Tuesday, August 25, 2020

 அறம்

 

அறமென்பது செய்யத்தக்கவை இன்னவை தவிர்க்கத்தக்கவை இன்னவை என்று அறிவுடையோர்களால் வரையறுத்து விதிக்கப்பட்டவற்றை அனுசரிக்கும் ஒழுக்கமேயாம். அது மக்களுக்கு மேன்மையைத் தருவதொன்றாயிருத்தலின் அதனை அவர்கள் தம் உயிரினும் மேற்பட்டதாக எண்ணிப்பரிபாலிக்க வேண்டும்.

 

நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.


என்ற குறளுக்குப் பரிமேலழகர் கொண்ட கருத்தின் சாரமாவது ஒருவனுக்கு நல்லொழுக்கம் புண்ணியத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயவொழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினுந்துன்பம் பயக்கும் என்பதே. நாம் பிழைக்குரியவ ராதலால் நல்லொழுக்கத்தில் எப்போதும் விழிப்பா யிருத்தல் வேண்டும். அவ்வாறிருந்து செய்துவரும் அறச் செயல்களுக்கு மனத் தூய்மை அதி முக்கியம். துர் ஆசை, தீராக்கோபம், பொறாமை - இவை முதலிய கெட்ட குணங்களை முற்றும் ஒழிக்க முயலுதல் வேண்டும்.

 

அன்பு, அருள், அடக்கம், பெரியார் சிறியார்க்கினிதாக நடந்து கொள்ள வேண்டிய முறைமை, ஆடம்பர மின்மை, பரோபகாரம் முதலிய நற்குணங்களைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

 

இத்தன்மைகளோடு செய்யத்தக்க அறத்தைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் இல்லறம் துறவறம் என இரண்டு பகுதியனவாகப் பிரித்து நமக்கு உபதேசிக்கிறார். அவர் இல்லற வியலின் ஈற்றயலிற் கூறிய ஈகையையே ஒளவையார் எடுத்துக்கொண்டு,

 

ஈதலறந் தீவினை விட் டீட்டல் பொரு ளெஞ்ஞான்றுங்
காத லிருவர் கருத்தொருமித்து - ஆதரவு
பட்டதே யின்பம் பரனை நினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
 

என்ற வெண்பாவினால் தெரிவிக்கிறார்.

 

இனி, பொதுவாக வறியவர்களுக்கு அன்னசாலை வைத்தல் முதலியனவாக அறத்தை முப்பத்திரண்டு விதமாய் ஆன்றோர்கள் வகுத்துள்ளார்கள். இறைவன் காஞ்சீபுரத்தின் கண் உமாதேவியாரிடம் முப்பத்திரண்டு அறத்தையும் உலகமறிய வளர்த்துக் காட்டுவாய் என அருள, அவ்வம்மையார் அவ்வாறே அந்த அறங்களை வளர்த்த படியால் அம்மாதேவியாருக்கு அறம் வளர்த்தமாதா எனத் திருநாமமுள்ளதாக ஆன்றோர்கள் கூறுவர்.


இதனை,


 முட்டையிற் கருவில் வித்தினில் வியர்ப்பில்
 நிற்பன நெளிவ தத்துவ தவழ்வ
 நடப்பன கிடப்பன பறப்பன வாகக்
 கண்ணகன் ஞாலத் தெண்ணில் பல் கோடி
 பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு
 நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்
 கெண்ணான் கறமு மியற்றுதி நீயென
 வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ.

 

எனவரும் குமரகுருபர சுவாமிகளின் திருவாக்கானு மூணர்க.

 

திருமூலர் அன்னதானமே மிக வுயர் வுடையது என்றார். பொதுவாக உடம்பு சௌகரியமாக இருத்தற்குரிய பசி தீர்த்தல் முதலிய அறங்களினும் கல்வி யறிவு சிறந்த அறமாகும்.

உலகத்திலே பொருள் சம்பாதித்து இம்மைப் பயனை அனுபவித்தற்கு ஏதுவான கல்வி யறிவினும் உயிரானது நிலைபெற்ற சுக வாழ்க்கையைப் பெறுதற்குரிய மெய்ஞ்ஞான நூல்களைக் கற்றலே சிறந்த அறம்.

 

எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான்
மொழித் திறத்தின் முட்டறுப்பானாகு - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.


என்ற வெண்பாவினால் ஒவ்வொருவனும் அற நூலுணர்ச்சிக்குச் சாதனமான நூல்களையே கற்பதுடன் யாவரையும் கற்கும்படி செய்தும் யாவர்க்கும் கற்றுவிப்பதுவுமே மிக்க மேலான அற மாகும்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

 


 

No comments:

Post a Comment