Tuesday, August 25, 2020

 அறம் புகாத அணி நகர்

 

கலைமகளும், திருமகளும் களித்து நடம்புரிந்த இலங்கை மாநகரின் பெருமையைக் கல்வியிற் பெரிய கம்பர் கனிந்த மொழி களாற் புகழ்ந்துள்ளார். வானளாவி நின்ற அவ்வள நகரின் மதில்களை வரையப் போந்த கவிஞர்,

 

 "கறங்கு கால் புகா, கதிரவன் ஒளிபுகா, மறலி
 மறம் புகாது, இனிவானவர் புகார் என்கை வம்பே,
 திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா,

அறம் புகாது அந்த அணி மதிட் கிடக்னக நின்று அகத்தின்"


என்று அவ்வீர நகரின் நிறையையும் குறையையும் நன்கு விளக்கிப் போந்தார். வீரவேந்தனாய இராவணன் வீற்றிருந்த அந்நகரில் கடுங் காற்றுச் சுழன்று வீசுவதில்லை கதியவனது வெம்மை சென்று சேர்வதில்லை. காலனது கொடுமை செல்வதில்லை. வானவர் பகைமை புகுவதில்லை. இன்னும் அழியாத் தன்மை வாய்ந்த அறமும் நெடிய மதிலைக் கடந்து நகரினுள்ளே நிலவுவதில்லை என்று இலங்கை மாநகரின் பெருமையையும் சிறுமையையும் கவிஞர் ஒருங்கே தொகுத்துரைத்தனர்.

 

அந்நகரைச் சூழ்ந்து மஞ்சுதோய உயர்ந்த மதில்களும், அந்நகரில் அண்ணாந்த மாட மாளிகைகளும் அமைந்திருந்தமையால் கடுங் காற்றின் வேகம் முறிந்து, எப்பொழுதும் இனிய இளந்தென்றலே அங்கு வீசுவதாயிற்று. கோட்டையா யமைந்த நகரங்களில் காற்றின் வேகம் குறைவாயிருத்தலும், கோட்டை யின்றி வெளியாயுள்ள நாட்டுப் புறங்களில் நெடுங்காற்று சுழன்றடித்தலும் இவ்வுண்மையை இனிது விளக்கக் காணலாம். ஆகவே மன்னர் மன்னனாய இராவணன் அரசு புரிந்த மணிநகரில் மெல்லிய தென்றல் தவழ்ந்ததே யல்லால் வேகமாய்க் காற்று வீசியதில்லை என்னும் உண்மையைக் கம்பர் நயமாக எடுத்துரைத்தார்.

 

இன்னும் நீர்வளம் நிலவளம் மிகுந்திருந்த அந்நகரில் எங்கும் நீங்காது நிழல் விரித்த நெடிய சோலைகளும் சாலைகளும் நிறைந்திருந்த செம்மை,


 "வேலையுள் இலங்கை யென்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
 காலையும் பாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச்
 சோலை யங்கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
 சாலையும் இருந்தாள் ஐய, தவம் செய்த தவமாம் தையல்''

என்று அநுமன் கூறும் அழகிய மொழிகளால் இனிது விளங்கும். இன்னும் அரக்கர் மதுவுண்டு மகிழ்ந்தாடும் அம் மணிநகரின் பெருமையைக் கண்டுகளித்த மாருதி,


"பளிக்கு மாளிகைத் தலந்தொறும் இடந்தொறும் பசுந்தேன்
துளிக்கும் தண்ணறும் கற்பகச் சோலைகள் தோறும்
அளிக்கும் தேற உண்டு ஆடுநர், பாடுநராகிக்
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்”


என்று செந்தேன் துளிக்கும் செஞ்சொற்களால் வியந்து புகழ்ந்தான். இவ்வாறு எம்மருங்கும் பசும்பந்தர் விரித்தாற் போன்று சோலைகள் செறிந்திருந்தமையால் கதிரவன் கொடுமை அந்நகரிற் செல்லாதாயிற்று.

 

இத்தகைய வளமார்ந்த தலைநகரில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வயிறார உணவருந்தி, கவலை யென்னும் கருநோயை வேரறுத்து, பசியும் பிணியும் இன்றிப் பண்புற வாழ்ந்து வந்தார்கள். அந்நாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு ஆடவனும் படைக்கலப் பயிற்சி யுடையனாய்த் திண்ணிய உடல் பெற்று விளங்கினான்.


 "கழலுலாம் காலும், கால அயிலுலாம் கையும் காந்தும்
 அழலிலாக் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை''


என்று கம்பர் அருளிய வீரமொழிகளில் இவ்வண்மை விளங்கக் காணலாம். அந்நகரில் வீரக்கழலில்லாக் கால்களும், சூரப்படை யில்லாக் கைகளும், வீரஒளி வீசாக் கண்களும் இல்லையென்று கவிஞர் அவ்வீர நாட்டை எழுதிக்காட்டும் விதம் அறிந்து வியக்கத்தக்கதாகும். இத்தகைய வீரமக்கள் அஞ்சா நெஞ்சும் எஞ்சா வலிமையும் உடைய அரிகளாய் விளங்கிய பெருமையை,


''காயத்தாற் பெரியர் வீரம் கணக்கிலர், உலகம் கல்லும்
 ஆயத்தார் வரத்தின் தன்மை அளவற்றார்''


என்று கம்பர் பின்னும் புகழ்ந்து போந்தார். இவ்வியல்பு வாய்ந்த மக்கள் வாழ்ந்த நாட்டில் இளமையில் முதுமையும், இறப்பும் இல்லையென்பது வியப்பாமோ? மூவாக்காலத்திற் சாவாத்தன்மை அந்நாட்டு வழக்கா யிருந்தமையாலேயே மறலியின் மறம் அம் மணிநகரிற் புகாதென்று கம்பர் புகழ்ந்துரைத்தார். அரும்பும் மலரும், காயும் கனியும் நிறைந்த இனிய சோலையில், சுழன்று வீசும் காற்றின் கொடுமையால் கனிகளே யன்றிக் காய்களும், மலர்களே யன்றி அரும்புகளும் உதிர்ந்து விழக் காண்கின்றோம். அவ்வாறே பசிப்பிணியும் நச்சுகோய்களும் நடமாடும் நாடு நகரங்களில், பாலரும் பருவமாந்தரும் காலன் வாய்ப் புகுதலைக் கண் கூடாகக் காணலாம். இத்தகைய பசியும் பிணியும் இன்றி இலங்கை மாநகரில் வசியும் வளமும் மிகுந்து, மக்கள் திண்ணிய மெய்யும் மனமும் உடையராய்த் திகழ்ந்தமையால், அந்நகரில் காலனது கொடுமை செல்லாதாயிற்று.

 

இவ்வாறு காற்றின் வேகமும், கதிரவன் வெம்மையும், காலன் கொடுமையும் செல்லாத வீரமா நகரில் வானவர் வலிமை செல்லாதாயிற்றென்று சொல்லவும் வேண்டுமோ? இலங்கையில் வாழ்ந்த தானவரை வானவர் மனம் புழுங்கி வெறுத்தாரேனும், அவரது உடல் வலியும் படை வலியும் கண்டு அஞ்சி ஒடுங்குவாராயினர். வீரவாழ்க்கையை மேற்கொண்ட அரக்கர் முன்னே, போக வாழ்க்கையே பெரிதென்று கொண்ட அமார், வெயிலிடையுற்ற வெண்ணெய் போல் மெவிந்து தேய்ந்தார் என்பதில் ஐயமுண்டோ? இவரது எளிமையை 'வானவர் புகார் என்கை வம்பே'' என்று கவிஞர், சொல்லாமற் சொல்லிய நயம் சிந்திக்கத்தக்கதாகும்.

 

இனி, எவ்வகை பகையும் இன்றி வீரமாதின் இருப்பிடமாய் இலங்கிய இலங்கைமா நகரில், அழியாத்தன்மை வாய்ந்த அறமும் செல்ல மாட்டாதென்று கவிஞர் அறிவிக்கும் முறை அழகு வாய்ந்ததாகும். அறத்தின் வலிமையை அறிவுறுத்தப் போந்த ஆசிரியர் வள்ளுவனார்,


 "அன்று அறிவாம் என்னாது அறஞ் செய்க, மற்றது
 பொன்றுங்கால் பொன்றாத் துணை''


என்று போற்றுவாராயினர். அழியும் தன்மைத்தாய இவ்வுலகில் என்றும் அழியாது நிற்பது அறம் ஒன்றே யாகுமென்று அறிவோர் நன்கு அறி வுறுத்திப் போந்தார். இத்தகைய பெருமை வாய்ந்த அறம் இலங்கை மாநகரினுள்ளே புகுந்ததில்லை யென்று கம்பர் கூறும் முறை கருதத்தக்கதாகும். அறம்பொருள் இன்பம் என்று ஆன்றோர் போற்றும் முப்பொருள்களில் தலையாய் நிற்கும் தகைமை சான்ற அறம் அந்நகரில் இல்லாமையாலேயே,


 "இரக்கம் என்றொரு பொருள் இலாத நெஞ்சினர்
 அரக்கர் என்றுளர் சிலர் அறத்தின் நீங்கினார்.''


என்று ஈரமற்ற அரக்கர் நீர்மையைக் கவிஞர் எழுதி யமைப்பாராயினர். பொருளல்லவற்றைப் பொருளென்று போற்றிய மருள் மலிந்த மக்கள் அழியாப் பொருளாய் அறத்தினைப் போற்றாது புறக்கணித்தார்கள். அறத்தின் வழி நின்ற பொருளும் அறத்தின் வழியமைந்த இன்பமுமே இம்மண்ணுலகில் வாழும் மாந்தர்க்கு உறுதி பயக்கு மென்று அறலறிந்தோர் கூறிப் போந்தார். அற நெறியை அடிப்படையாகக் கொள்ளாத பொருளும், இன்பமும் பெருகி வளர்வன போல் தோன்றினும், ஒருகாலத்திற் பொன்றி ஒழியுமென்று ஆன்றோர் அருளிய வாய்மைக்கு இலங்கை மாநகரே இணையற்ற சான்றாகும். சுற்றிய கடலாலும் முற்றிய திருவாலும் பகைவரது கொற்றத்தைப் பழித்த வீரமா நகரம், ஈரமற்ற இடமாயிருந்தமையால் இராமனது அம்புக்கு இரையாயிற்று.

 

அற நெறி திறம்பாத அரசன் ஆளும் நாட்டில் மாதவர் நோன்பும், மடவார் கற்பும் தலை சிறந்தோங்குமென்றும், மறம் வாடித் தளரு மென்றும் அந்நூல் கூறுகின்றது. இதற்கு மாறாக மறநெறியை மேற்கொண்ட இலங்கை மன்னன் மாதவர் நோன்பையும் மங்கையர் கற்பையும் அழிக்க முயன்றமையாலேயே, முக்கோடி வாழ் நாளும் முயன்று பெற்ற வரமும் முறிந்து முடியலுற்றான். அற நெறியைத் தானும் அறியானாய், அறிந்துரைக்கும் அறிவோரையும் துணைக் கொள்ளானாய் அழிவு சூழ்ந்த அரக்கர் கோனை நோக்கி,

 "கடிக்கும் வல்லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை
 அடுக்கும் ஈதடாதென்று ஆன்ற ஏதுவோடு அறிவுகாட்டி
 இடிக்குனர் இல்லை, உள்ளார் எண்ணியதெண்ணி உன்னை
 முடிக்குனர் என்ற போது முடிவன்றி முடிவதுண்டோ?”

 

என்று சீதை கூறும் செம்மை சான்ற மொழிகள் அற நெறியின் பெருமையை நன்கறிவிப்பனவாம். புறப் பகையினும் அறப்பகையே கொடிதென்னும் அரசியல் உண்மை இலங்கைக் கதையில் அடிப்படையாய் இலங்கக்காணலாம்

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment