Thursday, August 27, 2020

 

உளம் போல் உலகம்

 

 இவ்வுலகின் இயற்கைத் தோற்றங்களில் உண்டாகும் வெறுப்பு விருப்பும், நன்மை தீமை, பாப புண்ணியம் என்கிறவைகளைப் பகுத்தறிவதும், மனிதரின் மனத்திற்கேற்ப மாறுபடுகின்றன.

 

ஒருவன் உளம் எத்தகையதாய்ப் பயிற்சி செய்யப்பட்டுள்ளதோ அம்மாதிரியே அவன் உலகத்தினரையும் மதிக்கிறான் என்பது காளிதாசன் உளம் என்றும் ஆட்டு மந்தையிடம் பழகியதின் பலனாக, அம்பிகையருள் கிட்டு முன் ராஜ குமாரத்தி ஆவலாய் அளித்த தாம்பூலத்தையும், பன்னீரையும் ஆட்டின் எச்சம், மூத்திரம் என்று நிராகரித்ததால் தெரிகிறதன்றோ?

 

ஒரு தவயோகி ஒரு நகரின் வெளிப்புறம் சாலையோரம் ஒரு விருக்ஷத்தின் அடியில் சயனித்தவண்ணம் நிஷ்டை புரிவதைக் கண்ணுற்று, அவ்வழியினூடே சென்ற ஒரு மதுபானப்பிரியன் தள்ளாடித் தட்டுத் தடுமாறி உளறியதாவது: “டேயப்பா! நானே நாலு மொந்தை என்னா இவன் எத்தனை போட்டானோ சாமி, சரியா சவமாட்ட சாஞ்சி னிக்கிறான்'' என்றான். பிறகு அவ்வழியே சென்ற ஒரு கள்வன் நம்மைப்போல் நல்ல பதுங்கி படுத்துக்கினுயிருக்கிறான். நல்ல கைக்காரனாட்டங்கீது'' என்று நினைத்துக்கொண்டே ஏகினன். பின், ஒரு ஞானி அந்நேரம் நகரப்பிரவேசம் செய்ய வரவும், யாரோ மனிதன் விழுந்துளனென்ற பச்சாதாபத்தால் அணுகி, அவர் அட யோகி என உணர்ந்து, அடி பணிந்தேகினான். இக் கதையில் அரவர் உளத்தின் உணர்ச்சியை நோக்கின் உளம்போல் உலகம் தோற்றம் என்பது கண்கூடாம்.

 

தரும புத்திரரையும், சுயோதனனையும் விளித்து, ஸ்ரீயப்பதியாகிய கிருஷ்ண பரமாத்மாவானவர், முறையே 'நீங்கள் உங்கள் தேசத்தில் சஞ்சாரஞ் செய்தாராய்ந்து, கெட்டமனிதர் பத்துப் பேர்களையும், நல்லவர்கள் பத்துப் பேர்களையும் அழைத்து வாருங்கள்'' என்றாக்கியாபித்தார். யுதி ஷ்டிர பூபதி உலகெலாம் திரிந்து மெய்சோர்ந்து காலியாய்க் கண்ணபிரான் முன்வந்து,'' ஐயனே! உலகில் உண்மையாய் ஆராய்ந்ததில் கெட்டவர்கள் என்று யாரையும் உரைக்க உளம் துணியவில்லை. பொய், கொலை, களவு, காமம், மதுபானமாகிய தீச்செயல் புரிவோனும், உண்மையில் குற்றவாளியாகத் தோற்றப்படவில்லை. ஏனெனில் அவர்கள் அஞ்ஞானத்திற் பட்டுத் தத்தளிக்கும் பேதைகள். உண்மை ஞானம் உண்டாக்குவது நம் கடமை. பஞ்ச மகா பாதகங்கள், மித்ர பிரா திரு துரோகங்கள் உண்மையாகிய ஞானக் கண் திறக்கப்பட்டால் நேரா; பாமர ஜனங்கள் இழிசெயலை இயற்றுகிறார்கள். ஆகையால், கடமையைச் செய்யாது அரச வம்சத்திலுதித்த நானே குற்றவாளி'' என்று கூறிக் கைகூப்பி நின்றார்.

 

வணங்கா முடிபடைத்த அரவக்கொடித் துரியோதனனோ கண்ணன் அந்தரங்கமாய் நல்ல மனிதர் பத்துப் பேரைத் தேடி கொண்டு வந்தால் அவர்களுதவியா லியற்றும் யாகத்தால் பஞ்சவரை யழிக்கலாம் என்று கூறியதை முற்றிலும் நம்பி, துரோக அவா பிடர் பிடித்துந்த வெகு சிரமப் பட்டுத் தேசமெங்கும் தேடிக் கடைசியில் தன்னெண்ணம் பலிக்கவில்லை என விசனித்து, கபட நாடகதாரியாகிய கார்வண்ணன் முன் நின்று "சுவாமி! உலகில் குற்ற மற்றவனே கிடையாது. எவ்வளவு நல்லவன் என்று உலகம் உரைத்தவனை நாடி விசாரிக்கின், கடைசியில் அவனிடமும் குற்றங்கள் காணப்படுகின்றன'' என்றானாம். நேயர்களே! கவனியுமின்! ஒரு விஷயம் நல்லதோ அல்லது கெட்டதோ என்பது அவரவர் மனோ நிலைமையைப் பொறுத்ததாகும். அவாவர் வாக்கின் நிகழ்ச்சியால் அவரவர் குணாகுணங்களை அறிகின்றனர் அறிஞர்.


      ''மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
      அனைத்தவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும்
      தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
      மாசின் மனத்தி னவர்'
                            (நீதிநெறி விளக்கம்.) என்ற

 

குமரகுருபர தேசிகர் வாக்குப்படி மாசற்ற உளத்தினருக்குத் தீயசெயல்களும், நற்கருமமாகத் தோற்றும். துவேஷ சித்தர்களுக்கு நற்கருமம் தீச் செயலாய்ப் பிரதி பலிப்பது தங்கள் "உளம் போல் உலகம்'' என்ற கூற்நாயிற்றன்றோ!

 

''சர்வவியாபி'' யில் சங்கையின்றி வரைந்த ஸ்ரீ மாஸ்கரின்ஹாஸ் உளமும், சர்வவியாபி ஆசிரியரின் மனமும் மேற்படி செய்யுளின் முதலடிக்கு உவமையன்றோ! கண்மூடிப் பால் பருகும் பூனையாய் வரைந்துள்ள சர்வவியாபி பிரசுரம் கண்ட பெரும்பாலர் 'ஆனந்தன்' சந்தா நேயர் யாவரும் சற்று சிரித்து அறியாமையின் கூற்றெனத் தருமரின் மனநிலையை அடைவர் என்பது நம் கொள்கை. "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருக் கக் காய் கவர்ந்தற்று' என்பதை, குற்றங் கூறும் குணவான்கள் மறுமுறை சிந்திக்க வேண்டிய தாவசியகம். இன்றேல் வீண் கால விரயம், சிரம நஷ்டம், இருதிறத்தின் அமைதிகுறைவு, ஒற்றுமைக்கு பங்கம் இவை நேரும். அருட் பெருஞ் செல்வன் அறிவை வளர்த்து அடியாரை ஆள்வானாக.


தா. கிருஷ்ணசாமி ஆசிரியன்,

போர்டு பாடசாலை, குரும்பேரி,

திருப்பத்தூர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - பிப்ரவரி ௴

 

 

   

 

No comments:

Post a Comment