Thursday, August 27, 2020

 உலகில் பெரிய பொருள் எது

 

இந்தியாவை ஆண்டு வந்த மொகலாய மன்னர்களில் அக்பர் பாதுஷாவின் பிரதான மந்திரியான பேர்பில் என்பவர் ஒருநாள் ஆஸ்தான மண்டபத்திலிருந்து தம் வீட்டிற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் போது, தற்செயலாய் அவர் பார்வை ஓர் மரத்தின் பக்கம் சென்றது. அங்கே ஒரு சிறு பையன் உட்கார்ந்து ஒரு பிடி கடலைகளை ஒவ்வொன்றாய்க் கொறித்துத் தின்று கொண்டிருந்தான். இதைக் கண்ட பேர்பில் அதிக ஆச்சரியமடைந்து, “ஏ, பையா! நீ ஏன் இக்கடலைகளை ஒவ்வொன்றாய்த் தின்று கொண்டிருக்கிறாய்," என்று வினவினார். அதற்குப் பையன்'' ''ஐயா! நான் பல நாட்களாகப் பட்டினியாயிருக்கிறேன். இப்பொழுது என்னிடமிருப்பது ஒரு பிடி கடலையே. இவைகளை ஒரே வாயிற் போட்டுத் தின்று விடுவேனாயின் அதன் விருப்பம் மீண்டும் எழும். இங்ஙனம் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்க் கொறித்துத் தின்று கொண்டிருப்பதனால் எனக்கு நித்திரை வந்து விடும். தூங்கியும் விடுவேன். மனமும் திருப்தியடையும்,'' என்றான். இதைக் கேட்ட மந்திரி அவன் மீது கிருபை கூர்ந்து அவனைத் தம்முடன் தமதில்லத்திற்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்துக் காப்பாறி வந்தார். பையன சின்னாட்களில் நல்ல தேகாரோக்கிய நிலையை யடைந்தான்.

 

அக்பர் பாதுஷா பெரும்பாலும் தம் அமைச்சர்களிடம் மிக்க கஷ்டமான வினாக்களை விடுத்துக் கொண்டே இருப்பாராம். ஒரு நாள் பேர்பில்லை நோக்கி "மந்திரி! உலகத்தில் மிகப் பெரிய பொருள் எது?" என்று கேட்டார். அதற்கு மந்திரி, இப்பிரச்சினை மிகக் கஷ்டமானதாயிருப்பதால் சில நாட்கள் வாயிதாத் தரவேணுமாய் வினய வந்தனத்துடன் கேட்டுக் கொண்டார். பாதுஷா ஒருமாதத் தவணை தந்திருப்பதாயும், சரியான விடை யிறுக்கவில்லையாயின் சிரச்சேதம் செய்வதாயும் ஆக்ஞாபித்தார். மந்திரி வீட்டிற்குத் திரும்பி வந்து பல அறிஞர்களை அழைத்து, “உலகத்தில் பெரிய பொருள் எது? " என வினவினார். ஒருவர் அழகே உலகத்தில் பெரிய பொருளென்றார். மற்றொருவர் புத்திர பாக்கியமே மிகச் சிரேஷ்டமானதென்றார். வேறொருவர் தேகாரோக்கியமே சிரேஷ்டமான தென்றார். பிறிதொருவர் நல்லொழுக்கமே பெரிதென்றறிவித்தார். ஒரு சிலர் அதிர்ஷ்டமே பெரிதென்றும் கூறினர். வேறு பலர் சந்தோஷமே பெரிதென்றும் மொழிந்தனர். இறுதியாக, பண்டிதரொருவர் தெய்வ வழிபாடே உலகில் பெரிய பொருளெனப் புகன்றார். ஆனால் இவ்விடைகள் யாவும் அதிருப்தியைத் தரத்தக்கனவா யிருந்தமையால் மந்திரிக்கு மிக்க விசனமுண்டாயிற்று. கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் வழியலாயிற்று. என் செய்வார் பாவம்! மந்திரியால் சம்ரக்ஷிக்கப்பட்டு வந்த பையன், மந்திரியின் நிலைமையைக் கண்டு வியப்படைந்து, '' ஐயனே தாங்களிவ்வாறு என் விசனமுற்றிருக்கின்றீர்கள்? என்றான். மந்திரி, '' இன்றைய தினமே என் வாழ்நாட்களின் இறுதி நாளாகும், " என்றார். பையன் ஆச்சரியத்துடன், '' தாங்கள் அரசர் பெருமானிடம் ஏதேனும் தவறாக நடந்து கொண்டீர்களா?'' என்றான். மந்திரி பாதுஷாவின் வினாவையும் அதற்குச் சரியான விடை இறுக்காவிட்டால் சிரச்சேதம் செய்வதாய்க் கூறிய ஆக்ஞையையும் தெரிவித்தார். பையன் " இதற்காகவா துக்கமடைகிறீர்கள்? கவலை கொள்ளற்க; கடவுளின் சிருஷ்டியில் அறிவே மிகப் பெரிய பொருளாகும் என்பதை அரசர் பெருமானுக்கு அறிவியுங்கள்'' என்றான். இதைச் செவியுற்ற மந்திரி மிக்க சந்தோஷமடைந்து, கடவுளைப் பிரார்த்தித்தார். மறுநாட் காலையில் தர்பாருக்குச் சென்று அரசருக்கு இவ்விடையைத் தெரிவித்தார். பாதுஷா அதிக ஆனந்த மடைந்து மந்திரி! பேஷ்! நல்லவிடை பகர்ந்தீர்! ஆனால் அம்மாபெரும் பொருளாகிய அறிவு எதை உண்கின்றது? என்பதையும் தெரிவிப்பீராக'' என்றார். இதைச்செவியுற்ற மந்திரிக்குத் தலையிலிடி விழுந்தாற் போலாயிற்று. இஃதென்ன விபரீதமாய் வந்து முடிந்தது? முந்திய தடவை பையன் நம்மைக் காப்பாற்றினான். இப்பொழுது இவ்வினாவிற்கு அவனாலும் விடை கொடுக்க முடியாது போல் தெரிகிறதே என்செய்வேன்'' என்று மிகக் கவலைப்பட்டார். மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு முன்பு வினவியது போல் இப்பொழுதும் ஜனங்களிடம் வெகு புத்திசாலித்தனமாக " அறிவு எதைச் சாப்பிடுகிறது? " என வினவினார். ஒருவர் பாதம் பருப்பைச் சாப்பிடுகிறதென்றார். மற்றொருவர் பாலாடையைச் சாப்பிடுகிறதென்றார். வேறொருவர் அறிவுக்குத் தத்துவமே ஆகாரமாகு மென்றார். பிறிதொருவர் அறிவ அடிபட்டுக் கொண்டிருப்பதால் அதற்கு அடியே உணவென்றார். பண்டிதரொருவர் அறிவு புத்தகத்தைச் சாப்பிடுகிறதென்றார். பேர்பில்லுக்கு இவ்விடைகள் ஒன்றேனும் திருப்தியையளிக்கவில்லை. முன்போலவே அழுது கொண்டும் பிரலாபித்துக் கொண்டுமிருந்தார். அப்போது பையன் அங்கே வந்து மந்திரியை நோக்கி " என்ன? சங்கதி என்ன?'' என்றான். மந்திரி, '' மகனே முன்னால் நீ சொன்ன விடையினால் என் உயிர் தப்பிப் பிழைத்தது. இப்போது மன்னர் பெருமான் 'அறிவின் ஆகாரம் எது? என்று வினவியிருக்கிறார். இக்கேள்வி மிகக் கடினமானதாயிருப்பதால் நான் மிகவும் வருந்துகிறேன்'' என்றார். இதைக் கேட்டபையன் புன்னகை கொண்டு மந்திரியை நோக்கி,'' ஐயா இது மிகவும் இலேசான கேள்வியே. உலகில் பெரிய பொருள் அறிவென்று கண்டு கொண்டோம். அந்த அறிவு கவலையையே ஆகாரமாக அருந்துகிறது. எவர்களுடைய தலையில் மூளையும், மூளையில் அறிவுமிருக்கிறதோ அவர்களே அறிரெனப்படுவர். அறிஞரே கவலைப்படுவர். கவலையே அறிவுக்கு ஆகாரமாகு' மென்றான்.

 

மந்திரி ஆனந்தமடைந்தவராய் ராஜசமுகத்தை யணுகி, "பாதுஷா சலாமத்! உலகத்தில் மிகப் பெரிய பொருளாகிய அறிவு கவலையை ஆகாரமாகக் கொள்கிறது," என்றார். அரசர் சந்தோஷ மடைந்து, 'சபாஷ்! மந்திரி! அவ்வறிவு, எதைப் பானம் செய்கிறது'' என்றார். இவ்வினாவைக் கேட்ட மந்திரி வீட்டுக்குத் திரும்பிவந்து, தன்னாலியன்ற மட்டும் யோசித்துப் பார்த்தார். முடியவில்லை. முன்போலவே பலரிடமும் கேட்டார். ஒருவர் அறிவு உதிரத்தைப் பருகுகிற தென்றார். மற்றொருவர் விபத்துக்களைக் குடிக்கிறதென்றார். வேறொருவர் கல்வியைப் பானம் பண்ணுகிறதென்றார். இவ்விடைகளும் மந்திரிக்குத் திருப்தியை யளிக்கவில்லை. இறுதியில் பையனை அழைத்துக் கேட்டார். பையன் மந்திரிக்குத் தேறுதல் கூறி, ''ஐயா! உலகத்தில் மிகப் பெரிய பொருள் அறிவு. அதன் ஆகாரம் கவலை. அதன் பானம் கோபம்; அறிவுடையவன் கோபத்தை அப்படியே பருகி விடுகின்றான். அறிவிலிகள் அற்ப விஷயத்திலும் அதிக கோபங் கொண்டு சண்டை சச்சரவு செய்கிறார்கள். அதனால் சுற்றத்தாருக்கும் துன்பம் நேரிடுகிறது. எனவே அறிவின் பானம் கோபம் என்று மன்னர் பெருமானுக்குத் தெரிவித்து விடுவீர்களாக', என்றான். மங்திரி பையனின் விவேகத்தை மெச்சினார். மறுநாட்காலையில் பாதுஷா சமுகம் சென்று வந்தன மளித்து இம்மூன்றாவது வினாவிற்கு விடையைத் தெரிவித்தார். பாதுஷா மந்திரியை நோக்கி, ''மந்திரி! உண்மையிலே என்னுடைய இந்த வினாக்கள் மிகக் கஷ்டமானவை; அதிக முக்கியமானவை. நீவிர் அறிஞராயிருப்பதால் இவைகட்குத் தகுந்த விடை பகர்ந்தீர். இப்பொழுது மீண்டும் ஒரு வினா பாக்கி யிருக்கிறது. அதற்கும் தகுந்த பதிலளிப்பீ ரென்றும் நம்புகிறேன். அதாவது இவ்வறிவின் வடிவம் எப்படிப்பட்ட தென்பதையும் தெரிவிப்பீராக, " என்றார். மந்திரி இதற்கு முன்னால் ஜனங்களிடம் முந்தின வினாக்களுக்கு விடை கேட்டது போல் இப்பொழுதும் அவர்களிடம் வினவினார். சிலர் அறிவின் வடிவை தேவலோகக் கன்னிகைகளுக்கு ஒப்பிட்டார்கள். சிலர் இலக்குமி தேவிக்கு ஒப்பிட்டனர். பலர் ஒரு பெரிய பெட்டியைத் திறக்கும் சாவியைச் செய்து அறிவின் வடிவை ஒப்பிட்டுக் காட்டினர். மற்றும் பலர் இருள் நிறைந்த அறையில் ஒரு மெலிந்த மனிதன் தன்கையைநெற்றியிலூன்றி ஏதோ ஆலோசனையில் மூழ்கி இருக்கும் விதமாகச் செய்து அறிவின் வடிவைக்காட்ட வேண்டுமென்றார். மந்திரி இவ்விடைகளை யெல்லாம் கேட்டுக் கொண்டு, இன்னும் நன்கு தெரியும் பொருட்டுப் பையனை அழைத்துத் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிறுவன், 'ஐயனே! இவ்விருவிற்கு விடை தங்களிடம் தெரிவிக்க மாட்டேன். தாங்கள் அரசனிடம் சென்று, தங்களது நான்காவது வினாவிற்கு எனது அடிமைச் சிறுவன் விடை கூறுவானென்றும், சமூகத்தில் உத்தரவளித்தால் ஆஜர் செய்விக்கிறே னென்றும் தெரிவித்து விட வேண்டும்'' என்றான். அவ்வண்ணமே மந்திரி அரசரிடம் சென்று 'மன்னர் பெருமானே! தங்களுடைய இக்கடைசி வினாவிற்கு என தடிமைச் சிறுவன் விடை தருவான். தாங்கள நுமதித்தால் அவனை ஆஜர் செய்விக்கிறேன்,'' என்றார். அரசர் அதற்குச் சம்மதித்தார். மந்திரி சேவகனை நோக்கிச் சிறுவனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். பையன் ராஜகுமாரர்களைப் போல் ஆடையாபரணங்க ளணிந்து சமுகத்தை அடுத்து மிக மேதை மரியாதையோடு வந்தன மளித்து மௌனமாய் நின்றான். அரசர் பையனை நோக்கி, " ஏ! பையா! நீ எனது வினாவிற்கு விடை கொடுப்பாயா? மேலும் அறிவின் வடிவம் எப்படிப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.

பையன்: - "ஆம் எனக்குத் தெரியும்''

அரசர்: - "ஆனால் தெரிவிப்பாயாக "

பையன்: 'ஓர் விண்ணப்பம்''

அரசர்: - "என்ன? "

பையன்: -- எனக்கு ஒரு மணிநேரம் ராஜரிகம் கிடைக்கவேண்டும். மேலும் தாங்களுட்பட எல்லோரும் இப்பொழுது தங்களுக்கு எவ்வித மரியாதையுடனும் கீழ்ப்படிதலுடனும் நடந்து கொள்கிறார்களோ அவ்லிதமே இந்த ஒருமணி நேரம் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். நான் தங்ககளுக்கு அறிவின் வடிவம் எப்படி யிருக்கிறதென்று மிகத் தெளிவாய் உணர்த்துவேன்.

 

அரசர் சற்றுநேரம் மௌனமாயிருந்து விட்டுப் பையன் வேண்டுகோளுக் கிணங்கி, சிம்மாசனத்தை விட்டுக் கீழே இறங்கி ஒரு பக்கம் வணக்கமாய் நின்றார். பையன் ஆடம்பரத்தோடு சிம்மாசனத்தில் ஏறி வீற்றிருந்தான். பையன் சற்று நேரம் மௌனமாயிருந்து விட்டுக் கொலையாளியை ஆஜர் செய்யும்படி அங்குள்ளவருக்குக் கட்டளையிட்டான். இதைக் கேட்ட மாத்திரத்தில் கொலுமண்டபத்தில் ஆஜராயிருந்த யாவரும் பதைபதைத்துத் திகிலடைந்தவர்களாய்ப் பையனின் பக்கம் பார்க்க ஆரம்பித்தார்கள். (கொலையாளி ஆஜராகிறான்.) பையன்,'' அரசர் பெருமான் இராஜங்கத்தின் குற்றவாளியா யிருக்கிறார். அவரைக் கொலை செய்தல் அவசியமா யிருக்கிறது. எனவே இப்பொழுதே கொலை செய்புங்கள்" என்றான். இவ்வார்த்தையைக் கேட்ட யாவரும் மிக்க கோபமடைந்து தத்தம் வாளாயுத்தை யுருவ வினவர்களாய்ப் பையனின் பக்கம் முனைந்தார்கள். பையன் அவர்களை நோக்கி அதட்டிய வண்ணமாய், "நான் அரசனாயிருக்கிறேன். நீவிர் யாவரும் என் உத்தரவுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். ஒருமணி நேரம் நான் அரசனாயிருக்கவேண்டு மென்பது எனக்கும் அரசர் பெருமானுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கை'' என்றான். பாதுஷாவின் சைகையால் தர்பாரிலுள்ளவர்கள் யாவரும் தத்தம் வாளாயுதத்தை உறையிலிட்டுக்கொண்டு மௌனமா யிருந்தனர்.

 

பையன்: - (மிக்க கர்வத்தோடு அரசனை நோக்கி) தாங்கள் குனிவீர்களாக. (கொலையாளியைப் பார்த்து) வாளை வெளியிலெடு'' என்றான். அரசர் பையனின் உத்தரவுப்படி தலை குனிந்த வண்ணம் நின்றான். (கொலையாளி வாளை யுருவி வெட்டச் சென்றான்) பையன் 'போதும்! மன்னரே! நோக்குக! மகா மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி கேவலம் ஒருபையனின் முன்பு எவ்வளவு இயலாத் தன்மையோடும் தாழ்மையோடும் நிற்கின்றார். இதுவே அறிவின் சித்திரமாகும். அரசனை ஆண்டியாக்குவதும் ஆண்டியை அரசனாக்குவதும் இவ்வறிவின் விவேக தந்திரமாகும் என்று சொன்னவனாய்ச் சிம்மாசனத்தினின்றும் கீழே இறங்கி மன்னருக்கு வந்தன மளித்துச் சென்றான். (1300 - வ. -வருடங்களுக்கு முன் அரேபியா தேசத்திலவதரித்த எழுதப்படிக்கத் தெரியாத எம்பெருமான் நபிகள் நாயகம் அவர்களும் கடவுளின் சிருஷ்டியில் அறிவே மிகச் சிரேஷ்டமானதென்று கூறிப்போந்தார்.)

 

குறிப்பு: - பண்டைக்கால அரசர் பெருமக்களைப் பற்றியும், மதியமைச்சர்களைப் பற்றியும் எல்லா மொழிகளிலும் இத்தகைய கதைகள் வழங்கி வருதல் சகஜம். ராயர் - அப்பாஜி கதை, பட்டி - விக்கிரமாதித்தன் கதை முதலியன இந்த வரிசையிற் சேரும். கன்ன பரம்பரையாகவும் எத்துணையோகதைகள் வழக்காற்றில் நிலவுகின்றன. நமது நண்பர் ஜனாப் T. S. முகம்மதுநயினார் அவர்கள் ஈண்டுக் குறிப்பிட்டுள்ள அக்பர் பாதுஷா - பேர்பில் வரலாற்றையும் மேற்படி வரிசையிற் சேர்க்கலாம் என்பது எமது கருத்து. இவையெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா என்பது வேறு விஷயம். அது விவகாரத்திற்குரியது. அறிவுக்கு விருந்தாயிருத்தல் பற்றியே இத்தகைய கதைகள் சர்வஜன செல்வாக்குப் பெற்று நிற்கின்றன.

 

"உலகில் பெரிய பொருள் எது? " என்னும் இக்கதையில் சுவையுள்ளகு உண்மைகள் மிளிர்கின் றன. உலகில் மிகப் பெரிய பொருள் அறிவென்பதும், அவ்வறிவுடையோர் வாழ்க்கை மேம்பாட்டில் சிரத்தையும் கவலையு முடையராயிருப்பர் என்பதும், அவர் கோபம் நீங்கிய குண நலமுடையாாயிருப்பர் என்பதும், புத்திமானே பலவான் என்பதும் இக்கதையினால் நன்குவிளங்கும்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடையரேனும் இலர்.”

என்னும் பொய்யா மொழியின் பொருள் உங்கே ஒப்பு நோக்கத்தகும்.          (ப-ர்)

 

ஆனந்த போதினி – 1931 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment