Thursday, August 27, 2020

 

எய்ய வந்த காமன்!

(R. P. M. கனி.)

மன்மதன் ஒரு அபேதவாதி. அவனுக்குச் சாதி மதம் கிடையாது. உயர்வு தாழ்வு கிடையாது. அரசனும், ஆண்டியும், தோட்டியும் - தொண்டைமானும் அவனுக்கு ஒன்றுதான். குப்பைமேடும் குபேர அரண்மனையும், பறையர் சேரியும் பார்ப்பனர் தெருவும் அவன் ஒரே கண் கொண்டுதான் நோக்குவான். இத்தகைய காமன் 'ஒரு சரம் கருத்தின் எய்தால்' அம்பு பட்டோர் ‘எரியிடை யிட்ட விறகென' அவஸ்தைப்படுவர்.

இத்தகைய மதனன் கணை ஒரு கன்னியின் மார்பில் பாய்ந்தது. அவன் ஓர் இளவலின்மேல் ஆறாக் காதல் கொண்டாள். அவளைத் தென்றல் தீயெனத் தகிக்கிறது. அவள் உள்ளம் தூண்டிற் புழுவினைப்போல் துடிக்கிறது. கூண்டுக்கிளியைப் போல் அவள் தனிமையால் வாடுகிறாள். மலரும் மணங் கொடுக்கவில்லை. தண்ணிய பன்னீரும் உடம்பை வெதுப்புகிறது. தாயின் வார்த்தைகளும் சலிப்புத் தட்டுகின்றன. கிளிமொழியும்
காதில் குத்தல் எடுக்கிறது. உணவு செல்லவில்லை. மலரணையும் முள்ளணை யாகிறது.

இவ்வாறு மதனன் கணை வருத்துகிறது. காலையில் அரும்பிய காதல் நோய் பகலெல்லாம் போதாகி மாலையில் மலருகிறது. இரவும் வருகிறது. சந்திரனின் தண் கதிர்கள் அவளைச் சுடுகின்றன. ஊரெல்லாம் துஞ்சி விட்டது. மாக்களும் அடங்கினர். பித்தரும் கூடத் தூங்கி விட்டனர். ஆனால் இத் தலைவிக்குத் தூக்கம் வரவில்லை.

'மையிட்ட கண் அருவிவார, வளைசோரக்

கையில் கபோலத் தலம் வைத்து - மெய்வருந்தி,

தேனிருந்த பூங்கணையே தீயாகத்தே மொழியாள்

தானிருந்து செய்வாள் தவம்.'

 

இவ்வாறு ஊன்றிய கையின்மேல் முகத்தை வைத்துக் காதல் தவம் புரிகிறாள் கன்னி. ''தெய்வங்காள்! என் செய்கேன்? ஓரிரவு ஏழூழியாய் மெய்வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்'' என அங்கலாய்க்கிறாள். பொழுதோ போகே னென்கிறது. அவளுக்கோ இருக்கை கொள்ளவில்லை விடியும் குறி யொன்றுங் காணாது விம்முகிறான்:

"ஆழிவாய்ச் சத்த மடங்காதோ? யான் வளர்த்த

கோழிவாய் மண் கூறு கொண்டதோ? - ஊழி

திரண்டதோ? கங்குற் றினகரனுந் தேரும்

உருண்டதோ பாதாளத் துன்?''

 

என மயங்குகிறாள். கடலின் ஒலியும் அடங்கும் வழி காணோம். கோழி கூவும் வகையுமில்லை. சூரியனுடைய தேர் பாதாளத்துள் தான் விழுந்து விட்டதோ என சந்தேகிக்கிறாள். ‘இரவிதான் இறந்து விட்டானோ' எனக் கொதிக்கிறாள்.

இவ்விதக் கஷ்டங்களுக் கிடையே 'அந்தப் பாவி' இரவும் விடிகிறது. இனி காமன் கணைக்கு ஆற்ற முடியாது என நினைக்கிறாள் தலைவி. தான் காதல் கொண்ட இளவலிடந் தூதனுப்பத் துணிகிறாள். பெண்பால் முதலில் தூதனுப்புவது சரியன்று எனத் தெரிந்தும் துணிந்தே தூது விடுக்கிறாள். அவ்வாறு விடுப்பவள் தன்னை அந்நிலைக்குக் கொண்டுவந்த மதனனை நிந்திக்கிறாள்:

"தாயுடுத்த சேலையைக் கவர்ந்தடித்த பாவி

தமையனது குடியிருப்பைத்தான் பறித்த பாவி

தேயுடற்றன் மாமனைத் தன்னானை குளிப்பாட்டச்

சிவனைத்தன் குடைசுமக்கச் செய்த கொடும்பாவி

பேயிடத்து முலைகுடித்த பிதாவின் விளங்கும்

பெரும்பாவி எனைக்கு திரை பிடிக்க வைத்த பாவி.”

 

என்று அவனைத் தூற்றுகிருள். பிறவியிலேயே பெரும்பாவி, தன் சுற்றத்தார்க்கே துரோகஞ் செய்த பாவி எனத் திட்டுகிறாள். மன்மதன் போர் தொடுக்குங் காலத்தே தனது உற்றோர் உரிமைகளைப் பறிப்பதையும் உறவினரை வேலை வாங்கு வதையுந்தான் தலைவி இங்கு பேசுகிறாள். அவளது கூற்று நன்கு விளங்க மன்மதனது போர்க்கோலங் காட்டும் ஒரு பாட்டை மனதில் வைத்துக் கொள்வோம்:

"ஆலைக்கரும்பு சிலை; ஐங்கணைபூ, நாண்சரும்பு

மாலைக்கிளி புரவி; மாருதம்தேர் — வேலை

கடிமுரசம்; கங்குல் களிறு, குயில்காளம்

கொடுமகரம்; திங்கள் குடை,''

 

[சரும்பு - வண்டு, வேலை - கடல், காளம் - கொம்பு.)

சீராரும் கடலுடுத்த நிலமகள் மன்மதன் தாய். தாயின் சேலை மகன் முரசம் 1. அதைக் கவர்ந்தடித்தவ னென்கிறான் தலைவி. நான்முகன் திருமாலின் மகனல்லவா? அதனால் அவன் மன்மதனுக்கு அண்ணனாகிருன். அண்ணன் வாசஞ் செய்வதோ தாமரைமலர். அது தம்பியின் ஐங்கணைகளுள் ஒன்று 2. ஆகவே, மதனன் அண்ணன் குடியிருப்பைப் பரித்தவனாகிறான். மன்மதன் அன்னையான திருமகள், அதாவது திருமாலின் மனைவி திருப்பாற் கடலில் தோன்றினாள். அவளுடன் அக்கடலில் பிறந்தவன் தான் சர்திரன். அதனால் சந்திரன் திருமகளுக்குத் தம்பியாகவும், மன்மதனுக்குத் தாய் மாமனாகவும் ஆகிறான். இத்தகைய மாமனோ (பூரண உருவமானதும்) தேயும் உடல் பெற்றவன். அவனைத் தனது யானையாம் கங்குலை 3 வெளுக்கச் செய்கிறான். ஆகவே, சந்திரன் இவன் யானை குளிப்பாட்டி யாகிறான். முக்கட் கடவுள் சிவன் இவனது குடையைச் சுமக்கிறார். தனது பவனியின் போது விரித்திருக்கும் (பூர்ண) சந்திரனாகிய குடையைச் 4 சுருக்கிச் சிவனாருடைய சென்னியில் தொங்க விட்டிருக்கிறான்
காமன். இவ்வாறு உற்றார் உறவினரை வருத்தும் இவன் இத் தலைவியைத் தனது குதிரை பிடிக்கும்படி செய்து விட்டான். அதாவது இவனுடைய
புரவியான 5 கிளியைப் பிடிக்கும் சிலைக்குக் கொண்டுவந்து விட்டான். ஏன்? கரும்பு வில்லைக் கையில் கொண்டு பூங்கணைகளைச் சுரும்பு நாணிற்றொடுத்து கிளிவாகன மீதிருந்து மந்தமாருதத் தேர் ஊர; குயிலின் குரல் கொம்பூத, கடல் முரசம் முழங்க (பகல் பொழுதில், காலை நேரத்தில்) வந்து போர் தொடுத்து ஓர் இளவல்மேல் காதல் கொள்ளும்படி செய்து விட்டா னல்லவா? ஆகவே தான், நிந்தித்துக் கொண்டு தான் காதல்
கொண்ட தலைவனிடம் கிள்ளையைத் தூதனுப்புகிறாள் தலைவி.

இவ்விதமாய் அனுப்பிய தூது பலன் தருகிறது. அன்று மாலையே அவ்விளவல் அவளை யடைகிறான். அவளுக்கு உச்சி குளிர்கிறது. உடம்பு நேராகிறது. மனதில் இன்பங் குடி கொள்ளுகிறது. குயிலின் இனிய குரலும் தென்றலின் சுகமும் அவளுக்கு இப்பொழுது மெழ்ச்சி பூட்டுகின்றன. ஆனால் கூவுங் குயிலும், வீசுந் தென்றலும், சப்திக்குங்கடலும், வெண் தாழி போல் எழும் சந்திரனும் மன்மதனது பவனியை நினைப்பூட்டுகின்றன.
இன்னும் ஏன் அவன் அவ்வழியாக வருகிறான்? என்று தலைவி எண்ணுகிறாள். கையில் கரும்புவில், மலர் அம்புகள் இவற்றுடன் மந்தமாருதத்தில் மதனன் தோன்றுகிறான் தலைவியின் மனக்கண்முன்னே. அவனை அவள் ஒரு பேடி என இடிக்கிறாள்:

“எய்யவந்த காமா, இனி உனக்கு வேலையில்கென்?

உய்ய வந்தான் தன்னோடும் உறவானேன் ......

பையவே தேரைவிட்டு, வெண்கரும்பைத் தின்றுவிட்டு

செய்ய வந்த போரைவிட்டுப் பூமுடித்துப் போ,”

 

என்று எள்ளி நகைக்கிறாள், "நான் யாரை அடையவேண்டுமென்று நீ நினைத்தாயோ அவரைத்தான் நான் அடைந்து விட்டேனே. இனியும் நீ யேன் தலைகாட்டுகிறாய். உன் தென்றல் தேரைப் போக்கில் விட்டு, வில்லாகிய கரும்பைத் தின்று விட்டு, எய்யவேண்டிய மலர்களைத் தலையில் சூடிக்கொண்டு உன் பூவழகு தோன்றப் போ" என்று பொருள்
படும்படி பரிகசிக்கிறாள்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment