Thursday, August 27, 2020

 

இளமையும் முதுமையும்

 

 ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பின்வருமாறு ஒரு புலவர் கவற்சியுற்றார். "மண்ணினாற் சமைத்த பாவைக்குக் கொய்யப்பட்ட பூவைச்சூடி, குளத்தில் நீராடுகின்ற சிறுமிகளுடன் கைகோத்து விளையாடி, கள்ள மென்பதின்னதெனவறியாத இளையர் கூட்டத்தோடு கரை யின்கண் உயர்ந்து வளர்ந்த மருதமரத்தில் நீர்மேற்கவிந்து நீண்டு படிந் துள்ள கிளையின் மீதேறி, கரைநின்று காண்போர் வியக்கும்படி அலைகள் சிதற நீரில் துடுமெனப் பாய்ந்து, உள் மூழ்கிக் குளித்து மணலெடுத்து வந்த அறியாப்பருவம் எங்கு சென்றது? பூண்கட்டிய பிடியை யுடைய பெரிய கோலை யூன்றித் தலை நடுக்கங்கொண்டு இருமல் இடை இடையே நெருங்கப்பெற்ற சொற்களையுடைய முதுமைப் பருவத்தைக் கொண்ட எம்மிடத்தினின்றும் அவ்விளமைப்பருவம் எங்கு நீங்கியது? அதை நினைத்தால் இப்பொழுது மனமிரங்குகின்றது. ''யார்தான் இங்ஙனம் வருந்தார்? இளமை திரும்பி வருவதில்லை. சாதல் உறுதி; காலம் விரைந்து நடக்கின்றது; அதைக் கட்டுவாராருமில்லை. ஆதலின் எண்ணமும் ஏக்கமுமில்லாத இளமையின் அருமையை எவரும் நினைந்து இரங்குகின்றனர். மேலும் கையிலிருப்பதன் அருமையை மறந்து, இழந்துவிட்டதன் பெருமையை எண்ணிக் கவலையுறுவது மக்கள் இயற்கை. பிழைத்திருக் கும் பிள்ளைகளை விட இறந்துபோன மைந்தர் சிறந்தவர்களென்று பேசும் தாய் தந்தையர் பலர். இதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

நிற்க, உயிருள்ள ஒவ்வொன்றும் உண்டு வளர்ந்து பெருகி யழிய வேண்டும். வளர்ச்சியின்றி உயிரில்லை. தவழுங் குழந்தை எழுந்து நடக்க விரும்புகிறது; சிறு பையன் தன்னினும் பெரியவன் செய்யும் வேலைகளை நினைந்து தானும் அவ்விதம் செய்ய அவாவுகிறான். இப்படியே ஏனையோரும். இந்த வளர்ச்சி ஏற ஏற மாறுதல்களுந் தோன்றுகின்றன. மாறுதலின்றி வளர்ச்சியில்லை. ஒரு தண்டுடன் நாலைந்து இலைகளுள்ள செடி நாளாவட்டத்தில் கிளைகள் விட்டுப் பச்சை மாறிப் பூவெடுக்கத் தலைப்படுகிறது. இந்த மாறுதல் அல்லது வேறுபாடு திடீரென்றுண்டாகாமல் படிப்படியாய் நாம் அறியாவண்ணம் தோன்றுகிறது. செடி எப்பொழுது மரமாயிற்றென்றாவது ஒரு மகன் எப்பொழுது கிழவனானானென்றாவது நாம் சொல்ல முடியாது. பருவத்திற் கேற்ற வேறுபாட்டால் ஒவ்வொன்றுந்தான் பூமியில் அழிந்து போகாமல் மறுபடியும் பிறப்பதற்காக விதை, கொட்டை, கன்று முதலியவற்றைத் தந்து இறுதியில் மாள்கிறது.

 

அறியாத பச்சைக் குழந்தையிலிருந்து பக்குவமாகித் திரண்ட மனிதன் பிறக்கிறான். தேகத்தில் வளர்ச்சி யிருக்குமாறே மனத்திலும் அவனுக்குத் தேர்ச்சியிருக்கிறது. மனத்தேர்ச்சியின்றி உடல் வளர்ச்சி மாத்திரமுள்ளவனை மனிதனென்று சொல்ல முடியாது. ஐந்து வயதிலுள்ள எண்ணங்களை ஐம்பது வயதிலும் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் பேதையென்பதில் ஐயமில்லை. இத்தகைய மனிதர் அதிகமாயிருப்பதே நம் நாட்டிற்குப் பெரியகேடு. காய்மார் சிறு பிள்ளைகளை நோக்கி'காலையி லெழுந்து கடவுளைத் தொழவேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் நன்றா யிருப்பீர்கள்; உங்களுக்கு அறிவுண்டாகும்; நலம்பெற்று வாழ்வீர்கள்'' என்றால் அது நல்லதுதான்; ஆனால் வளர்து தேறிய ஒருவன் 'தனக்கு ஊதியங்கிடைக்கும், நினைத்த காரியங் கை கூடும்: தன் மக்கள் மனிதர்கள் சுகமடைவார்கள்' என்ற கருத்துடன் மாத்திரம் இறைவனைப் பணிவா னாகில் அவன் குழந்தைப் பருவத்தைக் கடவாத குருடனேயன்றி வேறெ ன்ன? உலகில் இலாபமடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒருவன் மற்றொரு மனிதனைக் கும்பிட்டுத் திரிந்தால் அதைப்பார்த்து நாம் கை கொட்டிச் சிரிப்போமே. தன் சுய நன்மையின் பொருட்டு எல்லாம் வல்ல கடவுளைத் தொழும் மனிதன் அவனினும் அதிகமாய் இகழப்படவேண்டு மன்றோ? கூலிக்கு ஆண்டவனை வணங்குவதைவிடக் கேவலமானதொன் றுண்டோ? இறைதனை ஒரு பெரிய வியாபாரியாக்கி "நான் உனக்குத் தேங்காயும் பழமும் நிறையத் தருகிறேன்; எனக்குப் பொருளும் சொத் துங்கொடு'' என்பதை விட இழிவு வேறில்லை. என்றாலும் எல்லா மதத்தினர்க்குள்ளும் இவ்வாறு இறைவனை வேண்டிக் கொள்பவர்களே மிகுந்திருக்கின் றனர். இதுதான் அவனியில் உண்மையும் செம்மையும் செழிக்காதிருப்பதற்குக் காரணம். எல்லா மார்க்கங்களிலுங் கூறப்பட்டிருக்கிற படி ஒவ்வொருவனுந் தன் நலத்தைப் பெரிதென்று கருதாது கூடியவரையில் பிறர் நலத்தை எண்ணி நடந்து கொண்டால் பூமியிலும் நாம் ஈசனுடைய பெரிய நோக்கங் கைகூடுமாறு உதவி புரிகிறவர்களா யிருப்போம். ஆனதால் ஒப்பற்ற இறைவனைக் குறித்து நாம் சரியான எண்ணமுடையவர்களா யிருக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. அவனியிலுள்ளவர்கள் அனைவரும் நல்லவர்களாகி முழுமுதற் கடவுளினடி சேரவேண்டுமென்று பிரார்த்தித்து அதன்படி நடப்பவர் வெகு சிலர். இச்சிலர் பலரானால் எல்லாம் நன்றாயிருக்கும்.

 

நிற்க, சிறு வயதிலுள்ள எண்ணங்கள் முழுவயதில் அனுபவத்தால் முதிர்ச்சியடைய வேண்டும். உண்மையில் இப்படியே நடக்கிறது. விவசாயத்திலும் வியாபாரத்திலும் நாம் ஒவ்வொருநாளும் புதியவற்றை யறிந்து நம் மனத்தை விசாலப்படுத்திக் கொள்ளுகிறோம். புகை வண்டியைப் பற்றி ஐந்து பிராயத்தில் நமக்கிருக்கும் நினைவு ஐம்பது வயதிலிருப்ப தில்லை. உள் நாட்டில் சிறு கிராமத்திலிருந்த பையனொருவன் தன்னுடைய ஊரில் மாத்திரம் சூரியனும் சந்திரனும் பிரகாசித்தன வென்றெண்ணினான். மற்ற ஊர்களிலிருந்து வருகிறவர்களும் சூரியனையும் சந்திரனையும் பற்றிப் பேசியபொழுது ஒவ்வொரு ஊருக்கும் வெவ்வேறு சூரிய சந்திரர்களிருக்குமென நினைத்தான். ஞாலமுழுதும் ஒரே பரிதியும் ஒரே மதியும் ஒளி தருகின்றனவென்று அவன் அறிந்தபோது அவனடைந்த ஆச்சரியத்திற் களவில்லை. சுயம்புவாகிய பரஞ்சோதியைப் பற்றியும் முதலில் நாம் அது நம்முடைய ஊரிலுள்ளது; நம்மைப் போல் உண்டு உடுப்பது என்று கருதுகிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் இப்படி நினைத்தால் நாம் அறிவீனர்களாவோம். மற்ற விஷயங்களில் அதிக புத்திசாலிகளாயிருக்கிற நாம், தெய்வம் என்ற ஒரு விஷயத்தில் மாத்திரம் அறிவு குன்றிப் போகிறோம். இதென்ன விபரீதம்! ஒருவன் தன்னைச் சுற்றிலுமிருப்பவரை நன்றாயறிந்து தன் தந்தையைப் பற்றி மாத்திரம் தனக்கு ஒன்றுந் தெரியாதென்று புகல்வானாகில் நாம் நகைப்போமே. நமது தந்தையாகிய ஈசனின் அருள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாயிருக்க நாம் நம்முடைய அன்பை ஐயன்மீது செலுத்திச் செல்வமுடையவர்களாக முயலாமல், அறிவில் ஏழைகளாகி ஏன் இடர்ப்படவேண்டும்? தேகத்திற் கடுத்தவற்றில் முதிர்ச்சியடைந்திருக்கும் நாம், ஆன்மாவைப் பற்றியவைகளில் என் குழந்தைகளாயிருக்க வேண்டும். அறுபது எழுபது வயதாகியும் தங்கள் ஆன்மாவைப் பற்றிய அறிவில் பால்குடி மறவாத திசுக்களாயிருப்போர் அநேகர். இவர்கள் மற்றவற்றிலும் அங்ஙனமே யிருந்தால் நலமாயிருக்கும். பிறரை ஏமாற்றுவதற்காக பல மனிதர்களுடைய இயற்கைக் கூறு பாட்டை நன்றா யறிந்திருக்கிறார்கள். வழக்குகளிலும் பொய் சாட்சிகளை எங்ஙனம் உபயோகித்தால் ஜயங் கிடைக்குமென்பதை யுணர்வார்கள்; பிறர் தங்கள் மீது நம்பிக்கை வைக்கும் பொருட்டு என்ன செய்யவேண்டு மென்றறிந்து பல வழிகளைக் கையாடுவார்கள்; கணக்கில் புலிகள்; காரி யத்தில் நிபுணர்; கடவுள் விஷயத்தில் பாலகர்கள். இந்த ஒரு சங்கதியில் மாத்திரம் அவர்கள் புத்தி செல்வதில்லை.

 

இனி, பச்சைமாறிப் பவளந் தோன்றாததற்கு முன் செய்யவேண்டியதைச் சிந்திப்போம். அழகும் ஆண்மையும் நிறைந்து திரண்டு வளர்ந்த மகனொருவனைப் பார்க்க நாம் களிப்படைகிறோம். அவனுடைய புதிய மனம் விசனங்களாலும் வியாகுலங்களாலும் இன்னும் சலிப்படையவில்லை. அவனுடைய நடை காம்பீரமாயிருக்கிறது; முகத்தில் மலர்ச்சி குடிகொண்டிருக்கிறது. எதிர்த்தவரை எளிதில் அடங்கச் செய்யும் தேகவலிமை உடையவனாயிருக்கிறான். தான் கொண்ட நோக்கத்திற்கு இடையூறாக வருவதை அவன் ஒரு பொருட்டாய் நினைப்பதில்லை. அபாயங்களைக் கண்டு விலகாமல் அவற்றைத் தேடிப்போய்த் தன் திறமையை விளக்க விரும்புகிறான். ஊக்கம் மிகுந்து உற்சாகம் நிறைந்து உன்மத்தன் போல் துள்ளுகிறான். எல்லாம் வேடிக்கையும் விளையாட்டாகவுமிருக்கின்றன. நண்பர்களோடு சல்லாபமாய்ப் பேசி, உல்லாசமாய்க் காலங் கழிக்கிறான். அவனுடைய யோசனைகளுக் களவில்லை. தன்னால் முடியாத தொன்றில்லை யென்றெண்ணிக் கொள்ளுகிறான். கனவின்றித் தூங்கி யெழுந்து, கருத்தின்றி யங்குமிங்குந் திரிந்து காண்பதிலெல்லாங் களிப்படைந்து கண்டவற்றைத் தின்று கல்லையும் ஜீரணஞ் செய்து கண்களில் நீர் பெருகச் சிரிக்கிறான். இளமையின் பெருமை என்னே! பச்சையின் மாட்சி என்னே! ஐயோ, இந்த இளமை மாறுமே; பச்சை பழுக்குமே. செழித்துத் தழைத்து ஓங்கி வாய்த்து வளர்ந்து நிமிர்ந்து நிற்கும் இளைமையாகிய இச்செடியிலுள்ள பூக்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! இவை நிறமும் மணமும் நிறைந்து விளங்குகின்றனவே! மலர்ந்தவை உலர்ந்து போகுமுன் இவற்றைப் பறித்து நமது ஐயன்முன் பரிமளம் வீசவைக்க வேண்டாமோ? வாடியுலர்ந்தபின் அவற்றை வையகம் படைத்தவனுக் களிப்பீரோ? வற்றி வதங்கியபின் அவை வழிபாட்டுக்குதவுமோ? ஆதலின் இளமையின் வலிமையும் ஆண்மையுமிருக்கும் போதே அவற்றை யொடுக்கி ஆண்டவனுக்குத் தொண்டு புரிவது அழகு.

 

கிழவர்கள் சாதுக்களாயிருப்பதில் சிறப்பொன்றுமில்லை; வயது சென்றவர்கள் தியானத்திலிருப்பதில் வியப்பொன்றுமில்லை; விருத்தாப்பியர் நல்லவர்களாயிருப்பதில் விசேஷமொன்றுமில்லை, பலங்குறைந்து பற்றுகளொழிந்து ஐம்புலன்களடங்கி வருங்காலத்தில், இறைவனை இரவும் பகலும் நினைந்து இரங்குவது எளிது. வாட்டமும் வருத்தமுமடைந்து நொந்து மெலிந்தபின், பிறர் குற்றங்களைப் பொறுத்தலில் மேன்மை யென்னவிருக்கிறது. நோக்காடு நிறைந்த சாக்காட்டில் தர்மசிந்தை தானே வரும். இன்பங்களை நுகர இயலா திருக்கும் பருவத்தில் கெட்ட சிந்தையின்றி யிருப்பது சாதாரணம். ஆகையால் சிறுவர்களும் வாலிபர்களும் நல்ல வயதிலிருப்போரும் தத்தம் காலத்திலேயே நன்னெறியைக் கைப்பிடித்து நலம் பெற்று வாழ்வார்களாக.

 

இவ்வதிகாரத்தை முடிக்கு முன் நாம் கூறவேண்டிய தின்னொன் றுண்டு, வயது முடிந்து வாழ்வின் முடிவை நெருங்கி நிற்கும் கிழவனுக்கும் வாழ்க்கையின் தொடக்கத்தில் வளருகின்ற பிள்ளைக்கும் சிலவற்றில் மிகுந்த ஒற்றுமையுண்டு. பல் விழுதலும், தலை வழுக்கையாதலும், நடக்க முடியாது தள்ளாடுதலும், உரை குழறுதலும், அன்னமிறங்காமையும் நாம் கருதத்தக்கன, புறத்தில் நாம் காணும் இவ்வொற்றுமையைச் சில சமயகளில் அகத்திலுங் காணலாம். கவனமின்மையால் ஒன்று கிடக்க, மற்றொன்று கூறல், கேட்டதையெல்லாம் நம்பிக்கொள்ளுதல், மற்றவர் சிரித்தலைக்கண்டு சிரித்தல் (தன் மனத்தில் காரணம் விளங்காமல்), ஆகிய இன்னும் பல செய்கைகளில் இறக்க விருக்கும் வயோதிகர், பிறந்து வளருங் குழந்தைகளை யொத்திருக்கின்றனர். இங்ஙனம், முதுமையில் இளமை தோன்றுகிறது. பச்சையும் பவளமுங் கூடுகின்றன. முதுமையின் இளமை தோன்று முன், இளமையில் முதுமைமை யடைவது சாலவும் நன்று.


 K. P. சந்தோஷம், B. A., L. T.

 (Voorhee's College), வேலூர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - மே ௴

 

 

 

No comments:

Post a Comment