Tuesday, August 25, 2020

 அரும் தமிழ் வளர்த்த ஐயர்

 

சமய பேதங்களாலும் சாதி பேதங்களாலும் தளர்வுறாது, அக் காலத்தில் தமிழ்மொழி தழைத் தோங்குவதாயிற்று. தமிழ் மொழியின் இனிமையையும் பெருமையையும் அறிந்த எந்நாட்டவரும், எம்மதத்தவரும், அதனைப் போற்றி வளர்க்கத் தலைப்பட்டார்கள். சைவரும் வைணவரும், சமணரும் சாக்கியரும், துருக்கரும், கிருஸ்தவரும் அமிழ்தினுமினிய தமிழ் மொழியை ஆதரித்து வளர்த்த அருமை, தென்மொழி வரலாற்றில் தெள்ளிதில் விளங்கக் காணலாம். இம்முறையில் இருநூறு ஆண்டுகட்கு முன்னர், இத்தாலியா நாட்டினின்றும் இந்நாடு போந்து, அருந்தமிழை ஆர்வத்தோடு பயின்று, அதன் சுவை யறிந்து போற்றிய வீரமா முனிவரது பெருமையை ஈண்டு ஆராய்வாம்.

 

இத்தாலியா நாட்டில் பெஸ்கி யென்னும் இயற் பெயர் பெற்று தமக்கென வாழாப் பிறர்க் குரியாளராய் விளங்கிய இப்பெரியார், இளமையிலேயே இவ்லறம் துறந்து, இயேசு நாதரது சேவையில் ஈடுபட்டு நின்றார். அப்பெருமானது செம்மையை ஐரோப்பிய மக்களே யன்றிப் பாரத மக்களும் அறிந்துய்ய வேண்டுமென்னும் ஆர்வத்தால் இந்நாடு போந்து முப்பத்தைந்து ஆண்டு தென்னாட்டில் தங்கி வாழ்வா ராயினர். தமிழ்ப் பெருமக்களது பழக்க வழக்கங்களையும், தமிழ் மொழியிலமைந்த இருவழக்குகளையும், இனிதறிந்து, இலக்கிய இலக்கணங்களை ஐயந்திரிபற ஓதி யுணர்ந்தார். பலகலை யறிந்த இப்பெரியார் வீரமா முனிவரென்னும் புதுப் பெயர் புனைந்து, அருந்தமிழ் மொழியில் அருமை சான்ற பல நூல்கள் அருளிப் போந்தார்.

 

அக்காலத்தில், தென்னாடு மகம்மதிய மன்னரது ஆளுகையில் அமர்ந்திருந்தது. அம்மன்னரது ஆதரவு பெற்றான்றித் தாம் கருதிய நோக்கம் நிறைவேறா தென்று அறிந்த முனிவர், பாரசீக மொழியையும், இந்தி மொழியையும், பண்புறப் பயின்று, அம்மொழிகளிற் செம்மையாய்ப் பேசும் திறம்பெற்றார். சிறந்த மதி நலமும், செம்மை சான்ற நூலறிவும் வாய்ந்த முனிவர் தென்னாடாண்ட சண்டா சாகிப் என்னும் நவாப்பைக் கண்டு, அவனிடன் சிறிது அரசியல் முறை பற்றி உரையாடினார்.

 

மதி நலம்வாய்ந்த அம்மகமதிய மன்னன் முனிவரது நாவன்மையையும் நல்லறிவையும் பலவாறு வியந்து, நல்லூர், அரசூர் முதலிய நான்கு சிற்றூர்களை மானியமாக வழங்கி, திவான் பதவியும் ஓர் அழகிய சிவிகையும் அளித்தான். அரசாங்க வேலையாய் முனிவர் வெளிப்படும் பொழுது, செவ்வையாய் அலங்கரிக்கப்பட்ட வெண்குதிரை மீது ஆடம்பரமாகச் செல்வார் ஆயினும் முனிவரது மனம், தாமரை இலையிற்றங்கிய தண்ணீர்த் துளி போல், உலகப் பொருள்களிற் பற்றற்ற உயரிய நிலையில் நின்றது. மன்னனிடம் மானியமாய்ப் பெற்ற நிலங்களின் வருவாயை, வறியவர்க்கு வரையாது வழங்கி மகிழ்ந்தார். வருந்தி வந்த ஏழை மாந்தரது அரும்பசி களைந்து, அவரது திருந்திய முகங்கண்டு திளைத்தார். " எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் " என்னும் இன்னுரையின் உண்மையை, இடையறாது எடுத்து மொழிந்து, இளைஞரது கல்வியைக் கண்ணும் கருத்துமாய்ப் போற்றி வளர்த்தார்.

 

இவ்வாறு அரசாங்க வேலையில் அமர்ந்திருப்பினும், முனிவரது மனம், நறு மணங்கமழும் தமிழ்ப் பூஞ்சோலையிலேயே உலாவித் திரிந்து இளைப்பாறுவதாயிற்று. தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் அருளிய திருக்குறளைப் பன்முறை ஓதி யுணர்ந்து, அந்நூலின் அறப்பாலையம், பொருட் பாலையும், மேலை நாட்டுச் செம்மொழியாய லத்தீன் பாஷையில் மொழி பெயர்த்தமைத்தார். இவ்வாறு இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயக்கத்தக்க அறநூலின் பெருமை யறிந்து, மேற்புலமக்களும் மேம்படுமாறு, அந்நாட்டுச் செம்மொழியில் அமைத் தருளிய முனிவரது ஆர்வம், என்றும் போற்றத்தக்கதாகும். இக் காலத்தில் மேலை நாட்டில் வழங்கும் பன்னிரு மொழிகளில் வள்ளுவர் வாய் மொழி வளமுறத்திகழு மாறு, வழி காட்டிய பெருமை வீரமா முனிவர்க்கே உரியதாகும்.


 "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
 வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”


என்று இக் காலத்திய கவிஞர் பாடிய புகழுரைக்கு அடிப்படை கோலிய பெருமையும் அடிகட்கே உரியதாகும்.

 

இன்னும் வீரமாமுனிவர் கதலிக் சமயச் சார்பாக, வேதியர் ஒழுக்கம். வேத விளக்கம் என்னும் இருநூலியற்றி வேத நெறியை விளக்கினார். பேதக மறுத்தல், ஞான முணர்த்தல் என்னும் தமிழ் நூல்களின் வாயிலாக மெய்ஞ்ஞான முறையை வகுத்துரைத்தார். காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, கலிவெண்பா என்னும் முந்நூல்களில் கன்னியின் பெருமையைக் கனிந்த மொழிகளால் அருளினார். இன்னும் கற்றோரும் மற்றோரும் படித்துப் பயன் பெறுமாறு வேமன் கதை முதலிய சிறு நூல்களும் செய்தனர்.

 

இவ்வாறு தமது மதத்திற்கு உழைத்த முனிவர், அருந்தமிழ் மொழிக்கும் பெரும் பணியாற்றி யுள்ளார். செந்தமிழ் மொழியிற் பயிலும் சொற்களை வகுத்தும் தொகுத்தும், சதுர அகராதி யென்னும் பெயரால், ஓர் அரியநூல் இயற்றினார். இதுவே, நம் தாய் மொழியில் ஆதி அகராதியாயமைந்து பின்னெழுந்த பேரகராதிகட்கெல்லாம் முன் மாதிரியாய் நிற்பதென்று கூறுதல் மிகையாகாது. இன்னும் சமண முனிவர் இயற்றிய 'நன்னூல்' போன்று தொன்னூல் என்னும் பெயரால் செந்தமிழ் இலக்கணம் செப்பமா யமைத்தும், 'கொடுந்தமிழ்' என்னும் பெயரால் வழக்காற்றிலமைந்த இயற்ற மிழுக்கு இலக்கணம் வரைந்தும், தண்டமிழ் மொழிக்குத் தொண்டு செய்தார்.

 

இவ்வாறாக இம்முனிவர் இயற்றிய இருபத்தொரு நூல்களில், இக்காலத்திற் காணக்கிடைப்பன சிலவே யெனினும், அடிகளது பெருமைக்கு என்றும் அழியாச் சான்று பகர்வது, 'தேம்பாவணி' என்னும் நயம் சான்ற நூலேயாகும். முப்பது காண்டங்களா லியன்ற இந்நூல் தொன்னூல் வழிநின்று, சொல் நயம் பொருள் நயம் பொருந்திக் கற்போர் கருத்தைக் கவர்கின்றது. இந்நூல் நுதலிய பொருள் வேதப் பொருளா யிருத்தலாலோ, அன்றி வேறு எக் காரணத்தாலோ, இக் காலத்தில் 'தேம்பாவணி' உரிய முறையில் ஓம்பப்படாத குறை வருந்தத் தக்கதாகும். தமிழன்னையின் கழுத்தில் வாடா மாலையாய் விளங்கும், தேம்பவாணியின் பொருளை, ஆசிரியர் அறிவிக்கும் முறை அழகு வாய்ந்த தாகும்.


''காம்பாவணி காட்டிய கன்னி நலத்
 தோம்பாவணி இவ்வணி யோர்ந்த பிரான்
 நாம் பாவணி நம்பியை நல்கிடவோர்
 தேம்பாவணி யாம் கொடி சேர்த்த னென்றார்"


என்னும் கவியில் தேம்பாவணி இனி திலங்கக் காணலாம். திருக்குறளின் தீஞ்சுவையும், சிந்தாமணியின் செழுஞ்சுவையும் கம்பன் கவிச்சுவையும் தாங்கி, இனிய செஞ் சொல் மாலையாய் இலங்கும் தேம்பாவணியின் பெருமை, ஒரு முறை ஓதினார்க்கும் இனிது விளங்கும். முக்கனியின் சுவைபிழிந்து வண்ணக் கிண்ணத்தில் அமைத்தாற் போன்று முந்நூலின் சுவையை வடித் தெடுத்துதவிய வீரமா முனிவரது ஆர்வம், என்றும் தமிழ் மக்களாற் போற்றத் தக்கதாகும். இந்நூலின் கவிச்சுவையை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

 

இவ்வாறு தமிழ் மொழிக்குத் திருந்தியபணி செய்த முனிவர், பழுத்த முதுமை யெய்திப் பொருனை நாட்டி வமைந்த மணப்பாடென்னும் சிற்றூரிற் சென்று வாழ்வா ராயினார். பழுத்தமேனியிற் பழுப்புடை தரித்து, இடைவிற் கச்சை புனைந்து பதமிட்ட புலித்தோல் மீது அமர்ந்து, பரமனது பெருங்கருணையை நினைந்துருகும் முனிவரது கோலம் கல்நெஞ்சையும் கரைப்பதாகும். புலித்தோல் விரித்த பூஞ்சிவிகையில், இருமருங்கும் அன்பர் மயில்விசிறி வீச, அழகிய பெருங்குடை முன்னே செல்ல பழுத்த தமிழ்ப் புலமை வாய்ந்த முனிவர், வெளியே எழுந்தருளும் பான்மையை, ஓர் ஆங்கிலப்புலவர் அழகுற எழுதியமைத்துள்ளார்.


''வலம்புரி புரையம் வால் நரை முடியினர்
 மாசறவிமைக்கும் உருவினர்
 இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்
 கற்றோர் யாவரும் அறியா அறிவினர்"


என்று திருமுருகாற்றுப் படையில் நற்றமிழ்ப் புலவராய நக்கீரர்எழுதிய முனிவர் கோலம், வீரமாமுனிவரிடம் விளங்கக் காணலாம். இவ்வாறு பன்னாள் இசைபட வாழ்ந்து கி. பி. 1742- ம் ஆண்டில் வீரமா முனிவர், இம் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலக வாழ்வை விரும்பினர். இப்பெரியார் முதுமைப் பருவத்தில் வாழ்ந்த மணப்பாடென்னும் மணியூர், செல்வம் மலிந்த சிற்றூராய்ச் செம்மையுற்று இன்றும் பொருனை நாட்டில் விளங்குகின்றது.

ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

No comments:

Post a Comment