Tuesday, August 25, 2020

 அறம் பொருள் இன்பம்

 

'தருமம் அர்த்தம் காமம் என்னும் மூன்று புருஷார்த்தங்களுக்கும் உரிய கிருகஸ்தருடைய ஒழுக்கம் எப்படிப்பட்டது? அவர்கள் பிழைப்புக்கு எவ்வகையான பொருளீட்டம் கூறப்பட்டுள்ளது?' என்று உமை கேட்க மகேஸ்வரர் சொன்ன மறுமொழி கீழ்வருமாறு:

 

'தேவியே! நீ கேட்பது நியாயந்தான். இவ்வுலகத்திலுள்ள நல்லொழுக்கம் பெரும்பாலும் கிருகஸ்தர்களுக் குரியதாகச் சொல்லப் படுகிறது. அவர்களைக் காப்பதற்காகவே அரசர்கள் பூமியில் பட்டாபிஷேகம் செய்யப்படுகின்றனர். இப்பொழுது, மனிதர்கள் எல்லோருக்கும். பொதுவாயுள்ள தொழிலைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.

 

கல்வி, வர்த்தகம், பணிவிடை, சிற்பம், ஸங்கீதம், கைத்தொழில் முதலியவை மனிதர்களின் ஜீவனத்திற்காக ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. மானிட ஜன்மமே தொழிலுக்கு இடம். மற்ற பிராணிகள் இன்ப துன்பங்கள் மாத்திரம் அனுபவிக்க உள்ளவை. ஆதலால், எல்லாப் பிராணிகளுக்கும் மனிதரைப் பற்றியே ஜீவனம் விதிக்கப் படுகிறது. எல்லா மனிதர்களுக்கும் முதலில் கல்விப் பயிற்சி தான் பிரதானமானதாக விதிக்கப்படுகிறது. காரியா காரியங்களை அறிவது கல்வியினாலன்றி மற்றொன்றினாலில்லை. கல்வியினால் அறிவு விரிவாகிறது. அறிவினால் உண்மை புலப்படுகிறது. உண்மை யறிந்தவன் பரிசுத்த மனமுள்ளவனாகி எல்லாப் புருஷார்த்தங்களையும் அடையத்தக்கவனாகிறான். கல்வி கற்றவன் உலகத்தில் சிறந்த ஜீவனம் செய்ய முடியும். ஆதலால், முதலில் ஒருவன் தன்னைக் கல்வியினால் பிரகாசிக்கச் செய்து கொண்டு, இந்திரியங்களையும், கோபத்தையும் அடக்கி ஆத்மாவைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்ட பிறகு, பெரியோர்களும் பூஜிப்பதற் குரியவனாவான். மனம் சாதாரணமாக குலத்தில் தொடர்ச்சியாக வரும் ஒழுக்கத்தையே முதலில் பற்றுமென் பதனால் நல்ல குலத்திற் குரியவை என்று தான தருமங்கள் ஆதிகாலத்தில் ஏற்படுத்தப்பட்டன. ஒருவன் வித்தையினாலேயே தன் ஜீவனத்தைக் கருதுவானாயின், குருவுக்குப் பணிவிடை செய்தல் முதலிய குணங்கள் பொருந்தி, நல்ல குருவினிடம் ராஜ வித்தை யாயினும், உலக நடைக்கு உரிய ஏனைய வித்தையாயினும் கற்க வேண்டும். அந்த வித்தையைப் புத்தகங்களைப் படித்தல் விஷயங்களை யூகத்துடன் பயிலுதல் முதலிய முயற்சி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இவ்வாறின்றி வேறு வகையால் மனிதன் கல்விப் பயனை அடையான். கல்வியினால் நியாயமாகப் பயன் பெற விரும்ப வேண்டும். அதில் அதர்மத்தை விட வேண்டும்.

பயிர்த் தொழிலினால் ஜீவனத்தைக் கருதினால் முறைப்படி ஜலம் நிரம்பின் நிலத்தில் அதற்குத் தக்கப் பயிரைச் செய்ய வேண்டும். அல்லது தேசத்திற்கும் காலத்திற்கும் தக்கபடி விலையையும் உபயோகத்தையும் பிரயாசையையும் லாப நஷ்டங்களையும் நன்றாக ஆராய்ந்து வர்த்தகம் செய்ய வேண்டும். ஊழியம் செய்து ஜீவிக்கக் கருதும் புத்தி சாலியான மனிதன் தன்னை அடக்கிக் கொண்டு ஏவுகிறவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். புத்தியினாலேயோ செய்கையினாலேயோ கற்பிப்பதனாலேயோ ஒருவனைச் சாரவேண்டும். வழியோடு அடுத்துப் பிறகு அந்த வேலையைச் செய்ய வேண்டும்.

 

அந்த யஜமானன் நம்பும்படியாகவும், சந்தோஷப்படும் படியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

 

ஊழியனுக்குரிய குணங்கள் பொருந்தியவனாகித் தானடுத்த மனிதனை தனக்கன்பனாகச் செய்து கொள்ள வேண்டும். அவனுக்கு இன்னாததைச் செய்ய லாகாது. அவனை விட்டுப் பிரிவதற்கு முன் வேறு ஆதரவைத் தேடலாகாது.

 

சிற்பம், கைத்தொழில் ஆகிய இவற்றில் திறமைக்குத் தக்கபடி நியாயமான கூலி வாங்க வேண்டும். எல்லாத் தொழில்களிலும் தான் உண்மையாக நடந்து வேதனம் பெறவேண்டும். உண்மையின்றி வாங்கும் வேதனமானது பாவத்திற்குக் காரணமாகும்.

 

எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு முன் தன் சக்தியையும், உபாயங்களையும் இடம், காலம், கருவிகள், பிரயாசை, செலவு, லாபம் ஆகிய இவற்றோடு தர்மத்தையும் முன்னிட்டு யுக்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேற்சொன்ன விஷயங்களை ஆராய்ந்து தெய்வானுகூலத்தையும் கண்டறிந்து அதன் பிறகு தனக்கு எதில் நன்மை யுண்டாகுமோ அதைச் செய்யத் தொடங்க வேண்டும்.

 

ஒரு தொழிலை எடுத்துக்கொண்ட பிறகு தெய்வத்தாலும் மனிதர்களாலும் நேரிடும் இடையூறுகள் வராமலும் மறுபடியும் வேறு எண்ணங் கொள்ளாமலும் அத்தொழிலை எப்போதும் காப்பாற்ற வேண்டும். அதனால், கிடைத்த பொருளை அழிக்காமல் காப்பாற்றியும், விருத்தி செய்தும் அனுபவிக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் சாப்பிடுகிறவனுக்கு மலை போன்றதும் அழிந்து போகும். புத்திசாலியானவன் தொழில்களினால் தனத்தையடைந்து அதை தர்மத்திற்கு ஒருபாகம், பொருளுக்கு ஒருபாகம், சுகத்திற்கு ஒருபாகம், கஷ்டங்களைப் பரிகரிப்பதற்கு ஒரு பாகமாக நான்கு பாகங்களாகப் பகுக்க வேண்டும். அன்னதானம், ஏழைகளுக்கு உதவி செய்வது, தெய்வ பூஜை செய்வது, மூலதனத்தைப் பொருக்குவது, அனுஷ்டானங்களை விடாமலிருக்கும் தர்மிஷ்டர்களுடன் சேர்ந்திருப்பது முதலான காரியங்களில், தர்மத்திற்காக இருக்கும் தனத்தைச் செலவிட வேண்டும். லாபத்தைப் பாராமலே தர்ம காரியங்களுக்கு தனத்தைக் கொடுக்க வேண்டும்.

 

பொருளுக்காக ஏற்பட்ட தனத்தை ஐஸ்வரியமும், உயர்ந்த நிலைமையும், அரசனுடைய ஸ்நேகமும் கிடைப்பதற்காகவும், வர்த்தகம் செய்வதற்காகவும், உதவியானவர்களையும், சிநேகிதர்களையும், சம்பாதிப்பதற்காகவும், விவாகச் சடங்குகளுக்காகவும், ஜீவனத்திற்காகவும், தனத்தை மிகுதியாகப் பெறுவதற்காகவும், நஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்காகவும், மற்றுமுள்ள இவ்வகைக் காரியங்களுக்காகவும் செலவிட வேண்டும்.

 

பலனைக் காரணங்களால் கண்டறிந்த பிறகு பொருளைச் செலவழிக்க வேண்டும். நஷ்டத்தை நிவர்த்தி செய்வதும், லாபத்தை உண்டாக்குவதும் பொருளே. பொருளில்லாத மனிதர்கள் பல முயற்சிகள் செய்தும் பொருளையடையார். ஆதலால் பொருளை ரக்ஷிக்க வேண்டும். சாஸ்திரப்படி தானம் செய்ய வேண்டும்.

 

சுகத்திற்காக ஏற்பட்ட தனத்தை தேக போஷணையின் பொருட்டு உணவைச் சிறப்பித்துக் கொள்வதற்காகவும், ஆட்டம் பாட்டுகளை அனுபவிப்பதற்காகவும், வினோத யாத்திரைக்காகவும், விளையாட்டுக்காகவும், சந்தோஷத்தினால் பரிசளிப்பதற்காகவும், மற்றும் இப்படிப்பட்ட காரியங்களுக்காகவும் செலவிட வேண்டும். தர்மார்த்த காமங்கள் மூன்றிலுமுள்ள குண குற்றங்களை ஆராய்ந்து பொருளைச் செலவிட வேண்டும்.

 

நாலாவது பாகத்தை ஆபத்காலத்திற்காகப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ராஜ்யம் தவறுவதனால் உண்டாகும் கெடுதலைப் போக்குவதற்காகவும், பஞ்ச நிர்வத்திக்காகவும், தீராத வியாதியைத் தீர்ப்பதற்காகவும் கிழத்தனத்தில் உதவுவதற்காகவம், பகைவரை எதிர்ப்பதற்காகவும், அன்னியதேசம் போவதற்காகவும், மற்றுமுள்ள ஆபத்துக்களினின்றும் தப்புவித்துக் கொள்வதற்காகவும் தனது பொருளைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

கஷ்டங்களினின்றும் தப்புவித்துக் கொள்வது உலகத்தில் பொருளுள்ளவர்களுக்குத்தான் எளிது. எவனுக்குச் சிறிதும் பொருளில்லையோ அவனுக்கு இம்மை மறுமை இரண்டும் இல்லை. ஆகாரத்தினால் இந்திரியங்கள் எப்படி நடக்கின்றனவோ அப்படியே எல்லாம் பொருளினால் நடக்கின்றன. ஆதலால் பொருளில் ஒரு பாகத்தைக் காப்பாற்றி வைக்க வேண்டும். இல்லாவிடின் அழிந்து போம்.

 

உலகங்களில் மனிதர்கள் ஜீவிக்கும் வகை இது. இவ்வகையான ஒழுக்கமுள்ள ஜனங்களுக்குத் தனமும் ஆயுளும் சுவர்க்கமும் சிறந்த புகழும் பெயரும் உண்டாகத் தக்க மற்றொரு ஒழுக்கஞ் சொல்கிறேன் கேள்.

 

தர்ம அர்த்த காமங்களை எல்லாரும் தம் சுவாதீனத்தினால் பகுத்து நடக்க வேண்டும். அவ்வாறு நடத்துபவர் இரண்டு லோகங்களிலும் நன்மை பெறுவர். காலையில் எழுந்திருப்பது, தேகத்தைச் சுத்தப்படுத்துவது, தெய்வ பூஜை செய்தல், ஆசாரியர்களைப் பணிவது, பெரியோர்களை எதிர் கொண்டழைப்பது, கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவது, அதிதிகளை எதிர் கொண்டழைத்து மரியாதையோடு விருந்து செய்வது, பெரியோர்களின் உபதேசப்படி நடப்பது, இதத்தையும் சன்மார்க்கத்தையும் கேட்பது, வேலைக்காரரைக் காப்பாற்றுவது, இன்சொல், கொடை இவற்றால் வசப்படுத்துவது, நியாயமான வேலையைச் செய்வது, அநியாயத்தையும், விரோதத்தையும் விடுவது, கிருஹ கிருத்தியங்களைச் சரியாக நடத்துவது, பிள்ளைகளுக்குக் கற்பிப்பது, அவரவர்களை அவரவர்களுக்குத் தக்க வேலைகளில் அமர்த்துவது, தகாத காரியங்களை விடுவித்து நல்ல காரியங்களைச் செய்விப்பது, குலத்திற்குரிய தர்மங்களைச் சரியாகக் காப்பது, தன் முயற்சியினால் தன் குலத்தை எல்லா வகைகளாலும் சிறப்பிப்பது முதலிய இந்த குணங்கள் எல்லாம் மனிதர்களின் ஒழுக்கமென்பது திண்ணம். நன்மைக்காவும், ஞானத்திற்காகவும் எப்போதும் பெரியோரை அடுத்திருக்க வேண்டும். பிறருக்காக ஏற்பட்ட பொருளைக் கேளாமல் எடுப்பது எவ்வகையிலும் கூடாது. பிறரை யாசிக்கலாகாது. மன வுறுதியுடன் தன் கைவன்மையையே ஆதரவாகப் பற்ற வேண்டும். ஆகாரத்திலும், ஆசாரத்திலும் தன் தேகத்தை எப்போதும் காப்பாற்ற வேண்டும். மனதிற்கினியதும், தேகத்திற் கனுகூலமானதும், எளிதில் சீரணிப்பதுமாகிய நல்ல ஆகாரத்தை அளவோடு உண்ண வேண்டும். பரிசுத்தமா யிருந்து தேவதைகளுக்கும், அதிதிகளுக்கும் செய்யவேண்டிய பூஜைகள் எல்லாவற்றையும் விதிப்படி செய்து மிகுந்ததை யுண்ணவேண்டும். கடுமையாகப் பேசலாகாது. காரணம் பற்றியே வெளியில் புறப்பட வேண்டும்.
 

கிருஹஸ்தாசிரமத்தி லிருப்பவன் எல்லோருக்கும் வசிப்பதற்கு இடமும், குடிக்கத் தண்ணீரும், பிக்ஷையும் எப்போதும் கொடுக்க வேண்டும். சப்தாதி விஷயங்களில் இறங்கலாகாது. தன் சக்திக்குத் தக்கபடி காரியங்களைச் செய்ய வேண்டும்.

 

கிருகஸ்தர்கள் வரவிற்குத் தக்கபடி செலவோடிருப்பதுதான் உலகத்தில் சிலாகிக்கப்படுகிறது. அபகீர்த்தியைக் கொடுப்பதும் லாபத்தைக் கெடுப்பதும், பிறரைத் துயரப்படுத்துவது மாகிய செய்கையை பயத்தினாலாவது, லோபத்தினாலாவது ஒருகாலும் செய்யலாகாது. முதலிலேயே குண குற்றங்களை ஆராய்ந்து நல்லது கெட்டது தெரிந்து கொண்ட பிறகு அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். தனது புண்ணிய பாவங்களில் தன்மனதையே எப்போதும் சாட்சியாகக் கொள்ள வேண்டும். நினைவிலும், சொல்லிலும், செய்கையிலும் பாவத்தைக் கருதலாகாது''

 

ஆனந்த போதினி – 1929 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment