Wednesday, August 26, 2020

 

ஆனந்த சந்திரோதயம்

தொகுப்பு

தமிழாசிரியர் எஸ்.வி. வரதராஜையங்கார்

 

 

 

மாத இதழ்

1928 ஆகஸ்ட் யில் இருந்து 1930 மே வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

"பிரம்மானந்தம்' 5

'பக்தி ரஸம்' 5

'வித்தை இரண்டுவிதம்' 6

'பெறலாமே நல்வினையே' 6

'மனக் குரங்கு.. 6

'மனம் போலிருக்கும் மங்கிலியம்' 6

'அன்பில்லாத வழிபாடு.. 7

துணைக்கரங் கூப்பிக் கேண்மின் துகில்தனைத் தருவன்.. 7

"ஒரு கையால் வந்தனம்'' 8

"எரி எழகின்ற செம்பினாலியன்ற பாவையைப்பாவீ.. 8

"கபளே கபளே சைவ கர்த்தவ்யம் ஹரிகீர்த்தனம்'' 9

'பூனை கண்ணை மூடினால் பூலோகமே அஸ்தமித்துவிடுமா'' 10

''கஷ்டப்பட்டவனுக்குத் தெரியும் காசருமை'' 10

''அத்வைத மதம்'' 11

"அரசமரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாள்' 11

''ஆத்மாவின் தன்மை'' 11

"எதிலும் அந்தரார்த்தம் உண்டு" 12

''பசியுள்ளவன் ருசி அறியான்" 12

''நாயினுங் கடையேனுக்கு நல்லதவிசிட்டு.. 13

"அப்போதைக் கீப்போதே சொல்லிவைத்தேன்'' 14

"வாசத்திற் பெரியது விசுவாசம்.. 14

"பக்தர்கள் பெருமை பார்க்க அருமை....... 14

'உலகம் பலவிதம்' 15

"சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை....... 16

''நல்லது கண்டாற் பெரியோர் நாயகனுக்கு என்று அதனை நல்தவார்'' 16

"மழைவிட்டும் தூவானம் விடவில்லை'' 17

'நாய்காணிற் கற்காணாவாறு' 17

"பாபிகளே பாகியவான்கள்'' 18

'பஞ்சேந்திரியங்கள்.. 19

"யானை வாயிற் போன கரும்பு திரும்பி வருமா.... 20

"கூரைமேல் சோற்றைப் போட்டால் எத்தனையோ காக்காய்.. 21

"பொறுத்தவர் பூமி யாள்வார்'' 23

"குணம் செத்தால் போகும்; ரூபம் சுட்டால் போகும்'' 23

''எங்கும் நிறைகின்ற பொருளே'' 24

'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' 25

"இதென்ன பிரம்ம வித்தையோ?'' 26

"நல்ல புல்லும் நாவரணைப் புல்லும்.. 26

"மனமென்னும் மாடு.. 27

''மனிதனும் மிருக சுபாவமும்'' 28

''அசட்டுக்கு ஐங்கலக்காமம்.. 29

''சேஷ்டையின்றிப் பிரதிஷ்டை யில்லை." 29

''நாய் குரைத்து நத்தம் பாழாகுமா? 30

"என் செய்வான் தோன்றினேனே...... 31

"வேண்டு போ தழவாள் சிரிப்பாள் விலைமாது.. 32

''பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் கொள்பவன் பித்தன்.. 32

"கோபத்தை விட்டவன் தவலய மாள்வான்.. 33

"விருப்பும் வெறுப்பும்.. 33

''வானுளான் காணாய் நீ மாளா வாழ்கின்றயே..... 34

"நின்னது குற்றம் உளதோ? 35

"ராஜரிஷி ஜனகர்.'' 35

"மாளா வாழ்கின்றயே..... 36

''ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே'' 37

"உலகம் மெய்யா? அல்லது பொய்யா?" 38

"பெண்டிரை நடத்தும் விதம்'' 39

சொன்னதைக் கேளாதான் சுகம்பெற மாட்டான்.. 39

அழையா வீட்டில் நுழையா விருந்து'' 41

ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்' 41

ஞானமில்லாத ஜன்மம் வீணே. 42

"கொக்கிற்கு ஒரே மதி" 42

"மையும் ஆமையும்" 43

"வளர்த்த கடா மார்பிலே பாயும்.. 43

"அரசமரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்'' 45

"மறந்து தொட்டாலும் நெருப்பு சுடும்'' 46

"நம்பாதவன் நஷ்ட மடைவான்.. 47

"புத்திமான் புரிய வேண்டிய வேலை....... 48

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 49

 


 

ஆனந்த சந்திரோதயம்

"பிரம்மானந்தம்' - ஆனந்தத்தை யடைய விரும்பாத ஜீவகோடிகள் எங்குமே யில்லை. மனமொப்பிச் செய்யும் ஒன்றிலிருந்து அடையும் இன்பத்தால் எழுவது ஆனந்தம். தான் விரும்பியதை அடைந்து அனுபவித்தலே இன்பம். அவ்வின்பம், சிற்றின்பம் பேரின்பமென இருதிறப்படும். சிற்றின்ப நுகர்ச்சிகளால் எய்துவது ஆனந்தமே யாயினும் அது நம்மை அந்தகாரத்திலாழ்த்தி அடிமைப்படுத்தி விடுகின்றது. பேரின்பமானது என்றும் நிரந்தரமான ஆனந்தத்தை நல்கி சாஸ்வத பதவியை அடைவிக்கின்றது. அதுவே பிரம்மானந்தமாகும். கேவல உலக இன்பங்களில் மனம் சிறிது உழன்று மாயையான போலிச்சுகத்தை யனுபவித்த காலத்திலும், 'ஆகா! பிரம்மானந்தமாயிருந்தது' என்கிறோம் நாம். இதனால் பிரம்மானந்த நிலையே பேரின்ப நிலையென்பது பெறப்படும். அவ்வானந்தம் விவேகத்தாலடையப்படும் பொழுது, 'விவேகானந்த' மென்றும், ஞானத்தால் கைவரப் பெறுங்கால், ஞானானந்த' மென்றும், ஆன்மாவின் நிஜ சொரூபத்தை யறிவதனால், 'சொரூபானந்த' மென்றும், என்றும் ஈஸ்வர சிந்தையுற்றிருப்பதால், 'நித்யானந்த' மென்றும்,சதாகாலமும் சர்வேஸ்வரனை பஜிப்பதால், 'சதானந்த' மென்றும், பிராணிகளிடத்துத் தயையுடன் விளங்குவதால், தயானந்த' மென்றும், மாநில மாயைகளிடம் போர் தொடங்கி வெற்றி கொண்டிலங்குவதால், நிற்பயானந்த' மென்றும், பிரம்மானுபூதியில் சித்திபெறுவதால், 'தேஜோமயானந்த' மென்றும், மனம் வாக்கு காயங்களால் சத்கர்மாக்களைப் புரிந்து இலங்குவதால், 'சர்வபரிபூரண அகண்டானந்த' மென்றும் பரம பகவத் பக்த சிரோமணிகளாலடையப்படுகின்றது. இவ்வானந்தமாகிய சந்திரன் மனிதரின் மனத்தகத்தே உதயமாகித் தனது பூரண கலைகளுடன் பிரகாசிப்பதால் முக்தியை யடைவது திண்ண ம்.

 

'பக்தி ரஸம்' - ஈஸ்வர பக்தி யில்லாமல் மோக்ஷ சாம்ராஜ்யம் லபிக்கமாட்டாது. எவ்விதம் இறைவனை பக்தி செய்யலாமென்பதைப் பெரியோர்கள் நிரூபித்துள்ளார்கள். பக்தி, சாந்தி, தாஸ்யம், சக்கியம், வாத்ஸல்யம், மாதுரியம் என ஐந்து வகைப்படும். சாந்திரஸம் பக்தியின் பிரதம சோபானமாகும். சாந்த மேற்படும் வரையில் பக்தி தோன்றுகிறதில்லை. சாந்திரஸத்தில் ஈஸ்வரனிடத்தில் பரிபூர்ண நம்பிக்கையும், சமுசார வாசனைகளில் வெறுப்பும் பொருந்தியிருக்கும். சாந்திரஸ பக்தனுக்கு ஈஸ்வரனிடத்தில் மமதை மட்டு மிராது. ஈஸ்வர சொரூபஞானம் மட்டும் அவனிடத்துண்டு. தாஸ்ய பக்தனுக்கு உள்ளத்தில் மமதை மட்டும் ஏற்படும்; அவன் பகவானை சேவ்யன் என்றும், தன்னைச் சேவகனென்றும் உறுதிபூண்டு அளவிலாக் கௌரவம் பாராட்டி பகவானுக்குச் சேவை செய்வான் சக்கிய மென்பது சோழமை. சக்கி பரஸ பக்தன கௌரவ பாவங்கள் ஒழிந்தவனாய், ஜீவாத்மாகக ளல்லாம் சமமென பாவத்துடன், ஈஸ்வரனிடத்தில் பரிபூரண விசுவாசமுடையவனாய், அவரோடு போராடி, பிரேமையால் வாது செய்து, அபிமானத்தால் களிப்பித்து பக்தி செய்வான். அவனுக்கு ஈஸ்வரனைத் தவிர வேறெப் பொருளும் உயர்ந்ததாகத் தோன்றாது. வாத்ஸல்ய பக்தன் பகவானைத் தனது புத்திரனெனப் பாராட்டி பிரேமை கொள்வான்; நீராட்டல் ஆடை உடுப்பித்தல், உணவூட்டல், தாலாட்டுதல், தூங்குவித்தல் முதலான குழந்தைக்குச் செய்தற்குரிய உபசாரங்களனைத்தையும் பகவானுக்கு அன்புடன் செய்து ஆனந்தமடைவான். மதுராஸ பக்தன் நாயகி எங்ஙனம் தன்நாயகனையேயன்றி வேறெவரையும் சிந்திக்கவும் மாட்டாளோ, அதேபோல பகவானைத் தவிர வேறு யாரையும் நினைக்கமாட்டான். இவனே பகவானுக்கு ஆத்மநிவேதனஞ் செய்தவனாவான்.

 

'வித்தை இரண்டுவிதம்' - பரலித்தை, அபரவித்தையென்று வித்தை இரண்டு விதப்படும். இவற்றுள் பரவித்தையே சிறந்தது. இருக்கு, எஜூர், சாம, அதர்வண வேதங்கள், உச்சரிப்பைப் பற்றிய, சிக்ஷா'சாஸ்திரம், கல்பம், வியாகரணம், தர்க்கம், நிருக்தம், காவியம், வான சாஸ்திரம் முதலியவர்றைக் கற்பதே அபரவித்தையாகும். பிரம்மஞான நூல்களைக் கற்பதே பரவித்தையெனப்படும். பரபக்தியின் இலக்கணம் தேவீபாகவதத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: "ஒரு பாத்திரத்திலுள்ள எண்ணெய் இடைவிடாமல் வேறொரு பாத்திரத்தில் சொரியுந் தன்மை போல் எப்பொழுதும் பகவானிடத்தில் பக்தி செலுத்துவதே பரபக்தியாம்.'' இதுபோல மனதையும், ஹிருதயத்தையும் பகவானிடத்திலேயே எக்காலமும் செலுத்துவது சிறந்த பக்தியாகும் - - விவேகானந்தர்.

 

'பெறலாமே நல்வினையே' - என்றார் திருஞான சம்பந்த சுவாமிகள். ஏ பாழும் மனமே! உனக்கோர் நன்மொழி கூறுவன்; கேள்; நீ தினந்தோறும் சர்வேஸ்வரனுடைய திவ்யநாமங்களையன்றி வேறெதையும் நினையாதே. இறக்கும் நாளையும், இனி வாழுங்காலத்தையும் வரையறுத்துக் கண்டார் யார்? ஆதலின், எம்பெருமானுக்கு உன்னுடைய சிரம் நாள் தோறும் மலர்களைச் சுமக்க, அவருடைய திவ்ய நாமங்களைச் செவிகள் கேட்ப நாவானது அவரை இரங்கிப் போற்ற நீ நல்வினையை யடையலாம். இதனை விடச் சுலபமான வழி உனக்கு வேறு ஏதுளது? இதனைக் கடைப்பிடி.

 

‘மனக் குரங்கு - எங்கும் பரிபூரணமாய் நிறைந்து விளங்குபவனே! பிரம்மகபாலத்தைக் காத்தலேந்திப் பிச்சை யெடுக்கும் பெருமானே! எனது மனமென்னுங் குரங்கானது, சதாகாலமும் மாதர்களின் தனங்களென்னும் மலையின் மீது நடனஞ் செய்து கொண்டும், மனைவி மகளென்னும் மரக்கிளைகளின் மீது திரிந்து கொண்டும், மோகமென்னும் காட்டில் அலைந்து கொண்டுமிருக்கிறது. இவ்விதம் சித்தம் போன போக்கெல்லாம் அலைந்து கொண்டிருக்கும் என் மனமென்னும் குரங்கை, உறுதியாக உனது பாதாரவிந்த பக்தியென்னும் கயிற்றால் பிணித்து உனது சொற்படி ஆடுமாறு செய்து கொண்டால், உனக்குப் பிச்சை அதிகமாகக் கிடைக்குமன்றோ? ஆதலால், ஏழையேன் மீது இரங்கி என் மனக் குரங்கை உன் வசத்தில் வைத்துக்கொண்டு என்னை பந்தத்திலிருந்து விடுவிக்கக்கடவாய் - - ஸ்ரீ சங்கரர்.

 

'மனம் போலிருக்கும் மங்கிலியம்' - என்பதோர் பழமொழி. இதனைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஒருவனுடைய செய்கைகள் எல்லாவற்றிற்கும் அவனது மனந்தான் காரணமாயிருப்பது. ஒருவனை நாம் நல்லவனென்கின்றோம். அது எதனால்? அவன் மனம் நல்லதாயிருக்கின்றது. ஆகையால் அவன் நல்லவன். இதேபோல் ஒருவன் மனம் கெட்டதாயிருப்பதனால் அவனைக் கெட்டவனென்று சொல்லுகிறோம். ஒருவன் ஞானவானா யிருக்கிறான். அவனுடைய மனது ஞானத்தை நாடுகிறது. ஒருவனைப் புண்யவானென்பதும் அவன் மனமானது புண்யத்தையே புரிவதாற்றான். ஒருவன் பாபியாவதற்குக் காரணம் அவன் மனமானது பாபகிருத்தியங்களை நாடுவது தான். ஆகவே, எல்லாவற்றிற்கும் மனமே காரணமாகின்றது. ஆனது பற்றி எவனுடைய மனம் பகவானிடம் ஈடுபட்டிருக்கிறதோ அவனே பாக்கியவானாவான். அவனே பக்தசிரோமணி. அவனுக்கு எவ்வித யோகசாதனங்களும் தேவையில்லை. பகவானைத் தியானிப்பதால் சகல காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாமென்பதை இதனினின்றும் நாமறிகிறோம் - விவேகானந்தர்.

 

‘அன்பில்லாத வழிபாடு - உயிரில்லாத உடம்பு போன்றது. அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவரிடத்தில் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. பகவானிடத்து அன்புடைமைக்கு அறிகுறிகளாவன: அவருடைய திவ்யநாமங்களை நினைக்குந்தோறும், கேட்குந்தோறும், பரவசமாதலும், மயிர்ப்பொடிப் பெய்துதலும், ஆனந்த பாஷ்பஞ் சொரிதலும், விம்மலும், நாத்தழும் பேற வழுத்தலும், உரைதடுமாறுதலும், அவரால் விரும்பப்படுவனவற்றையே செய்து, அல்லன செய்யாதொழிதலும், அவருடைய மெய்யடியார்களைக் காணுந்தோறும் கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

 

“துணைக்கரங் கூப்பிக் கேண்மின் துகில்தனைத் தருவன்

கோபிகாஸ்திரீகள் யமுனையில், தத்தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு நிருவாணமாக ஜலக்கிரீடையாடலாயினர். அது காலை கோபிகாலோலனாகிய கிருஷ்ணபரமாத்மா ஆங்குற்று, அக்கோபியர்களின் ஆடைகளைக் கவர்ந்து கொண்டு, ஆங்கிருந்த புன்னை மரத்தின் மீதேறிக் கொண்டதைக் கவனியாதுநீர் விளையாடிய பெண்கள், ஜாக்கிரீடை முடிந்தபின் தத்தம் ஆடைகளைத் தேடிக் கரைக்கருகே வந்து, காணாராகி, மருண்டு அங்கு மிங்கும் பார்த்து, அச்சீரைகளுடன் புன்னை மரத்தின் மீதமர்ந்து வேணு கானஞ் செய்யுங் கண்ணபிரானைக் கண்டு, தமது ஆடையைத் தருமாறு வேண்ட, நிருவாணமாயிருக்கின்ற அக்கோபிகைகளைப் பார்த்துக் கண்ணன் 'துணைக்கரங் கூப்பிக் கேண்மின் துகில் தனைத்தருவன்' என்றார். இச்சம்பவத்தின் அந்தரார்த்தத்தை அறிகிலாதார் பலர் 'இதுவுங் கடவுள் செய்கையாமா? இவ்வாறு நடந்து கொண்டவரை நாம் கடவுளென்று எங்ஙனம் கூறலாம்? என்று கேலி செய்து, தூஷணைகளைக் கிளப்புகின்றனர். இதன் உள்ளுறை வேறு: கோபிகைகள் ஜீவான்மாக்கள்: புன்னை மரம் பரமபதம்; ஆடைகள் பாசபந்தம். இந்த பாசங்களை ஸ்ரீ கிருஷ்ணபகவான் கவர்ந்து, 'சாயுஜ்ய பதவியையடைய வாருங்கள்' என்றழைப்பதாகிய வேணுகானஞ் செய்தார். கோபிகா ஸ்திரீகளான ஜீவான்மாக்கள் கண்ணனை நோக்கி இரந்தனர். அப்பொழுது அவர், 'நீங்கள் ஒருகையால் மானத்தைக் காப்பாற்ற முயலுகின்றீர்கள்; அது ஆகாது, இத்தேகாபிமானத்தை விட்டாற்றான் மோக்ஷம் பிராப்தியாகும்; ஆதலின், உடலைப் பொறுத்த அபிமானத்தை விட்டு, என்னையே முற்றிலும் நம்பி இருகரங்களையும் கூப்பிக்கேளுங்கள்' என்றுபதேசித்தார். இதுதான் அதன் உட்கருத்தாகும். எப்படி ஒரு குயவன் தான் செய்த மண் பதுமைகளைப் பார்த்து மோகங் கொள்வதில்லையோ அதுபோன்றே ஜெகத்காரணரான ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா தாம் படைத்த இந்தக் கேவல மனிதசரீரத்தைக் கண்டு காதல் கொண்டாரென்பதில்லையாகும். இதனால் சரீராபிமான முள்ளவரை ஆன்மாவுக்கு முந்தி ஏற்படாதென்பது விளக்கமாம்.

''நீண்டானே! கரியானே! நிமலா!" என்று துரௌபதி துரியோதனன் அவையில் தனது துகில் அபகரிக்கப்பட்ட போது அரற்றினாள்; சோர்ந்தாள். அதற்கு முன் துரியோதனன் துகிலுரியத் தொடங்கிய போழ்து, முதலில் தன திருகரங்களாலும், பிறகு ஒரு கையாலும் தனது அரையாடையைப் பற்றிக் கொண்டு தபித்தாள். அப்பொழுது அவளுக்குச் சிறிது தேகாபிமான மிருந்தது; அவள் முற்றிலும் பகவானை ஸ்மரிக்கவில்லை. அப்பொழுது பகவானும் ஆங்கு வரவில்லை. அவளது அரையாடை அநேகமாக அபகரிக்கப்பட்டுத் தனக்கு மானபங்க மேற்பட்டு விடுமென்று அவள் மனமுறியும் அத்தருணத்தில் இரண்டு கைகளையும் ஆடையை அணைப்பதினின்று மெடுத்துக் கூப்பி ''ஹா! கிருஷ்ணா! துவாரகாவாஸா!'' என்று பதைபதைத்து அலறினாள். அக்கணமே அப்பன் அங்கு வந்துதவினார்; ''துரௌபதி! 'ஹாகிருஷ்ணா துவாரகா வாஸா' என்று அழைத்தமையால் நான் துவாரகையிலிருந்து வர இந்நேரமாயிற்று, 'ஹா கிருஷ்ண ஹிருதய கமல வாஸா!'என்றழைத்திருக்கக்கூடாதா?" என்று வினவினார். ஆகா! என்ன விநயம்! தேகாபிமானத்தை முற்றிலும் விட்டு, பகலானையே பரிபூரணமாய் நம்பி, அவனையன்றி வேறு துணையில்லையென்று அனவரதம் பக்தி செய்திருப்பார்க்கு, அவர்களைப் பலவிதத்திலும் சோதித்தாலும் சமயத்தில் அவர்களை இறைவன் கைவிடாது காக்கின்றார்.

 

"ஒரு கையால் வந்தனம்'' செய்வதாகாதென்பது ஆன்றோர் கொள்கை.
'சலாம்! குட் மார்னிங்' என்ற மதத்தினர் 'எண்சாண் உடம்பிற்குச் சிரசேபிரதானம்' என்றவாறு அவ்விதம் செய்கின்றனர். நாம் நமஸ்காரம் செய்கிறோம். அதாவது, உமது ஹிருதயகமலத்தில் நிவசிக்கும் பரமாத்மாவை நான் நமஸ்கரிக்கின்றேன்; எனது மார்பிலும் அவன் நிலைகொண்டுளான்' என்னுந் தத்துவத்தை நாம் அடிக்கடி உணருவதற்கு இவ்வனுஷ்டானம் ஏற்பட்டதாகும். நமது ஆசாரத்தை விட்டு, பிறமதத்தினர் கொள்கையைநாம் பின்பற்றி ஒற்றைக்கை வந்தனஞ் செய்வதைப் பார்த்தால் சிலசமயம்' என்தலைவிதி' என்று தலையிலடித்துக் கொள்வது போலவும் இருக்கின்றது. இப்படியே ஒருகைவணக்க நவீனர்கள், பழக்கத்தால் ஆலயத்தின் முன் செல்லுங்காலங்களிலும் மெய்ம்மறந்து ஒரு கையைத் தூக்கி வணங்கிவிடுகின்றனர். அர்த்த புஷ்டியான நமது அனுஷ்டானங்களை நாம் கைவிடாதிருக்க அவனருள் ஏற்படக்கடவதாக.   
 

"எரி எழகின்ற செம்பினாலியன்ற பாவையைப்பாவீ!

தழவெனமொழிவதற்கஞ்சி நம்பனே வந்துன் திருவடியடைந்தேன்'' என்றார் திருமங்கை மன்னர். "வண்டுகள் மொய்க்கப் பெற்ற கூந்தலையுடைய தமது மனைவியைத் துக்கிக்கவிட்டு, பிறர் தனத்தையும் மனைவியாரையும் இச்சித்து, இம்மையில் பிணியையும் பழிப்பையு மடைந்து மறுமையில் இயமதூதர்களால் சிறை பிடிக்கப்பட்டு, வைவச்சுத பட்டணத்தை யடையுங்கால், இவனியற்றிய பாபகிருத்தியங்கட்குத் தண்டனையாக, தீயினால் பழுக்கக் காய்ச்சப் பெற்ற செம்பினாலாய பதுமையைத் தழுவுமாறு செய்வதற்குப் பயந்து நடுங்கி சர்வலோக சரண்யனே! நம்புவதற்குப் பாத்திரமானவனே! நைமிசாரண்யத்தி லெழுந்தருளியிருக்கும் நாயகனே! தாயனைய தண்ணளியானே! உன் திருவடிகளைச் சரணமென்றடைந்தேன்." என்பது இதன் பொருள். ஆதலின், பிறர் பொருளை இச்சித்தலும் பிறன் மனை விழைதலும் ஈண்டுமறுக்கப்பட்டதுடன், அவை சதமில்லை யென்வதையும் விளக்கி, சத்கர்மாக் களைச்செய்து பகவத் பக்தியி லீடுவட வேண்டுமென்பதும் வற்புறுத்தப்பட்டது.

 

"கபளே கபளே சைவ கர்த்தவ்யம் ஹரிகீர்த்தனம்'' அதாவது ஒவ்வொரு கவளமாகச் சோறுண்ணும் போதும் பகவந்நாம ஸ்மரணை செய்ய வேண்டுமென்பது. இதை, விவேகிகளாகிய நமது ஆன்றோர்கள் இத்யகர்மவிதிகளாகச் செய்து கர்மத்தை வற்புறுத்தியிருக்கிறார்கள். மனிதன் துயில்நீங்கும் போதே'' ஸ்ரீராமா! கிருஷ்ணா! சிவா!” என்று சொல்லிக் கொண்டே எழவேண்டும்; எழுந்தபின், அதிகாலையிலேயே 'கிருஷ்ணா, ராமா, கோவிந்தா' வென்று சொல்லிக்கொண்டு சமீபத்திலுள்ள புண்ய நதிகளுக்குச் சென்று ஈஸ்வரநாமத்தை ஸ்மரித்துக் கொண்டே ஸ்நானஞ் செய்ய வேண்டும்; அப்பால். ஜபதபங்கள் செய்யவேண்டும்; பிறகு வீடேகியதும் சிவ, விஷ்ணு பூஜை செய்து, பின்பு சமயாசார நூக்களைப் பாராயணஞ் செய்ய வேண்டும். பாராயணமானபின் உணவருந்தும் போதோ ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம், சிவார்ப்பணம்' என்று சொல்லி உண்ணவேண்டும். உண்டபின் சத்சங்கத்தில் ஆத்ம விசாரஞ் செய்ய வேண்டும்; பிறகு மாலையில் அந்தநீர்க்கடன் (சந்தியாவந்தனம்) அளித்து விட்டு, ஆலயங்களுக்குச் சென்று பகவானைத் தரிசித்துவிட்டு, ஒன்பாசனஞ்செய்து, பின்னர் இராப்போஜனங்கொள்ள வேண்டும். போஜனத்தின் பின் சத்காலக்ஷேபம்; - - அதாவது புண்ய கதைகளையோ புராண இதிகாசங்களையோ பிறர் சொல்லக் கேட்டுப் படுக்க வேண்டும். நித்திரைக்குச் செல்லுங்கால் இறைவனைத்து தித்துச் சயனிக்கவேண்டும். இம்மட்டோ? பசுவைக்கண்டால் பக்தியுடன் பூஜைசெய்யவேண்டும். அரசு, வில்வம் முதலிய மரங்களைக்கண்டால் வலம் வந்துவணங்கவேண்டும்; இதற்கு ஆதாரம் அரசமரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மாவும் இடைப்பாகத்தில் விஷ்ணுவும், மேற்பாகத்தில் சிவபெருமானும் வசிப்பதான ஐதீகம்; துளசிச் செடியைக் கண்டால் பிருந்தாவனத்தின் ஞாபகம், கோபுரங்களைக் காணுக்தொறும் 'கோபுரதரிசனம் பாபவிமோசனம்' என்ற வாக்கியப்படி நமஸ்காரம்; பெரியாரைக் கண்டால் அஞ்சலி பந்தம், 'குழந்தைகளைக்கண்டால் 'கண்ணா' என்று கிருஷ்ணபகவானெனப் பாராட்டி அழைக்கும் அன்பான வசனங்கள்; இவையன்றி சூர்யனைக் கண்டால் நமஸ்காரம்; கருடனைக் கண்டால் விஷ்ணுத்தியானம்; ரிஷபத்தைக் கண்டால் சிவஸ்தோத்திரம்; குரங்கைப் பார்த்தால் ஆஞ்சநேயனென்ற அபாரபக்தி; யானையைக் கண்டால் ஆதிமூலமே என்றழைத்த கஜேந்திரனைக் கணத்தில் வந்து காத்தஐயனின் எண்ணம்; மீன்களைப் பார்க்குங்கால் மச்சாவதார மகிமை; பன்றியைக்கண்டால் வராகாவதார வைபவம்; நாயைக்கண்டால் வைரவமூர்த்தியின் நாமஸ்மரணம். இங்கனம் எதையும் ஈஸ்வர பாவத்தில் வைத்து ஜீவகாருண்யம், ஈஸ்வர பக்தி, தயை முதலிய மோக்ஷசாதனங்களை நமது முன்னோர்கள் நம்மிடத்தில் இயற்கையாகவே ஜனிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய மஹோன்னத மகிமைகளையும், ஆசாரங்களின் அரிய பெருமைகளையும் நாம் மறந்து கைவிடாது, புறச்சமயப்புதரிலே விழுந்து மாயாது, விவேகிகளாய் ஆசாரங்களையும் மதானுஷ்டானங்களையும் உயிரினும் பெரிதென நம்பி, கர்மயோகிகளாகி - பக்தர்களாகத் திகழ்ந்து - ஞானிகளாய்ப் பிரகாசித்து ஈஸ்வரனது கருணைக்குப் பாத்திரர்களாகி முடிவில் முத்தி யின் பத்தை அடையக்கடவோம்.

 

'பூனை கண்ணை மூடினால் பூலோகமே அஸ்தமித்துவிடுமா'' கடவுள் இல்லை யென்று நாஸ்திகர்கள் வாய்மதம் பிடித்துப் பிதற்றினால் கடவுலில்லாமற் போய்விடுவரோ? தண்ணீரில் நாம் கண்ணாற் பார்க்கக்கூடாத பரமாணுக்கள் போன்ற கிருமிகளுள்ளன; ஜலத்தில் கிருமிகளே யில்லை யென்று அறியாமையால் சாதிப்போர் பூதக் கண்ணாடியாற் பார்த்து ஒப்புவது போல, அறநூல்களாகின்ற தூரதிருஷ்டிக் கண்ணாடியால் நமது ஊனக் கண்ணுக்குப் புலப்படாத கடவுளைக் கண்டு தரிசிக்கலாம். குருடன் எதிரிலுள்ள மனிதனைப் பார்க்க வியலாவிடில் அது கண்ணின் குற்றமேயன்றி முன்பாகவுள்ள அம்மனிதனின் குற்றமல்ல; அதுபோல இறைவனில்லை யென்பதற்கு நமது மனக்கண் பார்வை யிழந்திருப்பதே காரணமாகும். ஐம்புலன்களின் இயக்கமின்றேல் நாம் இன்பமடைய முடியாது. செவிடர்களால். ஈஸ்வர நாமத்தையும் சங்கீதத்தையும் கேட்டின்புற முடியாது. அதனால் பகவந்நாமமே இல்லை யென்றும் சங்கீத மென்பதே கிடையா தென்றும் புகலின் அது ஒக்குமோ? பித்த அதிகரிப்பால் தேம்பாகு கசப்பாயிருக்கிற தென்று ஒரு நோயாளி கூறின், அது. அவன் நாவின் குற்றமேயன்றி, தேம்பாகிற்குள்ள சுவை வேறு பாடல்லவே? அதுபோலவே, ஞானேந்திரியங்களை அகந்தை யென்னுந் திரையால் மறைத்து, எல்லாம் இயற்கை யென்றும் கடவுளென்பதே சூன்ய மென்றும் பேசித் திரிவதனால் இறைவனது திவ்ய அனந்த கல்யாண குணங்களையும், அவனை வழிபட்டு மோக்ஷப் பிரசாதிகளாகிய அடியார்களின் பெருமைகளையும் லட்சியம் செய்யாமல் சூன்யவாதஞ் செய்யுமவன் ஞான சூன்யனாகப். பிறவிப்பயனை எய்தா தொழிகின்றான். இதுபோலவே எல்லா விஷயங்களிலும் உண்மையை ஆராய்ந்தறியாது மதம் பிடித்தலைபவர் அந்தகார மென்னும் படுகுழியில் வீழ்வர். ஞானவான்கள் இம்மை மறுமை இன்பங்களை யெய்தி வாழ்வர்.

 

''கஷ்டப்பட்டவனுக்குத் தெரியும் காசருமை'' என்று நாம் அடிக்கடி சொல்லுவது வழக்கம். அதுபோல, காடுமலைகளிலெல்லாம் அல்லும் பகலும் அலைந்து திரிந்து, உணவின்றி உறக்கமின்றி தங்க இடமின்றி, புண்ய நதிகளில் நீராடி, திவ்ய தேசங்களைச் சுற்றி, அகற்ற ஒண்ணாத காம காஞ்சனம் (பெண் பொன்) ஆசைகளை வைராக்கிய மென்னும் ஓர் வாள் கொண்டு வீசி, சிவ நாமங்களை அனவரதம் துதித்துக் கொண்டு, மலைக்குகைகளில் தனித்துப்ப ல்காலமாய்த் தவமியற்றும் மகான்களைத் தரிசித்து ஞானோபதேசம் அடைந்து 'காணலாகும் நாதனைக் கடந்துநின்ற ஜ்யோதியைத்' தரிசித்த மகான்களுக்கே ஞான காண்டத்திலுள்ள கஷ்டம் தெரியுமேயன்றி 'கோவிலுக்குப் போனாற்றான் கடவுளா? மனத்தகத்தே அவன் விளங்கவில்லையா?' என்று வீண் வாசாஞானிகளாய்ப் பேசித்திரியும் மாந்தர்கள் அறிவரோ? பாடுபட்டுப் பைசாபைசாவாக இலக்ஷ ரூபா சேர்த்து வைத்தவனுக்குத்தான் காசருமை தெரியுமேயன்றி, மூதாதையர் ஈட்டிவைத்த பொருளை சுகவாசியாய் ஊதாரியாய்ச் செலவிடுகிறவனுக்கு அதன் பெருமை தெரியாது. வேத வேதாந்தங்களைப் படித்துப் பிரசங்கஞ் செய்வதால் மட்டும் பலன் கிடைத்து விடுவதில்லை. அம்மறைகளிலுள்ள ஒரு சொல்லின் பொருளையேனும் மெய் என்பேட்டும் தெரியும் செலவிடுயாக அனுபவித்தால் மட்டும் அந்த ஆனந்த நிலை இன்னதென்று புலப்படும். ஆதலின், பெரியோரைப் பழிக்காமல் ஆலய வழிபாட்டை அலட்சியம் பண்ணாமல், 'ஆலயம் புகுவது சாலவும் நன்றென்று கொண்டு அதனால் ஆத்மவளர்ச்சியும் மனத்தெளிவும் ஏற்படுமென்ற நம்பிக்கையுடன் நாம் இறைவனைவழுத்தி அடியார் மாட்டு அன்பு செலுத்துவோமாக.

''அத்வைத மதம்'' கடந்து நிற்றல் என்னும் பொருள்பட விளங்கும்
'கடவுள்' ஒருவரே உலக காரணராயும் இவ்வுலகமாயும் உள்ளவர். படைப்புத் தொழிலைப் புரிகின்றவரும் சிருஷ்டித் தொழில் செய்பவரும் சங்காரத் தொழில் செய்பவரும் அவரேயாவர். அவரே இவ்வுலகமு மாகின்றார். அத்வைதம் இங்ஙனமே கூறுகின்றது. நமது கட்புலனாலறியப்படும் உலகமென்பது உண்மையில்லை. உலகமும் அதனுள் நீ, நான், உனது, எனது என்பவை யாவும் பொய். இவையனைத்தும் மாயையின் தோற்றங்களே யாகும். ஒன்றே யுண்டு. அதுதான் கங்குல் பகலற நின்று ஞானிகளின் கருத்துக்கிசைந்த தன்மையது. அது அகண்டமானது; என்றும் நிலவுவது. இம்மாயை யுலகில் நாம் எத்தனையோ கனவுகள் காண்கின்றோம். இவ்வுலகமும் அத்தகையதே. ஆனால் சத்தியமானது அந்த சுத்தப் பரப்பிரம்ம மொன்றே. அதுவே வீடுவாசல், சூரிய சந்திரர், புஸ்தகம், பொருள், பூமியாகிய அனைத்துமாகும். பெயரும் வடிவமுமே பொருள்களுக்குப் பேதாபேதத்தைக் கற்பிப்பவை. சருக்கரை ஒன்றுதான்; ஆனால் அதனாற் செய்யப்படும் மிட்டாய்களுக்குப் பெயரும் உருவமும் வேறாயிருக்கின்றன. ஆகவே, நாமரூபங்களை அகற்றிப் பார்த்தால் பொருள் ஒன்று என்பது விளங்கும்.

 

“அரசமரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாள் என்று சொல்வது வழக்கம். அது போல எந்தக் காரியத்திலும் சிறிது முயன்று உடனே பெரும்பலனை எதிர்பார்ப்பது அறிவீனரின் செயல். ஒரு வேளை மருந்துண்டதும் நோய் நீங்க வில்லையே என்று குறை கூறுவது தகாது. சிலவியாதிகள் ஒரு வேளை மருந்தால் நீங்கும்; சில, பலநாட்களும் மாதங்களும் மருந்து சாப்பிட்டால் மட்டுமே அகலும். ஆதலின் பிணிபோம் வரை மருந்து கொள்பவனே புத்திசாலியாவான். ஆகையால், அறிவாளிகள் தமது ஆன்மாவிற் கேற்பட்டுள்ள அழுக்கும் பந்தமும் அகலும் வரை இடையறாது மனந்தளராமல் பாடுபடுகிறார்கள்; பலனெய்துகிறார்கள். மருந்தையும் வைத்தியரையும் அவசரப்பட்டு அடிக்கடி மாற்றுபவர் அநேகமாக குணமடைவதில்லை. அதுபோல அடியார்கள் பக்தி, ஞானம், கர்மம், யோகம் ஆகிய நான்கு வைத்தியர்களில் எவரை முதலில் துணையாகக் கொள்கிறார்களோ, அவர்களுதவியைக் கொண்டே முடிவு வரையிலும் முயலுகிறார்கள்; சில மருந்துகளுக்கு விரைவில் நோயைப் போக்கும் குணமுண்டு; சில நாட்போக்கில் நோயை நீக்கும்; ஆகவே மருந்துக்குப் பிணியைப் போக்குந் தன்மையுண்டு. அதுபோல கிறிஸ்தவ, வைண, சைவ, பௌத்த, முகம்மதியமாகிய எல்லாச் சமயங்களும் இறைவனை யெய்து விக்கும். ஆனால், ஒன்று விரைவிலும், ஒன்று காலக்கிரமத்திலும் அடையச் செய்யும். சில ஒளஷதங்கள் தித்திப்பா யிருக்கும்; சில கைக்கும்; சில துவர்க்கும்; அதுபோன்று சில சமய தர்மங்கள் கஷ்டமான முறைகளாக விருக்கும்; சில துன்பத்தின் முடிவான – எல்லையான இன்பத்தைத் தரும். ஆகையால், எதையும் தொடங்கியதும் பலனுக் காசைப்படாமல் நம்பிக்கையோடும் பொறுமையோடு மியற்றுபவர் நன்மையான பலனை யடைவது திண்ணம்.

 

''ஆத்மாவின் தன்மை'' ஆணுமன்று, பெண்ணுமல்ல, அலியுமாகாது. ஒவ்வொரு பொருளிலுமுள்ள நாமரூபங்களை நீக்கிப்பார். அப்போது அதன் அபேதநிலை புலனாம். 'நாற்காலி' என்ற பெயரையும் ரூபத்தையும் நீக்கிப்பார்த்தால் 'மரம்' என்னும் ஒன்றே விளங்கும். இப்படிப்பட்ட பேதம் தோன்றுவதற்கு மாயையே காரணமாகும். இவ்வாறு நாமரூபங்களைப் பிரித்துப் பார்த்தால் சகல பொருள்களும் ஒன்றேயென்று நன்றே யறியலாம். இரண்டென்னும் எண்ணமே அப்பொழுது நசித்துப் போய் விடும். ஆகவே ஆன்மா ஒன்றே யுண்டு. மற்ற ஊர்வன முதலிய யாவும் கனவின் பாற்பட்டவைகள். ஆதலால், நான் என்பதும் நீ என்பதும் ஒன்றே. இந்த ஞானம் கைவரப்பெற்ற விடத்து இவ்வுலக மென்பது அதன் பொருள்களோடு நசிக்கும். பிரம்ம மொன்றே யன்றி, ஏனைய சிருஷ்டியும் உலகமும் இலவாகும். நாம ரூபங்கள் யாவும் அப்பரப்பிரம்மத்தினின்றே உண்டாகின்றன; அங்கேயே முடிகின்றன. இவை ஞானிகளுக்கில்லை. நாம் நமது கண்களைக் கண்ணாடி கொண்டே பார்த்தல் போல, பரப்பிரம்மத்தை நாம் அதன் பிரதிபிம்பமாகிய உலகமென்ற கண்ணாடியால் உணரலாம். ஆனால் கண்ணாடியிற் காணப்படும் நமது கண்கள் உண்மையாகாவாறு போல பரப்பிரம்மத்தின் சத்தியத்தைக் காணுதற்கான இவ்வுலகமும் உண்மையன்று. அவ்வாறாயின் கண்ணாடியில் நாம் கண்களைக் கண்டது பொய்யா? என்ற வினாவெழும். இந்த உலகம் பொய்யே யொழிய அதை நாம் பார்ப்பது பொய்யன்று. ஆதலின் உலகம் பொய்யுமல்ல மெய்யுமன்று. அதை இன்னதென் றியம்பவும் முடியாது - அநிர்வசனீயம்' என்று ஆன்றோர் கூறுவர். ஆத்மா பரிசுத்தமானது. தூயகண்ணாடியில் பவ்வீயைப் பார்த்தால் பவ்வீயாகவே தோன்றும். அப்படித் தோன்றுவது கண்ணாடியின் குற்றமல்ல. ஆதலால், ஆத்மா ஒன்றேயாயினும் இயக்க வேறுபாட்டால் மனிதர்கள் தத்தம் கர்மானுஷ்டான வித்யாசத்தால் பற்பலவாறு காணப்படுகிறார்கள் - இது அத்வைத மதப்பிரதிஷ்டாபனரான ஸ்ரீசங்கரரின் ஆன்ம தத்துவோபதேசம்.

 

"எதிலும் அந்தரார்த்தம் உண்டு"’ ‘வேலன்' என்பது முருகக் கடவுளுக் குள்ள பெயர்களிலொன்று. அதாவது வேலைத் தன்கரத்தில் ஏந்தியவன் என்பது அப்பெயரின் பொருள். கூர்ந்து நோக்குமிடத்து உலகத்தைக் காத்தலாகிய வேலையைப் பூண்டு விளங்குபவன் என்ற உட்பொருள் அதில் தொனிக்கிறது. கண்ணனைச் சிசுபாலன் பன்முறை 'இடையன் 'என்றிகழ்ந்தான். அதற்கு பகவான் சிறிதும் கோபிக்கவில்லை; அதைப் போற்றுதலாகவே கொண்டார். ஏனெனில், அவர் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களில் இடைத்தொழில் புரிபவர்; பாண்டவர்க்கும் துரியோதனாதி யோர்க்கும் தூதுவனாக இடைத் தொழில் புரிந்தவர்; உலகத்து வாழும்மக்களின் உடம்பையும் உயிரையும் வளர்க்கும் பால், தயிர், நெய் முதலியவற்றைப் பெருக்கும் இடைத்தொழில் புரிவார் குலத்தின் கண் வளர்ந்தவர். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆதலின், உற்று நோக்கின் ஒரு சொல்லிற்கே பல பொருள்களுண்டு. ஞானிகள் உட்பொருளைக்கண்டு என்றும் ஆனந்திக்கிறார்கள். பேதைகள் மூடவாதம் செய்கிறார்கள்.

 

''பசியுள்ளவன் ருசி அறியான்" மிகுந்த பசியுள்ளவனுக்குத் தான் உண்ணும் பொருள்களின் ருசி முதலில் தெரிகிறதில்லை. ஆனால் பசியில்லாதவனுக்கோ 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங்கலந்து' வைத்தாலும் அவ்வுணவிற்கு அவன் ஒரு சொட்டுச் சொல்லாம லிருப்பதில்லை. பசித்தவன் உண்ட பின்னரே கறிக்குச் சிறிது உப்பு அதிகமா யிடப்பட்டிருந்தது' என்று கூறுவான். அதுபோலப் பராபர வித்தையில் ஆவலுள்ளவன் முதலில் யாவற்றையும் கற்றுணர்ந்து, பிறகு அவற்றுள் அருசியான பாகங்களை மட்டும் நீக்கிச் சாத்விஷயத்தைக் கிரகித்து இன்ப மடைகிறான். தாகவிடாய் கொண்டவன் தாக சாந்தியின் பொருட்டு சேறான தண்ணீரா யிருந்தாலும் அதனை முதலிற் பருகி விடுகிறான். ஆதலின் இவ்வுலகிற் பிறந்த எவரும் ஏதேனும் ஒரு மதத்தைக் கடைப் பிடித்தே தீரவேண்டும். அதுகிறிஸ்தவ மதமாயிருப்பினுஞ் சரி; ஹிந்து மதமாயிருப்பினுஞ் சரி; முகம்மதிய மதமாயிருப்பினும் சரியே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் விளங்குகிறார் என்ற ஐக்கிய பாவம் பாரமார்த்தீக தாபமுள்ளவனுக்கே உண்டாகிறது. அவன் மத்தூஷணை புரிவதில்லை.

 

''நாயினுங் கடையேனுக்கு நல்லதவிசிட்டு" என்று பக்தர்கள் தங்களைத் தாழ்த்திச் சொல்லிக் கொள்ளுவது வழக்கம். 'நான்' என்ற அகந்தை நீங்குவதற்கு இது ஓர் முக்கிய சாதனமாகும். அகந்தை அந்தகாரத்தி லழுத்தி விடுமாதலின் பக்தர்கள் எப்பொழுதும் அடியேன்' என்று சொல்லிய வண்ணம் அடங்கிய தன்மையை பழக்கத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள். பக்தியானது பரபக்தி என்றும், அபரபக்தி யென்றும் இருவகைப்படும். பரபக்தியாவது நிஷ்காமிய பக்தி; அதாவது உலகப் பொருள்களிடத்து இச்சையொழித்து பகவானிடத்தில் எதையும் யாசியாது மோக்ஷ ப்ராப்தியை மட்டும் இரந்து நிற்றல். அபர பக்தியாவது காமிய பக்தி; தன தானியம், புத்திர பெளத்திரர்கள் முதலிய இக்சம்பத்துக்களை விரும்பி இருத்தல். இந்திரியங்களை வென்று, பற்றற்று பகவானையும் பற்றற்ற பரமென்று ஆஸ்ரயிக்கும் துறவிகள் பரபக்தியுடையவர்கள். அபர பக்தர்கள் கேவலம் பகவானிடத்து வர்த்தகம் புரிபவர்கள். ஒரு பக்தர் நாயினுங் கடையேன் என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் இன்னுமொரு விசேஷமுண்டு. நாயானது, தன் யஜமானன் தன்னை வெகு தொலைக்கப்பால் கொண்டு போய் விட்டாலும் அது திரும்ப வீட்டிற்கு வந்துவிடுகிறது; அடித்து இம்சித்தாலும் வாலைக் குழைத்து உறவாடுகிறது; அநேக விதமாக உடையுடுத்து நிற்கும் பலர் நிறைந்த கூட்டத்தில் தன் யஜமானனைக் கண்டு பிடித்து விடுகிறது; யஜமானனது வீட்டில் திருடர்கள் நுழையாவண்ணம் காக்கின்றது. அதுபோல பரமபக்தர்கள் அரம்பையென்னும் அணங்கை நிகர்த்த இளமங்கையின் முன் தாம் கொண்டு போகப்பட்டாலும் கூட அவர்கள் 'தாயே' என்று அவளுடைய காலில் விழுந்து நமஸ்கரிக்கின்றனர்; எவ்வளவு நிதி தமக்கு வருவதாயினும் நெறி தவறிச் செல்லாது தமது மனமாகிய கோயிலிலே வைத்து மனனம் பண்ணும் பகவானிடத்திலே திரும்பி விடுகிறார்கள். எந்த தேசத்தில் எந்தக் கோயிலுக்கு முன் செல்ல நேரிட்டாலும் 'பகவான் பற்பல சமயத்தவர்களுக்குப் பற்பல குணரூப விசேஷனாகத்தோன்றி அருள் பாலிக்கின்றார்' என்று தாம் கற்றதையும் கேட்டதையும் அனுபவித்து, தெய்வநிந்தனை புரியாது " ஆகாசாத் பதிதம் தோயம் யதாகிச்சது சாகரம், சகல தேவோ நமஸ்காரஹ: ஸ்ரீகேசவம்பிரதிகச்சதி'' என்று வழிபடுகிறார்கள்; பகவான் சோதனையின் பொருட்டு எவ்வளவு துன்புறுத்திச் சோதித்தாலும் 'பாழுந் தெய்வமே! உன் கோயிலில் இடிவிழ' என்று நிந்திப்பதும், சுகமருளினால் அதன் பொருட்டு 'எனையாளும் தெய்வமே உன் கோயிலில் நெய்விளக் கேற்றுகிறேன்' என்று வாழ்த்துவதும் இல்லை; பரசுகத்திற்காக இகத்தில் துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்று பகவானை அனவரதமும் துதிப்பார்கள்; மனமாகிய கோயிலை, காமக்ரோதாதிதிருடர்கள் வந்து கொள்ளை கொள்ளா வண்ணம் பகவந் நாமத்தைப் பரவிக்காப்பார்கள்; இவ்விதம் மேற்கூறிய நாய்க்குரிய சுபாவங்கள் கூடத் தமக்குப் பரிபூர்ணமாக ஏற்பட வில்லையே? கேவலம் மனிதப்பிறவிக்கு ஏற்றிக் கூறப்படும் உயர்வு தாழ்வுகளைத் தெய்வத்திற்கும் கற்பிக்கும் அசட்டுத்தனம் சட்டென்று விலகவில்லையே! என்பது தான் அடியார்கள் இரங்கித் தம்மை நாயினுங்கடையேன் என்று சொல்லிக் கொள்ளுவதின் கருத்து.

 

"அப்போதைக் கீப்போதே சொல்லிவைத்தேன்'' என்றார் ஆழ்வார். தனவந்தர்களை ஏழைகள் அண்டி அவர்களுடைய தயவைநாடி ஏவல் வழிநின்று நடப்பதெல்லாம் எதன் பொருட்க? சோர்ந்தவிடத்து அவர்கள் தமக்குத் துணையாவார் என்ற கருத்து பற்றியே யல்லவா? ஆதலின், செவிவாய் கண் மூக்கு முதலியன தளர்ச்சியுற்று அடியேன் பரிதபிக்குங்கால், ஜகத்பிரபுவாகிய நீர் அடியேனுக்குத் துணையாவீர் என்ற நம்பிக்கை அடியேனுக்கு நிச்சயமாக உண்டு 'என்று ஆழ்வார் பகவானை நோக்கி யருளிச் செய்ய, அதற்கு எம்பெருமான் எனது துணையை நாடும் அத்துணை யோக்யதையை நீ அடைந்து விட்டதாகக் கருதுகின்றனையோ?' என்று வினவினார். அப்பொழுது ஆழ்வார் 'அவ்விதத்தகுதி எனக்கு ஏதும் இல்லையாயினும் உமது நிர்ஹேதுக் கிருபையைக் கண்டு நீர் அடியேனையும் காப்பீர் என முழு நம்பிக்கையுடனேயே வந்தடைந்தேன்' என, பெருமான், 'நான் அப்படி எவருக்கேனும் துணைபுரிந்ததை நீ அறிவாயோ?'' என்று கேட்டருள ஆழ்வார் என்னப்பன் அகப்பட்டார் பக்தி வலையில் என்ற மகிழ்ந்து 'அறிவேன்! அறிவேன்! யானைக் கருள் செய்தமையை' என்றார். எம்பெருமான் ஆனால் கஜேந்திராழ்வானைப் போல் நீ உனக்குத் துன்பம் நேரிடும்போது என்னை நினைப்பாயானால் அவ்வமயம் வந்து ரக்ஷிக்கிறோம்'' என்றுரைத்தருள ஆழ்வார் கூற்றுவன் வந்தென்னை துன்புறுத்தும் போது அடியேன் உம்மை நினைக்கக்கூடும் என்ற நிச்சயமென்ன?' என்றார். எம்பெருமான் ஆனால் நீ என்ன தான் செய்ய மாட்டுவை' என்று கேட்க, ஆழ்வார் 'அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன், இதை நீர் ஞாபகத்தில் வைத்திருந்து அந்த சமயம் வந்தென்னை ரக்ஷித்தருளவேணும்'' என்று விண்ணப்பிக்க, பகவானும் ஒப்பிச் சென்றார். பக்தர்கள் எந்த விதத்தில் கட்டுப்படுத்தினாலும் பகவான் அவர்கட்குச் சுவாதீன னாகின்றார்.

 

"வாசத்திற் பெரியது விசுவாசம்" மதப்பற்றுடையவர்கள் ஒருவரை யொருவர் சந்திக்க நேரிடுங்கால் தாங்கள் எந்த க்ஷேத்திரவாசி 'என்று முதலில் கேட்பதுண்டு. அதற்கு அவர்கள் தாங்கள் வசிக்கும் க்ஷேத்திரத்தின் பெயரையோ, அல்லது தமது ஊருக்கருகேயுள்ள திருப்பதியையோ குறிப்பிட்டுரைப்பது வழக்கம். எங்கு வசித்தாலென்ன? பகவானிடத்திலே விசுவாச முள்ளவர்கள் எங்கு வசித்தாலும், பகவான் அவர்களிருக்கும் இடத்திலும் வசிக்கின்றார். மகான்கள் விசுவாசத்தையே பெரிதும் உடையவர்கள். அதல்லாமல் 'நான் ஸ்ரீரங்க க்ஷேத்திரவாசி' என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீ ரங்கநாதனிடம் தினையளவும் பக்தியில்லா திருப்பதால் பயனென்ன? அதனால் வீண் பிரமையும் அறியாமையுமே வளரும்.

 

"பக்தர்கள் பெருமை பார்க்க அருமை" சுமார் ஐம்பதாண்டுகட்கு முன்னர் வடநாட்டில் ரகுநாததாஸ் என்ற ஒரு பிரசித்த பக்தரிருந்தார். அவர் ஐரோப்பிய துரைத்தனத்தாரின் ராணுவத்தில் ஓர் சிப்பாய் வேலையில் அமர்ந்திருந்தார். அவர் பொறுப்புடனும், நம்பிக்கையோடும் வேலை பார்த்து வந்தமையால், ராணுவத் தலைவருக்கு அவரிடம் விசேஷ நம்பிக்கையும் அன்பும் ஏற்பட்டிருந்தது. அந்த சேனையின் பாசறைக்காப்பாளர் வேலையை ரகுநாதர் பார்க்க வேண்டிய முறை வந்தது. அவ்வாறே அவர் இரவில் காவல் புரிகையில், சாலை வழியே ஒரு பஜனை கோஷ்டியார் ராம பஜனை செய்து கொண்டு சென்றார்கள். அவர்களுடைய உத்சாகத்தையும் இன்னிசை வாத்தியங்களின் முழக்கத்தையும், அப்பக்தர்கள் புரியும் ஆனந்தக் கூத்தையும் காண ரகுநாதர் பரவசப்பட்டு, தனது உடுப்புகளைக் களைந்து ஒரு மூலையில் வைத்து விட்டு, எவரும் அறியாவண்ணம் வெளியேறி, அப்பஜனை கோஷ்டியில் கலந்து கொண்டார். அன்றிரவு முழுதும் ஆடிப்பாடி மகிழ்ந்தார். இப்படி வெகு நேரமானதும் இவர் தமது காவலை விட்டு எங்கேயோ ஓடிவிட்டாரென்ற புகார் சேனாதிபதியின் செவிக்கெட்டிற்று. பொழுது புலர்ந்ததும், ரகுநாதர் திரும்பி வந்தார். சேனைத் தலைவர் அவரைஅழைத்து " நீ அவ்விதம் நடந்துகொண்டது உண்மையா? " என்று வினவ, ரகுநாதர் "உண்மை" என்றார். சேனாதிபதி " அக்குற்றத்தின் தண்டனையாதென நீ உணருவாயா?'' என்றார். அதற்கு ரகுநாதர், " நன்றாக அறிவேன். வெடி குண்டுப் பிரயோகமே அக்குற்றத்தின் தண்டனையாகும்'' எனலும், சேனைத்தலைவர், அவரது அஞ்சாமைக்கு வியந்து 'இந்த முறை உன்னை மன்னித்திருக்கிரேன். இனி, இங்ஙனம் நடந்து கொண்டால் மரண தண்டனை நிச்சயம்' என்று கூறி அனுப்பி விட்டார்.

 

மறுநாளும் பஜனை கோஷ்டி முன்னிலும் பன்மடங்கு வைபவத்துடன் அவ்வழியே வந்தது. அன்றும் முதல் நாள் போல் காவல் புரியும் ரகுநாததாஸ் எவ்வளவோ முயன்றும், மனத்தினிடத்தில் தோல்வியடைந்து, வந்தது வரட்டும்' என்று துணிந்து, உடுப்புகளைக் களைந்து எறிந்துவிட்டு பஜனை கோஷ்டியில் கலந்து கொண்டு, நாத்தழும் பேறப் பொழுது புலரும். வரையில் வழுத்தித் தனது கடமையை மறந்த தண்டனைக்காக மனம் வருந்தாது திரும்பி வந்து நேராகத் தானே சேனாதிபதியிடம் சென்று தனதுகுற்றத்தை ஒப்புக் கொண்டு, தனது பிராணனை பகவதார்ட் பணம் பண்ண நிச்சயித்து எகினார். சென்று தாம் செய்த பிழையைக்கூற, சேனாதிபதி "என்ன ரகுநாதா! உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? நேற்று இரவுதான் நான் இரண்டு மணி சுமாருக்கு உன்னைக் காவல் ஸ்தானத்தில் பார்த்துச் சில வார்த்தைகள் பேசி உன் 'பீட்' புத்தகத்தில் கையெழுத்திட்டுத் திரும்பினேனே!'' என்றார். ரகுநாதர்,'' பகவானறிய நான் பதினொரு மணிக்கேராம பஜனை கோஷ்டியுடன் சென்று விட்டேனே! தாங்கள் எப்படி என்னைப் பார்த்திருக்க முடியும்?'என்று கூறித் தனது சட்டைப் பையிலிருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அதில் கையொப்பம் நன்றாகப் போடப்பட்டிருந்தது. ரகுநாதர் புளகாங்கித மெய்தினார்; ஸ்ரீ ரகுவீரனே இத்தகைய திருவிளையாடல் புரிந்தான் என்று அறிந்து கொண்டு, அன்றே தமது வேலையை ராஜினாமா' செய்து விட்டு, காவிபூண்டு, வைராக்கியமாய், சாஸ்வதி நதி தீரத்தில், ராமநாம சங்கீர்தனஞ் செய்தவாறு தமது காலத்தைக் கழிக்கலானார். ஹிருதய சுத்தியுள்ள பக்தனை அவர் என்றும் கைவிடுகிறதில்லை.

 

'உலகம் பலவிதம்' என்று நாம் அடிக்கடி சொல்லுவதுண்டு. இதில் விசேஷ அர்த்தமிருக்கிறது. நாடுகள் தோறும் சமயங்களும், பாஷைகளும், ஆகாரங்களும் வேறுபாடுள்ளனவா யிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனே, குணத்திலும், நிறத்திலும், தன்மையிலும், உணவிலும் கல்வியிலும் எவ்வளவோ வித்யாசப்படுகிறான். தகப்பனைப் போல் பிள்ளை இல்லை. ஒரே விதமான மதமும் பாஷையும் ஆகாரமும் சம்பத்தும் எங்குமிருந்தால் உலகம் நடைபெறாதென்றே, பகவான் அநேக மதங்களையும், பற்பல பழக்க வழக்கங்களையும், பாஷைகளையும் உண்டாக்கியிருக்கின்றார். ஈஸ்வர சிருஷ்டிக் குட்பட்ட சகல பொருள்களும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுதலடைந்து வருகின்றன. அறுசுவையுடன் கூடிய உணவின்றி ஒரே ருசியுள்ள பதார்த்தத்தை உண்ண நம்மால் முடியுமா? உலகத்தில் மூன்று பங்கு சமுத்திரமும் ஒரு பங்கு பூமியுமா யிருக்கின்றதே? அப்படியில்லா விட்டால் காலா காலத்தில் மழை பெய்யுமா? உலகில் எல்லோருமே நல்லவர்களா யிருப்பதில்லை. ஒருவன் நல்லவன்; ஒருவன் துஷ்டன். ஒருவன் உபகாரி; ஒருவன் அபகாரி. ஒருவனே ஒருவனுக்கு நல்லவன்; அவனே இன்னொருவனுக்குக் கெட்டவன். தாழை மலர் நல்ல வாசனையுள்ளதா யிருக்கிறது. அதன் மேலிருக்கும் மடல்களோ முட்கள் நிறைந்ததாயிருக்கின்றன. அந்த மடல்களை என் உண்டாக்கினார் என்று நாம் கடவுளை நொந்து கொள்வதா? ஆகையால், நல்ல தற்கொரு பொல்லாதது இருந்தே தீருகின்றது. பொய்யென்று ஒன்றிருந்தாற்றான் உண்மையின் பெருமை வெளிப்படும். வெயிலிருந்தாற்றான் நிழலின் அருமை தெரியும். தாழை மலரை நாம் தரித்துக் கொள்கின்றோமே யொழிய அதன் மேலுள்ள முட்கள் நிரம்பிய மடல்களைச் சூடுவதில்லை. அவற்றை எடுத்தெறிந்து விடுகிறோம். அதுபோல உலகம் பலவிதமா யிருந்தாலும் சாதுக்கள் சத்தான ஒரு விதத்தைத் தேர்ந்து அவ்வழியில் நடந்து நற்கதி யடைகிறார்கள். (ஸ்ரீ ராம தீர்த்தர் வாக்கு.)

 

"சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை" மனிதர்கள் பிறந்த அந்தக்கணம் முதல் 'சோ' வென்று பிராணவாயுவை முதல் முதலாக உள்ளே இழுத்து, 'ஹம்' என்று வெளியேவிட்டு, சோகப்பட்டு, கேவலம் இந்த ஊனுடம்பை வளர்க்கவும் இதற்கான சௌகரியங்களைத் தேடவும் எத்தனையோ பொய், களவு, காமம், வெகுளி, மயக்கம், சூதுவாது செய்து திரிகின்றார்களே யன்றி, மனமார ஒருகணமாகிலும் பகவானைத் தூயமனதுடன் தொழுவதே இல்லை. மென்மேலும் பாவ மூட்டையின் பளு ஏறுகின்றது. அந்த பளுவைச் சிறிது இறக்க உலகமென்ற இடத்தில் (நிழலில்) உள்ள பிறப்பென்ற சுமைதாங்கியை நாடுகிறார்கள். இவற்றிற் கஞ்சி பகவானது சரணார விந்தங்களில் கர சரணாதி அவயவங்களால் மெய்த் தொண்டு புரிந்து முக்திக்குச் சாதனமாயுள்ள இந்தக் கேவல சரீரத்தைச் சிறிது காத்தற்பொருட்டு, 'உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், என்ற மட்டில் நிறுத்தி ஆசைகளை யடக்கி, பக்தர்கள் மேன்மை யடைவார்கள். ஏனையோர் நிலை, சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை என்பதாகவே முடிகின்றது.

 

''நல்லது கண்டாற் பெரியோர் நாயகனுக்கு என்று அதனை நல்தவார்'' வரகுணபாண்டியன் என்ற ஓர் அரசன் தனக்கேற்பட்ட பிரம்மகத்தி தோஷம் திருவிடை மருதூர் மருதவாணப் பெருமான் கிருபையால் நீங்கப் பெற்று அத்தலத்தின்கண் வசித்திருக்கும் போது, தனது மனைவியின் பேரழகைக் கண்டு இந்த அழகியைச் சிவபெருமானுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதி, அவளை அழைத்துக் கொண்டு இரவிலே திருக்கோயில் வாயிலை யடைந்து, '' கோயிலைத் திற விடைமருதா வெனக்கூவ –வாயிலைத் திறந்திறைவனும் "வரகுணா!'' வென்றார். வரகுணன் அவளை மருதவாணருக்கு அளித்துத் திரும்பினான். மருதவாணர் அப்பெண்ணை விழுங்கிக் கையை மட்டும் விழுங்காமல் வெளித் தோன்ற வைத்திருந்தார். பொழுது புலர்ந்ததும் பலரும் இதைக்கண்டு வியந்து கூறுவதை வரகுணன் கேள்விப்பட்டு ஓடி'' சுவாமி! பாவியாகிய நான் பிடித்ததென்றா இக்கையை மட்டும் விழுங்காது நீக்கிவிட்டீர்?'' என, மருதவாணர் அக்கையையும் விழுங்கினார். கண்ணப்ப நாயனார், தான் சுவைத்துப் பார்த்து ருசியானவற்றைத் தனியே பகவானுக்கென்று வைத்து விட்டார்; அவற்றைப் பகவான் ஏற்றார். அரிவாட்டாய நாயனார் சிவ நேசராய் நெல்லரிசி, செங்கீரை, மாவடுவு ஆகிய மூன்றையும் திருவமுதாகச் செய்வித்து வந்தார். அதைச் சிவ பெருமான் அன்போடு ஏற்றுக்கொண்டு அவரது உண்மையான பக்திக்கு மெச்சி முத்தியளித்தார். இப்படிப் பெரியோர் எதையும் பகவதார்ப்பணம் பண்ணுவது வழக்கம்.

 

"மழைவிட்டும் தூவானம் விடவில்லை'' என்பது ஒரு பழமொழி. இவ்வுலகின்கண் மானிடராய்ப் பிறந்தாரனைவரையும் புண்ய பாபச் செயல்களிற் றூண்டுவது ஆசையொன்றேயாகும். அவ்வாசை மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென மூன்று வகைப்படும். இம்மூன்றும் ஓர் அளவில் இல்லறத்திற்குப் பொருந்தியவைகள். ஆனால் இவற்றை அளவு கடந்து அறவழி மாறி ஈட்டமுற்படுவதால் பாவம் சம்பவிக்கின்றது. பாவம் என்பது துன்பமே. அறம் பொருள் இன்பம் வீடாகும் நான்கினுள் முதலதையும் கடையதையும் துறவிகள் ஏற்கின்றனர். அவர்களால் வெறுக்கப்படுவன பொருளும் விஷய சுகமுமேயாம். கலாசாலையிற் கற்கும் மாணவர்களுள் சிலர் அறிவு வன்மை பெற்றவராயும் சிலர் நடுத்தரமான புத்தியுள்ளவராயும் பலர் மூடர்களாயும் இருக்கின்றனர். அது போன்றே உலக மென்னும் இக்கலாசாலையில் வாழ்வென்ற வகுப்பில் வாசிக்கும் மாணவர்களாகிய மக்களும் முதல் இடை கடையென மூவகைப்படுவர். முதல் வகையினர் இறைவனது சரணாரவிந்தப் பிராப்தியி லன்றிவேறெதிலும் மனதைப்பற்ற விடாதடக்கி எகாந்தமான வனாந்தரங்களிலே தியானபரராய்க் காலங்கழித்து முத்தி யடைவர். இவர்கள் துறவிகள். இடையானவர் இல்லற வாழ்வில் அந்நெறிப்படி யொழுகி, தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தாறோம்பி 'வாழ்ந்து பகவானது கிருபைக்குப் பாத்திரராவார். கடைப்பட்டவர் இல்லறத்தை யேற்றும் துறவறம் பூண்டும் ஆசைகளிற் சிலவற்றை முழுதும் வென்றும் சிலவற்றை அரைகுறையாக விட்டும் பின்னுஞ் சிலவற்றை விடாமலும் ஊசலாடி உழல்வர். துறவிகளோ கிரியாம்சத்தில் விழிமடவார் உறவு விட்டும், வெகுளி விட்டும், உலக வாழ்வில் பிழை விட்டும், ஆசையை மட்டும் விடவியலாது மழை விட்டும் தூவானம் விட்டபாடின்றி வருந்துவர்.

 

'நாய்காணிற் கற்காணாவாறு' என்பதோர் வழக்கு. நாலடியாரில் இப்பழமொழி வழங்கப்பட்டதன் விஷயம் வேறு. ஈண்டு இதைக்கொண்டே இன்னொரு விஷயத்தை விவரிப்போம். 'நாயைக் கண்டால் கல்லைக் காணேம்: கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்று நாம் சாதாரணமாகச் சொல்லதுண்டு. இதை வேதாந்திகள் வழங்குவது மிக்க அழகா யிருக்கும். கல்லால் ஒரு நாயின் உருவம் அமைந்திருக்கின்றது. அதை நாயென்று கருதுங்கால் நாயின் உருவம் மட்டும் நம் மனதிற்கு வருமே யன்றி கல்லென்ற நினைவுவராது; கல்லென்று கருதும் போது, கருங்கல் செங்கல் வெண்கல் என்ற கல்லைப் பற்றிய விஷயங்கள் நம் நினைவுக்கு வருமே யல்லாது நாயென்ற ரூபம் தோன்றாது. இக்கருத்தை


'பொன்னை மறைத்தது பொன்னணி பூஷணம்
 பொன்னின் மறைந்தது பொன்னணி பூஷணம்
 தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
 தன்னின் மறைந்தது தன்கர ணங்களே'

 

என்னும் வேதாந்தப் பாடல் வலி யுறுத்தும்.

 

''பொன்னாலாகிய பூஷணத்தை ஆபரண மென்னும் நினைவோடு பார்க்கும் பொழுது பொன்னென்று தோன்றாது ஆபரணமாகவே காணப்படுதல் போல, கரண வியாபார மேலிட்டால் ஆன்மா தோன்றாது. பொன் என்னும் எண்ணத்துடன் பார்க்குமளவில் ஆபரணம் தோன்றாது பொன்னே காணப்படும். ஆன்மா தன் நிஜரூபத்தை யுணர்ந்த பின்னர் கரண வியாபாரம் ஒடுங்கும்'' என்று திருடாந்த பூர்வமாய் விளக்கி யுள்ளார். கரணங்களின் வியாபாரம் மறையுங்கால் இறைவனருள் சுரக்கின்றது. பக்தன் ஆத்மாவின் தன்மை இதுவென உணர்ந்து 'அரும்பொனே! மணியே!' என்று துதிக்கின்றான்.

 

"பாபிகளே பாகியவான்கள்'' என்பது பைபிள் வாக்கியம். சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வட நாட்டில் பாவ்ஹாரி பாபா என்ற ஓர் மகான் இருந்தார். சில விஷயங்களில் ஸ்ரீராம கிருஷ்ணரை விடச் சிறந்த மகிமை இப்பெரியாரிடம் இருந்ததென்றும் ஸ்ரீராம கிருஷ்ணரும் பாவ்ஹாரி பாபாவும் ஒரே நாணயத்தின் முன்பின் புறங்கள் என்றும் ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் தமது பிரசங்கங்களில் அடிக்கடி கூறுவதுண்டு. பாவ்ஹாரி பாபா கங்கா தீரத்தில் ஓர் ஏகாந்த ஸ்தலத்திலுள்ள குடிசையில் தனி வாழ் வியற்றி வந்தார். நிற்க, பிறந்தது முதல் திருட்டுத் தொழிலி லன்றி வேறெதிலும் பழக்கமில்லாத ஒருவன் ஒருநாள் திருடுவதற்கு வேறெவ்விடமுங்காணானாய், இரவு வெகு நேரமான பின்னர் பாவ்ஹாரி பாபாவின் குடிசையருகே வந்து நின்று கொண்டிருந்தான். நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவனுக் கொரு யோசனை உண்டாயிற்று. "இந்தச் சந்ரியாசி வெகு காலமாக இங்கிருக்கிறான்; துறவிகள் பலர் ரகசியமாகப் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டு வெளிக்கு வேஷம் போடுவதுண்டு என்று சொல்லுகிறார்களே. அப்படியே இல்லாவிட்டாலும் ஏதேனும் அற்பப் பொருளாவது நமக்குக் கிடைக்காமற் போகுமா? பார்ப்போம் பகவான் இருக்கிறர் " என்று எண்ணி, பாபா சமாதியில் வீற்றிருக்கும் நேரம் பார்த்து உள்ளேநுழைந்தான். அங்கே இரண்டொரு ஓடுகளும் ஒரு பித்தளை டம்ளரும் இருந்தன. கிடைத்தது லாபம் என்று அந்த டம்ளரை எடுத்தான். அது கை தவறிக் கீழே விழுந்தது. பாபா சமாதி கலைர்து 'நாராயணா' என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். திருடன் விழுந்து ஓடினான். பாபா அவன் பின்னால் பிரபோ நில்லும்! சர்வேஸ்வரா நில்லும்' என்று சொல்லிக் கொண்டே ஓடினார். திருடனோ, ''கிழவா! உன்னைப்போல் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். நீ என்னை ஏமாற்ற முடியுமா?'என்று சொல்லிக் கொண்டே ஓட, பாபா பின்னே பிரபோ! வந்த திருக்கூட்டமதில் யானொருவ னல்லனோ? ஏழையேன் மீது கிருபை கொள்ளும்; உம்மைவிடேன்' என்று பிரலாபித்துக் கொண்டே சென்றார். இவர் ஓட அவன் ஓட ஒருமைல் தூரம் சென்றதும் ஒரு வேர் தடுக்கிவிட அக்கள்வன் கீழே விழுந்தான். பாவ்காரி பாபா அவனைக்கிட்டி அவன் கால்களை விடாமற் பிடித்துக் கொண்டு "ஹே! சோர நாராயண அன்று ஆயர்பாடியில் வெண்ணெய் திருடிஓ - வும் ஆய்ச்சியர் பின்னோடி வந்து மத்தாலடித்து உன்னோடு லீலை புரியவுமிருந்த அந்தப் பரமானந்த பக்தாம்ருதச்தை இன்று யானடைந்தேன். பிரபோ! உம்மை நான் விடேன். எனது சிறு குடிலுக்கு நீர் எழுந்தருள வேண்டும். தங்களுக்கு ஆங்குள்ள பொருள்களுள் என்னென்ன வேண்டுமோ அவற்றைத் திரிகரண சுத்தியாய் சமர்ப்பிக்கிறேன்' என்று தோத்திரிப் பாராயினர். கள்ளன் எழுந்தான். அவன் உள்ளமோ பின்னும் விரைந்தெழுந்தது. அவன் கண்களினின்றும் ஆனந்த பாஷ்பம் பெருகிற்று பாபாவின் ஸ்பரிச மாத்திரத்தால் அவன் பரம பவித்திரனானான். அவரது சொற்கள் அவனுக்கு மோக்ஷ சாம்பிராஜ்யத்தை நல்கும் தன்மையதாயின. அவரை அவன் மும்முறை வலம் வந்து வணங்கினான். 'ஹா! என்ன பாபக்தொழியில் நாம் உழன் றோம்' என்று பரிபூரணமாக மெய்மறந் கெண்ணினான்; அக்கணமே அவன் உள்ளத்தின்கண் நிலைத்து நின்று கரணங்களைத் தூண்டிய மாயை பறந்தது; விழுந்தான் பாபாவின் இணையடிகளில்; 'ஹே! சாது என்னைக் காக்கவேண்டும். அறியாமை பால் அடியேன் தவறிழைத்தேன். எனக்கு உய்யும் வழியை உணர்த்தி யருளல் வேண்டும்'' என்றான். பாபா சோர நாராயணா! என்னைப்போல் நீயும் செய்' என்றருளினார். அக்கணம் முதல் அவனும் ஓர் பாவ்ஹாரி பாபாவாயினான். க்ஷேத்திர யாத்திரை செய்து பிச்சை யேற்றுண்டு காலங்கழித்தான். இப்படி பாபிகள் மகான்களுடைய ஸ்பரிச மாத்திரத்தில் பரிபக்குவ மடைகிறார்கள். திருமங்கையாழ்வார் சரித்திரமும் இதனைத் தெளிவாகக் கூறும். 'பாவத்தின் எல்லை இன்பம். சம்சார மென்னும் சமுத்திரத்தைக் கடந்தால் மோக்ஷமென்னும் கரையில் ஏறலாம்' என்று வேதாந்த நூல்கள் கூறும் உண்மையும் இதுவே.

 

'பஞ்சேந்திரியங்கள்' இவை மெய் வாய் கண் மூக்கு செவி என்பன். இவற்றை அடக்கினவர் எய்துவது இன்பம். அதாவது வீடு. இவற்றின் வழி மனதைச் செலுத்தி வாழ்பவர் அடைவது துன்பம்; அதுவே நரகம். புராணங்கள் மோக்ஷத்தையும் நரகத்தையும் பற்பலவாறு வர்ணிக்கின்றன். இதைக் கண்டு நவீனர்கள் புராணம் 'பொய் - ஆபாசம்' என்று பிரசங்கஞ் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இந்த மோக்ஷம் - நரகம் என்பவற்றைப் புராணங்கள் விவரிப்பதன் கருத்து வேறு. உதாரணமாக முதல் வகுப்பில் கற்கும் ஒரு மாணவனிடம் கல்லாடத்தில் ஒரு பாட்டை எடுத்துக் கொடுத்து பொருள் கூறு என்றால் அவனாலியலாதல்லவா? அது போல சாமான்ய பாமரஜனங்களுக்கு பஞ்சேந்திரிய சேட்டைகளின் விவரத்தையும், அவற்றை அடக்கும் முறைகளைச் சொல்லும் ஸ்ருதி ஸ்மிருதிப் பிரமாணமான ஆதாரங்களையும் எடுத்தோதினால் அவற்றை கிரகிக்கக்கூடிய சக்தி அவர்களுக்கு இராது. ஆனால் சாமான்ய ஜனங்களுக்கும் உய்யும் வழியைப் புகட்டவேண்டு மென்பது அவசியம். அதற்காக அவர்களுக்கு பாவம் - நரகம், புண்
 யம் - மோக்ஷம் - என்று கதாரூபமாகக் கற்பித்தனர் பெரியோர். 'நரகம் என்பது நூறு யோஜனை தூரத்திற்கு ஒரே பவ்வீயாக நிறைந்திருக்கும் ஓர் குழி. பாவிகள் அதில் அநேக காலம் அழுந்தித் தத்தளித்துக் கொண்டிருக்கவேண்டும்' என்று கூறினால் பாமரனுக்கு பயமுண்டாகிறது. அதனால் அவன் பாவத்தொழிலைச் செய்ய அஞ்சுகிறான். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுவது பெற்றோர் கடன். அதற்காக அவர்கள் 'அப்பா! அங்கு செல்லாதே பூச்சாண்டி யிருக்கும்' என்று கூறி வைக்கிறார்கள். பூச்சாண்டி என்பது உண்மையில் இல்லையானாலும் அந்த வார்த்தையானது குழந்தையைக் காப்பாற்று கின்றது. அது போலத்தான் மேற்கூறிய விஷயமும். அதனால் அந்தக் குழந்தை 'பூச்சாண்டி' என்று சொல்லிக் கொண்டே பயக் குறிகாட்டுகின்றது. அது போல் எள்ளளவும் படிப்பில்லாத ஞான சூன்யனான ஒருவன் கூட "மாட்டை அடிக்காதே! பாவம்'' என்கிறான்; 'பசுவிற்கு தண்ணீர் கொடு - புண்யம்' என்று கூறுகின்றான். இந்த உணர்ச்சி அவனுக்கு எப்படி வந்தது? அவன் எந்த புத்தகத்தைப் படித்திருக்கிறான்? இதுதான் நமது ஆன்றோருடைய போதனா சக்தியின் பெருமை. குழந்தை வயதடைந்து பெரியவனான பின்னர், அவன் பூச்சாண்டி - என்பது பொய் என்று தானாகவே அறிந்து கொள்ளுகிறான். ஆனாலும் அந்த முறையிலுள்ள சூக்ஷமத்தை அவன் அறிந்து கொண்டு தன்னுடைய குழந்தையையும் அதே வார்த்தையைக் கொண்டே பயமுறுத்துகின்றான். அங்ஙனம், கற்றவர்கள் பஞ்சேந்திரியங்களின் சேட்டை கொடிதென்பதையும் அவற்றால் அடைய நேரும் வாதனைகளின்ன வென்பதையம் தாம் கண்ட கழி நுட்பத்தாலறிந்து கொள்ளுகிறார்கள். காமியாகிய ஒருவன் வேசையை விரும்பி யடைந்து பிணியற்று மருத்துவனால் கத்தி கொண்டு அறுக்கப்பட்டு, சீழும் இரத்தமும் வெளிப்பட ஐயோ! அப்பா! என்று அலறுங்கால் அதைவிடப் பிரத்யக்ஷ நரகம் வேறுண்டா? முக்குறும்புகளில் முதலாகிய காமத்தின் கேட்டால் இவன் அடைந்த இவ்வாதனையைத் தான் 'மலக்குழி' என்ற பெயரால் புராணங்கள் வழங்குகின்றன. நரகம் என்பது ஓர் தனி ஊால்ல; மோக்ஷமும் அப்படியே. புராணங்களில் கூறியுள்ளவாறு நரகம் என்பது மலமயமான காடல்ல. நரகம் என்பது இந்த உடலோடு வாழ்கின்றது. இவ்வுண்மையை "பொறியில் வாழ் நாகமெல்லாம் புல்லெழுத் தொழியுமன்றே'' என்ற தொண்டரடிப் பொடிகளின் வாக்கே உணர்த்துகின்றது. "பொறி வாயிலைந்த வித்தான்'' என்ற திருக்குறளின் கருத்தும் இதுவேயாகும். ஆதலின் நமது சிற்றறிவிற்கு எட்டாத விஷயங்களைக் குறித்து பெரியாரிடத்தில் ஆத்ம விசாரம் பண்ண வேண்டும். வீணில் விதண்டாவாதம் புரிதல் அழகாகாது.

 

"யானை வாயிற் போன கரும்பு திரும்பி வருமா'' என்று சாமன்யமாக நாம் சொல்வதுண்டு. கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்னும் சப்தடண்ய நதிகள் நமது நாட்டி லோடுகின்றன. இவற்றில் நிறைந்து பாயும் புனல் ஸ்நானத்திற்கு உத்தமமானதாயும் பருகுவதற்குப் பரமானந்தமாயும் உள்ளது. ஆனால் இதே தண்ணீர் சமுத்திரத்திற் கலந்த பின்னர் உப்பு நீராக மாறிவிடுகிறது. பின்பு அருந்துவதற்கோ நீராடுவதற்கோ யோக்ய மான தாயில்லை. இது போன்றே மனிதன் நற்குண நற்செய்கைகளுடன் பரோபகார சிந்தை யுடையவனாய் சாதுக்களுக்குத் தாஸனாய்த் திகழ்கின்றவரை அவன் பகவானுக்குப் பிரியனாகின்றான். துஷ்டசகவாசம் செய்து தீய குணமுடையவனாகி விட்டால் சமுத்திர நீரைப் போலப் பிறருடைய ருசிக்கும் உபயோகத்திற்கும் அநருகனாகின்றான். நதியானது தரையிலோடுகிற வரையில் சொரூபம், வளைவு, கிளைநதிகள், நீர்வீழ்ச்சிகள் முதலிய தோற்றங்களைத் தரும். சாதுக்கள் இல்லறத்தை மேற்கொண்டொழுதம் வரை தேகசுகம், தாழ்மை, பொருளீட்டல் முதலிய தோற்றங்களை யுடையவர்களா யிருப்பார்கள்; சிற்றின்பங்களில் பிரியங் கொள்வார்கள். சமுத்திரத்திற் போய்க் கலந்த நதி எவ்வித சொரூபமுமற்றுக் கடலோடு கடலாய்க் கலந்து என்றும் மீளாது போய்விடுகிறது போல சாதுக்கள் ஸன்யாஸிகளான பின் சகல இன்பங்களையும் மறந்து விடுகிறார்கள்; என்றும் கிருகஸ்தாஸ்ரமத்திற்குத் திரும்புவதேயில்லை; கடலைப்போன்று பரந்தஹிருதய முடையவர்களாய்ப் பகவத் குணானுபவத்திற் கலந்து என்றும் வற்றாத தன்மையராய் விளங்குகிறார்கள்.

 

துர்க்குணம் மனிதனுக்கு மேலிட மேலிட முன்னிருந்த சொற்ப நற்குணங்கூட மறைந்து போய்விடுகிறது. ஒரு குடம் பாலில் ஒரு துளி தண்ணீரை விட்டால் அந்தத் தண்ணீருக்கும் பாலின் தன்மையே உண்டாகிவிடுகிறது. தண்ணீரும் பாலோடு பாலாகித் தனது சொரூபத்தை இழந்துவிடுகிறது. அப்பாலிலிருந்து தண்ணீரை மீட்டும் பிரித்துவிட முடியாது. ஒரு குடம் தண்ணீரில் ஒருதுளி பாலை விட்டால் அத்துளி ஜலத்தின் தன்மையை எய்துகிறது. இதையும் பிரித்து எடுக்க முடியாது. இது வஸ்துக்களுக்குள்ள இயற்கை. ஆகையால், உறவாடிப் பின்பு விடுவதென்பதுஇயலாத காரியம்; உறவாடாமலிருந்து மேன்மையை யடைவதே சிறந்ததாகும். துட்டர் பழக்கத்தை விட்டு சாதுக்களோடு பழகி, சத்விசாரம் செய்து ஆசைகளை அடக்கி, அகந்தையை ஒடுக்குகின்றவனே பகவானுக்குப் பிரியனாகின்றான்.

 

"கூரைமேல் சோற்றைப் போட்டால் எத்தனையோ காக்காய்" முற்காலத்தைப் போல் அதிகாலையில் நீராடி, அனுஷ்டானம் முடித்துப் பூஜை செய்கிறவர்கள் இன்னும் இரண்டொருவர் அத்திப் பூத்தது போல் இரண்டொரு குடும்பங்களில் இருப்பார்களானால் அவர்களிடத்தில் ஒரு பழைய வழக்கத்தைக் காணலாம். அதாவது பூஜை முடிந்ததும் பகவானுக்கு ஆராதித்த அன்னத்தில் ஒருபிடி எடுத்துக் காக்காய்க்குக் கூரையின் மேல் போடுத லென்பது. இதிற் பல ரகஸியங்கள் உண்டு. இதனால் ''ஐயமிட்டு உண்'' என்னும் முதுமொழி வலியறுத்தப் படுகின்றது. "தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்ற " என்ற பெரு நாவலரின் திருவாய் மொழியும் இதற்குச் சாட்சியா யிருப்பதே காக்கைக்குச் சோற்றைப் போட்டால் அது தான் மட்டும் உண்பதில்லை. 'கா கா' வெனப் பன்முறை கரைந்து தனது சுற்றங்களை யெல்லாம் அழைத்துப் பின்னரே அவற்றுடன் தானும் உண்கின்றது. இந்த சுபாவம் நாய்க்கில்லை. ஒரு எச்சிலையைப் போட்டால் ஒரு நாய் - பலமுள்ளதாயிருந்தால், வேறெந்த நாயையும் அதனருகே வரவிடாமல் குரைத்தும் கடித்தும் தானே அந்த எச்சிலையை உண்ண முயலும். அதனாற்றான் சாப்பிடுவதற்கு முன் காக்கைக்கும் சாப்பிட்ட பின் எச்சிலையை நாயக்கும் போடும்படி பெரியோர் கூறிப் போந்தனர். இப்பொழுது இதிலுள்ள தாரதம்மியம் நமக்கு நன்றாகப் புலப்படுமல்லவா? இருவர் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்து "ஏன் நாய் எச்சிலைக்கு அடித்துக் கொள்வதைப் போல் அடித்துக் கொள்ளுகிறீர்கள்'' என்று கேட்பதை நாம் கவனித்திருக்கிறோம். மனிதனுக்கு நற்குணத்தைச் சுபாவத்தில் எந்தெந்த வகைகளில் வளர்க்க முடியுமோ அந்தந்த வகைகளில் பெருக்கவேண்டுமென்பதே நமது பெரியோரின் கொள்கை. காக்கையைப் போல் நாம் பசிப்பிணியால் வருந்தும் அங்க ஹீனர்களுக்கும், சாதுக்களுக்கும் உணவு வழங்க வேண்டும். நாயைப் போல் தானே உண்ண வேண்டும்; தானே இன்பங்களையும் எல்லா நன்மைகளையும் அடைய வேண்டு மென்னும் கடைப்பட்ட சுபாவத்தை விட வேண்டும் என்பதும் இதனினின்று போதரும். இது இல்லாசிரமிகளைப் பொறுத்த வரையில் நிற்க,

 

சாதுக்கள் பகவத் குணங்களைக் கண்டனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த காக்கையை உபமான மாக்கலாம். காக்கை ஓர் தின்பண்டத்தைக் கண்ட மாத்திரத்தில் எப்படி காக்கைகளை யெல்லாம் கூவியழைத்து அவற்றோடு தானும் உண்கின்றதோ அது போல சாதுக்கள் உணவான பகவத் சேவையை யடைந்த பின் 'கீதம்' பாடுகிறார்கள். கீதம் என்பது தான் கண்ட உண்மைப் பொருளைப்பற்றி ஆனந்தானு பவத்தால் இயற்கையாக எழும் நாதசொரூபமாகும். அந்த அனுபவானந்த கீதத்தால் பக்த கோடிகளையெல்லாம்
'வம்மின்! வம்மின்!!' என்றழைத்து அவர்களோடு கூடி கானம் பண்ணுவது சங்கீதம் அல்லது சங்கீர்த்தனம் எனப்படும். பாருங்கள்! கேவலம் அஃறிணைப் பிராணியான ஒரு காக்கையின் சுபாவத்தைக் கொண்டு எத்தனை உண்மைகளைப் பெரியோர் வகுத்துள்ளார்கள். இது போலவே, சற்குணசம்பன்னன் சண்டாள குலத்திலே பிறந்தவனானாலும் பக்த கோடிகளால் பூசிக்கப் படுகின்றான். தாழ்ந்த பாணர் வகுப்பைச் சார்ந்த திருப்பாணாழ்வாரையும் கொண்டாடி ஜீயர் அவரைத் தமது தோள்களிலே எழுந்தருளப் பண்ணினார்.

 

"மௌனம் சர்வார்த்த சாதகம்'' அடியற்ற மரமென்ன அடிவீழ்ந்து எமது அடிகளே! உமது அடிமை யாங்கள்'- என்றத் தமது ஸனகாதியோகிகட்கு, அறமாதி பொருள் வழங்கத் தென்பாலின் முகமாகி வடபாலிருக்கின்ற தெய்வமான தக்ஷிணாமூர்த்தி இந்த மௌனத்தின் பெருமையை உபதேசித்திருக்கிறார். 'சிந்தையை யடக்கியே சும்மா யிருக்கின்ற திறமரிது ' ஆதலின் இம்மோன நிலையை எய்துவது எளிதான காரியமன்று. ஆனால் கண்மூடி மௌனியாகி தனியே யிருக்கும் நிலையை அடைந்தவர்களுடைய ஆனந்தம் எத்திறத்த தென்பதை மட்டும் நாம் ஒருவகையாக ஊகிக்கக்கூடும். ஆனந்தம் என்பது மகிழ்ச்சி அல்லது சந்தோஷமே யாகும். இவ்வானந்தம் கரண இந்திரிய வியாபாரங்களை மெல்ல மெல்லச் சிறிது சிறிதாக விடுவதால் ஏற்படுகிறது. கரண இந்திரிய வியாபாரங்களால் ஆசை அதிகரிக்கின்றது. ஆசையால் விரும்பும் பொருளை யடைய மனிதன் பிரவர்த்தி செய்கிறான். பிரவர்த்தியால் கவலை மிகுகின்றது. பிரவர்த்தியின் தோல்வியால் துக்கம் சம்பவிக்கின்றது. துக்கத்தால் கோபம் உண்டாகிறது, மனம் தளருகின்றது. ஆகவே கரண இந்திரியங்களின் வியாபாரத்தால் இவை யனைத்தும் அடுக்கடுக்காய்ப் பெருகுகின்றன. ஆதலின் கரணங்களை யடக்க வேண்டும். அதனால் மனதைப் பீடிக்கும் கவலைகளனைத்தும் நீங்குகின்றன. மனிதர்களை இரு வகையாகப் பிரிப்போம். நல்லோர் தீயவர் ஆகிய இவ்விருதிறத்தாருள் தீயாரின் உறவு கொள்ளாதிருப்பதால் பலதுன்பங்களுக்கும் கவலைகளுக்கும் நாம் அடிமையாவதில்லை. துர்ச்சனர் வசிக்கும் இடத்திலும் நாம் இருத்தலாகாது. பாம்போடு பழகினாலும், பாம்பின் உறைவிடமான புற்றண்டை வசித்தாலும் துன்பத்திற்கு இடமுண்டாகும். ஆனது பற்றி துட்டரைக் கண்டால் தூர விலகிலிட வேண்டும். துஷ்டர் பழக்கத்தை விட்டு நல்லாரோடு பழகுவதால் நமக்கு முன்னிருந்த கவலைகள் அநேகமாக நீங்குவதோடு நன்மையும் உண்டாகிறது. நன்மையாவது சுகம்; அதாவது கஷ்டமும் - துன்பமும் இன்றியிருத்தல். சுமையைக் தலையில் தூக்கிக் கொண்டு நிற்பவன் அதை இறக்கிய பின் 'அப்பாடி' என்கிறான். இதனால் கவலையாகிய கஷ்டம் நீங்கியிருப்பதே சுகமென்று விளங்கும். ஆகவே நல்லாருறவு வேண்டு மென்பதாயிற்று. இந்நல்லார் உறவிலும் விவேக்களோடு மட்டும் நெருங்கிப் பழகுவதென்றும், மற்றவர்களோடு அதிகப் பேச்சும் பழக்கமும் வைத்துக் கொள்ளாதிருப்பது என்றும் ஒரு வழக்கத்தை மேற்கொண்டு பார்ப்போம். இதனால் இன்னும் ஆனந்தம் அதிகரிக்கின்றது. யார் யார் எதைப் பேசினாலும் அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு, யுக்தமாக, இரண்டொரு வார்த்தைகளில், தேவையானால், நம்மை அவர்கள் மதித்துக் கேட்டால் மட்டில் அவர்களுக்கு விடையளிக்கும் பழக்கத்தை அனுஷ்டித்தால் பின்னும் அதிக ஆனந்தம் உண்டாகிறது. அதிகமாகப் பேசுகிறவனை வாயாடி என்றிகழ்கிறார்கள்; தன் வாய்ச் சொல்லே தனக்குத் துன்பத்தை விளைவிக்கின்றது. இப்படி மௌனத்தை யனுஷ்டித்து வருவதால் ஆனந்தம் மிகுவதோடு பந்தம் ஒழிகின்ற தென்றால் தனிமை - மௌனம் ஆகியவற்றால் எத்துணை ஆனந்தம் உண்டாகுமென்பதை நாம் ஊகிக்கலாம். “இனிது இனிது ஏகாந்த மினிது" என்னும் ஒளவையின் வாக்கு இதையே நிலை நாட்டுகின்றது. ஏகாந்தத்தோடு கூடிய மெளனத்துடன் சகல வஸ்துக்களையும் பிரம்ம சொரூப மென்று அறிதல் அளவற்ற ஆனந்தத்தை விளைவிக்கின்றது. இதுவே பிரம்மானந்த மாகும்.

"பொறுத்தவர் பூமி யாள்வார்'' இகத்தில் இடையூறின்றி வாழவும் பரலோக சாதனங்களைத் தேடிக் கொள்ளவும் ஒருவனுக்குப் பொறுமையே சிறந்த பூஷணமா யிருக்கின்றது. பிறர் நமமை நிந்திக்குமிடத்து நாம்பொறுமையாயிருத்தல் நன்று. பெரியோர் நம்மை நிந்திக்குங்கால் அதற்காக வெகுளாமல் நம்மிடமுள்ள குறைகளை யாராய்ந்து நம்மை நாமே திருத்த முயல வேண்டும்; அங்ஙனம் நாம் திருந்துவதற்கு ஆஸ்பதராயிருந்த அப்பெரியாரைப் போற்ற வேண்டும். நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் நம்மை நிந்தித்தால் அதை நாம் பாராட்டாமலும் அவர்களுக்கு மறுமொழி புகலாமலும் இருத்தலே நன்மை பயக்கும். நமக்குச் சமானமானவர்கள் நம்மை நிந்திப்பார்களாயின் தக்க சமாதானங் கூறி அவர்களைச் சாந்தப்படுத்தி விட வேண்டும். இப்படி மூன்று வகையினரிடத்தும் நடந்து கொள்வதில் இன் சொல் மிகுந்திருக்க வேண்டும். இந்த நீதிகளனைத்தும் இல்லாசிரமிகள் அதாவது லௌகிகர்களுக்கேயாகும். ஞானிகளும் சாதுக்களும் தமக்குந் தாழ்ந்தவர் களாயினுஞ் சரி, சமானமானவர்களா யிருப்பினுஞ் சரி எவர் என்ன சொன்னாலும் அவர்கள் அதைப் பாராட்டமாட்டார்கள். கங்காநதி மிக்க பரிசுத்த முடையதென்பதில் ஐயமில்லை. அதனிடத்தில் எத்தனையோ சிற்றாறுகள் வந்து கலப்பதுடன் சாக்கடைகளும் வந்து சேருகின்றன. கங்காந்தி சாக்கடையையும் ஏற்றுக் கொள்ளுகிறது. அது போல் ஞானிகள் எவருடைய நிர்தனையையும் பாராட்டுகிறதில்லை. தர்ம புத்திரருக்குப் பொறை வேந்தன் என்ற ஒரு பெயருண்டு. மகாபாரதத்துள் தருமர் சத்யமான வழியில் பொறுமைக்கு ஓர் நல்ல உதாரணமாக விளங்கினார். 'பொறுத்தவர் பூமி யாள்வார்' என்றபழமொழி அம்மகானுபாவரின் சரித்திரத்தில் நிதரிசனமாக விளங்குகிறது. பொறுமை யுடையவன் பகவானைத் தேட வேண்டியதில்லை, பகவான் அவனைத் தேடிக் கொண்டு வருகிறார். இதுவும் பாரதத்தால் நன்குவிளங்கும்.

 

"குணம் செத்தால் போகும்; ரூபம் சுட்டால் போகும்'' என்று நாம் சாதாரணமாகச் சொல்வதுண்டு. துஷ்டன் துறவியைப் போல வேஷம் போடுவான்; ஆகையால், கெட்ட குணத்தை மாற்றுவது எவராலும் எந்நாளும் ஆகாத காரியம். குடும்பி துறவியைப் போன்று காவியாடை யுடுக்கலாம். கையில் கமண்டலம் தண்டம் பவித்திரம் முதலியவற்றைக் கொள்ளலாம். ஆனால், சம்சார வாசனை அவனை விட்டு நீங்காது. தாரேஷணை, தனேஷணை, புத்திரேஷணைகளை அவன் விடவியலாது. துவைதம் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று மதக் கோட்பாடுகளிலும் தனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு என்று சொல்லிக் கேட்பவர்கள் நம்புமாறு இனிப்பாகப் பேசி விடலாம். சமயம் வாய்ப்பின், ஏதேனும் ஒன்றை மிகவும் உயர்த்தியே கூறவேண்டியதாகி விடும். இப்படி 'உள்ளொன்று வைத்துப்புறம் பொன்று பேசும் குணம்' அம் மனிதன் இம்மண்ணுலக வாழ்வை விட்டு நீங்குகிற வரையில் அவனை விடுகிறதில்லை. அதை மாற்றவும் முடிகிறதில்லை. என்ன தான் நன்மை செய்தாலும் தீய சுபாவ முடையவர்கள் நற்குண சீலர்களாகிறதில்லை. 'பன்னாகந் தனக் கமிர்தம் கொடுத்தாலும் விடமொழியப் பயன் கொடாதே' என்றார் வில்லிபுத்தூரார் பாரதத்திலும். இதற்கு உதாரணமாக மகா பாரதத்தில் துரியோதனனை எடுத்துக் கொள்வோம். திருதராஷ்டிரன் அவனுக்கு எவ்வளவோ நீதிகளை எடுத்துக் கூறினான். பீஷ்மர்விதுரர் முதலான மகாத்மாக்களெல்லாம் எவ்வளவோ நீதிகளை அவனுக்கு எடுத்தோதினார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே நேரிற் சென்று,

 

சூதினா லரசி ழந்து நின்றுணைவர் சொன்ன சொல்லும் வழுவாதுபோய்

ஏதிலார்களென நொந்து தண்ணிழலிலாத கானினிடை யெய்தியும்
தீதிலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில்

கோதிலாத குருகுலமகீய வவருரிமை நண்பொடு கொடுத்தியே

 

என்று பலவாறு அவனை வேண்டியும் அவன் 'ஈ இருக்கும் இடமெனினும் இப்புவியில் யான் அவர்க்கு அரசு இனிக் கொடேன்.' என்று தானே கூறினான். கடைசியில் அவன் அடைந்த கதி யென்ன? அமர்க்களத்தில் மாண்டொழிந்து போனதை யன்றி செல்லுங்கால் நலன் ஏதேனும் கொண்டு போயினானா? இல்லை யல்லவா? இதனால், 'துர்க்குணமுடையவர்களின் வாழ் வெல்லாம் என்றும் பகற்காலத் தில்லாமல் இருளிலேயே தொடங்கி இருளிலேயே ஒடுங்குகின்றது என்பதும், 'யார் எவ்வித மாகத்தான் முயற்சி செய்தாலும் பிறவிக் குணத்தை மாற்றுவது இயலாதென்பதும் பெறப்படுகின்றதன்றோ? சற்குண சம்பன்னன் பகவத் கிருபைக்குப் பாத்திரனாகி, இகத்திற் புகழெய்தி சகல சுகங்களையும் அனுபவித்து பரத்தில் மோக்ஷத்தையும் அடைகின்றான். அவன் வாழ் நாட்களில் சூர்யன் அஸ்தமிப்பதே இல்லை.

 

''எங்கும் நிறைகின்ற பொருளே'' என்று பெரியோர் பகவானைப் போற்றுவார்கள். பரம்பொருளான சர்வேஸ்வரன் சர்வ வியாபியாயிருப்பதால் நாம் அவரைப் பரிபூரணர் என்று துதிக்கின்றோம். இதை உலகிலுள்ள சகல விதமான மதஸ்தர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், கடவுளை எங்கும் நிறைந்தவரென்றால் எந்த விடத்திலும் அவர் தானே வியாபித்திருக்க வேண்டும். அவரைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்க முடியாதல்லவா? ஒரு இடத்தில் ஒரே காலத்தில் ஒரு பொருள் தானே இருக்க முடியும்? அப்படியிருக்க மனிதர்களாகிய நாமென்ன, இன்னும் மற்ற ஜீவராசிகளென்ன, இவை யெல்லாம் இருக்கின்றனவே என்ற ஆசங்கை ஏற்படலாம். நாமும் ஏனைய ஜீவராசிகளும் உள்ள இடத்தில் பகவான் இல்லையென்றால் அவரது பரிபூரணத்துவத்திற்கு குறைவு ஏற்படுகிறது. இந்த ஆசங்கையை அத்வைதம் விளக்கமாகத் தீர்க்கிறது. அக் கொள்கைப்படி பிரம்மம் ஒன்றே உளது. "கரந்த சில்லிடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும், கரந்தெங்கும் பரந்துளன்'' என்கிறபடி அதுவே சகல லோகங்களிலும் நிறைந்து வியாபித்துள்ள வஸ்து. ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான்; அவனைச் சுற்றிப் பல நிலைக் கண்ணாடிகள் இருக்கின்றன. அக்கண்ணாடிகளனைத்திலும் அம்மனிதனுடைய ரூபம் பிரதிபிம்பிக்கின்றது. ஆனால் அந்த மனிதன் அக்கண்ணாடிகளில் இல்லை. அது போல உலகிற் காணப்படும்மற்ற பொருள்களனைத்தும் பிரம்மத்தின் பிரதி பிம்பமேயாகும். மாயையால் அஞ்ஞானிகளான நமக்குப் பிரம்மமானது சூர்யனாகவும், சந்திரன் நக்ஷத்திர கோளங்களாகவும், சேதனா சேதனப் பொருள்களாகவும் காணப்படுகின்றது. ஒருவன் இருட்டில் போகும் போது வழியிற் கிடக்கும் பழுதை அவனுக்குப் பாம்பு போலத் தோன்றி மனதைச் சலிக்கச் செய்துவிடும். அது பழுதை தான் என்றறிந்தவுடன் அவனுக்கிருந்த பயம் விலகுகின்றது. அதுவே மாயை. இந்த மாயை நீங்கிவிட்டாலோ 'அகம் பிரம்மாஸ்மி' என்று சந்நாஹம் பண்ணுகிறான். இந்த மாயை விலகவே பக்தர்கள் பகவானை புஷ்ப தீப தூபங்களால் ஆராதனம் செய்கிறார்கள்.



'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது ஆன்றோரின் அமுத மொழி. இதற்கு உதாரணமாக ஒரு சிறு நிகழ்ச்சியை இங்கு எடுத்துக் கூறுவோம். ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் இராஜபுதனத்தில் யாத்திரை செய்து கொண்டு வரும் பொழுது ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுது கோடை காலமான தால் கொடிய பாலைவனங்களைக் கடந்து போவது அவருக்கு மிக்க சிரமமாகவே இருந்தது. சுவாமிகள் தரிகட்டம் (Tarighat) ‘ஜங்ஷனை 'நோக்கி இரண்டாம் வகுப்பு வண்டியில் தமது அன்பர்கள் அளித்த' டிக்கட்'டை எடுத்துக் கொண்டு பிரயாணம் செய்தார். வழியில் வெயிற் கொடுமையால் விடாய் தணிக்கத் தண்ணீர் கிடைக்காமல் வருந்தினார். இடை வழியிலுள்ள ‘ஸ்டேஷன்'களில் குடி தண்ணீர் விற்கப்படுவதாயினும், இவரிடம் காவி யுடையும், கமண்டலமுந் தவிர வேறு ஒரு பைசாவும் இல்லாததால், தவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அவருக்குப் பக்கத்திலுட்கார்ந்திருந்த தனிகரான அன்பரொருவர் துட்டு கொடுத்து தண்ணீர் வாங்கி, பருகிய வண்ணம் சுவாமிகளைப் பார்த்து, “நீங்கள் ஏன் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாகாது? பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை யன்றோ? இப்பொழுது என்னிடம் பொருளிருந்தமையால் நான் நல்ல 'ஐஸ்' கலந்த தண்ணீரைப் பருக வியன்றது.'' என்று வழி யெல்லாம் கேலியாகப் பேசிக்கொண்டே வந்தார். சுவாமிகள் மறுமொழி யொன்றும் புகலாது மௌனம் 'சர்வார்த்த சாதகம்' என்று தரிகட்டத்தை யடைந்து, சிறிதும் இரக்கமின்றி தகிக்கும் வெய்யிலில், ஒரு சிறு ஓட்டுக் கட்டிடத்தின் வாயிலோரத்தில் தமது உத்த ரீயத்தை விரித்துச் சோர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் சோற்றைக் கண்டோ இரண்டு நாட்களாயின. பசியோ படாத பாடு படுத்துகின்றது. இச்சமயம் அவருடன் யாத்திரை செய்து வந்த அவ்வன்பரும் தின் பண்டங்களை இன்பமாய்ப் புசித்து விட்டு, சுவாமிகளுக்கருகே வந்து தாம் பூலம் தரித்துக் கொண்டே பின்னும் கேலியாகப் பேசத் தொடங்கினார். அப்பொழுதும் சுவாமிகள் வெகுண்டாரில்லை. இங்ஙனமிருக்கும் போது முன் பின்னறியா வேதிய ரொருவர், ஒரு பாத்திரத்தில் கறி, பலகார வகைகள், அன்னம் முதலியவற்றுடன் ஒரு செம்பில் தண்ணீரெடுத்துக் கொண்டு சுவாமிகளைத் தேடி வந்து முகமலர்ச்சியுடன் 'சுவாமி! உண்ண வாருங்கள், காயுங் கறியும் கற்கண்டும் பாயசமும் கொண்டு வந்தேன். ஆயாசம் நீங்க ஐயனே வாருங்கள்' என்றழைத்தார். சுவாமிகள், இவர் வேறு யாரையோ குறித்துத் தவறாக நம்மை அடையாளம் தெரியாமல் அழைக்கின்றார் போலும், என்றெண்ணி என்னையா அழைக்கின்றீர்கள்? 'என, அவ்வேதி யர் " ஆம்! ஆம்! தங்களையே நான் அழைக்கின்றேன்.'' என்றார். சுவாமிகள் " என்னை எப்படி நீர் அறிவீர்?'' என்று வினவ, அவர் "நேற்றிரவு கனவில் ஸ்ரீராம சந்திரமூர்த்தி எனக்குப் பிரசன்னமாகி, தாங்கள் இப்பொழுது அமர்ந்திருக்கும் இதே இடத்தைச் சுட்டிக் காட்டி, 'இன்று இதே வேளையில் இங்கு உட்கார்ந்திருக்கும் சந்நியாசிக்கு அறுசுவை யுண்டி நீ அளித்தல் வேண்டும் 'என்று கட்டளையிட்டு மறைந்தார். தம்மையும் இதே இடத்தில் இப்பொழுது அமர்ந்திருப்பது போலவே காட்டியருளினார். அதனால் அமுது கொண்டு வந்தேன், நான் கனவிற் கண்ட துறவியும் நீரே தான். வாருங்கள்'' என்று கட்டாயப்படுத்தி ஓர் நிழலின் கண் அழைத்துச் சென்று, ஆசனமிட்டு, அருந்த நீர் கொடுத்து வயிறார உணவளித்தார். 'ஆகா! என்ன பக்தவாத்ஸல்யம்.' என்று அறிவு வந்தவராய் ஐயனுடன் கேலியாகப் பேசிய அவ்வழிப் போக்கர் ஆச்சரியத்துடன் தலை குனிந்து வெட்கி யேகினார். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பதை அனுபவ பூர்வமாய் அடைந்த சுவாமிகளும் பசி தீர உண்டு பரமானந்தபாராயினார்.

 

"இதென்ன பிரம்ம வித்தையோ?'' என்று சாதாரணமாக ஓர் சுலபமான காரியத்தைக் குறித்துப் பேசும் போது சொல்வதுண்டு. இப்படிச் சொல்லுவதால் பிரம்மவித்தை யென்பது ஏதோ ஓர் உயர்ந்த விஷயம் என்பது பெறப்படுகிறதல்லவா? பிரம்மவித்தை என்பது என்ன? இதை பிரம்மஞானம் என்றும் பரவித்தை யென்றும் இதனை யடையும் மார்க்கத்தை சிரேயஸ் மார்க்கம் என்றும் கூறுவர் ஆன்றோர். இதைத்தான் ஆங்கில பாஷையில் (Theosophy) என்றும் வழங்குகிறார்கள். 'தியாசபி' என்பது ஓர் கிரேக்கப்பதம். இதனைப் பிரிக்கும் போது (தியாஸ்) அதாவது பிரம்ம '(ஸோபியா) ஞானம் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. தற்காலம் இந்தியாவின் பல பாகங்களில் நவீனமான முறைகளோடு பிரம்மஞான சங்கங்கள் திகழ்கின்றனவே; இவற்றின் உண்மையான பூர்வ நோக்கங்கள் பரவித்தையைப் பரப்புவதே யாகும். ஆனால் இவற்றில் நவீன நாகரீப் பழக்க வழக்கங்கள் பலபுகுந்து விரவி யிருக்கின்றமையால் உண்மையான நோக்கங்களைப் பகிர்முகமாகக் காண்பது சுலபமாயில்லை. பிரம்மஞானம் என்பது நூதனமல்ல. சிருஷ்டிக்காலம் முதல், முதல் முதலாக மக்களுக்கு மதவுணர்ச்சி ஏற்பட்ட காலந் தொட்டு, அதற்கு முன்பும் இந்த ஞானம் இருந்திருக்கிறது. ஆனால் இதனை அறிந்து தமது அனுபவத்திற் கடைப்பிடித்து உணர்ந்த மகான்கள்தத்தம் அனுபவங்களுக் கேற்ப முறைகளை வெளியிட்டார்கள். பிரம்ம ஞானமென்பது ஒன்று தான், ஆனால் அதை அடையும் மார்க்கங்கள் மட்டும் வெவ்வேறாயிருக்கலாம். ''வேறுபடும் சமயமெலாம் புகுந்து பார்க்கின், மாறுபடும் கருத்தில்லை'' என்பது பெரியோர் வாக்கு. ஒவ்வொரு மதத்தின் உண்மைகளையும் ஆராய்ந்து பார்த்தால் உயிர்ப்பாகம் என்றும், உடற்பாக மென்றும் இரண்டாகப் பிரிக்கப்படும். இவ் வுயிர்ப்பாகம் ஞான காண்ட மென்றும், உடற்பாகம் கர்மகாண்ட மென்றும் அவற்றின் தத்துவங்கள் பிரிந்து விளங்கும். சமயங்களில் ஞானகாண்டத்தைப் பொருத்தவரையில் வித்தியாசமில்லை. கர்மகாண்டத்தைப் பற்றிய வரையில் வேற்றுமைகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் அவ்வச் சமயங்கள் தோன்றிய காலத்தில், நாட்டின் நிலைமை, காலச்சக்கரம், தீர்க்க தரிசிகளின் நோக்கங்கள் ஆகிய இவைகளுக்குத் தகுந்தபடி கர்மானுஷ்டான முறைகளும், ஆசாரங்களும், உபாஸனா முறைகளும் தோன்றின. மதஸ்தாபகர்க ளனை வரும் அதீத ஆனந்தானுபவமுடையவர்களாதலால் அவர்கள் கர்மானுஷ்டான முறைகள் வேறுபட்டாலும், ஞானகாண்ட உண்மைகள் ஒரே விதத் தன்மை பெற்று, ஒரே பரம்பொருளை வருணிக்கின்றன. அந்த பிரம்ம வித்தையை, ஞானமார்க்கம் கர்ம மார்க்கங்களைச் சிறிதும் வழுவில்லாமல் அனுஷ்டிப்பது மிகவும் சிரமமான காரியமாதலால் தான் 'இதென்ன பிரம்ம வித்தையா?' என்னும் வினா நிகழ்கின்றது. இந்த கடினமான மார்க்கத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதுதான் சிரம சாத்யம். அதைக் காரியத்திற் கொண்டுவந்த பிறகு அம்மகானுக்கு எதுவும் நிகரில்லை. பகவான் அவன் சொற்படி ஆடுகின்றார்.

 

"நல்ல புல்லும் நாவரணைப் புல்லும்" புற்களில் இரண்டு வித முண்டு. சாதாரணமான புல் பசுக்களுக்கு இன்றி யமையாத ஆகாரமாகின்றது. இந்தப் புற்களோடு நாவரணைப் புல் என்று இன்னொரு விதப் புல்லுண்டு. இதுபார்வைக்குப் பச்சைப்பசேலென்றிருக்கும்; இளவிளவென்று தழைத்து வளர்ந்திருக்கும். ஆனால் இப்புல் பசுக்களின் நாக்கை யறுத்துவிடும். இந்த நாவரணைப்புல் பார்வைக்குந் தளதள வென்று செழிப்பாய் ஓங்கி யுயர்ந்து வாட்ட சாட்டமாய் வளர்ந்திருப்பதால் மாடுகள் ஏமாற்றப்பட்டு நாவறுப்புண்டு கஷ்டப்படும். ஆகையால், வெளித் தோற்றத்திற்குப் பகட்டா யிருப்பவர்களை ஆராயாமல் நம்பி அவர்களுடன் சகவாஸம் செய்து விடலாகாது. புத்திமான்கள் தம் விவேகமாகின்ற விளக்கால், மாயையாகிய கங்குலைப் போக்கி உண்மையான வழியை யறிந்து சன்மார்க்கத்தைக் கடைப்பிடித் தொழுகுகிறார்கள். அவிவேகிகள் ஆய்ந்தோர்ந்து பாராமல், மாடுகள் எப்படி ஏமாந்து நாவரணைப்புல்லை மேய்ந்து துன்பப்படுகின்றனவோ, அதுபோல துட்டரோ டிணக்கங் கொண்டு அவத்தைப்படுவர்.

 

"மனமென்னும் மாடு" மனம் ஓர் மாட்டிற்குச் சமானம். மனமானது ஆன்மாவால் தூண்டப்படும் ஓர் தெய்வீக உணர்ச்சி யுடையது. ஆன்மாவைப் பெரியோர் பசுவென்பர். ஆகவே இந்த மனமென்னும் மாட்டை அறிவென்னும் அருங்கயிற்றால், வைராக்கியம் அதாவது மன உறுதியென்னும் கட்டுமுளையிற் கட்டி, பகவந் நாமாவாகிய புல்லைப் போட்டு உண்பிக்க வேண்டும். மனிதர் உலகில் செய்யும் கார்யங்களனைத்திற்கும் இந்த மனமே காரணம். இதுதான் விவேகத்தினுதவியால் காலா காலங்களிற் செய்ய வேண்டிய சத்கர்மாக்களில் நம்மைத் துண்டுகிறது. மகான்கள் இந்த மனம் நாசமாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்கள். ஏனென்றால் மனம் நாசமானாற்றான் கர்மம் நசிக்கும்; கர்மம் தொடருகிற வரையில் பிறவி நம்மை விடவே விடாது. ஆகவே பிறவித் துன்பத்தை யொழிக்கப் பெரியோர் மனம் மாய வேண்டு மென்கிறார்கள். இம் மனோ நாசமுண்டாவதோ சாதாரணமானகார்யமன்று. இவ் வுலகத்திலேயே மிகவும் அரிதென்று கூறப்படுவது ஒன்றுளதாயின் அதுவே இம்மனதைக் கட்டுப்படுத்துவதாகும். ஆசைகளைவென்று பற்றுக்களை ஜயித்த பாக்கியசாலிகளான பெரியோர்களுங்கூட, ''சிந்தையை யடக்கியே சும்மாயிருக்கிற திறமரிது'' என்றும், ''சிந்தை தான் தெளியாது சுழலும் வகை யென்கொலோ'' வென்றும், அஞ்சிக் கூறுகின்றனர். ஆனால் பெரியோர்கள் மனதை அடக்க வேண்டுமென்று மட்டும் சொல்லவில்லை. அதற்கு ஹிதமான உபாயங்களையும் ஆங்காங்கே அவரவர் அனுபவசித்திக் கேற்பக் கூறியிருக்கின்றார்கள். அனுதினமும் சிறிது சிறிதாக பொருள், பெண் இவற்றிலுள்ள ஆசைகளை விட்டு வரவேண்டும். மனதை, ஐம்புலன்களையும் தூண்டாதவாறு தடுத்து வர வேண்டும்.


 பொறி வாயிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்கம்
 செறி நின்றார் நீடுவாழ் வார்.


என்னும் பொய்யா மொழிக்கிணங்க இந்திரியங்களை யடக்கியவர்களே முக்தி யென்னும் ஈறில்லாப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவர். இதை எப்படிச் செய்வது? முதலில் கண்ணை எடுத்துக் கொள்வோம். இதற்கு எந்த வஸ்துவையும் பார்க்கக்கூடிய சக்தி யமைந்திருக்கிறது. இக்கண் பரஸ்திரீயைப் பார்க்கும் போது அதன் மூலஸ்தானம் - - அதாவது யஜமானான மனம் இச்சை கொண்டு, தேக அவயவங்களாகிய துதர்களைத் தூண்டி, தன்னிச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வரையில் இடையறாமல் முயற்சிக்கின்றது. ஆகவே மென் மேலும் இன்ப துன்பமோ, பாபமோ சம்பவிக்கின்றது. அதனால் பிறன் மனைவியைக் காணும் போது இரண்டு நிமிஷங்களுக்குக் கண்களை மூடிக்கொள்வது ஓர் சுலபமான ஆரம்பப் பழக்கம். இப்படிச் செய்து கொண்டு வந்தால் கொஞ்சகாலத்தில் இந்த இந்திரியத்தை வசப்படுத்திவிடலாம். இப்படி ஒவ்வொன்றையும் படிப்படியாக வென்று மகான்கள் நற்கதி யடைந்தார்கள்.

 

''மனிதனும் மிருக சுபாவமும்''  'படி' என்று இப்பூலோகத்திற்கு ஓர்பெயருண்டு. ஏனென்றால் முக்தியடைவதற்கு இது ஒரு படிப்பாயிருக்கின்றமையால் தான். தேவலோகத்திலுள்ளவர்களும் நெறி தவறி நடப்பார்களானால் அதால் ஏற்படும் பாபத்தைப் போக்கிக் கொள்ள பூலோகத்திலேயே வந்து பிறந்து விமோசனமடைய வேண்டியவராயிருக்கிறார்கள். ஆலால சுந்தரர், கைலாசத்தில், பூசையினிமித்தம் பூக்கொய்து கொண்டிருந்த பூவைகளான கமலினி அநிந்திதை ஆகிய இரண்டுடேரைடம் கண்டு காதல் கொண்டதால், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்தி செய்து கொள்ள இவ்வுலகத்தில் வந்து தோன்ற நேர்ந்தது. இவ்வளவு மேன்மை வாய்ந்த இவ்வுலகில் ஜன்மமெடுப்பதன் பயன் கேவலம் பொருள் தேடுவது மட்டுமல்ல. மாதர் வலையிற் சிக்கி மாய்வதற்கும் மனிதன் இவ்வுலகில் போன்று கிறதில்லை. அழிவற்ற ஞானத்தைச் சம்பாதிக்கவே நாம் இவ்வலகிற் பிறந்துள்ளோம். ஆனால் சுபாவத்தில் நம்மிடம் மிருகத் தன்மையே மிகுதியாயிருக்கின்றது. பன்றி சாக்கடைகளில் விழுந்து புறள்வதும், மலம் முதலயவற்றைத் தின்பதுமாகக் கொழுத்து வளர்ந்து யதேச்சையாகத் திரிகின்றது. அது போல மனிதரும் வயிறார உண்பதும், மலபந்தங்களால் மூடப்பட்டிருக்கும் விஷயாதிகளிற் கிடந் துழல்வதும், ஓர் முடிவும் குறிப்புமின்றி கண்ட இடங்களில் அலைந்து திரிவதுமாகக் காலத்தை வீணாகக் கழிக்கின்றனர். நாயின் சுபாவங்களும் மனிதரிடத்தில் நிறைந்திருக்கின்றன. அதைப் போல் நன்மை தீமை தெரியாமல், நாய் கண்ட எச்சிலைகளிலெல்லாம் வாயை வைத்துத் தின்பது போல் மனிதனும் ஒழுகி அல்லற் படுகின்றான். நாய் மாம்சமும் இரத்தமும் உள்ள தாக நினைத்து வெறும் எலும்பைக் கடித்து, கடைசியில் தன் வாயிலிருந்து வெளிப்படும் இரத்தத்தை அந்த எலும்புத் துண்டிலிருந்து வருவதாகக் கருதி மகிழ்ந்து அருந்துவது போல், இன்பமே எள்ளளவு மில்லாத விஷயங்களில் இன்பமிருப்பதாகக் கருதி ஒருவித அசட்டு ஆனந்தத்தை யடைகின்றனர் மனிதர். இன்னும் கவனித்தால், ஒரு எச்சிலையைக் கண்டால் நாய் தானேஅதை உண்ண முற்படும். வேறு நாய்கள் வந்தால் இடங்கொடுக்காது. அதுபோல மனிதரும் சுய நலப்பிரியராய் அலைகிறார்கள். நாயைப் போலவே எடுத்ததற்கெல்லாம் மனிதனுக்குக் கோபமும் வருகிறது. உண்பொருள் கண்டவிடத்திற்குக் காக்கைகள் காகா'வென்று கத்திக்கொண்டு ஓடுகின்றன. அதுபோல மனிதரும் சோறுகண்ட இடமே சுவர்க்கமென்று அலைகின்றனர். புலி எதிர்ப்பட்ட மனிதரைக் கொல்லுகிறது. அது போல் மனிதன் பிறரை ஹிம்சிப்பதிலேயே தாம் மகிழ்ச்சி யடைகின்றனர். தந்திரத்திற்கு நரிகளை உதாரணமாகச் சொல்வதுண்டு. நரியைப் போலவே மனிதரும் நடந்து கொள்ளுகிறார்கள். ஆகவே, பகுத்தறிவு ஒன்றைத் தவிர, மிருகங்களுக்குள்ள இயற்கையான சுபாவங்கள் யாவும் மனிதரிடம் பொருந்தி யிருக்கின்றன. அந்தப் பகுத்தறிவுதான் இது பாபம், இது புண்யமென்று மனிதனுக்கு விளக்கிக்காட்டுகிறது. பெரியோர்களால் வரையறுக்கப்பட்ட விஷயங்களைக் கவனித்து நன்னெறியைக் கடைப்பிடித்து ஒழுகாவிடில் மனிதப் பிறவியெடுத்ததின் பயன்தான் யாது? மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள பேதந்தானென்ன?

 

 

 

''அசட்டுக்கு ஐங்கலக்காமம்" என்று சாதாரணமான ஓர் பழமொழி மக்களிடையில் வழங்குவதை நாம் கேட்டிருப்போம். இதனால் காமம் உண்டாவதற் குரிய பல காரணங்களில் அசட்டுத்தனமும் ஒன்று என்பது தெளிவாய் ஏற்படுகிறது. மனதிற்கும் தேகத்திற்கும் நல்ல முயற்சியும் உழைப்பும் இல்லாவிட்டால் அவை மதமடைந்து தீய காரியங்களில் தலை யிட்டுக் கொள்ளத் துணிகின்றன. அதிலும் 'ஓடுகிற பாம்பை மிதிக்கின்ற வயது' என்று சொல்வது போன்ற யௌவனமும், தேகபலமும், அயோக்யர்களுடைய உறவம் உண்டாகி விடுமானால் காமமென்னும் விஷம் உள்ளங்கால் வழியாக தலைக்கேறி விடுகிரது. இந்த நிலையில் தான் "காமத்திற்குக் கண்ணில்லை''
என்று சொல்லுவதும். இந்த யௌவனத்தில் துஷ்பிருத்யங்களில் ஒருவன் பிரவேசிக்கச் தொடங்கி விடுவானானால் அவன் ஆயுள் முழுதும் அவை அவனை விட்டு நீங்கா. இக்காலத்தில் தான் மாதா பிதா குரு. ஆகிய மூவரும் ஒருவனுடைய நடவடிக்கைகளை நன்கு கவனித்து அவனை நல்வழிப் படுத்த வேண்டும். இங்ஙனம் எவர் தம் பிள்ளைகளைக் காப்பாற்றுகின்றார்களோ அவர்கள் தான் கண்கண்ட தெய்வமாவர். அவ்விளமைப் பருவத்தில் கல்வி கற்பதிலேயே அதிக ஊக்கமுடையவர்களா யிருக்கும்படிப் பெற்றோரும் ஆசானும் அவனைக் கட்டுப்படுத்தி அவனுடைய ஒழுக்கத்தில் கண்ணுங் கருத்துமா யிருக்க வேண்டும். கூடியவரையில் கன்ல யௌவனத்தை யடைந்த தமது பிள்ளைக்கக் கல்வியி னிமித்தம் வெளியூர்களில் தனியே இருக்கவிடாமல் இருப்பது பெற்றோர் கடன். முந்நாளில் மாணவர்கள் குருகுலவாஸம் செய்தார்கள். பிள்ளைகளை ஆசானிடம் ஒப்புவித்து விட்ட பிறகு அவர்களுக்கு எவ்விதக் - வலையு மில்லாதிருந்தது. அக்கால மாணவர்களின் சுவாதீனமான குருகுல வாழ்வு மனதிற்கு அளித்த உல்லாசத்திற்கும் உற்சாகத்திற்கும் தற்கான மாணவர்கள் பெரிய நகரங்களில் கல்வியினிமித்தம் வந்து அடையும் உற்சாகத்திற்கும் பேதம் உண்டு. சத்யத்திற்கும், ஒழுக்கக் குறைவிற்கும், துஷ்கிருத்தியங்களில் துழைவதற்கும், முற்கால மாணவர்கள் பெரிதும் அஞ்சினர். அக்கால கல்வி, கற்பிக்கும் ஆசான் பயிலும் மாணவர் ஆகியவற்றின் நிலைக்கும் தற்கால வியாபி விருத்திக்கும் உள்ள ஏற்றத் தாழ்வு இவ்வள உவன்று. ஆதலில் இளமையில் ஊறும் பரிசுத்த இரத்தமானது அசட்டத்தமான காரியங்களில் விநியோகம் செய்யப்படாமல் நன்னெறியின் இன்று நிலவத் தத்தம் புத்திரர்களைக் காப்பாற்ற வேண்டுவது பெற்றோரின் கடமையாகும். இல்லையேல் ஐங்கலக்காமம் ஆகிய ஆழ்ந்தகடலின் - நவில் அகப்பட்டுத் திசை தெரியாது தவிக்கும் கலத்திற்கு போகியுழல்வர். அதனால் இம்மை யின்பங்கள் நசித்துப்போம். இங்ஙனம் நன்னெறியின் கண் நிற்பதே 'பரலோக சாதனம்' என்று பெரியோர் கூறுவர்.

 

''சேஷ்டையின்றிப் பிரதிஷ்டை யில்லை." சிலர் பெரியோர்களை நிந்திப்பதால் தமக்குப் பெருமை யுண்டாகுமென்று கருதுகின்றனர். இது வீண் முயற்சியே யாகும். பெரியோர்களைத் தாழ்த்திப் பேசுவதால் விளைவ தெல்லாம் அபகீர்த்தியே யாகும். அறிஞர்கள் புல்லறிவுடையோர் தம்மை நிந்தித்துப் பேசும் போது பொறுமையுடன் இருந்து விடுகிறார்கள். ஆகவே நிந்தனை செய்கின்றவர்களின் வாய்க்குச் சேதமேயன்றி வேறில்லை. அவர்களை நிந்தித்து எழுதுகின்ற பேனாவுக்கு நஷ்டம்; மைக்கு வீண் செலவு; காகிதத்திற்கு வீண்கருப்பு; அறிவுக்கு அனர்த்தம்; அகத்திற்கு வியர்த்தம். பெரியோரை நிந்திக்கும் புன்மையரைக் கண்டால் நாலுபேர் இகழ்ந்து காறித் துப்புவார்கள்; அதனால் அவமானம். மேலும் பெரியோரை நிந்தித்து வாழ்ந்தவர் உலகில் இதுவரையில் எவருமில்லை. ''வைதான் வாழும் எனில் வியத்தக்கான் " என்பர் நாலடியாரில். அதாவது "பெரியோர்களை நிந்தித்தவன் வாழ்கிறதில்லை. அப்படி வாழ்வானாயின் அது அதிசயிக்கத் தக்கதாகும்'' என்பதே. தெய்வ நிந்தனை, குரு நிந்தனை, பெரியோர் நிந்தனை செய்பவர் நிந்தனையிலேயே தமது மனம் வாக்குக் காயமாகிய மூன்றும் ஊறி ஞானத்தின் வளர்ச்சித் தடைப்பட்டு, மூர்க்கத் தன்மை மிக்குற்றுப் பெரியார் வெறுப்புக்கு ஆளாகி, உண்மையான இன்பமற்று ஏங்குவர். அறிஞர்கள் "சந்திரனைப் பார்த்து நாய்குரைத்த போதிலென்ன? - தாழ்ச்சி தானே'' என்று மதியாது, அன்னோர் தலைவாயில் மிதியாது புறக்கணிப்பர். ஆதலால், சேஷ்டையின்றிப் பிரதிஷ்டையில்லை யென்பது அறிவிலிகட்கு ஒவ்வாது; நிந்தனைக்கு அடுக்காது.

 

''நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?'' என்ற ஓர் அற்புத வசனம் உண்டு. சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கு நஷ்டமில்லை. குரைத்துக் குரைத்து நாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடும். ஊரிலுள்ளவர்கள் அடித்துக் கொன்று விடுவார்கள். தெருவில் மோட்டார் வண்டி சப்தமிட்டுக் கொண்டு போகும் பொழுது நாய்கள் குரைத்துக் கொண்டே முன் சென்று மறிப்பதுண்டு. சில சமயம் குரைக்கின்ற வெறியில் சக்கரங்களில் அகப்பட்டு இறர்தும் போவது சகஜம். அதுபோலப் பிறரைத் தூற்றுவதையே தமது தொழிலாகக் கொண்ட பேதையர் நாய்களைப் போல் குரைத்து, நரிகளைப்போல், ஒரு பயனுமின்றி, விரதம் சுகம் ஆகிய இரண்டில் ஒன்றையேனும் கருதாமல் ஊளை யிட்டு, தேகத்தில் நல்ல பலமும் கையில் தனமும் இருக்கும் போதே அறஞ் செய்யாது வயோதிகத்தில் ஒடுங்கிப் போய் நரகக் குழியில் வீழ்கின்றனர். கோடி நாய்கள் ஒன்று கூடிக் குரைத்தாலும் சூரியனுடைய பிரகாசத்திற்குக் குறை வேற்படுகிறதில்லை. நிஷ்களங்க பக்தர்களை எத்தனை ஆயிரம் பேர் சேர்ந்து தூற்றினும் அவர்கள் பக்திநிலை மாறுகிறதில்லை. எத்துணைத் துன்பப்படுத்தினாலும் சகிப்புத் தன்மை அவர்களை விட்டு நீங்குகிறதில்லை. எத்துணை நவீன இயந்திரங்களை வைத்து இறைத்தாலும் சமுத்திரம் வற்றாது. எந்தப் பகவான் சாதுக்களையும் பிற மனிதர்களையும் படைத்தாரோ அதே பகவான் தான், உலகத்தில் தேள், நண்டுவாய்க்காலி, பாம்பு முதலிய விஷ ஜந்துக்களையும் பிறப்பித்திருக்கின்றார். அது போல, துஷ்டர்களும் உலகில் என்றும் இருந்தே தீருவர். உலகச் சரித்திரத்தை ஊன்றிப் பார்ப்போமானால் ஆதிகாலந் தொட்டு இன்றளவும் எல்லா நாடுகளிலும் பெரியோர்களுக்கு விரோதமாய்க் கிளம்பினவர்கள் அநேகர் காணப்படுகின்றனர்.'' ஒரு கன்னத்தில் அறைந்தால், மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு " என்று எந்த மகானுபாவர் பொறுமையை உணர்த்தி ஹிதோபதேசம் செய்தாரோ, அவரே சிலுவையில் உயிரோடு கொல்லப்பட்டார். ''நபரதாரம் கச்சேத்'' என்ற மகா வாக்கியப்படி பிறன் மனை விழைதல் பஞ்சமா பாதகங்களில் ஒன்றென்பதை உணர்ந்தும், சுபாவ குணத்தாலும் காம மயக்கத்தாலும் பிரதாப லங்கேஸ்வரனான ராவணன் சீதையைக் கவர்ந்து திரிலோகாதிபதி என்ற ஸ்தானத்திலிருந்து கணத்தில் இறக்கப்பட்டான். துஷ்ட சுபாவ முடையவர்களுக்கு நல்லோர் ஹிதோபதேசம் செய்தாலும் அது அவர்கள் காதுகளில் ஏறுகிறதில்லை.'' புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று " என்று நன்றே சொன்னார் கம்பரும். " மந்திரமற்றார் உற்றது உரைத்தாய் மதியற்றாய் " என்று விபீஷணன் பலவாறு இடித்துக் கூறியும் இராவணன் செவி சாய்க்கவில்லை. இவ்விதக் கெட்ட சுபாவமுடையவர்களை எப்பொழுதும் திருத்தி நல்வழிப்படுத்துகிறதென்பது சாத்தியமில்லை. அவர்களை விட்டு நீங்குவதே நல்ல நெறி என்பர் பெரியோர்.  "திருந்தார்' என்றே பெரியோர்கள் இத்தகையாரைப் பெயரிட்டு அழைப்பது வழக்கம். தாரகாசுரன் புத்திரர்களான, தாரகாஷன், வித்யுந்மாலி, கமலாக்ஷன் என்னும் மூவருக்கும் 'திருந்தார்' என்று பெயர். " திருந்தார் புரமெரித்தார்'' என்பர் பெரியோர். எட்டிக்காயை எவ்வளவு சத்பதார்த்தம் சேர்த்துப் பக்குவப்படுத்தினாலும் நல்ல சுவையுடையதாகிறதில்லை. ஆகவே, கெட்டவர்களை அவர்கள் போக்கில் விட்டு விடுவதைத் தவிர வேறு நிவர்த்தி யில்லை

 

"என் செய்வான் தோன்றினேனே" என்று பக்தர்கள் இரங்குவார்கள். ஒரு சமயம் பக்தி மேலீட்டால் தன்னைக் காத்தருளுமாறு கடல் வண்ணனை - கண்ணணை ஆழ்வார் அழைக்க, அப்பொழுது எம்பெருமான் "த்ரைவர்ணிகாதிகாரமான உபாயங்களில் உமக்கு அந்வயமில்லை என்று நீர் முறையிடுகின்றீர் - சரி! ஸர்வாதிகாரமான அர்ச்சனம், ஸ்தோத்திரம் முதலியவற்றில் உமக்கு ஏதாவது அந்வய முண்டா?'' என்று வினவ, ஆழ்வார் "ஐயோ! அதிலும் அடியேனுக்குப் பிடிப்பில்லையே, என் செய்வேன்" என்று கையை விரித்தார். மேலும் "கள்ளார் துழாயும் கணவவரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால், புள்வாயோ ரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதாருள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே'' என்றபடி கண்ணிற் கண்ட பூக்களைக் கொணர்ந்து கொணர்ந்து பெருமான் திருவடிகளிலே ஸமர்ப்பிக்க வேண்டியது பிராப்தமாயிருக்க, அது செய்கின்றேனில்லை; இவ்வளவு கஷ்டமும் வேண்டா; வாய்க்கு வந்த நான்கு சொற்களைச் சொல்லி ஸ்தோத்திரமாவது செய்யலாமே; அதுவம் செய்யப் பெற்றிலேன்; அவ்வளவு சிரமமும் வேண்டாம்; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேகம் கொண்டிருக்கலாமன்றோ? அதுவும் இல்லை. இப்படி ஒருவிதத்திலும் எம்பெருமான் விஷயத்தில் நான்மன நாட்டம் அடையப் பெறாதவனான பின்பு, ஆட்டின் கழுத்தில் தொங்குகின்ற முலைக்கும் எனக்கும் என்ன வித்யாஸம்? என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!!'' என்று பின்னும் இரங்குகின்றார். இதிலிருந்து இறைவனிடத்து பக்தி செலுத்தி, தொண்டு செய்யாத பிறவி பயனற்றது. வாலறிவன் நற்றாள் கட்கு அன்பு பூண்டொழுகாத ஜன்மம் வியர்த்தம்; சம்சார சாகரத்திலே மூழ்கிக் கடைத்தேற வழி தெரியாது தவித்துக்கொண் டிருத்தலே பத்தியற்றவர்களின் கதி. எங்ஙனமாயினும் இறைவனிடத்துக் கிஞ்சித் பக்திசெலுத்தி "தொல்லையிரும் பிறவி சூழும் தளை'யை நீக்க வேண்டுமென்றே அடியார்கள் முறையிடுகின்றார். ஜீவன் முக்தர்களான அவர்கள் இங்ஙனம் பிரலாயிப்பதன் காரண மென்ன? அது அலா நெறிக்கே திரியும் மக்களைத் தட்டி யெழுப்பி நல்லறிவு கொளுத்த இயல்பாக உண்டான அருளினால் எழுந்த பிரலாபமேயன்றி வேறல்ல. மன பரிபக்குவ மடைந்து பகவானுடைய கிருபைக்கு அவர்கள் பாத்திரரானது போதாமல் அந்த முக்தி சாதன வழியை மாந்தர்க்குப் புகட்ட வேண்டு மென்னும் கருணையால்


 போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனையமாட்டேன்
 தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்பமாட்டேன்
 காதலால் நெஞ்சமன்பு காந்திலேனது தன்னாலே
 எதிலே னரங்கர்க்கெல்லே என் செய்வான் தோன்றினேனே.

 

என்று, உலக சுபாவமான குணத்தைத் தமக்கிருப்பது போலக் கொண்டு துதிக்கின்றார்கள். இவ்வித பாசுரங்களால் பயனடைய வேண்டியவர்கள் நாம் தான்.

 

"வேண்டு போ தழவாள் சிரிப்பாள் விலைமாது.'' ஆடவர்களின் மனதை வசப்படுத்த வேண்டி பெண்கள் சமயத்திற்குத் தக்கபடி அழுவதும் சிரிப்பதும் ஸ்வபாவம். புத்திசாலியா யிருப்பவன் பெண்கள் அழுவதைக் கண்டு பரிதாபப்படுவதும், சிரிப்பதைக்கண்டு மகிழ்வதும் கூடாது. தங்கள் இஷ்டப் பூர்த்திக்காகத் திடீரென்று கண்களில் கல நீர் ததும்ப விடுவார்கள். விலைமாதர்கள் தாங்கள் படும் நோயைக் கருதாமல் பணத்தில் மட்டும் கருத்துடையவர்களாய் வாயிற்படியில் நின்று கொண்டு வழியே செல்லுகின்ற யௌவனர்களைக் கண்டு தாம்பூலம் தரித்தவாயுடன் சிரித்து மெல்ல அவர்களை இழுக்கப் பார்ப்பாள்.

 

''பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் கொள்பவன் பித்தன்.'' குணத்தைக் கருதியே யன்றிப் பணத்தை மட்டும் கருதி பிசாசுகளை விவாகம் செய்து கொள்வது ஒருவனுடைய வாழ்வையே குலைத்து விடும். மான வெட்கங்களுக்கு அஞ்சி பதிபக்தியும் அடக்கமும் உள்ள ஸ்திரீயை ஒருவன் அடைந்து விடுவானானால் அதைவிட அவன் பெறுதற்குரிய நன்மைகள் வேறில்லை. பொருளை மட்டும் கருதி அடங்காப் பிடாரிகளை வேட்கின்றவர்கள் அவள் ஆடுகின்ற ஆட்டங்களுக்கெல்லாம் அடங்கி, தனது பெருமையும் செல்வாக்கும் அழிந்து எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றிப் போவான்.

 

''பெண்களிருப்பிடமும் பேய்களிருப்பிடமும் ஒன்று என்று துன்பப்பட்ட குடும்பி மனம் வருந்திச் சொல்லுகிறார்கள். பேய் பிடித்தவன் தன் விருப்பப்படி எதையும் செய்ய முடியாமல் பேயின் இஷ்டப்படி ஆடுகிறான்; தனக்குத்தானே பேசிக் கொள்ளுகின்றான்; சிரிக்கின்றான்; ஆடுகிறான் பாடுகிறான். அதுபோல நற்குண மற்ற பெண்டிரிடம் சிக்கிய ஆடவன், தன் சுய விருப்பை அடக்கிக் கொண்டு மனைவியின் இஷ்டப்படி ஆகிறான்; முன்பின் யோசியாமல் பொருளைச் செலவிடுகின்றான்; சிற்றின்ப ஆனந்தத்தால் பல்லைக் காட்டிச் சிரிக்கின்றான்; மான மிழந்து மதி கெட்டுப் போகின்றான் - மதமபிடித்து அலைகின்றான். ஆனால், நமது செயலில் இவை யாவும் அகப்பட்டிருக்கின்றனவா? பலவிதங்களிலும் ஆராய்ந்து நற்குணப் பெண்டிரெனக் கண்டு காதலித்து மணந்த ஸ்திரீயே பிறகு பேய் போல ஆகி விடுகின்றாள்? அதற்கென்ன செய்வது? என்று சிலர் வினவுவர். இதுவும் உண்மை தான். உலகத்தில் நமது சங்கற்பப்படி எதுவும் நடைபெறுகிறதில்லை என்பது சரியே. அப்படி யதேச்சையாகச் சம்பவித்து விட்டால், தமது ஆற்றலினாலே அவர்களை அடக்கி நல்வழிப் படுத்த வேண்டும். அதுவும் இயலாது போயின் தாமரை இலையிற்பட்ட நீர்போல பற்று இருப்பது போலக் காட்டி யுக்தப்படி விலகியும் நெருங்கியும் இருந்து வாழ்நாட்களைக் கழித்தல் வேண்டும். இப்பேர்ப்பட்ட நிலைகளை வதிக்கப் புராண இதிகாசங்களிலே உதாரண பூர்வமாக எத்தனையோ கதைகள் கூறப்படுகின்றன. அவற்றைவிட நமக்கு உற்ற துணை வேறேதும் இல்லை யென்பதை நாம் நன்கு அறியக்கடவோம்.

 

 

"கோபத்தை விட்டவன் தவலய மாள்வான்.'' மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் சத்வம், ராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்களில் ஒன்றையோ, இரண்டையோ அல்லது மூன்றையுமோ மாறிமாறி அடையுந்தன்மையினர். இவற்றுள் ராஜஸ குணம் அதிகரிக்கும் போது கோபம் உண்டாகின்றது. கோபமானது சிறிது மேலிட்டாலும் நற்குணங்கள் நற்செய்கைகளாகிய யாவும் மறைந்து போகின்றான். தவத்தாற் சிரந்த பெரியோர்களையும் கோபம் வஞ்சித்து விடுகின்றது. கடவுளை யொத்த கருணையுடையாரையும் கோபம் ஏய்த்துப் பாவங்கள் செய்யுமாறு தூண்டி விடுகின்றது. செல்வத்தாலும், தவத்தாலும் பதவியாலும் உயர்ந்தாரையும் அதுதாழ்வான நிலைக் கிறக்கி விடுகின்றது. " கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான், கோபத்தால் நகுஷனும் கோலம் மாறினான், கோபத்தால் இந்திரன் குவிசம் போக்கினான், கோபத்தால் இருந்தவர் கோடி கோடியே என்கின்றனர் பெரியார். பல்காலும் நிதானத்தோடு முயன்ற ஒருவர் இயன்ற வரையில் கோபத்தை விட்டு, இன்னும் அதனை முற்றும் விட்டொழிக்கத் தக்க வழியில் தன்னைப் புகுத்தவல்ல சதாசாரியனைத் தேடிக்காடு மேடுகளிலெல்லாம் அலைந்து சுற்றிக் கடைசியாக இமய மலையின் கண்தவஞ்செய்து கொண் டிருந்த மகான் ஒருவரைக் கண்டு வணங்கி, அவரிடம் அடிமை பூண்டு தொண்டியற்றிக் கொண்டு வந்தார். அந்த ஞானாசாரியரும் தம்மை வந்தடைந்த சீடனுக்கு அனுதினமும் "கோபத்தை விட்டவன் குவலய மாள்வான்'' என்று உபதேசித்துக் கொண்டே வந்தார். சில நாட்கள் செல்ல, குருவை அவ்விஷயத்தில் சோதிக்க வேண்டு மென்ற ஆவல் சிஷ்யனுக்குண்டாயிற்று. குருவிடம் உபதேச நிமித்தம் சென்றான் சிஷ்யன். பல விஷயங்களைக் கோவையாக எடுத்துரைத்துக் கொண்டு வரும் போதே குரு சிஷ்யனைப்பார்த்து 'கோபத்தை விடாதவன் கடைத்தேறுகிறதில்லை " என்றுபதேசித்தார். சீடன் காது கேட்காதவன் போல் நடித்து "என்ன! என்ன!'' என்றான். குரு ஒருமுறை இருமுறை மும்முறையும் சொன்னார். சிஷ்யன் மென் மேலும் செவிடன் போல் நடித்தான். குருவுக்குக் கோபம் வந்துவிட்டது. மறு முறை கடு கடுத்துச் சொன்னார். உடனே சிஷ்யன் பணிவுடன் "சுவாமி! தாங்களும் அதை இன்னும் விடவில்லையென்று தோன்றுகிறதே'' என்றான். குருவுக்குக் கோபம் அதிகரித்தது; 'அடே! முட்டாள்! கோபத்தின் சொரூபத்தை நீ மிகவும் கண்டறிந்தவனோ? அது எப்படி யிருக்குமடா?'' என்று முறு முறுத்துக் கேட்டார் சீடனும் "அது இப்படித்தான் இருக்கும் " என்று குருவைப் பார்த்துச் சொல்லிவிட்டு அவ்விடம் விட்டகன்றான். கோபத்தை விடாதவர்களுக்கு இம்மையிலும் நன்மையில்லை. மறுமையிலும் மேன்மையில்லை. வீடு அடைவதற்கும் அவர்கள் உரியவர்களல்லர் 'கோபம்' என்னும் நோய்க்கு சாந்தம் - பொறுமை' என்பதே மருந்து. இந்த விஷயத்தை மிகவும் தெளிவாகவும் நன்றாகவும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் "சாந்தமுலேக சௌக்கியமு லேது'' என்ற கீர்த்தனத்தின் அனுபல்லவி சரணங்களில் உதாகரித் திருக்கின்றார்.

 

"விருப்பும் வெறுப்பும்" ஆகிய இவையிரண்டும் கூடாதென்று பெரியோர் கூறுவர். விருப்பு கூடாதென்பது சரியே. ஆனால் வெறுப்பும் ஆகா தென்பது எதுபற்றி? "உலகத்திலுள்ள பொருள்க ளனைத்தும் ஈஸ்வர சங்கற்பத்தால் உண்டாகி கொஞ்சகால மிருந்து பின்பு அழிந்து போகின்றன வாதலின், நாமேன் அந்தப் பொருள்களிடம் பிரீநியையோ அப்பிரீதியையோ கொள்ள வேண்டும்?' என்று நம்மை நாமே ஓர் கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். இதனால் விருப்பத்தையும் வெறுப்பையும் நாம்கொள்ள வேண்டுமென்பது பெறப்படுகிறது. ஆனால் இதிலிருந்து இன்னொரு கேள்வி யுண்டாகும். அதாவது ஒரு பொருளினிடத்து விருப்பத்தையாவது வெறுப்பையாவது கொள்ளாமற் போனால் அந்தப் பொருளைப்பற்றிய கவலை நம்மை விட்டொழிகின்றது. குழந்தையிடம் நாம் பிரீதியையாவது அப்பிரீதியையாவது கொள்ளாமலிருந்தால் அக்குழந்தையை வளர்ப்பதில் நமக்குக்கவலையில்லாமற் போகுமன்றோ வெனில் இது உண்மைதான். நாம் எந்தப் பொருளைப் பற்றியும் கவலைப்படக்கூடா தென்பதே பெரியோர்களின் கருத்து. ஆனால் நம்முடைய கடமையை நாம் செய்ய வேண்டியது அவசியம். இவ்விஷயம் கர்ம யோகத்தில் விதிக்கப்பட் டிருக்கிறது. செய்ய வேண்டியகாரியங்களைச் செய்யாமல் தவிர்ப்பதும், செய்யத் தகாதவற்றைச் செய்வதும் தோஷமாகும். மனைவி மக்கள் சுற்றத்தார் முதலியோரை ரக்ஷிக்க வேண்டியது கர்மாநுசாரியின் கடமையாகும். அவன் தன் கடமையைச் செய்தே தீர வேண்டியவன். ஆனால் அபிமானத்தை மெல்ல மெல்ல விடவும் வேண்டும். அவ்வாறு செய்வதற்கு நிதானமும் பொறுமையும் வேண்டும். செய்தால் சுகதுக்கங்களால் துன்பத்தை யடையாமல் இருக்க வழி பிறக்கும். இதனால் மன அமைதி ஏற்படுகின்றது. மன அமைதி ஏற்படுவதால் மனிதன் ஆத்ம விசார சாதனத்தை யடைவான் என்ற கருத்துடனேயே பெரியோர்கள் இங்ஙனம் விதித்திருக்கிறார்கள். ஆதலின் அபிமானத்தை யொழிப்பது அவசியமானாலும், அது நாளாவட்டத்தில் சாதிக்கக்கூடிய விஷய மென்பதையும், வெறுப்பும் விருப்பமும் கொள்ளாமற் போனாலும் தான் செய்ய வேண்டிய கடமையைக் குறைவறச் செய்ய வேண்டு மென்பதையும் புத்தி
 மான்கள் ஊகிக்கக் கடவர்.

 

''வானுளான் காணாய் நீ மாளா வாழ்கின்றயே.'' மெய்ஞான வழியைப் பற்றாத மானுடரைத் தடுத்து நல்வழிப்படுத்த பெரியோர்கள், "ஹே மக்களே!'' என்றழைத்து மெய்யுணர்த்துவதற்குப் பதிலாகத் தமது மனதை முன்னிலையாக நிறுத்திப் பேசுவது வழக்கம். ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் தமது,


 "தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளை நீக்கி
 அல்லலறுத் தானந்த மாக்கியதே - யெல்லை
 மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
 திருவா சகமென்னுந் தேன்”

 

என்ற பெருமை வாய்ந்த திருவாசகத்தில் "ஹே மனமே! நீ உலகில் அடைய வேண்டுவதென்று கருதி அல்லற்பட்டு எதெதையோ விரும்பி யலைகின்றனையே அவையாவும் நிலையற்றவை. நீ அடைதற்குரிய பரம புருடன் வானுளன்! அவனை நீ காண்பாய்!'' என்றார். " ஆனால் என் வாழ்வு பயனற்ற தென்று கருதுகின்றனையா?'' என்று மறுபடியும் வினவிய நெஞ்சிற்கு "ஆம்! ஆம்! நீ மாளா வாழ்கின்றாய்'' என்றார். பிறகு அந்த நெஞ்சம் "நான் எப்படி வீணாக வாழ்கின்றேன். நானியற்றும் தவறுகளெவை?'' என்று வினவிற்று. அப்பொழுது கூறுகின்றார். "நெஞ்சே! வசந்த காலத்திற்குரிய மன்மதனுடைய புஷ்பங்களாகிய பாணங்களின் பொருட்டாகவும், வெண்மை நிறமுள்ள பற்களையும் செந்நிறமுள்ள வாயையும் கருநிறமுள்ள குவளை மலரை யொத்த கண்களையும் உடையவர்களான மகளிர் பொருட்டாகவும் நீ துடித்து உருகுகின்றனை!'' என்றார். ஆனால் நான் என்ன செய்யவேண்டும்? என்றது அம்மனம். 'நாம் உள்ள இடத்திற்கு வந்து உடம்பு முழுவதும் உருகி நிற்குமாறு நம்மை அடிமை கொண்டவனாகிய சிவபெருமான் பரமாகாசத்தில் எழுந்தருளியிருக்கின்றான்; அவனை நீ சென்று காண்பாயாக " என்று மெய்யுணர்த்துகின்றார்,

 

"நின்னது குற்றம் உளதோ?'' மனிதர்கள் தமது குற்றத்தைத் தாம் அறிந்து இரங்கிச் சன்மார்க்கத்தைப் பற்றுகிறதில்லை, இன்ப முள்ள போது மட்டும் தலை கால் தெரியாமல் திரிந்து, கஷ்டம் வரும் போது "பாழுந்தெய்வமே! பழிகார தெய்வமே! நினக்குக் கண்ணில்லையா?'' என்று நிந்தனை புரிவர். இது அறிவிலிகளின் செய்கை, நுனி முறியாத அரிசிகொண்டு சமைத்த சோறுடன் மூவகைப் பழங்கள் கூடிய ஆறுவகைப்பட்ட ருசியோடு கூடிய ஆகாரம் செவ்வையாகச் சமைத்துவைத் திருக்க, அதனை உண்ணுதற்குரிய ஒருவன் அவ்வுணவை உட்கொள்ளாமல் பசியினால் வருந்துவது சோற்றின் குற்றமாகுமோ? நெருப்பிற் காய்ச்சிப் பிறகு ஆறும்படி செய்த தெளிந்த நீரில் பாதிரிப்பூ முதலிய குடிக்கும் நீர்க்கு நறுமணம் தரும் பண்டங்களைப் போட்டு வைத்திருக்கவும், அதனைப் பருகுதற்கு உரிய ஒருவன் பருகாமல் தணியாத தாக விடாயால் தவிப்பது தெளிந்த அத்தண்ணீரின் குற்றமாகுமோ? விசாலமாய்த் தேன் துளிகளைச் சிந்தி பூங்கொத்துகள் நிரம்பி மணல் நிரம்பிய சோலை யிருக்கவும், நல்ல வெயிலில் அச்சோலை நிழலில் தங்கி இளைப்பாறக் கூடியதா யிருக்கவும் அங்ஙனம் செய்யாமல் தெள்ளிய மணல் நிறைந்த நிழலற்ற பாலைவனத்தில் தகிக்கின்றவெயிலில் நின்று தவிப்பது சோலையின் குற்றமாகுமோ? ஆகையால் எமது தலைவனான சிவபெருமானே! குற்றம் உன்னுடைய தல்ல. பாவிகளுடையதே. ஆன்மாக்கள் தாம் இறைவனைத் தம் மனத்திலிருத்தி அவனது திருவடிகளைத் தியானித்து கடமையைச் செய்து வந்தால், உலகத்தில் உழல்வதற்குக் காரணமான தீவினைகள் யாவும் நெருப்பிடைப்பட்ட பஞ்சுபோல் அழிந்து போக, இயமனையும் பிறப்பு இறப்புக்களையும் தம்மிடம் அணுக வொட்டாது செய்தற் கேற்ற வல்லமையை எளிதிற் பெறலாம். அங்ஙன மிருக்கவும் இறைவனைத் தியானியாமலிருப்பது இவ்வான்மாக்களின் தீவினையேயன்றி, ஒன்றிலும் பற்றில்லாது தன்னுடைய சன்னிதான மாத்திரத்தால் உலகத்தைக் காரியப்படுத்தும் இறைவன் மீது குற்றங்கூற வழியில்லை யன்றோ! ஆதலின், அவனது சரணாரவிந்தங்களை விடாமல் பற்றிக்கொண்டு மாந்தர் நல்வழிப்படக் கடவர் என்கிறார் பட்டினத்தடிகள்.

 

"ராஜரிஷி ஜனகர்.'' ஒரு சமயம் ஜனக மகாராஜன் ஓர் பிராம்மணனிடம் மிகுந்த கோபங்கொண்டு அவனைத் தன் தேசத்திலிருந்து ஓடிப் போகும்படி கட்டளையிட்டான். அந்தப் பிராமணன் "ஐயா! ஜனக ராஜனே! உமது ஆக்ஞையின்படி நான் ஓடிப்போவதில் தடையில்லை. உமது ராஜ்யத்தின் எல்லை இன்னதென்று எனக்கு விளங்கவில்லை. சொன்னால் இந்தக் கணமே புறப்பட்டுச் சென்று விடுகின்றேன் " என்றான். ஜனக மகா ராஜா யோசித்தார்; ஒன்றுந் தோன்றாமல் பிரமித்துக் கொஞ்ச நேரத்தில் மறுமொழி புகல வாரம்பித்தார். "ஐயா! முன்னோர்களிடமிருந்து வந்த ராஜ்யத்தை நான் இப்பொழுது ஆண்டுவந்தாலும் அது எனக்குச் சொந்த மென்று நான் எப்படிச் சொல்லுவேன்? என் முன்னோர்களாண்ட ராஜ்யத்தை அவர்கள் தங்களுக்குச் சொந்தமானதென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது பொய்யாய்ப் போயிற்று. இந்த ராஜ்யம் உண்மையாகவே அவர்களுக்குச் சொந்தமானதாயிருந்தால் அவர்களிறந்து போனவுடன், அதுவும் அழிந்து போயிருக்க வேண்டும். அவ்விதம் அழிந்து போகவில்லை. எனக்குப் பிற்காலம் இவ்விராஜ்யம் அழியாதென்பதும் நிச்சயம். ஆதலின் இந்நாடு எனக்குச் சொந்தமன்று. பூமிதேவி ஒரு சமயம் "என்னை எத்தனையோ அரசர்கள் ஆண்டு வந்தனர். எல்லோரும் என்னைத் தங்களுக்குச் சொந்தமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேர்களுமிறந்தனர். நான் மட்டும் அழியாமலிருக்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறாள். ஆதலின் நான் எனக்குச் சொந்தமென்று சொல்லிக்கொள்ளும் இம்மிதிலை நாட்டை இதிலுள்ள ஜனங்களெல்லாம் துண்டு துண்டாகச் செய்து அவைகளைத் தங்களுக்குச் சொந்தமென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆதலின் மிதிலா நாடு எனக்குச் சொந்தமல்ல. என் பின்ளைகள் வசிக்கு மிடம் எனக்குச் சொந்தமோ வென்று பார்த்தால் அதுவும் எனக்குச் சொந்தமல்ல. என் தேகத்தைப் பார்த்தாலோ இப்போது இரத்தத்திலுள்ள பூச்சிப் புழுக்கள் தங்களுக்குச் சொந்த மென்று சொல்லிக் கொள்ளுகின்றன. இறந்து போனால் நாயும் நரியும் தங்களுக்குச் சொந்த மென்று சண்டையிடுகின்றன. மேலும் நான் யாரென்றாலோ அதுவே சந்தேகத்தில் வந்துவிட்டது. நான்தேகமல்ல, சதையல்ல, இரத்தமல்ல, எலும்பல்ல, மனமல்ல, இந்திரியமல்ல. இவ்விதம் நிலைகெட்டுச் சொந்தமென்ற பதமின்றி அவதிப்படும் நான் உம்மை ஊரை விட்டோடும்படி கட்டளையிட்டது அறிவீனம். ஆதலின் பிராமணா! நீர் உம்முடைய ஆயுட்காலம் முழுதும் உமக்கிஷ்டமான படி இந்நகரதிலேயே இரும்'' என்றான். இந்த ராஜரிஷியின் உபதேசத்தைக் கவனிப்பின் எவரும் அஹங்கரிப்பதற்குச் சற்றும் இடமில்லை.

 

"மாளா வாழ்கின்றயே" ஹே! பாழும் நெஞ்சே! நீ இறந்து படாமல் வீணாக வாழ்ந்திருக்கின்றாயே! என்றார் மாணிக்க வாசகப் பெருமான். மனம் மர்க்கட சுபாவ முடையது. தனது தன்மையை மறந்து தாழ்வான விஷயாந்தரங்களில் பிரவேசிக்கும் சுபாவ முடையது; தனது ஏவலாளராயிருக்கும் பஞ்சேந்திரியங்களை அடக்கி உண்மையான வழிகளில் புகுத்தாமல் வசந்த காலத்திற்குரிய மன்மதனது தாமரை மா அசோகு முல்லை நீலம் என்னும் பஞ்சபாணங்களின் பொருட்டாகவும், வெண்மை நிறமுள்ள பற்களையும் செந்நிறமுள்ள வாயையும் கரிய குவளை மலரை யொத்த கண்களையு முடையாரான மகளிர் பொருட்டாகவும் பதைத்துத் துடித்து இன்னல்களையே மதித்து உருகுமாறு விடும் கீழ்மையுடையது. மன்மதனுடைய மேற்கூறியபஞ்ச பாணங்களால் மனிதன் சுப்ரயோகம் விப்ரயோகம் சோகம் மோகம் மரணம் என்னும் ஐந்து துர் அவஸ்தைகளையும் அடைகின்றான். சுப்ரயோகத்தால் மாதரையும் அவர் அழகிய சொற்களையும் வடிவழகையும் கற்பனையென்னும் தனது நண்பனோடு கூடி ஆராய்கின்றான் மனிதன். விப்ரயோகத்தால் மகளிரின் நினைவு முதிர, அதனால் காதலென்னும் கற்றாழை மனதின் கண் முளைக்க, அம்மங்கையரைப் புல்லியணைய எண்ணி எண்ணி ஏக்க முற்று வெய்துயிர்ப் புண்டாகின்றது. தான் கருதிய காதலியைக் காணப் பெறாமையாலோ, அன்றி அடையப் பெறாமையாலோ காதல் கூர்ந்ததலைவனுக்குக் காம நோய் அதிகரித்து அவனை வாட்ட, வாட்டமுற்ற அவன்மனம் வெதும்பி உணவினிடம் துவேஷம் அதிகரிக்க அல்லற்படுகின்றான்.

 

இப்படிச் சோகித்த அவனுக்கு மோகம் மிகுந்தெழுகின்றது. இறைவன் வழிபாட்டால் மோனத்தை யடைய வேண்டிய மனிதன் மோக தாபங்கொண்டு அதன் பயனாக மயக்கத்தையும் பிதற்றுதலையும் மிகவடைந்து துயருறுகின்றான். இவ்வித அவஸ்தைகளை யனுபவித்த அவன் ஒரு வேளை தான் கருதிய காதலியை யடையப் பெற்றாலும், அவள் சொல்லையே சிரஸாவகித்து, அவள் கட்டளைப்படி யொழுகி அவள் கூறுவதே மறையென மயங்கி, நங்கையின் அவாவினைப் பூர்த்தி செய்விக்க வேண்டு மென்ற சங்கற்பத்தால் நாய் போலலைந்து, பொருளாசை பிடித்து, புத்தி மயங்கி, புன்றொழிலிலும் ஈடுபட்டு, தன்மை மயனாக வேண்டியவன் புன்மை மயனாகிப் புலம்பி வீனே திரிந்து விழலுக் கிறைத்த நீர் போலே வாழ்ந்து மாள்கின்றான். அன்றி, கருதியகாதலியை யடையப் பெறாமற் போனாலோ இன்னும் பெருந்துயருழன்று உயிரிறும் நிலையை எய்துகின்றான். ஆதலின், விரும்பிய பெண்ணை யடையினும் துன்பம்; அடையாமற் போயினும் துன்பம்; இரண்டின் எல்லையும் மரணமே. அது பற்றியே உருகா மனதையும் உருக்கும் எம் மண்ணல் மாணிக்கவாசகப் பெருமான் மனதை விளித்து "ஏ! நெஞ்சே! நீ இருப்பதினும் இறப்பதே மேல்! அடுத்துக் கெடுக்கும் பகைவர் போல் நீ எனக்கு நன்மையே பயப்பவன் போல் நடித்து படுகுழியி லழுத்துகின்றனையே! இனியேனும் உன் குறும்பை விடு! நலவழிப்படு! நீ அடைய வேண்டியது அல்லற்குரிய மாதரை யல்லவென்று அறி! ஆனந்தப் பிழம்பான ஐயன் ஐந்தெழுத்துப் பெரியன் என்பதைக் குறி! அதுவே சரி! இதைவிட நயமாய் உனக்கு நற்புத்தி கூறுவார் யார்?' என்று கூறுகின்றார். அஞ்செழுத்தானாகிய குஞ்சர முகத்தான் தாதையை வழிபடாத கெஞ்சு நஞ்சாய் மனிதனை மரண ஹேதுவான மார்க்கத்தில் புகுத்து மென்பதை நாம் அறியக்கடவோம்.

 

''ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே'' என்றார் தொண்டரடிப் பொடி யாழ்வார். உலகத்தில் மானிட ஜன்மம் என்பது ஜன்மாந்தா நற்றவங்களாலே பெறக் கூடியது. அதை வருந்திப் பெற்றாலும் பிறந்தவுடன் சில நாட்களுக்குப் பின்பும், சில மாதங்களிலும் சில வருஷங்களிலும் இறப்பவர் பெரும்பான்மையரே யன்றி

 (வேத நூற் பிராயம் நூறு) என்று வேதத்திற் கூறியுள்ளபடி நூறு வருஷமளவும் இருப்பவர் மிக்க அபூர்வமாகவே காணப்படுவார்கள். விதிவசமாய் அங்ஙனம் நூறு பிராயமளவும் வாழுந் தன்மையைப் பெற்றாலும், ஆராய்ந்து பார்க்குமிடத்து நொடிப் பொழுதும் நற்பொழுதாகக் கழிய வழியில்லை. சூர்யன் அஸ்தமித்து மறுபடி உதிக்குமானவும் உறங்குவது ஒரு நியமமாக வந்து விட்ட படியால் ஒரு தினத்திற்குள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை நித்திரையில் கழிகின்ற கணக்குப்படி ஒரு ஆயுளில் பாதியாகிய ஐம்பதாண்டுகள் நித்திரையில் கழிந்து போகின்றது. தாயின் சேயாய் யிருக்கும் சிசு அவஸ்தையில் சிலகாலமும், எத்சனை தீம்புகள் செய்தாலும் கோபித்துக் கண்டிக்க வொண்ணாதபடி செல்வப்பிள்ளைப் பருவத்திற் சில காலமும் கழிகின்றது, இந்த இரண்டையும் ஒருவாறு அறியாமை என்று ஒதுக்கி விட்டாலும் விடலாம். இவற்றிற்கு அடுத்தது ஒன்று இருக்கிரது; மிக்க பயங்கரமானது. அதன் பெயரைச் சொல்லவும் ஆழ்வார் நாகூசுகின்றார். ஏன்? துஷ்டன் பெயரை நாக்கொண்டு சொல்லக் கூசுபவர் 'அந்தப்பயல்' என்று சொல்லுவது போல ஆழ்வார் அது ஆகும்' என்கிறார். அது என்பது எது? அதுதான் யௌவகம்! அதுதான் விஷயாந்தரங்களிலே மனம் மண்டித் திரியும் பருவம். இந்திரியச் சிறையில் அகப்பட்டுத் தடுமாறி நிற்க இடி விழுந்தது போல வருகின்ற கிழத்தனத்தால் சில காலம் கழிக்க வேண்டி யிருக்கின்றது. யௌவனத்திற் செய்த எல்லையில்லாத குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் கொஞ்ச காலம் வருந்த வேண்டி யிருக்கின்றது. வறுமையாலும் பசியாலும் வாடுகின்ற காலம் சிலவாகவும், ஒரு புறம் பிள்ளை இறந்தான், மனைவி இறந்தாள் என்றுபலபடி கேட்டுத் துக்கப்பட்டு அழுது சோர்வதுமாகச் சில காலமும், இந்த சம்சார அவஸ்தையோடு இன்னும் நோக்கூடிய இடர் பலவாகப் புண்ய வசத்தாற் கிடைத்த இம்மானிடப் பிறவி வீணாகக் கழிந்து போகின்றது. இன்ப மனுபவிக்க எண்ணிலோ இன்னும் கொஞ்சம் ஆயுளை நீட்டிவைக்கக் கடன் வாங்க வேண்டியதே. ஆதலின் இன்பமுண்டோ? ஆத்ம விசாரம் செய்யச் சிறிதாகிலும் பொழுதுண்டோ? இல்லை! இல்லை! ஆதலாற்றான் ஆராய்ந்து பார்த்த பிறரும்'' என் செய்வான் தோன்றினேனே" என்கிறார். மானுட ஜன்மத்தினும் சிறந்ததில்லை யென்று சொல்லிவிட்டு அதற்கும் இத்துணை துன்பங்க ளென்று கூறுவீராயின் பிற்கு நான் என்ன தான் செய்வேன்? என்றால் - "யார் எப்படியானால் நமக்கென்ன? பெற்ற இப்பிறவியிலேயே நீ உய்யும் வழியைத் தேடு. இவ்வளவு தூரம் உனக்குக் கூறுவது நீ இப்பிறவியின் அருமையை யறிந்து பகவந்நாம வைபவத்தால் ஈடேற வேண்டுமென்ற எண்ணத்தாலே தான்'' என்பது இதன் தாத்பர்யம்.

 

"உலகம் மெய்யா? அல்லது பொய்யா?" என்பது ஒரு பெருங் கேள்வி. சத்யமான ஆத்மதாபமுடைய பெரியோர்கள் இதை ஒரு பெரிய கேள்வி யென்று கருதமாட்டார்கள். உலகம் பொய்யானா லென்ன? உண்மையானால் தான் என்ன? அதை யறிவதால் நமக்கு உண்டாகும் ஊதியம் ஒன்றுமில்லை. உலகில் சுக துக்கங்களிருக்கின்றன வென்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆதலால், சுக துக்கங்களை யொழித்து நித்தியானந்தத்தையடைய வேண்டுமானால் உலக ஆசைகளைத் துறப்பது நன்று, நிலையற்ற இன்ப துன்பங்களை மறந்து நித்யமான இன்பத்தை யடைய வேண்டுமென்ற விஷயம் மனதிற்குப் பிடிபடுகிற பொழுது உலகம் மெய்யானா லென்ன? பொய்யானா லென்ன? புத்திமான் ஆத்ம விசாரம் செய்ய வேண்டும். ஆத்மா இன்னதென்றும் அநாத்மா இன்னதென்றும் அறிந்துகொள்ள வேண்டும். 'நான்' என்பது இந்த சரீரத்தைக் குறிக்கவில்லை யென்றும், ஆத்மாவையே குறிப்பிடுகின்றதென்றும் உணர்ந்து அநாத்மாவாகிய தேகத்தில் அபிமானம் கொள்ளாமல் ஆத்மாவின் தன்மையை விசாரிக்க வேண்டும். ஆத்மா அழி வில்லாதது என்பதை ஏற்றுக் கொள்ளாத மதஸ்தர் எவருமில்லை. கடவுள் உண்டா? என்றால் சிலர் இல்லை யென்று நாஸ்திகவாதம் செய்வார்கள். உலகம் உண்டா? என்றால் சிலர் இல்லை யென்று தர்க்கம் செய்வர். பிரம்மம் உண்டோ? என்றால் சிலர் அதைக் கண்டது யாரென்று மறுப்பர். ஆனால் எந்த மனிதனும் தானுண்டா? என்பதைப் பற்றிச் சந்தேகிப்பதே கிடையாது. ஆதலின் எது நிச்சயமானதென்று ஒவ்வொருவனும் நம்புகிறானோ அதைப்பற்றி முதலில் ஆராயத் தொடங்கட்டும் என்று ஸ்ரீசங்கரர் அருளிச் செய்துள்ளார். இவ்வாறு தனக்குள்ளிருக்கும் ஆத்மாவின் சொரூபத்தைப் பற்றி விசாரம் பண்ணத் தொடங்குகிறவன் வேதாந்தியாகித் தன்னுடைய ஆத்மாவே அதாவது தானே எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமென்று நன் கறிந்து கொள்ளுகிறான். அதனால் ஆச்மாக்களிடத்தில் அவனுக்கு காருண்யம் - அன்பு உண்டாகிறது. அன்பென்னும் ஆற்றின் வழியே செல்பவன் ஆனந்த மென்னும் சமுத்திரத்தை யடைகிறான். 'உலகம் பொய்யா? மெய்யா?' என்பதைப் பற்றி அத்வைதிகள் உலகத்தைப் பொய் யென்றும் சொல்வதில்லை; மெய் யென்றும் கூறுகிற தில்லை. அத்வைத மதஸ்தாபகரான ஆதிசங்கரர். உலகம் பொய்யும் மெய்யும் கலந்ததென்கிறார். அங்ஙனம் பொய்யும் மெய்யும் கலந்த ஒரு வஸ்து உண்டா? எனில் உண்டு. நமது தேகத்திலிருக்கும் நகமும் மயிரும் தேகத்தைச் சேர்ந்தவைகளாயுமிருக்கின்றன. சேராதவைகளாயு மிருக்கின்றன. நகத்தையும் மயிரையும் தேகத்திலிருந்து சிறிது சீவினால் வலி உண்டாகிறதில்லை. ஆனால் நகத்தைச் சதையினின்றும் முற்றிலும் பிரிக்க முயற்சித்தால் உபத்திரமுண்டாகிறது. 'நகமும் சதையும் போல' என்று உலகத்தில் ஓர் பழமொழி வழங்குவதையும் நாம் கேட்கின்றோம். ஆதலின் நகம் தேகத்தில் சம்பந்தப்பட்ட தாயும் படாததாயும் இருக்கின்றது. உண்மையில் தேகமும் நகமும் மயிரும் வெவ்வேறாயினும் நகமும் மயிரும் தேகத்தினின்றே முளைக்கின்றன. அதனால் அவை சரீரத்திலிருந்து உண்டானவை என்று சொல்லத் தடையில்லை. இது பற்றியே அத்வைதிகள் உலகம் பொய்யும் மெய்யும் கலந்ததென்று கூறுகின்றனர்.

 

"பெண்டிரை நடத்தும் விதம்'' மனிதனுக்கு உரிய போகங்கள் எட்டு வகைப்படும். அவற்றுள் பெண் போகமொன்று. எந்த பொருளால் நாம் இன்பத்தை யடைகிறோமோ அதை நன்கு பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் தன் மனைவியின் வாயிலாக போகத்தை யடைவதுடன் இல்லறத்தையும் நடத்துகிற படியால் அவளிடம் என்றும் நிலையான அன்பு கொள்ள வேண்டியது மிக்க அவசியமாகும். ஒரு சமயம் அவளிடம் மிக்க அன்புடன் நடப்பதும் மற்றொரு சமயம் அடியோதண்டமாக வடித்துப் பிண்டம் பிடிப்பதும் ஒழுங்கான தல்ல. எப்பொழுதும் ஒரே விதமாய் - மிதமாய் நடந்து கொள்ளப் பிரயத்தனப் படுவதே மேலானதாகும். இதனால் ஸ்திரீகள் குற்றஞ் செய்யாதவர்களென்று நான் கூற முன்வரவில்லை. பிழை செய்தல் மனிதப் பிறவியெய்திய ஒவ்வொருவருக்கும் இயல்பு. குற்றமே செய்யாத ஆடவனும் ஸ்திரீயும் உலகத்திலில்லை. குற்றஞ் செய்வது ஒவ்வொருவருடைய விவேகத்தையும் அனுபவத்தையும் பொறுத்திருக்கிறது. ஆகையால், புருஷன் தான் மட்டும் குற்றஞ் செய்யாதவனென்று கருதி தன்மனைவியைப் பிழை செய்தாளென்று நினைத்து அவளைத் தண்டிக்க முயல்வது தருமமாகாது. தான் கௌரவமாக நடந்து கொள்வதாலும் பொறுமையாலும் தன்னை மனைவி மதித்து பயந்து நடந்து கொள்ளும்படி செய்பவனே புத்திசாலியாவான். அப்படியும் ஒரு ஸ்திரீ குற்றஞ் செய்பவளாகக் காணப்படின் நயமாக அவளைத் திருத்த முற்பட வேண்டும். அதனாலும் பயன் ஏற்படாவிடில் அவளை விட்டு விலகி இருப்பதே மேல், கோபத்தால் சிற்சில சமயங்களில் தன்னை மறந்து மிருதுவான சரீரமுடைய ஸ்திரீகளைத் தன் முழு பலத்தையும் உபயோகித்து அடித்து இம்சித்து அவள் உயிருக்கு துன்பமேற்படச் செய்து, பாபத்தை சம்பாதித்துக் கொள்வதுடன் ராஜ தண்டனைக்கும் ஆளாகின்றான் மனிதன். ஒரு விதத்திலும் நமக்குக் கட்டுப்பாடாக நடவாத மனைவியை என்ன செய்வது? என்று சிலர் வினவலாம். அவர்கள் பத்தாவிற் கேற்ற பதிவிரதை யுண்டால் எத்தாலுங் கூடி யிருக்கலாம், சற்றேனும் ஏறுமாறாக இருப்பாளே யாமாயிற் கூறாமற் சன்யாசங் கொள்'' என்பதை கவனிப்பார்களாக. சந்நியாசங் கொள்ள முடியாவிட்டால் - வேறொரு தக்க மனைவியைத் தேர்ந்து மணம் புரிந்துகொள்வது மிகவும் உத்தமமானது.

 

சொன்னதைக் கேளாதான் சுகம்பெற மாட்டான் என்று ஒரு பழமொழியுண்டு. குருவின் வார்த்தைப்படி நடவாமல் எதையும் ஆக்ஷேபிக்கும் குணமுள்ளவன் துக்கத்தை யடைகின்றான். முன்னொரு சமயம் விபீஷணனுடைய நட்பையடைந்த ஓர் நரன் தான் கடலில் தாராளமாய் நடக்கும்படி கிருபை செய்ய வேண்டு மென்று கேட்க விபீஷணன் அவ்வாறே யாகுக' என்று கூறி,

 

நன்மையுஞ் செல்வமு நாளு நல்குமே

தின்மையும் பாவமுஞ் சிதைந்து தேயுமே

சன்மமு மரணமுமின்றித் தீருமே

இம்மையே ராம வென்றிரண் டெழுத்தினால்

 

என ராம நாமத்தின் மான்மியத்தை உபதேசித்து, ராமநாம மடங்கிய ஒரு சீட்டை அவனுடைய முன் தானையில் முடிந்து '' அடே ! நீ இந்த முடிச்சையவிழ்த்துப் பாராமல் நம்பிக்கையுடன் போனால் சமுத்திரம் உனக்கு நடந்து போகக் கூடிய தன்மையி லிருக்கும். எந்த நிமிஷத்தில் நீ சந்தேகித்து இந்த முடிச்சை அவிழ்க்க யத்தனிக்கின்றாயோ அக்கணமே முழுகி இறந்துபோவாய் " என்றான். இதைக் கேட்ட அந்தணன் மிகுந்த நம்பிக்கையுடன் கடலைத் தாண்டிப் போனான்; மறுபடியும் வந்தான். இவ்வாறு சில நாள் சமுத்திரத்தில் தாராளமாய் நடந்து போய்க் கொண்டிருக்கையில் ஓர் வித கெட்ட கண்ணம் அவன் மனதிலுண்டாயிற்று. விபீஷணன் நம்முடைய துணியில் முடிந்திருப்பது ஏதோ ஒருவித பச்சிலை போல் தோன்றுகிறது. அதை நாம் கண்டு கொண்டால் எல்லோருக்கும் சொல்லி விடுவோமென்ற சந்தேகத்தால் நம்மை வீணாகப் பயமுறுத்தினார் போலும். அது இன்னதென்று பார்த்தே விடுவோம். பார்த்த பின் அநேகருக்கு அவ்விதப் பச்சிலையைத் துணியிற் கட்டிக் காசு சம்பாதிக்கலாம் என்று எண்ணி மெல்ல முடிச்சை யவிழ்த்தான். உடனே ஆழத்தில் முழுகிச் செத்தான். இதுபோல் எத்தனை காலம் ஈஸ்வரனிடம் நமக்கு நம்பிக்கை யிருக்கிறதோ அத்தனை காலம் வரையில் தான் நமக்குச் சகல நன்மைகளும் உண்டாகும். அத்தகைய நம்பிக்கை சிறிது குறையுமானால் நமது ஷேமங்களும் நசிக்கத் தொடங்கும்.


 "பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
 அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே யென்னும்
 இச்சுவை தவிர யான்போ யிந்திரலோக மாளும்
 அச்சுவை பெறினும் வேண்டே னரங்கமா நகருளானே”


சாமானியமாக எல்லோரும் இந்த பாட்டைப் பிறர் சொல்லக் கேட்டோ அல்லது தாமே படித்தோ இருப்பார்கள். இது நாலாயிரப் பிரபந்தத்தி லுள்ள மிக்க அருமையான பாசுரங்களில் ஒன்று என்பதும் பிரசித்தம். இதை யருளிச் செய்தவர் தொண்டரடிப்பொடி யாழ்வார் என்பதும் தெரிந்ததே. இதை இவ்வளவு விசேஷமாகப் பக்தர்கள் பாடிப் பரவசமாகிக் கொண்டாடுவதன் விசேஷ மென்ன வென்று கவனிப்போம். அரங்கமா நகருளானே! என்று பன்முறை துதித்த ஆழ்வாரை நோக்கி, பகவான் ஆழ்வீர் ! எமது பெயரைச் சொன்னவர்களுக்கு நாம் திருநாடளித்து வருகின்றோம். உமது ஸ்தோத்திரம் கேட்டு மெச்சினோம். அந்தத் திருநாட்டில் நீரும் வந்து எழுந்தருளியிரும்'' என்று கூற, ஆழ்வார், "இவ்வுலகத்தி லிருந்த படியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்குப் பரமபதத்தைப்போ யடைந்து அனுபவிக்கின்ற அந்த ஆனந்தானுபவமும் ஈடாகாது; ஆதலின் அது எனக்கு வேண்டாம்'' என்று அருளிச் செய்கின்றார். அத்தகைய திவ்யநாமத்திற்குக் காரணனாயிருக்கின்ற எம்பெருமானை எப்படி எந்த நாமத்தைச் சொல்லி யழைப்பதென்று கருதிய ஆழ்வார் பச்சைமா மலை போல் மேனி' என்றார். பசுமை, நீலம், கருமையாகிய நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபு. எம்பெருமானுடைய மேகத் திருமேனிக்குப் பச்சைமா மலை உவமை கூறினார். சாமானியமானமலை பகவானுடைய துளக்கலாகா நிலைக்கும் உயர்வுக்கும் ஒப்பாகுமேயன்றி, ஆராய்ந்து காணப் புகுந்தால் கண்ணையும் நெஞ்சத்தையும் குளிர்வித்து, சம்சாரதாபங்களை யெல்லாம் போக்குந் தன்மையும் எப்போதும் தியாகம் செய்வதற்கு உரியதாக இருத்தலும், பெருங்கருணைக்கு இருப்பிடமா யிருத்தலுமான பலகுண விசேஷங்களில் ஒப்பாகாமை நோக்கி “பச்சைமா மலை'' என்று பகர்ந்தார். “என்னும் இச்சுவை'' என்றும் இயம்பினார். அதாவது எம்பெருமானுடைய குணானுபவங்களை அனுபவிக்க வேண்டியதில்லை; சொன்னாலே போதும்; அதுவே அமுதத்தையும் வெல்லும் அருஞ்சுவையுடையது சுவை ஈயத்தைக்காட்டி யருளினார். ''யான் போய்' என்றார் அதன்பின், கேவலம் லோக விஷயாந்தர ஞாபகமானது நீங்கப்பெறாமல் பொன் வேண்டி, மண்வேண்டி, மங்கையர் காதல் வேண்டி வாழும் நான் கூட அந்த பாக்கியத்தை அடைவதானாலும் வேண்டேன் என்றார். போய் என்றதால் அந்தப் பரமபதத்தை யடைவதிலுள்ள அருமையை விளக்கினார். “இந்திரலோகம் ஆளும் அச்சுவை இனிய தன்று' என்று கூறாது ''அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்று உரைத்ததில் தாம் பரமபதத்தைப் பழித்தவராகாமல் திருநாம சங்கீர்த்தனத்தில் தமக்குள்ள ஆதா அதிசயத்தைக் காண்பித்தார். இதனால் நாம சங்கீர்த்தனத்தின் விசேஷம் விவரிக்கப்படுகின்றது.

 

“அழையா வீட்டில் நுழையா விருந்து'' என்பது ஒரு பழமொழி. ஆனால் இதை எல்லா இடங்களிலும் விஷயத்திலும் அனுசரித்து விட ஞானத்தை வேண்டி அலைகின்றவன் இதைக் கருதமாட்டான். அவன், அந்நியர் தன்னை யழைத்து போதிக்கும் வரையில் காத்திராமல் தானே வருந்தி மகான்களைத் தேடிச் சென்று சம்பாஷணையாலும், நல்லநூல்களின் ஆராய்ச்சியாலும், நல்லொழுக்கத்தாலும் ஞானத்தைச் சம்பாதிக்க வேண்டியவன். புஷ்பம் வண்டுகளைத் தேடிச் செல்வது வழக்கமில்லை. வெல்லம் ஈயிருக்கு மிடத்தை ஆராய்வதில்லை. குளத்தை வெட்டிவிட்ட பின் தவளையைப் பிடித்து அதில் விடவேண்டியதில்லை. புஷ்பத்தின் நறுமணம் வண்டுகளை அழைக்கின்றது. அதுபோல மகான்களின் புகழ்மணம் சிஷ்யர்களை அழைக்கிறது. அழைத்த பின் வந்த வண்டுகளை ஏமாற்றாமல் மதுவைத் தருகின்றது அம்மலர். அதுபோல மகான்கள் தம்மை வந்தடைந்தவர்களின் தாபத்ரயங்களைப் போக்கி அவர்களுக்கு ஆத்ம சாந்தியான அருந்தேனை யளிக்கின்றார்கள். மகான்களே புஷ்பங்கள், அவர்களைத் தேடி ஆத்மதாபமுடைய சிஷ்யர்கள் அலைந்து கண்டுகளிக்கின்றனர். ஆனால் சிஷ்யனைத் தேடுகிற குருவும் உண்டு. இவர்கள் ஆஸ்தியில்லாதவர்களென்று எளிதில் வெளியாகி விடும்.

 

“ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்' என்று சொல்லுவார்கள். ஞானிகளான சிலர் தங்கள் தேகத்தைக் காப்பாற்றுவதில் கவலை கொள்ளுகிறார்களே; அது ஏன்? அழிந்து போகும் சரீரம் எப்படியிருந்தால் என்ன? அந்த உடம்பை என் தண்ணீர் முதலியவற்றால் சுத்தம் செய்ய வேண்டும்? வேளை தவறாமல் உணவு கொடுத்து காப்பதன் கருத்து தான் என்ன? வெறுங் கூடையை எவரும் அறையில் வைத்துப் பூட்டமாட்டார்கள். அதுபோல உயிரற்ற சரீரம் ஒரு சிறிதும் பயன்படாது. பலவித நவரத்னங்களையும் ஆபரணங்களையு முடைய கூடையை அறையில் வைத்துப் பூட்டிப் பத்திரப்படுத்துவது போல சின்மயானந்தராகிய பரமாத்மா வசிக்கும் சரீரத்தை மகான்கள் வெகு கவனமாகப் பாதுகாக்கின்றனர்.

 

“ஞானமில்லாத ஜன்மம் வீணே.' மனிதப்பிறவி யெடுத்தவர்கள் இயன்ற அளவு ஞானத்தைச் சம்பாதிக்க வேண்டியது முக்கியம். அதைத் தேடாமல் கேவலம் பணத்தை மட்டும் தேடுவது அதமமானதாகும். விலங்குகள் சுயேச்சையாய்த் திரிவது போல் இவனும் கட்டுப்பாடின்றி சுற்றுகின்றான். பன்றி உடல் கொழுத்து அலைவது போல் இவனும் அலைகின் நாய்க்குக் கோபம் வருவது போல் மனிதனுக்கும் கோபம் வந்து விடுகிறது. காக்கைகள் பிணத்தை யடைந்து கொத்துவது போல் இவனும் பொருளாசையால் கண்டவர்களை யெல்லாம் கொத்துகிறான். மிகவும் துஷ்ட மிருகமான புலியைப் போல் மனிதனும் கண்டவரை துன்புறுத்துகிறான். நரியைப் போல மனிதனும் தந்திரசாலி. எருமை நல்ல தண்ணீரைப் பருகாமல், விழுந்து புரண்டு கலக்கிப் பின்பு நீரைக் குடிக்கிறது. மனிதனும் நூல்களிலுள்ள சத்தாசத் விஷயங்களைக் கவனித்து சத்தைக் கொள்ளாமல், எல்லாவற்றையும் கலக்கி, அதனால் மூளை கலங்கி, அறிவு கெட்டு மதிமயங்த் திண்டாடித் தெருவில் நிற்கின்றான் மிருகங்களுக்குள்ள சகல குணங்ளும் ஆராயுமளவில் மனிதனிடம் பூரணமாயிருக்கக் காண்கிறோம். ஆனால் பிராணிகளைக் காட்டிலும் இவன் எப்படி உயர்ந்தவன்? அந்தப் பகுத்தறிவு ஒன்றால் தான் அவன் மேலான பிறவியைப் பெற்றவனென்று கருதப்படுகிறான். அப்பகுத்தறிவாவது பாவம் இன்னது, புண்ணியம் இன்னது, இதைச் செய்வது தகும், இதைச் செய்தால் பாவம் சம்பவிக்கும், இது நன்மையைத் தரும் என்று இப்படி ஆராய்ந்து நடக்கும் அறிவு ஆகும். ஆதலின், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்.'' " கரும்பு உள்ள போதே ஆலையில் ஆட்டிவிடவேண்டும்.'' பிறவியின் பயனையடையப் பகுத்தறிவு வழிகாட்டுகின்றது. ஆதலின் அரிய இந்த ஜன்மத்திலேயே ஞானத்தைச் சம்பாதிக்க வேண்டியது மனிதனுடைய முக்கிய கடமை.

 

"கொக்கிற்கு ஒரே மதி" என்று சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். இதைக் குலசேகராழ்வார் ஒரு பாசுரத்தில் நன்றாக விளக்கி யிருக்கிறார். அதாவது "பகவானே! எனக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான். அதைத் தவிர வேறு எதையும் நான் உன்னிடமிருந்து அபேக்ஷிக்கவில்லை. எனக்குப் பொருள் வேண்டாம், பூமி வேண்டாம், புத்திரர் வேண்டாம், கீர்த்தி வேண்டாம், சுவர்க்கம் வேண்டாம், நரகம் வேண்டாம், மோக்ஷமும் வேண்டாம். இவற்றைக் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. என்னுடைய பிராரப்தகர்மாவுக்குத் தக்கபடி எனக்குச் சுகமும் துக்கமும் உண்டாகின்றன. என்னைநரகிலிட்டாலும் சரி, சுவர்க்கத்திற்கு அனுப்பினாலும் சரி, அன்றி எனக்கு மோஷமளித்தாலும் அளி. அவைகளைப்பற்றி எனக்குச் சிறிதும் விசாரமென்பது இல்லை. நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நான் எந்த ஜன்ம மெடுத்தாலும், எந்த லோகத்திலிருந்தாலும் உன் பாதத்தை என் மனம் பற்ற வேண்டும். உன் பாதாம்புஜமாகிய பஞ்சரத்தில் என்மாகிய கிளி சதாகாலமும் வாஸம் செய்ய வேண்டும். இந்த ஒரு பலனைக் கருதியே நான் உன்னிடம் பக்தி செலுத்துகின்றேன்.

 

"மையும் ஆமையும்" மைகளில் பலவித மைகள் உண்டு. ஒரு வித மையைக் கண்ணி லிட்டுக் கொண்டால் குளிர்ச்சி யுண்டாகும். பார்வை யதிகரிக்கும். மற்றொரு மையைக் கொண்டு துஷ்டர்கள் துர்நடத்தையுள்ள மாதர்களை வசியப்படுத்துவதாகச் சொல்லுகின்றனர். ஒரு விததெ மை எல்லோராலும் எழுத உபயோகப்படுத்தப் படுகிறது. இந்த மைகள் யாவும் கையையும் கண்ணையும் கருப்பாக்குகின்றன; கொஞ்சம் ஜலம் பட்டால் கருமை நீங்கிவிடுகிறது. இன்னொரு மை யுண்டு; அது யாவற்றிலும் உயர்ந்தது, மிகவும் சிலாக்யமானது, அதைத் தரித்துக் கொண்டால் சகல சம்பத்தும் உண்டாகின்றன. அந்தர்முக பகிர்முக சத்துருக்கள் அனைவரும் நாசமாவார்கள். உலகெங்கும் கீர்த்தி ஏற்படும். இதற்கு தருமனே சாக்ஷி. இந்த மை இன்னதென்று தெரியுமா? அதுதான் பொறுமை என்பது. இனி, மையை கவனிப்போம். எத்தனையோ கிணறுகளில் ஆமைகள் வசிக்கின்றன. நாம் அடிக்கடி ஆமைகளைப் பார்க்கவும் நேருகின்றது. அந்த ஆமைகளால் ஜனங்களுக்கு எவ்விதமான துன்பமும் நேருகிறதில்லை. ஜலம் சுத்தமாயிருக்க அநேகர் ஆமைகளைப் பிடித்துக் கிணறுகளில் விட்டு வைப்பதுண்டு. இவ்வாமைகள் சிறியனவாயும் இயன்ற அளவு ஏதோ சிறிது உதவிபுரிவனவாயும் இருக்கின்றன. இன்னொருவகை ஆமையுண்டு, அது பெரிய திருட்டு ஆமை; மனிதர்கள் கண்ணிற்படாமல் அது ஒளிந்து திரிகின்றது. அதை மனிதர்கள் கவனியாமலிருக்கிறார்கள். அதோ மிகவும் பெரியது. அது மனிதனை மரண பரியந்தம் ஒளிந்திருந்து கொல்லுகின்றது. அது தண்ணீரில் இல்லை. பூமியிலேயே சஞ்சரிக்கிறது. சில சமயங்களில் ஆகாயத்திலும் பறந்துவிடுகிறது. மனிதரைக் கண்டால் உடனே தாவிப்பிடித்துக் கொள்ளுகிறது? அந்த ஆமையின் பெயரென்ன தெரியுமா? அதுதான் பொறாமை.

 

"வளர்த்த கடா மார்பிலே பாயும்" என்று சொல்ல நாம் அடிக்கடி கேட்கின்றோம். ஒருவன் செய்த நன்றியை மறந்து அவனுக்கே கேடு விளைக்க முற்படுகிறவனை இவ்வாறு சொல்வது வழக்கம். இதை விளக்கக் கர்ண பரம்பரையான ஓர் கதை யுண்டு. அதாவது ஒளவை ஒரு சமயம் பிராமணர்கள் வசிக்கும் ஒரு அக்ரஹாரத்தின் வழியே சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது நடுப்பகல்; மேலும் கோடைகாலம். வெயிலின் தாபத்தை விடப் பசியின் தாபத்தால் ஒளவை மிக்க வருந்தினான். எவ்வளவு படித்து எத்துணைப் பட்டங்கள் வாங்கினாலும், லக்ஷ்மி கடாக்ஷம் சிறிதேனும் இல்லா விட்டால் யாரும் உலகில் சோபிக்க முடிகிறதில்லை. இன்று தமிழ் மக்களனைவரும் தலையால் வணங்கும் தகைமை சான்ற புலவரான கம்பர், அக்காலத்தில் பசியால் பட்டபாடு பதினாயிரமல்லவா? கம்பருடைய கவித்திறமென்ன? தமிழ்ப் புலமையின் உயாவென்ன? அவர், வேலி என்பவள் தருவதாக வாக்களித்த ஒரு படி நெல்லுக்காக மண் வெட்டி யெடுத்துப் பிசைந்து சுவர் வைத்து வருந்தவும் நேரிட்டதன்றோ? அதுபோல ஒளவை கூழுக்குப் பாடி குக்ஷியை நிரப்ப வேண்டி யிருந்தது. மூதாட்டி ஏதாவதுஉண்ணக் கேட்கலாமென்று ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே சென்றாள். எந்த வாயிற்படியையும் ஏறி மிதிக்க அவளுடைய கால்கள் இசையவில்லை. இங்ஙனம், பல வீடுகளைக் கடந்து செல்லும் பொழுது, ஒரு வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி யிருப்பதையும், உள்ளே சில அந்தணர்கள் கூடி 'சுவாஹா' என்று கோஷித்து அக்னி வளர்த்து ஹோமம் செய்து கொண்டிருப்பதையும் கண்ணுற்றாள். மாவிலைத் தோரணத்தைப் பார்த்ததும், ஒளவை இவ்வீட்டில் ஏதோ சுபச்சடங்கு நடை பெறுகின்றதென்று அனுமானித்து, தனக்கு ஏதாவது கிடைக்கு மென்று அவ்வீட்டின் வாசலிற் போய் நின்று கொண்டிருந்தாள். கதவு தாழிடப்பட்டிருந்தது. யாராவது வெளியில் வருவார்கள் என்று காத்திருந்தாள். கொஞ்ச நேரமானதும், மெல்ல கண்களைப் பிசைந்த வண்ணம் ஒருவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். வந்தவர் அந்த ஹோமத்கில் சம்பந்தப்பட்டவரென்பதை மூதாட்டி அறிந்து கொண்டது மன்றி, வாசலுக்கு நேராக உள்ளே சுவாலையுடன் எரிந்து கொண்டிருக்கும் தீயையும் பார்த்தாள். வெளியில் வந்த வேதியன் ஒளவையைப் பார்த்து "ஏ! கிழவி! இங்கென்ன வேலை உனக்கு? நில்லாதே! போ! போ! இங்கு ஹோமம் நடக்கிறது'' என்றான். ஒன்வை தனக்குச் சிறிது அன்னமளிக்கும்படி எவ்வளவு மன்றாடிக் கேட்டும், அப்பிராமணன் விரட்ட ஆரம்பித்தானே அன்றி, மரியாதையாகக் கூடப்பேசவில்லை. இவர்கள் செயலை வியந்த அன்னை ''உம்! வளர்த்த கடா மார்பிலே பாயும்" என்று சொல்லிவிட்டுப் படி இறங்கினாள். அந்தச் சமயம் உள்ளே யிருந்து இன்னும் இரண்டொருவர் வெளியில் வந்தார்கள். அவர்கள்'' இவள் யார்? என்னவோ சொன்னாளே! அது என்ன?'என்று கேட்டார்கள். " அந்தக்கிழம் என்னவோ 'வளர்த்த கடா மார்பிலே பாயும்' என்று சொல்லிக்கொண்டே போகிறது' என்றான் அந்தப் பிராமணன். உள்ளிருந்து வர்தவர்களில் ஒருவன் சிறிது குக்கியன். அவன் இதில் ஏதாவது விசேஷமான பொருள் இருக்க வேண்டும் என்று ஊகித்து, " அந்தக் கிழவி யாரோ தெரியவில்லை; அவளைக் கூப்பிடு " என்றான். ஒருவர் கூப்பிட ஒளவை திரும்பி வந்தாள். "கற்றோர் வாக்கு வீண் போகாது, நாம் ஏதோ ஒரு பழமொழியைப் பசிக் கொடுமையால் வெளியிட்டோம். அது உடனே பயனளித்து விட்டது.'' என்று அவள் உள்ளம் களித்து விரைந்து வந்ததும், அழைத்தவன் " கிழவி நீ சொல்லி விட்டுப் போனதன் பொருவென்ன?" என்று கேட்டான். இதற்குள் அங்கு பத்துப் பதினைந்து பேர் கூடி விட்டார்கள். உள்ளே இருந்தவாகளும் வாசலுக்கு வந்தார்கள். ஒளவை ஒரு அருமையான சிறு பிரசங்கம் செய்தாள்.'' வேதியர்களே! என்னை எல்லோரும் ஒளவை என்று அழைப்பார்கள். யாகம், ஹோமம் முதலியவை சுகாதார விதியை அனுசரித்துச் செய்யப்படுகின்றன. நீங்கள் 'சமித்து' என்று சொல்லும் அரசின் குச்சிக்குச் சில உயர்ந்த குணங்கள் இருக்கின்றன. அரச மரத்தின் அடியில் சில நிமிஷ நேரம் இருந்து, அந்தக் காற்றைச் சுவாசிப்ப தாலேயே தேகத்திலுள்ள பல வியாதிகள் நீங்குகின்றன. இக்காரணம் பற்றியே ஸ்திரீகள் அரசமரத்தைச் சில விசேஷ தினங்களில் சுற்றுகிறார்கள். இப்பொழுது நீங்கள் இயற்றும் 'ஹோமம்,'' அரசப்பிரதக்ஷிணம்' முதலியவற்றை யெல்லாம் நீங்கள் பிராமண கர்மாவென்று சொல்லுவீர்கள். அது உண்மையே. மனிதன் இகத்திலோ பரத்திலோ சிலவற்றை விரும்பி மேன்மையை யடைய முற்பட்டுச் செய்வதே கர்மா வாகும். அதைத்தான் 'கடமை' என்றும் கூறுவார்கள். அக் கர்மா வானது, காம்ய கர்ம மென்றும், நிஷ்காம்ய கர்ம மென்றும் இரண்டு விதப்படும். காம்யமாவது பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது, நிஷ்காம்ய மானது எவ்வித பிரயோஜனமும் எதிர் பாராமல் செய்யப்படுவது. அநேகமாக கிருகஸ்தர்கள் எல்லோரும் காம்ய கர்மிகளே. முற்றத் துறந்த முதிபுக்கவர்களே நிஷ்காம்ய கர்மிகளாவார்கள். அவர்கள், முக்தியைத் தவிர வேறு எதையம் இச்சிக்கமாட்டார்கள். தெருக்களின் மூலைகள் தோறும் பிள்ளையார் கோயில்களோ அல்லது வேறு எந்தக் கோயில்களோ இருக்கின்றன. அவற்றை விசேஷ பக்தியுடன் வழிபடாமல் மக்கள் ஏன் ஏராளமாகப் பொருளைச் செலவு செய்து கொண்டு " தம்பரத்தில் ஆரூத்ரா தரிசனம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி " என்று பனி, குளிர் இவற்றால் கஷ்டப்பட்டுக் கொண்டு யாத்திரை செய்கிறார்கள்? பலவிதமான அலங்காரங்கள் அவர்கள் மனதை இழுப்பதால் தானே? அது போல கர்மாக்கள் யாவும் காம்ய மென்னும் பலனை எதிர்பார்த்தே செய்யப்படுகின்றன. அங்ஙனம் கர்மாவால் மனிதன் அடையக் கருதும் பிரயோஜனம் உத்தம, மத்திம அதமமென்று மூன்று விதமாக விருக்கும். சதவம், பாஜஸம், தாமஸ மாகிய மூன்று வித குணங்களையும் அக்காமயம் தன்னிடம் கொண்டது.

 

"அரசமரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்'' என்றொரு பழமொழி யுண்டு. இதைக் கொண்டே ஒவ்வொரு மனிதனும் தான் இயற்றும் கடமைகளின் பலனிடத்தில் எவ்வளவு கண்ணுங் கருத்துமாயிருக்கின்றா னென்பது நன்கு விளங்கும். ஆகவே, கர்மா ஒரு மனிதனுக்குத் தான் முற்பட்ட கார்யத்தில், உறுதியாக நிற்கவும், நன்னெறியினின்றும்வழுவாதிருக்கவும், ஆத்மார்த்த ஆவலை விருத்தி செய்யவும் பழக்கத்தை ஊட்டுகின்றது. ஆனால், அன்பு', 'ஜீவதயை'' இரக்கம்'' தன்னைப் போலப் பிறரைக் கருதி நிற்றல்' ஆகிய இவைதான் ஒருவனைப் பகவானுக்குச் சமீபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. எவ்வளவு யாக, யக்ஞ, ஹோமங்களைச் செய்தாலும், யோகங்களை அப்யாசித்தாலும், தானும் தன்னைச் சேர்ந்தவர்களுமே உண்டு களிக்க வேண்டுமென்று கருதுகின்றவனுக்கு இகபாசுகம் நிச்சயமாக இல்லை. " அன்பு எவனிடத்தில் வற்றிப் போயிருக்கிறதோ அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் அக்னியாறு பிரவாக மெடுத்து ஓடும்.''சில மூடங்கள், - கிணற்றுத் தவளைகள் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில், அங்குள்ள சுவர்க்கப் படியில் உட்கார்ந்திருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் தானமே சிறந்ததென்று கருதுவார்கள். மகா லோபிகளாயிருப்பவர்கள் கூட, ஸ்தல புராணம் கூறும் கூற்றுக்காக வருஷத்திற்கு ஒருநாள் இதற்காகத் தம்பிடி மாற்றி வைத்துக் கொண்டிருந்து அந்த ஸ்தலங்களில் கொண்டு போய் உதிர்த்து விட்டு வருவார்கள். மற்ற நாட்களிலோ இடங்களிலோ அவர்கள் பைசாவும் தர்மத்தின் பேரால் செல விடமாட்டார்கள். இது மாதிரியே நமது உயர்ந்த தர்மங்கள் யாவும் தப்பாகக் கருதப்பட்டு பிறர் பரிகசிக்கும் நிலைக்கு வந்து விட்டன. மனமிளகி, நேருக்கு நேராகவருந்தும் ஒருவனுக்குச் செய்வதே சிறந்த தர்மமாகும். அது தான் நிச்சயமாகப் பலனளிக்கும். யாரா யிருப்பினும் 'பசி' என்பதை ஒருவன் முகக்குறி காட்டு மானாலும், அல்லது வாய் திறந்து கேட்டு விட்டாலும் அவனுக்கு உடனே தன்னால் இயன்றதைச் செய்வது மனிதனின் முக்கிய கடமை. உண்டிகொடுத்தவர் உயிர் கொடுத்தோராவார். அதனால் தான் பாரத தர்ம நூல்களில் உண்டியில்லாத உயர்ந்த கார்யம் ஏதும் காணப்படுகிறதில்லை. பகவானுக்கு முன் ஜாதிபேத மென்பதே இல்லை. இதையேனும் வைதிகர்கள் ஒப்புக்கொள்வார்கள். அதுபோல, பசிக்கும் ஜாதிபேத மில்லை. பசியால் உடலுயிர் ஆகிய இரண்டும் துன்பத்தை யடைகின்றன. பிராமணனுக்கும், பரம சண்டாளனென்பவனுக்கும் பசி ஒரே வித வருத்தத்தைத் தருகின்றது. இந்தப் பசியென்னும் அனைத்திற்கும் முதலில் நிற்கும் இயற்கை கோயின் தன்மையை வருணத்தால் முதலில் நிற்கும் தாங்கள் உணரவேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு சாக்ஷியமும் தருகிறேன்.

 

"திருவிசை நல்லூர் ஸ்ரீதர ஐயாவான்' என்பவர் ஒரு பெரிய மகான். அவர் வேத விற்பனர்; மிக்க சீலர்; பகவந்நாம சாம்ராஜ்யர். அவர் தமது பிதாவுக்குச் சிரார்த்தம் செய்யும் தினம் வந்தது. அன்று அவர் முறைப்படி அனைத்தையும் இயற்றி இலைகளில் சகல உண் பண்டங்களையும் நிரப்பி, பிராம்மணர்களை உட்கார வைத்து மந்திர பூர்வமாகத் தத்தம் செய்யுந் தருவாயில், தெருவில் ஒரு பறையன் நேரே நின்று கொண்டு "பசி உயிர் போகிறது'' என்று உரக்கக் கத்தினான். இந்த வார்த்தைகள் காதில் பட்டதும், ஐயா அவர்கள் அந்த பிராம்மணர்களுக்குப் பக்கத்தில் ஒரு இலை போட்டு நிமிஷத்தில் பரிமாறி, அவனை மரியாதையோடு அழைத்து அமர்த்தினார். உடனே கலநம் உண்டாய் விட்டது. ஏகமாக பிராம்மணர்கள் கூட்டம் கூடி விட்டார்கள். ஐயாவாளுக்கு முதுகு வீங்கிப் போய்விடும் போலிருக்கிறது. அந்தப் பறையனை பலர் சூழ்ந்து கொண்டு பலவாறு நிந்தித்து அடிக்க யத்தனிக்க ஐயாவாள், கதறிக்கொண்டே "அந்தப் பசித்த நாராயணனை ஒன்றும் செய்யாதீர்கள். என்னை அதற்கு பதிலாக நையப் புடையுங்கள் " என்று அலறுகிறார். மறைகளும் தேடிக்காணா அப்பறையன் இவர்கள் கைக்கு அகப்பட்டவனா! மறைந்தான் நொடியில். கையும் பிடியுமாய் பிடித்திருக்கும் பறையன் மறைந்த மாயத்தைக் கண்ட வைதீகர்களுக்கு மயிர்க் கூச்சலுண்டாயிற்று. தங்கள் தவறான செய்கையை உணர்ந்து நடுநடுங்கி ஐயாவாள் காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சென்றார்கள். இந்த விஷயம் அவ்வூரில் அந்த ஸ்ரீதர மகானுடைய சமாதியில் குருபூஜை கொண்டாடுகிறவர்களால் எடுத்துரைக்கப் படுகிறது. ஆனால் இதனை உணர்ந்து அவர்கள் நடப்பது இன்னும் எவ்வளவோ நன்மையைத் தரும்.

 

இனி, நீங்கள் கேட்டதற்கு விடை கூறுகின்றேன். நீங்கள் இந்த அக்நியை வளர்க்கிறீர்கள். படிக்கணக்காக நெய்யை அதில் ஊற்றுகிறீர்கள். இந்த அக்நி ஏதாவது மரணாந்த காலத்தில் உங்களிடம் கருணை காட்டப் போகின்றதா? உங்கள் மார்பிலே வந்து உட்கார்ந்து உங்களை எரிக்கப் போகின்றது. நான் ஒரு ஸ்திரீ; நான்காவது வருணத்தவள் ஆதலால் நீங்கள் வளர்க்கின்ற அக்நியைச் சொல்லாமல், அந்த தீக்கடவுளின் வாஹனமான ஆட்டுக் கடாவை வைத்து வளர்த்த கடா மார்பிலே பாயும் " என்று மறைத்துக் கூறினேன். இந்த அக்நியைப் பார்த்ததும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. வருவதை எதிர் பாராமலும், நாம் செய்கின்ற உதவியின் பாத்திரம் சரியானதுதானா என்பதை ஆழ்ந்து யோசிக்காமலும் மனிதர்கள் கருமங்களைச் செய்கிறார்கள். பசி என்பவருக்கு உணவு கொடுத்தால் ஆத்ம சாந்தி ஏற்படும் என்கிறார்களே! இவ்வளவு வேதாத்யயனம் செய்திருந்தும், இந்த அக்நியை - கர்மா செய்யும் பொருட்டு வளர்க்கும் இவர்களுக்கு நல்ல பசிக்குச் சிறிது உணவளிப்பது எவ்வளவு சிறந்த தர்மமாகும்? 'ஜீவதயை' என்பதை அவ்வேதங்கள் கூறவில்லையா? 'ஐயமிட்டுண்' என்று அந்த மறைகள் ஓதவில்லையா? என்று இப்படிப் பலவாறு எண்ணிக்கொண்டே சென்றேன். அந்தச் சமயம் என் வாயில் ஏதோ 'வளர்த்தகடாமார்பிலே பாயும்' என்று எழுந்தது. " என்று கூறினள். ஒளவையின் இவ்வரிய சிறு பிரசங்கத்தால், உண்மையான தானம் தருமம் என்பன எவை? சற்பாத்திரம் என்பது பிராம்மணன் தானா வென்பதையும் அவ்வந்தணர்கள் உணர்ந்து, ஒளவையை உபசரித்து உணவளித்தார்கள்.

 

குறிப்பு: - "வளர்த்த கடா மார்பிலே பாயும்" என்பதற்கு வியாக்கியானமாக ஸ்ரீமான் ஐயங்காரவர்கள் விரித்த கதை வரலாறுகள் அவருடைய சொந்தக் கற்பனை என்று நினைக்கிறோம். அவற்றிற்கு ஆதரவு தமிழ் நூல்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

-ர்.

 

"மறந்து தொட்டாலும் நெருப்பு சுடும்'' அது போல் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, பிரக்ஞையுடனோ பிரக்ஞை யில்லாமலோ எப்படியாவது சுவாமியின் நாமத்தைச் சொன்னால் அவனுக்கு அதனால் அடைதற்குரியபலன் அவசியம் ஏற்படும். எவ்வாறெனில், ஒருவன் தானே தேக சுத்தத்தைக் கருதி ஓர் நதிக்குப் போய் நீராடினாலும், அன்றி ஒரு புராணத்தில் கூறப்படும் பலனைக் கருதிச் சென்று ஸ்நானம் செய்தாலும், அல்லது ஒருவருடைய பலவந்தத்தாற் சென்று நீராடினாலும், ஸ்நானத்தால் விளையும் பலன் கிட்டுகிறது. அதுபோல், பகவானுடைய மகிமையை அறியாதவனாயினும், தமது நாமத்தைச் சொல்லுகிறவனிடம் பகவானுக்கு இரக்க முண்டாகிறது. ஆகையால் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை யென்று கர்மானுஷ்டானத்தையோ சதாசாரங்களையோ கைவிட்டு விட லாகாது. பொருள்புலப்படாவிடில் பெரியோரைத் தேடி அறிய முயல்கதே கடமையாகும்.

 

"நம்பாதவன் நஷ்ட மடைவான்" நம்பிக்கையுடன் செய்யப் படுகின்ற காரியங்களனைத்தாலும் நற்பலனே உண்டாகின்றதென்று இது காறும், அனுபவ சித்தராக விளங்கிய பெரியோர்களனைவரும் கூறியிருக்கின்ரனர். நமபிக்கை நற்பலனைத் தருகின்ற தென்பதை விளக்கும் கதைகளும் ஒவ்வொருசமய நூல்களிலும் காணப்படுகின்றன. இங்கு நம்பிக்கை யென்பதை ஆத்மார்த்தத்தைப் பொறுத்த வரையில் எடுத்துக் கொள்வோம். இறைவனை நம்பி ஜகத் பிதாவான அவர் காப்பாற்றுவார் என்று நம்பினால் அவர் அகத்தியம் காப்பாற்றுகிறார். இதற் குதாரணமாக ஓர் சிறுகதை யுண்டு ஒருநதியின் அக்கரையிலுள்ள குருவுக்கு இக்கரையிலிருந்த ஓர் ஆய்ச்சி அனுதினமும் காலையில் பால் கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். இப்படியிருக்க ஒரு நாள் சிறிது தாமதித்து வந்தாள். அந்த குரு கோபங்கொண்டு "பெண்ணே! நீ ஏன் இவ்விதம் அடிக்கடி தாமதமாக வருகின்றாய் " என்று வினவினார். அதற்கவள் "பெரியீர்! நான் அதிகாலையிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறேன். என் மீது சிறிதும் குற்றம் இல்லை. ஆற்றங்கரைக்கு வந்து படகுக்காரன் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவன் வங்ததும் படகு விடுவதில்லை. சற்று பொறு இன்னும் ஜனங்கள் வரட்டு மென்கிறான். இதனாலேயே தாமதமாக வர நேரிட்டு விடுகிறது'' என்று கூறினாள். குரு "அட பைத்தியமே! எல்லோரும் பகவந்நாமத்தைச் சொல்லிப் பிறவிக் கடலை வெகு சுலபமாகத் தாண்டிவிடுகிறார்கள். நீ அவருடைய திவ்ய நாமத்தைச் சொல்லி இந்தச் சிறு கால்வாயைத் தாண்டி வர முடியவில்லையா?'' என்றார். சிறிதும் கள்ளங்கபட மற்ற அம் மாதரசி வாஸ்தவமென்றே நம்பிச் சென்றாள். அன்று முதல் அவன் நாள்தவறாமல் குறித்த நேரத்தில் அச்சுவாமியாருக்குப் பால் கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். அதன்பின், அச்சுவாமியார் ஒரு நாள் அப்பெண்ணைப் பார்த்து " பெண்ணரசி! இப்போது சில நாட்களாக நீ தாமதமின்றி வருகின்றனையே. எப்படி அது? படகுக்காரன் இப்பொழுது மட்டும் சீக்கிரம் வந்து, காலந் தாழ்க்காமல் இக்கரை கொண்டு வந்து சேர்க்கின்றானா? என்ன? " என்று கேட்க, அவள் '' ஐயனே! நான் தாங்கள் உபதேசித்தநாள் முதல் படகில் வருகிறதில்லை. தேவரீர் அடியாளுக் குணர்த்தி யருளியபடி இறைவனுடைய நாமத்தைச் சொல்லிக்கொண்டு நதியைக் கடந்து வருகின்றேன். படகுக்காரனுக்குச் செலுத்தும் துட்டும் மிச்சமாயிற்று, " என்றாள். இதைக்கேட்ட சுவாமியார், ஆச்சரியமும் சந்தேகமுமடைந்தவராய்" ஆனால் நீ என்னை அப்படி அக்கரைக்கு அழைத்துக் கொண்டு போகின்றாயா?'' என்று கேட்டார். அவளும் அதற்கிணங்கி, அவரை அழைத்துக் கொண்டு நதிக்கரைக்குச் சென்று பகவானுடைய நாமத்தைச் சொல்லிக் கொண்டே தண்ணீரின் மேல் நடந்து சென்றாள். அவளுடைய கள்ளங்கப்படமற்ற திடமான நம்பிக்கையுடைய மூட பக்தியைக்கண்ட பகவான் முன்போலவே அன்றும் அவள் பாதங்கள் தண்ணீரில் முழுகா வண்ணம் செய்தார். அவள் சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள். பார்த்தவள் குருநீர் நிலை கொள்ளாமல் தத்தளிப்பதைக் கண்டு 'ஐயனே! தாங்கள் என் பகவந்நாமத்தைச் சொல்லிக் கொண்டு இவ்வாறு தத்தளிக்கின்றீர்கள். உங்கள் அரையாடையை ஒரு கையால் என் தூக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பகவான் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கை தேவரீருக்கிருந்தால் வேஷ்டி தண்ணீரில் நனைந்து விடுமென்று தூக்கிப் பிடித்துக் கொள்வீர்களா? அபிமானத்தைத் தாங்கள் இன்னும் விட்டதாகக் காணப்படவில்லையே? உங்களுக்குத் தாங்கள் எந்த பகவந் நாமத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தீர்களோ அதனிடம் நம்பிக்கை யிருப்பதாகக் காணப்படவில்லையே. அதனால் தான் இவ்வாற்றைக் கடக்கத் தங்களால் முடியாமற் போகிறது'' என்றான். சுவாமியார் வெட்கமடைந்தார். நம்பிக்கைக்கும் கல்விக்கும் சம்பந்த மில்லை. கல்வியறிவுடையவனே பக்தி செய்வதற் குரியவன், மோகூத்தை யடையத்தக்கவன் என்று கூறுதற்கில்லை. நம்பிக்கையும் உறுதியும் உள்ளக்கனிவுமே சிறந்த பலனைத் தந்து விடுகிறது.

 

"புத்திமான் புரிய வேண்டிய வேலை உலகில் ஜன்ம மெடுத்த ஒவ்வொருவரும் வாழ்க்கை யென்னும் போராட்டத்தில் வீரர்களாய்த் திகழ்ந்து, தத்தம் வலிமைக்கும் திறமைக்கும் ஏற்ப பலாபலன்களை யடைகிறார்கள். ஆனால் ஏகோபிதமாக யாவரும் அடைய விரும்புவது ஒன்று. அதுவே விடுதலை. அறிஞர்கள் அற்பமான விடுதலையை விடுதலையென்று கருதுகிறதில்லை. சரீரத்தினிடத்தில் அகப்பட்டுக்கொண்டு அது ஏவும் வேலைகளனைத்தையும் புரிந்து நிற்கும் ஆத்மாவானது, புனரபி ஜனனம் புனரபி மரணம் என்னும் ஜனன மரண ஹேதுவான அச்சரீர சம்பந்தத்திலிருந்து விடுபடவேண்டு மென்றே மகான்கள் பாடுபடுகிறார்கள். வாழ்நாள் வாழ்நாள் வழியடைக்கும் கல்லை அவர்கள் முயல்கின்றனர், அதற்குச் செய்யமென்ன? அதுவே ஆத்ம விசாரம். விசார மில்லாத விடத்து விஷயம் விளங்குகிறதில்லை. சாதன மில்லாத விடத்து சாத்யம் ஏற்படுவதில்லை. ஆதலின் ஆத்மவிசாரமே விடுதலையாகிய மோக்ஷத்திற்குச் சாதனமாகும். ஆத்மா இன்னதென்றும் அனாசமா இன்னதென்றும் அறிய வேண்டியதே முதற்படியான காரியம். 'நான்' என்பது சரீரத்தைக் குறிக்கவில்லை யென்றும், ஆத்மாவையே குறிக்கிற தென்றும் முதலில் அறிதல் வேண்டும். அஃறிந்த பின் அனாத்மாவாகிய தேகத்தினிடத்தில் கொண்டிருக்கும் அபிமானத்தை நாளடைவில் கண்டித்து வரவேண்டும். உடனுக்குடன் ஆத்மாவின் தன்மையைப் பற்றி விசாரணை செய்து வர வேண்டும். ஆத்மா அழிவற்ற தென்பதில் எந்த மதஸ்தருக்கும் ஆக்ஷேபனையில்லை. கடவுள் உண்டா?” என்றால் இல்லை யென்று சிலர் கூறுவர். '' உலகம் மெய்யா? பொய்யா?" என்பதில் பற்பல சமயத்தவரும் வெவ்வேறு விதமாக வாக்குவாதம் புரிவார்கள். 'பிரம்ம நிச்சயத்தைப் பற்றியும் பலவிதமாக வாதிப்பவர்கள் உண்டு. எது எப்படியாயினும் தானுண்டா? என்பதில் எவருக்கும் எவ்வித ஐயப்பாடும் கிடையாது. விடுதலையின் பொருட்டு விசாரம் செய்ய ஆரம்பிக்கின்ற காலத்திலேயே கராரற்றதும் பலரும் வாதிக்க முற்படுவதுமான தத்துவங்களை உபதேசிப்பது அநர்த்தத்திற் கொண்டு போய் விட்டு விடு மென்பது பற்றியே, ஸ்ரீமத் சங்கரர் எந்தக் கொள்கையில் மதஸ்தரும் ஐக்கியப்பட்டிருக்கிறார்களோ அதை முதற்படியாக உணர்த்தினார். தன்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்குகிறவனுக்கு சகல பரதத்துவ விஷயங்களும் நாளடைவில் விசாரத்தின் பலத்தால் விளக்கமாக, அவன் பெரிய வேதாந்தியாகி, அகம் பிரம்மாஸ்மி' என்று அறிந்து கொள்ளுகின்றான்; தானே எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமென்று அறிந்து கொள்ளுகிறான்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

 

வாழ்க்கைப் போராட்டத்தில் அகப்பட்ட மனிதனின் கலங்கிய மனம், அதன் வேகம் அடங்கிச் சற்று அமைதியோடு ஆனந்தானுபவத்திலே ஈடும்படும் படிக்கும் சன்மார்க்கத்திலே சற்று வழி திரும்பித்தனது திருட்டியைச் செலுத்துவதற்கும் மிகுந்த உதவியாயிருப்பது ஆனந்தானுபவத்தை வெளியிடும் மகான்களின் சரித்திரமே யாகும். இத்தகைய மகான்கள் இறைவனது திருவருளால் நம் பாரத பூமியில் அவதரித்தும் அவதரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன, அவருடைய சிஷ்யரான விவேகானந்த சுவாமிகளென்ன, பாவ்ஹாரி பாபுவென்ன இவர்களைப் பற்றி நாம் சவிஸ்தாரமாக அறிந்து, ஞானக் கருவூலமான அவர்கள் சரிதங்களைப் படித்துப் பெரிதும் கொண்டாடுகிறோம். இது போலவே பாரத தேசத்தின் சரித்திராரம் காலத்திலிருந்து எத்தனையோ பல பெரியார்கள் நமது தேசத்தில் திகழ்ந் திருந்தனர் என்றும் அறிகிறோம். அவர்களுள் சிலர் யோக மார்க்கத்தையும், சிலர் பக்தி மார்க்கத்தையும், சிலர் ஞான மார்க்கத்தையும் பின்பற்றிப் பிறவியின் பயனை எய்தினர். யோகமார்க்கத்தை மேற்கொண்டு மகா ஞானியாக விருந்த உத்தமர்களில் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளும் முக்கியராவார். இவர் தென்னாட்டில் திகழ்ந்தவர். அவருடைய திருசாமம் மிகப் பிரசித்தமானது. விசேஷமாக அத்வைதிகள் இவரைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

 

இம்மகான் சோழவள நாட்டில் காவிரி நதீ தீரத்திலுள்ள திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர். இவர் பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற ஊரும் அதுவே. திருவிசை நல்லூர் எத்தனையோ பெரியார்களுக்கு அவதார ஸ்தலமா யிருந்தது. பிரம்மேந்திரர் காலத்தில் 'ஜானகி பரிணயம்' என்னும் சம்ஸ்கிருத நாடகத்தை இயற்றியவரான ஸ்ரீராமபத்திர தீக்ஷிதர் என்ற பிரபல வித்வான் ஒருவர் அவ்வூரிலிருந்தார். இவரிடம் ஆக்யா சதகம், தயா சதகம் என்னும் சிறந்த பக்தி கிரந்தங்களை இயற்றியவரான ஸ்ரீ வேங்கடேச ஐயா அவர்களும், மகா பாஷ்ய கோபாலகிருஷ்ண சாஸ்திரிகளும், நமது சதாசிவரும் ஒரு சாலை மாணாக்கர்களாகக் கல்வி கற்று வந்தார்கள். மேற்கூறிய கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமானுக்கு உபதேச குருவாகிச் சன்மானிக்கப் பெற்று, மான்யம் பெற்றவர். அந்த மான்யத்தைப் பற்றிக் கூறும் செப்புப்பட்டயம் ஒன்று கி. பி. 1738 - ம் ஆண்டில் ஏற்பட்டிருப்பதால், அதைக்கொண்டு சதாசிவரின் காலம் இன்னதென்று நிர்ணயிக்கப்படுகிறது.

 

இம் மூவரும் பிற்காலத்தில் மகாபிரசித்தர்களாய்த் தங்கள் வாழ்க்கையைச் சன்மார்க்கத்தில் கழித்து வந்தனர். இவர்களுள், நம் மகானின், வாழ்வு ஆழ்ந்த ஏகாந்த யோகானுபவத்திலும் பூரண விரக்தி மார்க்கத்திலும் திரும்பிற்று. கல்வி பயிலும் போது சதாசிவர் குருவினிடம் பலமாகத் தர்க்கித்துத் தமது சங்கைகள் நீங்கும் வரை வாதாடி உண்மையை அறிவதில் மிக்க சிரத்தையுடனிருந்தார். நாளடைவில் நல்ல பாண்டித்யமும் அடைந்தார். அவருடைய வாழ்க்கையான கால்வாய் மகாநதியை யடையும் பரிபக்குவ காலம் சமீபித்தது. ஒரு நாள் அவர் தம் குருவிடம் பாடம் கேட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்பொழுது அவருக்கு விவாகமாகிக் கொஞ்ச கால மாயிற்று. வீட்டிற்குச் சென்றதும் ஏதோ விசேஷ அறிகுறிகள் காணப்பட்டன. விசேஷ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தன் தாயாரை நோக்கி " என்ன விசேஷ " மென்று வினவினார். அத்தாய் "அப்பா! உனது மனைவி ருதுவாகி இருக்கின்றாள்; இன்று விருந்து செய்ய வேண்டும்; ஊரழைக்க எேண்டும்'' என்று கூறினள். சதாசிவருக்கோ அப்பொழுது நல்ல பசியாக விருந்தது. சாப்பாட்டிற்குச் சற்று நேரம் பிடிக்கும் போலிருச்தது. சற்று நேரம் தனியே ஓரிடத்தில் உட்கார்ந்து யோசித்தார். " குடும்பவாழ்க்கை சரிவர ஆரம்பிக்கு முன்பே பசிப்பிணியால் பாதனைப்படநேருகிறது. இனி ரசமற்ற இவ்வாழ்வில் இறங்கினால் எவ்விதத் துன்பங்கள் வருமோ! சமுசார சாகரத்தில் அழுத்தியவன் ஈஸ்வரனை வழிபட்டுக் கடைத் தேறுவது மிகவும் அருமையே! ஆகையால் இப்பொழுதே இதனின்றும் விடுபடுவது தான் மேலாகும் " என்று கருதினார். வடமொழியில் " சற்குரு சதாசார சிஷ்யனைத் தேடியலைகின்றான்: உண்மைச் சீடன் சற்குருவை காடிச் சுற்றுகிறான்'' என்று ஒரு பழமொழியுண்டு. அதன்படி இத்தருணத்தில் சதாசிவருக்குத் தக்க குரு ஒருவர் கிடைத்தார். அவருடைய திருவடிகளைத் திடசித்தத்துடன் பற்றிக் கொண்டு அவரிடம் யோக சாஸ்திரத்தில் பயிற்சி யடைந்தார். இக்காலத்தில் இவர் சில பத்திரஸக் கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றியருளினார். அவரருளிய கீர்த்தனைகள் இன்னும் பஜனை கோஷ்டிகளில் பாடப்படுகின்றன. அவை மிக்க உன்னதமான கருத்துடையவை; சதாசிவரின் உயர்ந்த மனோ நிலையையும் அவருக்கு இசையில் இருந்த பயிற்சியையும் நன்கு வெளியிடுபவை. அக் கீர்த்தனங்கள் " சிந்தா நாஸ்திகிலதோஷம் சிந்தா நாஸ்திகில'' என்றும், " தத்வத் ஜீவத்வம் பிரம்மணி தத்வத்ஜீவத்கம்'' என்றும் தொடங்குவன. இவர் இயற்றியுள்ள நூல்கள் " சிவமானஹீக பூஜை ", " ஆத்ம வித்யா விலாசம்'', '' சிவயோக தீபிகை'' என்பன. இவற்றுள் முதலது சிவபூஜையின் மகிமையைப் பற்றியும் பக்தி ஞானத்தைப் பற்றிப் பொதுவாகவும் மிகவும் அழகாகவும் கூறுகின்றது. அதில்,

 

“பகவானே! பிரபஞ்சத்தை இருப்பிடமாகக் கொண்ட உமக்கு யான் எந்த இருப்பிடத்தை அளிக்க வல்லேன்? சுயம்பி ரகாச மூர்த்தியே! உமக்கு நான் எடுக்கிற தீபம் எவ்வாறு ஒளியுள்ளதாகும்?" என்பன போன்ற சில உயர்ந்த ஸ்தோத்திரங்கள் காணப்படுகின்றன. ஆத்ம வித்யா விலாசம் "64 - ஆர்யா சுலோகங்கள் கொண்டது; தன்னைத் தானே யறிந்த யோகியின் மகிமையை விஸ்தரிப்பது; இந்த கிரந்தத்திலிருந்து இவருடைய குரு பரம சிவேந்திரர் என்பது புலப்படுகிறது.

 

மூன்றாவதான ''சிவயோக தீபிகை'' என்னும் இரந்தம் ஐந்து அத்தி யாயங்கள் கொண்டது; யோகத்தின் பலவித மார்க்கங்களும் இதில் உரைக் கப்படுன்றன. இது இவரியற்றிய தல்லவென்று சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள்.

 

இவர் ஒருநாள் தமது குருவுடன் ஆத்மவிசாரம் செய்து கொண்டிருந்த பொழுது, தமது கொள்கையை ஸ்தாபிக்க மிகப் பலமாக வாதித்து உரக்கப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் குரு பொறுக்க முடியாமல் "அப்பா! சதாசிவா! என்று உன்வாய் அடைத்து நீ பேசாமலிருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறாய்'' என்றார். உடனே பிரம்மேந்திரர் தனது குற்றத்தை யுணர்ந்து அன்று முதல் மௌனத்தை ஜன்ம விரதமாகக் கொண்டார்.'' மோன மென்பது ஞான வரம்பு " அல்லவா தாயுமானவரும் " கண்மூடி மௌனியாகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம்'' என்றருள வில்லையா? தாம் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் வெளியேறினார். அன்று முதல் எங்கும் அதிகம் தங்காமலும் என்ரோடும் வாய் திறந்து பேசாமலும் மறைந்தும் தனியே சஞ்சரிக்க வாரம்தார். இன்றியமையாதபோது கைசாடை காட்டுவார். சில வேளை பூமியில் எழுதிக் காட்டுவார். தன்னிட மிருந்த கோபகுணத்தை அவர் சிறிது சிறிதாக உறுதியாகப் போக்கி வந்தார்.

 

இங்ஙனம் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாளில் ஒரு சமயம் அவர் ஓர் வயலின் வரப்பில் தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தார். அவ்வழியாக வந்த சிலர் ''உலகப்பற்றை விட்ட இவருக்குத் தலையணை கூடவேண்டுமா?” என்று பரிகாசயாகப் பேசினார்கள். உடனே அவர் வரப்பின் மேல் வைத்திருந்த தலையை எடுத்துக் கீழே வைத்துக் கொண்டார். அப்பால், சதாசிவர் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு அமராவதி, காவிரி தீரங்களிலுள்ள கருவூர், கொடுமுடி, நெரூர் முதலிய ஊர்களில் வசித்து வந்தார். இகாலத்திலிருந்து அவர் அவதூத நிலையைக் கொண்டார். காவிரி நதிக்கரையிலுள்ள காடுகளில் மறைந்து பல நாட்கள் வசிப்பதும், பிறகு திடீரென்று ஒரு கிராமத்தில் நுழைந்து மக்களிடையே தோன்றுவதும், பின்பு திடீரென்று மறைந்து காட்டகத்தை யடைவதுமாகப் பிரம்மேந்திரர் காலங்கழித்து வரும் நாளில் சுற்றுப்புறங்களிலிருந்த கிராமவாசிகள் அவரை மகானென்று அறிந்து போற்றி வந்தார்கள்.   

 

 

தமிழாசிரியர் S. V. வரதராஜையங்கார்.

 

குறிப்பு:-  மூல இதழ்கள் 1930 ஜூன் முதல் 1931 ஜூன் வரை இல்லாமையால் இந்த தொடரின் பிற பகுதிகளை தொகுக்க இயலவில்லை.

 

 

No comments:

Post a Comment