Wednesday, August 26, 2020

ஆபுத்திரன் வரலாறு 


1. பசுவும் சிசுவும்

 

பல்லாண்டுகட்கு முன்னே நமது இந்திய நாட்டின் தென்பாகம் சேர சோழ பாண்டியர் என்ற மூன்று குல அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த மூன்று அரசர்களால் ஆளப்பட்ட நாடு முறையே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று பெயர் பெறும். பாண்டிடியநாடு
வைகை பொருநை முதலிய நதிகளால் நீர்வளமும், சுருளி பொதியம் முதலிய மலைகளால் மலைவளமும், கிழக்கும் தெற்கும் கடலைத் தனக்கு எல்லையாகப் பெற்றிருத்தலால் கடல் வளமும் உடையது. இங்ஙனம் கடல் மலை நதி இவற்றால் சிறப்பு மிக்க நாட்டை ஆண்டு வந்த பாண்டியமன்னர்க்கு மதுரை கொற்கை முதலிய நகரங்கள் தலைமை நகரங்களாக இருந்தன. கொற்கையென்னும் பட்டினம் கன்னியாகுமரிக்கு வடகிழக்கே பொருநையாறு கடலோடு கலக்கும் இடத்திருந்தது.

 

இங்ஙனம் பழந் தமிழ்ப் பாண்டிய மன்னர்க்குத் தலைமை நகரமாக விளங்கிய கொற்கை நகருக்குத் தெற்கே ஒரு காவத தூரத்தில் இடையர் சேரியொன் றிருந்தது. அவ்வூரைச் சுற்றிலும் "கொழு கொழு'' என வளர்ந்த பசும்புற் றரைகளும், வானுற வளர்ந்த மரங்கள் அடர்ந்த தோப்புகளும் இருந்தன. பச்சைப்பட்டு போலக் காட்சிதரும் பசும்புல்லை பசுக்களும் கன்றுகளும் நிரை நிரையாக நின்று மேய்வதும், கன்றுகள் துள்ளிக்குதித்து இங்கும் அங்குமாக ஓடுவதும் மாடு மேய்க்கும் சிறுவர்கள் மரநிழலில் உட்கார்ந்து கதை பல பேசுவதும், ஓடி ஆடித் திரிவதும் அழகிய காட்சியாகும். நீலவானத்தில் வெண் கோடு கிழித்தாற்போல் அப் பசும்புல் தரையின் இடையே பொருநை யாற்றினின்றும் பிரிந்த கால்வாய் ஒன்று செல்கிறது. அதன் தெளிந்த நீர் கூழாங்கற்களில் பட்டு ''சல சல' என்ற சிற்றொலியெழுப்பிச் சென்றுகொண் டிருந்தது. அச் சிற்றூர் மக்கள் களங்கமற்ற நெஞ்சினராய், மகிழ்ச்சி நிறைந்த முகத்தினராய்ச் சிறிதும் சோம்பலின்றித்தத்தம் தொழில்களைச் செய்து கொண்டிருந்தனர். அச் சிற்றூருக்குச் சமீபத்தில் மரங்களும் செடி கொடிகளும் அடர்ந்த தோப்பு ஒன்று உளது.

 

ஒருநாள் பகல் பதினைந்து நாழிகை இருக்கும். கதிரவன் ஆகாயத்தில் தலைக்கு மேலே நின்று தனது கொடிய கதிர்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். வானத்தில் மாசு மறுவில்லை; மேகசஞ்சாரமே கிடையாது. ஒரே நீலகிறம். மாடுகள் அந்தக் கொடிய வெயிலைத் தாங்க மாட்டாமல் அத்தோப்பில் வந்து வரிசை வரிசையாகப் படுத்து அசை போட்டுக்கொண்டிருந்கன்றுகள் தம் நீண்ட அழகிய முகத்தை தத்தம் தாயின் மீது சார்த்தியவண்ணம் கண்களை மூடி உறங்கிக்கொண் டிருந்தன. மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட தத்தும் கதைகளையும் ஆட்ட பாட்டங்களையும் நிறுத்தி, மேல்துணிகளை தரையில் பரப்பிப் படுத்து உறங்கினர். பறவைகள் ஓய்ந்து போன குரலில் கத்துவது செவிக்கு மிக்க இன்பந் தருவதாயிருந்தது. காக்கையின் கத்தல்கூட அப்பொழுது எவ்வளவோ இன்பம் பயப்பதா யிருந்தது. கதிரவன் உச்சியி லிருந்த அந்நேரம் மக்கள் நடமாட்டமும் பெருமுழக்கமும் அடங்கிய இரவுபோலக் காட்சி தந்தது. பறவைகளின் ஒய்ந்தகுரலும், ஆற்றுநீர் கற்களில் மோதுவதால் எழும் "சல சல்'' என்ற சிற்றொலியுமன்றி வேறு ஒலியில்லை. அப்பொழுது அத் தோப்பின் ஒரு பக்கத்தில் மிக மெல்லிய குரலில் ஓர் அழுகையொலி கேட்டது. பசுக்கள் எல்லாம் அயர்ந்து படுத்திருக்கையில் ஒரு பசு மட்டும் அத் தோப்பில் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது. பசுவின் பரபரப்புக்கும் அவ்வழுகைக் குரலுக்கும் நமக்கு ஒன்றும் தொடர்பு விளங்கவில்லை. பறவைகட்கும் விலங்குகட்கும் அறிவில்லையென்று கருதுகிறோம்; ஆனால் ஆண்டவன் திருவருட்
குறிப்பை நம்மால் எங்ஙனம் அறிதல் கூடும்? அப்பசு தன் செவிகளை விரித்து அலைவதைக் காணின் அவ்வழுகை யொலிவரும் இடத்தை யறிந்து அடைவதற்காகத்தான் முயல்கிறதோ என்று நாம் ஊகிக்கக்கூடும். உண்மையும் அதுதான். பலவிடத்தும் அலைந்து திரிந்த அப்பசு இறுதியாக அத்தோப்பின் ஓர் பக்கத்துள்ள செடிகொடிகள் ஒன்றோடொன்று பின்னி பெரிய குடிசையைப் போலக் காட்சிதந்த ஓர் புதரை யடைந்தது. அப் புதருள் ஓர் யானை நுழைந்திருப்பினும் பிறரால் காண முடியாது. கேட்போர் நெஞ்சைக் கனிவிக்கும் அம்மெல்லிய அழுகைக்குரல் அப் புதருளிருந்தே வந்து கொண்டிருந்தது. பசு அப் புதருள் நுழைய நான்கு புறமும் சுற்றிச் சுற்றி வந்தும் வழி காணாது, தன் கொம்புகளால் கொடிகளை விலக்கி உள்ளே நுழைந்தது. ஆ! என்ன வியப்பு! நீலக்கடலில் செந்நிறக்கதிர் விரித்துத் தோன்றும் இளஞ் சூரியனைப்போல, பகலிலும் இருள் தரும் அப் பசுமைப்புதருள், பசும்புல் தரைமேல் படுத்திருந்த ஓர் அழகிய சிறு ஆண் மகவு யால் கதறிக் கொண்டிருந்தது. அம்மகவு அப்பொழுதுதான் பிறந்த குழந்தையோ என்று ஐயுறக்கூடிய நிலைமையில் இருந்தது. அன்பு கனிந்த நெஞ்சால் தூண்டப்பெற்று, அவ்விரக்கமான குரல் வரும் திசையை அறிந்து அவண் அடைந்த அத் தெய்வப்பசு அம் மகவின் அருகில் அமர்ந்து தீஞ்சுவைப்பால் ஊட்டிற்று. பசுவின் பாலமுதைப் பருகிய அம்மகவு பசியொழிந்து, தனது கைகளையும் கால்களையும் அசைத்துப் புன் சிரிப்புக் காட்டி பசு அக் குழந்தையைத் தனது நாவால் மெதுவாகத் தடவியும், உச்சி மோந்தும் தனது கரையற்ற அன்புப் பெருக்கை வெளியிட்டது. எனினும் அச் சிறுமகவு ஓரொரு சமயத்து வாய்விட்டுக் கதறும். பசு அக் குழவியின் அழுகையை மாற்ற வழியறியாது திகைப்புற்று வருந்தும். எறும்போ யாதோ கடித்ததனால் இங்கனம் அழுகிறது போலும்” என்று கருதித் தரையையும் செடி கொடிகளையும் உற்றுப்பார்க்கு தரையில் ஓர் புழு ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டால்; உடனே அதைத் தன் கால் குளம்பால் தேய்த்துக் கொன்று விடும். இறந்த புழுவை இழுத்துச் செல்வதற்கு எறும்புகள் கூட்டங் கூட்டமாய் வந்து சேரும். அவற்றைக் கண்டதும் தனது வாலை வீசி யடித்து அவை யனைத்தையும் நாசமாக்கி விடும். செடியில் ஓணான் முதலியவற்றைக் கண்டுவிட்டால் தனது தலையைச் சாய்த்துக் கொம்புகளை அதற்கு நேராக நீட்டிச் சீறும். அச் சீறலைக்கேட்ட அளவில் அவைகள் ஓடி மறைந்து விடும். இங்ஙனம் ஈ எறும்பு அணுகாதவாறு கண்ணுங் கருத்துமாய் அக் குழந்தையைக் காத்திருந்தது. மரங்களிலும் செடிகொடிகளிலும் புள்ளினங்கள் கூட்டங் கூட்டமாயமர்ந்து இனிய குரலில் பாடுவது அம்மகவு அயர்ந்து உறங்குவதற்கு ஏதுவா யிருந்தது. நெஞ்சை யுருக்கும் தீங்குரல் வாய்ந்த குயில் கூவும் பொழுதெல்லாம் "அந்தோ. இச் சிசுவை ஆதரிப்பார் எவரும் இலரோ!'' என்று அழைப்பதைப்போல் இருக்கும்.

மாலைக் கதிரவன் மரங்களிலும், செடிகளிலும், பசும்புல் தரையிலும் தனது பொன்னிறக் கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். பொருரையாற்றின் நீர் பொன் தகடுபோல் விளங்கிற்று. காக்கைகள் அத் தெளிந்த நீரிற் குளித்துச் சிறகுலர்த்தி, "இறைவனே 1, ஆதரவில்லாத அக் குழவியைக் காத்தருள்'' என்பனபோல் "காகா" என்று கத்திக்கொண்டு சென்றன. மேய்க்கும் சிறுவர்கள் பசுக்களை தத் தம் இல்லிற்கு உரப்பிச் சென்றனர். அவைகள் வரிசை வரிசையாக அசைந்து சென்றன. அவற்றின் கழுத்திற் கட்டிய மணிகள் அமர்ந்த ஒலியை யெழுப்பின. அக் குழந்தையைக் காத்திருந்த பசு அம் மகவினைத் தனியே விட்டுச் செல்ல மனம் வராது அங்கேயே இருந்தது. பசுக் கூட்டத்தினின்றும் இவ்வொரு பசு தனியே பிரிந்து சென்றதை மாடு மேய்த்த சிறுவர்கள் அறியாது மற்றவற்றை ஓட்டிச் சென்ற ஊரை யணுகியதும் அவரவர்களுடைய பசுக்களைத் தனித்தனியே பிரித்து ஓட்ட முயல்கையில் ஒரு பசு இல்லாதிருத்தலை யறிந்து, அப் பசுவிற்கு உரியவன் நெஞ்சு துணுக்குற்று, மீண்டும் மாடுகள் மேய்ந்த இடத்திற்கு வந்து பல விடங்களிலும் தேடிக் காணாது மனத்துயரோடு வீடு அடைந்தான். எவராலும் அறிந்து கொள்ள முடியாத மறைவிடத்தே அப்பசு இருந்தமையால் அச்சிறுவன் எவ்வாறு கண்டு ஓட்டிச் செல்வான்? மற்றவர்களும் அப் பசு இருந்த இடந் தவிர பிற இடங்களில் எல்லாம் தேடிச் சோர்ந்தனர். மிகவும் இளங்கன்றினுடைய தாய் அப் பசு. அங்ஙன மிருந்தும், இறைவனுடைய திருவருட் குறிப்போ யாதோ தன் கன்றையும் மறந்து அச் சிசுவுக்கு உறுதுணையா யிருந்தது. எங்கும் ஒளிபரப்பி உயிர்களுக்கு ஊக்க மளித்த கதிரவன் மேற்கடலுள் மூழ்கினான். பறவைகள் ஒலி யடங்கின. மக்கள் நடமாட்டமும் ஆரவாரமும் ஒழிந்தன. ஒங்கிவளர்ந்த மரங்கள் செறிந்து, பகலிலும் இருள் தரும் அச் சோலையில் கொடிகள் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்து சிறுகுழலைப் போலத் தோன்றிய அப்புதருள் மகவிற்குத் துணையாக ஆ ஒன்றே தனித்திருந்தது. ''அந்தோ! பாவம்! ஆதரவற்ற இ பைங் குழவிக்குத் து துணையாக இப் பசு மட்டும் தனித்திருக்கின்றதே' என மனம் இரங்கி அந்திப் பொழுது எனும் சுந்தரவனிதை அங்குத் தோன்றினாள். அவ்வளவில் சந்திரன் விசும்பில் தோன்றிக் குளிர்ந்த கதிர்களைப் பரப்பினான். நாணமுடைய நங்கையர் ஆடவர் முன் நிற்பதற்கு அஞ்சி மறைதல்போல் மாலை யென்னும் மாது மறைந்தனள். டையர் சேரியிலும், பசும்புல் தரையிலும், பொருநை யாற்றிலும், சோலைகளிலும், வெற்றிடங்களிலும் நிலவு பால்போல் வீசுகிறது. ஆற்றில் கரையிலும், சோலைகளிலும், காடுகளிலும் நரிகள் கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து ஊளையிடுகின்றன. ஆந்தையும் கூகையும் அச்சந்தரும் குரலில் கூப்பிடுகின்றன. அத் தெய்வப்பசு குழந்தை நினைவாகவே இருப்பினும் பசி மிகுதலால் புதரினின்றும் வெளிவந்து பசும்புல்லைச் சிறிது மேயும். உடனே மகவு நினைவுகொண்டு புதருள் ஓடிப்பார்க்கும். அங்கே குழந்தை அயர்ந்து உறங்குவதைக்கண்டு மீண்டும் வெளியே வந்து புல் மேயும். காற்றினால் மரக்கிளைகள் ஒன்றோடொன்று தாக்குண்டு ஓர் சிற்றொலி யெழினும் சரேல்'' எனப் புதருள் ஓடிப் பார்க்கும். அவ்விரவில் அம்மகவு ஓரொரு சமயத்து வீறிட்டு அழும். பசு ஒன்றுஞ் செய்ய இயலாது அதன் அருகிற் படுத்து நாவால் தடவிக் கொடுக்கும். சிறிது தூரத்தே ஊளையிட்ட நரிகள் அப் புதரருகில் வந்து சத்தமிடும். பசு வெளியே வந்து மிக்க சீற்றத்தோடு அவற்றை ஓட ஓடத் துரத்தும். பின்பு அம் மகவின் அருகிற் படுத்துச் சிறிது கண்ணயரும். ஆ! இப் பசுவின் பேரன்புச் செயலை நினைந்து மனங்கரைவதா? அல்லது, ஆண்டவன் திருவருட் செயலை நினைந்து வழுத்துவதா? இங்ஙனம் அப் பசு ஒரு நாளல்ல, இரண்டு நாட்களல்ல; ஏழுநாள் வரை காத்திருந்தது. அறக்கடவுளே உருவெடுத்து வந்தது போன்ற அப் பசுவிற்குத் தனது கன்றின் நினைவு வந்துவிட்டது. ஆனால் மகவையோ தனிமையில் விட்டுச் செல்ல மனமில்லை. இத்தனை நாட்களாக தன் கன்று பால் இல்லாமல் எங்ஙனம் வருந்துகின்றதோ என்ற கவலை அதன் மனதை வருத்தியது. வீட்டிற்குப் போகலாமென்று சிறிது தூரஞ் செல்லும். “ஐயோ! மகவு எங்ஙனம் தனித்திருக்கும்'' என்று ஒரே ஓட்டமாக ஓடிப் புதருள் நுழைந்து பார்க்கும். இளஞாயிறு போன்ற அம்மகவு ஒருவகை நினைவும் இன்றி அழகிய இமைகளை மூடி அயர்ந்து உறங்குவதைக்கண்டு அப் பசு மனங்கரைந்து அசைவற்று நிற்கும். சிறிது பொழுதில் தன் கன்று நினைவு மிக, அரவமின்றி வெளியே வந்து வீட்டிற்குச் செல்ல முயன்றது. ஆனால், கால்கள் தடுமாறின; மனம் கலங்கியது. ஒன்றும் செய்ய வியலாது "அம்மா'' என்று இருமுறை அழைத்தது. அந்தோ! அப் பசுவின் இரக்க அழைப்பிற்குத் துணை வருவார் எவரும் இலர். தன் கன்றின் நினைவால் வீட்டிற்குச் செல்ல முயலும் பொழுது குழந்தையின் எண்ணம் மேம்பட்டுத் தகைந்து விடும். குழந்தையைப் பிரியாது அதனுடடன் இருக்க விரும்பின் கன்றினது வாடி மெலிந்த முகம் அப் பசுவின் மனக்கண்ணில் தோன்றி வருத்தத் தொடங்கியது. என் செய்யும்? "இரண்டு கன்றினுக் கிரங்கும் ஓர் ஆவென்இருந்தார்'' என்று கம்பர் பெருமான் கூறியது இத் தெய்வப்பசுவை மனத்துட் கொண்டுதான் கூறி யிருக்க வேண்டும். உத்தமச் செல்வி தமயந்தியை அச்சந்தரும் நள்ளிருளில் தனியே விடுத்துப் பிரிந்து செல்ல முயன்ற நளனுடைய மனநிலையைப் புகழேந்திப்புலவர்,


"போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டே கும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின்- தோயல்
கடைவார் தம் கைபோலும் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்


என்று
கூறியதனோடு ஒப்புமை யுடையதாயிற்று இப் பசுவின் நிலையும். இங்ஙனம் செல்லவும் மீளவுமாகவே இருந்த பசு தன் கன்றை ஒருமுறை பார்த்தாவது மீளலாம் என்று மனத் துணிவுகொண்டு அத் தோப்பினின்றும் நீங்கிச் சிறிது தூரம் சென்று, ஆங்கோர் சிறு வழியை அடைந்தது. அடைந்ததும் அதற்குமேல் செல்ல வியலாது அதன் கால்கள் தடுமாறின; மனத்துணிவு தளர்ந்தது. அச் சிறுவழியில் நின்று கொண்டே ''அம்மா, அம்மா'' என்று பலமுறை கதறிற்று. நெடுந் தூரத்தே இருவர் அவ்வழியே வருவதை அப்பசு கண்டது. அவ்வளவில் அதற்குத் தன் கன்றை வீட்டிற் சென்று கண்டது போலப் பெருமகிழ்வு பிறந்தது.

 

2. ஆபுத்திரன்.

 

வயனங்கோடு என்பது பாண்டிய நாட்டில் உள்ள ஓர் சிற்றூர். அதில் வசிப்பவரிற் பெரும்பான்மையினர் பார்ப்பனர்கள். இளம்பூதி யென்பவர் அச்சிற்றூரில் வாழும் ஓர் பார்ப்பனர். தான் பிறந்த குலத்திற்கு ஏற்ப ஒழுக்கமும் இரக்கம் உள்ள நெஞ்சும் உடையவர். எனினும் புத்திரப் பேறு இல்லாதவர். இக் குறையால் வேதம் ஓதித் தெளிந்த விப்பிரராகிய இளம்பூதியும் அவர் மனைவியும் மனம் வருந்தி, இறைவன் திருவருளை வேண்டி எத்தனையோ கோவில்களை வலம் வந்தனர். எத்தனையோ புண்ணிய துறைகளிற் சென்று நீராடினர். ஆயினும அவர் நினைத்த பயன் பெற்றன ரில்லை. ஒருநாள் அவரும் அவர் மனைவியும் தமது உறவினர் ஒருவரின் ஊருக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவ் விருவரையுந்தான், அப் பசு நெடுந் தூரத்தே கண்டது. அவர்கள் தனது அருகில் வந்ததும், அவர்கள் முகத்தைப் பார்த்து இரக்கமான குரலில் ''அம்மா'' என்று கூப்பிட்டது. அத் தம்பதிகள் இருவரும் ஒரு பசு இங்ஙனம் தங்களைப் பார்த்து அழைப்பதை யறிந்து வியப்புற்று நின்றனர். ஆனால் அப் பசு அங்கு நிற்காமல் அவர்களைப் பார்த்து "அம்மா, அம்மா'' என்று கூப்பிட்டுக் கொண்டே தான் வந்த வழியே மீண்டும் அத் தோப்பை நோக்கிச் செல்ல முயன்றது. அவ் விலங்கின் குறிப்பைப் பகுத்தறிவு பெற்ற அவர்கள் அறிந்து கொள்ள முடியாது சிறிது திகைப்புற்றுப் பின்னர் தம் ஊரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். உடனே பசு அவர்கள் அருகில் விரைவில் வந்து, அவர்களை அண் ணாந்து பார்த்துக் கதறிற்று. ''ஐயோ, இப் பசுவுக்கு என்ன நேர்ந்தது? நம்மை என்ன செய்யச் சொல்லுகிறது? ஒன்றும் புலனாக வில்லையே' என்று அதன் இரக்கமான நிலையைப் பார்த்து வயிறு பிசைந்து நின்றனர். அவர்கள் மேலே செல்லாது நின்றதும் பசு மீண்டும் தோப்பை நோக்கிச் சிறிது தூரம் சென்று, அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டது. அவ் விருவரும் ''நாம் என் றும் காணாத புதுமை இது!” என்று தம்முள் பேசிக் கொண்டு அப் பசு நின்ற இடத்தை யடைந்தனர். அவ்வளவில் அப்பசு இன்னும் சிறிது தூரம்
சென்று இவர்களைப் பார்த்து நின்றது. அவர்கள் பசுவின் குறிப்பை யறிந்து அதன் பின் தொடர்ந்து சென்றனர். பசு தோப்பை யடைந்து அங்குள்ள அப் புதரின் வாயிலருகில் நின்றது. "நம்மை ஏய்த்துக் கொன்று உண்ணு வதற்காகப் பேயோ பூதமோ இங்ஙனம் பசுத்தோல் போர்த்து வந்தது போலும்!'' என்று எண்ணி அவ் விருவரும் அஞ்சிய நெஞ்சினராய் உடல் விதிர்ப்புற நின்றனர். அவர்கள் அசைவற்று நிற்பதை யறிந்து பசு புதரை நோக்கிக் கதறிற்று. அவ்வளவில் அவ் விரக்கமான குரல் - முன்பு இப் பசுவின் மெல்லிய நெஞ்சை இளக்குவித்த தாழ்ந்த அழுகைக் குரல் புதருள்
நின்று எழுவதைச் செவியுற்றனர் இளம்பூதியும் அவர் மனைவியும். “புலியைப் பொறியாற் பிடித்துக் கொல்வது போல நம்மை இப் புதருள் நுழைவீத்துக் கொல்ல விரும்புகின்றதோ இம் மாயப் பசு !" என ஐயுற்றனராயினும், இளம்பூதி யென்னும் அவ் வந்தணர் “விளைவது விளைக" என ஒருவாறு மனத்துணிவு கொண்டு, தன் மனைவியைப் பார்த்து 'நங்காய், நன்தேவரினும் வருக, அன்றித் தீதே விளையினும் விளைக; எங்கும் நிறைந்து ஒளிரும் இறைவன் இங்கு நம்மைக் காவாது விடான்; ஆதலின் நீ அச்சமற்றிரு; நான் உள் நுழைந்து பார்த்து வருகிறேன்'' என தன் மனைவியைத் தேற்றி, பசுவைப் பின்புறம் திரும்பிப் பார்த்த வண்ணமே புதருள் நுழைந்தார். அங்கே பொற்சிலை போன்ற அந்த இளமகவைக் கண்ணுற்றதும் அவர் தன்னையும் மறந்தார்; அப் பசுவையும் மறந்தார். அம் மகவைத் தன் இரு கையாலும் எடுத்துக் களிப்பு மிகுதியால் "நம்பி பிறந்தான், நம் சுற்றம் தழைக''
என்று பெருங் குரலாற் கூவினார். அம் மகிழ்ச்சிப் பேரொலியைக் கேட்ட அவர் மனைவி
இன்ன தென்று அறியாது, பசுவையும் மதியாது புதருள் விரைந்து நுழைந்தாள். அங்கே ஓர் அழகிய ஆண் மகவு தன் கணவன் கையில் இருக்கக் கண்டாள். கண்டதும் பெருமகிழ்வோடு) “இவன் ஆ மகனல்லன், என் மகனே என்று கூறித் தனது கொழுநனிடத்திருந்த குழந்தையை வாங்கித் தன் மார்பில் அணைத்துக் கொண்டாள். இப் பெரு மகிழ்ச்சியினிடையே அத் தெய்வப் பசு தன் இளங்கன்றை நினைந்து சென்று விட்டது. கரையற்ற மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கிய அத் தம்பதிகள் தமக்கு இவ் வரும் பேறு அளித்த அவ் வருமைப் பசுவைப் போற்றி வணங்கள் வேண்டுமெனப் புதரினின்றும்
வெளிவந்த து பார்த்தனர். அப் பசு அங்கு இல்லாததைக் கண்டு நெஞ்சு திடுக்கிட்டனர் '' அந்தோ! என்ன தவறு புரிந்து விட்டோம்? நம் பெருமான் தான் இங்ஙனம் பசு வேடங் கொண்டு நம்மை ஆண்டருளினன் போலும்! அப் பரம கருணாகரனது மெய்த்திருவுருவை நம் புல்லிய கண்களாரக் கண்டு களிக்கப் பெற்றோ மில்லையே?'' என்று பிராமணரும் அவர் மனைவியும் மனம் பதறினர்.


''ஒன்றாகி மூலத் துருவம் பலவாகி

உணர்வும் உயிரும் பிறிதாகி ஊழி

சென்றா சறுங்காலத் தந்நிலையதாகி

சிறந் துலகந் தானாகிச் செஞ்சவே நின்ற

நன்றாய ஞானத் தனிக்கொழுந்தே! எங்கள்

நவை தீர்க்கும் நாயகமே! நல்வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயற்பேரைக் காய்தி

நிலையில்லாத் தீவினையும் நீதந்த தன்றே.''

 

"தாய் தன்னை யறியாத கன்றில்லை தன்கன்றை

ஆய் அறியும் அதுபோல உலகின் தாய் ஆகின், ஐய!

நீயறிதி எப்பொருளும் அவை உன்னை நிலையறியா

மாயை இது என் கொலோ? வராதே வரவல்லாய்!”

 

“நீ ஆதிபாம்பரமும் நின்னவே உலகங்கள்

ஆயாத சமயமும் நின் அடியவே அயலில்லை

தீயாரின் ஒளித்தியால், வெளி நின்றால் தீங்குண்டோ?

வீயாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ?"

 

என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர் இளம்பூதியந் தணர். அவர் மனைவி வன் திருவருட் செயலை நினைந்து நினைந்து நெஞ்சுருகிக் கண்ணீர் உகுத்து நின்றான். பின்னர் இருவரும் களிப்பு மிக்க உள்ளத்தராய் இறைவன் திருவருளைப் புகழ்ந்து பேசிக் கொண்டே தமது ஊர் சென்று இல்லம் அடைந்தனர். அவ் வூராரனைவரும் இவர்கள் அடைந்த இப் பெறற்கரும் பேற்தை யறிந்து, அவர்களுடைய நல்வினையைப் புகழ்ந்து பேசிக் கொண்டாடினர். பின்பு ஒரு நல்ல நாளில் தம் மகனுக்குப் பெயர் சூட்ட விரும்பித் தம் உறவினர் பலரையும் அழைத்தனர் இளம்பூதியும் அவர் மனைவியும். இறைவன் ஆ உருவோடு வந்து இப் புத்திரனை யளித்தமையால் இச் செல்வனை 'ஆபுத்திரன்' என்ற திருப்பெயரால் அழைத்தலே தக்கதெனக் கருதி அப்பெயரைக் சூட்டி, விருந்து செய்து விழாக் கொண்டாடினர்.

 3. மாதும் வேதியனும்.

 

வயனங்கோடு என்னும் அச்சிற்றூர்க்குத் தென் திசையில் ஒரு மங்கை நல்லாள் வந்து கொண்டிருந்தாள். பொன்னைப் போன்ற நிறமும் மின்னைப் போன்ற இடை
டையும் உடையவ ஆற்றிலே நீர் அறுத்துச் சென்றதால் உண்டான கருமணல் ஒழுங்கு போன்ற நீண்டு செறிந்த கரிய கூந்தலை யுடைய அவள் முழுமதியன்ன திருமுகமண்டிலம் பொலிவிழந் திருந்தது. வேலை செய்து தடித்துப் போகாமல் அவள் கரங்கள் பூவினும் மென்மையவாயிருந்தன. பஞ்சினும் மெல்லிய அவள் சிற்றடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த அச் சிறு வழியில் நடக்கக் கூசின. அவைகள் செந்நிறம் பெற்றுத் திகழ்ந்தமையால் இக்கொடிய வழியில் அவள் நெடுந்தூரம் நடந்து வந்திருத்தல் வேண்டும். அவளது உடையும் பிறவும் அவள் உயர்ந்த நிலையில் வாழ்ந்தவள் என்பதை வெளியிட்டன. இத்தகைய அம்மாது இக் கொடு வழியில் நெடுந்தூரம் தனிமையாக நடந்துவர நேரிட்ட நிலைமை மிகவும் இரங்கத்தக்கது. அந்தோ! உலகில் பொருளைக் கவரும் கள்வரினும், அழகை நுகர்தற்கு விரும்பும் சோரர் மிகப் பலரன்றோ? இஃது அறிந்திருந்தும் அவள் தனித்து வதற்கு நேர்ந்த காரணம் யாதோ? அவள் கணவன் கடிந்தமையோ, மாமியின் வஞ்சனையோ? அவனது இன்னலுக்கு உற்ற காரணம் இன்னதென்று துணிந்து கூறுவதற்கு இல்லை. இங்ஙனம் அவள் அத்தனிவழியே வந்துகொண்டிருக்கைபில் அந்தணர் ஒருவர் அவளைச் சந்தித்தார். அம்மா, நீயார்? பிராமண குலப் பெண்போலக் காணப்படுகின்றனையே. மங்கைப் பருவமுடைய உனது கண்கள் மூப்படைந்தவர்களது கண்களைப் போல குழி விழுந்திருக்கின்றன; முகமோ பொலி விழந்து வாட்டமுற்றிருக்கின்றது. கருத்துச் செழித்த கூந்தல் கற்றை கற்றையாகச் சடைபிடித்து இருக்கின்றது. ஐயோ! உணவு கண்டு, பல நாட்களாயின போல உன் நிலை தோன்றுகிறதே! நீ இந்தக் காட்டில் தனியே வரலாமா?'' என்று அப்பெண்ணைப் பார்த்து மனம் உருகிக்கேட்டார். அதற்கு அவள், ''ஐய, யான் ஓர் கொடும்பாவி; நான் புரிந்த தீவினைக்குத் தக்க தண்டம் அனுபவிக்கிறேன். ஈசா! அடியேன் செய்கவினையை மன்னித்து அருளுவையா?" என்று கூறிக் கண்ணீர் உதிர்த்தாள்.

 

"மகளே, மனம் வருந்த வேண்டாம்; உலகில் தீவினை புரியாதவர்யாவர்? நம்மை யெல்லாம் ஆட்கொண்டருளும் பரம்பொருளே குற்றமற்ற பொருள்; நாம் அனைவரும் குற்றம் புரியக் கூடியவர்களே; குற்றம் புரியாதவர்கள் தாம் இறைவன் திருவருளுக்குச் சொந்த மாவார்கள் என்றால் உலகிற்பெரும்பாலானவர்கள் அவன், அருளுக்கு விலக்கானவர்களே யாவர். 'குற்றம் பார்க்கில் சுற்றமில்லை' என்பது நம் போன்றவர்க்கு ஏற்பட்டதாயினும், ஆண்டவன் தனது கருணைப் பெருக்கால் அனைவரையும் அவர்கள் செய்த குற்றத்தை மன்னித்தும் பாதுகாப்பான். உலகில் நிகழ்வன அனைத்தும் இறைவன் வியமனத்தால் நடப்பனவேயாகும். ஒருவனைத் தீவினையாளன் என்றால் அத்தீவினை ஆண்டவன் தந்ததே யல்லவா.? ஆதலின் அவன் அனைவரையும் காவாது விடான். மிகக் கொடியவர்களாகிய இரணியனையும் இராவணனையும் அல்லவா தனது கருணைப் பெருக்கால் மேலுலகில் நல்வாழ்வு பெறச் செய் ஆகையால் நீ மனம் வருந்தி உடல் மெலிதல் வேண்டாம். நீ யார் என்பதை எனக்கு அறியாவிடினும், உனக்கு நேர்ந்த துன்பம் இன்னது என்பதையாவது என்னிடம் கூற இசைவாயா?"


எவ்வாறு சொல்வேன்? ஐயோ! அந்தப் பெருங்கடலில் – அகன்று பரந்து கண்ணிற்கு எட்டியவரை ஒரே நீல நிறமாகக் காட்சி தந்த அவ்வாழ் கடலில் வீழ்ந்து எனது புல்லிய உயிரை மாய்த்துக் கொள்ளாது நாணமின்றி இன்னும் உயிர் தரித்து இருக்கின்றேனே! நினைக்கும் பொழுதே உள்ளம் பதறுகிறது. உடல் நடுங்குகிறது. தென்கடல் துறையிலே, அக் குமரி முனைக்கரையிலே பாவி நெஞ்சம் பட்ட துயரை எவ்வாறு கூறுவேன்? அன்பு மிக்க பெரியவரே, கடலைப்பற்றிக் கேள்வி யன்றி, கண்ணால் கண்டிராத யான் இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தென்கடல் துறை சேர்ந்தேன். பரந்து அகன்ற நீர் நிலையைக் கண்டேன். அப்பெருங் கடற்கரையிலே நான் ஒருத்தியே தனித்திருந்தேன். அக்கடலின் காட்சி அடிச்சிக்கு அச்சம் ஊட்டுவதா யிருந்தது. •ஆண்டவனே, நான் பேதை; மதியற்ற தன் மையால் தவறு செய் துவிட்டேன். அதனால் இதுவரை ஏழை அனுபவித்த
துயர் போதும்; பாவியை ஆட்கொண்டருள் என்று கூறிக் கடல். நீரில் முழுகப்போனேன். ஐயோ! என்ன சொல்லட்டும்! 'சீ பாவி, இப்புனித நீரில் உன் அழுக்கு உடலை நனையாதே' என்று கூறுவதுபோல் அலைகள் பேரிரைச்சலோடு வந்து எளியளைக் கரைமருங்கிலே தள்ளிற்று.” இறைவனே! கல்லுக்கும் உயிர் தந்த கருணாகரன் அல்லவா நீ? எழை செய்த பிழையை மன்னித்து ஆட்கொண்டருள்' என்று கடவுளை வேண்டி, அலை ஓய்ந்த பின்னர் முழுகலாமென்று காலையிற் சென்றவள் மாலைவரை காத்திருந்தேன். நாழிக்கு நாழிகை கடல் கொந்தளிப்பு அதிகமாயிற்று. எனக்கு அச்சம் மிகுந்தது. 'சரி, இனி இப்பூவுலகில் பாவியேன வாழ்தல் இறைவனுக்கு விருப்ப இல்லை போலும்' என்று கருதி வரும் பிறவியிலாவது அடிச்சிக்கு நல்லறிவு தந்தருள்' என்று கூறிக் கடலில் விழப்போனேன். பேரிரைச்சலோடு ஒன்றன் பின் ஒன்றாக மலையடுக்குகள் போல விரைந்து வந்த பேரலைகள் என்னை ஒரே யடியாகத் தூக்கிக் கரையில் வீசியெறிந்தது. 'ஏ பாவி, கொலைகாரி! உன் கொலைப் பாதகத்தை என்னிடம் வந்தா தீர்க்க முயல்கமுய?' என்று அதட்டுதுபோல் இருந்தது அக்கடல் முழக்கம்! பழைய செயல்கள் அனைத்தும் என் மனக்கண்ணில் தோன்றின. 'பெருங்கடலே! நான் கொலைகாரிதான்! சிகக் கொலை செய்தவள் அல்லவா நான்! என்னை நீ மன்னிக்க மாட்டாய்' என்று கூறி மூர்ச்சையானேன். பின்பு நெடுநேரங் கழித்துக் கண்விழித்தேன். எங்கும் திணிந்த காரிருள்! 'ஜோ' என்ற கடல் ஒலி மட்டும் நிற்கவில்லை. எனக்கு இன்னது செய்வதென்று தோன்றவில்லை. ஐயோ! அந்தச் சிறுமகவு - பொற்பதுமை போன்ற களங்கமற்ற நெஞ்சுடைய அவ்வாண் மகவு .......... எனக்கும் நற்கதியுண்டா?” என்று மேல் ஒன்றும் கூற முடியாதவளாய்ச் சோர்ந்து வீழ்ந்தாள்.

 

“இதென்ன, 'கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதைபோல்' தனித்து வருந்தி வந்த இவள் நிலையை அறிய முயல, அதற்குள் இவள் இங்கேயே உயிரை விட்டுவிடுவாள் போலத் தோன்றுகிறதே'' என் அவர் விலவிலத்து, அருகில் உள்ள நீர் நிலையிற் சென்று நீர் சிறிது கொணர்ந்து அவள் சோர்வை நீக்கினார். அம்மங்கை நல்லாள் சோர்வு தீர்ந்து எழுந் நின்றாள். “அம்மா, நீ ஒன்றும் பேசவேண்டாம். எனது வீட்டிற்கு வந்து உணவு அருந்திக் களை தீர்ந்து போகலாம் வருகிறாயா?'' என்றார் பெரியவர்.

 

''ஐயா, உங்கள் பேரன்பிற்கு நான் பாத்திரமாகியது பெரும் பாக்கியமே. எனினும், பாவி நான் உங்கள் புனித இடத்தில் கால்வைத்தல் தகாது; ஆனால் தீவினை புரிந்த எனக்கு நற்புத்தி கிட்டுமா? இதை மட்டும் கூறுங்கள்.'

 

"தீவினை தீவினையென்று பேசவேண்டாம்; ஆனால், என்னவோ ஆண்மகவு என்று கூறினாயே, அதன் விவரம் என்ன?''

 

''ஐயோ, அதுதான் கான் செய்த கொடுமை! எங்ஙனம் உய்வேன்? எவ்வாறு சொல்வேன்?" என்று மீண்டும் அழுதாள்.


''சொல்ல வேண்டாம், சொல்லவேண்டாம்'' என்றார் அவ்வந்தணர்.

''தந்தை போன்றவரே, தங்களிடத்து உற்றது கூறலில் குற்றமில்லை. வடக்கே வாரணாசியென்னுல் ஊரில் வேதம் அறிந்த வித்தகராகிய ஆரண உவாத்தி அபஞ்சிகன் மாசற்ற புகழுக்கு மறுவுண்டாகப் பிறந்த பாவியேன் மனையாள் ஆனேன். எனது கணவரின் குறிப்பறிந்து, அவர் குணத்திற்கு இயைய நடந்துவர்தேன். அவருடைய ஒப்பற்ற அன்பிற்கும் உரியவனானேன். இங்ஙனம் சில வருடம் மனைவாழ்க்கை நடத்தி வருகையில், பேதைமதியுடையேன் ஒரு பெருந்தவறு புரிந்துவிட்டேன். எனது ஆருயிர்க் காதலர்க்கு அன்புகனிந்த வடிவினர்க்கு உரிய எனது உடலை மாசு படுத்திக் கொணடேன். ஐயோ! அந்தப் பாவி - பழியஞ்சா நெஞ்சன் என்னை வலிந் கெடுத்துவிட்டான். என் செய்வேன் எழை? கண்ணீரும் சம்பலையுமாய்க் கணவரிடம் முறையிட்டேன். அவரோ உடல் விதிர் விதிர்த்தார். 'எனது குலப்பெருமை இன்றோடு கெட்டதே' என்று பெருமூச் செறிந்தார். இங்கும் அங்குமாக வெறி கொண்டவர் போல் அலைந்தார். இறுதியாகத் தனக்கு உரிய நண்பர்கள் சிலரிடம் முறையிட்டார். அவர்கள் அப்பழிகாரனைத் தண்டிக்க வேண்டுமென ஆர்ப்பரித்தனர். 'வேண்டாம், வேண்டாம்; யான் புரிந்த தீவினையே இவ்வாறு விளைந்துளது; ஆதலின் தண்டனைக்கு உரியவன் யானே' என்றார் எனது கணவர். மனம் நடுங்க மறைவிடத்தே நின்று கேட் இக்கொண்டிருந்த எனக்கு எவ்வாறிருக்கும்? எனது உயிர் தத்தளித்தது; கண்கள் பஞ்சடைந்தன; நா உலர்ந்து விட்டது. ஒன்றும் அறியாதவளாகி அவர்கள் முன்னிலையில் ஓடி 'ஐயோ! எனது கொழுநருக்கு ஒன்றும் நோதவாறு காப்பாற்றுங்கள். இனி யான் உயிரோடு இருக்குமட்டும் எனது தலைவருக்கு நேர்ந்த இப்பழிச்சொல் மாறாது. ஆதலின், எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்'' என்று ஒரே பிடிவாதமாகக் கூறினேன். அதற்கு அவர் தன் தற்கொலையா? அது மிகக் கொடுமையாயிற்றே; வேண்டாம்' என்று எவ்வளவோ ஆறுதல் மொழிகள் எனக்கும் எனது கணவருக்கும் கூறினர். மேலும் இப்பழியும் பாவமும் நீங்க ஒரு வழியுளது; அது தொன்று தொட்டு இன்றுவரை நடந்து வருகிறது; உடல் மாசுபட்ட சாலி மட்டும் கன்னியாகுமரி சென்று நீராடி இறைவனைத் தொழுது வரவேண்டும்' என்று அமைதியுடன் *-றினர். இதனாலாவது எனது தலைவர் மன அமைதியோடு இருக்கலா மல்
*வா? அது கருதி எனக்குப் பெருமகிழ்வு பிறந்தது. ஆனால் எனது கணவர் மனம் தடுமாறினார். மற்றவர்களின் அறவுரையும், என்னுடைய இழிநிலையும் ஒன்று சேர்ந்து அவர் மனதை ஆற்றுவிக்க, அதனால் ஒருவாறு துணிவு கொண்டு என்னைப் பிரிய மனம் இசைந்தார். எனக்கு நேர்ந்த இழிதகைமை யால் முதலில் எனது ஊரைவிட்டுச் செல்லும் வரை எளியேற்கு எவ்வகைத் துயரும் அச்சமும் தோன்றவில்லை. பின்பு எனது மனதில் உதித்த எண்ணகன் அளவிறந்தனவாகும். மீண்டும் எனது ஆருயிர்க் கணவரைக் கண்டு மகிழும் பேறு பெறுவேனா? முன்பு போலவே என்மீது கரையற்ற அன்பு காட்டி மகிழ்வரோ? எனது தலைவர் வாழும் அவ்வூரை - வாரணாசி யென்னும் அப்புனித இடத்தை மீண்டும் அடையப்பெறுவேனா? அந்த ஊர் இறைவன் வாழும் மேல் உலகத்தினும் சிறப்புடையதாகும்' என்று பலவாறு ணமிட்டுக்கொண்டே, அங்குத் தங்கிவருகையில் கொற்கை நகருக்குத் தெற்கே இடையர் சேரிக்கு அருகில் வரும்பொழுது எளியேற்கு அயர்வு தோன்றியது. வயிற்றில் ஒருவகை நோவு மிகுந்தது. மேல் நடக்க இயலாதவளானேன். மிக்க துன்பத்தோடு ஓர் சோலையை அடைந்து, அதன் ஓர் பக்கத்தில் இருந்த புதர் மறைவை அடைந்தேன்.
சிறிது பொழுதில் எனக்கு ஒருவகை மயக்கம் உண்டாயிற்று. கண்கள் சோர் வடைந்தன நா வரட்சியுற்றது. தலையில் ஒரு பெரிய சுமையை வைத்திருப்பதுபோலத் தோன்றியது. உலகமே என்பமயமாக காணப்பட்-து. அறிவு முழுவதும் இழந்தேன். இவ்வாறு எவ்வளவு பொழுதுவரை இருந்தேன் என்பது அறியேன். யான் எனது அறிவுவரப் பெற்றுக் கண்விழித்துப் பார்க்கையில், ஓர் ஆண் சிசு என்து பக்கத்தில் தரையில் கிடந்து கதறிக்கொண் டிருந்ததைக் கண்டேன். உடனே அம்மகவை யெடுத்து உச்சிமோந்து பால் தந்து பசும்புல் தரையில் கிடத்தினேன். ஐயோ! அப்பெறற்சரும் பேற்றை - விலையற்ற மணியை-உயிரினும் சிறந்த அவ்வாண்மகவை அங்கேயே விட்டுவிட்டுப் பாவியேன் குமரியாடச் சென்றேன். ஒரு பகலும் நிறையாத அச்சி சுவைத் தனியே, நரி முதலிய தீய விலங்குகள் ஊடாடித்திரியும் அச்சோலைப் புதருள் விடுத்துச் சென்ற இரக்கமில்லாத தீவினையேற்கும் நற்கதியுண்டா? எனக்கு எக்கதி வாய்ப்பினும் வாய்க்கட்டும். அது குறித்து ஏழையேன் வருந்தவில்லை. ஐயோ! அந்தத் தங்கப் பதுமை எவ்வாமூயிற்றோ?" என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதாள்.

 

மனதை உருக்கும் இவ்வரலாற்றை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த அவ்வந்தணர், ''அழாதே! அழாதே! உனக்கு ஓர் நற்செய்தி கூறப்போகின் றேன். நீ அச்சிசுவை எங்கே விட்டுச் சென்றாய்?" என்று வினவினார். இடையர் சேரிக்கு அருகேயுள்ள ஓர் சோலைப் புதரில்'' என்று தேம் பியவண்ணமே கூறினாள்.

 

"அம்மா, அழாதே! உன் மகவுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை; உயர்ந்த இடத்தில் செவ்விய முறையில் வளர்க்கப்பட்டு வருகிறது. நீ எனது வீட்டிற்கு வந்து சோர்வு தீர்ந்தபின் போகலாம் வா.'

 

"என் மகவு உயிரோடு இருக்கிறதா? யார் எடுத்து வளர்க்கின்றனர்?"

 

“அது பற்றி நீ சிந்திக்கவேண்டாம்; நம் வகுப்பினர் ஒருவர் வீட்டில் கான் வளர்ந்து வருகிறான்.

 

"அங்ஙனமாயின் அறிவிலியாகிய என்னைக் குறித்து நீங்கள் கவலையுறவேண்டாம். எனது கணவரைக் கண்டு, அவரது அன்பைப் பெறாதவரை எளியேன் மனம் அமைதியுறாது. ஏழைக்கு விடை கொடுங்கள். தந்தையே, தங்கள் பேரன்பிற்கு வணக்கம். இறைவனே, அம்மகவுக்கு நீண்ட ஆயுளும் அறிவம் தந்து காப்பாற்றவேண்டுகிறேன்'' என்று கடவுளை வணங்கி, அப்பெரியவரிடம் விடைபெற்றுத் தளர்ந்த நடையுடன் சென்றாள். சென்றவள் மகவையீன்ற சோலையருகிற் சென்றதும், மீண்டும் தன் மகவு நினைவு வரப் பெற்று 'கோ' என்று கதறியழுதாள். அந்தோ! பாவம்! அவளை அங்கு ஆற்றுவார் யார்? தேற்றுவார் யார்? தானே நெடுநேரம் தனித்து அழுதபின்னர் ஒருவாறு மனந்தேறி, பொருரை யாற்றின் கால்வாயை அடைந்து, அதிற் குளித்துக் களை தீர்ந்து மேலே நடக்கத் தொடங்கினாள்.

 

4. ஆபுத்திரனும் வேள்வியும்

 

வயனங்கோடு எனும் சிற்றூரிலே, இளம்பூதி யந்தணர் இல்லத்தில் "ஆபுத்திரன்' என்ற அருமைத் திருப்பெயரையுடைய அச்செல்வ மகன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றான். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்னும் முதுமொழிக்கு ஏற்ப சிறு பருவத்திலேயே கூரிய அறிவும், பெரியோர்களிடத்தில் பணிவும், அறச்செயலில் விருப்பமும் உடையவனாக இருந்தான். அவனுக்கு வயது பதினாறு நிறைந்தபொழுது வேதம் முதலிய நூல்களிலும், புராண இதிகாசங்களிலும், நீதி சாத்திரங்களிலும் வல்லவனாக விளங்கினான். 'மகன் தந்தைக் காற்றுமுதவி - இவன் தந்தை, என்னோற்றான் கொல்லென்னுஞ் சொல்' என்னும் பொய்யாமொழியின் பொருட்கு இலக்காக விளங்கியவன் அவ்வூரில் அவன் ஒருவனே. எப்பொழுதும் புன்சிரிப்போடு கூடிய முகமுடையவனாய், அனைவரிடத்தும் பணிவும் அன்பும் இன்சொல்லும் உடையவனாய், பிறர் துன்பம் கண்டு இரங்குபவனா யிருந்தமையால் இவன் பெயர் எங்கும் எளிதில் பரவிற்று. விலங்குகளிடத்தும் பறவைகளிடத்தும் கூட இரங்கிய நெஞ்சொடு, அவற்றிற்கு நேரும் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள முயல்வான். அதனால் யாவரும் இவனிடத்துப் பேரன்பு காட்டிப் பாராட்டி வந்தனர்.

 

ஒருநாள் அவ்வூரில் ஒரு மறையவர் வீட்டில் கேள்வி ஒன்று நடந்தது. இவன் பார்ப்பன மரபிற் பிறந்து, பார்ப்பனர் இல்லில் வளர்ந்தவனாயினும் இதுவரை வேள்வி நடத்தியதைக் கண்டவனல்லன். பகுத்தறிவு பெறாத சிறுவயதில் கண்டிருப்பனோ என்னவோ? அறிவு விளங்கப் பெற்று நன்மை தீமை இன்னதென்று அறியும் வயதுவந்த பின்னர் கடக்கும் வேள்வி இதுவே முதலதாகலின் அதைக் கண்ணுறப் பேராவல் கொண்டான். அவ்வேள்வியின் பொருட்டு ஒவ்வொரு வீட்டினர்க்கும் அழைப்பு வந்ததெனினும், இவனுக்கு மட்டும் அழைப்புத் தனியே வந்தது. அவ்வூரில் உள்ள அனைவரிலும் இவனே வேதம் புராணம் இதிகாசங்களில் வல்லவனாக விளங்கினமையால் வேள்விக்கு இவன் இன்றியமையாதவனாக இருந்தான். தன்னை மதித்துத் தனியே அழைத்தமையால் மகிழ்வு நிறைந்த நெஞ்சமும், புன்சிரிப்பு தவழும் முகமும் உடையவனாய் வேள விச்சாலையை அடைந்தான். அங்கே பச்சைப்பந்தலும், தோரணங்களும், வாழை கமுகு நடப்பட்ட வாயில்களும் விளங்கக் கண்டு உளம் மகிழ்ந்தான். பந்தலின் நான்கு பக்கங்களிலும் தெங்கங் குலைகளும், நொங்குக் குலைகளும் வரிசை வரிசையாகத் தூக்கி யிருந்தனர். பந்தற்காக்களிலும், தோரணக்கம்பங்களிலும் வாழையும் கரும்பும் கட்டி அழகு செய்திருந்தனர். பந்தலின் நடுவே செங்கற்களால் அமைக்கபட்ட ஓம குண்டத்தில் அரசமரத்தின் உலர்ந்த சுள்ளிகள் எரிந்து கொண்டிருந்தன. வேள்வி யாசிரியர் மாவிலையைத் தொன்னை போல் மடித்து, அதனால் நெய்யை முகந்து ஓமத்தீயில் சொரிந்த வண்ணம் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். வேறு பலரும் ஓமதண்டத்தைச் சூழ்ந்து வீற்றிருந்து மந்திரம் ஓதினர். ஆபுத்திரனும் மந்திரம் ம கூட்டத்தில் கலந்து கொண்டானெனினும், அவன் சிந்தை முழுதும் வேறு ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தது. ஓமகுண்டத்திற்கு முன்னே சில அடி தூரத்தில் மஞ்சள் குங்குமம் பூசி, மலரும் மாலையும் கட்டப் பெற்ற கம்பம் ஒன்று நடப்பட்டிருந்தது. அக கம்பத்தில் தூயவெண்ணிற முடைய ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. அதன் செற்றியில் மஞ்சளும் குங்குமமும் அப்பி யிருந்தனர். கொம்பில் மலர் மாலை சூட்டப்பெற்றிருந்தது. அழகு ததும்பிய அப் பசுவின் செவ்விய முகம் துன்பம் நிறைந்திருந்தது. அகன்று பரந்த க கண்கள் அச்சத்தால் மருண்டு நோக்கின. சாஸ்திரிகளின் வேத ஒலியும், மற்றையவர்களின் ஆரவாரமும், தான் இருக்கும் புதிய இடமும் ஆகிய இவைகள் சேர்ந்து அப்பசுவுக்கு அச்சம் விளைத்தன. அதனால் அது உடல் நடுங்கி நின்றது. இக் காட்சியே ஆபுத்திரன் சிந்தையைக் கவர்க் ''அந்தோ! இவர்கள் என்ன நினைர்து என் செய்கின்றனர்? மக்கள் நலங்கருதி விலங்குகளின் உயிரைப் போக்க முயலல் மிகக் கொடுமை; அதிலும் பிறர்க்குப் பலவகையிலும் நன்மைதரும் பசுவைக் கொல்ல விரும்பல் எவ்வளவு பேதமை! விலங்குகள் அனைத்திலும் பசுவே மிகச் சாதுவானது. பொறுமை மிகுந்த ஒருவனைப் 'பசுப் போல்வான்' என்னும் முதுமொழியே அதை நன்கு விளக்கும். மற்றையவர்களினும் மறையவர்களே பசு தெய்வத்தன்மை வாய்ந்தது என்று கூறி அதனை மிகுதியும் போற்றுகிறார்கள். இத்தகைய வேதியர்கள் 'பசுவைக் கொன்று செருப்புத்தானம் செய்வது போல' வேள்வியென ஒன்றை பெமாகக்கொண்டு, இத் தெய்வப்பசுவிற்குத் துன்பம் ஊட்டத் துணிந்து விட்டனரே!


'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.'


என்பது தமிழ்மறை யல்லவா?'' என்பன போன்ற எண்ணங்கள் அவன் மனதில் உதித்த வண்ணம் இருந்தன.

 

இவ்வெண்ணங்கள் மறையவர் குலத்திற்குப் புதுமையாகும். அவர்கள் வேள்வியைப் புனிதமான குலத்தொழிலாகக் கொண்டவர்கள். வேள்வி செய்ய ஒருப்படாவிடினும், வேள்வியை இகழ்தல் கூடாது. அங்ஙனம் இகழ்பவரை வேதியர் குலத்திற்கு மாறுபட்டவர் என ஒதுக்கிவைத்தல் அவர்கள் மரபிற்குரிய ஒழுக்கமாகும். அங்ஙன மிருக்க, மறையவர் பட்டில் வளர்ந்த இவன் இவ்வாறு மாறுபட்ட நினைவுகள் கொண்டமை வியப்பேயன்றோ? ஆதரவற்று உயிர் நீங்க இருந்த சமயத்து, ஆ ஒன்றின் துணையால் உயிர்வாழ நேர்ந்த தன் சுயசரிதையைத் தனது வளர்ப்புக் தாய் தந்தையர் வழியாகவோ, அல்லது பிறர் வாயிலாகவோ கேட்டறிந்த காரணத்தாலும், அதற்கியைய தனது பெயர் 'ஆபுத்திரன்' என வழங்கலானும் அவன் மனம் இப்பசுவினிடத்து இரக்கங் காட்டி வருந்துவதற்குக் காரணமாகலாம் என்று பலரும் ஊகிக்கக்கூடும். ஆனால் அவன் இளமைப் பருவத்திலிருந்தே எல்லா வுயிர்களிடத்தும் போன்பு காட்டி வந்தவனாகலின், இங்கு இப்பசுமீது தோனறிய அன்பும் இயற்கையாக எழுந்ததே யாகும். இங்கனம் பசுவின் துயா நிலைக்கு இரங்கிப் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த ஆபுத்திரன் தனது முகம் துயரத்தால் மாறுபட்டிருப்பதை எங்கே பிறர் அறிந்து கொள்வரோ என அஞ்சி, ஒரு வாறு சிந்திக்கலுற்றான்: - "கொலைத்தொழில் புரியும் வேடுவர் வில்லினுக் அஞ்சி வலையில் அகப்பட்ட மானைப்போல் பசு துடி துடித்து நிற்கிறது. வேதம் ஓதும் இவர்களோ பசுவின் துயரநிலையைக் கண்ணெடுத்தும் பாராது ஓமத் தீயில் நெய் சொரிந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து யான் ஏதேனும் கூற வாயெடுப்பின் என்னை நன்கு தண்டிப்பதோடு, பசு எங்கும் மறைந்து செல்லாவகை தக்க காவலை நியமித்து விடுவர். ஆதலின் இவர்களிடத்தில் நீதிமொழிகளைக் கூறி வாதாடுவதில் பயன் விளையாது. பொய், கொலை, களவு, கள், காமம் எனும் ஐம்பெரும் பாவங்களுள் களவும் ஒன்றாயினும், அஃது நன்றா மாறும் உண்டு. கணவனொடு பகைமை கொண்டு, அதனால் மனம் ஒடிந்த ஒரு மங்கைநல்லாள் 'கஞ்சு உண்டு சாவேன்' எனக் கூறிப் பிறர் இல்லாத சமயத்துக் குடிக்கக் கருதி நஞ்சு பெய்த கலளை ஓர் மறை விடத்தே வைத்திருந்தாள். அதனை எங்கனமோ அறிந்து கொண்ட ஒருவன் அத் தற்கொலை நடைபெறாதவாறு விஷத்தை வெளியே விட்டு, பார்ப்பதற்கு நஞ்சுபோலத் தோன்றும் வண்ணம் நீரை அக்கலனை முன்பு இருந்த விடத்திலேயே வைத்துச் சென்றான். அவள் அந்த நீரை நஞ்சு எனக் கருதிப் பருகின ளாயினும், அஃது நஞ்சு அன்மையால் உயிர் பிழைத்தாள். இங்கே அவன் புரிந்தது களவேயாயினும் அச் செயல் ஓர் உயிரைக் காப்பாற்ற நேர்ந்தமையின் குற்றமற்ற தாயிற்று. ஆதலின் இது சமயத்து நான் ஒரு கள்வனாகி இப்பசுவின் கடுந் துயரைப் போக்குவேன்" என்று அற்றம் பார்த்திருந்தான்.

 

5. அறமா? மறமா?

 

வயனங் கோட்டிற்கு மேற்றிசையில், பருக்கைக்கற்கள் நிறைந்து கிடக்கும் ஓர் சிறு வழியில், இடையாமத்து நள்ளிருளில் ஓர் இளைஞன் ஒரு வெண்ணிறப் பசுவொடு சென்று கொண்டிருக்கிறான். பேய்களும் தீய விலங்குகளும் சஞ்சரிக்கும் அக்காரிருளில், தனி வழியே பசுவைக் கைக் கொண்டு விரைந்து செல்கிறான். " எனது அன்பே! நல்வினையால் இன்று மரணத்தினின்றும் தப்பினாய். இளகிய நெஞ்சு படைத்தவராயினும், வேள்வியின் பொருட்டு உயிர்க்கொலை புரிதல் பாவமாகாது எனத் தொன்று தொட்டு வந்த தன்மையால், அச் செயலில் இரக்க மென்பதை நீக்கிய அப்பெருங் கூட்டத்தினரின் நடுவில் நீ அகப்பட்டிருந்த பொழுது வெவ்வாறு நினைந்து வருந்தினையோ? எனக்கு அது பொழுது உண்டான துயரினும், உன்னை அந்த நிலையில் கண்டது முதல் யான் அடைந்த துயரை எவ்வாறு கூறுவேன்? நமது இருவரின் நற்பயனே நாம் அத் துயரினின்றும் ஒருங்கே விடுதலை பெற ஏதுவானோம் " என்று பற்பலவாறு அப் பசுவொடு பேசிக்கொண்டே செல்கின்றான். ஆனால் வாயற்ற அப் பசு என்ன மறு மொழி கூறும்? இங்ஙனம் செல்லும் பொழுது கற்கள் ஒன்றோடொன்று தாக்குண்டோ, காற்றினால் மரக் கிளைகள் ஒன்றோடொன்று உராய்தலி னாலோ ஓர் சிற்றொலி யெழினும் அச்சமூற்று நாற்றிசையும் பார்ப்பான். குத்துக் கற்களும், கிளைகளற்ற மொட்டை மரங்களும் அவ்வழி மருங்கே பல இருந்தன. அவற்றை அவ்விளைஞன் யாரோ வேற்று மனிதர் எனக் கருதி அஞ்சி அஞ்சிச் சென்றான். இங்ஙனம் அவன் அச்சமும் ஐயமும் கொண்டு சென்றதற்கு ஏற்ப, உண்மையிலேயே கையில் தடியொடு பருத்த உடலினையுடைய சிலர் அவன் முன் தோன்றி அவனை வழி மறித்தனர்.

 

*பெருந்தகையீர், அடியனை மன்னித் தருளவேண்டும்; தங்கள் கருத்திற்கு மாறுபட்டு இச் செயல் புரிந்தமை அனைவர்க்கும் நன்மை விளைவிக்க நினைத்ததனாலன்றித் தீமையைக் கருதியன்று'' எனத் தனக்கு முன் நின்று ழிமறித்தவர்களைப் பார்த்துக் கூறினான் அவ்விளைஞன். அக் குழுவினருள் ஒருவன் ''புலையா, நன்மையைக் கருதியா இச்செயல் புரிந்தாய்? ஆவின் ஊனைக் கருதி யன்றோ?'' என்று கூறித் தன் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். சிறுவன் "ஐயா, நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை, பசுவின் துயரைக் களைய நினைத்தேனன்றி வேறில்லை; யானா இப் பசுவின் ஊனை விரும்பிக் கவர்பவன்?" என்று நடுங்கியவண்ணம் கூறினான். குழுவினருள் மற்றொருவன் "யானா. கவர்பவன்? என்றால், நீ இல்லை, நாங்கள் இதன் தசையை விரும்பிப் பிணித்து வைத்தோமா? ஏ அறிவிலி! வேள்வியின் அருமையை அறிந்திருந்தும் இச் செயல்புரிய நீ திணிந்ததை நோக்கின், ஆவின் ஊனை விரும்பி யன்றி வேறு நினைவு இல்லை யென்பது தெளிவாகிறது. பார்ப்பனர் மரபில் பிறந்தும் இவ்விழி செயல்புரிய முற்பட்டதால் இனி நீ அறிஞர் அனைவராலும் விலக்கப்படுவை'' என்றான்.

 

இளைஞன்: - பேரன்புடையீர்! வேள்வியின் அருமையை அறிந்துளேன்; எனினும் இப் பசுவின் உயிர் அதனினும் அருமையதென்று கருதினேன். வேள்வி பலபுரிய நம்மால் இயலும்; ஆனால் ஓர் ஆவிற்கு உயிர்தர நம்மால் ஆமோ? வேள்வியால் நன்மை பல விளையலாம்; ஆனால் சிறியேன் இதுவரை வேள்வியால் விளைந்த நன்மை இதுவென ஒன்றும் அறியேன். ஐய! ஆ தரும் நன்மை அளவில. அவையனைத்தும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இங்ஙனமாக யான் இப்பசுவின் ஊனை விரும்பிக் கவர்ந்தேன் எனல் பழிச் சொல்லாகும்.

 

குழுவினருள் ஒருவன்: - பேதாய் வேள்வியின் அருமையை அறிவை யா! அறிந்தா இச்செயல் செய்தாய்? பசுக்களால் விளைந்த நன்மை பல அறிந்த ரீ வேள்வியால் விளைந்த நன்மை யொன்றும் கண்டிலையா? இப்பசுவும், இதன் இனமும், நீயும், நானும், மற்றனைவரும் நலமே வாழ்வதற்கு ஏது வேள்வியே யென்பதை யறி; மாதம் மூன்று மழை பெய்கிறதே, அது எதனால்? மாரியின்றெனின் இவ்வுலகில் வாழ்வதேது? உலகில் தீமை குறைந்து நன்மை பெருகுவது எதனால்? பாவிகள் மறைந்து மற்றவர் வாழ்வது எதனால்? இவையும், இவைபோன்ற பிறவும் வேள்வியால் விளையும் நன்மையன்றோ?

 

இளைஞன் - ஐயா, மாரியும் பிறவும் வேள்வியால் விளைகின்றன என்று எங்ஙனம் துணிதல்கூடும்? நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாக்கும் மழை பெய்யுமே; அக்கல்லவ ரென்போர் எல்லா வுயிர்களையும் தன் உயிர்போல் கருதும் அருளுடையவ ராவர். அவ்வாறன்றி, 'யான் புரிவது அறச்செயலே, அதுவும் தேவர்கட்கு மிகவும் மகிழ்வு தருவது' என்று கருதிப் பிறவுயிர்களுக்குத் துன்பம் தரும் வேள்வி புரிதல் அறவினையாமோ? அதனால் அவர் நல்லவரென்று சொல்லப்படுவரோ?


"தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்"


"கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதில்லார்
உண்மை நிலைக்குப் பொறை”


என்பன வள்ளுவர் வாய்மொழியன்றோ?

 

வள்ளுவர் அன்பையும் அருளையும் பற்றிக் கூறியிருப்பனவற்றை என்னினும் நின்மடங்கு யாம் அறிந்துளேம்; வேள்வியைப் பற்றி அவாகொண்ட கருத்தையும் அறிவோம். நாங்கள் அனைவரும் இரக்கம் இல்லாதவர்கள் என்றும், நீயே அருள் உருவானவன் என்றும் செருக்கி மகிழாதே. வேள்வியின் பொருட்டுப் பலியாகும் உயிர்கள் புண்ணிய உலகம் சேரும். உலகிற் பிறந்த உயிர்கள் அனைத்தும் என்றோ ஒருநாள் இறப்பது உறுதி. அதனால் அவ் இறப்பும் நல்ல கருமத்துக்கு உரியதாயின் வரும் மேன்மை பெரிதன்றோ? ஒரு புறாவின் பொருட்டுத் தன்னையே மகிழ்ந்து அளித்த ஒருவன் அடைந்த மேன்மையை நீ அறிவாயன்றே?

 

இளைஞன்: - ஐய! உண்மை, உண்மை; தானே மகிழ்வோடு தன்னைப் பலியாக்கிக் கொள்ளும் தன்மை மேன்மையானதுதான். ஆனால், இப்பசு உயிர் விடுவதற்கு அஞ்சிக் கண்ணீர் சொரிந்து நடுநடுங்கி நிற்கிறதே?

 

குழுவினருள் ஒருவன்: - பேதாய்! நோயாளிக்கு வற்புறுத்தி மருந்தூட்டவில்லை யா? பிள்ளையை அடித்துச் செந்நெறியில் திருப்புகின்றோ மல்லவா? தறிவு இல்லாத இப்பசு நன்மை தீமைகளை எங்ஙனம் அறியும்?

இளைஞன்: - பெரியீர்! மற்றும் ஒரு ஐயம்; புனிதத் தொழிற்குப் பலியான உயிர்கள் நற்கதி யடையட்டும். ஆனால், அவற்றை மெய் பதற மனம மருள உயிர் பிரிக்கும் நமக்கு எக்கதி வாய்க்கும்?

 

குழுவினருள் ஒருவன்: - ஐயம் என்றதால் கூறுகின்றேன். பேதையைத் தெருட்டி
அறிவு புகட்டும் ஆசிரியனும், ஒருவன் மெய்யில் தோன்றிய புண்ணை அவனுக்கு நோவுமிகினும், அதனைப் பொருட்படுத்தாது அறுத்து மருந்து கட்டும மருத்துவனும் மேனிலை யடைதல் தெளிவன்றோ? வேள்வியால் அதற்குப் பலியான விலங்கும், அவ்வேள்வி புரிந்தவரும் புண்ணிய உலகம் அடைவர். அத்துடன் இவ்வுலகமும் நன்மை யடையும்.

 

இளைஞன் - நீங்கள் கூறிய உவமை பொருத்தமாகத் தோன்றவில்லை. அது போகட்டும்; வேள்வியால் உயிர் துறந்து விண்ணுலகு அடைந்த விலங்குகள் தம்மைக் கொன்ற அம்மானிடர் தாம் இருக்கும் உலகினை அடைய வரும் கால், அவர்களைக் கண்களில் நெருப்புப்பொறி சிதறக் கனன்று தம் இருப்புக் கொம்புகளால் வருத்தும். ஆதலின், 'அயர்தரு வேள்வியின்பம் அழிவுறும் அதனை வெஃகல்' என்ற அறிஞர் உரை பொய்யாமா?

 

இதற்கு மேல் அக்கூட்டத்தார்க்குப் பொறுமை காட்ட முடியவில்லை. "ஏதோ அறிவு தடுமாறி பாவச்செயலில் புகுந்த இவனை நன்னெறியிற் செலுத்தலாம் என்று நினைத்த தனால் அல்லவா இவனுக்கு இவ்வளவு துணிவு பிறந்தது'' என்று சினம் மிகுந்தவராய் அவனிடம் இருந்த பசுவைப்பிடித்து அடித்து ஓட்ட முயன்றனர். உ-னே இளைஞன் அவர்கள் முன்னிலையிற் சென்று, ''ஐய, பொறுமை வடிவான இப் பசுவை வருத்தன்மின். இறைவன் அருளால் தானே தரையில் முளைத்த புல்லை மேய்ந்து, இவ்வுலகில் வாழும் நம்மனோர்க்கு கைம்மாறு வேண்டாத மேகம் போலத் தனது இனிய பாலை அருள் சுரந்த நெஞ்சோடு தருகிறது. இத்தகைய பசுவோடு தங்கட்கு வந்த சினம் நேர்மையல்லவே'' என்று முறையிட்டான். அதனால் சினம் மிக்க ஒருவன் “நீ குழவிப்பருவத்துச் சிலநாள் பசுவால் வளர்க்கப்பட்டனையாயினும், பின்னர் பூதியென்னும் இப்போறிஞரால் நல்லறிவு பெற்றிருப்பா யென்று கருதினோம்; பேதாய்! நீ இது பொழுது பசு மகன் என்பதை உண்மையாக்கினாய்; அறிவிலி, வாயடங்கி வழிவிடு” என்று உறுத்துக்கூறினான்.

 

இளைஞன்: - பொறுமையிற் பெரியீர்! எளியேன் சொற்கள் உண்மைக்கு மாறுபடாதவரை தாங்கள் செவி கொடுத்தல் வேண்டும். தெய்வத்தன்மைவாய்ந்தது என்று போற்றப்படும் பசு வயிற்றில் தோன்றியதா இழிவாகும்? பிற்கூறுவன கொண்டு அடியனைத் தற்புகழ்ச்சி பேசு வனாக நினையா திருக்க வேண்டுகிறேன். சேற்றில் கமலமும், சிப்பியில் முத்தும், மான் வயிற்றில் அரிதாரமும் தோன்றுவனவாயினும் அவற்றின் பெருமையை யான் கூறல் மிகையன்றோ? அவை யிருக்கட்டும்; உலகினர் நன்னெறி வழாது. வாழ்ந்து, பின்னர் உயர் நிலை யடையுமாறு தமது அருட்பெருக்கால் பொய்மை துடைத்து, அறநெறி காட்டி வாழ்ந்த பெரியாரும், நுமது குல முன்னோர்க்கு வேதம் முதலிய மெய் நூல்களை ஓதுவித்த சீரியரும் எக்குலத்துப் பிறந்தனர்? மறையவர் குலத்திலா, அல்லது வேறு குலத்தினர் மரபிலா? பரண்டிலும் இல்லையே; அறநெறிவழாத அசலன் என்னும் பெரியார் பசுவயிற்றில் உதித்தவரல்லவா? சிருங்கி முனிவர் பிறப்பிடம் மான் வயிறாமே! போகட்டும், ஆவும் மானும் உங்கள் கொள்கைப்படி மிக இழிந்த பிறப்பின அல்ல. புலி வயிற்றில் பிறந்தனரே ஒருவர்! விரிந்த அறிவும் பரந்த உள்ளமும் படைத்த சீரியர்; விரிஞ்சி யென்னும் திருப்பெயருடையார். புலித்தோலும் புனித ஆசனமாகும்; ஆதலின் அதுவும் மிக இழிவுடைத்தன்று அமைதி காண்பீரேல், என்ன கொடுமை? நரி வயிற்றில் - விலங்குகளில் வஞ்சனை மிக்கது என்று இகழப்படும் நரி வயிற்றில் தோன்றினராம் கேசகம்பனன் என்னும் முனிவர்! குற்றமற்ற அப்பெரியாரின் கீர்த்தியை யானா எடுத் சிறந்த துரைக்கத்தக்கவன்? இங்ஙனம் நீங்கள் போற்றும் பெரியோர்கள் புலி வயிற்றிலும் நரி வயிற்றிலும் பிறந்திருக்க பசுவொடு வந்த பழிகுலம் யாது? பெரியீர், வேதத்தில் பிறப்பினால் இழிவு கூறப்பட்டுள்ளதா? பிறப்பால் எல்லா உயிரும் ஒன்றே; செய்கையால் உயர்வு தாழ்வு உண்டு; ஆதலின் அடியனை எவ்வாறு பழித்துரைப்பினும் வருந்தேன். ஐயோ, இந்தப் பசுவை மட்டும் வருத்தாது விட்டு விடுங்கள்.

 

"நாம் இவன்பால் இதுவரை கருணை காட்டியதே தவறு; வழியினின் றும் விலகான்,
சவாந்து செல்லவேண்டுமென்ற விருப்பையும் விடான். ஆதலின், இவனுக்கு இதுவே தக்கது'' என்று கூறித் தசை பருத்த உடலினன் ஒருவன் தன்கையில் இருந்த குறுந்தடியால் ஓங்கிச் சிறுவனை அடித்தான். ஐயோ! அவ்விளைஞன் - களங்கமற்ற நெஞ்சினன் - மன்னுயிரைத் தன் உயிர்போல் கருதும் உத்தமன் துடிதுடித்து மனம் பதறி நின்றான். மேலும் அத்தமயன அவனை அடிக்க முயலவே, கூட்டத்தில் இருந்த ஓர் வேதியன் “இவனைத் தீண்டாதே, தீண்டாதே; இவன் தீண்டத்தகாதவன்! ஒழுக்கம் தவறிய பார்ப்பனி ஒருத்தியால் பெறப்பட்டவன்! இவன் வரலாற்றை ஏற்கனவே யான் அறிந்துள்ளேன். இவனால் பிறர்க்குத் மையில்லை யென்று கருதி ஒருவரிடமும் இதுவரை உரையாதிருந்தேன். இப்பொழுது தன் உண்மை நிலையைக் காட்டிவிட்டான். பேதைக்கு அறிவு புகட்டினும் அவன் தனது கீழ்மைக் குணத்தை விடுதல் அரிதகலவா? சில வருடங்கட்கு முன்னர் நமது ஊருக்குத் தெற்கே சிறிது தூரத்தில் கண்குழிந்து உடல் மெலிந்து தளர்ந்த நடையுடன் வந்த ஒரு பார்ப்பனியைக் கண்ணுற்று, அவளை யார் என வினவினேன்.

 

அவள், ''வாரணாசியில் ஆரண வவாக்கியின் மனைவி, சாலி யென்னும் பெயருடையேன்; நிறை தவறி ஒழுகினமையால் அம்மாசு நீங்கக் குமரி யாடச் சென்றேன்; செல்கையில் சூல் நிறைந்த யான் கொற்கை நகருக்குத் தெற்கே இடையர் சேரிக்கு அருகில் உள்ள ஓர் சோலையில் ஒரு ஆண் மகவை யீன்று, சிறிதும் இரக்கமின்றி அம்மகவை அங்கேயே விடுத்துச் சென்றேன்; ஐயோ! இத்தீவினையேற்கும் நற்கதி உண்டோ?" என அழுதாள். அவளுடைய மகனே இவன்! வியபிசரித்தலாற் பிறந்தவனாதலின் இவனைத் தீண்டாதே" என்று கூறி அவனைத் தடுத்தான். அவ்விளைஞன் ஆபுத்திரன் ஆவனென்றும், அக்கூட்டத்தினர் வேள்விச்சாலையில் வேதம் ஓதி நின்ற விப்பிரர் ஆவர் என்றும் நீங்கள் ஏற்கனவே அறிந்திரு-பீர்கள். அவ்வளவு துயர நிலையிலும் ஆபுத்திரன் அவர்கள் பேதமைக்கு இரங்கிக் குறுநகை புரிந்து "வேதம் முதலிய மெய் நூல்களில் தேர்ச்சி பெற்ற பெரியீர்! நமது குலம் பண்டு தொட்டு இன்றுவரை நடந்துவரும் முறையை நீங்கள் அறிந்திருந்தும் இங்எனம் மொழி தல் அடியேற்கு நகைப்பை விளைக்கின்றது. வேதத்தை அருளினமையால் வேதன் என்னும் திருப்பெயரையுடைய பிரமனுக்குத் தோன்றிய பெரியார் இருவர் இன்னார் என்பது நான் மட்டுமன்று, உலகமே அறிந்துளது.
வசிட்டரும் அகத்தியரும் அன்றோ அவ்விருவரும் அவர்களை அருமறை முதல்வர் என்றும் அந்தணர் என்றும் மற்றவர் இருக்கட்டும் நீங்களே போற்றி வருகின்றீர்களே! அவ்விருவருக்கும்! தந்தை மலரவன் எனினும் தாய் திலோத்தமையல்லவா? அவள் தேவ கணிகையாயிற்றே! ஒருவர்க்கன்றிப் பலருக்கும் உரிமையான ஒருத்தியிடத்துப் பிறந்தனரே வசிட்டரும் அகத்தியரும்! அங்ஙனமாக சாலிக்கு (கற்பிற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் வசிட்டரின் மனைவி அருந்ததிக்கும் சாலி யென்னும் பெயர் இருத்தல் இங்கு குறிப்பிடத்தக்கது) என்னை யீன்ற அன்னைக்குத் தவறு கூறத்துணிந்தீர்களே!' எனக் கூறி மீண்டும் நகைத்தான். இதனால் அக்கூட்டத்தினர் சினம் மிக அடைந்தன ரெனினும் அவன் உரைக்கு மறு மொழி கூற வலியற்றனர். அவனை அன்புடன் போற்றி வளர்த்து அறிஞனாகச் செய்த அவருடைய வளர்ப்புத் தந்தையான இளம்பூதியென்னும் வேதியனும் அவன் மீது வெறுப்புக்கொண்டான். ''பாவி! புத்திரப் பேறு இல்லாத எனக்கு இறைவன் அளித்த புண்ணிய வடிவம் நீ யென்று இதுகாறும் போற்றி வந்தேன்; முற் பிறவியில் நான் புரிந்த தீவினையோ நின்னை எனது வீட்டில் வளர்த்து, உயர்ந்த என் குலத்தை மாசுபடுத்திக் கொண்டேன்? தீயோய்! நீ இனி எனது வீட்டு முற்றத்திலும் கால் வையாதே' என்று கூறிக் வீடிந்துவிட்டான். பின்னர் அவர்கள் அப்பசுவினை வேள்விச்சாலைக்கு ஓட்ட முயன்ற னர். ஆபுத்திரன் மனம் பதைத்தது. அவர்கள் பலரிடத்தே தனது தனிமையை நினைந்து அஞ்சினான்.


"மன்னுயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயில்

அன்னவன் ஆண்மை யாவது அலிபெற்ற அழகு போலாம்

என்னையான் கொடுத்தும் ஆவின் இடுக்கண் நோய் கெடுப்ப னன்றி

என்னுயிர் அரிதென் நெண்ணி இருத்தலிற் பழியு முண்டோ?''

 

பசுவின் உயிரினும் என் உயிர் பெரிதோ? எவ்வாறாயினும் இப்பசுவை விடுவித்தல் வேண்டும் என மனத்துணிவு கொண்டு மீண்டும் அவர்களை வழி மறித்தான். அவர்களுக்குள் தலைமை பெற்று விளங்கும் வேதியர் ஒருவர் தமமை மறந்த கோபம் உடையவராய், அவ்விளைஞனை நன்றாக அடித்து, அவன் இரு கைகளையும் பிடித்து இழுத்து அப்பால் தள்ளி, பசுவை அடித்து விரைவாக ஓட்ட முயன்றனர். ஆண்டவன் தூண்டுதலோ யா தோ நாம் எங்ஙனம் துணிந்து கூறக்கூடும்? தன்னை அடித்து ஓட்டினமையோ, அல்லது தன் உயிரைக் காப்பதற்கு இத்துணைத் துன்பங்களையும் ஏற்று நிற்கும் அவ்வாபுத்திரன் மீது பிறந்த இரக்கமோ அத்தெய்வப் பசு தன்னைப் பிடித்திருக்தவர் கையினின்றும் தப்பித தாவி யெழும்பி, அக்கூட்டத்தினரில் தலைமையாக இருந்து ஆபுத்திரனை வருத்திய ஆரண உவாத்தியைத் தன் கொம்பால முட்டி அடவியில் ஓடி மறைந்தது. ஐயோ! பாவம்! அவர் வயிற்றினின்றும் குடல் செவ்வலரி மாலையைப் போல் வெளியே சரிந்துவிட்டது. இச்செயலைக் கண்ட ஆபுத்திரன் மனம் நடுங்கி, “அந்தோ! தீமை செய்தாராயினும் அவருக்குத் தீமை செய்தல் முறையல்லவே: எனினும் இப்பசு அச்செந்நெறியை எங்ஙனம் உணரும்? எங்ஙனமோ ஆ உயிர் தப்பியது; இனி நாமும் இக்கூட்டத்தினின்று தப்பலே தக்கது'' என்று நினைத்து, அடிப்பட்டதால் தன் மெய்பில் உண்டாகும் நோவையும் மதியாது அவ்விடத்தினின்று சென்றுவிட்டான். வேதியர் கூட்டத்தில் நிகழ்ந்த அவ்வெதிர்பாராத செயலால் ஆ நழுவிப்போனதையும், ஆபுத்திரன் மறைந்து சென்றதையும் அவர்கள் பாராது குடல் சரிந்த வேதியரைத் தூக்கிச் சென்றனர்.

 

 

6. உண்ணும் சோற்றில் மண்ணிடல்

 

ஆபுத்திரன் பொழுது புலர்வதற்குள் வயனங் கோட்டிற்கு அப்பால் பல காவதம் கடந்து ஓர் சிற்றூரை யடைந்தான். மறையவர்கள் மட்டும் வதியும் ஊர் அச்சிற்றூர். வேள்வியின் பொருட்டு முதல் நாள் இருந்த பட்டினியாலும், அன்றிரவு நேர்ந்த அத்துன்பங்களாலும் அயர்ச்சி மிகுந்து, அச்சிற்றூரின் அம்பலத்தே படுத்து உறங்கினான். தன்னை மறந்து துயிலில் மூழ்கிய ஆபுத்திரன் நெடுநேரம் கழித்து எழுந்தான். பட்ட அடிகளால் உடல் வலியும், பட்டினியால் பசித்துயரும் வருத்த ஆபுத்திரன் எழுந்து நடக்கவும் இயலாதவனாய், அம்பலத்திலேயே தங்கியிருந்தான். அவ்வழியே வந்த ஒரு பார்ப்பன முதியவர் அயர்ச்சியால் குழிந்த கண்களும் மெலிந்த உடலும் உடைய ஆபுத்திரன் ஊர் அம்பலத்தே சோர்ந்து வீற்றிருத் தலைக் கண்டு, அவனை யடைந்து "தம்பி, நீ யார்?'' என்று வினவினார்."தந்தையே! நான் ஓர் ஏழைச் சிறுவன்; என்னால் இது பொழுது பேச முடியவில்லை. பருகுவதற்குச் சிறிது நீர் கொடுத்தால் பெரும் புண்ணியமாகும். எளியனது வரலாற்றைப் பின்னர் கூறுகின்றேன். ஆண்டிற் சிறிய பாவியேன் தங்கட்குத் துன்பம் தரவும் ஆனேனே" என்று கூறி வருந்தினான் ஆபுத்திரன். அவனுடைய சொல் நயமும் உடல் மெலிவும் கருதி மனம் இரங்கிச் சென்று நீர் கொணர்ந்து கொடுத்தார். இளைஞன் ஒரு வாறு சோர்வு நீங்கித் தன் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினான். துன்பம் நிறைந்த அவன் வாழ்க்கையைக் கேட்டு இடையிடையே பரிவு காட்டி வந்த பெரியவர் இறுதியில் வேள்வியை இகழ்ந்து ஆவைக் கவர்ந்ததும், அதனால் ஒரு மறையவர் பெருந்துன்பம் உற நேர்ந்ததும் அறிந்தவளவில் வலிமிகுந்த உடற்கட்கு வாய்ந்த ஓர் இளைஞனைப் போல் துள்ளி யெழுந்தார். "பாவி வேள்வியை இகழ்ந்தனையா? வேள்விக்குரிய ஆவைக் கவர்ந்தாயா? ஐயோ! உன்னால் ஒரு உத்தமர் உயிர் துறக்கவும் நேர்ந்தனரா? கீழ் மகனே! நீ இவ் வம்பலத்தில் இருத்தலும் தகாது. எழுந்திரு, எழுந்திரு; ஐயோ! அறியாமல் உனக்கு நீர் கொடுத்துப் பாவத்தைத் தேடிக் கொண்டேனே'' என்று பதறினார். அப்பார்ப்பன முதியவர் வேதம் முதலிய மெய் நூல்களை ஓதித்தெளிந்தவராயினும், உயிரைக் கொன்று வேள்வி புரிதல் குலத்திற்கு உ உரிய ஒழுக்க மென்று நினைத்தும், வேள்வியாசிரியர்க்குத் தற்செயலாக நேர்ந்த துன்பத்தை ஆபுத்திரனால் நேர்ந்தது என்று பிறழ வுணர்ந்தும், அறப்புதல்வனாம் ஆபுத்திரனைக் கோபித்துக் கடிந்தனர் என்றால் அவ்வறிஞர் சால்பு என்னாம்? ஆபுத்திரன் மறுமொழி ஒன்றும் கூறாது அவ்வூரை நீங்கி, அதற்கு அருகில் இருந்த மற்றொரு கிராமத்தை அடைந்தான்.

 

அக் கிராமத்தில் வேதியரும் வேளாளரும் வேறு சிலரும் வதிந்து வந்த ஆபுத்திரன் வேளாளர் தெருவையடைந்து, ஒரு வீட்டு முற்றத்தில் நின்று, "அன்னாய்! பசித்துயர் வருத்துகின்றது; ஒரு பிடி சோறு போடுங் கள்" என்று வேண்டினான். வீட்டினின்று ஓர் பெண் மணி வெளியில் வந்து இரவலன் நிலைமையைக் கண்ணுற்று மனம் இரங்கி, “தம்பி, உனது தோற்றமும் பிறவும் உயர்ந்த நிலையில் வாழ்ந்தவனாகக் காட்டுகின்றனவே; உனக்கு எதனால் இத்தகைய நிலைமை வாய்த்தது?'' என்று கேட்டாள். "தாயே! யான் என்றும் ஏழ்மை நிலைமையில் இருப்பவனே; தோற்றத் தால் ஒருவனை மதிப்பது தகுதியன்று'' என்றான் ஆமகன்.

 

"எனது வீட்டில் சோறில்லை; கூழ்தான் உளது; அதை ஊற்றுவதற் கும் உன்னிடத்தில் பாத்திரம் ஒன்றும் இல்லையே.'

 

"எனது இருகையையும் ணைத்துப் பருகுவேன், ஊற்றுங்க அப்பெண் தெய்வம் அவன் நிலைமைக்கும் குணநலத்திற்கும் மனம் உரு தனது வீட்டில் இருந்த புது மட்கலம் ஒன்றில் கூழ்வார்த்து, ''தம்பி, இக் கூழைப் பருகிவிட்டு இந்தக் கலத்தையும் எடுத்துச் செல்; உனக்கு உதவும்'' என்று கூறினாள். அவன் அதைப் பசி நீங்கப் பருகிக் கலத்தை எடுத்துக் கொண்டு சென்றான். அதற்குள் அவ்வூரிலும், அதற்கு அடுத்த பல கிராமங்களிலும் இவன் “ஆகவர் கள்வன்'' என்ற பெயர் பரவியது. மறுநாள் ஆபுத்திரன் வேறு ஒரு கிராமத்துட் புகுந்து பிச்சை கேட்டான். வேளாளர் வீடுகள் தோறும் சிறிது சோறு கிடைத்தது. பின்னர் பார்ப்பனர் தெருவிற் சென்றான். ஐயோ! அவர்கள் அனைவரும், “இவன் பசுவைக் கவர்ந்த திருடன் என்று சோறு இருந்த கலத்தில் மண்ணை அள்ளிப் போட்டனர். உண்ணும் சோற்றில் மண்ணைப் போடுதல் எத்தகைய செயலாகும்? தன்னைக் கள்வன் என்றும், தீயவன் என்றும் இகழ்வதோடு நில்லாது உண்ணுங் கலத்தில் மண்ணையும் போடத் தொடங்கினராயின் அவள் மனம் என்ன துயர் அடையும்? எனினும், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் இயல்பினன் ஆதலின் ஆபுத்திரன் இத்தகைய செயல்களால் மனம் ஒடிந்து போகவில்லை.

 

அறநெறி யுணர்ந்த ஆபுத்திரன் பிறர் செய்யும் துன்ப மெல்லாம் இன்பம் னக் கொண்டனன். எனினும், இனி அப் பக்கத்து கிராமங்களில் வாழ அவன் மனம் ஒப்பவில்லை. எனவே, அங்கிருந்து நீங்கிச் செல்வத்திற் சிறந்தோர் வாழும் மதுரையம்பதியை நோக்கிச் சென்றான்.


7. அமுத சுரபி

 

செந்தமிழ் நாடெனும் சீர் மிகப்படைத்தது பாண்டிய நாடு. மலை, கடல், நதி இவற்றின் வளம் ஒருங்கே பெற்றது பாண்டிய நாடு. கருணைக் கடலாகிய இராமபிரான் இலங்கை செல்லும் பொழுது சில நாள் தன்ன கத்தே தங்கியிருக்கும் பேறு பெற்றது பாண்டிய நாடு. இங்ஙனம் பழமை யும் பெருமையும் பெற்ற பாண்டிய நாட்டில் ஒப்புயர்வற்ற புலவர்கள் ஒருங்கு கூடித் தமிழாராய்ந்த சிறப்பு வாய்ந்தது மதுரைமநகர். வையை யென்னும் தெய்வமாந்தி தன் மருங்கே செல்லும் வளம் பெற்றது. அந்த ஆறு இன்று போலன்றி, அந்தப் பழங்காலத்தில் வற்றாத நீரோட்டம் உடையதா யிருந்தது. அதில் மீன் போலவும், அன்னப் பறவை போலவும் பல்வேறு வடிவம் உடையனவாகச் செய்யப்பட்ட ஓடங்கள் மக்களையும் பல்வகைப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு இங்கும் அங்குமாகச் சென்ற வண்ணமா யிருக்கும். மலர் விற்போர், பஞ்சவாசம் விற்போர், பட்டு நூல், எலிமயிர், பருத்தி நூல் முதலியன நெசவு செய்யும் பட்டுச் சாலியர், நெல் முதலிய விற்போர், அப்ப வாணிகர் , மீன் விற்கும் பரதவர், உப்பு விற்கும் உமணர், கயிறு திரிப்போர், வெண்கலக் கன்னர், செம்பு வேலை செய்வோர், மரவேலை செய்யும் தச்சர், இரும்பு வேலை செய்யும் கொல்லர், ஓவியக் காரர், உருக்குத் தட்டார், இரத்தின வேலைக்காரர், நெட்டி முதலியவற்றால் மலர் வாடாமாலை முதலியவற்றைச் செய்யும் தொழிலினர், தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக் கருவிக்ளில் பாட்டு இசைக்கும் பாணர், சங்கு அறுப்பவர், முத்துக் கோற்போர், மறையோர், மருத்துவர், சோதிடம் வல்லோர் முதலிய எண்ணிறந்த தொழிலினர், பிரிவினர் ஆகிய மக்கள் அம் மதுரைமா நகரில் நிறைந்திருந்தனர். தெய்வ மணமும், செல்வப் பெருக்கும் உடைய அம் மதுரைமா நகரில் கலைமகள் நிலயம் என ஓர் கோவில் உளது. அது சரசுவதி தேவியின் கோவில், அம் வம்மைக்குச் சிந்தா தேவி எனவும் பெயர். சிந்தாதேவி என்பதற்குச் சிந்தையில் தோன்றிச் சொற்பொருள் உணர்த்துபவள் என்பது பொருள். அக் கோவிலின் முன்னர் அம்பலம் ஒன்று உளது. அவ் வம்பலத்தே குருடரும், செவிடரும், கால் கை முதலிய உறுப்பிழந்தவரும், ஆதரவற்ற பிணியா வரும் நிறைந்திருந்தனர். அவர்கள் அனைவர்க்கும் ஆபுத்திரன் தன் கையில் ஏந்திய மட்கலத்தில் இருக்கும் சோற்றுத் திரளை அள்ளிக் கொடுத்து, அவர்
கள் பசியை ஆற்றிக் கொண்டிருந்தான். 'தான் உண்பதற்கே சோறில்லாமல் வருந்திய இவனுக்குப் பிறர் பசி தணிக்கச் சோறு எது?'' என்ற ஐயம் இங்கு எழலாம். ஆபுத்திரன் வீடுதோறும் இரந்து உண்டு வருகையில், ஒருநாள் கலைமகள் கோவிலுக்கு முன் உள்ள அம்பலம் அடைந்தான். அங்கே முற்கூறிய அவ் வெளியவர்கள் நடக்கவும் இயலாதவர்களாய் உணவு இல்லாமல் பசியால் வருந்துவதைக் கண்டான். ''அந்தோ! இவ்வளவு மக்கள் உணவின்றி வருத்துகின் றனரே'' என மனம் இரங்கி, அன்று முதல் வீடு தோறும் சென்று வாங்கி வந்த உணவை முதலில் அனைவர்க்கும் வழங்கிப் பின்பு மிகுந்ததைத் தான் உண்டு, இரவு தோறும் கலைமகள் கோவிலின் ஓர் பால் மட்கலத்தைத் தலையணையாகக் கொண்டு துயின்று வந்தான்.

 

இங்ஙனம் ஆபுத்திரன் "காணார், கேளார், கால் முடமானோர், பேணு நர் இல்லோர், பிணி நடுக்குற்றோர்" போன்ற எளியவரின் பசியைத் தணித்து வந்தான். இச் செயலால் இவன் பெயர் அவ்வளவு பெரிய மதுரை நகர் மட்டுமன்றி அக்கம் பக்கத்து கிராமங்களிலும் பரவத் தொடங்கியது. பிச்சைக் காரர்கள் மட்டுமன்றி மற்றைய மக்களும் அவன் குணத்தைப் புகழ்ந்து பேசினர்.

 

ஒருநாள் இரவு நாழிகை பதினைந்து இருக்கும். எங்கும் திணிந்த காரிருள். அன்று பொழுது மறைந்ததும் மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி மின்னி இடித்துப் பெய்த பெருமழை அப்பொழுது தான் நின்றது. மழை நின்றதாயிலும் மின்னல் ஒளியும், இடி யொலியும் நிற்க வில்லை. தான் உண்பதற்கே ஒரு பிடி சோறில்லாத ஒருவன் மற்றைய ஏழைகளின் பசியைத் தீர்த்து வரும் புதுமையைக் கேள்வியுற்று, அத்தகைய பெருமகனை நேரே காண விரும்பித் தேவர்கள் ஏறிவரும் தேர் ஆகாய வீதியில் விரைந்து வருகையில் எழும் பேரொலி போலும் அவ்விடியொலி! அவர்கள் மெய் ஒளியே போலும் அம்மின்னல்! மீண்டும் மழைபெய்யத் தொடங்குவது போல மின்னல்மின்னி இடியிடிக்கும் அக்காரிருளில் சிலர் "கலைமகள் நில யம்'' என்னும் சரசுவதி கோவிலின் மன்றத்துட் புகுந்து, 'பேரருள் உடைய ஐய! வழி நடையால் களைப்புற்றிருக்கிறோம்; பசித்துயர் எங்களை
வருத்துகின்றது; கருணை கூர்ந்து பசியை ஆற்றவேண்டும்” என்று அரற்றினர். நள்ளிரவில் - பேய்களும் வெளிவர அஞ்சும் அக்காரிருளில் – ஏழ் கடலும் மேல் எழும்பி விழுவது போலப் பெருமழை பெய்துநின்ற அச்சமயத்தில் சிலர் ஆமகன் தன்னை மறந்து உறங்கும் அவ்வம்பலத்தே வந்து ''பசி களையவேண்டும்" என இரந்தனராயின் நாம் என்னவென்று நினைப்பது! முன்பு இடியொலியைத் தேவர்களின் தேர் ஒலியென்றும், மின்னலை அவர்களுடைய மெய்யொளி யென்றும் ஐயுற்றோ மல்லவா? அத்தேவர்கள்தான் இவ்வாறு மக்கள் உருவங்கொண்டு நள்ளிரவில் ஆபுத்திரனைச் சோதிக்க வந்தனர் போலும்! எவ்வாறாயினும் ஆபுத்திரனது அறச்செயலுக்கு இது ஒரு சோதனைக்காலமே. இத்துன்ப ஒலியைக் கேட்ட ஆபுத்திரன் ''பொருக்கென எழுந்தான். எழுந்தவன் வந்தவர்கள் இன்னவரென்பதும், எது கருதி வந்தனரென்பதும் அறியானாகி, ''ஐயன்மீர்! கடுங்காற்றும் பெரு மழையும் கலந்து வீசிய இக்காரிருளில் தங்கட்கு என்ன நேர்ந்தது?
என்று வினவினான்.

 

“அன்புருவே! நாங்கள் இம்மதுரை நகருக்கு அப்பால் நெடுந்தூரத்தே யுள்ள ஓர் சிற்றூரில் வாழ்பவர்கள். ஒரு தொழிலைக்கருதி இந்நகர் நோக்கி வந்த நாங்கள் பொழுது அமருங்காலை இக்நகர் அடைந்தோம். அப்பொழுதே சிறு தூரலாக மழைபெய்யத் தொடங்கியது. அந்த மழைக்கு இக்கோவிலின் முன்னுள்ள அம்பலத்தே தங்கினோம். மழை நின்றுவிடும் என்று ஒவ்வொரு நாழிகையும் எதிர்பார்த்தோம். அந்தோ! நாழிகைக்கு நாழிகை மழை முன்னிலும் பலமாகப் பெய்யத் தொடங்கிற்று! என் செய்வோம்? நெடுந்தூரம் நடந்து வந்தமையால் உண்டான நோவு ஒருபாலும், பசித்துயர் மற்றொருபாலும் வருத்தத் தொடங்கியது. அவ்வம்பலத்தில் உள்ள ஏழை மக்கள் எங்கள் நிலைமைக்கு இரங்கி, 'கலைமகள் கோவிலில் தன்னுயிரைக் காட்டிலும் மன்னுயிர் பெரிதென்று கருதி வதியும் ஓர் அறமகன் இருக்கின்றார்; அவரிடம் சென்றால் உங்கள் பசித்துயர் ஒழியும்' என்றனர். ஐயா, அதற்கு முன்னரே தங்கள் பேரன்புச் செயலைக் கேள்விப் பட்டிருக்கின்றோம்; இது பொழுது எங்களை வருத்தும் பசித்துயரை ஒழித்தல் பெரும் புண்ணியமாகும்'' என்று அவர்கள் வேண்டினர். ஆபுத்திரன் யாது செய்வன்? வீடுதோறும் சென்று வாங்கிவந்த உணவை எளியோர் பலர்க்கும் வழங்கி, மிகுந்ததைத் தான் உண்டு, பிச்சை ஓட்டினைக் கழுவித் தலைக்கு அணையாக வைத்து உறங்கிய அவன் அந்நள்ளிரவில் அவர்கள் பசியை எவ்வாறு நீக்குவன்? வழியொன்றும் அறியானாகி, '"அன்னையே! இவர்கள் உற்ற துயரை நீதான் நீக்கியருள வேண்டும்; அடியனது மட்கலத்தில் ஒரு சிறு பருக்கையும் இல்லை; ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லா எளியேன் என்பதை இவர்கள் அறியாது என்பால் உணவு வேண்டி நிற்கின்றனர். இந்நடு இரவில் எங்கு சென்று உணவு கொண்டு வருவேன்?'' என்று அக்கோவிலில் எழுந்தருளியுள்ள கலைமகளை மனதில் பலவாறு துதித்துக் குறையிரந்து நின்றான். என்ன வியப்பு! அன்னமென, மின்னலென ஓர் பெண்ணரசி தோன்றினாள். அக்காட்சி ஆமகன் கண்களுக்கே புலனாயிற்று. “தாயே! வாழிய நின் மலரடிகள்; வளர்க நின் மெய்க்கீர்த்தி, என்று வணங்கினான். அப்பொற்கொடிபோல் வாள், ''மகனே! வருந்தேல்; நினது மனக்குறை நீங்க ஓர் மட்கலம் தருகின்றேன்; அக்கலத்தினின்று உணவு எடுக்குந்தோறும் வளர்ந்து கொண்டேஇருக்கும்; நாடு முழுவதும் வறுமைப்பிணியால் வருந்த நேரினும் இவ்வோடு வறுமையடையாது. இக்கலத்தில் உள்ள உணவைக் கொண்டே இந்த நாட்டில் வாழும் அனைவரின் பசியையும் நீக்கலாம். அவர்கள் அனைவரும் 'போதும், போதும்' என்று தங்கள் மனநிறைவை வெளியிடும் வரை உணவு வளர்ந்துவரும்; ஆதலின் இவ் வோட்டினைக் கொண்டு இவர்கள் அடைந்த துயரை நீக்குவாய்; இவ்வோட்டின் பெயர் அமுத சுரபி' என்பது; இதனைப் பெறுக'' என்று கூறித் தன்கையில் இருந்த கலத்தினை அவன் கையில் தந்தாள். ஆபுத்திரன் அதைப் பெரும்கிழ்வோடு குனிந்து வாங்கி,

 

“சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து

            நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!

வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!

ஏனோர் உற்ற இடர்களைவாய்!"


என்று பலவாறு துதித்து வணங்கினான். வழி நடையாலும் பசித் துயராலும் உடல்மெலிந்து ஆமகனை யடைந்தவர்கள் இத்தெய்வக் காட்சியைக் காணார்; அத்தெய்வம் பேசிய மொழிகளும் அவர்கள் செவிப்புலனுக்கு எட்டவில்லை. எனினும் வறிய மட்கலம் ஒன்று கீழே கிடக்க, முல்லைமலரைப்போன்ற வெண்மை நிறமுடைய சோறு நிறைந்த வேறு ஒரு புதிய மட்கலத்தை ஆபுத்திரன் கையில் ஏந்திக் கலைமகளைத் துதிப்பதைக் கண்டு வியப்புற்றனர். பின்னர் ஆமகன் தன் கையகத்துள்ள சிறிய கலத்திலிருந்த உணவைக் கொண்டு அவர்கள் அனைவரின் பசித்துயரை ஒழித்தான். பசி தீர்ந்த அவர்கள், ''இவ்வொரு சிறு கலத்திலிருந்தே நம் அனைவரின் பசியை ஒழித்தும், முன்பு போலவே அக்கலம் நிறைய தூய வெள்ளிய சோறு இருக்கின்றதே'' என வியப்பு மிக்கனர். ''உண்மையில் இவன் மாநுடன் அல்லன், தேவனே'' என்று கருதி அச்சமும் பத்தியும் மேலிட்டவராய் அவனை வணங்கி, "ஐயனே! தங்கள் பெருமையில் ஒரு சிறுபகுதியையும் நாங்கள்
உணரோம்; இது பொழுது நீங்கள் செய்த உதவிக்கு சிறு மா நுடராகிய நாங்கள் யாது செய்ய வல்லோம்?" என்று போற்றினர். அது பொறாத ஆமகன் பெரியீர்! எளியேன் புதுமை யொன்றும் செய்யவில்லையே; யான் அசுரனும் அல்லன், தேவனும் அல்லன்; ஒரு சிறு மா நுடனே; எனக்கு உள்ள பெருமை யாதோ? அடியேன் தங்களைக் காணும் பேறு பெற்றமையினாலேயே பாவியேன் புனிதனானேன். உலக அன்னையின் ஒப்புயர்வற்ற காட்சி இன்று ஏழையேன் காணப்பெற்றேன்; அப்பெருமாட்டி பவளவாய் திறந்து கூறிய அமுதமொழிகளைக் கேட்கவும் பெற்றேன்; அத்துடன் இத்தெய்வத் திருக்கலத்தையும் பெற்றேன். இவ்வரும் பேறு தங்களாலேயே கிடைத்தது. ஆதலின் யானே தங்கட்கு என்றும் கடமைப்பட்டவன்', என்று கூறி அவர்களை மகிழ்வித்தான். அன்றிரவு அவர்கள் அம்பலத்திலேயே ஆமகனோடு தங்கியிருந்து புவரியில் எழுந்து சென்றனர்.

 

ஆமகன் அவர்கட்குச் செய்த உதவி சிறிதெனினும் துன்பம் நேர்ந்த காலத்துச் செய்தமையால் மிகப் பெரிதாகும். அன்றியும் ஒருவன் செய்த சிறிய உதவி மேன்மக்கட்குச் செய்யப் பட்டதாயின், அது அகன்று பரந்த ஆகாயத்தினும் பெரிதாகிப் பரவி வளரும்.


"தான் சிறிதாயினும் தக்கார் கைப்பட்டக்கால்
வான் சிறிதாப் போர்த்து விடும்”


என்ற ஆன்றோர் மொழி அதனை நன்கு புலப்படுத்தும். ஆகமன் உயர் குணங்கள் வாய்ந்த உத்தமன் என்பதை நாம் அறிந்துள்ளோம்; அவனால் பசி தீர்ந்து சென்ற வழி நடையாளர்களும் நல்லவர்கள் என்பது, அன்றிரவு ஆமக னோடு சிறிது பொழுது உரையாடியதி லிருந்து புலப்படும். இங்ஙனம் உதவி செய்தவனும், செய்யப் பெற்றவர்களும் ஆகிய இருவகையினரும் நல்லவராகவே அவ்வுதவி இம்மண்ணுலகமும், விண்ணுலகமும் சிறிதாகுமாறு வளரு மன்றோ? அப்புதுமையை நாம் இனி காண்போம்.

 

ஆபுத்திரனால் பசி தீர்ந்து, புலரியில் எழுந்து சென்ற அவர்கள் வழியில் காணும் அனை வரிடத்திலும் ஆபுத்திரனது அருட் பெருக்கையும், பிறஉயர்ந்த குணங்களையும் பாராட்டிப் பேசி, அன்று இரவு தங்கள் பசியை நீக்கிய புதுமையையும், அவன் பெற்றுள்ள 'அமுத சுரபி' என்னும் தெய்வத் திருக்கலத்தின் பெருமையையும் விதந்து கூறிச்சென்றனர். அவ்வழி நடையாளர் களால் அச்செய்தியைச் செவிமடுத்தவர்கள் தங்கட்கு அறிமுகமானவர்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கூறினர். இங்ஙனம் அன்று பகலிலேயே மதுரைப் பட்டினத்திலும், அதனையடுத்த சிற்றூர்களிலும் ஆபுத்தி
ரன் பெயரோடு அமுத சுரபி என்னும் பெயரும் உலாவத் தொடங்கிற்று. இனி கேட்க வேண்டுமா? உலக முழுவதும் ஒருகுடைக்கீழ்ஆளும் மன்னவனாலும் இயற்றவியலாத அறவேள்வி ஆபுத்திரன் செய்யத் தலைப்பட்டான். அவ்வேள்விக்கு உரிய அதிதிகளாக மதுரை மாநகரில் உள்ள கூன் குருடர் செவிடான்றி, அந் நகர்க்கு அருகிலும், அதற்கு நெடுந்தூரத்திலும் உள்ள கிராமங்களில் இருக்கும் உடற்குறைவினரும் பிணியாளரும் வந்து சேர்ந்தனர். அம்பலத்தில் உண்போர் ஒலி மிகுந்தது. ஆபுத்திரன் அனைவருக்கும் திருக்கலத்தில் இருந்த உணவை அள்ளியள்ளி வழங்குகின்றான். எல்லோரும் வயிறு நிறைய உண்டு ஆமகனை வாயார வாழ்த்திச் செல்கின்றனர். அம்பலத்தைச் சுற்றிலும் சிதறிக் கிடக்கும் சோற்றை காய்களும் பிறவும் ஒன்றற்கொன்று பூசலிட்டுக் கொண்டு உண்டன. அவற்றிடையே காக்கைகளும், பிற புள்ளினங்களும் பறந்து பறந்து வந்து, சோற்றை அள்ளிக் கொண்டு போய் மரங்களின் மீதும், மாளிகைகளின் மீதும் அமர்ந்து உண்ணத் தொடங்கின. ஒளி குறைந்த உடுக்களின் இடையே விளங்கும் முழுமதிபோல, பிச்சைக்காரர்களின் இடையே இருந்து அவர்களின் சோர்வை நீக்கும் ஆமசன், பசிக்கொடுமையால் விலங்குகளும் பறவைகளும் சிதறிய சோற்றிற்குப் போராடுவதைக் கண்டான். உடனே மனம் இரங்கி அம்பலத்தினின்றும் வெளிவந்து வெள்ளிய சோற்றை அவைகட்கும் வழங்கினான். நாய்கள் வயிறு நிறையவுண்டு, வாலை யசைத்துத் தம் நன்றியறிதலைத் தெரி
வித்தன. காக்கைகள் மகிழ்ச்சிப் பெருக்கோடு ''கா கா" என்று கத்தின. வேறு புட்களும் பலவாறு ஒலித்தன. இங்ஙனம் மக்கள் ஒருபால் ஆபுத்திரனைச் சூழ்ந்து நிற்க, மற்றொருபால் விலங்குகளும் பறவைகளும் சூழ்ந்து நின்றன.

 

''பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம்

நயன் உடையான்கட் படின்

 

என்ற பெரு நாவலரின் மொழிக்குத் தகுந்த எடுத்துக் காட்டாக விளங்கினான் ஆமகன். காரணம் இன்றிக் கண்டவுடனே பகைக்கும் ஒரே இனமாகிய நாய்களும் நம்முட் பொறாமை யொழிந்து அவன் வழங்கும் அமைதியொடு உண்டு சென்றன. இயற்கையிலேயே தம் இனத்தைப் பொறுத்தவரையில் ஒற்றுமை யுடைய காக்கைகள் பிற புள்ளினங்களையும் உடன் சேர்த்து உணவு கொண்டன. பசிதீர்ந்த மக்கள் ஆபுத்திரனை வாழ்த்தும் பேரொலியும், மகிழ்ச்சிப் பெருக்கால் பறவைகள் ஒலிக்கும் ஆரவாரமும் மிகுந்தன. இவற்றை யெல்லாம் கண்ட ஆபுத்திரனுக்கு மகிழ்ச்சி மிக்கது; முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது. ''இதனினும் சிறந்த இன்பம் வேறு எங்கு உளது? துறக்கம்' என ஒன்று; கூறுகின்றனரே, அதில் தான் உண்டோ?'' என மகிழ்ந்தான்.

 

8. இந்திரனும் ஆமகனும்.

 

ஆபுத்திரனது பெயர் பாண்டிய நாட்டிலன்றி மற்றைய நாடு களிலும் பரவிற்று.
பரவிற்று. ஆங்காங்கு உள்ள குருடரும், முடவரும் அல்லாமல் உழைத்து உண்பதற்குச் சோம்பிய உடல் வலிமையுடைய பிறரும் ஆமகனை யடுத்து வயிறு வளர்க்கலாயினர். அவன் இன்னார் இனியார் என்பதைப் பாராது, அனைவர் பசியையும் நீக்கி வந்தான். முன்பு ஒரு நாள் இரவு ஆமகன் சிலருக்குச் செய்த உதவி மண்ணும் விண்ணும் சிறிதாகுமாறு வளரும் எனக் கூறினோ மல்லவா? இப்பொழுது அவன் புகழ் மண்ணுலகம் முழுவதும் பரவியதை அறிந்தோம். இனி விண்ணுலகில் எவ்வாறு படர்ந்துளது என்பதைக் காண்போம். தேவர்கோன் வீற்றிருக்கும் ஆதனத்திற்குப் "பாண்டு கம்பளம்" என்று பெயர். அஃது வெண்மை நிறம் வாய்ந்திருப்பதால் "பாண்டு கம்பளம்'' என்ற பெயர் பெற்றது. இந்திரனுக்குத் துன்பம் நேரவிருக்கும் காலத்தில் அவ்வாதனம் அசைதல் வழக்க
மாம். ஒருநாள் இந்திரன் பாண்டு கம்பளத்தில் வீற்றிருந்த பொழுது அக்கம்பளம் அசைந்து
நடுங்கிற்று. அவ்வளவில் இந்திரனும் நடுக்க முற்றான். தனக்கு நேரவிருக்கும் துன்பம் எத்துணைக் கொடியதாக இருக்குமோ என அஞ்சினான். தீய அசுரர் சூழ்ச்சியோ, துருவாசரைப் போன்ற பொறுமையிழந்த முனிவரின் வெஞ்சினமோ, இனி நிகழவிருப்பது யாதோ என உடல் வியர்த்தான். இதனைக் குறித்து வேறு சிலருடன் சிந்தித்தான். கொடிய அசுரர் பகையும் இல்லை; தூவாசரைப்போன்ற முனிவர்களின் வஞ்சினமும் நிகழ்வதற்கில்லை. மண்ணுலகில் ஒருவன் புண்ணிய மிகுதி புரிவதை யறிந்தனர். ''தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறியேறிற்று" என்பது ஒரு பழமொழி. இங்கு அப்படியும் இல்லை. பூவலகில் ஒருவன் புண்ணியம் பெருக்கி வாழ்கின்றான். அதனால் தேவர்கோன் அச்சம் அடைகின்றான். என்ன வாழ்வு இந்திரன் வாழ்வு? நல்லவரும் ஆகாது, தீயவரும் ஆசாது என்றால் அவ்வாழ்வில் என்ன பெருமையுளது? அசுரர்கள் தான் ந்திரன் பதவியைக் கவர முயல்வர் எனின் ஒருவன் புண்ணியம் மிகுதி புரியின், அப்புண்ணியமே அவனை அவ்விந்திரன் பதவியிற் கொண்டு சேர்க்கும்.
அதனால் இந்திரன் தனது பதவியை இழக்க நேரிடும். அமரர்கோனுக்கு இதனினும் கொடியதுன்பம் வேறு யாதுளது? இங்ஙனம் வாழ்பவன் நமது ஆபுத்திரனே - என்பதை நேயர்கள் முன்னரே உணர்ந்திருக்கலாம் பாண்டு கம்பள நடுக்கத்திற்கு ஆபுத்திரனது அறச்செயல் தான் காரணம் என்று அறிந்த அமரர்கள் அவன் மனநிலையை அறிந்தனரில்லை. அச்சத்தால் அறிவு தடுமாறினர் போலும். இனி ஆபுத்திரனது அறச்செயலைத் தடைசெய்வதற்கு அமரர்களொடு கலந்து இந்திரன் ஓர் சூழ்ச்சி செய்யத் தலைப்பட்டான். மண்ணுலகிற் பரவி வளர்ந்த ஆபுத்திரன் புகழ் இப்பொழுது விண்ணுலகில் பரவிய புதுமையை அறிந்தோ மல்லவா?

 

துரை நகரிலே, சிந்தாதேவியின் அம்பலத்திலே, அப்பெருமாட்டியளித்த தெய்வத் திருக்கலத்தோடு, ஏழைமக்களின் இடையே ஆபுத்திரன் திருவோலக்கம் கொண்டிருக்கின்றான். அவன் முன்னர் வளைந்த முதுகும் குழிந்த கண்களும் ஒட்டிய கன்னமும் உடைய ஓர் கிழவேதியன் தளர்நடையுடன் வந்து அடைந்தான். 'ஐயரே, வருக, வருக; தங்கள் திருவடி வருந்த இங்கு வந்து எளியேனுக்குக் காட்சி தந்தமையால் அடியேன் புனிதனானேன். இவ் ஏழையை ஒரு பொருளாக மதித்து இங்கு எழுந்தருளினமை யாது கார்ணமோ?" என்று பணிவோடு வினவினான் ஆமகன். பார்ப்பனர் அனைவரும் ஆ கவர் கள்வன்'' என்று இகழ்ந்து, உண்ணுங் கடிஞையில் மண் இட்ட செயலை இவன் அன்றே மறந்தானாபினும், '' அவர்கள் தன்பால் பெறக்கூடிய பொருள் யாது உனது? உணவு ஏற்பதில்லையே'' என்ற ஐயத்தால் தான் அவன் அவ்வேதியர் வருகைக்குக் காரணம் வினவினான் "மைந்தனே, வாழ்க பல்லாண்டு; நினது உயர்ந்த செய்கையே என்னை உன்பால் கொணர்வித்தது. இறைவன் என்னைச் சிறிது நல்ல நிலை மையிலேயே வைத்திருக்கின்றான், இம்முதுமையும் யானே தேடிக்கொண்டது. நினது உயர்ந்த குணமும், அறச்செயலும் கேட்டு மகிழ்ந்த யான் நீ விரும்பின் ஏதாவது அளித்துப்போகலாம் என்று வந்தேன்'' என்றான் அம்மறைபவன்.

 

“பெரியீர், தங்கள் பேரன்பிற்த வணக்கம்; உலக அன்னை உவந்து அளித்த இத்தெய்வத் திருக்கலம் ஒன்று போதும்; இவ்வுலகு மகிழ்வதற்கு உரிய பொருள் வேறு யாதுளது?"

 

“இவ்வுலகு மட்டுமா மகிழ்கின்றது நின் புண்ணியச் செயலை யறிந்து மேல் உலகும் பெருமகிழ்வு அடைந்துளது. அஃதிருக்கட்டும்; அறச்செயலின் விழுப்பயனை அனுபவித்தல் வேண்டாமா? பிறர் களிப்போடு வாழ்கின்றன ரென்றால், நீ அவ்வின்பமும் மகிழ்வும் பெற வேண்டாவோ?"

 

"அன்புடையீர், இன்பமும் மகிழ்வம் என்பால் இல்லையென்றா நினைக்கின்றீர்கள்? இதோ, பாருங்கள். எத்துணைப் பெயர்கள் பசியொழிந்து துயர் மறந்து மலர்ந்த முகத்துடன் வீரறிருக்கின்றனர்! இங்ஙனம் இவர்கள் செம்மார்து வீற்றிருப்பதைக் கண்டு என் உளம் அளவிரந்த மகிழ்ச்சி யடைகிறது. இதனினும் சிறந்த இன்பம் அளிப்பது வேறொன்று இருப்பதாக அடியேன் நினைக்க வில்லை"

 

“நீ கூறுவது உண்மைதான்; ஆனால், விண்ணுலகம் என்று கேட்டிருப்பாயே, அங்கு வாழும் அமரர்களின் நிலைமையை அறிவையா? என்ன அவர்களின் இன்பவாழ்வு! ஒருவனுக்கு முதுமைப் பருவம்போலத் துன்பம் தருவது வேறொன்று இல்லை எவ்வளவு செல்வம் இருப்பினும், அதனில் ஒரு சிறிதாவது அநுபவிக்கும் பேறு முதுமைக்கு இல்லை. அவன் சொல்லை அவனுடைய சொந்த உறுப்புக்களே போட்டு நடவா. கால் ஓர் இடத்திற்குச் செல்ல இயலாது தடுமாற்றம் அடையும்; கை ஒரு பொருளை எடுக்க முயலும் பொழுதே டுக்கமுறும்; உடலை வளர்ப்பதற்கு உரிய உணவை யேற்றுக் கொள்ள அவன் வயிறு மறுக்கும். கண்களும் செவிகளும் தம் தொழிலை மறக்கும். என்ன கொடுமை! அவன் உறுப்புக்களே அவனுக்குக் கீழ்படியாவிடின், வேறு எவர் அவனை மதிப்பர்? பிணிகள் அனைத்தும் எமது எமது என்று தேடிவரும் பருவம் அம்முதுமைப் பருவமேயாகும். அதுபொழுது ஒரு சிறு நோவுவரினும் அது மலைபோலத் தோன்றி வருத்தும். அதுவமன்றி, என்ன அருவருப்பு; அவர்களைக் கண்ணால் பார்க்கவும் மற்றைய பருவத்தினர்க்குச் சகியாது' இங்ஙனம் அம்மறையவன் கூறிக்கொண்டே இருக்கையில் ஆபுத்திரனுக்குத் தன்னை யறியாது நகைப்பு இவரே முதியவராக இருந்து கொண்டு அப்பருவத்தின் இழிவைக் கூறுகின்றரே என்பது அவன் சிரிப்பிற்குக் காரணமாகலாம்.

 

"அன்பனே, நினது நகைப்பின் சாரணம் அறிவேன். யானே எனது நிலைமையைப் பழித்துப் பேசுகிறேன் என்பது தான் அது! இம்முதுமையை நானே வருவித்துக் கொண்டது என முன்பு கூறினதை நீ மறந்திருச்சு மாட்டாய். விரும்பின் இசகிழப்பருவத்தை விடுத்து, நல்ல காளைப் பருவம் அடைய என்னால் முடியும். யான் இப்பொழுது கூறியதிலிருந்து முதுமையின் சொடுமையை அறிந்திருப்பாய். இம் முதுமை நிலைக்கு வராது இருக்க விருப்பம் இல்லையா? விண்ணுகில் வாழ்கன்றார்களே தேவர்கள், அவர்களுகு இத்தகைய துன்பம் இல்லை; முதுமை யென்பதே கிடையாது”

 

ஆபுத்திரன் முன்னையிலும் அதிகமாக நகைத்தான். அவ்விண்ணவர் வாழ்க்கையை அவன் முன்னமேயே நன்கு அறிந்திருக்கின்றா னல்லவா?

 

"என்னால் உனக்கு விண்ணுலக வாழ்வு கொடுக்க வியலாதென்றா நகைக்கின்றாய்? என்னை இன்னார் என அறிந்திருப்பின் உனக்கு இவ்வையம் நிகழாது. அவ் விண்ணுலகை ஆட்சி புரிபவன் நான் தான்; இந்திரன் எனப்படுவேன்"

 

“ஐய, தங்கட்கு மீண்டும் ஒருமுறை வணக்கம். அமரவாழ்வு அடியேற்கு அளிசசத் தங்களால் இயலாது என்பது எனது ஈருத்தன்று. முதுமையன்றி இளமைப் பருவமே பெற்றிருப்பனும் அவர்கட்கு மட்டும் துன்பம் இல்லையா? அவர்கள் துய்க்கும் இன்பம் என்றும் அழியாது இருப்பரல்லவே. அவனவன் தத்தம் நலத்தைப் பொடி தன்று கருதி வாழ முயல்வதினும், எல்லாரும் இன்புற்று இருக்க முயல்வதுவே மிகச் சிறந்ததாகும். இத்தகைய துறையில் ஈடுபட்ட உத்தமர்கள் மிகப் பலராவர். இவ்வருஞ்செயல் தங்கள் நாட்டவர்க்குப் புதுமையேயாகும். என்றும் அழியாத இன்பத்தை நல்கும் இறைவன் திருவடி நீழலை அடைய விரும்பி அவன் திருவருளையே அல்லும் பகலும் நினைந்து வாழும் துறவிகளைச் தன்னிடத்தே பெற்ற பெருமை வாய்ந்தது இ-பூவுலகு ஒன்றே! இங்ஙனம் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகிய பெரியாரும், பேரின்பத்தை விழைந்து முயலும் துறவிகளும், இன்னோரன்ன பிற சீரியரும் இல்லாத தேவா நன்னாட்டிற்கு இறைவனாகிய வலிமை மிக்க அரசே! பசியால் மெலிந்தோரின் அரிய பசியைத் தீர்த்து, அவர்களின் மகிழ்ச்சி நிறைந்த இனிய முகத்தைக் காட்டுகின்ற தெய்வத்திருக்கலம் என் பால் இருக்க, என் விருப்பிற்கு உரிய வேறு ஒரு பொருளும் உளதோ? ஐய! * எனக்கு அன்புடன் அளிக்க விருமபுவன யாவை? உண்டியா, உடையா? பெண்டிரா, பிறரா?'' என்று கூறி நகைத்தான்.

 

அவன் நகைப்பு வாசவன் மனதை வருத்தியது. "நாம் இவனைப் பாராட்டிப்பேசி, வேண்டியன பெற்றுக்கொள் என்று நாமே முற்பட்டு வந்து கூறினமையாலன்றோ இச்சிறுவனுக்கு இவ்வளவு செருக்கு உண்டாயிற்று? இவன் கையகத்து இருக்கும் இந்த அற்பக் கடிஞையைப் பெரிதென்று மயங்கி என் வலிமையையும் பெருமையையும் அறியாது இகழ்ந்தான். இனி இவன் பெற்றிருக்கும் கலம் பயன்படும் வகையும், அதனால் இவன் அறிவு தடுமாறிச் செம்மாந்து இருக்கும் நிலையும் எத்துணை நாட்கள் நிலைத்து நிற்கப் போகின்றன?" என்பன போன்ற அளவிறந்த எண்ணங்கள் அவ்வேதிய விருத்தன் நெஞ்சில் உதித்தன. 'சிறியோய்! என்னை நீ இன்னவன் என்று அறிந்திருந்தும் மதியாது பரிகசித்தாய்; இதன் பயனை விரைவிற் காண்பாய்'' என்று வஞ்சினம் கூறிச் சென்றான் மறையவர் கிழவனாக மாயவேடம்பூண்ட வானவர் தலைவன்.


9. செல்வச் செருக்கு

 

ஒரு நாள் பிற்பகலில் மதுரையம்பதியை அடுத்துள்ள ஓர் சிற்றூரில் ஒருவன் "உண்போர் எவரேனும் உளரோ? உண்போர் எவரேனும் உளரோ?" என்று தெருத்தெருவாய்க் கூவிச் சென்றான். அவ்வூரார் அனைவரும் அவனைப் பித்தன் என்று இகழ்ந்து பரிகசித்தனர். அதற்கு ஏற்ப சிறுவரும் சிறுமிகளும் அவனைச் சூழ்ந்து சிறு கல்லையும் மண்ணையும் அவன் மீது எறிந்து கைகொட்டி நகைத்தனர். அவன் மனம் வருந்தி அவ்வூரினின்றும் நீங்கி வேறொரு கிராமத்தை யடைந்தான். அங்கும் ''உண்போர் எவரேனும் உளரோ?" என்று கூவினான். என்ன புதுமை! அவ்வூராரும் முன்னைய கிராமத்தாரைப் போன்றே பரிகசித்து வெருட்டினர். இதற்குள் அவனை இன்னவனென்று அன்பர்கள் உணர்ந்திருக்கலாம். நம் வரலாற்றுத் தலைவன் ஆபுத்திரனே அவன். இந்திரன் வஞ்சினம் பலித்தது. பல வருடம் மழையின்றி வருந்திய பாண்டிய நாடு இதுபொழுது இந்திரன் ஆணையால் மழை வளம் பெருகி உணவப் பஞ்சம் ஒழிந்தது. மழையின்றிக் காய்ந்த அக்காலத்து மக்கள் அனைவரும் “பசி பசி' யென்று கதறினர். அது பொழுது அறக்கூழ்ச்சாலையும், பிறவும் செல்வர்கள் பலர் நிறுவினர். எனினும் ஏழைகள்', அனைவரும் வயிறு நிறைய உண்பதற்கில்லை. அது சமயந்தான் ஆபுத்திரன் தெய்வத் திருக்கலம் பெற்று பசி யென்னும் சொல்லை அனைவரும் மறக்குமாறு செய்துவந்தான். அதன் பின்னர் அவன் புரிந்த அறச்செயல் வளர்ந்ததும், இந்திரன் வந்ததும், சென்றதும் அறிந்துளோம். சென்ற வாசவன் பாண்டிய நாட்டில் நீர்வளம் பெருக மழை பெய்யும்படி மேகங்களுக்கு ஆணையிட்டான்.


பாண்டியன் சீமையிலே பரவின மேகமெல்லாம்

குமுறியடித்துக் குடங்கொண்டு பொழிவதுபோல்

சோனா மழையாகச் சொரிந்தன பூமியெங்கும்

நல்ல மழையாலே நாடு செழித்ததுவே

பூமி குளிர்ந்த துவே பொய்கைகள் நிரம்பியன

ஏரி குளம் நிரம்பிப் புரளுதே வெள்ளமெங்கும்

உலர்ந்த மரங்களெல்லாம் உயிருண்டாய்த் தளிர்த்தனவே

செடிகள் கொடிகளெல்லாம் பூத்துச் சொரிந்தனவே

காயா மரங்களெல்லாம் காய்த்துப் பழுத்தனவே

வாழை வடக்கீனும் வான் கமுகு தெற்கீனும்

ஏர்கட்டி உழுவார்கள் இள நாற்று நடுவார்கள்

கரும்பும் இளநீரும் கண் திறந்து மடைபாயும்

செந்நெல் விளைந் தனவே செழிப்பான பூமியெங்கும்”

கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்

அரிதாள் அறுத்துவா மறுதாள் பயிராகும்

அரிதாளின் கீழாக ஐங்கலத்தேன் கூடு கட்டும்

யானை கட்டும் தூறாகும் வானமுட்டும் போராகும்

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்செலென்று

யானை கட்டிப் போரடிக்கும் வளப்பம் நிறைந்ததுவே.''

 

அதனால் பாண்டிய நாட்டில் பசித்துயர் ஒழிந்தது. ''சினங் கொண்டு சென்ற வாசவன் ஆமகனுக்கு எத்தகைய தீங்கு செய்வனோ? அச்செய்கையால் நாடு என்ன கேடு எய்துமோ?" என்று ஐயுற்று அஞ்சிய நமக்கு இசசெயல் வியப்பு விளைவிப்ப தொன்றல்லவா! எனினும் இதனால் நாம் ஓர் உண்மை அறிவதற்கு உளது. நல்லவர் என்று போற்றப்படுபவரைத் துன்புறுத்தவோ, கெடுக்கவோ பிறரால் இயலாதென்பதும்; கெடுக்க முயலின் அம்முயற்சியும் நன்மையாகவே முடியுமென்பதும் இந்நிகழ்ச்சியால் பெறப்படுகின்றது அரிச்சந்திரன் வாய்மையைக் கௌசிக முனிவரும், நளனுடைய செம்மையைச் சனிபகவானும் பெடுப்பதற்குச் செய்த முயற்சியே, அவர்கள் விருப்பிற்கு மாறாக முன்னவன் வாய்மையையும், பின்னவன் சீர்மையையும் உலகு அறியச் செய்வதற்கு ஏதுவாயிற்று. இங்கு வாசவன் ஆபுத்திரன் அறச் செயலைக் கெடுக்க முயன்ற சூழ்ச்சி அனைவர்க்கும் நன்மை பயப்பதாகவே முடிந்தது.

 

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.''


என்ற தமிழ் மூதாட்டியார் இவ்வாபுத்திரன் வரலாற்றை மனத்துட் கொண்டு தான் கூறியிரப்பர் போலும். இந்திரன் செயலால் எவர்க்கும் துன்பமில்லை யெனினும் ஆபுத்திரன் நிலைமையையும் அவ்வாறு நினைக்கலாமா? அவன் மனம் நொந்து, உடல் மெலிந்து ஊர் ஊராக அலைந்து திரிகின்றான். வன்பெற்றுள்ள அருங்கலம் மறைந்தோ, அழிந்தோ போகவில்லை; அல்லது அக்கலம் அவன் பசிக்கு உணவு கொடுக்க மறுக்கவுமில்லை. அங்ஙனம் இருந்தும் அவன் துன்புறுவதற்கு நேர்ந்த காரணம் அவன் தன்னலம் மறந்து வாழ்வதுதான். தொட்டனைத்து ஊறும் மணற்கேணிபோல எடுக்குந்தோறும் வளகும் அப்போனக அருங்கலம் தன் பொருட்டு வைத்திருப்பது அவன் மனதிற்கு ஒவ்வவில்லை. மழை வளம் பெரு+வே முன்பு போல் பலரும் ஆமகன் பால் உணவு ஏற்கவரவில்லை. அவன் சிந்தாதேவியின் அம்பலம் நீங்கி, மதுரை நகரின் ஒவ்வோரிடத்தும் உண்போரைத் தேடியலைந்தான். என்ன பேதமை! முன்பு அவனால் உணவு அளிக்க உயிர் பிழைத்த பலரும் அவனை மதியாது இகழ்ந்தனர். இதுதான் நல்லோர்க்சம் அல்லோர்க்கும் உள்ள வேற் நல்ல எம் உடையவராயின் அது பொழுது உள்ள நிலைமையைக் கூறி, அவன்பால் உணவு ஏற்கப் பணிவோடு மறுத்திருக்கலாம். செருக்கால் அறிவிழந்த அவர்+ள் மறுத்ததோடு இ+ழவும் தலைப்பட்டனர். இதனால் அவன் மதுரை நீங்கிச் சிற்றூர் பலவற்றிலும் உண்போரைத் தேடினான். அங்கும் மதுரை நகரில் கண்ட காட்சியே கண்டான். என் செய்வான் ஆமகன்? ''கலைமகள் நிலையத்திற்கு முன்னுள்ள அம்பலத்தில் குருடரும், முடவரும், பிணியாளரும் கிறைத் திருந்தனரே, அவர்களை மட்டுமாவது உண்பிப்போம்'' என்று கருதி அவன் சிற்றூரின் நீங்க அவ்வம்பலம் அடைந்தான். அங்கே அவன் சண்டகாட்சி அவன் மனதிற்கு "வெந்த புண்ணில் வேலிட்டதுபோல்'' இருந்தது. வலிமையற்ற மக்களும், விலங்குகளும், பறவைகளும் அங்கே காணப்படவில்லை. அவர்கள் உண்பதால் எழும் இனிய ஒலியும் இல்லை. அதற்கு மாறாக தீய நடக்கையினையுடைய காமுகரும், வஞ்சகரும், பிறரும் ஆங்கே நிறைந்திருந்தனர். உண்டை யுருட்டலும், சூதாடலும், வம்பு பேசலும் ஆகிய மறச்செயல்கள் அவ்வ பலத்தே மிக்கிருந்தன. சிறிது காலத்திற்கு முன்பு, அவ்வம்பலத்தில் ஏழை மக்களின் இடையில், அவர்கள் அரும்பசி களைந்து பெருமிதத்தோடு வீற்றிருக்க ஆபுத்திரனுக்கு இக்காட்சி அள விறந்த துயரம் ஊட்டியது. இன்னது செய்வது என்று அறி பானாகி, அம்பலம் நீங்கி, மீண்டும் மதுரையம்பதியின் நீண்ட தெருக்களில் உண்போரைத் தேடித் திரிந்தான். ஒருவராவது அவனிடம் உணவு வேண்டிவரவில்லை.


''பெறற்கு அரும்பொருளைப் பெருங்கடல் வீழ்த்து

ஒரு தனி வரும் நாபதி போலத்

தின்னக்கனியே இன்னல் மிக்கு உழன்று     

மதுரை நகரின் பெருந்தெரு ஒன்றில்

கண்ணீர் வடியக் கால்நடை தளரா'' வந்து கொண்டிருந்தான்.

10. அறத்தின் சோதனை.

 

நம் இந்திய நாட்டின் தென் கீழ்த் திசையில் சாவகநாடு என ஒன்று உண்டு. நீர்வளமும் நிலவளமும் உடையது. “கன்னல் கமுகின் எழில் காட்டும்'' என்பது அந்த நாட்டில் பயிராகும் கரும்பிற்குத்தான் பொருந்தும். பருமனிலும், நீளத்திலும் சிறந்து விளங்குவதைப் போலவே இனிப்பிலும் இணையற்றது. "'ஜாவா' சர்க்கரையென நம் நாட்டில் விலையாகும் அதனோடு நமது நாட்டில் உண்டாகும் சர்க்கரை போட்டிபோட இயலாததை நாம் இன் காண்கிறோம். அத்தகைய நாட்டில் பல வருடங்களாகப் பருவமழை இல்லாது போயிற்று. அதனால் அங்கு மக்கள் உணவின்றி வருந்தினர். விலங்குகளும், பறவைகளும் உணவில்லாது மடிந்தன. பருகுதற்கும் நீர் அரிதாயிற்று. அச்சமயத்து ஆபுத்திரன் புகழ் சாவக நாட்டில் பரவியது. "அவ்வறமகன் உதவியால் நம்
நாடு நலம் பெறும்; ஆதலின் அப்பரமோப காரின்யை இங்கு அழைத்து வருவோம்" என்று வணிகர் சிலர் கப்பல் ஏறிக் கொற்கையம்பதியில் இறங்கி, அந்நகர் மக்களிடத்து 'ஆபுத்திரன் யாண்டு என்?" என வினவினர். அவர்கள் "அவன் மதுரையம்பதியில், சிந்தாதேவி யின் அம்பலத்தில் அனைவர்க்கும் உணவு தந்து உயிர் அளித்து வருவதாகக் கேள்வி யுற்றோம்; இப்பொழுது பாண்டிய நாட்டில் பசிப்பிணி யில்லை; அதனால் அவன் அவ்வம்பலத்திலேயே வதிகின்றனனோ, வேறிடம் சென்றனனோ அறியோம்'' என்றனர். சாவக நாட்டு வணிகர் மதுரை மூதூர் அடைந்து, கலைமகள் நிலய மன்றத்துள் ஆபுத்திரனைக் காண நுழைந்தனர். அங்கே சூதாடுவோரும், வீண் உரை பேசுபவரும், மதுக்களியால் மதிமயங்கித் தாம் செய்வது இன்னது என்று அறியாது தடுமாறும் கட்குடியரும் ஆய தீய மக்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, ''இக்குழுவிலா நாம் விரும்பி வந்த அறமகன் இருப்பான்?'' என்று தடுமாற்றம் அடைந்தனர். அங்கு இருந்தவருள் ஒருவளை அணுகி, "ஐய, கையில் உண்ணும் பாத்திரம் ஏந்தி அனைவர்க்கும் அமுது அளித்த புண்ணியன் எங்கே?'' என்று வினவினர். 'புண்ணியனும் இல்லை, கண்ணியனும் இல்லை; போ'' என்று பதிலளித்தான் அவ்வெறியன். இப் மறு மொழியால் மனம் வருந்திய வணிகர் மேல் ஒன்றும் கூறாது, அம்பலம் நீங்கி மதுரை நகரின் பெருக்தெரு ஒன்றை யடைந்து, அங்கே கடமாடும் மக்களிடத்து ஆமகனை அறிய முயன்றனர். அவர்கள் கூறிய மறுமொழி அம்பலத்தில் வெறியன் கூறிய மொழியினும் கலக்கம் தருவதா யிருந்தது, "ஆபுத்திரனா? அனைவர்க்கும் சோறு வழங்கினனா? உங்கட்கு ஏதேனும் பித்தேறியதோ?" இவை போன்ற மறுமொழியே அனைவரும் கூறக் கேட்டனர். என் செய்வார் பாவம்! "ஆமகன் அம்பலத்தில் இருப்பான். அவனிடம் தமது குறையைக் கூறினதும் மிக்க மகிழ்ச்சி யுடையவனாய்த் தம்மோடு வந்து உறுதியர் தீக்குவான்" என்ற எண்ணத்தோடு வந்த வணிகர் மனம் உடைந்தவராய், அம்மதுரை நகரின் தெருவழியே சென்று கொண்டிருந்தனர். அது சமயம் அத் தெருவிலேயே பொலிவு இழந்த முகமும்,
புழுதிபடிந்த ஆடையும், வாடிய மேனியும் உடைய ஆமகன் கையில் தெய்வக் கடிஞை யேந்தி தளர்ந்த நடையுடன் வந்தான்.

 

அவன் அப்பொழுது உள்ள தோற்றத்தால், "இவன் ஆமகனோ, அல்லனோ?'' என வணிகர் ஐயுற்று, “ஐயா! தாங்கள் யார்?" என வினவினர். பயான் ஒரு பேயன்'' என்றான் ஆமகன்.

 

''நாங்கள் இந் நகரில் வாழ்பவருக்கு ஒரு தீங்கும் புரிந்ததில்லை; அங்ஙனமாக எங்கள் மொழிக்கு ஒருவராவது செவி கொடாதது எங்கள் தீவினையே போலும்."

 

''அன்புடையீர்! உங்களை அவமதிப்பதாக நினைக்க வேண்டாம்; உண்மையில் யான் ஓர் பேயனே''


''ஐய, நீர் பேயன் என்றால் நாங்கள் ஏற்போமா?''

 

''உருவத்தில் யான் மனிதனைப் போன்றவன் தான்; ஆனால் செயலில் பேயனே யாவேன்; உலகு அனைத்தும் பசியற்று வாழ்வதற்கு உரிய ஓர் அரிய பொருள் என்பால் இருந்தும், அதனைப் பயன் படுத்தும் வழியறியாது, யானும் அநுபவியாது வைத்திருக்கிறே னென்றால் யான் பேயனன்றி மனிதன் ஆதல் கூடுமோ?''

 

''கருணை வடிவே! தங்களைக் காணவேண்டியே இம் மதுரைமாநகரின் ஒவ்வொரு பகுதியும் தேடினோம். எங்கும் காணப்பெறாது மனச்சலிப்போடு வருகையில் இறைவன் திருவருள் தங்களை இங்குக் கூட்டுவித்தது.”


"என்னையா? இந்தப் பேதையையா தேடினீர்கள்?"

 

"தாங்களா பேதை? தங்களால் உயிர்பெற்ற அப்பெரு நன்றியை மறந்து வாழும் இந்நாட்டு மக்களன்றோ பேதையர்''

 

''யான் ஒருவருக்கும் உயிர் அளிக்கவில்லை, உதவி புரியவுமில்லை; எனது அன்னையின் அருளால் கிடைத்த இத் திருவோட்டினைக் கொண்டு பணியாற்றி வந்தேன்; அவ்வளவே யான் செய்தது. இப்பொழுது யான் இருக்கும் இந் நிலைக்கு யானே காரணமாவேன்.''

 

"அஃது எவ்வாறாயினும் ஆகுக; நாங்கள் சாவக நாட்டில் வாழ்பவர்கள்.
அந் நாட்டில் பல வருடங்களாக மழையில்லை; மக்களிற் பலர் உணவு இல்லாமல் மடிந் தனர்; பின்னும் சிலர் எலும்புக்கூடு என இருக்கின்றனர்; விலங்கு, பறவைகளின் நிலைமையை விளம்பலே மீகை. அறவடிவே! இக்குறை நீங்க எங்கள் நாட்டிற்கு இன்றே எழுந்தருளல் வேண்டும்.''

“இதற்காகவா இத்துணை வேண்டுதல்! என் கடன் அன்றோ இப்பணியாற்றுதல்; இன்றே புறப்படுகின்றேன்; ஒரு கன்னிப்பெண் மணமகன் அகப்படாது வ மறிதே மூத்தாற்போல, இந்திரன் ஆணையால் இரப்போர் பெறாது வீணே சுமந்த இத் தெய்வத் திருக்கலம் பயன் படுமாறு இன்தே புறப்படுகிறேன்.''

 

பின்பு வணிகர் ஆபுத்திரனை அழைத்துக்கொண்டு கொற்கை நகர் அடைந்தனர். அந்நகரி னின்றும் சாவக நாடு நோக்கிப் புறப்பட்ட கப்பலில் ஆமசனும், வணிகரும், பிறரும் சென்றனர். கப்பல் சிறிது தூரம் சென்றதும், பெருங்காற்று வீசத் தொடங்கிற்று. கடல் அலைகள் வானத்தைத் தொடுவன போல் மேல் எழும்பி யெழும்பி விழுந்தன. மரக்கலம் மேலும் கீழுமாக அசைந்து கடலில் மூழ்கி விடும் போல் இருந்தது. மாலுமியால் நாவாயை ஒழுங்காகச் செலுத்த முடியவில்லை. அது கள் குடித்தவனைப் போல் சுழன்று சுழன்று ஓடி மணிபல்லவம் என்னும் ஓர் தீவை அடைக்தது. புயல் நின்ற பின்னரே நாவாய் அத்தீவினின்றும் செல்லுமாகலின், அதற்குள் அத்தீவின் இயற்கை யழகைக் காண விரும்பி, ஆபுத்திரனும் வேறு சிலரும் அக்கப்பலி னின்றும் இறங்கினர். ஆங்காங்கே வெண்மணற் குன்றுகள் கண்ணைக் கவரும் வனப்புடையவாய் இருந்தன. புன்னையும் தாழையும் சூழ்ந்து விளங்கும் அழகிய நீர்நிலைகள் பல, இடையிடையே இருந்தன.
சில இடங்களில் தென்னந் தோப்புக்களும், பனை மரச் செறிவும் விளங்கின இக் காட்சிகளைக்கண்ட ஆமகனும் பிறரும் மாலைச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் வெண் மணலிலும், பசுமாச் சோலைகளிலும், கருங்கடலிலும் பரந்த பொலிவதை யறிந்து நாவாய் தங்கியுள்ள கடற்கரையை அடைந்தனர். அம்பெருங்கடலின் கொந்தளிப்பு ஒரு சிறிதும் அடங்கவில்லை. மக்கள் அனைவரும் கடற்கரை மணலில் தத்தம் மேலாடையைப் பரப்பி வீற்றிருந்தனர். ஆமகனும் அவ்வெள்ளிய நுண்மணலில் தன் மேலாடையை விரித்து அமர்ங்தான். கடுங்காற்றும் போலையும் மக்கள் மனதை அச்சம் ஊட்டி வருத்துவ போதாது என்று இருள் என்னும் கரும்பேயும் மெல்ல மெல்லத் தலைகாட்ட லாயிற்று.
அப்பேயைக் கண்டு அஞ்சி வீழ்ந்தவர் போல் மணலில் அயர்ந்து படுத்த அனைவரும் கருங்கடலில் மூழ்காது தப்பினராயினும் துயிற் கடலில் மூழ்கலாயினர். ஆனால் கப்பல் தலைவனும் வேறு சிலரும் காற்று அடங்கும் அமயத்தை யெதிர்பார்த்து உறங்காதிருந்தனர்.

 

இரவு நாழிகை பதினைந்து ஆயிற்று. காற்றின் வலிமை சிறிது சிறிதாகக் குறைந்துவந்தது. முன்பு இராமபிரான் ஆணையால் கடல் ஆரவாரம் இன்றி அடங்கியிருந்தது போல, புயற்காற்றின் வலிமையால் அலைவீசி நின்ற கடல் காற்று நின்றதும் அலையொழிந்து அமைதி பெற்றது. மணல்மேல் படுத்து உறங் கிய மக்களை யெழுப்பும் பொருட்டுக் கப்பல் தலைவன் சங்கு ஒலி எழுப்பினான். அனைவரும் எழுந்து அவசரம் அவசரமாக நாவாயில் ஏறினார். நாவாய் சிறிது பொழுதில் புறப்படப் போவதை அறிவித்தற்கு அறிகுறியாக மீண்டும் ஒரு முறை சங்குஒலி எழும்பிற்று. அங்கும் இங்குமாக இருந்த அனைவரும் மரக்கலம் அடைந்தனர். மூன்றாவது முறை சங்கு ஒலி கிளம்பிற்று. கப்பலும் சாவகம் நோக்கிச் சென்றது. நெடுந்தூரம் சென்ற பின்னர் பொழுது புலரும் தறுவாயில் மரக்கலத்தில் "ஆபுத்திரனைக் காணவில்லை'' என்ற ஆரவாரம்
மிகுந்தது. கடலில் தவறி விழுந்திருப்பனோ என்று ஐயுற்று அலமந்தனர். பல விடங்களில் தேடித்திரிந்து அழைத்து வந்த வணிகமக்கள், தங்கியிருந்த அத் தீவிலேயே அயர்ந்து உறங்கி யிருப்பனோ என்று ஐயுற்றுக் கலத்தினை அத்தீவிற்குச் செலுத்தினர். உண்மையும் அதுதான். இந்திரன் வஞ்சினம் பலித்த நாள் முதல் உண்போர் பெறாமையால் தானும் உணவின்றி மெலிவற்றானாதலின் ஆமான் அத் தீவிலேயே மரக்கலம் செல்வதை அறியாது உறாம் விட்டான். உறங்கினவன் கீழ்த்திசை வெளுக்கும் சமயம் கண் விழித்தான். ஒரு புறம் ஒரே கருமைநிறம் வாய்ந்த பெருங்கடல்; மற்றொரு புறம் வெள்ளிய மணலின் பரந்தவெளி. தன் அருகில் மணல்மேல் படுத் துறங்கிய வணிகரையோ, பிறரையோ காணான்; கடலில் கலத்தையும் காணான்: “அந்தோ, என் செய்வேன்? பல நாட்களாய் இரப்போர் பெறாது அருங்கலத்தை வீணே சுமந்த எளியேனைப் போன்போடு அழைத்து வந்த பெருமக்கள் என்னைத் தனியே இத்தீவில் விடுத்துச் சென்ற தீவினைக்கு என் செய்வேன்? இதுவும் அவ்வானவர் தலைவனின் சூழ்ச்சியாமோ? இப்பிறவியில் எழையேன் மன தறிய எவர்க்கும் தீங்கு நினைத்திலேன், அங்ஙனமாகவும் இக் கடுந்துயர் என்னை விட்டு நீங்காமை பழவினையின் பயனாமோ?'' என்று பலவாறு வருந்தினான்.
.

"இத்தீவில் எவரேனும் வசிப்பின் அவர் பசியையாவது நீக்க இவ்வுண்கலம் பயன்படும்'' என்று கருதி அத்தீவின் பற்பல இடங்களில் அலைந்து திரிந்தான். புன்னையும் தாழையும் நிறைந்த நீர்த்துறைகளிலும், அவற்றைச் சூழ்ந்த நெடிய மணற் குன்றங்களிலும், ஆம்பலும் குவளையும் மலர்ந்து அழகுடன் பொலியும் ஆழமான பல பொய்கைக் கரையிலுமாகப் பல விடங்களில் அலைந்து தேடியும் அங்கு வாழ்வோர் எவரையும் காணான். அதனால் கன்றிய மன துடைய ஆமகன், ''பல உயிரைக் காப்பற்றுதற்கு உரிய இப் பாத்திரத்தைக் கொண்டு என் ஒரு உயிரைக் காப்பதற்கோ இதனைச் சுமந்து திருக்கின்றேன்? இங்கேயுள்ள இப் பொய்கையில் இப்பாத்திரத்தை யெறிந்து எனது உயிரையும் மாய்த்துக் கொள்வேன். எனினும் இவ் அருங்கலம் ஒருவருக்கும் பயன்படாமற் போகவிடேன்; அறச்செயல் பூண்டு எவ்வுயிரும் காப்பாற்றவோர் எவரேனும் இக்குவரின் அவர் சைப்புருவாயாக" என்று கூறி, பசிப்பிணி போக்கும் பலர் தொழும் ஓட்டினை - தெய்வ பாத்திரத்தைக் கோமுகி'' என்னும் அப் பொய்கையில் விடுத்தான்,

 

அதுபொழுது அறவண வடிகள் என்னும் பெரியார் பாதபங்கயம் புத்த பீடிகையை வணங்கி வருபவர் தற்செயலாக ஆங்கடைந்து, ஆபுத்திரனது சோர்ந்த நிலைமையைக் கண்டு, “அன்பனே! உனக்கு நேர்ந்த துயர் யாது?" என்று வினவினார்.

 

''அடிகளே! பிறந்த அன்றே தாயைப் பிரிந்த யான் சில நாட்கள் வரை ஒரு பசுவால் வளர்க்கப்பட்டேன். பின்பு வயனங்கோடு என்ற சிற்றூரில் இளம்பூதி யந்தணர் வளர்க்க வளர்ந்து, பல கலைகளிலும் பயிற்சி பெற்று விளங்கினேன். ஒரு நாள் அவ்வூரில் நடந்த வேள்வி யொன்றில் ஒரு பசுவைப் பலியிடுவதற்கு என்று கட்டி வைத்திருந்தனர். அடியேன் அக் கொடுமையைப் பொருது, அப்பசுவைப் பிறர் அறியாவாறு கவர்ந்து சென்றேன்.
அதனால் என்னை அனைவரும் ‘கள்வன்' என்று வெறுத்து ஒதுக்கி விட்டனர்.
எளியேன் மதுரையம்பதி அடைந்து வாழ்கையில் சிந்தா தேவி தன்னிற்பெய்த சோறு எடுக்க எடுக்கக் குறையாது வளரும் 'அமுத சுரபி' யென்னுந் தெய்வத் திருக்கலத்தைப் பேரருளோடு அடியேற்குத் தந்து 'இதனால் உலகின் பசித்துயர் களைக' என்று அருளி மறைந்தாள். அன்றிருந்து அடியேன் எனும் மலையில் பசித்துயர் களைந்து வருகையில், வானவர் கோமான் என்னையணுகி, 'நினது அறத்தின் பயனைப் பெறுக'
என்றார். 'இவ் அருங்கலத்திலும் சிறந்தது ஒன்றும் நாட்டில் உளதோ?' என்றேன். அதனால் இந்திரன் வெஞ்சினங் கொண்டு, எனது தெய்வ பாத்திரம் பயன்படாதவாறு, பாண்டிய நாட்டை வளம்பெறச் செய்தான். இரப்போர் பெறாது பல விடங்களிலும் ஏழையேன் அலைந்து திரிந்து கொண்டிருக்கையில், சாவக நாட்டில் மழையில்லா மையால் மக்களும் மாக்களும் உணவில்லாது வருந்துகின்றன ரெனச் சிலர் என்னை வங்கத்தில் ஏற்றி அழைத்துச் செல்கையில், ஐயோ! என் பழவினை யே புயல் காற்றாக மாறி, நாவாயை இத்தீவிற் கொண்டுவந்து ஒதுக்கியது. நாவாயில் இருந்து இறங்கிய யான் இத்தீவின் வெள்ளிய மணல்மேல் அயர்ந்து உறங்குகையில், மரக்கலம் பாய் விரித்துச் சென்றது. அதனால் மனம் வெறுப் புற்று அமுத சுரயெனும் அருங்கலத்தை இப் பொய்கையில் இப்பொழுது தான் எறிர்தேன்'' என்று கூறி முடிப்பதற்குள், அயர்ச்சியாலும், துயர்
மிகுதியாலும் ஐயோ! அப் பெருந்தகையாளன் ஆருயிர் கீழ்த்திசை தோன்றி உலகின் இருளை யொழித்து, மேல் திசை சென்று மறையும் ஞாயிறு போல அவன் உடலினின்று பிரிந்தது! அந்த நிகழ்ச்சியால் மனம் நொந்த அறவண அடிகள் அங்கிருந்து அகன்றார்.

 

மீண்டு வந்த மரக்கலம் மணி பல்லவத்தை யடைந்ததும், அதனின்று வணிகரும் பிறரும் இறங்கி ஆமகனைத் தேடினர். அத்தீவின் பல விடங்களில் தேடி, இறுதியாகக் கோமுகி யென்னும் பொய்கையின் அருகே, புன்னைமா நீழலில், வெள்ளிய மணல்மேல் அயர்ந்து உறங்குபவன் போல் கிடந்த ஆமகன் உடலைக் கண்டனர். உண்மையில் அவன் உறங்குகின்றான் என நினைத்து, அவனை யெழுப்ப முயன்று அவனது உடலைத் தொட்டனர். உடலிற் சூடில்லை; குருதி ஓட்டமில்லை. ''ஐயோ! என்ன பாவத்திற்கு ஆளானோம்! இந்திரன் செய்த செயலிலும் எமது செயல் மிகப்பழிக்கு இடமாக முடிந்ததே'' என வருந்தி, அவனை அழைத்து வந்த வணிகர் ஒன்பதின்மரும் அங்கேயே உயிர் விடுத்தனர். சேட்போர் நெஞ்சைப் பிளக்கும் இக் நிகழ்ச்சியை உடன் இருந்து கண்ட வேறு சிலரும் மனம் உடைந்து உயிர் நீத்தார்! ''தருமமே செயம்" என வாழ்ந்த ஆபுத்திரனது வாழ்க்கை, அந்தோ! இவ்வாறு முடிந்தது!

 

2. அறம் வெல்லும்

1. நல்லவர் ஒருவரால் நாடு செழிப்புறும்

சாவக நாட்டைக் குறித்து நீங்கள் ஏற்கனவே படித்திருக்கிறீர்கள். அந்த நாட்டில் தவளமலைச்சாரலில் பொன்னிறமான கொம்பும் குளம்பும் உடைய ஓர் பசு வாழ்ந்து வந்தது. அப்பசு கன்று ஈனாததாக இருந்தும் பல உயிர்க்கும் பால் சொரிந்து ஊட்டி வந்தது. இப்புதுமையை அத்தவளமலையில் வாழ்ந்துவந்த மண் முகன் என்னும் முனிவர் கண்டு வியப்புற்று, அப்பசுவைத் தன் உயிரினும் அரிதாகக் காத்து வந்தார். ''ஒரு பசுவிற்குக் கொம்பும் குளம்பும் பொன்னிறமாக இருக்கிறதாமே! அதைப் போய்ப் பார்த்து வருவோம்'' என்று மக்கள் பலர் திரள் திரளாகத் தவளமலைச்சாரலை யடைந்தனர். அடைந்த அவர்களின் புதுமை முன்னிலும் அதிகமாயிற்று. மூனிவர் அவர்கள் அனைவர்க்கும் அவ்வொரு பசு—கன்று ஈனாப்பசு சொரிந்த பாலை வழங்கி அவாகள் பசியை நீக்கினார். கொம்பும் களம்பும் பொன்னிறமாக இருப்பசைக் காட்டிலும் ஒரு பசு கன்று ஈனாததற்கு முன்பு பால் தருவது மிக்க வியப்புத்தரும் செய்தியல்லவா? நாட்டில் பருவ மழை யில்லாமையால் மக்களும் மாக்களும் பசித்துயரால் வருந்துதலை யறிந்து, “அக் கொடுந்துயரைத தீர்ப்பேன்'' என்று சென்ற ஆபுத்திரன் விதியின் வலியால் மணிபல்லவம் எனும் தீவிடை உயிர் நீத்து ஆண்டுகள் பலவா பின. வருடம் பல ஆயின வேயன்றி நல்ல மழையில்லாமையால் உண்டான துயர் இன்று வரை நீங்கவில். மக்கள் பசி பசியென்று கதறும் கூக்குரல் நிற்கவில்லை. முனிவர் அந்த பசு சொரிந்த பாலை வந்த அனைவருக்கும் பருகும்படி அளித்தாரெனின் அவர்கள் அப்பொழுது அடைந்த மகிழ்வையும் வியப்பையும் அள விட்டு உரைக்க முடியுமா!

அருள் உருவாகிய அடி+ளே! வாழிய நின் மலரடிகள் ! ஒரு பசு பொன் மயமான கொம்பும் குளம்பும் பெற்றிருக்கின்ற புதுமையைச் செவி மடுத்ததும், அதைக் கண்டு செல்லலாம் என வந்த எங்கட்கு கன்று ஈனாததற்கு முன்னரே இவ்வொரு எவ்வளவு பெயர் வரினும் அவ்வளவினர்க்கும் பால் தந்து பசியாற்றும் இச்செயல் அதிக வியப்பைக் கொடுக்கின்றது. கால மழையின்மையால் பயிர்கள் வாடிக்கிடக்குந் தறுவாயில் நீலமேகம் தோன்றிக் குளிர்ந்த துளிகளைச் சொரிந்தாற்போல, நீண்ட காலமாக நல்லுணவு பெறாது, மக்களும் மாக்களும், சாகவோ பிழைக்கவோ என்று நிலை தடுமாறி இருக்கும்பொழுது, தங்கள் பேரருளே எம்மையெல்லாம் உய்விக்க இப்பசு வடிவமாகி வந்ததோ? நல்லவர் ஒருவர் பொரூட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் என்பர்; மற்றும், தங்கள் தவமஹிமை யால் அமிர்த மழை பெய்கிறது!'' என்று பலவாறு துதித்துத் தம் மகிழ்வை வெளிப்படுத்தி நின்றனர்.

''அன்புடையீர்! ஆ ஒன்று பொன்னால் கொம்பும் குளம்பும் வாய்ந்திருக்கின்ற புதுமையைச் செவிமடுத்து, அதனைக் காண்போம் என வந்தவிடத்து, அதனினும் அரிய செயல் ஒன்றைக் கண்டீாகள்! எனினும் இன்னும் சில நாட்களுக்குப் பின்பு நீங்கள் என்றும் கேட்டிராத புதுமை யொன்று நிகழ்வதைக் காண்பீர்கள். பொன் மயமான கொம்பும் குளம்பும் உடைய இப்பசு வயிற்றினின்று பொன்னிறம் வாய்ந்த ஒரு முட்டை உண்டாகும். வயிற்றினின்று முட்டை யுண்டாவது கருதி நீங்கள் வியப்பு அடையலாம். ஆனால், அதனினும் வியப்புத்தரும் சம்பவம் ஒன்று அதன் பின்பு நிகழவிருக் புத்த தேவன் தோன்றிய வைசாக சுத்த பூர்ணிமையில், அப்பொன்னிறம் வாய்ந்த முட்டையினின்று அறவொழுக்கம் பூண்ட ஒரு உத்தமன் வெளிப்படுவான்! பசு வயிற்றிலிருந்து ஒரு முட்டை தோன்றுவதைக் காட்டிலும், அம்முட்டையி லிருந்து ஒரு மனிதன் வெளிப்படுவது மிக்க வியப் புத்தரும் செய்தியல்லவா ? அன்று முதல் இச்சாவக நாடு பசிப்பிணி மறந்து வாழும்; தருமப்பயிர் தழைத்து வளரும்'' என்று கூறினார் அம்முனிவர். மக்கள் யாவரும் முனிவரையும் பசுவையும் வலம் வந்து வணங்கி முனிவரிடத்து விடை பெற்றுச் சென்றனர்.

உலகத்திற் கெல்லாம் ஒப்பற்ற அறத்தைப் போதித்த உத்தமன் - கொல்லா அறமே குவலயமெல்லாம் ஓங்கச் செய்தவன்-"தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்தல் வேண்டும்'' என்ற சீரிய ஒழுக்கத்தைச் செயலிற் காட்டிய செல்வன் அவதரித்த வைகாசி மாதத்து மதிநிறைந்த நன்னாளில், தவள மலைச்சாரலில், முனிவரிடத்து வளர்ந்து வந்த அத்தெய்வப்பசு பொன்னிறமான முட்டையொன்று இட்டது. அப்பொழுதே அம்முட்டையி னின்று அழகிய குழந்தையொன்று வெளிப்பட்டது. காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய தெய்வக்குழந்தை பிறந்த அன்று காற்று வலமாகச் சுற்றியது. மழையின்றிக் காய்ந்து கிடந்த சாவக நாடு மட்டுமன்றி உலக முழுவதும் ல்ல மழை பெய்தது. பசுக்கள் தத்தமது கன்றுகளுக்கு ஊட்டி, அளவிறந்த பாலைப் பொழியத் தொடங்கின. உயிர்கள் எல்லாம் துயர் என்பது அறியாவாயின.

பல வருடங்களாக மழை யில்லனமயால் பசித்துயர் வருத்த மெலிந்த சாவக நாட்டு மக்கள் 'திடீரென' நல்ல மழைபெய்து நாடு செழிக்க நேர்ந்த இப்பெரும் மாறுதல் “அன்று மண் முகன் என்னும் அம்மாமுனிவர் கூறிய உரைப்படி நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கருதி உளங் கொள்ளா உவகை கொண்டனர். தம் அனைவர்க்கும் தாயனைய அத்தெய்வப் பசுவின் திருவயிற்றில் அவதரித்த செல்வப் புதல்வனைத் தரிசிக்க வேண்டி, அனைவரும் முனிவர் இருப்பிடம் அடைந்தனர். திங்களைப்போன்ற தண்ணொளியோடு, முனிவர் அருகே மெல்லணையிற் கிடந்த அப் பச்சிளங்குழவியைக் கண்ணிறையக் கண்டு மகிழ்ந்தனர். முனிவரை நிலனுற வணங்கிப் போற்றினர். "அடிகளே! இந்நாடு செய்த தவமோ, நாங்கள் இயற்றிய நல்வினையோ, அல்லது, எங்கள் முன்னோர் புரிந்த புண்ணியமோ தாங்கள் இந்நாட்டில் வதியவும், தங்கள் அருட்பெருக்கே இத்தெய்வப் பசுவின் வயிற்றில் திருக்குழவியாகவும் தோன்றப் பெற்றேம்; எங்கள் உயிர் தழைக்கவும் பெற்றேம்” என்று புகழ்ந்தனர். இறப்பு , நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலமும் உணர்ந்த முனிவர் அவர்கள் அனைவர்க்கும் ஆசி கூறிப் பின் வருமாறு மொழியலுற்றார்.—

பெயராப் பேரன்புடையீர், நீங்கள் கூறிய உரைக்கு நான் சிறிதும் தகுதியுடையவன் அல்லன், நீங்களும் உங்கள் முன்னோரும் புரிந்த நல் வினையே இத் தெய்வப்பசு உங்கள் நாட்டில் பிறந்து வளரவும், இதன் வயிற்றில் இச் செல்வன் தோன்றவும் காரணமாயிற்று. ஒருவன் செய்த நல்வினையோ தீவினையோ எதுவாயினும், அதன் பயனை அப்பிறவியிலாவது மறு பிறவியிலாவது நுகர்தல் கூடும். நீங்கள் இயற்றிய நல்வினைப்பயனை இப்பிறவியிலேயே அநுபவிக்கும் பேறு பெற்றீர்கள். ஆனால் இப்பசு சென்ற பிறவியிற் செய்த அறத்தின் பயனை இப்பிறவியில் பெற்றது.

'ஈதல் இசைபட வாழ்தல் அதுவலது

ஊதியம் இல்லை உயிர்க்கு'

 

[புகழ் உண்டாக வாழ்தலாவது கொடுத்தல்; உயிர்கட்கு ஊதியம் அது வல்லது இல்லை.) ஆதலின், இந்நாட்டினர் அனைவராலும் போற்றிப் புகழ்வதகு ஏதுவாக இருப்பது இத்தெய்வப்பசு அல்லவா? சென்ற பிறவியில் இப்பசு தனது இனத்தோடு இனமாய்ப் பசு மந்தையில் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மேய்ச்சல் தரையில் புல் மேய்ந்து கொண்டிருக்கையில், அருகே அழுகுரல் எழுவதைக் கேட்டு, அக்குரல் வரும் இடத்தை நாடிச் சென்றது. நீல நெடுங்கடலில் செங்கதிர் தோன்றிக் காட்சி தருவது போல, பசும்புல் தரையில் கிடந்து கதறும் சிறு குழவி யொன்றைக் கண்டது. தன்னந்தனியே ஒரு துணையும் இன்றிக் கதறும் குழந்தையை அப்பசு கண்டதும் மனம் இரங்கி, அதன் அருகமர்ந்து தீஞ்சுவைப் பால் ஊட்டிற்று. இங்ஙனம் பல நாட்கள் வரை அக்குழந்தையைப் பாதுகாத்து வந்தது. அவ்வறத்தின் பயனே இப்பிறவியில் விலங்காகப் பிறந்திருப்பினும் இப்பசு இன்று மக்களினும் மேன்மை பெற்று விளங்குகிறது. ஐயறிவுடைய விலங்கினங்களுள் ஓர் இனமாகிய பசுக்கள் இப்பசு வொன்றால் பெருஞ்சிறப்பு அடையலாயின. பசுக்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவை யென்று ஆறறிவுடைய மக்களால் போற்றப்படுவதினும் பெருஞ் சிறப்பு வேறு யாதுளது? தனது இனத்திற்கு மட்டுமன்றித் தான் பிறந்த இடத்திற்கும் பெருமை யெய்தத்தோன்றிய இப்பசுவே உங்கள் புகழ்ச்சிக்கும் போற்றுதலுக்கும் தகுதி யுடையதாகும். 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு என்லார்க்கும் மழை பெய்யுமாதலின், இப்புதல்வன் ஒருவனால் இனி இவ்வுலக முழுவதும் செழிப்படையும்.''

வந்தவர் அனைவரும் முனிவரின் மெய்யுரையைச் செவிமடுத்துப் பேருவகை யடைந்து, விடை பெற்றுச் சென்றனர்.

2 புண்ணிய ராசன்

பொன் மயமான கொம்பும் குளம்பும் வாய்ந்த ஒரு பசு பொன்னிற முள்ள முட்டை யொன்று இட்டதும், அதனின்று ஒரு புதல்வன் தோன்றியதும் நிகழ்ந்து ஆண்டுகள் பலவாயின. இப்பொழுதுள்ள சாவக நாட்டின் செழிப்பும் பிறவும் செப்பும் தரத்ததன்று. மா பலா கமுகு தென்னை வாழை இவற்றின் செறிவு அணியணியாய் நின்று அழகு தருகின்றன. கன்னல் கமுகின் எழில் காட்டும் கழனிகளும், செந்நெல் கன்னல் எனத் திகழும் பண்ணைகளும் சூழ்ந்து பொலிகின்றன. செந்நெற் கழனியில் களை பறிக்கும் பெண்கள் தம் முகமெனப் பொலியும் கமல மலர்களையும், சண் என மிளிரும் கரு நீலப் பூக்களையும் பறித்தெறிய மனம் இல்லாது அவற்றை அப்படியே விட்டுச் செல்கின்னர். களை பறித்த நிலங்களைப் பார்வை யிடுதற்கு வரும் நிலவரிமையாளர்கள் தாமரை குவளை முதலில் கொடிகள் பறித்தெறியப் பெறாது, நிலமுழுவதும் அப்படியே விட்டிருப்பதைக் கண்டு சின மிகுந்து களை பறிக்கும் மாதர்களைக் சடிந்து கூ.றச் செல்கையில், அக் கொடிகளில் மலர்ந்து பொலியும் பூக்களின் வனப்பையும், வண்டுகள் அவற்றின் தேனை யுண்டு இங்கும் அங்குமாக இன்னிசை யெழுப்பிப்பறக்கும் இயல்பையும் பார்ததவண்ணமே பரவசப்பட்டு நின்று விடுகின்றனர். நீர் நிலைகளில் அருவியும் தாமரையும் மலர்ந்து காண்போர் நெஞ்சைக் கவரும் வனப்புடன் விளங்குகின்றன. அவற்றில் அன்னச்சேவலும் பேடும் வரிசை வரிசையாய் அமர்ந்திருக்கின்றன. எருமைகள் நீரையுழக்கித் தாமரை குவளை மலர்களைத் துவைத்து செந்நெற்பயிரை மேய்ந்து திரிகின்றன. செந்நெற்பயிரைத் துவைக்கும் எருமைகளை ஓட்டச் சென்ற சிறுவர்கள் வயிறார மேய்ந்து திரியும் அவற்றின் இறுமாந்த நடையைக் கண்டு ஓட்ட மனம் வராமல் நிற்கின்றனர்.

சோலையில் வண்டுகள் இசை கூட்டவும், மேகங்கள் மத்தளம்போல் ஒலிக்கவும், குயில்கள் பாடவும், மயில்கள் ஆடவும் உள்ள அழகிய காட்சியில் ஈடுபட்டு நிற்கின்றனர் சிலர். சேவற்கோழி தன் பெடையொடு கூடித் தம் தாள்களால் மேட்டு நிலங்களைக் கிளறும்போது தோன்றி ஒளிவீசும் இரத்தினங்களை அயல் நின்று பார்த்திருந்த குருவிகள் மின்மினிப்பூச்சியென எண்ணித் தம் கூட்டிற்கு விளக்காகுமென அவைகளைக்கொண்டு சேர்ப்பதைக் கண்டு நகைப்பார். சிலர் ஐம்படைத்தாலி புரள்கின்ற மார்பினில் மாலை மாலையாக வாயினின்று உயிழ்நீர் வழியும் குழந்தைகளுக்குப் பால் ஊட்ட எடுத்த தாயார் சைகுவியச் ''சந்திரனைக கண்டு குவிந்த தாமரையோ இது!" என மகிழ்வார் வேறு சிலர். சிறுமிகள் மூச்சில் முச்சிலாக முத்துக்களை வாரிவந்து தம் முன்றிலில் சிற்றில் கட்டிச் சரியாக வராததால் சிதறி விடுகின்றதைக் கண்டு சிரிப்பார் இன்னும் சிலர். தென்னம் பாளையினின்று வடியும் தேறலை மாந்தித் துள்ளிக்குதிககும் வரால்மீன்களைக் கண்டு கண்டு மகிழ்வார் மற்றுஞ் சிலர்.

ஓம் என்னும் ஒலியைத் தம் வடிவினால் மட்டுமன்றி எழுத்தாலும் எழுதிக்காட்டுவனபோல் நீர் மடைகளில் ஊர்ந்து செல்வதால் எழும் வெள்ளிய சங்கொலி கள் ஓலமிடும். கரும்பினின்று தீஞ்சுவைச் சாறு பிழியும் கரும்பாலைகளின் ஒலி இனிமையைத் தருவதா யிருந்தது. வானுயர் சோலைகளும், அவற்றின் உச்சியில் நாழிகைக்கு ஆயிரம் வடிவுபூண்டு உலவும் முகிற்கூட்டங்களும், குயிலின் குரலும், மயிலின் ஆடலும், கிளியின் கொஞ்சலும், பலவகைப் புட்களின் பாடலும், கடல் முழவமும், நெஞ்சை யள்ளும் அழகொடு பொலியும் பலநிறப் பூக்களும், தென்றற்காற்றும் என் வையன்ன பிறவே உல்லாச இடங்களும், அசையும் ஒளிப்படங்களும் நாடக அரங்குகளுமாக இயற்கையன்னை காட்சி யளிக்கின்றாள். மான் கன்றுகள் பெண்புலியின் முலைக்காம்பைச் சுவைத்துப் பால் பருகுதலும், யானைக்குட்டிகளும் அரிமாவின் பறளைகளும் ஒன்றோடு ஒன்று தழுவி விளையாடுதலும் அந் நாட்டில் என்றும் நிகழக்கூடிய சம்பவம்.

''நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல

நாட வளந்தரும் நாடு.'

 

என்ற பெருநாவலரின் திருவாய்மொழிக்கு இலக்காக உப்பு முதல் கற்பூரம் அனைவர்க்கும் எளிதில் கிடைக்குமாறு அமைந்து விளங்குகிறது அச்சாவக நாடு.

இங்னம் ரிலவளம் நீர்வளம் சிறந்து மக்களும மாக்களும் துயரென் பது அறியாது அன்பு மிகுந்து மகிழ்ந்து உலவும் அச்சாவக நாட்டின் தலைமை நகர் நாகபுரம் என்னும் பெயாது. பாற்கடல் மேல் எழுமபித் தோன்றுவது போல வெண்சுதை தீட்டிய மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும் உரிசை வரிசையாய் விளங்குகின்றன. அவற்றில் அடுக்களைப் புகையும், மகளிர் தம் கூந்தல் உலர்த்துவதற்கு என மூட்டிய அகிற்புகையும் எழுந்து பரவுங்காட்சி பனிமலையில் நீலமேகங்கள் தவழ்வனபோல் தோன்றுகின்றது. அந் நகரின் இடையிடையே உள்ள சோலைகளில் மான் இனம் திரிவபோன்றும், மயிலினம் அசைவ போன்றும் மங்கையர்கள் கண்பொத்தி யாடலும், கைதட்டி ஓடலும், நறுமலர்க்கொடியில் ஊசலாடலுமாக மகிழ்வெய்துகின்றனர். மைந்தர்கள் முதியவர்களிடத்தில் அறவுரை கேட்டலும் மங்கையர்களிடத்து அன்புரையா டலுமாகப் பொழுது போக்குகின்றனர். இவ்வாறு எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தி வாழ்கின்றமையின், அவர்களுள் உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இவ்வாறு எல்லா வகையிலும் நிறைவு பெற்று விளங்கும் அந்நாட்டில் குறைசிலவும் இல்லாமற் போகவில்லை.

கொள்வார் இல்லாமையால் கொடுப்பவர்கள் இல்லை. பகைவர் இல்லாமையால் படைவீரர்கள் இல்லை, ஆனால் அந்நகரைச் சுற்றிக் குன்நெனப் பொலியும் மதில் அழகு ஒன்றையே கருதி அமைந்திருக்கின்றது. இன்னும் அந்நகரில் போரும், சிறையும், வறுமையும் உண்டு; எனினும் நெற்போரல்லது பிற போரில்லை; ஆறுகளில் தன் இச்சைப்படி ஒடும் நீரைக் குடங்களிலும், வேறு கலன்களிலும் கொண்டுவந்து தத்தம் வீட்டில் சிறை செய்திருப்பதன்றி வேறு சிறையில்லை. வறுமையென்பது மங்கையர் இடையே. வானுலகத்துள்ள நாகபுரிக்கும் இந்த நாகபுரிக்கும் பெயரளவிலும் வேற்றுமை தெரியாது விளங்கினும், தேவர்கள் என்போர் கண் இமையாமலும், கால் நிலந்தோயாதும் உலவுகின்றமையால் பிரித்துணர முடிகின்றது. விழித்தகண் விழித்தபடியே இருத்தலும், கால் நிலம் தோயாது அலைதலும் தேவர்களுக்குச் சிறுமை தருவனவேயன்றிப் பெருமைதரா. தூங்காது இருப்பதும், கால் நிலம் பாயாது பாயாது உலவுவதும் அச்சத்தையும் அமைதியின்மையையும் குறிப்பன அல்லவா? அச்சமும் அலைச்சலும் உடையவர்க்கு இன்பம் ஏது? இக்குறை நாகபுர வாசிகளிடத்து இல்லை.

      இத்தகைய நாடு நகரங்களைக் காக்கும் பேறுபெற்ற அரசன் ஒருவன் எவ்வளவு புண்ணியம் செய்தவனாக இருத்தல் வேண்டும்! உண்மையாகவே அந்த நாட்டு அரசனுடைய பெயர் புண்ணியராசன் என்பது தான்! எவ்வளவு பொருத்தமும் அழகும் வாய்ந்த பெயர்! அன்றியும்,

ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும்

ஏதின் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும்

நீதி நிலையும் இவை நேமிபி னோர்க்கு நின்ற

பாதிம் முழுதும் இவர்க்கே பணி கேட்ப மன்னோ.

 

[எப்பொருளையும் வெளித்தோற்றத்தின் அளவில் மயங்காது அதன் மூலத் தன்மையை ஆராயும் அறிவும், அருளும், அறமும், பெருமையும், பழிப்பில்லா வலியமைந்த வீரமும், இவையனைய எண்ணரிய நற்குணங்கள் யாவும், நீதி தவறாத நடுநிலையும் மற்ற அரசர்களுக்கு அஃததனில் பாதியே இருந்ததென எண்ணும்படி இவ்வரசன்பால் முழு அளவும் பூர்த்தியாய் எய்தி யிருந்து அவன் இட்ட ஏவலைச் செய்திருந்தன.] என்றால் இவனுக்குப் புண்ணியராசன் என்ற திருப்பெயர் வழங்கி வந்தது புதுமையல்ல.

அவன் அனைவரிடத்தும் காட்டும் அன்புப் பெருக்கால் அவ் வனைவர்க்கும் தாயாக விளங்கினான்; நன்மை புரிவதில் அவரவர் இயற்றிய புண்ணியமா யிருந்தான்; இம்மைக்கு மட்டுமன்றி மறுமையில், மேல்நிலையிற் கொண்டு சேர்க்கும் தன்மையில் புதல்வனைப்போன்றும்; தன்னுயிர் வேறு, மன்னுயிர் வேறு என்னும் வேறு பாடின்றி இரண்டறக் கலந்து வாழும் சீர்மையால் மனைவியைப் போன்றும் விளங்கினான். இவ்வாறு உலகத்துள்ள உயிர்கட்கு எல்லாம் தான் ஒரு தாயாகியும், தவமாகியும், சேயாகியும், தாரமாகியும், மற்றொரு உடம்பே யாகியும் வாழ்ந்து வந்தான். “மன்னுயிர் எல்லாம், மண்ணாள் வேந்தன் தன்னுயிர்" என்னும் தகவுரை இப் புண்ணியராசனுடைய கட்சியின் மேன்மை கண்டு, அவன் காலத்தில் இருந்து தான் வழங்கி வந்திருக்கவேண்டும். கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்று கலை மடந்தை''யே ஓதும் பொழுது, அறப்பெரு வேந்தனாம் இப் புண்ணியராசன் மெய் நூல் பல அறிந்திருப்பினும், அவ்வளவே சாலும் என அமைந்திருப்பனா? தனது நகர்ப்புறச் சோலையில் வசிக்கும் தருமசாவகன் என்னும் தவமுனிவரை யடைந்து,

''பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்

அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்"

"பவம் அறு மார்க்கமும்''

 

பிறவும் கேட்டு வருவான். அவ்வாறு அவன் அத்தவ முனிவரிடத்து மெய்யுரை கேட்க செல்லும் பொழுதெல்லாம் தான் மட்டும் தனித்துச் செல்லாது, தனது ஆருயிரனைய மனைவியையும் உடன் அழைத்துச் சென்று இருவருமாகக் கேட்டு வருவது வழக்கம். இச்செயலை நினைக்கும் பொழுது உளதாகும் மகிழ்ச்சிப் பெருக்கை என்னென்று உரைப்பது! பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை யென்பவரும், பெண்களைப் பகலவன் ஒளிபடாதவாறு வீட்டிற்குள்ளே பூட்டி வைத்துக்கொண்டு, தம் நகருக்கு அறிவான் மிக்க ஆன்றோர் எழுந்தருளின் அவரை அவர் தங்கிய இடத்தில் சென்று காணுதல் குறைவு எனக் கருதித் தமது இருப்பிடத்திற்கு வரச்செய்து, தாமும் தமது மனைவி மக்களும் தரிசித்து மகிழ்வதாக நடிப்போரும் இப் புண்ணிய ராசனின் புனிதச் செயலைச் சிந்திப்பாராக. அரசியல் முறை இவ்வாறென எனைய அரசர்க்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் இவ்வரசன் இல்வாழ்க்கையினர்க்கும் ஓர் எடுத்துக் காட்டாயினான்.

 

3. தவமங்கையும் தருமராசனும்

 

மாலைப்பொழுது. பகலவன் பொன்னிறக் கதிர்களால் உலகத்துப் பொருள்கள் அனைத்தையும் தன்னிறமாக்குகிறான். தென்றற்காற்று மல்லிகை முல்லை முதலிய மலர்களின் மணங் கவர்ந்து மெல்லென வீசுகிறது. வானிலிருந்து மின்னற்கொடி யொன்று வழுவி வீழ்ந்தாற்போல கட்டழகுடைய மங்கை யொருத்தி ஆகாய வழியே வந்து நாக
புரத்தையடுத்த ஓர் சோலையில் இறங்கினாள். அச்சோலையின் வளமும் வனப்பும் அவள் மனதைக் கவரவே அதன் எழில் முழுவதையும் காணவிரும்பி ஒவ்வோரிடமாய்க் கண்டு மகிழ்ந்து வந். தாள். அங்கே வானுற வளர்ந்த ஓர் போதிமரத்தடியில் மாமுனிவர் ஒருவர் வீற்றிருத்தலைக் கண்டு, அவர் தாள் வணங்கி, ''அடிகளே! வளப்பம் மிக்க இந்த நாடும் நகரும் யாருடையது?''என்று வினவினாள். தருமசாவகன் என்னும் அம்முனிவர், "புத்ததேவன் அருளிய உத்தம நெறிவழாது நடக்கும் செல்வி! நாக புரம் என்னும் இந்நகர் சாவகநாட்டின் தலைமைநகர். இதனைப் பாதுகாப்பவன் பூமி சந்திரன் மகன் புண்ணியராசன் என்ற திருப்பெயரையுடையான். மழைவளம் இன்றி மன்னுயிரெல்லாம் பிழைக்க வழியறியாது திகைப்புற்று வருந்தும் சாலையில் இச்செல்வன் தோன்றினான். அன்றிருந்து இந்நாட்டில் மழை பிழைத்ததில்லை. நிலமும், மரம் செடி கொடிகளும் பலன் மிகத் தருகின்றன. பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டி மிகுந்த பாலைச் சொரிகின்றன. உயிர்களுக்கு எவ்வகையான துன்பமும் இல்லை" என்று கூறினார். அத்தவமங்கை யாரைக்காண விரும்பி வந்தாளோ அவரே அந்நகருக்கு அரசனாயிருப்பதை யறிந்து மகிழ்ச்சி மிகக்
கொண்டாள்.

 

அதுசமயம் புண்ணியராசனும் அரசியும் ஆங்கடைந்து முனிவரை வணங்கினர். முனிவர் தனக்கு என வாழாது பிறர்க்கு என வாழ்ந்த புத்ததேவன் அருளிய அறவுரைகளை அவர்கட்கு விளங்கக் கூறினர். உள்ளம் நெக்குருகமெய்மயிர் பொடிப்பக் கேட்டுக் கொண்டிருந்த அரசன் முனிவர் அருகே கையில் பிச்சைப் பாத்திரத்தோடு வீற்றிருக்கும் தவமங்கையைக் கண்டு. “அடிகளே! மங்கையர்க்கு அரசியெனத் திகழும் இவ்வம்மையார் யாவர்?" என வினவினான். முனிவர் மறுமொழி கூறுவதற்கு முன்பு அரசனோடு வந்த பிரதானி ஒருவன் மன்னனை வணங்கிப் பின்வருமாறு பேசலுற்றான். “அரசர்க்கரசே! இத்தவமாதின் வரலாற்றைத் தங்களிடத்து முன்பு ஒருமுறை கூறியிருக்கிறேன். செவிப்புலனாலன்றிக் கட்புலனால் இதுவரை தாங்கள் இவ்வம்மையைப் பார்த்திராததால் இது பொழுது இன்னாரென்று உங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைமை நகரமாகக் கொண்டு சோழநாட்டை ஆண்டுவந்த கிள்ளிவளவன் என்னும் அரசனோடு நட்புரிமை கொள்ள விரும்பி முன்பு ஒருசமயம் அங்ககர் சென்றிருந்தேன். அங்கே புத்ததேவன் அருளிய தரும மார்க்கங்களை அனைவருக்கும் அன்போடு கூறிவரும் அறவண அடிகள் என்னும் பெரியாரின் சிறப்பைக் கேள்வியுற்று அவரை யடைந்து வணங்கினேன். அப்பொழுது அவரிடத்தே இத்தவமங்கையும் கையில் பிச்சைப் பாத்திரத்தோடு அறவுரை கேட்டுக் கொண்டிருந்தனர். யான் வினவுவதற்கு முன்பே அடிகள் இவ்வம்மையின் பெருமைகளை விளங்கக் கூறினார். காவிரிப்பூம் பட்டினத்திலே கோவலன் என்ற வைசியச் செல்வனுக்கும், மாதவி யென்னும் மாதவச் செல்விக்கும் அருந்தவப் புதல்வியாகத் தோன்றிய இவர் மணிமேகலை என்னும் திருப்பெய ருடையார். காதலன் இறந்த கடுந்துயரால் மாதவி துறவு பூண்டாள். தன் தாய் துறவு கைக்கொண்டதை யறிந்து, தானும் இளமையிலேயே துறவொழுக்கம் பூண்ட தூயவுள்ளத்தினர். தனது பழம் பிறப்பை யுணர்ந்த பாக்கியவதி. இவர் திருக்கையில் இருக்கும் பிச்சைப் பாத்திரம் தெய்வத்தன்மை வாய்ந்தது. நினைத்த வடிவம் கொள்ளவும், ஆகாயத்தில் பறக்கவும், பசி தோன்றாமல் இருக்கவும் வரம் பெற்று இருக்கின்றனர். இவரைப் போன்ற தருமசிந்தையும் தூயவொழுக்கமும் பூண்ட உத்தம மங்கை கல்லார் இவ்வுலகில் வேறு எவரும் இலர்.''

 

அரசன் பெருவியப்படைந்து, 'தவச்செல்வி! உனது வருகையால்
யானும், எனது மக்களும் சிலாகளாயினோம்; எனது நாடு புனிதமாயிற்று.
தினது அதப்பெருஞ் செயலைக் கேள்வியுற்ற நாள் முதல் உன்னைக் காணவும்,
நல்லுரை கேட்கவும் அடியேன் பெரிதும் விரும்பி நின்றேன். எனினும், இது
வரை அடைய வியலாதிருந்த அப்பெறற் கரும்பேறு எனது நாடு செய்த
தவத்தால் இன்று எளிதில் கிடைக்கப்பெற்றேன்" என்று அரசனும் அரசியும்
மணிமேகலையை வணங்கினர்.

"புண்ணியச் செல்வ வாழ்க பல்லாண்டு! கொல்லா அறமே குவலயம் எல்லாம் வளர்க!'' என வாழ்த்தி, "அரசே, முற்பிறவியை அறியாவிடினும், இப்பிறவியின் இயல்பையாவது அறியாமற்போயினையே செல்வத்தால் மயங்குபவன் அல்லனாயினும், இப்பிறவியின் இயல்பை இதுவரை நீ அறியாதிருந்தது வியப்பைத் தருகின்றது. சென்ற பிறவியில் உன் கையில் இருந்த தெய்வத்திருக்கலமே இப்பெழுது என் கையில் இருப்பது. உனது சென்ற பிறப்பின் சீர்மையையும், இப்பிறவியின் இயல்பையும் யான் ஏற்கனவே அறவணவடிகளால் அறிந்திருக்கிறேன். நீ அவற்றை அறிய விரும்பினையாயின்,

"திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக

உருமேவி யவதரித்த உபிரனைத்தும் உயக்கொள்வான்

இவ்வுலகும் கீழ் உலகும் மிசையுலகும் இருள் நீங்க

எவ்வுலகும் தொழுதேத்த எழுந்த செழுஞ் சுடரென

விலங்குகதிர் ஓர் இரண்டும் விலங்கிவலங் கொண்டுலவ

அலங்கு சினைப் போ தியின் கீழ் அறம் அமர்ந்த பெரியோன்"

 

ஆன புத்த பகவானது பாத பீடிகையை மணிபல்லவம் சென்று தரிசித்தல் வேண்டும். அப்பீடிகை புத்ததேவன் அவதரிப்பதற்கு முன்பே தோன்றியது. எல்லாம் அறிந்த ஒருவனையே இப்பீடிகை தாங்கவும் அதனைத் தரிசித்தவர்க்கு அவர்களுடைய பழம்பிறப்பை உணர்த்தவும் கூடிய மேன்மையோடு விளங்க வேண்டுமென, மணிபல்லவம் என்னும் தீவில் இந்திரனால் வைக்கப்பட்ட பெருமைவாய்ந்தது. அத் தரும ஆசனத்தைக் கவர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆசையோடு நாகநாடு ஆளும் அரசர் இருவர் ஒருவரோடு ஒருவர் சினமிகுந்து போர் செய்தபொழுது, 'அரசர்களே, உங்கள் எண்ணம் தவறானது; இவ்வாசனம் எனக்கு உரியது; ஆதலின் நீங்கள் போர் ஒழிந்து செல்லுங்கள்' என்று கூறி, புத்ததேவன் அவ்வாசனத்தில் அமர்ந்து அனைவர்க்கும் தருமோபதேசம் செய்த மாண்புடையது. இந்திரன் ஏவலால் தீவதிலகையென்னும் தெய்வமங்கை யொருத்தி பாதபீடிகையைக் காத்துக் கொண்டு, அத்தீவிலேயே வசித்து வருகின்றாள். நான் இது பொழுது ஆகாய வழியே அங்குச் சென்று உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். நாளையே புறப்பட்டுவா'' என்று கூறி, தருமசாவகன் என்னும் முனிவரை வணங்கி ஆகாயத்தில் எழுந்து சென்றாள். அரசமாதேவி இவ்வதிசய வுரைகளைக் கேட்டு மெய்மறந்து நின்றாள். அரசன் முனிவரை வணங்கித் தன் காதலியை அழைத்துக்கொண்டு அரண்மனை சேர்ந்தான்.

புண்ணிய ராசனுடைய அன்னை அமரசுந்தரி யென்பாள் தனது மகனுடைய முக வேறுபாட்டைக் கண்டு, "செல்வப் புதல்வ, ஏன் இவ்வாறு மனம் நொந்து முகம் வாடி இருக்கின்றாய்?" என்று வினவினாள். அதற்கு அவன் "அன்பு நிறைந்த அன்னையே, எனது தந்தை இறந்து ஆண்டுகள் பலவாகியம் தங்கள் ஆதரவால் மனிதன் ஆகி வாழ்கின்றேன். தங்களை அன்னையாகப் பெற்ற எனக்கும் இடர் உளதோ? எனினும் இன்று மாலை தருமசாவகரை யடைந்து மெய்யுரை கேட்டு நிற்கையில், ஆங்கு ஒரு தெய்வமடந்கை ஆகாயத்தினின்று இறங்கிவந்து காட்சி தந்தாள். நான் அவளை வணங்கி, இக்
நகர்க்கு எழுந்தருளிய விசேடம் யாது?'' என வினவினேன். அவள் தன் வரலாற்றைக் கூறி, “உன் வரலாறு அதிசயிக்கத்தக்கது; நீ அதனை இது காறும் அறியாது இருந்தது பேதமை; இப்பிறவியின் வரலாற்றை அவசியம் நீ தெரிந்து கொள்ளவேண்டும்; அதோடு சென்ற பிறப்பின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள விருமபினால்,

“மணி பல்லவம் எனும் மாபெரும் தீவினில்

பிறவிப்பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்

திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுவாய்''

 

என்று கூறிச் சென்றாள். இப்பிறவியின் வரலாறும், முற்பிறப்பின் வரலாறும் எவ்வாறு இருக்குமோ என்ற கலக்கமே என் மனதை வருத்துகின்றது என்றான்.

''மகனே, இதற்காகவா வருந்துகின்றாய்? நன்றாயிருந்தது உன் செயல்! உனது பிறவி புனிதமானது. இப்பிறவியில் புண்ணியராசன் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்தவனாக விளங்குவதே சென்ற பிறப்பில் நீ சீலமுடையனாக இருந்திருப்பாயென்பதைப் புலப்படுத்துகின்றது. இதில் ஐயமே வேண்டாம். இம்மையிற் செய்வன மறுமையில் பயன் தரும் என்பது உண்மையே யாகலின், நீ சென்ற பிறப்பிற் செய்த புண்ணிய விசேடமே இப்பிறவியில் புண்ணியராசன் என்ற புகழ்பெற்றாய். எனவே, உனது முற் பிறவியும் பெருமை வாய்ந்ததுதான்; இப்பிறவியும் மாண்புடையதுதான். இது குறித்து நீ மகிழ்வடைவதை விடுத்துக் கவலை கொள்ளுதல் அறிவுடைமையாகாது.

 

"தாயே, தங்களது அமுத உரைகளால் எனது புண்பட்ட நெஞ்சம் இன்பம் அடைந்தது; எனினும், எனது பிறவி அதிசயம் உடையதாமே! நான் அதை அறிந்து கொள்ள வேண்டாமா?"

''மகனே, நீ குடல் சம்பந்தப்பட்டு பிறந்தவனல்ல; பொன் முட்டையினின்றும் தோன்றிய புனிதன்; ஆதலின் உனது பிறப்புத் தெய்வத்தன்மை வாய்ந்தது''

"பொன் முட்டையி னின்றா? அன்னையே, இப்புதுமையை ஏழைபால் இதுவரை கூறாது இருந்தது ஏனோ?'

"மைந்தனே, நின்பால் அதனைக் கூறாது மறைக்க வேண்டும் என்ற கருத்து எனக்கு இல்லை; எனினும் அதை உனக்குச் சொல்லவேண்டிய அவசியம் நேராமைபின் கூறாது இருந்தேன். தவளமலைச் சாரலில் வதியும் மண் முக முனிவரிடத்து வளர்ந்துவந்த பொன்னிறமான கொம்பும் குளம்பும் உடைய பசு வயிற்றினின்று தோன்றிய பொன் முட்டையினின்று ஒரு புதல்வன் பிறந்தான். அவனை அன்பும் ஆதரவும் பெருக அம்முனிவர் வளர்த்து வந்தார். நீண்ட காலமாகப் புத்திரப்பேறு இல்லாது வருந்திய நானும் உனது தந்தையும் ஒருநாள் அம்முனிவரைத் தரிசிக்கச் சென்றோம். காலை சூரியன் கதிர் ஒளிபரப்பிப் பொலிவது போல் பேரழகோடு விளங்கிய சிறு மகவைத்தந்து மகப்பேறு இல்லாத எங்கள் குறையைத் தீர்த்தருளுமாறு வேண்டினோம். அவரும் மனமுவந்து அப்புதல்வனைத் தந்து எங்கள் துயரை நீக்கினார். அச்செல்வப் புதல்வனே நீ.''

புண்ணியராசன் தாயிடம் விடைபெற்றுப் பிரிந்து, உணவு அருந்திய பின் படுக்கையறை சேர்ந்தான். தன் தாய் அமரசுந்தரியின் அமுத வுரைகளால் அமைதி பெறவில்லை. மணிபல்லவம் சென்று பாத பீடிகையைத் தரிசிக்கவும், பழம் பிறப்பு உணரவும், மணி மேகலையிடம் அறவுரை கேட்கவுமே அவன் மனம்விழைந்து நின்றது. இதனால் தூக்கமின்றி நெடுமூச்செறிந்து படுக்கையில் புரண்டவண்ணம் இருந்தான். அவன் அருகில் சயனித்திருந்த அவனுடைய ஆருயிர் மனைவி தனது கணவனின் துயா நிலையைக் கண்டு, "அன்பரே, தங்களுக்கு என்ன நேர்ந்தது? தூக்கமில்லாமல் கவலை புறும் தங்கள் நிலையைக் எனது நெஞ்சம் பெரிதும் புண்படுகிறது. இன்று மாலை
மணிமேகலை யெனும் அத்தெய்வத் திருமகளைத் தரிசித்தது முதல் தங்கள் மனம் வேறுபட்டிருப்பதை யான் குறிப்பால் கண்டு கொண்டேன். எனினும்
தங்கள் அன்னையின் அறவுரையால் அமைதி பெற்று இருப்பீர்களென்று எண்ணினேன்" என்று கூறி வருந்தினாள்.

“எனது இன்னுயிரே, உன் நெஞ்சமும் என் நெஞ்சமும் ஒன்றே யல்லவா? பின்பு, உன் நெஞ்சு அறியாது மறைப்பதற்கு உரிய செய்தியொன்றும் என்பால் உண்டா? இப்பிறவியின் செய்தியை எனது அன்னையால் உணர்ந்தேன். இனி முற்பிறப்பின் விவரம் முழுவதையும் அறிந்து கொள்ள வேண்டாமா? அன்றியும், தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த புத்த தேவனின் பாதபீடிகையைத் தரிசித்து வணங்கவேண்டும் என்ற ஆசைப் பெருக்கும் கரைகடந்து நிற்கிறது. ஆதலின் மணிபல்லவம் சென்று பாத பீடிகையை வணங்கி, மணி மேகலைபிடம் மெய்யுரை கேட்ட பின்னரே மனம் அமைதிபெறும்"

இதற்காகத் தாங்கள் கவலையுற வேண்டியதில்லையே; நாளை காலையிலேயே புறப்பட்டுப் போய்ப் பாத பீடிகையை வணங்கி வருவோம்"

“நாம் முன்பு ஒரு காலத்தும் சென்றிராத புது இடம் அது; அங்கே உன்னையும் உடனழைத்துச் செல்ல என் மனம் துணியவில்லை; உன்னைப் பிரிந்து செல்லவும் என் மனம் அஞ்சுகிறது. இத்தடுமாற்றமே எனது அமைதி பின்மைக்குக் காரணமாகும்.

''உங்கள் தடுமாற்றம் இருந்தவாறு நன்று! நன்று! முன்பு நம் இருவர்க்கும் நெஞ்சம் ஒன்றேயல்லது இரண்டில்லை' என்றீர்கள்; இப்பொழுது என்னை அழைத்துச் செல்ல உங்கள் மனம் அஞ்சுகிறது!" என்று கூறிக் கண்ணீர் உதிர்த்தாள்.

புண்ணிய ராசனுக்கு இன்னது செய்வது என்று தோன்றவில்லை. தனது மனைவியின் இருகரங்களையும பிடித்துக் கொண்டு, “அன்பின் உறைவிடமோ நான் சொன்னதில் என்ன தவறு கண்டாய்? நம் இருவர் நெஞ்சமும் ஒன்றென்று கூறினது உண்மைதான். ஆனால், நான் காண்பதும் கேட்பதும் நீ காண்பது கேட்பது ஆகாவா? இவ்வொருமுறை மட்டும் நான் தனியே சென்று வர விடை கொடு' என்று கெஞ்சினான்.

"என்னை 'அன்பின் உறைவிடம்' என்று ஏமாற்றி, நீங்கள் அன்பில்லாதவர் என்பதைச் செயலில் காட்ட முற்பட்டு விட்டீர்கள். 'நாம் இருவரும் ஒருவரே' என்ற தங்கள் உரையை எனது நெஞ்சம் ஏற்க அஞ்சுகிறது. தாங்கள் தனித்துச் செல்கின்ற அத் தீவிலே தங்களுக்கு என்ன நேருமோ? தாங்கள் வரும் காள் என்றோ? என்று இவ்வாறு எல்லாம் என் மனம் கலங்குகின்றது."

“நல்லாய், உன்னைப் பிரிந்து நீண்டநாள் அங்கு நில்லேன்; பாத பீடிகையைத் தரிசித்ததும் வந்து விடுவேன்'' என்று கூறினான். அவள் மறுமொழி ஒன்றும் பகராது அப்படியே அயர்ந்து படுத்து விட்டாள். சம்மதக்குறியே மௌனம் என்பர். ஆனால் இப்பொழுது இவள் கொண்ட மௌனம் சம்மதத்தின் குறியாகத் தோன்ற வில்லை. புண்ணியராசன் அதன் மேல் செய்வது இன்னதென்று அறியாது, மனம் நொந்து அமளியில் படுத்தவண்ணமே பொழுது புலர்வதை எதிர்பார்த்து இருந்தான்.

புண்ணிய ராசனது எண்ணத்தை யறிந்து அவன் விருப்பை விரைவில் நிறைவேற்றக் கருதினவன் போல் பகலவன் கீழ்த்திசை தோன்றினான். கோழிகள் கூவின்.
காகம் முதலிய பறவைகள் ஒலித்தன. அரண்மனையில் காலை முரசம் ஒலித்தது. புண்ணியராசன் எழுந்து சபாம மண்டபம் அடைந்தான். உலகத்தில் நிகழவியலாத புதுமை தனது பிறவியில் நிகழ்ந்திருப்பதும், மணி பல்லவம் சென்று பாத பீடிகையைத் தரிசிக்கவும் மணிமேகலை யிடத்து மெய்யுரை கேட்கவும் எழுந்த ஆசை ஒரு பக்கம் தூண்ட, அதன் பொருட்டுத் தான் மணி பல்லவம் சென்று மீள வேண்டித் தனது மனைவிக்குப் பலவாறு தேறுதல் மொழிகள் கூறியும் கேளாது தனது செல்கைக்கு உடன் படாதவள் போல் மௌனம் காட்டியதால் ஏற்பட்ட மனத்துயரும் சேர்ந்து அவனுக்கு அரசாட்சியில் வெறுப்பு உண்டாக்கின. மந்திரி சனமித்திரனை வரவழைத்துத் தன் கருத்தைப் பின் வருமாறு கூறினான்: - *மதிவல்லோய், எனது பிறப்பின் வரலாற்றை எனது அன்னை கூறாதிருந்ததன்றி, நீயும் இதுவரை என்பால் கூறாது மறைத்தனையே; ஒரு பசு வயிற்றில் தோன்றிய டொன்னிறமான முட்டையினின்றும் நான் தோன்றிய வனாமே! இங்ஙனம் பிறந்ததற்கு நான் முற்பவத்தில் செய்த வினை யாதோ? உயிர்கள் எல்லாம் அறிவு குறைந்து நிலை தடுமாறித் தத்தளித்த பொழுது, அவற்றின் பேதமையிருள் நீங்கத் தோன்றிய புத்தஞாயிறின் பாத பீடிகை மணி பல்லவம் எனும் தீவில் இருக்கின்றதாம். அதனைக் கண்டு கை தொழுபவர்க்கு அவர்களுடைய பழம்பிறப்பு நன்கு புலப்படுமாம்! நேற்று மாலை நமது நகர்ப்புறச் சோலையில் தருமசாவகரிடத்தில் அறவுரை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, ஆங்கே மினனெனத் தோன்றிய கன்னியர் திலகமாம் மாதவச் செல்வி மணிமேகலையால் அஃது உணர்ந்தேன். அத் தரும பீடிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற அவா அளவு கடந்து நிற்கிறது. அன்றியும்,

‘செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க

அரசன் வீற்றிருந்து புரையோரப் பேணி

நாடகம் கண்டு பாடற் பான்மையில்

கேள்வி இன்னிசை கேட்டுத், தேவியர்

ஊடற் செவ்வி பார்த்து நீடாது

பாடகத் தாமரை சீறடி பணிந்து'


அநுபவிக்கும் இப் பொய்மை இன்பத்தை விட்டு நீங்கவும் எனது உள்ளம் பெரிதும் விழைந்து நிற்கிறது. ஆதலின் இன்று முதல் இவ் வரசுரிமையை நீயே ஏற்றுப் பாதுகாத்துவா.''

      மன்னவன் உரையைக் கேட்ட மந்திரி சனமித்திரன் மனக்கலக்கமூற்று, ''அரசே, வாழ்க பல்லாண்டு! எனது புன் சொற்களையும் சிறிது திருவுளம் பற்ற வேண்டும்; இத்தகைய முடிவுக்கு வர தங்கள் உள்ளம் எவ்வாறு துணிந்தது! தங்கள் உரை அடியேற்குத் துயர்தர வில்லையாயினும் வியப்பு அதிகம் விளைக்கின்றது; உலகமுற்றும் அழியினும் தான் ஒருவன் வாழ்ந்தாற் போதும் என்று நினைக்கும் கீழ் மக்கள் கூறும் வார்த்தையன்றோ இவை? பூமி சந்திரன் என்னும் அரசர் தங்களைப் பெறுவதற்கு முன்பு இச் சாவகநாடு பன்னீராண்டு மழைவளமின்றி, மன்னுயிரெல்லாம் மடியத் தொடங்கின. ஈன்றாள் தன் மகவுக்கு இரங்காது தானே தனித்து பண்ணும் அக் காலத்து, காய்ந்த வெவ்விய கோடையில் நீல மேகம் தோன்றியது போல நீர் தோன்றினீர். அரசர் பெருந்தகையே! அன்று தொட்டு மழை பொய்த்ததில்லை, மண் வளம் பெற்றது, உயிர்கள் எல்லாம் பசி யென்பது அறியாவாயின. தாங்கள் இந்த நாட்டை விட்டு நீங்குவீர்களாயின் தாயில்லாக் குழவிபோல இந் நாடு வாய் திறந்து கூவா நிற்கும். ஆதலின் தங்கள் நினைவை மறந்தருள வேண்டுகிறேன்'' என்று கூறினான்.

      "அறிவின் மேம்பட்ட அமைச்சரே, என்னால் இந்த நாடு வளம் பெற்றது என்பதை நான் ஒப்பமாட்டேன்; நல்லவை புரிந்தோர் நன்னிலையடைதலும், அல்லவை புரிந்தோர் அருநரகு அடைதலும் அனைவர்க்கும் ஒப்ப முடிந்ததே யாகலின், இந் நாடு செய்திருந்த இரு வினையுள் தீவினைப் பயனை அனுபவித்துக் கழித்து, இப்பொழுது நல்வினையின் பயனை அனுபவிக்ன்றது. ஒருவன் பெறும் இன்பமும் அவன் செய்த வினையின் பயனே யல்லது, வேறொருவன் அதற்குக் காரணமாகான். ஆதலின், எனது விருப்பை மாறாது எற்றுக் கொள்ள வேண்டும்.”

      "நாடு செய்த இருவினையுள் புண்ணியத்தின் பயனே தாங்கள்; இந் நாட்டினின்றும் தாங்கள் நீங்குவீர்களாயின் புண்ணியம் இந் நாட்டினின்றும்அகன்றது என்ற பொருளே யன்றி வேறன்று. அவரவர் செய்த வினைப் பயனை அவரவர் அநுபவித்து ஆக வேண்டு மென்பது உண்மைதான்; ஆனால் இவ்வுரை என்னைப் போன்ற பிறர்க்குப் பொருந்துமேயன்றி தங்களுக்கு ஒவ்வாது. மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன் உயிர் ஆதலின், வேந்தன் நாட்டை விட்டு நீங்கின் பிறவுயிர்கள் மட்டும் அந் நாட்டில்
லைத்திருக்குமா? அன்றியும், அவரவர்கள் செய்த வினைப்பயனை அவரவர்களே அநுபவித்தாக வேண்டுமல்லது, பிறர் முயன்து அவ் வினைப்பயனை ஒழிக்கப் புகுதல் வீண் முயற்சியே யாகும் என் றல் கேர்மையல்ல. நம்மையெல்லாம் ஆட்கொண்ட ஐயன் மீனாயும், முயலாயும், அன்னமாயும், மயிலாயும் பிறவாயும் அவதரித்து அவ்வவற்றின் துயரைப் பரிகரிக்க முயன்ற சேன்? அருநரகில் சிலர் வருந்த, அவர்கள் துயரை ஒழிப்பதற்கு நம் கருணை வள்ளல் அந் நரகிடையும் சென்று அருள வில்லையா? ஆதலின் துயர் நிறைந்த உலகைக் காத்தலின்றி உயர் நிலையாகிய நிருவாணத்தை விருமபினிராயின், உயிர்கள் எல்லாம் துயரம் அடையவும், நீங்கள் இன்பம் அடையவும் விரும்பிய தாகவன்றோ முடியும்?

‘தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும்

மன் உயிர் முதல்வன் அறமும் இதன்றே'

 

பிறவுயிர்களின் துன்பத்தை நீக்கக் கருதாது, தன் பயனைக் கருதித் துறத்தற்குத் துணிந்திரே! இது என்ன புதுமை!" என்று மேன் மேலும் அறவுரை பல அமைச்சன் கூறினான்.

அரசன் அம் மெய்யுரையை மறுக்க வியலாது, ''அறிவான் மிக்க பெரியோய், மணி பல்லவம் சென்று தரும பீடியைத் தொழுது வரவேண்டுமென்ற எனது வேட்கை தணித்தற்கு அரிது. யான் சென்று ஒரு திங்களில் திரும்பி விடுகின்றேன்; அதுவரை இந் நாட்டைப் பாதுகாத்தல் நின் கடன். அன்றியும், எனது மனைவி என் பிரிவிற்கு உடன்படாது வருந்துகின்றாள். அவளையும், அன்னையையும், பிதரையும் ஆறுதல் கூறி ஆதரித்திடுவாய்; மாதவன் அமர்ந்த பாத பீடிகையையும், மணிமேகலை தீவதிலகை இவர்களையும் வணங்கி மெய்யுரை கேட்டுத் திரும்பி வருகின்றேன். சென்றுவர அன்புடன் விடை கொடு" என்று இரந்து நின்றான். அமைச்சன் அரசடைய தணியா வேட்கையையும், அதனால் உலகம் மேல் நிலையடைதல் கூடுமெனவும் கருதி அரசனுக்கு விடை தந்து, மணிபல்லவம் சென்றுவர கப்பலைச் சித்தப்படுத்திவைக்குமாறு ஏவலாளர்க்கு ஆணையிட்டான். அவர்கள் அப்பொழுதே கப்பலைத் துறை முகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அனைவரிடத்தும் விடை பெற்று வங்கம் ஏறி மணிபல்லவம் அடைந்தான்.

4 கொலைஞன் கொற்றவன் ஆனமை

மணி பல்லவம் என்னும் தீவையடைந்து புண்ணியராசன் வரவை யெதிர்பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை அரசன் அங்கு அடைந்ததை யறிந்து, எதிர் சென்று அழைத்து அத்தீவை வலம்வரச் செய்தாள். அப்பொழுது அதன் இயற்கையழகை அரசனுக்கு ஒவ்வோரிடமாகக் காட்டி வந்தாள். கடலின் பேரலையாலும், காற்றாலும் ஒதுக்கப்பட்ட வெள்ளிய மணற் குன்றுகள் சர்க்கரைக் குவியல் போல் பொலிந் தன. பத்த தேவனது பாதபீடிகை அங்கு இருப்பதை நெடுந் தூரத்தில் வசிப்பவரும் அறிந்து உய்வதற்கு என நிறுவப்பட்ட தருமத் தூண்கள் போல் தென்னை மரச் செறிவும், பனைமரச் சாலையும் விளங்கின. களங்கமற்ற பளிங்கு போல் நீர் நிலைகள் பல அங்கங்கே இருந்தன. அவற்றில் ஆம்பல் குவளை முதலிய கொடிகள் படர்ந்திருந்தன. அக் கொடிகளில் மலர்ந்துள்ள அழகிய பூக்களில் படிந்து வண்டுகள் இன்னிசை யெழுப்பின. அன்னமும், கொக்கும், உள்ளும், ஊாலும், கம்புட் கோழியும் இன்னும் பலப்பல பறவையினங்கள் அக் நீர் நிலை
களில் தவழ்ந்தும் பறந்தும் ஒலித்தன. நீர்நிலையின் கரையில் நிறைந்து வளர்ந்த தாழையின் மலர்கள் மணம் வீசி நின்றன. தருமராசன் இருந்து அறம் உரைத்த பீடிகை தன்னிடம் உள்ள மேன்மையால், அத்தீவு முழுவதும் தருமம் நிறைந்து பொலிவது போல் பவளக் கொடிகள் படர்ந்து விளங்கின. இத்தகைய காட்சிகளை மணிமேகலையும் புண்ணிய ராசனும் கண்டு மகிழ்ந்து பாதபீடிகை இருக்கும் இடத்தை யடைந்தனர்.

அங்குள்ள அமைதியையும் அழகையும் என்னவென்று சொல்வது? அப்பீடிகையைச் சூழ்ந்துள்ள புன்னை முதலிய மரங்கள் நல்ல மலர்களையன்றிப் பிறவற்றை அதன்மேல் சொரியா; பறவைகள் அதன் பக்கத்தே சென்று சிறகொலியை எழுப்பா; காற்றும் அங்கு இரைந்து வீசாது. அக்காலத்தில், புத்ததேவன் அதன் மீது அமர்ந்து, அனைவாக்கும் தருமோபதேசம் செய்த பொழுது நிலவிய அமைதியே அன்று நிலவியது; புண்ணிய ராசன் நிலத்தில் விழுந்து தாழ்ந்து வணங்கி, இரு கரங்களையும் சிரமேற் கூப்பி, மெய்மயிர்
பொடிப்ப உள்ளம் நெக்குருகப் பின் வருமாறு போற்றலுற்றான்: -

"ஒளியாகி உலகாகி விரிந்தாய் என்கோ!

உலகெலாம் நின்னடியின் உள்ளடங்கிற் றென்கோ!

அளியார உலகம்நீ ஆள்கின்றாய் என்கோ!

அமரர் உலகு தான்நின்ன தடியடைந்த தென்கோ!

 

விளியாத மெய்ப்பொருளை நீ விரித்தாய் என்கோ!

நீ விரித்தவாறே மெய்ப் பொருள் விரிந்த தென்கோ!

தெளியாமல் இல்லைநின் திருவடிகள் மெய்மை!

தெளிந்தாலும் செவ்வனே ன தெரிந்துரைக்க லாமே!

 

“ஆரமிழ்தம் மணிநாகர் குலம்உய்ய அருளினையே!

வார்சிறைப் புள் அரையற்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே!

 

''எறும்புகடை அயன் முதலா எண்ணிறந்த எவ்வுயிர்க்கும்

பிறந்திறந்து யோனிதொறும் பிரியாது சூழ்போகி

எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்

அவ்வுடம்பில் உயிர்க்குயிராய் அருள் பொழியும் திருவும் நீள!"

 

இங்ஙனம் பற்பலவாறு துதித்து நிற்கையில், குற்றமில்லாத கண்ணாடி
தன்னைப் பார்ப்பவர் முகத்தைத் தெளிவாகக் காட்டுவது போல பாத
பீடிகையை வணங்கி நின்ற புண்ணிய ராசன் மனதில் அவனது முற்பிறவி
யின் வரலாறு அனைத்தும் அப் பீடிகையின் காட்சியால் நன்கு புலனாயிற்று!
அவ்வளவில் அவன் தனது முற்பிறவியில் நிகழ்ந்த இன்ப துன்பங்களின்
நினைவு எழ, தனக்குத் தானே பின்வருமாறு பேசத் தொடங்கினான்.

“பொன்னிறமான கொம்பும் குளம்பும் வாய்த்து, மக்கள் பலரும் தொழுது ஏத்த விளங்கிய தெய்வத் திருப்பசுவே! உனது அருட்செயலை அன்புப் பெருக்கை எவ்வாறு விரித்துரைப்பேன்! இப் பிறவியில் என்னை ஈன்றதல்லாமல் பிறவியிலும் எனக்குத் தாயாக விளங்கியவள் நீயல்லவா? வாரணாசியில் வாழ்ந்த சாலி யென்னும் பார்ப்பனச் செல்வி குமரியாடச் செல்கையில் என்னை வழியிடையே ஈன்று, சிறிதும் இரக்கமின்றி என்னை அவ் விடத்திலேயே எறிந்து போக, நீயன்றோ அப்பொழுதுனது பாலமுதம் ஊட்டி என்னை வாழ்வித்தாய்! இளம்பூதி அந்தணனால் அடியேன் அன்புடன் வளர்க்கப் பட்டேனாயினும், இடையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் அவனும் என்னை விலக்கி விட்டான். ஐயோ! அந்தக் கொடுமைக்கு - வேள்வியென ஒன்றை ஏதுவாகக் கொண்டு சாந்த
வடிவை - அருள்ருவை - தெய்வப் பசுவைக் கொலை செய்யும் கொடுமைக்கு உடன் படுவேனா? அதற்கு உடன்படாது பசுவைக் கவர்ந்து சென்றமையால் இளம்பூதியும், வேறு பலரும் எளியனை வெறுத்து ஒதுக்கிவிட்டனர். அதனால், அடியேன் மதுரையம்பதியில் பிச்சையெடுத்து உண்ண நேர்ந்ததாயினும், பெருமித வாழ்வு வாழ்ந்தேன். ஒருநாள் நள்ளிருளில் சிலர் என்னை யடைந்து பெரும்பசி வருத்துகின்றது; இது பொழுது சிறிதுண்டி கொடுத்தால் எங்களுக்கு உயிர் கொடுத்தவர் ஆவீர்' என்று வேண்டினர். பிறருடைய மனைதோறும் வாங்கிவந்த உணவு முழுவதையும் பலர்க்கும் வழங்கி, வெறுங் கலத்தை வைத்திருக்கும் ஏழையேன் அவர்கள் பசியை வழியறியாது திகைப்புற்று வருந்துகையில், அன்னையே! அன்பு நிறைந்த அன்னையே!

“நாடு வறங்கூரினும் இவ்வோடு வறங்கூராது

ஏடா! அழியல்! எழுந்து இது கொள்க' என

அமுதசுரபி அங்கையில் தந்து என்

பவம் அறுவித்த வானோர் பாவாய்!

 

அடியேன் எத்துணைப் பிறவி யெடுக்க நேரினும், நின் திருவடித் துணை போற்றுத லல்லது மறந்து வாழேன். இந்திரன் என்மீது கடுஞ்சினங் கொண்டு, பற்பலவாறு என்னைத் துன்புறச் செய்தான் என்று தவறாக கினைந்து வருந்தினேன். அப் பெருமகன் அவ்வாறு செய்திலனேல், அமுதசுரபி யெனும் அத் தெய்வத் திருக்கலம் என்னினும் பன்மடங்கு நல்லளாய மணிமேகலையின் கைப் தகுவதற்கு இல்லாமலும், உலகு அனைத்திற்கும் பயன் படாமலும் அன்நோ கழிந் திருக்கும்" என்று இவ்வாறு தனக்குத் தானே கூறிக் கொண்டிருக்கையில், மணிமேகலை அவனை யழைத்துக் கொண்டு "கோமுகி' என்னும் பொய்கைக் கரையை அடைந்தாள். "தவச் செல்வி, சென்ற பிறவியில் அடியேன் அமுதசுரபி யெனும் அரிய பாத்திரத்தை விடுத்த பொய்கை இதுதானே?" என்று கோமுகிப் பொய்கையைக் குறித்து வினவினான் அரசன். “ஆம், ஐய; இதுதான் அப் பொய்கை; நீ துயரால் மெலிந்து பாத்திரத்தை விடுத்த பொய்கை இதுவே" என்று கூறினாள் மணிமேகலை. என்றும் வற்த தெளிந்த நீரையுடைய பொய்கையே, வாழிபல் ஊழி?'' என்று வாழ்த்தி வணங்கினான்.

தீவதிலகை யென்னும் அத் தீவின் தெய்வம் மணிமேகலையும், புண்ணிய ராசனும் வந்திருப்பதை யறிந்து அங்கு அடைந்தாள். அரசனும், மணிமேகலையும் அவள் அடியை வணங்கினர். ''அரசே, இவ்வம்மைதான் மாண்பமைந்த பாத பீடிகையைக் காக்கும் தெய்வம்; தீவதிலகை யென்ற திருநாமம் உடையார்'' என்று அப் பெண் தெய்வத்தைப் புண்ணிய
ராசனுக்கு அறிமுகப் படுத்தினாள் மணிமேகலை.

“அன்னையே, வானவர் கோமான் சென்ற பிறப்பில் என் பொருட்டுச் செய்த செயல்கள் என்னைத் துன்புறுத்துவதற்கு என்றே செய்தனரென்று கருதினேன். ஆனால், பெரியவர்கள் புரியும் எந்தச் செயலையும் இன்னதைக் கருதிதான் செய்கின்றனரென என் போன்ற சிறியவர்கள் முடிவு செய்வது தவறு என இப்பொழுது உணர்கின்றேன். அவராலன்றோ இன்று தங்களையும், தரும பீடிகையையும் தரிசிக்கும் பேறு பெற்றேன்" என்று புண்ணிய ராசன் அவ் வணங்கை மீண்டும் தொழுதான்.

"அறத்தின் மைந்த, அன்பும் அறிவும் நிறைந்த ஆன்றோர்க்கு என்றும் சினமே வருவதில்லை; ஒருகால் வரினும் அச்சினம் ஒரு கணத்துள் மாறி விடும். சில சமயம் மாறாது பிறர்க்குத் துன்பம் செய்ய முயலினும், அம்முயற்சி அவர்க்குத் துயரந் தருவதுபோல் தோன்றி இறுதியில் இன்பந்தருவதாகவே முடியும். எனது தலைவனான இந்திரன் செயலால் இதை நன்கு அறிந்து கொள்ளலாகின்றோம். அமுதசுரபியைக் கையிற் கொண்டு உயிர்களின் கொடுந்துயர் தீர்த்த பெரியோய், சாவக நாட்டின் பஞ்சத்தை நீக்க
விரும்பி வணிகர் சிலர் சென்ற பிறப்பில் உன்னை மதுரையிலிருந்து நாவாயில் ஏற்றி அழைத்து வருகையில், கடுங்காற்றால் அக் கப்பல் அலைப்புண்டு மணிபல்லவம் எனும் இத் தீவை யடைந்தது. அப்பொழுது கப்பலில் இருந்து இறங்கிய நீ மீண்டும் ஏறியிருப்பாயென்று கருதி உன்னை இத் தீவில் தனியே விட்டுச் சென்றனர். நெடுந் தூரஞ் சென்ற பின்னர் நீ கப்பலில் இல்லாமலிருப்பதை யறிந்து, துணுக்குற்று நாவாயை மீண்டும் இத் தீவிற்கு விரைந்து செலுத்தி வந்தனர். அவ்வணிக மக்கள் இத்தீவு முழுதும் உன்னைத் தேடி, இறுதியில் இங்கு- இதே இடத்திற்கு வந்து வெற்றுடலைக் கண்டனர். அப்பொழுதே அவாகள் துக்கத்தால் செஞ்சடைப் புண்டு இறந்தனர். அங்ஙனம் இறந்த அவ்வொன்பதின்மரின் என்புக் கூடுகள் இதோ கிடக்கின்றன பார்! அவர்களுடன் வந்த வேறு சிலரும் அத்துயரக் காட்சியால் உயிர் துறந்தனர். அவர்களுடைய எலும்புக் குவியல்கள் இவை! இதோ புன்னை மரத்தின் கீழே கடல் அலையால் மணல் மூடப்பட்டு உனது பழைய உடல் கிடக்கின்றது!

நின் உயிர் கொன்றாய், நின்னுயிர்க்கு இரங்கிப்

பின்னால் வந்த பிறர் உயிர் கொன்றாய்.

கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை!


எனினும் சென்றவை குறித்து வருந்தாதே; அனைத்தும் நன்மைக்கே என்ற அமுதவுரையை நம்பி, புத்த தேவனது உத்தம நெறியை உலகினர்க்கு விளங்கச் செய்துவா" என்று கூறி, மணிமேகலை யிடத்தும் சில அறவுரை பேசி, மின்னல் மறைவது போல் ஆகாயத்தில் எழுந்து மறைந்து சென்றாள்.

      புண்ணிய ராசன் தீவதிலகை குறிப்பிட்ட இடத்தில் மணலைச் சிறிது தோண்டினான். தசை யென்பது இல்லாமல், வெள்ளிய சுண்ணச் சாந்து பூசப்பட்டது போல் வெண்மை நிறம் வாய்ந்த, கட்டுக் குலையாத, தனது சென்ற பிறப்பின் எலும்புக் கூட்டைக் கண்டான். கண்டதும், அவனுக் தொடங்கின. அன்று தன்னை ஏற்றிவந்த மரக்கலம் தான் இத்தீவில் இறங்கியிருப்பதை யறியாது தனியே விடுத்துச் சென்றதும், தான் இத்தீவில் எவரேனும் வசிப்பவர் உளரோ என்று இத்தீவு முழுவதும் அலைந்தும் ஒருவரையும் காணாது, மனம் நொந்து தனது உயிரினும் அரிதாகப் போற்றி வந்த அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் விடுத்ததும், உயிர் துறந்ததும் ஒவ்வொன்றாக நினைந்து நினைந்து தனது பழைய யாக்கையைப் பார்த்த வண்ணமே மனம் மயங்கிக் கண்ணீர் உகுத்தான். அவன் நிலையை அறிந்த மணிமேகலை, "அரசர் பெருந்தகையே, உனக்கு நேர்ந்தது யாது? எது கருதி இவ்வாறு கலங்குகின்றாய்? உனது பழைய சம்பவத்தை மீண்டும் உனக்கு நினைவூட்டி, நீ துயரம் உறுவதைப் பார்க்கவா யான் உன்னை இத்தீவிற்கு அழைத்து வந்தேன்? நன்றாயிருந்தது உன் செயல்! ஆன்றோர்களிடத்து அறவுரை கேட்டு உணர்ந்த நீ இங்ஙனம் மயங்குவது எனக்குத் துயரினும் வியப்பே மிகுகின்றது. புண்ணியச் செல்வ,

'அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க, மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை'

[இறக்கும் காலத்தில் செய்வோம் என்று எண்ணாமல் அறத்தை எப்போதும் செய்க; அஃது நாம் இறக்கும் போதும் அழியாத துணையாகும்] என்ற உண்மையை உலகினர்க்கு உணர்த்த விரும்பியே உன்னை இங்கு அழைத்துப் பழம் பிறப்பு அறியுமாறு செய்தேன். உனது முற்பிறப்பின் நிகழ்ச்சியைஉனது நகரிலேயே நான் உன்னிடம் கூறியிருப்பேன். அங்ஙனம் கூறியிருந்தால் உனது புகழை உலக முழுவதும் அறிந்து மகிழ ஏதுவாகாது. நீ இங்கு வந்து தரும பீடிகையைத் தரிசிக்கவும், பழம் பிறப்பு உணரவும் நேர்ந்ததால் உனது புகழ் உலகெங்கும் எளிதில் பரவும். நீ வருந்த வேண்டாம்" என்று கூறி புண்ணிய ராசனைத் தேற்றினாள்.

“அருந் தவப்பேறே, தரும பீடிகையைத் தரிசித்த பொழுது சென்ற பிறப்பின நிகழ்ச்சிகள் அனைத்தும் எனது மனக் கண்ணில் புலனாயின. எனினும், அது பொழுது ஒரு சிறிதும் துயருண்டாகவில்லை; எனது இப்பழைய யாக்கையைப் பார்க்கும் பொழுது மனமுடைந்து கண்ணீர் மல்கத் தொடங்கி விட்டது. இன்னொன்று என் மனதை வருத்திக் கொண்டே இருக்கிறது. என்னை யீன்ற அன்னை-சாலி யென்னும் பெயருடையாளின் வாழ்க்கை எவ்வாறு முடிந்ததோ என்று எளியேன் மனம் எங்குகிறது. அவள் கன்னியாகுமரியில் நீராடித் தனது ஊர் சென்று அடைத்ததும், அவளை அவன் கணவன் ஏற்றுக் கொண்டதும் கொள்ளாததும் ஒன்றும் புலனாகவில்லை.''

''முன்பு எல்லாம் உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியே உதித்தது; இப்பொழுது உனது இப் பேதமையைக் கண்டு என் மனம் பெரிதும் வருந்துகிறது. அரசே, பிறருடைய தாழ்நிலையைக் கண்டு இரங்குதல் உத்தமமே யெனினும், உனது தாய் சாலியைக் குறித்து நீ வருந்துதல் பேதமையாகும். அன்று உன்னை பார்ப்பனர் பலர் வளைத்துக் கொண்டு கற்பில்லாதவள் பெற்ற மகன்' என்று பழித்த பொழுது நீ அவாகளுக்குக் கூறிய அமைதி மொழிகளை மறந்தனையா? நீ பிறந்து உலகில் என்றும் அவளை அழியாத வளாகச் செய்து விட்ட பிறகு நீ அவள் நிலைமையைக் குறித்து வருந்துதல் பேதமையாகும்"

“உத்தமச் செல்வி, என் அறியாமையை மன்னித்துவிடு; அடிக்கடி இத்தரும பீடிகையைத் தரிசிக்கவும், உன்னுடன் இருந்து மெய்யுரை கேட்கவும் எனது உள்ளம் விழைகின்றது. மீண்டும் எனது நாடு சென்று அரசு புரிதலை யேற்க என் உள்ளம் அஞ்சுகிறது. இவ் வேண்டுகோளை மறுக்காது ஏற்றருள வேண்டுகிறேன்.''

''மெய்யுணர் வுடையோய், உனது விருப்பம் இருந்தவாறு நன்று! நன்று! காடு புரக்கும் அரசர்கள் துறவு மேற்கொண்டால் பின்பு உலகம் என்னாம் என்பதை ஒரு சிறிதும் ரீ சிந்தித்துப் பார்க்க வில்லையே; உலகில் நல்லவரும் உளர்; தீயவரும் இருக்கின் றனர். வலியோர் மெலியோரும் உண்டு. அறிவுடையோரும் அஃதில்லாதவரும் இருக்கின்றனர். இங்ஙனம் பல திறப்பட்ட மக்களுள் ஒருவரால் ஒருவருக்குத் துன்பம் நிகழாதவாறு பாது காத்தல் உன்னைப் போன்ற மன்னவரின் கடமை யல்லவா? இதனினும் சிறந்த தொண்டு வேறு ஒன்றுமேயில்லை. புத்த பகவான் அரசு நீங்கித் துறவு மேற்கொண்ட செய்தி வேறு. அக்காலத்தில் உலகெங்கும் அறியாமை இருள் சூழ்ந்திருந்தது. ஓரிடத்தில் நிலைத்திருந்து அப்பேதமையை ஒழிக்க வியலாதென்று கருதி அவர் துறவியானார். இப்பொழுது இப்பொழுது நிலைமை அவ்வாறு இல்லை. நீ உனது நாட்டைப் பாதுகாத்து வந்தால் உன் நாட்டின் அமைதி நிறைந்த வாழ்க்கையை - ஆனந்தம் குடி கொண்டுலவும் அழகை மற்றைய நாட்டு அரசர்களும் கண்டு உன் வழியைப் பின்பற்றுவர். நீ உனது நாட்டிற்குச் செல்லா விட்டால் தாயைப் பிரிந்த குழந்தைகள் வாய் விட்டுக் கதறுவது போல் உன்நாடு உன்னை நினைத்துப் புலம்பும். ஆதலின், நீ உனது நாடு சென்று அனைவர்க்கும் உண்டியும், உடையும், உறையுளும் கொடுத்துப் பாதுகாத்துவா. இதுவே மிகச் சிறந்த அறமாகும். நான் வஞ்சிமா நகர் செல்ல வேண்டியுளது. போதி மரத்தின் கீழ் அமர்ந்து புண்ணிய நெறியைப் போதித்த ஆதிநாதன் அடியிணையை அன்ப, என்றும் மறவாதே; அன்பு வாழ்க! அநம் வாழ்க" என்று கூறி, மணமும் அழகும் நிறைந்த மலாக்கொடி ஒன்று ஆகாயத்தில் எழுந்து பறந்து செல்வது போல் மணிமேகலை பறந்து சென்றாள். புண்ணிய ராசன் மணிமேகலை
கண்ணிற்குத் தெரியும் வரை இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் நின்று; அவள் வடிவம் மறைந்ததும் பிரிவு எனும் துயர் அவன் மனதை வருத்தியது. எனினும் நாட்டின் நினைவு எழ, அத்துயரை ஒருவாறு மறந்து, மரக்கலம் ஏறித் தனது நாடு அடைந்தான்.

புண்ணிய ராசன் மணிபல்லவம் சுகமே திரும்பியதைக் குறித்து அவன் நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சிப் பெருக்கை அளவிட்டுரைக்க முடியாது. இராமபிரான் பதினான்கு வருடம் வரை பிரிந்திருந்து மீண்டபொழுது கோசல நாட்டார் அடைந்த குதூகலத்தினும் அதிகமாக இருந்தது அவர்களுடைய குதூகலம். மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் மாசு துடைத்து, வெள்ளிய சுண்ணச் சாந்து பூசினார்கள். அவற்றின் மேல் அழகிய கொடிகள் பல பறக்க விட்டார்கள். பலவகை நிறச்சாந்துக்களால் பழைய சித்திரங்களைப் புதுப்பித்தார்கள். பொற் பதுமைகளையும், பாவை விளக்குகளையும் அங்கங்கே வைத்து அழகு படுத்தினர். முத்து பவளங்களை மாலை மாலையாகக் கோத்து அவற்றைத் திண்ணைகளிலும் தூண்களிலும் தொங்க விட்டனர். வாழை கமுகு முதலிய மரங்களை வரிசை வரிசையாக நட்டனர். அகன்று பரந்த தெருக்களிலும் சந்துகளி மணலைப் பரப்பினார்கள். மாவிலை முதலியவற்றால் மகர தோரணங்கள் தூக்கினர். ஆன்றோர்கள் மன்றங்களிலும் பிற விடங்களிலும் அமர்ந்து, அறத்தின் பெருமையை விளங்கக் கூறினர். முழுவதும் அன்பும் அறமும் தழைத்தோங்க புண்ணிய ராசன் பல்லாண்டு வாழ்ந்திருந்தான். அறம் வாழ்க.

ஆனந்த போதினி – 1936, 1937 ௴ -

ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், ௴

 

No comments:

Post a Comment