Wednesday, August 26, 2020

 

ஆனந்த மோகன் போஸ்

 

இந்து தேசிய எழுச்சிக்கே ஆரம்பகால ஆசிரியர்களாகவும், தேச காங்கிரஸ் மகாசபை இந்நிலையை எய்துதற்குப் பாத்தியஸ்தர்களாகவும் திகழ்ந்த பல தேசீயத் தலைவர்களுள் நாம் வரையப் புகுந்த இப்பெரியாருடையதொண்டு, எவ்விதத்திலும் ஏனையோருடைய உழைப்பை விடக் குறைந்ததாகக் கூறவியலாதது. இத்தகைய அவதார புருடர்கள் தோன்றி அவ்வப்பொழுது நாட்டின் பொது நன்மைக்கும், சமயக் கோட்பாடுகளுக்கும் மாறான கொள்கைகளை அரசாங்க இயலிற் பொருத்துதல் ஆகாதென மன்றாடி வேண்டி, தமது முறையீடுகள் ஜனசமூக சம்மதமானதென்பதை விளக்க காங்கிரஸ் மகாசபையை ஸ்தாபித்து, மேல் நாடெங்கும் மேன்மையுற 'இந்தியா அறிவிற்கு ஆதாரமான பூமி; மகான்கள் தோன்றும் மாண்புடைஅரங்க' மென்பதை மெய்ப்பித்திராவிடில் இன்று நாம் இத்துணை நலங்களைப்பெ ற்று வாழ வியலா தென்பதை அறியாதார் யார்? ஆதலின் ஆனந்தம் பயக்கும் ஆனந்த மோகன போஸ் சரிதையைச் சுருக்கி நமது ஆனந்தபோதினியில் வரைவாம்.

 

பிறப்பும் வித்தையும்

 

ஆனந்த மோகனர் கீழ வங்காளத்தைச் சார்ந்த மைமன்சிங் என்ற மகிமை பொருந்திய பதியில் 1846 -ம் ஆண்டில் அவதரித்தார்; கருத்துடன் கண்டதைக் கற்றுக் கல்கத்தா நகர பிரவேசப் பரீட்சை யில் 1862 - ம் ஆண்டில் முதல் தரமாணவராகத் தேர்ந்தார். இவருக்குச் சிறு பிராயம் முதல் இயற்கையாகப் பொருந்தியிருந்த தேசபக்தி, குருபக்தி, வித்தை விரும்புதல், பெரியாரைப் பேணல், தீயவை விலக்கல், மெய்யே பேசலாசிய பெருங் குணங்களைக் கண்ட பெற்றோர், பெரியார், ஆசிரியர், சுற்றத்தாராகிய அனைவரும் இவருடைய எதிர்கால நிகழ்ச்சியை ஏகோபிதமாகக் கணித்துவிட்டனர். இவருடைய பன்னிரண்டாம் பிராயத்தில் சிப்பாய்க் கலகம் நிகழ்ந்தது. வங்காள சர்வகலாசாலையில் மோகனர் சேர்ந்து தம் அறிவால் அனைவரும் தம்மை விரும்ப, எப். எ., பி. ஏ. பட்டங்களை விமரிசையுடன் பெற்றது மன்றி 'ராய்ச்சண்ட் பிரிம் செண்ட்' (Roychand Premchand) என்ற 10,000 வெகுமதியையும் பெற்றார். கல்வியிலாகாவில் அக்காலத்தில் இவரைத் தெரிந்துகொள்ளாதவரில்லை. இவர் சில மாதங்கள் இஞ்சினீயரிங் காலேஜ்' கணிதஆசிரியராக விருந்தார். சீமைக்குச் சென்று சட்டப் பரீக்ஷையில் தேர்ந்து வரவேண்டுமென்ற எண்ணம் இப்பெரியாருக்கும் உதித்தமையால் இவர் அவ்வேலையை விட்டுவிட்டு 1870 - ம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார்.

 

சமயாசாரம் பிரம்மசமாஜம்

 

அக்காலத்தில் ஹிந்து மதத்தின் சில அதிவைதீக மதக்கொள்கைகளை விலக்கி, இந்தியாவில் மேல் நாட்டு முறையில் ஓர் நவீன கொள்கையை மேற் கொண்ட ஹிந்து மதத்தை பிரம்ம சமாஜம்' என்ற பெயருடன் வேரூன்றச் செய்து, உலகத்தையே தம்முடைய சொற்பொழிவுகளாலும், அறிவின் வன்மையாலும் ஒரு ஆட்டு ஆட்டிவைத்த ஸ்ரீகேசப் சந்திர சேனர் போஸைஅந்தப் பிரம்ம சமாஜத்தில் சேர்த்து வைத்தார். அவர் பிரம்மசமாஜத்தைச் சார்ந்தாரானாலும் அதிவைதீக அனுஷ்டானங்களைக் கைவிட வில்லை; மதாசாரங்களை தீவிரமாக அப்யாசித்து வந்தார். இந்தியாவின் இரத்தினங்களைக் கண்டால் மேல் நாட்டார் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயிராதாதலின் இவருடைய சகல வசீகர சக்தி பொருந்திய வதனத்திலும் வாய்மொழியிலும் ஈடுபட்ட மேல்நாட்டு அறிவாளிகள் இவருக்குச் சீமையில் பல சிறப்புகள் செய்தனர்; ஒருசமயம் இவரை நோக்கி, 'நாங்கள் சகல வித்தியா பண்டிதனான '' கிளாட்சன்" (Gladstone) என்ற முதல் மந்திரிக்குப் பிறகு உங்களைத் தான் அந்த நிலையில் வைத்துப்புகழக் கூடியவராக மதித்திருக்கிறோம்' என்றார் ஓர் மேல் நாட்டு மேதாவியும். 'கேம்பிரிட்ஜ்' நகரக் கிரிஸ்து கலாசாலையிற் சேர்ந்து போஸ் கணித ஆராய்ச்சிகளில் வல்லுநராகிப் பின் சட்டதிட்டங்களில் பட்டமும் பெற்று 1874 - ல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

 

நியாய வாதத் தொழில்

 

மோகனர் கல்கத்தாவை அடைந்தவுடன் நியாயவாதத் தொழிலைத் தொடங்கினார். இவர் மனத்தில் அந்தரங்க தெய்வபக்தி யுடையவராதலால் அதில் அதிகப் பொருளீட்ட இவரால் இயலவில்லை. உண்மைக்கு மாறான விஷயங்களில் இவருடைய மனம் நாட்டங் கொள்ளாதாகையால் தாம் உண்மை யென்று நிச்சயிக்கின்ற கக்ஷியையே சார்ந்து பேசி வந்தார். ஆனால் அவற்றில் இவருக்கு வெற்றி நிச்சயமாக இருந்து வந்தது. இவருக்கு எதிராகப் பேச அக்காலத்திய ககெத்தா பிரபல நியாயவாதிகளும் அஞ்சி நடுங்கினர். அத்தொழிலில் இவர் ஈட்டிய பொருளை யெல்லாம் அசாம் மாகாண டீ விவசாய விருத்தியின் பொருட்டே செலவு செய்துவந்தார். பின்னர்ப் பல முகாந்தரங்களைக் கொண்டு இவர் நியாயவாதத் தொழிலைவிட்டு, இறைவன் தமக்குப் பரம்பரையாக அளித்துள்ள ஐஸ்வரியத்தைச் சத்விஷயத்தில் வினியோகஞ் செய்ய நினைத்து, மதசேவையிலும், ராஜீயத்திலும் நுழைந்து உழைக்க வாரம்பித்தார்.

 

வித்யாபி விருத்தி

 

மேடைகளில் ரஞ்சிதமாகப் பேசுவதால் மட்டும் தேச விடுதலையோ நன்மையோ ஏற்பட்டு விடுமென்று இவர் நம்பவில்லை. விடுதலைக்கு முதற்காரணமாயுள்ளது கல்வியேயானதால், நம்முடைய தேசத்தில் கல்விப் பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே மக்கள் உணர் வடைவார்கள் என்றுணர்ந்து 1877 -ல் கல்விச் சபையில் சீர்திருத்தத் தீர்மானங்கள் பலவற்றைச் செய்து சர்வ கலாசாலைச் சபையின் அங்கத்தினர் பதவியை யேற்று உள்ளும் புறமும் உழைத்து வந்தார். படிப்புக்கே பணத்தைக் கொட்டவேண்டு'' மென்று இவர் பலத்த வாக்குவாதஞ் செய்து அரசாங்கத்தார் அதனை அங்கீகரிக்கச் செய்துவிட்டார். 1880 - ஆண்டில் இவர் நகரக் கலாசாலை என்ற பெயருடன் ஓர் பாடசாலையை ஸ்தாபித்து நடைபெறச் செய்தார். அக்கலாசாலை இன்று வங்காளத்தில் கல்விச் செங்கோலோச்சி வருகின்றது. பெண் கல்வியை மோகனர் பெருமையுடன் விரும்பினார். ஆடவசமூகம் அறிவாளிகளாவதற்கு அடிப்படையாயிருப்பது அன்னைமார்களுக்குப் போதிக்கப்படும் கல்வியே யாதலின் அதன் பெருக்கை அவர் பெரிதும் விரும்பினார். ஆதலால் 1881 - ம் வருடத்தில் 'வங்க மகில வித்யாலய' மென்ற பெயருடன் ஓர் பெண் கலாசாலை வங்காளத்திற்கே முதற் பெண்பாடசாலையாக ஏற்படுத்தப்பட்டது.

அப்பெண்பாடசாலை வெகு விரைவில் மேன்மை யடைந்து 'பெதூன்'' (Bathune) பெண் கலாசாலையாக மாற்றப்பட்டது. பின்னர் அரசாங்கத்தார் அக்கலாசாலையின் நிர்வாகத்தை யேற்றுக் கொண்டனர். அக்கால ராஜப்பிரதிநிதியான 'லார்ட் ரிப்பன்' அவர்கள், போஸின் உழைப்பைப்பாராட்டி 1882 - ல் நியமித்த கமிஷனின் 'தலைவர் பதவியை யேற்குமாறு அவரை வேண்டினர். உண்மையான தேசாபிமானிகள் பதவியையும் பட்டங்களையுமே கருதித் தொண்டு புரிவதில்லையன்றோ? ஆதலின், தமது கொள்கைக்கு மாறாக அக்கமிஷனில் வேலை பார்க்க நேரிடலாமென்ற ஐயப்பாட்டால் அவர் முன்யோசனையுடன் அதனை யேற்கவில்லை. அப்பால் அவரது தொண்டின் திறத்தை மெச்சி கல்கத்தா நகரவாசிகள் அவரை 1895 -ல் வங்காள சட்டசபைக்கு அங்கத்தினராகத் தேர்ந்தெடுத்தனுப்பினார்கள்.

 

பொதுநல ஊழியம்

 

இனி, அவரது பொது ஜன சேவையைப் பற்றிப் புகல்வோம். அவர் ஸ்ரீ. சுரேந்திரநாத்பனர்ஜியவர்களின் உதவியோடு கல்கத்தாவில் இந்து மகாசபை 'யொன்றை நிறுவினார். காங்கிரஸ் மகாசபையின் வளர்ச்சியில் அவருக்கு அளவிடற்கரிய ஊக்கமிருந்து வந்தது. சட்டசபையிலும், இந்து மகாசபையிலும், காங்கிரஸ் இயக்கத்திலும். அவர் கலந்துழைத்தாராயினும், தமது வைதீகக் கொள்கைகளை விட்டுச் சிறிதும் மாறாமல் உறுதியாயிருந்தார். அகில இந்திய காங்கிரஸின் பன்னிரண்டாம் சம்மேளனத்தில் அவர் வித்தியாபிவிருத்தி விஷயமாகச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானம், ஏகமனதுடன் அங்கீகரிக்கப்பட்டதுமன்றி, அவருடைய புகழை விரிப்பதாயுமிருந்தது.

 

உடலைப் பற்றிய உபாதி

 

இவ்வாறு அவர் உடல் பொருளாவியாம் முன்றினாலும் உழைத்துவரும் நாட்களில், ஆவி அழிவற்றதால் அதற்கு நாளுக்கு நாள் வளர்ச்சி யேற்பட்டது; பொருளை அவர் அறவழியிலீட்டி. வந்தமையால் ஆண்டவனருளாவதற்கு மெவ்வித குறை மேற்படவில்லை. ஆனால், அதிக சிரமத்தாலழியுந் தன்மையதான அவருடைய உடலை, திடீரென பயங்கரமான நோய் வருத்தத் தொடங்கிற்று. இக்காரணம் பற்றி வைத்தியர் மொழிந்தவாறு 1897 - ல் அவர் உடல்நலத்தை உத்தேசித்து 'ஜர்மனி'க்கச் சென்றார். அந்நாட்டுச் சீதோஷ்ண நிலையால் அவருடலைப்பற்றிய உபாதி நீங்க, அப்பால் அவர் ஜர்மனி தேசத்தை விட்டகன்று இங்கிலாந்தடைந்தார். தேக பலஹீனத்தைப் பொருட்படுத்தாது அவர் பாரததேவியின் திருத்தொண்டாற்ற, பன்மடங்கு உறுதியுடன் இங்கிலாந்தில் ஓய்வில்லாமற் பல மேடைகளிற் பேசி வந்தார். ஒரு சமயம் அவர் உக்கிரமாகப் பேசி முடித்தபிறகு மயக்கத்தால் கீழே விழுந்தார். அதுவே அவர் கூட்டத்திற பேசிய கடைசித் தடவை போலும். அன்று முதல் அவர் படுக்கை மனிதரானார். அவர் சரீரம் படுத்த தேயன்றி, உயிர் தாய்நாட்டுத்தொண்டைத் தொடுத்துப் புரிந்து கொண்டேயிருந்தது. கண்காணாத் தேசத்தில், கடலாற்றடுக்கப் பெற்ற அந்நியரூரில் அவர் தங்க மனமில்லாது இந்தியாவுக்குத் திரும்பினார்.

 

காங்கிரஸ் அக்கிராசனம்

 

அவர் சீமையிற் புரிந்த தொண்டை மெச்சினாள் போல் தேச அன்னை அவரை அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் சென்னையில் நிறை வேறிய 1898 - ம் ஆண்டு விழாவின் அக்கிராசனாகிபதியாகத் தேர்ந்தெடுக்கச் செய்தாள். அப்பெரியாரது முன்னுரையால் அறிவாளிகள் நிறைந்த காங்கிரஸ் அவை உற்சாகமும், ஊக்கமும், தேசபக்தி மணமும் பூரிக்க விளங்கிற்று. அவர் தெய்வத்தையும், பாரத்தேவியையும் முதலிற் கண்களிலானந்த பாஷ்பம்ததும்பத் துதித்துப் பின் தமது சாதுர்ய வசனமழை நீரால் அக்குழாத்திற் குழுமியிருந்தாரை நீராட்டித் தமது கொள்கை யென்ற விபூதியளித்து உண்மைத்தொண்டென்ற உபதேசஞ் செய்தருளினர்.

 

நாட்களாகவாக அவர் உடலைப்பற்றிய உபாதி மிக்கமையினால் படுத்த படுக்கையாயவர் வருந்தினார். அவ்வமயம் கல்கத்தா நகரவாசிகள் 'வங்காள ஒற்றுமை நிலைய' மொன்றைக் கட்டுவதாகத் தீர்மானித்து அக்கட்டிடத்திற்கு போஸை அஸ்திவாரக்கல் நாட்டுமாறு வேண்டினர். அதுதான் அவர் வெளியே தோன்றிய கடைசித் தடவை. பஞ்சணையிற் படுத்தவாறே போஸ் அந்நிலையத்திற்கேகித் தாம் வரைந்துள்ள நன்றி கூறல் என்னும் உரையையளிக்க, ஸ்ரீ. சுரேந்திரநாத் பனர்ஜி, அதைப் படித்தார். அதுவே அவரது சாமோபதேசம் போலும். அவர் பாரத நாட்டின் ராஜீய, தேசீய, சமய உத்தாரணார்த்தமாகப் புரிந்த சேவை ஏனைய தலைவர்களுக்கு வழிகாட்டுவதாயிருந்தது.
 

அந்தியக்காலம்

 

அவருடைய வாழ்வாகிய திரை மூடப்படுங்காலம் நெருங்கிற்று. ஆரம்பகாலத்தில் அவர் பிரம்ம சமாஜத்தலைவரும், சமயாசார சீர்திருத்தக்காரருமான ஸ்ரீ கேசப்சந்திரசேனருடன் அக்கொள்கையைப் பரவச் செய்வதில் தியாகியாக விளங்கி, பின் ஸ்ரீ. கேசப் சந்திரசேனர் தமது ஐந்து பிராயமுள்ள பெண்ணை பீகார் இராஜகுமாரருக்கு விவாகம் செய்து கொடுத்தது கண்டு, பிரிந்து சுத்தராம் பிரம்மசமாஜ மென்று வேறொரு சபையை ஸ்தாபித்து அதன் வளர்ச்சிக்கென்று அரும்பாடுபட்டு வந்தார். சமயவளர்ச்சியான தீபம் ஆயுட்கால முழுவதும் அவருள்ளத்திற் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர் ராஜீய விஷயமாகப் பேசும் பொழுதெல்லாம், அவ்வுரைகளில் சமயமணமே சால்புடன் கமழும். அவரது அதிக உழைப்பே அவரது மரணத்திற்குக் காரணமென்று பலரபிப்பிராயப் பட்டனர்.

 

முடிவுரை

 

அன்னையின் அருட்தொண்டர்களான சுரேந்திரநாத்பனர்ஜியும், ஆனந்தமோகன போசும் 1906ம் ஆண்டிலேயே பேரின்ப வீடெய்தினர். அவருடைய சவத்துடன் அன்பர்கள் பலரும் ருத்திர பூமிக்குச் சென்று போற்றி அவரது தேசசேவையைப் புகழ்ந்து பாராட்டினர். பரிசுத்த மனதுடன், உள்ளன்பு பொங்க, அடக்க மென்பதே அவதரித்தது போல் தண் பணியாற்றிய இப்பெரியார் பிரிவைக் குறித்து வருந்தி அவ்வாண்டு அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் வரவேற்புக் கழகத் தலைவரான டாக்டர் ராஸ்பிகாரி கோஷ், 'ஆனந்த போஸின் மரணம் உண்மையில் தலைவர்களை ஆற்றொணாத் துயரத்தி லாழ்த்திவிட்டது. அவர் தமது தேசசேவையைத் தூயவழியில், ஆற்றலுடன் புரிந்ததை அகிலமே புகழும். அவர் ஒரு தொண்டனைப் போல ராஜீயத்துறையி லுழைத்தவர். மக்களிடத்தில் அவர் ராஜீய உணர்ச்சியுடன் சமயப்பற்றையும் உடனுக்குடனே பெருக்கி வந்தார்.' என்று பேசினார். அம்மகானுடைய நீடித்த பிரிவைக் கேட்டுக் கண் கலங்காதவர் வங்காளத்திலில்ரெனலாம். கல்வியிலாகாவிற்கு அவருடைய மரண தினத்தில் விடுமுறையளிக்கப் பட்டது. தானமும் -தாய்த் தொண்டாகிய - தவமும் தாம் புரிந்தமையால் வானவர் நாடு வழி திறந்து இப்பெரியாரை யேற்றுக்கொண்டது.

 

ஸ்ரீலக்ஷிமி காந்தன்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மார்ச்சு ௴

 

 

 

No comments:

Post a Comment