Thursday, August 27, 2020

 

இளமைச் சித்திரம்

(P. அரங்கசாமீ.)

உலக மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்நாட்களில் அனுபவிக்கும் இன்பங்களில் பெரும்பாலன இளமைக்காலத்தேயாம். அவ்விளமைக் கால இன்பங்கள் எல்லாம் ஒரு நிகரன அன்று. இளமைப் பருவத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமலேயே இரு பாலரும் ஒருங்கே கூடி விளையாடி ஒத்த இன்பம் அனுபவித்து மகிழ்வுறுகின்றனர். அஃது தொன்றுதொட்டு இன்றளவும் உள்ள தொன்றாம். பத்து அல்லது பதினைந்து வயது வரையிலும் ஆண், பெண் இருபாலரும் வேறுபாடின்றி விளையாடுகின்றனர். விளையாட்டுக்களிலும் எத்தனை விதம் தான்? பிள்ளைத் தமிழிற்குரிய இலக்கணங்கள் ‘சிற்றில் சிதைத்தல்' ' ‘சிறு தேர் ஊர்தல்' என்பனவெல்லாம் இருபாலர்க்குமுரிய பொது விளையாட்டுக்களேயாம். இவ் விளையாட்டுக்களின் மூலம் இருபாலரும் இணையற்ற இன்பம் அனுபவிக்கின்றார்களன்றே?

ஏன்? இன்றும் குக்கிராமங்களுக்குச் சென்றால், இளமைசான்ற இரு வகுப்பினரும் ஒருங்கு சேர்ந்து 'வீடு கட்டி விளையாடுதல்' 'கூட்டாஞ் சோறு ஆக்குதல், 'பொம்மைக் கல்யாணம் செய்தல்' முதலிய விளையாட்டுக்கள் விளையாடுவதைப் பார்க்கலாம்.

ஆயினும், ஆண் இளைஞர்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சற்று சேஷ்டை - குறும்பு நிறைந்தவைகளாகவே இருக்கும். ஆபத்தானவைாளும் கூட. ''பாரி கோடு' விளையாடுதல், சடுகுடு விளையாடுதல், கிட்டிப்புல் விளையாடுதல், தண்ணீரில் குதித்து நீந்துதல் முதலியவெல்லாம் சற்று குறும்பு நிறைந்த விளையாட்டுகால்லவா? இளமைப் பருவமெல்லாம் மனதுக்கு இன்பம் அளித்துக் கழிதல் இயற்கையேயாம். 'வாலிபம் குரங்குச் சேட்டை' என்பது வழக்குரை யன்றோ? ஒருவன் தன் வாலிபத்தில் தன் வசம் போனவாறு துள்ளி விளையாடி, அதனால் அடையும் இன்பங்களையும், துன்பங்களையும்; வாழ்நாளின் பிற்காலத்தில் உள்ள நிலைமையையும் அமைதியுடன் ஆலோசித்துப் பார்த்தால் இளமைக் காலத்தில் தான் விளையாடிய குறும்பு நிறைந்த சில விளையாட்டுக்களை எண்ணி ஒரு புறம் மனக்குதுகலமும், ஒரு புறம் பெண்களோடு கூடி வேறுபாடில்லாது விளையாடினோமே என்று என்னும்போது சிறிது நாணமும் மாறி மாறி வருவது இயற்கையேயாம்.

இளமைப் பருவத்தில் நாமும் ஓடியாடி குறும்பு நிறைந்த விளையாட்டுகள் விளையாடி யிருக்கின்றோம். ஆனால் நாம் விளையாடிய விளையாட்டுக்களை யெல்லாம் படம் பிடித்துக் காட்டுவது போல்-சித்திரம் எழுதுவது போல் ஒன்றாகச் சேர்த்து அழகுபடக் கூறுதல் நமக்குச் சற்று கடினம் தான். ஆனால், சங்கப் புலவர்களுள் ஒருவராகிய “தொடித்தலை விழுத்தண்டினார்' என்ற ஆசிரியர் புறார்னூற்றில் தன் இளமைக்கால செயல்களையும், முதுமைக்கால சிலையினையும் சித்திரித்துக் காட்டியிருக்கின்றார். எங்ஙனம்? ''பக்குவமான - வாலிபம் நிறைந்த இளமைக்காலம். இவ்விளமைப் பருவத்தில் மணலிடத்து வண்டல் மண்ணால் செய்யப்பட்ட பாவைக்கு- பொம்மைக்கு, அங்கு பூத்திருந்த பூக்களைக் கொய்து மாலையாகக் கட்டி அப் பொம்மைக்குச் சூட்டியும், அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்களோடு-தன் வயதொத்த மகளிரொடு கைகோத்துத் தழுவி தண்ணீரில் விளையாடிக்கொண்டும், ஆற்றின் கரையோரத்துல் ஓங்கி வளர்ந்த மரத்தின் கிளைகள் தண்ணீரின் மேல் தாழ்ந்து நிற்கின்றன. அக் கிளைகளில் மற்றும் சில தோழர்களோடு ஏறி, கரையில் நிற்பவர்கள் வேடிக்கைப் பார்க்கும் படியாக ஒருவர் பின் ஒருவராகக் குதித்தும், ஆழத்தில் மூழ்கி மண் எடுத்து கரையில் நிற்பவர்களுக்குக் காட்டியும் விளையாடிக் கொண்டிருந்த அந்த கல்வி யறிவில்லாத இளமைக்காலம் எங்கு சென்றதோ? நினைக்கும் தோறும் இரக்கமாகின்றது. இப்பொழுதோவெனில், இருமல் வந்து விட்டது, வார்த்தைகள் குழறுகின்றன, கையில் பூண் கட்டப்பட்ட பெரிய தண்டை-தடியை ஊன்றிக்கொண்டு நடக்கும் நிலைமை வந்துவிட்ட ஆ! என்ன இளமைக்காலம்? முதுமைக்காலம் தான் என்ன?" என்ற இவ் விளமைக்கால வருணனையை,

"இனி நினைந்து இரக்க மாகின்று திணிமணற்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து

தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூக்கி

மறையென வறியா மாயமி லாயமொடு

உயர் சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

நீர்பணிப் படி சோ டேறிச் சீர்மிகக்

கரையவர் மருளத் திரையகம் பிதிர

நெடுநீர் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

குளித்து மணற்கொண்ட கல்லா வின்மை

அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ

தொடித்தலை விழுத்தண் நன்றி நடுக்கும்

றிருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூதாளரே மாசிய வெமக்கே." (புறம் 243)

 

என்ற அழகு நிறைந்த பாட்டால் நமக்கு இளமைப் பருவ நிலையினை சித்திரித்துக் காட்டுகின்றார் அல்லவா?

இவர் தம் இளமைக்கால வருவணயைக் காட்டிலும் முதுமைக்கால வருணனையில் கூறப்பட்டுள்ள தண்டை-தடியை 'தொடித்தலை விழுத்தண்டு' அஃதாவது “பூண் கட்டப்பட்ட தலையினையுடைய பெரிய தண்டு' என்று பிறப்பித்துக் கூறியவதனால், இவருக்கு தொடித்தலை விழுத்தண்டினார்' என்ற சிறப்புப்பெயரே வழங்கலாயிற்று.

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment