Saturday, August 29, 2020

 

ஒரு நிருபருக்கு விடை

(பண்டித. பூ. ஸ்ரீநிவாசன்.)

 

திருக்குறளும் காமத்துப்பாலும்

 

ஜலகண்டா புரத்தினின்று திரு மு. வெ. கிருஷ்ணசாமி செட்டியார் என்னும் நண்பரொருவர் ஓர் நிருபம் வரைந்திருக்கின்றனர். அந்நிருபத்தில் நண்பர் பொய்யாமொழிப் புலவர் அருளிய திருக்குறள் என்னும் நூலில் உள்ள அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருஷார்த்த நான்கினையும் முப்பாலாகப் பிரித்துக் காட்டியுள்ளார். அதில் காமத்துப்பாலில் இன்பம் வீடு இரண்டும் அடங்கி யிருக்கிறது. ஆகையால் அச் செய்யுளை ஒட்டி இன்பம் வேறாகவும் வீட்டை வேறாகவும் பிரித்து "ஆனந்தன் வாயிலாக எம்போன்றாருக்கும் தெளிவாக எளிய நடையில் போதிக்கத் தங்களைச் சிரந்தாழ்ந்த வணக்கத்துடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று எழுதி யிருக்கின்றார்.

 

பொய்யாமொழிப் புலவராகிய நாயனாரவர்கள் காமத்துப்பாலில் இன்பம் வீடு இரண்டையும் அடக்கிப் பாடி யிருக்கின்றாரென்பது சரியல்ல. காமத்துப்பால் வெறும் காமத்துப்பாலாக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்ற தென்பதே ஆன்றோர் அபிப்பிராயமாகும்.

 

வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவ தல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம்'' எனப் பரிமேலழகர் திருக்குறள் உரைப் பாயிரத்தில் கூறி யிருத்தலுங் காண்க. ஆகவே, வள்ளுவரும் துறவறவியலால் வீட்வீட்டைப்பற்றிக் கூ றி யிருக்கின்றனர். நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என்னு மதிகாரங்கள் அவற்றுள் முக்கியமானவை யாகும். ஆகவே, புருஷார்த்தங்கள் நான்கினையும் திருக்குறள் போதிக்கின்ற தென்பது ஒருதலை.

 

நானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்

ஆனா அறமுதலாவந்நான்கும்.                                 (நக்கீரர்)

 

மேலும், காமத்துப்பால் சுத்த காமத்துப் பாலாகவே கூறப்பட்டுள்ள தென்பதை, திருக்குறளை முழுது மாராய்ந்து அதன் தன்மையை விளக்கிய புலவர்கள்,

 

இருபதிற் றைந்தின்பம் வள்ளுவர் சொன்ன வகை.               (சிறுமேதாவியார்)


ஆண்பாலே மாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக- மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.
                               (மோசிகீரனார்)

என்று விளக்கியுள்ள செய்யுள்களைக் கொண்டும் இவ் வுண்மையை அறியலாம். அன்றியும்,
நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே பாட்டில் விளக்கப்போந்த ஔவைப்பிராட்டியாரும்,


"ஈதல் அறம் தீவினைவிட் டீட்டல் பொருள்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம் பானைநினைந் திம்ழன்றும்
விட்டதே பேரின்ப வீடு.


எனக் கூறி யிருத்தலும் காண்க. ஆகவே.

 

திருக்குறள் காமத்துப்பால் காமத்துப் பாலை மாத்திரம் உணர்த்துவதேயன்றி நண்பர் கூறுவதுபோல இன்பம் வீடு என்னும் இரண்டையும் அடக்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை நண்பருக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment