Saturday, August 29, 2020

 ஐவேலசதி

 

ஐவேலசதி என்னும் பெயருடைய இடையர் மரபினன் ஒருவன், அருந்தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையால் பாராட்டப் பெற்றுளான் என்று அறியப்படுகிறது. ஆயின், இவனது வரலாறு தெளிவாய் அறிவதற் கின்றி அந்த காரப்பட்டுள்ளது. திருவாளர்கள் அனவரத விநாயகம்பிள்ளை, M.A., L.T., அவர்களும், மணி திருநாவுக்கரசு முதலியாரவர்களும், வெளியிட்டுள்ள ஒளவையார் வரலாறுகளில் 'ஐவேலசதி' பாண்டி நாட்டு முல்லை நிலத்தில் ஆடு மேய்க்கும் அற்பத் தொழிலுடைய ஒரு நனிபேதையென்று கூறி யிருக்கின்றனர். 'கொங்கு மண்டல சதகத்தில்' மட்டும் முற்கூறியவர்களின் செய்திக்கு. 'ஐவேலி' என்னும் சிற்றூர், கொங்கேழ் சிவஸ்தலங்களில் ஒன்றாகிய திருச்செங் கோட்டுக்குச் சமீபத்திலுள்ள சங்ககிரி துர்க்கம் ரயில் நிலயத்திற்குக் கிழக்கில் இரண்டு மைல் தூரத்திலுள்ள தென்றும், அவ்வூரில் அசதி என்னும் இடையர் மரபினன் சேனைத் தலைவனாக விருந்து ஓர் இரவில் அங்கு வந்த ஒளவையார்க்குப் பொன்னிலையிட்டுப் போனகம் பரிமாறி யுண்ணச் செய்து, தன்மீது 'ஐவேலசதிக்கோவை' என்னும் பிரபந்தம் பெற்றானென்றுங் கூறப்பட்டிருக்கின்றது. இவைகளில் எது கொள்ளத்தக்கது? எது தள்ளக்கூடியது? என்று அறியாது மயங்குகின்றோம். ஆயின், ஐவேலி பாண்டி நாட்டின் கண்ணது என்று கூற வந்த ஆசிரியர்கள், அதற்கு ஆதாரங் காட்டினாரில்லை. கொங்கு மண்டல சதக ஆசிரியர், ஐவேலி கொங்கு நாட்டில் உள்ள தென்பதற்கு,


''தெய்விகமான தமிழ்ப்புல வோர்கள் தினமுளங் கொள்
 பொய்தீ ருரையெம் பிராட்டியா ரௌவை புனைந்து புகழ்
 செய்கோவை யேற்ற திறலோ னசதி செழித்து வளர்
 மைதாழ் பொழிறிகழ் ஐவேலி யுங்கொங்கு மண்டலமே''
                    (45)


என்ற அம்மண்டல சதகத்துச் செய்யுளை ஆதாரங் காட்டியதுடன், அவ்ஐவேலி சங்ககிரி மிட்டாவிலுள்ள ஒரு கிராமம் என்றும், அது அரசுரிமைமதிப்பிலும் இடம் பெற்றிருக்கிற தென்றும், இப்பொழுது அக்கிராமம் நத்தமாய்ப் போயினும், இடையர் மரபினர் வீடு இருநூறுடையதாய் 'இடைய பட்டி' என்ற ஊர்ப்பெய ருடையதாய் இருக்கிறதென்று சான்றும் காட்டியிருக்கின்றனர். ஆதாரத்துடன் கூறப்படும் எவ்விஷயமும் உண்மையெனக் கொள்வது அறிஞரது கடமையானதால், ஐவேலியும், அசதியும் கொங்குமண்டலத்தில் சங்ககிரி துர்க்கத்துப் பக்கத்தினதென்று தெளிவுறுகின்றது.

 

ஒளவையார் வரலாறுகளில், அசதி நனிபேதை யென்று கூறியிருக்க, அசதிக் கோவையில், அசதி சேனைத் தலைவனாக விளங்கி யிருந்தானென்று கூறப்பட்டிருக்கிறது. அச் சொற்றொடர் "சேனைத் தலைவனைச் செங்கோலசதியை' என்பது. 'நந்தமண்டல சதகத்திலும், இவ்வசதி'' புவிமீதிற்றவஞ், செய்வோன் றனினும் பசுக்காவன் மிக்கெனச் செய்யு மன்பன் மைவேலை வண்ணன் சதியுடன் வாழ்நந்த மண்டலமே " எனப் பாராட்டப்பட்டிருப்பதனாலும் இவன் பேரறிவு படைத்த பெருவீரனாய் பசுக்களை நன்கு பரிபாலிக்கும் ஞான சிவனாய் விளங்கி யிருந்தானென்றும் அறியப்படுகிறது. இவ்வுண்மை யிருக்க, அசதி நனிபேதை' என்றும், 'ஐவேலி' பாண்டி நாட்டகத்த தென்றும், ஒளவையார் வரலாற்றில் கூறியிருப்பதை எவ்வாறு நம்புவது? அறிஞர்கள் ஆராய்வாராக.

 

ஒளவையார் வரலாறுகளில், ஒளவையார், ஐவேலசதி மீது கோவை பாடிய வரலாறு அடியில் வருமாறு காணப்படுகிறது.

 

''ஒரு காலத்து ஒளவையார் பாண்டி நாட்டில் காட்டு மார்க்கமாகப் போய்க் கொண்டிருந்த பொழுது அவரைப் பசி நோய் வருத்த, அவர் அங்கு ஓர் ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருத்தலைக் கண்டு அவனை அணுகி, 'நீ கொண்டு வந்திருக்கும் உணவில் எனக்கும் கொஞ்சம் கொடுப்பாய்' என்றனர். அவனும் அங்ஙனம் கேட்ட ஒளவையார் விருப்பத்தின் படி அவ்வுணவில் பாதியை முகங்கோணாது அகமகிழ்ந்து அவர்க்கு உபசரித்திட்டு உண்ணச் செய்தனன். ஒளவையாரும் அவன் அன்புக் குவந்து அவ்வுணவையுண்டு பசிவருத்தம் தீர்ந்தனர். 'தினைத் துணை நன்மையையும் பனைத் துணையாகக் கொள்ளுவது பெரியோரது இயல்பானதால்' அதன்படி ஒளவையார், பசி யறிந் துதவிய அவனைத் தமது திருந்திய நாவால் சிறப்பிக்க வெண்ணி உன் பெயர் என்ன? என்றனர். அவன் தன் பெயர் மறந்தபேதையானதால் அவர் வினாவிற்கு உத்தரமாக அசதி' என்றான். அந்தி என்றதால், அவன் குறித்த பெயர் அப்பொழுது தன் ஞாபகத்தில் இல்லை யென்பது. பின்னர் உன் பெயரையாவது சொல்' என்றனர். அதனையும் அவன் மறந்தேன் என்றனன். அதன் பின்னர் ஒளவையார், 'உன் ஊரிலுள்ள அடையாளங்களையேனும் சொல்' எனக் கேட்க அவன் என் ஊரில் ''ஐந்து வேல்மரமுண்டு' என்றனன். அவன் பேதைமைக்குப் பெரிதும் இரங்கிய ஒளவையார், அவன் தன் பெயரையும், தன் ஊர்ப் பெயரையும் மறந்ததனால் அவனுக்கு மறதி என்னும் பொருளைத் தரும் அசதி என்னும் பெயரையும், அவன் தனது ஊரிலே ஐந்து வேல மரங்கள் உண்டு என்றமையால் அதற்கு ஐவேல் என்ற பெயரையும் அமைத்துக் கொண்டு " அசதிக்கோவை " என்னும் பெயரில் நவரசங்களும் நனி சிறக்கச் செய்யுட்களெல்லாம் அகரத்தையே முதன்மையாகக் கொண்டு மோனை நலம் பொருந்த இனிய பிரபந்தம் ஒன்று பாடி முடித்தனர் என்பதே.

 

அறிஞர் கட்கு இன்பச் சுவையை இனி தூட்ட வல்ல அவ்வருஞ் செய்யுட்கள் இப்பொழுது முழுதுங்கிட்டுவது அருமையா யிருக்கிறது. எம்மிடத்துள்ள பழைய ஓலைச் சுவடிகளில் ஒன்றில் 10 - செய்யுட்கள் தனியாக எழுதியிருக்கக் கண்டோம். இறந்து படாமலிருக்கவும், தமிழன்பர்கள் சுவைத் தின்புறவும் அச் செய்யுட்களை இதன் கீழ்த் தருகின்றோம். அவை வருமாறு:


 ''அற்றாரைத் தாங்கியவைவே லசதி யணிவரைமேன்
 முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல்
 கற்றார் பிரிவுங்கள் லாதா ரிணக்கமுங் கைப்பொருளொன்
 றற்று ரிளமையும் போலே கொதிக்கு மருஞ்சுரமே.''                   (1)


 அருஞ்சஞ் சலங்கொண்ட வையே வசதி யகல்வரையின்
 னிருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென் தன்னை மொழி
 தருஞ்சஞ் சலமுந் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும்
 பெருஞ்சஞ் சலஞ்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே.        (2)


 அழற்கட்டு கட்டிய வைவே லசதி வணிவரையின்
 மழைக்கட்டு கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லாள்
 உளக்கிட் டுரியிட்டு முவ்வுழக் கிட்டுரி நாழியிட்டு
 குழற்கட் டவிழ்த்துட னங்ஙனனின் றேமயிர் கோதினளே.             (3)


 அலைகொண்ட வேற்கரத்தைவே லசதி யணிவரைமேல்
 நிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றிள நீரினங்கள்
 குலையுண் டடியுண் டென்கையினி லெற்றுண்டு கட்டுமுண்டு
 விலையுண் டடியுண்டு கண்ணீர் ததும்பவும் வெட்டுண்டவே.          (4)


 அறங்காட் டியகரத்தைவே லசதியகன் சிலம்பின்
 நிறங்காட்டுங் கஞ்சத்திருவனையீர்! முகநீண்ட குமிழ்த்
 திறங்காட்டும் வேலுஞ் சிலையுங் கொல்யானையுந் தேருங்கொண்டு
 புறங்காட்ட ஒந்தகு மோசிலைக் காமன்றன் பூசலிலே.                 (5)


 ஆலவட் டப்பிறை வைவே லசதி யணிவரைமேல்
 நீலவட் டக்கண்க ணேரொக்கும் போதந்த நேரிழையாள்
 மாலைவிட் டுச்சுற்றி வட்டமிட்டோடி வரவழைத்து
 வேலைவிட்டுக்குத்தி வெட்டுவளாகில் விலக்கரிதே.                  (6)


 ஆய்ப்பாடி யாயர்த மைவே லசதி யணிவரையிற்
 கோப்பா வவனெழிற் கொங்கைக்குத் தோற்றிபக் கோடிரண்டுஞ்
 சீப்பாய்ச் சிணுக்கரியாய்ச் சிமிழாய்ச் சின்ன மோதிரமாய்
 காப்பாய்ச் சதுரங்கமாய்ப் பல்லக்காகிக் கடைப்பட்டதே.                (7)


 ஆதித்தனைக்கண் டாவந்தொடவந் நகரினுள்ளார்
 பாலித்த முத்தும் பவளத்தொட் டாலிந்தப் பைங்கொடியாள்
 சேனைத் தலைவனைச் செங்கோ லசதியைச் சேர்ந்தொருநாள்
 கூடித்தழுவுவ மென்றுதொட்டாடன் குவிமுலையே.                   (8)


 ஆடுங் கடைமணியைவே லசதி யணிவரைமேல்
 நீடுங் கயற்கண்ணி யாடந்த வாசை நிகழ்த்தரித்தால்
 கோடுங் குளமுங் குளத்தரு கேமிற்குங் குன்றுகளுங்
 காடுஞ் செடியு மவளாகத் தோன்றுமென் கண்களுக்கே                (9)

ஆராயிரங் கொண்ட வைவே லசதி யகன் கிரியில்
நீராடப்போகும் நெறிதனிலே யந்தி நேரத்திலே
சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண்
போராள் பிடி பிடி யென்றே நிலவும் புறப்பட்டதே.                     (10)

 

ஆனந்த போதினி – 1929 ௵ - நவம்பர் ௴

 


 

 

 

No comments:

Post a Comment