Wednesday, August 26, 2020

 

ஆத்திசூடி

 

இது ஒரு சிறு நூல். இதன் ஆசிரியர் ஒளவை. இந்நூல் சுருங்கச் சொல்லல் விளங்கவைத்த லென்னும் அழகிலடங்கும். இது மாணவர்களுக்கு ஆரம்ப நூலாய் வாசிக்க அதியுபயோகமாகின்றது. இதிலுள்ள ஒவ்வொரு, வாக்கியமும் " நீ " என்னும் முன்னிலை யொருமைப் பெயரைத் தோன்றா வெழுவாயாகக் கொண்டமைக்கப்பட்டுள்ளது. அநேகமாக வாக்கியங்களெல்லாம் ஏவல் வினையைக்கொண்டனவாக வொளிர்கின்றன. இதில் ஒவ்வொரு வாக்கியமும் ஆழ்ந்த கருத்தும், சொல்லழகும், பொருட்சுவையும் உடையனவாய் விளங்குகின்றன. மாணவர்கள் இவ்வாக்கியங்களைச் சிரமமில்லாமல் மனனம் பண்ணுவதற்காக அகர முதற்கொண்டு ஒளகாரம் வரையில் வரிசைக் கிரமமாக எதுகை நோக்கி யமைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்கியங்கள் பெரிய நூற்களிலுள்ள சிறந்த கருத்துக்களின் திரண்ட பொருளாக ஜ்வலிக்கின்றன. ஒவ்வொரு வாக்கியத்திற்கும் எத்தனை கோடிப் பொருட்கள் கொடுத்தாலுமீடாக மாட்டாது. அவ்வளவு மேன்மையிற் சிறந்தவை இவ்வாக்கியங்கள். ஒவ்வொருவருடைய கருத்திலும் நின்று, அவர்களைத் தீ நெறிக்கட் செலுத்தாமற்றடுத்துப் பாதுகாக்கும் வன்மையுமுடையன இவை. இவ்வாக்கியங்கள் மாணவர்களை மாத்திரம் நோக்கிக் கூறியதாக நாம் எண்ணல் கூடாது; எல்லோரையும் நோக்கிக் கூறியதாகக் கொள்ளல் வேண்டும்.

 

ஏனெனில், இந்த ஆத்திசூடியின் அறியவாக்கியங்களைச் சமயத்தில் உபயோகப்படுத்திச் சம்பாஷணையையலங்கரிப்பதாலேயே தான் இவ்வாக்கியங்களைப் பிரதி தினமும் நினையாதாருமில்லை. இவ்வாக்கியங்களைக் கற்றோர்களெல்லோரும் பிரதி ஞான்றும் சம்பாஷிக்கும் வேளைகளில் உபயோகப்படுத்தாமலிருக்கவுமில்லை. இவைகளைச் சிறந்தனவாகக் கொண்டு உபன்னியாசங்கள் செய்யாத மனிதர்களுண்டோ? இல்லை. ஆத்திசூடிப்பாடம் நடவாத தமிழ்ப் பாடசாலைகள் தான் உண்டோ? இல்லை. ஆத்திசூடியை யுபயோகப்படுத்தாத தமிழ் உபாத்தியாயர்களும் மாணவர்களும் இல்லை. பால்யத்தில் மாணவர்கள் இவ்வாக்கியங்களின் கருத்துக்களை யுணராமல் மனனம் செய்தாலும் அவர்களுக்குத் தகுந்த வயது வரும்போது ஆத்திசூடி வாக்கியங்களின் அரிய கருத்துக்களை யுணர்ந்து கொள்வர். அப்பொழுது அவர்களறிவு இவ்வாக்கியங்களை யாராய்ந்து பார்ப்பதை நோக்கின் இவ்வாக்கியங்களின் மேன்மை தெளிவாகும்.

 

இவ்வாக்கியங்களைக் கற்றறிந்தோர்கள் வரையும் வியாசங்களுக்குத் தலைப்பாகவும் மேற்கோளாகவும் கொள்ளாமலிருக்கவில்லை. கற்றோர்கள் வெளியாக்கும் நூல்களிலும் இவ்வாத்திசூடி வாக்கியங்களைப் பிரயோகிக்காமலிருக்கவில்லை. இவ்வாத்திசூடி வாக்கியங்களைக் கொண்டே கற்றோர்கள் ஆத்திசூடிப் புராணம், ஆத்திசூடிவெண்பா, ஆத்திசூடி விருத்தியுரை, ஆத்திசூடி நீதிக்கதைகள், ஆத்திசூடி வியாசங்கள், ஆத்திசூடியுரை முதலான புத்தகங்களை ஏற்படுத்தி யுள்ளார்கள். இந்த ஆத்திசூடியில் கூறிய ஒவ்வொரு வாக்கியமும் அமைக்க வேண்டிய விதத்தில் அமைத்திருப்பதை நோக்க ஒளவையாருடைய புலமைத்தனம் நமக்குத் தெளிவுறும். உதாரணமாக, நாம் விரும்ப வேண்டியவைகளை "அறஞ்செய்விரும்பு,'' "தானமது விரும்பு, ''வித்தை விரும்பு " என்று விரும்ப வேண்டிய முறையில் அமைத்துள்ளார்.

ஒவ்வொருவரும் தங்கள் பாலெழுங் கடுங் கோபத்தை யடக்குதல் மிக்க அரிதென்பதையுணர்ந்தே ஒளவையார், "சினம் ஆறுவ தென்று'' கூறாமல் 'ஆறுவது சினம்" என்றார். ஒவ்வொருவரும் தருமஞ் செய்வது மிக்க அருமையென்பதைத் தெரிந்து "இயல்வது கரவேல்'" என்ற முறையில் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ளதையேனும் பிறருக் கொளிக்காமல் கொடுத்தாற்போதும் என்ற கருத்துடன் நவின்றுள்ளார். நாம் விரும்பக் கூடாதவைகளைக் "கொள்ளை விரும்பேல்,'' "சூது விரும் பேல், " "மீதூண் விரும்பேல்'' என்று தீமையைப் பயக்கக் கூடியவைகளை விரும்பவேண்டா மென்றனர். நாம் அறவே ஒழிக்க வேண்டியவைகளைக் "கெடுப்பதொழி, "கோதாட்டொழி" என்றனர். நாம் எப்போதுங் கைக்கொண் டிருக்கவேண்டியவைகளைக் "குணமது கைவிடேல்," "ஊக்கமது கைவிடேல்" என்றனர். நமக்கு நேருந்துன்பங்கள் அநேகமாய் நம் வாயினின்றும் வெளியாகும் வார்த்தைகளாலேயே யாதலின் "வெட்டெனப் பேசேல்," "வல்லமைப்பேசேல், " "நொய்யவுரையேல், ''சுளிக்கச்சொல்லேல், " "மிகைபடச்சொல்லேல், “கண்டொன்று சொல்லேல், "பிழை படச்சொல்லேல் " என்பன போன்ற பல வாக்கியங்களையும் அடுத்தடுத்துக் கூறியுளார். நாம் மற்றவைகட்கு இடங்கொடுத்தால் நமக்கே துன்பம் வருமென்பதை யுரைத்த "துன்பத்திற்கிடங்கொடேல்," "நோய்க்கிடங்கொடேல்,'' "மாற்றானுக்கிடங்கோடேல்" என்றுரைத்தனர். நம்மைக் கெடுத்தழிப்பவைகளைத் "தீவினையகற்று,'' ''பேதைமையகற்று,'' "கீழ்மையாகற்று" என்ற மொழிகளால் சாற்றியவைகளை யகற்றக் கூறினர். நாம் செய்ய வேண்டியவைகளைச் செய்ய வேண்டுமென்று “பருவத்தே பயிர்செய்'' "செய்வன திருந்தச்செய்," "திருமாலுக்கடிமை செய், ''தூக்கிவினைசெய்'' என்றும் செய்யக்கூடாதவைகளை "இயல்பலாதன செயேல்,'' ''அழகலாதன செயேல், ''வேண்டிவினை செயேல்" என்றும் அவைகளைச் செய் யவேண்டாமென்றும் மொழிந்தனர்.

 

நாம் அக்கினி சாட்சியாக மணந்த நம் மனைவியையே சேர வேண்டுமென்பதையும், அதனால் மேலான சந்ததிகள் உண்டாகு மென்பதையும், சதிபதிகளுக்குள் மனவேற்றுமை யேற்படலாகா தென்பதையுங் கருதியே, “மெல்லினல்லாடோள் சேர்'' என்றனர். தங்களிடம் வருவோர்கள் எவ்வளவு தேஜஸ் உடையவர்களாக விருந்தாலும், தனவந்தர்களாகவும், பலமுள்ளவர்களாகவும், வியாதி யில்லாதவர்களாகவும் இருந்தாலும் இவற்றையெல்லாங்கெடுத்து வேசிகள் துன்பத்தைத் தருங்கொடிய வியாதியையே ஈவார்களாகலின் "மைவிழியார் மனையகல்'' என்று அவர்களுடைய வீட்டை நாடாதகலச் சொற்றனர்.

 

நாம் எப்படி வாழ்ந்தால் உலகத்தில் நல்லதென்பதை வெளிப்படுத்த "புகழ்ந்தாரைப் போற்றி வாழ்," "பொருடனைப் போற்றி வாழ்,'' "கிழமைப் படவாழ், “தேசத்தோ டொத்து வாழ்,'' ''ஊருடன்கூடிவாழ்" என்று விளம்பினர்.

 

நாம் வேலை செய்வதற்குச் சோம்புவோமானால் துன்பமுண்டாகு மென்பதை ''சோம்பித்திரியேல்," "ஏற்பாதிகழ்ச்சி,'' "சையெனத் திரியேல்'" என்பவைகளாற் றெளிவித்தனர்.

 

நாம் இன்னாருடன் சேர்ந்தாற் றுன்பமுண்டாகு மென்பதைத் தெரிவிக்கவே "பையலோ டிணங்கேல், " "மூர்க்கரோ டிணங் கேல், " "ஒன்னாரைச் சேரேல், " என்றுரைத்தனர்.

 

நாம் எப்போதும் நல்லவைகளை மறக்கலாகா தென்பதை “அறனை மறவேல், "நன்றி மறவேல்,'' " சீர்மை மறவேல்,'' ''தொன்மை மறவேல் " என்பவைகளைச் சாற்றி விளக்கினர்.

 

நாம் மேலானவைகளையிகழ்தல் கூடாதென்பதை “எண்ணெழுத் திகழேல்," "தெய்வ மிகழேல்" என்று உரைத்தனர்.

 

இன்னும் இவைகளைப் போலவே மற்றவாக்கியங்களையும் அமைத்துள்ளாரென்பது அறிஞர்களறியாததல்ல. அறிஞர்கள் இவ்வாக்கியங்களுக்குப் பொருள் பலவிதமாகக் கூறாம லிருக்கவில்லை.

 

நம் தாய்நாட்டின் க்ஷேமத்தைக் கருதி இத்தகைய பேருதவி செய்த ஒளவைப் பிராட்டிக்கு நாம் செய்ய வேண்டிய நன்றியாவது, அவர் திருவாய் மலர்ந்த வாக்கியங்களை ஆரம்பத்திலேயே நம்மக்களுக்குக் கட்டாயம் பொதித்து நாமும் அவ்வழி நின்றொழுகலே யாகும்.

 
M. மாணிக்க நாயகர்.

கூனீச்சம்பட்டு, புதுவை.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment