Saturday, August 29, 2020

ஓமர்கயாம்

 

ஓம்மர்கயாம் என்பவர் பாரசீக தேசத்துக் கவி. அவர் அனேக ஆண்டுகளுக்கு முன் ஜீவித்திருந்தார். அனேக கவிகள் பாடி பிருந்தும் அவற்றில் முக்கியமானதும் தத்துவ ஆராய்ச்சி நிறைந்ததும் அவருடைய 'ருபாயாத்' (Rubaiyat) என்பதே.
இதை ஆங்கிலலத்தில் பிட்ஜ் ஜெரால்ட்
(Fitzgerald) என்பவர் மொழி பெயர்த் திருக்கிறார். இங்கிலீஷ்காரர் மேற்படி கவியை மொழி பெயர்க்காமல் தானாகவே சாமார்த்தியமாய்
மாற்றி எழுதியிருக்கிறார் பிட்ஜ்ஜெரால்ட் என்றும், பாரசீக கவியில் ஆங்கிலப் பதிப்பிலுள்ளவை அனேக மில்லையென்றும் வற்புறுத்தியிருக்கிறார்கள். இதை ஆராய இது இடமில்லை. ஆகவே, வசன நடையில் ஆங்கில மொழியில் இருக்
கும் ருபாயாத்தின் கருத்தை வெளியிட முயல்கின்றேன். கீழ்நாட்டில் தத்துவ ஆராய்ச்சி பண்டைக் காலத்திலேயே மேன்மைப்பட்டிருந்ததற்கு இது ஓர் அத்தாக்ஷியெனச் சொல்லலாம். கவியின் மத்தியில் வரும் சில புதிய பதங்களுக்குக் குறிப்புகளாக அடியில் அர்த்தம் எழுதுகிறேன்.

 

“எழுந்திரு! காலை இரவின் மத்தியில் எறிந்த கல்லைக்கண்டு (1) நக்ஷத்திர ஒட்டகங்கள் பறந்தன. கீழ்த்திசை வேடுவன் அரசன் அரண்மனையின் நூபுரத்தைத் தன் வெளிச்ச வலையில் பிடித்துவிட்டான்.

 

அருணோதயத்தின் இடது வானத்தில் தோன்றிய போது நான் கண்ட கனவொன்றில் ஒரு வாக்கியம் என் செவியில் விழுந்தது. அவ்வொலி சத்திரத்தி னுள்ளிருந்து கிளம்பியது: “என் சிறு குழந்தைகாள்! எழுந்திருங்கள். ஆயுளின் ரசம் அதன் பாத்திரத்தினின்றும் ஆவியாய்ப் போவதற்குள் உங்கள் கோப்பையை நிரப்பிக் குடியுங்கள்.

 

பின்னர், கோழி கூவியபோது, சாத்திர வாயிலில் நின்றவர்கள் "சீக்கிரம் கதவைத் திறவுங்கள். நாம் எவ்வளவு சிறியபோது இவ்விடத்தில் தங்கியிருப்போ மென்றும் ஒருமுறை போனபின் திரும்பி வரமாட்டோ மென்றும் நீங்கள் அறிந்ததே" என்று கூவினார்கள்.

 

புதுவருஷம் பிறந்தது. பழைய ஞாபகங்கள் வருகின்றன. ஆத்மா தனியாக உலாவச் சென்று பெரிய தீர்க்கதரிசிகள் இருந்ததையும் சென்றதையும் பற்றிச் சிந்திக்கிறது.

 

எத்தனை பேர் வித விதமான உடைகளை யணிந்து உலகத்தில் வாழ்ந்திருந்தனர்? அவர்கள் போய்விட்டனர்! எங்கே?  (2) ஈராம் எங்கே? ஜாம்ஷிட் தன்னுடைய அமிர்தம் நிறைந்த கோப்பையை யெடுத்துக்கொண்டு எங்குச் சென்றா னென்பது யாரு மறியார். ஆனால் முன்போலவே திராக்ஷைக்கொடியின் கெம்பு வர்ணமுள்ள ரசமும், இவ்வோடையின் அருகில் ஒரு தோட்டத்து வாசனையும் இன்னும் இருக்கின்றன.

 

மகத்தான அரசனான தாவீதின் (3) வாயடைத்துவிட்டது. ஆயினும் அவன் வசித்த பிரதேசத்து மஞ்சள் வர்ணமுள்ள பக்ஷி இரவில் ரோஜா புஷ்பத்தைக் குறித்து என்ன கூவுகிறது? "திராக்ஷ ரசம்! திராக்ஷ ரசம்! திராக்ஷரசம்! சிவப்பு ரசத்தைக்கொண்டு என் கன்னத்தைச் சிவப்பாக்கு!''

 

சரி, கோப்பையை நிரப்பு, வசந்த காலத்தின் நெருப்பில் மழை காலத்தின் மனந் திரும்பு தலாகிய அங்கியைப் போட்டுவிடு. காலப் பக்ஷிக்கு பறப்பதற்கு சிறிது தூரமே யிருக்கிறது. அதோ! பறப்பதற்கு ஆரம்பித்தும் விட்டது.

 

அதோ பார்! - காலையில் ஆயிரக்கணக்கான புஷ்பங்கள் கிளம்பின -ஆயிரக்கணக்கானவை மண்ணிலே சிதறின. இக் கோடை முதல் மாதமே, ரோஜாவைக் கொண்டு வரும்போதே ஜாம்ஷிட்டையும் கைகோபாடையும் (4) கொண்டு போய் விடும். ஆனால் வயது சென்ற கயாமுடன் நீ வா. கைகோபாட்டும் கைகோஷ்ரூவும் (5) மறக்கப்படட்டும், ரஸ்டம் (6) தன்னிஷ்டப்படி சண்டை செய்யட்டும், அல்லது ஹதீம்டாய் கத்தட்டும் (7) அவர்களை சட்டை செய்யாதேயும்.

 

வாரும் என்னோடு! நாட்டையும் வனாந்தரத்தையும் பிரிக்கும் பாதை வழியே சென்று அரசன் அடிமை யென்ற வித்தியாசத்தை யறியாத இடத்தை அடைந்து, முடி சூட்டிய சுல்தான் மாமூத் (8) மீது பச்சாதாபப்படுவோம்.

 

இங்கே பரந்த மரத்தினடியில் ஒரு சாராய ஜாடி, ஒரு பாட்டுப் புத்தகம்,
ரொட்டித் துண்டு- இவைகளோடு நீயும் பாடிக்கொண்டிருக்க வேண்டும்- வனாந்தரமே போதுமான நந்தவன மாயிற்றே.

 

"ஆஹா! உலக சக்கராதிபத்தியம் எவ்வளவு இனிமையானது!'' என்கிறார்கள் சிலர். "மோக்ஷ சாம்ராஜ்யம் எத்துணை மேலானது!!'' என்கிறார்கள் இன்னொரு சாரார். ஆ! நாளைக்கு வருகிற பலாப் பழத்தைவிட இன்றைக்கிருக்கும் களாப்பழத்தை அனுபவி. ஹோ! தூரத்தில் கேட்கிறதே அந்திக்கால தமுக்கு!

 

நம்மைச் சுற்றிப் புஷ்பிக்கும் ரோஜாவைப் பார். "ஓ! இவ்வுலகத்தில் எவ்வளவு அழகாக புஷ்பிக்கிறேன்!" என்று சிரித்துக்கொண்டு சொல்கிறது. ஆனால் சில தினங்களில் இந்தப் புஷ்பம் வாடி வதங்கி இதழ்கள் பூமியில் விழுந்து விடுகின்றன.

 

மனிதர் எண்ணும் எண்ணங்களும் ஆசைகளும் நிராசையாய் சாம்பலாகின்றன. அல்லது நிறைவேறுகின்றன. ஆனால் வனாந்தரத்தில் உண்டாகும் பனிக் கட்டியைப்போல் ஒருமணி நேரத்திற்குள் மறைந்து போகின்றன.

 

வருஷா வருஷம் பயிரிட்டு அறுப்பறுத்த ஏழை மனிதரும், தானியத்தை லக்ஷியம் செய்யாமல் மழைபோல் நான்கு பக்கத்திலும் இறைத்த வரும், எங்கே? அவர்களுடைய தேகங்கள் பொன்மய மாகின்றனவா? அன்று, அன்று. மண்மயமாகின்றன,

 

சற்றே யோசித்துப் பார்! இந்தச் சத்திரத்தில், பகலையும் இரவையும் கதவுகளாயுள்ள சத்திரத்தில் எத்தனை அரசர்கள் ஆடம்பரமாக ஒருமணி நேரமோ இரண்டு மணியோ தங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்?

 

ஜாம்ஷிட் மேன்மையா யிருந்து நன்றாகக் குடித்தவிடத்தில் இப்போது சிங்கமும் பல்லியும் அரசாள்கின்றன. பாஹ்ராம் - (9) அந்த பெரிய வேட சிங்கம் - அவனைப் புதைத்திருக்கும் இடத்தின்மேல் காட்டுக் கழுதை எதேச்சையாய்க் கேட்பாரின்றித் திரிகின்றது.

 

எனக்குச் சிற்சில சமயங்களில், தரையில் புதைக்கப்பட்டிருக்கும் பெரிய அரசனின் தேகத்தினின்றுமே அழகான ரோஜா புஷ்பங்கள் கிளம்புகின்றன வென்றும், மற்ற புஷ்பங்கள் ஓரழகிய ஸ்திரீயின் தலையினின்றும் தரையில் விழுந்தே பிறகு முளைக்கின்றன என்றும் தோன்றுகிறது.

 

இதோ இந்த செழுமையான கொடி ஆற்றோரத்தில் சிங்காரமாய்த் தோன்றுகிறதே - ஆ! அதன்மேல் அழுத்தமாகச் சாயாதே! - அது எவ்வளவு அழகான உதடிலிருந்து கிளம்பி யிருக்கிறதென்று யாரே யறிவர்!

 

ஆ! என் கண்ணே! பழைய வருத்தங்களையும் எதிர்காலக் கிலேசங்களையும் மறக்கச் செய்யும் கோப்பையை நிரப்பு! நாளைக்கா? - ஏன், நாளைக்கு நானே நேற்றைய ஏழாயிரம் (10) வருஷங்களி லொருபாக மாகிவிடலாமே?

 

ஓ. சிலரை நாம் காதலித்தோம் - எவ்வளவு சிறந்தவர்கள் - அழகானவர்கள்! -அவர்களுடைய சத்தை நாளும் விதியும் கசக்கிப் பிழிந்துவிட்டனவே! அவர்கள் நம்மோடு சிறிது காலத்திற்குமுன் சாராயங் குடித்துக்கொண் டிருந்தார்கள். அதன்பின் ஒவ்வொருவராய்த் தீராத் துயிலில் அழுந்தி விட்டார்கள்.

 

நாம் - இப்போது இப் பிரகாசமான அறையில் உல்லாசமாய்க் காலன் கழிக்கும் நம்மை விட்டுச் சென்றார்கள். சிறந்த கோடைகால ஆடைகளையும் மதித்திலர் - நாமும் இத்தரைப் படுக்கைக் கடியில் போகவேண்டியது தானா? யாருக்குப் படுக்கையாக நாம் போவது?

 

ஆ! தற்காலம்- நமக்கிருக்கும் ஜீவிய காலத்தை உல்லாசமாய்க் கழிப்போம். நாமும் மண்ணில் விழுவதற்குமுன்-மண்ணோடு மண்ணாக, மண்ணினடியில் படுக்க-சாராயமின்றி, பாட்டுமின்றி, பாடகருமின்றி -- முடிவுமின்றி! - உல்லாசமாய்க் கழிப்போம்!

 

அந்தோ! இன்றைக் குறித்து ஆயத்தம் செய்வோருக்கும், நாளையைக் குறித்து ஆவலாய் எதிர் பார்ப்போருக்கும், இருட்டாகிய நூபுரத்தினின்றும் ஓர் மியூசின் (11) கத்துகிறான்: ஏ மடையர்களே! உங்களுக்குப் பலன் இங்கு மல்ல, அங்குமல்ல!

 

ஏன்? ஈருலகத்தைப்பற்றிப் பலமான விவாதத்தை நடத்திய தீர்க்கதரிசிகளும் ரிஷிகளும் - வெளியே தள்ளப்பட்டார்கள். அவர்களுடடய வார்த்தைகள் தூற்றப்பட்டன. அவர்கள் வாயில் மண் விழுந்திருக்கிறது!

 

ஓ! கயாமுடன் வாருங்கள். நிபுணர்கள் வம்பளக்கட்டும். ஒரு விஷயம் நிச்சயம் - ஜீவிய காலம் பறக்கிறது. ஒரே ஒரு விஷயம் மாத்திரம் உண்மை - மற்றவை யெல்லாம் பொய் - ஒருமுறை புஷ்பித்த மலர் நிரந்தரமாக இறக்கிறது.

 

நான் சிறுவனா யிருந்தபோது, நிபுணர்களையும் தீர்க்கதரிசிகளையும் விரும்பி அடைந்து அரிய பெரிய விஷயங்களைக் குறித்து அவர்கள் சொல்வ தெல்லாம் ஆவலோடு கேட்டேன். ஆயினும் சதா நான் போன வழியே திரும்பி வரவேண்டியதாயிற்று.

 

அவர்களோடு ஞான விதையை நானும் நட்டேன். என்னுடைய சொந்தக்கையினாலே அதை வளர்த்தேன். ஆனால் கடைசியில் நான் அறுத்த அறுப்பு இதுதான்: - "தண்ணீர்போல் வந்தேன், கா காற்றைப்போல் போகிறேன்!"

 

இவ் வுலகத்திற்குள் 'ஏன்?' என்றறியாமல் வந்தேன். 'எங்கிருந்து?' என்றறியாமலும், என் இஷ்டத்தைச் சட்டை செய்யாமலும் நீர் பள்ளத்தை நோக்கி ஓடுவதுபோல் ஒட்டப்பட்டேன். இவ்வுலகத்தினின்றும், 'எங்கு?' என்பதை யறியாமல், பாலை வனக் காற்றுபோல், என் இஷடத்தைக் கவனியாமல் ஒட்டப்படுவேன்.

 

என்ன? என்னைக் கேட்காமல் எங்கிருந்து இங்கு கொண்டு வரப்பட்டேன்? என்னைக் கேட்காமல், எங்கு கொண்டு போகப் படுவேன். இப்படிக் கேள்வி கேட்கும் அதிகப்பிரசங்கித்தனத்தை யடக்க மேலும் மேலும் கோப்பைகளை நிரப்பு!

 

பூமியின் மத்தியிலிருந்து ஏழாவது வாயிற்படி வழி சென்று சனி (12)
யின் சிம்மாஸனத்தின் மீது உட்கார்ந்தேன். வழியில் எத்தனையோ முடிச்சுகளை யவிழ்த்தேன். ஆயினும் மனித மரணம், விதி யென்னும் சிக்கலை மாத்திரம் பிரிக்க முடியவில்லை.

 

அங்கு ஒரு கதவு இருந்தது. அதற்குச் சாவி கிடைக்கவில்லை. அங்கு ஒரு திரை போட்டிருந்தது. அதற்கப்புறம் என்னால் பார்க்க முடியவில்லை.
சிறிதுபோது 'நீ' பென்றும் 'நான்' என்றும் பேச்சிருந்தது போலிருந்தது அதன்பிறகு
''நீ'யு மில்லை, 'நானு' மில்லை!

 

அதன் பிறகு பரந்த பரமண்டலத்தையே நோக்கிக் கத்தினேன்! "இருட்டில் தடுமாறுகின்ற தன் சிறு குழந்தைகளுக்கு விதி என்ன விளக்கைத் தந்திருக்கிறது?" என்றேன். "குருட்டுப் புத்தி!'' என்று பரமண்டலம் பதிலளித்தது! பிறகு அங்கிருந்து இறங்கித் தரை மட்டத்திற்கே வந்தேன். என் உதட்டை ஜீவியக் கிணற்றிலிட்டு அதன் உண்மையை யறியக் கருதினேன். உதடோடு உதடு வைத்து - ''உயிரிருக்கும் போது குடி! - ஒருமுறை இறந்தபின் நீ திரும்பமாட்டாய்'' என்றது. இம்மாதிரி பதிலளித்த பாத்திரத்திற்கு ஒரு சமயத்தில் உயிருந்திருந்து, உல்லாசமா யிருந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. இப்போது நான் முத்தமிடும் அதன் குளிர்ந்த உதடு, எத்தனை முத்தங்கள் பெற்றிருக்கும்- கொடுத்துமிருக்கும்!

 

ஏனெனில், ஒருதினம் சாயங்காலம் நான் குயவன் தன் ஈர மண்ணைத்தட்டும் போது கவனித்திருந்தேன். அப்போது அம்மண் தன் மெல்லிய குரலால் - "மெதுவாக, அண்ணே, மெதுவாக!'' என்று இரந்தது.

 

ஆ! கோப்பையை நிரப்பு: - காலம் பறக்கிறது என்று அடிக்கடி வற்புறுத்துவதில் என்ன பிரயோஜனம்? 'இன்றைக்கு' சந்தோஷமா யிருந்தால் பிறக்காத நாளையையும் இறந்த நேற்றையும் குறித்து வருந்துவானேன்?

 

இறப்பு என்னும் வனாந்தரத்தில் ஒரே நிமிஷம்! ஜீவிய மென்னும் கிணறின் ருசியை அனுபவிப்பது ஒரே நிமிஷம்! - நக்ஷத்திரங்கள் மறைகின்றன. ஒட்டகங்கள் சூனிய மென்னும் அருணோதயத்தைக் குறித்துக் கிளம்புகின்றன - ஓ! துரிதப்படுத்துங்கள்!

 

எத்தனை நாள், எத்தனை நாள், இதைக்குறித்தும் அதைக் குறித்தும்
கணக்கின்றித் தேடித் திரிவது? பலனில்லாத அல்லது கசக்கும் பலனுடன் கூடிய பொருளைப்பற்றி வருந்துவதை விட இனிக்கும் திராட்சைப் பழத்தைக் கொண்டு சந்தோஷித்திருப்பது நன்று.

 

அன்பர்களே! நான் வெகு நாட்களுக்குமுன்பே சிந்தையைப் போக்கி திராக்ஷைக்கொடியின் மகளை விவாகஞ் செய்துகொண்டு உங்களுக்கும் விருந்து செய்தது தெரிந்ததன்றோ?

 

“உண்டு”, "இல்லை" "மேலும் கீழும்'' என்று இதுபோன்ற தத்துவ ஆராய்ச்சிகளை நான் நூல்களோடும் என் சுய புத்தியோடும் செய்தே னாயினும், அவைகளைப்பற்றி எனக்கு அக்கரை கிடையாது. நான் அக்கரைவைத்தது திராக்ஷை ரசமே.

 

சமீபத்தில் சத்திரத்தின் கதவைத் திறந்துகொண்டு சாயங்காலப்போதில் ஒரு தேவதூ தன் தோளில் ஒரு ஜாடியைத் தாங்கி வந்தான். அதிலிருந்து எனக்கும் சிறிது கொடுத்தான்-ஆ! அது திராக்ஷை ரசமாகவே யிருந்தது!

 

திராக்ஷை ரசமே சிறந்த தத்துவம். எழுபத்திரண்டு தத்துவங்களையும் தள்ளிப் போடும் உன்னதமான தர்க்க சாஸ்திரமது. அதுவே மண்ணைப் பொன்னாக்கும் மந்திரக் கருவி.

 

அதுவே மனதிலெழும் சங்கைகளையும், பயத்தையும், வருத்தத்தையும் உதறித் தள்ளும் சுல்தான் மாமூதுபோன்ற சக்தி பெற்ற அரசன். தன்னுடைய மாயக் கத்தியால் இவைகளை வீசி யெறிகின்றது.

 

சரி, நிபுணர்களிடத்தில் உலகத்தின் தத்துவத்தை விட்டு விட்டு என்னுடன் ஒரு மூலையில் உட்கார வா. நம்மைப் பரிகசிக்கும் இந்த லீலையைக் குறித்துப் பரிகாசம் செய்வோம்.

 

உள்ளும் புறமும், மேலும் கீழும், சுற்றியும் இது ஒரு மாயத் தோற்றமாகவே யிருக்கின்றது. பிரபஞ்சமும் ஒரு பெட்டி, சூரியனே மத்தியிலிருக்டிம் சிறு விளக்கு. நாம் அதைச் சுற்றிவரும் போலி உருவங்கள்!

 

நீ குடிக்கும் சாராயமும், நீ முத்தமிடும் உதடும், மற்றவைகளைப் போல் அநித்தியமானவையாயின் - ஆம் - நீ இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதான் அல்லவா.  இப்போதிருப்பதைவிட கேடான நிலைமை கிடையாது.

 

ஆகவே, ரோஜா புஷ்பம் ஆற்றோரத்தில் ரம்மியமாகப் புஷ்பிக்கும் போதே கயாமுடன், இந்தச் சிவந்த சாராயத்தைக் குடி. பின்னர், காலன் தன் கருத்த பானத்தைக் குடிக்கச் செய்தானாகில்- பயப்படாமல் அதைக் குடி.

 

இவ்வுலகம் ஒரு சொக்கட்டான் தட்டு, விதியே ஆடுவோன், மனிதர்களே காய்கள் - சொக்கட்டான் கட்டைகள். இங்கும் அங்கும் தள்ளிப்போட்டு, சேர்த்தும் பேர்த்தும், ஒவ்வொருவராகப் பெட்டியில் போட்டுவிடுகிறது.

 

பந்து விளையாட்டில், பந்தை யேனென்று கேட்பார் யார்? விளையாடு'பவன் எப்படி உதைக்கிறானோ அப்படி வலப்புறமும் இடப்புறமும் ஒடுகிறது. ஆனால் உன்னை மைதானத்தின் மத்தியில் உதைத்தவன் அறிவான்-அவனுக்கு எல்லாம் தெரியும் - ஆம் அவன் அறிவான்!

 

அசையுங் கை எழுதுகிறது - எழுதிய பின்னும் அசைந்து செல்லுகிறது. உன்னுடைய பக்தியோ, சாதுரியமோ அதைப் பின்னுக் கிழுத்துப் பாதி வரியையும் அழிக்கச் செய்யா. உன்னுடைய கண்ணீர் அவ்வெழுத்தில் ஒன்றையும் அழிக்காது.

 

நாம் ஆகாயமென்று சொல்லும் கவிழ்த்த கிண்ணத்தை நாம் பூமியில் ஊர்ந்து வசித்து இறக்க, மேலே நிற்கும் கிண்ணத்தைக் குறித்து சகாயஞ்செய்யும்படி உன் கைகளைக் கூப்பாதே. அதுவும் உன்னையும் என்னையும் போல் சக்தி யற்றே உழல்கிறது!

 

பூமியின் முதல் மண்ணிலிருந்து கடைசி மனிதனைச் செய்தார்கள். கடைசி அறுப்புக்காக முதல் விதையை விதைத்தார்கள். சிருஷ்டி யன்றைய காலையிலேயே, சங்கார காலத்தில் இப்படி யிருக்க வேண்டுமென்றும் திட்டஞ் செய்து விட்டார்.

 

நான் சொல்லுகிறேன்- முதலில் என்னைச் சிருஷ்டித்தபோதே நீ இவ்வாறிருக்க வேண்டுமென்று எனக்குத் திட்டஞ் செய்து இவ்வுலகத்தில் தள்ளிவிட்டார்கள்!

 

திராக்ஷைக்கொடி என்னைச் சுற்றிக்கொண் டிருக்கிறது – நிபுணர்கள் எப்படி வேண்டுமானாலுஞ் சொல்லட்டும் - என்னுடைய நீச தேகத்திலிருந்தே ஒரு சாவியைச் செய்து அவர்கள் திறக்க முடியாத கதவை நான் ஒருகால் திறக்கக் கொடுத்து வைக்கலாம்!

 

இது மாத்திரம் எனக்கு நன்றாய்த் தெரியும். மெய் விளக்கு என் மேல் அன்பு கொண்டாலும் சரி, என்னை அதன் சுடர் கொளுத்தினாலும் சரி, அதைக் கோயிலிலிருந்து காணமுடியாமல் தவிப்பதைவிட சத்திரத்தினின்றும் ஒருமுறை பார்த்துவிட்டுத் திருப்தி யடைவது மேலானது.

 

ஓ! நான் நடக்கும் வழியில் சாராயத்தை வைத்துப் பள்ளத்தாக்குகளில் தள்ளப் பார்ப்பவனே! விதி விதி யென்று சொல்லி என்னை பந்தப் படுத்தி, பின்னர் பாவி யென் சொல்லாதே!

 

ஓ! மண்ணைக் கொண்டு மனிதனைச் செய்தவனே! உலகத்தில் நன்மையோடு
தீமையையும் சிருஷ்டித்தவனே! மனிதனுடைய முகம் எவ்வளவு பாவத்தோடு கறுத்திருந்தாலும், அவனுக்கு மன்னிப்புக் கொடுத்து விடுவாயாக!

 

மறுபடியும் கேள்! ஒரு சாயங்காலம், ரம்ஜான் பண்பு டிகைக் கப்புறம், பிறைச் சந்திரன் வருவதற்கு முன், மேலே கூறிய குயவனுடைய கடையில், நான் பானைக் கூட்டத்தின் மத்தியில் தனியாக நின்றேன்.

 

அப்போது ஆச்சரியத்தை என்னென்று சொல்வேன்! - சில பாண்டங்கள் பேசக்கூடும் போ லிருக்கிறது, சில பேசமுடியாதுபோ லிருக்கிறது. திடீரென்று, பொறுமையற்ற ஒரு பாண்டம் "குயவன் யார், ஐயா, பாண்டம் யார்?" என்றது.

 

அப்போது இன்னொன்று: - நான் காரணமில்லாமல், பூமியினின்றும் படுக்கப்படவில்லை; என்னை ஒருருவமாகச் செய்தவன் மறுபடியும் என்னை வெட்டி மண்ணுக்கே திருப்பமாட்டான் என்றது.

 

இன்னொன்று, “தான் சந்தோஷமாகக் குடித்த பாத்திரத்தை எந்த முரட்டுப் பையனும் உடைக்கமாட்டான். அன்பின் பெருக்கால் பாண்டம் வனைந்தவன், கோபத்தினால் திடீரென்று உடைத்து விடுவானா" என்றது.

 

ஒருவரும் இதற்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் சிறிது நேரஞ் சென்று விகாரமான உருவத்தோடு கூடிய ஒரு பாண்டம் சொல்லிற்று: "என்னைப் பார்த்து எல்லோரும் கேலி செய்கிறார்கள். என்ன? என்னைச் செய்தபோது குயவன்கை நடுங்கிற்றா?"

 

இன்னொன்று சொல்லிற்று, “ஜனங்கள் ஒரு சத்திரக்காரனைப்பற்றிக் கூறுகிறார்கள். அவன் முகத்தில் நாக மென்கிற கரி பூசியும் வைக்கிறார்கள். நம்மை ஏதோ சோதனை செய்வதாக அவன் சொல்லப்படுகிறான் - சே! சுத்தபிசகு. அவன் வெகு நல்லவன். எல்லாம் சரியாய் முடியும்.''

 

அப்போது இன்னொன்று வருத்தத்துடன் மொழிந்தது, "என் மண் கேட்பாரின்றி நீண்டகாலமாக உலர்ந்திருக்கிறது. ஆனால் என்னைச் சாராயத்தைக் கொண்டு நிரப்பும். நான் நாளடைவில் உயிர் பெறுவேன்" என்றது.

 

இப்படி இவை பேசிக்கொண்டிருந்தபோது, பிறைச் சந்திரனை ஒன்று பார்த்துவிட்டது. அப்போது ஒன்றை யொன்று எச்சரிக்கை செய்து விட்டு ''அண்ணே! அண்ணே! கதவு திறக்கிறாப்போ லிருக்கிறது'' என்றன.

 

ஆ! என் உலர்ந்து போகும் ஜீவனுக்குச் சாராயத்தை வழங்கு! நான் இறந்தபின் சாராயத்தால் என் உடலைக் கழுவு! என் பிரேதத்தை திராக்ஷையிலையால் மூடி, ஒரு ரம்மியமான தோட்டத்தின் அருகில் என்னை அடக்கஞ் செய்!

 

என்னுடைய சாம்பலும், ஆகாயத்தில் சாராய வாசனையையே எழுப்பி, என் கல்லறைப் பக்கம் வரும் பக்தர்களும் அந்த வாசனையைக்கண்டு மயங்க வேண்டும்.

 

அந்தோ! நான் இதுவரையிலும் விரும்பிவந்த பொருள்கள் மனிதரிடையில் எனக்குக் கௌரவம் கொடுக்காமல் என்னைத் தாழ்த்திவிட்டன. என்மதிப்பு ஒரு கோப்பைக்குள் முழுக்கப்பட்டு, என் நல்ல பெயர் ஒரு பாட்டிற்காக விற்கப்பட்டது!

 

வாஸ்தவம், வாஸ்தவம்! நான் அடிக்கடி நல்லவனா யிருக்கிறேனென்று வாக்குக் கொடுத்திருக்கிறேன் - ஆனால் நான் அவ்வாறு சாத்தியஞ் செய்யும் போது என் சுய புத்தியோடிருந்தேனா? அதற்குப் பிறகு, வசந்த காலம் புஷ்பங்களோடு வந்து என்னிடமிருந்த சிறிது நல்ல குணத்தையும் கிழித்து விட்டது.

 

ஆயினும் சாராயம் என்னை மயக்கச் செய்தும், என்னுடைய கௌரவ அங்கியைத் திருடிச் சென்றாலும், சாராயக் கடைக்காரர்கள் சாராயத்தைப் போல் அவ்வளவு மதிப்புள்ள வஸ்துக்கள் வேறெதை வாங்குகிறார்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

 

அந்தோ! வசந்த காலம் ரோஜா புஷ்பத்தோடு இவ்வளவு சடுதியில் போய்விட வேண்டுமா? பாலியத்தின் வாசனை பொருந்திய எழுத்துக்கள் முடிந்து போகவேண்டுமா? செடியில் இன்னிசையோடு பாடியிருந்த குயில் - எங்கிருந்து வந்தது? எங்கு போயிற்று? - யாருத் தெரியும்?

 

என் அன்பே! நீயும் நானும் விதியோடு சூழ்ச்சி செய்து, இந்த வருத்தம் பொருந்திய விஷயங்களைப் பிடிக்கச் சக்தி பெறுவோமானால், நாம் இவை உடைத்துத் தள்ளி நம் மிஷ்டம்போல் மறுபடியும் செய்யமாட்டோமா?

 

ஆ! தேய்வற்ற என் காதற் களஞ்சிய சந்திரனே! வானத்துச் சந்திரன் மறுபடியும் எழுகிறான். இனிமேல், எத்தனை முறை அவன் எழுந்து இந்தத் தோட்டத்தில் என்னைத் தேடுவான்? - வியர்த்தம், வியர்த்தம்!

 

நீ, உன் அழகிய பாதங்களோடு, விருந்தினர்கள் அங்கங்கே வீற்றிருக்க இப்பக்கம், என்னை யடக்கம் செய்திருக்கும் இடத்திற்கு வந்தாயானால்—ஒரு லோடா சாராயங் குடித்து விட்டு அப்பாத்திரத்தை என் கல்லறையின் மேல் கவிழ்த்து விடு!


குறிப்புகள்.

 

(1) ஒட்டகங்களைக் கிளப்ப வழி, ஒட்டகங்கள் தம்மீது சுமை யதிக மென்று நினைத்துப் படுத்துக்கொண்டே யிருக்குமாம். அப்போது ஒரு சிறு கல்லை முதல் ஒட்டகத்தின் முன் எறிந்துவிட்டால் தன் பார மிரங்கினாற்போல் அது ஓட மற்றவையும் ஓடுமாம்!

 

(2) ஈராம் என்பது ஊடாட் என்னும் அரசனால் ஏற்பட்டு அரேபியா மத்தியில் மறைந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. ஜாம்ஷிட் என்பவன் ஒரு மகத்தான வீரன். அவன் கோப்பை மாயக் கோப்பையாம்.

 

(3) தாவீது: - கிறிஸ்து வேத புத்தகத்திலிருந்து இவன் பெரிய அரசனெனத் தெரிய வருகிறது.


(4) & (5) கைகோபாட், கைகோஷ்ரூ பெரிய பட்டணங்கள்.


(6) ரஸ்டம் - பாரசீக ஹர்குலீஸ். பெரிய வீரன்.


(7) ஹதீம்டாய்-பாரசீக கர்ணன்.


(8) சுல்தான் மாமூது - இந்தியாமீது படை யெடுத்து சோமநாத்தைப் பேர்த்தவன்.

 

(9) பாஹ்ராம்- ஒரு பெரிய அரசன், வேட்டையில் பெயர் பெற்றவன். இவனுக்கு ஏழு அரண்மனைகளாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்ணத்துடனிருந்ததாம். ஒவ்வொன்றில் ஒரு மனைவி வைத்திருந்தானாம்.


(10) உலகத்தின் ஆயுள்: - இது ஒரு சாராருடைய கொள்கை.


(11) மியூஸின்: - மசூதிகளில் ஜெபத்திற்கு அழைப்பவன்.


(12) சனி: - படிப்பின் அக்கரை கண்டவனெனக் கொள்கை.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - நவம்பர் ௴

No comments:

Post a Comment