Thursday, August 27, 2020

 

எறிபத்த நாயனார் புராணத்தின் சில விசேடக் குறிப்புகள்

தொகுப்பு

பஞ்சாட்சரபுரம், வாலையாநந்தம்

 

 

மாத இதழ்

1927 மார்ச்சு முதல் 1928 மார்ச்சு வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

எறிபத்த நாயனார் 4

1. எறிபத்தர் பெருமையை அளவிடல் முடியாது: 4

2. சிவனடியார் வழிபாடே அஞ்ஞானத்தை யறுக்குஞ் சாதனம்: - 4

3. சிவகாமியாண்டார் என்பவர் சிறந்த முனிவர். 6

4. சிவஞானி சரியையாதி நான்கினுக்கு மரியன். 7

கோட்டுப்பூக்களாவன: - 9

கொடிப்பூக்களாவன: - 9

நிலப்பூக்களாவன: - 10

இன்னமலர் இன்ன தேவர்க்காமெனல். 10

இன்னமல ரின்ன தேவர்க் காகாதெனல். 10

விஷ்ணுவுக் காகு மலர்கள். 10

கேதார நாதர்க்குரிய பத்திர புப்பங்களாவன. 11

பஞ்ச வில்வம். 11

விநாயக சதுர்த்திக்குரிய பத்திர புட்பங்கள். 11

துளப மெடுக்க லாகாத நாள். 11

வில்வ மெடுக்கலாகாத நாள். 11

எடுக்கு முறையாவது. 12

வார புட்பம். 13

உச்சியிற் சாத்தும் அஷ்ட புட்பம். 13

அந்தி அர்த்தயாமம் அபரான்னங்களிற் சாத்தும் அஷ்டபுட்பம். 14

எல்லாக்காலங்களுக்குழரிய அஷ்டபுட்பம். 14

மாத புட்பம். 14

திரிகால நிண்ணயம். 14

தமோகால மலர். 14

இராசத் காலமலர். 14

சாத்விக காலமலர். 15

புட்பஞ்சாத்து முறைமை. 15

புட்பப் பணிவகை. 15

7. கொலையானது இன்னவிடத்துப் பாவமாகாது புண்ணியமாகு மெனல். 20

8. சொல்வோரது தவறல் உண்மை மாறுபடு மெனல். 23

9. கோபத்தின் செயல்.. 24

10. அரசர் கடமை.........................................................................................................................................................26

இராசதண்டம் பிழைத் தீர்வாகும்.. 30

 


 

 



எறிபத்த நாயனார் புராணத்தின் சில விசேடக் குறிப்புகள்.

1. எறிபத்தர் பெருமையை அளவிடல் முடியாது:


"மல்லனீர் ஞாலந் தன்னுண் மழவிடை யுடையா னன்பர்க்

கொல்லைவந் துற்ற செய்கை யுற்றிடத் துதவு நீரா
      ரெல்லையில் புகழின் மிக்க வெறிபத்தர் பெருமை யெம்மாற்

சொல்லலாம் படித்தன் றேனு மாசையாற் சொல்ல லுற்றேன்.''

 (எறிபத்த நாயனார் புராணம் - 1)

 

எனச் சேக்கிழார் பெருமானே திருவாய் மலர்ந்தருளியதால் இவ்வெறி பத்த நாயனார் பெருமையை யார்தாம் அளவிடத்தக்கவர்?

2. சிவனடியார் வழிபாடே அஞ்ஞானத்தை யறுக்குஞ் சாதனம்: -


"அறுமாசை கோப மவைநாச மாக வறுமேறு பாவமறலு
மறவே செய் பாவ மறனாக மாயு மதுமாய மாயை யகலு
மறமாயை தானு மகமாயை தீரு மது தீர மூலமலமு

மறமூல நோயு மமலேசர் பாத மடைவார்கள் யோக ரடியார்.''

 (சிவதருமோத்தரம் - 10. சிவஞான யோகவியல் - 95)

 

''பூசிடுக நீற்றினையுந் தீவினையைப் போக்கப் புரிந்தார்க டிருநீறு

பூசினரைப் பணிந்து
 பேசிடுக மதுரவுரை யவரேவற் றன்னைப் பெற்றிடுக முற்றிடுக

பேணியொருப் பட்டே
கூசினர்க ளவர்தம்மைக் கும்பிடவு மேவற் குறித்தியற்றி யிடத்தானுங்
      கொடுநரகக் குழியாழ்

நீசரென நினைந் திடுக நின்மலனைத் தம்முணினைப்பாரை நினைப்பார்கள்
      வினைப்பாவ நீங்கும்''

 (சிவதருமோ - 11. பரிகாரவியல் - 62.)

 

"மண்ணாளு மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும்

வையகத்தார் பாராதே வணங்கிடுவ ரஞ்சி
 யெண்ணாளு மிறைய மலன் றிருவேடந் திருநீ

றிட்டார்கள் குணங்குணக்கே டெனுமிரண்டு மெண்ணார்
 விண்ணாளத் தீவினையை வீட்டியிட விழைந்தார்
      விரும்பியவ ரடிபணிவர் விமலனுரை விலங்க
 லொண்ணாதே யெனக்கருதி யொருப்பட்டே யமல்

னொப்பரிய புரிவாழ்வு மற்றையருக் குண்டோ.''

 (சிவதருமோ - 11. பரிகா - 63.)

      ''எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
            திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
      யுவராதே யவரவரைக் கண்டபோதே –

யுகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
யிவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி

யிரண்டாட்டா தொழிந் தீசன் றிறமே பேசிக்
      கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
 கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.''

 (திருநாவு - திருக்கன்றாப்பூர் - தேவாரம் - 3.)

 

''பொருட்டிரு மறை கடந்த புனிதரை யினிதக் கோயின்
மருட்டுறை மாற்று மாற்றால் வழிபடுந் தொழில் ராகி
யிருட்கடு வொடுங்கு கண்டத் திறையவர்க் குரிமை பூண்டார்க்

கருட்பெருந் தொண்டு செய்வா ரவரெறி பத்த ராவார்.''

 (எறிபத்த நாயனார் - புரா - 6)


எள்ளற் படுகீழ் மக்களெனு மிழிந்த குலத்தோ ரானாலும்
வள்ளற் பரமன் றிருநீறு மணியு மணிந்த மாண்பினரை

யுள்ளத் துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே
கொள்ளத் தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார்.''

 (பிரமோத்தரகாண்டம்)

"அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை மறத்து

ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று

ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை

யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்.''

(திருவிளையாடற்புராணம்.)

 

 

 

“எனைத்துயிர்க்கு முறுதியிக பரமென்ப வவை கொடுப்பா னெல்லாந் தானா

யனைத்துயிர்க்கு முயிராகு மரனென்ப வவனறிவார்க் கங்கம் வாக்கு

மனத்துறுமெய்ப் பத்திவழி வருமென்ப வப்பத்தி வழிநிற் பார்க்கு

வினைத் துயர் தீர்த் திடவெடுத்த வடிவென்ப தவனடியார் வேட மன்றோ.''

(௸ - விருத்த குமார பாலரான படலம் - 18.)


 ''அரந்தை தீர்க்கு மடியவர் மேனிமே
 னிரந்த நீற்றொளி யானிறை தூய்மையாற்
 புரந்த வஞ்செழுத் தோசை பொலிதலாற்

 பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.

(பெரியபுரா - திருக்கூட்டச் சிறப்பு - 3.)


 'திருப்பதி வணங்க வென்று சென்றுறுஞ் சிவநே சர்க்கு
 மருத்தியாற் கங்கையாதி யாடிட நாடி னார்க்கு
 மருத்துக வன்ன பான மவரவர்க் குபயோ கங்கள்

 பொருத்துக வூனைப் போக்கிச் சிவபுரம் புகுவர்தாமே.

 (சிவதருமோ - 12. கோபுரவியல் - 178.)

''சிவனே சிவஞானி யாதலாற் சுத்த

சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.''

 (திருமந்திரம் - 6 - ம், தந்திரம் - சிவகுரு தரிசனம் - 8.)


 ''வெள்ளியநீ றுறப்பூசி மேதகுகண் மணிபூண்டே
 யுள்ளியவஞ் செழுத்தினரா யுண்மைநெறி யியங்கடியார்
 வள்ளியமா மலர்ப்பாத மரீஇப் பணிசெய் தொழுகினாற்
 றெள்ளியஞா னாசிரியற் சேர்ந்தனைத்தும் பெறலாகும்.''

 (திருப்பெருந்துறைப் புராணம்)

 

என்பவற்றால் சிவனடியார் வேடமே ஏனையோர் வினைத்துயர் தீர்த்தற் குரியதென்பதும், அவர் தரிசனமே அஞ்ஞான அழுக்கை அகற்றுவதென்பதும், அவர் வேடமே பிறவியை யறுப்பதென்பதும் பெறப்படுவதால், அதனை வழிபடுவோர்க்குப் பிறவி யறுமென்பதற் கேதேனு மையமுண்டோ? இல்லை! இல்லை!!

3. சிவகாமியாண்டார் என்பவர் சிறந்த முனிவர்.

 

"ஆனிலை யடிக ளார்க்குத், திண்ணிய வன்பு கூர்ந்த சிவகாமி யாண்டா ரென்னும், புண்ணிய முனிவர்''

 

எனச் சேக்கிழார் பெருமானே சிறப்பா யெடுத்தோதி யிருப்பதால் சிவகாமியாண்டார் சிறந்த முனிவர் என்பதற்கும், உண்மைஞானி என்பதற்கும் வேறு சான்றும் வேண்டுமோ? '

4. சிவஞானி சரியையாதி நான்கினுக்கு மரியன்.

 

"ஞான யோகக் கிரியை சரியை நாலு நாதன் றன்பணி, ஞானி நாலி னுக்கு மரியன்.''

 

எனச் சிவஞானசித்தி கூறுவதால், அகச்சார்பு புறச்சார்புகளை ஒழித்துப் பலசமயத் துணிவுகளையு மறிந்து, சைவசித்தாந்த சாத்திர சிரவணஞ்செய்து, அதிற் கூறப்பட்டிருக்கின்றவாறே காண்பான் காட்சி காணப்படும் பொருள் என்ற மூவகை யுணர்ச்சிக்கிடனற, முதல்வனிடத்தில் ஈடுபடுவதாகிய உண்மைச் சிவஞான நெறியையும்,

 

இயமநியமாதிகளையுடையவனாய்ச், சுத்தபூமியில் ஏற்ற ஆசனத்திலிருந்து பஞ்சேந்திரியங்களைத் தத்தம் வழியிற் செல்லாது மறித்து ஒடுக்கி, இடைகலை பிங்கலைகளில் இயங்கும் பிராணவாயுவைத் தடுத்து, மூலாக்கினியைச் சொலிப்பித்துச் சுழுமுனா நாடியால் மூலாதார முதலிய ஆறாதாரங்களின் வழியே நிராதார மீதானங்களிற் செலுத்தி, சந்திரமண்டலத்திலுள்ள அமுதகலைகளைச் சரீராதி யந்தம் தேக்கிப் பரசிவ தேஜசை நினைந்திருத்தலாகிய உண்மைச் சிவயோக நெறியையும்,

 

அகச்சுத்தி புறச்சுத்திகளையுடையவனாய்த், திருமஞ்சனம் திருப்பள் ளித்தாம முதலிய பூசாதிரவியங்களைக் கொண்டு, பூசாமண்டபத்திலிருந்து, பூதசுத்தி, (ஆத்துமசுத்தி), தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்க சுத்திகளாகிய ஐவகைச் சுத்திகளையுஞ் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாதி சத்தி பரியந்தம் ஷடுத்தாசனம் பூசித்து, அதன் மேல் ஆசனமூர்த்தி மூலத்தால் சிவபெருமானை அருட்குறியாகிய சிவலிங்கத்திடத்தில் ஆவாகித்துப் பூசித்து, வித்தியாதேகம் பூசித்து அருச்சித்துத் தோத்திரஞ் செய்வதாகிய உண்மைக்கிரியா நெறியையும்,

 

புனிதனாய்ச் சிவாலயத்தையடைந்து, ஸ்ரீ பஞ்சாக்கரத்தைத் தியானித்துக் கொண்டே திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பள்ளித்தாமம் அமைத்தல், திருவிளக்கிடல் முதலிய திருத்தொண்டுகளை யியற்றிச், சிவசந்நிதியை யடைந்து அன்பு முறுகி உள்ள முடைந்து உரோமஞ்சிலிர்ப்ப, கண்ணீர் ததும்பத் திருப்புகழ்களை ஓதிப்போற்றுவதும், சிவனடியாரைச் சிவனெனவே கொண்டு அவர்களுக்குக் குற்றேவல் செய்வதுமாகிய உண்மைச் சரியா நெறியையும்,

 

உண்மைச் சிவஞானியார் செய்யக் கடமைபூண்டவராவர்.


புட்பப் பணி.

 

      சரியையாதி நான்கினுஞ் சரிப்போரியற்றும் புட்பப் பணியின் பொது விதியாவது: -

 

      விடிய ஐந்து நாழிகை அளவில் எழுந்து ஊர்ப்புறத்துச் சென்று விதிப் படி மலசலங் கழித்து, சௌச முடித்து, தந்தசுத்தி செய்து, நீராடி, தோய்த் துலர்ந்த மடியுடுத்தி, விபூதியுருத்திராக்க மணிந்து, திருவைந்தெழுத்தைத் தியானித்து, வாய் கட்டிக்கொண்டு நாபியின் கீழ்ச் செல்லாது மேலே உயர்த்திய கரத்தில் திருப்பூங்கூடையைக் கொண்டு, நந்தனவனத்துட் புகுந்து, அதில் வசிக்குந் தேவர்களை யெல்லாம் தான் மலர் கொய்யும் வரை விலகியிருக்கும் படி பிரார்த்திக்க வேண்டும்.

 

பிறகு கொத்துக்களின் தலைகளைக் கொய்தால் தேவர்களின் முடிகளைக் கொய்த பாவமுறுமாதலால், மறந்தும் ஒருமுறையேனும் அவைகளைக் கொய்யாது, பத்திரபுட்பங்களை ஒவ்வொன்றாகக் கொய்து திருப்பூங்கூடையி லிட்டு, கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூவெனும் நால்வகைப் புட்பங்களில் ஏற்றவைகளை வண்டுகள் உழுது உச்சிட்டமாக்கு முன், ஏற்றகாலத்தில் எடுக்கத்தக்கவைகளை எடுக்கு முறையில் எடுத்து, பின்னர்த் தேவர்களை அவ்விடத்தில் எழுந்தருளப் பிரார்த்தித்தல் வேண்டும்.

 

வில்வம் சிவபிரானுருவமென்று சிவாகமங்கள் கூறுகின்றமையினாலே, அவ்வில்வ விருட்சத்தின் நிழலை மிதியாது அணுகி ஓர் புறத்தில் நின்று அதனைத் துதித்துப் பிரார்த்தித்து, முக்கிளை யுள்ளவைகளைப் புழுக்கடி முதலிய குற்றங்களில்லாதனவாய்த் தெரிந்தெடுத்து வணங்கி மீளவேண்டும்.

 

பாதசுத்தி செய்து கொண்டு, புட்பமண்டபத்திலிருந்து பழுதகற்றி, இன்ன இன்ன தேவர்க்கு இவை இவை ஆகுமென வுணர்ந்து, அவைகளைக் கொண்டு கண்ணி முதலிய மாலைகளை அமைத்து, சிவபிரான் முதலியோர்க்குக் காலந்தோறும் ஏற்றவையறிந்து முறைப்படி சாத்தி வழிபடுவதாகும்.

 

திருப்பூங்கூடையை நாபிக்குக் கீழே பிடியாது ஒரு தண்டின் நுனியிலே கட்டி உயரப்பிடித்தலும் உண்டு.

 

"புலரியி னெழுந்து புதிய நீர் படிந்து புண்ணிய வெண்பொடி சாத்தி

மலி செழு மலர்பெய் கூடையோர் கரனும் வருபுனற் றசும்பொரு கரனும்

பலனுற வேந்திப் பதிதர்சண் டாளர் பரமனைப் பழித்தவர்க் கண்டா

லலரியை நோக்கியைந்தெழுத் துன்னி யணிவெண்ணீ றொளிநுத லணிந்தே

 (கருவூர்ப்புரா - நியமச்சருக்கம் - 27.)


 "நந்தன வனத்தி லணுகிமென் கமல நான்முக னாரண னமல
 னுந்துமா தவர்மா முனிவரர் வலாரி யும்பாரு மொருங்கு வீற்றிருக்கும்
 பைந் துழா யடியி னறும்புனல் பெய்து பரவிமுக் கால்வலஞ் சூழ்ந்து

 முந்துறத் தமியேன் மலர்கொயுங் காறு மகலுவீ ரெனக்கர முகிழ்த்தே''

 (கருவூர்ப்புரா - நியமச் - 28.)

 

"தேசவிர் கொத்தின் றலைகளைக் கொய்யிற் செங்கண்மால் செழுமுடி கொய்யு
      மாசுறு பாவ மொருபொழு துறினுந் தீநர கணுகுமென் றறிந்து

பாசிலை யொவ்வொன் றாய்வுறக் கொய்து பனிமலர் நாட்கதி ரிணைசேர்
      மாசறு மிலையோ டவை முறை கொய்து வாய்த்தபைங் கூடையிற் பெய்து''

 (கருவூர்ப்புரா - நிய - 29.)

"அருமறைக் கிழவன் முதலியர் தமையீண் டெழுந்தரு ளுகவென வேண்டி

யிருகர முகிழ்த்தா கமமுறை யாவுங் கூவிளை யெம்பிரா னுருவ
      மருமல ரிலைகாய் மாமரத் தொடுவே ரதன்மண முதலிய வனைத்து
      நிருமலற் குவப்பென் றறையுமென் றுன்னி வில்லுவ நிழன்மிதி யாமே.''

(கருவூர்ப்புரா - நியமச்சருக்கம் - 30.)


"ஒருபுடை மருவி யிறைஞ்சியொன் றிரண்டு நான் குறு கிளைகளை யொருவிச் செருமுமுள் ளுறிற்பல் பொறிப்புலி யாவர் திண்பணை முறிந்திடி னிரய

மருவுவ ரிலையிற் பழுதுள வேனும் பழுதல் நாகர வண்டூண்

கிருமியின் கூடு பழுதென வகற்றி யிலையைமுக் கிளையொடுங் கொய்து''

 - (கருவூர்ப்புரா - நியமச் - 31.)

 

''பெய்து கூடையினுட் சினகரம் போகிப் பிறங்கவோர் சாரிடை வைகி

யையுற லொழிய மீளவு மாய்ந்தாய்ந் தரியதண் புனலிடை யலசி

மையறு முளத்த ராகி வெற் பீன்ற வடிவுடை நாயகி யெனவாழ்

தையலோர் பாகற் களித்துளோர் சாரூபத்தினைச் சார்குவர் திண்ணம்.''

 (கருவூர்ப்புரா - நியமச் - 32.)

என்பன இவ்விதியை விளக்குவனவாம்.

கோட்டுப்பூக்களாவன: -


      "வன்னிபலா வெலுமிச்சை நாரத்தை கோங்கு மந்தாரை யூமத்தை
            மாவிலிங்கை நொச்சி

பன்னியகில் சந்துமகிழ் மாதுளைமா வசோகு பாதிரிவெள் ளெருக்கிலந்தை
      பலாசு நுணா நறவம்

புன்னைவிளா மருது கொன்றை நெல்லிகுராச் செருந்தி பொன்னினா
      விரைகிளுவை குருந்து வில்வ நாவன்

மன்னுதா தகிகுளஞ்சி யலரிவெட்சி மல்லிகைசண் பகஞாழல்
      கோட்டுப்பூ வகையே.

(ஞானப்பிரகாசர் - புட்பவிதி - 2)

என்பதிற் கூறப்பட்டனவாம்.

கொடிப்பூக்களாவன: -

''மருவாருங் காந்தள் காட்டு மல்லிகை முல்லை மௌவல்
கருவார் வெற்றிலையே தாளி கருமுகை கருங்காக் கொன்றை

முருகாரும் வெண்காக் கொன்றை குருக்கத்தி முதலா வுள்ள
விருவாட்சி கொகுடி பிச்சி யிவையெலாங் கொடிப்பூ வாமே.''

 (ஞானப்பிரகாசர்புட்பவிதி - 3.)

 என்ற செய்யுளிற் கூறப்பட்டனவாம்.



 

நீர்ப்பூக்களாவன: -

''செய்ய தாமரை சேர்ந்த பொற்றாமரை
துய்ய தாமரை சொல்லிரண் டுற்பல

மைய செம்மைய வெண்மைய வாகிய
நெய்தன் மற்றிவை நீரின் மலர்களே "

(ஞானப்பிர - புட்ப - 4.)

என்ற செய்யுளிற் கூறப்பட்டனவாம்.

நிலப்பூக்களாவன: -

''பட்டிநா யுருவி பூளை பச்சைசெவ் வந்தி தும்பை
வெட்டிவேர் மருக் கொழுந்து கரந்தையே விஷ்ணு காந்தி

மட்டவிழ் துழாய் செங் கீரை மத்தை செம் பரத்தை வங்க

மிட்ட கொக்கிற கனிச்சம் வலம்புரி யிவை நிலப்பூ.''

(ஞானப்பிர - புட் - 5)

என்ற செய்யுளில் உரைக்கப்பட்டனவாம்.

 

இன்னமலர் இன்ன தேவர்க்காமெனல்.

 

''வில்வமுடன் கொன்றைமலர் சங்கரற்கு நேயம்
      வேழமுகற் கருகு வெட்சி கடம்பு விசாகனுக்காங்
குல்லை நெடுமாய * *'கட்குலே
      கோகனத * * திருமகட்கு நெய்தல்
வல்லகலை மடந்தைக்கு வெண்கமல நேயம்
      வருங் கொடிய கடவுளர்க்குச் செம்மலர்க ணேய
மல்லி மலர்க் கருங்குவளை யனைவருக்கு நேய
      மம்மலரே யெம்மலர்க்கு மதிகமென வரைப்பார்.

 (ஞானப்பிரகா - புட்பவிதி - 27.)

இன்னமல ரின்ன தேவர்க் காகாதெனல்.

"தும்பை மறையோர் தமக்காகா துர்க்கைக் கறுகம் புல்லாகா
வெம்பு கதிர்வா னவன்றனக்கு வில்வ மாகா விநாயகற்கு

வம்பார் துளபந் தானாகா வடுகன் றனக்கு வலம்புரியு
மம்பை தனக்கு நெல்லியுமிங் காகா வென்ப ரறிந்தோரே.''

 (ஞானப்பிரகா - புட்பவிதி - 28.)

விஷ்ணுவுக் காகு மலர்கள்.

"மாதவி குருந்து வாகை மதயாணி கருங்காக் கொன்றை
சீதள முருக்குச் செம்பட் டலரியே செம்பரத்தை

கேதகை கருந்து ழாய் செந் திலகமுங் கேசவற்கா
நாதனுக் காகாவிந்த நறுமல ரலகைக் காமே.''

(ஞானப்பிரகா - புட்பவி - 29.)

கேதார நாதர்க்குரிய பத்திர புப்பங்களாவன.

"வில்லமருச் சூதமத்த மாதுளையே நொச்சி

மேவியமுள்ளிலந்தை நறுங்க * * செழுவன்னி
சொல்லியாகத் திரிநெல்லி சண்பக *
      தும்பையொடு மருதுமா மந்தார *
யெல்லவரும் புகழுமந்த விஷ்ணுகாந்தி
      யெழிற்றேவ தாருவுட னெருக்கறுகென் றுரைக்கு

நல்லனவாம் பத்திரங்களிருபத் தொன்று
      நாடரிய கேதார நாதனுக்கர்ச் சனையே"

(ஞானப்பிரகாசர் - புட்பவிதி - 23.)

பஞ்ச வில்வம்.

"மெச்சியே யடியவர் வியந்து சாத்திடு

நொச்சியே நறுவிளா நுவன்ற கூவிளம்
வைச்சிடுங்கிளுவையே மாவி லிங்கையின்
பச்சிலை யென்றிவை பஞ்ச வில்வமே.''

(௸ - 16)

விநாயக சதுர்த்திக்குரிய பத்திர புட்பங்கள்.

"மேதகுமா சிப்பச்சை நறுங்கையாந் தகரை
      வில்வமுடனூமத்தை நொச்சிநா யுருவி

யேதமில்கத் தரிவன்னி யலரிகாட் டாத்தி
      யெருக்கு மரு துடன் மால் பேரியம்பு காந்தி

மாதுளையே யுயர்தேவ தாருமரு நெல்லி
      மன்னுசிறு சண்பகமே கெந்தளிபா திரியே

யோதரிய வருகிவையோ ரிருபத் தொன்று
      முயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே''.

துளப மெடுக்க லாகாத நாள்.

''இரவொடு காலைமாலை யிரவியே வெள்ளி செவ்வாய்

பரவு மட்டமியீ ராறு பதினான்கு பர்வ மோணம்
விரவிய மாதத் தாதி விதிபாத மபரா ணத்தின்

மருவிய துளபங் கொய்யின் மால் சிரங் கொய்த லாகும்.''

 (ஞானப்பிர - புட்பவிதி - 6)

வில்வ மெடுக்கலாகாத நாள்.

“'தவமுறு மாதமுன் சதுர்த்தி யட்டமி

நவமியே சதுர்த்தசி நவின்ற நல்லுவா

வவமறு சோமவா ரத்து மன்பர்கள்

சிவனருச் சனை செயும் வில்வந் தீண்டிடார்.''

(ஞானப்பிரகா - புட்பவிதி - 7.)

எடுக்கு முறையாவது.

''எடுத்து வைத்தே யலர்ந்த மலர் பழம்பூக்கண் மற்ற

வெருக்கிலையா மணக்கிலை * * திந்த பூக்க

ளுடுத்த புடை வையிற்கரத்தின

ளுதிர்ந்திடுபூ வரைகீழு * க்க
ளடுத்த புழுக் கடியெச்சஞ் சிலந்திமயி ருறுத்
      லங்கையில் வைத் தங்கைகுவித் திடுதல் கங்கு றனிலே

யெடுத்தமலர் நீரமிழ்த்தல் புறங்காட்டி லெய்த
      லெச்சில் குளி யாதெடுத்த லிழிபெனுமா கமமே.''

 (ஞானப்பிர - புட்பவிதி - 13)

 

 "மடியினிற் பறித்திடும் மலர்ந்து கீழ் விழும்பூ முன்னா

 ளெடுபடு மல ரிளம்பூ விரவினி லெடுத்திடும்பூ
 தொடர்நோயன் றீககை யில்லான் அர்த்தனா சாரமற்றோன்
 கொடுவரும் பூ வனைத்துங் குழகனுக் காகா வன்றே.''

 

எனக் கூறியிருத்தலால் அவைகள் இழிவாமென விலக்கி,


''வைகறை யுணர்ந்து போந்து புனன்மூழ்கி வாயுங் கட்டி

 மொய்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்
 கையினிற் றெரிந்து நல்ல கமழ்முகை யலரும் வேலைத்
 தெய்வநா யகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித் தாமங் கொய்து ".

 (எறிபத்த நாயனார் புரா - 9.)


 ''கோலப்பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்

 வாலிய நேசங் கொண்டு மலர்க்கையிற் றண்டுங் கொண்டங்
 காலய மதனை நோக்கி யங்கணர்க் கமைத்துச் சாத்துங்
 காலைவந் துதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.

(எறிபத்தர் புரா - 10.)


 "காலைவா யெழுந்து நறும்புன லாடிக் கவினுரு நிறைய நீ றணிந்து

 சோலைவாய்ச் சுரும்ப ராய்பிழி மாந்தச் சூழுமுன் றூமலர் கொய்து
 சாலைவாய் மருவி மரபுடனாய்ந்து தண்ணறும் பிணையலாப் பிணித்து
 மேலைவா யமரர் தொழுஞ்சின கரத்தின் மேவியா லயவல கிட்டே

 (கருவூர்ப்புராணம் - நியமச்சருக்கம் - 58.)

 

 'நீரிலை கீழுற விருந்து பூத்திடுஞ்
 சீரிய துழாய்மலர் தினமுங் கொய்யாலா

 மூரிடும் புழுக்கடி யொன்று மேயலாற்
 பாரினி லவையெலாம் பழுதில் வில்வமே'".

 (ஞானப்பிரகாசர் - புட்பவிதி - 9)

"செழித்திடுந் துளபமுஞ் சிறந்த வில்வமும்
வழுத்து பொன் மத்தமு மலரு நீலமு

மழுத்து செம் பொன்மல ரதனைப் போலவே
கழித்தநிர் மாலியங் கழுவிச் சாத்தலாம்.''

(௸ - 10)

"அம்புய மேழுநா ளலரி மூன்று நாள்
வம்பவிழ் குடலையில் வைத்துச் சாத்தலா
நம்பிடு நறுமலர் நண்ணி டாவிடிற்

றம்பழுப் பரும்பிலை தளிருஞ் சாத்தலாம்.''

(௸ - 11.)

இன்ன இன்ன காலங்களுக்கு இன்ன இன்ன புட்பங்கள் ஆமெனல்.

வார புட்பம்.

 ''பங்கய மலர்ந்த வெள் ளாம்பல் பாசடைச்
 செங்கழு நீர்மலர் தகரச் செம்மலர்
 தங்கிய குவலயந் ததைவெண் டாமரை

 மங்கைகே ணீலமேழ் வார புட்பமே.''
 

வாரபத்திரம்.


''சூரியன் வில்வமே துளசி திங்களே
 யாரலில் விளாவிலை யறிவன் மாதுளை

 வேரிநா யுருவி பொன் வெள்ளி நாவலே
 காரியாஞ் சனியினில் விஷ்ணு காந்தியே "

(ஞானப்பிரகாசர் - புட்பவிதி - 15.)

 

காலையிற் சாத்தும் அஷ்ட புட்பம்.

''வம்பவி ழலரிநா யுருவி மல்லிகை

வெம்பிய வெருக்குடன் வில்வம் வெண்மலர்
நம்பிய வடுக்கலர் நந்திநாண்மல
ரம்புயங் காலையி லஷ்ட புட்பமே''

(௸ - 17.)

உச்சியிற் சாத்தும் அஷ்ட புட்பம்.

''போதவிழ் பொன்னூமத்தை புலிநகக் கொன்றை வெள்ளைப்

பாதிரி வன்னி செய்ய முனைப்படர் மந்தாரை * * * *
பேதமாய் மலரும் * * * கொன்றை பெரியதும்பை

யோதிய விவைக * * * யி லஷ்ட புட்பம்''

(௸ - 18.)

அந்தி அர்த்தயாமம் அபரான்னங்களிற் சாத்தும் அஷ்டபுட்பம்.

"வந்தமல் லிகையி ரண்டு மகிழ்தரு மல்லி கைப்பூக்
கொந்துவேர் சண்ப கப்பூச் சிறிய சண் பகங் கொழுந்து

சிந்தைகூ ரஷ்ட புட்பஞ் சிவன் முடிக் கேறும் போழ்தி
லந்தியோ டர்த்த யாம மபரானந் தனினு மாமே''

(௸ - 19)

எல்லாக்காலங்களுக்குழரிய அஷ்டபுட்பம்.

''இலகிய புன்னை வெள் ளெருக்குச் சண்பக
நிலவிய வலம்புரி நீலம் பாதிரி

யலரிசெந் தாமரை யஷ்ட புட்பமாம்
புலரியம் போதொடெப் பொழுதுஞ் சாத்தலாம்''

(௸ - 20)

மாத புட்பம்.

''மெத்திய பலாசு புன்னை வெள்ளெருக் கலரிப் போது

கொத்தலர் சண்ப கப்பூக் கொன்றையே தும்பை செய்ய
கத்கரி பட்டி கஞ்சங் காவிமல் லிகையீ ராறும்

சித்திரை முதலாக் கொள்க சிறந்திடு மாத புட்பம்''

(௸ - 21.)

திரிகால நிண்ணயம்.

"காலை யானது தாமத காலமே

யேலு முச்சி யிராசத காலமே
மாலை நேரமும் வாழ்த்திடு நேயமுஞ்
சாலும் வைகறைக் காலமுஞ் சாத்திகம்''

(ஞானப்பிரகா - புட்பவி தி - 30.)

தமோகால மலர்.

"போது ளோதிய பொன்னிறப் பூவுடன்
சாதி நீலந் தவிர்ந்த கரியபூ
மாது கேளிவை தாமத மாமல்

ரோது காலையிற் சாத்துத லுத்தமம் "

(௸ - 31.)

இராசத் காலமலர்.

"செய்யதா மரை பலாசு செங்கழு நீ * * த்தை

செய்யமந் தாரை செய்ய வழுதுலை * * ட்டி
செய்யபா திரியே செய்ய புலிநகக் கொன்றை யுச்சிக்
கெய்திரா சதப்பூ வாகு மெழுந்தபட் டலரிப் பூவும் "

(௸ - 32.)

சாத்விக காலமலர்.

“வெள்ளை மந் தாரை பிச்சி வலம்புரி வெண்காக் கொன்றை
வெள்ளையம் புய மெருக்கு மல்லிகை வெள்ளி லோத்தி
வெள்ளல் ரியின்பூத் தாளி மிளிர்புன்னை மகிழ்செவ் வந்தி

தள்ளருந் தும்பை சாதி சாத்திக மலர்க ளாமே''

(௸ - 33.)

புட்பஞ்சாத்து முறைமை.

"முறையுறு மஷ்ட புட்ப முதலிய சாத்தும் போதி

லிறைவனுக் கொருபூ வேனு மெண்ணினிற் குறைய லாகா
நிறைவுறப் புனைதல் வேண்டு நீண்மலர் கிடையா தாகிற்
குறைவறச் சொன்ன புட்பங் கூட்டியுங் கொள்ள லாமே''

(௸ - 25.)

"நறைமலர்ப் பொகுட்டுநன் னாளம் போக்கியே
குறையுறக் குற்றமாங் குறைப் டாககை

நிறைவுறச் சாத்துக்க நீரின் போதெலாம்
புறவிதழ் போக்கினும் புனித மென்பவே''

   (ஞானப்பிரகாசர் - புட்பவிதி - 26.)

புட்பப் பணிவகை.

"கொண்டு வந்து தனியிடத்தி னிருந்து கோக்குங் கோவைகளு
மிண்டைச் சுருக்குந் தாமமுட னிணைக்கும் வாச மாலைகளுந்
தண்டிற் கட்டுங் கண்ணிகளுந் தாளிற் பிணைக்கும் பிணையல்களு

நுண்டா திறைக்குந் தொங்கல்களுஞ் சமைத்து நுடங்கு நூன்மார்பர்.

 (முருக நாயனார் புராணம் - 9.)


"ஆங்கப் பணிகளானவற்றுக் கமைத்த காலங் களினமைத்துத்

தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ் சாத்தி வாய்ந்த வர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான

வோங்கிச் சிறந்த வஞ் செழுத்து மோவா நாவி னுணர்வினார்.

 (முருக நாயனார் புரா - 10.)


"குய்யமொன் றுரைக்கே மாதிநா யகனுக் கொருபலங் குளிர்புன லாட்டி

வைகிர வரையா மத்தொருவில் வந் துளபமா ழையினிழைத் தணிந்தோர்
தையலோர் பாகன் பதத்தினைச் சேர்வர் சத்தியஞ் சாத்திய மதனுக்

கையுற விலைமுக் காலுமீ துண்மை யருட்குர வனுமரு ளினனால்.

 (கருவூர்ப்புரா - 67.)


இவ்வாறு ஏற்ற புட்பங்களை ஆராய்ந்தே எடுத்துச் சாத்த வேண்டு மென்பதற்குப் பிரமாணம்: -

 

"இன்னவாமெனு நாண்மலர்''                 (பெரியபுராணம் திருமலைச்சிறப்பு - 22)

"கொங்குசேர் குழற்காமலர் கொய்திட''                          (௸ - 23)

"என்னையாட்கொண்ட வீசனுக்கேய்வன - பன்மலர்"             (௸ - 26)


அன்பு.

 

அன்பாவது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். அதுவே ஒருவர்க்கு இம்மைப்பயனையும் மறுமைப்பயனையுந் தருவது. அதுபற்றியன்றோ ஒருவர்க்கு அரிதினும் அரிதான மானுடதேகத்தோடு உண்டாகிய சம்பந்தத்தை, அன்போடு பொருந்துவதற்கு வந்த வழியின் பயனென்று அறிந்தோர் சொல்லுகின்றார்கள்.

 

அன்பானது தன்னையுடையவர்க்கு, அவரோடு தொடர்புடையார் மாட்டு விருப்பத்தைத் தந்து, அதன்வழியே பிறர்மாட்டு விருப்பமுடைமையையுந் தரும். அவ்விருப்பமுடைமைதான் ஒருவர்க்குப் பகையும் நொதுமலுமின்றி யாவரும் நட்பாகும் சிறப்பினைத் தருவது. அறிவோர்க்களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க்கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்கோடல் முதலிய கிரகத்த தருமங்களுக்குக் காரணம் அன்பேயாகும்.


 "துறவற மனை யறஞ்சீர் தூய்மைநற் கல்வி நல்லோர்
 உறவொடு மகங்க டான மொண்டவம் விரதம் பூசை
 அறிவிவை யனைத்து மில்லை யாதர வில்லை யாயின்''                                                                   (பிரபுலிங்கலீலை)

“அன்பே யென் னன்பேயென் றன்பா லழுகரற்றி

 அன்பேயன் பாக வறிவழியம் - அன்பன்றித்
 தீர்த்தந்தி யானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை

 சாற்றும் பழமன்றே தான்''                        (திருக்களிற்றுப்படியார் - 55)


என்பன இவ்வன்பின் தன்மையை விளக்கும்.

 

அன்பில்லார் யாவரும் பிறர்க்குப் பயன்படாமையால், எல்லாப் பொருள்களாலுந் தமக்கே யுரியராவார். அன்புடையாரோ அப்பொருள்களாலே மாத்திரமல்லாமல் தம்முடம்பாலும், எலும்பாலும் பிறர்க்குரியராவார். அதற்கு, சிபிச்சக்கிரவர்த்தி "தன்னகம் புக்க குறுநடைப்புறவின் றபு திகண்டஞ்சித் துலைபுக் " கதும் விருத்திராசுரனை வெல்லும் பொருட்டு யாசித்த இந்திரனுக்குத் ததீசிமாமுனிவர் தமது முதுகெலும்பைத் தந்ததும். கன்னன் தனது மரணத்தைக் கருதாது தன்னுடன் பிறந்துள்ள கவசகுண்டலங்களை அந்தண வடிவங் கொண்டு வந்துயாசித்த இந்திரனுக்குக் கொடுத்ததும் சான்றாகும்.

 

அன்பில்லையேல் ஒருவர்க்கு இடம் பொருள் ஏவல் செய்வார் முதலிய உறுப்பெல்லாம் என்ன பயனைத்தரும்? அன்பானது உள்ள நெகிழ்ச்சியாகையால் அது எப்பொழுதும் யாவர்க்கும் புலனாவதின்றாம். ஆனால் அது முதிர்ந்த வழியும், அன்புடையார்க்கு, தம்மால் அன்பு செய்யப்பட்டவ ன பயனை தாவர்க்கும் பலமால் அன்பு
ருடைய துன்பங் கண்டபோதும் பொழிகின்ற கண்ணீரே அவ்வன்பை யெல்லோரும் அறியும்படி செய்யும். இத்தகைய அன்பு ஒருவர்க் கில்லையேல், அவரை அறக்கடவுள், புழுமுதலான என்பில்லாத பிராணிகளின் உடம்பை வெயிலானது தகித்து வருத்துவது போலத் தகித்து வருத்தும்.

 

அன்பை முதலாகக்கொண்டு அதன் வழியாக நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பெனப்படும் அல்லாதார்க்குளவான உடம்புகள் உயிர்நின்ற வுடம்புகளாகாமல் என்பினைத் தோலாற் போர்த்தனவாம்; எனவே நடைப் பிணங்க ளெனப்படு மென்க

 

அன்பானது, தலையன்பு, இடையன்பு, கடையன்பு என மூவகைப்படும். தலையன்பாவது ஒருவன், தன்னாலன்பு பாராட்டப் பட்டாரது பெயரைக் கேட்ட மாத்திரையே தன்வசமழிதல். இடையன்பாவது அவரைக்க ண்டவுடன் தன் வசமழிதல். கடையன்பாவது அவரைப் பரிசித்த போது தன் வசமழிதல்.

 

கடவுள் ஆன்மாக்கள் மாட்டுக் கொண்ட அன்பும், ஒருவர் தமக்கு இவை தொடர்புடையவை இவை தொடர்பில்லாதவைஎன்று நோக்காது இயல் பாகவே எல்லாவுயிர்கள் மேலும் பிரதிபலன் கருதாது கொண்ட அன்பும் அருளெனப்படும். அருள், இரக்கம், கருணை, கிருபை யென்பன ஒரு பொருட் கிளவிகள்.

 

உலக வின்பத்துக்குக் காரணம் பொருளேயாதல் போல மோட்சவின்பத்துக்குக் காரணம் அருளேயாம். “எவ்வுயிரும் பராபரன் சன்னிதியதாகும், இலங்கு முயிருடலனைத்து மீசன் கோயில்'' என்றபடி உயிர்களெல்லாங் கடவுளுக்குத் திருமேனிகள். அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய வுடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களேயாவர்கள். உயிர்களிடத் தன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர் போல் ஒழுகுவது நாடகமாத்தி ரையேயன்றி உண்மையன்றென்பது தெளிவாய் உணரப்படும்.

 

பிறவுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம் முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால் அவர் இரக்கமில்லாதிருப்பது பிறவுயிர்களிடத்து மாத்திரமா? தம்முயிரிடத்தும் இரக்கமில்லாதவரேயாவர். அவர் தமக்குத் தாமே வஞ்சகர்.

 

அருளென்னுங் குணம் யாவரிடத்திருக்குமோ அவரிடத்தே பழிபாவங்களெல்லாஞ் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். மரணபரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் எவனோ அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ்செய்பவனாகித்தான் இன்பமே வடிவமாக இருப்பன்.

 

மேலும் சிவபெருமான் கண்ணப்பநாயனாருக்கு ஆறுநாளில் முத்தி கொடுத்தருளியதும், சேந்தனார் நிவேதித்தகளியை யுண்டருளியதும் அன்பின் செயலாலன்றோ? ஆகையால் பிறவிப்பயனை விரும்பிய ஒவ்வொருவரும் இறைவன் மாட்டு அன்புடையவராயிருத்தல் வேண்டும். அங்ஙனம் இறைவன் மாட்டுச் செய்யப்படும் அன்பு பக்தி யெனப்படும்

இவ்வன்பு இல்வழி இறைவனை ஒருவாற்றானும் அடைதல் முடியாது.
 அது,

''உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ளவ ருக்கருள் வானலன்
வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை

வள்ள லாகிய வான்மியூ ரீசனே.''


"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன் னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு

நக்கு நிற்ப னவர்தமை நாணியே.''

என வருந் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும்,


"தேவதேவன் மெய்ச்சேவகன் றென்பெருந் துறைநாயகன்
மூவராலுமறி யொணாமுத லாயவானந்த மூர்த்தியான்
யாவராயினு மன்பரன்றி யறியொணாமலர்ச் சோதியான்
நூயமாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே.''

 என்னுந் திருவாசகத்தானும்,


“என்பே விறகா விறைச்சி யறுத்திட்டுப்
பொன்போ லெரியிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி யகங்குழைந் தார்க்கன்றி
என் போன் மணியினை யெய்தவொண் ணாதே.''

 என்னுந் திருமந்திரத்தானும்,


 "கருமமா தவஞ் செபஞ் சொல் காசறு சமாதி ஞானம்
 புரிபவர் வசம தாகிப் பொருந்திடேம் புரையொன் றின்றித்

 திரிவறு மன்பு செய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போம்
 உரைசெய்வோ மவர்மு னெய்தி யவருளத் துறைவோ மென்றும்.''

என்னும் வாயு சங்கிதையானும்,


"கனிந்து கனிந் - தழுதார்க்கு முன்னிற்கு மகிலநாயகன்''

என்னுந் திருப்பெருந்துறைப் புராணத்தானும் அறியப்படும்.  ஆதலினாலன்றோ,


"அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே
யறிவுதனை யருளினா னறியாதே யறிந்து
குறியாதே குறித்தந்தக் காரணங்க ளோடுங்

கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின்.''

(சிவஞானசித்தியார் - 8ஞ் சூத்திரம்)

என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.

 

இவ்வன்பானது ஒருவர்க்கு, அவர், பல பிறவிகளிலே பயன் குறியாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவபெருமானருளிச்செய்ய வரும். அவனரு ளின்றி, இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. இத்தகைய அன்பானது இடையறாது முறுகி வளரின் அம்முதிர்ச்சியிலே சிவம் விளங்கும். ஆதலால் அன் பும் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும்.


''பக்தி வலையிற் படுவோன் காண்க"               (திருவாசகம்) என்றும்,


 "ஆரேனு மன்பு செயி னங்கே தலைப்படுங்கா
 ணாரேனுங் காணா வரன்.''                       (திருக்களிற்றுப்படியார்

என்றும்,


''அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்

அன்பே சிவமா யமர்ந் திருப்பாரே.''                       (திருமந்திரம்)

என்றும்,


"மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே
 யூறிநின் றென்னு ளெழுபாஞ் சோரி யுள்ளவா காண வந் தருளாய்

 தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே
 யீறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே.''

(திருவாசகம்)

என்றும் கூறியிருத்தல் இதுபற்றியேயாம்.

 

இதுகாறுங் கூறியவாற்றால் அன்பே இம்மைப் பயனையும் மறுமைப்பயனையுந் தருவதான சிறந்த சாதனமாயிருப்பதால் காரைக்காலம்மையார்" இறவாத வின்ப வன்பு வேண்டி விண்ணப்பித்துக் கொண்டது போல்நாமும் அதைப் பெறுவதற்கு எல்லாம் வல்ல முழுமுதலை இரந்து இறைஞ்சுவோமாக.

 

சிவபிரானருளாலேயே அன்பு அடையப்பெறும் என்பதனை " அந்த அன்பானது சிவபிரானுடைய அருளினாலெய்தும். அந்த அருளினாலே அன்புஉளதாம். அருளுண்டாய போதே முத்தியானது கரதலத்தில் எய்தியதுபோலாம் " என்ற வாயுசங்கிதை - உத்தரபாகம். அத் -22 -26 -கூறுவதனாலுந்துணியப்பெறும்.

 

இங்ஙனம் கூறிப்போந்த அன்புவகையில் எறிபத்த நாயனார் தலையன்புடையவரென்றும், அஃதும் சிவபிரான் மாட்டே யுடையவரென்றும், அவ்வன்பு அவருக்கு அளவு கடந்து மிகுந்துள்ளதென்றும், பின்வரும் செய்யுட்களால் அறியக்கிடக்கின்றது.

 
"பாய்தலும் விசைகொண் டுய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழ லுமிழ்கண் வேழந் திரிந்துமேற் கதுவ வச்சந்
தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய் தனித் தடக்கை வீழ மழுவினாற் றுணித்தார் தொண்டர்.''

(எறிபத்தநாயனார் புரா - 24.)


"குழையணி காதி னானுக் கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடி னன்றிக் கொல்லார் பிழைத்த துண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை வரவினை மாற்றி மற்ற
வுழைவயப் புரவி மேனின் றிழிந்தன னுலக மன்னன்.''

(௸ - 37.)

"மைத்தடங் குன்று போலு மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்றபோது வேறொன்றும் புகுதா விட்ட
வத்தவ முடையே னானே னம்பல வாண ரன்ப
ரித்தனை முனியக் கெட்டே னென்கொலோ பிழையென் றஞ்சி''

(ஷ - 38.)

“செறிந்தவர் தம்மை நீக்கி யன்பர் முன் றொழுது சென்றீ
தறிந்திலே னடியே னங்குக் கேட்ட தொன் றதுதா னிற்க
மறிந்தவிக் களிற்றின் குற்றம் பாகரோ டிதனை மாள
வெறிந்ததே போது மோதா னருள்செயு மென்று நின்றார்.''

(எறிபத்த நாயனார் புரா - 39)


''தொழுந்தகை யன்பின் மிக்கார் தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று சினக்கரி சிந்தத் திங்கட்
கொழுந்தணி வேணிக் கூத்த ரருளினாற் கூடிற் றென்றங்
கெழுந்தது பாகரோடு மியானையு மெழுந்த தன்றே.

(௸ - 48.)

“தேனாருந் தண்பூங் கொன்றைச் செஞ்சடை யவர்பொற் றாளி
லானாத காத லன்ப ரெறிபத்த ரடிகள் சூடி''
வானாளுந் தேவர் போற்று மன்றுளார் நீறு போற்று
மேனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன்.

(௸ - 57.)

7. கொலையானது இன்னவிடத்துப் பாவமாகாது புண்ணியமாகு மெனல்.

கொலையானது பாதகத்துளெல்லாம் தலையானதா யிருந்தாலும், அந்தணர், அறவோர், ஆசாரியர், ஆலயப்பணி முதலியவர்களுக் கிடையூறு செய்பவர்களைக் கொலை செய்யலாமென்றும், தனதுயிர்க் கிறுதி வருவதா யிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அவ்விடையூறுகளைப் போக்க வேண்டு மென்றும், அப்படிச் செய்வதானது சிறந்த புண்ணியம் என்றும் அறிய வேண்டும்.


''தீய வினைத் தலை கொலை''                    (கொலைமறுத்தல் - 4.)

"அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார்
 சிந்தவுஞ்செய் நீ செறியாய் தீங்கு.''                      (சங்கற்ப நிராகரணம்)


''தேசிகர்க்குந் தீங்கு செயுந் தீம்பரைவெல் லல்லது நீ
 நாசமுறு சேர்வாய் நலம்.''                                   (௸)


 "குரு விலிங்கசங் கமத்தினைக் குறித்தவற் றிடையூ
 றொருவு தற்பொருட் டாற்றம் துயிர்விடு முரவோர்
 மருவி டும்பல மெமக்குமே வளம்பட வகுப்பா
 னருமை யென்றன னனைத்தையு முணர்த்துபே ரறிவோன்.''

(சிவபுண்ணியத் தெளிவு)

“குருவை வெள்விடைப்பாகனை யன்பரைக் கும்பிடா திகழ்ந்தோரைக்
 கருவி யாற்குறைத் திடல் கொலை யன்றது கைவரல் வலியின்றேல்
 வெருவி வெந்நிர யம்புகச் சபித்தவர் மேவிய மூதூரை
 யொருவி வேறொரு புலத்திடை யருந்தவ முஞற்றுதல் வழக்காமால் "

 (கருவூர்ப்புராணம் - கோபிதாரத்துவச் சருக்கம் - 91)


என்னுஞ் செய்யுட்களால் இவற்றை யுணரலாம்.

 

இவைபற்றியன்றோ பாதகமென்றும் பழியென்றும் பாராது, தாதையை வேதியனைத் தாளிரண்டுமாணி சேதிப்பக் கண்டு ஈசர் தாமாம் பரிசளித்துச் சண்டீசர் பதத்தை யளித்தார். இதனை,


"வந்து மிகைசெய் தாதைதாண் மழுவாற் றுணித்த மறைச்சிறுவ

ரந்த வுடம்பு தன்னுடனே யானார் மகனா ராயினார்''

 (பெரியபுரா - சண்டேசநாயனார் - 59) என்றும்,


"கருதுங் கடி சேர்ந்த வெனுந் திருப் பாட்டி லீசர்

மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறன் முத்தி
தருதன் மையதாதல் சண்டீசர் தஞ்செய்கை தக்கோர்
பெரிதுஞ் சொலக்கேட் டனமென்றனர் பிள்ளை யார்தாம்.

 (திருஞானசம்பந்தநாயனார் புராணம் - 839.)

என்றும், சேக்கிழார் பெருமானும்,

 

"பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை
வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் றனக்குத்
தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்த தென்னே
சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே''

(திருஞான சம்பந்தர் தேவாரம் - திருச்சேய்ஞலூர் - 7) என்றும்



"கடி சேர்ந்த போது மலரானகைக் கொண்டு நல்ல
படி சேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு

முடி சேர்ந்த காலை யறவெட்டிட முக்கண் மூர்த்தி
யடி சேர்ந்த வண்ண மறிவார் சொலக் கேட்டு மன்றே''

 (திருஞானசம்பந்தர் தேவாரம் - பொது - 7.)

என்றும் ஆளுடைய பிள்ளையாரும்,

 

''தழைத்ததோ ராத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி

யழைத்தங்கே யாவின் பாலைக் கறந்து கொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கை வீ ரட்டனாரே''

 (திருநாவுக்கரசர் தேவாரம் - திருக்குறுக்கை - 3.) என்று ஆளுடைய அரசும்,


''ஏதநன்னில் மீரறுவேலி யேயர் கோனுற்ற விரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்தாட்டக் கோலவெண்மணற் சிவன்றன் மேற்சென்ற
தாதைதாளற வெறிந்த சண்டிக்குன் சடை மிசைமல ரருள்செயக் கண்டு

பூதவாளிநின் பொன்னடி யடைந்தேன் பூம் பொழிற்றிருப்புன்கூருளானே "

 (சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் - திருப்புன்கூர் - 3.)

என்று ஆளுடைய நம்பியும்,

 

"தீதில்லைமாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப வீசன் றிருவருளாற் றேவர் தொழ P. பகை பாதகமே

சோறு பற்றினவா தோணோக்கம்"

(திருவாசகம் - திருத்தோணோக்கம் - 7) என்று ஆளுடைய அடிகளும்,


“தாதையைத் தாளறவீசிய சண்டிக்கு மண்டத்தொடு முடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமுமருளிச்

சோதி மணி முடித்தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே"

 (சேந்தனார் திருப்பல்லாண்டு - 10.)

என்று சேந்தனாரும் கூறிப் புகழ்ந்திருக்கின்றார்கள்.

 

எறிபத்த நாயனார்,

 

''அழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய பரசைக் கைக் கொண்டதும்,

 

சிவகாமியாண்டாரும் தாம் சிவபெருமானுக்குச் சாத்தக் கொண்டு போகும் புட்பங்களை யானையானது பறித்துச் சிந்தியபோது,

 

"நூல் கொண்ட மார்பிற்றொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி

மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண் டடிக்க"

வந்ததும்,

 

"அப்பொழு தணைய வொட்டா தடற்களி றகன்று போக

மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்லமாட்டார்
தப்பினர் விழுந்து கையாற் றரையடித் தெழுந்து நின்று

செப்பருந்துயர நீடிச் செயிர்த்து முன் சிவதா''

எனப் புலம்பியதும்,

 

அதனைக் கேட்ட எறிபத்த நாயனாரும் ஆற்றாது ஓடிவந்து வினாவிய
 போழ்து,


 "எந்தையார் சாத்தும் பூவை யென்கையிற் பறித்து மண்மேற்
 சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றதித் தெருவே''

என்றதும்,


அதனைக்கேட்ட எறிபத்த நாயனார் சீற்றமிகுந்து,

"இங்கது பிழைப்பதெங்கே யினியென வோடி''


யானையைப் பாகர்களுடன் மழுவால் துண்டித்ததும், எறிபத்த நாயனாரால் பட்டத்து யானை கொல்லப்பட்டதை யறிந்த புகழ்ச்சோழர்


 "மறிந்த விக்களிற்றின் குற்றம் பாகரோ டிதனை மாள
 வெறிந்த போது மோதானருள் செயு''


மென எறிபத்த நாயனாரை வினாவி நின்றதும்,

 

அங்ஙனம் கொல்வதும், எறிபத்த நாயனாரது மங்கல மழுவாலாகா தென்று தமதுடைவாளை எறிபத்தநாயனாரிடங் கொடுத்ததும், கொடுத்த வாளை வாங்காதிருந்தால் புகழ்ச்சோழர் தன்னைத்தானே துணிக்க நேருவரென்றஞ்சி அதனை வாங்கி, புகழச்சோழரது அன்புத்திறத்திற்கு வியப்புற்று, இத்தகைய அன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என வருந்தித் தமது கழுத்தைத் துணித்தற்கு வாளைக் கழுத்திற் பூட்டியதும், முன்னர் கூறப்பட்ட சிவத்துரோகம் முதலிய அதிபாதகங்களைச் செய்வோரைக் கொல்வது குற்றமாகாதென்பதை வலியுறுத்துகின்றன.

8. சொல்வோரது தவறல் உண்மை மாறுபடு மெனல்.

 

ஒருவர் தாம் கண்டு கேட்டு அறிந்ததைப் பிறரிடம் கூறும் போது, கூறுவோரது சொற்சோர்வால், கேட்பவர் அதனை உண்மைக்கு மாறாகக்கிரகிப்பது முண்டு.

எறிபத்த நாயனார் யானையையும் பாகரையும் கொன்றமையைச் சில பாகரோடி அரசரது வாயிற் காப்போரை யணுகி "பட்டவர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டாரென்று - முட்டநீர் கடிதுபுக்கு முதல்வனுக் குரையு " மென்ற போது அதைக் கேட்டறிந்த வாயிலாளர் அரசரைப் பணிந்து "பற்றல ரிலா தாய் நின்பொற் பட்டமால் யானை வீழச் - செற்றனர் சிலராமென்று செப்பினார் பாக ரென்றார்.'' அதைக் கேட்ட புகழ்ச் சோழரும் ஒருமையிற் கூறாது செற்றனர் சிலராமெனப் பன்மையிற் கூறியதாலும், பாகர் செப்பினார் என்றமையாலும் மாற்றரிற் சிலரால் நிகழ்ந்திருக்கு மெனச் சீற்றங் கொள்ள நேர்ந்தது.

 

அதனையறிந்த சேனாதிபரும் சேனையை யுத்தகோலத்துடன் திரட்டிவர, அரசரும் " அண்ணலம் புரவிமேற் கொண்டார்".

 

அவர் படுகளத்தைக் குறுகியபோது "பகைப்புலத் தவரைக்காணான்'' என்று சேக்கிழார் பெருமான் கூறுமாற்றானும், புகழ்ச்சோழர் இவ்வாறு தாம் கேட்ட தொன்று நிகழ்ந்ததொன் றென்பதைத் தாமே எறிபத்த நாயனார்ரிடம் " செறிந்தவர் தம்மை நீக்கி யன்பர் முன் றொழுது சென்றீ - தறிந்திலேனடியே னங்குக் கேட்ட தொன் றதுதா னிற்க " என்று கூறுமாற்றானும் மாற்றலரால் நிகழந்த தெனப் புகழ்ச்சோழர் அறிந்ததாகவே துணியப்படும்.


“மொழிவ தறமொழி”

''ஐந்தறிவாற் கண்டாலு மாரேது சொன்னாலு
 மெந்த விருப்பு வெறுப் பேய்ந்தாலுஞ் - சிந்தையே

 பார விசாரத்தைப் பண்ணாதே யேதேனுந்
 தீர விசாரித்துச் செய்.”                                 (சிவபோகசாரம்.)

9. கோபத்தின் செயல்

 

தீவினைகளைச் செய்ய ஒருவனைத் தூண்டுவதில் கோபத்திற் சிறந்த தொன்றில்லை. அது ஒருவனிடத்தி லுண்டாகியபோது அவனதறிவைக் கெடுத்து தீர விசாரிக்க வொட்டாது, நடுவறிய வொட்டாது தடுத்து, அவன துள்ள மலர்ச்சி முகமலர்ச்சிகளைக் கெடுத்து, அவனது தேகசுகத்தை மின்சார வேகம் போல விரைந்து கெடுத்து விடும்.

 

கோபமானது நன்மை தீமைகளை அறியவொட்டாது. ஒருவனுக்கு அதிக பகையாகவுள்ள காமத்தைப் போலவே கோபமும் சிறந்த பகையாகும்.
சேர்ந்தாரைக் கொலும், அதன்பக்கயே தகிக்கும். அக்கினி தன்னைச் சார்ந்தவைகளையே தகிக்கும். கோபமோ தானுண்டாகிய விடத்தையும், அதன் பக்கத்துள்ளவற்றையும் தகிக்கும். ஆதலால் சேர்ந்தாரைக் கொல்லியெனக் கோபத்தைக் கூறலாம். ஒருவன் தன்னைத் தீமைகள் அணுகாது, நோய்வாய்ப்படாது காக்க விரும்பின், தான் அழியாதிருக்க விரும்பின், எவ்விதத்தினுங் கோபத்துக்கிடங் கொடுக்கலாகாது.

 

புகழ்ச் சோழரிடத்துக் காவலாளர்கள் "பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம்'' என்ற மாத்திரையே'' வளவனுங் கேட்ட போதின் மாறின்றி மண்காக் கின்ற - கிளர்மணித் தோள லங்கற் சுரும்பினங் கிளர்ந்து பொங்க, வளவில் சீற்றத்தினாலே யார் செய்தா ரென்றுங் கேளா - னிளவரி யேறு போல வெழின்மணி வாயி னீங்க'', சேனைத் தலைவர்களுஞ் சேனையுடன் தன்னைச் சூழத் தானும் பீடுற்ற வோர் குதிரை மேற்கொண்டு படுகளத்தைக் குறுகி " வென்றவர் யாவ ரென்றான் வெடிபட முழங்குஞ் சொல்லான் என்றமையினாலே'' அந்தமில் புகழானென்றும்'', "மண்ணுக்குயிராமன்னவனார்'' என்றும் சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்ட புகழ்ச் சோழரே கோபவலைப்பட்டுத் தீரவிசாரியாது யுத்தமேற் கொண்டா ரென்றால் கோபமானது யாரைத்தான் குடிகெடுக்காது. அம்மம்ம! முற்றத் துறந்த முனிவர் முதலியோரையும் ஓர் ஓர் காலத்து முதுக்குறை வுறுத்தியது கோபமே யன்றோ? ஆகையால் உயிர்க்குறுதி நாடுவோர் எவ்வகையினும் கோபமணுகாது தம்மைக் காக்கவேண்டும்.


''வெகுளியே யுபிர்க்க லாம் விளைக்குந் தீவினை

வெகுளியே குணந்தவம் விரத மாய்க்குமால்
வெகுளியே யறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியிற் கொடும்பகை வேறொன் றில்லையால்.''           (காஞ்சிப்புராணம்)


''பெற்றிடுந் திருவினிற் பிறந்த வெஞ்சினங்
கற்றவ ருணர்வையுங் கடக்கு மன்னது
முற்றிறு கின்றதன் முன்ன மன்பினோ

ருற்றன கூறியே யுணர்த்தல் வேண்டுமால்.''                    (கந்தபுராணம்.)


''சினத்தி னால்வருந் தீமையத் தீமைதீப் பிறப்பு
மனத்தி னீடிய மருட்கையும் வறுமையு நரகு
மனைத்து நல்கிடு மாதலா லொருபொழு தயர்த்துந்

தனக்கு நல்லவன் வளர்ப்பனோ சீற்றமாந் தழலை.''            (சேது புராணம்.)


''மூங்கிலிற் பிறந்த முழங்குதீ மூங்கின் முதலற முறுக்குமாபோலத் - தாங்
கருஞ் சினத்தீ தன்னுளே பிறந்து தன்னுறு கிளையெலாஞ் சயிக்கு - மாங்க

தன் வெம்மை யறிந்தவர் கமையா லதனையுள் ளடக்கவு மடங்கா - தோங்கிய
கோபத் தீயினை யொக்கு முட்பகை யுலகில் வேறுண்டோ.''      (இராமாயணம்.)


"நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.''                                       (திருக்குறள்.)

 

''தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்

றன்னையே கொல்லுஞ் சினம்.''                                (௸)

''சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு

மேமப் புணையைச் சுடும்.                                     (௸)

"ஆறுவது சினம்.''                     என்பது முதுமொழி.


10. அரசர் கடமை.

 

உயிர்க்குயிராக மறைந்து நின்று உயிர்களைக் காக்கின்றவர் கடவுள். உயிர்க்குயிராக வெளி நின்று உயிர்களைக் காக்கின்றவன் அரசன். ஆதலினாற்றானே கடவுளுக்குரிய இறைவன், நாயகன், பதி முதலிய பெயர்கள் அரச னுக்குமாயின.


''நெல்லு முயிரன்றே நீருமுயி ரன்றே
 மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
 அதனால் -
 யானுயி ரென்ப தறிகை
 வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே''                  (புறநானூறு 186.)


“மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்

கண்ணு மாவியு மாம்பெருங் காவலன்''                   (மநுநீதிசண்டபுரா - 14.)


"முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்"              (வாயுறை வாழ்த்து இறைமாட்சி - 8.)

 

உலகமும், உலகத்திலுள்ள உயிர்களும், உலகியலும் ஆகிய மூன்றையும் ஓர் உயிராகக் கொண்டால், அவ்வுயிர் நிலைபெற்றிருக்கின்ற உடலெனப்படுவது அரசனாம். அதனால் அரசனாகிய உடலுக்கு அம்மூன்றுமே உயிராகும். ஓர் உடல் நிலையுற்று அழகுபெற வேண்டுமானால் அதனுயிரை எவ்வாறு வருந்திக் காக்க வேண்டுமோ, அவ்வாறே அரசனும் தான் நிலையுற்று அழகுபெற்று நன்மையுற வேண்டினால், அவன் தன துயிராகும் உலகு, உயிர்கள், உலகியல் ஆகியவைகளை எவ்வகையினும் வருந்திக் காக்க வேண்டும்.

 

அரசன் உலகத்தைக் காப்பதற்கு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனும் ஆறையுந் தனக்கு உறுப்பாகக் கொண்டு தன்னாலும், தன் பரிசனங்களாலும், பகைவர்களாலும், கள்வராலும், துஷ்டப் பிராணிகளாலும் உலகிற்கு இடையூறு வராது காத்து, குறையிரப்பார்க்குக் காட்சிக் கெளியனா யிருத்தல் வேண்டும். அங்கனம் காக்கின்ற காலபேதத்தால் குடிகள் தளர்வுற்றகாலை தனக்கிறையாகக் கொள்ளும் ஆறிலொன்றை முழுவதுமாகுதல் ஓர் பகுதியாகுதல் விடல் வேண்டும். அல்லது ஏற்ற காலம் வரைக் காத்திருந்தாவது தகுதியானதைப் பெறல் வேண்டும்.

 

அவ்வாறு செய்யாது குடிகளை வருத்தித் தன திறைப் பொருளைக் கொள்ளுகின்ற கோமகனை விட, வழிமறித்துக் கொள்ளை யடிக்கும் வேடர்கள் மிக நல்லராவார்கள்.

 

அரசன் தனது கடமையிற் பிறழ்ந்தால், சாத்தியத்தில் தவறினால், கோள்கள் நிலைமாறி, வாரிவளங்குன்றி, பஞ்சம் மிகுந்து, நோய், பசி முதலியவற்றால் உயிர்கள் துன்புறும். ஆதலால் அரசன் எவ்விதத்திலும் தனது கோல்கோடாது ஒழுகுதல் வேண்டும்,


 "வைய மன்னுயி ராகவம் மன்னுயி
 ருய்யத் தாங்கு முடலன்ன மன்னன்''              (இராமாயணம்.)

''இருநிலத்தி லுயிர்வருத்தந் தன் வருத்த மெனக்கொண்டே
 பொருதளித்திட் டவையுவப்ப வுவப்பெய்தும் புந்தியினான்"

(திருப்பெருந்துறைப்புராணம்)

''செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
 கவிகைக்கீழ்த் தங்கு முலகு''                      (திருக்குறள்.)


 "இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறா
 னின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவ
 னாவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும்
 வேடலன் வேந்து மலன்.''                        (நீதிநெறிவிளக்கம்)


 "மழைவளஞ் சுரக்குமாறும் வயனிவம் விளையு மாறும்
 விழையறம் வளரு மாறும் வேதநூல் விளங்கு மாறுந்
 தழை பொரு ளீட்டு மாறுஞ் சமரிடை வெல்லுமாறும்
 பிழைதப வாழுமாறும் பிறழ்தராக் கோலினாகும்.'' (விநாயகபுராணம்)


“வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பு
மேந்திழையார் தங்கற்பு மில்லறமு நில்லாவா
மாந்தர் பசியா லுணங்க மழைவறந்து
பாந்தண் முடி கிடந்த பாரின்விளை வஃகுமால்.''     (பிரமோத்தரகாண்டம்)


"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியுங்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரு
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லா மண்ணாள் வேந்தன்
றன்னுயி
ரென்னுந் தகுதியின் றாகும்.''             (மணிமேகலை)

 

புகழ்ச்சோழநாயனார் புராணத்தில், ''மண்ணுக்குயிராமெனு மன்னவனார்" என்றும்,

 

"சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித்தாம –

மன்று சிதறுங்களிற்றை யறவெறிந்து பாகரையுங்-

கொன்ற வெறி பத்தரெதி ரென்னை யுங்கொன் றருளுமென –

வென்றி வடி வாள் கொடுத்துத் திருத்தொண்டின் மிகச் சிறந்தார்" என்றும்,

 

எறிபத்த நாயனார் புராணத்தில்,

"மறிந்தவிக்களிற்றின் குற்றம் பாகரோ டிதனை மாள –

 வெறிந்ததே போது மோதா னருள்  செயு மென்று நின்றார்.''           என்றும்,

 

''அங்கண ரடியார் தம்மைச் செய்தவிவ் வபராதத்துக் –

கிங்கிது தன்னாற் போதா தென்னையுங் கொல்ல வேண்டும்''           என்றும்,

 

"என்பெரும் பிழையினாலே யென்னையுங் கொல்லும் "                என்றும்

கூறுமாற்றால், புகழ்ச்சோழர், உலகிற்குத் தாம் உயிரும், உடலுமா யுள்ளவரென்பது பெறப்படுகின்றது.

 

''தந்திரத் தலைவர் தாமுந் தலைவன்ற னிலைமை கண்டு

 வந்துறச் சேனை தன்னை வல்விரைந் தெழமுன் சாற்ற

 வந்தரத் தகல மெல்லா மணிதுகிற் பதாகை தூர்ப்ப

 வெந்திரத் தேரு மாவு மிடையிடை களிறு மாகி

 (எறிபத்த நாயனார் புராணம் - 29)

"வில்லொடு வேல்வா டண்டு பிண்டிபா லங்கண் மிக்க

வல்லெழு முசல் நேமி மழுக்கழுக் கடைமுன் னான

பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன்கள்

ணெல்லையில் படைஞர் கொட்புற் றெழுந்தன ரெங்கு மெங்கும் "

 (எறிபத்த நாயனார் புரா - 30.)

"சங்கொடு தாரை காளந் தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரற் பம்பை கண்டை வியன்றுடி திமிலை தட்டி

பொங்கொலிச் சின்ன மெல்லாம் பொருபடைமிடைந்த பொற்பின்

மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி மல்க.''

( - 31)

"தூரியத் துவைப்பு முட்டுஞ் சுடர்ப்படை யொலியு மாவின்

றார்மணி யிசைப்பும் வேழ முழக்கமுந் தடந்தேர்ச் சீரும்

வீரர்தஞ் செருக்கி னாரப்பு மிக்கெழுந் தொன்றா மெல்லைக்

காருடன் கடைநாட் பொங்குங் கடலெனக் கலித்த வன்றே "

( - 32)

      "பண்ணுறு முறுப்பு நான்கிற் பரந்தெழு சேனை யெல்லா

மண்ணிடை யிறுகான் மேன்மேல் வந்தெழுந்ததுபோற் றோன்றத்

தண்ணளிக் கவிகை மன்னன் றானைபின் றொடரத் தானோ

ரண்ணலம் புரவி மேல்கொண் டரசமா வீதி சென்றான் "

( - 33)

என்று கூறப்பட்டிருத்தலானும்,

 

      "மனுவி னூன் முறை வழங்கு கள்விதிகழ் மந்திரக் கிழவர் சூழ்தரப்

பனிமலர்ச் சிகழி வாகை சூடிய பதாகினித்தலைவர் மாடுறப்

புனித வேதியர்க ளாசிமாரிகள் பொழிந்து வந்தருகு மொய்த்திடக்

கனியு மன்பினொடு சிவபுராணமிவை கழறுவோ ரெதிரின் வைகவே"

(கருவூர்ப்புரா - புகழ்ச்சோழச்சருக்கம் - 8)

      நவமணிக்குவை பசும்பொ னிட்டமணி நன்கமைத்து மிளிர்கோசிகங்

கவன வாம்புரவி பாவடிப்பரும் யானைமொய்த்தொளிர் வளங்களு

மவனியின்கணள வில் சுமந்து முறை திறையளந்துமணி முன்றில்வா

யிவர் பொன் மாமவுலி புனையும் வேலாசரெதிர்புகுந்தடி யிறைஞ்சவே"

( - 9)

படங்கொள் கட்செவிக் கரையனப் பாந்தண்மா முடியிற்

கிடந்த பூதலந் தமதடிப் படுத்திவிண் கெழுமி

யிடங்கொள் வெண்மதிக் கவிகையெண் டிசைகளுங் கவிப்ப

மடங்க லாதனத் தினிதுவீற் றிருந்தனர் வளவர்''

( - 10)

எனக் கருவூர்ப் புராணம் புகழ்ச்சோழச்சருக்கத்தில் கூறப்பட்டிருத்தலானும், புகழ்ச்சோழர் அரசரேறென்பதும், படைமுதலிய ஆறுறுப்புகளைச் செவ்வையாய் உடையவரென்பதுந் துணியப்படும்.

 

"மாமதின் மஞ்சு சூழு மாளிகை நீரைவிண் சூழுந்

தூமணி வாயில் சூழுஞ் சோலையில் வாசஞ் சூழுந்

தேமல ரளகஞ் சூழுஞ் சிலமதி தெருவிற் சூழுந்

தாமகிழ்ந் தமரர் சூழுஞ் சதமக னகரந் தாழ"

 

"கடகரி துறையி லாடுங் களிமயில் புறவி லாடு

மடர்மணி யரங்கி லாடு மரிவையர் குழல்வண் டாடும்

படரொளி மறுகி லாடும் பயில் கொடி கதிர்மீ தாடுந்

தடநெடும் புவிகொண் டாடுந் தனிநகர் வளமை யீதால்''

 

எனத் "தொன்னெடுங் கருவூரென்னுஞ் சுடர்மணி வீதி மூதூர் '' வளங் கூறப் படுவதால், புகழ்ச்சோழர் கோல்கோடாவரசர் என்பது கொள்ளப்படும்.

 

அரசர் படுகளத்தைக் குறுகியபோது பகைவர்களைக் காணாது, மிகுந்த கோபத்தோடு, "வென்றவர் யாவ ரென்ற" காலை, பாகர்கள் பணிந்து எறிபத்தரைச் சுட்டிக்காட்டி, "தீங்கு செய்தார் - பரசுமுன் கொண்டு நின்ற விவரெனப் பணிந்து" சொன்னதும், எறிபத்த நாயனாரை நோக்கினார். அவரது சிவ வேடப் பொலிவைக்கண்ட மாத்திரையே கோபந் தணிந்தவராய், " குழையணி காதினானுக் கன்பராங் குணத்தின் மிக்கார் - பிழைபடி னன்றிக்கொல் லார் பிழைத்ததுண் டென்றுட் கொண் " டதனாலும், " மைத்தடங் குன்று போலு மதக்களிற் றெதிரேயிந்த - மெய்த்தவர் சென்றபோது வேறொன்றும் புகுதாவிட்ட - வத்தவமுடையேனானேன் " என்றமையாலும் புகழ்ச்சோழர் அன்பும், அருளும், அடியார் பத்தியும், சிவபத்தியும், பழிக்கஞ்சுங் குணமும் உடையவரென்பது அறியக் கிடக்கின்றது.

 

அதிகனென்னும் மாற்றான் மேற் சென்ற போர்வீரர்கள் அனுப்பிய பொதியை அவிழ்த்தபோது, அதிலிருந்த படைவீரர்களின் தலைகளுள் ஒன்றில் சடையிருக்கக்கண்டு, உடல் நடுங்கி, மனங்கலங்கி, கண்கலுழ்ந்து, உடனே தீமூட்டச் செய்து, அச் சடைத்தலையைப் பொற்றாம்பாளத் திட்டு முடிமேற்றாங்கி, பஞ்சாட்சரத்தைத் தியானித்துக் கொண்டே அக்கினியில் மூழ்கினாரென்றால், அவரது பத்தித் திறத்திற்கு வேறு சான்று வேண்டுமோ?

இராசதண்டம் பிழைத் தீர்வாகும்

 

ஆன்மாக்கள் அநாதியாய், எண்ணில்லாதவர்களாய், பாசத்தடையுடையவர்களாய், அதனால் தடைப்பட்ட இச்சாஞானக் கிரியைகளை யுடையவர்களாய், தம்மைப் பந்தித்த பாச சாத்தி தாரதம்மியத்தால் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகையினர்களாய், அநாதியே பதிபாச சம்பந்தத்தாலான இருவினை யுடையவர்களாய், மாயையில் வசிப்பவர்களாய் உள்ளவர்கள்.

 

முதல்வன் கைம்மாறு கருதாத காருண்யத்தினால், தம தருட்சத்தியினாலே ஆன்மாக்களுக்கு மாயையினின்றும் தநு கரண புவன போகங்களைத் தோற்றுவித்து, அவற்றோடு ஆன்மாக்கள் கூடி வாழுங் காலத்தில், அவர்கள் எறிந்து ஒழுக வேண்டிய விதிகளை உணர்த்த, வேத சிவாகமங்களை அருளிச் செய்தார். அவைகளில் விதிக்கப்பட்டவை நல்வினைகள், விலக்கப்பட்டவை தீவினைகள். நல்வினை தீவினைகள் புண்ணிய பாவங்க ளெனப்படும். அவை ஆன்மாக்களால் ஆர்ச்சிக்கப்பட்டு ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தமென மூவகைப்படும்.

 

சென்ற பிறப்புக்களில் செய்யப்பட்டு மாயையில் கட்டுப்பட்டிருப்பவை சஞ்சிதங்கள். தேகத்தைக் கொடுத்து எடுத்த தேகத்தில் அனுபவிக்கப்படுபவை பிராரத்தங்கள். பிராரத்தங்களை அனுபவிக்கும்போது செய்யப்படுவன ஆகாமியங்கள்.

 

ஆகாமியங்கள் மன வாக்குக் காயங்களினால் தேடப்படுவன. நல்வினைப் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கம் முதலிய மேலுலகங்களிலும், தீவினைப்பயனாகிய துன்பத்தை நரகங்களிலும் அனுபவிக்க வேண்டும். வினைப்பயன்களை எவ்வகையினும் அனுபவித்தே தீரவேண்டும். பாவத்திற்குத் தகுந்ததண்டனைகளை விதிக்க அரசர்களுக்கும், இயமனுக்கும் அதிகாரமுண்டு.


“மண்ணுலகின் முறைபுரியா மடவரைநால் வகைத் தண்டம்
பண்ணிநெறி நடத்திடவும் பலரறியா வகை புரிந்த
வெண்ணில்வினை விதிவழியே நுகர்விக்கு மியல்பிற்குந்
திண்ணியரா மிருதரும ருளராகச் செய்துமென''           (கோயிற்புராணம் - 6)


"வானவர்கோ னுரைத்திரவி மைந்தர்களி லொருவனுக்கு
ஞானவிழி நல்கிநம னற்கதியுங் கொடுத்தகற்றி
யீனமிலா வொருவனுக்கங் கிலகுமணி முடியளித்துத்
தேனகுதா ரணிவித்துத் தேவர்கடங் கைக்கொடுத்தான்.''                (௸ - 7)


"மற்றவருங் கொடுபோந்து வடவரைப்பால் வருவிக்கும்
பெற்றியினா லணைந்து நாற் பெருங்கடலுட் படும்புவிக்குக்
 கொற்றவனாய் மனுநாமங் கொண்டு நடத் தினனடைவே
 முற்றிகழ வருமனுக்க ளொருநால்வர் முடிந்ததற்பின்.''                (ஷை - 8)


“பிணக்கந் தன்னையும் பெற்றவர் தம்மிடைக்
கணக்கி லாரையுங் கள்வர்க டம்மையும்
வணக்கு வான்மன்னன் மற்றையர் தங்களை
யிணக்கு வானர கத்து ளியமனே.''                       (சிவதருமோத்தரம்)


"தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
யத்தன் சிவன் சொன்ன வாகம நூனெறி
யெத்தண்ட முஞ்செயு மறுமையி லிம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.''             (திருமந்திரம்)


"அரசனுஞ் செய்வதீச னருள்வழி யரும்பா வங்க
டரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத்
துரை செய்து தீர்ப்பான் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
நிரயமுஞ் சேரா ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்.''

 (சிவஞானசித்தியார் - சுபக்கம் - 32.)


“ . . . . . . . . . . . . . . . .. . . . . . . .மண்டெரியிற்
 காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய
 மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்தநெறி
 யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே
 நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன்
 மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக
 நஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தா
 லல்ல லுறுத்து மருநரகங் கண்டு நிற்க
 வல்ல கருணை மறம் போற்றி.''                  (போற்றிப்பஃறொடை - 50)


என்னும் பிரமாணங்களினாலும் இது துணியப்படும். புகழ்ச்சோழர் தாம் அரசனாகையினாலும், மண்ணுலகில் தமது பிழைக்குத் தக்க தண்டத்தைச் செய்வோரில்லாமையாலும், தமது பிழைக்குத் தீர்வைத் தாமே தேடிக்கொள்ளாது விடின், தேகாந்தத்தில் காலதண்டத்துக் குட்பட வேண்டுமாகையினாலும், தாமே தமக்குக் கழுவாயை நாடினார்.

 

தமது பட்டவர்த்தனத்தையும், பாகரையும் எறிபத்த நாயனாரே கொன்றாரென அறிந்த மாத்திரையே, ''குழையணி காதினாருக் கன்பராங் குணத்தின் மிக்கார் - பிழைபடி னன்றிக் கொல்லார் பிழைத்ததுண் டென்றுட்கொண்டு'', " இத்தனை முனியக் கெட்டே னென் கொலோ பிழையென்றஞ்சி'', " செறிந்தவர் தம்மை நீக்கி யன்பர் முன் றொழுது சென்றீ -தறிந்திலே னடியே னங்குக் கேட்டதொன் றது தானிற்க - மறிந்தவிக் களிற்றின் குற்றம் பாகரோ டிதனைமாள் - வெறிந்ததே போதுமோதா னருள்செயுமென்று நின்றதும், நிகழ்ந்ததை எறிபத்த நாயனார் அருளக்கேட் டறிந்ததும், மனம் பதைத்து, "அங்கணாடியார் தம்மைச் செய்தவிவ் வபராதத்துக்கிங்கிது தன்னாற் போதா தென்னையுங் கொல்லவேண்டு - மங்கல மழுவாற்கொல்கை வழக்குமன்றி துவாமென்று - செங்கையாலுடைவாள் வாங்கிக் கொடுத்தனர்.'' தமது பிழைக்குப் பிராயச்சித்தத்தை நாடியே அவ்வாறு புகழ்ச்சோழர் செய்தாரெனச் சேக்கிழார் பெருமான், "செங்கையா லுடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வுநேர்வார்" என அருளிச் செய்திருக்கின்றார்.

 

மேலும் புகழ்ச்சோழர் உடைவாளை நீட்டியபோது, எறிபத்த நாயனார் அவரது அன்பிற்கு வியந்து, தம்மிடம் கொடுக்கும் வாளை வாங்காது விடின், அவர் தமதுயிரைத் தாமே துறக்க நேருமென்றஞ்சி, அதைத் தடுக்க உடைவாளை வாங்கிய போது, வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே, யீங்கெனை வாளினாற்கொன் றென்பிழை தீர்க்க வேண்டி, யோங்கிய வுதவி செய்யப் பெற்றன னிவர்பா லென்றே, யாங்கவ ருவந்ததும் அதனை வலியுறுத்துகின்றது.

 

அப்போது அரசனது மகிழ்ச்சியைக்கண்ட எறிபத்த நாயனாரும் அஞ்சி, தம்மால் பட்டத்துயானையும் பாகர்களும் இறக்கக் கண்டும் தனது பிழைக்குத் தன்னையுங் கொல்ல வேண்டுமென நின்றிரங்கும் அன்பருக்குத் தீங்கிழைத்தனனே என உட்கொண்டு, அத் தீங்கைத் தீர்ப்பான், தாமும் தமதுயிரை முடிக்கத் துணிந்ததும் அதனை வலியுறுத்துகின்றது.

 

இதுகாறும் கூறியவாற்றால் அரச தண்டனையும் காலதண்டனையைப் போலவே பிழைத்தீர்வாகும் என அறியவேண்டும். அரசன் முதலியோர் தண்டத்துக்குப் பயந்து, பிழையை மறைத்து இப்பிறப்பில் தப்பினால், தேகாந்தத்திலே முன் செய்த பிழைகளுக்கும் அவைகளை மறைத்த பிழைக்கும் நரகத்திலே இயமனால் தண்டிக்கப்படுவார்கள். ஆகையால் தமது பிழைகளுக்குத் தீர்வை நாடுகின்றவர்கள், எவ்விடத்தும் தங்கள் பிழைகளை ஒப்புக்கொண்டு, அவற்றிற்கேற்ற தண்டனையை அனுபவித்து உய்யக்கடவர்.


 பஞ்சாட்சரபுரம், வாலையாநந்தம்.

 

ஆனந்த போதினி – 1927, மார்ச்சு ௴ முதல்

1928 ௵ மார்ச்சு ௴ வரை

 

 

 

 

No comments:

Post a Comment