Thursday, August 27, 2020

 

உலகவாழ்வின் அநித்தியம்

 

இப்பூவுலக வாழ்வு நிலையற்றதென்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படியிருந்தும் அநேகருடைய சீவியத்தின் இலக்கை நாம் உற்று நோக்கு மிடத்தில் அவர்கள் இந்த உலகத்தில் எக்காலமும் நிலைத்திருக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் போல எண்ணி நடப்பதைக் காண்கிறோம். அஞ்ஞான அந்தகாரத்தில் அவர்கள் அமிழ்ந்திருப்பதே இதற்கு முக்கிய காரண மாகும். ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுடைய சுற்றத்தவர்களுக்குள் அல்லது சினேகிதர்களுக்குள் ஓர் மரணம் நிகழும் பொழுது ஒருவகையான சுடலைஞானம் உதிப்பது சகசம். இந்த ஞானம் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற ஓர் மனக்கிளர்ச்சியேயன்றி வேறல்ல. மன உறுதியோடு கூடிய உண்மை ஞானத்தையடைந்த மகான்களுக்கு இவ்வுலகமும் அதிலுள்ள சகல போகபோக்கியங்களும் ஒரு கனவுபோலத் தோன்றுமென்பது நிச்சயம். எண்ணரிய பிறவிகளுள் அதிக விசேடம் பொருந்தியதாகிய மானிடப் பிறவியை எடுத்த நாம் இவ்வுலகத்தையும் இதிலுள்ள பல அனுபவங்களையம் மாத்திரம் திலையுள்ளனவாக மதித்து நடப்பது எவ்வளவு மதியினம் "

 

''நெஞா லுளனொருவனின்றில்லை யென்னும்

பெருமை புடைத்திவ் வுலகு.''

 

என்பதனால், நேற்று நல்ல சுகபெலமுள்ளவனாயிருந்த ஒருவன் இன்றைக்கு இவ்வுலக வாழ்வைத் துறந்து பரலோகப்பிராப்தி யாயினானென்று சொல் லக்கூடிய பெருமை வாய்ந்ததாக இவ்வுலக மிருக்கிறதென்று தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் திருவாய் மலர்ந்தருளியிருப்பதை நாம் உற்று நோக்குந்தோறும் நம்மையறியாமலே இவ்வுலக போகங்களில் ஓர்வித வெறுப்புத் தோன்றுமென்பதற்குச் சந்தேமில்லை.

 

உலகத்தையும் அதிலுள்ள சகல சராசரங்களையும் பூரண ஞானமும் இரக்கமுமுள்ள எம்பெருமான் நம்முடைய ஈடேற்றத்தின் பொருட்டே நிலைபெறச் செய்திருக்கின்றாரென்பது மறுக்கொணா உண்மை. ஆதலால் உலகிலுள்ள ஒன்றையாவது நாம் வெறுத்துத்தள்ளுவது ஒருபோதும் சரியல்ல. ஆனால் உலக தோற்றங்களில் பாசம் வைத்து ஏமாந்து போகாமலிருக்க வேண்டியதே நம்முடைய பெரும் கடமை யென்பதை நாம் மறவாதிருத்தல் வேண்டும். இழந்து போன மனுஷரை அல்லது பொருட்களைக் குறித்துச் சிலகாலங்களில் தாங்கமுடியாத மனவேதனையுற்று வருந்துவது நம் ஒவ்வொருவருடைய அனுபவமல்லவா? இவ்வனுபவம் முற்றத் துறந்து முழுதுமுணர்ந்த ஞானிகளுக்கேயன்றி மற்றவர்களுக்கு இல்லாமலிருப்பது அரிதிலுமரிதாகும். எக்காலமும் உலகம் போற்றித் துதிக்கும் துறவிகளுக்குள் தலைமை பெற்று விளங்கி உலகத்தவர் உய்யும் வழியைக் காட்டிய பட்டினத்தடிகள்,


 "ஊருஞ்சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
 பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்
 சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
 யாரும் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே " என்றும்
 "விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுட னேயுடலைச்
 சுட்டுவிடப் போகிறார் சுற்றத்தார் - பட்டது பட்
 டெந்நேர முஞ்சிவனை யேத்துங்கள் போற்றுங்கள்
 சொன்னே னதுவே சுகம்.''


என்றும் பாடியிருப்பதை நாம் ஆறுதலாய்ச் சிந்திப்போமாயின் நமக்கும் உலகத்திற்கும் எவ்வகையான தொடர்பு இருத்தல் உசிதமென்பதை உணர்ந்து உய்தற்கு ஏதுவாகும். பரமஞானிகள் ஒவ்வொருவரும் உலகத்தையும் அதன் நிகழ்ச்சிகளையும் ஒருவகையான பற்றுமின்றிச் சாட்சி மாத்திரையாகவே பார்த்து ஆனந்தித்திருப்பார்களென்று அவர்களுடைய அனுபவங்களிலிருந்து நாம் எளிதில் விளக்கிக்கொள்ளலாம். முத்திப்பெரும் பேற்றைப் பெறுபவனடையத்தகும் பேரின்பத்தோடு உலக இன்பமாகிய சிற்றின்பத்தை ஒப்பிடும் போது உலக இன்பத்தின் வெறுமையை விளக்கிக் காட்டுவதற்காகப் பின்வரும் உதாரணத்தை அறிவாளிகள் சாதாரணமாய்க் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அதாவது, "ஒருமனுஷனை ஒரு யானை கோபத்தோடு துரத்தித் தீங்கு செய்ய எண்ணும் தருணத்தில் அவன் சிறிது தூரம் ஓடிப் பிறகு ஓடச்சக்தியற்று வழியிற்றோன்றிய ஒரு செடிக்கிணற்றுள் விழும்பொழுது அக்கிணற்றின் அடியில் ஓர் ஐந்து தலை நாகம் சீறிக்கொண் டிருப்பதைக்கண்டு பயந்து அக்கிணற்றின் நடுவில் உட்பக்கத்தில் வளர்ந்திருந்த ஓர் அறுகம் புல்லைக் கையினாற்பற்ற, அப்புல்லைக் கிணற்றுக்கட்டிலிருந்த ஓர் எலி பற்களினால் கடித்துக்கொண்டிருப்பதைக் கண்ணுற்று விசனத்துடன் மேலே பார்க்க, கிணற்றின் மேல் வளர்ந் திருந்த ஒரு மரக்கொம்பிலிருந்து ஒரு துளிதேன் கீழிறங்குவதைப் பார்த்து வாயைத் திறந்து அத்தேனைக்குடித்து ஒரு சிறிது நேரம் மகிழ்ச்சியடைந் தான்' என்பதேயாம். இவ்வளவு துன்பங்களுக்கிடையில் அவனுக்கு அந்த இன்பம் கிடைத்ததென்பதைக் கவனித்து ஊன்றி யோசித்தால் உலக இன்பங்களெல்லாம் இத்தன்மையனவே யென்பது நன்கு புலப்படும்.

 

உலக வாழ்வு அநித்தியம் என்னும் பெரிய உண்மையை நாம் உணருந்தோறும் சுயநலங்கருத்திப் பிறருக்குத் தீமை விளைக்கும் எண்ணம் நம்முடைய மனதை விட்டகலும். நான் செல்வன், நான் சாதிக்காரன், நான் கல்விமான், நான் அதிகாரி என்றற்றொடக் கத்தனவாகிய வீண் எண்ணங்களும் வீம்புவார்த்தைகளும் நமக்குள் இல்லாதொழிவதற்கு ஏதுவாயிருக்கும். உலக அமைப்பின் ஓர் அற்புதத்தை நம்மில் அனேகர் கவனிக்கிறதில்லை. கவனித்தாலும் அதனாலடையத்தகும் பயனை முற்றாய்ப் பெறுவதில்லை. அதென்னவென்றால், இருபத்துநாலு மணித்தியாலங்கொண்ட ஒவ்வொரு நாளிலும் சாக்கிராவஸ்தை சொப்பனாவஸ்தை இரண்டிலும் கழியும் காலம் போக சுழுத்தி அவஸ்தையாகிய ஆழ்ந்த நித்திரையில் நாம் ஒவ்வொருவரும் ஐந்து மணித்தியாலமாவது கழிக்கின்றோ மல்லவா? இந்த ஐந்து மணித்தியாலமும் உலகிலுள்ள எல்லா மனிதருடைய அனுபவமும் ஒரே தன்மையாயிருப்பதை நாம் அறிந்தும் அறியாதவாகள் போலிருக்கின்றோம். இராசாவும குடியானவனும், செல்வனும் ஏழையும், அதிகாரியும் அதிகாரமற்றவனும், தீண்டும் சாதியான் நீணடாக சாதியானாகிய மன அனைவரும் ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் பொழுது ஒரு பேதமுமில்லாதவர்களாக விருந்து நித்திரைவிட்டெழுந்து கண்விழித்தவுடன் ஒருவருக் கொருவர் எத்தனையோ பேதங்களைச் சிருஷ்டித்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகின்றனர். இந்த மகா ஞானத்தை நம்மவர் உணர்ந்தால் உலகத்தில் மனுஷருக்குள் எவ்வளவு அன்பும் அனுதாபமும் சந்தோஷமும் மன ஆறுதலுமிருக்கும். அப்போது ஒவ்வொருவரும் தத்தமக்குரிய கடமை களைப்பற்றி மிகவும் சாக்கிரதையாயிருப்பார்கள்.

 

எல்லாரும் ஞானிகளாயிருந்தால் உலகம் நடைபெறாது. இவ்வுலகத்திலுள்ள சகல பொருட்களும் எல்லாருக்கும் பொதுவானவைகளா யிருந்தால் ஒருவரும் பிரயாசப்பட்டு அப்பொருள்களைப் பாதுகாக்க ஏவப்படார்கள். இதற்காகத்தான் கடவுளுடைய அளவிறந்த ஞானத்தினால் இவ்வுலகம் எப்பொழுதும் நடைபெறத் தக்க வகையாய் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனுஷனும் தன்னுடைய பெண்சாதி, பிள்ளை, மாடு ஆடு, காணி, பூமி என்னுமிவற்றை நினைத்து அபிமானிப்பதாகிய அஞ்ஞானத்தில் ஈடுபட்டிருக்கிறபடியினாலே தான் உலகத்தில் மிகவும் சிறிய ஒரு பகுதியையாவது, எல்லாம் தனக்கு அன்னியமென்பதை முற்றாய் மறந்து பாதுகாக்கிறான். எல்லாம் எல்லாருக்கும் பொதுவாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன வென்னும் உண்மை ஞானம் உதித்தவுடன் அனேக காரியங்களை மனுஷன் கைவிட்டுவிடுவான். ஏதாவதொன்றை ஒருவன் தன்னுடைய சொந்தமென்று நினைக்கும்பொழுது அது அவனுடைய சித்தமில்லாமல் அவனைவிட்டுப் பிரியாமலல்லவோ இருத்தல் வேண்டும். அதுவு மன்றி, தான் வைத்திருக்க விரும்பும் ஒவ்வொன்றையும் தன்னாற்றலாய் அவன் பெறத்தக்கதாயு மிருத்தல் வேண்டும். அப்படி இல்லாதிருக்கும் பொழுது விழலுக்கிறைத்த நீர்மாதிரி மனுஷன் நிலையற்ற கானற்சலம் போன்ற அனுபவங்களில் ஏமாந்து வருந்துவது எவ்வளவு புத்தியீனம்.

 

நாம் இவ்வுலகத்தில் பிறந்தபொழுது இதிலுள்ள ஒன்றாவது நம்முடைய சொந்தமென்று சொல்லத்தக்கதாக இருக்கவில்லை. இங்கே சிலகாலம் சீவித்திருந்து பின் இறக்கும் பொழுது பிரயாசப்பட்டுத் தேடிச்சேமித்து வைத்திருக்கும் ஒன்றையாவது கொண்டுபோகத் தக்கவல்லமையும் நமக்கில்லை. கண்மணிகளிலும் அருமையாக நேசித்த மனைவி மக்கள் உற்றாருறவினர் சினேகிதராதியோரில் ஒருவரையாவது பிரியாதிருக்கும் சிலாக்கியம் நமக்கு ஒருபோதும் கிடையாது. தாங்கமுடியாத நோயுற்றுப் பாய்ப்படுக்கையாயிருக்கும் பொழுது நம்முடைய வருத்தத்தில் ஒரு பகுதியை ஏற்று நமது துன்பத்தை நீக்கி ஆறுதலை தரக்கூடியவர்கள் இவ்வுலகில் ஒருவருமில்லை யென்பது நாம் பூரணமாய் அனுபவத்திற் கண்டறிந்த விஷயம். இம்மட்டோ! ஆரைப்பார்த்தாலும் தங்கள் தங்கள் காரியங்களில் கண்ணுங்கருத்துமாயிருக்கிறார்களே தவிர மற்றவர்களுடைய நன்மையை அவாவி அவர்களுக்காக கஷ்டப்பட்டு உதவி செய்கிறவர்களைக் காணுவது மிகவும் அபூர்வமாயிருக்கிறது. அப்படிச் சிலர் இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு ஏதாவது நன்மை செய்யக்கூடியவர்களென்று அறிந்தால் மாத்திரம் அவர்களுடைய கஷ்டகாலங்களில் அவர்களைக் கவனித்து உதவி செய்வார்களேயன்றி, பிரதிபலன் கருதாமல் மற்றவர்களுக்காகக் கஷ்டப்படுபவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரினுஞ் சிலரென்று சொல்லுதல் தவறாகாது. இப்படியெல்லா மிருக்கிறபடியால் தான் பற்றின்றி நாம் மற்றவர்களுக்குக் காட்டும் அன்பிற்கும் அனுதாபத்திற்கும் இக்காலத்தில் நன்றியீனமே பெரும்பாலும் பிரதிபலனாக ஏற்படுகின்றது.

 

இப்படியெல்லா மிருக்கும் பொழுது, நித்தியவஸ்துவாய் ஆன்ம
கோடிகளுக்கெல்லாம் பூரண அன்பும் இரக்கமும் சொரிந்து கொண் டிருக்கும் ஈஸ்வரனை இடைவிடாது தியானித்து ஈடேறுவதை விட்டு, நமது வாணாளை வீணாளாக்குவது எவ்வளவு பரிதாபமான காரியம். நம்முடைய தென்று நாம் சொல்லும் ஒவ்வொன்றையும் நாம் பிறக்கு முன் சிலர் தங்களுடையதென்று சொன்னது மாத்திரமன்றி நாம் இறந்தவுடன் வேறு சிலர் தங்ளுடையதென்று சொல்லப்போகிறார்கள். இந்த இலட்சணங்களெல்லாம் பொருந்திய நீர்க்குமிழியை யொத்த இவ்வுலக வாழ்வு அநித்திய மென்ற பேருண்மையை நாம் கனவிலும் மறவாதிருத்தல் அத்தியாவசியம். மறக்குந்தோறும் பல தொல்லைகளைத் தொடர்ச்சியாய் அனுபவிக்க வேண்டி வருமென்பது நிச்சயம். உலக வாழ்வு அநித்தியமாயிருப்பதனால் அதனை உடனே விட்டுவிட வேண்டுமென்பது கருத்தல்ல. தாமரையிலையில் தங்கி யிருக்கும் தண்ணீர்போலப் பற்றின்றி உலகத்திலிருந்து கடவுளில் மாத்திரம் நம்பிக்கையும் அன்பும் வைத்து இடையறாத் தியானத்தோடிருப்பதே அறிவாளிகள் கடனாகும்.


 ''இந்திரசாலம் உலக வைபோகம்
 இன்றைக் கிருப்பது வோசந்தேகம்
 அந்தர மின்னல் போல் அழியும் தேகம்
 ஆதலாலுனக்கேன் அதனுடன் சினேகம் "


என்று ஸ்ரீமான் வேதநாயகம்பிள்ளை யவர்கள் "சர்வசமய சமரசக் கீர்த்தனையில் பாடியிருப்பதை நாமனைவரும் சிந்தித்துத் தெளிந்து ஈடேறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனை இடைவிடாத் தியானத்திலிருத்துவோமாக


 கா. சின்னப்பா,

அளவெட்டி, யாழ்ப்பாணம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴

 



 

No comments:

Post a Comment