Wednesday, August 26, 2020

 

இராமாயணமும் கந்தபுராணமும்

இராமாயண கதைக்கும் கந்தபுராணக் கதைக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டத் தொடங்கி சென்ற மாத விதழில் முதற்பகுதியைக் காட்டினாம். இனி, மற்றைப் பகுதியையும் ஈண்டுக் காட்டுவாம். இராமாயணத்தில், அனுமான் இலங்கைச் குச் சென்று சீதாதேவியைக் கண்டு பேசிய பின் இராவணன் பாற் சென்று நல்லுரைகள் நவின்று, இலங்கையை எரியெழக் கொளுத்தி மீண்டானாக, இராவணன் தெய்வத் தச்சனைக் கொண்டு நகரைப் பண்டேபோலாக்கித் தன் மந்திரிகளோடிருந்து மேல் செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்து ஆலோசிக்கின்றான். அப்பொழுது அவனது மந்திரிகளும் மற்று முன்ளோரும் இராமனைப் பொருது அழித்தலே செய்யத்தக்க காரியமென ஆலோசனை கூறுகின்றனர். அவன் தம்பியாகிய கும்பகர்ணனோ அவர்களைத் தடுத்து இராவணனுக்கு நன்மதி புகட்டுகின்றான்.

 

"அண்ணா! சகல சாஸ்திரங்களையும் நன்றாகக் கற்றறிந்தும் பிறர் மனை விழைதலாகிய பெரும் பழிக்காளாகினை; தேவர்களை யெல்லாம் துன்பப்படுத்தினை; இது செயத்தகும் செயலோ? இவற்றின் பயனாகவே இப்பழி நேர்ந்தது. சீதையை இராமனிடம் சோத்து விடுவதே நன்று' என்று கூறுகின்றான்.

 

கந்தபுராணத்திலும் வீரவாகு வீரமகேந்திரஞ் சென்று சயந்தனைக் கண்டு பேசிய பின், சூரன்பாற் சென்று நல்லுரைகள் நவின்று, அந்த சுரையழித்து மீண்டானாக, சூரன் பிரமனைக் கொண்டு நகரைப் பண்டேபோலாக்கித் ன் மந்திரிகளோடிருந்து மேல் செய்யவேண்டிய காரியத்தைக் குறித்து ஆலோசிக்கின்றான். அப்பொழுது அவனது மந்திரிகளும் மற்றுமுள்ளோரும் முருகனைப் பொருது அழித்தலே செய்யத்தக்க காரியமென ஆலோசனை கூறுகின்றனர். அவன் தம்பியாகிய சிங்க முகனோ அவர்களைத் தடுத்து சூரனுக்கு நன்மதி புகட்டுகின்றான்.

 

"அண்ணா! தேவர்களைத் துன்புறுத்தினை. சயந்தனைச் சிறையிட்டனை. இது சிட்டர் செயும் செயலாகுமோ! தேவர்களைச் சிறையினின்றும் விடுதலை செய்தலே உய்யும் நெறியாம்" எனப் புகல்கின்றான்.

இதனாலும் இவ்விரு சரிதைகளும் ஒத்திருத்தல் காண்க.

 

இராமாயணத்தில் கும்பகருணன் இராவணனுக்கு இசங் கூறியது போலவே விபீஷணன் என்னும் மற்றொரு தம்பியும் பற்பல நீதிகளை யெடுத்தோதுகின்றான். இராவணன் அவ்வுரைகளைச் செவிக்கொளாது கொல்வேன் எனக் கோபித்துக் கூறுதலும், அவ்விபீடணன் இராமன்பாற் சென்று சரணாகதி யடைந்து இராவணனாதியர் மாண்டபின் நீர்க்கடன் செய்கின்றான்.

 

அப்படியே கந்த புராணத்திலும் சூரன் மக்களு ளொருவன் இரணியனென்பான் தன் தந்தைக்குப் பற்பல நீதிகளை யெடுத்தோதுகின்றான்.

 

தேவரை நாம் சிறை செய்த தன்மையால்

ஆவது பாவமே யாக்கம் வேறிலை

யாவையு முணர்ந்திடு மிறைவ திண்ணமே

போவது நம்முயிர் திருவும் பொன்றுமால்

 

என்று அவனெடுத்துரைக்கு மா மாற்றம் விபீஷணன் விளம்பும் உரையோடொக்க நோக்கத் தக்கதாம். விபீஷணனை இராவணன் வெகுண்டு

 

அஞ்சினை யாதலி னமர்க்கு மாள்லை
தஞ்சென மனிசர்பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாற்றினை
நஞ்சினை யுடன் கொடு வாழ்தல் நன்று


ஆகலின், விழியெதிர் நிற்றியேல் விளிதி. இன்னே என்னெதிர் நில்லாதோடிப்போ. இன்றேல் சாவாய் என விசைத்தது போலவே, சூரனும், இத மொழி கூறிய இரணியனை நோக்கி,

ஆற்றல் விட்டனை குலமுறை பிழைத்தனை அரசின்
ஏற்றம் நீங்கினை ஒன்னலர்க் கஞ்சினை யிசைத்தாய்
மாற்ற மொன்றினி யுரைத்தியேல் உன் றனை வல்லே
கூற்றுவன் புரத்தேற்றுவன் யான்


எனக் கொதித்துக் கூறுகின்றான். ஆனால், இரணியன் பகைவரோடு சேராது மீனுருக் கொண்டு கடலி லொளித் திருந்து சூரன் முடிந்த பின் அவனது நிலையைக் கண்டழுது நீர்க்கடன் செய்கின்றான்.

 

முதல் நாள் நடந்த போரில் இராவணன் தன் சேனைகளை யெல்லாமிழந்தது மன்றித் தானும் முடியிழந்து போர் செய்யு மாற்றலினறித் தனித்து காணி நிற்கின்றான்.


அறங் கடந்தவர் செயலிதென் றுலகெலா மார்ப்ப
நிறங் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணின னெல்லழி முகத்தினன் தலையன்
வெறுங்கை காற்றினன் விழுதுடை ஆலன்ன மெய்யன்


தீயவர்கள் அடையம் கதி இது தான் என்று உலகத்திலுள்ளவர்களெல்லாம் ஆரவாரிக்கும்படி நிறங்கரிந்து கால் விரலால் தரையைக் கீரிக் கொண்டும் கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டும் விழுதுகளையுடையதோர் ஆலமரம் நிற்பது போல் இராமபிரான் எதிரில் தோல்வியுற்று நிற்கின்றான் இலங்கை வேந்தன்.
அப்படியே

கந்த புராணத்தில் சூரனும் முதல் நாட் போரில், சேனை களனைத்தையுமிழந்து தன்னந் தனியனாய்த் தலை நாணி நிற்கின்றான்,


தேரிழந்தனன் சிலையது மிழந்தனன் திறல்சேர்
பேரிழந் தனன் தானைக ளிழந் தனன் பெரும்பூண்
ஏரிழந்தனன் மவுலியுங் கவிகையு மிழந்தான்
பாரிழந்திடு மன்னர்போல் நின்றனன் படிமேல்


வெற்றி காணாது நிற்தம் வீரனாகிய இராவணனை இராகவன் நோக்கி "நிராயுதபாணியனாக நின்மேல் அம்பு தொடுத்தல் சரியன்று; இனியேனும் உன் பிழையை யறிந்து சீதையை விடுவையேல் பிழைப்பாய். நன்றாக யோசனை செய். போ. பொர விருப்பமிருப்பின் நாளைக்கு வா," எனக்கூறி விடுத்தது. போலவே, குமாரப் பெருமானும் சூரனை நோக்கி,


ஈண்டு நின்புடை யீண்டிய இலக்கம் வெள்ளத்து
நீண்ட தானையும் நின் சிலை வன்மையும் நின்னால்
தூண்ட லுற்றிடு தெய்வப் படைகளும் தொலைந்து
மாண்டு போயது கண்டனை வறியனாய் நின்றாய்.


பன்னு கின்றதென் பற்பல விண்ணுளோர் பலரும்
துன்னு தொல் சிறை விடுத்தியேல் உன்னுயிர் தொலையேம
அன்ன தன்மையை மறுத்திடி னொல்லை நாமடுதும்
என்னை கொல்லுன தெண்ணங்க ளுரைத்தியால்

என்றியம்பியதாகக் கந்தபுராணம் கழறுதல் காண்க

 

இராமாயணத்தில் இந்திரசித்தன் இலக்குவன் முதலானோரைப் பிரமாத்திர நாகாத்திரங்களால் பிணித்து வெற்றி கண்டதாகக் களித்ததை யொப்பக், கந்தபுராணத்திலும் பானுகோபன் வீரவாகு முதலானோரை மாயாத்திரங்களாற் பிணித்துக் கடலினும் மலையிலும் எறிவித்து வெற்றி யடைந்ததாகக் களித்து நிற்கின்றான்.

 

யுத்த காலத்தில் வானார் இலங்கையுட் புகுந்து அதனைப் பாழ்படச் செய்ததுபோல, முருகனது சேனையைச் சேர்ந்தோராகிய பூதரும் யுத்த காலத்தில் சூரனது நகரை யழித்து ஆரவாரிக்கின்றனர்.

இந்திரசித்தன் முடிவில் இராமலக்குமணரின் பலபராக்கிரமங்களையறிந்து அவர்களை வெல்லலரிதென்று கண்டு இராவணனிடஞ் சென்று சீதையைவிட்டு விடுமாறு அறிவுறுத்துகின்றான்.


ஆதலா னஞ்சினேனென் றருளலை ஆசைதானச்
சீகைபால் விடுதியாயி னனையவர் சீற்றந் தீரவர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பருன்மேல்
காதலா லுரைத்தேன்


என்று, அன்பின் பெருக்கா லறைகின்றான். மைந்தனது மாற்றத்தை மனங் கொள்ளாது இராவணன் அவனை வெறுத்துப் பல சொற்கள் விளம்புகின்றான். வெறுப்புரை யேற்கப் பொறாத வீரன் ''எந்தாய்! இந்திரசித்தன் இறந்தான் என்னும் சொல்லைக்கேட்ட பின்னரேனும் என்னுரை இன்னுரை யாதலைக் காண்பாய்'' எனக் கூறிப் போர்க்களஞ் சென்று பொருது முடிகின்றான். அவ்வாறே,

 

ஸ்காந்தத்திலும், சூரன் மைந்தனாம் பானுகோபன் வீரவேற் குமரனை வெல்ல தரிதென்று கண்டு தாதையை யணுகித் “தந்தையே!

 

உறுதி யொன்றினி மொழிகுவன் பொன்னக ருள்ளார்
சிறை விடுக் ததி நம் கிடைச் செற்றம தகற்றி
அறமுகத்தவன் வந் துழி மீண்டிடு மதற் பின்
இறுதியில் பகல் நினைக்குநின் பெருவளம்"


என்று உறுதி மொழி யுரைக்கின்றான். சூரன் அதன் பொருளை ஆராய்ந்தறியாது அகங்கரித்துப் பேசலும் அவன் கோபத்தை யடக்கிச்சென்று அமராடி யழிகின்றான்.

 

இந்திரசித்தன் இராமனிளவலால் பட்டது போலவே சூரன் மைந்தனும் முருகன் தம்பியாகிய வீரவாகுவால் விளிகின்றான்.

 

இராவணன் தன் தம்பியாகிய கும்பகருணனைத் தூக்கத்தினின்றும் எழுப்பச் செய்து போர்க்குச் செல்லுமாறு பணிக்கையில் அவன் தமயனுக்குப் பற்பல நீதிகளைப் பகர்கின்றான். ''சீனதயைச் சிறைவிடின் யாவரும் உய்வோம்; இன்றேல், இறத்தல் திண்ணம்" என்று பலவாறு இன்னுரைகளாலியம்புகின்றான். இராவணன் அவர்றைப் புறக்கணித்தலும் போர்க்குப் புறப்படுகின்றான். அவ்வாறே சூரனதி எவலாகிய சிங்கமுகன் ஆசுரமென்னும் அணி நகரினின்று மழைக்கப்பட்டுத் தமயனைக் கண்டு உற்ற செய்கையெல்லா முணர்ந்து, உய்யு நெறியுணர்த்துகின்றான். தேவர்களைச் சிறை விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்கிறான். சூரன் அச்சொல்லை மறுத்துக் கோபித்தலு மவன் சினந் தணித்து அமர்புரியப் போகின்றான்.

 

கும்பகருணன் சிங்கமுகன் என்னு மிவ்விருவர் தம் போரின் தன்மைகள் ஒரு படித்தாகவே யிருக்கின்றன. இருவரும் மலை போன்ற பருத்த யாக்கை படைத்தோர். பகைவாது சேனைகளை கும்பல் கும்பலாக மடித் தழியக் கொன்றார். கும்பகருணன் வானார் எறிந்த மலையை வாயி விட்டு மென்று பொடிப் பொடியாக்கி யுமிழ்கிறான். அறுபட்ட கையை மற்றோர் கையால் எடுத்துக் கதாயதம் போல் சுழற்றி யெறிந்து வானரசைனியங்களை வதைத்த காட்சியைக் கண்டு விண்ணோரும் வியாதினர். இருந்த சையினும் இற்றகையே யாவர்க்கும் பேரச்சந்தைக் கொடுத்தது. இருவரும் பகைவர் சேனைகளை இருகையாலள்ளி வாயிலிட்டு விழுங்கி நின்றனர். இவ்வாறு, போர் செய்யும் இவவிருவரும் அகக்கண்ணால் நோக்குவோர்க்கு ஒத்ததன்மையின்ராய் விளங்குகின்றனர்.

 

அன்பர்களே! இத்துடன் இச்சிறு ஆராய்ச்சிக் கட்டுரையை முடிக்கின்றோம். மேற் காட்டிய விஷயங்களைத் தனித் தனியாக வெடுத்து ஆராய்து இவ்வாராய்ச்சியால் பெறப்படுவ தென்ன வென்பதை யறிந்து கொள்ளுமாறு அவ்வேலையை யுங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால், நீங்கள் எவ்வாறு ஆராய்ச்சி செய்து பார்க்கினும் இராமாயணக் கதையும் கந்த புராணக் கதையும் ஒன்றினின்று மொன்று தோன்றியதோ வெனக் கருதுமாறு அவ்வளவு ஒற்றுமைப் பாடுடை பனவா யிருக்கின் னவென்னும் முடிவிற்கே வந்து தீர வேண்டும். இதனால் அவ்விரண்டும் பொய்க்கதைகளென்று நாம் கூறுவதாகக் கொள்ளாமல் அவ் விரண்டிற்கு முள்ள ஒற்றுமையை உற்புறுத்தவே இவ்வளவு இயம்பியதாகக் கொள்ளுமாறு மீட்டு மொருமுறை வாசகாகளை வேண்டிக் கொள்கின்றோம்.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment