Saturday, August 29, 2020

 

ஒரு மங்கையின் ஏக்கம்

(ஆரியூர் - வ. பதுமநாப பிள்ளை.)

 

திருச்சிற்றம்பலம்' என்றும், 'கோயில்' என்றும், பெரும்பற்றப்புலியூர்' என்றும், 'பூலோக கைலாயம்' என்றும் பெரிதும் போற்றப்படும் தில்லை மாநகர். செங்கதிரோன் மேற்றிசையில் விரைந்து இறங்கிக் கொண்டிருக்கும் மாலை வேளை. மனம் போனவாறு திரிந்து வயிறாரப் புல் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களும் காளைகளும், ஊரை நாடித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள சிறுமணிகளின் கணகண' வென்ற ஒலியுடன், ஆலயத்தினின்றும் எழுந்த 'கணீல்!' 'கணீல்!' என்ற கண்டாமணியின் கம்பீரநாதம் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னிசை யறிவிற் சிறந்த நாகசுர வித்வான்களின் செவிக்கினிய நாகசுரநாதமும் பசுக்களின் பின் செல்லும் ஆயர்சிறுவர்களின் கர்ணாமிர் தமான குழலோசையும் கலந்து, நகரத்து நங்கைகளின் நெஞ்சைப் பெரிதும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. தங்களது காதலனின் மறைவைக் கண்ட செந்தாமரை மலர்கள் விரித்திருந்த இதழ்களைச் சுருக்கிக் கொண்டு ஒடுங்கிக் குவிந்து வாடி நின்றாலும், நகரத்திலுள்ள இளங்காதலர்களின் முக மலர்கள் எத்தகைய வாட்டமுமின்றி புத்தழகு பெற்று மலர்ந்திருக்கின்றன. எங்கு நோக்கினும் பலவகைக் குதூகலக் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியால் மலர்ந்த முகங்களுமே காணப் படுகின்றன. அத்தகைய குதூகலக் காட்சிகளி னிடையிலே, ஒரே ஒரு வீட்டின் தோட்டத்தில் மட்டும் உள்ளத்தை உருக்கும் துயரம் மிகுந்த காட்சி யொன்றும் காணப்படுகிறது.

      ஒரு இளம்பருவ மங்கை; வயது சுமார் பதினெட்டுக் குள்ளாகவே இருக்கும். மேற்றிசையில் விரைந்திறங்கும் செங்கதிரோனைக் கண்டு ஒடுங்கிக் குவிந்து நிற்கும் செந்தாமரை மலரைப்போல், அவளது முகமலரும் நகையிழந்து துயர் மிகுந்து பெரிதும் வருந்தியிருக்கிறது. அந்த சுந்தரி, அவ்வண்ணம் அகம் கலங்கி நிற்பதன் காரணம் என்னவா யிருக்கக்கூடும்? அவளது மன ஏக்கத்தின் காரணம் என்னவென்பதை, அவள் வாயினாலேயே கேட்டறிவோம்: -

      ஆ! அந்த காலம்! அன்றைய அற்புத உற்சவம்! அன்றைய ஆனந்த தரிசனம்! அன்றைய ஆனந்த அனுபவம்! அது, இனியும் ஒரு முறை மீண்டும் வருமோ? குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும்-பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் கொண்ட அந்த அழகன், இன்னும் ஒரு முறை நமது தெருவில் வருவானோ? அந்தோ! நான் என் திடீரென்று ருதுவானேன்? திருக்கோயிலிலும் திருவீதிகளிலும் மனம் போல் விளையாடிக் கொண்டிருந்த என்னை, திடீரென்று இந்த வீட்டுச் சிறைக்குள்ளேயே டைபட்டுக்  கிடக்கும்படி செய்து விட்டார்களே! எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு சென்று விட்ட அந்த சுந்தரனை, வீட்டுச் சிறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் அபலையாகிய நான், இனி மறுமுறை எப்போது காண்பேன்? எனது விழிகளின் வழியே உட்புகுந்து எனது மனமாகிய சீரிய சிங்காதனத்தில் சிங்காரமாக வீற்றிருக்கும் சுந்தரனைக் கண்டு களிக்க எனது இரு கண்களும் எவ்வளவு தவித்து நிற்கின்றன! உள்ளத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த மாயக் கள்ளன், எனது இரு கண்களும் கண்டு களிக்க எதிரில் தோன்றிக் காட்சியளிக்கும் காலம், எப்போது வாய்க்கும்? ஆ! அந்த வடிவழகனின் நடையழகு, இன்னும் என் உள்ளத்தைப் பெரிதும் உருக்குகிறதே! அன்று, நமது தெருவிலே, கட்டிளங்காளையே போல் கம்பீரமாக நடந்து சென்ற அந்த சுந்தரன், இனியும் ஒரு முறை நமது தெருவில் வருவானோ?

