Thursday, August 27, 2020

 

உலகம் வாழ்க!

(வித்வான். மு. வரதராசனுர் B. O. L.)

திரு. வி. க. தலைமையின் கீழ் பேசவேண்டும் என்று சொற்பொழிவாளர்கள் விரும்புவது வழக்கம். இலக்கியத் துறையிலும் சமயத்துறையிலும் அரசியல் துறையிலும் இவ்வாறு அவர் தலைமையின் கீழ் பேசுவதில் எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சி உண்டு. இரண்டு மூன்று நாள் நடக்கும் ஆண்டுவிழாப் போன்ற கூட்டங்களில் இருவர் மூவர் தலைவராக அமைவதும் உண்டு. அப்போது சொற்பொழிவாளர் பலரும் தம் பேச்சுத் திரு. வி.க. தலைவராக இருக்கும் நாளில் வரவேண்டும் என்று விழைந்து அதற்கு ஆன முயற்சியும் செய்வார்கள். மற்றத் தலைவர்கள் என்றால், சொற்பொழிவார்களுக்கு வெறுப்பும் மறுப்பும் தோன்றுவதே பெரும்பான்மை.

இதற்குக் காரணம் என்ன? வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் தலைமை ஏற்று நடத்தும் கூட்டங்களில் முடிவுரை அமைதியாக முடிவது அரிது. தலைவர்க்கும் சொற்பொழிவாளர்க்கும் இடையே சிறு குறும்போ பெரும் போரோ நிகழ்ந்து கூட்டம் முடிவுறும். கேட்டவற்றில் நல்லன எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள். குறும்பும் போருமே மனதில் குடி கொள்ளப்பெற்று மக்கள் வீடு நோக்குவார்கள்.

பேச்சாளர் யானையைத் தாம் நன்றாகக் கண்டதாகவும் அதை நான்கு உரல் என்று அறிந்ததாகவும் கூறுவார். தலைவர் தமக்கு அனுபவம் மிகுதி என்றும் யானையை இரண்டு முறம் என்று தெளிந்ததாகவும் கூறுவார். உரல் ஒரு கட்சியாகும். முறம் ஒரு கட்சி யாகும். முடிவுரை கட்சிப் போராகும். திரு.வி.க. தலைமைத்தொண்டு ஏற்றிருந்தால், “யானை என்றும்.... உரல் என்றும்... இவை போன்ற சிறந்த கருத்துக்களை என் நண்பர் உங்ளுக்குத் தெளிவாகவும் அழகாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார். அவருக்கு என் நன்றி உரித்தாகுக. அவரைப் போன்ற அறிஞர்கள் நீடூழி வாழ்ந்து இந்தத் தமிழ்நாட்டிற்குத்
தொண்டு செய்யவேண்டும்'' என்று முடிவுரையின் முடிவில் கூறிவிட்டுத் தனியே சொற்பொழிவாளருடன் பேசி மகிழ்வித்து ஊக்கமளிப்பார்.

தமிழ்நாட்டில் யானையை உரனாகவும் முறமாகவும் பார்க்கின்றவர்களே மிகப் பலர். யானையை யான்பாகப் பார்க்கும் அறிஞர் ஒரு சிலரே. அவர்களுள் திரு.வி.க. தலையானவர்.

தமிழ் நாட்டில் சாதிகள் பல; சமயங்கள் பல; அரசியல் கட்சிகள் பல; மொழிக்கட்சிகள் பல. இத்தகைய் நாட்டில் பிரிவுகளே பெருகி யிருத்தல் இயற்கையே அன்றோ? ஆனால் பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமை வேண்டுமா? வேண்டாமா? ஒற்றுமை யாரால் இயலும்? சாதிக் கண்ணும் சமயக் கண்ணும் கட்சிக் கண்ணும் கொண்டு பார்க்காமல், பொதுமைக் கண்டுகொண்டு யானையை யானையாகப் பார்க்க வல்லவர்கள் இந்த நாட்டிற்கு இப்போது தேவை.

வடநாட்டில் சமய உலகம் நிலைகலங்கித் தடுமாறினபோது தோன்றிய பெரியார் ஒருவர். அவரே இராமகிருஷ்ணர் என்பவர். அவர் சைவராக இருந்தார்; வைணவராக வாழ்ந்தார்; கிறிஸ்துவராகத் திகழ்ந்தார்; முகம்மதியராகப் பயின்றார்; இவ்வாறே மற்றச் சமயத் துறைகளிலும் புகுந்து பார்த்தார். 'வேறு படும் சமயமெல்லாம்!
புகுந்து பார்த்த அவர், 'எல்லாம் பரம்பொருளின் விளையாட்டே' என்றும், 'மாறுபாடும் கருத்து ஒன்றும் இல்லை' என்றும் தெளிந்தார். ஒரு நாட்டு மக்களுக்கு இராமகிருஷ்ணர் போன்ற பொதுமைப் பெரியாரால் நன்மை விளையுமா? அல்லது, வேறுபாடுகளையே பெருக்கிச் சமயங்களின் பெயரால் கொலையும் கொள்ளையும் குழப்பமும் குருதி வெள்ளமும் காணும் மற்றத் தலைவர்களால் நன்மை விளையுமா? உண்மையை யார் அறிதல் கூடும்? சுத்த சைவமும் வீரவைணவமும் தேங்கிய கிறிஸ்தவமும் அழுந்திய முகம்மதியமும் புதைந்த பௌத்தமும் உண்மை காணல் இயலுமோ? இய்லாது, இயலாது.
பொதுமை வேட்கையுற்ற உள்ளமே-சுத்தம் வீரம் அழுத்தம் ஆர்வம் என்று செருக்கித் தேக்க மடையாத உள்ளமே உண்மை உணர வல்லது.

திரு.வி.க. சமய உலகில் மட்டுமன்றி, கலை உலகிலும் அரசியல் உலகிலும் பறவற்றிலும் பொதுமை காணும் பெரியார். ஒரு துறையில் வாழ்நாள் முழுதும் தேங்கிக் கிடக்க அவரால் இயலாது. பல துறையிலும் பரந்து வாழ்ந்து வளர்ந்து ஓங்குவதே அவர் பண்பு. ஒரு துறையில் தேங்கிக் கிடப்பவர் அவர் இயல்பை அறிதல் அரிதே. குறுகிய மனப்பான்மை விரிந்த மனப்பான்மையை அறிதல் முடியுமோ?

ஒரு நாடு அல்லது மொழி அல்லது சமூகத்கின் பிற்போக்குக்குக் குறுகிய மனப்பான்மையே காரணம்; முன்னேற்றத்திற்கு விரிந்த மனப்பான்மையே காரணம். இது மறுக்கப்படாத உண்மை. தமிழ்நாட்டின் அரசியலில் குறுகிய மனப்பான்மையே செல்வாக்குப் பெற்றிருக்கின்றது; மொழியுலகத்திலும் அவ்வாறே; பிற துறையிலும் அவ்வாறே. அங்கங்கே சிலர் தோன்றி; தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்கின்றார்கள்.

எல்லாவற்றிலும் உயர்ந்த அரசியல் கொள்கையாகிய பொது வுடைமையைப் பற்றித் திரு. வி. க. விரிவாகப் பேசுவார். கார்ல் மார்க்ஸ் முதலான அறிஞர்களும் கூறாத புதுப்புது உண்மைகள் அவர் பேச்சில் காணலாம். திட்டுதல் இல்லாமல் வெட்டுதல் இல்லாமல் உயர்ந்த உணர்வை எல்லாருக்கும் ஊட்டுவார். அவருடைய அரசியல் பேச்சு வாய்வீரமாக இருக்காது.

சிறந்த இலக்கியத்தைப்பற்றித் திரு.வி.க. பேசும் முறைதனிச் சிறப்புடையது. மற்றவர்கள் வெறும் பதவுரையோ பொழிப்புரையோ கூறுவார்கள்; அல்லது நயம் நயம் என்று சொல்லி வீண் கதை பேசுவார்கள்; அல்லது ஒரு தொடர்பும் இல்லாமல் தங்கள் பெருமையைச் சாற்றியோ பிறர் குறையைச் சொல்லியோ சொற்பொழிவுக் காலத்தைக் கழித்து விடுவார்கள். தவறி நன்றாகப் பேசினாலும் தாங்கள் பாடம் கேட்டு அறிந்த கருத்துக்களைப் பல ஆண்டுகளாகப் பேசியவாறே பாடும் பெட்டி போல் பேசுவார்கள். கேட்டவர் பலருக்கு முக்காற் பகுதி விளங்காது. ஆயினும், கோயிலிலும் வீட்டுச் சடங்குகளிலும் மந்திரங்களை ஒலிக்கக் கேட்டபின் மகிழ்வதுபோல் மகிழ்வார்கள். "என்ன
என்னவோ பேசினார். அப்பா! என்ன திறமை! மூச்சு விடாமல் பேசினாரே! நிறையப் படித்திருக்கிறாரே" என்று பேசிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்கள். திரு. வி. க. பேச்சில்-சிறந்த இலக்கியப்பேச்சே ஆயினும் செந்தமிழ்ச் சொற்களை இடையிடையே எடுத்தாண்டார் எனினும் - விளங்காத பகுதி இல்லை. எல்லோருக்கும் அரிய விருந்தாக உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறுவார். அவர் பேச்சில் வெறும் பாட்டும் உரையுமே அல்லாமல், பண்டைக்கால அரசியல், இக்கால முறை, நாகரிக இயல்பு, சமூக இயல், கைத்தொழில் வளர்ச்சி, கலை வளர்ச்சி, பொருளியல், மனவியல், அறிவியல், சீன நாட்டுக் கன்பூஷியஸ் முதல் மேற்கு நாட்டுக் காண்ட் வரையுள்ள பண்டை அறிஞர்கள் ஆராய்ச்சி, எச்.ஜி. வெல்ஸ், பெர்னாட்ஷா முதலான இக்கால அறிஞர்கள் கருத்துக்கள், மேடம் பிளாவட்ஸ்கி முதலான ஆத்திகர் கொள்கைகளுமாகிய புதுமைகள் - என்னும் இவை யெல்லாம் திரு.வி.க. பேச்சில் செறிந்த செல்வங்களாகும். இவற்றைக் கேட்ட அறிஞரும் அறியாதாரும் கூட்டம் முடிந்தவுடன் நேராக வீட்டுக்குச் செல்ல மனமின்றி, அவரைச் சூழ்ந்து மேலும் பல வினவுவர்; அறிய முயலுவர். இவ்வாறு இவர் தமக்கு, இயல்பான அறிவு வேட்கையைப் பிறரிடத்திலும் தூண்டுவார். அவர்கள் மேலும் மேலும் அறிய விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் அவர் பேச்சை வெறுத்துப் புழுங்குவார்கள். அவர்கள் வெறுப்புக்குக் காரணம் வேறொன்றும் இல்லை; பொறாமையே. "இலக்கியப் பேச்சில் நயம் சொல்லாமல், இது என்ன? அது என்ன? அரசியல் என்? அறிவியல் ஏன்? பாட்டுத் தெரியாவிட்டால் வீண் பேச்சுப் பேசத் தெரிந்துகொண்டு, புலவர்கள் என்று வந்து விடுகிறார்கள்" என்று அந்தச் சிலர் முணு முணுப்பர்! அந்தோ! இலக்கியத்திற் போல வாழ்க்கையின் ஆராய்ச்சியே இலக்கியம் என்பது தெளியார்!

செய்யுள் இயற்றவல்ல பலர்க்கு உரை நடை எழுதும் வன்மை அமைவதில்லை. உரைநடை எழுதவல்ல சிலர்க்குப் பாட்டு அமைவதில்லை. செய்யுளுக்கும் உரை நடைக்கும் உரிய இலக்கண நூல்களை யெல்லாம் துறைபோகக் கற்ற சிலர்க்கு ஒன்
றுமே எழுத வருவதில்லை. தப்பித் தவறி உரைநடை எழுதவும் செய்யுள் இயற்றவும் ஒருங்கே வன்மை பெற்ற சிலர் இருப்பின், அவர்களுக்குக் கூட்டத்தில் பேச வராது. பேசவல்ல சிலர்க்கு எழுதவும் வராது; செய்யுள் இயற்றவும் வராது. திரு.வி.க. எழுதவும் இயற்றவும் பேசவும் ஒருங்கே வல்லவர். அவர் எழுதிய தமிழ் நூல்கள் போல் பயன் மிகுந்த சிறந்த உரை நூல்கள் வேறு இல்லை. காலத்திற் கேற்ற புதிய கருத்துக்களை உயர்ந்த பாக்களாகப் பாடியுள்ள நாட்டுப்பாடல், முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், பொதுமை வேட்டல் முதலான பாடல்கள் பாடும் ஆற்றலைக் காட்டுகின்றன.

அவருடைய சொல்வன்மையைத் தமிழ்நாடு முப்பது ஆண்டுகளாக அறிந்து போற்றி வியந்திருக்கின்றது. அந்தத் துறையில் தான் நகர மக்களும் அவரை நன்முகத் தெரிந்து கொண்டிருக்கின்றார்கள். சென்னை நகர மூலை முடுக்குகளிலும் தென்னிந்தியாவின் பேரூர் சிற்றூர்களிலும் திரு.வி.க. தெரிந்தவரா யிருப்பதற்குக் காரணம் அவர் ஆற்றியுள்ள ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளே-எளிய உயர்ந்த சொற்பொழிவுகளே. எழுதவும் பாடவும் பேசவும் வல்ல இவருக்கு மற்றொரு பெருஞ் சிறப்பு உள்ளது. அதை நாடு என்று உணருமோ? திருவள்ளுவர், தாகூர், ஷேக்ஸ்பியர்போல் புதிது புதிதாக எண்ணும் ஆற்றல் இன்று இவரிடம் உள்ளது. அதுதான் ஒரு நாட்டை வாழ்விக்க வல்லது; ஒரு மொழியைப் போற்ற வல்லது; உலகத்தைக் காக்க வல்லது. உலகம் வாழ்க! திரு.வி.க. எண்ணம் வாழ்க!

ஆனந்த போதினி – 1943 ௵ - ஆகஸ்டு ௴

 



No comments:

Post a Comment