Wednesday, August 26, 2020

 

ஆத்ம ஸமர்ப்பணம்

“மைவண்ணன்"

 

"அம்பலவாணன்! என்ன அழகான பெயர் நடராஜன் என்றும் அவனை நானிலத்தார் நவில்வார்களாமே! அதுவும நாகரிகமாகத்தான் இருக்கிறது...... அம்பலவாணன்! நடராஜன்! அம்பலவாணன்!! நடராஜன்!! அ-ம்-பால-வா-ண-ன்-!!........ ந-ட-ரா-ஜ-ன்!!! '

 

இவ்விதம் அழகிய நங்கை யொருத்தி தனக்குத்தானே கூறிக் கொண்டிருந்தாள். செஞ்ஞாயிறு மேல்வானத்தைப் பொன்வண்ண மாக்கிக்கொண்டு கடலில் மூழ்குவதையும் அவள் கவனிக்கவில்லை. இனிய தென்றற்காற்று ரமணீயமாக வீசிஎது மேலாடையை நெகிழச் செய்வதையும் அவள் அறியவில்லை. மலர் தொறும் சென்று தேன் உண்டு மயங்கிய கருவண்டுகள், பசிய கொடிகளின் இடையே மலர்ந்த செந்தாமரை மலர் என எண்ணி அவளது மதிவதனத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு ரீங்காரஞ் செய்வதையும் அவள் விலக்கி ஓட்டவில்லை. பன்னிறப்பூக்களின் நறுநாற்றங்கூட அவளது மூக்கைத் துளைக்கவில்லை. அம் மாலை நேரத்தில் இயற்கைதேவி செய்து காட்டிய இந்திரஜால வித்தைகளும் அவளுடைய கண்களைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை. குயில் முதலிய பறவைக் கூட்டங்கள் எழுப்பிய இனிய ஓசை கூட செவி வழியாகப் போய் அவளது இதயக்தைக் கனியச் செய்தது என்று கூறுவதற்கில்லை. அவ்வளவு தூரம் அவள் தன்னை மறந்து அம்பலவாணனுடைய பிரபாவத்தில் ஆழ்ந்திருந்தாள்.

 

சுந்தரியின் சுற்றத்தார் சிதம்பரம் போய்விட்டு முன்னாள் தான் திரும்பி வந்தனர். அவர்கள் அனைவரும் அம்பலவாணனின் அருள் திருவினையாடலைப் பற்றியும் அலகிலாப் பெருமையைப் பற்றியும் அளவில்லாமல் கூறலாயினர். சிலர் நடராஜப் பெருமானது ஆயிரம் திருநாமங்களை அழகுபடக் கூறி மனனம் பண்ணலாயினர். மற்றுஞ் சிலர். கூத்தரசனின் திருக்கோலத்தைக் குறித்துப் பலபட வருணிக்கலாயினர். “குனித்த புருவத்தின் எழில் என்ன! கொவ்வைச் செவ்வாயில் திகழும் குமிண் சிரிப்பின் மின்னொளி என்ன! பனித்த சடையின் பான்மை என்ன! பவளம் போன்று சிவந்த மேனியில் விளங்கும் பால் வெண்ணிற்றின் தாவள்யம் என்ன! இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தின்
ஏற்றம் என்ன! அவனது முகத்தில் இலங்கும் திருக்குறிப்பைக் கண்டால், நம்மை யெல்லாம் பார்த்து, "நீங்கள் எப்போது வந்தீர்கள்?" என்று கருணையுடன் கேட்பது போலல்லவா இருக்கிறது? அந்த ஆணிப் பொன்னம்பலத்தே ஐயன் ஆடும் அற்புதக் கூத்தை நம் வாணாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாமே! அந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்காக வாயினும் நமக்குப் பிறவி வேண்டும்; அதுவும் மனிதப் பிறப்பு வேண்டும்.
இப் பிறப்பில் நம்மை ஆட்கொண்டு இனி ஏழேழ் பிறவிக்கும் இருவினைகளின் இன்னல்க ளில்லாமல் தவிர்ப்ப தொன் றுண்டானால், திலலையுள் சிற்றம்பலத்து நடனம் ஆட் எடுத்திட்ட குஞ்சிதபாத மொன்றுதான்" என்றெல்லாம் அவர்கள் வாயாரக் கூறி உடல் புளகங் கொள்ளலாயினர்.

 

இன்னுஞ் சிலர், அம்புலவாணன் அநவரதம் ஆனந்த தாண்ட்வம் புரியும் அணிதில்லை நகரைப்பற்றி அளவில்லாத வார்த்தைகளால் அடுக்கிக்கொண்டே போகலாயினர். அவர்கள் 'ஏதோ தில்லைச் சிற்றம்பலம் போனோம்; அம்பலவாணன் ஆடும் அற்புதக் கூத்தைக் கண்டோம்; திரும்பி வந்தோம்; தாங்கள் கண்ட அற்புதக் காட்சியை மற்றவர்களுக்குக் கூறினோம்; வேலையைப் பார்த்தோம், என்று இல்லாமல், திரும்பி வந்ததிலிருந்து அல்லும் பகலும் அறுபது நாழிகையும் அம்பலவாணனது பிரபாவத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது சுந்தரியைப் பைத்தியமாய் அடித்து விட்டது.

 

அம்பலவாணன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சுக்தரி தன் உள்ளத்தை அவனிடம் பறி கொடுத்து விட்டாள். அவன் இருக்கும் வண்ணத்தைச் செவி யேற்றதும், அவள் தன்இதய கமலத்தில் மூர்த்திக்கு இடம் அளித்து விட்டாள். திருச்சிற்றம்பலத்துச் சிறப்பையும் இரகசியத்தையும் அறிந்தவுடனேயோ, அவளது நுண்ணுடல் சிதாகாரத்துக்குப் போயே போய்விட்டது. பருவுடல் தான் அவளுடன் இருந்தது. ஆகவே, அவள் நட்ராஜனின் நாமங்களை நினைந்து நினைந்து, அவனது தூக்கிய திருவடியின் திருக்கோலத்தைச் சிந்தித்துச் சிந்தித்து, அணி தில்லையம்பலத்தை வந்தித்து வந்தித்து உன்மத்தங்கொண்டு விட்டாள்.

“நமக்கு வாய்ந்திருப்பது அருமையான மனிதப்பிறவி! இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ! யாது அறியேன்! ஆதலால், தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பது தான நந்தம் கூழைமை யாகும்" என்று அவள் எண்ணினாள். முடி கொண்ட மூன்றாம் பிறைச்சந்திரனும், முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும், துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணிறும், சுரிகுழலாள் படி கொண்டாடபாகமும் பாய்புலித்தோலும் அவள் நெஞ்சில் நிரந்தரமாகக் குடி கொண்டுவிட்ட ஆகவே, அவள் கூத்தப் பிரானது நடன போதையில் சிற்றம்பலத்துக் கூத்தனில் கூத்து வல்லார் உளரோ" தன்னைத்தானே கேட்டுக் கொள்ளுகிறாள். வருவானா!' என்று கூட அவள் எண்ணிப் பார்க்கவில்லை.


“செய்ஞ்ஞின்ற நீலமலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள்கண்டு மகிழ்ந்துநிற்க;
மெய்ஞ்ஞின்று எரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான்

கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே!"

 

என்று குழலினும் இனிய குரலில் பாடி விம்நித முறுகிறாள்.

 

நாழிகை ஆக ஆக, சுந்தரிக்கு நடராஜப் பித்தம் அதிகமாகிறது. இனி, அப்பெருமானைக் காணாமல், அரைக்கணமும் இருக்கமுடியாது என்று அறிந்தாள். ஆகவே, அவள் தன்னைப் பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்துக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து காப்பாற்றி வரும் அம்மையையும் தந்தையையும் துறந்து செல்லத்துணிகிறாள். ' தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலனை அடைவதற்காகப் பெற்றோரைப் பிரிந்து செல்லலாம்; ஆனால், ஊரார் சும்மா இருக்கமாட்டார்களே! அவர்கள் வாய்க்கு வந்தவாறு பிதற்றத் தொடங்கி விடுவார்களே! சமூகக் கட்டுப்பாடு இருக்கிறதே! மங்கைப் பருவமடைந்தவள் தன் இல்லத்தைவிட்டு என்று ஒன்று எக்காரணத்தை முன்னிட்டும் தனிவழி ஏகலாகாது; மணாளன் மங்கையை நாடி வரவேண்டுமே யொழிய, இவள் அவனை நாடிச் செல்வது அழகல்லவே!' இதெல்லாம் உலகாசாரத்தை யொட்டிய சொற்கள். இதையெல்லாம் கூட உதறி எறிந்துவிட்டுச் செல்ல மனங்கொண்டாள். அம்பலவாணன் மீது அவள் கொண்ட அடங்காக்காதல், அவளது நாணத்தை மறக்கச் செய்தது! என்? பெண்மையையே மறக்கச் செய்தது! பெற்றோர் உற்றாரை மறக்கச் செய்தது! குடும்பப் பெருமையை மறக்கச் செய்தது! உலக ஒழுக்கத்தை மறக்கச் செய்தது! சகலத்தையும் மறக்கச் செய்தது! அவள் தன்னையே மறந்து விட்டாள் என்றால், தன் பெயரையே மறந்து விட்டாள் என்றால், அதிகஞ் சொல்வானேன்!

 

சாதாரணமாக, மங்கையர் தன் மனத்துக்குகந்த மணாளனைக் கண்டு காதலித்து, களவு முறையில் அளவளாவி, பெற்றோர் தன் காதற்குறிப்பை தன்னால் விரும்பப்பட்டவனுக்குத்
தன்னைத் திருமணஞ் செய்து கொடுக்க வில்லையென்றால், காதலனுடன் போய்விடுவது நீண்ட நாளைய வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், சுந்தரியோ, தன் காதலனைப் பிறர் வாயிலாக அறிகிறாள். கேள்வி மாத்திரையால் காதல் கொள்கிறாள். அதாவது காதலனைக் காணாமே காதல் கொள்ளுகிறாள். ஒரு தலை காமந்தானே! அவன் உருவத்தை, நடன வல்லபத்தை புகழை, பெருமையை, பரத்துவத்தைக் கேட்டு நாம் அவன் மீது காதல் கொண்டிருக்கிறோம். ஆனால், நம்மால் காதலிக்கப்படும் அவன் நம்மை விரும்புவானா? நம் காதலை யேற்றுக் கொள்ளுவானா? சுந்தரி ஒன்றையும் யோசியாது, பெற்றோரைப் பிரிந்து, இல்லத்தைத் துறந்து, சமூகத்தைப் புறக்கணித்து, தன் பெண்மையை மறந்து தன்னந் தனியளாய், பகலென்றும், இரவென்றும், வெயிலென்றும், மழையென்றும், பனியென்றும் பாராது திருத்தில்லை
யை, நோக்கிச் செல்கிறாள், அம்பலவாணன் நடனமாடும் ஆலய கோபுரத்தின் சிகரம் அவளது கண்களுக்குத் தெரிகிறது. உடனே அவள் ஊணுறக்கம் இல்லாததாலும், நீண்ட வழிப் பிரயாணத்தாலும் ஏற்பட்டிருந்த களைப்பையெல்லாம் உதறிவிட்டு ஓடுகிறாள் சிற்றம்பலத்தை நாடி. என் அப்பன் அம்பலவாணனின் ஆனந்த தாண்டவதரிசனங் கிடைக்கிறது அவளுக்கு.


"படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு
      என் காவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு
      ஆட்செய் கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுதுவணங்கித்
      தூநீறு அணிந்து உன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
      சிற்றம்பலத்து அரனே!"


என்று நாத் தழுதழுக்கப் பாடி, ஆனந்தக் கண்ணீர் வடித்து, அம்பலவாணனது குஞ்சித பாதத்தைத் தஞ்ச மடைகிறாள்.

 

இக்காதல் பெருநிலையைத் தான் திருநாவுக்கரசர் கீழ்வரும் திருப்பாட்லில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
       மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டார்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
       பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானள்
அன்னையையும் அத்தனையும் அற்றே நீத்தாள்
       அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தான் தன் நாமங் கெட்டாள்
       தலப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!"

 

இது உலக நிலையில் ஓர் உயரிய காதல் நாட்கம்; ஞான நிலையில் இது ஒருசிறந்த பேரின்ப நாடகமாகும். லௌகீகத்தில் ஒருத்தி தனக்கொத்த ஒருவனிடங் காதல் கொண்டு உடல் பொருள் மூன்றையும் ஒப்படைத்து உண்மை யின்பத்தை எப்படி அடைகிறாளோ, அதுபோல, பாரமார்த்திக நிலையில், மக்கள் எல்லாம் வல்ல இறைவன்பால் பக்திபூண்டு சர்வ சங்கப் பரித்தியாகஞ் செய்தால் பேரின்ப நிலையை யடையலாம். இப்படி, மக்கள் ஆண்டவன்பால் தங்களை முற்றும் ஒப்படைப்பதையே, ஆத்ம ஸமர்ப்பணம்" என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

 

மக்கள் எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு உய்யும் முறை மெய்ஞ்ஞானச் செல்வர்களால் பலவிதமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இவ்விதம் இறைவன் திருவடிப்
பேற்றை அடையும் நெறி பலவாறாகக் கூறப்பட்டு வந்தாலும், அதை நான்கு விதமாக வகுத்தனர் பேரின்ப நிலை தெளிந்த பெரியார்கள்:


“சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திரமார்க்கம்

தாதமார்க்கம் என்று சங்கரனை யடைய
நன்மார்க்க நாலிவைதான் ஞானயோக
       நற்கிரியா சரியையென்று நவிற்றுவதும் செய்வர்''


என்று அருணந்தி சிவாசாரியார் என்னும் பெரியார் விவரித்திருக்கிறபடி, சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாதமார்க்கம் என்று நான்கு வழிகள் இறைவனை அடைவதற்குக் காட்டப்பட்டிருக்கின்றன. இந் நான்கு நெறிகளே, ஞானம், யோகம், கிரியை, சரியை என்று வேதாகமங்களில் கூறப்பட்டிருக்கின்றன. இந்நான்கு நெறிகளும் ஆண்டவனை அடைவதற்குரிய ஒரே வழிதானாயினும், மக்கள் மனப் பக்குவத்துக்கும் தரத்துக்கும் தக்கவாறு மகான்கள் வகுத்திருக்கின்றனர்.

 

இனி, இந் நான்கு நெறிகளையும் முறையே ஆராய்வோம்; கீழ்ப்படியில் முதலில் இருப்பது தாசமார்க்கம். தாசமார்க்கம் என்றால் என்ன? ஒரு தலைவனுக்கும் அதாவது இய்மானனுக்கும் அவனுக்குப் பணி செய்யும் அடியானுக்கும் அதாவது வேலைக்காரனுக்கும் இடையே நிகழும் அன்பின் தொடர்பைக் காட்டுவதே தாசமார்க்க மாகும். இத் தொடர்பில், இயமானன் உயர்ந்த நிலையிலும் பணியாள் தாழ்ந்த நிலையிலும் இருத்தலால், வேலைக்காரன் இயமானனுடன் நெருங்கிப் பழக முடியாது. இயமானன் ஏவலை எதிர் பார்த்து அவன் சிறிது தொலைவிலிருந்தே எதையும் செய்ய வேண்டும்.

இரண்டாவது படியில் உள்ளது சற்புத்திரமார்க்க மாகும். இது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழும் அன்பைத் தெரிவிப்பதாகும். இயமானன்பால் பணியாளுக்கு இருக்கிற உரிமை, அன்பைவிட, தந்தைக்கும் மகனுக்கும் சிறிது அதிகமாக உண்டு என்பதை யாவரும் அறிவர். இவ்விதம் குமாரன் தகப்பனுடன் நெருங்கிப் பழகி உரிமையும் அன்பும் கொண்டாடலா மாயினும், இருவரும் சரி சமத்துவமாக அளவளாவ முடியாது.

 

மூன்றாவது படியில் வருவது சகமார்க்கம் என்பதாகும். மனமொத்த இரு நண்பர்களின் இடையே நிகழும் அன்பொழுக்கத்தைக் குறிப்பிடுவதாகும் இது.

 

இயமானனொருவனுடன் ஒரு வேலையாள் அன்புகொண்டு ஒழுகினாலும், அச்சத்தோடு தான் பழகி வருவான். அதுபோல், தன் தகப்பனுடன் குமார னொருவன் மிகுந்த அன்பு பூண்டு ஒழுகிவந்தாலும் தந்தை செய்யும் எல்லாச் செயல்களிலும் தாராளமாகக் கலந்து கொள்ள முடியாது. தன்னைப் பெற்ற தந்தையாயிற்றே என்று இவன் அச்சம், மரியாதையோடு தான் அளவாகப் பழகுவான். தோழர்கள் நிலையோ அவ்விதமில்லை. அவர்களிடையே அச்சம், மரியாதை உயர்வு தாழ்வுகளைக் காண முடியாது. எக்காரியத்தையும் ஒளிவு மறைவின்றி இருவரும் செய்வர். நன்மை, தீமை, சுகதுக்கங்களில் ஒருவருக்கொருவர் உதவியர் யிருப்பர்.

 

ஆனாலும், இந்நிலையை விட உயர்ந்ததொன்று இருக்கிறது. அதுதான், நான்காவது படியாய் நிற்கும் சன்மார்க்கம் என்பது. இது முன்னே கூறப்பட்டு வந்த மூன்று நெறிகளினும் சிறந்த தொன்றாகும். உரு, திரு, கல்வி, வயது முதலியவைகளால் ஒத்த ஆடவனொருவனும் பெண்மணி யொருத்தியும் காதல் அன்பால் கலந்து உறவாடும் உயர்நிலை தான் சன்மார்க்கம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. இயமானன்-அடியான், தந்தை-மகன் தொடர்புகளைவிட, அவர்களின் அன்பு நிலையைக் காட்டிலும், தோழர்களின் தொடர்பும் அன்பும் சிறந்ததாயினும், அவர்களும் ஓரெல்லையில் தான் - அதாவது உள்ளத்தோடு உள்ளம் ஒன்றிய ஓரெல்லையில் தான் நிற்கின்றனர். ஆனால், காதலர் நிலையோ அப்படிப்பட்டதன்று. காதல் அன்பின் வயப்பட்ட பெண் சேர்க்கை, உள்ளக்கலப்புடன் மட்டும் நின்று விடாமல், உடல் கலப்பும் உடையராகின்றனர். உள்ளத்தையே யன்றி, உடம்பையும் ஒருங்கு பிணித்து நிற்கும் இக்காதலன்பு அன்பின் சேர்க்கைகள் எல்லாவற்றிற்கும் மேற்பட்ட ஒப்பற்ற உயர் நிலையாகும். இக் காதல் அன்பின் சேர்க்கையால் உண்டாகும் இன்பப் பெருக்கின் நிலை அதை அநுபவிக்கும் காதலர்களுக்கு. அதாவது ஆண் பெண்ணுக்கு அன்றி மற்றவர்க்குப் புலனாகாது. இக்காதலன்பில் தான் ஒருவரிடத்து ஒருவர் தங்களை ஒப்படைக்கும் நிலை, யாதொன்றையுங் கருதாது, தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் சமர்ப்பிக்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகையதோர் உயர்நிலையைத் தான்-ஆண்டவனுடன் ஆன்மா ஐக்கியப்படும் பேரின்ப நிலைக்கு உதாரணமாகக் கொண்டனர் ஆன்றோர்கள். இன்னதென்று வார்த்தைகளை விவரிக்க முடியாத பேரின்ப அனுபவத்தைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமானால், மக்கள் தங்கள் அனுபவத்தில் அறியும் காதல் இன்ப அனுபவத்
தைக் கொண்டு தான் தெளிவிக்க முடியும். உலகத்தில் காணாததற்கு உவமையாகக் கண்டதையே உவமித்தாலன்றி, வேறொன்றால் அறிவித்தால், அது புலப்படாதன்றோ ! எனவே தான், ஆண்டவனிடம் தங்களை முற்றும் ஒப்புவித்து அடைக்கலம் புகுந்த ஞானிகள், ஆத்ம ஸமர்ப்பணம் செய்த மகான்கள், நாயக்-நாயகி பாவத்தில் - அதாவது, ஆண்டவனை நாயகனாகவும், தங்களை நாயகியாகவும் வைத்து-வழி  பட்டு அருநெறியடைந்தனர். இவ்வித உயர் நிலையையே விசிஷ்டாத்வைத மதமான வைஷ்ணவமும், சரணாகத மார்க்கம் என்று அழைத்து வருகிறது. என்? உலகிலுள்ள எல்லாம் நீங்களும், சன்மார்க்கத்தை – உயிர்கள் ஆண்டவனுடன் இரண்டறக் கலத்தலை - ஒவ்வொரு பெயரால் வழங்கி வருகின்றன.

 

முதலில் விவரித்துள்ளவாறு ஆண்டவனை இய்மானனாகவும், பேற்றை அடையலாமாயினும், அவனைத் தங்கள் ஆருயிர்க்காதலனாகக் கொண்டு அவன்பால் தங்கள் முற்றும் ஒப்புவிக்கும் நிலை தான் மிகச் சிறந்ததாகும்.

 

ஆகவே, மக்கள் உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவேண்டுமானால், பவப்பிணியைப் போக்கிக்கொள்ள வேண்டுமானால், சர்வ சங்க பரித்தியாகஞ் செய்து ஆண்டவனை அடைக்கலம் புகவேண்டும். தன்னை அவன் வசம் ஒப்படைத்து விடவேண்டும். அதாவது ஆத்மாவை அவனது திருவடிகளில் ஸமர்ப்பித்து விடவேண்டுமென அருளிப் போந்தனர் மெய்ஞ்ஞானிகள்.

 

சமூக சுதந்திரத்தை - தேச சுதந்திரத்தைப் பெற வேண்டுமானால், மக்கள் எப்படி தங்கள் உடல், பொருள்களைத் தியாகஞ்செய்யவேண்டியிருக்கிறதோ, அதுபோல, ஆத்ம சுதந்திரம் பெறவேண்டுமானாலும் மக்கள் தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகஞ் செய்து விடவேண்டும். அதாவது, ஆண்டவனுக்கு அவைகளை' அர்ப்பணஞ் செய்துவிட வேண்டும். உலகியலில் மங்கையொருத்தி தான் விரும்பிய பெயர் கேட்டு ஊர் கேட்டு உருவத்தைக் கேட்டு மயங்கிய- காதலனொருவனிடம் காதலின்பத்தைப் பெறுவதற்கு தன்னைப் பெற்றவர்கள், உற்றார்கள், சமூகத்தார்கள் யாவரையும் விட்டு, உலகாசாரத்தை உதறித்தள்ளித் தன்னலத்தை மறந்து தானென்பது ஒரு பொருளாயிருப்பதையே மறந்து அவன் வசமாகிவிட வேண்டியிருக்கும் போது, இறைவனது பேரின்ப நிலையை அடைய நிலையை அடைய வேண்டுமானால், எவ்விதநிலையை யடைய வேண்டுமென்று கூறவும் வேண்டுமோ! ஆண்டவனின் ஆயிரம் திருநாமங்களை அனவரதம் உச்சரிக்க வேண்டும்.
இந் நிறத்தன், இவ்வண்ணத்தன், இப்படியன் என்று எழுதிக்காட்டொணாத இறைவனைத் தன் மனத்தில் ஒருவிதமாக ஆவாகனஞ் செய்யவேண்டும். அவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளை வலம் வரவேண்டும். தந்தை, தாய், மனைவி, மக்கள், தமர் என்ற குடும்ப பந்தத்தை அறுத்தெறிய வேண்டும். மூடச் சமூகக்கட்டுப்பாடுகளை உடைத்தெறிய வேண்டும். நான், எனது என்ற அகங்கார மமகாரங்களைச் சுட்டெரிக்க வேண்டும். தான் என் ஒரு பொருள் இருப்பதாகவே எண்ணாமல், தன் உடல், உயிர், பொருள்களை யெல்லாம் ஆண்டவன் வசமே ஒப்படைக்க வேண்டும். இதுவே, 'ஆத்ம ஸமர்ப்பணம்' எனப்படும்.


என்பேஉருக நின் அருள் அளித்து உன் இணைமலர் அடிகாட்டி
முன்பேஎன்னை ஆண்டுகொண்ட முனிவா! முனிவர் முழுமுதலே!
இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே!
நண்பே அருளாய் என் உயிர்தாதா! நின் அருள் தானாமே.

 

ஆனந்த போதினி – 1944 ௵ -

ஜுலை, செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment