Thursday, August 27, 2020

 

உலக சுபாவம்

(க. சிதம்பரம் பிள்ளை.)

1

உலகம் பலவிதம். மனிதர்களுடைய உருவம், குணம், செயல் முதலிய ஒவ்வொன்றும் பலவகையான வித்தியாசங்களுடன் விளங்குவது உலகத்தின் இயற்கை. சிலருக்கு உண்மை பேசுவதென்றால் வேப்பங்காயாக இருக்கும்; பொய்யும் புனை சுருட்டும் என்றலோ, கற்கண்டைப்போல் தித்திக்கும்!

சவுகரியம் குறைந்த ஒருவன் சவுகரியமுள்ள ஒருவரிடத்து ஏதேனும் ஒரு காரியமாகச் சென்று, அதை நிறைவேற்றிக் கொடுக்கும்படி அவரைக் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அவர் நல்லெண்ணம் நிறைந்த யோக்கியராக இருந்தால், உடனே அவ் வொத்தாசையைச் செய்து அவனுக்கு உதவி புரிவர். அல்லது, அது தம்மால் ஆகாதென்றாவேது பளிச் சென்று சொல்லி விடுவர்.

அவ்வாறு சொல்லி விடுவதில் தப்பொன்றும் இல்லை. ஏன்? யாசித்துச் சென்றவன் உடனே வேறொருவரிடத்துச் சென்று அதை முயற்சிக்கலா மல்லவா?

சிலருடைய செய்கை அப்படியில்லை. ஆகட்டும், ஆசட்டும் என்றே ஆசை வார்த்தை சொல்லிப் பலநாள் நடத்துவர். உதவி கோரிச் சென்றவனும் அவரைப் பூரணமாக நம்பி பிருப்பாள்.  ஆனால், ஆகட்டும் என்று தவணை வைத்துக்கொண்டு வந்த அவரோ, கடைசியாகச் கையை விரித்து விடுவர்!

இன்னும் சிலர் அது கூடச் செய்யமாட்டார்கள். உதவி கோரிச் சென்றவன் தானாக நின்று கொள்ளும் வரையில் தவணையே சொல்லிக் கொண்டே வருவர்! இத் தகையோர்களைச் செய்ந்நன்றி மறக்கும் பாதகர்களை விடக் கொடியவர்களாக எண்ண வேண்டுமாம்.

“இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்

வசையன்று, வையத் தியற்கை; - நசை யழுங்க

நின்றோடிப் பொய்த்தல், நிரைதொடீ! செய்ந்நன்றி

கொன்றாரிற் குற்றம் உடைத்து."

 

[இசையா ஒருபொருள்=தம்மால் ஆகாத ஒன்றை; வசையன்று=பழிப்பல்ல; நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல்=உதவி கோருபவருடைய ஆசை கெடும்படி தவணை வைத்தல்.]

2

இந்த உலகத்தில் மனிதனுக்குப் பணத்தான் முக்கியம். பணம் மட்இம் இருந்து விட்டால், அவனுக்கு மற்றெல்லாம் தாமாகவே வந்து சேரும். கேள்வி முறையில்லாமல் மூலை முடுக்குகளில் கிடந்தவர்கள் கூட அனிடத்து வந்து நெருங்கிய உறவின் முறை கொண்டாடுவர். அவனுக்கு அந்த நிலையில் பந்துசனங்கள் வானத்தில் காணப்படும் நட்சத்திரங்களை விட அதிகமாக வந்து சூழ்வர்.

அதே மனிதன் விதி வசத்தால் அப் பணத்தை இழந்து ஏழையாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அச் சுற்றத்தார் யாவரும் அந்த நிமிடத்திலேயே சொல்லாமற் கொள்ளாமல் மாயமாய் மறைந்து விடுவர். அச்சுற்றத்தாரில் ஒருவரைப் பார்த்து: 'இன்னாரைப்பற்றி உமக்குத் தெரியுமா, உம்முடைய சொந்தக்காரர்தானே அவர்?' என்று கேட்டால், அப்படி யென்று சொல்லிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்' என்று பதில் கூறுவர்.

''காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து

மேல் ஆடும் மீனிற் பலராவர்; - ஏலா

இடர் ஒருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நாட!

தொடர்புடையேம் என்பார் சிலர்.''


[கால்ஆடு போழ்தில்=நினைத்த இடம் போவதற்கு வசதியுள்ள செல்வம் உள்ள காலத்து; கழிகிளைஞர் - மிக்க உறவினர்; ஏலா இடர்=தகாதவறுமை.]

3

''பெரிய மனிதன் வார்த்தைக்குத்தான் வில.''

"அப்படி யென்றால் பெரிய மனிதன் யார்?"

"அவன்தான் பணக்காரன்."

“ஆனால் வயதிலும் படிப்பிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவன் பெரிய மனிதன் இல்லையா?''

பணக்காரன் ஒருவனே. வயது, படிப்பு, அறிவு என்பதெல்லாம் பணத்தின் முன் நிற்கமாட்டா. பொருத்த மற்றதும் அநீதியானதுமான சொற்களைப் பணக்காரன் சொன்னபோதிலும், மற்றவர்கள் அவற்றை அப்படியே ஒப்புக்கொள்ளத்தான் செய்வர்.

நல்ல சாதிப் பசுவாக இருந்தால் அதன் இளங்கன்று கூட எப்படி நல்ல விலை பெறுமோ, அதுபோல் பணக்காரன் வயதில் மிகச் சிறியவனாக இருந்தபோதிலும், அவனுடைய வார்த்தைக்கும் சல்ல மதிப்பு இருக்கும்.

வயது, படிப்பு, அறிவு இவற்றால் உயர்ந்தவனாக இருந்தபோதிலும் அவன் ஏழையாக இருப்பானே யானால், அவன் சொல் அம்பல மோறாது. போதுமான ஈரமில்லாத நிலத்தில் உழும்போது கலப்பையானது சரியான படி உள்ளே பாயாமல் எப்படி மேலுக்குமேல் எகிரி எகிரிச் செல்லுமோ, அதுபோல் அவன் வார்த்தையும் மற்றவர்களால் மதிக்கப்பட மாட்டாது.'

"நல்லாவின் கன்றாயின் நாகும் விலபெறும்;

கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொல்லும்

புல்ஈரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்

செல்லாவாம் கூர்ந்தார் சொல்."

 

[நாகும்=இளங்கன்றும்; புலஈரப் போழ்தின்=அந்த ஈரத்தையுடைய காலத்தில்.]

4

      "தத்துவம், வேதாந்தம் முதலிய ஞான நூல்களைப் படிப்பது எதற்காக?”

      “அவைகளைப் படிப்பதால் அறிவு விருத்தியடையும்; உலகப் பொருள்களிற் சென்று கொண்டிருக்கும் புலன்கள் அடக்கம் பெறும்; அதாவது ஆசை அறும். எப்பொழுது மனிதனுக்கு உலகப் பொருள்களில் ஆசை அறுகிறதோ, அப்பொழுதே அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது வெளிச்சமாய் விடும்,”

      "அப்படி யென்றால் தத்துவம், வேதாந்தம் முதலிய அறிவு நூல்கள் பலவற்றை அப்படியே அரைத்துக் குடித்த அனேகர் உலகப் பொருள்களுக்கு அடிமைப்பட்டுக் டேக்கிறார்களே, அது ஏன்?"

      அதுதான் இயற்கைக் குணம். மனிதனுக்கு இயற்கைக்குணம் என்ன செய்தாலும் மாறாது. இந்தக் குணம் படித்தவர்களிடத்தும் சொற்பக் காரியாங்களிலிருந்து பெரிய காரியங்கள் வரை காணத்தான் செய்யும்."

      “சிலர் தங்களுடைய படிப்பின் காரணமாக கெட்ட வழக்கங்களிலிருந்து சீர்திருத்துவ தில்லையா?"

      “உண்டு; அதுவும் அவர்களுடைய இயற்கைக் குணந்தான். சொன்னால் தெரிந்து கொள்ளக்கூடிய இயற்கைக்குணம் இருந்து, அவர்கள் அறிவு நூல்களைப் படிக்கவும் செய்வார்களேயானால், உடனே அவர்கள் சீர்திருத்தம் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இயற்கைக் குணம் கெட்டதாக இருந்து, என்னதான் அறிவு நூல்களைப் படித்தபோதிலும், அவர்கள் சீர்திருத்தம் பெற மாட்டார்கள்; அவர்களுடைய இயற்கைக் குணந்தான் மூன்னுக்கு நிற்கும். உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் முதலிய சத்துப் பொருள்களைச் சேர்த்து பக்குவமாகச் சமைத்தபோதிலும் பேய்ச் சுரைக்காயில் இயற்கையாகவுள்ள கசப்பு எப்படி மாறும்? ஒருபோதும் மாறாது.”

“இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்; - தடன் கண்ணாய்!

உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்

கைப்புஅறா பேய்ச்சரையின் காய்."

 

[இடம் பட=மிகுதியாக.]

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜனவரி ௴

 



No comments:

Post a Comment