Tuesday, August 25, 2020

 

அழகிய நம்பியின் திருவுலா

(ஆரியூர் - வ. பதுமநாப பிள்ளை.)

திருக்குறுங்குடியின் திருமாட வீதியிலே, அழகிய நம்பிப்பெருமான் ஆரோகணித்துள்ள திருத்தேர், அசைந்து அசைந்து செல்வதொரு மலையே போல் சென்று கொண்டிருந்தது. அவ்வேளையிலே நீலவான னத்திலே, மேனகை அரம்பை - திலோத்தமை - ஊர்வசி முதலிய அப்ஸர மங்கைகளும் கந்தர்வநாட்டுச் சுந்தரிகளும் கூட்டங் கூட்டமாக
வந்து கூடி தெருங்கி நின்றனர். அவர்கள் தமது மார்பிலும் தோள்களிலும் அணிந்திருந்த விண்ணுலகத்துச் சந்தனத்தின் நறுமணம், திருக்குறுங்குடி வீதியில் நடந்து கொண்டிருந்த மண்ணுலகத்து மாந்தரின் மீதும் வீசலாயிற்று. அவ்வமர மங்கைகளின் கருவிழிகளாகிய வண்டுகள், கீழே திருத்தேரில் சென்று கொண்டிருந்த அழகிய சம்பியின் வடிவழகாகிய
அமிர்தத்தை அள்ளி அள்ளிப் பருகலாயின. அத் தேரில் கட்டப்பட்டிருந்த
பாக்குக் குலைகள் வாழைப்பழக் குலைகள் செங்கரும்புகள் முதலியவை, அத்தேவமாதர்களின் கண்களுக்குப் பெருமகிழ்வூட்டின. நம்பி யெம்பெருமான் மீதும் அவரது திருவடிகளைச் சுற்றிலும் கிடந்த அழகிய மலர் மாலைகளிலிருந்து எழுந்த நறு மணம், 'குமு' 'குமு'வென்று வானளவும் வந்துபரவலாயிற்று'. அக் காட்சியைக் கண் குளிரக்கண்டு களித்துக்கொண்டிருந்த அமர மங்கையர், அவ்விடத்திற்கு வராமலிருந்த மற்ற மங்கைகளையும் அழைக்கக் கருதி, “வாரீர்! அழகிய நம்பியின் அம்புத பவனியைக்
கண்ணாரக் கண்டு வாயார வாழ்த்தி மகிழ, எல்லோரும் வாரீர்! வாரீர்!! இங்கு உல்லா ஸமாக உலாப்போகும் உம்பர் நாயகராகிய அழகிய நம்பியின் வடிவழகைக் கண் குளிரப் பார்க்க வாரீர்! வாரீர்"- என்று உற்சாகம் பொங்கித் ததும்பும் உச்சக்குரலில் கூவியழைக்க லாயினர்.

"கார் போன்ற கருநிறமுடைய கூந்த லழசைப்பெற்ற தோழிகளே! முற்காலத்திலே, 'மூலமே!' என்று ஓலமிட்டழைத்த யானைக்கு அருள் புரிய, அரை தலையக் குழ குலைய ஓடிவந்த அருளாளர், இந்நாளில் இரவும் பகலும் தம் தம்மையே நினைத்து நினைத்து நெஞ்சு கரைந்து உருகி நிற்கும் கொங்கைகளாகிய மத்தகங்களை உடைய இளம்பெண்யானை போன்ற என்னிடம் வந்து கலந்து இன்பம் தந்தருள இன்னும் மனம் இரங்கினாரில்லை. இது என்ன நீதி?'' - என்று முறையிட்டு நின்றாள், ஒரு தேவமாது. "தன்னை நம்பிநின்ற பாலனைக் காத்தருள, நரசிங்கமூர்த்தியாகத் தோன்றி இரணியனின் மார்பகத்தை இரு கூறுகளாகப் பிளந் தருளினாரென்றும்; எதிர்த்து ஓடிவந்த 'குவலயா பீடம்' - எனும் மதயானையின் இரு தந்தங்களையம் பற்றப் பிடுங்கி யருளினாரென்றும், இப் பெருமானின் வீரச் செயல்களை நான் பன்முறை கேட்டிருக்கிறேன். மறைந்து நின்று மலர்க்கணை தொடுத்து என் மனத்தை வதைத்து நிற்கும் மாரவேளின் செருக்கை அடக்க, இப்பெருமான் இன்னும் எளியேன் பால் மனம் இரங்காததன் காரணம் என்னவோ?'' - என்றாள் மற்றொருத்தி.

வீதியில் தன்னை ஒத்த சின்னஞ்சிறுமிகளுடன் சிற்றிலிழைத்து விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு செல்வி ஒருத்தி, சுமார் எழு வயதுடைய பேதை, திருத்தேரில் எழுந்தருளியிருந்த அழயே நம்பியின் வடிவழகில் ஈடுபட்டுத் தன்னை மறந்து நின்றாள். அவ்வேளையிலே, அப் பெருமான்மேல் அச் சிறுமி கொண்ட காதற்பெருக்கினாலே, அவளது சின்னஞ்சிறு செல்வமணிக் கரங்களில் அணிந்திருந்த வளைகள் கழன்று கீழே விழுந்தன; முடிந்திருந்த அவளது கருங்குழலும் அவிழ்ந்து தொங்கியதன் பயனாக, அவள் அதில் அணிந்திருந்த நறுமண மலர்கள் தரையில் உதிர்ந்து சிதறின. ஊழிக்காலம் வருமளவும் எல்லைக்குள் கட்டுப்பட்டு கரைகடந்து செல்லாமல் அடங்கி நிற்கும் கருங்கடலேபோல், நெஞ்சினின்றும் பொங்கி எழுந்த ஆசையை வெளியிட்டு விடாமல் அடக்கிக்கொள்ள முயன்றன அவளது சின்னஞ்சிறு கருவிழிகள். தன்னை யொத்த சிறுமிகளுடன் வீதி மணலில் விளையாடிக் கொண்டிருந்த வேளையிலே, பவனி விழாவைக் கண்டு களிக்க வீதியில் வந்த தனது அன்னையைப் பின்பற்றித் திருத்தே
கில் சென்று நின்றாள் அப் பேதை. ''தம்பீ! நம்பீ! என்னை நன்னா வைக்கணும்.
எல்லாக் குத்தத்தையும் பொறுத்துக்கணும். என்மேல் இரங்கணும்"- என்று
தனது அன்னை சொல்லிக்கொடுத்த வண்ணமே நம்பியை நோக்கிக் கை கூப்பியவாமே குழலினும் இனிய மழலைமொழியில் கொஞ்சிக் குளறி நின்ற அச் சிறுமி, நம்பியின் திருமார்பில் அசைந்து கொண்டிருந்த மலர் மாலையைக்கண்டு எப்படியேனும் அதை வாங்கிக் கொண்டுவிட வேண்டுமென்ற ஆசை மிகுந்து, தனது அன்னையை நோக்கி, “அம்மா! அம்மா!! பெருமாள் கழுத்திலே போட்டிருக்குது பாரு மாலை, அந்த மாலையை நம்ம வீட்டுப் பெருமாளுக்குப் போட்டுப் பார்க்கப் போறேன்; அத்தை எனக்கு வாங்கிக் கொடு. ஊ...ஊ...ஊம்''- என்று கண்ணைப் பிசைந்துகொண்டு நின்றாள். “அடி, பைத்தியமே!
அது எப்படி நமக்குக் கிடைக்கும்?" என்றாள் அன்னை. அதைக்கேட்டு மனம் உடைந்த சிறுமியின் சிறிய கரிய விழிகளிலிருந்து, சில நீர்த்துளிகள் சிந்தின. அதைக் கண்ட அன்னை, அவளை வாரி எடுத்து முத்தமிட்டு இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.

திருத்தேர், அவ் வீதியினின்றும் திரும்பி அடுத்த வீதியில் சென்றது.
ஒரு வீட்டுக்குள்ளே, வெண்முத்து மாலை புரளும் மார்பகமும் காதற்கொடி கொழுந்துவிட்டுப் பற்றிப் படர்ந்து வளர முயலும் பருவமும் உடைய பதினொரு வயதுடைய பெதும்பைப் பெண் ஒருத்தி, காதலிகள் சிலர் தம்மைப் பிரிந்து சென்றிருந்த காதலரின் அழகிய வடிவங்களை எழுதிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று நின்று, அச் சித்திரங்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவ்வேளையிலே, அவளது தோழிளுள் ஒருத்தி அங்கு ஓடிவந்து அவளை நோக்கி, “வீதியிலே, நம்பி தேர் பவனி வருது; ஓடிவா! ஓடிவா!" - என்று ஆவல் பொங்கிப் பெருகும் குரலில் கூறி நின்றாள். அச் செய்திகேட்டுக் கருத்து உருகிக் களித்து நின்ற அப் பெதும்பைப் பெண், தனது தோழிகளுடன் புறப்பட்டு வீதியில் வந்து திருத்தேரில் எழுந்தருளியிருந்த அழகிய நம்பியைக் கண்குளிரக் கண்டு துதித்து நின்றாள். அந் நம்பியின் அருட்காட்சியின் குளிரொளி, அவளது நெஞ்சில் அரும்பியிருந்த காதல் மொக்கை அலர்த்தத் தொடங்கியது; அந்த நம்பியின் வலத் திருத்தோளிலே, ஒரு அழகிய மங்கை வீற்றிருப்பதுபோல் அவளது கண்களுக்குத் தோற்றியது. அதைக்கண்டு பெரிதும் வியந்த அவள், தனது தோழிகளை நோக்கி, “தோழிகளே! நம்பியின் திருமார்பில் திருமாது இடையறாது குடிகொண்டிருக்கிறா ளென்பதை, நான் பன்முறை கேட்டறிந்த துண்டு; அவளைத் தவிர, இப் பெருபானின் திருத்தோளின் மேல் வீற்றிருக்கும் இவள் யாரென்பதைச் சொல்லுங்கள்"- என்றாள். அதைக்கேட்ட அத் தோழிகளுள் ஒருத்தி கலகலவென்று நகைத்து, “அடி, அசடே! அது கூடத் தெரியவில்லையா உனக்கு? நமது நம்பிக்கு என்றென்றும் குன்றாத பெருவெற்றியையே விளைவித்து வீரலக்ஷ்மியே அவள். அர்த வீர லக்ஷ்மிக்குத் தகுந்த
உறைவிடம். நம்பியின் வீரத் திருத்தோளே என்பதைக்கூட உன்னல் உணர்ந்துகொள்ள முடியவில்லையே!'' - என்றாள். அம் மொழி கேட்டுஅகம் குளிர்ந்த அப் பெதும்பை, அவ்வீர நம்பியைத் தனது கள்ளக் கடைக்கண்களால் நோக்கிப் புன்னகை புரிந்து நின்றாள்; அவ்வீரத் திருத்தோளைத் தழுவி மகிழும் தனிப்பெரும் பேறு தனக்கும் வாய்க்கக் கூடுமோ என்ற ஏக்க பகுதியினாலே, அவளது உள்ளம் பட்ட மெழுகைப்போல் பெரிதும் கரைந்து உருகியது.
நீலவானில் பாலொளி வீசிச் சிரித்து நின்ற மோகன சந்திரனைக்கண்டு கொஞ்சங் கொஞ்சமாக இளகிக் கரையத் தொடங்கும் சந்திரகாந்தக் கல்லைப் போல், அவளது நெஞ்சமும் கரைந்து உருகத் தொடங்கியது. தான் சிறிதும் எதிர்பாராத வேளையிலே, தாமாக வலியவந்து காட்சி தந்தருளிய அருட்பெரு வள்ளலாகிய நம்பி, தன்னைக் கைவிட்டுவிட மாட்டாரென்ற நம்பிக்கையும் அவளது நெஞ்சில் தோன்றி அவளது கவலைகளை ஒருவாறு மறக்கச் செய்து, அவளுக்கு ஆறுதல் அளித்தது. மாரவேள் ஏவிய மலர்க்கணை ஒன்று, அவளது நெஞ்சில் புகுந்து காதல் தீயை எழுப்பத் தொடங்கிவிட்டது.

திருத்தேர், மற்றொரு தெருவில் சென்றது. ஒரு வீட்டிலே, சுமார் பதின்மூன்று வயதுடைய மங்கை ஒருத்தி, சில மலர்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள். அங்கு ஓடிவந்த அவளது தோழி அவளை நோக்கி, “பூமாலை கட்ட இதுவா சமயம்? வா ஓடிவா! வீதியிலே, நம்பி எவ்வளவு கோலாகலமாகத் தேரில் ஏறிப் பவனி வருகிறா ரென்பதைப் பார்!"- என்று கூறினாள். அதைக்கேட்ட அவ் விளமங்கை, தொடுத்துக் கொண்டிருந்த மாலையைக் கீழே எறிந்துவிட்டு தெருவில் ஓடிவந்து நம்பியைக் கண்குளிர நோக்கிக் களித்து நின்றாள். மறுகணத்தில், அப் பெருமான் தன்னிடம் இன்னும் பராமுகமாகவே இருந்து வருவதை எண்ணி அவரிடம் ஊடல் கொண்ட அவள், அவரை நோக்கி, “விருந்தாவனத்திலே ஒரு கோபிகையிடம் கொண்ட மையல் மிகுதியினாலே, நீர் அலைந் கொண்டிருந்ததை யெல்லாம் மறந்து விட்டீரோ? உள்ளத்தினின்றும் பொங்கி எழுந்த காதல் தீயை அடக்க முடியாமல் உம்மை பாடிவந்த கோபிகை ஒருத்திக்கு, 'இவ்வுடல் முழுதும் உனக்கே சொந்தம்; இதை உன் விருப்பப்படி ஆண்டுகொள்'- என்று அவளிடம் உடலை ஒப்புவித்து நின்ற உம்மைப் போன்றவர், வேறு எவரேனும் உண்டோ? உம்மைப் பிரிந்து தனித்திருப்பதால், எனது பெஞ்சில் பொங்கிப் பெருகும் சோகமும் உம்மைத் தழுவி மகிழ எனது உள்ளத்தில் பொங்கி எழும் ஆசையும் எத்தகையவை என்பதை நீர் அறியாதவரல்லவே! 'பெண் என்றால் பேயும் இரங்கும்'- என்பது முதுமொழி யன்றோ? 'கிருபாநிதி' என்றும் 'தீனபந்து' என்றும் போற்றப்படும் நீரே எளியேனிடம் மனம் இரங்காவிட்டால், என்னிடம் மனம் இரங்கக் கூடியவர்கள் இங்கு வேறு எவர் உளர்? உமது திருமார்பைத் தழுவி மகிழும் பாக்கியத்தை எனக்கு வாய்க்கச் செய்தருள, உமது திருவுள்ளம் எப்பொழுது இரங்குமோ அப்பொழுது இரங்கட்டும். அதுவரையில், உமது திருமார்பில் படிந்து அசைந்து புரண்டு கொண்டிருக்கும் திருத் துழாய் மாலையையாவது எளியேனுக்கு அளித்தருளத் திருவுள்ளம் இரங்கியருள் வீராயின், அதையேனும் எனது மார்போடு அணைத்துக்கொண்டு உம்மைப் பிரிந்ததனால் விளையும் பெருந்துயரை ஒருவாறு தணித்துக்கொள்ள முயல்வேன்'' - என்று கூறி, மாரவேள் சொரிந்த மலர்க்கணைகளைத் தாங்க முடியாமல், திருத்தேரைத் தொடர்ந்து நடந்தாள்.

நீல வண்டின் குறு குறுப்பும் இளம் பெண் மான் விழிகளின் மருட்சியும் நீல மீனின் புரட்சியும் வேலின் கூர்மையம் நஞ்சின் கொடுமையும் அமிர்தத்தின் இனிமையும் ஒருங்கு கலந்து அமைந்தது போன்ற கருவிழிகளை உடைய மற்றொரு பெண் - சுமார் பதினெட்டு வயதுடைய ஸர்வா வயவ பூர்ண ஸௌந்தர்யவதியாகிய மடந்தை - மாரவேள் தனது லீலைகள் அனைத்து க்கும் தகுந்த சருவியாகப் பயன்படுத்தும் நடுப்பருவமுடைய சங்கை, தனது வீட்டின் பின்புறத்திலுள்ள சிங்காரப் பூந் தோட்டத்திலே, சமுக மரங்களினிடையில் பூட்டப் பெற்றிருந்த பொன்னூசலிலே சிங்காரமாக வீற்றிருந்து, இரு செவிகளிலும் அணிந்த மணி மகர குண்டலங்கள் ஆட ஒய்யாரமாக ஊசலாடிக் கொண்டிருந்தாள். அவ் வேளையில், அங்கு ஓடி வந்த அவளது தோழி அவளை நோக்கி, “நீ ஊசலாடுகிற லட்சணம்
வெகு அழகாயிருக்கிறதே! திருவீதியிலே அழகிய நம்பி எவ்வளவு
கோலாகலமாகத் திருத்தேரில் ஏறிப் பவனி வருகிறா ரென்பதைக் கண்டு களிக்க நீ வரப்போகிருயா? இல்லையா?"- என்று வினவினாள். உடனே, ஒரு இளமான் கன்றே போல் ஊசலினின்றும் துள்ளிக் குதித்த அம் மடந்தை, தெருவில் ஓடிவந்து தேரில் காட்சியளித்த நம்பியை நோக்கி ‘நெஞ்சு உருகிக கண் பனிப்பத் துதித்து,' 'செந்தாமரைத் திருக்கையிலே வெண்சங்கத்தைப் பற்றி நின்ற அண்ணலே! உம்மையே உன்னி உன்னி உள்ளம் உருகி நிற்கும் எமது சேர்க்கையை நீர் விரும்பாது விலகி நிற்பதன் காரணந்தான் என்ன? நச்சரவத்தைத் தனது கால்களில் பற்றிப் பறந்து திரியும் புள்ளரசராகிய கருடாழ்வாருடன் மகிழ்ந் திருந்தது போல், எங்கள் மதியையும் மகிழ்விக்க வேண்டாமோ?"- என்று வினவி நின்றாள். காமவேள் ஏவிய ஐம் பூங் கணைகளால் கனன்றெழுந்த காதல் தீயை அடக்க முடியாதவளாய், கரிய குழல் சரிந்து தொங்க-- அணிந்த கலை தளர்ந்து நெகிழ - தன்னை மறந்து நின்றாள் அம் மடந்தை. நம்பியின் திருத்தேரோ, நங்கையின் முறையீட்டைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அடுத்த தெருவை அடுத்தது.

வெள்ளை வெளேலென்ற முல்லையரும்புகளை யொத்த முத்துப் பற்களும் செங்குவளை மலரும் வெண் வள்ளை மலரும் ஒரு செந்தாமரைப் பூவிற்குள் அமைந்திருப்பதே போல் செங்கனி வாயிதழ்களையும் கொடிமூக்கையும் தன்னிடம் ஏந்தி நின்ற மலர் முகமும் உடையவளும், காதற் கலவியிலே மேனகையும் வெட்கி நிற்க விசித்திர லீலை புரிய வல்லவளும், தனது ஒரு மோகனப் புன்சிரிப்பினாலே எத்தகையவர்களையும் எளிதில் மயக்கிவிட வல்லவளும், இளம் பெண்மானின் கண்களைப் போல் மருண்டு நோக்கும் கருவிழிகளை உடையவளும், சுமார் இருபத்தைந்து வயதுடையவளுமான ஒரு அரிவை, தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வள்ளலாகிய
அழகிய நம்பியன் திருவுருவை ஓவியமாகத் தீட்டி மகிழும் ஆவல் மிகுந்து, மாடிமேல் சென்று, அழகிய பொன்னிறப் பலகையின் மேல் எழுதுகோலை நாட்டி நம்பியின் திருவுருவைத் தீட்டத் தொடங்கினாள். அவ் வேளையிலே, அழகிய நம்பி வந்தார்! குறுங்குடிக் குழகர் வந்தார்!'- என்று வீதியினின்றும் எழுந்த திருச்சின்ன ஒலி அவளது செவிகளில் விழுந்தது. உடனே கீழிறங்கி வந்த அவள், நம்பியைக் கண் குளிரக் கண்டு துதித்து நின்று, "எம்பெருமானே! முன்னர் ஒரு மெல்லியலின் மேனியாகிய கரும்பின் மீது கொண்ட காதற் பெருக்கிஞலே, பெரியதொரு வில்லை ஒடித்தீர்! அன்று அந்நங்கையின் பொருட்டு அப் பெரு வில்லை ஒடித்தருளிய நீர், இன்று எளியேனை எதிர்த்து நிற்கும் மாரவேளின் கரும்பு வில்லை ஒடித்தருள மனம் இரங்காததன் காரணம் என்னவோ? அன்று கருங்கடலின் செருக்கை அடக்கித் திருவணை கட்டியருளிய நீர் இன்று எனது இரு விழிகளினின்றும் பெருகும் கண்ணீராகிய ஆற்றுப் பெருக்கைத் தடுக்கக் கூடிய அணை கட்டி யருள அகம் இரக்கினீரில்லை, அன்று கொக்கு வடிவம் கொண்டு வந்த கொடிய அரக்கனின் வாயை இரு பிளவாகக் கிழித்தருளிய தீர், இன்று எனது நெஞ்சைச் சித்திர வதைக்கு உட்படுத்தும் குயில் அன்றில் முதல்ய கருணையற்ற
பறவைகளின் வாயைப் பிளந்தருளலாகாதோ?''- என்று முறையிட்டாள். அவளது அம் முறையீட்டைக் கேட்டும் அதைச் சற்றும் பொருட்படுத்தாதவரேபோல், நம்பி அடுத்த தெருவிற் புகுந்தார்.

பிறை மதியணிந்த பெருமானால் நீறுபட்டழிந்து மீண்டும் உயிர் பெற்றெழுந்து செங்கரும்பு வில் ஏந்தி மொலியர் மேல் கணை தொடுக்கப் பின் வாங்காத வில்லியாகிய மாரவேள், நம்பியின் திருத்தேரருகிலே பிற எவரது கண்களுக்கும் தெரியாத வண்ணம் மாயமாக மறைந்தவாறு நடந்தும் வந்தான். அவ் வேளையிலே, தனது தோழிகளுடன் செந்தாமரைக் குளத்தில் படிந்து குடைந் தாடித் திரும்பிவந்த ஒரு கங்கை, சுமார் முப்பது வயதுடைய தெரிவை, வீதியில் திருத்தேரில் பவனி வந்து கொண்டிருந்த நம்பியைக் கண்டு நின்று, அப் பெருமானை நோக்கி, "ஏற்கெனவே சங்கு-சசகரங்களைத் திருக்கைகளில் ஏந்தி நிற்கும் நீர், இன்று எமது வளைகளையும் மோதிரங்களையும் பறித்துக்கொள்ள முயல்வதும் முறை தானே? என்னிடம் வந்து கலந்திருந்து களிப்பூட்ட மனம் இரங்காவிடினும், உமது திருமார்பில் புரளும் பேறு பெற்ற திருமாலையை அளித்தருளத் திருவுள்ளம் இரங்கினாலும் போதும். உமது வீரத் திருமார்பைத் தழுவி மகிழும் தனிப்பெரும் பேற்றுக்கு உரியவர்கள் திருமகளும் புவி மகளுமே யாயினும், அம் மார்பில் புரளும் திருத்துழாய் மாலை மெய்யன்பர்கள் அனைவருக்கும் பொதுவானதே யன்றோ? அம் மாலையை நீராகத் தராவிடில், நானே கை தொட்டுப் பற்றிப் பறித்துக் கொண்டு விடுவேன்". என்றாள். அவளது வீர வாதத்தைக் கேட்டுப் புன்னகை புரிந்த நம்பி, அடுத்த தெருவில் புகுந்து விட்டார்.

கருமுகில் போன்ற கருங் குழலும் செங்கனிவாயும் வெண் முத்துப் பற்களும் மிக மெல்லிய சிற்றிடையும் பெற்ற சுமார் முப்பத்தைந்து வயதுடைய பேரிளம்பெண் ஒருத்தி, ஒரு திண்ணையில் ஒரு பெரியார் நடத்திக் கொண்டிருந்த பகவத்கீதாப் பிரசங்கத்தில் ஈடுபட்டு மகிழ்ந் திருந்தாள். 'பாடகம்' என்பது நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாதலின், அப் பெயருடைய ஆபரணத்தை அவள் தனது கால்களில் அணிய இணங்கிலன்?
'வளை- ஆழி எந்திய நம்பிக்கு ஒப்பாக, நான் வளைகளையும் கணையாழி களையும் அணிந்து கொள்ளேன்'- என்று மறுத்து விட்டாள் அவள். வீதியில் திருத்தேரில் - பறிவந்த நம்பியைக் கண் குளிரக் கண்டு, “எம் பெருமானே! உமது திருமார்பை அடைந்து அழகு மிகுந்து விளங்கும் கௌஸ்துப மணி மீது, எனக்கு ஆசை இல்லை. செஞ்சந்தனச் சாந்தணிந்த உமது திருமார்பிலே புரண்டு நறுமணம் வீசிக் கொண்டிருக்கும் திருத்துழாய் மாலையை அடியேற்கு அளித்தருளத் திருவுள்ளம் இரங்கியருள்வீராயின், அதுவே அடியேற்குப் போதும்.'' என்று அப் பெருமானை இரந்து நின்றாள். அவளது அவ் வேண்டுகோளைக் கேட்டும் கேளா தவரே போல், நம்பியும் மறைந்துபோய் விட்டார்.

நம்பி மறைந்து போய்விட்ட பின்னர் சிந்தை பெரிதும் கலங்கித் தள்ளாடித் தள்ளாடி நடந்த வண்ணம் தனது மனைக்கு வந்து சேர்ந்த அப்பேரிளம் பெண், நெஞ்சினின்றும் பொங்கி யெழுந்த கொடிய துயரைப் பொறுக்க முடியாமல் தரையில் மூர்ச்சித்து விழுந்தாள். அவளைக் கண்டு பெரிதும் கலங்கிய அவளது தோழிகள், மெல்லிய பஞ்சணையின் மேல் குளிரிளந் தளிர்களைப் பரட்பி அவற்றின் மேல் வெண்பட்டுத் துணியை விரித்துப் போட்டு, அவளைத் தூக்கிக்கொண்டு வந்து அப் படுக்கையின் மேல் கிடத்தி, சுற்றிலுமிருந்த ஜன்னல்களைத் திறந்து விட்டு, அவள் மீது மெல்லிய மல்லிகை மலர்களைச் சொரிந்து, அவளது கரங்களில் குளிர்ந்த சந்தனச் சாந்து பூசி, அவள் மீது பன்னீரைத் தெளித்து, மயில் விசிறிகளைக் கொண்டு விசிறி நின்ரனர். அவ் வேளையிலே, அங்கு வந்து சேர்ந்த அவளது ஆருயிர்த் தோழி, அவளைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த
அனைவரையும் விலக்கி, அவர்களை நோக்கி, “இவளது உள்ளக் கிடக்கை என்னவென்பதை உணர்ந்து கொள்ளாமல், இவளுக்கு இதம் செய்வதாக எண்ணிக் கொண்டு, இவள் படும் வேதனையையே மேன் மேலும் பெருக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இவள் மீது தெளித்த பன்னீர், அழகிய நம்பியில் திருவாராதனையி லிருந்த திவ்ய தீர்த்தததிற்குச் சிறிதேனும் ஈடாதமோ? இவளது மார்பகத்தில் நீங்கள் வைத்த சந்தனச் சாந்து, திருக்குறுங்குடி அழகிய நம்பியின் திருவடிகளில் கிடக்கும் திருத்துழாய்க் குச்சிறிதேனும் நிகராகுமே? மயில் தோகை விசிறிகளைக் கொண்டு வீசி நீங்கள் எழுப்ப முயலும் இளங்காற்று, நம்பியின் திருக்கோபுர வாசலிலே வீசும் தென்றற் காற்றுக்கு ஒப்பாகக் கூடுமோ? இவள் படும் துயரை நீக்குவதற்கு, நீங்கள் செய்து நிற்கும் உபசாரங்களுள் எதுவும் சிறிதும் பயன்படாது ; இவற்றை யெல்லாம் விட்டு விட்டு அகன்று செல்லுங்கள்” - என்று கறி, தலைவியைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களை யெல்லாம் அப்புறப்படுத்திவிட்ட தோழி, அழகிய நம்பியின் ஆலயத்தை அடைந்து, பலவகைப்பட்ட இனிய நய மொழிகளினால் நம்பியின் திருஉள்ளத்தைப் பெரிதும் மகிழ்வித்து, அவரது திருமார்பில் விளங்கிய திருத்தழாய் மாலையைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு வந்து, தனது சிந்தைக்கினிய செலவியான சுந்தரியின் தோள்களில் சூட்டி மகிழ்ந்து நின்றாள்.
திருமாலை தனது உடலில் பட்டவுடனே களித்தெழுந்த சுந்தரி, தனது மார்பில் விளங்கிய அத் திருமாலை யை ஆராப் பெருங் காதலுடன் அணைத்துக் கொண்டு, வர்ணனைக் கடங்காத மகத்தான ஆனந்தக் கடலில் மூழ்கிவிட்டாள்.

- இவ்வாறு, பைங்கிளி கொஞ்சுவது போல் கொஞ்சிக் குளறி மழலை மொழிந்த பேதைப் பெண் முதல், காதல் முதிர்ந்து கருத்து உருகி நின்ற பேரிளம் பெண் வரைபில்--எழு வகைப்பட்ட பருவங்களை உடைய மாதர்கள் பலரும் பக்திக் காதல் பெருகிக் கனிந்து உருகி நிற்கும்படி- திருக்குறுங்குடியின் திருவீதிகளிலே, நாத விநோத நம்பி - என்னும் அழகிய நம்பி, தேவர்க ளெல்லோரும் வியந்து துதிக்க, திருத்தேரின் மேல் ஆரோகணித்து, பலவகைப்பட்ட வைபவங்களுடன் திருவுலாக் காட்சி அளித்தருளினான்.

(இக் கட்டுரையும் இதற்கு முந்திய கட்டுரையும், ‘திருக்குறுங்குடி அழகிய நம்பி உலா' - எனும் பழம் பிரபந்தம் ஒன்றை கொண்டு எழுதப் பட்டனவாகும்.)

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 



No comments:

Post a Comment