Wednesday, August 26, 2020

ஆள்வாரா  ஆழ்வாரா

ஒவ்வொரு மொழியிலும் காணக்கிடப்பனவாய சொற்கள் தொன்றுதொட்டே வழக்கில் இருந்து வருவனவாகும். அவற்றுள், பெரும்பாலனவம் மொழி தோன்றுங் காலத்துளவானவும் சிறுபான்மைய பின்னர்த் தோன்றியனவுமாம். காலந்தோறும் பொருள்கட் கேற்ற சொல் அமையா வழியும் பலபாடை மாக்கள் ஓரிடத்துத் தொக்தழியும் புதுவன வாய்த் தோன்றும் சொற்களும் உள. அவை, 'கடி சொல்லில்லை காலத்துப்படினே' என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திரத்தான் அமைவன. இங்ஙனம் வழங்கி வரும் சொற்குழுவினை வடிவு திரித்து வழங்குதலும் உண்டு. வடிவு திரியப் பெறினும் பொருள் பெரும்பாலும் வேறுபட்டு நிகழாது. பொருள் வேறுபடின், அத்தகையன பல பொருளொரு சொல்லாய்ப் பேணப்படும் இலக்கணத்தவாம்.

 

இப்பெற்றிமை உணராதார் பலரும் இக்காலத்து நூல் செய்ய முன்வந்து பெரிதும் மொழிகளை இழுக்குறச் செய்கின்றனர். பத்திரிகைகட்குக் கட்டுரை வரைவோர் பலரும மொழிகளின் கண் பரந்த பயிற்சியின்றியே சிறிது சொற்களை ஒருங்கு திரட்டக் கற்றவக்கண்ணே தம் கைவந்தனவற்றை எழுதி உய்க்கின்றனர். பயில்வார் பலரும் மொழிவல்லுந ரன்மையான், அவரது போலியுரையை மெய்யெனக் கொள்கின்றனர். அங்ஙனம் கோடலான் சொற்களின் மெய்ம்மை இதுவென உணராது தவறுபட உணர்வாராகின்றனர். இதனான் வரும் இழுக்குப் பெரிதா மென்க. பத்திரிகை நடாத்துவோர் இதன்கண் கருத்துடையராய் இருப்பின், மொழிகள் பெரிதும் தூய்மையுற்று மிளிரும் என்பதன்கண் ஐயப்பாடு இன்றாகும்.

 

சிலர், ஆழ்வார்' என்னும் சொல்லை 'ஆள்வார்' என எழுதி வருகின்றனர். 'சோழன்' என்னுஞ் சொல்லைச் சோளன்' என்று எழுதி வருவது போன்று ஆழ்வார்' என்பது ஆள்வார்" எனவும் எழுதப் படலாம் என் சிலர் கருதுகின்றனர். 'சோழன்' என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் 'ழ' கர மின்மையால் 'சோளன்' என எழுதப்பட்டு வருகின்ற நுணுக்கம் உணராது பன்னெறியிற் பிதற்றுதற்கு மருந்து காணேம். சிலர், 'சோளன்' என்பது வடசொல் எனவும் அதனைத் தமிழர் 'சோழன்' என எழுதி வருகின்றனர் எனவும் கூறுப. அது முடிவு போகாமை, ‘வழங்குவ துள் வீழ்ந்தக் கண்ணும்' என்னும் குறளின் குறிப்பில்,

'தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற் போலப்
படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்.'

 

எனப் பரிமேலழகர் கூறினமையான் அவ்வரசர் மூவரும் தொல்லைத் தமிழ் நாட்டுக் குடி யினரென்பது பெறப்படலானும் அவர் தமிழ்க்குடியின ராகலான் குடிப்பெயர் வட சொல்லாதல் இயைபு படாமையானும், தென்னாட்டுக் குடிகளாய அவர் பெயரை வடமொழியாளரும் அங்ஙனமே கொண்டு தம்மொழிக்கு இயைபுற எழுதியும் இசைத்தும் வந்தன ரென்பதற்கே இடர்தருகின்றமையானும் அறியப்படும். இனிப் 'பிரவாளம்' என்னும் வடசொல் தமிழில் 'பவழம்' எனத் திரிந்து வரும். இன்னோரன்னவற்றை ஆயாது தனித் தமிழ்ச் சொற்களை வடசொல் எனக் கூறலுற்று இடர்ப்படுவது ஏற்றுக் காங்கொல்?

 

எனவே, 'சோழன்' என்னும் சொல் தமிழில் 'சோளன்' என எழுதுவது வழு வென்க. அற்றேல், சோளன் என்பது வடமொழியில் வாழுவாகாதவா றென்னையெனின், ஒவ்வோர் பாடைக்கும் இலக்கணம் சிற்சில வேறுபாடு உடையனவாய் நடத்தல் இயல்பாகலன், தமிழ்ச்சொல் வடமொழியில் புகுந்து வழங்கு போழ்து வடமொழிக்கேற்ற இயல்புகளைப் பெறுதல் அமையற்பால தாகலின் வழுவன்றாம். நிற்க.

 

'ஆழ்வார்' என்னும் சொல்லும் வடமொழியைத் தற்போது பெரிதும் பின்பற்றி நிற்கும் மலையாள மொழியில் ஆள்வார் என எழுதப்பட்டு வருதலுமுண்டு. ஆயினும் ஆளுவோர் என்றோ ஆளப்படுவோர் என்றோ பொருள் படாது ஆழ்வார் என்னும் சொல்லிற்குரிய பொருளையே பெறும். ஒரு பொருளை எக் கோலப்படுத்தினும் அப்பொருள் மாறுபடாத் தன்மை போல இன்னோரன்ன திரிபுகளாற் சொற்கள் பொருள் வேறுபடா என் றுணர்க. சொல்லின் வடிவு நோக்கிப் பொருளைத் தரித்துரைப்பின், பிறிதொரு சொல்லாகவே கருதப்படுவதாம். ஒரு சொல் பிறிதொரு நெறியிற்றிரிந்து நிகழுமிடத்துப் பொருளையும் திரித்துரைத்தல் வழக்காறு மன்றாம் என்க.

 

மலையாள மொழியில் 'ழ' கரம் இருப்பவும், ஆழ்வார் ஆள்வார் எனவும், தமிழ் தமிள் எனவும் புகழ் இதழ் என்பன புகள் இதள் எனவும் எழுகப் பட்டு வருகின்றன. இவையன்றி இருந்தவாறே எழுதவதும் உண்டு. மலை மொழியார் தமிழ் இலக்கணமும் வடமொழி இலக்கணமும் தழுவுவராகலின் இவ்வாறு எழுதப்படுவது அவர்க்கு வழுவன்றாயிற்றேனும், உரிய எழுத்திருப்பவும் இந்நயங்கோடல் ஒருவாற்றான் தம்மொழியின் சிறப்பைக் கெடுப்பதேயாமன்றிப் பிறிதென்னை?

 

'ஆழ்வார்' என்பது ஈசுவர பத்தியில் முழுகுபவர் என்றும் மனவொருமையில் அமிழ்பவர் என்றும் இறைவனது நல்லியல்புக களில் (கல்யானண குணங்களில்) முழுகுபவர் என்றும் பிறவாறாகவும் பொருள் படுதற் கியை புடைத்து. ஆழ் - பகுதி, வ- இடைநிலை; ஆர் - பலர் பால்விகுதி. ஆழ்தல் முழுகுதல் அமிழ்தல் என்னும் பொருட்டாகலின் அப்பொருள் பற்றி இடத்திற் கேற்றவாறு கொள்வதன்றி, முதனிலையை மாற்றிப் பொருள்கோடல் இயையாது என்க. ஆழ்வார் என்னுஞ் சொல் வைணவ சமயத்துப் பக்தர்களைச் சுட்டி நிற்கும் வழக்காறுடைத்து. 'கம்பநாட்டாழ்வார்' 'கருடாழ்வான்' முதலிய சொற்களை நோக்குக.

 

ஆயின், ஆள்வார்' என்பதையே ஆளப்படுவோர் என்னும் பொருளில் வழங்குவது இழுக்காமோ வெனின், இழுக்கன்ரேனும் அங்ஙனமொரு வழக்கின்றாம் என்க. புதியன புகுத்தலைவிடப் புதியன புகுதலே சிறப்பிற் றென்பது கருதியன்றோ 'புதியன புகுத்தலும்'
என்னாது 'புதியன புகுதலும்' என்று நன்னூலாரும் சூத்திரம் செய்தனர். புதியன புகுத்தலும் ஒரோ வழிக் கூடுமெனினும், பிறசொற்கள் கிடையா வழி அது பொருந்துவதன்றி முற்றோன்றிய சொல் தவறு என்று திருத்துவான் புகல்போலச் சொற்களைச் செருகுதல் வேண்டா செயலாம். ஆழ்வார் என்னும் அழகிய சொற்கிடைப்ப ஆள்வார் என எழுதின் அதனையும் திருத்தி வரும் வழக்கு எழிலின்றாம். அங்ஙனம் செய்யப்புகின் தற்போதுள்ள சொற்கள் அனைத்தையும் நீக்கிப் புதுச்சொற்களைக் கொணரவும் முயலலாகும். அது கருத்தன் றென்பதும் அவ்வாறு செய்வழி மொழி நிலைபேறின்றி வரம்பிறக்கு மென்பதும் கருதி யன்றோ மரபு நிலைதிரியிற் பிறிது பிறிதாகும்' என்று தொல்காப்பியரும் கூறுவாராயினர்? ஆதலான், அது கடாவன் றென்க.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment