Wednesday, August 26, 2020

 

ஆத்திசூடி உதாரணக் கதைகள்

தொகுப்பு

 

ஆசிரியர்:

செம்பூர் - வீ. ஆறுமுகஞ்சேர்வை.

 

 

 

 

 

மாத இதழ்

1925 ஆகஸ்ட் யில் இருந்து 1928 ஆகஸ்ட் வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

"ஙப்போல் வளை 4

சனி நீராடு 6

ஞயம்படவுரை. 10

இடம்பட வீடெடேல். 12

"இணக்கமறிந் திணங்கு " 15

தந்தை தாய் பேண்.... 16

'நன்றி மறவேல்.. 19

பருவத்தே பயிர்செய்.. 21

மன்று பறித் துண்ணேல்.. 23

இயல்பலா தன செயேல்.. 24

அரவ மாட்டேல்.. 27

இலவம் பஞ்சிற்றுயில். 29

வஞ்சகம் பேசேல்.. 31

அழகலாதன செயேல்.. 32

" இளமையிற் கல். " 34

அறனை மறவேல். 36

அனந்த லாடேல்.. 38

கடிவது மற. 40

காப்பது விரதம்.. 41

கிழமைப்பட வாழ். 44

கீழ்மை யகற்று.. 45

குணமது கைவிடேல்.. 47

கூடிப் பிரியேல்.. 48

கெடுப்பதொழி.. 50

கேள்வி முயல்.. 52

கைவினை கரவேல்.. 54

கோதாட் டொழி.. 55

சக்கர நெறிநில்.. 57

சான்றோ ரினத்திரு.. 58

சித்திரம் பேசேல்.. 60

சீர்மை மறவேல்.. 63

சுளிக்கச் சொல்லேல்.. 65

சூது விரும்பேல்.. 67

 


 

ஆத்திசூடி உதாரணக் கதைகள்

இக்கதைகளைத் தொடர்ச்சியாக நம் ஆனந்தபோதினியில் எழுதிவந்து முடிவில் புத்தக ரூபமாக வெளியிட வேண்டு மென்று சில வருடங்கட்கு முன்னர் நான், இப்போதினியின சஞ்சிகைகளில் பிரசுரித்து வந்தேன். சில அசந்தர்ப்பங்களால் 5 - வது புத்தகம் 336 - ஆம் பக்கத்தில் "கண்டொன்று சொல்லேல்'' என்பதன் உதாரணக்கதை வெளிவந்ததோடு இவற்றின் தொடர்ச்சி நின்று விட்டது. எனினும், அத்தொடர்ச்சிக் கதைகளை மீண்டும் எழுதி வரவேண்டு மென்று ஆனந்த போதினியின் அபிமானிகளுட் சிலர் கேட்டுக் கொண்டமையின் அவை இப்பொழுது என்னால் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.


"ஙப்போல் வளை”

 

"ஙப்போல் - (தான்மாத்திரம் அ, இ, உ என்னும் சுட்டுக்கள், எ, யா என்னும் வினாக்கள் முதலியவற்றோடு கூடிமொழிக்குக் காரணமாய்ப் பயன்பட்டிருந்து, மொழிக்குக் காரணமாகாமல் எவ்வகைப் பயனுமின்றி யிருக்கும் தன் வருக்கமாகிய ஙா, B, X, ங, நு, ஙெ, ஙே ஙை, நொ, நோ, ஙௌ என்னும் பதினோரெழுத்துக்களையும் தழுவிக்கொண்டிருக்கும்) ஙகர மென்னும் எழுத்தைப்போல், வளை - (நீ, பயனுடையவனாயிருந்து சுற்றத்தார் பயனற்றவர்களாயினும் அவர்களைத் தழுவிக்கொள்'' என்பது இதன் பொருளாம்.

 

ஙகரமாத்திரம் அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் எனச் சுட்டு வினாக்களோடு சேர்ந்து மொழிக்குறுப்பாய் இடப்பொருளை உணர்த்தி நிற்கும். ஙனம் - இடம். அதன் வருக்கமாகிய மற்றைய பதினோரு எழுத்துக்களும் எந்த வாக்கியங்களோடும் சோந்து வருவதில்லை; அதனால் அவை பயனற்ற எழுத்துக்களேயாம். அப்படியிருந்தாலும், ஙகரமானது அந்தப் பதினொரு எழுத்துக்களையும் தன்னோடு சேர்த்துக்கொண் டிருப்ப தால், தங்கள் தங்கள் வருக்கங்களாகிய பதினொரு பதினொரு எழுத்துக்களின் கூட்டங்களோடு சேர்ந்து நிற்கும் ககரமுதல் னகர மிறுதியாகவுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களின் கூட்டத்தோடு தானுமொன்றாகச்சேர்ந்து எண்ணிக்கையில் மதிக்கப்பட்டு நிற்கின்றது. அங்ஙனமின்றி, தன்னுடைய வருக்கவெழுத்துக்களைப் பயனற்றவை யென்று தள்ளிவிடும் பக்ஷத்தில் அது தனிப்பட்டு மற்ற பதினேழு மெய்யெழுத்துக்களின் கூட்டத்தோடு சேரத்தகுதியற்ற தாகிவிடும். இதைப்போல், சுற்றத்தார் பயனற்றவர்களா யிருப்பினும் அவர்களைச் சேர்த்துக்கொண் டிருப்பவர்கள் உயர்ந்தோர் பலராலும் நன்குமதிக்கப்பெற்று அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அங்ஙன மின்றிச் சுற்றத்தாரை ஒதுக்கிவிட்டுத் தனிப்பட்டிருப்பவர் எவ்விடத்திலும் கௌரவமடைய மாட்டார்கள். ஆதலின், கௌரவமடைய விரும்புவோர், தங்கள் சுற்றத்தார் எத்தகையரா யிருப்பினும் அவர்களைத் தழுவிக்கொள்ள வேண்டும்.

 

ஒரு நகரத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்த இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவர் பெயர் இராஜப்பபிள்ளை; இளையவர் பெயர் சாந்த மூர்த்திபிள்ளை. இவர்களுள் மூத்தவர் மிக்க இடம்பமும், தற்பெருமையுமுடையவர்; இளையவர் அடக்கமுள்ளவர். இராஜப்பபிள்ளை படிப்படியாகத் தம் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளக் கருதிப் பலவழியிலும் பொருள் சேகரித்து மிகுந்த ஐசுவரிய முடையவராய் விட்டார். ஆனால் இவர் தற்பெருமை யுடையவராதலின் சுற்றத்தாரை ஆதரிப்பதில்லை. அதனால் இவரிடம் பந்துக்களில் எவரும் நெருங்குவதில்லை. இவர்,'' நமக்குத்தான் திரண்ட ஆஸ்தியிருக்கின்றதே; சுற்றத்தார் தயவு எதற்கு? " என்று அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டார். சாந்த மூர்த்திபிள்ளையோ, மிக்க தருமகுணம் பொருந் தியவராதலின், நன்மார்க்கத்தில் பொருளீட்டத் தொடங்கினார். அவருக்கு அதிகப்பொருள் சேரவில்லை. அவர் ஐசுவரியத்திற் குறைந்தவரா யிருந்தா லும் ஜனச்சேர்க்கை யுடையவரா யிருந்தார்; எவருக்கும் மிக்க உபகாரியாயிருந்தார்; சுற்றத்தாரை அன்புடன் ஆதரித்து வந்தார். பந்துக்களாயிருந்த வர்களெல்லோரும் ஒன்றுக்கு முதவாதவர்களா யிருந்தார்கள். அங்ஙன மிருப்பினும் அவர்கள் மீது சாந்தமூர்த்தி பிள்ளை விசுவாசங்குறைவதில்லை. அதனால். உறவினர்களெல்லோரும் அவரை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டே யிருந்தார்கள்.

 

இப்படி யிருக்கும் போது ஒருநாளிரவு திருடர்கள் வந்து சாந்தமூர்த்தி பிள்ளையின் வீட்டிற்புகுந்து கொள்ளையடிக்கப்பார்த்தார்கள். அங்கே அவருடைய பந்துஜனங்கள் கூட்டங் கூட்டமாகப் படுத்திருந்தார்கள். அவர் களைக்கண்டவுடன், திருடர்கள்'' இங்கே புகுந்தால் இக்கூட்டத்தார் நம்மைச் சும்மா விடமாட்டார்கள்'' என்று பயந்தோடி விட்டார்கள். அங்ஙனம் ஓடியவர்கள் இராஜப்பபிள்ளையின் வீட்டில் போய்ப் பார்த்தார்கள். அவர். தமக்கு மிஞ்சியவர் இல்லையென்னும் தற்பெருமை கொண்டவராதலின் எவர் துணையுமின்றித் தனியே படுத்திருந்தார். திருடர்கள் நிர்ப்பயமாய் அவர் வீட்டில் நுழைந்து அளவிறந்த திரவியங்களைத் திருடிக்கொண்டுபோய் விட்டார்கள்.

 

பின்னொருசமையம் இவர்களிருந்த நாட்டின் சக்கரவர்த்திக்கு மகுடாபிஷேக கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பொருட்டுப் பற்பல சிற்றரசர்களும், பிரபுக்களும் சக்கரவர்த்தியைக் கண்டுகொள்வதற்குக் காணிக்கைப் பொருள்களுடன் புறப்பட்டு அச்சக்கரவர்த்தி யிருக்கும் இராஜதானிப் பட்டினம் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களெல்லோரும் ஐசுவரியத்தில் குறைந்தவர்களாயினும் பரிவாரஜனக்கூட்டம் அதிகரித்தவர்கள். அதிக ஜனக்கூட்டத்துடன் தலைமை வகித்து ஓரிடத்திற்குச் செல்பவரையே உயர்ந்தவர்களென மதித்தல் உலக சுபாவமாதலின், அதிகஜனக் கூட்டத்துடன் சென்ற அவர்களையெல்லாம் சக்கரவர்த்தி நன்குமதித்து வரவேற்று அவர்களுக்கு நற்பரிசுகளும் கௌரவப் பட்டங்களுமளித்தான்.

இவர்களைப் போலவே, இராஜப்பபிள்ளையும், சாந்தமூர்த்தி பிள்ளையும் சக்கரவர்த்தியைப் பார்க்கச் சென்றார்கள். சாந்தமூர்த்தி பிள்ளை மற்றவர் களைக்காட்டினும் ஐசுவரியத்திற் குறைந்தவர். அதனால் அவர் தம் சத்திக்குத் தகுந்தபடி குறைந்தவிலை மதிப்புள்ள சாமானிய காணிக்கைப் பொருளே கொண்டுபோனார். ஆனால், மற்றவர்களிடமிருந்த ஜனக்கூட்டத்தைக் காட்டினும் இவருடன் சென்ற சுற்றமாகிய ஜனக்கூட்டம் அதிகரித் திருந்தது. இராஜப்பபிள்ளையோ மிகுந்த செல்வவந்தராதலின் சக்கர வர்த்திக்கு இலட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள தங்கயானையொன்று செய்து கொண்டு போனார். அந்த யானையின் உடம்பெல்லாம் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டிருந்தன. அவர் பணசசெருக்கால் ஸ்பெஷல் கப்பல் சொந்தத்தில் அமர்த்தி அதிலேறிச்சென்றார் ஆனால் அவர் நாய் போன்ற இனப் பகையுள்ளவராதலின் அவருடன் பரிவாரஜனங்கள் செல்லவில்லை. இரண்டு மூன்று வேலைக்காரர் மாத்திரம் சென்றார்கள். இவர்கள் சக்கரவர்த்தியின் நகரம் போய்ச் சேர்ந்தவுடன், இராஜப்பபிள்ளை, " சாந்தமூர்த்தி ஐசுவரியத்திற் குறைந்தவனாதலின், சக்கரவர்த்தி. அவனுக்குப் பேட்டி கொடுக்கமாட்டார்; நம்மைமாத்திரம் கௌரவிப்பார்; ஆதலின், அவன் முதலிற்சென்று அவமானப்பட்டு வரட்டும்; பின்னர் நாம் சென்று அவன் நாண மிக்க கௌரவம் பெற்றுவரலாம்'' என்று அங்கே தங்கியிருந்தார். சாந்த மூர்த்தி பிள்ளை மனதிற்சி றிதும் கபடின்றி அரசனைப்பார்க்கச் சென்றார். அவருடன் அதிக ஜனக்கூட்டம் நெருங்கியிருந்ததைப் பார்த்தவுடன் மன்னன், "இம்மனிதன் உலகத்தார்க்கு மிக்க உபகாரியாயிருப்பான்; அதனாலேயே இவ்வளவு ஜனங்கள் இவனைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; இவனேமிக்க கௌரவமுடையவன்'' என்று அவரைக் கொண்டாடி நன்குமதித்து, அவருக்கு நற்பரிசளித்து, எல்லோரினும் மேம்பட்ட கௌரவப்பட்டங் கொடுத்தான். பின்னர், இராஜப்பபிள்ளை பொறாமை கொண்டு, நவரத் தினயானை தம்மிடமிருக்கின்ற தென்னும் அகங்காரத்தோடு அரசன் பேட்டிக்குச் சென்றார். இவர் உயர்ந்த திறைப் பொருளோடு சென்றும், இவரிடம் மனிதர் கூட்டமில்லாதபடியால் அரசன் இவரை, மிகவும் தாழ்ந்தவரென்று மதித்து இவருக்குப் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டான். இராஜப்பபிள்ளை மேலும் அரசனைக் காணுதற்குப் பகீரதப் பிரயத்தனஞ் செய்து பார்த்தார். அது முடியவேயில்லை. பின்னர் அவர், தாம் கொண்டு வந்த நவரத்தின யானையை யாவது, ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கௌரவமான மனிதர்கள் மூலம் சக்கரவர்த்திக்குச் சொல்லியனுப்பினார். மன்னன் அதனையும் மறுத்துவிட்டான். அதன்மேல் இராஜப்பபிள்ளை வெட்கமுந் துக்கமு முடையவராய் வீண் பணச்செலவுடன் திரும்பி வீடுவந்து சேர்ந்தார். இதனால், சுற்றந்தழுவுதலா லுண்டா முயர்வையும், அதனை வெறுத்தலா லேற்படும் இழிவையும் நன்குணர்ந்து கொள்ளலாம்.

 

“சனி நீராடு”

 

“சனி - சனிக்கிழமை தோறும், நீராடு - (நீ எண்ணெயிட்டுக் கொண்டு) நீரில் மூழ்கு'' என்பது இதன் பொருளாம்.

 

நம் நாட்டிலுள்ளவர்கள் வாரம் ஒருமுறை தைலஸ்நானம் செய்து கொள்ளுதல் பண்டைக்காலந்தொட்டு நடந்து வரும் வழக்கமாகும். இஃது இந்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குத்தக்கபடி மனிதர் சுகமடையும் பொருட்டுப் பெரியோர்களால் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதியாகும். ஒரு வருடத்தில், இரண்டிரண்டு மாதங்கள் கொண்ட அறுவகைப் பருவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை: கார், வாடை, முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பனவாம். இவற்றுள் ஆவணி புரட்டாசி கார்காலம், ஐப்பசி கார்த்திகை வாடைக்காலம், மார்கழி தை முன்பனிக்காலம், மாசி பங்குனி பின்பனிக்காலம், சித்திரை வைகாசி இளவேனிற்காலம், ஆனி ஆடி முதுவேனிற் காலம் இக்காலங்களில் சீதோஷ்ண நிலைகள் மாறுபடுவது இயற்கை; அவற்றிற்குத் தக்கபடி மனிதரின் தேகஸ்திதியும் மாறுதலடையும். இந்த மாறுதலால் வாபித்த சிலேஷ்ங்கள் மிகுதலும் குறைதலு முண்டாய் மனிதர்தேகத்தில் இயற்கைக்கு விரோதமான சம்பவங்களும், பிணிகளும் மாறிமாறி வரும். இவ்வகை மாறுதல்களை நீக்கிப் பிணிகள் சாராமல் தேகத்தை நல்ல இயற்கையில் வைத்துக்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் விரேசனம் முதலிய வைத்தியங்களை மனிதர் செய்து கொள்ள வேண்டுமென்று வைத்திய சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். அவர் கூறும் சாஸ்திரங்களில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொருவகைச் சிகிச்சை கூறப்பட் டிருக்கின்றது. எனினும், எண்ணெய் ஸ்நானம் எல்லாப் பருவங்களிலும் செய்யத்தகுந்த தென்றும், எப்பருவத்திலும் அது மனிதர்தேகத்தை நல்ல நிலையில் வைக்கக்கூடிய தென்றும் அறிஞர் கூறுகின்றனர். இங்ஙனம் இஃது எப்பருவத்திலும் சுகந்தரக் கூடியதாயிருப்பதால் இந்த எண்ணெய் ஸ்நானம் செய்பவர்களுக்கு வேறு வைத்தியன் துணை அவசியமில்லை என்றும் சில பண்டிதர் செப்புகின்றனர். இதையனுசரித்து, 'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு'' என்னும் பழமொழியும் நம் நாட்டில் வழங்குகின்றது. இதைப் பெரும்பான்மையான ஜனங்கள் அனுஷ்டித்துச் சுகம்பெற்று வருகின்றார்கள்.

     

இவ்வாறு அனுஷ்டித்து வருவதில் சிலர் தேகநிலைக்கும், கால நிலைக்கும், ஆசாரநிலைக்கும் தக்கபடி வாரம் ஒரு முறையை இரண்டு முறையாக்கிச் சனி புதனிலும், அதிக நாள் கடந்து நினைத்த கிழைமையிலும், ஸ்பானஞ் செய்து வருகின்றனர். இன்னும், பெண்கள் ஸ்நானத்துக்கு வெள்ளியும் செவ்வாயும் பொருந்தியவை யெனவும், புருஷருக்கும் குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் சனியும் புதனும் பொருந்தியவை யெனவும் பலபாகு பாடுகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மலையாள நாட்டிலுள்ளவர்கள் தினந்தோறும் தைலத்தைச் சிரசில் தடவி ஸ்நானஞ்செய்யும் வழக்கத்தை மேற்கொண் டிருக்கிறார்கள். மேல் நாட்டில் எப்பொழுதும் குளிரே மிகுந்திருப்பதால் அந்நாட்டினர் எப்பொழுதுமே எண்ணெய் ஸ்நானத்தை அவசியமானதாகக் கொள்வதில்லை.

 

நம்முடைய நாட்டினர் மேற்கூறிய காரணங்களைக் கொண்டு எண்ணெய் ஸ்நானத்தை முக்கியமானதாகக் கருதிச் சிற்சில பாகுபாடுகளுடன் அனுஷ்டித்து வந்தபோதிலும், ஸ்நானத்திற்கு வேறு பல தைலங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், எள்ளின்தைலம் பலவகையிலும் தேகத்திற்குச் சுகத்தைக் கொடுக்கக் கூடியதாதலாலும், எள் சனிக்கிரகத்திற்குகந்த நவதானியங்களுள் ஒன்றாதலாலும், பிதுர்கர்மங்களுக் குரியதாதலாலும் அதன் தைலமாகிய எண்ணெயைச் சிரசிலிட்டுச் சனிவாரந்தோறும் ஸ்நானஞ்செய்து வந்தால் தேகசுகம் கிடைப்பதோடு, சனிக்கிரகதோஷ நிவிர்த்தியு முண்டாகுமெனப் பெரியோர்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றபடியால் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து ஸ்நானஞ் செய்தலே பெரும் பான்மையும் சிறந்ததெனப் புத்திமான்கள் கருதி அவ்வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். எள் சனிக்குப் பிரீதியென்பதை, ஜனங்கள் கிரகதோஷ நிவிர்த்தியின் பொருட்டுச் சனீசுரன கோவிலில் எள்ளைப் பொட்டணங்கட்டி எண்ணெயிற்போட் டெரியவிடுவதாலும், வேறுபல காரணங்களாலும் தெரிந்து கொள்ளலாம். இங்குக் கூறிய ஒவ்வொன்றையும் விரிக்கப்புகின் அவைபெருகும். பொதுவாக நோக்குமிடத்து நம் நாட்டினர் சனிக்கிழமை தோறும் எண்ணெய் ஸ்நானம் செய்தல் சிறந்ததென்பது விளங்கும். நெடுங்காலமாக நாட்டுப்புறத்துத் திண்ணைப் பள்ளிக்கூடச் சிறுவர்கள் சனிக்கிழமை தோறும் உபாத்தியாயருக்காக வீடுகள் தோறும் எண்ணெய் வாங்கி வருவதும், அதற்கு சனியெண்ணெய்' என்று பெயரிட்டு வழங்குவதும் இதனைத் தெளிவுபடுத்தத் தக்கனவாம். இவ்வகைக் காரணங்களைக் கொண்டே நம்மூதாட்டியாராகிய ஒளவைப் பிராட்டியார் ஜனங்கள் அனுஷ்டித்துச் சுகம்பெறும் பொருட்டு,'' சனிநீராடு'' என்று கூறினார். இந்நீதியைக் கடைப்பிடித்தே நம் தேசத்தவர் சனிக்கிழமை தைல ஸ்நானத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகின்றனர். அன்னிய நாட்டாகாரங்களை மேற்கொண்டு, புதியநாகரிக மென்னும் இருளில் புகுந்தார் சிலர் நம்பெரியோர் வகுத்த பண்டைய வழக்கங்களை அநாகரிகமெனத்தள்ளி அவஸ்தைப்படுகின்றனர்.
 

ஒரு நகரத்தில் பொன்னப்பபிள்ளை கண்ணப்ப உடையார் என்ற இரண்டு நண்பர்கள் ஒருசாலை மாணவராய் ஆங்கிலம் பயின்று வந்தார்கள். இவர்களுள் கண்ணப்ப உடையார் பரம்பரையாக வந்த ஐசுவரியமுள்ள பெரிய குடும்பத்திலுள்ளவர். பொன்னப்பபிள்ளை நூதனமாக வந்த சொற்ப ஐசுவரியமுள்ள குடும்பத்திற் பிறந்தவர். கண்ணப்ப உடையார் அடக்கம், விவேகம், தெய்வ பக்தி, குருபக்தி, தாய்தந்தையர் பக்தி, பெரியோர் சிநேகம், சுயபாஷாபிமானம், சுதேசாபிமானம் முதலிய நற்குணங்களுடையவர். பொன்னப்பபிள்ளை யோதற்பெருமை, பெரியோர் அவமதிப்பு, சுயபாஷை வெறுப்பு, அன்னிய நாட்டாசாரக் கல்வி விருப்பு, மூர்க்கம் முதலிய துர்க் குணங்களைப் பொன்னைப் போலப் போற்றக்கூடியவர். கண்ணப்ப உடையார் உயர்ந்த பரீக்ஷைகளில் தேறி முன்சீபு உத்தியோகம் பெற்றார். பொன்னப்பபிள்ளை ஸ்கூல் பைனலில் கூட தேறவில்லை. அதனால் இவருக்கு ரெயில்வே கம்பெனியில் கிளீனர் (இஞ்சின் துடைப்பவர்) வேலைதான் அகப்பட்டது. கண்ணப்ப உடையார் பெரிய உத்தியோகத்தி லிருந்தாலும் நம் நாட்டாசாரங்களை விடுவதில்லை. நம் நாட்டுடைகளையே உடுத்துவார்; சுதேச ஆகாரங்களை உண்ணுவார்; ஸ்நானபானம் முதலிய எல்லாவற்றையும் நம் நாட்டு வழக்கம் போலவே செய்து கொண்டு வந்தார். அதனால அவர், முன்னிலும் செல்வவந்தராய்ச் சரீரசௌக்கியத்துடன் விளங்கி வந்தார். பொன்னப்பபிள்ளை கிளீனர் வேலைபார்த்து வந்தாலும் அன்னிய நாட்டாசாரப் பேய் அவரைப்பற்றிக்கொண்டது. தம்மை ஓர் ஐரோப்பியரென்றே தீர்மானித்து விட்டார். மேல்நாட்டு உடைகளையே அணிந்து வந்தார். அன்னிய நாட்டு ஆகாரங்களாகிய ரொட்டி முதவியவற்றையே உபயோகிக்கத் தலைப்பட்டு விட்டார். ஒவ்வொரு காரியங்களிலும் மேல் நாட்டார்களைப் போலவே நடிக்க ஆரம்பித்துவிட்டார். எவரோடு பேசினும் மிகுதியும் ஆங்கிலமே பேசுவார். வேலைக்குப் போகுங்காலத்தி லெல்லாம் ரெக்ஷா (அளிழுக்கும் வண்டி) மீதே ஏறிப்போவார். இப்படி வெகுகெம்பீரமாகப்போய் இவர் செய்யும் வேலை, உடுப்பெல்லாம் கரியாகும் கிளீனர் வேலை தான். இந்த நூதனப் பழக்கங்களால் இவருக்கு அளவுக்கு மிஞ்சின செலவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இவர் செலவுக்கு வரும்படி போதாமல் கடனுக்குட்பட்டும் வந்தார். என்ன கடன் கஷ்டங்கள் நேர்ந்தாலும் இவர் தமக்கு நூதனமாகப் பிடித்த புதுப்பயித்தியத்தை விடுவதில்லை.

 

இப்படியிருக்குங் காலத்தில் இவர், தம்முடைய பள்ளிக்கூடத்துச் சிநேகிதராகிய கண்ணப்ப உடையாரை அடிக்கடி பார்த்து வருவார். அவரும், தாம் பெரிய உத்தியோகத்திலிருந்தாலும் இவரை அவமதிக்காமல் இவரிடத்தில் பழைய சிநேகத்தைப் பாராட்டி வருவார். பொன்னப்பபிள்ளை, கண்ணப்ப உடையாரைச் சந்திக்கும் போதெல்லாம், "என்ன சார்! நீங்கள் இவ்வளவு படித்துப் பெரிய உத்தியோகத்திலிருந்தும் புதிய துறைகளின் முறைகளைக் கைக்கொள்ளாமல் கருநாடகப் பழக்கங்களையே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; நான் ஆங்கிலம் கற்றதற்குத் தகுந்தபடி ஒரு மேல் நாட்டுக்காரனைப்போல் நடிக்கிறேன்; நம் நாட்டுக்காரர்களிடத்தில் கெட்ட பழக்கங்களெல்லா மிருக்கின்றன; ஒரு விஷயம் பாருங்கள் சார்; நம்மவர்கள் எண்ணெய் தேய்த்து ஸ்நானஞ் செய்கிறார்களே, இதனால் என்ன பிரயோசனம்? உடம்பெல்லாம் வழவழ வென்று மிக அநாகரீகமாயிருக்கிறது. சிரசில் சோப் தேய்த்துக் குளித்தால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்; நான் எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் இந்தப் பைத்தியக் காரத்தனத்தை யொழித்துவிட்டேன்'' என்றார். கண்ணப்ப உடையார், "நண்பரே! நாம் எந்நிலையி லிருந்தாலும் நம் தேசவழக்கங்களை விட்டு அன்னிய நாட்டுப் பழக்கங்களை அனுசரித்தல் கூடாது; அதனால் அநேகம் தீமைகளுக்கிடமுண்டாகும்; புறநாட்டாசாரங்களில் நன்மை பயக்கத் தக்கவைகளிருந்தால் அவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு மற்றவைகளை யெல்லாம் தள்ளிவிடவேண்டும்; நம் நாட்டாசாரங்களில் எதையும் கைவிடலாகாது; அங்ஙனம் கைவிட்டால் பெருங்கெடுதி சம்பவிக்கும்; நீங்கள் இப்போது எண்ணெய் ஸ்நானத்தை நீக்கியிருப்பதாகச் சொல்வது உசிதமன்று; மேல் நாட்டுக்காரர்கள் அதைத் தள்ளுவதால் அவர்களுக்குக் கெடுதி சம்பவிக்காது; நமக்கு அதனால் மிக்க கெடுதியுண்டாகும்" என்று கூறினார். பொன்னப்ப பிள்ளை முரட்டுப் பிடிவாதமுடையவராதலின், அவர் வார்த்தையை அங்கீகரிக்காமல் தம் நூதன வழக்கத்தையே விடாது அனுஷ்டித்து வந்தார்.

 

அவர், எண்ணெய் முழுக்கையே அடியோடு நிறுத்திவிட்டு இஞ்சின் நெருப்பருகிலிருந்து தினந்தோறும் வேலை செய்து வந்ததால் சில மாதங்களுக்குள் அவருடைய உடம்பில் கொதிப்பேறிக் கண்ணெரிச்சல், மூளை அதிர்ச்சி, வாய் குடல் வேக்காடு, சொறி சிரங்கு, சிலந்தி முதலிய நோய்கள் உண்டாகித் துன்பத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டன. அவர் பெருந் துயரடைந்தும் தாம் பிடித்துள்ள பிடிவாதத்தை விடாமல் தேகத்தைச் சொறிந்து பிட்டில் வாசித்துக்கொண்டும், உதட்டைச் சுருக்கிப் பல்லைக் கடித்து முகத்தைச் சழித்துக்கொண்டும் குரங்கு நாடகமாடிக்கொண்டு திரிந்தார். பின்னும் சில மாதங்கள் சென்றபின் சீதபேதியுண்டாகி அவரைப் படுக்கையில் வைத்து விட்டது. அவருடைய கண்களும் மாசடைந்து விட்டன. அவர், 'அடே அப்பா! இஃதென்ன பெருமோசமா யிரு கின்றதே; இந்தச் சீதபேதி நமக்கு எமலோகப் பிரயாணச்சீட்டுக் கொடுத்து விடும் போலிருக்கிறதே'' என்று திகிற்பட்டு மேல் நாட்டு முறைப்படி சீதபேதிக்கு ஆங்கில வைத்தியர்களைக்கொண்டு சிகிச்சை செய்வித்துப்பார்த்தார். குணம் சிறிதும் ஏற்படவில்லை. அவருக்கு மரணபயமுண்டாய்விட்டது. உடனே அவர் தம்முடைய நண்பராகிய கண்ணப்ப உடையாரை வரவழைத்து அவரிடம் தமக்கேற்பட்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலையைக் கூறினார். உடையார் சிறிது நேரம் ஆலோசித்து, 'நீர் எண்ணெய் ஸ்நானத்தை அடியோடு நீக்கியதால் ஏற்பட்ட துன்பமிது; இனிமேலாவது என் சொற்படி நீர் நட வாவிடில் ஆபத்துக்குள்ளாவீர்'' என்று ஓர் ஆயுர்வேத பண்டிதரைக் கொண்டு அவருடைய வியாதிகளைத் தகுந்த ஒளடத பிரயோகத்தால் தணிக்கும்படி செய்துவிட்டுப் பின்னர், அந்தப் பொன்னப்ப பிள்ளைக்கு, அவ் வைத்தியராலேயே எண்ணெய் ஸ்நானமுஞ் செய்வித்தார். அதன்மேல் பொன்னப்பபிள்ளை பிணிகரினின்றும் நீங்கிச் சௌக்கியமுற்றார். அது முதல் அவர் தாம் செய்தது தவறென்றுணர்ந்து வழக்கமாகச் சனிக்கிழமைதோறும் எண்ணெயஸ்நானஞ் செய்து வந்ததோடு, மற்ற சுதேச வழக்கங்களையும் அனுசரித்துச் சுகமடைந்தார். இக்கதையினால் எண்ணெய் ஸ்நானத்தின் அவசியம் இத்தன்மைத் தென்று விளங்கும்.

 

 

ஞயம்படவுரை.

 

"ஞயம்பட = (நீ பேசும் பேச்சில்) இனிமை உண்டாக, உரை = பேசு, " என்பது இதன் பொருளாம். உலகத்தில் எவரும், எவரிடத்தும், எதைப்பற்றியும் பேசுங்காலத்தில் இனிமையாகப் பேசவேண்டும். இனிமையுறப் பேசுதலாவது, கேட்பவர்க்கு வெறுப்பாவது, அயர்ச்சியாவது, அருவருப்பாவது உண்டாகாமல் திருப்தியும், களிப்பும், ஆவலும் உண்டாகுமாறு சாந்தமாகவும், அழகாகவும் பேசுதலாம். இங்ஙனம் நயம் விளங்கப் பேசுவதால் எத்தகையருடைய சிநேகமுமுண்டாகும்; விரோதிகளுங்கூட அப்பேச்சைக் கேட்டுப் பகை நீங்கி நன்மைபுரிய ஆரம்பித்து விடுவார்கள். முடிவாகக் கூறுமிடத்து இனிய வார்த்தைகளால் உலகமுழுவதுமே வசியமாகிவிடும். அதனால் இன் சொலலுடையானுக்கு எப்பொழுதும் ஆனந்தமான வாழ்க்கையே நடைபெறும். இது குறித்தே,


      ''சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையு மின்பம் தரும் "


என்றார் திருவள்ளுவனாரும். இதையுணராத சிலர், எவ்விடத்தும் பிறர் வெறுக்கும் வார்த்தைகளையே பேசித் துன்புறுவர். இங்ஙனம் வெறுக்கத் தக்க வார்த்தைகளைப் பேசுவோர்களிற் பலவகையாருண்டு : சிலர், யார் எதைச் சொன்னாலும் மறுப்பு வார்த்தைகளையே பேசிக்கொண்டிருப்பர்; சிலர், தற்பெருமை கொண்டு நல்லோர் கெட்டோர் ஆகிய எல்லோரையுமே அவமதித்து நிந்தைமொழிகளைக் கூறிக்கொண்டேயிருப்பர்; சிலர் பொருமைப் பேச்சுக்களையே பேசுவர்; சிலர் மித்திரபேதமான வார்த்தைகளையே விளம்புவர்; சிலர் தம்மைத்தாமே புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பர் சிலர் எப்பொழுதும் புளுகிக்கொண்டே யிருப்பார்கள்; சிலர் தாங்களே பேசுவதில் சாமர்த்தியவான்களென்று நினைத்துக் கொண்டு பிரசங்க மேடைகளில் ஏறிச் சிலரை இகழ்ந்தும், தங்களுக்கு வேண்டிய சிலரைப் புகழ்ந்தும் மிகப் படபடப்பாகவும், கைகளை ஓங்கி மேஜைமேல் அறைந்தும், கையோடு கை புடைத்தும், சிம்மம் கர்ச்சிப்பது போல் கர்ச்சித்தும், வாயைக் கோணவைத்தும், கழுத்தை ஒரு பக்கமாகத் திருப்பியும் பொதுஜனங்களுக்கு மிக வெறுப்புண்டாகும்படி பேசுவார்கள். இத்தகையினர்களுக்குப் பலரும் விரோதமாவார்கள். இவர்களுடைய வாழ்க்கை இனிதாக நடை பெருது. இதற் குதாரணமாக ஒரு சிறு கதை கூறுவாம்:

 

ஒரு நகரத்தில் குமாரசாமிக் கவிராயர், முத்துச்சாமிப் புலவர் என்ற இரண்டு வித்வசிரோமணிகளிருந்தார்கள். இவர்களுக்குத் தமிழ் விற்பத்தியே இல்லை. அப்படி யிருந்தும் இவர்கள் வாயாடித்தனமாகப் பேசுவதால் தங்களுக்குத்தாங்களே புலவர்ப் பட்டம் சூட்டிக்கொண்டார்கள். உண்மையான பாவலர்களுடைய பாடல்களை யெல்லாம் தங்களால் இயற்றப்பட்டவை யென்று சொல்லிப் பாமரரை ஏமாற்றி வந்தார்கள். கௌரவமான வித்வான்களை யெல்லாம் தாழ்த்திக் கூறி வந்தார்கள். எப்பொழுதும் பிறரை நிந்தித்துப் பேசுவதே இவர்களுடைய வழக்கம். யார்வந்து இவர்களிடம் பேசினாலும், உடனே இவர்கள், அவர்களுடைய மனம் புண்படப் பேசுவார்களேயன்றிக் களிப்படையுமாறு பேசவே மாட்டார்கள். அதனால், இவர்கள் இருந்த நகரத்திலும், பிழைப்புக்காகச் செல்லும் மற்ற ஊர்களிலும் உள்ள ஜனங்களெல்லோரும் இவர்களுடன் எப்பொழுதும் கொடிய பகையுடையவர்களாகவே யிருந்து வந்தார்கள். பலர் பகையால் இவர்களுக்கு ஜீவனம் நடப்பது கஷ்டமாயிருந்தது. அப்படி யிருந்தும் இவர்கள், மனிதர் மனம் வெதும்பப் பேசும் வழக்கத்தை நிறுத்தவில்லை. சில புத்திமான்கள் அதை விட்டுவிடும்படி சொல்லியும் விட்டபாடில்லை.
 

புலவர்கள் இந்த வழக்கத்தை மேற்கொண்டிருந்தபடியால் இவர்களுக்குப் பழக்கமான ஊர்களிலுள்ளவர்களெல்லோரும் ஒரு காசும் கொடுப்பதில்லை; வேறு எவ்வித உதவியும் செய்வதில்லை. பல்லோர் பகையால் இவர்கள் பல தினங்கள் பட்டினி கிடந்து வருந்தினார்கள். அவ்வருத்தஞ் சகிக்கமுடியாமையால் இவர்கள் ஒரு சமயம் தங்களுக்கு அறிமுகமில்லாத புதிய ஊர்களுக்குப் புறப்பட்டுப் போகத் தீர்மானித்து நெடுந்தூரம் சென்று குமாரசாமிக் கவிராயர் ஓர் ஊரையும், முத்துச்சாமிப் புலவர் ஒரு நகரத்தையும் அடைந்தார்கள். குமாரசாமிக் கவிராயர் சென்ற ஊரில் ஒரு செட்டியாரைக் கண்டு, தம் வாயில் வந்தபடி தப்பாக அவர்மீது ஒரு கவிபாடினார். அவர் அதற்காகச் சந்தோஷப்பட்டுப் புலவரைச் சாப்பாடு முதலியவற்றால் உபசரித்து அவருக்குத் தகுதியான சன்மானஞ் செய்யக் கருதியிருந்தார். அப்போது அப்புலவரை அவருடைய துர்க்குணம் அமை தியாயிருக்கவிடவில்லை. செட்டியார் வீட்டு வண்டிக்காரனிடம் போய் அவரின் குடும்ப சங்கதிகளை விசாரிக்கத் தொடங்கினார். அவன், செட்டியார் தவிட்டுக்காரி மகன்' என்று ஒரு கட்டுக்கதை கட்டிவிட்டான். பின்னர், புலவர் செட்டியாரிடம் போய், " ஐயா ! நான் ஊருக்குப் போக வேண்டும் " என்றார். செட்டியார்,'' நாளைக்குப் போகலாம்'' என்றார். குமார சாமிக் கவிராயர்,'' நீர் தவிட்டுக்காரி மகனாதலின் உமக்குப் புலவர் சோக்கம் போல் நடக்கத் தெரியவில்லை'' என்று வாய்த்துடுக்காகப் பேசினார். வந்தது மோசம். செட்டியாருக்குத் தாங்கமுடியாத கோபம் வந்துவிட்டது. அவர் பல்லைக் கடித்துக்கொண்டு எடுத்தார் விறகுக்கட்டை யொன்றை; போட்டார் புலவருடைய முதுகில்; எடுத்தார் புலவர் ஓட்டம்; செட்டியாரும் அவருடைய வேலைக்காரரும் 'பிடி பிடி' யென்று புலவரைத் துரத்திக்கொண்டோடினார்கள். புலவர் வாயுவேகம் மனோவேகங்கொண்டோடினார்.
 

இவர் கதி இப்படி யிருக்க மற்றொரு கிராமத்திற்குச் சென்ற முத்துச் சாமிப் புலவர், அவ்வூரிலுள்ள பெரிய குடித்தனக்காரர் ஒருவரைக்கண்டு அவர்மீது சீரும், தளையும், மோனையும், எதுகையுமில்லாத ஒரு கவியை மிகச்சிறப்பாகப் பாடினார். அவர் சந்தோஷித்து இரண்டு மரக்கால் கேழ்வரகை அளந்து புலவருக்குக் கொடுத்தார். புலவர், நமக்குச் சாப்பாட்டுக்குத் தட்டான இக்காலத்தில் இந்தத் தானியம் கிடைத்ததே நல்லகாலம்' என்று திருப்தியோடு அதை ஏற்றுக்கொள்ளாமல் அந்தக் குடித்தனக்காரரை நோக்கி, " நீ நாட்டுப்புறத்தானாகையால் புத்தியில்லாத மூடனா யிருக்கின்றாய்; என்னைப்போன்ற பெரும் புலவனுக்கு இந்த அற்பமான கேழ்வரகைக் கொடுக்கலாமா!'' என்று படபடப்பாகப் பேசினார். குடித்தனக்காரருக்கு வந்துவிட்டது கோபம்; அவர், "அடா! போக்கிடமில்லாத புல்லனே! புண்ணியத்திற்கு நான் தானியங்கொடுத்தால் நீ என்னை மூடனென்றா கேட்கிறாய்'' என்று கையில் வைத்திருந்த மரக்காலால் ஓங்கிப் புலவர் தலையில் மோதினார். புலவர், "அப்பா! செத்தேன்'' என்று விரைந்தோடினார். அந்தக் குடித்தனக்காரரும் அவருடைய பண்ணைக்காரரும் புலவரைத் துரத்திக்கொண்டோடினார்கள். இவர்கள் இவ்வாறு ஓடும் போது குமாரசாமிக் கவிராயரும், அவரைத் துரத்திவந்தவர்களும் நடு வழியில் இவர்களைச் சந்தித்துக்கொண்டார்கள். குடித்தனக்காரரும் அவர் ஆட்களும் எதிரில் ஓடிவந்த குமாரசாமிக் கவிராயரைப் பிடித்துக்கொண்டார்கள். செட்டியாரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களுக்கெதிரில் ஓடிவந்த முத்துச்சாமிப் புலவரைப் பிடித்துக்கொண்டார்கள். பின்னர் இரண்டு பக்கத்தாரும் புலவர்களுடைய வாய்த்துடுக்கை விசாரித்துணர்ந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து இரண்டு புலவர்களையும் நையப் புடைத்து நொறுக்கித் தள்ளிவிட்டுப் போய்விட்டார்கள். புலவர்கள் பொருள் தேடப் போனவிடத்தில் அடியும் உதையும் பட்டதால் விம்மலும் பொருமலுமாய்த் தங்கள் இருப்பிடங்கட்குத் திரும்பி வந்து தங்களுக்கு வாய்த் துடுக்கினா லேயே கெடுதி சம்பவிக்கின்ற தென்பதை யுணர்ந்து அதன்மேல் எவரிடத் திலும் நயம்படப் பேசிச் சுகம் பெற்றார்கள்.

 

இடம்பட வீடெடேல்.

 

"இடம்பட = (வசிக்கும் இட அளவிற்கு மிஞ்சி) வெற்றிடமுண்டாக, (அதாவது காலி இடம் அதிகமாகக் கிடக்கும்படி), வீடு = (குடியிருக்கும்) வீட்டை, எடேல் = கட்டாதே " என்பது இதன் பொருளாம்.

 

மனிதன், தானும், தன்னைச் சார்ந்தவர்களும் வாசம் செய்வதற்கு எவ்வளவு இடம் அவசியமோ அவ்வளவே இடமிருக்கும்படி வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டும். அங்ஙனம் கட்டப்படும் வீட்டில் வெற்றிடமில்லாமல் எங்கும் எப்பொழுதும் ஜனசஞ்சாரமிருந்து கொண்டேயிருக்கும். எந்த இடமும் குப்பை முதலியன இன்றிச் சுத்தமாகவே யிருக்கும்; இராக்காலத்தில், ஜனங்கள், தங்களுடைய சௌகரியத்தை உத்தேசித்து ஏற்றும் விளக்குக்கள் எரிந்து கொண்டிருப்பதால் பிரகாசம் பரவியிருக்கும். அதனால், அவ்வீட்டில் எக்காலத்தும் இலக்ஷமீகரம் விளங்கிக்கொண்டிருக்கும். அவ்வீட்டில் வசிப்போர் மிக்க செல்வவந்தரா யில்லாவிடினும் ஐசுவரியமுடையவர்களைப் போலவே விளங்குவார்கள். இது பற்றியே நம் மூதாட்டி கூறிய, "சிறுகக்கட்டிப் பெருகவாழ்" என்னும் மற்றொரு முது மொழியும் வழங்குகின்றது.

 

இங்ஙனமின்றி, மனிதர் சஞ்சரிப்பின் அளவுக்கு மிஞ்சி வெற்றிடங் கிடக்கும்படி வீட்டைக் கட்டினால் அதிற் சிறுபாகத்திலேயே மனிதர் சஞ்சரிப்பார்கள். பெரும்பாகம் மனிதசஞ்சாரமின்றியேயிருக்கும். மிகுந்த தனவந்தர்களும் கூட உபயோகமற்ற விடத்தில் கவனஞ் செலுத்தமாட்டார்கள்; பெரும்பான்மையும் அவ்விடத்தைப் பார்க்கவே மாட்டார்கள். அதனால் அவ்விடம் அசுத்தமாயும், வெளிச்சமின்றியும், விஷஜந்துக்கள் சஞ்சரிக்கும் ஸ்தானமாயும், வௌவாலும், எலியும், பூனையும் மறைந்து தங்கும் இரகசிய ஸ்தானமாயும், திருடர் மறைவதற்குபயோகமாயும், நிஷேதப் பொருள்களைக் குவிக்கும் ஒதுக்கிடமாயும், வேறு பற்பல அருவருப்புக்களைத் தருவதாயும் மாறிவிடும். அவ்வாறு கெட்ட விடத்தின் சாயை மற்ற விடத்திலும் படிவதால் பொதுவாக அந்த வீடு முழுவதுமே பொலி விழந்ததாகிவிடும். அங்ஙனமாகவே அவ்வீட்டில் வாழ்வார்க்கும் செல்வாக் கானது குறைய ஆரம்பித்து விடும். ஒரு சமயம் அவ்வீட்டுக்காரர் அந்தக் காலியிடத்தைச் சுத்தமாகவைத்து வரச் சிரத்தை யெடுத்துக்கொண்டாலும், அதனைப் பெருக்கி மெழுகிச் சுத்தஞ் செய்ய வேலையாட்கள் அதிகமாக வேண்டியிருப்பதாலும், அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளச் செலவு அதிகரிப்பதாலும், எங்கும் வெளிச்சமுண்டாவதற்குப் பற்பல விளக்குக்கள் ஏற்றவேண்டியிருப்பதாலும், அவ்விளக்குக்களுக்கு எண்ணெய் வாங்கும் செலவு அதிகரிப்பதாலும் சில தினங்கள் வரை அக்காரியத்தை நடத்திப் பார்த்துப் பின்னர்க் கைநழுவ விட்டு விடுவார்கள்; பிடிவாதத்தோடு அதனை விடாமற் செய்து வரினும் வீணாகப் பொருள் நஷ்டமுண்டாகி, அந்நஷ்டத்தால் அன்னோர் இன்னலடைவார்கள். இடம்பமாக இடம்பட வீட்டைக் கட்டுவோர் பலர் இத்தகைய நிலைமையடைவதை நாம் எக்காலத்திலும் பிரத்தியக்ஷமாகக் காணலாம். இதற்குதாரணமாக ஒரு சிறு கதை கூறுவாம்: -

 

ஒரு கிராமத்தில் தனவந்தரொருவரிருந்தார். ஆனால் இவர், பணமொன்றும் தேடவில்லை. இவரிடமிருந்த செல்வமெல்லாம் இவருடைய தந்தையால் தேடிவைக்கப்பட்டதே. அதனால் இவர் பணத்தின் அருமையை உணரமாட்டார். பொருள்தனைப் போற்றி வாழ்' என்ற முது மொழியையும் இவர் அனுசரித்து நடப்பதில்லைக் பொருளை இடம்பமான காரியங்களிலும், பயனற்ற விஷயங்களிலுமே செலவிட்டு வீண் பெரு\மையை யடைவார். இவர் உணவிட்டு உண்ட இலையை, வெளியில் வேலைக்காரர்கள் எடுத்துப்போட்டால் அதில் இரண்டு இலட்டு மீதியாகக் கிடக்கும்; உயர்ந்த விலையுள்ள மற்ற உணவு வகைகளும் மிஞ்சிக் கிடக்கும்; இவர், "ஏன் இவ்வளவு விலை மதிப்புள்ள உணவு வகைகளை வீதியில் எறிந்து வீணாக்க வேண்டும்; நமக்கு அவற்றில் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவை மட்டும் வைத்து நாம் சாப்பிடலாமே" என்று சிறிதும் சிந்திக்கமாட்டார். இவ்வாறு இவர் இந்தப் பயனற்ற காரியத்தைச் செய்வதோடு,'' எச்சில் இலையில் இரண்டு இலட்டாவது வீதியில் விழும்படி செய்யாத பணக்காரரும் ஒரு பிரபு ஆவரா'' என்று இந்தப் பேதைச் செய்கையைப் பற்றிப் பெருமையும் பேசிக்கொள்வார். இப்படியே இவர் பற்பல காரியங்களையும் செய்து வருவார். அவற்றுள் உதாரணமாக இஃதொன்று மட்டும் இங்கு விளக்கப்பட்டது.

 

இந்தப் பெருமைக்காரர் இங்ஙனம் இடம்ப புருஷராய் வாழ்ந்து வருங் காலத்தில், இவருடைய தந்தையார் தமது குடும்ப அளவிற்குத் தகுதியாகக் கட்டியிருந்த வீடு, பார்வைக்குத் தம் பெருமையை விளக்கக்கூடியதாயில்லை யென்று நினைத்து, அதனை யிடித்துவிட்டுச் சுமார் ஐந்நூறு மனிதர்கள் வசிக்கத்தக்கதான ஒரு பெரிய வீட்டைக் கட்டினார். அதில், இவரும் இவருடைய மனைவியும், இரண்டு மூன்று வேலைக்காரருமே வாசஞ் செய்து வந்தார்கள். இவர்களுக்கு முன்பகுதியிற் கொஞ்சம் இடமே போதுமானதாயிருந்தது. எஞ்சிய இடமுழுதும் வீணாய்க்கிடந்தது. எனினும், அந்த பிரபு அதிகப் பணச்செலவு செய்து, மேலும் சில வேலைக்காரர்களை நியமித்துத் தினந்தோறும் காலியிடத்தைச் சுத்தப்படுத்தச் செய்தும், ஆங்காங்கே விளக்கேற்றச் செய்தும் நல்ல நிலையில் பாதுகாத்து வந்தார். இவ்வகையில் அவருக்கு அனாவசியச் செலவு அதிகமாயிற்று; இதனோடு அவருடைய வேறு இடம்பமான காரியங்களிலும் பணச்செலவு மிகுந்துவிட்டது. இவ்வகைச் செலவுகளால் சில வருடங்களுக்குள் அவருடைய செல்வம் குறைந்துவிட்டது. அங்ஙனம் ஐசுவரியம் குறையவே அவர் தம்மிடமிருந்த வேலைக்காரர்களை நிறுத்திவிட்டதோடு தம் வீட்டின் காலியிடத்தைச் சுத்தஞ் செய்வதையும் விட்டுவிட்டார்.

 

அதன்மேல் சில மாதங்களுக்குள் அவர் வீட்டின் பின்பக்கத்திலிருந்த அறைகளில் குப்பைகள் நிறைந்து விட்டன; செடிகள் முளைத்துவிட்டன; சுவர்கள் ஆங்காங்கே இடிந்து வீழ்ந்து போயின; துஷ்டஜந்துக்கள் குடியேறின. அவ்வீடிருந்த இடத்திற்குச் சமீபத்தில் காடொன்றிருந்த படியால் அதிலிருந்த மலைப்பாம்பொன்று இராக்காலத்தில் இரை தேடச் சென்று, அகப்பட்ட ஜந்துக்களைப் பிடித்துத் தின்றுவிட்டு மேற்கூறிய வீட்டின் அறைகளில் ஒன்றில் சுவர் இடிந்து வழியுண்டாகி யிருந்தபடியாலும், அதன் மத்தியில் செடிகள் அடர்ந்திருந்தனவாதலாலும், அதற்குள் நுழைந்து படுத்திருந்தது. மறுநாள் அதப் பிரபு ஏதோ ஒரு காரியமாக அந்த அறையின் பக்கத்தில் சென்றார். அதில் செடிகள் நிறைந்திருப்பதைப் பார்த்தவுடன் அவருக்குச் சிறிது மனக்கவலை உண்டாயிற்று. அதனால் அவர், அந்தச் செடிகளைப் பிடுங்கி யெறியத்தொடங்கினார். அப்போது அங்கே பெரிய உலக்கை போல் படுத்திருந்த மலைப்பாம்பைப் பார்த்து உலக்கை யென்றே நினைத்து, 'இஃதேது இங்கோர் உலக்கை கிடக்கிறதே!'என்று அதனைக் கையால் தொட்டார். உடனே அந்தப் பெரும்பாம்பு, புலிபோற் சீறித் தன் வாலால் அவருடைய காலில் ஓர் அடி அடித்துவிட்டு வேகமாக வெளியிற் பாய்ந்தோடிற்று. பிரபு, பயத்தினால் நெஞ்சந் திடுக்கிட்டுக் கீழே வீழ்ந்து புரண்டெழுந்து, "அந்தோ! நம் வீடு மலைப்பாம்புக்கு வாசஸ்தானமாயிற்றே; இன்னும் சிறிது காலம் வரை இதைக் கவனிக்காமலிருந்தால் இங்கே பற்பல துஷ்டப்பிராணிகள் கூடி நமக்கே ஆபத்தை உண்டாக்கிவிடுதல் கூடும்'' என்று அப்போதே சில கூலிக்காரரை ஏவி வீணாகக்கிடந்த அறைகளையெல்லாம் இடித்துத் தள்ளச் செய்துவிட்டுச் சில தினங்களில் தமது குடும்பவாழ்க்கைக்கு வேண்டிய அளவில் ஒரு சிறு வீட்டைக் கட்டிக்கொண்டு சுகமாக வாழ்ந்தார்.

 

"இணக்கமறிந் திணங்கு "

 

''(மனிதனே!) இணக்கம் - (ஒருவனிடம் சிநேகம் செய்வதற்குத் தகுதியான) பொருத்தத்தை (அதாவது நற்குண நற்செய்கைகள் பொருந்தி யிருப்பதை), அறிந்து = தெரிந்து கொண்டு, இணங்கு = (பின் னர்நீ) சிநேகஞ் செய்வாயாக" என்பது இதன் பொருள்.

 

ஒருவர், மற்றொருவரோடு சிநேகஞ் செய்வதாயிருந்தால், அவர்களிடம் நற்குண நற்செய்கைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து, அக்குணங்கள் பொருந்தியிருந்தால் மாத்திரம் அவர்களோடு உறவு கொள்ள வேண்டும். அத்தகையாரின் சிநேகத்தால் அவர்க்குப் பற்பல நன்மைகளுண்டாகும். அவர்கள், தங்கள் நண்பருக்குத் துன்பம் வந்தகாலத்தில் துணைபுரிந்து அந்த அல்லலை அகற்றுவார்கள்; இன்னும் நண்பர் பொருட்டு உயிரையும் வழங்குவார்கள். இத்தகைய அருமைக் குணங்கள் வாய்ந்தவரோடு சிநேகங்கொள்ளாமல், வஞ்ச எண்ணங்கொண்ட பஞ்சமாபாதகரோடு சிநேகங்கொண்டால் அங்ஙனம் கொண்டவர்க்கு அவரால் ஆபத்துக்கள் பலவுண்டாம். அங்ஙன முண்டாமென்பதை அடியில் வரும் கதை விளக்கும்: -

 

ஒருநகரத்தில் மிக்க பரோபகாரியாகிய தனவந்த ரொருவர் இருந்தார். அவர், கபடற்ற சிந்தையுடையவர்; எவரையும் நம்பும் இயல்புடையவர். அவரிடத்தில், ஒரு நாள், தாடியும் சடையும் வளர்த்த பெரியவர் ஒரு வர் வந்து, ''நமக்குப் பல சித்தர் ஒளடதங்கள் தெரியும்; அவற்றை நாம் செய்து முடித்துக் கொண்டால் பொது ஜனங்களுக்கு மிக்க நன்மை புரியலாம்; அவற்றை முடித்துக்கொள்வதற்கு இந்நகரமே தகுதியானதா யிருக்கின்றது; ஆதலின், இந்நகரத்தில் நாம் தங்குவதற்கு ஓர் இடங்கிடைத்தால் அனுகூலமா யிருக்கும்" என்று கூறினார். அவர், அந்தப் பெரியவருடைய உண்மைக் குணங்களை உணர்ந்து கொள்ளாமல், அவர் கூறியவற்றை உத்தமமான காரியங்களென்று நம்பி, அவருக்குத் துணைபுரிய வேண்டுமென்று நினைத்து அப்பொழுதே அவரிடத்தில், ''சுவாமி! தாங்கள் இடத்திற்குக் கவலைப்பட வேண்டாம்; நம் வீட்டிலேயே வசிக்கலாம்'' என்று அவரைத் தம் இல்லத்திற் சேர்த்துத் தினந்தோறும் அவருக்கு நெய்யும் பாலும் பொங்கலும் ஊட்டிப் பற்பல உபசாரங்கள் புரிந்து வந்தார். பெரியவர், வேளை தவறாமல் விலாப்புடைக்கப் பெருந் தனி தின்று ஏதேதோ மருந்துகள் முடிப்பவர் போலச் சில காரியங்களைச் செய்து சந்தோஷமாகக் காலத்தைக் கழித்து வந்தார். நாளேற நாளேற அவர் விஷயத்தில் அந்த வீட்டுக்காரருக்கு அதிக நம்பிக்கையுண்டாகி விட்டது. அதனால், அவர் தம்முடைய சிறந்த ஆபரணங்கள், திரவியங்கள் முதலியன இருக்கும் இரகசியமான இடங்களையெல்லாம் கூட அப்பெரியாருக் குக்காட்டி அவரிடத்தில் மிக்க விசுவாசம் பாராட்டி வந்தார். பெரியவர், அந்தப் பொருள்கள் இருக்கும் பெட்டிகள், அறைகள் முதலியவற்றைத் தெரிந்து கொண்டதோடு அவற்றின் சாவிகள் வைக்கு மிடங்களையும் தெரிந்து கொண்டிருந்தார்.

 

இப்படி யிருக்கும் போது ஒருநாள் இரவு அவ்வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் ஆகாரமுண்டு படுத்துக் கொள்ளப்போகுந் தருணத்தில், அந்தப் பெரியவர் ஒரு லேகியத்தைக் கொண்டு வந்து, " இது மிக அருமையாக என்னால் செய்யப்பட்டது; அற்புத குணங்களைத் தரக்கூடியது; இதைத் தின்று பாருங்கள்'' என்று அதிற் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துருட்டி வீட்டுக்காரராகிய பிரபுவுக்கும், மற்ற எல்லோருக்கும் கொடுத்தார். யாவரும் அதனை விருப்பத்துடன் வாங்கி உட்கொண்டார்கள். அவர்களெல்லோரும் படுத்தவுடனே அந்த லேகியம் அவர்களுக்கு மிகுந்த எத்திரையை உண்டாக்கி விட்டது. சகலரும் அவ்வாறு மெய்ம்மறந்து தூங்கிய போது பெரியவர் எழுந்து பதறாமல் பயப்படாமல் அந்தப் பிரபுவின் சாவிகளையெடுத்து அறைகளையும் பெட்டிகளையும் திறந்து அவற்றில் இருந்த பொருள்களை யெல்லாம் அபகரித்துக்கொண்டு பூனை போல் வெளியேறி அப்பொழுதே கல்கத்தா மெயிலிலேறிக் காணாமற் போய்விட்டார். அவர் உண்மையில் பெரியவருமல்லர், மருந்து முடிக்க வந்தவருமல்லர்; தந்திரத் திருடர்களில் ஒருவர். ஆனதால் இவ்வாறு அந்தத் தனவந்தரைச சிநேகங்கொண்டு அவருடைய இகசியங்களை உணர்ந்து அவர்க்கும் மற்றையர்க்கும் சமயம் பார்த்து மயக்க மருந்து கலந்த லேகியத்தைக் கொடுத்து மிக்க நித்திரையை யுண்டாக்கி அவர் வீட்டுப் பொருள்களையெல்லாம் கைப்பற்றிக் கொண்டோடினார்.

 

அந்த மருந்தின் மயக்கத்தால் பிரபுவும் மற்றவர்களும் பெருந் தூக்கத்திலிருந்து மறுநாள் மத்தியானத்துக்கு மேலே தான் கொஞ்சம் நித்திரை மயக்கம் தீர்ந்து எழுந்தார்கள். அங்ஙனம் எழுந்ததும் பிரபு, பெரியவர், தம் பொருள்களைத் திருடிக்கொண்டு மறைந்தோடிச் சிறியவராய் விட்டதைத் தெரிந்து,'' ஒருவனுடைய இயற்கையை உணராமல் அவனோடு சநேகங்கொள்ளும் மனிதர்க்கு இத்தகைய தீங்குதான் நேரும்" என்று வருந்தினார். அவர்க்கு அந்த மருந்தின் மயக்கம் தீர்வதற்குச் சில தினங்கள் சென்றன.

 

தந்தை தாய் பேண்

 

"தந்தை தாய் = (நீ உன்) பிதாவையும் மாதாவையும், பேண் = (எப்போதும் பூசித்துக்) காப்பாற்றுவாயாக'என்பது இதன் பொருளாம்.

 

ஒரு மனிதன், தாய் வயிற்றில் உற்பத்தியான திலிருந்து உலகத்திற் பிறக்கும் வரையிலும் அவள் அவனுக்கு எவ்வித ஆபத்து முண்டாய் விடாதபடி மிக்க ஜாக்கிரதையாயிருந்து அவனைப் பாதுகாத்து வருகிறாள். அவன் பிறந்த பின்னரும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் பருவம் அடையும் வரையிலும் அவள் அவனைத் தன் கண்களைப் பாதுகாப்பதுபோல் காத்து வருகின்றாள். அவனைக் காப்பாற்றும் விஷயத்தில் அவள் பட்டினியாகவு மிருக்கின்றாள்; நித்திரையையும் நீக்கிவிடுகின்றாள்; சரீர சௌக்கியத்தையும் இழந்துவிடுகின்றாள்; வேறு பல கஷ்ட நஷ்டங்களையும் அடைகின்றாள். இன்னும் அவள் அந்தப் பிள்ளையை வளர்ப்பதற்குப் படும்பாடுகள் எண்ணில. அவளைப் போலவே தந்தையும் அப்புத்திரன் கருவிலிருக்கும் போது சௌக்கியத்துடன் வளர்வதற்கான பேருதவிகளை அப்பிள்ளையின் தாய்க்குச் செய்து வருவதோடு, அச்சேய் பிறந்தபின் அவனை வளர்க்கும் விஷயத்திலும், அவனுக்குக் கல்வி போதிப்பதிலும், பொருளீட்டி வைப்பதிலும் அரும்பெரும் பிரயாசை யெடுத்து வருகிறான். இவ்வகைக் காரணங்களால் ஒரு மனிதனுக்குத் தாய் தந்தையர் தெய்வத்தினும் சிறந்தவர்களாகின்றனர். ஆதலின் மனிதர், தங்களுக்கு இளமையில் தாய் தந்தையர் செய்த நன்றியை மறவாமல், தாங்கள் சுயேச்சையாக உலக இயலை நடத்தும் பருவமடைந்தவுடன் அவர்களைப் பாதுகாத்து வர வேண்டும். அத்தகையினரே அறிஞராவர். அவர்க்கு இம்மையிலும் மறுமையிலும் நலமே யுண்டாகும். அங்ஙனம் தாய் தந்தையரைப் பேணாதவர்களோ எவ்விடத்தும் இடர்க்குள்ளாவதோடு பலராலும் நிந்திக்கவும் படுவர்; அவமானத்திற்கும் உள்ளாவர். இக்காலத்தில் சிலர், ஏதோ ஒரு வகை விபரீதப் படிப்பினால் அநாகரீகத்தை நாகரீகமாகவும், அநீதியை நீதியாகவும், கெட்டதை நல்லதாகவுங்கொண்டு இத்தகைய நீதிகளை விடுத்துக் குறுக்கு வழியில் நடப்பதோடு தங்களை அரிதிற் பெற்று வளர்த்த தாய் தந்தையரையும் அவமதித்து இழிவடைந்து வருகின்றனர். அத்தகையி னர்களுடைய கதைகளுள் ஒன்றை நாம் இதனடியில் விளக்குவாம்:

 

ஒரு நகரத்தில் மிக வறுமையடைந்த மனைவியும் புருடனும் இல்லறம் நடத்தி வந்தார்கள். அவர்கள் தரித்திர முற்றவர்களாதலின், குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்கள். அந்நிலையில் அவர்களுக்கு அருமையாக ஒரு புத்திரன் பிறந்தான். அவர்கள் அவனுக்குத் தவமணி யென்று பெயரிட்டு அவனை அன்புடன் வளர்த்து வந்தார்கள். அவனை வளர்க்கும் விஷயத்தில் அவர்கள் மிக்கபிரயாசை யெடுத்துக் கொண்டார்கள். கூலி வேலை செய்தும் பணந்தேடி அதனால் அப்பிள்ளையைக் காப்பாற்றிக் கல்வியிலும் அவன் விருத்தி யடையுமாறு செய்தார்கள். தவமணி, தாய் தந்தையரின் உதவியால் உயர்தரக் கல்வியில் தேர்ச்சியடைந்து தாசீல் உத்தியோகம் பெற்றான். அதன்மேல் பலரும் அவனுக்குக் கௌரவம் கொடுத்து அவனைத் தவமணிப்பிள்ளை என்று மரியாதையுடன் அழைத்து வந்தார்கள். அவ்வாறு தவமணிப்பிள்ளை உத்தியோகத்திலமர்ந்த பின்பு தம்முடைய அந்தஸ்துக்குத் தகுதியான ஒரு பெண்ணையும் மணந்து கொண்டார். அவருக்கு ஒரு புத்திரனும் பிறந்திருந்தான். தவமணிப்பிள்ளை இவ்வாறு பல சிறப்புக்களையும் தாய் தந்தையரால் அடைந்திருந்தும் அவர்கள் தமக்குச் செய்த நன்றியை மறந்துவிட்டார். உத்தியோக கர்வமானது அவர் தலை மீதேறிக்கொண்டது. அதனால், முன்னே வறுமைத் துன்பத்திற் சிக்கி உடல் மெலிந்து கிழப்பருவமடைந்திருந்த அவருடைய தாய் தந்தையர், அவர் பெற்ற அந்தஸ்திற்குக் குறைந்தவராக அவருக்குக் காணப்பட்டார்கள். அவர், அவர்களை, தம்மைப் பெற்றோரென்று மற்றையரிடம் கூறவும் நாணினார். இங்ஙனம் அவர்கள் மீது அவருக்கு அபிமானங் குறையவே அவர் அவர்களுக்கு நல்லுண வளிப்பதுமில்லை, நல்லாடை கொடுப்பதுமில்லை. அவரும் அவர் மனைவியும் உயர்ந்த உணவுகளை உண்டும், சிறந்த ஆடைகளை உடுத்தியும் இன்பமனுபவித்துக்கொண்டு அந்த விருத்தாப்பியர்களுக்குப் புல்லரிசிக் கஞ்சியைக்காய்ச்சிப் பழய மண் கிண்ணிகளில் ஊற்றிவைத்தும், தாங்கள் கட்டிக்கிழித்துப் பழமைபாராட்டிக் கழித்த ஆடைகளைக் கொடுத்தும், படுப்பதற்குக் கிழிந்த வோர் ஓலைப் பாயை அளித்தும் வந்தார்கள். அவர்கள், ''நாம் பிள்ளையைப் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்தும் நமக்குச் சௌக்கியமுண்டாகத்தக்க விதியில்லை'' என்று அத்துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.

 

இப்படி யிருக்கும் போது தவமணிப்பிள்ளையின் புத்திரன் ஆறுவய தடைந்து வீட்டில் விளையாடிக் கொண்டு திரிந்தான். அக்காலத்தில் ஒரு நாள் தவமணிப்பிள்ளையிடம் ஒரு பெரிய உத்தியோகஸ்தர் வந்து பேசிக் கொண்டிருந்தார். தவமணிப்பிள்ளையின் புத்திரன் அவர் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அத்தருணத்தில், தவமணிப்பிள்ளையின் தாயும் தந்தையும் வீட்டிற்குள் ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குப் போனார்கள். அவர்களைப் பார்த்தவுடன் தவமணிப்பிள்ளை அவர்கள் மீது வெறுப்படைந்து, "இந்தக் கழுதைகள் என் இங்கே வந்தன' என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு சொன்னார். அதைக்கேட்டு அங்கே வந்திருந்த உத்தியோகஸ்தர், " இவர்கள் யாவர்? " என்று தவமணிப்பிள்ளையிடம் வினவினார். தவமணிப்பிள்ளை அவர்கள் தம் தாய் தந்தையாரென்று அவரிடம் சொன்னால் தமக்குக் கௌரவக் குறைவாகுமென்று நினைத்து, ''இவர்கள் நம் கிராமத்திலுள்ள வேலைக்காரனுடைய தாய் தந்தையர்" என்று சொன்னார். அங்கே விளையாடிக்கொண்டிருந்த தவமணிப்பிள்ளை யின் புத்திரன், தன் தந்தையும் தாயும், அந்த விருத்தாப்பியர்களுக்குச் செய்து வந்த காரியங்களைப் பலநாளும் கவனித்து வந்ததோடு அப்போது அவர்களைப்பற்றித் தவமணிப்பிள்ளை பேசிய வார்த்தைகளையும் கேட்டு, ''பிள்ளையாயிருப்பவன், தாய் தந்தையர்க்குச் செய்யத்தக்கன இவை தாம் போலும்" என்று தீர்மானித்து உடனே தன் தந்தையாகிய தவமணிப் பிள்ளையிடம், "அப்பா! எனக்கு இரண்டு பழமையான மண்கிண்ணிகளும், இரண்டு கிழிந்த ஓலைப்பாயும், நான் கட்டிக் கழிக்கும் துணிகளைப் பத்திரப் படுத்தி வைக்க ஒரு பெட்டியும், புல்லரிசிமாவும் தேடிக்கொடு'' என்றான். தவமணிப்பிள்ளை அதிசயித்து, ''இவற்றை எதற்காக நீ கேட்கிறாய்?" என்று அவனை வினவினார். அவன், 'அப்பா! நீ இப்போது உன் தாய் தந்தையர்க்கு மண்கிண்ணியில் புல்லரிசிக் கஞ்சி வார்த்துக் கிழிந்த துணிகளும், ஓலைப்பாய்களும் கொடுத்து வருவது போல நானும் உனக்கும் என் தாய்க்கும் பிற்காலத்தில் இவற்றைக் கொடுத்து வரவேண்டுமல்லவா; நீ இப்போது உன் தாய் தந்தையரைப் பேசியது போல நானும் உன்னையும் என் தாயையும் பற்றி என்னிடம் வரும் உத்தியோகஸ்தரிடம் கூற வேண்டு மல்லவா; அவற்றைச் செய்யும் பொருட்டாகத்தான் இப்பொழுதே இவைகளை நான் சேகரித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்'' என்றான்.

 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தவமணிப்பிள்ளைக்குப் பெருந் திகிலுண்டாகி விட்டது. அவர், "நாம், நம் தாய் தந்தையர்க்குச் செய்பவைகளை நமக்குச் செய்ய நம்பிள்ளை காத்துக்கொண்டிருக்கிறான்; நம் செய்கைகள் மிக்க மூடத்தனமானவைகள்'' என்று மாறுத்தரம் ஒன்றும் சொல்லமுடியாமல் விழித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்திருந்த அவருடைய சிநேகிதராகிய உத்தியோகஸ்தர் அவரிடமிருந்த மூடச்செய்கை களை யுணர்ந்து கொண்டு அவரை நோக்கி, "தவமணிப்பிள்ளை! நீர் தாய் தந்தையரை இவ்வாறு அவமதிப்பது முழுமூடச் செய்கை; இத்தகைய உமக்கு உம்முடைய பிள்ளை இடர்செய்வான்; அஃதிப்போது உம்முடைய புத்திரன் வார்த்தைகளால் விளங்கிவிட்டதல்லவா? இனிமேலாவது நீர், உம்மைப் பெற்றோரை அன்புடன் ஆதரித்து வருவீராக " என்று சொல்லி எழுந்து போய்விட்டார். அதன்மேல் தவமணிப்பிள்ளை மிக்க அவமான மடைந்து அன்னையையும், பிதாவையும் அன்புடன் ஆதரித்து வந்தார்.

 

“நன்றி மறவேல்

 

''(மனிதனே!) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உபகாரத்தை, மறவேல் - (நீ எப்பொழுதும்) மறவாதே " என்பது இதன் பொருளாம்.

 

ஒருவரால் ஒருகாலத்தில் உதவிபெற்றவர் இன்புற்று மகிழ்கின்றன ராகலின் அவ்வுதவியை எக்காலத்திலும், எந்நிலையிலும், எக்காரணத்தாலும் மறத்தல் கூடாது; அங்ஙனம் மறலாதிருப்பவரே மக்களுள் மிக்கோராவர்; இம்மை மறுமை இரண்டிடங்களினும் நலம் பெறுவர்; மறப்பவர் சிறப்படையார்; உலகத்தில் பலராலும் பழிக்கப்படுவர்; மறுமையிலும் எரிவாய் நரகுட்புகுந் துழல்வார். உயர்நெறி காட்டும் பொதுமறைபயந்த திருவள்ளுவனாரும்,

 

'செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது''

என்றும்,

 

''எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு''

 

என்றும் கூறியவற்றால் செய்ந்நன்றியறிதலின் உயர்வு நன்குணரப்படும். கீழ்வரும் சிறுகதையாலும் அதனை அறிந்துகொள்ளலாம்:

 

ஒருநகரத்தில் மிக்க செல்வமுடைய பிரபு ஒருவர் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இவர், எவருக்கும் உபகாரஞ் செய்யுங் குணமுடையவர். பிராணிகளிடத்திலும் தயையுள்ளவர். இவரிடத்தில் நாயொன்று சிறகுட்டிப் பருவத்திலிருந்து வளர்ந்து வந்தது. அதைப் போலவே ஒருபணியாளனும் இளமை தொட்டுப் பணிபுரிந்து வந்தான். பிரபு, அந்தநாயினிடத்திலும் வேலைக்காரனிடத்திலும் மிக்க அன்பு செலுத்திவந்தார். தம்முடைய உணவிலும் அந்த நாய்க்கும் அடிமையாளுக்கும் பங்கிட்டுக் கொடுப்பது அவருடைய வழக்கம். இங்ஙனம் அவர், அந்த நாயையும், வேலைக்காரனையும் மிகுந்த பற்றுதலோடு வளர்த்து வருங்காலத்தில் ஒருநாள் அவருக்கு அடுத்த ஊருக்குக் கால்நடையாகச் செல்லவேண்டிய முக்கிய அலுவலொன்று நேர்ந்தது. அதனால் அவர், அவ்வூருக்குப் பிரயாணமாகிச் சென்றார். எங்குச் சென்றாலும் அந்த நாயையும், பணியாளையும் உடனழைத்துச் செல்வது வழக்கமாதலின் அவ்வழக்கப்படியே அன்றைக்கும் அழைத்துக் கொண்டு போனார். அவர் அவ்வாறு சென்றவழியில் அடர்ந்த வோர் காடிருந்தது. அக்காட்டினடுவில் அவரும் நாயும் வேலைக்காரனும் போகும் போது பாதையோரத்திலுள்ள செடிமறைவில் பதுங்கிக்கிடந்த சிறுத்தைப் புலியொன்று திடீரென்று அப்பிரபுவின்மேற் பாய்ந்தது. அதைக் கண்டதும் அவருடன் சென்ற வேலைக்காரன் நன்றி மறந்தவனாய், 'இவர் புலியினாலிறப்பது திண்ணம். இனி இவரால் நமக்காவதொன்றுமில்லை என்று தன் உயிரைக் காப்பாற்றுதற்கு ஒரேபாய்ச்சலாகப் பாய்ந்தோடி விட்டான். நாயோ பகுத்தறிவற்ற பிராணியாயிருந்தும் தன் எஜமானருக்கு அபாயம் வந்துவிட்டதென்பதை யுணர்ந்து அவரைக் காப்பாற்றவேண்டு மென்னும் துணிவு பூண்டு உடனே வீராவேசங்கொண்டு அந்தப் புலி அப்பிரபுவை அடிப்பதற்கு முன்னரே அதன்மேற் பாய்ந்து அதனுடைய தொண்டையைக் கவ்விக்கொண்டது. நாய் மிக்க உயரமும், பருமனும், பலமுமுள்ள தாயிருந்தபடியாலும், சிறுத்தை ஒரு ஆள் தைரியத்துடனெதிர்த்தால் அவனால் அடக்கிவிடக்கூடியதாதலாலும், அந்த நாயின் வாயினின்றுந் தப்பக் கூடியவரை முயன்றும் அதனால் அஃதியலவில்லை. சிறிது நேரத்திற்குள் நாய் அதன் தொண்டையைக் கடித்துக் கடித்து உதறி அதனைக் கொன்றுவிட்டு அப்பிரபுவிற்கு முன் வாலையாட்டி மனக்களிப்பு விளங்கக் குரைத்துத் தன் நன்றியறிதலைக் காட்டிக்கொண்டு நின்றது.

 

அதைக்கண்டு அப்பிரபு, 'நம்மிடம் நெடுநாட்களாக உணவுண்டு வளர்ந்த அச்சண்டாளன் நன்றி கொன்றவனாய் இப்போது நம்மை ஆபத்தில் சிக்கவிட்டுத் தன்னுயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஓடிவிட்டான்; நாயோ உயிர்க்கஞ்சாமல் புலியோடெதிர்த்து அதனைக் கொன்று நம்மைக் காப்பாற்றிவிட்டது; அவன் மனித வகுப்பைச் சார்ந்தவனாயிருந்தும் இந்த நாய்க்குள்ள நன்றியறிதல் குணம் அவன்பால் இல்லாமற் போயிற்று; அவன் நாயினும் கடையனாவான்'' என்று நாயை மிகவுங் கொண்டாடி முதுகைத்தடவிப் பிரியத்துடன் அழைத்துக்கொண்டு வழிக்கூடி நடந்து போனார்.

 

புலியோ ஓர் ஆள் பலமுடையது. அந்தப் பிரபுவோடும் நாயோடும் அவ்வேலைக்காரனுமிருந்தால் அச்சிறுத்தையை எளிதிற் கொன்று விடலாம். அக்காரியம் அவ்வளவு சுலபமாயிருந்தும், அப்பணியாளன் தன்னலத்தையே விரும்பியவனும், நன்றியறியாதவனுமாதலின் தன் எஜமானருக்குத் துணைசெய்யாமல் ஓடி விட்டான். இப்பேர்ப்பட்டவனுக்குத் தெய்வர் துணைச் செய்யுமா? அவன் நீண்டகாலந்தான் உலகிலிருப்பானா? அந்தோ! அவனுடைய தன்னல எண்ணம் இன்னலாய் முடிந்து விட்டது. அவன் அவ்வாறு தன்னைக் காப்பாற்றியவரை மறந்து புலிக்குப்பயந்து மிக விரைந்தோடும் போது புற்கள் நிறைந்த ஒரு பள்ளத்தில் பாய்ந்தான். அதற்குள் பெரிய வேங்கையொன்று படுத்திருந்தது. அவன் பாய்ந்த வேகத்தால் மறைந்து கிடந்த அவ்வேங்கையின் முதுகில் வீழ்ந்துவிட்டான். வேங்கை, யாதோ தன்மேல் வீழ்ந்ததென்று பயந்து துள்ளியெழுந்து அவனைப் பார்த்து மனிதனென்றுணர்ந்து பெருஞ்சினங்கொண்டு ஒரே அறையில் அறைந்து கொன்று போட்டுப் போய்விட்டது. அவன் புலிக்குப் பயந்தோடியும் வேங்கையிடத்திற் சிக்கி யிறந்தான். அப்பிரபு நல்லெண்ணமுடையவராகலின், புலிப்பாய்ச்சலிற் சிக்கியும் நாயினாற் காப்பாற்றப்பட்டார்.

 

அவன் அவ்வாறு இறந்து கிடக்கும் போது மேற்கூறியபடி சென்ற பிரபு அவனைக்கண்டு, 'இவன் நன்றி மறந்ததால் சிறிய புலிக்குப் பய்ந்தோடி வந்தும், பெரிய புலியினால் அடித்துக்கொல்லப்பட்டான்' என்று வியப்புற்றுத் தாம் குறித்த ஊருக்குப்போகாமல் உடனே திரும்பிச் சொந்த வூருக்குப்போய் அங்குள்ளாரிடம் நாயின் நன்றியறிதலையும், வேலைக்காரனின் விசுவாசமற்ற தன்மையையும், அவன் இறந்ததையும் சொல்லி, அவனுடைய சவத்தைச் சிலரால் எடுத்து வரச்செய்து அடக்கம் செய்வித்தார். அவ்வூரா ரனைவரும் அந்நாயைப் புகழ்ந்து அவ்வேலைக்காரனை இகழ்ந்தார்கள். அவன் நன்றி மறந்ததால் அவ்வாறு இறந்து நரகத்தை அடைந்தான். அந்நாய் அப்பிரபுவால் அருமையினும் அருமையுள்ள தாகப் பாது காக்கப்பட்டு முடிவில் இவ்வுலகைத் துறந்து தன் உயரியகுணத்தால் சிறந்த கதியுட் சேர்ந்தது.

 

“பருவத்தே பயிர்செய்

 

"பயிர் = பயிரை, பருவத்தே = உற்பத்தி செய்தற்குரிய) காலத்திலே, செய் ='நீ உற்பத்தி) செய்வாயாக'' என்பது இதன் பொருள்.

 

உலகத்தில் பயிர்த்தொழில் செய்வோரால் உண்டாக்கப்படும் ஒவ்வொரு பயிரையும் உற்பத்தி செய்தற்குத் தக்க பருவம் ஏற்பட்டிருக்கின்றது. எந்தப்பருவத்தில் எந்தப் பயிர் உற்பத்தி செய்தற்குரியதோ அதையே அதில் உண்டாக்கவேண்டும். அங்ஙனமின்றிப் பருவந்தவறி ஒருபயிரை உண்டாக்கினால், அது விருத்தியடையாது; விசேஷபலனையும் தராது; சிலசமயம் முளைக்காமற் போய்விடுவதுமுண்டு. ஆதலின், உழவுத்தொழிலால் மிக்க பயனடைய விரும்புவோர் பருவத்தில் பயிர் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாதவர், விவசாயத்தால் பயனடைதலின்றித் துன்புறுவர். இவ்வுண்மையை அடியில் வரும் சிறுகதை விளக்கும்:

 

சோளம், வரகு, துவரை, மொச்சை முதலிய புன்செய்த் தானியங்கள் பயிரிடுவதற்குச் சில மாதங்களை உரிய பருவமென்றும், சிலவகை நெற்களைப் பயிரிடுதற்குச் சில மாதங்கள் தகுமெனவும், இப்படியே வெவ்வேறு வகைப் பயிர்களுக்கு வெவ்வேறுவகைக் காலங்கள் பொருத்தமானவை யெனவும் விவசாயிகள், தங்கள் அனுபவத்தால் தீர்மானித்து அக்காலங்களில் பொருத்தமான பயிர்களை உற்பத்தி செய்யும் வழக்கத்தை மேற் கொண்டிருக்கின்றனர். இம்முறையை எல்லோரும் அனுசரிப்பது மரபா யிருப்பினும் சிலர், இதற்கு மாற்றமாக நடந்து கேட்டிற்குள்ளாவது முண்டு. ஒரு கிராமத்தில் பட்டந்தவறாமற் பயிர்செய்யும் விவசாயிகள் மிகுந்திருந்தனர். அவர்களோடு விபரீத புத்தியுள்ள ஒருவன் பயிர்த் தொழில் செய்து கொண்டிருந்தான். இவன், நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் கருதும் இயற்கையுடையவன்; உலக இயல் சிறிதுமறியாமல், சகலமுந் தெரிந்தவன் போல் தற்பெருமை பேசக்கூடிய வன்; அறிஞர் கூறும் அறவுரைகளைக் கொள்ளாமல் தன் துர்ப்புத்தி சென்ற வழியே செல்லும் மூர்க்கன். ஊரிலுள்ளார் நேரான வழியில் நடந்தால் இவன் அதற்கு மாறான வழியில் நடப்பான். ஒருவருஷத்தில் அவ்வூரில் மழையில்லாமல் பஞ்சமுண்டாகிவிட்டது. அதனால் ஜனங்கள் உணவுப்பொருள்கள் அகப்படாமல் துன்பப்பட்டார்கள். அடுத்த வருஷம் முன்னரே சித்திரைமாதந்தொடங்கி நல்ல மழை பெய்தது. முன் வருஷத்தில் தானியங்கள் கிடைக்காமல் வருந்திய ஜனங்கள் விரைவில் பயன் தரக்கூடிய புன்செய்த்தானியங்களை விதைத்து முன்னரே பயிர் செய்தார்கள். அந்தத் தற்பெருமையுடைய மந்தமதியன் மட்டும், மற்றவர்கள் பைத்தியக்காரத்தனமாக விவசாயஞ் செய்கிறார்களென்றும், தான்மாத்திரம் புத்திசாலித்தனமாக அதைச் செய்யவேண்டுமென்றும் நினைத்து, " இவர்கள் பயிர்செய்வன தாழ்ந்த விலையுள்ள தானியங்கள்; இவை நன்றாக விளைந்தாலும் சென்ற வருடத்தில் உண்டான நஷ்டத்திற்கு ஈடுசெய்ய மாட்டா; ஆதலால் நாம் சற்றுப் பொறுமையோடிருந்து இரண்டு மாதங்களுக்குப் பின் பருத்தி சாகுபடி செய்தால் முன் நஷ்டத்திற்கு ஈடு செய்யும் படி மிக்க இலாபம் பெறலாம்'' என்று மனோராஜ்ஜியம் செய்து அப்பருவத்தில் பயிர்த்தொழில் செய்யாமலிருந்து விட்டான். அவன் பருத்தி சாகுபடி செய்ய வேண்டியகாலத்தில் மழையில்லாமற் போய் ஒருமாதத்திற்குப் பின் பெய்தது. அதனால் அவன் ஒருமாதங்கழித்துப் பட்டந்தவறிப் பருத்தி சாகுபடி செய்தான். காலந்தவறியபடியால் பருத்திப் பயிர் செழிப்பாக உண்டாகவில்லை. அப்பயிர் இளம்பருவமாயிருக்கும் பொழுதே மாரி பொழிதல் மாறிவிட்டது. பருத்திச் செடிகள்பட்டுப் போய்விட்டன. அவன் ஒரு பலனையு மடையாமல் பஞ்சையாய் நெஞ்சங் கலங்கினான். சமய மறிந்து புன்செய்த்தானியங்கள் பயிர் செய்தவர்களுக்கு நல்ல பயன் கிடைத்தது. அவன் பருத்திப் பயிர் செய்யத்தொடங்கிய காலத்திலேயே அவர்கள் வித்தியதானியங்கள் விளைவுக்கு வந்துவிட்டன. அதனால் அவர்கள் முன் ஏற்பட்ட பஞ்சக்கஷ்டம் நீங்கிச் சௌக்கியமடைந்தார்கள்.
 

அறிஞர் கொள்கைகளை அவமதிக்கும் அந்த அறிவிலி, அம்மட்டோடு சும்மாவிராமல் மேலும் யுத்தி செய்ய ஆரம்பித்தான். அங்ஙனம் ஆலோசிக் கத்தொடங்கி, ''நம்முடைய நிலத்தில் ஈரங்காத்துக்கொள்ளும் தன்மையில்லை; அதனாலேயே பருத்திச் செடிகள் பட்டுப்போயின; ஆதலால், அதில் பல தினங்கள் வரை ஈரச்சத்திருக்கும்படி ஒருயுக்தி செய்யவேண்டும்; உப்பு மண்ணை நிலமெங்கும் பரப்பிவிட்டால் எப்பொழுதுமே ஈரம் நீங்காமலிருக்கு'' மென்று கையிலிருந்த பொருள்களையும் செலவிட்டுத் தன்னுடைய நிலத்தில் அரை அடி உயரம் உப்புமண்னைக் கொண்டுவந்து பரப்பி உழுது புரட்டிவிட்டான். அந்த உவர்மண்சேரவே நல்லமண்ணையும் கெடுத்துத் தன்மயமாக்கிவிட்டது. அந்நில முழுவதும் உவர் நிலமாக மாறிவிட் டது. அதன்மேல் அவன் அதில் எந்தத் தானியத்தை விதைத்தாலும் முளைப்பதில்லை. அதனால் அவன் அடியோடு கெட்டொழிந்தான். அவ்வூரா ரெல்லோரும் அவனுடைய மதியற்ற செய்கையை யுணர்ந்து, ''அறிஞா கொள்கைகளை அவமதிக்கும் அகங்காரமுள்ள அறிவிலிகட்குக் கிடைக்கும் பயன் இதுவே' என்று அவனை இகழ்ந்தனர்.

 

“மன்றுபறித் துண்ணேல்

 

''மன்று - தருமசபையிலே (நீ நியாயாதிபதியாயிருந்து கொண்டு வழக்குத் தீர்ப்புக்கு வரும் மனிதரிற் பலரிடம் நடுவுநிலைமை தவறி ஒரு தலைச்சார்பா யிருக்கத் தொடங்கி), பறித்து - (அவர்களுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - (அதன் மூலம்) உணவுண்டு சீவனம் பண்ணாதே' என்பது இதன் பொருள்.

 

நீதிமன்றங்களில் தலைவராய் அமர்வோர், மனிதர்களை அடக்கியாளும் அதிகாரத்தைப் பெற்றவர்களாதலின், அவர் செய்யும் நீதித் தீர்ப்பு நன்றாயினும் தீதாயினும் மனிதர், தடையின்றி அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய வர்களாயிருக்கிறார்கள். ஆதலின் நியாயமான தீர்ப்பை யடைவோர் மன சம்மதத்துடன் அதனை யேற்றுக் கொள்வார்; நியாயவிரோதமான தீர்ப்பை அடைந்தவர் மனம் வெதும்பி திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்று நினைத்துத் தங்கள் குறையைத் தெய்வத்தினிடம் சொல்லி முறையிடுவார்கள். அதனால், அந்நடுநிலைமை தவறியவர்க்குத் தெய்வதண்டனை யுண்டாகும். முடிவில் அவர் கெட்டொழிவர். நியாயந் தவறாதவர்களோ இம்மை, மறுமை யென்னும் இரண்டிடங்களினும் மேன்மையுறுவர். இங்ஙனம், நீதிவிரோதஞ் செய்பவர் கெடுவரென்பதும், நடுவு நிலைமை தவறாதவர் நன்மை யடைவரென்பதும்,


 "'கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
 நடுவொரீஇ யல்ல செயின்
 (வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
 பாதாள மூலி படருமே - மூதேவி

 சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
 மன்றோரஞ் சொன்னார் மனை.''


 ''செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
 எச்சத்திற் கேமாப் புடைத்து "

 

என்னும் செய்யுட்களால் இனிது விளங்கும்.


தருமந் தவறுவோர் கெடுவரென்பதை அடியில் வரும் சிறு கதை விளக்கும்:

 

பண்டைக்காலத்தில் ஒரு நகரத்தில் ஒரு மனிதன் மற்றொருவனோடு விரோதங்கொண்டு எவ்வழியினாலாவது அவனை ஒழித்து விடக் கருதியிருந்தான். அப்படியிருக்கும் போது ஒருநாளிரவில் அவனுடைய வேலைக்காரனொருவன், உயர்ந்த கட்டிடத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்து மண்டை உடைபட்டிறந்து விட்டான். தன் விரோதியை ஒழிக்கக் கருதியிருந்த அம்மனிதன், அதற்கு இதுதான் தருணம்' என்று நினைத்து, இறந்து போன மனிதனைத் தன்னுடைய விரோதியே கொலை செய்து விட்டானென்று அவ்வூரெங்கும் தெரிவித்து, அப்போதிருந்த ஒரு நீதித் தலைவரிடத்தில் அவன் மீது வழக்குத் தொடுத்தான். நீதியதிபர் அவ்வழக்கினை விசாரித்ததில் அது கட்டுப்பாடானதென்று அவருக்குத் தெரிந்தது. அதனால் அவர் அவ்வழக்கைத் தள்ளிவிட உத்தேசித்திருந்தார். பொய் வழக்குக்காரன் அவருடைய எண்ணத்தை யுணர்ந்து ஒருநாள் இரவில் இரகசியமாக ஒரு பெரிய பைநிறைந்த பணத்தை யெடுத்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்து,'' என்னுடைய விரோதிக்கு மரண தண்டனை விதித்து அவனை ஒழித்துவிட வேண்டும்'' என்று சொன்னான். பணத்தைக் கண்டதும் அவர் அந்த அநியாயத்திற் கிணங்கிவிட்டார். மறுநாளே அந்தக் குற்றவாளியின் மீது கட்டுப்பாடான குற்றத்தைப் பொருத்தத்தோடு ஸ்தாபித்து அவனுக்கு மரண தண்டனை விதித்து விட்டார். அந்த நிரபராதி என்ன செய்வான் பாவம்! தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழி யுணராமல் நெஞ்சங்கலங்கி, ஏழைக்கிரங்கும் தெய்வத்தினிடத்தில், 'கடவுளே! நீதான் என்னைக் காப் பாற்ற வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்தான். அவனுடைய மரண தணடனை அதிகாரியால் நிறைவேற்றப்படும் நாளன்று சேவகர்கள் அவனைக் கொண்டு போய்த் துக்கு மரத்தின் மேடையிலேற்றினார்கள். அவனுக்கு மரணத் தீர்ப்பளித்த அதிகாரியும், அவள் மீது பொய்க்குற்றஞ் சாட்டிய பாதகனும், மற்றையரும் அங்கே வந்து கூடி நின்றார்கள். அப்போது தூக்கு மேடையிவேற்றப்பட்டிருந்த நிரபராதி கடவுளை நோக்கி, எல்லோருக்கும் கேட்கும்படி, 'எங்கும் நீதிசெலுத்தும் இறைவனே! நான் உண்மையில் கொலைக்குற்றம் செய்தவனாயிருந்தால் நீ என்னைக் கொன்றுவிடு; நான் நிரபராதியாயிருந்தால் அநியாயமாக என் தலைமீது குற்றத்தைச் சுமத்தியவர்களை நீ தண்டிப்பாயாக' என்று ஆகாயத்தைப் பார்த்துக் கூவினான். உடனே தெய்வச் செயலால், அநியாயத் தீர்ப்புச் செய்த தலைவர் தலையிலும், பொய் வழக்குத் தொடுத்த அப்புல்லன் தலையிலும் ஆகாயத்திலிருந்து ஓர் இடி அதிர்ந்து வீழ்ந்தது. அவ்விருவரும் அப்பொழுதே மாண் டொழிந்தார்கள்.

 

இவ்வதிசயத்தைப் பார்த்து அங்குக் கூடிநின்ற எல்லோரும் பிரமித்து விட்டார்கள், அதன்மேல், மேல் அதிகாரிகள் அந்த வழக்கை மீண்டும் விசாரித்து உண்மை தெரிந்து அந்த நிரபராதியை விடுதலை செய்தார்கள். அந்நகரத்திலுள்ளவர்களெல்லோரும் அந்த நிரபராதியைப் புகழ்ந்து, நீதி தவறியிருந்த அவ்விருவரையும் இகழ்ந்து, கடவுளின் அருட்டிறத்தை வியந்து கொண்டாடினார்கள்.

 

“இயல்பலா தனசெயேல்

 

''இயல்பு அல்லாதன - (அறநூல்களிற் கூறப்படும், நீதிமார்க்கங்களுக்குப்) பொருத்தமல்லாத செய்கைகளை, செய்யேல் = (நீ) செய்யாதே'' என்பது இதன் பொருள்.

     

உலகத்தில் மனிதராய்ப் பிறந்தவர்கள், தமக்கெனப் பெரியோர் களால் அறநூல்களில் வகுக்கப்பட்டிருக்கும் ஒழுக்கங்களைக் கைக்கொண்டு, தருமசாஸ்திரங்களுக்கு விரோதமான செயல்களை ஒழித்துவிட வேண்டும். இங்ஙனம் தீ யொழுக்கங்களை ஒழித்து நல்லொழுக்கங்களைத் தழுவும் அறிஞரே இவ்வுலகத்தில் குன்றாநிதியும், நன்றாகிய வாழ்வும், பொன்றாப் புகழும் பெற்று, மேலுலகத்திலும் சிறந்தோராய்த் திகழ்வர். நீதி நூல்களுக்குப் பொருத்தமற்ற காரியங்களைச் செய்யும் புல்லர், நல்லோராகிய பல்லோராலும் பழிக்கப்பட்டு, இம்மை, மறுமை ஆகிய இரண்டிடங்களினும் இழிந்தோராய் மறைந்தொழிவர். இங்ஙனம் நீதிக்குப் பொருந்தாதவற்றைச் செய்து அழிந்தார் சரிதங்கள் பலவுண்டு; அவற்றுள் ஒன்றனை நாம் இதற் குதாரணமாக விளக்குவாம்: –

 

ஒரு சமஸ்தானத்தில் காரியஸ்த ரொருவர் இருந்தார். அவர் புத்தியிலும், வித்தையிலும், உலக அனுபவத்திலும் சிறந்தவர்; எவ்வகைப்பட்ட உயர்ந்த காரியங்களையும் எளிதில் முடிக்கும் மதி நுட்பமுடையவர். இவ்வாறு அவர் சிறப்புற்றவரா யிருந்ததனாலே அந்தச் சமஸ்தானம் மிக்க உயர்வுடையதாய் விளங்கி வந்தது. அந்தச் சமஸ்தானாதிபதியும் செல்வாக் குடையவராய் அந்தக் காரியஸ்தர் மீது அன்பு செலுத்தி வந்தார். அந்தக் காரியஸ்தருக்கு அங்கே நல்ல வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது. அவருடைய வாழ்க்கையும் இனிதாக நிறைவேறி வந்தது.

இவர், இவ்வாறு அந்தச் சமஸ்தானத்தில் கௌரவம்பெற்று வாழ்ந்து வருங்காலத்தில், அவ்வூரில் பொறாமைக்குணம் மிகுந்த ஒரு மனிதன் இருந்தான். அவன், அந்தக் காரியஸ்தர் செல்வாக்குடையவராய் வாழ்ந்திருப்பதைப் பார்த்துப் பொறாமை கொண்டு அவரைக் கெடுக்கும் வழிகளைப்பற்றி ஆலோசித்தான். அவனுக்கோ, தமிழை எழுத்துப்பிழையின்றி எழுதுதலும் தெரியாது; உலக அனுபவமுமில்லை; சிறந்த அறிவுமில்லை. அவன், அங்ஙனம் எதிலும் சிறவாதவனாயிருந்தும், அந்தக்காரியஸ்தரை யொழித்து எப்படியாவது அவருடைய பதவிக்கு வந்துவிட விரும்பினான்.

 

அவ்விருப்பத்தால், அந்தச் சமஸ்தானாதிபதியிடம் அடிக்கடி போய், அந்தக் காரியஸ்தர் மீது குற்றங் கற்பித்து, 'அவர் படிப்பு உயர்ந்த படிப்பன்று; அறிவும் சிறந்ததன்று; நான் எல்லாவற்றிலும் சிறந்தவன்; நீங்கள் அவருடைய வேலைக்கு என்னை நியமித்துவிடுங்கள்; நான் புத்திசாலித்தனத்துடன் வேலை செய்வேன்' என்று கோட் சொல்லிவந்தான். அந்தப் பிரபுவுக்கு அவனுடைய இயற்கை தெரியும். அதனால் அவனை அவ்வேலைக்கு நியமிக்க இஷ்டமில்லை. அங்ஙனம் அவர் விருப்பமற்றிருந்தும் அவன் காரியஸ்தர் மீது புறங்கூறும் வழக்கத்தை நிறுத்தவில்லை. தினந்தோறும் தன் மித்திரபேத வார்த்தைகளை அவரிடம் சொல்லி அவருக்கு மிக்க தொந்தரவையுண்டாக்கிக் கொண்டு வந்தான்.

 

அதனால் அவர், 'இவனுக்கு இந்த உத்தியோகத்தைக் கொடுத்து இவனுடைய நடக்கையைக் கொண்டே இவன் அவ்வேலைக்குத் தகுதியற்றவனென்பதை வெளிப்படுத்தி இவனை அவமானத்திற் குள்ளாக்க வேண்டும்'' என்று முடிவு செய்து, உடனே தம்முடைய காரியஸ்தரிடத்தில், " நீர் சில தினங்கள் வரை வேலைக்கு வராமலிருக்க வேண்டும்; நான் ஒரு காரியத்தை உத்தேசித்து, வேறொரு மனிதனை அவ்வேலைக்கு நியமிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அவர் மிகுந்த புத்திமானாகையால், 'பிரபு சொல்வதில் ஏதாவது முக்கியமான காரியமிருக்கும்' என்று அதற்கிசைந்து கொண்டார். மறுநாளே அப்பிரபு அந்தப் பொறாமைக்காரனை அவ்வேலைக்கு நியமித்து விட்டார். அவன், தனக்கு உத்தியோகங் கிடைத்தவுடன் மிக்க அகங்கரிப்போடு தலைநிமிர்ந்து திரிந்தான். அங்ஙனம் அவன் காரியஸ்தனாயமர்ந்த பின் ஒருநாள் அந்தப்பிரபு தம்முடைய காரியாலயத்தில் உட்கார்ந்திருந்தார். புதுக்காரியஸ்தனும் அங்கே நின்றான்; இன்னும் பலரும் கூடியிருந்தார்கள்; முந்திய காரியஸ்தரும் வந்திருந்தார். அப்போது தெருவில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்ட சில வண்டிகளைச் சில மனிதர்கள் நடத்திக்கொண்டு போனார்கள். பிரபு அவற்றைப் பார்த்ததும், புதுக்காரியஸ்தனை நோக்கி, "அந்த வண்டியிலிருப்பவை என்ன மூட்டைகள்? " என்று கேட்டார். அவன் விரைந்தோடி வண்டிக்காரரிடம்'' உங்கள் வண்டிகளில் என்ன மூட்டைகள் இருக்கின்றன?'' என்று வினவினான். அவர்கள், "நெல் மூட்டைகள்'' என்றார்கள். காரியஸ்தன் அங்கிருந்தோடி வந்து பிரபுவிடத்தில், 'நெல்மூட்டைகள்'' என்று சொன்னான். பிரபு, "அவற்றை அவர்கள் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்?'' என்று கேட்டார். காரியஸ்தன் மீண்டும் விரைந்தோடி வண்டிக்காரரிடம், "நீங்கள் இவற்றை எங்கிருந்து கொண்டுவருகிறீர்கள்?'' என்றான்; அவர்கள், 'நாங்கள் வடசேரியி லிருந்து கொண்டு வருகிறோம்'' என்றார்கள். காரியஸ்தன் பிரபுவிடம் ஓடி வந்து, 'அவர்கள் வடசேரியி லிருந்து கொண்டு வருகிறார்கள்'' என்றான். பிரபு, "அவைகளை எங்கே கொண்டு செல்கிறார்கள்?" என்றார். காரியஸ்தன் மீண்டும் விரைந்தோடி நெல்மூட்டைகளைக் கொண்டு போவாரிடத்தில், "எவ்விடத்திற்குக் கொண்டு போகிறீர்கள்?'' என்றும் வினவினான். அவர்கள், 'நாகர் கோவிலுக்குக் கொண்டு செல்கிறோம்'' என்றார்கள். காரியஸ்தன் திரும்பிவந்து பிரபுவிடம், "நாகர் கோவிலுக்குக் கொண்டுபோகிறார்கள்'' என்ருன், பிரபு, "அவைகள் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்டனவா, அவர்கட்குச் சொந்தமானவைகளா?'' என்று அவனிடம் கேட்டார் அயன் திரும்பவும் ஓடி வண்டிக்காரரிடம் அவ் விவரங்களை வினவினான். அவர்கள், "அவை எங்களால் விலைக்கு வாங்கப்பட்டவை " என்றார்கள். புதுக்காரியஸ்தன் திரும்பிவந்து பிரபுவிடம் ''அவை விலைக்கு வாங்கப்பட்டவை" என்றான். அதன்மேலும் பிரபு "அவர்கள் அவற்றை ரூபா ஒன்றுக்கு எத்தனை படி விகிதம் வாங்கினார்கள்?" என்றார். புதுக்காரியஸ்தன் அப்போதும் அயர்ச்சியடையாமல் விரைந்து போய் மூட்டைக்காரரிடம் அவ்விவரத்தையும் கேட்டான். அவர்கள்'' ரூபா ஒன்றுக்குப் பத்துப்படிகள் விகிதம் அவற்றை வாங்கினோம்'' என்றார்கள். காரியஸ்தன் மீண்டோடி வந்து பிரபுவுக்கு அவ்விவரத்தையும் கூறினான். அதற்கு மேலும் பிரபு அவனைச் சும்மாவிடவில்லை.'' அவற்றை விற்கக் கொண்டு போகிறார்களா, சொந்த உபயோகத்திற்குக் கொண்டு போகிறார்களா?'' என்றார். காரியஸ்தன் மீண்டும் போய் இவ்விவரங்களையும் வண்டிக்காரரிடம் கேட்டான்; அவர்கள்'' விற்கக் கொண்டு போகிறோம்'' என்றார்கள். அவன் திரும்பி யோடி வந்து அவ்விவரத்தையும் பிரபுவுக்குக் கூறினான். பின்னரும் பிரபு 'ஒரு ரூபாய்க்கு எத்தனை படி விகிதம் விற்பார்கள்?'' என்றார். இந்தக் கேள்வி பிறப்பதற்குள் வண்டிகள் நெடுந்தூரம் போய் விட்டன. காரியஸ்தன் மீண்டும் விரைந்தோடி வண்டிக்காரரிடம் இக் கேள்வியைக் கேட்டான். அவர்கள், ''ஒன்பது படி விகிதம் விற்போம்'என்றார்கள். புதுக்காரியஸ்தன் அந்த விடையைக் கேட்டுக்கொண்டு மிகுந்த இளைப்புடன் திரும்பி யோடி வந்து பிரபுவிடம் சொன்னான்.

 

அப்போது வேறொரு மனிதன், கடலை மூட்டைகள் நிறைந்த ஒரு வண்டியை அத்தெருவில் ஓட்டிக்கொண்டு போனான். அதைக்கண்டு அந்தச் சமஸ்தானாதிபதி, புதுக்காரியஸ்தனிடம் முதலில் வினவியதைப் போலவே, பழயகாரியஸ்தரிடம் அவ்வண்டியைச் சுட்டிக்காட்டி, "இந்த வண்டியி லுள்ளவை என்ன மூட்டைகள்?'' என்று வினவினார். உடனே அவர் தெருவிற் போய் அவ்வண்டியை நிறுத்தி, அதை ஓட்டிச் சென்றவனிடத்தில், பின்னர் கேட்க வேண்டியது ஒன்றுமிராமல் அம்மூட்டைகளிலிருந்த தானியம், அதை அவன் சேகரித்தவிடம், கொண்டு செல்லுமிடம், அதன் உபயோகம் முதலிய சகல விவரங்களையும் ஒரேமுறையில் கேட்டுக்கொண்டு வந்து பிரபுவிடம் சொன்னார்.

 

அங்குக் கூடியிருந்தவர்கள், அந்தப் பழய காரியஸ்தருடைய மதிநுட் பத்தையும், புதுக்காரியஸ்தனுடைய மூடத்தன்மையையும் பார்த்துப் புதுக் காரியஸ்தனுடைய முகத்தை நோக்கி அவனை ஏளனம் செய்து கைகொட்டிச் சிரித்தார்கள். உடனே பிரபு பொறாமை மிக்க புதுக்காரியஸ்தனை நோக்கி, ''பேதாய்! உன்னிடம் அறிவுமில்லை கல்வியுமில்லை; கல்வியில் மிக்க அறிஞரை இகழ்ந்துரைக்கும் ஆற்றலும் பொறாமைக்குணமும் நிறைந்திருக்கின்றன; நீ ஒரே முறையில் தெரிந்துகொள்ளக்கூடிய சிறுவிஷயங்களுக்குப் பன்முறை அலைந்தாய். முன் காரியஸ்தர் அவற்றை ஒரேமுறையில் தெரிந்துரைத்தார். புத்திசாலியாயிருப்பவன், நான் மூட்டைகளின் விஷயத்தை வினவிய முதல் வார்த்தையைக் கேட்டவுடனேயே அவற்றின் முழுவிவரங்களையும் விசாரித்துக் கூற வேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டு ஒரே முறையில் அவற்றைத் தெரிந்து கூறிவிடுவான். முந்தின காரியஸ்தர் மிக்க புத்திசாலியாகையால் இவருக்கு இந்நிலைமை ஏற்பட்டது. நீ அறிவற்ற மூடனாகையால் உனக்கிது ஏற்படவில்லை. இத்தகைய முழுமகனாகிய நீ உனக்குத் தகுதியற்ற உத்தியோகத்தை விரும்பினாய். உனக்கிது பொருந் தாது'' என்று அவனைத் துரத்திவிட்டுப் பழைய காரியஸ்தரை அவ்வேலைக்கு நியமித்துக்கொண்டார். பொறாமைக்காரன் பலராலும் இகழப்பட்டு எவ்விடத்தும் சிறப்புறாதவனாய்க் கெட்டொழிந்தான்.

 

“அரவ மாட்டேல்

 

“அரவம் - (விஷமுள்ள) சர்ப்பத்தை, ஆட்டேல் - (மனிதனே ! நீ பிடித்து) ஆட்டி விளையாடாதே " என்பது இதன் பொருள்.

 

சிறு பிள்ளைகள், விளையாட்டுப் பருவத்தில், சிறுபிள்ளை பயமறியாது' என்னும் பழமொழிக்கிணங்கப் பயமின்றிச் சில சாதாரண ஜந்துக்களைப் பிடித்தாட்டி விளையாடி வருவார்கள். அந்தப் பழக்கம் சில பிள்ளைகளிடத்தில், அவர்கள் பெரியவர்களான பின்னரும் நீங்குவதில்லை. அதனால், அவர்கள் சாதாரணபிராணிகளைப் பிடித்தாட்டிய தைரியத்தைக் கொண்டு துஷ்ட ஜந்துக்களையும் பிடித்தாட்டத் தொடங்கிச் சில மந்திரதந்திரங்களால் அத் தீச்செய்கையை நடத்திப் பலரிடத்தும் காட்டித் தற்பெருமைபாராட்டி வருவார்கள். இதனால் ஒரு சமயத்தில் அவர்களுக்கு அபாயம் நேர்ந்துவிடும். அப்படி அபாய முண்டாக்குவதில் அரவம் முதன்மை பெற்றதாகும். ஆதலின், அதனை முதன்மையாகக் குறிப்பிட்டு அதன் மூலம் விடஜந்துக்களைப் பிடித்தாட்டுதல் கூடாதென்பதைச் சிறுவர்க்கு விளையாட்டுப் பருவத்திலேயே உணர்த்தி அவர்கள் அத்துர்ச் செய்கையை விட்டுவிடும்படி செய்யக்கருதி ஒளவைப் பிராட்டியார் இந்நீதியைக் கூறினார். இங்ஙனம் கூறியும், பெரியோர் உரையை அவமதித்துத் தங்கள் புத்தியின் போக்கே நேரான தென்று அகங்கரித்துத் தீநெறியில் செல்லும் சிந்தையினர் சிலர் இவ்வுயர்ந்த நீதியை உள்ளத்தில் கொள்வதில்லை. செய்யத்தகாதவற்றைச் செய்து தீமைக்குள்ளாவர். அங்ஙனம் கெட்டார் பலருண்டு. அவர்களுள் ஒருவன் சரிதையை இதனடியில் விளக்குவாம்: -

 

ஒரு கிராமத்தில் ஒருசிறுவன் சிறு ஜந்துக்களைப் பிடித்தாட்டித் தினந்தோறும் விளையாடி வந்தான். அவனுடைய செய்கையை மனிதர்கள் அதி ஈயத்தோடு பார்த்து வந்தார்கள். அவன் அவ்வாறு ஜனங்கள் தன்னுடைய செய்கையில் வியப்புறுவதை யுணர்ந்து உற்சாகங்கொண்டு நீர்ப் பாம்புகளையும், விஷமில்லாத வேறு சில பாம்புகளையும் பிடித்து விளையாடத் தொடங்கினான். அப்போது பல ஜனங்கள் அவனைப்பார்த்து, " ஆ ! இவன் பயமின்றிப் பாம்பைப் பிடித்து விளையாடுகின்றானே!'' என்று முன்னிலும் அதிக ஆச்சரியமடைந்து வந்தார்கள். மனிதர்கள் அவனை வியந்து கூறும் வார்த்தைகள் அதிகப்பட அதிகப்பட அவனுக்கு உற்சாகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அவன்,'' நாம் இன்னும் ஏதேனும் தந்திரம் செய்து கொடிய விஷமுள்ள அரவம் முதலியவற்றைப் பிடித்து ஆட்டினால், ஜனங்கள் நம்மை அதிகமாகக் கொண்டாடுவார்கள்'' என்று நினைத்து, ஒரு பாம்பாட்டியிடம் பணம் கொடுத்துப் பாம்பின் விஷத்தை நீக்கத்தக்கதும், பாம்பை வசப்படுத்தக் கூடியதுமாகிய சிறியாநங்கை யென்னும் ஒரு நற்சிலையின் வேரைவாங்கி ஒரு செப்பில் அடைத்துவைத்துக் கொண்டு அதன் உதவியால் சர்ப்பங்களைப் பிடித்து விளையாடத் தொடங்கிவிட்டான். அந்தவேரை, சர்ப்பத்தின் முகத்துக்கு நேரே காட்டினால் அது உடனே சோர்ந்து தலையைக் கீழே வைத்துப் படுத்துவிடும்; பின்னர் அதனை எடுத்து என்ன செய்தாலும் பேசாமலிருக்கும். இவ்வேரின் உதவியைக் கொண்டுதான் பாம்பாட்டிகள் சர்ப்பத்தைப் பிடித்து அதன் விஷப்பற்களைப் பிடுங்கிவிட்டு ஆட்டித் தங்கள் தொழிலை நடத்துவது வழக்கம். இவ்வாறே அவ்வாலிபன் அந்த வேரைக் கையிலெடுத்து வைத் துக்கொண்டு சர்ப்பங்களை மயக்கிப்பிடித்துக் கழுத்தில் சுற்றிக் கொள்வதும், தோளிற் போட்டுக்கொள்வதும், இடுப்பில் கட்டிக்கொள்வதுமாக, மனிதர்க்கு விளையாட்டுக்காட்டி வந்தான். ஜனங்கள் மேலும் மேலும் அவனை மகா மந்திரக்காரனென்று கொண்டாடி வந்தார்கள். ஒரு பெரியவர் மாத்திரம் அச்செய்கையில் வெறுப்புற்று ஒரு நாள் அவனிடத்தில், "இச்செய்கை ஒரு சமயத்தில் உனக்குத் தீங்கை யுண்டாக்கி விடும்; ஆதலால் இதனை நீ விட்டுவிடு" என்று சொன்னார். அவன் அதைக் கேட்கவில்லை.

 

அதன்மேல் அவன் ஒருநாள் ஒரு செடியினடியில் கிடந்த ஒரு நாகத்தைக் கண்டான்; அதுவோ மிகுந்த பசியினால் அவஸ்தைப்பட்டுக் கிடந்தது. அதைக்கண்டவுடன் அவன் அந்த வேரை யெடுத்துக் கையில் வைத்துக் கொண்டு விரைந்து போய் அதன் முகத்திற்காட்டி அதைப் பிடிக்கக் காத்தை நீட்டினான். அந்தோ! பரிதாபம்! சர்ப்பம் அந்த வேரைச் சட்டை பண்ணாமல் ஆங்காரங்கொண்டு சீறி வேகமாய்ப் பாய்ந்து அவன் கையில் இரண்டு மூன்று முறைகள் கடித்துவிட்டது; விஷம் அக்கினிபோல் அவன் உடம்பில் ஏறிற்று. அவன் மிகவும் திகிற்பட்டுக் கையில் வைத்திருந்த வேரைப் பாம்பு கடித்த விடங்களில் வைத்துத் தேய்த்தான்; வாயிலிட்டு மென்று தின்றான். ஏறினவிஷம் இறங்கவில்லை. அவனுடைய தலைக்கேறி விட்டது. சிறிதுநேரத்திற்குள் அவன் பிரேதமாகிவிட்டான்.

 

இவனிடமிருந்த வேர், விஷத்தை நீக்கக்கூடிய தென்பதை இவனோடு பழக்கமாயிருந்த வேற்றூர் மனிதன் உணர்ந்து ஒருநாள் இவனிடம் வந்து அதைக் கேட்டான். இவன் அதைக் கொடுக்கமாட்டேனென்று சொல்லி விட்டான். அதனால் வேற்றூர்மனிதன் 'இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும்' என்று இவன் தூங்கும் சமயம் பார்த்துச் செப்பிலிருந்த அந்த வேரை யெடுத்துக்கொண்டு, அதைச் சும்மாவைத்தால் இவன் தன்மீது சந்தேகப்படுவானென்று அந்த வேர்போன்ற வேறொரு வேரை அதில் வைத்துவிட்டுப் போய்விட்டான். இவன் அந்த உபயோகமற்ற வேரைத் தன்னுடைய விஷசஞ்சீவியென்று நினைத்து எடுத்துக்கொண்டு பாம்பைப் பிடிக்கப் போனபடியால் அஃதடங்காமல் இவனுடைய உயிரைப் போக்கி விட்டது. இதனால், துஷ்டஜந்துக்களைப் பிடித்து விளையாடுவோர்க்கு எச்சமயத்திலேனும் நிச்சயமாக ஆபத்துண்டாகுமென்பது விளங்கும்.

 

“இலவம் பஞ்சிற்றுயில்.

 

''இலவம் பஞ்சில் - இலவம் பஞ்சினாலாகிய மெத்தையிலே, துயில் - நீ நித்திரை செய்" என்பது இதன் பொருள்.

இலவம் பஞ்சானது, மனிதர்க்குச் சரீர சௌக்கியத்தையுண்டாக்கக் கூடியது. அதனால் மெத்தை செய்து மனிதர் அதன்மீது படுத்து நித்திரை செய்து வந்தால் தேகாரோக்கிய முடையவர்களாயிருப்பார்கள். இக்காரணத் தாலேயே பண்டைக்காலந் தொட்டு மனிதரால் இது படுக்கைக்கின்றியமை யாததாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. ஆதலின், மனிதர் தங்களுக்குச் சக்தியிருக்குமானால் பெரும்பான்மையும் இலவம்பஞ்சு மெத்தையையே சயனத்துக்கு யோக்கியமாகக் கொள்ள வேண்டுமென்பது விளங்குமாறு இவ்வரிய நீதியை ஒளவைப்பிராட்டியார் கூறினார். இதனை யுணர்ந்தவர்களுள், இலவம் பஞ்சு மெத்தை செய்து கொள்ளச் சௌகரியமுடையவர்கள் அதையே செய்து படுக்கைக்கு உபயோகித்து வருகின்றனர்; சக்தியில்லாதவர்கள் அது போன்ற வேறு பலவற்றைச் செய்து உபயோகிக்கின்றார்கள். பெரியோர் உரையை அவமதிக்கும் விபரீத புத்தியுடைய சிலர் மட்டும் குறுக்கு வழிகளில் இறங்கிப் படுக்கைக்குத் தகாதவற்றை உபயோகித்து அவஸ்தைக்குள்ளாவதுண்டு. அத்தகையாருள் ஒருவர் கதையை இங்கு விளக்குவாம்:

 

ஒரு நகரத்தில் செல்வத்திற் சிறந்த ஒருவர் இருந்தார். இவர் தாமாக எதையும் சம்பாதிக்கவில்லை; இவரிடத்தில் பொருள் தேடும் ஆற்றலும் அறிவும் இல்லை; இவருக்கு எவ்வகைக் கல்வியிலும் பூரண ஞானமில்லை; சுய பாஷையில் கொஞ்சமும், அன்னிய பாஷையிற் கொஞ்சமும் தெரியும். எனினும் இவர் எவற்றிலும் தற்பெருமையுடையவர்; பெரியார் உரையை அவமதிப்பவர்; தம் மனம் போனவாறே நடப்பவர்; பிறர் சொல்லும் எதற்கும் மறுப்பே கூறும் வழக்கமுடையவர்; நாகரிக மயக்கத்தால் மனிதர்க்குப் பொருந்தாதவற்றை யெல்லாம் செய்யும் புத்தியுடையவர்.

 

இவர் ஒரு சமயத்தில் ஊர்ப்பிரயாணம் புறப்பட்டுப்போகும் போது ஒரு
எருக்கங்காட்டினடுவிற் சென்றார். அப்போது எருக்கங்காய்கள் பழுத்துக் காய்ந்து வெடித்து அவற்றிலிருந்து விரையுடன் சேர்ந்த ஒருவிதமான பஞ்சு வெளிப்பட்டுக் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அதை அவர் கையிலெடுத்துப் பார்த்தார்; அஃ திலவம்பஞ்சைக் காட்டினும் மென்மையுடையதாயிருந்தது. அதைக் கண்டவுடன், அவர், தம்முடன் வந்த விவேகி யொருவரிடத்தில், ''இதனால் மெத்தை செய்தால் இலவம்பஞ்சு மெத்தையைக் காட்டினும்
மிருதுவுள்ளதாயிருக்கும்'' என்று சொன்னார். அதற்கந்த விவேகி, "அது உடம்பிற்குக் கெடுதி செய்யும்" என்று சொன்னார். தனவந்தர், பிறர் கூறும் புத்திகளை எடுத்துக் கொள்ளா இயல்பினையுடையவராதலின், அவர் வார்த்தையைத் தடுத்து, "ஓ ! நான் உலக அனுபவ ஞானமுள்ளவன்; எனக்கெல்லாம் தெரியும்; மென்மையான வஸ்து எதுவாயிருந்தாலும் உடம்பிற்குக் கேடு செய்யாது'' என்று தற்பெருமை பேசி ஒரு வண்டி நிறைந்த எருக்கங் காய்களைச் சேகரித்துக்கொண்டு போய் அவற்றிலிருந்த பஞ்சை யெடுத்து அதனால் மெத்தை செய்து போட்டுப் படுத்துக்கொண்டார். அவர் மிகுந்த சுகவாசியா யிருந்தபடியால், எருக்கம்பஞ்சின் வெப்பம் அவருடைய உடம்பில் வியாபிக்கவே சில தினங்களில் கண்கள் பொங்கிவிட்டன; வாயும், நாவும், தொண்டையும் வெந்து இரணமாகிவிட்டன; வயிற்றிலும் அழலை அதிகரித்துச் சீதபேதி யுண்டாய்விட்டது.

 

அவர் சங்கடப்பட்டு "இதென்னடா இழவு! உடம்பு வேக்காடாகிவிட்டது!" என்று ஒரு வைத்தியரை அழைத்து அவரிடம் தம்முடைய வியாதியின் விருத்தாந்தத்தைக் கூறினார். அவர் அதற்குத் தக்க மருந்து கொடுத்தார். பிரபு தினந்தோறும் அந்த மெத்தையிலேயே படுத்துக்கொண்டிருந்த படியால் அம் மருந்தினாலும் அவ்வெப்பம் தணியவில்லை. அதைக்கண்டு வைத்தியர், சந்தேகங்கொண்டு "தாங்கள் நூதன வழக்கமெதையேனும் கைக் "கொண்டிருக்கிறீர்களோ?'' என்று அவரிடம் கேட்டார். அதற்குப் பிரபு, "நான் கெட்ட வழக்கமொன்றுஞ் செய்யவில்லை; எருக்கம்பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டு வருகிறேன்" என்று சொன்னார். உடனே வைத்தியர், ''ஐயோ! அது சாதாரண மனிதர்க்கு அதிக வெப்பத்தை உண்டு பண்ணக் கூடியது; ஆதலின் நீங்கள் அதனை நீக்கிவிட்டால் மாத்திரந்தான் உங்களுடைய உடற்சூடு தணியும்" என்றார். அதன்மேல் தனவந்தர், எருக்கம்பஞ்சு மெத்தையைத் தள்ளிவிட்டு இலவம்பஞ்சு மெத்தையில் படுத்தார்; வியாதி நீங்கிற்று.

 

“வஞ்சகம் பேசேல்

 

"வஞ்சகம் - கபடமான வார்த்தைகளை, பேசேல் - (நீ) பேசாதே'' என்பது இதன் பொருள்.

 

ஒருவன் பிறரிடத்துப் பேசுங்காலத்தில், மனத்திலுள்ளதை மறைக்காமல் உள்ளபடி வெளியிட்டுப் பேசவேண்டும். அங்ஙனம் பேசுவார்க்கு எவ்விடத்தும் நன்மதிப்புண்டு; சௌக்கிய மேற்படும். அவர் ஒரு சமயம் ஒருவர்க்குக் குற்றம் புரியினும் அவரால் அத்தவறுதல் மன்னிக்கப்படும். அவர் செய்யும் காரியங்களில் எப்பொழுதும் வெற்றி யடைவர்; விரும்பியதைப் பெறுவர்; மனச் சஞ்சலமின்றி மகிழ்ச்சியுற்று வாழ்வர். இவரைப்போல் வஞ்சனையற்ற வார்த்தைகளைப் பேசாமல் மனத்திலொன்றும் வாக்கிலொன்றுமாகக் கபடம் பொருந்திய சொற்களைப் பேசுவோர், பலராலும் "கபடிகள், பொய்யர் " என்று இகழப்படுவர்; அவர்கள் எவ்வளவுதான் ஒன்றை உள்ளே மறைத்துக்கொண்டு பேசினாலும் அவர்களுடைய கபடச்செய்கை சில தினங்களிலேனும் வெளிப்பட்டு விடும்; அறிவுடையார்க்கு அவர்கள் பேசும் பொழுதே முகக்குறியால் அது வெளியாகிவிடும். அதனால் அவர்களை எவரும் நல்லோராக மதிக்கமாட்டார்கள்; அவர்களுக்கு எவ்வித நன்மையும் புரியமாட்டார்கள்; எல்லோரும் விரோதிகளாவர்; பலராலும் அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள்; இம்மை, மறுமை இரண்டிடங்களினும் சகம்பெறமாட்டார்கள்.
 

வஞ்சகம் பேசுவோருடைய இயல்பு இப்படியிருந்தும் உலகத்தில் பலர் அக்குணத்தை விடுவதில்லை: சிலர் கௌரவமடையக் கருதியும், சிலர் பிறரை ஏமாற்றும் பொருட்டும், சிலர் பகைகுறித்தும், சிலர் விவேகமின்றி வீணாகவும் மனத்தி லொன்றை மறைத்து வைத்துக் கொண்டு வெளியிலொன்று பேசி வெட்கமுந் துக்கமுமடைகின்றார்கள். அத்தகையினருள் ஒருவர் கதையை இதனடியில் குறிப்பிட்டு இதன் இயல்பினை விளக்குவாம்

 :

ஒரு கிராமத்தில் விகற்ப புத்தியுடைய வாலிபனொருவனிருந்தான். அவன், எப்பொழுதும் எவ்விடத்தும் கபடமான வார்த்தைகளையே பேசிவருவான்; அவனிடத்தில் வேற்றூரா ரொருவர், " தாங்களிருப்பது எந்த வூர்?'' என்று கேட்டால், அவன் தன்னுடைய ஊரின் பெயரைச் சொல்லாமல் மற்றொரு ஊரின் பெயரைச் சொல்லுவான்; அவனுடைய ஜாதியைக் கேட்டால், தன் குலத்தை மறைத்து வேறொரு குலத்தைக் கூறுவான். அவன் பசித்திருக்கும் போது, அவனுடைய சுற்றத்தாரொருவர் அவனைப் பார்த்து, 'கொஞ்சம் உண வருந்துகிறீரா?' என்று கேட்டால், அவன் உடனே அதற்கிணங்கிவிட்டால் தன்னுடைய பெருமை கெடுமென்று நினைத்துப் பசியையும் அடக்கிக் கொண்டு, 'எனக்குப் பசியில்லை' என்று சொல்லிவிடுவான்; இப்படியே அவன் ஒவ்வொரு காரியத்திலும் பேசுவது வழக்கம். இந்த வழக்கத்தை வைத்துக்கொண்டிருப்பதே தனக்குப் பெரிய பத்திசாலித்தனமென்று அவன் தற்பெருமை கொண் டிருந்தான்.

 

அவனுக்கு அடுத்த வூரில் மாமியார் வீடிருந்தது. ஒரு சமயம் அவன் மாமியார் வீட்டிற்குப் போயிருந்தான். அப்போது ஒருநாள் அவனுடைய மாமியார் எள்ளை வறுத் திடித்து அதனுடன் வெல்லம் சேர்த்து ஒருவித உண்டைப் பலகாரம் செய்தாள். அவளுடைய புத்திரன், தன் வீட்டிற்கு விருந்தினனாக வந்த மைத்துனனுக்கு அந்த எள்ளுப் பலகாரத்தில் கொஞ்சம் கொடுத்தான். அது மிக்க மணமாயிருந்தபடியால், விருந்தினனுக்கு அதைத் தின்ன அதிக விருப்பமுண்டாயிற்று. எனினும் அவன், தான் அதைத் தின்றால் அங்குள்ளவர்கள் தன்னை நாகரீகமில்லாதவனென்று பரிகசிப்பார்களென்றும், தான் மிகுந்த நாகரீகமுள்ளவனாகக் காட்டிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்து, ஆசையை மனத்தில் அடக்கிக்கொண்டு, மைத்துனனிடத்தில், "இந்த அநாகரீக எள்ளுண்டையை நான் தின்னமாட்டேன் " என்று சொல்லி அதை மறுத்துவிட்டான். அங்குள்ளவர்கள், " இவர் நாகரீக முள்ளவராகையால் இதைத் தள்ளிவிட்டார்'' என்று, அதனைத் தின்னுமாறு அவனைக் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

 

அதன்மேல் அன்றிரவு தீபம் வைக்கும் நேரத்தில் அவ்விருந்தினன் வெளியிற்சென்று திரும்பிவந்தான். அப்போது நடையில் வெளிச்சமில்லாமல் இருட்டாயிருந்தது. அங்கே என் இடிக்கப்பட்ட உரல் இருந்தபடியால் எள்ளின் மணம் கமகமவென்று வீசிக்கொண்டிருந்தது. அங்கே அவன் வந்ததும் அந்த வாசனை நாசியைத் துளைத்தபடியால், அதில் மிக்க ஆவல் கொண்டு ''அடடா! மைத்துனன் அதைக் கொடுத்தபோது நாம் தின்னாமல் விட்டுவிட்டோமே; இப்போது எள்ளிடிக்கப்பட்ட இந்த உரலையாவது நக்கி ஆசை யைத் தணித்துக்கொள்வோம்'' என்று உடனே உரலில் தலையை நுழைத்துக் கொண்டு நக்கினான். அத்தருணத்தில் அவனுடைய மைத்துனன் அங்கே வந்த படியால், அவன் குனிந்திருந்த தோற்றத்தை நாயென்று நினைத்துச் சந்தடி செய்யாமல் ஒரு தடியை யெடுத்து அதனால் ஓங்கி அவன் முதுகில் ஓர் அடி அடித்தான். " அவன் "ஐயோ!'' என்று கத்திக்கொண்டு நிமிர்ந்தான். அடித்தவன், தன் மைத்துனனே அடிக்கப்பட்டான் என்று அவனுடைய செய்கையையும் உணர்ந்து ஒரு பக்கம் சிரிப்பும், மற்றொரு பக்கம் விசனமுங் கொண்டு அவனுக்குப் பரிவான வார்த்தைகளைக் கூறி அவனை உபசரித்தான். பின்னர், அடியுண்டவன் அதுமுதல் கபடவார்த்தை கூறுவதை விட்டொழித்தான்.

 

“அழகலாதன செயேல்

 

“அழகு அல்லாதன் - அழகில்லாதனவாகிய செயல்களை (அதாவது இழிவான செய்கைகளை), செய்யேல் - (நீ) செய்யாதே' என்பது இதன்பொருள்.

 

மனிதராய்ப் பிறந்தோர் எப்பொழுதும், எந்நிலையிலும் புகழ்ச்சிக்குரி காரியங்களையே செய்து வரவேண்டும். அங்ஙனம் செய்துவருவதனால் அவர்க்கு இவ்வுலகத்திற் புகழும் மேலுலகத் தின்பமும் கிடைக்கும். இழிவான காரியங்களைச் செய்வோர் இம்மையில் அபகீர்த்தியையும், மறுமையில் நரக துன்பத்தையும் அடைவர். இவற்றை அடியில் வரும் கதை விளக்கும்: -

 

ஒரு நகரத்தில், வழிவழியாகச் சிறப்புடன் நிலைபெற்று வந்த பெரிய குடும்பத்தில் பிறந்த வரதையா என்ற ஒருவர் செல்வத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த பணக்காரராயிருந்த படியால் பலரும் அவரிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையால் அந்நகரத்திலுள்ள ஒவ்வொரு வரும் தங்கள் தங்கள் ஆபாணம், பணம் முதலியவற்றை அவரிடம் பாதுகாப்புக்காகக் கொடுத்து வைத்திருந்து மீண்டும் வாங்கிக்கொள்வது வழக்கம். இத்தகைய உயர்விலிருந்த அவருக்குக் கெட்டகாலம் கிட்டிவிட்டது. அதனால் அவருடைய செல்வமுற்றுங் குறைந்து போயிற்று. அவரிடத்தே மிக்க வறுமை உண்டாயிற்று. வறுமைத் துன்பத்தை அவர் பொறுக்க முடியாதவராயினார். உணவு கிடைக்காமல் உள்ளங் கலங்கினார். பழய நண்பர்களிடம் ஏதாவது பெற்றுக் குடும்பகாரியத்தை நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டார்.

 

இவ்வாறு அவர் குடும்பம் நடத்தி வரும் போது ஒரு செல்வந்தர் அவருக்கு மிக்க உதவி புரிந்து வந்தார். அதனால் அவர், அத்தனவந்தரிடம் தினந் தோறும் போய் வார்த்தையாடிக் கொண்டிருந்து செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு வருவார்; ஒருநாளாவது அவருடைய வீட்டில் இல்லாமலிருக்கமாட்டார். வரதையா என்பவர் முன் பணக்காரராய்க் கௌரவம் பெற்றிருந்ததை உத்தேசித்து, தனவந்தர் அவர்மீது மிக்க நம்பிக்கை யுடையவராய் அவர் இருக்குமிடத்தில் எதையும் நம்பி வைத்துவிட்டுப் போகும் வழக்கத்தை மேற் கொண்டிருந்தார்.

 

இப்படியிருக்கும் போது ஒருநாள், வரதையா வந்து அத்தனவந்தருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அத்தனவந்தர், தம்முடைய விரலில் அணிந்திருந்த உயர்ந்த வைரமோதிரத்தைக் கழற்றித் தாமிருந்த இடத்தில் வைத்துவிட்டு எண்ணெய் தேய்த்து ஸ்நானம் பண்ணப் போனார். அவ்விடத்தில் வரதையா ஒருவர் மாத்திரமிருந்தார். அப்போது அவருக்கிருந்த வறுமையால் பல விபரீத எண்ணங்களுதித்தன. அவர், "நாம் தினந்தோறும் இந்த வீட்டுக்காரரிடம் கெஞ்சிப் பிச்சை வாங்குவதைக்காட்டினும் இந்த மோதிரத்தை அபகரித்துக் கொண்டு போய்விட்டால் விற்று அதிகப் பணம் வாங்கிப் பலதினங்கள் வரை கஷ்டமின்றிக் காலந்தள்ளலாம்; நாம் இதைத் திருடிவிட்டாலும் பிரபு நம்மீது சந்தேகங்கொள்ளமாட்டார்; நாம் கௌரவத் திருட்டாகத் திருடிவிட்டு, இங்குள்ள வேலைக்காரர்களுள் ஒருவன் தலைமீது அக் களவைச் சுமத்திவிடலாம்'' என்று ஒரு தீர்மானஞ் செய்தார். அவருடைய தீர்மானத்திற் கனுகூலமாக மெய்யன் என்ற வேலைக்கார னொருவன் அந்த அறைக்குள் பன்முறை வந்து போய்க் கொண்டிருந்தான். அவர், 'சரி; இவன் அடிக்கடி இங்கே வருவதால் நாம் திருட்டுக்குற்றத்தை இவன் தலை மீது சுமத்த ஹேதுவுண்டாய்விட்டது; இனிக் கூசாமல் இக்களவை நடத்தலாம்' என்று துணிந்து விரைவாக அம்மோதிரத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டார். யாரேனும் திடீரென்று வந்து விடுவார்கள் என்ற அச்சம் அவருக்குண்டானபடியால், அதை வேறிடத்தில் மறைத்து வைக்க வேண்டு மென்னும் துணிவு ஏற்படவில்லை. நெஞ்சு படபடவென் றடித்துக் கொண்டிருந்தது.

 

பெரியவர் இவ்வாறு மனக்கலக்கத்துடன் பூனை போல் விழித்துக் கொண்டிருக்கும் போது பிரபு தலை முழுகிவிட்டுத் திரும்பி வந்து மோதிரம் காணப் படாமலிருக்கவே, திடுக்கிட்டு, '' இங்கே யிருந்த மோதிர மெங்கே?'' என்று வரதையாவின் முகத்தைப் பார்த்தார். ஆனால், அவர்மீது சந்தேகங் கொள்ள வில்லை. அவர், "ஐயோ! நான் இவ்விடத்திலேயே தான் இருக்கிறேன்; அஃ தெப்படிப் போய்விடும்! மெய்யன் தான் அடிக்கடி வந்து கொண்டிருந்தான்; அவன் செய்த வேலைதான் இது " என்று அவன் தலைமீது பேரிடியை வீழ்த்தினார். மெய்யனோ மகாசத்திய வந்தன்; நெடுங்காலமாக நம்பிக்கையுடன் அப்பிரபுவிடம் வேலைக்கிருப்பவன். அப்படியிருந்தும், வாதையா செய்த சூழ்ச்சியால் அவனே திருடியிருப்பானென்று பிரபு நம்பிவிட்டார். உடனே கோபத்துடன் மெய்யனைக் கூப்பிட்டு, "அடே! இதுவரை எனக்கு உன் நம்பிக்கையை நீ கெடுத்துவிட்டாய்; பேசாமல் மோதிரத்தைக் கொடுத்து விடு " என்றார். மெய்யன் மனம் பதறி, '' இதென்ன பெரிய அனியாயமா யிருக்கிறது! நான் மோதிரத்தைக் கண்ணாற் கூடப் பார்க்கவில்லையே'என்று கதறினான். அங்கே பலரும் வந்து கூடிவிட்டார்கள். அப்போது வஞ்சக முள்ள வரதையா, மிக்க நாணயமுடையவர் போல் கோபித்தெழுந்து மெய்யனுக்கு முன்னே நின்று,'' மெய்யா! நீ பொய்யனாகிவிடாதே; நானிருக்கும் போதே அதை யெடுத்துவிட்டு இப்படிச் சாதிக்கிறாயே; உள்ளதைச் சொல்லா விட்டால் நானே உன்னை உதைப்பேன்" என்று கையை ஓங்கி ஓங்கி நிமிர்ந்து பேசினார்.

 

ஐயோ! அவருடைய இந்திரஜாலம் அப்பொழுதே வெளியாய்விட்டது. அவர் கையை நீட்டி நீட்டிப் பேசினவுடனே அவர் மடி தளர்ச்சியா யிருந்தபடியால் மோதிரம் நழுவிப் பொத்தென்று கீழே வீழ்ந்தது. எல்லோரும், ''இவர் மகாயோக்கியர்! பூரண சிலாக்கியர்! மோதிரத்தைத் தாமே பதுக்கி விட்டு மெய்யனைப் பொய்யனாக்கப் பார்த்தாரே!'' என்று கைகொட்டிச் சிரித்தார்கள். வரதையா வெட்கத்தால் தலை குனிந்து விட்டார். பிரபுவுக்கு அவர் மீது அளவில்லாத வெறுப்புண்டாய் விட்டது. அவர் வாதையாவை நோக்கி, 'உமக்கு நான் தினந்தோறும் சகாயம் செய்து கொண்டு வந்தும் அதை மறந்து நீர் எனக்குத் துரோகம் செய்ய நினைத்தீரே, உமக்குக் கடவுள் துணை செய்வாரா " என்று கூறினார். அன்று முதல் வரதையாவின் பிழைப்புக் கெட்டது. பலரும் அவரை நிந்தித்தார்கள்; மறுமையிலும் அவர் சுகம்பெறவில்லை.

 

"இளமையிற் கல்."

 

“இளமையில் - இளமைப் பருவத்திலேயே, கல் - (மனிதனே! நீ) கல்வியைக் கற்றுக்கொள்'' என்பது இதன் பொருள்.

 

மனிதர்க்குக் கல்வியே எல்லா நலங்களையுந் தரவல்லது; இம்மை மறுமைப் பயன்களைக் கொடுக்கக்கூடியது. கல்வி கற்றவர்களே எத்தேயத்தும், எக்காலத்தும், எல்லோராலும் கொண்டாடப்படுவார்கள்; மன்னர்க்குத் தம் தேயத்தில் மட்டுமே சிறப்புண்டு; கல்வி கற்றார்க்கு எந்நாட்டிலும் சிறப்புண்டு. கல்வியறிவுடையார் அரசரினும் மேம்பட்டவராவர்; கல்லாதவர்கள் செல்வ மிக்காராயினும் சிறப்புறார். ஆதலின், எல்லோரும் கல்வியைக் கற்றுக்கொள்ளல் வேண்டும். மனிதர்க்கு அது நிரம்பக்கூடியகாலம் இளமைப்பருவமே யாதலின், அங்ஙனம் கல்விபயில விரும்புவோர் அவ்விளம்பிராயத்திலேயே அதனைக் கற்க முயலல் வேண்டும்; அவ்விளமையை விட்டு முதுமையில் முயலின் அதனை அடைதல் அருமையாம். மனிதரின் இளம்பருவத்தில் அறிவு, வணக்கமும் மென்மையுமுடையதா யிருக்குமாதலின் அதில் கல்வி யுணர்ச்சி எளிதிற் பதிந்துவிடும்; முதுமையில் அவ்வறிவு வணக்க மின்மையும் வன்மையும் பெற்றிருக்குமாதலின் அதில் அவ்வுணர்ச்சி அமைதல் இயலாது. இவற்றைக் குறித்தே, "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' என்ற பழமொழியும் வழங்குகின்றது. இங்ஙனம் இளமையிற் கற்றார் சிறப்புறுவர் கல்லார் இழிவுறுவரென்பதை அடியில் வரும் கதை விளக்கும்: -

 :

ஒரு கிராமத்தில், ஒருவர் கிராம முன்சீபு வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரே புதல்வனிருந்தான். அவன் ஏக புத்திரனாதலின், அவரால் அருமையாக வளர்க்கப்பட்டான். அவன் கல்வி கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர், அவனை, இளமைப்பருவத்திலேயே பாடசாலைக் கனுப்பினார். அவன் செல்வத்துடன் வளர்ந்துவந்தானாதலின், உயர்ந்த வுணவுகளை யுண்பதில் புத்தியைச் செலுத்தி வந்தானேயன்றிப் படிப்பில் செலுத்தவில்லை. அதனால் அவனுக்குக் கல்வியறிவு சிறிது முண்டாகவில்லை. அவன் சிறு வயதாயிருக்கும் போதே அவனுடைய தந்தை இறந்துவிட்டார். குடும்பபாரம் அவனைச் சார்ந்துவிட் டது. அவ்வாறு அவன் குடும்பத்தை யேற்று நடத்தும்போது கையெழுத்தும் போடத் தெரியாதவனாயிருந்தான். அந்நிலையில் அவன் எழுதப் படிக்கத் தெரியாதவனா யிருக்கிறானென்பதை, மேலதிகாரிகள் உணராமலே அவன் தந்தை உத்தியோகத்திற்கு அவனை நியமித்து விட்டார்கள். கிராமவாசிகளுக்குக் கிராமப் பெரியதனம் பார்ப்பதில் நல்ல மதிப்புண்டு. அந்த மதிப்புக்காக அவன், எப்படியாவது தந்திரம் செய்து அந்த உத்தியோகத்தைப் பார்க்கலாமென்று ஏற்றுக்கொண்டு, எழுதப்படிக்கவாவது சிறிது கல்வி கற்றுக்கொள்ளலாமென்று முயன்று பார்த்தான். அதில் எவ்வித பயனு முண்டாகவில்லை. முடிவில் மிக்க பிரயாசை யெடுத்து உத்தியோகத்திற்குக் கையெழுத்து மாத்திரம் போடத் தெரிந்துகொண்டான். அதன்மேல், கல்விகற்ற சில வாலிபர்களைச் சிநேகிதராக்கிக் கொண்டு, தாசில்தாரிடமிருந்து தனக்குவரும் உத்தரவுகளை அவர்களிடம் காட்டி அவற்றிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டும், அவற்றிற்கு விடையான ரிப்போர்ட்டுகளை அவர்களைக்கொண்டே எழுது வித்து அவற்றில் கையெழுத்திட்டுக் கச்சேரிக் கனுப்பியும் தன்னுடைய கிராம முன்சீப் வேலையை நடத்தி வந்தான்.

 

அப்போது, அவனுடைய சிநேகிதருள் முனியன் என்ற ஒரு மோசக்காரன் அந்தக் கிராம முன்சீப் வேலையைத் தான் அடைய விரும்பி அதற்குரிய சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியிருக்கும் போது கிராம முன்சீபுக்கு ஒருவாரம் லீவ் தேவையாயிருந்தது. அதனால் தனக்காக மேல் அதிகாரிக்கு ஒரு லீவ் லெட்டர் எழுதித் தரும்படி அந்த மோசக்காரச் சிநேகனிடம் தெரிவித்தான். அவன், தான் உத்தேசித்ததை நிறைவேற்றுதற்கு இதுதான் தருணமென்று, "எனக்குக் கிராம முன்சீப் வேலை தேவையில்லை; இவ்வேலையை என் நண்பன் முனியனுக்குக் கொடுத்துவிடுமாறு நான் வேண்டுகிறேன்'' என்று ஒரு கடிதமெழுதிக் கிராமமுன்சீபிடம் கையெழுத்து வாங்கி அதை மேலதிகாரிக்கு அனுப்பிவிட்டான். இரண்டு தினங்களுக்குள் மேலதிகாரி முனியனைக் கிராமப் பெரியதனக்காரனாக நியமித்து அதற்குரிய உத்தரவை அவனுக்கனுப்பி விட்டார். முனியன் அவ்வுத்தரவைப் பெற்றவுடன் கிராம முன்சீபிடம் போய், " உன் வேலையை அதிகாரி எனக்கே கொடுத்து விட்டார்'' என்று கூறினான். கிராம முன்சீப் திடுக்கிட்டு உடனே அதிகாரியிடம் விரைந்தோடி, " என்மீது குற்றமில்லாதிருக்கும் போது என்வே லையை முனியனுக்கு என் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டான். அதிகாரி, ''நீயே வேலைதேவையில்லை யென்று கடிதமெழுதி யிருப்பதால் நாம் உன்னை அவ்வேலையினின்று நீக்கிவிட்டோம்'' என்றார். கிராமமுன்சீப் "ஐயோ! நான் அப்படி எழுதவில்லையே; லீவுக்கல்லவோ எழுதியிருந்தேன்'' என்றுரைத் தான். அதிகாரி அவனால் எழுதப்பட்ட கடிதத்தை யெடுத்து அவனிடம் கொடுத்து " இதிலுள்ள கையெழுத்து உன்னுடையது தானா?'' என்று கேட்டார். அவன், 'ஆம்' என்றான். இதைப்படி, என்று அதிகாரி உரைத்தார். அவன் படிக்கத் தெரியாதவனாதலின் அதைக் கையில் வைத்துக்கொண்டு பேசாமல் நின்று விழித்தான். அவனுடைய கல்வியறிவில்லாத் தன்மையை அதிகாரி தெரிந்து கொண்டார். அதனால் அவர் கோபங்கொண்டு 'நீ படிப் பில்லாமலே மோசமாக நம்மை ஏமாற்றி வேலை பார்த்து வந்திருக்கிறாய்; எனினும் இக்குற்றத்தை நான் மன்னித்துக் கொள்கிறேன்; நீ இனிவேலையை விரும்பாதே'' என்று சொல்லிவிட்டார். அவன் அவமானமுற்றுத் திரும்பினான். அவன் இளமையிற் கல்லாததனால் அடைந்த மானக்கேடு இது.

 

“அறனை மறவேல்.

 

"அறனை - தருமத்தை, மறவேல் (மனிதனே! நீ ஒருபோதும்) மறவாதே'' என்பது இதன் பொருள்.

     

மனிதர்க்குத் தருமமானது, இம்மையில் புண்ணியத்தையும், புகழையும், செல்வத்தையும், இன்பத்தையு முண்டாக்கி, மறுமையில் சுவர்க்காதி சுகங்க ளையும், என்றுமழியாப் பேரின்பத்தையும் தரக்கூடியது. இதனை இவ்வுலகத் தில் செய்வோர் இத்தகைய இன்பங்களை யடைவர்; இதனை மறந்து கைவிடு வோர் பலராலும் இகழப்பட்டுத் தீயகதிகளுட் புகுந்து துன்புறுவர். இவ் வாறு தருமத்தை மறந்தோர் சங்கடத்திற்குள்ளாவரென்பதை அடியில் வரும் கதை விளக்கும்:

 

பண்டைக்காலத்தில், ஒரு நகரத்தில், வியாபாரி ஒருவர் இருந்தார். அவருக்கு வியாபாரத்தோடு விவசாயம் முதலிய வேறு சில தொழில்களுமுண்டு. அவற்றில் நல்ல வரும்படி கிடைக்கும். அவ்வாறு பொருள்வரவு இருந்தும், அவர், தருமகாரியங்களில் சிறிதும் செலவழிப்பதில்லை; சாப்பாட்டு விஷயத்திலும் அதிகச் செலவு செய்ய மாட்டார்; பிச்சைக்காரரைக் கண்டால் பேசாமல் உள்ளே போய் மறைந்து கொள்வார். யாரேனும்,'பணத்தை நல்ல மார்க்கத்தில் செலவிட வேண்டும்' என்று அவருக்குத் தருமோபதேசம் செய்தால், அவர், " இது, கருநாடகத்துப் பைத்தியக்காரர்கள் பேசும் உபயோகமற்ற வார்த்தை; கையிலுள்ளதைச் செலவழித்து விட்டால் அதனால் நமக்கென்ன இலாபம்? மனிதர் தமக்குக் கிடைப்பவைகளைச் சேர்த்துப் புதைத்து வைத்தாலல்லவா அவற்றால் பின்னர் சுகம் பெறுவார்கள்'' என்று தம் மனப்போக்கிற்குத் தக்கபடி பேசுவார்.

 

இப்படியே அவர், பேசிக்கொண்டு, தம் வயிற்றுக்கும், தம்மைச் சார்ந்தவர் களுக்கும் அரைச்சாப்பாடு, கால் சாப்பாடு போட்டுப் பல வருஷங்கள் வரை சேர்ந்த பணங்களை யெல்லாம் ஒன்றாகத் திரட்டி அவற்றிற்குத் தங்கம் வாங்கி உருக்கி ஒரே உருண்டையாகச் செய்து ஒருவருக்கும் தெரியாமல் இரகசிய மாக ஓரிடத்தில் புதைத்துவைத்து விட்டு, அவ்வாறு புத்திசாலித்தனமாகத் தாம் குறித்த காரியத்தை நிறைவேற்றியதற்கு அகமகிழ்ந்திருந்தார். அவர் உருட்டிப் புதைத்த தங்கம் ஒரு விளாங்காய்ப் பிரமாணமிருந்தது. அவர், அடிக்கடி, தங்கம் புதைக்கப்பட்ட இடத்திற்குப் போவதும், "நம்முடைய தங்க உருண்டை இங்கே யிருக்கிறதல்லவா! " என்று ஆனந்தசாகரத்தில் மூழ்குவதுமா யிருந்தார்.

 

அவ்வாறு மகிழ்ந்து வந்த அவருக்குத் திடீரென்று நுரையீரல் வீங்கி இளைப்பு வியாதி உண்டாகிவிட்டது. அவர், படுக்கையில் படுத்துவிட்டார்; படுத்தும் தமக்குச் சாவு வருமென்று நினைக்கவேயில்லை; இரண்டு மூன்று தினங்களுக்குள் சௌக்கியமாகி எழுந்து விடலாமென்று நினைத்திருந்தார். அவர் எண்ணம் பலிக்கவில்லை. நாள் எட்டாகியும் ஆசாமி எழுந்திருக்க வில்லை. நாளாக நாளாக அவர் பிழைப்பது அரிதாய் முடிந்து விட்டது; எலும்புந் தோலுமாய்விட்டார்; அவருக்கு நாவும் ஒடுங்கிப் போயிற்று. அதுவரை அவர், புதைத்துவைத்த தங்க உருண்டையை எவருக்கும் வெளிப்படுத்தாமலே யிருந்தார். அதன் மேல், அவருக்கே, தாம் பிழைப்பது முடியாதென் பது விளங்கிவிட்டது. அப்போதுதான், அவர், அதைத் தம் மனைவிக்காவது சொல்லலாமென்று நினைத்தார். அத்தருணத்தில் அவருடைய மனைவி, கால் மாட்டில் கண்கலக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள். அவர், அவளிடத்தில், தங்க உருண்டை புதைத் துவைத்த இடத்தைச் சொல்லுதற்கு வாயைத் திறந்து பார்த்தார். கொஞ்சங் கூடப் பேசமுடியவில்லை. அவ்வாறு அவர், பேச முயன்று சிரமப்பட்டதால் அவருக்கு விக்கலெடுத்துக் கொண்டது.

 

விக்கலுண்டாகவே அவர், மெத்தவுந் துக்கப்பட்டு, "ஐயோ! நாம் அரும் பாடுபட்டுச் சேர்த்து வைத்த தங்கக்கட்டி யாருக்கு முதவாமற் போய்விடுமே; அதை நாம், மனைவிக்குச் சொல்லலாமென்றாலும் வாய் வரவில்லையே; முந்தியே சொல்லாமற் போய்விட்டோமே; இப்போது கையினாலாவது அதற்கு ஜாடை காட்டலாம்'' என்று நினைத்து, மனைவியின் முகத்தை மனக்கலக்கத்தோடு பார்த்து, விளாங்காயளவு தங்கமிருப்பதற் கறிகுறியாக ஒற்றைக் கைவிரல் களைக் குவித்துத் தங்கம் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேரே அந்தக் கையை நீட்டிக் காட்டினார். அந்த அடையாளத்தால் அவளுக்குத் தன் கணவனின் மனக்குறிப்பு விளங்கவேயில்லை; அவர், விளாங்காய் தின்ன விருப்பங்கொண்டு அதைக் கைச் சைகையால் கேட்கிறார் என்று அவள் நினைத்து, அது, விக்கலுண் டாயிருக்குஞ் சமயத்தில் மேலும் கெடுதியை உண்டாக்கி விடக்கூடியதாதலின், அதனை அவருக்குக் கொடுக்கப் பயந்து, அவர் முகத்தை நோக்கி, "ஐயோ! விக்கலுக்கு விளாங்காயைத் தின்னலாமா? அது தொண்டையை அடைத்துக் கொண்டு உம்மைக் கொன்றுவிடுமே " என்று இரக்கத்தோடு கூறினாள். அதைக் கேட்டு அவர், தம் மனைவி, மனக்குறிப்பை அறியவில்லையென்று கோபித்துக் கையை ஓங்கித் தரையில் அறைந்து மீண்டும் தங்கவுருண்டையிருந்த பக்கம் கையை நீட்டினார். அந்தப் பக்கம் கொல்லைப் புறமாதலாலும், அங்கே ஒரு விளாமரம் நின்றதாலும் விளாங்காய் கொண்டுவரச்சொல்லி அவர் அந்த மரத்தையே காட்டுகிறாரென்று அவள் நினைத்து மேலும், ''ஐயோ! விளாங்காயை விரும்ப வேண்டாம்; வேண்டாம்'' என்று கதறினாள். அவர், "ஐயோ! நம் முடைய தங்கக்கட்டி எவருக்கு முதவாமற் போகின்றதே!'' என்று ஆத்திரங் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு உயிரை விட்டுவிட்டார்.

 

அவரால் புதைக்கப்பட்ட தங்கக்கட்டி பூமிக்குள்ளேயே இருந்து பூதத்தின் காவலுக்குட்பட்டது. அவர் உலகத்தில் ஒரு சுகத்தையுமடையாமல் பாவத்தையும், பழியையும் மூட்டை கட்டிக்கொண்டு நரகம் புகுந்து துன்பத் தையடைந்தார். அறத்தை மறந்ததால் அவர் அடைந்த பலன் இதுவே.

 

“அனந்த லாடேல்

 

''அனந்தல் - நித்திரையை, ஆடேல் - (நீ அளவுக்குமிஞ்சிச்) செய்யாதே'' என்பது இதன் பொருள்.

 

மனிதர் நித்திரையை அதிகமாக அனுசரிக்கலாகாது. இரவில் 10 மணிக்குமேல் தூங்கிப் பின்னிரவு நான்கு மணிக்கு விழித்துக் கொள்ள வேண்டும்; பகலில் உறங்குதல் அறவே கூடாது. பகலிலும், இரவிலும் அளவுக்கு மிஞ்சி நித்திரை செய்வதால், அங்ஙனம் செய்வார்க்குச் சோம்பல் அதிகரிக்கும்; தலை நோய், கண்ணெரிச்சல், நாவறட்சி, நெஞ்சுலர்தல் முதலிய பல நோய்களுண்டாகும்; காரியங்கள் கெடும்; சம்பாத்தியக் குறைவாகும்; ஆயுள் குறையும்; வறுமை சேரும்; அவர்களிடம் இடைவிடாது மூதேவி வந்து வாசஞ் செய்து கொண்டிருப்பாள். இவ்வாறு அளவுக்கு மிஞ்சிய நித்திரையால் மனிதர்க்குப் பலவித கெடுதிகளிருப்பது குறித்தே, மிஞ்சிய நித்திரையை விலக்க வேண்டுமென்று ஒளவைப் பிராட்டியார் இந்நீதியைக் கூறினர். சிலர், இந்நீதியை உணராமையால், பகலிலும், இரவிலும் அளவுக்கு மிஞ்சிக் கும்பகர்ணனைப் போல் நித்திரை செய்து தேகசுகத்தைக் கெடுத்து ஆயுளையும் குறைத்துக் கொள்வதோடு, தொழில் செய்யும் வன்மையற்றவர்களாய்ச் சோம்பேறிக்ளாகியும் திரிகின்றனர்; பொருள் தேடும் மார்க்கத்தையிழந்து தரித்திரர்களாய்த் தயங்குகின்றனர். தங்களுக்குக் கிடைக்கக் கூடிய பல நன்மைகளையும் இழந்து விடுகின்றனர். தூக்கத்தால் நேர்ந்த சோம்பலால், பெரியோர்கள் தேடிவைத்த பொருள்களையும் விருத்தி செய்யத் தெரியாமல் போக்கி விடுகின்றனர். இவ்வாறு அதிகத் தூக்கத்தால் அவஸ்தை யடைந்தவர்களின் கதைகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று இதனடியில் வருவதாம்:

 

ஒரு சிற்றூரில், திருமலை யென்னும் வாலிபனொருவனிருந்தான். அவன், இளமையிலேயே தூக்கத்தில் மிகவும் பிரியமுடையவனாயிருந்தான். இரவில் ஏழுமணிக்கு முந்தியே படுத்துவிடுவான்; காலையில் எட்டு மணிக்குப் பிறகு தான் எழுந்திருப்பான். பள்ளிக்கூடத்திற்குப் படிக்கப் போனால் புத்தகத்தைக் கையில் வைத்தபடியே தூங்கி விழுந்து கொண்டிருப்பான். அதனால் அவனுக்குக் கல்வியறிவும் ஏற்படவில்லை. அவ்வாறு படிப்பில்லாமற் போகவே அவன் எவ்வித தொழிலும் செய்து பொருள்தேடுதற்கு வல்லமையற்றவனாய் விட்டான். ஆயினும், அவனுடைய முன்னோர்கள் தேடிவைத்த திரவியம் அவனிடம் சேர்ந்தபடியால் அவனுக்கு ஜீவன விஷயத்தில் கஷ்ட மேற்படவில்லை; நல்ல போஜனமும் சுகானுபவங்களும் கிடைத்தன. அவன் கவலை யற்றவனாயிருந்தான். அவ்வாறு அவனுக்குப் பணக்கவலையில்லாமற் போகவே, பகலிற் சாப்பாடு முடிந்தவுடன் படுத்துறங்குவதும், இரவில் போஜன முண்ட பின் நித்திரை செய்வதுமே வேலைகளாய் விட்டன. அவன் இவ்வாறு தூக்கத்தில் மிகுந்த பிரியக்காரனானதால் தூங்கும் விஷயத்தில் சில சட்டதிட்டங் களையும் ஏற்படுத்தி யிருந்தான்: தூங்கும்போது அவனை எழுப்புதல் கூடாது. எழுப்புகிறவர்களை அவன் அடிப்பான். அவன் தூங்கும்போது, "என்னை எவ ரும் எழுப்புதல் கூடாது; அவ்வாறு எழுப்பினால் எனக்கு மிகுந்த கோபம் வரும்; அக்கோபத்தால் என் தூக்கத்தைக் கெடுப்பவர்களை நான் அடித்து விடுவேன்'' என்று சொல்லிவிட்டே தினந்தோறும் படுப்பான். அதனால் அவனைத் தூக்கத்தில் எழுப்புவதற்கு எவர்களும் பயப்படுவார்கள். அவனிடத்தில் தூக்கமும் சோம்பலும் மிகவே மூதேவி வந்து குடியேறினாள். அவன் தொழிலின்றி யிருந்து கொண்டே பணச்செலவு செய்து வந்ததால் அவனிடமிருந்த பிதுரார்ஜித சொத்துக்களெல்லாம் தொலைந்தன; வறுமை மிகுந்தது; பிணியும் அதிகரித்தது. முடிவில் அவன் ஜீவனத்திற்கு வழியின்றித் திண்டாடினான். இந்நிலையிலும் அவன், தன்னுடைய தூக்கத்தை விடவில்லை; முன்னிலும் அதிகமாகவே தூங்கி வந்தான். அவனைக் கண்டவர்களெல்லோரும் "இவன் மூதேவி பிடித்தவன்'' என்று நிந்தித்து வந்தார்கள்.

 

அவன், இவ்வாறு முன்னிலும் அதிகமாகத் தூங்கிவருங்காலத்தில், அவனுடைய செவியோரத்தில் துப்பாக்கி வெடிகிளப்பினாலும் தூக்கம் கலைய மாட்டாது; அவன் பக்கத்தில் நெருப்பு பற்றி யெரிந்து வந்தாலும் அது தன் தேகத்தில் சுட்டபிறகே துள்ளியெழுந்திருப்பான். இப்பெருந்தூக்கக்காரன் இப்படிக் காலங்கழித்து வரும்போது ஒருநாள் இரவு தன்னுடைய கூரை வீட்டில் படுத்துக் குறட்டைவிட்டுறங்கினான். அவனுடைய குறட்டைச் சப்தத்தைக் கேட்டு அங்குள்ள எலிகளெல்லாம் பயந்தோடி விட்டன. அப்போது அவனுடைய கெட்ட காலத்தால் அவ்வீட்டில் தீப்பற்றிக் கொண்டது; காற்று அதிகமாக வீசியபடியால் சிறிது நேரத்திற்குள் நெருப்பு அவ்வீடு முழுதும் பரவிவிட்டது. ஊராரெல்லோரும் கூடி இரைந்து விரைந்து அந்நெருப்பை அவிக்க முயன்றார்கள். அக்கினியின் வேகத்தைத் தணிக்க அவர்களால் முடியவில்லை. உள்ளே படுத்திருந்த திருமலை இவ்வளவு சந்தடி யுண்டாகியும் எழுந்திருக்கவில்லை. நெருப்பின் வெப்பம் தன் தேகத்தில் தாக்கிய பிறகே துள்ளியெழுந்தான். எழுந்ததும், தான் பெரிய நெருப்புக்கோட்டைக்குள் இருப்பதைக் கண்டான்; நெஞ்சம் துடித்துச் சிறிது நேரத்திற்குள் உடல் கரிந்து மாண்டான். அவன் இறந்ததை யுணர்ந்து அவ்வூரார் அவனுடைய பரிதாபநிலைமைக் கிரங்கினார்கள்.

 

“கடிவது மற

 

"கடிவது - (ஒருவரைக்) கோபித்துப் பேசுவதை, மற - (நீ) மறந்துவிடு,'' என்பது இதன் பொருள்.

 

உலகத்தில் ஆனந்தத்துடன் வாழவிரும்புவோர் எப்பொழுதும் எவரிடத்தும் இனிய மொழிகளையே பேசவேண்டும். அங்ஙனம் பேசினால் அவர்க்குப் பலரும் பற்பல நன்மைகளைப் புரிவர்; அவற்றை அவர் அடைதலால் துக்கமே யின்றிச் சுகத்துடன் வாழ்வர். இவ்வித சாந்தத்தன்மையில்லாமல் எவரிடத் தும், எந்நாளினும், எக்காலத்திலும் சினங்கொண்டு பேசுவோர், பலராலும் வெறுக்கப்பட்டு ஆனந்தமிழந்து ஆவியும் ஒழிந்து போவர். அதனால் மறு உல கத்திலும் இவர்களுக் கின்பமில்லை. அங்ஙனம் சினமொழியால் தீங்குற்றார் ஒரு வரின் சரிதத்தை இதனடியில் விளக்குவாம்:

 

ஒரு கிராமத்தில் அழகப்பர் என்ற பெரிய குடித்தனக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சாந்தமென்பதே கிடையாது. அவர், தம்மைச் சார்ந்தவர்களிடத்தில் சிறு குற்றங்காணப் படினும், அதன் பொருட்டும் இரைந்து பேசுவார்; எந்தநாளிலும் அவர் இனியமொழி எவரிடத்தும் கூறியறியார். அவர், மனைவி, மக்கள், மருமக்கள் முதலிய எல்லோரும் அவரைக் கண்டால் நடுங்குவார்கள். அவர் மனைவியிடம், "தாகத்திற்குத் தண்ணீர் கொண்டுவா'' என்று சொன்னால், அவ்வாறு சொல்லி வாய் மூடு முன் தண்ணீர் அவருக்கு முன் வந்து விடவேண்டும்; வரச் சிறிது தாமதமானாலோ அவருக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிடும்; அவர் கோபவெறிகொண்டு, இடி முழங்குவது போல் முழங்கி, "கழுதாய்! இவ்வளவு தாமதமா?'' என்று கையினால் ஓங்கிப் பூமியிலறைவார்; அவருக்குக் கண் சிவந்து விடும்; மீசை துடிக்கும்; அந்தக் கோபத்தால் அவர், ஒருநாள் முழுவதும் ஆகாரம் சாப்பிடமாட்டார்.

 

அவர் இத்தகைய கோபாவேசத்தால் சிறப்புற்றவராய் வாழ்ந்து வருங்காலத்தில் ஒருநாள் காலையில், தம்முடைய மருமகள், பழைய சோற்றுக்கு எள்ளுத் தொகையல் செய்து வைக்கவில்லை யென்று கோபங்கொண்டு கதறி விட்டு, அவளிடத்தில், "இது தொலையட்டும்; மத்தியானத்துக்கு வெள்ளைப் பூண்டுக் குழம்பு வை'' என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு வெளியிற் சென்றார். சென்று பல இடங்களுக்குப் போய்ச் சுற்றித் திரிந்து வெயிலால் வெதுப்பப்பட்டுக் காலையில் உண்டான கோபமுந் தணியாமல் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு வெள்ளைப்பூண்டுக் குழம்பு சாப்பிட வேண்டுமென்னும் விருப் பத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். அவருடைய மருமகள், அவரின் கோபத்திற்குப் பயந்து, அவர் சொற்படியே வெள்ளைப் பூண்டுக் குழம்புவைக்கத் தொடங்கி, வெள்ளைப்பூண்டு தேடினாள்; அது வீட்டிலில்லை; கடையில் அதை வாங்கப் பிரயத்தனப்பட்டாள். அங்கே ஒரே கடையிருந்ததாலும், அது நாட்டுப் புறத்துக் கடையாயிருந்ததாலும் அதில் வெள்ளைப்பூண்டு அகப்படவில்லை. அதனால் அவள் " ஐயோ! அந்த வெறிகொண்ட மாமனாருக்கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன் " என்று கையை நெரித்தாள். முடிவில், " அகப்படாததற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? அவர் கோபங் கொண்டால் தரையில் இரண்டு அறை அறைந்து கதறுவார்; வேறு என்ன செய்வார்'' என்று வேறு குழம்பு வைத்துக்கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் எரிச்சலோடு வந்த அழகப்பர், கூடத்தில் உட்கார்ந்தார். மருமகள் சாப்பாடு பரிமாறுவதற்கு இலையைக் கொண்டுவந்து அவருக்கு முன் போட்டாள். அப்போது அழகப்பர், மருமகளிடத்தில் "வெள்ளைப்பூண்டுக் குழம்புவைத் தாயா?" என்று கேட்டார். அவள், "இல்லை" என்றாள். உடனே அழகப்பருக்குப் பெருங்கோபமுண்டாய் விட்டது; அந்தக் கோபத்துடன் அவர் ஆவென்று வாயைத் திறந்து, "இல்லையா!" என்று இடிபோல் இரைந்து கையால் ஓங்கி நிலத்தில் அறைந்தார். அந்த அறையோடு அவர் வாயிலிருந்து இரத்தம் குபீல் என்று வெளிப்பட்டது; நாவும் கண்ணும் வெளியே வந்துவிட்டன; திடீ ரென்று அவர் பக்கத்தில் சாய்ந்தார்; அப்பொழுதே அவருடைய உயிரும் போய்விட்டது; அவர் வெள்ளைப்பூண்டுக் குழம்பு வைக்கவில்லையென்ற கோபத்தால் விறைத்துப் பிணமாகிவிட்டார். அவருக்குத் திடீரென்று அளவுக்கு மிஞ்சிக் கோபமுண்டானதால் இருதயம் வெடித்துவிட்டது; அதனாலேயே இச்சாவு நேர்ந்தது. அவர், கோபத்தால் உயிரைப் போக்கிக் கொண்டதை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் உணர்ந்து, "இவனைப்போல் கோபவெறி கொண்ட பைத்தியக்காரனை நாம் எங்கும் கண்டதில்லை; வெள்ளைப் பூண்டுக் குழம்புக்காக விட்டானே உயிரை! இவன் விவேகமில்லாதவன் " என்று அவன் புத்தியை வெறுத்தார்கள்.

 

“காப்பது விரதம்

 

“காப்பது - (விரதத்திற்குரிய ஒழுக்கங்கள் தவறாமல் அவற்றைக்) காப்பாற்றிக்கொள்வதே, விரதம் - விரதமாகும் " என்பது இதன் பொருள்

 

மனிதர், நல்ல நீரில் குளித்துக் கடவுளைத்தொழுது, பரிசுத்தமானதும், குறைந்த அளவுள்ளதுமான உணவுண்டு, தம் முயிர்களைப் போலவே பிறவுயிர்களையும் நினைத்துப் பாதுகாத்து, தர்மகாரியங்களைச் செய்து வருதலும், இன்னும் பல புண்ணியச் செயல்களைப் புரிவதுமே விரதத்திற்குரியனவாம். இவற்றைச் செய்யவேண்டுமென்று உறுதி செய்து கொண்டு காத்து வருவது தான் விரதமென்று சொல்லப்படும். இவ்விரதத்தை நிறைவேற்றி வருவோர், கடவுள் அருள்பெற்று இன்பத்தையடைவர். இவ்விரதங் கெடுத்து வாழ்வோர், இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் துன்பத்தையே அடைவார்கள். விரதத்தின் தன்மை இவ்வளவு சிறந்ததாயிருந்தும் சிலர் இதனைக் கைவிட்டு நற்பயனிழந்து திரிகின்றார்கள்; சிலர் விரதத்தின் உண்மைக்கருத்தை உணராமல், பெருமைக்காக அதனைச் செய்பவர்கள் போல நடித்து இம்மை மறுமை இரண்டிடங்களிலும் இடர்ப்படுகின்றனர். இப்படிப் போலி விரதங் கொண்டு துன்பமுற்றார் பலருண்டு; அவருள் ஒருவர் கதையை இதனடியில் விளக்குவாம்:

 

சில ஆண்டுகளுக்குமுன், செம்பியன்பட்டியென்னும் கிராமத்தில், நச்சு வாய் நாகப்பன் என்னும் ஒரு மனிதனிருந்தான். இவன், எப்பொழுதும் ஓயாமல் பேசிக் கொண்டே யிருப்பான்; இவன் பேச்சோ, கேட்பவர்க்கு நஞ்சைப்போல் வெறுக்கத்தக்கதாயிருக்கும்; இந்த இரண்டு வகைக் காரணங்களினாலேயே இவனுக்கு இந்த நச்சுவாய் நாகப்பன்' என்ற பெயர் ஏற்பட்டது. இவன், கல்வியறிவில்லாதவன்; தற்பெருமை யுடையவன்; சாப்பாட்டில் மிகுந்த விருப்பமுடையவன்; சிறந்த கல்வியுடையவன் போலவும், உயர்ந்த சீலமுள்ளவன் போலவும், தெய்வபக்தியிற் சிறந்தவன் போலவும் நடிக்கத் தக்கவன்.

 

இவன், சாப்பாட்டில் மிகுந்த விருப்பமுள்ளவனாயிருந்தும் இவனுக்குத் தினந்தோறும் சரியான சாப்பாடு அகப்படவில்லை. இவன் மனைவி, கையழுத்தக்காரி; பணச்செலவானால் அவளுக்கு வயிறெரியும்; அதனால் அவள் அதிகச் செலவு செய்து ஒருநாளாவது நாகப்பனுக்கு நல்ல சாப்பாடு சமைத்துப் போடுவதில்லை. நாகப்பன் சாப்பாட்டில் மிக்க ஏக்கங் கொண்டிருந்தான். அதனால் இவன்,'நம் மனைவியை ஏமாற்றி நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கு என்ன தந்திரம் செய்யலாம்?' என்று ஆலோசித்தான்.
'தான் பற்பல விரதங்களை யேற்படுத்திக் கொண்டு மகாவிரததாரி போல நடித்து வந்தால் பெருந்தீனிக்கு இடமுண்டாகும்' என்பது இவனுக்கு விளங்கிற்று. அதுமுதல் இவன், அமாவாசை, கிருத்திகை முதலிய இரண்டு மூன்று விரதங்களை ஏற்படுத்திக் கொண்டான். சில மௌட்டிக விரதக்காரர்கள் விரதத்திற்குக் காலையில் வயிறுநிறைந்த பலகாரமும், மத்தியானம் விலாப்புடைக்கும் சாப்பாடும், இராத்திரியில் தொண்டைவரைநிறையும் பலகாரமும் விழுங்கி யேப்பமிடுவது வழக்கமாதலால் அந்த வழக்கத்தையே இவனும் தன் பெருந்தீனிக் கனுகூலமாக ஏற்படுத்திக் கொண்டான். இவன் மனைவி செலவைக் குறைக்கும் கெட்டிக்காரியாயிருந்தாலும் விரதத்திற்குக் குறைவு செய்யக்கூடாதென்று பயந்து, விரத தினங்களில் மாத்திரம் பலகாரபக்ஷணங்களையும், சாப்பாடுகளையும் குறைவில்லாமற் செய்து இவனுக்குப் போட்டு வந்தாள். அவ்வாறு போட்டுவரவே நாகப்பன், 'விரதம் நம்முடைய பெருந்தீனிக்கு நல்ல உதவி புரிகிறது; இதையே நாம் இன்னும் அதிகப்படுத்திக் கொண்டால் அடிக்கடி ஆனந்தச் சாப்பாடு சாப்பிடலாம்' என்று முடிவு செய்து கொண்டு முன்னிருந்த விரதங்களுடன், ஞாயிற்றுக்கிழமை விரதம், சோமவாரவிரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சனிக்கிழமை விரதம் ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொண்டான். ஒருவாரத்தில் புதன், வியாழம் என்னும் இரண்டு நாட்கள் தாம் இவனுக்கு விரதமில்லாத தினங்கள். 'எல்லாத்தினங்களையும் விரதத்திற் சேர்த்து விட்டால் மனைவிக்குச் சந்தேகமுண்டாகும்; அதனால் உள்ளதும் கெட்டுவிடும்' என்று பயந்தே இவன், அந்த இரண்டு தினங்களையும் விட்டுவைத்தான்; இல்லாவிடில் அவற்றையும் விரதத்தில் சேர்த்தேவிடுவான்.

 

இவ்வாறு விரதத்திற்கு ஏற்படுத்திக்கொண்ட ஐந்து தினங்களிலும் -இவன், காலையில் எழுந்தவுடன் இட்டலியில் ஏழெட்டும், தோசையில் பன்னிரண்டும், புட்டில் அரைப்படியும் உள்ளே தள்ளிவிட்டு முக்காற்படி மோரை மூச்சுவிடாமற் குடித்துவிடுவான்; மத்தியானத்தில் சீக்கிரம் குளித்து விட்டுச் சாப்பாட்டை நினைத்துக் கொண்டே மந்திரம் சொல்லும் பாவனை காட்டி, ஐந்தாறு வகைக் கறிகளுடன் சாப்பாட்டை இலையில் பரப்பிச் சுவாமிக் கென்று தீபாராதனை காட்டிவிட்டுத் தொண்டைக் குழிவரையில் வரும்படி எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டெழுந்திருப்பான். இரவில் இருபத்தைந்து தோசையை வயிற்றிற் போட்டு நிரப்பிவிடுவான். இவ்வகையான சாப்பாட்டு விரதத்தை இவன் நெடுங்காலமாக நடத்திவந்தான்.

 

இவ்வாறு பெருந்தீனி விரதம் நடைபெற்று வருங்காலத்தில், ஒரு சமயத்தில் ஒரு முக்கியமான விரத்தினம் வந்தது. அன்றைக்கு அதிகமான பலகாரவர்க்கங்களும், பலமான சாப்பாடும் செய்ய வேண்டுமென்று நாகப்பன், தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டான். அவள் அவ்வாறே அவற்றைச் செய்தாள். நாகப்பன் அன்று காலையில் விரதத்திற்காகப் பன்னிரண்டு இட்டலியும், இருபத்துநான்கு வடையும், மூன்று கப் உப்புமாவும், இரண்டு கப் காப்பியும் உட்கொண்டான். பலகாரங்கள் அதிகரித்திருந்ததால் அவனுக்குப் பன்னிரண்டு மணிவரை பசியெடுக்கவில்லை; பலகார ஏப்பம் பலமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது. அப்படியிருக்கும் போதே அவன், குளித்துத் தெய்வசிந்தனை சிறிதுமின்றிக் கடவுளுக்குப் பூசனை புரிபவன் போல நடித்து விட்டுச் சாப்பாட்டில் உட்கார்ந்து, நெய்யிலும் பருப்பிலும் ஓர் இலைசோறும், குழம்பில் ஒருமுறம் சாதமும், இரசத்தில் அரைப்படி அன்னமும், தயிரில் காற்படி சாதமும், ஐந்தாறுவடைகளும், இரண்டு மூன்று அப்பளங்களும், தேங்காயளவு சர்க்கரைப்பொங்கலும் உட்கொண்டு அரைப் படி பாயசத்தையும் குடித்துவிட்டு அன்று முழுவதும் மூச்சுவிட முடியாமல் திணறிப் படுத்துப் புரண்டு கொண்டிருந்தான். அப்படிப் புரண்டவன் அன்றிரவு சும்மா விருந்து தொலையாமல், தன் மனைவியிடம், " இன்றைக்குப் பசியில்லை; ஆனாலும் இரவில் சும்மா படுக்கக்கூடாது; இராத்திரிக்கு இருபது தோசை மாத்திரம் சுட்டெடுத்துக் கொஞ்சம் எள்ளுப்பொடி செய்து வைத்துவிடு'' என்றான். அவள் அப்படியே எள்ளுப்பொடியுடன் இருபது தோசையும் சுட்டுவைத்தாள். நாகப்பன் அவற்றையும் தின்று, பகலில் மீதிப்பட்டிருந்த பாயசத்தில் காற்படி குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டான்.

 

சிறிது நேரத்திற்குள் அவனுக்கு வயிற்றுவலி யுண்டாகிவிட்டது; வயிறு மிடாப்பானை போல் பொருமிக்கொண்டது; அவன் வேதனை சகிக்காமல் கதறினான்; அப்பால் அவனுக்கு அஜீரணபேதியாகத் தொடங்கிவிட்டது. அவன் விடியும் வரையில் படாதபாடெல்லாம் பட்டான். விடிந்தபின் அவன் ஒரு வைத்தியரை அழைத்து அவரிடம் தனக்குண்டான வயிற்று வேதனையைக் கூறினான். அவர் அதற்கு மருந்து கொடுத்தார். அவன் நெடுநாட்களாகப் பெருந்தீனி தின்று வந்ததால் இரைப்பை கெட்டுவிட்டது. அதனால் அந்த மருந்தினாலும் அப்போ தவனுக் கேற்பட்ட அஜீரண வியாதி நீங்கக வில்லை; நிலையாக அவனிடத்தில் நின்றுவிட்டது. அதன்மேல் அவன் சிறிது ஆகாரமும் உட்கொள்ள முடியாமல் நாடோறும் வருந்தி முடிவில் அளவற்ற ஆகார ஆவலோடு உயிர் விட்டான்; இவ்வுலகத்தில் ஏற்படும் இன்பத்தை யிழந்து, போலி விரதம் புரிந்து கடவுளை ஏமாற்றியதால் மறுமையில் நரகத்திற் சேர்ந்தான்.

 

“கிழமைப்பட வாழ்

 

“கிழமைப்பட - (மனிதனே உன்னிடத்தில் உள்ள பொருள், மற்றையர்க்கும்) உரிமையாகும்படி, வாழ் - (நீ பிறர்க்கும் அதனைக் கொடுத்து) வாழ்வாயாக'' என்பது இதன் பொருள்.

 

மனிதராய்ப் பிறந்தவர்கள், தம்மைச் சார்ந்தவர்க்கு வறுமைத் துன்பம் நேர்ந்தால் அது தீரும்படி தம் பொருளைப் பங்கிட்டுக் கொடுத்து வாழ வேண்டும். அப்படி வாழ்வோரே இவ்வுலகில் சிறப்படைவார்கள். அவ்வாறு ஈகையில்லாமல் வாழ்பவர்கள் தம்முடைய வாழ்வு கெட்டு வருந்துவர். அதனை, அடியில் வரும் கதை விளக்கும்:

 

முன் ஒருகாலத்தில் செம்பியனூர் என்னும் கிராமத்தில் தாண்டவன் என்னும் ஒரு மனிதன் இருந்தான்; இவன் மிகுந்த பேராசைக்காரன்; காசோடு காசு சேர்ப்பதிலேயே நோக்கமுடையவன்; ஏழைகளுக்கு இம்மி யரிசியும் கொடுக்க மாட்டான்; பிச்சைக்காரரைக் கண்டால் பேரிடிபோல பேசித் துரத்துவான்; தன்னுடைய நெருங்கிய உறவினர்க்கும் ஒன்றும் கொடுக்கமாட்டான். இவன், தன் சொந்தச் சாப்பாட்டுக்கும் அதிகப் பணம் செலவு செய்யமாட்டான். ஒவ்வொரு வேளையிலும் கால்வயிறு குறைவாகவே அன்னமுண்பான்; விருந்தினரைக் கண்டால் வேகமாய்க் கதவை மூடிவிடுவான்.

 

இவன் இவ்வாறு உலோபகுணத்திற்சிறந்த கையழுத்தக்காரனா யிருந்தபடியால் இவன் மீது ஊராரெல்லோரும் வெறுப்பும், விரோதமுங் கொண் டிருந்தார்கள். இவனிடத்தில் முன்னோர்கள் தேடிவைத்த பணம் கொஞ்ச மிருந்தது. அதைக்கொண்டு வேறு தொழில்கள் செய்தால் அதிகப்பணம் சேராதென்று இவன் கருதி, பணம் வாங்க விரும்புவோரிடம் நகைகளை அடைவு வாங்கிக் கொண்டு வட்டிக்குக் கடன் கொடுக்கும் வியாபாரத்தைச் செய்யத் தொடங்கினான். அனியாயமாக ஒரு ரூபாய்க்கு ஒருநாளைக்கு இரண்டணா வட்டி வாங்கி ஏழைகளின் பணங்களையெல்லாம் எளிதாகச் சேர்த்து வந்தான். தினப்படி சிறு வியாபாரம் செய்து ஜீவிக்கும் ஏழைகளுக்குக் காலையில் கடன் கொடுத்து மாலையில் வட்டியும் முதலும் அவர்களிடம் வாங்கி விடுவான். நகைகளின் பேரில் பிறருக்குக் கொடுக்கும் பணத்திற்கு வட்டி பெருக்கி அதிகத் தொகையாக்கி அவர்கள் அத்தொகையைக் கட்டி நகையை மீட்கச் சக்தியற்றவர்களாய்ப் போகும்படி செய்து முடிவில் அந்நகைகளை அக்கடனுக்கே எடுத்துக்கொள்வான். இவனிடம் வட்டிக்குப் பணம் வாங்கிக் கெட்ட குடும்பம் அநேகம்.

 

இவன் இவ்வாறு சேர்த்து வரும் பணங்களையும், நகைகளையும், பிறரிடம் அடைவுவாங்கும் நகைகளையும் பெட்டியில் வைத்தாலும், சட்டியில் வைத்தாலும் திருடர் அபகரித்துக் கொள்வார்கள் என்று நினைத்துத் தினந்தோறும் இரவில் ஒரு பெரிய பாண்டத்திற் போட்டுச் சட்டியால் மூடித் தன்னுடைய உள்வீட்டின் நடுவில் பூமியைத் தோண்டிப் புதைத்து வைத்து மறுநாள் விடிந்தபின் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான்.

 

இதை இவன் இரகசியமாகவே செய்துவந்தான். இவன் எல்லோருக். கும் விரோதியாயிருந்தபடியால் சில திருடர்கள், இவனுடைய பொருள்களைக் களவாடிக்கொண்டு போய் விட வேண்டுமென்று பன்முறைகள் முயற்சி செய்து கன்னம் வைத்து வீட்டிற்குட்புகுந்து பார்த்தும் இவன் பணம் புதைக்குமிடத்தைக் காணமுடியவில்லை. முடிவில் ஒரு சாமார்த்தியத் திருடன் எப்படியாவது இவன் பணம் வைக்குமிடத்தைக் காணவேண்டுமென்று ஒரு நாள் இரவில் தாண்டவன் பணம் புதைக்கும் அறைவீ ட்டின் பின்பக்கத்தில் வந்து சுவரில் ஆக்கர்போட்டுச் சிறு துவாரம் செய்துவைத்து விட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தான். இருட்டான சமயத்தில் அந்தப்பக்கம் எவரும் போக மாட்டார்கள். ஆதலால் அவன் அச்சமின்றியிருந்தான். இரவு எட்டு மணிக்கு மேல் தாண்டவன் கடையைப் பூட்டிவிட்டுத் தன்னிடமிருந்த நகைகள், பணம் எல்லாவற்றையும் கொண்டு வந்து அவ்வீட்டைத் திறந்து விளக்கேற்றி வைத்துக்கொண்டு பள்ளந்தோண்டிப் புதைத்தான். திருடன் துவாரத்தின் வழியாகப் பார்த்து இவனுடைய இரகசியத்தைத் தெரிந்து கொண்டான். தாண்டவன் அறையைப் பூட்டி விட்டான். ஊரொடுங்கியபின் திருடன் சுவரில் கன்னம் வைத்து உட்புகுந்து, தாண்டவன் மண்ணைத் தோண்டி மறைத்த பொருள்களையெல்லாம் கொண்டு போய் விட்டான். தாண்டவனிடத்தில் ஒரு பைசாகூட இல்லாமல் எல்லாம் தொலைந்துவிட்டன.

 

விடிந்தவுடன் தாண்டவன் மண்ணைத்தோண்டிப் பார்த்தான்; ஒன்றும் அகப்படவில்லை; ''ஐயோ! எல்லாம் தொலைந்தனவே " என்று கதறினான். நகைகள் அடைவுவைத்தவர்களெல்லாம் பணத்துடன் ஓடிவந்து அவனிடம், (எங்கள் நகைகளைக் கொடு'' என்று நெருக்கடி பண்ணினார்கள். அவன் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமலும், ஜீவனஞ் செய்ய வேறுமார்க்க மின்றியும் பூனைபோல் விழித்தான். அந்த உலோபிக்கு எவரும் உதவி செய்ய முன் வரவில்லை. அதனால் தாண்டவன் தீராத சஞ்சலத்திற்சிக்கி மாண்டவனாயினான்.

 

 

 

“கீழ்மை யகற்று

 

"கீழ்மை - தாழ்ந்த குணத்தை, அகற்று - (மனிதனே! நீ) நீக்கு'' என்பது
இதன் பொருள்.

 

பொய், பேராசை, திருட்டு, வஞ்சம் முதலியவை மனிதர்க்குத் தாழ்ந்த குணங்களாம்; இக்குணங்களைக் கொண்டிருப்பவர்க்கு உலகத்தில் எவ்வித நன்மையும் ஏற்படாது; இவற்றை நீக்கிச் சாத்தியம், கபடின்மை, பரோபகாரம் முதலிய நற்குணங்களைக் கொள்வோர்க்கே மேன்மையுண்டு. தாழ்ந்த குணங்களைக் கொண்டிருந்தவர் இழிவடைந்த கதைகள் பலவுண்டு; அவற்றுள் அடியில் வரும் கதை ஒன்றாகும்:

 

ஒரு நகரத்தில், குமரன், மாடன் என்னும் இரண்டு வாலிபர்கள் தெருவில் போய்க்கொண்டிருந்தார்கள். அங்கே வயிரமோதிரமொன்று கிடந்தது. அதைக் குமரன் பார்த்து, " எனக்கு நல்லகாலம்; மோதிரமொன்று கிடைத்தது " என்று எடுத்துக் கொண்டான். மாடன் மிகுந்த பேராசைக்காரன்; மிகுந்த பொய்யன்; அவன் தனக்கு அம்மோதிரங் கிடைக்கவில்லை யென்று குமரன் மீது பொறாமை கொண்டான்; அதை எந்த உபாயத்தால் அவனிடமிருந்து கைப்பற்றலாமென்று ஆலோசித்தான். உடனே, " இந்த மோதிரம் என்னுடையது; நான் முன்னே இவ்வழியாகப் போன போது இது, என்னிடமிருந்து நழுவி விழுந்து விட்டது; ஆதலால் இதை என்னிடம் கொடுத்து விடு " என்று குமரனிடம் பொய்கூறினான். அவன் பேச்சில் குமரனுக்கு நம்பிக்கையில்லை. அதனால் அவன், மாடனை நோக்கி, " நீ பொய்கூறுகிறாய்; நான் கண்டெடுத்த மோதிரத்தைக் கொடுக்கமாட்டேன்; இது கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்டது " என்று சொன்னான். மாடன், " மோதிரத்தை நீ கொண்டு போக நான் விடமாட்டேன் " என்று குமரனோடு வம்பிழுத்தான். இருவருக்கும் சண்டையுண்டாயிற்று; மனிதர்கள் கூட்டங்கூடி விட்டார்கள்; இருவருடைய வழக்கையும் விசாரித்தார்கள். அவ்விருவரும், " மோதிரம் எனக்குச் சொந்தம் எனக்குச் சொந்தம் " என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வழக்குத் தீரா வழக்காயிருந்தது. அதனால் அங்குக் கூடியிருந்தவர்கள், " இவ்வழக்கு நம்மால் தீர்க்க முடியாததாயிருக்கிறது'' என்று அவர்களை இழுத்துக்கொண்டு போய் நியாயாதிபதி முன் நிறுத்தினார்கள்.

 

நீதி அதிபர் அவ்வழக்கை விசாரித்தார். குமரன், " மோதிரத்தை நான் கண்டெடுத்தேன்; ஆதலால் அது எனக்குச் சொந்தமானது'என்றான். மாடன், " மோதிரம் என்னுடையதே; அது கை தவறிவிட்டது; இவன் அதை எடுத்துக்கொண்டான்; ஆதலால் அது எனக்குச் சேரவேண்டும்; நான் அரும் பாடுபட்டுச் சம்பாதித்தது; இவன் என்னை ஏமாற்றப்பார்க்கிறான்; நான் மோதிரத்தை விடமாட்டேன் " என்றான். நீதிபதி அந்த மோதிரத்தைக் காட்டும்படி குமரனிடம் கூறினார். அவன் உடனே அம்மோதிரத்தை அவர் முன் வைத்தான். நீதி அதிபர் அதைக் கையிலெடுத்துப் பார்த்ததும் மாடனை நோக்கிச் சிரித்தார். ஏனெனில், அது அந்த நீதிபதியின் மோதிரமே; முதல் நாளில் அவர் கையிலிருந்து நழுவிவிட்டது. அவர் அதைத் தேடிப்பார்த்தார். அஃதகப்படவில்லை. அதனால் அவர் பேசாமலிருந்து விட்டார். இப்போது அதைப்பார்த்து அது தம்முடைய மோதிரமென்றும், மாடன் கூறுவது பொய் யென்றும், குமரன் கூறுவது மெய்யென்றும் தெரிந்து கொண்டார். அதன் மேல் அவர், அது தம்முடைய மோதிர மென்பதை எல்லோருக்கும் கூறி மெய் கூறிய குமரனுக்குப் பத்து ரூபாய் இனாம் கொடுத்தார். பொய் கூறி அதை அபகரிக்க நினைத்த மாடன் பத்து ரூபாய் தண்டம் கொடுக்கும்படி தீர்ப்புச் செய்தார். பின்னர், எல்லோரும் குமரனைச் சத்தியவந்தனென்று புகழ்ந்தார்கள்; மாடனைப் பொய்யும் மோசமும் நிறைந்த புல்லன் என்று நிந்தித்தார்கள்.

 

குணமது கைவிடேல்


 "குணமது - (நல்ல) குணத்தை, கைவிடேல் - (நீ) கைவிடாதே'' என்பது இதன் பொருள்.

 

மனிதர், தருமநூல்களிற் கூறிய நீதிகளின்படி அடக்கம், செய்ந்நன்றி யறிதல் முதலியவற்றைக் கொண்டு நடத்தலே நல்ல குணமாம்; அவற்றினின்றுந் தவறி நடப்பது கெட்ட குணமாம். நல்ல குணத்தைக் கொண்டிருப்பவர் எப்பொழுதும் நன்மையே அடைவர்; கெட்ட குணத்தைக் கொண்டவர்கள் கேடடைவர். இவ்வாறு நற்குணத்தைக் கைவிட்டவர்கள் கேடுற்ற கதைகள் சிலவுண்டு. அவற்றில் ஒன்று இதனடியில் வருவதாம்.

 

ஓர் ஏழைக்குடும்பத்தில் மலையப்பன் என்னும் ஒரு சிறுவன் இருந்தான். அவன் வறுமையால் மெலிந்தவன். பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருந்தான். பணக்காரர் ஒருவர், தம்முடைய பெண்ணுக்கு அவனை மாப்பிள்ளையாக்கக் கருதி அழைத்துப் போய் வீட்டோடு சேர்த்து அவனுக்கு உயாந்த உடைகள் தைத்துக் கொடுத்து நல்ல சாப்பாடும் போட்டு ஆங்கிலமும் கற்பித்து வந்தார். தரித்திரத்தில் மூழ்கிக்கிடந்த அவனுக்கு இந்தச் சௌகரியங்கள் ஏற்படவே மிகுந்த தற்பெருமை யுண்டாயிற்று. அவன் எவரையும் மதிக்காமல் பேசத் தொடங்கி விட்டான். கல்வி கற்ற பெரியோர் வார்த்தைகளையும் எடுத்தெறிந்து பேசி, அவர்களோடு வீண் வாக்குவாதம் செய்து வந்தான்; அவ்வீட்டிலுள்ள பெண்களிடத்திலும், வேலைக்காரரிடத்திலும் அதிகாரம் செலுத்தினான். தனக்குத் தெரியாத காரியங்களிலும் தலையிட்டு எல்லாம் தெரிந்தவன் போல் நடக்க ஆரம்பித்தான். காரியங்களில் அனுபோகமுள்ள அறிஞரிடத்திலும், 'உங்களுக்கொன்றும் தெரியாது' என்று அவர்களைத் தாழ்த்திப் பேசுதலை மேற்கொண்டான். முடிவில் தன்னை ஆதரித்துத் தனக்குப் பெண் கொடுக்க நினைத்திருக்கும் அந்தத் தனவந்தரையும் அவமதிக்கத் தொடங்கி, ஒருநாள் பெண்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து தன்னை அவர்கள் மதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன், "அவருக்கென்னதெரியும்? அவர் கருநாடகப் பேர்வழி; துணிகூடச் சரியாகக் கட்டமாட்டார்; நான் வந்த பிறகல்லவா இந்த வீட்டுக்காரியங்கள் ஒழுங்காயின; நான்மாத்திரம் இங்கு வந்து சேராதிருந்தால் இந்த வீடு வீடாகத் தெரியுமா? சுடுகாடாகவல்லவா தெரியும்; இங்கே நாகரிகமுடைய மனிதர் எட்டிப் பார்ப்பாரா? அவருடைய நற்காலமே என்னை இங்குக் கொண்டுவந்து சேர்த்தது'' என்றுகையோடு கையறைந்து பேசிக் கொண்டிருந்தான்.

 

அப்போது அவ்வீட்டுக்காரர் மறைவில் நின்று அவன் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவனுடைய அகங்கரிப்பான பேச்சுக்களைக் கேட்கவே அவருக்கு அளவில்லாத கோபமுண்டாய் விட்டது. அதனால் அவர், "ஓகோ! கஞ்சியும் கிடைக்காமல் கண்கலங்கித் திரிந்த இவனுக்கு நல்ல உணவும் உடையும் அகப்படவே இரத்தமூறி அகங்காரம் அதிகரித்துவிட்டது; குப்பையிற் புரளும் நாயை மெத்தையில் படுக்க வைத்தால் அது எல்லோரையுமே அவமதித்துக் குலைக்கும்; இவனுக்கு முன் நிலைமையே தக்கது; இவனைத் துரத்திவிட்டு மறுவேலை பார்க்க வேண்டும்'' என்று உடனே அவனெதிரில் போய், ''என்னடா பயலே! உன்னாலா எனக் குயர்வுண்டாயிற்று? " என்று அவனைக் கேட்டார். அவன்'' ஆம்; நான் இங்கிருந்து ஆங்கிலங் கற்றுத் துரைமார்களைப் போல் உடையணிந்து உலவுவதனாலேயே உமக்குச் சிறப்புண்டாயிற்று; நானில்லாவிட்டால் உம்மை நாய் கூடச் சட்டை பண்ணமாட்டாது'' என்று வெகு முறுக்காய்ப் பேசினான். அவர் பல்லைக் கடித்துக்கொண்டு, "தரித்திரம்பிடித்த சண்டிப்பயலே! என்னுடைய பணமல்லவா உன்னை இவ்வாறு பேசச் செய்திருக்கிறது; உன்னுடைய செருக்கை நீவெளியிற் சென்று காட்டு பார்க்கலாம்'' என்று அவனுக்கு நான்கு சவுக்கடிகொடுத்து அப்பொழுதே அவனைத் துரத்திவிட்டார். மறுநாளே அவனுக்குச் சோற்றுக்கு வழியில்லாமற் போயிற்று. மீண்டும் அவன் தரித்திரத்தால் வருந்தித் தயங்கினான்.

 

“கூடிப் பிரியேல்

 

“கூடி - (மனிதனே! நீ நல்லவரோடு உறவுகொண்டு,) சேர்ந்து, பிரியேல் - (பின்னர் அவரைவிட்டு) நீங்காதே'' என்பது இதன்பொருள்.

 

மனத்தி லொன்றுவைத்து வாக்கி லொன்று பேசும் நயவஞ்சகரிடத்தி லும், பிறரை அடுத்துக்கெடுக்கும் தன்மையுடையவரிடத்திலும், தம்காரியத்தில் மாத்திரம் கருத்தாயிருந்து அடுத்தவர் காரியத்தைக் கைநழுவ விடுவோரிடத்திலும சிநேகங்கொள்ளலாகாது. களங்கமற்ற உள்ள முடையவரிடத்திலும், தம்மோடு கூடியவர்க்குத் துன்பமுற்றகாலத்தில் உயிரைக் கொடுத்தும் அத்துன்பத்தை நீக்கக் கூடியவர்களிடத்திலும், உண்மையான நட்புடையவர்களிடத்திலுமே உறவு கொள்ளவேண்டும். அவ்வாறு கொண் டால் அந்த உண்மைச் சிநேகிதர்கள், ஒருவனுடைய ஆடைநழுவும் போது அவன்கை, அதனைப் பிடித்தற்கு எப்படித் தானே முற்பட்டு அவனுக்கு உதவி செய்யுமோ அதேபோலத் தம் நண்பர்க்குத் துன்பம் வரும்போது தாமே அதனை நீக்கி உதவி செய்ய முற்படுவார்கள். இத்தகையோர் சிநேகத்தை எப்பொழுதும் கைவிடலாகாது; அங்ஙனம் கைவிடுவோர்பெரிய நன்மையை இழந்தவராவார். இவ்வாறு நல்ல சிநேகிதரோடு கூடிப்பிரிந்து நலமிழந்தவர் தன்மையை அடியில் வரும் கதை விளக்கும்:

 

ஒரு நகரத்தில், பரசுராமன், பார்த்தசாரதி என்னும் இருவர் நண்பர்களா யிருந்தார்கள். பரசுராமன் சிறிது கைப்பொருளுடையவன்; பார்த்த சாரதி பொருளில்லாதவன்; சாப்பாட்டுக்கு ஒன்று மகப்படாமல் திண்டாடுவான். அவன் உணவின்றி வருந்துங் காலங்களில் பரசுராமன் அவனுக்கு உதவி செய்து வந்தான். ஆடைகளும் வாங்கிக் கொடுத்து வந்தான். அவனுக்கு நோய் வந்தால் பரசுராமன் தனக்கு வந்தது போலநினைத்து நோய்க்குத் தக்க பரிகாரம் செய்வான். இப்படிப் பலவகையிலும் பரசுராமன் உதவி செய்து வந்ததால், பார்த்தசாரதி எந்தநேரத்திலும் அவனை விட்டு நீங்காதிருப்பான்; இராக்காலத்திலும் அவனோடு இணை பிரியாதிருப்பான். இவ்வாறு இரு வரும் இணை பிரியாதநட்பினரா யிருக்குங்காலத்தில் ஒருநாள் ஆற்றின் படித்துறையில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, பார்த்த சாரதி படிக்கட்டிலிருந்து நழுவி வெள்ளத்தில் வீழ்ந்துவிட்டான். வெள்ளம் அவனை அடித்துக்கொண்டு போயிற்று. அவனுக்கு நீந்துதல் தெரியாதாதலால், அவன் தலை கீழாகச் சுழன்று நீரைக் குடித்துப் பிராணன் போகுந்தறு வாயில் மிதந்து சென்றான். கரையில் நின்றவர்கள், "ஐயோ! ஒரு வாலிபன் போய்விட்டான்! போய்விட்டான்! !'' என்று கதறினார்கள். பரசுராமன் சிறிதும் தாமதிக்காமல் அவ்வெள்ளத்திற் குதித்தான். வெள்ளம் மிகுந்த வேகத்துடன் பயங்கரமாகச் சென்றும், அவன் அஞ்சவில்லை. தன்னுடைய நண்பனைக் காப்பாற்றுவதிலேயே ஊக்கங்கொண்டான். நீந்துவதில் கொஞ்சம் பழகியிருந்தானாதலின் விரைந்து வெள்ளத்தில் நீந்திக்கொண்டே போய்ப் பார்த்தசாரதியைத் தூக்கிக் கரையிற் கொண்டு வந்து சேர்த்துக்காப்பாற்றினான்.

 

சில மாதங்கள் சென்றபின் பார்த்தசாரதிக்கு நல்லகாலம் வந்தது. அவனுக்குப் பரசுராமன் சிறிது பண உதவி செய்தான். அதைக் கொண்டு பார்த்தசாரதி ஒரு வியாபாரஞ் செய்தான். அதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. சில ஆண்டுகளில் அவன் மிகுந்த பணக்காரனாய் விட்டான். கையில் பணஞ்சேரவே தன்னுடைய உயிர்த்துணைவனாகிய பரசுராமனைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டான்; அவன் முன்னே செய்தநன்றிகளையெல்லாம் மறந்தான். அவனுடைய நெருக்கம் வைத்துக் கொண்டால் அவனுக் கேதாவது உதவி செய்ய வேண்டியிருக்குமென்று அவன் சிநேகத்தைச் சிறிது சிறிதாக நழுவவிட்டான். அவனைக் கண்டபோது அவனோடு பிரியமாகப் பேசுவதில்லை. அவனுடைய நடக்கைகளைப் பார்த்த பரசுராமன், "இவன் மனம் வேறுவிதமாய்த் திரும்பியிருக்கின்றது; நம்மை விரும்பாத இவனிடத்தில் நாம் உறவுவைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை'' என்று தானும் அவனுடைய நேயத்தை விட்டுவிட்டான்.
 

பின்னர், பார்த்தசாரதி வேறு சில கெட்ட நடக்கையுடையவர்களோடு சிநேகமானான். அவர்கள் நல்ல நிலையிலிருப்பவர்களையும் பல தீயமார்க்கங்களில் இழுத்து விட்டுக் கெடுத்து விடக்கூடியவர்கள். ஆதலின் பார்த்தசாரதியைப் பற்பல கெட்டவழிகளில் திருப்பிவிட்டார்கள். அவன், சூதாட்டத்திலும், குதிரைப்பந்தயத்திலும், குடியிலும், வீண்வம்பு வழக்குகளிலும் பொருளைச் செலவிட்டு வந்தான். பரசுராமன் அவனோடு சிநேகமாயிருந்தால் அவன் தீயமார்க்கங்களிற் செல்லும் போது அவனைத் தடுத்திருப்பான்; இப்போது அவனுடைய உறவு இல்லாததால் பார்த்தசாரதி, தன் மனம் சென்ற வழிகளில் நடக்கலாயினான். அவ்வாறு நடந்ததால் சிறிது காலத்திற்குள் அவன் சம்பாதித்து வைத்திருந்த பொருள்களெல்லாம் தொலைந்து போயின. அவன் ஒரு கலகத்தில் அகப்பட்டு ஆறு மாதகாலம் சிறைவாச தண்டனையும் அடைந்தான். முடிவில் அவனுக்குத் தாங்க முடியாத வறுமையுண்டாய் விட்டது; அவன் ஆதியிலிருந்த நிலைமையினும் மிகத் தாழ்ந்த நிலைமையை அடைந்து விட்டான். அவனுடைய உடம்பில் மேகவியாதி முதலிய பலவகை நோய்களுண்டாய் விட்டன. வறுமையாலும், பிணிகளாலும் ஏற்பட்ட துன்பத்தை அவன் சகிக்கமுடியாமல் படாதபாடெல்லாம் பட்டான்; தன்னுடைய பழய நண்பனாகிய பரசுராமனிடம் தன் குறைகளைச் சொல்லிக் கொள்ளலாமா என்று நினைத்தான்; தான் அவனிடம் நன்றியறிதலின்றி நடந்துகொண்டது பற்றி அவ்வாறு செய்ய நாணிப் பேசாமலிருந்துவிட்டான். முடிவில் ஒருநாள் பரசுராமனே, பார்த்தசாரதியின் நிலைமையை உணர்ந்து அவன்மீது பரிவு கொண்டு வந்து அவனைப் பார்த்தான். பார்த்தசாரதி அவனைக்கண்டதும் தன்னுடைய பரிதாபநிலைமையை வெளியிட்டுக் கண்ணீர் விட்டழுதான். பரசுராமன், " நீ என்னுடைய உரவை யொழித்துத் தீயோருடன் கூடியதால் இந்நிலைமையை அடைந்தாய்'' என்று சொல்லி மீண்டும் அவனுக்குப் பல உதவிகளைச் செய்தான். பார்த்தசாரதியின் துன்பங்கள் ஒருவாறு நீங்கின.

 

“கெடுப்பதொழி

 

''கெடுப்பது - (பிறரைக்) கெடுத்தலாகிய தொழிலை, ஒழி - (மனிதனே! நீ) விட்டு விடக்கடவாய்'' என்பது இதன் பொருள்.

 

உலகத்தில் மனிதராய்ப் பிறந்தவர்கள், தம்மால் கூடியவரையில் பிறருக்கு நன்மையே புரிய வேண்டும். அவ்வாறு நன்மை புரிவார்க்குக் கடவுள் துணை செய்வார்; கடவுள் கிருபையால் அவர்கள் எப்பொழுதும், எவ்விடத்தும் சுகமே பெறுவார்கள். அவ்வாறின்றி, அவர்கள் சுயநலங்கருதியோ, வேறு காரணமாகவோ பிறருக்குத் தீங்கு செய்வாராயின் கடவுள் அவர்களைத் தண்டிப்பார்; அவர்களுக்குத்தாமே பல கெடுதிகள் சம்பவிக்கும். அவர்கள் இவ்வுலத்தில் பல துன்பங்களை அடைவதோடு இறந்த பின்னரும் நரக வாதனை யடைவார்கள்.'' கெடுவான் கேடு நினைப்பான் " என்றபடி, உலகத்தில் கேடுகளை அடைய வேண்டியவனே பிறருக்குக் கேடு நினைப்பான். இவ்வாறு பிறரைக் கெடுக்க நினைத்துக் கெட்டவர்களின் கதைகளில் ஒன்றை இதனடியில் விளக்குவாம்: -

 

ஒருமனிதன், ஒருகாரியத்தின் பொருட்டு ஆயிரம் ரூபாய்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துக்கொண்டு தன் ஊரிலிருந்து வாடகை வண்டியொன்று அமர்த்தி அதிலேறி நெடுந்தூரத்திலுள்ள ஓர் ஊருக்குப் புறப்பட்டான். அவ்வாறு புறப்பட்டுப் பதினைந்து மைல்  சமீபித்தபோது இரவு வந்துவிட்டது. அவ்விரவில் பணத்துடன் அவ்வூருக் கப்பால் செல்ல அவனுக்கு மனந்துணியவில்லை. எனினும் மறுநாள் காலையில், தான், குறித்த ஊருக்குப் போகவேண்டிய அவசரம் அவனுக்கேற்பட் டிருந்தது. அதனால், அவன், அவ்வூரில் துணை தேடிக்கொண்டாவது அவ்விரவில் பிரயாணம் செய்யத் துணிந்தான். அவ்வூரில், அவனுக்குத் தெரிந்த ஒரு மனிதனிருந்தான். அவன் அவ்வூருக்குப் பெரிய மனிதன். ஆதலின், அவனிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தால் அவன் தனக்குத் துணையாட்கள் சேர்த்து விடுவானென்று, பிரயாணி நினைத்து அவனைக் கண்டு, 'நண்பரே! நான் பணம் கொண்டு செல்கிறேன்; விடியும் வரையில் எனக்குத் துணையாக வரும்படி நீங்கள் இரண்டு ஆட்களை என்னுடன் அனுப்பவேண்டும்'' என்று அவனிடம் தெரிவித்தான். அவனுக்கு உடனே அப்பணத்தின் மேல் ஆசையுண்டாகிவிட்டது. அதனால் அந்தச் சண்டாளன்,'' எப்படியாவது நடுவழியில் இவனைக் கொலை செய்து விட்டு அந்தப்பணத்தைக் கைப்பற்ற வேண்டும்'' என்று முடிவு செய்து கொண்டான்.

 

அதன்மேல், பிரயாணிக்கு, ''நான் அப்படியே உதவிக்கு ஆளனுப்புகிறேன்" என்று கூறிவிட்டுத் தனக்குத் தகுந்த இரண்டு போக்கிரிகளிடம் சென்று,'' ஒருமனிதன் அதிகப்பணத்துடன் வந்திருக்கிறான்; அவன் இவ்விரவில் பிரயாணஞ் செய்ய, இரண்டு ஆட்கள் துணையாக வரவேண்டுமென்கிறான்; நீங்களிருவரும் அவனுடன் சென்று அவனைத் தொலைத்துவிட்டுப் பணத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும்; நாம் எல்லோரும் பங்கு போட்டுக் கொள்ளலாம்; அவனுடன் வண்டிக்காரன் ஒருவன் வந்திருக்கிறான்; அவனையும் நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம்; நாம் இரகசியமாக இவ் வேலையை முடித்தால் கேஸ் வெளிக்கு வராமல் மறைந்து விடும்'' என்று சொல்லிக் கொலை செய்வதற்குத் தகுதியான இடத்தையும் தெரிவித்தான். அவர்கள் அக்கொலைத் தொழிலுக் கிசைந்தார்கள். பின்னர் அம்மூவரும் வண்டிக்காரனை அழைத்து இரகசியமாக அவனிடம் தாங்கள் உத்தேசித் திருப்பதைக்கூறி,'' நீயும் எங்கள் செய்கைக் கிணங்கியிருந்தால் பணத்தில் பங்கு பெறுவாய்'' என்றார்கள். அவன் கூலிக்காரனானதால், தனக்கு அதிகப் பணம் கிடைக்கும் அவ்விஷயத்திற்குச் சுலபமாக இணங்கிவிட்டான்.

 

பின்னர் அந்தப் பெரிய மனிதன், தன்னுடன் வந்த கொலைபாதகர்களை அழைத்துக்கொண்டு போய்ப் பிரயாணியிடம் காட்டி,'' நீ இவர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போகலாம்'' என்று சொன்னான். அதன் மேல் பிரயாணி அவர்களுடன் தன் வாடகை வண்டியிலேறிப் புறப்பட்டான். அவனுடன் சென்றவர்கள் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தார்கள். பிரயாணி அவர்கள் மீது சந்தேகங்கொள்ளாமல், அவ்வாயுதங்கள், தன்னுடைய பாதுகாப்பிற்காக அவர்களால் கொண்டு வரப்படுகின்றன என்று நினைத்தான். உண்டி நெடுந்தூரஞ் சென்று ஒரு காட்டின் நடுவில் அந்தப்
பெரியமனிதன் குறிப்பிட்டவிடத்திற்குச் சமீபத்திற் சேர்ந்தது. அப்போது துணைக்குச் சென்ற மனிதர்கள், பிரயாணியிடத்தில், " நாம் இராமுழுவதும் கண்விழித்துக் கொண்டு போவதானால் கஷ்டமாயிருக்கும்; இங்கே சிறிதுநேரம் படுத்து உறங்கிவிட்டுப் போகலாம்; நாங்கள் இருக்கும் போது நீ எதற்கும் அஞ்சவேண்டியதில்லை'' என்றார்கள். பிரயாணி சந்தேகப்படாமல் அதற்கிசைந்தான். பின்னர் அவர்கள், வண்டியை, ஒருபக்கத்தில் விலக்கிக் கொஞ்ச தூரத்திற் கப்பாலிருந்த ஒரு மணலோடையில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அதுதான் அம்மனிதன் குறிப்பிட்ட விடம். பிரயாணி ஒருதுப்பட்டியை எடுத்து மணலில் விரித்துப் பணப்பையைத் தலைக்கு வைத்துப் படுத்துக்கொண்டான். மற்றவர்களும் துணிகளை விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.

 

சிறிதுநேரம் சென்றபின், வண்டிக்காரனும் மற்ற இருவரும் பிரயாணியைக் கொலை செய்வதற்குரிய தந்திரங்களை யோசிப்பதற்குத் தனியிடம் செல்ல உத்தேசித்து, நாங்கள் ஜலபாதைக்குப் போய் வருகிறோம்'' என்று பிரயாணியிடம் சொல்லிவிட்டுச் சிறிது தூரத்திற்கப்பால் சென்று ஒரு செடி மறைவிலிருந்து மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பிரயாணிக்கு அவர்கள் நடைக்கையில் சந்தேகம் உதித்தது. அதனால், அவன், விரித்த துப்பட்டியை அப்படியே போட்டு விட்டுப் பணப்பையை எடுத்துக் கொண்டு பூனை போல் பதுங்கி நடந்து போய், அவர்கள் இரகசியம் பேசுமிடத்திற்குப் பக்கத்தில் ஒரு செடி மறைவிலிருந்து அவர்களுடைய பேச்சைக் கேட்டான். அவர்கள் தன்னைக் கொலை செய்வதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தது அவனுக்கு விளங்கிவிட்டது. உடனே அவன், "அப்பா! நான் பிழைத்தேன்' என்று, தான் படுத்திருந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த ஒரு மரத்தடியிற் போய் மறைந்து, பின்னால் அவர்கள். என்ன செய்கிறார்களென்று கவனிக்கலாமென்று உட்கார்ந்திருந்தான்.

 

அப்படியிருக்கும் போது அவனைக் கொலை செய்யும் பொருட்டு அந்த ஆட்களை யனுப்பிய அப்பெரிய மனிதன், பேராசை கொண்டு, "அவர்கள் அந்தப்பணத்தில் கொஞ்சத்தை மறைத்துவிட்டு மீதியை நமக்குக் காட்டினாலும் காட்டுவார்கள்; ஆதலின், நாமும் போய் அவர்களுடன் கலந்து கொள்ள வேண்டும்'' என்று தீர்மானித்து வேகமாக நடந்து வந்து அங்கே பார்த்தான். பிரயாணியின் துப்பட்டி மாத்திரம் விரிக்கப்பட்டிருந்தது. மனிதர் எவருமில்லை. அதனால் அவன், "சரி; அவர்கள், அவனைக் கொன்று புதைக்கக் கொண்டுபோ யிருக்கிறார்கள்; அவர்கள் வரும்வரை நாம் இத்துப்பட்டியில் படுத்திருக்கலாம்'' என்று அதில் படுத்துக்கொண்டான். அவனுடைய கெட்டகாலத்தால் அவனுக்கு மிகுந்த நித்திரை வந்து விட்டது; சிறிதுநேரத்திற்குள் அவன், குறட்டைவிட்டுக் கும்பகர்ணனைப்போல் தூங்கினான். கொலையைப் பற்றி இரகசியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் ஒரு முடிவு செய்து கொண்டு விரைந்து அங்கே வந்தார்கள். அந்த மனிதன் குறட்டை விட்டுத் தூங்குவதைப் பார்த்து விட்டுப் பிரயாணிதான் தூங்குகிறானென்று நினைத்து அவன் கழுத்தை ஒரே வெட்டில் வெட்டித் துண்டித்துவிட்டார்கள். பிரயாணியைக் கொல்ல நினைத்த அப்பாவி, தானே மடிந்தான். அவர்கள் விரைந்து அவனுடைய சவத்தை எடுத்துக் கொண்டு போய் ஓரிடத்தில் புதைத்து விட்டுத் திரும்பி வந்து பணப்பையைத் தேடினார்கள். அது பிரயாணிகையிலிருக்கும் போது அவர்களுக்கு எப்படி அகப்படும்? நெடுநேரம் வரை அவர்கள் தேடித் தேடிப் பார்த்து இளைத்து முடிவில், "நாளைப் பகலில் வந்து அதைத் தேடியெடுத்துக் கொள்ளலாம் " என்று வண்டியுடன் திரும்பிக் கொலை செய்யத் தங்களைத் தூண்டிய அந்தப் பெரிய மனிதனுடைய ஊருக்குப் போனார்கள். அம்கே அந்த மனிதன் இல்லாதபடியால் பலவித சந்தேகங்களைக் கொண்டு மனங் கலங்கியிருந்தார்கள்.

 

பிரயாணியோ அங்கு மறைந்திருந்து நடந்தவற்றை யெல்லாம் தெரிந்துகொண்டு புறப்பட்டு அடுத்த ஊருக்குப் போய், அங்கிருந்த அதிகாரியிடம் எல்லா விவரங்களையும் கூறினான். அதிகாரி அந்தப் பிரேதத்தையும் எடுத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்தார்.

 

“கேள்வி முயல்

 

"கேள்வி - (நூற்களைக் கற்றறிந்த பெரியோர் சொல்லும் நற்பொருள்களைக்) கேட்பதற்கு, முயல் - நீ முயற்சி செய்'' என்பது இதன்பொருள்.

 

பொருள்களின் தன்மைகளை உள்ளவாறு உணா விரும்புவோர், நூற்களை முறைப்படி கற்ற அறிஞரிடம் எதனையும் கேட்டுக்கொள்வதற்கே முயல வேண்டும். அம்முயற்சியால் அவர்க்கு எப்பொருளிலும் சந்தேகமின்றி உண்மைக் கருத்துக்கள் உள்ளவாறு விளங்கும்; அத்தகைய பொருளுணர்ச்சியால் அவர்கள் உலகத்திற் பல நலங்களையு மடைவர்; பலராலும் புகழப்படுவர். இவ்வாறு கேள்வி ஞானத்தை விரும்பாது எப்பொருளையும் தம்மனம் போனவாறே தீர்மானித்துத் தாமே அறிவிற் சிறந்தாரெனத் தருக்கித் திரிவோர் உலக இயற்கையிற் சிறிதும் உணராதவராய், எதற்கும் தவறான பொருள் கண்டு, நலமடைவதை விட்டுத் தீமையையே அடைவர்; பலராலும் இகழவும் படுவர். இத்தகையினருள் ஒருவர் கதையை இதனடியில் விளக்குவாம்: -

 

ஒரு கிராமத்தில் மிகுந்த அகங்காரமுடைய ஒருவர் இருந்தார். அவர் தமிழை எழுதவும் படிக்கவுமாத்திரம் தெரிந்து கொண்டார். அவருக்குச் சிறந்த கல்வி ஞானம் இல்லை. அவர், தாமே எல்லாம் தெரிந்த சகல கலாவல்லவர் என்று தற்பெருமை கொண்டிருந்தபடியால், சிறந்த நூற்கருத்துக்களை உயர்ந்த கல்விமான்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. எதற்கும் தம் மனம் போனபடி தப்பர்த்தமே சொல்வார்; பெரியார் உண்மைக் கருத்துக்களை உரைத்தாலும், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்துக் கூறிவிடுவார். இவருக்குக் கேள்வி ஞானம் சிறிது மில்லா விட்டாலும் எல்லாத் தொழிலிலும் பழக்க முடையவர் போல் புகுந்து வேலை செய்யும் அவசர புத்தி மிகுதியும் உண்டு. இத்தகைய புத்திமான் ஒருசமயம் ஒருவனுக்கு வைத்தியம் செய்யப் புகுந்து விட்டார். அவனுக்கு உண்டாகியிருந்தது வெப்பு நோய். அதற்கு, இவர், வைத்திய புத்தகங்களில் மருந்து தேடினார். ஒரு புத்தகத்தில் அவ்வியாதிக்குத் திரிபலை லேகியம் தகுந்ததென எழுதப்பட்டிருந்தது. அதன் செய்பாகத்தில், '' கடு, தான்றி, நெல்லி மூன்றையும் சமனெடையாகப் பொடித்து, நெய் சர்க்கரை முதலியன சேர்த்து லேகியம் செய்து கொள்ள வேண்டும்'' என்ற விவரம் காணப்பட்டது. இதிற் சொல்லிய மூன்று சரக்குகளில், கடு வென்பது கடுக்காய், தான்றி யென்பது தான்றிக்காய், நெல்லி யென்பது நெல்லிக்காய். இந்தச் சரக்குகள் கிரமமாகச் சொல்லப்பட்டிருந்தும், இவர், இந்த முறையைப் பார்த்ததும், எதையும் பிறரிடம் சந்தேகமறக் கேட்டுத் தெளியாமல் தம் மனம் போனபடி அர்த்தம் பண்ணித் துணிந்து செய்யக்கூடியவராதலின், கடு என்பதற்குக் கடுக்காய் என்று அர்த்தம் பண்ணாமல் விஷம் என்று அநர்த்தம் செய்தார். கடு என்பது இரண்டு பொருளையும் தரும். எனினும் சமயத்துக்குத் தக்கபடி இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவருக்கு இத்தகைய அறிவும், கேள்விஞானமும், உலக அனுபவமும் இல்லாததால் இவ்வாறு அந்த முறைக்குப் பொருத்தமில்லாத அர்த்தத்தைச் செய்துகொண்டார்.

 

அவ்வாறு பொருள் கொண்டவுடனே இவர், " தான்றிக்காயும், நெல்லிக்காயும் துவர் வஸ்த்துக்கள்; குளிர்ச்சி தரக்கூடியவைகள்; விஷம் வெப்பமானது; இந்தச் சத்துரு மித்துருச் சரக்குகள் சேர்ந்தால் தான் சீக்கிரம் வியாதி நீங்கும்'' என்று படுத்தி செய்து பாஷாணத்தைத் தான்றிக்காயுடனும் நெல்லிக்காயுடனும் சேர்த்துப் பொடித்து லேகியம் செய்து வியாதிக் காரன் வாயில் உருட்டிப் போட்டுவிட்டார். அவன் சிறிது நேரத்துக்குள் பிணமாய் விறைத்துப் போனான். நூதன விவேகி திகிற்பட்டு விழித்துக் கொண்டிருந்தார். அவர் செய்த காரியம் வெளியாய் விட்டது; போலீஸ்காரர் செவிக்கும் எட்டி விட்டது. அவர்கள் உடனே வந்து அவிவேக வைத்தியரைப் பிடித்துக் கொண்டார்கள். நுட்பயோசனைக்காரர் கெட்ட சங்கடத்தில் மாட்டிக் கொண்டார். அவர் அதினின்றுந் தப்புவது பெரும் பிரயாசையாய் முடிந்தது.

 

“கைவினை கரவேல்

 

“கைவினை - (மனிதனே! நீ உனக்குத் தெரிந்த) கைத்தொழிலை, காவேல் - (தக்க சமயத்தில்) ஒளிக்காதே " என்பது இதன் பொருள்.

 

அருமையான கைத்தொழில்களைக் கற்றுக்கொண்டவர்கள் எந்த இடத்திலும், எந்தச் சமயத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் மறைக்கக் கூடாது. அங்ஙனம் மறைக்காமற் செய்து வந்தால் அவர்களுக்குப் பலரிடத்திலும் நன்மதிப்பும், மிக்க ஊதியமும் கிடைக்கும். தமக்குத் தெரிந்த தொழில்களை மறைப்பவர்க்கோ அவமதிப்பும், வரும்படிக் குறைவுமுண்டாகும். பலரும் அவர்களை வெறுப்பார்கள். அவர்களுடைய தொழில் வல்லமைக்கும் சிறப்பில்லாமற் போய்விடும். இவ்வாறு, தமக்குத் தெரிந்த தொழில்களை மறைப்பவர்க்குக் கேடுண்டாமென்பதற் குதாரணமாக ஒரு கதையுண்டு:

 

ஒரு நகரத்தில் நெசவுத் தொழிலில் வல்லவனொருவனிருந்தான். அவனுக்கு நெசவு சம்பந்தமான சகல தொழில்களும் தெரியும்; எந்த ஆடையைப் பார்த்தாலும் அதைப் போல் நெய்துவிடும் சாமர்த்தியம் அவனிடத்தில் அமைந்திருந்தது. அவன், அவ்வாறு அத்தொழிலிற் சிறந்தவனாயிருந்தும் அவ்வூரிலுள்ள மனிதர்கள் தொழில் அருமை தெரியாதவர்களாயிருந்தபடியால அவர்களில் எவரும் அவனை ஆதரிக்கவில்லை. அதனால் அவனுக்கு எவ்வித வரும்படியும் இல்லாமலிருந்தது. அவன் பிழைக்க வழியின்றிப் பெருந்துன்பப்பட்டான்; மிகுந்த பேராசைக்காரனாதலால் கையில் பணஞ்சேர வில்லையே யென்று கவலை கொண்டான்.

 

அவனுடைய நிலைமை அவ்வாறிருக்கும் போது அவ்வூரில் புடவைக் கடை வியாபாரி யொருவரிருந்தார். அவர் பல நாடுகளிலுள்ள ஆடைகளையும் வரவழைத்து விற்று வந்தார். அப்படி அவர் வியாபாரம் நடத்தி வருங்காலத்தில், நெசவுத் தொழிலையும் வைத்துக் கொண்டால் மிக்க இலாபம் சம்பாதிக்கலாமென்று கருதி, மேற்கூறிய நெசவுத்தொழில் வல்லவனை அவ்வேலைக்கு நியமித்து அவன் மூலமாக அத்தொழிலை நடத்தி வந்தார். அவரிடமிருந்து அவனுக்கு மாதமொன்றுக்கு முட்பது ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதனால் அவனுடைய பிழைப்புக்காரியம் தட்டின்றி நடந்து வந்தது. அவ்வாறு அவனுக்குப் பிழைக்கும் வழி யேற்பட்டவுடனே, அவன் தன்னுடைய பேராசைக் குணத்தால் முன்னே சோற்றுக்குத் திண்டாடியதையும், பின்னர் அந்த வியாபாரியால் சௌகரியம் ஏற்பட்டதையும் மறந்து, தனக்குக் கிடைக்கும் சம்பளத்திற்குச் சாதாரண ஆடைகளைத்தான் அவருக்கு நெய்து கொடுக்க வேண்டும்; அருமையான வேலைகளையெல்லாம் காட்டக்கூடாது என்று ஒரு கெட்ட தீர்மானத்தைச் செய்து கொண்டிருந்தான்.

 

அப்படியிருக்கும்போது ஒருசமயம் விநோதமான வேலைப்பாட்டுடன் நெய்யப்பட்ட பெங்களூர்ப் பட்டுத்துண்டு ஒன்று அந்தவியாபாரி கடைக்கு விற்பனைக்கு வந்திருந்தது. அது வியாபாரத்தில் அதிகமாகச் செலவாகக் கூடியதாயிருந்தது. அதனால் அவர், தம்முடைய நெசவுகாரனால் அதேவிதமானபல பட்டுக்குட்டைகளை நெய்வித்து விற்றால் மிகுந்த ஊதியந் தேடலாம் என்று முடிவு செய்து, அவனிடத்தில் அந்தப் பட்டுக் குட்டையைக் காட்டி "இதைப்போன்ற குட்டைகளை நீ நெய்வாயா? " என்று கேட்டார். அவன், '''இந்த வேலை எனக்குத் தெரியாது' என்று நாம் சொல்லி விட்டால், இவர்,
'உனக்கு நான் அதிகச்சம்பளம் தருவேன்; இவ் வேலை தெரிந்தால் நீ செய்' என்று கூறுவார்; அதன்மேல் நாம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டு இந்தஅருமையான வேலையைச் செய்யலாம்'' என்று தீர்மானித்து அவரிடம், '' எனக்கிந்த வேலை தெரியாது " என்று சொன்னான்.
 

உடனே அந்த வியாபாரி, அவனை நோக்கி, " அப்படி உனக்கந்த வேலை தெரியாவிட்டால் நீ விலகிக்கொள்; நான் அவ்வேலை தெரிந்த வேறொரு ஆசாமியை நெசவுத் தொழிலுக்கு நியமித்துக் கொள்கிறேன்" என்றுசொல்லி அவனை விலக்கி விட்டு வெளியூருக்குப் போய் அவ்வேலை தெரிந்த ஒருவனை அழைத்து வந்து, சம்பளத்துக்கு வைத்துக்கொண்டார். பேராசையால் தொழிலை மறைத்த பேயனுக்குத் தலையில் பேரிடி விழுந்தமாதிரி கலக்கமுண்டாய்விட்டது. அவனுக்கு வேலைபோன மறுதினமே வயிற்றுச் சோற்றுக்குத் திண்டாட்டம் வந்துவிட்டது; அதனால் அவன் பிழைப்புக்காக அங்குமிங்கும் ஓடினான்; ஒரு வழியுமேற்படவில்லை. முடிவில் அவன், "என்னடா! சங்கடம் வந்து விட்டதே! அவரிடத்திலேயே மீண்டும் போய் உண்மையைக்கூறி வேலைக்கமர்ந்து கொள்ளலாம் " என்று அவரிடம் போய், " பெங்களூர்ப்பட்டுக் குட்டை நெய்யும் வேலை எனக்குத் தெரியும்; நீங்கள் என்னை மீண்டும் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள்'' என்றான். அவர், " நன்றி கெட்டவனே! நெடு நாட்களாக உன்னை நான் காப்பாற்றி வந்தும் உனக்குத் தெரிந்திருந்த அத்தொழிலை எனக்குக் காட்டாமல் மறைத்துவிட்டு இப்போது எனக்கதுதெரியுமென்று சொல்லுகிறாய்; நீ மிகவும் வஞ்சகன்; ஆதலால் என் முன் நில்லாமற் போய்விடு " என்று அவனைத் துரத்திவிட்டார். பின்னர் அவன் எங்கும் வேலை அகப்படாமல் அலைந்து பெருந் துன்பத்திற்காளானான்.

 

“கொள்ளை விரும்பேல்”

 

"கொள்ளை - (பிறருடைய பொருளைக்) கொள்ளை யடித்தலை, விரும்
 பேல் - (நீ) விரும்பாதே " என்பது இதன் பொருள்.

 

பொருளுடன் வீட்டிலிருப்பவர்களையோ, வழியிற் செல்பவர்களையோ அடித்து வருத்தி அவர்களிடமுள்ள பொருளைக் கவர்ந்து செல்வதே கொள்ளை யென்பதாம். இது மனிதரைத் துன்புறுத்தி அவர் கைப்பொருளைக்கவருந் தொழிலாதலால் மிகவும் கொடியதாம். இதனைச் செய்வோர் நற்கதியடைய மாட்டார்கள்; இவ்வுலகத்திலும் சௌக்கிய மடையமாட்டார்கள். பெருங் கேட்டிற்குள்ளாகி அழிவார்கள். அவ்வாறு கெட்ட கொள்ளைக்காரர்களுடைய கதைகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்றை இதனடியில்விளக்குவாம்.

 

பண்டைக் காலத்தில் நம்நாட்டில் பலவகைக் கொள்ளைக் கூட்டத்தினர் பரவியிருந்தனர். இவர்களுள் கத்தி, ஈட்டி, கொம்பு முதலிய ஆயுதங்களுடன் பெருங் கூட்டமாகச் சென்று, ஊர்ப்பிரயாணஞ் செய்வோரை இராக்காலத்தில் வழியில் மறித்து அடித்தும், கிராமங்களிற் புகுந்து அவ்விடங்களிலுள்ளவர்களைத் துன்புறுத்தியும் அவர்களிடமுள்ள பொருள்களைக் கைப்பற்றிச் செல்வோர் ஒருவகையார். மேற்கூறிய ஆயுதங்களுடன் தீவத்திகளைக் கைகளில் பிடித்துக் கொண்டும், உருவந் தெரியாமலிருக்கும்படி முகத்தில் கரியைப் பூசிக் கொண்டும் முன்னுரைத்த இரண்டிடங்களினும் கொள்ளை யடிப்போர் ஒரு வகையார். பின் கூறப்பட்டவர்கள் தீவத்திக் கொள்ளைக்காரர் என்று கூறப்படுவார்கள். இவர்கள், தாங்கள் வளைந்து கொண்ட மனிதர்களிடமுள்ள பொருளைக் கேட்கும் போது தடையின்றிக் கொடுத்துவிட வேண்டும்; மறைத்து வைத்திருந்தால் அவ்வாறு மறைத்து வைத்த இடத்தைக் காட்டி விட வேண்டும்; அவ்வாறு கொடாவிட்டாலும், காட்டாவிட்டாலும் அககொள்ளைக்காரர்கள் தீவத்திகளால் அவர்களுடைய முகத்தில் சுடுவார்கள். இவர்களுடைய பெயரைக் கேட்டாலும் மனிதர்கள் நடுங்குவார்கள். இந்தத் தீவத்திக் கொள்ளைக்காரர்கள் எவர்க்கும் அஞ்சாதவர்களாதலின், தாங்கள் கொள்ளையடிக்கப் போகும் கிராமத்தாருக்கு முந்தியே தாங்கள் புறப்பட உத்தேசித்திருக்கும் நாளைத் தெரிவித்து விட்டுப் போகும் வழக்கமும் சில சமயங்களில் உண்டு.

 

இத்தகைய கூட்டத்தாரில் மிகவும் கொடுமையான ஒரு கூட்டத்தார்ஒருநாள், ஒரு கிராமத்திற்குக் கொள்ளையடிக்கப் போகத் தீர்மானித்து அக்கிராமத்தாருக்கு, ''உங்கள் கிராமத்திற்கு நாளைக்குக் கொள்ளையடிக்க நாங்கள் வருவோம்'' என்று முன்னறிக்கை அனுப்பினார்கள். அவ்வூரார் அவ்வறிக்கையைப் பார்த்தவுடன் "ஐயோ! என் செய்வோம்'' என்று மிகுந்த நடுக்கங் கொண்டார்கள்.'' இவர்களை எவராலும் அடக்குதல் முடியவில்லையே " என்று வருந்தினார்கள்.

 

அப்போது அங்கே புத்தியிற் சிறந்த ஒருவனிருந்தான். அவன் ஊராரை
நோக்கி, " நீங்கள் அஞ்சாமலிருங்கள்; நான் அவர்களைத்
தொலைத்து விடுகிறேன் " என்று மறுநாள் பகலில் ஊருக்கு வெளியில் சற்று தூரத்தில் மனிதர்கள் வரும் முக்கியமான வழியில் மிக்க உயரமும் நீட்சியுமான தென்னந் தட்டிப் பந்தலொன்றமைத்தான். நடக்கும் வீதியை மாத்திரம் விட்டு விட்டுப் பந்தலின் இரண்டு பக்கங்களையும் தட்டியால் மூடிவிட்டான். பந்தலுக்குக் கீழே தரையில், அந்தக் காலத்திலிருந்த நாட்டு வெடிமருந்தை, பந்தல் எவ்வளவு தூரமிருந்ததோ அவ்வளவு தூரம் வரையில் அரையங்குல கனமிருக்கும்படி கூடைக் கணக்காகக் கொண்டு வந்து சிதறி விட்டான். அதன்மேல் மெல்லிய துணிகளை விரித்துவிட்டான். நீண்ட வெடி மருந்துத் திரியொன்று செய்து அதன் ஒரு முனையைப் பந்தலுக்குக் கீழ் வெடிமருந்து சிதறிய விடத்தில் புதைத்து மற்றொரு முனையைப் பந்தலுக்கு வெளியில் சற்று தூரத்தில் ஒரு செடி மறைவில் நீட்டி வைத்து விட்டான். அந்த ஊருக்குள் யார் நுழைய வேண்டுமானாலும் அந்த வழியாகத்தான் போக வேண்டும்.
 

இந்த வேலைகளெல்லாம் முடிந்தபின் அந்த மனிதன், இரவானதும் ஒரு தேங்காய் நார்க்கயிற்றில் நெருப்பைக் கொளுத்திக் கொண்டு, அந்தப்பந்தலுக்குப் பக்கத்தில் வெடி மருந்து திரி வைக்கப்பட்டிருந்த செடி மறைவில் போயிருந்தான். இரவு பன்னிரண்டு மணியானதும் சுமார் ஐம்பது தீவத்திக் கொள்ளைக்காரர்கள், கைகளில் ஆயுதங்களையும் தீவத்திகளையும் வைத்துக் கொண்டு மிக்க பயங்கரமான கூச்சலுடன் அவ்வூரை நோக்கிச்சென்று மேற்கூறிய பந்தலைப் பார்த்து, "ஏதோ கோவில் திருவிழாவுக்காக இப்பந்தல் போடப் பட்டிருக்கிறது'' என்று நினைத்துச் சந்தேகமின்றி அதற்குள் நுழைந்தார்கள். எல்லோரும் பந்தலின் நடுவில் வந்ததும் செடி மறைவில் மறைந்திருந்த மனிதன் வெடி மருந்துத் திரியில் நெருப்பைக் கொளுத்தி விட்டு ஓட்டம் பிடித்தான். நெருப்பைத் திரியில் வைத்தது தான்தாமதம், கண்மூடித் திறப்பதற்குள் பந்தல் முழுவதும் நெருப்பு மயமாய் விட்டது. ஐம்பது கொள்ளைக்காரர்களும் வெந்து மடிந்தார்கள். அவ்வூரார் அந்த மனிதனைக் கொண்டாடினார்கள்.

 

கோதாட் டொழி

 

''கோது - குற்றம் பொருந்திய, ஆட்டு - - விளையாட்டை, ஒழி - (நீ) நீக்கி விடு " என்பது இதன் பொருள்.

விளையாட்டுக்களில் பலவகைகளிருக்கின்றன; அவற்றுள் உடம்புக்கு வலிமையைக் கொடுத்து நன்மையை உண்டாக்கத் தக்கவைகளுமுண்டு; உயிருக்கே ஆபத்தை விளைவிக்கத் தக்கவைகளுமுண்டு. சிலர் தினந்தோறும், உடம்பை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளும் பொருட்டு வேலை யொழிந்த நேரங்களில் காலையிலோ மாலையிலோ விளையாட்டுக்கென ஒரு நேரத்தை வகுத்துக்கொண்டு அந்நேரத்தில் நலந்தரத்தக்க விளையாட்டுக்களைச் செய்து நன்மையடைந்து வருகின்றார்கள். சிலர், கிரமந்தவறிக் கேடு விளைவிக்கத் தக்க விளையாட்டுக்களில் எந்த நேரத்திலும் புகுந்து ஆபத்துக்குள்ளாகின்றார்கள். அவ்வாறு கேடடைந்தவர்களின் கதைகள் பலவுண்டு; அவற்றுள் ஒன்றை இங்கு மாணவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விளக்குவாம்.

 

காவிரியாற்றில் மழைக்காலத்தில் மிகுந்த வெள்ளம் பெருகி இருகரைகளிலும் புரண்டோடுவது வழக்கம். அவ்வாறு பெருக்கெடுத்தோடுங் காலத் தில், திருச்சிராப்பள்ளியில் அந்த ஆற்றுக்குக் குறுக்கேயுள்ள பாலத்தின் கீழ் பக்கமுள்ள கட்டைச் சுவரின் மேல், நீரில் நீந்தத் தெரிந்த பல சிறுவர்கள் ஏறி நின்று வெள்ளத்திற் பாய்ந்து நெடுந்தூரம் வரை நீந்திச் சென்று கரையேறி விளையாடுவார்கள். போலீஸ்காரர்கள், " இது அபாயமான விளையாட்டு' என்று அவர்களைத் தடுத்தாலும் அவர்கள் நிற்பதில்லை. இத்தகைய விளையாட்டு நெடுங்காலமாக நடந்து வந்தது. முடிவாக ஒரு வருடத்தில் போலீஸ்காரர்கள்,'' பாலத்தில் ஏறி எவரும் வெள்ளத்தில் குதிக்கலாகாது'' என்று அச்சிறுவர்களைக் கண்டிப்பாகத் தடுத்துவிட்டார்கள். அச்சிறுவர்களில் ஒருவன் மாத்திரம் அச்சேவகர்களுடைய கட்டுக்கடங்காமல் அவர்கள் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பக்கம் போய் வெள்ளத்திற் பாய்ந்து விடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான். அவனைப் பிடித்துக் கண்டிக்க, போலீஸ்காரர் எவ்வளவோ முயன்றும் அவர்களால் அது முடிய வில்லை. அவன், ஏதோ ஓர் அவசர வேலையாகச் செல்பவன் போல் போலீஸ்காரர் முன்பு நடித்துக்கொண்டே வேகமாகப் பாலத்தின் மேல் நடந்து போய்த் திடீரென்று வெள்ளத்திற் பாய்ந்து விடுவான். அவனுக்கு அதில்மிக்க உற்சாகமுண்டு. மனிதர்கள் பார்த்து நடுங்கும்படி கொந்தளித்துச் செல்லும் அவ்வெள்ளத்திற்கு அவன் சிறிதும் அஞ்சுவதில்லை.

     

இப்படி அவன், இந்த ஆபத்தான விளையாட்டை நடத்தி வருங்காலத்தில் ஒருநாள் புதிய வெள்ளம் பெருகிச் சுழித்துக் குதித்துப் பேரிரைச்சலுடன் மரம், செடி, கொடி முதலியவற்றை அடித்துக்கொண்டு மிக்க வேகமாய்ச் சென்றது. அதைப் பார்த்து மனிதர்கள் அஞ்சிப் பாலத்தின் மேலே கூடச் செல்லாமலிருந்தார்கள். அத்தருணத்திலும் மேற்கூறிய சிறுவன், தனக்கேற்பட்டிருந்த செருக்கால் சிறிதும் அஞ்சாமற்சென்று காலத்தின் மேலேறி வெள்ளத்திற் பாய்ந்தான். அந்தோ ! பரிதாபம் ! அவன் அவ்வாறு பாய்ந்த மாத்திரத்தில் அவனுடம்பை ஒரு பெரிய கொடி சுற்றிக்கொண்டது. அதனால் அவன் கால்கைகளை அசைத்து நீந்த எதுவில்லாமற் போயிற்று. உடனே ஒரு பெரிய நீர்ச்சுழியானது அவனைத் தலைகீழாகக் கொண்டு போய் மணலுக்குள் சொருகிவிட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மாண்டொழிந்தான். அவனுடைய உடம்பும் பிறர் கண்ணுக்கு அகப்படாமற் போயிற்று.

 

 

 

“சக்கர நெறிநில்

 

"சக்கர நெறி - (அரசனுடைய கட்டளையாகிய) சக்கரத்தின் வழிகளிலே, (அதாவது சக்கரம் செல்லுகின்ற மார்க்கத்திலேயே), நில் - (மனிதனே! நீ அடங்கி) நிற்பாயாக, (அதாவது மன்னனுடைய கட்டளைக்கு நீஅடங்கி நட)'' என்பது இதன் பொருள்.

 

கடவுளுக்கு உலகத்தை ஆக்கவும் அழிக்கவும் எவ்வாறு வல்லமையுண்டோ அவ்வாறே ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கும் அந்நாட்டு மக்களை ஆக்குவதற்கும், அழித்து விடுதற்கும் திறமையுண்டு. அவன் ஒருவர் மீதுகோபங் கொண்டால் அவரை அழித்து விடுவான்; ஒருவரிடத்தே அன்பு செலுத்தினால் அவரைப் பல நன்மைகளடையச் செய்வான். ஆதலின் நலம்பெற்று வாழவிரும்புவோர் அவனுக்குக் கோபமுண்டாகாதபடி அவன் கட்டளைக்கடங்கி நடத்தல் வேண்டும். அவ்வாறு நடவாதவர் அழிந்து போவது திண்ணம். அரசனுக் கடங்காமலிருந்து கெட்டோர் பலருண்டு; அவர்களுள் ஒருவரின் கதையை இங்குச் சுருக்கமாக எழுதிக் காட்டுவாம்: -

 

ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசனுடய ஆளுகைக்குட்பட்ட கிராமமொன்றிருந்தது. அதில் இருந்த குடிகளெல்லோரும் மிகவும் நல்லவர்கள்; அரசன் மீது விசுவாசமுடையவர்கள். அவர்கள் அவ்வாறு மன்னனிடத்து நேயம் பாராட்டி வந்தபடியால், அரசனும் அவர்கள் மீது மிக்க அன்புடையவனாய் அவர்களுக்கு வேண்டிய பற்பல உதவிகளைச் செய்துவந்தான். அக்குடித்தனக்காரர்கள் எவ்வித குறைவுமின்றி மனக்களிப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

 

அப்படி வாழ்ந்து வருங்காலத்தில், அவ்வூர்ப் பெரிய குடித்தனக்காரருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பதினாறு வயதடைந்தவுடனே அவனுடைய தகப்பனார் இறந்து விட்டார். குடும்பப் பொறுப்பை அந்த வாலிபன் தாங்கினான். ஆனால், அவனுக்கு உலக இயற்கை சிறிதும் தெரியாது. அதனால் அவன் யார் எதைச் சொன்ன போதிலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்துத் தன் புத்திக்குத் தோன்றும் காரியங்களையே செய்து கொண்டு வந்தான். அவனுக்கு நல்ல காரியமும் தெரியாது, கெட்ட காரியமும் தெரியாது, செய்யத்தக்கதும் தெரியாது, செய்யத் தகாததும் தெரியாது. அவன் இத்தகைய குணங்களுடன் ஒரு நூதன மனிதனாய் அங்கு வாழ்ந்து வருங்காலத்தில், அரசனுடைய காரியஸ்தர்கள், அந்தக் கிராமகதின் குடிகளிடம் வரி வசூலிக்க வந்தார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் வரியை அவர்களிடம் செலுத்திவிட்டார்கள். அந்த வாலிபன் மாத்திரம்,'' அரசருக்கு வரி எதற்காகக் கொடுக்கவேண்டும்? கடவுளால் படைக்கப்பட்ட பூமியில் நாம் பயிரிடுகிறோம். கடவுள் மழை பெய்யச் செய்கிறார்; மழையினால் பயிர் விளைகிறது; அதனால் நாம் பிழைக்கிறோம்; அரசர் நம் பிழைப்புக்கு என்ன உதவி செய்கிறார்? கடவுளுடைய உதவி பெற்று நம் சொந்த உழைப்பைக் கொண்டு நாம் வாழ்வதற்கு அரசர் நம்மிடம் வரிவாங்குவது நியாயமில்லை; ஆதலால், நான் வரிச் செலுத்தமாட்டேன் " என்று தன்னுடைய தர்க்க புத்திக்குத் தகுந்தபடி முரட்டு நீதி பேசினான். உத்தியோகஸ்தர்கள் வரிக்காக அவனுடைய சொத்துக்களை எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தார்கள். அந்த வாலிபன் அவர்களைத் தடுத்து அடித்துக் கலகஞ் செய்தான். வேலைக்காரர்கள் அரசனிடம் போய் அந்த வாலிபனுடைய செய்கையைத் தெரிவித்தார்கள். அரசன்,'' அவனை எவ்வித் துன்பத்திற்கும் உட்படுத்த வேண்டாம்; அவனிடம் வரிக் கேட்க வேண்டாம்; அவன் நம்முடைய ஆளுகைக்குட் படாதவன் என்பதையும், இனி நாம் அவனைப் பற்றிய எதையும் கவனிக்க மாட்டோம் என்பதையும் விளம்பரமூலமாக எங்கும் தெரிவித்து விடுங்கள்'' என்று வேலைக்காரருக்குக் கட்டளையிட்டான். அவர்கள், அவ்வாறே அக்கட்டளையை நிறைவேற்றினார்கள்.

 

அந்த விளம்பரம் வெளியான மறுநாளே சில போக்கிரிகள் சேர்ந்து, "நாம் அந்தப் பெரிய குடித்தனக்காரர் மகன் வீட்டில் என்ன கெடுதி செய் தாலும் இனிக் கேட்பாரில்லை; நாம் அவனுடைய பொருள்களை வேண்டிய மட்டும் கொள்ளையடிக்கலாம்'' என்று துணிந்து அவனுடைய நிலங்களில் விளைந்திருந்த பலன்களையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு போய்விட்டார்கள். அவ்வாலிபன் அதைக்கண்டு, "இஃதென்ன கேள்வி முறையில்லாத ஊராயிருக்கிறது'' என்று கதறினான். அப்போது அவ்வூரார் அவனை நோக்கி, ''நீ அரசனுடைய ஆளுகைக்குக் கட்டுப்பட்டிருந்தால் இப்பேர்ப்பட்ட போக்கிரிகள் உன்னிடம் வரமாட்டார்கள்; ஒருசமயம் வந்தாலும் அதிகாரிகள் அவர்களை அடக்கிவிடுவார்கள்'' என்று சொன்னார்கள். அதைக்கேட்டும் அவன் அரசனுக்கடங்கி நடக்க வேண்டுமென்னும் எண்ணங் கொள்ளவில்லை. பின்னர்ச் சில தினங்கள் செல்வதற்குள்ளாகவே ஒருநாளிரவு, மேற்கூறிய போக்கிரிக் கூட்டத்தார் அந்த வாலிபனுடைய வீட்டிற் புகுந்து பொருள்களைக் கொள்ளையடித்தார்கள். அப்போது அவ்வீட்டு வாலிபன் மிகுந்த வீரத்துடன் அவர்களை எதிர்த்துத் தடுத்தான். அவர்கள் அவனை அடித்துக் கால் கைகளை முறித்துத் தள்ளிவிட்டு வீட்டிலொன்றுமில்லாமல் எல்லாவற்றையும் வாரிக் கொண்டு போய்விட்டார்கள். வாலிபன் தெருத்திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அவனுடைய நிலைமையைப் பார்த்த அவ்வூரார், அவனைப்பார்த்து, "நீ அரசனுடைய ஆக்ஞைக்குக் கட்டுப்படாதிருக்கும் வரையில் உனக்குத் துன்பங்கள் நேர்ந்து கொண்டே தானிருக்கும்; நீ கவலையற்று உலகத்தில் வாழுதல் முடியாது'' என்று சொன்னார்கள். அதன்பிறகு தான் அரசன் ஆணைக் குட்படாமல் மனிதர் உயிர்வாழல் முடியாது என்ற உண்மை அவன் மனதிற்பட்டது. உடனே அவன், அரசனிடம் சென்று வணங்கி, "நான் செய்தது தவறு; இனி ஒழுங்காக வரிச் செலுத்துவேன்; என்னை ஆட்கொண்டருள வேண்டும்'' என்று தன் குறைகளை வெளியிட்டான். உடனே அரசன், அவனுடைய பொருள்களைக் கொள்ளை யடித்தவர்களைக் கண்டு பிடித்துத் தண்டித்து அவற்றை மீட்டு அவனுக்குக் கொடுக்கும் படி அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் அவ்வாறே அவற்றைச் செய்தார்கள். பின்னர் வாலிபன் கிரமமாக அரசனுடைய வரியைச் செலுத்திக் கொண்டு துன்பமற்று வாழ்ந்திருந்தான்.

 

“சான்றோ ரினத்திரு

"சான்றோர் - (அறிவினாலே) நிறைந்தவர்களுடைய (அறிவு நிறைந்தவர்க ளுடைய), இனத்து - கூட்டத்திலே, இரு - (நீ எப்போதும்) சேந்திரு, " என்பது இதன் பொருள்.

 

மனிதர்கள் எப்பொழுதும் அறிவுடையவர்களின் கூட்டத்திலேயே சேர்ந்திருக்க வேண்டும்; அவ்வாறு கூடியிருந்தால் அவர்களுக்கு நல்லறி வுண்டாகும்; பலவழிகளிலும் மேன்மை ஏற்படும். அப்படி அறிவுள்ளவ ரோடு கூடாமல் மூடரோடு கூடுவார்க்கு எந்நாளும் இழிவே உண்டாகும்; அவர்கள் பல துன்பங்களுக்கும் ஆளாவார்கள். இவற்றை அடியில் வரும் கதை விளக்கும்.

 

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நகரத்தில் இரண்டு வாலிபர்கள் நண்பர்கள் ளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் நாகப்பன்; மற்றொருவன் பெயர் தங்கச்சாமி. நாகப்பன், சிங்கையா என்ற ஒரு மிட்டாதாரிடம் வேலைக்குச் சேர்ந்தான். தங்கச்சாமி சிங்கையாவின் பங்காளியாகிய சுந்தரபாண்டியர் என்பவரிடம் வேலைக்கமர்ந்தான். சிங்கையா முரட்டுச் சுபாவமுடையவர்; உயர்ந்த அறிவில்லாதவர்; இடம்பக்காரர்; கெட்ட காரியங்களை மிகுதியாகச் செய்பவர்; முன்பின் யோசியாமல் எந்தக் காரியத்தையும் மூர்க்க மாகச் செய்யக்கூடியவர்; தாசி வீடுகளுக்குச் செல்லும் பழக்கமுடையவர்; எந்த நேரத்திலும் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டிருப்பார். சுந்தரபாண்டியரோ சாந்தகுணமுடையவர்; அறிவிற் சிறந்தவர்; கல்வியில் தேர்ந்தவர்; தமிழ்ப் புலவர்களோடு எப்பொழுதும் கூடியிருப்பவர்; பெரியோர்களுடைய பழக்கமே அவருக்கதிக முண்டு. இவர் இத்தகைய நற்குணங்களையுடையவரா யிருந்தும் இவரிடத்தில் பொருள் குறைவாயிருந்தது; இவர் இடம்பமற்ற வாழ்க்கை யுடையவராயிருந்தார். சிங்கையா விட மிருந்த மிட்டாவுக்குச் சரியான உரிமைக்காரர் இவரே. அப்படியிருந்தும் அவர் தம்முடைய முரட்டுச் செய்கையால் அந்த மிட்டாவைக் கைப்பற்றி ஆண்டு வந்தார். அதனால், அந்தச் சிங்கையா விடத்தில் ஆடம்பரச் செய்கைகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆடம்பரத்தை விரும்பும் அயோக்கிய வாலிபர்களெல்லாம் அவரை எப்பொழுதும் சூழ்ந்துகொண் டிருந்தார்கள். நற்குணமுடையவர்களெள்ளோரும் சுந்தர பாண்டியரிடத்தில் சேர்ந்திருந்தார்கள். இந்நிலையில் சுந்தர பாண்டியர், மிட்டா தமக்குக் கிடைக்க வேண்டுமென்று சிங்கையா மீது வழக்குத் தொடுத்திருந்தார்.

 

இப்படி இவர்கள் விரோதங்கொண்டிருக்கும் போது தான் மேற்கூறிய நாகப்பனும், தங்கச்சாமியும் இவர்களிடம் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். அப்படியிருக்கும் போது நாகப்பன், தன்னுடைய நண்பனாகிய தங்கச்சாமி செல்வாக்கில்லாத சுந்தர பாண்டியரிடத்தி லிருப்பது கூடாதென்று நினைத்து அவனிடத்தில், "நண்பனே! நீ பொருளில்லாத சுந்தர பாண்டியரிடத்தி லிருப்பது தகாது; நானிருக்கும் சிங்கையாவிடம் வந்து விடு " என்று சொன்னான். அதற்குத் தங்கச்சாமி, ''நாகப்பா! சிங்கையா சிறிது செல்வமுடையவரா யிருக்கிறாரென்று நீ அவரை விரும்புகிறாய்; அவரோ மிகுந்த கெட்ட நடக்கைகளை யுடையவர்; அவற்றால் ஒரு சமயத்தில் அவர்க்குத் தீங்கு நேர்வதோடு அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் துன்ப முண்டாகும்; சுந்தர பாண்டியரோ பொருளில்லாதவராயிருந்தாலும் மிகுந்த நற்குணமுடையவர்; அதனால் பின்னொரு காலத்தில் அவருக்கு நன்மை யுண்டாகும்; அந்த நன்மையால் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உயர்வுண்டாகும்; ஆதலால், நான் அவரை விட்டு வரமாட்டேன்; நீ சிங்கையாவை விட்டு நானிருக்குமிடத்திற்கு வந்துவிடு; சுகப்படுவாய்'' என்று சொன்னான். அவன் இடம்பவாழ்க்கையை விரும்பியவனாதலின், தங்கச்சாமி கூறியதைச் சட்டை பண்ணவில்லை.

 

இப்படி இவர்கள் வாழ்ந்துவருங் காலத்தில் ஒருநாளிரவு சிங்கையா சாரதாம்பாள் என்னும் ஒரு தாசி வீட்டிற்குப் போனார். நாகப்பனும் அவர் கூடச் சென்றிருந்தான். சிங்கையா தம் வழக்கம் போல் குண்டுத் தோட்டா வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு போயிருந்தார். சிங்கையாவும், சாரதாம்பாளும் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாகப்பன் சிங்கையாவுக் கெதிரில் நின்று விசிறியால் விசிறிக் கொண்டிருந்தான். அப்போது சாரதாம்பாள் சிங்கையா விடமிருந்த துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, " இதனால் எப்படிச் சுடுகிறது? " என்று அவரைக் கேட்டாள். அவர் அந்தத் தாசியை மகிழ்விக்க வேண்டுமென்ற கருத்து ஒன்றையே கொண்டு வேறெதிலும் புத்தியைச் செலுத்தாமல் துப்பாக்கியை எடுத்துத் தோட்டாவைக்கும் பக்கத்தை மடக்கி அதிலிருந்த தோட்டாவை எடுத்து, 'இதை இப்படித்தான் வைக்க வேண்டும் " என்று துப்பாக்கியின் பின்புறக் குழாயினுள் மீண்டும் வைத்துத் துப்பாக்கியை நிமிர்த்திச் சரிப்படுத்திக் கொண்டு, " இப்படித்தான் சுட வேண்டும்'' என்றுநாகப்பன் மார்புக்கு நேரே நீட்டிச் சுட்டுவிட்டார். அவர் நுட்பபுத்தியில்லாதவரானபடியால் எதிரில் நாகப்பன் நின்றதைக் கவனிக்கவேயில்லை. வெடி கிளம்பியவுடன் நாகப்பன் மார்பில் குண்டு பாய்ந்தது. அவன் திடீரென்று வீழ்ந்து மரண மடைந்தான். உடனே சிங்கையாவும், சாரதாம்பாளும் கொலைக் குற்றத்திற் சிக்கிக் கொண்டார்கள். அன்று சுந்தர பாண்டியருக்கே மிட்டா உரிய தென்று கோர்ட்டில் தீர்ப்பாகிவிட்டது. சுந்தர பாண்டியர் அப்பொழுதே தங்கச்சாமியைத் தம்முடைய மிட்டாவுக்கு மானேஜராக நியமித்துவிட்டார். அதன்மேல் சுந்தர பாண்டியர் மகிழ்ச்சியடைந்து தங்கச்சாமியுடன் வண்டியில் ஏறி ஒரு தெருவின் வழியாக வீட்டிற்கு வந்தார். அப்பொழுது நாகப்பன் பிரேதம் போலீஸ்காரரால் அவருக் கெதிரில் கொண்டு வரப்பட்டது. தங்கச்சாமி நாகப்பனுக்கு நேர்ந்த மரணத்தையுணர்ந்து, "இவன் சான்றோ ரினத்தைச் சாராததால் இவ்விடருக் குள்ளானான்" என்று சுந்தர பாண்டியரிடம் சொல்லி விசனமடைந்தான். அவரும் நாகப்பன் விஷயத்தில் பரிவு கொண்டார். பின் சிங்கையாவும், சாரதாம்பாளும் தண்டிக்கப்பட்டார்கள். சுந்தரபாண்டியர், மிட்டாவையடைந்து தங்கச்சாமியுடன் மனக்களிப்புற்று வாழ்ந்து கொண்டிருந்தார்.


“சித்திரம் பேசேல்


      “சித்திரம் - (பொய்யை மெய் போலக் காட்டிப் பேசும்) அலங்காரமான
 வார்த்தைகளை, பேசேல் - - (நீ) பேசாதே'' என்பது இதன் பொருள்.

 

சிலர், தங்களை ஆதரித்து வரும் பிரபுக்கள் மகிழ்ச்சியடையும் பொருட்டும், மற்ற மனிதர்கள் கேட்டு ஆனந்திக்கும் பொருட்டும் உலகத்தில் நடவாத காரியங்களை நடந்தவை போல அலங்கரித்துப் பேசுவார்கள். அவற்றைக் கேட்டு எல்லோரும் ஆனந்திப்பார்கள். அப்படி ஆனந்தித்து வந்தாலும் ஒருகாலத்தில் சித்திரம் பேசும் அவர்களுடைய பொய் வெளிப்பட்டு விடும். அப்போது அவர்கள் மிகுந்த மானக்கேட்டையும், கெடுதலையும் அடைவார்கள். அவ்வாறு கேடடைந்தவர்களுடைய கதைகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்றை இதனடியில் விளக்குவாம்:

 

ஒரு நகரத்தில் செல்வத்திற் சிறந்த பிரபு ஒருவர் இருந்தார். அவர் வேடிக்கையான காரியங்களிலேயே எப்பொழுதும் பொழுது போக்கக்கூடியவர்; அதனால் அவர் விநோதமாகப் பேசுவோர் பலரைத் தம்மிடம் வேலைக்காரராகச் சேர்த்துவைத்திருந்தார். அவர்கள், பொய்யும், மெய்யுங் கலந்த பல விநோத வார்த்தைகளையே எப்போதும் பேசி வருவார்கள். அவர்களுடைய அலங்கார வார்த்தைகளைக் கேட்டு அந்தப் பிரபு ஆனந்தக்கடலில் மூழ்குவார். அவரிடமிருந்த விநோதப் பேச்சுக்காரர்களில் சின்னப்பா என்பவன் சிறந்தவனா யிருந்தான். அவன் பேசுங் காரியங்களில் மெய் சிறிது மிராது; பொய்யையே அவன் மிகுதியும் பேசுவான். பிரபுக்களாயிருப்பவர்கள் எதிலும் உண்மையை விசாரித்துணராமல் தம்மையடுத்திருக்கும் வாய்ப்பகட்டுக்காரரின் பொய்யலங்கார வார்த்தைகளைக் கேட்டு மகிழக் கூடியவர்கள் ளாதலால், மேற்கூறிய பிரபு சின்னப்பா கூறும் பொய் வர்த்தமானங்களைக்கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து வந்தார்.

 

அவன் ஒருநாள் அவரிடத்தில்,'' பிரபு அவர்களே! சமீபத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு குடித்தனக்காரனுடைய வயலில் ஒருவாழை நான்கு தாறுகளை ஈன்றிருக்கின்றது; தினந்தோறும் பல மனிதர் அங்கே வந்து இந்த அதிசயத்தைப் பார்த்துப் போகிறார்கள்; நானும் பார்த்து வந்தேன்; இது கலிகால அற்புதம் " என்று நடவாத ஒரு பொய் வர்த்தமானத்தைக் கூறினான். அப்பிரபு, " நாமும் போய் அதைப் பார்த்து வருவோம் " என்றார். அவர் அப்படிப் புறப்பட்டு அந்த இடத்திற்குப் போனால் தன்னுடைய பொய் வெளியாகி விடுமென்று சின்னப்பாவுக்குத் திகிலுண்டாகி விட்டது. அதனால் அவன், அவரை அங்கே போகவிடாமல் தடுத்து விடக்கருதி, அவரை நோக்கி, '' இந்த அற்பக்காரியத்திற்காக நீங்கள் வரவேண்டியதில்லை; என்னிடம் பத்து ரூபாய் கொடுத்தால் நான் அதைக்கொண்டு போய் அந்தக் குடித்தனக்காரனிடம் கொடுத்து அந்த வாழையை அடியோடு வெட்டிக்கொண்டு வந்து விடுவேன்'' என்றான். பிரபு அதற்குச் சம்மதித்து அவனிடம் பத்து ரூபாய் கொடுத்தார். அந்த வாழை உண்மையாகவே இருந்தால் தானே அவன் சொன்ன படி அதைக் கொண்டு வருவான்? அஃதங்கே இல்லாதபடியால், அதற்காகச் செய்யவேண்டிய ஒரு தந்திரத்தை முடிவு செய்து கொண்டு உடனே அந்த ரூபாயைக் கொண்டு போய்த் தன்னுடைய வீட்டில் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறாமல் ஒருநாள் முழுதும் படுத்திருந்து மறுநாள் வெளியேறி முகவாட்டத்துடன் அந்தப் பிரபுவிடம் போய், "ஐயோ! 'கைக்கெட்டினது வாய்க் கெட்டாமற் போய்விட்டது'; நான் அந்தக் குடித்தனக்காரனிடம் ரூபாயைக் கொடுத்து வாழையை அடியோடு வெட்டியெடுத்துத் தலையில் வைத்துச் சுமந்து கொண்டு சந்தோஷத்துடன் சாலை வழியாக வந்தேன்; ஒரு கோவில் யானை எதிரில் வந்தது; அது என் சமீபத்தில் வந்தவுடன், தலையிலிருந்த வாழைமரத்தைக் கண்டு தின்ன விரும்பித்தும்பிக்கையால் அதைப் பிடித்திழுத்து வாயில் வைத்து மென்று தின்றுவிட்டது; அதன் வாயில் சென்ற வாழையை மீட்டுக் கொண்டுவா என்னால் முடியவில்லை; தங்களுக்கு அதை நான் காட்டியிருந்தால் திருப்தியாயிருக்கும்; அவ்வாறு திருப்தி யேற்படுவதற் கிடமில்லாமல் அந்த யானை செய்து விட்டது; நான் இங்கே வருவதற்கே எனக்கு மிகுந்த வெட்கமாகி விட்டது "என்று பெரும் புளுகு புளுகினான். பிரபு அவனுடைய வார்த்தைகளை மெய்யென்றே நம்பி, " அது போனால் போகிறது " என்று அவனுக்குச் சமாதானங்கூறி, அவன், நான்கு குலையீன்ற வாழைமரத்தைக் கண்டு வந்து சொன்னதற்காக மகிழ்ச்சி யடைந்திருந்தார். இப்படியே அவன் பல தினங்களிலும் பல கட்டுக் கதைகளைச் சொல்லி அவரிடம் பணம் பறித்துக் கொண்டிருந்தான்; அவரும் தம்முடைய பேதைமைத்தனத்தால் அவன் வார்த்தைகளை நம்பிமகிழ்ச்சி யடைந்து வந்தார்.

 

இப்படி அவன் பொய்க்கதை கூறுவதில் பேர் பெற்றவனாய் வாழ்ந்து வருங்காலத்தில் ஒருநாள் ஒரு பெரும் பொய் கூறத் தொடங்கி, ஒரு புதியரோஜா புஷ்பத்தைக் கொண்டு வந்து அந்தப் பிரபுவிடம் கொடுத்து, " மகாப்பிரபு அவர்களே! இந்த ரோஜா மலரினுடைய சரித்திரம் மிக்க விநோதம் பொருந்தியது; இஃதொரு மல்லிகைச் செடியில் பூத்திருந்தது; தங்களைப் போன்ற ஒரு பிரபு இந்தச் செடியை அன்னிய நாட்டிலிருந்து வரவழைத்து மிக்க அருமையாக வளர்த்து வருகிறார்; அவருக்கும் எனக்கும் மிகுந்த சிநேகமுண்டு; அதனாலேயே இந்த அருமையான புஷ்பத்தை அவர் எனக்குக் கொடுத்தார்; இது தங்களுக்கே உரியதாகுமென்று நான் இதைத் தங்களிடம் சேர்ப்பித்தேன்; ஒரு சாதிச் செடியில் மற்றொரு சாதி மலர் தோன்றுவது மிகவும் அற்புதமான செய்கையல்லவா? " என்று சொன்னான். பிரபுமிக்க மகிழ்ச்சியோடு அந்தப் பூவைக் கையில் வைத்துக்கொண்டு, " ஓ ! இஃதவ்வளவு அதிசயமான மலரா? இந்தச் செடியை வளர்த்து வரும் பிரபு யார்?'' என்றார். அதற்குச் சின்னப்பா,'' சதுர்வேதமங்கலத்திலுள்ள சங்கரலிங்கம்பிள்ளையென்பவர் தம்முடைய தோட்டத்தில் இச்செடியை வைத்து வளர்த்துவருகிறார்'' என்றான். சதுர்வேதமங்கலம் என்பது சுமார் பத்துமைல் தூரத்திலுள்ள ஊர்; அவ்வூர்ச் சங்கரலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சின்னப்பா கேள்விப்பட்டிருந்தான்; ஆனால் அவருடைய பழக்கமே அவனுக்கில்லை; அவர் அத்தகைய விநோதச் செடியைவைத்து வளர்க்கவுமில்லை. அப்படியிருந்தும் அவர் நெடுந்தூரத்திலுள்ள ஊரிலிருப்பவராதலால், அங்குள்ள மேற்படி விநோதச் செடியைப்பற்றிய வரலாற்றை அந்தப்பிரபு அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளமாட்டாரென்று தீர்மானித்தே இவ்வாறு தைரியமாக அந்தச் சின்னப்பா சித்திரமாகப் பொய் கூறினான்.


 

அந்தச் சங்கரலிங்கம்பிள்ளை யென்பவரோ மேற்கூறிய பிரபுவுக்கு மிகுந்த சிநேகமுள்ளவர்; சின்னப்பாவின் கெட்ட காலத்தால் அவர் அங்கே வந்திருந்தார். சின்னப்பா, அவர் பெயரைச் சொன்னவுடனே அந்தப்பிரபு அவரை நோக்கி, 'ஓகோ! இந்த விநோதச்செடி உங்களால் தான் வளர்க்கப்பட்டு வருகிறதா? அதில் பதியன்கள் உண்டாக்கி எனக்கொரு செடி தரவேண்டும்'' என்றார். சின்னப்பா சொன்னதையும், அந்தப் பிரபு கூறியதையும் சங்கரலிங்கம்பிள்ளை கேட்டுச் சிரித்து, ''ஐயோ! இந்த மனிதன் பெரியபுளுகு புளுகுகிறான்; நான் அப்பேர்ப்பட்ட செடியை வரவழைக்கவுமில்லை. என்னுடைய தோட்டத்தில் வைத்து வளர்க்கவு மில்லை'' என்றார். உடனேஅந்தப் பிரபுவுக்குச் சின்னப்பாவின் மீது மிகுந்த கோபமுண்டாகிவிட்டது, அவர், "இந்த அயோக்கியன் இதற்கு முந்தியும் நம்மிடம் பல பொய்களைக் கூறிப் பணம் பறித்திருக்கிறான்; நாம் இவன் முகத்திலும் விழிக்கக்கூடாது' 'என்று அவனை உதைத்துத் துரத்தி விட்டார். அவன் பொய்யன் என்ற சமாசாரம் எங்கும் பரவிவிட்டது. அதனால் வேறே எவரும் அவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை. முடிவில் அவன் சோற்றுக்கு வழியின்றித் துன்பமுற்றான்.

 

“சீர்மை மறவேல்

 

''சீர்மை - ஒழுங்கை, மறவேல் - (மீ) மறந்து விடாதே " என்பது இதன்பொருள்.

 

மனிதர் எப்பொழுதும் நன்னடக்கையை மறவாது கைக்கொள்ள வேண்டும்; அவ்வாறு கொண்டிருப்பவர்க்கு இவ்வுலகத்தில் மிகுந்த புகழுண்டாகும்; பல நன்மைகளு முண்டாகும். நன்னடக்கையை மறந்து கெட்ட காரியங்களைச் செய்வார்க்கு நலமுண்டாகாது; எப்பொழுதும் உலகத்தார் அவர்களை நிந்திப்பார்கள். இவ்வுண்மையை இதனடியில் வரும் கதை விளக்கும்: -

பல ஆண்டுகளுக்கு முன்னர்ப் பாண்டி நாட்டில் ஒரு சிற்றரசர் இருந்தார். அவரிடத்தில் தங்கையா பிள்ளை யென்பவர் காரியம் பார்த்து வந்தார். இவர் மகா வஞ்சக சித்தமுடையவர்; சுயநலப் பிரிய முடையவர்; சிநேகிதரிடத்திலும் உண்மையான அன்பில்லாமல் மேலுக்கு மாத்திரம் மிகுந்த நட்புடையவரைப் போல நடித்துப் பேசிக்கொண்டே அவர்களுக்குக் கெடுதி செய்பவர்; இவர், மிகுந்த பேராசை யுடையவராயிருந்தாலும், எல்லோரிடத்திலும் நீதிதவறாத உத்தமரைப் போலவே நடித்துக் கொண்டிருப்பார். உலக உண்மையைத் தெரிந்து கொள்ளும் பேரறி வில்லாத பேதை மனிதர்களெல்லோரும், இவருடைய வஞ்சகத்தை யுணராமல் இவரைத் தருமகுணசீலரென்றே கருதுவார்கள். இவர், நல்லவரைப் போல் நடிப்பதால் அந்தச் சிற்றரசரும் இவரிடத்தில் மிக்க பிரியமும், நம்பிக்கையுமுடையவராயிருந்தார்.
 

இப்படியிருக்கும் போது அந்தத் தங்கையா பிள்ளைக்குப் பழக்கமான சாரங்கபாணி யென்னும் வியாபாரி யொருவன், நெடுந்தூரத்திலுள்ள ஓர் ஊருக்கு வியாபாரத்தின் பொருட்டு ஒரு தினம் பிரயாணமானான். அப்போது தன்னிடமிருந்த சில பொருள்களை நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைத்துவிட்டுப் போக வேண்டுமென்று ஆலோசித்து அதற்குத் தங்கையா பிள்ளையே தகுதியானவர் என்று தீர்மானித்தான். அவ்வாறு முடிவு செய்து கொண்ட பின் சில நகைகளையும், பணத்தையும் ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி அப்பெட்டியைக் கொண்டு போய்த் தங்கையா பிள்ளையிடம் கொடுத்து, " நான் வெளியூருக்குப் போகிறேன்; போய்த் திரும்பும் வரையில் இந்தப் பெட்டி உங்களிட மிருக்கட்டும்; இதிற் சில நகைகளும், பணமுமிருக்கின்றன; நான் திரும்பி வந்தவுடன் பெட்டியை வாங்கிக் கொள்வேன் " என்று சொன்னான். தங்கையா பிள்ளை அதை வாங்கி வைத்துக்கொண்டு, ''அப்படியே செய்; பெட்டியைப் பற்றி நீ கவலை கொள்ள வேண்டிய தில்லை; அது நீ திரும்பி வரும் வரை, வைத்தபடியே இருக்கும்'' என்று அவனை அனுப்பிவிட்டார். அவன் போய் மறுநாள் வேற்றூர்க்குச் செல்லப் பிரயாணமானான். அப்போது அவனுக்குச் சகுனத்தடை யுண்டாயிற்று. அதனால் அவன் பயணத்தை நிறுத்தி விட்டுத் திரும்பி வீட்டிற்கு வந்து தங்கியிருந்து இரண்டு தினங்கள் சென்ற பின் தங்கையா பிள்ளையிடம் போய், "நான் ஊர்ப்பயணத்தை நிறுத்திவிட்டேன்; ஆதலால், உங்களிடம் கொடுத்த பெட்டியைக் கொடுங்கள்'' என்று கேட்டான் அவர், "இப்போது நான் மிகுந்த வேலையிலிருக்கிறேன்; என்னால் எழுந்திருப்பது முடியாது; நாளைக்கு வா, நான் அதை யெடுத்துத் தருகிறேன் "என்றார். அவன் வீட்டிற்குப் போய் அவர் சொன்னபடியே மறுநாள் வந்தான். அன்றைக்கும் அவர் முதல் நாள் கூறியபடியே, நாளைக்கு வா' என்றார். அவன் அப்படியே மறுதினம் வந்தான். அன்றும் அவர்,'நாளைக்குவா' என்றார். அதன் மேல் சாரங்கபாணிக்கு வெறுப்புண்டாகி விட்டது. அதனால் அவன்,'' இவர் என்ன! இப்படி நாளைக் கடத்துகிறார்; பெட்டியை அபகரித்துக் கொள்ள எண்ணங் கொண்டு விட்டரோ'' என்று சந்தேகங் கொண்டு அவரை நோக்கி, "என்ன! இப்படி என்னை அலைய விடுகிறீர்கள்? 'நாளையென்பது இல்லை யென்பதற் கடையாளமல்லவோ'? என் பெட்டியை எடுத்துக் கொடுப்பதற்கு இத்தனை கெடுவா?" என்றான்.

 

இதைக் கேட்டவுடன் தங்கையா பிள்ளைக்கு மிகுந்த கோபமுண்டாகி விட்டது. அவர், ''நீ எப்போது என்னிடம் பெட்டியைக் கொடுத்தாய்? பொய்கூறி என்னிடம் பணம் வாங்கலாமென்று இந்தத் தந்திர மெடுத்தாயோ; சீ இங்கே நில்லாதே போ'' என்றார். சாரங்கபாணிக்குப் பெருந்திகிலுண்டாகி விட்டது. அவன், "ஐயோ! இஃதென்ன அனியாயமா யிருக்கிறது? என்னிடம் நீங்கள் பெட்டியை வாங்கிக் கொண்டு இப்படி வாங்கவில்லை யென்று சொல்லலாமா? " என்று கூவினான். தங்கையாபிள்ளை அவனை வெளியே தள்ளும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டார். சேவகன் அப்படியே அவனைத் தள்ளிவிட்டான்.

 

அதன்மேல் சாரங்கபாணி, தங்கையா பிள்ளையை வேலைக்கு வைத்திருந்த சிற்றரசரிடம் போய்த் தன் குறையைச் சொல்லி முறையிட்டான். அவர், ''அந்தப் பெட்டியில் என்ன என்ன இருந்தன?'' என்று அவனிடம் கேட்டார். அவன், அதிலிருந்த நகைகளையும், ரூபாயையும் விவரமாகத் தெரிவித்தான். பிறகு அரசர், தங்கையா பிள்ளையிடம் அப்பெட்டியைப் பற்றிய செய்தியை விசாரித்தார். அவர், "இவனை எப்பொழுதுமே நான்அறிய மாட்டேன்; இவன் என்னிடம் பெட்டி கொடுத்ததாகப் பொய்கூறிப் பொருள் பறிக்க இவ்வாறு தந்திரம் செய்கிறான்'என்றார். அவர் சத்தியந்தவறாத உத்தமர் போல் நடித்துக் கொண்டிருந்தபடியால் சிற்றரசர் அவர்பேச்சை மெய்யென்று நம்பிச் சாரங்கபாணியைக் கண்டித்துத் துரத்திவிட்டார். சாரங்கபாணி இந்த அனியாயத்தைத் தெய்வத்தினிடம் கூறி முறையிட்டுக் கொண்டு திரிந்தான்.

 

தங்கையா பிள்ளை, சாரங்கபாணியின் கூக்குரல் ஒடுங்கின பிறகு அந்தப் பெட்டியிலுள்ளவற்றை எடுத்து உபயோகிக்க வேண்டு மென்று அப்பெட்டியை இரகசியமாக மறைத்து வைத்திருந்தார். அப்படி யிருக்கும் போது ஒரு நாள் இரவு சில திருடர்கள் தங்கையா பிள்ளை வீட்டில் கன்னம் வைத்து நுழைந்து அந்தப் பெட்டியையும், வேறு சில பொருள்களையும் திருடிக் கொண்டு வெளியேறினார்கள். அப்படி வெளியேறும் போது காவலர் அத்திருடர்களைக் கண்டு பிடித்து அரசர் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினார்கள். அரசர் அவர்கள் திருடியிருந்த பொருள்களைப் பரிசோதித்துப் பார்த்தார். அவற்றோடு சாரங்கபாணியின் பெட்டியும், பொருள்களுமிருந்தன. அரசர் அவற்றைப் பார்த்து அதிசயித்து, "இவைகள் எங்கே திருடப் பட்டவை?'' என்று காவற்காரரை விசாரித்தார். அவர்கள், " இப்பொருள்கள் தங்கையா பிள்ளை அவர்கள் வீட்டில் எடுக்கப்பட்டவை'' என்று சொன்னார்கள். தங்கையாபிள்ளை, சாரங்கபாணியை உண்மையில் மோசஞ் செய்திருக்கிறார் என்பதை அரசர் தெரிந்து கொண்டார். உடனே தங்கையாபிள்ளையை வரவழைத்து அவருக்கு அப்பொருள்களைக் காட்டி, "இவற்றைநீர் சாரங்கபாணியிடம் வாங்கவில்லை யென்று சொன்னீரே; இவைகள் உம்முடைய வீட்டில் எப்படிச் சேர்ந்தன? " என்று அவரிடம் விசாரித்தார். அவர், ஒன்றும் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு நின்றார். அதன் மேல் அரசர் கோபித்து அவருக்குத் தகுதியான தண்டனை கொடுத்துச் சாரங்கபாணியிடம் அப்பொருள்களைச் சேர்ப்பித்தார். ஊரார் தங்கையா பிள்ளையை மிகவும் நிந்தித்தார்கள்.

 

“சுளிக்கச் சொல்லேல்


      "சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படி, சொல்லேல் (நீ எதையும்பேசாதே " என்பது இதன் பொருள்.

 

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், எவரிடத்தும், எப்பொழுதும் மனமகிழ்ச்சியை உண்டாக்கத் தக்க இனிமையான வார்த்தைகளையே பேசவேண்டும். அங்ஙனம் பேசுவார்க்குப் பலருடைய உறவு முண்டாகும்; பற்பல நன்மைகளேற்படும்; எவரும் அவர்களிடம் பகைகொள்ள மாட்டார்கள். இவ்வாறின்றி ஒவ்வொருவரிடத்திலும் பேசும் போதெல்லாம் அவர்க்குக் கோபமுண்டாகத் தக்க வார்த்தைகளையே பேசுவோர்க்கு எப்போதும் பலருடைய விரோதமுண்டாகிக் கொண்டேயிருக்கும்; எவருடைய உதவியு மேற்படாது; அதனால் அவர்களுடைய வாழ்க்கையில் ஆனந்தமென்பதே ஏற்படாது; துக்கமே மிகுந்திருக்கும். இவ்வாறு, பிறர் கோபிக்குமாறு பேசுவோர்க்குத் துன்பமுண்டாகு மென்பதை அடியில் வரும் கதை விளக்கும்:

 

ஒரு சிற்றூரில், தங்கவேல் என்னும் ஒரு வாலிபனிருந்தான். அவன், எவரோடு பேசினாலும் வீண் தர்க்கமே பேசுவான்; பிற மனிதர் கூறும் எந்த வார்த்தையையும் தடுத்துப் பேசுவதே அவனுடைய வழக்கம். ஒருவர்,' கடல்நீர் உப்பாயிருக்கும்' என்றால், இவன், இல்லை; அது துவர்ப்பாயிருக்கும்' என்று ஒரே பிடிவாதமாகப் பேசுவான். இப்படியே இவன் எல்லாருடனும் பேசிவந்ததால் பலரும் இவன்மீது விரோதமே கொண்டிருந்தார்கள்; வம்புப் பேச்சுக்காரன்' என்ற பட்டம் இவனுக்குண்டாகி விட்டது. இவனை எவரும் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. இவனோடு பழக்கமாயிருந்த நண்பனொருவன், இவனுடைய கெட்ட குணத்தைக் கண்டு வெறுத்து ஒருநாள் இவனிடத்தில், "நீ எவரிடத்தும் கோபமுண்டாகத் தக்க வார்த்தைகளையே பேசும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறாய்; இது மிகவும் கெட்ட வழக்கம்; ஒரு சமயத்தில் பெருந்துன்பத்தை யுண்டாக்கிவிடும்; ஆதலின் இவ்வழக்கத்தை நீ விட்டுவிடு" என்று கூறினான். அவன் வார்த்தைகளை இவன் சட்டை பண்ணவேயில்லை.

 

இப்பேர்ப்பட்ட வாய் வம்புக்காரனாகிய தங்கவேல் ஒரு நாள் நெடுந்தூரத்திலுள்ள ஓர் ஊருக்குப் பிரயாணமாகி நடந்து போனான். நடுவழியிற் செல்லும்போது வெயிலின் கொடுமை அதிகரித்த படியால் அவனுக்குக் களைப்பும், தாகமும், பசியும் அதிகரித்தன; அவனால் நடக்க முடியவில்லை. அத்தருணத்தில் பக்கத்தில் ஒரு சிறு கிராமம் அவனுக் கெதிர்ப்பட்டது. அதைக் கண்டதும் அவன், 'அந்த ஊரில் போய் எவரிடமாவது கொஞ்சம் தண்ணீர் வாங்கிக்குடித்து இளைப்பாறிவிட்டுப் போகலாம்' என்று நினைத்து அவ்வூருக்குட் சென்றான். அவ்வூர்ப் பொதுச்சாவடியில் சில மனிதர்கள் கூடியிருந்தார்கள். அவர்களிற் பெரும்பான்மையோர் அவ்வூர்ப் பெரிய குடித்தனக்காரர்கள், தங்கவேல் அவர்களிடம் போய், 'னக்கு தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என்று கேட்டான். அவர்கள் அவன் வெயிலால் இளைப்பற்று வந்திருப்பதை யுணர்ந்து அவனை நோக்கி, “ஐயா! உட்காரும்; நாங்கள் தண்ணீர் வரவழைத்துத் தருகிறோம்'' என்று சொன்னார்கள். அவன் ஒரு பக்கத்தில் உட்கார்ந்தான். உடனே அந்த மனிதர்கள் அவனுக்கு நல்ல மோர் கொண்டு வரும்படி ஒரு ஆளை அனுப்பினார்கள். அவன் மோர் கொண்டுவரச் சென்ற பின்பு தங்கவேலின் வாய் சும்மா இருக்கவில்லை; அவன், தன்னுடைய வழக்கப் படியே அங்கிருந்தவர்களோடு வம்புப் பேச்சுப் பேச ஆரம்பித்து விட்டான்.

 

அவ்வூரில் பண்டைக்காலத்தில் சில திருடர்கள் இருந்தார்கள்; அதனால், அது திருடர் குடியிருக்கும் ஊர் என்று பலராலும் கருதப்பட்டு வந்தது. பிந்தின காலத்தில் அத்திருடர்கள் ஒழிந்து போனார்கள், நல்லவர்களே விருத்தியாகி யிருந்தார்கள்; அவர்களால், அவ்வூருக்கேற்பட்டிருந்த கெட்ட பெயர் நீங்கி விட்டது. அப்படியிருந்தும், தங்கவேல், அந்த வூருக்கு முந்தியேற்பட்டிருந்த கெட்ட பெயரைக் கேள்விப்பட்டிருந்த படியால் அதையே உறுதிப்படுத்திக் கொண்டு, பின்னர் அவ்வூர் நல்ல பெயரெடுத்திருப்பதைச் சிந்திக்காமல் அங்குக் கூடியிருந்தவர்களை நோக்கி, “இந்த வூர் திருடர் குடியிருக்கு மூர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; இஃதுண்மைதானே?'' என்று கேட்டான். அதற்கவர்கள், ''ஐயா! நெடுங்காலத்துக்கு முன் சிலரால் இவ்வூருக்கு அந்தக் கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது; இப்போது அது மறைந்துவிட்டது; இது நல்ல யோக்கியர்கள் குடியிருக்குமூர்'' என்று சொன்னார்கள். தங்கவேல்,'' இல்லை, இல்லை; இஃதெப்பொழுதுமே திருடர் குடியிருக்குமூர்தான்; எனக்கிது நன்றாய்த் தெரியும்'' என்றான். அவர்கள், ''ஐயா! அப்படிச் சொல்ல வேண்டாம்; எதையும் ஆராய்ந்து பேசும்'' என்றார்கள். தங்கவேல்,'' நீங்கள் உங்கள் ஊரைப்பற்றிப் பிறர் இழிவு பேசச் சம்மதிக்க மாட்டீர்கள்; நான் உண்மை பேசுவதில் யாருக்கும அஞ்ச மாட்டேன்; இது திருட்டுப் பாதகர்கள் இருக்கும் ஊர்தான்'' என்றான்.

 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அங்கு கூடியிருந்தவர்களுக்கு மிகுந்த கோப முண்டாய்விட்டது. உடனே அவர்கள், ''இவன் மிக்கவாய் வம்புக்காரனாயும், அகங்காரியாயு மிருக்கிறான்; இந்தப் போக்கிரிக்கு அறிவு கற்பிக்க வேண்டும்” என்று உடனே அவனைப் பிடித்து, அவன் கால்களையும், கைகளையும் கட்டி அந்த சாவடிக்கு முன்னே வெயிலி போட்டு," வாய்மதம் பேசும் உனக்கு இது தான் தண்டனை'' என்று உருட்டி விட்டார்கள். அவனுக்கு மோர் கொடுக்க ஏற்பாடு செய்ததையும் நிறுத்தி விட்டார்கள். சூரிய வெப்பம் கீழும் மேலும் வெதுப்பியதால் தங்கவேலுக்குச் சகிக்கமுடியாத வேதனையுண்டாயிற்று. அவன், துன்பத்தைப் பொறுக்க முடியாமல், "ஐயோ! நான் தெரியாமல் பேசி விட்டே; என் குற்றத்தை மன்னித்து என்னை அவிழ்த்து விடுங்கள்'' என்று அவர்களைக் கெஞ்சினான். அதன்மேல் அவர்கள் அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு, “இனி எவ்விடத்திலும் இவ்வாறு மூடத்தனமாகப் பேசுவதை விட்டுவிடு'' என்று சொல்லி அவனைத் துரத்திவிட்டார்கள். அவன் அது முதல் அந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுவிட்டான்.

 

“சூது விரும்பேல்

 

"சூது - சூதாடுதலை, விரும்பேல் - (நீ எப்போதும்) விரும்பாதே'' என்பது இதன் பொருள்.

 

மனிதரைக் கெடுத்துவிடும் தீயகாரியங்களில் சூது முதன்மை பெற்றதாகும். இதைக கைக்கொள்பவர், பல தீமைகளுக்குள்ளாவதோடு அவர்களுடைய குடும்பமும் அடியோடு கெட்டுவிடும். அவ்வாறு கெட்டவர்களின் கதை பலவுண்டு. அவற்றுள் ஒரு வாலிபனுடைய கதையை இங்குக் கூறுவாம்:

 

ஒரு கிராமத்தில் தனவந்தரொருவ ரிருந்தார். அவருக்கு மிகுந்த ஐசுரிய மிருந்தது; ஒரே புத்திரன் பிறந்திருந்தான். அவன் பெயர் குமாரசாமி. அவன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். ஆனால், அவனிடத்தில் நற்குணம் அமையவில்லை; கெட்டகுணங்களே விருத்தியாகி வந்தன. பல கெட்டகாரியங்களையும் அவன் செய்து கொண்டு வந்தான். அவற்றுள் சூதாட்டத்தை அதியமாகக் கொண்டிருந்தான். அதனால் தினந்தோறும் பணந்தேட வேண்டியது அவனுக்கு முக்கிய வேலையாயிருந்தது. அவன் சுயேச்சை பெறாத வாலிபனாயிருந்தபடியால் அவனுக்குப் பணம் கிடைப்பது அரிதாயிருந்தது. இதற்கென்ன செய்யலாமென்று அவன் யோசித்தான். வீட்டில், தாய் தந்தையர் வைக்கும் பணத்தைத் திருடுவது தான் சரியான வழியென்று அவனுக்குத் தோன்றியது. அதன் மேல் அவன் தாய் தந்தையர் பணம் வைக்குமிடத்தைப் பார்த்துத் தினந்தோறும் அதைத் திருடிக்கொண்டு போய்ச் சூதாடித் தோற்று வந்தான். பணம் தினந்தோறும் காணாமற் போவதை அவன் தாய் தந்தையர் உணர்ந்து பணத்தை வெளியில் எங்கும் வைக்காமல் பெட்டியில் வைத்துப்பூட்ட ஆரம்பித்து விட்டனர். பின்னர்க் குமாரசாமி வீட்டிலுள்ள பாத்திர பண்டங்களைத் திருடிவிற்றுப் பணந்தேடிச் சூதாடி வந்தான். அவன் தாய்தந்தையர், பாத்திரங்கள் காணாமற்போவதைப்பற்றிச் சந்தேகித்து வீட்டிலிருந்த பொருள்களை அறை வீடுகளில் போட்டுப் பூட்டிவைக்க ஆரம்பித்தார்கள். அதன்மேல் குமாரசாமி தாய்தந்தையர் அணிந்திருக்கும் நகைகளைத் திருட ஆரம்பித்து, அவர்கள் தூங்கும் போது ஒரு நாள் தாயாரின் அட்டிகையைக் கழற்றிக் கொண்டு போய்விட்டான். நெடுநாட்களாக அவ்வீட்டில் பல திருட்டுக்கள் நடந்துவரவே அவனுடைய தாய் தந்தையர், அப்படித்திருடுகிறவனைப் பிடிக்கவேண்டுமென்று அக்காரியத்தில் மிக்க கவனஞ்செலுத்திக் கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கும் போது ஒருநாள் குமாரசாமி தன் தகப்பனார் தூங்கும் போது அவர் விரலில் அணிந்திருந்த வைரமோதிரத்தைக் கழற்றினான். உடனே அவர் விழித்து அவன் கரத்தைப் பிடித்துக்கொண்டு, "பையலே! நீயா இங்குள்ள வந்றைத் திருடிக் கொண்டு வந்தாய்? உனக்கேனிந்தக் கெட்ட புத்தி! இதற்கு முன் காணாமற் போனவைகளையெல்லாம் நீதானே திருடினாய்?'' என்று கேட்டார். அவன், "நான்திருடவில்லை'' என்றான். அவர் கோபங்கொண்டு அவன் கன்னத்தில் இரண்டு அறை அறைந்து, "உள்ளதைக் கூறு" என்றார். அதன்மேல் அவன், "நான் தான் களவாடினேன்'' என்று ஒப்புக் கொண்டான். அவர், "எதற்காகத் திருடினாய்? " என்று கேட்டார். அதன், சூதாடுவதை மறைத்துக் கொண்டு, "என் செலவுக்குப் பணம் வேண்டியிருந்தது, அதனால் நான் திருடினேன்" என்றான். அதன் மேல் அவர், 'நீ என்னிடம் பணம் கேட்டால் நான் தரமாட்டேனா? இனிமேல் நீ திருட்டு வேலை செய்யாதே; ஒழுங்காயிரு " என்று புத்திகூறி அவனை அனுப்பிவிட்டார். பின்னர் அவன் ஒருநாள் சூதாடிக் கொண்டிருக்கும் போது போலீஸ்காரர் அவனைக் கண்டுபிடித்து அவனுடைய தகப்பனார் பெரிய மனிதராயிருந்த படியால், அவரிடம் அவன் செய்கையைத் தெரிவித்து விட்டுப் பின்னர்ப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகலாமென்று கருதி, அவரிடம் அழைத்துக் கொண்டு போய் அவன் குற்றத்தைத் தெரிவித்தார்கள். அப்போது தான் அவன் சூதாடியது அவருக்குத் தெரிந்தது. அவர் பெரிதும் வருந்திப் போலீஸ்காரருக்கு நல்வார்த்தை கூறி அவனை விடுதலை செய்துவிட்டு, அதன்மேல் அவன் நல்வழிக்குத் திரும்பமாட்டானென்று துணிந்து தம்முடைய சொத்துக்களையெல்லாம் அவனுக்குச் சேராதபடி தர்மத்திற் கெழுதி வைத்து விட்டார். அவன் பிற்காலத்தில் பிழைக்க வழியின்றித் திருட்டும், சூதும் நடத்திப் பலமுறைகள் சிறைவாசதண்டனையடைந்து பெருந்துன்பமுற்று வருந்தினான்.

 செம்பூர் - வீ. ஆறுமுகஞ் சேர்வை.

 

ஆனந்த போதினி –

1925, 1926, 1927, 1928, 1933, ௵

 

No comments:

Post a Comment