      அந்த சுந்தரன், அனைவரது உள்ளக்கிடக்கையையும் நன்கு உணர்ந்தவ னென்று பலராலும் பெரிதும் போற்றிப் புகழ்ப்படுகின்றானே! எனது மனக் கிடக்கை என்னவென்பதை மட்டும் அவன் அறியானா என்ன? அறிந்திருத்தும், அவன் என் விஷயத்தில் இன்னும் பராமுகமாகவே இருந்து வா, அவனுக்கு நான் இழைத்த பிழைதான் என்ன? அன்று, அவன், நமது தெரு வழியே பவனி சென்றபோது, என் மனத்தில் தோன்றிய எண்ணங்கள் என்னென்ன வென்பதை அவன் அறிவானோ? 'எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி உள்ளம் மிகப் புண்ணாகி'க் கொண்டிருக்கும் எனது இன்றைய நிலைமையை, அவன் உணர்வானா என்ன? அந்த வடிவழகன் தெருவில் உல்லாஸமாக பவனி சென்றபோது, எனது இரு வேல்விழிகளும் அவனது பரந்த மணிமார்பில் சென்று பதிந்தனவே! அவ்வேளையிலே, எனது கண்களும் அவனது கண்களும் நெடுநாள் பழகியனவே போல் ஒன்றோடொன்று கலந்து நோக்கிய அந்த நோக்கம், இன்னும் எனது உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை மேன்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறதே! இந்த காதல் தீ அடங்கி, எனது உள்ளம் மீண்டும் குளிர்ச்சியடைவது எந்த நாள்? எனது இருவிழிகளும் அவனது வடிவழகை அனுபவித்துக் கொண்டிருந்த போதே, அந்த சுந்தரன் மாயமாக விரைந்து மறைந்துபோய் விட்டானே! ஊரார் பழிமொழிகள் கூறக்கூடுமென்று பெரிதும் அஞ்சிய நான், ந்த அந்த அழகனை அப்பொழுதே பின் தொடர்ந்து செல்லத் துணியாம லிருந்து விட்டேனே! கைக்கெட்டிய கனியைக் கிட்டிப் பிடித்துக் கட்டியணைத்துச் சுவைத்து மகிழாமல் விட்டு விட்ட எனது மதியீனத்தை என் இன்னொரு முறை அந்த சுந்தரன் தமது தெருவில் விஜயம் செய்து, அவனையே உன்னி உன்னி உள்ளம் உருகிக்கொண்டிருக்கும் என்னிடம் கருணை மிகுந்து, என்னைச் சற்றே திரும்பிப் பார்க்க திருவுள்ளம் இசைவானோ? நூற்றுக்கணக்கான அன்பர்களால் சூழப்பட்டு அவன் கம்பீரமாக திருவீதியில் பவனி செல்லும் போது, எனது நிலையைக் கண்டு திருவுள்ளம் இரங்கி என்மீது தனது திருக்கண்களைச் சிறிது திருப்பி நோக்கும் மகத்தான பாக்கியமும், துர்ப்பாக்கிய வதியான எனக்கு மீண்டும் வாய்க்கக் கூடுமோ?

தனது மகத்தான சக்தியை உணர்ந்து கொள்ளாமல் பூங்கணைகளைத் தன்மேல் செலுத்தி அருந்தவத்தைக் கெடுக்க முயன்ற செருக்கு மிகுந்த மன்மதனையும் அரக்கர்களின் சொக்குக்குக் காரணமாக விளங்கிய முப்புரங்களையும், முறையே நெற்றிக்கண் பார்வையினாலும் ஒப்பற்றதொரு சினச் சிரிப்பினாலும் கணப்பொழுதில் தீப்பிடித்து எரியச் செய்துவிட்ட வீர நாயகன், அவனிடம் பேரன்பு பாராட்டும் அபலையாகிய என் மனத்திலும் காதல் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்வானேன்? அறநெறிக்குப் புறம்பான தீவினைகளும் செருக்கும் கொண்ட பகைவர்களை ஒரே ஒரு பார்வையினாலேயே எரித்து நீறாக்கிவிட்ட சீரிய வீரநாயகனுக்கு, உண்மைக் காதலால் உள்ளம் உருகி ஆர்வம் பெருகி நிற்கும் ஏழைப்பெண்ணாகிய என்னையும் காதல் தீயினால் எரியச் செய்விக்க வெட்கமில்லாமற் போய்விட்டதே! அந்த செங்கையில் தங்கியிருக்கும் செந்தீ, பகைவர்கள் – அன்பர்கள் என்ற வேற்றுமை பாராட்டாமல் எல்லோரையும் எரிக்கத் துணிந்து விடும் கொடுந் தன்மை வாய்ந்ததா என்ன?

அருந்தவச் செல்வனாகிய அம்பலவாணன், எல் லோரின் மனக்கிடக் கையையும் எளிதில் உணர்ந்து கொள்ள வல்ல ஞான தேசிக னல்லவா? இன்று பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவமாடும் ஐயன், முன்பு ஆலமர நிழலில் அமர்ந்து - -சின் முத்திரை தரித்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உண்மைப் பொருள்களை உணர்த்திய மோன தேசிகனல்லவா? தன்னை அடுத்த அன்பர்களின் அகவிருளை அகற்றி அறிவொளியை அளித்து ஆட்கொண்டாளும் கருணை மிகுந்த தர்ம-தேசிகனல்லவா? வெளியின் உயரிய தத்துவத்தை உணர்த்தியருள 'சிதம்பரம்' எனும் சீரிய தலத்தில் கோயில் கொண்டுள்ள சிற்சபாநாதன், இரவும் பகலும் அவனொருவனையே நினைந்து நினைந்து நெஞ்சு கரைந்து உருகிக்கொண்டிருக்கும் என்னொருத்தியை மட்டும் வெறுப்பானேன்? பூப்படைந்து விட்டதன் பயனாக, ஒருவருக்கு வாழ்கைப் படுமளவும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாதென்று எனது பெற்றோர்கள் என்னை இர்த வீட்டுச் சிறைக்குள் ஒரு அடிமையைப் போல் அடக்கி ஒடுக்கி ஆண்டு வருகிறார்களே! இந்த வீட்டுச் சிறையினின்றும் எனக்கு விடுதலை கிடைக்கும் நாள் எந்த நாளோ ? பரம ரஸிக சிகாமணிகளாகிய தேவர்கள் தத்தமது தேவியருடன் ஏத்திப் போற்றி மகிழ்ந்து நிற்ப - பதஞ்சலி முனிவரும் வ்யாக்ரக பாதரும் பக்தி பரவசப் பட்டு இருகரங் குவித்துத் துதித்து நிற்ப - பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவமாடி நிற்கும் ஐயனைக் கண் குளிரக் கண்டு களிக்கும் பாக்கியம் தற் சமயம் எனக்கு வாய்க்காம லிருப்பினும், அந்த நடனராஜன் திருவீதிக்கு எழுந்தருளி நமது வீட்டுவாசலின் முன்பே இரண்டொரு கணப்பொழுதேனும் நிற்பானோ? கோயிலுக்குச் சென்று தரிசித்து மகிழ முடியாம லிருக்கும் குறைதீர, அப்பெருமான் தெருவில் வந்து நமது வீட்டு வாசல் முன்பு சற்று நின்றேனும் என்னை மகிழ்வூட்ட மனம் இரங்குவானோ?

எல்லோரது, மனக்கிடக்கையும் எளிதில் உணர்ந்து சொள்ள வல்லவனாகிய பொன்னம்பல மன்னன், என்னொருத்தியின் மனத்துயரை மட்டும் அறியானா என்ன? துன்புறுவோர் பக்கலில் மனம் இரங்கி ஆறுதல் மொழிகள் கூறி அவர்களது துன்பத்தைத் தொலைக்க முயல்வது, கருணை மிகுந்த வள்ளல்களின் பிறவிக் குணமல்லவா? "பேதாய்! என் வீணில் கலங்குகிறாய்? எவர் ஒருவர் என்னிடம் உண்மையன்பு செலுத்துகிறாரோ, அவரை நான் கைவிட்டுவிட மாட்டேன். எனது இன்னருளைக் குறித்து உனது நெஞ்சில் தோன்றிய ஐயுறுவை இப்பொழுதே ஒழித்துவிடு. விரைவில், நான் உனது மனத்துயரை ஒழித்து மகிழ்வூட்டுவேன். கவலையுறாதே! மனம் தேறி மகிழ்வு மிகுந்து நில்."- என்று எனது எல்லாக் கவலைகளும் விரைந்து விலகுமாறு எனக்கு ஒரு மணிவாசகம் கூறியருள கடராஜர் திருவுள்ளம் இரங்குவாரோ?

திரண்டு உருண்ட அந்த தண்ணிய தோள்களை நினைக்கும்போதே, எனது மனத்தில் எவ்வளவு ஆனந்தம் பொங்கிப் பெருகுகிறது! அந்த வீரத்தோள்களை நினைக்க நினைக்க, இப்பொழுதுகூட எனது மனம் பெரிதும் பொங்கிப் பூரித்துப்போய் விடுகிறதே! அந்த வீரத்தோள்களைத் தழுவி மகிழ எனது மனம் எவ்வளவு பேரார்வம் கொண்டு நிற்கிறதென்பதை அம்பலவாணரது திருவுள்ளம் அறியாதா என்ன? உயிரோடு உயிர் கலந்த உண்மைக் காதலர்கனின் ஆலிங்கனத்தினால் விளையும் ஆனந்தம் எத்தகைய தென்பதை, அம்பலவாணர் அறியாதவரல்லவே! எனது மனத்தில் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கும் சீரிய தூய தெய்விகக்காதல் எத்தகைய தென்பதை அந்த சுந்தரன் அறிந்திருந்தும், அச் செல்வன் ஆராத பெருங்காதலோடு என்னைத் தழுவி மகிழ இன்னும் மனமிரங்கா திருந்து வருவது எக்காரணம் பற்றியோ தெரியவில்லையே!

      செங்கரும்பு வில்லையும் ஐம்பூங்கணைகளையும் கொண்ட காமதேவன், அம்பலவாணனையே நம்பி நிற்கும் என்னைத் தினந்தோறும் சிறிதளவும் கருணையின்றி சித்திரவதை செய்துவரும் கொடுமையை, இன்னும் எவ்வளவு காலம் நான் கழித்துக் கொண்டிருப்பது? தன்மீது மலர்க்கணை தொடுத்த மாரனை ஒரே ஒரு பார்வையினால் ஒழித்து விட்டதாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும் நடராஜ வீரன், இரவும் பகலும் தன்னையே மனப்பூர்வமாக நம்பிநிற்கும் ஒரு எளிய பெண்ணின் மேல் போர் தொடுத்து நிற்கும் மாரனின் செருக்கை அடக்கி வெற்றி கொள்ளக் கருதாதிருந்து வருவது, அவனது சீரிய வீரத்தன்மைக்கு ஒரு பேரிழுக்கேயன்றோ? பகைவனின் உருவத்தை ஒழித்த ஒரு வீரன், அவனது கருவத்தை அடக்காமல் விட்டுவிட்டு, உருவமின்றியே அவன் செய்து வரும் சேஷ்டைகளைக் கண்டும் சும்மா இருப்பது முறைதானோ?

      எனது சிந்தைக்கினிய செல்வப்பெருமான் அருகில் இல்லாதிருப்பதன் பயனாக, இந்தப் பொழுதைக் கழிப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது! பிரிவாற்றாமையினால் வருந்தி நிற்கும் ஒவ்வொரு நாழிகையும் ஒவ்வொரு நீண்ட ஊழிபோலல்லவா தோன்றுகிறது! மிக மிக நீண்டு என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிவரும் இந்த துன்பமயமான பொழுதை இன்பமயமாக மாற்றியருள, எனது ஆருயிர்த் தலைவராகிய அம்பலவாணர் திருவுள்ளம் இரங்கும் நாள் எந்த நாளோ?

      எனது நெஞ்சில் மேன்மேலும் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கும் துன்பங்களை யெல்லாம் விரிவாக எடுத்துரைத்து என் மேல் திருவுள்ளம் இரங்கும்படி எனது தலைவரிடம் தூது செல்லவல்லவர் எவரையும் இங்கு காணேனே! இவ்விடத்தில் தனித்துத் தவித்து நிற்கும் என்னைக் கண்டு மனமிரங்கி, எனது குறைகளை எனது தலைவரிடம் சென்று சொல்லிவரவல்ல தூதர்கள், இங்கு வேறு எவரும் இல்லையே ! இந்நிலையிலுள்ள அபலையாகிய நான், எனது மனக்கிடக்கையை எனது தலைவர் உணரும்படி செய்வது எவ்வாறு? இரவும் பகலும் என் மனம் பொன்னம்பலவாணரை எண்ணி எண்ணி கரைந்து உருகிக் கொண்டிருக்கிறதே யன்றி, நான் படும் கொடும் துயரை எனது ஆருயிர்த் தலைவனாகிய அப்பெருமானுக்கு எவ்வாறு உணர்த்துவ தென்பதை இன்னமும் அறிந்த பாடில்லையே!

      என்ன என் மதியீனம்! இரவும் பகலும் இடைவிடாமல் எனது நெஞ்சக் கோயிலில் வீற்றிருக்கும் எனது இன்னுயிர்த் தலைவர், நாடோறும் நான் அனுபவித்து வரும் கொடிய வேதனையை அறியாதவரா என்ன? அனைவரையும் தன் மனம் போல் ஆட்டிவைத்து வரும் அந்த ஆனந்தத் தாண்டவமூர்த்தி - கருணையே வடிவான கங்காதரமூர்த்தி - ஒரு மங்கைக்குத் தனது தலையிலும் மற்றொரு மங்கைக்குத் தனது உடலிலும் இடமளித்தருளிய கருணாமூர்த்தி - என்னொருத்தியின் விஷயத்தில் மட்டும் இன்னும் பராமுகமாகவே இருந்து வருவதன் காரணம் என்னவென்பது, சிறிதும் விளங்கிய பாடில்லையே! அம்பலவாணர் எனது மனக்கோயிலில் புகுந்த நாள் முதல் இன்றுவரையில், அவரது திருவுள்ளம் புண்படக் கூடியவாறு அவருக்கு அடியேன் எத்தகைய பிழையும் இழைத்தவ எல்லவே! என் மேல் குற்றம் ஏதொன்றும் இல்லாதிருந்தும், அன்பின் வடிவினராகிய அம்பலவாணர் இன்னும் என் பக்கலில் மனம் இரங்காதிருந்து வருவது ஏனோ? திசைமுகன் வியந்து நிற்ப – திருமால் மகிழ்ந்து நிற்ப- தில்லை மூவாயிரவர்களும் தொழுதேத்த - ஒரு பதத்தை நிலத்தில் ஊன்றி, மற்றொரு பதத்தைத் தூக்கி ஆனந்தத் தாண்டவமாடும் அம்பலவாணரது அடிசிழலை அடைந்து, உடல் உருக-உள்ளம் உருக - உயிர் உருகத் துதித்து நிற்கும் பேறு , இனி அடியேனுக்கு வாய்ப்பது எங்காலம்?"

      [இக்கட்டுரை, 'முத்துத் தாண்டவர்' எனும் அன்பரின் ''தெருவில் வாரானோ?'- எனும் கீதத்தின் பொருளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.]

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment