Saturday, August 29, 2020

 ஒரு பறவையின் இயற்கைத் தொண்டு

(கோட்டாறு-தே. ப. பெருமாள்.)

 

ஒரு நாட் காலையில், கனிகள் கனியத் தொடங்கும் ஒரு மாஞ்சோலையில் பரிதியின் ஒளி படர்ந்தது. பொழுது செல்லச்செல்ல அவ் வொளி அடர்ந்த கிளைகளின் இடையே புக்கது. இலைகள் நெருங்கிய கிளை மருங்கில் அமைந்த ஓர் பறவைக் கூட்டிலும் அவ்வொளி தட்டிற்று. அவ் வொளியின் காய்வு கூட்டில் பட்டதும் கூட்டினுள் துயின்ற தாய்ப்பறவை சிறகை அடித்து எழுந்தது. அவ் வொலி கேட்ட குஞ்சுகளும் எழுந்தன. - எழுந்த குஞ்சுகள் வியப்பு கொண்டு தாய்ப் பறவைபை நோக்கி 'அம்மையே! இன்று நம்மிடைத் தோன்றிய புதுமை யென்ன! அவற்றின் ஏது வென்னை? எஞ்ஞான்றும் இரவி எழுதற்கு முன்னரே எழும் நாம் இன்று இந் நேரம் எழக் காரணம் என்ன? என வினவின.

 

சேயுரை கேட்ட தாய்ப்பறவை அவைகளை சோக்கி 'மக்காள்! யானும் அதைப்பற்றியே ஆராயுகின்றேன். எனக்கும் அஃது புலப்பட வில்லை. ஒரு கால் பின்னாள் நமக்கு வரும் துன்பத்தைக் காட்டும் அறிகுறியாக இது இருக்கலாம்' என்றுரைத்தது.

 

குஞ்சுகள் 'தாயே! நாம் எவருக்கு இன்னல் இழைக்கின்றோம். நாம் எவரைக் கெடுக்க எண்ணுகின்றோம். நாம் யாவருக்கும் நலம் புரியும் நல்லவ ரல்லமோ? நமக்கு ன் துன்பம் வருகின்றது?' என அவை நவின்றன நற்றாயை நோக்கி.

 

 

மக்களே! என் செல்வக் குழவிகளே! உங்கட்கு உலகம் தெரியாது நீங்கள் சிறகு முளையா சின்னஞ் சிறியோர். வையகம் பரந்தது. அவ் வையகத்தின் கண் நல்லோரும் பொல்லோரும் குழுமியே வாழ்வு நடாத்துகின்றார். அவருள் நல்லோர் என்பார் நம்மைப் போற்றி, நாம் பிறர்க்குப் புரியும் கைம்மாறற்ற வினையை யோர்ந்து நம்மிடை அன்பு செலுத்துகின்றார். தீயோரோ நம்மைத் தூற்றி நமது பொன்னிறச் சிறகில் அடங்காக் காதல் கொண்டு அமையம் நேர்ந்தழி யெல்லாம் நம்மைச் சிறைப்படுத்த வழி கோலுகின்றார். அவருள் இன்னும் சிலர் நமது கொழுத்த சிறூனில் அடங்காக் காமங் கொண்டு கற் சுழற்றியும் கண்ணி தொடுத்து நம்மைக் கொல்ல முயலுகின்றார். இன்னும் அவர் நமக்குஞற்றும் இன்னலினை எண்ணும் போழ்து எனது உள்ளம் குழைகிறது. வலை வீசியும் கரு மருந்தினைக் கொண்டும் ஒரே போழ்தில் நம்மில் நூற்றுக் கணக்கானவரை நமனுலகிற்கு அனுப்புகின்றார். இது வெல்லாம் நமக்கு நேரும் துன்பம் அல்லையோ! என உடன் நடுக்குடன் உரைத்தது அறிவு நிறைந்த அத்தாய்ப் பறவை.

 

இஃதெல்லாம் கேட்ட குஞ்சுகள் மிகப் பயந்தன. அச்சத்தால் அவைகளின் உடல்கள் ஆடின. தாயை நோக்கி, 'அம்மையே! - இன்று வெளியிற் போதல் வேண்டா. எங்கட்கு மிகவும் அச்சமாயிருக்கிறது அத் தீயோரால் எங்கட்கு வினை விளையுமோ வென எங்கள் உள்ளம் நடுங்குகின்தது'' என்றுதாய்ப் பறவையை நோக்கி அவை கூறின.

 

தாய்ப்பறவை 'என்னுயிர்க் கான் முளைகளே! நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்? வருவது வந்தே தீரும். அதை எண்ணி அஞ்சுதல் வேண்டா, யான் இன்று வெளியிற் செல்லாது இவணிருப்பின் இன்று நீங்கள் நற்கனியும் பிற நல்லுணவும் உண்ணுதல் யாங்ஙனம்? உங்கட்கு இன்று உணவெடுத்தல் இயலுமோ? ஆதலின் யான் இன்று வெளியிற் போதல் இன்றியமையாததே. யான் போய் விரைவில் வருவேன். நீங்கள் அது காறும் அமைதியாய் இருங்கள். இன்னும் சில் ஞான்றிலோ எனக்கு வெளியில் போக வேண்டும் அவசியம் நேரா. ஏனோ வெனின் நாம் வதியும் இம் மரத்தின் கண்ணே அஞ்ஞான்றுகளில் நற்கனிகள் கிடைக்கும். இன்று அவை யெல்லாம் காயாகவும் செங்காயாகவும் இருக்கின்றன. இவைகள் நன்கு கனிந்து பழுக்குங்காலும் நீங்கள் ஊக்கமாய் இவணிருத்தல் வேண்டும். உங்கள் உள்ளத்தின் கண் அச்சம் எழுதல் கூடாது' என்று கூறியது. குஞ்சுகளும் இது கேட்டு அமைதி கொண்டன.

 

ஆதித்தன் ஒளி யாண்டும் பெருகியது. தாய்ப் பறவையும் குஞ்சுகளிடம் விடை பெற்று கூட்டை விட்டு வெளிப் போந்தது. காட்டினுட் புகுந்தது. மரங்களி லெல்லாம் அமர்ந்தது. செடிகளில் இருந்தது. கொடிகளில் தங்கியது. அதன் கூரிய விழிகொண்டு தங்குழவிகட்கு எங்கணும் உணவு தேடியது. அன்று அதின் விழிகட்கு ஒன்றும் புலனாகவில்லை. மரங்களெல்லாம் வெறுமையுடன் நின்றன. செடிகளும் கொடிகளும் தங்கனிகளைத் தவற விடடு அசைவற்று நின்றன. இகெல்லாம் கண்ட பின்னரும் பறவை அலைந்தது. பச்சை கண்ட இடனெல்லாம் பறந்து திரிந்தது. நன்கு ஆய்ந்து நோக்கிற்று. ஒரு விடத்தும் ஒன்றும் கிடைத்தில. பரிதி வானத்தின நாப்பண் வறுங்காலும் காடும மேடும் அலைந்து சலித்தது. அதன் உடலெல்லாம் ஆதித்தனின் வெய்யசூ காய்ந்தது. பறவை அஃதையும் பொருட்படுத்தவில்லை. 'முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை, இன்மை புகுத்தவிடும்'. தெய்வத்தா னாகாதெனினும் முயற்சிதன், மெய் வருந்தக்கூலி தரும்' என்பன போன்ற பொன்னுரைப் பொருளை நினைத்தது. எங்கனமாயினும் – தம்முயிரை ஈந்தாயினும் தம்மாசை குழவிகட்கு கனிகொண்டு செல்லுதலையே அஃது பெரு நோக்காகக் கொண்டது. கடைசியாக ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தது. சிறிது நேரம் நேரம் இளைப்பாறியது. அது போழ்து அதன் தூய உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுச்சி கொண்டன. தங் குழவிகள் தம்மைக் கனியொடு எதிர் எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் என்ற எண்ண எழுச்சி எழுந்ததும் பறவைான் உள்ளம் தீயால் சுட்டது போன்று துன்புற்றது. அது போழ்து மெல்லிய தென்றல் ஆடியது. பறவையின் உள்ளில் ஓர் ஊக்கம் உதித்தது. அவ்வூக்கத்தால் அப்பறவை 'எங்ஙனமாயினும் யான் கனிகொண்டே என் செல்வக் குழவிகளைக் காண்பேன்' என்னும் கிளவியுடன் பின்னும் பறந்தது.

வானத்தில் விரைந்து பறந்த பறவை கருங்காட்டைக் கடந்தது. நீண்ட யாற்றைக் கடந்தது. சுரக்கும் ஊற்றைக் கடந்தது. விரைந்து பல தூரத்தைக் கடந்தது. சேய்மையில் பறந்து கொண்டிருந்த பறவை கீழ் நோக்கிய அதன் விழிகட்கு கீழ்ப்பாக மெல்லாம் நீலக் காட்சி அளித்தது. பறவை பின்னும் தாம் பறப்பதை நிறுத்தாது சிறிது தாழ்ந்து பறந்தது. இதுபோழ்து பறவை ஏக்கங் கொள்ளுகிறது. ஏன்? அந்நீலக் கவின் அளிக்கும் பாகமெல்லாம் கடலாய் இருந்தது. வழி தெரியாது, தாம் செல்லுமிட மோராத சென்ற பறவை இதுபோழ்து கடலையும் கடந்தது. ஒரு நிலப்பரப்பை அடைந்தது.

 

அந்நிலப் பரப்பிலே காடுகள் இல்லை. தோட்டங்கள் இல்லை. தோப்புகள் கிடையா. ஆண்டாண்டு சிற்சில மரங்களே காணப்பட்டன. பெருங்கட்டிடங்களால் அந்நிலப்பரப்பு நிறைந்திருந்தது. வெற்றிடம் ஆண்டு காணல் அரிது. பறவை அந்நிலப்பரப்பெல்லாம் பறந்து பறந்து நோக்கியது தன் கிளைஞரைக் கண்டிலது. தன்னாட்டுப் பொருட்களைக் காண்டிலது.
அந்நிலப்பரப்பிலுள்ள மரங்கள், மலைகள், ஆறுகள் ஆகியன வெல்லாம் பட்டேயிருந்தது. பறவைக்கு தங்குஞ்சுகளின் நினைவு தோன்றியது. ஆண்டு ஈண்டிய மரத்தொகுதிகளி லெல்லாம் தங்கூடு அமைவுற் றிருக்கிறதா, தங்கஞ்சுகள் உறைவுற்றிருக்கிறதாவென ஆய்ந்தது. ஒரு இடத்தும் கூட்டைக் கண்டிலது. பறவை நெடுகப் பறந்து அலைந்தது. ஆனால் அந்நிலப் பரப்பைக் கடக்க அது வழியுங் கண்டிலது.

 

நாட்கள் பல சென்றன. பறவை ஏக்கத்தால் ஆக்கம் குலைந்தது. குஞ்சுகளை நினைந்து நினைந்து உருகியது. அன்று ஒரு நாள், தாமும் தங்குஞ்சுகளும் பிந்தி எழுந்த அபசகுனப் பயன் இதுவே என்றறிந்தது. அது, போழ்திற்கு உணவெடுத்தல் கிடையா என்றும் தலையைக் கீழ் சாய்த்து துன்ப வொலியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அதன் புத்தியும் மாறுதல் அடைந்தது போல் தோன்றியது.

 

தன்னாட்டை நினைந்தது. தங்கூட்டை நினைந்தது. குஞ்சுகளை நினைந்தது.
ஒரு நாள் மாலை மயக்கமுற்று- இல்லை-உயிரகன்று ஒரு மாளிகையின் முன்னர் தொபீரென்று பறவை வீழ்ந்தது.

 

என்ன அழகான மாளிகையது! அம்மாளிகை ஒரு பைம்புற் றரையின் மீது அமர்ந்திருந்தது. இம்மாளிகை பூராவும் சலவைக்கறாளால் சமைக்கப் பெற்றிருந்தது. இம்மாளிகையின் முன் பாங்கர் இரும்புக் கம்பிகள் கொண்டு பின்னிய நெடுங்கபாடம் அமைந்திருந்தது. கபாடத்தின் வாயிலாய் வெளிப் போதற்கு மூன்று படிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

 

இப்படிகளின் ஒன்றிலேயே நமது பறவை வீழ்ந்தது. பறவை விழுந்த தொனி கேட்டதும், இம்மாளிகையினுள் அடைக்க பெற்றிருந்த ஒரு வாலிபன் கபாடத்தின் இடுக்கு வழியே கையை நீட்டி அப்பறவையை உள்ளெடுத்தான். அப்பறவையைக் கண்டதும் அவ்வாலிபனது உள்ளத்தில் இன்பம் பெருகியது. அப்பறவை விழிகளில் வைத்து ஒற்றியெடுத்தான். அதைப் புகழ்ந்து பேசினான்.

என்னே வியப்பு! என்னே புதுமை! இறந்த புள்ளை இவன் இங்கனம் கண்ணில் வைத்து ஒற்றுதலும், புகழ்ந்து பேசுதலும் எற்றுக்கு? இவன் பித்துக்கொண்டவனாய் இருப்பனோ? ஆ! அங்ஙனமன்று.

இவ்வாலிபன் நமது பறவை பிறந்து வளர்ந்து வாழ்ந்த நாட்டினன். பெரிய போர் வீரன். நாட்டின் நன்மைக்கு-நாட்டின் பெருமைக்கு-நாட்டின் வெற்றிக்கு-போர் முகத்திலே நின்று அருஞ்சமர் புரிந்தோன் பகைவரின் சூழ்ச்சியால் - வஞ்சனையால் இவன் கைது செய்யப் பெற்று சிறையில் வைக்கப்பட்டான்.

 

இவன் தன துயிரை பெரிதெனக் கருகினானல்லன். பிறநாட்டு—தன்னை சிறைப்படுத்தி-டிமையாக்கிய நாட்டின்கண் எழுந்த உணவை அருந்துதற்கு இசைந்தானல்லன். தன்னைச் சிறைப்படுத்திய நாட்டிலேயே தன்னுயிரை பலி செய்ய எண்ணினான்.

 

தன்னை வெறுத்தல் செய்தான், தன் கிளைஞரையும் உற்றார் பெற்றாரையும் வெறுத்தான். பிற பொருட்களையும் வெறுத்தான். ஆனால் ஒன்றை மட்டும் வெறுத்தானல்லன். அவ்வொன்று அவன் பிறந்த பொன்னாடு.

 

அவனது பொன்னாட்டின் இயற்கை எழிலோவியம் அவனது மனக்கண்முன் தோன்றியது. வானைக் கிழிக்கும் உயர்வுசான்று தேனினுமினிய நீரருவியுடைத்தாய், நெடுமரமுடைத்தாய், கொடுவிலங் குடைத்தாய், விளங்கித் தோன்றும் பொன் மலையை எண்ணினான், புதுநெல் விளையும் செழும் புனற்பூமியை நினைத்தான். தன்னாட்டகத்தே உரிமையுடன் பறந்து திரியும் புள்ளினங்களை எண்ணினான். அகன்ற நிலங்கள் கடந்து விரைந்தோடிவரும் பெருசதியினை ஒர்ந்தான். இன்னும் அவன் நாட்டகத்தே கெழுமிய பிற இயற்கை இன்பக் குவியலை யெல்லாம் எண்ணி எண்ணி இறும்பூ தெய்தினன்.

 

அவன் இறக்கும் இறுவாயில் தன்னாட்டுப் பொருள் ஒன்று காண விழைந்தான். அதற்கு ஆண்டவனையும் வேண்டினான். ஆண்டவன் அவ்வுண்மைத் தேச பக்தனின் கருத்தை நிறைவேற்றுதற்கு அரண் செய்தான். எத்துணைத் தொடர்பு! நாடெல்லாம் அலைந்த பறவை முடிவில் யாண்டு இறந்து வீழ்ந்தது. அவ்வீரனின் அன்புக்குருதியி னின்றும் எழுந்த சுழலானது அப்பரவையை அவனது அண்மையிற் கொண்டு சேர்த்தது.

 

பறவையைப் பெற்ற வாலிபன் இறைவனைப் புகழ்ந்தான். தன்னாட்டின் கண் வைத்து தனக்கு இனிய இசையைக் கைம்மாறு கருதாது தந்த பறவையே இதுபோழ்து தனது வெற்றுடலுக்கு அதனுடலைத் துணைய தலையும் அறிந்த வாலிபன் மனம் மகிழ்ந்தான். பறவையின் உயரிய இயற்கைத் தொண்டு அவனது உயிர்க்கடவுளின் முன் காட்சி அளித்தது. அக்கடவுள் அமைதி கொண்டார். அக்கடவுள் அவ்வெற்றுடலினின்றும் வெளியேறி வல்லான் முற்று முணர்ந்தானைச் சென்றடைந்தார்.

 

மறுநாட் காலை, அச்சிறைக்கூடக் காவலர்கள் அவ்விரு வெற்றுடல்களைப் பற்றியும் ஏதோதோ பேசி வீண் புரளி செய்துகொண்டிருந்தனர்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment