகாவிடத்துச் சமஞ் செய்தற்குக் குறுமுனிவனைத் தென்னாடு செல்வாயாக வென்று சிவபெருமான் றிருவாய்மலர்ந்தருள, அகத்தியனார், தென்னாட்டின்கண் வழங்குந் தமிழ்ப்பாஷையை யடியேற்கருள வேண்டுமென்று கழற, அவ்வண்ணம் ஆண்டே, தமிழிலக்கணத்தைத் திருவாய் மலர்ந்தருளினார். அது முதலே, நம் தமிழ்ப்பாஷையானது, வரி வடிவமுள்ள எழுத்துக்களான் அமையப்பெற்று வழங்கி வருகிறது. அதற்கு முன்னர், ஒலி வடிவுள்ள வெழுத்துக்களான் மட்டும் நிலவி வந்தது. அதற்குச் சான்று, வடமொழியில் கூறிய வேதத்தை எழுதாக் கிளவி யென்னும் பெயர் புனைந்து கூறுகிறார்கள். அதனால் வடமொழி ஒரு காலத்தில், வரிவடிவுள்ள வெழுத்துக்களைப் பெறாதிருந்தது போலும். பாணினி முனிவர்க்கு வியாகரணத்தைச் சிவபெருமான் அறிவுறுத்திய பின்னரே வரிவடி வெழுத்துக்கள் வெளியாயின. பிறகுதான் வேதத்தை வரிவடி வெழுத்துக்களா னெழுதி, எல்லோரும் இலகுவாகக் கற்கிறார்கள் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

 

நிற்க, அகத்தியனார்தாம் முதலில் இலக்கணம் செய்தனர் என்றும், அவர் காலத்திற்கு முன்னேயே, தமிழ்த் தெய்வமான குமாரக் கடவுளால் செய்யப்பட்ட இலக்கணம் 'குமரம்' என்னும் பெயருடன் இருந்த தென்றும் கூறுகிறார்கள். இக்காலத்து உலவிவரும் இலக்கணங்களில், மிகச் சிறந்து விளங்கும் நூல், தொல்காப்பியமே யாம். இது, தலைச் சங் கத்தார்க்கும் இலக்கணமாக விளங்கி வந்தது. இந்நூற் பெருமைக்காகவே, இந்நூலாசிரியருக்கு, ஒல்காப்புலமைத் தொல்காப்பியனார் என்னும் சிறந்த நாமம் வழங்கி வருகின்றது. இத்தொல்காப்பியம், இயற்றமிழ் இலக்கணம் ஒன்றுமே கொண்டுள்ளதாகும். மற்றைய, இசைத்தமிழ், நாடகத் தமிழ் முதலிய இலக்கணங்களை இவர் செய்யவில்லை என்பது, பனம்பாரனார் கூறிய சிறப்புப்பாயிரத்தான் விளங்கும்.

 

''வழக்குஞ் செய்யுளு மாயிருமுதலி

னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடி''              என்றாராகலின்.


      பிற்காலத்ததாகிய நன்னூல், சின்னூல், காரிகை, அகப்பொருள் முதலியயாவும், தொல்காப்பியங் கற்கப்புகுவார்க்கு வழி காட்டிகளாக விருக்கின்றன. இத்துணையான தமிழிலக்கணங்களைக் கற்றாலன்றி, தமிழ்ச் செய்யுள்களின் பொருள்களை யறிதல் அசாத்தியமாகும். ஆனது பற்றி இலக்கணம் இலக்கியத்துக்கோர் கருவி யென்றுரைக்கிறார்கள்.
 

வேதாந்த சாஸ்திரங் கற்குஞ் சிலர்,


 "தொலைவில்லாச்
 சத்தமும் சோதிடமு மென்றாங் கிவை பிதற்றும்
 பித்தரில் பேதையா ரில்''


என்று வாயால் மட்டும் சொல்லி, உண்மையில் ஞானமடைந்தார் போன்றபி நயித்து விடுகிறார்கள். இவர்கள், விஷயந்தெரிதற்காக வசன நடையில் உள்ளவைகளைப் படிக்க ஆரம்பித்தாலும், அதற்கும் ஒரோவிடத்து இலக்கணவாராய்ச்சி வேண்டியதாயிருக்கிறது. எங்ஙனமெனில், "நீ அவ்விட மிருமதி, நான் வருவல்" என்றவிடத்து, மதியென்னும் சொல்லுக்கு, சந்திரனோ, மாதமோ, புத்தியோ என்னும் ஐயப்பாடு நிகழ்கின்றது. அந்தச்சொல், முன்னிலை யசையென்று தெரிந்திருக்குமாயின் அவ்வையப்பாடே தோன்றா தொழியும். இன்னும் "சிவஞானபோதம்'', '' சிவஞான சித்தி யார்" " முதலிய நூல்களைச் செய்த பெரியோர்கள் இலக்கணநூல் கல்லாதவரா? அன்றியும் அத்தகைய நூல்களின் உரையாசிரியரான, சிவஞான சுவாமிகள், இலக்கணம் தெரியாதவரா? என்பதையும், இச்சிவஞான சுவாமிகள் எழுதிய மேற்சொன்ன புஸ்தகங்களின் உரைகளையும் வாசித் தறிய வேண்டின், இலக்கணமின்றி யியலுமோ வென்பதையும், நன்கறிந்தார்களாயின் அப்படி நினைக்க மாட்டார்கள். இந்திரனும், பிருகஸ்பதியால், இவை வழுவுள்ளன, இவை வழுவில்லனவென்று வடமொழி இலக்கணம் மிக்க கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஆயின் யாவரே யாயினுமாகுக, இலக்கணங் கற்றலே பாஷையின் விருத்திக்கு ஏற்றதாகும்.
 

இதிகாசபுராண முதலியன வாசிப்போர், இலக்கணத்தானன்றி அவைகளின் மேன்மையையடையார். கல்லாதார் செய்யுள்களின் பொருளாராய்ச்சியில் இடர்ப்படுவர். அவைகளிற் சில ஈண்டுக் காட்டுதும். ஒருவர், வில்லிபாரதத்தில், கிருட்டினன் தூதுச் சருக்கத்தில், "உமைக்கு நாயகனிர வொழித்தருளினான்'' என வருமடியில், "இரவு " என்னும் பதம் காலப்பெயர் என்று இடர்ப்பட்டனர். அவருக்கு, அப்பதம், 'வு' கர விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று சொன்னால் விளங்கிற்றில்லை. அது இலக்கண நூலாராய்ச்சி யின்மையே யாம்.

 

 கம்பராமாயணத்தில், ''குற்றபாகு கொழிப்பவர்'' என்றற் றொடக்கத்துச் செய்யுளில், குற்றப்பாகு கொழிப்பவர் கொழிப்பன என்னும் சொல்லெச்சமும், திணை மயக்கமும் கலந்து காண்கிறது. அன்றியும் "முல்லையணிந்த முறுவல்'', '' அமிர்துகு குதலை'' என்பனவற்றில், ம அணிந்த, உகு என்பன உவமைச் சொற்கள் என்பதும் புலப்படுகின்றன. இவைகளைத் தெரிதற்கும் இலக்கணம் மிகவும் முக்கியமே.

 

''வாய்பவளம்", "வாய்ப்பவளம்" ஆகிய இரண்டு பதங்களும் பொருளில் வேறுபடுகின்றன. எங்ஙனமெனில், ஒரு ஒற்றெழுத்தாகிய'' ப்'' என்பதன்றோ பொருளை வேறு படுத்தியது. முன்னது எழுவாய்த் தொடர். வாயானது பவளம் என்னும் பொருளின் மேற்று. பின்னையது இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. வாயாகிய பவளம் என்னும் பொருடரும் உருவகம். இங்ஙனம் ஒரு தொடரில் வந்தவழி, எழுவாய்த் தொடரில் வலிமிகாமையும், பண்புத் தொகை வலிமிக்கு வருவதையும் இலக்கணம் தெரியாதார் என்னென்ன பொருள் கொண்டு விடுவார்களென்பதை யாராய்ந்து பார்க்க.

 

திருக்குறள் முதலியனவற்றின் உரைகளில் உரையாசிரியர்கள் இது ஒட்டு, இது ஆகுபெயர் இது உருவகம், இது அன்மொழித்தொகை, இது தீவகம் என்று மாத்திரம் எழுதிவிட்டிருக்கிறார்களே யொழிய அவைகளை ஆண்டாண்டு விளக்குவதில்லை அஃதவர் குற்றமேயன்றா? அவைகளை முன்னரேயறிந்து கொண்டல்லவோ மற்றவைகளை வாசிக்கவேண்டும். மற்ற விஷயங்களையும் எடுத்துக் காட்டுவதென்றால், எழுதவும் முடியாது. ஏடுமிடந்தராது. ஆகையால் இத்துடன், ஒவ்வொருவரும், ஆவசியக மாய்த் தமிழிலக்கணத்தைப் பயில வேண்டுமென்றும், இனி நம்மானந்த னுக்கும், இலக்கண சம்பந்தமானவும், இலக்கிய சம்பந்தமானவும் பாஷையை விருத்தி செய்யத் தகுந்த விஷயங்களைத் தானம்செய்வார்கள் ளென்றும் எல்லாம் வல்ல ஈசனை யிறைஞ்சுகின்றேன்.


 கோ. பாலசுந்தரம், காரியதரிசி,

 உபாத்திமைச் சங்கம்,

பெருங்கட்டூர்.

 

குறிப்பு: - நமது நண்பர் வரைந்துள்ள இலக்கணத்தைப் பற்றிய விசேஷம் யாவரும் - முக்கியமாய் மாணவர்களும், உபாத்தியாயர்களும் அவசியம் கவனிக்கத்தக்கது. இக்காலத்தில் பாடசாலைகளில் இலக் கணம் மிக்க அலட்சியம் செய்யப்படுவதே நம் அருமைத்தாய்மொழி குன்றிவிடுவதன் காரணமாகும்.

 

நமது நண்பர் வேதாந்த சாத்திரங்கற்கும் சிலர் மொழிவதாக் கூறிய,


 ''தொலைவிலாச் சத்தமும் சோதிடமு மென்றாங் கிவை பிதற்றும்
 பித்தரில் பேதையாரில்''


என்பதைப்பற்றி மட்டும் இரண்டொரு வார்த்தை கூற விரும்புகிறோம்.

 

கல்வியில், சாதாரண இலக்கண இலக்கியக் கல்வி மட்டும் கற்பதாகிய பாஷைக் கல்வி யொன்று - ஆன்மார்த்தக் கல்வி யொன்று. இவற்றில் முன்னைய கல்வி மட்டும் கற்பதால் அகங்காரமும் அஞ்ஞானமும் ஒழிவ தில்லை. அதற்கு மாறாக அகங்காரம் அதிகரித்து ஞானவான்களையும், இவனென்ன இலக்கண விலக்கியத்தில் நமக்கிணையா என்று, அவமதிக்கச் செய்கிறது. ஆனது பற்றி ஞானமடைய முயன்று சாத்திர ஆராய்ச்சி செய்வோர் தாம் வித்வானெனப் பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்னும் நோக்கத்தோடு இலக்கண இலக்கியக் கல்வியில் பற்று வைக்கலாகாது. வைத்தால் அது முடிவின்றி அத்துறையிலேயே யிழுத்துச் செல்லும். இதை வற்புறுத்திக் கூறவே அன்னார்களுக்கு ஆன்றோர் அவ்வாறு கூறினரேயன்றி இலக்கணத்தை அவமதித்துக் கூறியதல்ல. சாத்திர ஆராய்ச்சி செய்வதற்கே (நம் நண்பர் கூறியபடி) இலக்கணம் அவசியம் வேண்டியிருக்கிறது. இலக்கண மறியான் கல்வி ஒருபோதும் கல்வியாகாது. நமது பாடசாலைகளில் நம்மக்களுக்கு இலகக்ணம் போதிக்குமாறு ஏற்பாடு செய்ய முயல்வோரைத்தான் காணோம். இவ்வளவிற்கும் கல்வி மந் திரியா யிருப்பவர் நம்மவரே. ஆயினும் தமிழ்க்கல்வியின் அபிவிர்த்திக்கு அத்தியாவசியமான இவ்விஷயத்தை அவர்களும் கவனிப்பதில்லை. இது நமது கெட்டகாலமே. ஆண்டவன் எப்போ தருள் புரிவாரோ அறியோம்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - டிசம்பர் ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment