Tuesday, August 25, 2020

 அருந்தமிழ் ஆற்றல்

 

பழந் தமிழகத்தின் பரப்பையும் சிறப்பையும் இக்காலத்திற் பல அமிஞர் ஆராய்ந்து வருகின்றனர். வட இமயம் முதல் தென்குமரிவரை ஒரு காலத்தில் தமிழ் மக்களே பரவி இருந்தார்கள் என்றும், ஆரியர் வடநாட்டில் புகுந்தபோது சிந்து நதி பாயும் செவ்விய நாட்டையும் கங்கைபாயும் கழனி காட்டையும் கைவிட்டு விந்திய மலைக்குத் தென்பாலமைந்த காடுகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழத் தலைப்பட்டாரென்றும் ஒரு சாரார் கருதுவர். ஆயினும் வட இந்தியாவிலும் தமிழ்க் கூறுகள் ஆங்காங்கு காணப்படும் என்பது உண்மையாகும். வட புலத்தில் வாழும் மக்களின் உடற்
கூறுகளை ஆராய்ந்து அறியப்போந்த ஆங்கில ஆசிரியர்கள் தமிழினத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டு பல நாடுகளிலும் காணப்படுகின்றனர் என்று கூறுவர். வங்காள மாகாணத்தில் வாழும் மக்களின் உடற் கூறுகளை உற்று நோக்கிய ''டால்டன்'' என்னும் மேலை நாட்டு அறிஞர் அம்மாகாணத்தில் வாழும் மக்களில் நூற்றுக்குப் பத்து வீதம் தமிழினத்தைச் சேர்ந்தவர் காணப்படுகின்றனர் என்று கட்டுரைத்துப் போந்தார். இவ்வாறே மத்திய மாகாணங்களிலும் மந்றைய மாகாணங்களிலும் தமிழரை யொத்த உடற் கூறுடையார் வாழ்ந்து வருதலை நடுநிலையில் நின்று ஆராய்ந்த ஆங்கில அறிஞர் நன்கு எடுத்துக் காட்யுள்ளார். இன்னும் ஆரியத்தின் பாகதங்களாய் வட நாட்டில் வழங்கிவரும் பல மொழிகளிலும் தமிழ்க் கூறுகள் காணப்படுகின்றன வென்று மொழி லறிந்தோர் கூறுவர்.


"ஆழிவாய்ப்பட்ட தமிழ்நாடு'

 

இங்ஙனம் வடபுலத்தை, விருந்தினராய் வந்த ஆரியர்க்கு விட்டுத் தென்னாட்டில் அமைந்து வாழ்ந்த தமிழ் மக்கள் செம்மை சான்ற நாகரிகம் வாய்ந்து விளங்கினர். வட இந்தியாவில் வழங்கிய ஆரியமொழி, வடமொழி என்றும், தென் இந்தியாவில் வழங்கிய தமிழ் மொழி தென் மொழி என்றும் பெயர் பெற்றன. ஆயினும் அக்காலத்தில் தென்னாடு குமரிமுனையோடு முடிந்து விடாமல் அதற்கப்பாலும் பாலியிருந்த வரலாறு பழந் தமிழ் நூல்களாலும் நன்கு அறியப்படுகின்றது. குமரி முனைக்குத் தென்பாலமைந்திருந்த திருந்திய நாட்டைக் குமரி நாடென்று சிலர் கூறுவர். அந்நாடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆழிவாய்ப்பட்டு அழிந்ததென்பதில் ஐயமில்லை.


"முவாச் சாவா மொழி"

 

இங்ஙனம் கொதித்தெழுந்த ஆழியின் கொடுமையால் குறுகி நின்ற தமிழகம் தன்னேரிலாத் தமிழ் மொழியைப் பொன்னே போற் போற்றி வளர்க்கத்தலைப்பட்டது. முடியுடை மன்னர் மூவரது ஆட்சியிலமைந்த முந்நாடுகளிலும் தமிழ்மணம் கமழ்வதாயிற்று இயல் இசை நாடகம் என்னும் முத்துறைகளிலும் தமிழ் மொழி சிறந்து வளர்ந்தது. தமிழ்த்தாய் வயிற்றிற் கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், துளுவமும் பிறந்து வளர்வனவாயின. கொண்ட கருவால் உயிரிழக்கும் நண்டு போலாது பன்மக்களை உயிர்த்த பைந் தமிழ்ப் பாவை இளநலம் குன்முது இனிது வாழ்ந்தாள். இத்தகைய சீரிளமைத்திறத்தினை வியந்த செந்தமிழ்ப் புலவர் ஒருவர்:


"பல்லுயிரும் பல உலகும்
      படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன்
      னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களி தெலுங்கும்
      கவின் மலையாளமும் துளுவும்
உன்னுதரத் துதித் தெழுந்தே
      ஒன்று பல வாயிடினும்
ஆரியம் போல் உலக வழக்கழிந்து
      ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம்வியந்து
      செயல் மறந்து வாழ்த்துதுமே.''


என்று சிறப்பித்துப் போந்த முறை சிந்தையைக் கவர்வதாகும். ஆந்திர நாட்டில் வழங்கும் தெலுங்கு மொழியும், மைசூர் நாட்டில் வழங்கும் கன்னடமொழியும், கேரள நாட்டில் வழங்கும் மலையாள மொழியும் தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்த மக்களேயாயினும், கதிரொளியைக் கைக் குடையால் மறைக்கக்கருதுவார் போன்று, சிலர் தமிழின் தாய்மையை மறுக்க முற்படுகின்றார்கள் திருந்திய மொழிகளாய கன்னடமும், களி தெலுங்கும், மலையாளமும், துளுவும் தமிழ் மொழியோடு தொடர்புடைய மொழிகளே யன்றித் தமிழ்த்தாய் வயிற்றினின்றும் பிறந்த சேய் மொழிகளல்ல என்று பறை சாற்றுவர் பலர். பிள்ளைகள் வயது மூத்தால் பெற்றோரைப் புறக்கணித்தல் இயல்பன்றோ?

 

“சேரநாடும் செழுந் தமிழும்"

 

இனி பிந்திய மகவாய்ப் பிறந்த மலையாளமும் இப்பொழுது தனிமொழி என்று தலை தூக்கி நிற்க முயல்கின்றது. ''சிலப்பதிகாரம் " என்னும் செம்மைசான்ற தமிழ்க்காவியம் சேர மன்னனாய்த் திகழ்ந்த “செங்குட்டுவன்" உடன் பிறந்த '' இளங்கோ 'வால் இயற்றப்பட்டதாகும். சேர நாட்டில் பிறந்து வளர்ந்து செம்மையுற்ற இக்கவிஞரது தாய்மொழி தமிழ் மொழியே என்பதில் அணுவளவும் ஐயமுண்டோ? சேர நாடாண்ட செங்குட்டுவனைத் தமிழ் வேந்தன் என்றும், சேர நாட்டுச் சேனையைத் தமிழ்ச் சேனை என்றும் ஆசிரியர் “இளங்கோவடிகள்" புகழும் முறையை நோக்கும் பொழுது அக்காலத்தில் மலையாளநாட்டில் வழங்கிய மொழி தமிழ் மொழியே என்பது மாசற விளங்குவதாகும். வட இமயம் வரை படையெடுத்துச் சென்று பகையாசரை வென்று நட்பரசர் நல்கிய தலங்களைப் பெற்று மீண்ட “கரிகால்வளன்" என்னும் சோழமன்னனைப் பழித்துரைத்த ஆரிய மன்னரது குறும்பை யொடுக்குமாறு சீற்றமுற்றெழுத்த சோன் சேனையைக் குறிக்கப்போந்த இளங்கோவடிகள்,


''காவா நாவிற் கனகனும் விசையனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கென
சீற்றங் கொண்டு இச் சேனை செல்வது "


என்று கூறும் மாற்றம் கூர்ந்து நோக்கத்தக்கதாகும். அருந்தமிழ் ஆற்றல் அறியாது வளவன் ஆண்மையைப் பழித்துரைத்த குறுநில மன்னரது குறும்பை அடக்குமாறு கொதித்தெழுந்த தமிழ்ச்சேனையின் வீரமும், மானமும், கவிஞர் மொழிகளில் கனிந்து விளங்கக் காணலாம். அருந்தமிழ் ஆற்றல் அறியா தி இ+ழ்ந்துரைத்த அரசர் இருவரும் அல்லலுற்று அழுங்கிய செய்தி சிலப்பதிகாரத்திற் செவ்வையாய் விளக்கப்பட்டுள்ளது.


“மக்களுக் கிடங்கோடுத்த மாதா”

 

இவ்வாறு தமிழ்த்தாயின் மக்களாய்த் தோன்றிய மொழிகள் தாய்நாட்டைப் பங்கிடத் தலைப்பட்டன. “ஆந்திரம்' என்னும் தெலுங்கு தமிழகத்தின் ஒரு பெரும் பகுதியைக் கவர்ந்தது. கன்னடம் மற்றோர் பகுதியைக் கவர்வதாயிற்று மலையாள நாடு மலையாளமொழிக் குரியதாயிற்று ஆகவே வடபுலத்தை விருந்தாகவந்த ஆரியர்க்கும், தென் புலத்தை திரைத்தெழுந்த கருங்கடற்கும், வழங்கிக் குறுகின்ற தமிழகம் மூன்று கவடாய் முளைத்தெழுந்த மும்மொழிகளால் பின்னும் குறுகுவதாயிற்று. தமிழ்சாட்டின் வட எல்லையாக இன்று காறும் நூல்களில் குறிக்கப்படும் வேங்கட மலையைச் சூழ்ந்த நாடுகளிலும் இப்பொழுது ஆந்திர மொழியாய தெலுங்கு வழங்கும் தன்மை அறியத்தக்கதாகும்.



“திரைகடலோடிய தென்மொழி”

 

இவ்வாறு மக்கள் பல்கி நாட்டைப் பாகம் செய்யக் கருதியபோது கவலையுற்ற தமிழ்த்தாய் கருங்கடல் கடந்து பிறநாடுகளைக் கவர்ந்து பிழைக்கக் கருதினாள். ஊக்கம் நிறைந்த தமிழ் மக்கள் காற்றில் இயங்கும் கலங்களைத் துணை கொண்டு கடலிற்சென்று ' கடாரம்' என்னும் பர்மா நாட்டில் குடியேறினார்கள். இலங்கை நன்னாட்டில் இறங்கினார்கள். மலேயா நாட்டில் மன்னி வாழத் தொடங்கினார்கள். இன்னும் ஆப்பிரிக்கா முதலிய அர்நிய நாடுகளிலும் சென்று சேர்ந்தார்கள். முயற்சி திருவினையாக்கும்'' என்னும் முதுமொழியின் வழி கின்று மெய்வருந்த உழைத்துச் சென்ற நாடுகளை செழிப்புறச் செய்தார்கள். தமிழர் சென்ற இடம் எல்லாம் செழுமை நிலைத்தது; செல்வம் பெருகிற்று; பசியும் பிணியும் நீங்கி வசியும் வளமும் சுரந்தன.


 "முன்னோர் தமிழ்வளர்த்த முறை ''

 

இங்ஙனம் தமிழ்மக்கள் சென்று குடியேறிய நாடுகளிலெல்லாம் தமிழ்மொழி வழங்கத் தலைப்பட்டது. இக்காலத்தில் சிங்களம் சாவகம் கடாரம் முதலிய நாடுகளில் வேளாண்மை என்னும் விழுமிய பணியாற்றியும், தாளாண்மை பென்னும் தகைமையில் தலை என்றும் தேடிய பொருளின் ஒரு பகுதியைத் தமிழ்மக்கள் தாய்நாட்டிற் கொணர்ந்து பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறு பல நாடுகளிலும் சென்றேறி வாழும் தமிழானைவரும் ஒரு குடிப் பிறந்த மக்கள் போல் ஒன்றுபட்டு வாழ்தல் இன்றியமையாததாகும்.
கெங்கு வாழ்ந்தாலும், எத்தொழிலைச் செய்தாலும், தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒரு குலத்தவர் என்னும் உணர்ச்சி தலையெடுத் தோங்குதல் வேண்டும். முற்காலத்திய தமிழ் மக்கள் சாதிபேதமென்னும் தடந் சுழியிலும், சமயப் பிணக்கமென்னும் சண்டமாருதத்திலும் நிலைகுலைந்தழியாது தாய்மொழியைத் தக்கவாறு போற்றி வளர்த்தார்கள். சைவரும் வைணவரும், சமணரும் சாக்கியரும், இணக்கமுற்றுத் தமிழ் மொழியை வளர்த்த வரலாறு சங்ககால சரித்திரத்தில் நின்றிலங்குவதாகும். இன்னும் புலனழுக்கற்ற அந்தணனாய் விளங்கிய கபிலனும், கூடலிற் கூலவாணிகம் செய்த சாத்தனும், குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த கொற்றவனும், நோய் நாடி மருந்தருத்திய மருத்துவன் தாமோதரனும், தொழில் முறையால் வேறுபட்டவராயினும் வேற்றுமையின்றிக் கலந்து பண்ணாந்த தமிழ்மொழியை வளர்த்த பான்மை பழைய வரலாற்றால் அறியப்படும் இன்னும் அறிவு நலம் சான்ற ஆடவரொடு நல்லிசைப்புலமை மெல்லியவாரும் கலந்து நற்றமிழ் மொழியை வளர்ப்பாராயினர். எளிய வாழ்க்கையும் அரிய புலமையும் வாய்ந்த ஒளவையாரும், வெள்ளி வீதியாரும், வெண்ணிக் குயத்தியாரும், ஏனைய பெண் மணிகளும் பாடிய அருங் கவிகள் பழந்தொகை நூல்களில் விளங்குகின்றன. ஆகவே மதவேற்றுமைகளாலும் தொழில் வேற்றுமைகளாலும் பால் வேற்றுமைகளாலும் தடையுறாது பண்டைத் தமிழ் மக்கள் தாய் மொழியைப் பாதுகாத்து வளர்த்தார்கள் என்பது இனிது போதரும்.



“இறந்தகாலத் தாழ்வும் எதிர்கால வாழ்வும்”

 

ஆயினும் சென்ற சில நூற்றாண்டுகளாகச் செம்மை சான்ற தமிழ்மொழி மாசுற்ற மணி போல் மயங்கி நிற்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல காரணங்களால் தாய்மொழி அன்பு குறைந்து பிறமொழிப்பற்று மேம்படுவதாயிற்று. பிறமொழிகளிற் பேசுதலும் எழுதுதலும் அறிவுடைமைக்கழகென்றும், தாய்மொழியிற் பேசவரா தென்று மேடையேறி முழங்குதல் பெருந்தகைமை என்றும் கருதப்பட்டது. கலாசாலைகளில் அருங்கலை கற்கப்போந்த மாணவர்கள் தாய்மொழியைப் புறக்கணிக்கத் தலைப்பட்டார்கள். இத்தகைய அடிமை யுள்ளம் இக்காலத்தில் சிறிது சிறிதாக அகன்றுவருகின்றது. கார்மேகம் செறிந்த வானத்தில் இப்பொழுது கதிரொளி வீசுகின்றது. நாடு நலம் பெற்று ஓங்க வேண்டுமாயின் நாட்டு மொழிகள் தழைக்க வேண்டும் என்னும் உண்மை பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. நாட்டு மொழிகள் நகர சபைகளிலும் நாட்டாண்மைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் கலாசாலைகளிலும் நின்றேறி நிலவும் காலம் நெருங்கி வருகின்றது. அதற்கேற்ற முறையில் பழையன கழித்துப் புதியன புகுத்தித் தாய்மொழியைச் செப்பம் செய்தல் தமிழ்மக்களது தலையாய கடனாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுன் ௴

 



 

No comments:

Post a Comment