Thursday, August 27, 2020

 

ஈகை

(க. சிதம்பரம் பிள்ளை.)

இறுதிக்காலத்தில் மனிதன் மறுமையாகிய அவ்வுலகத்தை அடைய வேண்டுமென்றால், இவ்வுலகத்தின் உதவி கொண்டு தான் ஆகவேண்டும். ஏன்? அவ்வுலகத்துக் கதவின் தாழ்ப்பாள் இவ்வுலசத்தில் இருக்கிறது. அத் தாழ்ப்பாளை இங்கு திறந்தால், அங்கு கதவு திறந்து விடும்.

அந்தத் தாழ் எது? அது தான் ஈகை. உதவி செய்தே யாகவேண்டும் என்ற நிலையிலுள்ள ஏழைகளா யுள்ளோருக்கு தம்மால் இயன்றதை இல்லை யென்னாமல் கொடுப்பதே ஈகை யாகும்.

ஆம், அப்படிக் கொடுக்குங் குணம் மனிதனுக்கு வேண்டியது தான்; ஆனால், அதற்குப் போதுமான அளவு செல்வம் இருக்கவேண்டுமே? இல்லை; ஈகைக் குணத்துக்குச் செல்வம் இருந்தே யாகவேண்டு மென்பதில்லை.

ஈகை என்பது கேட்பவர்களுக்கெல்லாம் பொருளை வாறி வாறி இறைப்ப தென்பதல்ல. அப்படிச் செய்வதில் அர்த்தமுமில்லை. எவரும் தத்தம் நிலைமைக்குத் தக்கபடியுள்ள உதவிகளைப் பிறர்க்குச் செய்யலாம் ஒரு வயிற்றுச் சோறுதான் ஒருவனுக்கு உண்டென்றிருந்தாலும் அதில் ஒரு பிடி சோற்றை, இல்லையென்று இரக்குங் கதியற்ற ஏழைக்குக் கொடுக்க பணம் எதற்கு வேண்டும்? இங்கு வேண்டியதெல்லாம் மனோபக்குவம் ஒன்றுதான். *

* இதைப்பற்றி விரிவாய் “மனிதனும் கடமைகளும்" புத்தகம் பார்க்கவும். கிடைக்கு மிடம்: ''ஆனந்தபோதினி” ஆபீல், சென்னை.

'தருமம் தலைகாக்கும் என்கிறார்களே; யான் எத்தனை தருமங்களில் எவ்வளவு பொருளைச் செலவிட்டிருக்கிறேன்! இன்னும் செய்து கொண்டும் வருகிறேனே; அப்பேர்ப்பட்ட எனக்குத்தானே மேன்மேலும் இடையூறுகள் நேரிடுகின்றன?' என்று அதோ ஒரு பணக்கார அனுபவஸ்தர் கேட்கிறார்.

அவருடைய கேள்வி என்னவோ உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர் செய்வது தருமமல்ல; தன்னுடைய பணத்தின் பெருமையை தருமம் என்ற பெயரால் வெளியாருக்கு விளம்பரப்படுத்திக் காட்டுகிறார் என்பது மட்டுந்தான்.

உண்மைக் கொடையின் இலக்கணம் என்னவென்றால்: செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது இருந்தாற்போலவே மனமகிழ்ந்து, முக மலர்ந்து, இன்சொற் கூறி, உண்மை அன்புடன் கொடுப்பதாகும். அவ்வித கொடை தக்க பயனைத் தராமற் போகாது.

மேற்சொன்ன நற்குணம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுடைய வருகையை நோக்கி மோட்ச உலகத்தி லிருப்பவர்கள் அவ்வுலகத்துக் கதவைத் தயாராகத் திறந்து வைப்பார்களாம்.

"இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம் போல் பெரி(து) உவந்து, - மெல்லக்

கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு

அடையாவாம் ஆண்டைக் கதவு.”

 

[இல்லா இடத்தும்=செல்வம் இல்லாமற் போனகாலத்திலும். இயைந்த அளவினால்=இயன்ற மட்டும், கொடை=ஈகை. பட்ட=பொருந்தின, ஆண்டைக் கதவு=மோட்சவுலகத்துக் கதவு.]

'செல்வம் ஓரிடத்து எப்பொழுதும் நிலையாக நிற்கக் கூடியதல்ல. அது ஆற்று வெள்ளத்தால் உண்டாகிற மேடும் மடுவும் போல் மாறிக் கொண்டே இருக்கும்' என்கிறார்களே. அப்படி யென்றால், ஒருவன் நெடுங் காலமும் செல்வவந்தனாகவே இருக்கிறானே, அது எப்படி?

இல்லை; செல்வம் மேற்சொன்ன இயல்பை யுடையது தான். ஆனால் ஒருவன் முற்பிறப்பில் நல்ல வினையைச் செய்திருந்தால், அவ்வினையின் பயனுக்குப் போதுமானவரையும் அவனிடத்துச் செல்வம் இருந்தே தீரும். வினைப்பயன் குறையக் குறைய அவனிடத்துச் செல்வமும் குறைந்து கொண்டே வரும்.

'செல்வம் ஒருவனிடத்திருந்து இறக்கை முளைத்துப் பறந்துபோய் விடாதே. அதைச் செலவழித்தால் தானே குறையும்? குறைந்து போகும் வகையிலுள்ள செலவினங்களைச் சுருக்கி விடுவோம். துன்பத்தால் மிக வருந்தும் ஒருவனுக்குக் கூட ஒரு காசுங் கொடாமல் அதை நான்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்வோமே. நமக்கு வேண்டிய செலவுகளிலும் சிக்கனம் காட்டுவோம். பின் அது எப்படி நம்மிடத்துக் குறையும்?'

அங்ஙனமன்று; வறுமையால் துன்பப்படும் ஏழைகளுக்கு ஒத்தாசை செய்வதிலும், தனக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொள்வதிலும் செல்வம் குறைந்து போகாது. ஊற்றுநீர் இறைக்க இறைக்க சுரந்து பெருகுதல் போல, அவ்வித நற்செய்கைகளி லிருர்தெல்லாம் அது மென்மேலும் பெருகத்தான் செய்யும்.

ஆனால், செல்வத்தை என்ன தான் இறுக்கிப் பிடித்திருந்தாலும் வினைப்பயன் குறையுங் காலத்து அது எப்படியும் பறக்கத்தான் செய்யும். அதற்கு வேண்டிய காரணங்களும் அப்பொழுது எதிர்பாராமலே வந்து கொள்ளும். எனவே, செல்வத்தை அது உள்ள பொழுதே இயன்ற மட்டும் தானும் உபயோகித்துப் பிறர்க்கும் உதவி செய்தல் வேண்டும் என்பது கருத்தாம்.

"நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்,

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்,

இடுக்கு ற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்,

விடுக்கும் வினை உலந்தக் கால்.''

 

[நடுக்குற்றுத் தற்சேர்ந்தார்=ஏழ்மையினால் நடுங்கி தன்னைச் சேர்ந்தவர்களது. துய்ப்பினும்=அனுபவித்தாலும். ஈண்டுக்கால் ஈண்டும்=பெருகுங் காலத்துப் பெருகும். விடுக்கும் வினை உலந்தக்கால்=முற்பிறப்பில் செய்துவிட்ட அந் நல்வினை முடியுங்காலத்து.]

பனை மாத்திலும் ஆண்பனை. பெண்பனை என்ற இரண்டு பிரிவு உண்டு. பெண்பனை காய்க்கும். ஆண்பனை காய்க்காது.

பனையின் இளங்காய்க்கு நுங்குக்காய் என்று பெயர். அதனுள் இருக்கும் நுங்கை யாவரும் உண்பது வழக்கம். அது சில நோய்களைக் கூட மாற்றும் என்று வயித்திய நிபுணர்கள் சொல்கிறார்கள். பனம் பழத்தையோ ஏழைமக்கள் பலர் உண்டு பசியாற்றிக் கொள்கின்றனர்.

அவ்வித பனைமரம் ஒரு ஊர் நடுவில் இருந்து, அதைச் சுற்றிலும் மேடையும் கட்டப்பெற்றிருந்தால், எத்தனையோ மக்கள் அங்கு வந்து, அதன் நுங்கையும் பழத்தையும் எடுத்து, அம்மேடைமேல் இருந்து, உண்டு மகிழ்ந்து பசியாற்றிக் கொள்வர்.

ஆனால், ஒரு ஆண்பனையினிடத்திருந்து அவ்வித நற்குணங்களை எப்படி எதிர்பார்க்கலாம்? அதிலும் அது, உயிர் நீங்சிய உடலத்தை இடுங்காடாகிய சுடுகாட்டில் நிற்குமேயானால், அதனால் ஏழை மக்களுக்கு என்ன பயன்?

பரோபகாரிகள் மேற்சொன்ன பெண்பனைக்கு ஒப்பாவர். கொழுத்த பணம் படைத்தவர்களா யிருந்தும் ஈகைக்குணம் இல்லாதவர் மேற்சொன்ன ஆண்பனைக்கு நிகராவர்,

"நடுஊருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க

படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்;

குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை.''

 

[வேதிகை= திண்ணை. படு = பொருந்திய. மாக்கள் =பகுத்தறிவில்லாத
விலங்குக்கு ஒப்பானவர்.]

வாத்தியங்களில் வைத்து ஓசை மிகப் பொருந்தியது முரச வாத்தியம். அதைவிட முழக்கம் வாய்ந்தது இடி முழக்கம்; முரசின் ஓசை ஒரு காதம்- அதாவது ஏழரை நாழிகை தூரம் வரையில் கேட்கும். இடி முழக்கமோ ஒரு யோசனை - 30 நாழிகை - 30 நாழிகை தூரம் வரையில் கேட்கும்.

ஆனால், இவ் விரண்டைக்காட்டிலும் மிக்க தூரம்-ஏன்? சுவர்க்கம், மத்தியம், பாதலம் ஆகிய மூன்று உலகத்தும் கேட்கக் கூடிய ஓர் ஓசை இருக்கிறது. அதுதான் 'ஏழைகளுக்கு இவர் தருமம் கொடுத்தார்' என்று பெரியோர்கள் சொல்லும் சொல். எனவே, கொடையாளிகளுடைய புகழ் மூன்றுலகங்களிலும் பரவும் என்பது கருத்தாம்.

"கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;

இடித்து முழங்கிய(து) ஓர் யோசனையோர் கேட்பர்;

அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்

கொடுத்தார் எனப்படும் சொல்,"

[கடிப்பிடு = குறுந்தடியால் அடிக்கப்படுகிற.]

ஆனந்த போதினி – 1942 ௵ - அக்டோபர ௴

No comments:

Post a Comment