Saturday, August 29, 2020

 

ஐய வினாவுக்கு விடை

(க. காசியப்ப கவுண்டர்)

“ஆனந்தபோதினி'' பங்குனி இதழில் வெளி வந்த ஐய வினாவைப் பார்த்தேன். அதில் கேட்கப் பெற்றிருக் கும் கேள்வியின் உட்பொருளைக் கவனித்துப் பார்க்க எந்த தமிழனும் கடமைப்பட்டிருக்கிறான்.

திருவிளையாடற் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாண்டி மன்னர் அவ்வளவு பேரும், அப்புராணக் கதையிற் சம்பந்தப்பட நேரிட்ட தமிழர்களிற் பெரும் பான்மையோரும் வடமொழிப் பெயர்களைக் கொண்டவர்களாயிருக்க காரண மென்ன என்பதே அவ் வினாவின் கருத்தாகும்.

மீனாட்சி யம்மையாரும் சொக்கலிங்கப் பெருமானும் மதுரைமாநகரின் கண் 64 திருவிளையாடல்களை நடத்தி வந்த அக்காலம் முழுதுந் தமிழுக்குத் தனிச்சிறப்பு ஏற்பட்டிருக்க அக்காலங்களில் பாண்டி நாட்டை அரசு புரிந்து வந்த பாண்டி மன்னர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதிற் கண்ணுங் கருத்துமா யிருந்திருக்க, அவர்களுடைய பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்களாயிருக்கும் இரகசியம் வியக்கத்தக்க ஒன்றுதான்.

வடமொழியி னிடத்து அவ்வளவு ஆசை அவர்களுக்கு இருந்திருக்குமானால், அதை வளர்க்க அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்திருப்பார்கள். அப்படி ஏதும் செய்ததாக சரித்திரங்களால் தெரியவில்லை. பின், பெயர்க ளெல்லாம் இப்படி வரக் காரணமென்ன?

இதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதா யிருந்தால் முதலில் வடமொழியைப் பற்றியும், அது தென்னாட்டில் பரவிய விதத்தைப் பற்றியும் சரித்திரம் என்ன சொல்கிறது? என்பதைச் சிறிது கவனித்தே ஆகவேண்டும்.

வட நாட்டிலிருந்து வந்ததினால் சம்ஸ்கிருதத்திற்கு வடமொழி என்று பெயர் வந்தது. அது ஆரிய மக்களுக்கு முதலில் தாய்மொழி. ஆரியர் ஒரு காலத்தில் ஐரோப்பாவி லிருந்து வடஇந்தியாவிற் குடி புகுந்து, பின் தென்னாட்டுக்கும் வந்து சேர்ந்தவர்கள். குளிர் மிகுந்த நாட்டிலிருந்து வந்தவர்க ளாகையினால் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் தமிழ் நாட்டாரின் பழக்க வழக்கங்களுக்கு மிக மாறுபட்டிருந்தன.

ஆரியர் இங்கு குடியேறுங் காலத்தில் தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்று விளங்கிக்கொண் டிருந்தது. தமிழ் மக்கள் சைவ ஒழுக்கத்திற் சிறிதும் வழுவாமல், முழுமுதற் பொருளாகிய பரசிவக் கடவுளிடத்து மாறாத மெய்யன்பு வாய்ந்தவர்களாய் விளங்கினர்.

ஆரியர்களுடைய பழக்க வழக்கங்களும் பாஷையின் போக்கும் தமிழர்களுக்குப் பிடிக்காததினால், அவற்றை இவர்கள் வரவேற்க வில்லை.
ஆனால், தமிழர்களின் வழக்கங்களை தழுவி தமிழரோடு தமிழராய்ச் சேர்ந்து பிரிய மில்லை. அதனால் அவர்கள் தனியே ஒதுங்கி தங்களுக்குப் பார் மட்டும் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே வசித்துவர லாயினர்.

அது மட்டு மல்ல, தங்களுடைய பழக்க வழக்கங்களையும் பாஷையையும் எப்படி யெல்லாம் தமிழர்களிடத்தும் தமிழ்மொழி யினிடத்தும் நுழைக்க இயலுமோ அப்படி யெல்லாம் நேர்முகமாக வும் மறைமுகமாகவும் செய்யவுந் தொடங்கினர். இன்றளவும்
அப்படியே செய்தும் வருகின்றனர்.

அவர்களிற் சிலர் தமிழில் நல்ல பயிற்சி பெற்றனர். தமிழின் கலை நுணுக்கங்களை நன்றாக அறிந்தனர். அவைகளை வடமொழிக் கிசைவாக அம்மொழியிற் பாடிவைத்து விட்டு, அவையனைத்தும் வட மொழியிலிருந்து தமிழுக்கு வந்ததாக தமிழில் திருத்தி வைக்கவும் செய்தனர்.

தமிழ் நாட்டில் மிகமிகப் பெரும் பான்மையோர் தமிழ் மக்கள். ஆரியர் மிகமிகச் சொற்பம். தமிழ் மொழி பல்லாயிரம் வருடங்களாக சீருஞ் சிறப்பும் பெற்று, பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ஒப்புயர் வற்று, கூரிய அறிவு படைத்த புலவர் பெரு மக்கள் பலரால் ஆராய்ச்சி செய்யப் பெற்று, என்றும் அழியாத கன்னித் தமிழாய் நிலவி நிற்கிறது. வட மொழியோ பேச்சு வழக்கில் எப்பொழுதும் இல்லாததினால் செத்த பாஷை (Death-language) எனப் பெயர் பெற்று, ஆரியர்களிற் சிலரால் மட்டும் எழுத்து வழக்கிற் கையாளப்பட்டு வருகிறது.

செய்தி இப்படி இருக்கும்போது, தமிழ் நாட்டுச் சரித்திரங்களும் வரலாறுகளும் தமிழர்களுக்கு விளங்கக்கூடிய தமிழ் மொழியிற் பாடப் பெறாமல் அந்த வட மொழியிலேயே முதலிற் பாடப் பெற்ற தென்றும், அதிலிருந்தே தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தென்றும் இருக்குமேயானால், அதைப் பற்றி உண்மைத் தமிழன் அழுவதா, சிரிப்பதா!

தமிழ் நாட்டுச் சமயாசாரியர் எனப் பெயர் வாய்ந்தவர்கள் சம்பந்தர், சுந்தரர், அப்பர், மணிவாசகர் இவர்களால் பாடப் பெற்றவை தேவாரம் திருவாசகம் முதலிய அருட்பாடல்கள். இப் பாடல்களைக் கொண்டு அனேக அற்புதங்களை நம் நாட்டில் இவர்கள்
செய்து காட்டி யிருக்கிறார்கள். இறந்தவர் பிழைத்திருக்கிறார்; எலும்பு பெண்ணுருவாயிற்று: தீராத நோய் தீர்ந்தது; அக்கினி குளிர்ந்தது; ஆறு பெருகிற்று; இப்படி இன்னும் அனேகம். இவை யெல்லாம் தேவார திருவாசகங்களிற் சில பாடல்களைச் சொன்ன. அளவிலேயே நடந்தனவாகும். அன்று முதல் இன்றளவும் அவ் வருட்பாடல்களில் உள்ளம் உருகாத தமிழனே இல்லை. ஆனால், வட மொழியைக் கொண்டு இத்தகைய அற்புதங்கள் நமது நாட்டில் நடை பெற்றதாக இது வரையிற் காணோம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தமிழனுக்காக் தமிழனால் நடத்தி வரும் ஆலயங்களில் வடமொழி மந்திரங்களே சொல்லப்படுவதும்; வடமொழி வேதபாராயணம் நடந்த பிறகுதான் தேவார திருவாசக பாராயணம் நடைபெற வேண்டுமென்று ஒருசிலர் எதிர்வாதம் செய்வதும் நடை பெறுமேயானால், அதைப்பற்றி சொல்வதற்கென்ன இருக்கிறது?

சங்கீதத்திற்கு இசைவான எத்தனையோ தமிழ்ப் பாடல்கள் இருக்க, தமிழனுக்காக நடைபெறும் பாட்டுக் கச்சேரிகளிற் கூட பாடகர் பிடிவாதமாக் பாடல்களை தெலுங்கிலும் கன்னடத்திலும் வட மொழியிலும் பாடி வருவதிலும், சங்கீதத்திற்கு தமிழ் ஒத்துவராது என்று சிலர் பிரசாரம் செய்வதிலும் வியப்பென்ன இருக்கிறது!

எத்தனையே அழகிய தமிழ்ச் சொற்களை யெல்லாம் வழக்கொழிந்து போகச் செய்து அந்த இடங்களிலெல்லாம் வட சொற்கள் குடியேறி யிருப்பதைப்பற்றியும், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிளையாடல்களை தமிழில் எழுதாமல் வடமொழியில் முதலில் எழுதிய வரலாற்றைப்பற்றியும், தமிழ் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு தமிழ்ச் சங்கங்கள் அமைத்து, அதில் தாங்களும் உடனிருந்து தமிழாராய்ச்சி செய்து வந்த பாண்டிய அரசர் பெயர்க ளெல்லாம் வடமொழிச் சொற்களில் அமைந்திருப்பதைப் பற்றியும் ஆச்சரியப்பட் என்ன இருக்கிறது?

இனி, தமிழ்ச் சங்கத்திற்குக் குரு பீடமாக இருந்த அகத்தியரும் அவருடன் வந்த மாணாக்கர்களும் வட நாட்டவர் தாமே என்கலாம். அது மெய்யே. ஆனால், அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்தார்களே தவிர, தமிழைக் கொலை செய்ய வில்லை. சங்க
காலத்துச் செய்யுள்கள் சிலவற்றில் தேடிப் பார்த்தால் எங்கேனும் ஒன்றிரண்டு வடசொற்கள், அதுவுந் தமிழோடு தமிழாய் ஒன்றியிருக்கக் காணலாமே தவிர, இப்படி எங்கும் வடமொழி மயமாக் இருக்கவில்லை.

ஒரு மொழியில் மற்று மொழிகளிலிருந்து இசைவான சில சொற்கள் வந்து இடம் பெறுவதால் தவறொன்று மில்லை யென்றாலும், இப்படியா இடம்பெற வேண்டும்? எங்கே, சங்கப் புலவர்களுடைய பெயர்க ளெல்லாம் வடமொழிப் பெயர்களாக இருக்கக் காணோமே. ஏதோ மிகச் சில மட்டுந் தானே அப்படி இருக்கின்றன.

இதை யெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, இடங்கிடைத்த வரையில் வடசொற்களை தமிழில் நுழைப்பதையே நோக்கமாகவுள்ள ஒரு சிலரின் சூழ்ச்சி என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

ஆனந்த போதினி – 1943 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment