Wednesday, August 26, 2020

 

ஆன்ம ஈடேற்றம்

 

 எண்ணரிய பிறவிகளுள் மானிடப் பிறவியே மிகவும் மேலான தென்பதும், முத்திநிலையடைதற்குத் தேவர்களும் மானிடராய்ப் பிறத்தல் வேண்டுமென்பதும் சைவசமயிகளுடைய கொள்கைகளாகும். ஏனைய மதத்தவர்களும் மானிடப் பிறவி அதிகம் விசேஷமுடைத் தென்பதை ஒத்துக்கொள்வர். உலகத்திலே பலவேறு வகைப்பட்ட சமயங்கள் வழங்கி வந்தாலும், ஆன்ம ஈடேற்றம் பெற்றாலன்றி இப்பிறவியின் பயனை உள்ள படி நாம் அடைதல் கூடாது என்பதைப் பற்றி ஒவ்வொரு சமயமும் எடுத்துக்கூறும். ஆன்மா நற்கதி யடைதற்கு அனேக வித்தியாசமான வழிவகைகளைக் குறித்துப் போதிப்பதனாலேயே சமயங்கள் ஒன்றுக் கொன்று முரணுறுவது போற் காணப்படுகின்றன. இந்த வேறுபாடு தவிர்க்க கூடியதல்ல. ஏனெனில் சமயங்களெல்லாம் அவையவை தோன்றிய காலங்களுக்கும் இடங்களுக்கும் சனங்களின் அறிவு நிலைமைக்கும் ஏற்ற சற்போதனைகளைத் தம்முள் அடக்கி யிருக்கின்றன. ஆன்மா என்று ஒன்றுண்டு, அது கடவுளை யடைந்து நித்திய இன்பத்தைப் பெறுதற்கு முயலல் வேண்டும் என்றே அனேக மதங்கள் முடிபுரையாகக் கூறும்.'' சொல்வது யார்க்கும் எளிது, அரிதாம் சொல்லிய வண்ணம் செயல்'' என்றபடி எந்த விஷயத்தைப் பற்றியும் பேசுவது அதிற் கூறியபடி செய்வதிலும் மிகவும் இலே சென்பது நாமனைவரும் அனுபவத்திற் கண்டறிந்த விஷயம். சகல மதங்களையும் பற்றிப் பிழையறப் போதிக்கும் கல்விமான்கள் அனேகரை நாம் காணக்கூடியதாயிருக்கும். ஆனால் போதிக்கிறபடி உண்மையாய்ச் சாதிக்கும் ஒழுக்கம் வாய்ந்த அறிவிற் சிறந்த பெரியோர்களைத் தற்காலத்தில் எவ்விடத்தும் காண்பது மிகவும் அரிதாயிருக்கிறது.'' ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'' என்றும் "அப்பா என்றால் உச்சி குளிருமா?'' என்றும் இன்னும் இக்கருத்தைக் கொண்ட அனேக பழமொழிகள் உலகில் வழங்கி வருவதை நாமறிவோம். அறிந்திருந்தும் " பழைய காத்தானே காத்தான்'' என்றபடி போதனையைப் பற்றிக் கவனமாயிருக்கின்றோமே தவிர, சாதனையை உற்று நோக்கும் பொழுது "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற அளவிலேயே நம்மவரிற் பெரும்பாலாருடைய சீவியம் முடிகிறதாகக் காண்பது எவ்வளவு விசனிக்கத் தக்கது! என்ன தொழிலை நாம் செய்தபோதிலும் இடைவிடாது நம்முடைய தியானம் எதிலே இருத்தல் வேண்டும்? நம்முடைய சீவியத்தின் இலக்கு என்னவாயிருத்தல் உசிதம் என்பதைப் பற்றிச் சிறிது ஆராய்வதே இவ்விஷயத்தின் நோக்கமாகும்.

 

நாம் இந்த உலகத்தில் பிறந்த நாள் முதல் இறக்கும் வரையும் " சுகமும் துக்கமும் சுழலும் சக்கரம்'' என்ற பிரகாரமாய் இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறி அனுபவித்துக்கொண் டிருக்கிறோம். உலகத்திலே தோன்றுவன யாவும் மறைதலையும் பிறப்பன அனைத்தும் இறப்பதையும் காண்கிறோம். ஒருபோதும் பிரிய விரும்பாதவரையும் பிரிந்திருக்க நேரிடுகிறது. அதுவுமன்றித் திரும்பக் காணமுடியாத நிலைவரமும் சிலவேளை ஏற்படுகின்றது. கண்மணிகளிலும் அதிகமாக நேசித்த காதலனைக் காதலியும், பத்தினியைப் பர்த்தாவும், பெற்றாரைப் பிள்ளைகளும், பிள்ளைகளைப் பெற்றாரும், காத்திராப்பிரகாரம் இழந்து துன்புறுவது சாதாரணமாயிருக்கின்றது. பொதுவாய் உலகத்திலே பஞ்சப்புலன்களாலும் நாமறியக் கூடியனவாயிருப்பனயாவும் ஏதோ ஒரு காலத்தில் இல்லாதிருக்கும் இலட்சணம் வாய்ந்ததாக இவ்வுலகமிருக்கிறது. 'காடுங்கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன் பிறகே'' ஓடுவதால் நிகழும் சங்கடங்களுக்காளாகி அலைந்து காலத்துக்குக் காலம் துயருறுகிறோம். இன்றைக்கு அழகு பொருந்தியதாகத் தோற்றப்படும் ஒரு வஸ்து, நாளைக்கு அருகத் தக்க நிலைக்கு மாறுவது அனுபவம். இப்படி யெல்லாமிருந்தும் நாமேன் எப்பொழுதும் அழியும் பொருட்களில் ஆசை வைத்து அல்லல் அடைய வேண்டும்?

 

துன்பத்துக்கு முக்கிய காரணம் ஆசை என்பது மறுக்கொணா உண்மை. அழியும் பொருட்களில் ஆசை வைப்பவன் அவை அழியும் காலம் வரும்பொழுது கட்டாயம் துன்புறுவான். துன்பத்திலிருந்து முற்றாய் விலக விரும்பு மொருவன் அநித்திய வஸ்துவில் பற்றுவையாமல் நித்தியமாயுள்ளதையே பற்ற முயல வேண்டும். அது இலகுவான காரியமல்ல. ஆன்மா ஒரு நித்திய வஸ்து. அது எல்லாவித உலகப்பற்றையும் விட்டு ஈஸ்வரனை அடைந்து உய்தல் வேண்டுமென்னும் ஒரே பற்றுடையதாயிருத்தல் வேண்டும். வேறுவகையாய்ச் சொல்லில், நாமனைவரும் உலகப் பற்றைச் சிறிது சிறிதாய் விட்டு, ஆன்ம ஈடேற்றம் பெறுவதிலேயே நாட்டமுடையவராய் நம் வாழ்நாளிற் பெரும் பாகத்தைச் செலவழித்தல் வேண்டும். அப்படிச் செய்தால் தான் நமக்கு உண்மையான சந்தோஷமும் மன ஆறுதலும் உண்டாகும். காலத்துக்குக் காலம் அனேக மகான்கள் உலகத்தின் பல பாகங்களிலும் தோன்றி, நாம் எப்படிச் சீவித்தால் ஆன்ம ஈடேற்றம் பெறுதல் கூடும் என்பதைப் பற்றித் தங்களுடைய சீவியத்தின் வாயிலாக நமக்குச் சிறந்த முன்மாதிரி காட்டியிருக்கிறார்கள். அவர்களைப் போலச் சீவிப்பது பெரும் கஷ்டமல்ல. நம்முடைய ஈடேற்றத்திற்கு எது தக்கது எது தகாதது என்பதைப் பற்றித் தெளிவாய் விளங்குகிறதற்கு நமக்கு எல்லாவற்றிற்கும் மேலாய் அறிவு வேண்டும். அந்த அறிவைத் தரவல்லது கசடறக்கற்கும் கல்வியே யாகும். கற்றவர்களென்று நாமெண்ணி யிருப்பவர்களிற் சிலர் ''ஆன்மா வென்றா லென்ன? கடவுளென்று ஒருவர் இருக்கிறாரா? அவரைக் கண்டவருண்டா? அப்படிக் கண்டவர்கள் யாராவது இருந்தால் மற்றவர்களும் அவர்களைப் போலக் கடவுளைக் காணுதல் கூடுந்தானே'' என்று இப்படிப்பட்ட பசப்பு வார்த்தைகளைப் பேசிக்கொண்டு திரிவதினால் தாங்களுங்கெட்டு, மற்றவர்களையும் கேட்டின் பாதையில் விடுகிறார்கள் இப்படிப்பட்டவர்களிடஞ் சிக்கி மயங்கினால் "உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்' என்ற மாதிரி நம்மிடத்தில் இயல்பாக இருக்கும் ஆன்மவிசாரமும் அற்றுப்போய்விடும். ஆனபடியால் ஆன்ம ஈடேற்றத்தை நாடிநிற்கும் ஒவ்வொருவரும் கடவுளில்லை யென்று சாதித்து இறுமாந்திருப்பவருடைய கண்ணிலும் காணாமலிருத்தல் மிகவும் உசிதம். நம்மைச் சுற்றி நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூர்மையாக அவதானித்தால் அவைகளிலிருந்து நாம் பெரும் நன்மையை யடைகிறதுமாத்திரமன்றி, தீமையினின்றும் விலகி நடத்தலினால் அடையத்தகும் பிரயோசனத்தைப் பற்றி அறியத் தக்கதாயிருக்கும்.

 

ஆன்மா பந்திக்கப்பட்டிருக்கும் வகையை உற்று நோக்கினால் அது மிகவும் ஆச்சரியப் படத்தக்கதாயிருக்கும். உலகப்பற்றை முற்றா யொழித்துத் துறவு பூண்டு விட்டோமென்று சொல்பவர்களில் அனேகரைக் கவனமாய்ப் பார்த்தால் அவர்கள் சில பற்றுக்களினின்றும் நீங்கி, வேறு சிலபாசங்களாற் பந்திக்கப்பட்டர்வர்களாய்க் காணப்படுகின்றார்கள். அது அவர்களுடைய குற்றமல்ல. ஒரே முறையில் நினைத்தவுடனே உலகப்பற்று முழுவதையும் அறவே விடுக்க நினைத்தல் யானையைக் குத்திச் சுளகால் மூட எத்தனித்தலை யொக்கும். பஞ்சப்புலன்களையும் அவைகளின் இயல்பான நுகர்ச்சியை விட்டுச் சும்மா இருக்கச் செய்தல் அல்லது

 

ஆன்ம ஈடேற்றத்துக்குச் சாதனமான வழியில் நிறுத்துதல் நினைத்தவுடன் செய்யக்கூடிய காரியமல்ல என்பதைப் பற்றிப் பெரும் ஞானிகளும் துறவிகளும் நமக்குக் காட்டி யிருக்கிறார்கள். எல்லாவிதக் கஷ்டங்களையும் மேற்கொண்டு ஆன்ம ஈடேற்றத்தைப் பெற்றுப் பின் அந்த நிலையில் தங்களுக்கிருக்கும் சுகானுபவத்தை நாம் அறிந்து உய்தற்பொருட்டுப் பெரும் மகான்கள் நமக்குக் கைம்மாறு கருதாமல் காலத்துக்குக் காலம் பேருதவி புரிந்திருக்கின்றனர். உலகம் நடைபெறுகிறதற்காக நாம் ஒருவரிலொருவர் பாசம் வைத்து நடக்கவேண்டியதும் உலகிலுள்ள பல பொருட்களிலும் பற்று வைக்க வேண்டியதும் அவசியந்தான். ஆனால் முற்றாய் உலகவிஷயத்தில் அமிழ்ந்து அழிந்து போகாத வண்ணம் மிகவும் விழிப்பாய் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டியது நம் மேற்பொறுத்த பெருங் கடனாகும். இதற்காகக் கடவுளை அல்லும் பகலும் வேண்டி நிற்றல் அதிக நன்மை பயத்தற்கு ஏதுவாகும். பிறர் பொருளில் ஆசை வைப்பதை அறவே விடுத்துச் சுயவெறுப்பைப் பூஷணமாகப் பூண்டு, மற்றவர்களுக்கு இயன்றவரையில் சேவை செய்ய நாம் எப்பொழுதும் முன்வரல் வேண்டும்.

 

உலகமும் அதிலுள்ள சகல சிருஷ்டிகளும் அநித்திய மாதலால், ஆன்மா அவற்றில் வைத்திருக்கும் பற்றை யொழித்து, அதனாலுண்டாகும் சக்தியைப் பெற்றுக் கடவுளை யடையும் கருத்தை மறவாது, ஈடேற்றம் பெறுதல் ஒன்றையே இலக்காகக் கொண்டு சீவித்தல் வேண்டும். தேகமும் மனமும் சுத்தமாயிருத்தல் ஆன்ம ஈடேற்றத்திற்கு இன்றியமையாதது. இதுபற்றியே மேலான நிலையை அடைய விரும்புகிறவர்கள் தாங்கள் உண்ணும் உணவைப் பற்றியும் செய்யும் செய்கைகளைக் குறித்தும் மிகவும் சாவதானமாயிருக்கிறார்கள். "அறிவுடையாரை அடுத்தாற் போதும்' என்றும்'' சற்சனர் உறவு சர்க்கரைப் பாகுபோல்" என்றும் நம்முன்னோர் தம் அனுபவத்தின் சாரத்தைப் பிறசந்ததியார் அறிந்து ஈடேறும் வண்ணம் கூறி யிருக்கின்றனர். ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குச் சற்சன சகவாசம் மிகவும் முக்கியமானது. இதை யறிந்து தான் எக்காலத்தும் உலகம் போற்றித் துதிக்கும் ஞானிகள் தங்கள் சீவிய காலம் முற்றும் சற்சன சங்கத்தை, அல்லது தனிமையை நாடி நின்றனர். நாமும் அவர்களைப் பின்பற்றினாலன்றி அவர்களெய்திய கிடைத்தற் கரும்பதவியைச் சேருதல் கூடாது." பொரிமாவை மெச்சின பொக்கை வாய்ச்சி' போல உலகம் தான் எல்லாம், சிற்றின்ப நுகர்ச்சியே சிறந்தது என்றெண்ணி மனப் போக்கின்படி யெல்லாம் கண்டபடி நடந்தால் நம்முடைய கதி அதோகதியாகவே முடியும். ஆதலால் நமது சீவியத்தின் ஒரே இலக்கு ஆன்ம ஈடேற்றம் பெறுவதாயே யிருத்தல் வேண்டு மென்பதைக் கனவிலும் நாம் மறவாதிருத்தல் வேண்டும். திரிகரண சுத்தியைப் பெற்று அதன் வாயிலாக நாமனைவரும் ஆன்ம ஈடேற்றத்தை யெய்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

கா. சின்னப்பா, அளவெட்டி,

யாழ்ப்பாணம்.

குறிப்பு: - சகோதர சகோதரிகளே!

 

"ஆண்டவன் பிறவிகளிலெல்லாம் மேலானதாகிய இந்த மனிதப் பிறவியை நமக்களித்தது நாம் பிறப் பிறப்பற்ற நித்தியப்பேறாகிய மோக்ஷ வீட்டை (அதாவது தம்மை) அடைய வேண்டுமென்ற பெருங் கருணை கொண்டே" என்ற உண்மை யாவர்க்கும் தெரியாமலா இருக்கிறது? இல்லை யில்லை. அனேகர்க்குத் தெரிந்தேயிருக்கிறது. ஆண்டவன் இம்மானிடப் பிறவியையும் இன்னும் வேண்டிய அறிவையும் நமக்களித்திருந்தாலும் நாம் முயற்சி செய்தாலன்றோ அம்முத்திப்பேற்றை யடையலாகும். அது நமக்கு அனுபவிக்கக் கிடைக்கும் சாதாரண சுகதுக்காதி பலன்களைப்போல் வினைப்பயனால் வருவதன்று.

 

"முத்தியின் விருப்பத்தாலும் முதல் வநற் பாதத்துற்ற

பத்தியினாலு மற்றப் பரனையே பாவிக்கின்ற

நித்தமாந் தியானத் தாலும் நிரந்தர யோகத் தாலும்

சித்தியா மிதுசித்திக்கும் வினையினாற் சித்தியாதால்''      (சொரூபானந்தசித்தி.)

 

ஆகையால் நாம் முயற்சி செய்யவேண்டியது அவசியம். ஆனால் நாமோ பணம் சம்பாதிப்பதும் உண்பதும் உறங்குவதுமாகக் காலத்தைக் கழிக்கிறோம். பெரும்பாலார் மனைவி மக்கள் வீடுவாசல் யாவற்றையும் விட்டுவிட்டுச் சென்றால் தான் ஞானமடைய முடியும், முத்தி மார்க்கத்தில் செல்ல முடியும் என்று எண்ணுகிறார்கள். இத்தகையோர் யாரேனும் ஒருவர் இல்லறத்திலுள்ளோர் ஞான நூல் வாசிப்பதைக் கண்டால் "இவனுக்கென்ன ஞானம்? பெண்டாட்டி யில்லையா, பிள்ளை பெறவில்லையா, பணம் சம்பாதிக்க உத்தியோகம் செய்யவில்லையா" என்று அலட்சியமாய்க் கூறிவிடுகிறார்கள். இது சுத்த மூடத்தனமன்றி வேறில்லை. ஒருவன் எடுத்ததே எந்தப் பற்றையும் விட்டு விடமுடியாது. அப்படி விட்ட பின்புதான் ஞானஅப்பியாசம் செய்ய வேண்டுமென்ற விதியுமில்லை. நாம் செய்யவேண்டியதைச் செய்தால் விடவேண்டியது காலம் வரவரத் தானே விட்டுப்போம்.

 

காய் பழுத்துவிட்டால் தானே மரத்தைவிட்டு விழுந்துவிடும். ஆகையால் இல்லறத்தொழிலை நன்னெறியில் நடத்திக்கொண்டே, "நாம் முத்தியடைய வேண்டும்'' என்ற ஒரு திட எண்ணத்தை மனதில் உறுதியாய் வைத்துக்கொண்டு, அதற்காக வேலை செய்வதை உலகில் நமது கட்டாய வேலையாய்க் கருதி, தினம் கொஞ்சகாலத்தை அவ்வழியில் செலவழித்துவந்தால் சத்சங்க வாசனையால் முத்திமார்க்கம் கட்டாயம் கிட்டும். இப்பிறவியிலேயே கிடைக்காவிடினும் இனிவரும் பிறவியிலேனும் கிடைக்கும்


 பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment