Thursday, August 27, 2020

 

இன்பந்தேடிய இளவரசன்

 

இன்பமே என் வாழ்வில் இருக்க எண்ணுகிறேன். இந்த என் எண்ணம் ஈடேறுமா? எந்த வகையிலேனும் இன்பமே காண ஆவலுறுகிறேன். அந்த என் ஆவல் அழியாது நிற்குமா? இன்பவாழ்க்கையைஎட்டிப் பிடித்திட என்மனம் தாவுகிறது. தாவியநெஞ்சம் தடைபெறுமா? இவ்வுலகில் இன்பமென்னும் இனிய பொருள் எங்குளது? அதை எனக்குஅன்புடன் காட்டுவீர்களா? இன்பமே துய்த்த எவரேனும் என் கண்முன்எதிர்ப்பட வொண்ணாதா? இன்பவழி இதுதானென்று காட்டுவாரில்லையா? ஓ! இன்ப மனிதர்களே! இன்பவுலகில் இன்பமாளிகை எங்கே யிருக்கிறது? இந்த ஏழையை அழைத்துச்சென்று அங்குள்ள இன்பத்தேனை அள்ளிப்பருகிஆனந்த மடையச் செய்யுங்கள். இந்த உதவி செய்வீர்களா? இன்பம் எங்கேயிருக்கிறது?

 

நான் அபிஹினிய சக்கரவர்த்தி மைந்தன். என் பெயர் ராஹிலஸ். நான் என் தந்தையால் பள்ளத்தாக்கொன்றில் பத்திரமாக வைக்கப் பட்டிருந்தேன். அது இயற்கையழகும் இன்பப் பொருளும் எங்கும் நிறைந்துள்ள விடம். நாற்றிசையும் மலையினின்று விழும் மலையருவி யுண்டு. மலைச்சார்பெல்லாம் மரச்செறிவ. ஆற்றங்கரை யெல்லாம் அழகிய பூத்திரள். அடிக்கிறகாற்றில் செடிகளின் தழை. கிளை சிறிது அசைய, இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் முதலிய வாசனைத் திரவியங்கள் மலையினின்று பலபலவென்றுவிழும். புல் பூண்டு மேய்பவைகளும், தழைகுழை கடிப்பவையுமான நானாசாதிவிலங்குகள் அச்சமற்று உலாவித்திரியும். ஆட்டுமந்தைகளும், கன்று காலிகளும் திரளாய்க் கூடி மேயும் பசும்புறங்காடு ஒரு பக்கம்; மான், மரை, முயல் முதலிய விலங்குகள் மகிழ்ச்சியாய்த் துள்ளிக்குதித்து வேகமாய்ப் பாயும் காட்டிடை வெளிநிலம் ஒருபக்கம்; மலையில் வெள்ளாட்டுக்குட்டிகள் உல்லாசமாய்த்துள்ளி விளையாடும்; வஞ்சமனமுள்ள வானரங்கள் மரக்கிளைகளில் மகிழ்ச்சியாய்க் குதித்துத் திரியும்; மந்தகுணமுள்ள மதயானை கிளை படர்ந்த மரநிழலில் படுத்திருக்கும். மனிதருக்கு இகத்தில் இயற்கையான நற்பேறனைத்தும் அங்கு திரண்டிருந்தன. இவைகள் எனக்கு எவ்வித இன்பத்தையும் ஊட்டக் காணேனே! இதோ அவ்விடத்தினின்றும் வெளிப்பட முயலுகிறேன். இன்பம் எங்கே யிருக்கிறது?

 

மனிதரியற்கை யொன்றும், மற்றுள்ள உயிர்க் கோடிகள் இயற்கையொன்றுமாக வேறுபடும் காரணமென்ன? என்னருகில் திரியும் விலங்கினம் அனைத்திற்கும் எனக்குள்ள உடல் துன்பங்களுண்டு. பசிக்கும் பொழுது, அவை பசி யடங்கப் புல்மேயும்; தாகமெடுக்கும் பொழுது தாகந்தீரத் தண்ணீர் குடிக்கும்; இவ்வாறு பசிதாகம் தீரவும், அவை நிறை மனங்கொண்டு நித்திரை செய்யும். அயர்ந்து தூங்கி விழித்து எழுந்த பின்னும் உண்டாகும் பசிதாகத்தை மேற் சொல்லியபடி தீர்த்துப் பதைப்புறா திருக்கும். அவ்விலங்கைப் போல் எனக்குப் பசிதாகம் முதலிய உடல் துன்பங்கள் சோறுதண்ணீரால் தீர்ந்த பின்னும் என்பதைப்புத் தீருகிறதில்லை. பசிதாக முதலிய குறைகளால் விலங்கும் வருந்துகிறது; நானும் வருந்துகிறேன். அக்குறை தீரவும் விலங்குக்கு மன நிறைவு உண்டாகிறது; எனக்கோ அது இல்லை. பசி தீர உண்டு, மீண்டும் பசிக்கிறவரையில் என்மனம் குறு விசாரப்படுகிறது. பொழுது போகாமல் அலுப்புண்டாகிறது. சோறு தண்ணீரில் விருப்புண்டாகும் படி பசிதாகம் மிஞ்சவேண்டுமென்று விரும்புகிறேன். பறவைகள் காய், கனி, தானியாதிகளைக் கொத்திப் பொறுக்கி இரைகொள்ளி நிறையத் தின்றபின், சோலைகளுக்குப் பறந்து போய் மரக்கொம்புகளிற் படிந்து களிகூர்ந்து கூவும். அவை கூவும் அடுக்கொலி அன்று ஒருவிதம், இன்று ஒரு விதமல்ல. விகற்பமின்றி என்றும் ஒரே விதமாயிருக்கும். நானும் கின்னரர் பாடகரை வரவழைத்து வீணாகானம் பண்ணுவித்து சங்கீத காலட்சேபம் செய்விப்பதுண்டு. எனினும் நேற்று எனக்கு இன்பமளித்த பண்ணை, இன்றும் கேட்டால் அலுப்பு உண்டாகாமற் போகாது. நாளைக்குங் கேட்டால், பின்னும் அலுப்புப் பெருகும். அதற்குரிய போகம் தெவிட்டாத ஞானேந்திரிய பலம் எனக்கில்லை. போகம் தெவிட்டினும் என்மனம் இன்பம் அறியா திருக்கின்றது. இந்த விடத்தில் ஏற்கும் நுகர்ச்சியில்லாத நுட்பமான ஆறாவது இந்திரியம் ஏதோ மனிதருக்குண்டு. இது உண்மை. பின்னும் சற்றுத் தெளிவாய்ச் சொல்லுகிறேன்: ஐந்து இந்திரியங்களுக்கும் அமையாத ஆசை ஏதோ இருக்கின்றது. அவ்வாசை தீர்ந்தே ஆனந்தம் பிறக்க வேண்டும். அவ்வானந்தத்தை யடையவே இன்ப பூமியை விட்டு வெளிவர முயல்கிறேன். எனக்குச் சொல்லுகிறீர்களா? இன்பம் எங்கே யிருக்கிறது?

 

நானோ அரசகுமாரன். எனக்கென்ன குறையென்கிறீர்களோ? குறை யொன்றும் எனக்கில்லாதிருப்பதும். இருந்தால் அது இன்னதென்று அறியா திருப்பதுமே என் மனக்குறைக்கு நிமித்தமாம். நெஞ்சறிய எனக்கு எதுங் குறையிருந்தால், அதைத் தீர்க்க ஆசையுண்டாகும். அவ்வாசை முயற்சியைத் தரும். முயற்சி பிறந்தால், ஆதித்தன் அஸ்தகிரி சேர நெடும் பொழுது செல்லுகிறதே யென்று என் மனம் பதைக்காது. நித்திரை யொழிந்து அறிவு தெளிந்து பொழுது விடியவும், நான் பிரலாபிக்க நிமித்த மிராது. வெள்ளாட்டுக்குட்டி செம்மறியாட்டுக் குட்டிகள் ஒன்றையொன்று தொடர்ந்து ஓடுவதைப் பார்க்கும் பொழுது, அவ்வாறு தொடா எனக்கும் யாதாயினும் விஷய மிருக்குமானால் ஆனந்தம் உண்டாகுமேயென்று என் இதயம் நினைக்கின்றது. வேண்டுவன யாவும் குறையாதிருப்பதனால், யாதொரு விகற்பமுமின்றி, நேற்றைய தினம் இன்றையதினம் போலும், சென்ற நாழிகை செல்கின்ற நாழிகை போலும் இருக்கின்றன. பின்னும் சொல்லில், எனக்கு ஒருநாளல்ல, ஒரு நாழிகை ஓராண்டு போல் நீடித்து நிற்கிறது. என் சிறு பருவத்தில் ஒருநாள் ஒரு நாழிகை போலக் குறுகி விரைவிற் கழிந்தது. உலகப்பரப்பு ஒரு விநோதமாகத் தோன்றியது. விநாடிக்கு விநாடி முன் காணாதபு துமைகளைக் கண்டேன். நாளென்பதை அவ்வண்ணம் குறுகத் தோற்றுவிக்கும் உபாயமேதும் அறிந்தாற் சொல்லுங்கள்! எனக்கு இப்பொழுதேபோகம் தெவிட்டுகிறது. விரும்பத்தக்க புதிய விஷயம் எதையேனும் காட்டுங்கள்! இவ்வித குறையுள்ள எண்ணமே அந்நிறைவான பூமியை வெறுக்கச்செய்தது. இப்பொழுதேனுஞ் சொல்லுங்கள் நான் தேடும் இன்பம் எங்கேயிருக்கிறது?

பேதைமையுள்ள இளம்பருவமும், பலம் ஒடுங்கும் முதிர்பருவமும் மனிதர் வாழ்நாட் கணக்கிற்சேரா. ஒன்றைச் சிந்தித்து நல்லது கெட்டது தெரியும் சகதி வாலிபருக்குண்டாக வெகுநாட் செல்லுகின்றது. ஆடவருக்குச்செய்திறம் விரையில் ஒழிந்து போகிறது. தப்பறப் புத்தி பூர்வமாய் மதிப்பிட்டால் மனிதருக்குப் பருவம் ஆக நாற்பது. இதில் இருபத்து நான்கில் ஒரு பாகமாகிய இருபது மாதத்தை வீணே சிந்தனையிற் போக்கினேன். போனகாலமுள்ளது. அது என் வசத்திலிருந்ததற் கையமில்லை யல்லவா? இனி வரும் இருபதுமாதம் எனக்கு வசமாகுமென உறுதி சொல்ல மாட்டுவார் யார்? ஒருவருமில்லையே? இனியேனும் நான் இன்பமாயிருக்கலாகாதா? அவ்வெண்ணம் என்மனதி லெழுந்தது பிழையாகுமா? ஆகாதே. சீக்கிரஞ் சொல்லுங்கள். இன்பம் எங்கே யிருக்கிறது?

 

இதோ நான் இன்பபூமியாகிய பள்ளத்தாக்கினின்றும் வெளிவந்து விட்டேன்! ஆ! என்னென்ன காட்சிகளைக் காண்கின்றேன்! வாகனத்திற் செல்லும் வகையான பலபெரிய மனிதர்களையும், தள்ளாடும் நடையும் தலைநடுக்கமுமுள்ள கிழவர்களையும் ஒரே சமயத்தில் பார்க்கிறேன்! இதென்ன விந்தை! இப்படியும் உலகத்திலுண்டா? அதோ அண்ணாந்து பார்க்கும் படியான அத்தனை பெரிய மாடி வீடொன்று எனக்குத் தெரிகிறது! இவற்றையெல்லாம் நான் இன்பபூமியில் காண்ப தெவ்வாறு? இதென்ன! மாடி வீட்டுக்கருகில் இடிந்த குட்டிச்சுவர் நிற்கிறதே! உலகம் இப்படித்தானா? ஆ! மனிதர் எவ்வளவு சுறுசுறுப்பாக வாழ்க்கைப் போரை நிகழ்த்துகிறார்கள்! எல்லோரும் இன்பமாகத்தானே வாழ்கிறார்கள்! அதோ ஒரு தனவந்தர் வாடிய முகத்துடன் செல்லுகிறாரே! என்? அடடா! இந்த ஏழைக்குடியானவன் எவ்வளவு இன்பமாய் வேலை செய்கிறான்? உலகமே ஒரு விநோதக் காட்சி சாலையாயிருக்கிறதே! இதில் நான் தேடும் பொருள் கிட்டுமா? இன்பம் எங்கே யிருக்கிறது?

 

பாலியந்தான் மனமகிழ்ந்து இனிதிருக்கும் காலம். விரும்பும் எதையும் அனுபவித்துக் களிகூர்வதும், ஒன்று தீர ஒன்றாகப் போகங்களில் ஓயாமல் நாள் கழிப்பதுமே மணியமா யிருக்கும். அல்லவா? எனவே வாலிபருடன் தோழமை கொண்டேன், ஐயோ! நானென்ன சொல்லுவேன்! என் கொஞ்ச நாட்களிலேயே அலுத்து விட்டதே! வாலிபாகள் உல்லாசத்திற்கு விஷயமில்லை. அவர்கள் நகைப்புக்குக் காரணமில்லை. அவர்கள் இன்பம் ஸ்தூலஇன்பம்; விஷய இன்பம். விவேகம் அதிற் கலக்கவில்லை. அவர்கள் நடைமாறுபாடானது. ஒழுங்கும், விதிகளும் அவர்களுக்குப் பரிகாசம். ஆனால் அதிகாரி முகங்கடுத்தால், அவர்கள் மனம் குன்றிப்போய் விடும். அறிவுடையோரைக்கண்டால், அவர்கள் நாணி விறைத்துப் போவார்கள். நிபந்தனை எதுவுமின்றி நடப்பதும், நெறிகுறியின்றி நேர்ந்தபடி சலிப்பதும் களிப்பதும்பகுத்தறிவுள்ள மனிதருக்குத் தகுதி யாகுமா? மனோ சுகமானது அச்சமும்ஐயமுமற்று உறுதியும் நிலையுமுள்ளதா யிருக்க வேண்டுமே! இவர்களிடம், இத்தகைய இன்பமில்லையே! என் செய்வேன்? எங்கு தேடுவேன்? இன்பம் எங்கேயிருக்கிறது?

 

“புலன் வென்றவன் அதன்பின் அச்சத்திற்கு அடிமையாகான்; ஆசை அவனைப் பேயாட்டம் ஆட்டி அலைக்காது; அழுக்காற்றால் அவன் துர்ப்பலன்ஆகான்; சினத்தீ அவன் இதயத்தில் பற்றாது. நெஞ்சிளைத்து, அவன்ஆண்மை குன்றாது; துக்கங் குடி கொண்டு அவன் மனவுறுதி அழியாது. கடும்புயல் அடிக்கிறதென்றும், காற்றடித்து ஓய்ந்த தென்றும் காலபேதம் பாராமல்எத்தேசகாலமும் ஏக கதியாய் ஆகாய மண்டலத்தில் செல்லும் ஆதித்தனைப் போல், அவன் சந்தடியுள்ள ஜனத்திரளிடையில் சஞ்சரிக்கும் பொழுதும், தன்னந்தனியே இருக்கும் பொழுதும் சாந்தசித்தனாக நடப்பான்'' என்றுஒரு பண்டிதர் பிரசங்கஞ் செய்தார். அவ்வித்தகர், காணும் எவரும் பேணிப்பணியத்தகும் பெரியார்; சிறந்த இங்கிதர்; மொழிவதை அறமொழிபவர். இவர் முடிவாக ''கெட்ட எண்ணங்களும், சினமும் எள்ளளவும் உடம்பில் ஏற்படாவண்ணம் பொறையென்னும் வைர மூடியை தரித்துக் கொள்ள வேண்டும். இதுவே இன்பம்'' என்று சொன்னார். இதைக் கேட்டதும், ஆ! இவரே நாம் நாடி வந்த பொருளைத் தேடிக் காண்பிக்கவல்ல தீரரெனத் தீர்மானித்தேன். அதனால் அவரைக் காண்பதற்கு மறுநாள் சென்றேன். நான் கண்டதென்ன? அப்பண்டிதர் தன் ஒரே மகள் இரவு இறந்து விட்டாளென்று அழுது கொண்டிருந்தார்! அவர் என்னைக் கண்டதும் 'கேளும், மனிதர் உறவிருந்தும் உதவாமற் போகுஞ் சமயம் பார்த்து வந்தீர். என் ஏகபுத்திரி இறந்து போனாள். அவளிறக்க, என் ஆசை யனைத்தும் அழிந்து போயின,” என்று புலம்பினார். ''ஐயா, சாவைக் குறித்து அறிவுடையோர் தட்டுக் கெட்டுத் தடுமாறுவது இயற்கை யல்லவே, ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு. அது எப்பொழுதும் நம்மைக் சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்று நமக்கு இறப்பு வரினும் வருமென்று மனிதர் யாவரும் அன்றன்று நினைத்துக் கொள்வதல்லவா கடன்? " என்று நான் தெரிவித்தேன். அதற்கவர், ''அப்பா, உற்றாரைப் பிரி வோர்க்கு உறும் துயர் அறியாதவன் போலப் பேசுகிறாயே'' என்றார். நான் விடாமல், ''பின்னை நீங்கள் மிக வலியுறுத்தி யுணர்த்திய கற்பனைகளை மறந்து விட்டீர்களா? துன்பமெனும் மாற்றான் பிடித்துக் கொள்ளா வண்ணம் மனக்கோட்டையை அரண்செய்ய அறிவு மன்னனுக்கு ஆண்மை யில்லையா? புறப்பொருளெல்லாம் மாறுவதியற்கை. உண்மையும் அறிவும் எந்த வேளையிலும் அணுவளவேனும் மாறாதிருக்கும். இதை அறியுங்கள்'' என்றேன். என்றேன். அவர்," உண்மையாலும் அறிவாலும் எனக்கு என்ன பயனுண்டாம்? இறந்து போன என் மகள் இனித் திரும்பி வாராளென்று எனக்கு அவைகள் சொல்லும் இதன்றி, இப்பொழுது அவைகளால் எனக்கு என்ன சுகம்?'' என மொழிந்தார். இதன் பின் அவரிடம் எனக்கென்ன வேலை? ஏமாற்றந்தானா நான் கண்டது? இன்பம் எங்கே யிருக்கிறது?

 

இடையர் வாழ்க்கையில் இன்ப மிருக்குமென்று எண்ணினேன். இடையர் குலம் கள்ளமற்றது, கலகமற்றது எனப் பாடல்களில் படித்திருந்ததும் இச் சமயம் என் ஞாபகத்தில் எழுந்தன. இடையர்க்குரிய எளிய வாழ்வே இன்ப வாழ்வென்று கண்டறிந்து நாம் நாடிய பொருள் கைகூடிற்றென்று மகிழ்ந்து மன நிறைவு பெறுவோ மென்று நிச்சயித்தேன். உடனே ஓரிடையன் இல்லத்திற்குச் சென்றேன். ஆ! அவன் என்னைக் கண்டதும் எவ்வளவு பரிவுடன் வரவேற்று உபசரித்தான்! நான் செல்வந்தன் ஒருவன் வீட்டுக்குச் சென்றிருந்தால் இவ்வளவு உபசாரத்தை எதிர்பார்க்க முடியாதென்று எனக்குத் தெரியும். நிற்க, இடையனின் இன்ப துன்பங்களைப் பற்றி அறிய ஆவல் கொண்டேன் ''ஐயா, உங்கள் குடியியற்கையின் சுகதுக்கங்களைப் பற்றித தங்கள் கருத்தென்ன?'' என்று வினவினேன். அவனோ மாட்டிடையன்; ஒன்று மறியாதவன். இன்ப துன்பங்களின் தன்மை இது தானென்று கண்டறியும் வல்லமை அவனிடமில்லை. ஆகவே, கேட்ட கேள்விக்கு அவன் ஏதோ வாயில் வந்ததை உளறினான். ஆயினும் நான் கண்டு கொண்டதென்ன? பழத்தினுள் புழுப் போல பலவித குறையெண்ணங்கள் அவர்கள் இதயத்தை அரித்துப் பழுதுபடுத்தின. தாங்கள் மெய்வருந்தி உழைக்க, அவ்வுழைப்பால் விளையும் ஊதியத்தை நிறை செல்வமுள்ள சீமானகள் அநுபவித்துச் சுகித்திருக்கிறார்களென்று நினைத்து, அவர்களுக்குத் தம்மில் உயர்ந்தோர் மீது காரணமின்றிச் சின மிகுந்திருந்தது. என்ன விந்தை! எங்குக் சென்றாலும் பாழும் துன்பப் பேய் தொடர்ந்து கொண்டிருக்கிறது? இன்பம் எங்கே இருக்கிறது?

 

எளிய இடையரிடம் இன்பமில்லையெனில் பெரிய செல்வனிடமேனும் இன்பமிராதா? இதோ அழகிய இல்லம்! இதனுள் வசிப்பவர் இன்பந் துய்க்கும் வள்ளலாகவே யிருக்கவேண்டும். உள்ளே நுழைகிறேன். ஆ! அதோ அவ்வள்ளல் எத்துணை இன்முகங்காட்டி எதிர்கொண்டு வரவேற்கிறார்! இவரே இன்பக் களஞ்சியம்! என் கவலை யொழிந்தது! இன்பக் கோட்டையை எட்டிப் பிடித்து விட்டேன். இப்பொழுதாவது என் முயற்சியில் வெற்றி கண்டேனே! அடடா! இதுவென்ன ஏமாற்றம்! அவர் நெஞ்சிலும் குறையிருக்கிறதென்று சொல்லுகிறார்? "எனது நிலைமை இன்பமுடையதென உங்களுக்குத் தோற்றுகிறது போலும். ஆனால் அது உண்மையல்ல. கண்மாயந்தான். என் செல்வத்தால் உயிருக்குத் தீங்கேற்படுகிறது. என் பொருட் செல்வத்தைக் குறித்துப் பலர் எனக்குச் சத்துருக்களானார்கள். அவர்கள் பகைமை கொள்ள நான் எதுவும் செய்தவனல்லன். இது வரையில் எனக்கு அவர்களால் தீங்கொன்றும் நேரிடாமல் துணைநின்றவர்கள் என் நண்பாகள். என்றாலும் நான் அவர்களை முற்றும் நமப முடியாது. இன்று எனக்கு உதவி புரியும் அவர்கள் நாளை எதிரியுடன் கூடி என் சொத்தை சூறையிடுவித்துத் தாமும் ஒரு பங்குவாங்கி அநுபவித்தாலும் அநுபவிப்பார்கள். அதனால் எனது சொத்து முழுவதையும் தூரதேசத்திற்கு அனுப்பி விட்டேன். சத்துரு பயம் உண்டாகும் அந்த விநாடியே அத்தேசத்துக் கோடித் தப்பி விடுவேன். அப்புறம் சத்துருக்கள் இச்சிங்கார மாளிகையைக் கைக்கொண்டு உண்டாட்டுக் களியாட்டுச்செய்து நான் நாட்டுவித்த உத்தியானங்களின் பயனைத் துய்ப்பார்கள்'' என்பதைக் கேட்டு என் காது புளித்தது. ஒரு விநாடியும் அங்கு நில்லாது ஓடிவந்து விட்டேன். இவ்வளவு பெரிய வுலகில் நிலைத்த ஒரு இன்பங் கிடையாதா? அடதொந்தரவே; எட்டாப் பழத்துக்குக் கொட்டாவிவிட்டுத் திரிகிறேனே! எங்ஙனமாயினுஞ் சரி, முயற்சியைத் தளாத்த நான் விரும்பவில்லை. இதோ என்மனம் முனைந்து விட்டது. இன்பம் எங்கே யிருக்கிறது!

 

ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment