Wednesday, August 26, 2020

 ஆல்ப்ரெட் மஹாராஜன் கதை

கிறிஸ்தவ மதத்தை அனுஷ்டித்த ஆங்கிலோ சாக்ஸனியருக்கு மத அனுஷ்டானத்தினால் மூர்க்க குணம் ஒழிந்தது. சகோதரத்தன்மை உண்டாயிற்று. ஆஸ்திக புத்தியும் ஒற்றுமை யுணர்ச்சியும் ஏற்பட்டன. இவ்வளவுக்கும் காரணமாக இருந்தவர் தியோடார் ஆப் தார்ஸஸ் (Theodore of Tarsus) என்ற ஆங்கிலோ சாக்ஸனிய மதகுரு. ஆங்கிலோ சாக்ஸனியர் முதல் முதலில் மத குரு ஸ்தானத்தை ஏற்படுத்திய காண்டர்பரி (Canterbury) மாதா கோவிலிலுள்ள மத குரு பிரதான மத குருவாகி, அவரே இன்றளவும் பிரதம இங்கிலாந்து மத குருவாக விளங்குகிறார். இதரமாகாண மத குருக்கள் இந்த ஆர்ச் பிஷப் ஆப் காண்டர்பரிக்கு அடங்கினவர்களாக அவருடைய அப்போதப்போதைய உத்திரவுகளை நிறைவேற்ற வேண்டுமென ஏற்பாடாயிற்று. இதனால் மத சம்பந்தமாக ஆங்கிலோ சாக்ஸனியர் காண்டர்பரி மத குருவுக்கடங்கி நடக்க வேண்டுமென நிர்ணயமாகி, ஐரோப்பாவுக் கெல்லாம் பிரதான பெரிய மத குருவான (Pope) போப் எல்லாரையும் நடத்துபவரானார். இதனால் ஐரோப்பிய இயக்கங்களிலும் இங்கிலார்துக்குப் பங்கு ஏற்பட்டு அபிவிருத்தியடைய ஹேதுவாயிற்று.

 

இங்கிலாந்தில் இருந்த சப்த ராஜ்யங்களில் ஒன்றுக்கொன்று பிரதானஸ்தானத்திற்கு போட்டி ஏற்பட்டு, கொஞ்சகாலம் நார்த்தம் பிரியா அரசன் அப்பதவியிலிருந்தான். பிறகு மெர்ஸியா அரசன் அப்பதவியை அடைந்தான். அதன்பிறகு ஈஸ்ட் ஆங்கிளியா மன்னன் பிரதான மானவனானான். நடக்கும் இச்சமயம் (சுமார் 802 கி. பி.) வெஸ்ஸெக்ஸ் அரசன் எக்பர்ட் என்பான் மிகுந்த பலசாலியாக இருந்தான். அந்த எக்பர்ட் சப்த ராஜ்யாதிபதிகளுக்கும் தலைவனாயிருந்த சமயம், ஆங்கிலோ சாக்ஸனியர் பிரிட்டானியருக் கிழைத்த சகல தீங்குகளும் ஓருருவாய் திரண்டு வந்ததே போல, டேனர் என்ற மற்றொரு அநாகரிகர் இங்கிலாந்தின் மேல் படையெடுத்து கொள்ளையடிப்பதும், கொளுத்துவதும், கொல்லுவதும், சிறைபிடித்துக் கொள்ளுவதும், நாசமாக்குவதும், ஓடுவதுமாக வந்து சேர்ந்தனர். “பிறர்க்கின்னா முற்பகல் செய்யில் தமக்கின்னா, பிற்பகல் தாமே விளையும்'' என்பதற்கிணங்கியும், " நன்மை விதைத்தால் நன்மை விளையும், தீமை விதைத்தால் தீமை விளையும்" என்பதற் கிணங்கியும், “பாக்ஷதர்களுக்குப் புரோக்ஷதர்களாய்" ஆங்கிலோ சாக்ஸனியருக்கு டேனர்கள் ஏற்பட்டார்கள். இவர்கள், டென்மார்க், நார்வே, ஸ்லீநம் கதைடன் என்ற வடகடல் பிராந்தியங்களி லிருந்து வந்ததனால் "நார்த்மென்" அல்லது வடக்கத்தியர்கள் என்ற பெயரும் உடையவர்கள். அவர்களும் துணிந்து புயலிலும், காற்றிலும், கடலிலும் சென்று கொள்ளையடிப்பவர்கள்.


இந்தப் புதிய கொலைகாரர்களை எதிர்க்கும் அவசியத்தினால் வெஸ்ஸெக்ஸ் அரசன் எக்பர்ட் தலைவனாகி, அவன் ஆங்கிலோ சாக்ஸனிய இங்கிலாந்து பூராவுக்கும் முதல் அரசனானான். அந்த எக்பர்டின் இரத்தம் நமது ஐந்தாம் ஜார்ஜ் மகிபர் உடம்பிலும் ஓடுகிறதாம்! அந்த எக்பர்ட்டின் தலைமையில் ஒருவாறு டேனர்கள் திருப்பி யடித்துத் துரத்தப்பட்டார்கள்.

 

அந்த எக்பர்ட் காலத்திற்குப் பிறகு டேனர்கள் மறுபடியும் தோன்றி துவம்சம் செய்யத் தொடங்கினதால் எக்பர்ட்டின் சந்ததியில் பிறந்த அவருடைய பேரன் ஆல்ப்ரெட் என்பவரை, நாட்டிலுள்ள பிரபுக்களும் புத்திமான்களும் அடங்கிய விட்டன் சபையார் அரசராக்கினர். ஸ்வதந்திரப் பிரியர்களான ஆங்கிலேயர் ஆதிகாலந் தொட்டு, தங்கள் அரசர்களைக் கட்டுப்பட்டு ஆளும்படியே செய்து வைத்து, சந்தர்ப்பங்களில் தங்களுக்கு இஷ்டமானவர்களையே அரசர்களாக்கியும் வந்தார்கள். அதையொட்டியே, ஆல்ப்ரெட்டுக்கு மூத்தவர்கள் அச்சமயம் இருந்தும், சண்டைகளில் தீரம் காட்டி எதிர்த்து நின்று போராடி, எதிரிகளைத் துரத்திப் புறமுதுகிட் டோடும்படி செய்து புகழ்பெற்ற வீரனான ஆல்ப்ரெட்டையே அவருக்கு வயது 23-ஆயினும் அரசராக்கினர்.

 

இந்த ஆல்ப்ரெட்டின் பால்யத்தைக் கண்ட டேனர்களும் "உருவின் சிறுமை கண்டெள்ளியவர்"களாய்த் துணிந்து கத்ரம் (Guthrum)தொரு புதிய வீரத்தலைவன் கீழ்ப் படையெடுத்து வந்து கடுமையாகப் போர் புரியலானார்கள். அவர்களுக்குச் சலிக்காத ஆல்ப்ரெட் அரசனும் தன் வீரர்களை போர்க்களத்தில் திறமையுடன் நடத்திச் சுமார் ஒன்பது சண்டைகளில் மாறி மாறி ஜெயிப்பும், தோல்வியும் அடைந்து, கடைசியில் துரதிர்ஷ்டவசமாய் தோற்று அதெல்னி என்றதொரு தீவில் சென்று சொற்பகாலம் தலைமறைவாயிருக்க நேரிட்டது. ''யானைக்கும் அடி சருக்கும்'' என்பது பழமொழி! காலத்தின் வேகம் யாரைவிட்டது? ஆனால் “விதி-விதி" என்று
புழுங்குவது வீரர்தம் செய்கையாமோ? ''யானை படுத்தாலும் குதிரை யவ்வளவுயரம்" இருக்கும் என்பதற் கிணங்கவும், “தக்கோர் தனஞ் சிறியராயினும் மனஞ் சிறியராவரோ?" என்பதற் கிணங்கியும் ஆல்ப்ரெட் மனம் தளர்ந்தா
ரில்லை.

தான் ஒளிந்திருந்த அதெல்னி தீவிலிருந்தவண்ணமே, தன் வீரர்களுக்கு எச்சரிக்கைகள் அடிக்கடி யனுப்பியும், மாறுவேடத்தில் அடிக்கடி எதிரிகளுக்கிடையில் நுழைந்து உளவறிந்தும், எப்படியும் தன் ராஜ்யத்தை மீட்டுக்கொண்டு எதிரிகளைத் துரத்திவிட வேண்டுமென்ற எண்ணமே மேலிட்டவராய் இராப்பகலாய் ஓய்வொழிவின்றிப் பாடுபட்டுவந்தார். (இந்த ஒரு சந்தர்ப்பம் தான், தான் வசித்து வந்த இடைச்சியின் வீட்டில் ரொட்டியைக் காந்தவிட்டு விட்டதற்காக இடைச்சியால் திட்டப்பெற்றார் என்ற சிறு கதை கதா வாசகங்களில் காணப்படும்!), மேற்சொன்னபடி ஒரு பாடகனைப்போல் மாறுவேடம் பூண்டு, டேனர் தலைவன் முன்பு சென்று, அழகாகப்பாடிப் பரிசு பெற்று, அந்த டேனர்கள் ஆல்ப்ரெட் ஒழிந்தே போனான் என்ற நினைப்பில் ஆடிப், பாடி,களித்து, உண்டு, குடித்து, வெறிகொண்டிருந்த சமயம் பார்த்து, தன் வீரர்களை ஒன்று சேர்த்து டேனர்களை சிப்பான்ஹாம் என்றவிடத்தில் நன்றாய் முறியடித்து விரட்டினார். அதே வருஷத்தில் 878-ல் டேனர் தலைவன் சத்ரமுடன் வெட்மோர் என்ற இடத்தில் சமாதானமும் செய்து கொண்டார். "காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது" என்று அறிந்து, இங்கிலாந்தின் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு பாகத்தை டேனர்களுக்குக் கொடுத்து, டேனிலா என்ற அந்த பாகத்தில் வசிக்கச் செய்து, அவர்கள் எல்லோரையும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவும்படி வற்புறுத்தி, சமாதானமாய் இருக்கச் செய்தார்.

இவ்வாறாக சலிக்காது யுத்தம் நடத்தி ஜெயம் பெற்ற ஆல்ப்ரெட்டு தன்னுடைய அரசியல் திறமையையும் பின்வரும் முறைகளில் காட்டி, உலகமுள்எளவும் அழியாப் புகழ்பெற்றார் என்பது சொல்லாமலே விளங்கும்.

 

டேனர்கள் ஒருவாறு தாத்காலிகமாக அடங்கி விட்டாலும், அவர்களுடைய இயற்கைக் குணம் என்றும் திரும்பிவிடலாம் என்று எதிர்பார்த்த ஆல்ப்ரெட், தன்னுடைய இராஜ்ய எல்லை பூராவிலும் பலமான கோட்டைகளைக் கட்டித் திறமை வாய்ந்த வீரர்களை வைத்துக் காவலுக்கு ஏற்பாடு செய்தார். கடற்கொள்ளைக்காரர்களான தால், தங்கள் தாய்நாட்டி லுள்ளவர்கள் மேலும் தொடர்ந்து வர வழியில்லாதபடி, இங்கிலாந்தின் கரையோரங்களைக் காக்க அநேக யத்தக் கப்பல்களைக் கட்டியும், கட்டுபவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்தும் வந்தார். தன் பிரஜைகளில் பலருக்கு வீரர் பழக்கமும், ஆயுதப் பழக்கமும், மாலுமிப் பழக்கமும் ஏற்பட, ஆங்காங்கு பயிற்சிக் கூடங்களை ஸ்தாபித்தார். விவசாயிகளுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து, போக்கு வரவுக்குரிய சாதனங்களான சாலைகளையும் பாலங்களையும் பழுது பார்த்து, வியாபார அபிவிருத்தியையும் நாடினார். தன் குடிகளுக்கு, மதாபிவிருத்தியும், கல்வி யபிவிருத்தியும் விசேஷமாக உண்டாகும்படி, நாடு பூராவும் மாதாகோவில்களையும், மடாலயங்களையும், பள்ளிக்கூடங்களையும் ஸ்தாபித்தார். தன் குடிகளுக்கு, தங்கள் ஜனசமூகத்தினிடத்திலும், முன்னோரிடத்திலும் மாறாத அன்பு குறையாமல் இருக்கும்படி “ஆங்கிலோ சாக்ஸனியர் வம்சாவளி" என்ற ஆங்கிலோ சாக்ஸனியருடைய பூர்வ சரித்திர விபரங்களை எழுதுவித்து அது தொடர்ந்து எழுதப்படுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்தார். (சரித்திரம் என்ன பயனைக் கொடுக்கலாம் என்பதை ஒருவாறு அன்பர்கள் பூகிக்கலாம். சிவாஜி முதலியவர்களின் வாழ்க்கைப்போக்கிற்கு வீரர் சரித்திரமன்றோ காரணம்.) மேலும் காலநிர்ணயம் தெரியும் மெழுகுவர்த்தி கடிகாரங்களைக் கண்டுபிடித்து எங்கும் உபயோகத்திலிருக்க ஏற்பாடு செய்தார்.

 

இதுவன்றோ தன் நாட்டைப் பரிபாலிக்கும் உத்தம மன்னன் செய்யும் காரியப்போக்கும், ஆளும் முறையும்! ஆகவே ஆல்ப்ரெட்டுக்கு சரித்திரத்தில் "மஹா ஆல்ப்ரெட்" (Alfred the Great) என்று பெயர் வழங்குவதில் ஏதேனும் வியப்புமுண்டோ?


"பார்தழுவும் நல்வழியிற் பண்பி னாசாண்டிடலே

சீர்பெற்று வாழுர் திறம்"


 "அடக்குவதில்லை; அளித்தலே சீர்மை
கொடுக்கும் அமைதியெதிர் கொண்டு''


"குடிகளின் சேவகரே கோக்களெனக் கொள்ளின்
படியினிலேதே பகை”


"பஞ்சம் இருள் நோய்மிடியைப் பல்லாற்றிற் போக்கிடும்
செஞ்செயலின் மன்னே திறம்.''                           (அறநூல்)

 

இனி அடுத்துவரும் கதையில் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பாய் வந்த அழி அரசன் எதல்ரெட் என்பவனைப்பற்றி எழுதுவோம்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - மே ௴

 

 

 

No comments:

Post a Comment