Thursday, August 27, 2020

 

இல்லறம் - கல்வி

"எண்ணென்ப வேனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு''

     

சர்வபரிபூரண வகண்டதத்துவமான சச்சிதானந்த சொரூபியின் மகிமையையும், அகிலாண்டகோடி யனைத்தையுங் கருப்பமாயப் பெற்றும் கன்னியாகவே யிருக்கிறாளென வேதங்கள் கழறாநின்ற உலகமாதாவாகிய பராசத்தியின் பெருமையையும் வெள்ளிடை மலைபோற்றெள்ளிதிற் புலப்படுத்து மிவ்வழகிய பாருலகின் கண்ணே ஆன்மாக்களெடுக்கும் எழுவகைப் பிறப்பிலும் 'அரிது, அரிது மானிடராதலரிது.'' ஏனெனின் மானிடப் பிறப்பெடுத்தன்றி மற்றெப் பிறப்பினின்றும் மோட்சமடைதலரிதினுமரிதாகும். மானிடப்பிறவி யெடுத்த மாத்திரத்தில் மோட்சம் சித்திக்குமா? அன்று! அன்று! மேற்கூறிய எழுவகைப் பிறவியும் திரும்பவும் இவ்வோர் பிறவியாகிய மானிடப்பிறவியி லிருப்பது திருட்டாந்தம். ஆகையால் உண்மையான அரியமானிடப் பிறவியெடுத்த ஆன்மாவானது,'' கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக" என்னும் பொய்யாமொழியார் வாக்கியத்திற் கிணங்க, வேதசாஸ்திர புராணே திகாசங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து அவற்றின் வழி நின்று, நற்கதியடைந் துய்தலையே தன்சீவியத்தின் இலக்காகக் கொண்டு, இறுதியில் ஏனையோர் யாவராலும் எய்தற்கரிய பெரும் பேறாகிய மோட்ச வின்பத்தையடையும்.

 

கல்வியைக் கசடறக் கற்றபின் நிற்கும் நிலைகள் இல்லறம், துறவறமென இருவகைப்படும். இல்லறமோ துறவறமோ மேலானதென அநேகர்வாது புரிகின்றனர். இதுவேதாந்தமோ சித்தாந்தமோ மேலானதெனவாது புரிவதற் கொப்பாகும். ஏனெனில் இவ்விருவழியில் எவ்வழிச் சென்றாலும் இறுதியில் சென்றடையுமிடம் ஒன்றேயாம். அன்றியும் நாம் மேற் கூறிய செய்யுள் இவர்கள் வாது வீண்வாதெனவும் கல்வியினால் கசடற்ற அறிவிற் சிறந்தோரது மனோநிலை யெவ்வழியோ அவ்வழியே மேலானதெனவும் விளக்குகின்றது. நம்முன்னோ ரநேகர். இல்லறவழி நின்றே துறவற மெய்தி முக்தியடைந்தன ரென்பதும் நாமறியக் கிடக்கின்றது. இது பற்றியே ஒளவைப் பிராட்டியாரும் "இல்லறமல்லது நல்லறமன்று' என்றும்,

 

"ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொரு ளெஞ்ஞான்றுங்

காத லிருவர் கருத்தொருமித் நாதரவு

பட்டதே யின்பம் பரனை நினைந் தியான்றும்

விட்டதே பேரின்ப வீடு''

 

என்றும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களில் முன்னைய மூன்றும் இல்வாழ்வானுக்கும், அவற்றையனுபவித்து, வெறுத்து விட்டுத் துறவடைந்தவர்க்கே பேரின்ப வீடாகிய மோட்சம் சித்திக்கு மென்றும் கூறியுள்ளார்.

 

ஆகையால் மோட்சசாதனத்தின் முற்கூறாகிய இல்லறம் நடாத்தித் துறவடைந்து பெறுதற் கரியபெரும் பேறாகிய முத்தியின்பத்தைப் பெறுதற்கு நமக்குப் பேருதவி புரிபவரும் இன்றியமையாத் துணையாயுள்ள வரும் அதனால் தாமும் அம்முத்திப் பேற்றை யடைபவருமாயுள்ளவர் நம் பெண் மணிகளாவர்.

 
 "மருவிய காதன் மனையாளுந் தானும்
 இருவராய்ப் பூண்டீர்ப்பி னல்லால் - ஒருவரால்
 இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான் சகடம்
 செல்லாது தெற்றிற்று நின்று''

 

என்னும் செய்யுளின்படி கணவன் மனைவியாகிய இருவரும் ஏகசித்தராய் ஆசை கோபம் லோபம் பொறாமை முதலியவற்றைத் தவிர்த்துச் சகல பிராணிகளிடத்தும் அன்பும் அனுதாபமும் நிறைந்தவர்களாய் பஞ்ச புலன்களாம் மதயானைகளை அறிவென்னும் அங்குசங் கொண் டடக்கித் தான தருமங்களையே தங்கள் முக்கிய கடமையாய்க் கொண்டு, குருலிங்க சங்கம பக்திகளிற் சிறாது கல்வி கேள்விகளில் விருப்புடையோராய் சித்தத்தை
இறைவன் பால்வைத்து, இல்வாழ்க்கை யென்னும் வண்டியை நெறிதவறாது செலுத்தி, பிறவிப் பெருங்கடலைத் தாண்டி அது அடையுமிடமாகிய நித்தியானந்தப் பெரும்பேற்றை யடைதற்குப் பேருதவி புரிவது கல்வியேயாகும். அதுவே,


      அறம் பொருளின்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன்
      றுற்றுழியுங் கை கொடுக்குங் கல்வியி னூஉங்கில்லை
      சிற்றுயிர்க் குற்ற துணை.

 

ஆயினும் தற்காலம் நாமும் நம்மாதரும் ஈண்டுக்கூறிய நோக்கத்தோடு கல்வி கற்கின்றோமில்லை. நாமோ மீண்டும் மீண்டும் வினையைச் சம்பாதிப்பதற்கும் பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்துழல்வதற்கும் உதவி புரியுங் கல்வியையே விரும்பிக் கற்கின்றோம். நம்மாதரோ கேவலம் "விவாக வியாபாரார்த்த மான கல்வியைக் கற்கின்றனர். ஆகையால் நமது கல்வி ஆன்மார்த்த கல்வியன்றி இலௌகிக கல்வியாயின் அதனால் இறுதியில் நாமடையும் பயன்யாது? அறிவு சொரூபியாம் ஆன்மாவை மூடியிருக்கும் அந்த
காரமாமிருளை நீக்குவதும், ஈசுரபக்தியையும் சீவகாருண்யத்தையும் தருவதுவும், நம்மிலுள்ள தீயொழுக்கத்தைத் தவிர்த்து நல்லொழுக்கத்தை விருத்தி செய்வதுமாகிய கல்வியின்றேல் நாம் கற்றதனாலாய பயன்யாது?


 இதுபற்றியே


 "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
 நற்றா டொழா அ ரெனின்''


எனத்தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் கூறியுள்ளார்.

 

''படித்தல் கஷ்டம்; அதனிலுங்கஷ்டம் பழக்கந் தவிரப்படித்தல்'' என ஆங்கில பண்டிதரொருவர் கூறுகின்றார். இது இந்து சமயிகளுக்குப் புதியதல்ல. இதுவும் இதுபோன்ற அநேக திவ்ய போதனைகளும் சமய நூல்களில் பரக்கக்காணலாம். ஆனால் நாம் செய்யவேண்டிய தொன்றுண்டு. அதாவது ஆன்மலாபமென்னும் பெருந்தாகங்கொண்டு எப்பாஷை, எச்சமய நூல்களைப் படிக்கினும் நீருடன் கலந்த பாலை அந்நீரினின்றும் வேறுபடுத்தும் அன்னப்பட்சியைப் போன்று அவற்றிலுள்ள இரத்தினங்களாகிய நற்போதனைகளை எடுத்து நம்பழக்க வழக்கங்கள் மீது பிரயோகித்து நம்மைத்திருத்தி நன்னெறி நிற்றலே சிலாக்யம். இதுவே கற்றதனாலாய பயனுமாகும்.

 

நம்பெண்மணிகளின் கல்வியினாலுண்டாகும் பெரும்பிரயோசனத்தை நம்மவரநேக ருணர்கின்றாரில்லை. அவசியமான போது பெண்மக்கள் தம் கணவருக்கு ஆபத்து வேளையிலறிவு சொல் மந்திரி என்பது போல் நல்ல யுத்தி புகட்டவும், தமது கற்பைக்காக்கவும், மிகவும் முக்கியமாய் நமது பின் சந்ததியாராம் புத்திரர்களை நற்பழக்க வழக்கங்களோடும் கல்வியூட்டிச் சுகாதார முறைப்படி வளர்த்து வீரதீரர்களாக்கவும், இல்லறத்தின் முக்கிய பாகத்தை வகிப்பவர்களாகையால் அதைக்குறைவற வழுவாது நிறைவேற்றவும் கல்வியின்றியமையாததன்றோ. நல்லொழுக்கச் செயலைக் கண்டு,


 "அடிசிற் கினியாளே யன்புடை யாளே
 படிசொற் கடவாத பாவாய் - அடிவருடிப்
 பின்னூங்கி முன்னெழூஉம் பேதையே போதியோ

 என்றூங்கு மென்க ணிரா''


எனப் புலவர் பெருமான் தம்பத்தினியாரை மெச்சினர். அன்றியும், ஓர் குடும்பத்தில் பிதாமாதாக்களது கல்வியறிவு ஒழுக்கங்க ளெவ்வாறோ அவ்வாறே புத்திரருமாவர். ''தந்தையெவ்வழி மைந்தனவ்வழி', "தாயைப் போலப்பிள்ளை நூலைப்போல் சீலை'' யென்னும் பழமொழிகள் இதற்குச் சான்றாகும். இதுவே சாஸ்திரங்களின் கூற்றும் அனுபவ சித்தாந்தமுமாம். தற்காலம் நம்பெண்மணிகள் ஆங்கிலம் அரைப்படிப்புத் தமிழ்காற்படிப்புப் படித்துவிட்டு அதுவோ இதுவோ எதுவோ வென்று தெரியாமலும் என்ன செய்வதென் றறியாமலுந் தத்தளிக்கின்றனர். தந்தையரும் அவரைக்கசடறக் கற்பிக்கப் பணச்செலவாகுமென அஞ்சுகின்றனர். இவர்கள் "அறியா மையின் செலவு கல்வியின் செலவிலும் பார்க்க அதிகம்'' என்பதை யறியார் போலும். ஐரோப்பியரை இவ்வளவு உந்த பதவியில் வைத்தது ஆண் பெண்ணிருபாலாரது கல்வியன்றோ. ஆனால் அவர்கள் கல்வி பெரும்பாலும் இலௌகிக கல்வியாகும். அவர்களி லநேகர் பழக்கந்தவிரப் படித்தாரில்லை. தமிழகம் தொன்று தொட்டு ஆன்மார்த்த கல்வியையே விருத்தி செய்து வந்ததாயினும் தற்காலம் ஆங்கிலக் கல்வி யதற்கு அநேகங் கெடுதிகளைச் செய்து கொண்டிருக்கிறது. இலௌகிக சம்பந்தமான ஆங்கிலக்கல்வி தற் காலம் உந்நதபதவிவகித்திருப்பதாக நமக்குப் புலப்படின் ஆன்மார்த்த கல்வியாம் தமிழ்க்கல்வி அதனிலும் பதின்மடங்கு உந்நதமான பதவியை வகிக்கு மென்பது சொல்லவும் வேண்டுமா? தற்கால கல்வியோ பெரும் பாலும் அறியாமையை வளர்ப்பதன்றி அறிவை வளர்ப்பதில்லை.'' அறியாமை கடவுளின் சாபம். அறிவோ நம்மை மோட்சத்திற்கு எடுத்துச்செல்லும் சிறகுகள் போன்றது'' என ஆங்கில பண்டிதர் கூறுகின்றார். அவரே ''எம்புத்திரரநேகர் வறுமையின் புதல்வர்களா யிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அறியாமையால் வளர்க்கப்படாதபடி நாம் பாதுகாக்க வேண்டும்'' எனக் கூறுகின்றார். இவற்றால் அறிவிற்கும் அறியாமைக்கு மிடையிலுள்ள பெரும் வித்தியாசமும், அறியாமையை நீக்கியறிவை வளர்க்க உதவுவது கல்வியென்பதும், அதனிலும் மனிதவர்க்கத்தின் ஈடேற்றத்திற்கு இன்றியமையாத தாயுள்ளது, பிதாமாதாக்களாம் ஆண்பெண்ணிருபாலாரது கசடற்ற கல்வியென்பதும் நன்கு விளங்குகின்றன.

 

நம்புத்திரர் அறியாமையால் வளர்க்கப்படாது பாதுகாப்ப தெப்படி? அவர்கள் வறுமையின் புதல்வர்களா யிருப்பதால் அறியாமையே யவர்களின் தாயாக வேண்டும். ஆனால் இச்சங்கடத்தை நீக்க ஓர்வழியுண்டு. அதாவது, நம் நாட்டுப் பரோபகாரிகளும், தர்மசிந்தை யுடையோரும், சீவகாருண்ய முடையோரும் முன் வந்து ஒவ்வொரூரிலும் வாசகசாலைகளும், இராப்பாடசாலைகளும் உண்டாக்கிப் பெரியோரும் சிறியோரும் தங்கடங்கள் சாவகாசப்படி அவ்விடஞ்சென்று கற்பதற்கேற்ற ஒழுங்குகள் செய்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்." தானங்கள் அனைத்திலும் கல்வித்தானமே மேலானது'' என ஆங்கிலபண்டிதர் கூறுகின்றார். இதுவே நம்நூல்களின் கூற்றுமாகும். நம் பெண்களுக்கு ஆனந்தபோதினியே தகுந்த ஆசிரியனாகும். வருஷம் ஒன்றுக்கு நூறு ரூபா சம்பளங் கொடுத்து ஓர் ஆசிரியனை அமர்த்திக் கொண்டாலும் நம் ஆனந்தபோதினி ஒரு ரூபாவோடு கற்பிக்குங் கல்விக்கு நிகராகாது. ஆதலால் ஆனந்தபோதினியின் சந்தாநேயர்களாகிய நாமொவ்வொருவரும் நாளொன்றுக்கு (ஒரு சுருட்டுக்குச் செலவழிக்கும்) ஒரு தம்படி வீதம் உண்டி சேர்த்தால் வருஷாந்தத்தில் ஆனந்தபோதினியின் ஒருவருஷ சந்தாத்தொகைக்கு அதிகமாகவே சேர்ந்துவிடும். இத்தொகையைக் கொண்டு நாமொவ்வொருவரும் ஒவ்வோர் வறிய பெண்பிள்ளைக்கு ஆனந்தபோதினியை வாங்கிக்கொடுத்து வாசிக்கும் பாக்கியத்தை உண்டாக்கி விடலாம். நாமிருபதினாயிரவர் ஒவ்வொருவரும் ஒவ்வோர்வறிய பெண்பிள்ளை வீதம் இருபதினாயிரம் வறிய பெண்பிள்ளைகளுக்குக் கற்பிக்கக் கூடுமானால் தமிழகந் தழைத்தோங்குவதற்குச் சந்தேகமுண்டா? ஆதலால், ஆனந்தபோதினியை நம் சிறுவர் முதல் வயோதிகர் வரை யாவரும் வாசிக்கவும், கல்வியாங்கடல் கரைபுரண்டு அலைகளை வீசித்தமிழகம் முழுமையும் பரவவும், அதனால் அறியாமையாம் அந்தகார வெப்பம் அடங்கியவிந்தற்றுப் போய் நல்லறமா மில்லறந் தழைத்தோங்கி நிற்கவுங் கூடும். பின்னும் அவ்வறத்தால் இயல்புடைய மூவர்க்கும் நாம் துணையாக நின்று ஆன்ம ஈடேற்றத்தை யடையலாம். அத்தகைய பேற்றைத் தருவதாகிய இவ்வரும் பெருந்தொழிலை நாமனைவருஞ் சிரமேற் கொள்வோமாக.


''வெள்ளத்தா வழியாது வெங்கனலால் வேகாது வேந்தர்க்கெல்லாங்
 கொள்ளத்தான் கிடையாது கொடுத்தாலுந் நிறைவொழியக் குறைவோ
 கள்ளர்க்கோமிகவரிது காவலர்க்கோ மிக வெளிது கருணையான வில்லை
 உள்ளத்தேபொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடியுழல்கின்றாரே.''

 ஆ. சி. ஆறுமுகம்,

கெக்கரியா, இலங்கை,

 

ஆனந்த போதினி – 1925 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment