Thursday, August 27, 2020

 இன்பம்

 

ஆண்டவனால் படைக்கப்பட்டுள்ள இப்பரந்த பூவுலகின்கண் வசிக்கும் எல்லா ஜீவராசிகளும் இன்பத்தை யடைவதையே இயற்கைக் குணமாகக் கொண்டிருக்கின்றன. இன்பானுபவத்தில் ஆனந்தமும், துன்பானுபவத்தில் துக்கமும் கொள்வதை இயற்கை குணமாகக் கூறுவர் பெரியோர்.

 

ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொருவகையை இன்பமாகவும், ஒவ்வொரு வகையைத் துன்பமாகவும், ஒரு ஜீவனுக்கு இன்பமாகவுள்ள வஸ்துவை மற் றொரு ஜீவன் துன்பமாகவும் கருதி யிருக்கின்றனவே யல்லாமல், ஒரே வஸ்துவை ஸமஸ்தமான ஜீவன்களும் இன்பமாகவோ, துன்பமாகவோ பாவிக்கும் தன்மையை இயற்கை குணமாக வுடைத்தா யிருப்பதில்லை.

 

ஸர்வஸங்க பரித்யாகம் செய்துள்ள ஸன்யாசிகளோ பேரின்பம் ஒன்றையே இன்பமென்று கூறுகிறார்கள். அதை அடைவதிலேயே தம் முழுநோக்கையும் செலுத்துகிறார்கள். அதை அடைவதில் எவ்வித இடுக்கண்கள் நேரிடினும் அவைகளைச் சற்றும் லக்ஷியம் செய்கிறார்களில்லை. அவர்கள் உலகோரால் இன்பானுபவப் பொருட்களென்று கூறப்படுபவற்றை இன்பப் பொருட்களாக (இன்பம் பயக்கும் இனிய பொருட்களாக) நினைப்ப தில்லை. அவர்கள் கூறுவதாவது:

 

பேரின்பமொன்றையே இன்பமென்று கூறத்தகும். மற்றபடி உலகோரால் இன்பமாகக் கருதியிருப்பவையெல்லாம் துன்பத்திற்கே வழிகாட்டியாக விருக்கின்றன. அவைகள் பேரின்பத்தைப் போன்று நித்தியானந்த சுகத்தை யளிக்கும் வல்லமையைப் பெற்றிராமல், கிஞ்சிற்று சுகத்தையும் பிறகு மகத்தான துன்பத்தையுமே யளிக்கும் ஆற்றலையுடையவை. ஆதலால் துன்பம் கலவாத இன்பம் பேரின்ப மொன்றே. ஆனால் அப் பேரின்ப சுகத்தையடைய முதலில் கஷ்டங்கள் பல பட வேண்டும்.

 

ஒரு வியாதியஸ்தன், முதலில் மனதிற்குத் துன்பந் தரும் மருந்துகளையுண்டு கஷ்டமுள்ள பத்தியங்களில் தவறாமலிருந்தால் பிறகு எப்படிதுன்பமாகிய அவ்வியாதி நீங்கி, இன்பமாகிய சுகத்தை யடைவானோ அதைப் போல, துன்பமாகிய ஜனன மரணாதி வியாதிகளினின்றும் நீங்கிப் பேரின்பமாகிய சுகத்தை யடைய, ஆசார வியவகார ஜபதபாதி நல்லொழுக்க மென்னும் மருந்தையுண்டு, இந்திரிய நிக்ரஹ ஏகாக்ர சித்த, ஏகைகபாவம் முதலான கடும் பத்தியங்களைத் தவறாமல் அனுஷ்டித்து வரவேண்டும்.

 

பேரின்ப மிருக்கும் ஊராகிய பேரூருக்குச் செல்லும் பாதையானது, கல்லும் முள்ளும், காடும் முரடும், கனவிருள் சூழ்ந்துள்ள காடாரம்பமும் நிறைந்ததாக விருக்கின்றது. அப்பாதையிற் செல்லுவது அதிகமான கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பதாக விருக்கும். ஆனால் அக்கஷ்டங்களையும் துன்பங்களையும் லக்ஷியம் செய்யாமல், மனதைத் திடப்படுத்திக் கொண்டு சென்றால் தான் பேரின்பப் பேரூரை யடைந்து நித்தியானந்த சுகத்தை யடையலாம். அப்பாழும் பேரிருள் சூழ்ந்துள்ள படுமோசப் பாதையிற் செல்ல வழி காட்டியாக ஒருவர் வேண்டுமல்லவா? அவ்வித வழிகாட்டியாக- மார்க்க சகாயனாக நம் அருமை ஆனந்தன் காத்துக் கொண்டிருக்கிறான்.

 

நேயர்களே! அவனையடைந்து - அவனது துணைகொண்டு - அதிககஷ்டமான அப்பாதையைக் கடந்து பேரூர் சென்று பேரின்பத்தைப் பருகுங்கள். நமதானந்தன் நீடூழி வாழ்க.

ஆனந்த போதினி – 1929 ௵ - மே ௴

 

 

 

No comments:

Post a Comment