Saturday, August 29, 2020

 ஒரு பெரியாரின் மகிமை

 

தென்னிந்தியாவில் இராமநாதபுரம் ஸமஸ்தானத்தை ஆண்டு வரும் சேதுபதி மஹாராஜவின் அதிகாரத்திற் குட்பட்ட திருவாடானை தாலுகாவைச் சேர்ந்ததும், தொண்டி என்னும் கடற்கரைப் பட்டினத்திற்குச் சுமார் ஒரு மைல் தூரத்திலுள்ளதுமான நம்புதாளை என்னும் கிராமத்தில் சிற்சொரூபராய் விளங்குகிறார் பக்கீர் மஸ்தான் என்னும் மஹான். இவர் பிதா நம்புதாளை கிராமத்தில் ஒரு முஸ்லிம். அவர் பெயர் நயினார் மரைக்காயர். தாயார் சபுரம்மாள் பீபி. இளமையில் கல்வி நன்கு கற்றிருக்கிறார். பிறகு தம் ஊரார்களுடன் சிறிதுகாலம் மீன்பிடிக்குந் தொழிலில் பிரவேசித்திருந்தார். அப்பொழுதும் தம் ஞாபகத்தை முழுவதும் ஆதியந்தமற்ற சர்வாந்தர்யாமியான பரம்பொருளிடமே செலுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு இவர் மயானத்தில் ஒரு பெரும் குழிவெட்டி அதிலிருந்து மூன்று வருஷ காலம் ஆகாரம், நித்திரை, உஷ்ணம், குளிர், மழை முதலியவைகள் ஒன்றையும் கவனியாமல், இயற்கையையும், இந்திரியங்களையும் ஜயித்துத் தவம் செய்தார். பிறகு வெளியே வந்து, ஒரு வருஷகா லம் மௌன விரதத்தை அனுஷ்டித்தார். இப்பொழுது இம்மஹானுடைய மகிமையைக் கேட்டிராதவர் தமிழ் நாட்டில் ஒருவருமே இரார் என்று நான் நினைக்கிறேன்.

 

இவரிடமிருக்கும் மருந்து உலகத்தில் மானிடரைக் கஷ்டப்படுத்துகிற சகலவிதமான வியாதிகளையும் தீர்க்கிறது என்பதில் ஒருவருமே சந்தேகப்படவேண்டியதில்லை. மருந்து பெறப் பணச் செலவு இல்லை. சன்னிதானத்துக்குச் செல்ல வேண்டும். செல்லும் பொழுது, பரிசுத்தமாகவும் நம்பிக்கையாகவும் ஒரு பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு போக வேண்டும். அந்தத் தீர்த்தத்தில் தாம் வாயால் ஏதொ மந்திரோச்சாரணத்துடன் ஊதுகிறார். அந்த மஹானால் இப்படி ஜபித்துக் கொடுக்கப்பட்ட தீர்த்தத்தை இரவில் தூங்கப் போகும் போது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும்.

 

தீர்த்தம் சாப்பிடுவதால் முக்கியமாகச் சகல வியாதிகளும் தீர்ந்துவிடுகின்றன. ஆறாத புண்கள் ஆறி விடுகின்றன. ஒற்றைத் தலைவலி, தேட்கடி, பூரான் கடி, வண்டுக்கடி, பாம்புக்கடி முதலிய சகல விஷங்களும், மேகம், திமிர், குஷ்டம், குன்மம், வயிற்றுவலி முதலிய பெரும் வியாதிகளும், தீர்த்தத்தை உள்ளே சாப்பிடுவதாலும் வெளியில் தடவுவதாலும் குணமடைகின்றன என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

 

குழந்தை இல்லாத ஸ்திரீகளுக்கு இந்த மஹான் எலுமிச்சம் பழத்தை ஓதிக் கொடுக்கிறார். ஜபித்துத் தரப்பட்ட தீர்த்தத்தோடு அந்த எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஏழு நாள் தினந்தோறும் படுக்குமுன் இரவு சாப்பிட்டுவர கருப்பத்திலிருக்கும் எல்லாவித விஷக் கிருமிகளும் நசித்துக் கருப்பாசயம் சுத்தமாகிப் பெண்கள் கருப்பமாகிறார்கள் என்று கூறப்படுகிறது. எந்த ஸ்திரீக்கு ஜபித்து எலுமிச்சம் பழத்தைக் கொடுத்தாரோ அந்தம்மாளைத் தவிர வேறொருவரும் இந்த தீர்த்தத்தோடு கலந்த எலுமிச்சம் பழச்சாற்றைச் சாப்பிடக்கூடாது.

 

நான் இவ்வூரிலிருந்து புறப்பட்டு ஜூலை 12 - ந் தேதி ஞாயிற்றுக்கிழ மை ராமநாதபுரம் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து சில பேர்களுடன் மறு நாள் காலை சுமார் 8 - மணிக்கு ஒரு ஸ்பெஷல் மோட்டார்கார் ஒன்று அமர்த்திக் கொண்டு நம்புதாளைக்குப் புறப்பட்டோம். வண்டியில் பெண்கள் உட்பட 8 பேர்களிருந்தோம். உப்பூர் தாண்டினதும் சுமார் இரண்டு மைல் அகலமுள்ள ஒரு சிறு ஆற்றைக் கண்டோம். அதில் ஜலமே கிடையாது அது மணலாறே. எங்களில் ஐவர் கீழே இறங்கி மோட்டார் வண்டியைத் தள்ளி வெகு பாடுபட்டுச் சுமார் அரைமணி நேரத்தில் ஆற்றைத் தாண்டினோம். 11 - மணிக்கு நம்புதாளை அடைந்தோம். ஸமுத்திர ஸ்நானம் செய்து தீர்த்தத்துடன் மஹானுடைய தரிசனத்தை நாடி 12 - மணி வரையிலும் காத்திருந்தோம். தீர்த்தத்தை ஜபித்து பெற்றுக் கொண்டு அவ்வூரைவிட்டு 12 - மணிக்குப் புறப்பட்டோம். சுமார் 1 - மணிக்கு மேற்படி மணலாற்றை யடைந்தோம். முன்போல் நாங்கள் கீழே இறங்கி மோட்டாரைத் தள்ளித் தள்ளிப் பார்த்தோம். மணல் அக்கினி மயமாக இருந்தது. வெகு பாடுபட்டுக் கால்பர்லாங்கு வந்துவிட்டோம். கால் கீழே வைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தயங்கிக் காரில் ஏறி உட்கார்ந்து விட்டோம். எங்கள் கார் சொந்தக்காரரும் கூடவே வந்திருந்தார். திடீரென்று அவருக்கு ஒரு யுக்திதோன்றியது. என்னிடம் கொஞ்சம் தீர்த்தம் கேட்டார். நான் கொடுத்தேன். அதை என்ஜின் மீது அந்த மஹான் பெயரைச் சொல்லித் தெளித்தார். டிரைவரிடம் சொல்லி மோட்டாரை விடும்படி கட்டளையிட்டார். அந்த மஹான் பெருமையை என்னென்று கூறுவது! ஆச்சரியம் ஆச்சரியமே! மோட்டார் அந்த மணல் நதியை ஒரு நிமிஷ நேரத்திற்குள் தாண்டி அக்கரை சென்று விட்டது. நாங்களும் மூன்று மணிக்கு முன்னாடியே இராமநாதபுரம் வந்துசேர்ந்தோம். மாலை 4 - மணி ஷட்டிலுக்கு அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்.

 

என் சொந்தக்காரனாகிய ஒரு பையனுக்கு வயது 28. 22 - வது வயதில் விவாஹம் நடந்தது. 23 - வது வயதில் புத்தி சுவாதீன மில்லாமலாகி விட்டான். அவன் பெற்றோர்களும் மாமனாரும் பல ஒளஷதங்கள் கொடுத்துப் பார்த்தார்கள். குணமானபாடில்லை. மணிமந்திர ஒளஷதங்கள் பல பிரயோகித்துப் பார்த்தனர். குணமானபாடில்லை. மனைவி பெரியவளாகி இப்பொழுது 4 வருஷங்களாகின்றன. இம்மஹானிடத்தில் இவ்வருஷம் ஆனி மாதம் 1 - ந்தேதி யன்று அழைத்துச் சென்றார்கள். 6 - ந் தேதிக்குள் பூராவும் சொஸ்தமாகி 12 - ந் தேதி சாந்தி முகூர்த்தம் நடைபெற்றுச் சதிபதிகள் க்ஷேமமாக இருக்கிறார்கள். இதை நான் கண்குளிரப் பார்த்து ஆனந்தித்தேன்.

 

என் சொந்தக்காரரில் இன்னொருவர் 16 வருஷகாலமாகத் தீரா வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தவர் இம்மஹானுடைய தீர்த்தப் பிரசாதத்தால் இப்பொழுது ஸௌக்கியமாக இருக்கிறார்.

 

இவ்வூரில் ஒருவர் பெரும் வியாதியால் கைகால் விரல்கள் சுருங்கி நடக்க முடியாமலும் ஆகாரமில்லாமலுமிருந்தவர் இப்பொழுது நன்றாகச் சாப்பிடுகிறார். கொஞ்ச தூரம் நடக்கவும் சக்தியுண்டாயிருக்கிறது. தினமும் இம்மஹானுடைய தரிசனத்துக்காக வரும் கூட்டமொன்றே இதற்கு அத்தாக்ஷி. காரைக்குடியிலிருக்கும் ஒரு செட்டியாருடைய ஒரு தீரா வியாதி இம்மஹானுடைய தீர்த்தத்தால் தீர்ந்து விட்டது என்பது செட்டி நாடு பூராவும் தெரிந்த விஷயமே.

 

ஆகையால் கடவுள் எங்கும் இருக்கிறார். அவருக்கு ஜாதிமத பேதமோ பணக்காரன் ஏழை என்ற வித்தியாசமோ கிடையாது. நான் ஒரு ஹிந்து. இம்மகானோ முஸ்லிம். எல்லா ஜாதியிலும், எம்மதத்திலும் கடவுளின் திருவருள் பிரகாசிக்கும். நந்தனார் ஜாதியில் பறையர். அவர் அடைந்த கதிஎன்ன? ஆகையால் பெரியோர் தரிசனம் நன்மையையே விளைக்கும்.

 

அனேகர் இம்மஹானைத் தரிசித்துத் தீர்த்தம் பெற்றுச் சென்றிருக்கின்றனர். எனக்குத் தெரிந்ததும் ஸ்வானுபவமானதையும் நான் இங்கு எழுதியிருக்கிறேன்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment