Thursday, August 27, 2020

 

எல்லாம் இறைவன் செயல்

 

"என்செயலா லாவதியாதொன்றுமில்லை யினித்தெய்வமே
யுன் செயலேயென் றுணரப் பெற்றேன்......... "

 

1. இஃது அவனருளாலே அவன்றாள் வணங்கி இருளினீங்கி இறைவனோ டிரண்டறக்கலந்த பட்டினத்தடிகளது திருப்பாசுரத்தின்கண் உள்ள இரண்டடிகள். இதன் பொருள்: - உயிராகிய என்னுடைய செயல் யாதொன்றும் இல்லை; எல்லாச் செயல்களும் கடவுளாகிய உன்னுடைய வையே என்பது.

 

2. இவ்வுண்மை உணர்ச்சியிலேயே உயர்ந்தோர் ஓவாயல் உறைத்து நிற்கின்றனர். எம்மனோரோ சிற்சில காலங்களில் இவ்வுணர்ச்சி எய்தப் பெற்று சீக்கிரத்தில் மறந்துவிடுகிறார்கள். அக்காலங்கள் தான் யாவை யோவெனில், எதிர்பாராத தீமைகள் வந்தகாலம், எதிர்பார்த்திருந்த நன்மை எய்தப் பெறாதகாலம். இவை போன்ற காலங்களே என்பது. இக் காலங்களிலுண்டாகும் உண்மையுணர்ச்சியை உடனே மறந்து விடாமல் ஞாபகத்தில் வைத்து அதில் உறைத்து நிற்க வேண்டும் என்னுங் கருத்தை யடக்கியே


 "ஒன்றை நினைக்கினதுவொழிந்திட் டொன்றாகும்
 அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
 நினையாத முன் வந்து நிற்பினு நிற்கும்
 எனையாளு மீசன் செயல்''


என்ற செய்யுளை ஞான மாதாவாகிய ஒளவைப்பிராட்டியார் அருளிச் செய்தார்.

 

3. இனி இவ்வுணர்ச்சி எய்தினார் எய்தும்பயனை ஆராய்வாம்: -

துன்பம் வந்தகாலத்தில் எம்மனோர் இவ்வுணர்ச்சியை எய்தினால் அத்துன்பம் கொஞ்சங் குறைகிறது. இன்பம் வந்தகாலத்தில் இவ்வுணர்ச்சியைப் பெற்றால் இறைவனிடத்துக் கொஞ்சம் அன்பு நிகழ்கிறது. அறிவுடையோர் இவ்வுண்மை யுணர்ச்சியில் எக்காலமும் உறைத்து நிற்பதால் எய்தும் பயன் யாதோவெனில், அவர்கள் மாயை கன்மங்களினின்றும் விடுதலை அடைகிறார்கள்.'' அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யானாகவே அஞ்ஞானகன்மம் பிரவேசியா'' (மெய்கண்ட தேவர்). இவ்வுணர்ச்சியில் எக்காலத்து உறைத்து நிற்கப் பெறுவரென்னில் சிவஞானந்தோன்றிய காலத்து நிற்கப்பெறுவர்.'' ஊன்செய்யாஞானந்தானுதிப்பின் அல்லால் ஒருவருக்கும் யான் எனது இங்கொழியாதன்றே " (அருணந்தசிவாசாரியர்).

 

4. இனி இவ்வளவு பெரும்பயனை அளிக்கவல்ல இவ்வுணர்ச்சியில் உறுதியாய் நிற்கவிடாது கிளம்புந் தடைகளை ஆராய்வாம்.

1. 'ஒளிப்பி னும் ஊழ்வினை ஊட்டாது கழியாது'' என்னும் ஆன்றோர் திருவாக்கின் பொருள் என்ன? என்பது.

2. "தாந்தா முன் செய்தவினை தாமே அனுப் விப்பர்'' என்பதன் பொருள் யாது?

3. ''உயிரின் செயல் யாதொன்று மில்லையென்பது பொருந்து மாற்றோடு பொருந்தவில்லை. என்னை? எல்லாம் இறைவன் செயல், உயிரின் செயல் ஒன்றும் இல்லை எனின் உயிர் கள் துன்புறுவானேன்? அருட்பெருங் கடலாகிய அண்ணல் துன்புறுத் துமா? துன்புறுத்தான். ஆகவே உயிர்கள் துன்புறுதல் அவை தாம் அறி வின்றிச் செய்யும் செயல்களாலேயாம்; என்பதே பொருத்தமா யிருக் கின்றதாகலினென்க.

4. உயிர்களுக்கும் அறிவு, இச்சை, தொழில் உண்டென்பது என்னை? இனி முதற்றடையை ஆராய்வாம்: -

 

(1) அதன்பொருள்: - வினையானது தன்னைச் செய்தவனுக்கு தன் பயனைத் தராமல் தொலையாது என்பது. தொழில் அறிவற்றது. ஆகலின் அது தன்னைச் செய்தவனை நாடிப் பயனளித்தற் கூடாது. ஆகவே பயனளித்தல் வினையின் செயலென்றது உபசாரமேயொழிய அதன் செயலன்று. இறைவனருட்செயலே. உயிர் அறிவுப் பொருள் தானே, அது தன் வினைப்பயனை நாடியடையுமென்று சொல்லலாமோவெனின் சொல்லலாகாது. என்னை? உயிர்சிற்றறிவுள்ளது. அறிவிக்க அறியுந் தன்மைத்தன்றித் தானே அறியுந்தன்மைத்தன்று. மறந்து மறந்து அறியுந்தன்மைத்து. கருவியோடு கூடியயன்றி அறியுந்தன்மைத்தன்று. இத்தன்மைத்தாகிய உயிர் தன் வினைப் பயனைத் தானே அறிந்தனுபவித்தற் கூடாதாகலின் என்க. "செயலணையா சென்று' என்பதும் "அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் றுகராரேல் - ஆர்தாம் அறிந்தணைப்பார் ஆங்கு" (மெய்கண்ட தேவநாயனார்).

 

(2) இனி இரண்டாவது தடையை ஆராய்வாம். அதன் பொருள்: -

 

உயிர்கள் தாம் தாம் செய்த வினையின் பயனைத் தாமேயனுபவிப்பர் என்பது. இப்பொருள் நாமெடுத்துக்கொண்ட பொருளோடு மாறுபடுகின்றது. எங்ஙனமெனில்: - தாந்தாஞ் செய்த வினையெனவே உயிர்கட்குச் செயல் உண்டென்பதாகிறது. "என் செயலாவதியா தொன்றுமில்லை" எனவே உயிர்களுக்கு யாதொரு செயலுமில்லை என்பது பெறப்படுகின்றது. இங்கனம் மாறுபடுகின்றதெனில் அது பொருளன்று. ஆயின் பொருள் யாதோ வெனின் கூறுகின்றாம். உயிர்களின் அறியாமையைப் போக்கி அறிவை விளக்கி அன்பைப் பெருக்கி இன்பை விளக்க வேண்டு மென்றும் பெருங் கருணை கொண்டு ஈசன் அவற்றோடு இரண்டறக்கலந்து அவையே தானேயாய் ஐந்தொழில் நடத்திவருகின்றான். அது எதுபோலவெனின்: - கண்ணானது உருவத்தைக் காணுங்கால் உயிரை இன்றியமையாது.

 

இங்ஙனம் உயிரை இன்றியமையாத கண் உருவத்தைக் காணுங்கால் உயிரின துணர்வு கண்ணொளியெனத் தானென வேற்றுமையின்றி உடனாய் விரவி நின்று கண்ணுக்குக்காட்டிய அதனைக் கண்கண்டதென்றும் கண்ணைய திட்டித்து நின்ற உயிர் கண்டதென்றும் பகுத்தறியவாராது இரண்டன் காட்சியும் ஒன்றனையொன்றுவிடாது அத்துவிதமாகி ஒருங்கே நிகழும். இதுபோலவென்க. இங்ஙனம் நிகழ்கின்ற காலத்தில் கண்ணானது சடப்பொருளாயிராமல் சிற்றறிவுடைய பொருளாயிருக்குமானால் தானே கண்டதாகவும் காட்டியவர் ஒருவரில்லையென்றும் எண்ணி விடும். அது போல் உயிர்களும் சிற்றறிவினவாகலான் தாமே செய்ததாக எண்ணிவிடுகின்றன. இங்ஙனம் எண்ணப்பட்ட வினையென்பதே அதற்குப் பொருளென்க. இக்கருமத்தையே "நான் செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம்'' என்னும் ஆன்றோர் அருள்வாக்கு அறிவுறுத்துகின்றது.

 

(3) இனி மூன்றாவது தடையை ஆராய்வாம்: - இறைவன் தன்னுடைய பேரன்பினால் உயிரின் அன்பை விளக்க அது அறியாமை காரணமாக விருப்பாக மாறுகின்றது. அறியாமையின் குணமாகிய வெறுப்பும் உண்டாகிறது. இவ்விரண்டையும் போக்குவதற்கு இறைவன் இரண்டறக் கலந்து நின்று நல்வினை தீவினைகளை நிகழ்த்திப் பயனை (உணர்த்துகினறான்) ஊட்டுகின்றான். பயன் இன்பதுன்பங்கள்.

 

''அருளினாலுரைத்த நூலின் வழி வாராததன்மஞ் செய்யின் இருளுலா நிரயத்துன்பத்திட்டிரும் பாவந் தீர்ப்பன் - பொருளுலாஞ் சுவர்க்கமாதி போகத்தாற் புண்ணியந் தீர்ப்பான் - மருளுலாமலங்கடீர்க்கும் மருந்திவை வைத்தியனாதன்'' என்னுஞ் செய்யுள் இக்கருத்தை வலியுறுத்துகிறது. இங்ஙனம் இன்பதுன்பங்களை யடையவே அறியாமை தேய்ந்து அறிவு பெருகும். அறிவு பெருகப் பெருக அறிவில் பொருள்களிடத்து இருந்த விருப்பம் சிறிது சிறிதாக நீங்கி உயிர்ப்பொருள்களிடத்து விருப்பம் நிகழும். பின்னவ்விருப்பமும் சிறிது சிறிதாகக் குறைந்து இறைவன்பால் நிகழும். இந்நிலையில் எல்லாம் இறைவன் செயல் என அறிந்தமையால் வெறுப்பே நிகழாது. இதனையே, ''உடுப்பானும் பாலன முண்பானும் உய்வித் தொருவர் தம்மைக் - கெடுப்பானுமேதென்று கேள்வி செய்வானும் கெதியடங்கக் - கொடுப்பானும் தேகியென்று ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று - தடுப்பானும் நீயல்லை யோதில்லைத் தாண்டவனே'' என்னும் ஆன்றோர் செய்யுள் வலியுறுத்து கின்றது.

 

(4) இனி நான்காவது தடையை ஆராய்வாம்: - அது என்னவெனில் ஆன்மாவுக்கும் அறிவு, இச்சை, தொழில் உண்டென்று ஆன்றோர் கூறு கின்றார்களே. அதன்பொருள் என்னை? என்பது அறிவு என்பது அறிவிக்க அறியும் அறிவு. இச்சையென்பது மேலே கூறிப் போந்த விருப்பே. தொழிலென்பது அனுபவித்தல்.

 
      அஃதாவது அவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலிய விடயங்களை யுணரும் உணர்ச்சிக்கண்ணே தன்னியல்பு இதுவென வேறு காணப்படு மாறின்றி அவ்வவ்விடயங்களே போல அதுவதுவாய்ச் செறிந்து நின்றறிதல். அஃதாவது அழுந்தியறிதல். அதுவும் இறைவன் உடனின்றுணர்ந்தாற்றான் நிகழும்.'தொண்டனேன் நினையுமாநினையே', விரும்புமா விரும்பே','தொடருமா தொடரே', நுகருமா நுகரோ', என்றிவ்வாறு முத்தி நிலைபற்றி ஓதிய திருவாக்குகளும் எழுந்தன. இனிச் சிலர் உடல் முதலிய கருவிகளிற் காணப்படும் செயல்களெல்லாம் உயிரின் ஆற்றலால் நிகழ்கின் றன வென்கின்றனர். அவை உயிர்களது ஆற்றலால் நிகழவில்லை. உயிர்களுடன் இரண்டறக் கலந்து நின்று ஐந்தொழில் நடத்தும் இறைவனாற்றலால் நிகழ்கின்றன. பழுக்கக் காய்ந்த இரும்பின்கண் காணப்படும் சுடும் ஆற்றல் இரும்பினதா தீயினதா? தீயினதே. இரும்பினதன்று. அது போலவே இறைவனது ஆற்றலாலேதான் கருவிகள் தொழிற்படுகின்றன. இக்கருத்தை விளக்கவே "நாமல்ல இந்திரியம் நம் வழியினல்லவழி நாமல்ல "என்னுந் திருவாக்கெழுந்தது. இதுபற்றியன்றே மனத்தத்துவ நூல்வல்லாரும்" விரும்பு பலமாகவிரும்பு விரும்பியவாறே ககுவிகள் தொழிற்படும்" என்கின்றார்கள். இக்கருத்தை கோக்கியே ஒளவைப்பிராட்டியார் ஆத்திச்சூடி முதற்செய்யுளில் "அறம் செய் "என்னாமல்" அறஞ் செய விரும்பு' என்று அருளிச் செய்தார்கள்.

 

என்றிதுகாறுங் கூறியவாற்றால் நம்மாலாவதி யாதொன்றுமில்லை, எல்லாம் இறைவன் செயலென உறுதியாகத் தெளிவுறுத்தப்பட்டது. இஃது பேரன்பும் பேரருளும் வாய்ந்த எமதாசிரியரால் நன்குணர்த்தப்பட்டது.

 

ஓம்.


 தீ. அருணாசலம், ப. ஞா. பா. போதகர்.

 தெற்குத்தெரு, குலசேகரன் பட்டினம்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment