Wednesday, August 26, 2020

 

ஆமை

(ஆசிரியர் வே. அப்பாசாமி.)

குளம், குட்டை, கிணறு, ஆறு முதலிய நீர் நிலைகளில் ஆமை வசிக்கும். அதற்குத் தண்ணீரிலும் வாழ மிக்க விருப்பம். இரை தேடும் காலத்து தனது உள்ளடக்கிய ஐயுறுப்புக்களை-விசிறி–அவிழ்த்து உடைத்து விடும். பகைவரைக் காணுங்கால், பகை வருக்கமாய காம, குரோத, லோப, மோக மத, மாற்சரியங் கண்ட அந்தணர்-அறவோர் ஐம் புலன்களை அடக்குவதே போன்று, தனது வெளிநீண்ட ஐயுறுப்புக்களையும் அடக்கி அசையா கல்லே போன்று அமைந்து விடும். பகைவர் சென்றபின் பண்டைய நிலையுற்று தனது இரைப்பொருளை நாடும். இதனுடைய வாழ்ககையும் இனப்பெருக்கமும் நுணுகி ஆராய்வார்க்குச் சிறிது வியப்பினை அளிப்பதாகும்.

கடலாமை, கல்லாமை, கிணற்றாமை, ஆற்றாமை முதலிய பல வகைகள் உண்டு. இந்த ஆமைகள் மனித சமூகத்துக்கு நன்மையையும் புரியவில்லை; தீமையையும் புரியவில்லை; அங்ஙனம் இருக்க, "ஆமை-புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்ற பழமொழி ஏன் எழுந்துளது? அமீனா புகுந்த வீட்டிலாவது தாவர சங்கமப் பொருள்களுக்கு விபத்து ஏற்பட்டு விமோசனம் அடைந்து விடும். அதனால் வீடு உருப்
படாது போகலாம். ஆமை புகுந்த வீடு ஏன் உருப்படாது? அந்த வீட்டுக்கு எவ்வாறு கெடுதல் ஏற்படுகிறது? இவ் வினாக்களுக்கு விடையிறாமை ஒருபுறம் இருக்கட்டும்.

சில சமயங்களில் சில காரியங்களைச் சரிவர செய்யாமை ஏற்படுகிறது. அதனால் தன்மை விளையாமை உண்டாகிறது. பாருங்கள்! செய்யாமை விளையாமையை உற்பத்தி செய்து வாழாமைக்கு இடம் கொடுக்கிறது. (ஏற்படுத்துகிறது.) நன்கு வாழாமை ஏற்படின் உயிர் நிலையாமை உண்டாகிறது. அப்புறம் நம் கதி அதோகதிதான்!

இந்தச் கல்லாமையைப் பார்ப்போம். அறியாமை அகக்கண் தெரியாமை, அறிவு விளங்காமை. நன்மை புரியாமை இத்தனை ஆமைகளை உண்டாக்கி விடுகிறது. தான் மட்டும் தனித்து வாழ்கிறதா! மிக்க சாமார்த்தியமுளது. பல ஆமைகளையும் உண்டாக்கியதோடு புகழாமைக்கும் இடம் எற்படுத்துகிறது.

ஆற்றாமை. இது சோம்பேறிகளிடம் வாழும். எளிதில் இயற்றுங் காரியங்களைக் கூட இயற்றாது எய்த்திருப்பதாகும். இவ் வாற்றாமையால் சமூகத்தில் கூடாமை, சுக போகங்களில் கலவாமை, உடல் உளப் பண்புகள் திருந்தாமை முதலியவை உண்டாகின்றன.

இங்கோர் ஆமை இருக்கிறது. இது புகுந்த வீட்டில் ஒவ்வாமை ஏற்படும். அடிக்கடி ஒவ்வொருவ ருள்ளத்தையும் ஒடுங்காமைக்கு உட்படுத்தும். குடும்பத்தினர் குறைத்துக் கொள்ளுவர். குடும்பத்துக்கு - வீட்டுக்கு வந்தது ஆபத்து. இந்தப் பொறாமை புகுந்த வீடு தான் உருப்படாது என்று முன்னர் கூறியதாகும். இந்த ஆமை புகுந்த சங்கமோ, தொழிற் சாலையோ அரசாங்க அரங்கமோ எந்த இடமாயினும் சரி; அது பாழ்.

ஆமைக ளெல்லாம் எவ்வாறு உண்டாகின்றன? நிலத்தில் முட்டையிட்டு உண்டாவது நம் கண்ணுக்குப் புலப்படும் ஆமைகளாகும். நம் கண்ணுக்குப் புலப்படா ஆமைகள் பல இருக்கின்றனவே! அவை 'ஆ’ என்னும் எதிர்மறை விகுதியுடன் 'மை'யுங் கலந்த ஆமையாகும் இவ் வாமைக்கு உடன்பாட்டிற்கு மாறான-எதிர் மறையான
சொற்களை யுண்டாக்கும் ஆற்றல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு கலங்காமை வேண்டும்.

மற்றும் பல ஆமைகள் உள; அவை நமக்குப் பெரும் பெரும் நன்மை
அளிப்பவை. கள்ளாமை கொள் எள்ளாமை ஏற்படும். பிறர் பொருளை வெஃகாலம வேண்டும். அதனால் உள்ளத்தூய்மை ஏற்பட்டு வீட்டுலகம் உன்னை நீக்காமை
ஏற்படும். நிலையாமையை நினை; மனம் அலையாமை உண்டாகும். கொல்லாமை
இப் பூமியில் பிறப்பு இல்லாமைக்கு எது வன்றோ?

இந்தத் தீண்டாமையைக் கவனி. இதை ஒரு பெரியார், "விலக்குங்கள்! விலக்குங்கள்!'' என்கிறார். இதை சமூகம் உணராமையால் இந்து சமூகத்துக்கே புகழாமை உண்டாகிறது. தீண்டாதார் அயல் மதங்களை நண்ணாமை வேண்டுமாயின் தீண்டாமையை ஒழியுங்கள். இந்துக்களின் உள்ளம் களியாமையானதா? நீங்கள் மனம் கனியாமை யுள்ளவர்களாயின் இனியாமை ஏற்பட்டு இந்து மதமே இராமை ஏற்படும் அல்லவா!

உழையாமை ஓர் கேடல்லவா! நாட்டுக்கு உழை. சமூகத்துக்கு உழை; பிற உயிர்களுக்கு உழை. இன்னாமை இயற்றதே. பொல்லாமை கொள்; அஞ்சாமை உண்டாகும்; இகழாமை ஏற்படும்.

மறவாமையை எடுத்துக் கொள்ளுவோம். உலகின் உன்னத ஸ்தானத்தையே இம் மறவாமை அளித்து விடும். சிவநாமம் மறவாமையைக் கொள்; பிறவாமை-இறவாமை கிட்டும். அனந்தம்-பேரானர்தம் பெறுவீர்.

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment