Thursday, August 27, 2020

 

ஈசுரனும் இயற்கையும்

 

 இயற்கையின் ரம்யம். அகிலம் சர்வேஸ்வரனுடைய உத்தியான வனம்! இவ்வுத்தியான வனத்தின் அமைப்பே இறைவனுடைய ஒப்பற்ற தன்மையைப் புலனாக்கும் இயற்கை. உயர்ந்த மலைகளும், அடர்ந்த வலங்களும், தொடர்ந்தோடும் அருவிகளும் இவ்வியற்கையின் அம்சங்கள். சகல ஜீவராசிகளையும் படைத்து, காத்து, சங்கரிக்கும் செயலும் இவ்வியற்கையின் மற்றோர் உயர்ந்த செய்கை. இயற்கையின் வடிவானவனே இறைவன். உயிருள்ள பிராணிகளைத் தோன்றச் செய்வது அக்கடவுளின் சிருஷ்டி நிலை. அவற்றிற்கு உணவளித்து இயற்கையின் உதவியலேயே அவற்றின் வாழ்வை நடைபெறச் செய்தல் அன்னவனுடைய ஸ்திநிலை. அவற்றை மாயாரூபமான சடலத்தினிறு வேறுபடுத்துதல் அவனுடைய சங்காரநிலை. இம்மூன்று தொழில்களையும் புரிகின்றவன் அனைத்தையும் கடந்து நிற்கும் கடவுள். அவனுடைய செய்கையாவும் அவன் திருவிளையாடல்கள்! இத்திருவிளையாடல்களைப் புரியும் அவனும் இயற்கை வடிவானவன். இதனாலேயே உலக பந்தங்களினின்றும் விடுபட்ட பிரம்ம ரிஷிகள் அவனைத் துதித்தேத்த இயற்கை இன்பம் நிறைந்த அரண்யங்களில் வசித்து, காய் கிழங்கு கனிவர்க்கங்களை ருசியைக் கருதி யுண்ணாது, இச்சையற்றுப் பசிவந்த போது புசித்து, சூரியன் உதயமாகும் பொழுதும் அவன் அஸ்தமிக்கும் பொழுதும் இயற்கை இன்பத்தால் பரவசமாகி, அவனுக்கு அர்க்கியங்களைக் கொடுத்து இடைவிடாது அவனுடைய நாமஸ்மரணை செய்து கொண்டு காலங் கழித்தனர். காலையில் சூரியன் கிழக்கில் உதயமாகும் பொழுது ஓர் மலையடிவாரத்தினின்று விரைந்து வெளிக்கிளம்பும் ஜெகஜ்ஜோதியான அவனது சோருபமும், அவனது கிரணங்கள் அருவிகளிலோடும் புனலிற்படுங்கால் அப்புனல் பளீர் பளீரென்ற பிரகாசத்தை வீசி, 'பொன்னி' எனப் பெயர் புனையும் வனப்பும் இயற்கையின் உன்னத நிலையை விளக்கும் இயல் புடையனவன்றோ! வனங்களில் கண்ணைக் கவரத்தக்க விதமாய் மலர்ந்த மலர்களும், ஒடியலையும் மிருகங்களும், பசுமையான புற்களும், அதன் பரப்பில் பந்தமற்ற யோகியைப் போன்று துள்ளியோடும் மான்களும், மற்றவையும் இயற்கையின் அமைப்பினாலன்றோ காணப்படுகின்றன! இயற்கைக்கும் செயற்கைக்கும் நெருங்கிய சம்பந்தத்தை ஏற்படுத்தி இப்புவனத்தில் நடைபெறுவன வெல்லாம் இயற்கையின் ஆதரவிலேயே இயங்குமாறு செய்த அவ்வியற்கைக் கடவுளின் பெருமையை நாம் என்னென்று கூறுவோம்! இயற்கையான கடல் பொங்குவது போன்று அப்பெருமிதம் பொங்கி வழியுமன்றோ?

 

இயற்கையின் இனிய வேலை. இப்புவனத்தைச் சிருஷ்டித்ததும் இயற்கை! அதனிடத்து எண்ணரிய அறிவுகளைக் கொண்டு 'இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது, இவை பாபச்செயல்கள், இவை புண்ணியச் செய்கைகள், இது சற்சங்கம், இது துஷ்ட சகவாசம்' என்ற பேதத்தை யறியும் மனித சமூகம் தோன்றியதும் அவ்வியற்கையின் செயலாலேயே! அம்மனித சமூகத்தில் ஆண், பெண்ணென்ற பேதசரீரங்களைத் தோன்றச் செய்ததும் அவ்வியற்கையே! அவற்றிற்குக் காதல், கவர்ச்சி, பாஷை முதலியவற்றையும் இயற்கையே தந்தது. இம் மனுஷப் பிறவிக்குப் பசி, நித்திரை, தியானமென்ற ஜாக்கிர, சுவப்பன, சுழுத்தி அவஸ்தைகளையும், மண் பெண் பொன் என்ற மூவாசைகளையும், உயர்வு தாழ்வான பேதங்களையும் இவ்வியற்கையே கற்பித்தது. இயற்கையாகவே இம்மனித வாழ்வில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ மென்னும் நான்குவித புருஷார்த்தங்களும் திகழ்வனவாயின! மனித சமூகத்தில் ஏழை, செல்வன், அரசன், ஆண்டி ஆகிய அனைவரையும் அன்னவர் நிலைகளையும் உண்டாக்கியது இயற்கையே. அரசாங்கம் நடைபெறுவதும், மனிதன் ஓடியாடித் திரிந்து பொருள் தேடியுய்வதும், ஆடவர் பெண்கள் மீது காதல் கொள்வதும், காதிற் கினிமையைத் தரும் இன்பகானங்களைக் கேட்டு இன்புறுவதும் ஆகிய அனைத்தும் இறைவனின் இயற்கைக் குணத்தின் பிரிவுகளே! இவைகள் கேளாதே வந்து கூறாதே போகும் இயற்கைக்குண முடையன.

 

இயற்கையின் செயல்கள். இயற்கை வடிவான இறைவனின் மற்றோர் அம்சமே அறம்! அதற்குத்தான் அறிவைப் புகட்டும் அபாரசக்தி உண்டு! இவ்வறிவினைப் புகட்டும் நூல்களே வேதம், உபநிடதம், சாஸ்திரம், கொரான்பைபிள், பௌத்த தர்மம், வேதாந்தம் முதலியன! இவற்றின் ஆசிரியன் கடவுளே! இந் நூல்கள் யாவும் ஆனந்த ஸ்வரூபியான அவன் அருள் வெள்ளத்தின் துளிகனே! அவையாவும் சர்வேஸ்வரனுடைய தன்மையையே ஆரம்பித்து அவனது நிலையையே கூறி முடிக்கின்றன. இறைவனே இயற்கை வடிவினனாதலின் அவைகளும் இயற்கை ஸ்வரூபங்களாம். இயற்கையின் இன்பத்தைப் படித்துணர்ந்த பாமரன் செயற்கை இன்பங்களை வெறுத்து -இயற்கையின் பேரின்பத்தைப் பெற்று இன்புற நாடுகின்றான். இவனே மஹானாகின்றான். இயற்கையின் இன்ப அமுதத்தைப் பருகுகின்ற மஹான்களைக் கண்டு செயற்கையிற் சார்ந்த மனிதர்கள் போற்றுகின்றனர்; வணங்கித் துதிக்கின்றனர். இவையாவும் இயற்கையின் அம்சமான அறத்தின் செயல்களேயாம்.

 

சமயங்களின் பெருமிதம். இயற்கையின் இயல்பாக மாநிலத்தில் பாஷைகளும், பல மதங்களும் தோன்றின. கிரிஸ்து நாதர் கிரிஸ்தவ சமயத்தையும், முகம்மது நபி இஸ்லாமிய மார்க்கத்தையும் உலகிற்களித்தனர்; தியாகத்தையும், சத்தியத்தையும் தர்மத்தையும் நிலை நட்டினர்; அன்பும் பரம் பொருளான இயற்கையும் ஒன்றென உணர்த்தினர்; அவ்வழிதாம் நின்று போதித்தனர். தற்கால ராஜஸ எதிர்ப்பு இம்மதங்கள் தோன்றிய காலத்து அந்நாடுகளிலில்லை; அம்மதாசாரியர்கள் சாத்வீக எதிர்ப்பின் சத்தியத்தைக் கடைப்பிடித்து நின்றனர்; பிறர் குற்றங்களுக்காகத் தாம் பல இன்னல்களுக்காளாயினர்; அறவழி நின்றனர். அவர்கள் வாயிலாக வந்த கிரிஸ்தவ வேதமும், குர்ஆனும் மேல் நாடுகளில் ஞான விளக்கேற்றின. அம் மதங்களும் சமயஸ்தாபகர்களாக நின்ற தீர்க்கதரிசிகளின் நாமங்களும் இன்றளவும் மேல்நாட்டாரிடத்தில் மறையவில்லை. அந்தோ! கொள்கைகளே மங்கின. இயேசுநாதரின் ஆத்மபலம் வேறிடங்களில் குடியேறி விட்டது; மிருகபலம் தலைவிரித்தாடி, இயற்கை இன்ப நுகர்ச்சியை அழித்துப் பேராசையால் இரத்த வெறி பிடித்தலைகின்றது.

 

பாரத பூமியின் தொல் சீர். நிற்க, இயற்கை இன்பம் நிறைந்த இந்திய நாடோ எம்பெருமானின் திருநந்தவனம். இதில் பல்வேறு சமயங்களாகும் புஷ்பச் செடிகள் அன்பு என்னும் புனலால் வளர்ந்தன. அச்சமயங்களின் உன்னத அறக்கடவுள், மலர்களாக அச்செடிகளின் உச்சியிலமர்ந்து, தன்மணத்தை வீசி ஆனந்தத்தை யுண்டு பண்ணுகின்றார். அம்மலர்களாகிய கடவுளிடத்திருந்து அவற்றின் இதழ்களான வேதங்களும், உபநிடதங்களும், புத்ததர்மங்களும் விரிந்தன. 'புவனமிதிற் கலைமகளே ஆணுருவங்கொள நினைந்து போந்தா'ளென்னும் சங்கரரும், மத்வர், இராமாநுஜர், தேசிகர், புத்தர் முதலான தீர்க்க தரிசிகளும் இயற்கையாக உலகிற்றோன்றி, அறக்கடவுளின் மணத்தாலாட்கொள்ளப்பட்டு, ஆனந்த பரவசர்களாகிச் சமயப்பிரசாரம் செய்ய வாரம்பித்தனர்; அறமென்ற இயற்கைத் தெய்வத்தை ஆராதித்தனர்; 'அன்பு' என்னும் ஆத்மராமனின் அறப்பெருமை மனித சமூகத்திற் குன்றிய காலங்களில், அடியார்களும், ஆழ்வார்களும், ஆனந்தர்களும், பரமஹம்சர்களும் தோன்றினர்; தோன்றுகின்றனர். சமயாசாரக் கொள்கைகளை எடுத்தோதுவதே அவர்களின் அறம்! இப்பாரத பூமியாகிய நந்தவனத்திலுள்ள மனித சமூகத்தில் மிருகபலம் ஒங்கி, ஆத்மபலம் என்றி, துஷ்டர்கள் நிறைந்து சிஷ்டர்கள் குறைந்து, ராஜசம் பெருகி, சாத்வீகம் குறுகி என்றகாலங்களில் மிருகபலத்தை ஒடுக்கவும், துஷ்டர்களை முடிக்கவும், ராஜசத்தை அடக்கவும் அவ்வறக்கடவுளே மாயாசம்பந்தனா உலகிற்றோன்றித் தமது அறநிலையின் சத்தியத்தைப் பரப்பினர். இனியும் வந்துறுவேனென்று கீதாரஹஸ்யத்திலும் பகவான் கூறிப் போந்தனர்.

 

அறத்தின் முறையீடு. இயற்கைத் தெய்வத்தின் வல்லமையால் மனிதன் உய்யும் வழிதேடலுக்குச் சாதகமான தர்மநூல்கள் பல அவனருளாற் றோன்றின. அவை இயல்பாகவே மனித உள்ளத்தில் கருணை வெள்ளத்தைப் பாய்ச்சுவன; மனிதன் மனத்தில் 'கற்பூரமலை படு தீப்பட்டாற் போன்ற' ஞானச்சுடர் ஏற்றுவன; அவ்விளக்கிற்கு 'அஹிம்சை' என்பதே அகலாகின்றது. அதனை யுணர்த்தினான் பிரகலாதாழ்வான். அவ்வகிம்சா தர்மத்தின் ஓர் சுடரான 'பற்றற்றான் பற்றினைப் பற்றுவிடுவதற்காகப்' பற்றுமாறு கீதை உணர்த்தியது; அதன் தாமரை மலரிற்பட்ட நீர் போன்ற நிலையைப் புத்தர் காட்டினார்; 'பொறுமை கடலினும் பெரி' தென்பதைத் தருமர் காட்டினார். இத்தருமத்தின் முடிவற்ற சப்தம் உலகில் என்றும் ஒலித்து நிற்கின்றது. அது "மானிடனே! நீ உலகிற்றோன்றிய காரணத்தை இப்போதாகிலும் உணர்! நீ உலகத்தில் தொண்டு புரியவே தோன்றியவன்! நீ அத்தொண்டை யியற்றுமாறு உன்னை ஆட்டுவிக்க ஆத்மா என்னுங் கடவுள் உன்னுள்ளேயே ஒளிர்கின்றான்! நீ ஜனித்த உலகம் அந்த இறைவனது ஆலயம். உன்னைச் சூழ்ந்திருக்கும் ஜீவன்களெல்லாம் உன்னைப் போன்றே சர்வேஸ்வரன் சந்நிதிக்கு வந்தவர்கள், நீ உனக்காகப் பிறக்கவில்லை! வாழ்வதில்லை! 'என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற வாக்கை மெய்ப்பிக்கவே நீ பிறந்தாய்! ஆகையால் உன்னைச் சுற்றி யுள்ளவர்களிடம் அன்புகாட்டு; உன் அன்பு பெருகி அருட்பணியாகட்டும்! நீ உன் சமூகத்திற்காகவே தோன்றியவனென்பதை அறி! உன் வாழ்வினின்று ஓர் உண்மையைத் தோன்ற செய் ! உனது சமூகம் அதனால் ஓர் உணர்ச்சியைப் பெறட்டும்! உனது சேவையால் உலகத்திலுள்ள அஞ்ஞானம் சற்று விலகட்டும்! துன்பங்கள் சற்று தணியட்டும்'' என்று முறையிட்டு கொண்டிருக்கின்றது; நம்மை அவ்வறவழியை ஒழுங்குபடுத்தவே அழைக்கின்றது. உலகில் மனிதர்படும் கஷ்டநிவாரணக் கருத்தைக் கொண்டே அந்த சப்தம் நம்மைச் சிருஷ்டித்திருக்கின்றது. இயற்கையின் அறப்பணி யிதுவேயன்றோ!

 

மானிடர் நிலை. அந்தோ! அவ்வியற்கை அன்பாலெழுந்த ஒலியை மனித சமூகத்தின் செவிகள் ஏற்பன வல்லவாயின; மனித சமூகம் தனது சக்தியை மறந்தது; அதனிடத்து 'பரமாத்மா தன்னுள்ளே ஒளிர்கின்றார்' என்பதை அறியும் ஆற்றல் குன்றியது; அது தன்னையே யறியாது வீண்மதங் கொண்டது. தனக்கு உபதேசஞ் செய்ய வந்த பெரியார்களின் பெருமையை மறந்தது. தனது மனச்சாட்சியையே மனிதன் நம்புவதில்லை. அதன் உத்தரவுப்படி நடப்பதை விட்டான்! உண்பதும், உறங்குவதும், பொருளீட்டுவதும், பிறரைத் துன்பப்படுத்துவதுமே தன்னுடைய இயற்கைப் பிறவியின் நோக்கமென்று எண்ணினான். சத்தியமும், அன்பும், பொறுமையும், நேசமும்இவனை விட்டகன்றன. சுயநலப்பேய் இவனைப் பிடித்தாட்ட, பொறாமையும் பேராசையும் இவனிடம் குடி புகுந்தன. அவை காரணமாக நெறியினின்றும் வழுவி அதிகப் பொருளீட்டவும், மெலியாரை வாட்டவும், பிறர் பொருளையபகரிக்கவும் இவன் முற்பட்டான். உலகில் அன்புவெள்ளம் வற்றிப்போய் இரத்தவெள்ளம் ஓடுவதாயிற்று. 

 

நவீனக்காற்று. சங்கரர் போதித்த அறவழி யெங்கே! ஹிந்து மதத்தின் ஸ்தம்பங்களாக நின்ற வசிஷ்டர், விசுவாமித்திரர், பராசரர், வியாசர், வான்மீகி ஆகிய முனிவர்கள் திகழ்ந்த நாட்டின் வளப்பம் எங்கே! இயேசுநாதர் குன்றின் மீதேறிப் போதித்த தர்மமெங்கே! கொந்தளிக்கும் கடலும் ஏற்றுக் கொண்ட சாந்தத்தை யுபதேசித்த அவருடைய உயர்ந்த கருத்துகளெங்கே சென்றன! அனைத்தையும் இயற்கைப் பெருமையற்ற செயற்கை வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று. ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களை ஒடுக்கவும், ஒவ்வொரு மதமும் மற்றைய மதங்களைக் கெடுக்கவும் முற்படுகின்றன. உலகத்தை, பொருள் சேர்க்குமிடமென்றும், போர்தொடுக்கும் களமென்றும், காமக் கடலென்றும் கூறுகின்றது நவீன உலகம்! மாயையான இருளில் மனித சமூகம் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கின்றது. இது இயற்கை வடிவான அறக்கடவுளின் சொரூப மறியும் உணர்ச்சி மனித சமூகத்தில் குறைந்ததாலன்றோ ஏற்பட்டது!

 

தர்மதேவதையின் அழைப்பு. இந்நிலையினின்று! நாம் மீள, " ஹே! புண்ணிய பாரதபூமியே! உனது இயற்கையினழகு எங்கே! உன்னிடத்துச் செறிந்த வீரம் எங்கே! உயர்ந்த வேதங்களின் தாத்பரியங்கள் எங்குச் சென்றன! கண்ணன் பிறந்த புனிதநாடே! இராமன் தோன்றிய புனித வீடே! பாரதமக்களே! இப்புனிதநாட்டை அதர்மத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க விரைந்து வாருங்கள்! அது தான் உங்களது கடமை!'' என்று இயற்கை வடிவான தர்மதேவதை யாவரையும் அழைக்கின்றாள். இந்த ஒலி மஹான்களின் மனக்காதுகளில் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இந்த ஒலியிலீடுபட்டுப் பல மஹான்கள் நம் பாரத நாட்டில் அறத்தின் பணியை இயற்ற அவதரித்தனர். அவர்கள் இயற்கையான அறத்தின் மணத்தை – பக்தி வாசனையைப் பரப்பினர் - பரப்புகின்றனர். இனியும் அவதரித்துய்யும் வழியைப் புகட்டவும் வருவார்.

 

அவதார புருடர்கள். ஈசுவரத்தன்மையான இயற்கையின் பெருமையை, தனிப்பட்ட செயற்கை பாழ்படுத்தி இவ்வுலகை அடிமையாக்கிய பரிதாபம் என்னே! அறக்கடவுளீந்த இயற்கையின் இன்பம் - விநோதம் - ஆனந்தம் - ஆனந்தபோதம் - இயம்பவும் எளிதாமோ? இறைவனே இயற்கைச் சொரூபி என்பதும், அவனாலாக்கப் பெற்ற உலகமும் இயற்கையும் அவனுடைய கடாக்ஷத்தின் வடிவமே யென்பதும், அவ்வுணர்ச்சி குன்றும் பொழுது ஆனந்தர்கள் பலர் தோன்றி, மனிதருள்ளத்தில், அறிவு வெள்ளத்தைப் பாய்ச்சுகின்றன ரென்பதும் 'இவ்வியாசத்தால்' விளக்கமாம்.

வி. ச.

ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment