Thursday, August 27, 2020

 

உலக புராணம்

[சுவாமி விபுலாநந்தர்.]

பெருங்கதை யென்னும் நூலிலே, நமக்குக் கிடைத்திருக்கும் பகுதியின் தொடக்கத்திலே, ‘பொருள்புரி நூலும், அலகை சான்ற உலக புராணமும்' என்னும் அடிகள் காணப்படுகின்றன. உலக புராணம் - உலகத்தின் பழைய வாலாற்றினைக் கூறும் நூல் ஆசிரியர் தொல்காப்பியனார் 'தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழமை
மேற்றே' என்றுராகவின் புராணத்தினைத் 'தொன்மை' என்றல் பழந்தமிழ் வழக்காமென அறிகின்றாம். 'புராணம் பஞ்சலக்ஷணம்' – அஃதாவது - சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மந்வந்தரம், வம்சாநு சரிதம் என ஐவகை யிலக்கணத்தது புராணம் என்பது வடநூலார் கூற்று. சர்க்கம் என்பது உலகத்தின் தோற்றம்; பிரதிசர்க்கம் உயிர்த் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் குறிக்கும்; வம்சம் மன்னர் பரம்பரைனயக் கூறுவது; மந்வந்தரம் காலவரையறையிளையும் மதுக்களது ஆட்சிக் காலங்களையும் கூறுவது; வம்சாநு சரிதம் மன்னர் பரம்பரையோடு தொடர்புடைய கிளைக்கதைகளைக் கூறுவது, மத்ஸ்ய புராணம், அக்கினிபுராணம், பாகவத புராணம் என்னும் புராணங்களுள்ளே பரதக் கண்டத்தின் பழைய வரலாற்றுப் பகுதிகள் காணப்படுவ என அறிஞர் கூறுவர். தகடூர் யாத்திரை யென்னும் தமிழ்த் தொன்மைநூல் நமக்குச் கிடைத்திலது.

தமிழரது பழைய வரலாற்றினைப் பற்றிய சிலச் சில முடிபுகள் தொல்சாப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியருரை, இறையனாரகப் பொருள் நக்கீரனாருரை,
சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரை யென்னும் இவை தம்முள்ளே காணப்படுகின்றன. இம் முடிபுகள் வாலாற்று நூலாசிரியர்
(Historians) ஆராய்ந்து கண்ட சரித்திர முடிபுகளோடு ஒரு புடை ஒத்திருக்கின்றன வாதலின், உரை நூன் முடிவுகள் வெறுங் கதைகளல்லவென்
பது துணியப்படுகின்றது.

பாண்டிய மன்னர் தமிழ் வளர்த்த முச்சங்கங்களின் வரலாறு இறையனாரகப் பொருளுரையினுள்ளே கூறப்பட்டது. ‘சங்கம்' என்பது பிற் காலத்துச் சொல். 'கூடல்' என்னும் பழந்தமிழ்ச் சொல் இப் பொருளிளது; இது மதுரைமா நகரின் பெயர்களுள் ஒன்று. தலைச்சங்கத்துப் பெரியோர் இருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப.

'வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி'


எனச் சிலப்பதிகாரம் கூறுதலின், குமரியாற்றினுக்குத் தெற்கே பஃறுளி எனப் பெயரிய ஆறு இருந்த உண்மை பெறப்படுகின்றது.

'முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே'

என்னும் புறப்பாட்டுக் கடல்கோளுக்கு முன்னிருந்த தலைச்சங்கத்துப் புலவரொருவராற் பாடப்பட்டது. கடல்கோள் வரலாற்றினை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார வேனிற்காதை யுரையினுள்ளே விரிவாகக் கூறுகின்றார். இது எப்பொழுது நிகழ்ந்தது என்பதை முதலிலே ஆராய்வாம்.

தலைச்சங்கம் நாலாயிரத்துநானூற்றுாற்பது ஆண்டும், இடைச்சங்கம் மூவாயிரத்தெழுநூறு ஆண்டும், கடைச்சங்கம் ஆயிரத்தெண்ணூற்றைம்பது ஆண்டும் நிலைபெற்றிருந்தனவென்பது உரை நூன் முடிபு. தலைச்சங்கம் கடல்கோளினாலே அழிந்தது. கடல்கோளுக்குப் பன்னூறாண்டுகளுக்குப் பின் கபாடபுரத்திலே இடைச்சங்கம் தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும். தலைச்சங்கம் இரீஇய பாண்டியர்கள் காய்சினவழதி முதற் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர். இடைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர். கடுங்கோனுக்கும் வெண்டேர்ச்செழியனுக்கும் இடைப்பட எத்தனை மன்னர் அரசு புரிந்தனர் என யாம் அறியோம். இடைச்சங்கத்திறுதியிலும் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டது.
கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் கடைச்சங்கத்தைத் தொடங்கினான். உக்கிரப் பெருவழதி காலத்திலே கடைச்சங்கம் ஒழிந்தது. இது கிறிஸ்துவின் பிறப்பிற்கு
அணித்தான காலத்திலே நிகழ்ந்ததென எண்ண இடமுண்டு. அங்ங்ன மாதலின் தலைச்சங்கத்திறுதிக் கடல்கோள் கி. மு. 5550-ஆம் ஆண்டுக்கு முந்தியதாதல் வேண்டும்.

தமிழரது நாகரிகம் மிக மிகப் பழமை வாய்ந்தது. உலக சரித்திரத்திலே தமிழரே முதன் முதல் நாகரிக வாழ்க்கை யெய்திய சாதியாரென்பதற்கும், கடல்கடந்து சென்று தமது நாகரிகத்தைப் பலப்பல நாடுகளிலும் பரப்பினார் என்பதற்கும், வாணிகத் துறையிலும் கணித நூல் வான நூல் முதலிய ஏற்றுறைகளிலும் வல்லூரா யிருந்தாரென்பதற்கும் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இவை தம்மைச் சுருக்கமாக ஆராய்ந்து கூறுதலே 'உலக புராணம்' என்னும் இப் பொருளுரையின் நோக்கமாகும்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமய குரவரும், பம்பாய் நகர்ப் பல்கலைக் கழகத்துச் சரித்திர ஆராய்ச்சித் துறைத் தலைவரும் ஆசிய வணக்கத்துக்குரிய எச். ஹீராஸ் சுவாமியார் (Rev. Fr. H. Heras) பழந் தமிழரது வரலாற்றினைப் பெருக ஆராய்ந்து நூல்கள் வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் வெளியிட்டிருக்கின்றார். ஆரிய நாகரிக முதன்மையை எவ்வாற்றானும் நிலைநிறுத்த வேண்டுமென்னும் விருப்புடைய ஒரு சாரார் இவர்க்கு இன்னல் விளைக்க முனைந்து நிற்பது இவரது கல்வி நிறைவையும் நடுவு நிலைமையையும் தெளிவுறக் காட்டுகின்றது. இவர் ஸ்பெயின் தேசத்திற் பிறந்தவர்; துறவொழுக்க முடையவர்; ஆதலினாலே ஆரியர் பக்கமோ திராவிடர் பக்கமோ சாராது கடுகின்று உண்மை உறும் ஆற்றல் வாய்ந்தவர். சிந்து நதி தீரத்திலே முகிஞ்சதரோ என்னும் இடத்திலே பல்லாயிரம் ஆண்டுக்குக்கு முன்பு நிலைபெற்றிருந்த நாகரிகத்தைக் குறித்து இவர் கூறும் முடிபுகளில் ஒரு சிலவற்றை முதலிலே தருவாம்.

இம் முடிபுகள் கல்கத்தா நகரினின்று வெளிவரும் இந்திய நாகரீகம் (Indian Culture) என்னும் ஆராய்ச்சிப் பத்திரிகையிலே 1937-ஆம் ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தன. "முகிஞ்சதரோ விளக்கமுற்றிருந்த காலத்திலே சிந்து நாடு (இந்தியா) ஆனது மீனாடு, பறவைசாடு, மரங்கொத்தி நாடு, ஏழ்நாடு எனும் நாற்பெரும் பிரிவினதாக இருந்தது. சிந்து நதியின் வலப் புறத்திலிருந்த மீனாட்டிலே வாழ்ந்தோரது கொடியிலே இணைமீன்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இச் நாட்டுத் தலைநகராகிய நண்டூர் என்பதே இப்பொழுது நிலத்தை யகழ்ந்து காணப்பட்ட முகிஞ்சதரோ (இறந்தோர் தரை) என்னும் இடமாகும். உடையூர், ஊரிலூர், எய்கையூர், மூணூர் (வடமொழியாளர் கூறும் திரிபுரம்) என்னும் நகர்களும் மீனாட்டிலிருந்தன. மரங்கொத்தி நாடு பனிபடர்ந்த மலைநாட்டி லிருந்தது. இங்கு
வாழ்ந்தோர் சிவலிங்கத்தையும் மூவிலைவேலையும் வழிபட்ட வேலாளிர் ஆவர்." (பிற்காலத்திலே 'வேளிர்', எனவும் 'வேளாளர்' எனவும் வழங்கப்பட்டோர் இவரென எண்ண இடமுண்டு.)

முகிஞ்சதரோவிலிருந்த பழைய மக்கள் மிதுன ராசியினை 'யாழ்' என்னும் பழந்தமிழ்ப் பெயரினாலே வழங்கினார்களென்றும், 'யாழ்' உருவத்தினாலே குறியிட்டார்களென்றும் ஹீராஸ் சுவாமியார் மற்றோரிடத்திலே குறிப்பிட்டிருக்கின்றார் இப் பழைய மக்கள் இசை நூலிலும் வான நூலிலும் அறிவு பெற்றிருந்தமையை இது காட்டுகின்றது. முதிஞ்சதரோ நாகரிகம் பழந்தமிழ் நாகரிகத்தோடும் யூபிறற்றஸ் - ரைகிறிஸ் நதிக்கரையிலே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் விளங்கிய சுமேரிய நாகரிகத்தோடும் தொடர்புடையது என்பது அறிஞர் கருத்து. சுமேரியர் தமிழர் வழிவந்தவர்களே என்பதற்குப் பல சான்றுகள் உள.

பிரித்தானியப் பழம்பொருட் காட்சிச்சாலையிலே (British Museum)
எகிப்திய ஆசரேயப் பகுதிக்கு உதவித் தலைவராகிய எச். ஆர். ஹால் (H. R. Hall) என்னும் பேரறிஞர் தாம் எழுதிய புராதன சரித்திர நூலிலே (The Ancient History of the Near East) பின்வருமாறு கூறுகிறார். ''சுமேரியரது உருவச் சாயல் அவர்களது ஓவியங்களிலே தெளிவாகப் புலப்படுகிறது. அது அவர்கள் நாட்டிற்கு அணித்தாக வாழ்ந்த செமித்திய குலத்தார் ஆரிய குலத்தாரின் உருவச் சாயலினின்றும் வேறுபட்டது. அவர்களது மொழியும் மேற்குறித்த இரு சாராரின் மொழிகளினின்றும் வேறுபட்டது. இக்காலத்து இந்தியனின் உருவச் சாயல் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பு வாழ்ந்த திராவிட முன்னோரின் உருவச்சாயலை நிகர்த்தது. இக்காலத்து கிரேக்கர் இத்தாலியரின் உருவச்சாயல் ஆரியர் வருகைக்கு முன் அக்காடுகளில் வாழ்ந்த முன்னோரின் உருவச்சாயலை நிகர்த்திருப்பது போல் இந்தியாவிலும் திராவிட உருவச்சாயலே நிலைபெற்று நின்றது. ஆரியகுல உருவச்சாயல் மிக முந்தியே அழிந்துபோயிற்று. பழைய சுமேரியர் திராவிட குலத்தாரென்பது சுமேரிய உருவங்களைக் கூர்ந்து நோக்குவாருக்கு இனிது புலப்படும். திராவிட மொழிகளை இக்காலத்திலும் வழங்கும் தென்னிந்தியனின் உருவத் தோற்றமே பழைய சுமேரியனின் உருவத்தோற்றம். பழைய சுமேரியர் இந்தியாவிலிருந்து கரை வழியாகவும் பாரசீகக்கடல் வழியாகவும் சுமேரு நாட்டிற் குடியேறினார்களென்று எண்ண இடமுண்டு. இவர்கள் குடியேறிய புது நாட்டிற்குக் கொண்டு வந்த நாகரிகம் சிந்து நதிக்கரையிலே வளர்ச்சி யெய்தியிருக்கலாம். சித்திரங்களை எழுத்தாக வழங்கிய முறையினின்று செப்பமெய்திய இவர்களது எழுத்து முறை பின்னாளிலே பிலோனியத்திலே சதுர முனை யெழுத்தாணிகளாலே பசுமண் வட்டிகைகளிலே எழுதப்பட்டு ('cuneiform') என்னும் ஆப்பு வடிவ எழுத்துக்களாக உருத் திரிந்தது இவர்கள் சிந்து நதிக்கரையி லிருந்து சுமேரு காட்டிற்கு வரும் வழியிலே ஏலம்' (Elam)
எனனும் நாட்டிலே தமது நாகரிகத்தைப் பாப்பினார்கள்.''

சிந்து நதிக்கரையிலிருந்த மீனாட்டு நண்டூராகிய முகிஞ்சதரோவின் வரலாற்றையும் பழைய சுமேரிய வரலாற்றினையும், 'குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி' என்னும் சிலப்பதிகாரக் கற்றையும் நாம் படிக்கும்போது தலைச்சங்கத் திறுதிக் கடல்கோளின் பின் பாண்டியனது ஆட்சியிலிருந்த தமிழ் மக்களுள் ஒரு பகுதியார் கடல் கடந்து பாரசீகக் கடல் வழியாகச் சென்று யூபிராற்றஸ்-ரைகிறிஸ் நதிக்கரையிலிருந்த காட்டிற் குடியேறி அதற்குச் சுமேரியா என்னும் பெயரிட்டு வழங்கினார்கள் ரென்பதும், மற்றொரு பகுதியார். 'வடிதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு, சிந்து நதிக்கரையிலே தாம் குடியேறிய நாட்டிற்கு மீனாடு எனப் பெயரிட்டு இணைக்கயல் பொறித்த கொடிபையுடையராய் வாழ்ந்தாரென்பதும் புலனாகின்றன. இங்கு உறைந்து சில காலத்தின் பின் கரை வழியாகவும் சுமேரியாவிற்குச் சென்றிருக்கலாம்.

சாலதேய நாட்டுச் சரிதம் (Story of Chaldea) முதலிய பல நூல்களை யியற்றிய றகொசின் (Ragozin) என்னும் போறிஞர் தாம் இயற்றிய வேதகாலத்து இந்தியா (Vedic India) என்னும் நூலிலே பின்வருமாறு கூறுகிறார். "செமித்தியர் வருகையின் முன் பழைய பாபிலோனியத்தில் வாழ்ந்த சுமேரிய-அக்கதியருக்கும் இந்தியாவின் வடமேற்குப் பாகங்களிலே வாழ்ந்த திராவிட மக்களுக்கு மிடையேயுள்ள தொடர்பு சிறப்பு வகையானது. இரு சாராரும் ஒரே குலத்தினர். இக்குலத்தைத் தூரானிய குலம் என்னலாம். அக்கதியநாட்டுத் தெல்லோ நகரத்திலே கண்டெடுக்கப்பட்டதும் கி. மு. நாலாயிரம் என்னும் ஆண்டிற்கு உரியதுமாகிய சிலைத்தலையானது தலைப்பாகையணிந்த திராவிட உருவத் தலையினது தோற்ற முடையது” “சாலதேயப் பழைய நகராகிய ஊர் என்னுமிடத்திலே கி. மு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஒரு மனையினுள்ளே தென்னிந்தியத்
தேக்கமரத்துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது." தென்னிந்தியாவுக்கும் சாலதேயத்திற்கும் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளின் முன்னே வாணிகத் தொடர்பிருந்த தென்பதற்கு இது சான்றாகும்.

இருக்குவேத இந்தியா (Rig-Vedic India) என்னும் நூலாசிரியராகிய அவிநாஸ் சந்திரதாஸ் (Abinash Chandra Das) 'சோழதேயம்' என்னும் மொழிச்சிதைவே 'சாலதேயம்' (Chaldea) என்றும், அச் நாட்டிற் சோழகுலத்தார் குடியேறியது. இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளின் முன்னாதல் வேண்டுமென்றும் பல காரணங் காட்டி விளக்குகிறார். சால
தேய நாட்டுத் தலைநகர் ஊர் என்னும் பெயரினது. சாலதேயத்தார் வானநூலிலே மிகத் தேர்ச்சியுடையவராயிருந்தார். சீரியஸ் விண்மீன் (Sirius). * சூரியனோடு ஒருங்கு உதிப்பது ஆயிரத்து நானூற்றெண்பது ஆண்டுக்கு ஒரு முறையாகும் என அறிந்து அக்கால வெல்லையினை ஒரு சோதிவட்டம்
(Sothic Cycle) என வழங்கினார். அவர் கொண்ட ஆண்டு முந்நூற்றறுபது நாட்களை யுடையது. 365¼ நாள் கொண்டது ஓராண்டு எனக்
கொள்ளுமிடத்துச் சோதிவட்டம் ஆயிரத்துநானூற்றறுபது ஆண்டாகும்.

* இவ்விண்மீனின் தமிழ்ப்பெயர் 'மிருகவியாதர்' ஆமெனத் திருக்கணித சோதிடர் பிரமஸ்ரீ சி. சுப்பிரமணிய ஐயர் ஈழகேசரியிற் குறிப்பிடுகிறார்.

சோதிவட்டத்தினாற் காலத்தைக் கணித்தறியும் முறையானது தமிழர்
வேற்றுகாட்டிற் குடியேறுதற்கு முன்னே அவர் தம்மால் அறியப்பட்டிருந்ததென்பதற்குச் சங்கமிருந்த காலவெல்லைகளே சான்று பகருகின்றன. தலைச் சங்ககாலம் மூன்று சோதிவட்டம் (3x 1480=4440), இடைச்சங்ககாலம் இரண்டரைச் சோதிவட்டம் (2½x1480=3700), கடைச்சங்ககாலம் ஒன்றேகாற் சோதிவட்டம் (1¼x1480=1850). சீரியஸ் விண்மீன் சூரியனோடு ஒருங்கு உதித்தகாளிலே கடல்கோளினாலே தலைச்சங்கம் அழிந்ததெனக் கொளின், அடுத்துச் சீரியஸ் விண்மீன் சூரியனோடு ஒருங்குதித்த நாளிலே கபாடபுரத்திலிருந்த பாண்டியமன்னர் இடைச்சங்கத்தைத் தொடங்கினார்ளெனக் கொள்வது பொருத்தமுடைத்து. அவ்வாறு கொள்ளுமிடத்துக் கடுங்கோனுக்கும் வெண்டேர்ச் செழியனுக்கும் இடைவிட்ட காலம் 1480 ஆண்டு ஆதல்வேண்டும். இதனுடன் 5550 கூட்ட 7050 ஆகும். ஆதலினாலே தலைச் சங்கத் திறுதிக்கடல்கோள் கி. மு. 7000 ஆண்டு வரையிலே நிகழ்ந்திருக்கவேண்டும் எனக் கொள்ளலாம்.

சதபதப்பிராம்மணம் என்னும் வடமொழி நூலிலே குறிக்கப்பட்ட மந்வந்தரச் சலப்பிரளயம் கி.மு. 7500க்குப் பிந்தியதாமென அவிநாஸ் சந்திரதாஸ் இருக்குவேத இந்தியா என்னும் நூலிலே காட்டுகின்றார். ஆதலினாலே தலைச்சங்கத் திறுதிக்கடல் கோளும் மந்வந்தரச் சலப்பிரளயமும் ஒரே நிகழ்ச்சியே யாம் என்பது தெளிவாகின்றது. தெற்கே நிலம் கடலில் அமிழ்ந்தது; விந்தியத்திற்கு வடக்கே யிருந்த ராஜபுத்தரனாக் கடல் வற்றியது.

மத்ஸ்ய புராணத்திலே சலப்பிரளய வரலாறு பின்வருமாறு கூறப் படுகிறதென றகொசின் தமது நூலிலே காட்டுகிறார். "சத்தியவிரதன் என்னும் திராவிடமன்னன் மலயத்தில் (மலையாளத்தில்) ஓடுகின்ற ‘கிருதமாலா' என்னும் நதிக்கரையிலே தன் முன்னோர்க்கு நீர்க்கடன் செய்யும் பொழுது அவன் கைத்தலத்திலே ஒரு சிறுமீன் அகப்பட்டது. மன்னன் காவற்கடவுளாகிய மாயோனை வழிபடுவோன். அக்கடவுடே சிறுமீன் வடிவாக அவன் கையைச் சேர்ந்தார். சலப்பெருக்கிலே உலகம் அழியப்போகிறதென்றும் நீதிமானாகிய அம்மன்னன் ஒரு நாவாயினை அமைத்து அதனுள்ளிருப்பின் தான் அவனைக் காப்பதாகவும் சிறுமீன் கூறிற்று. மன்னன் மீனைக்
காத்து வர அது மிகப் பெரிதாக வளர்ந்து கடலினை யடைந்தது. பின்பு சலப்பெருக்கு சேருதலும் மீன் தோன்றி மன்னது நாவாயை இழுத்துச் சென்று இமயமலையிலே நௌபந்தனம் என்னும் சிகரத்தை வடைந்தது. இச்சத்தியவிரதன் மறுபிறப்பிலே வைவச்சுதன் மகனான மதுவானான்." இது மத்ஸ்ய புராணத்துக் கூற்று.

மதுவரசன் சோழகுலத்துமன்னன் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. சத்தியந்தவறாத நீர்மை இக் குலத்தாருக்கு இயல்பாக அமைந்த தென்பதைச் சிபி, மநுநீதிகண்ட சோழன் என்றின்னோர் வரலாற்றினால் அறிகின்றோம். இக் குலத்துமன்னன் சத்தியவிரதன் என்னும் சிறப்புப் பெயரையும் மநு என்னும் இயற்பெயரையும் உடையவனாக இருக்கவேண்டும்; இவன் கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தவனாக வேண்டும்.

கடல்கோளாயெ சலப்பிரளயக் கதை தென்னாட்டிலிருந்து வடாட்டிற்குச் சென்றது. அஃதன்றியும் சுமேரிய நாட்டிற் குடியேறிய தமிழரோடு யூபிறாற்றஸ்-ரைகிறிஸ் நதிக்கரைக்குச் சென்றது. அந்நாட்டிலே முன்னானில் வாழ்ந்த பெரோசஸ் (Berossos) என்னும் ஆசிரியர் இச் செய்தியை விரிவாகக் கூறி யிருக்கின்றார். நாம் முன்னே குறிப்பிட்ட எச். ஆர். ஹால் (H.R. Hall) என்னும் பேரறிஞர் தம் நூலிலே இதைக் குறித்து கூறியிருப்பதனை மொழிபெயர்த்துத் தருவாம். அதன்முன் தொகாப்பிய வரையிலே ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிய குறிப்பொன்றினை உளங்கொள்ளுதல் இன்றியமையாத தாகும். நிலந்தரு திருவின் நெடியோனாகிய பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருக்தானாதலின், அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவு மிக்கருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப' என் றலின் தமிழ் மன்னனது அவைக் களத்தாரின்
அறிவு மிகுதி தெளிவாகின்றது. கடல்கோளின் முன்னிருந்த இம்மன்னன் இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானென்பது நமக்கு வியப்பைத் தருகின்றது. சுமேரிய சரித்திரத்திலும் சலப்பிரளயத்திற்கு முன் இருந்த மன்னர் எண்மருள் ஒவ்வொருவரும் 18,600 முதல் 43,200 வரையு முள்ள எல்லையினவாகிய ஆண்டுகள் வீற்றிருந்தார்கள் என்னும் செய்தி அகப்படுகின்றது. இரு வரலாற்றுக்கும் தொடர்புண்மை இதனாலும் புலப்படுகின்றது.

கிறிஸ்தவ சமய நூலாகிய விவிலிய நூல் ஆதியாகமத்திலே மனிதவர்க்கத்தாரின் ஆதித்தந்தை தாயராகிய அத்தன் (Adam, அவ்வை (Eve) என்னும் இருவரையும் ஆண்டவன் படைத்த வரலாறும், இவரது சந்ததியாரது வரன்முறையும், அச்சந்ததியாருள்ளே நீதிமானாக விளங்கிய நோ (நூகு, நோவா, Noah) வின் வரலாறும், சலப்பிரளய வரலாறும், நோவும் அவன் புதல்வராகிய செம், ஹாம், ஜாபெத்து என்னும் மூவரும் குடும்பத்தாரும் சலப்பிராயத்திலே மாண்டு போகாது காக்கப்பட்ட வரலாறும் பிறவும் கூறப்பட்டன. பெரியோனாகிய நோ என்னும் பொருளினதாகிய மாநோ என்னும் பெயர் மநு என்பதை 'ஒத்திருத்தலை நோக்குக. சலப்பிரளய வரலாற்றினை எபிரேயர் பாபிலோனியரிடமிருந்து பெற்றார்களென்பது அறிஞர் கருத்து.

எச். ஆர். ஹால் கூறுவது வருமாறு: -"பழைய பாபிலோனியத்திலே தெய்வ மன்னர் பரம்பரையொன்று மிக மிக நீண்டகாலம் அரசியற்றிநிய மன்னர்களையுடையதா யிருந்ததெனப் பாபிலோனிய புராணக் கதைகள் உரன்றன. இத்தகைய வாலாறு எகிப்து நாட்டிலும் உண்டு. இம்மன்னர் பலரது பெயர்கள் பேரோசஸ் எழுதிய சரித்திரத்தில் நமக்குக் கிடைத்த பாகங்களிற் காணப்படுகின்றன. இப் பரம்பரையிலே முதலிற்
றோன்றிய அலோரஸ்
(Aloros) என்னும் மன்னன் 36,000 ஆண்டு அரசு புரிந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இவன் வழி தோன்றிய கீசுத்திரோல் (Xisuthros) என்பான் காலத்திலே சலப்பிரளயம் நிகழ்ந்தது. ஒரு பாதி மனித வடிவமும் ஒரு பாதி மீன் வடிவமுமாகிய உவண்ணஸ் (Oannes) பாரசேர் கடலினின்று புறப்பட்டு மனிதருக்கு எழுத்து முறையையும் நாகரிக வாழ்க்கையையும் கற்பித்தார். கிசுத்திரோஸ் கசிசத்திரன் (Khasisadra) ஆக இருக்கலாம். இவன் காலத்திலே சித்தபிஸ்தீன் (SitNaphisthin) என்பான் பேழையுட் புகுந்து சலப்பிரளயத்தைக் குறித்துப் பெரோசஸ் சொல்லும் வாலாறு எபிரேயர் வழிவர்த தல்ல. அவர் தமது முன்னோர் வழிவந்த கர்ண பரம்பரைக் கதையையே எழுதுகிறார். எபிரேயர்
வரலாறு இதனினின்றும் எடுக்கப்பட்டது." கிசுத்திரோஸ், கசிசத்திரன் என்பவற்றிற்கும் சத்தியவிரதனுக்குமுள்ள ஒலியொற்றுமையை நோக்குக.

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் நியூ ரிவியூ (New Review) 1941 ஸெம்டம்பர்ப் பகுதியிலே வண. ஹீராஸ் சுவாமியார் இந்தியாவிலும் ஸ்பெயின் தேசத்திலும் தாம் செய்த பரந்த ஆராய்ச்சியின் முடிபாகக் கிடைத்த உண்மைகளைத் தெளிவுபெற எழுதுகின்றார். 'Oannes' என்னும் பெயரை 'Uvanna' எனத் தருகின்றார். இது காவற் கடவுளின் பெயராசிய ‘உவணன்' ஆக இருக்கலாம். மற்றொரு தலைவன் பெயரினை
‘Odakon' எனத் தருகிறார், இது தமிழ், ‘ஓதக்கோன்' என்பதற்கு ஐயமில்லை. ஹீராஸ் சுவாமியார் கூறுவது: "எனது ஆராய்ச்சியிலே கண்ணுற்ற வற்றினைக் கூறுகிறேன். பழைய திராவிட மக்கள் இந்தியாவினின்றும் புறம்போந்து குருகூர்களிலே (அந்நிய நாடுகளிலே) சிறப்பாகச் சுமேரியா நாட்டிலே குடியேறுகிறார்கள். பெரோசஸ் கூறியிருப்பது போல, உவணனும், ஓதக்கோனும் தலைவர்களாக இம்மக்களை அழைத்துச் செல்கின்றனர். இந்தியாவிலே முகிஞ்சதரோவிலும் பிறநகரங்களிலும் இவர்கள் செங்கல்லினாலே வீடுகள் கட்டியது போலச் சுமேரியாவிலும் கட்டுகிறார்கள். இச்செய்தி ஆதியாகமத்திலே குறிப்பிடப்பட் டிருக்கிறது. அங்கிருந்து இவர்கள் சீரியா நாட்டிற்குச் சென்று ஹித்திய (Hittite) மன்னர் பரம்பரைக்கு அடிகோலுகிறார்கள். பின்பு மத்தித்தரைக் கடலோரத்திலே குடியேறிப் பாணிகள்' என்றும் பின்னாளிலே 'பினீசியர்' (Phoenicians) என்றும்
வழங்கப்பட்ட குலத்தினராய்ப் பழங்காலத்திலே பெருஞ் சிறப்போடு விளங்சிய வாணிகத் தொழிலை நடத்துகிறார்கள். பின்பு கிரேக்க இத்தாலிய காடுகளிலும் அணித்தான நீடிகளிலும் குடியேறி மீனவர் (Minoans) எத்துருஸ்கள்
(Etruscans) என்றும் பெயரோடு வாழுகிருர்கள்."

"இஃதிவ்வாமுகத் திராவிட குலத்தின் மற்றொரு பகுதியார் அராபி நாட்டின் தென் திசையதாகிய யேமன் (Yemen) நாட்டிலே குடியேறி அக்காட்டுக்குப் பண்டு எனப் பெயரிட்டு வாழ்ந்து அங்கிருந்து நீலாதிக் கரையிலுள்ள நாட்டினை யடைந்து எகிப்தியர் என்னும் பெயரோடு சிறந்த நாகரிகத்தைத் தோற்றுவிக்கிறார்கள். பின்பு ஆபிரிக்காவின் வடபக்கத்திலே நுமீதியர் (Numidians), பேர்பெரியர் (Bereberians) என்னும் பெயரோடு வாழ்ந்து பின்னர் ஸ்பெயின் தேச ஐபீரிய குடாநாட்டை யடைந்து வாழ்கின்றனர். உரோமர் இவர்களை இந்நாட்டிற் கண்டு ஐபீரியர் (Iberians) என்னும் பெயரினால் வழங்குகின்றனர். பின்பு பிரித்தானியத் தீவுகளை யடைந்து (திராவிடச் சிதைவாகிய) துருவிதர் (Druids) என்னும் பெயரோடு வாழ்கின்றனர்.'' பேரறிஞராகிய ஹீராஸ் சுவாமியார் ஒவ்வொரு
கூற்றுக்கும் தக்க ஆதாரம் காட்டுகின்றார். அவற்றை யெல்லாம் குறித்த நியூ ரீவியூ வெளியீட்டிலே காணலாம்.

மேலே நாம் திராவிடர் என்று வழங்கிய குலத்தினைத் தமிழர் என்றே சொல்லலாம். கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளும் அவற்றை வழங்கும் மக்களும் தமிழிலும் தமிழரிலும் இருந்து தோன்றிய காரணத்தினாலே பண்டைச் சரித்திரத்திலே திராவிடமென்பது தமிழையேயாம். ஆரியர் வருமுன் இந்தியா முழுவதிலும் பரவியிருந்தவர் தமிழரே. பலுச்சிஸ்தானத்தின் தெற்கே தமிழின் கிளை மொழியாகிய பிராதவி (Brahui) இன்றும் நிலைத்திருக்கிறது. பாரசீகத்தின் தென்பாகம் மெசொப்பொட்டேமியா, அராபியா, சீரியா, எகிப்து, ஆபிரிக்காவின் வடபாகம், கிரேத்த,
(Crete) தீவு, கிரேக்காடு (யவனபுரம்), இத்தாலிய நாடு (உரோமாபுரம்), ஸ்பெயின் பாடு, பிரித்தானியா என்று இன்னன வாகிய நாடுகளிலெல்லாம் பழந்தமிழர் குடியேறி நாகரிகத்தைப் பரப்பினார்கள். காடு கெடுத்து நாடாக்கலும், குளந்தொட்டு வளம் பெருக்கலும் தொன்றுதொட்டுத் தமிழருக்கு இயல்பாகிய செயல்கள். செங்கற் கட்டிடங்களை முதலிலே தமிழரே கட்டினார்கள். கடலோடும் கப்பல்களை முதலிலே யமைத்தார்கள். கணித, வான நூல், இசை நூல் என்னு மிவற்றிலே விசேஷத் திறமை
படைத்திருந்தார்கள்.

தமிழர் வழிவந்த எகிப்தியர்களும் ஆயிரத்து நானுற்றெண்பது ஆண்டு கொண்ட சோதிவட்ட அளவினாலே காலவரையறை செய்தார்கள். இற்றைக்கு ஐந்து சோதி வட்டத்திற்கு முன்னே உலகமிருந்த நிலையை நோக்குவமாயின், நாம் மேலே குறித்த இடங்களி லெல்லாம் தமிழ்க்குடிகள் வாழக் காண்போம். சீனத்திலே மஞ்சள் நிற மங்கோலிய மக்கள் வாழக் காண்போம். ஆபிரிக்காவின் நடுப்பாகத்திலும் தென்பாகத்திலும் இந்தியாவிற் சில இடங்களிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் பழைய லெமூரியாவிலிருந்து பரந்த கருமைநிற நீகிரோவர் வாழக் காண்போம். அமெரிக்காவிலே செய்கிற மக்கள் வாழக் காண்போம். பாலஸ்தீனத்திலும் அடுத்த நாடுகளிலும் செமித்திய குலமக்கள் வாழக் காண்போம். பாரசீகத்திலும் மத்திய ஆசியாவிலும் மத்ய ஐரோப்பாவிலும் வடதுருவத்துக்கு அணித்தான நாடுகளிலும் வெள்ளை நிறமும் நீலக்கண்ணும் செம்பட்டை மயிருமுடைய ஆரியமக்கள் வாழக் காண்போம்.

ஆரிய குலத்தவராகிய யவனர் கிரேக்க நாட்டைக் கைப்பற்றுமுன் அங்கு வாழ்ந்த திராவிட குல மீனவர் (Minoans) கிரேத்தத் தீவிலே (Crete) அமைத்த கட்டிடங்களும் சிலைகளும் மிகச் சிறந்தவை. இவை யெல்லாம் அண்மையிலே நிலத்தினை யகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. எகிப்து நாட்டிலும் மெசொப்பொட்டேமியாவிலும் முகிஞ்சதரோவிலும் அகழ்ந்து கண்ட பழம்பொருள்களின் ஆராய்ச்சிகளைக் குறித்துச் சிறந்த வரலாற்று நூல்கள் ஆங்கில மொழியிலே வெளிவந்திருக்கின்றன. முகஞ்சதரோவினைக் குறித்து அண்மையிலே ஒரு தமிழ் நூல் வெளிவந்திருப்பதை யறிந்து பெருமகிழ்வடைகின்றேன். இன்னும் பல வரலாற்று நூல்கள் தமிழ்மொழியிலே தோன்றவேண்டும். தமிழ்மக்கள் அவை தம்மைச் சிந்தனையோடு படிக்கவேண்டும்.

பிரித்தானிய சங்கம் (British Association) என்னும் ஆராய்ச்சிக் கழகத் தலைவராகிய ஸர் ஜான் எவன்ஸ் (Sir John Evans) என்னும் பெரியார் தமது தலைமையுரையிலே பின் வருமாறு கூறுகிறார். “மனித சாதியாரின் தொட்டில் தென்னிந்தியாவாக இருக்கலாம். வடதிசை மக்களின் முன்னோரும் மத்தித்தரைக் கடற்கரையிலுள்ள காடுகளில் வாழ்ந்த மக்களின் முன்னோரும் முதலிலே இருந்து சென்ற இடம் தென்னிந்தியாவாக இருக்கலாமென்று ஆராய்ச்சித்துறைகள் காட்டுகின்றன.” இள மாணவர்க்குக் கல்வி பயிற்றும் போதகாசிரியர்கள் தமிழ்க்குலத்தாரின் பழமையையும் செழுமையையும் ஆராய்ந்துணர்ந்து மாணவர்க்கு அறிவுறுத்துவார்களாக.

சோதிவட்டத்தைப் பற்றிய குறிப்பு: - பழைய எகிப்தியர் முப்பது நாட் கொண்ட பன்னிரண்டு மாதங்களை ஓர் ஆண்டாகக் கொண்டனர். பின்பு ஐந்து நாட்களை ஒரு மாதத்திலுஞ் சேராத மேலதிக நாட்களாகக் கூட்டிக் கொண்டனர். 365¼ நாள் ஓர் ஆண்டாமாதலின், ஆண்டுத் தொடக்கத்திலே சூரியோதயத்தின் முன்னே கீழ்த்திசையிலே தோன்றிய ஒளிபொருந்திய விண்மீனொன்று நான்கு ஆண்டுகளின் பின் ஒருநாள் பிந்தித் தோன்றியது. இவ் விண்மீனை எகிப்தியர் ‘சோதி' யென்றனர். மேனாட்டார் 'சீரியஸ்' என்றனர். இந்தியவான நூலில் இது 'மிருகவியாதர்' என வழங்கப்பட்டதென அறிகின்றாம். இவ்விண் மீன் ஒவ்வொரு நான்காண்டிக்கும் ஒருநாள் தள்ளித் தோன்றும். 1460 ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும் ஆண்டுப் பிறவிலே தோன்றும். இக்காலவெல்லையினைப் பழைய எகிப்தியர் ஒரு சோதிவட்டமெனக் கொண்டனர். 1460x365¼ = 1461+365 ஆதலின் 1460 ஆண்டில் ஓராண்டு அதிகப்படலாயிற்று. கி. பி. 139-ல் ஒருசோதிவட்டம் தொடங்கியது. ஆதலால் முன்னுள்ள சோதிவட்டங்களின் தொடக்கம் கி.மு. 1321, 2781, 4241, 5701 ஆவன. கி.மு. ஐயாயிரத்தெழுநூற்றொலறிலாவது, நாலாயிரத் திருநூற்றுாற்பத் தொன்றிலாவது
எகிப்தியர் இந்தக் கணக்கைத் தொடங்கி யிருக்கவேண்டும்.

1460x5=20x365 ஆதலின் பழந்தமிழர் ஆண்டு 360 நாளாக வைத்து 20 ஆண்டினைச் சேர்த்துச் சோதிவட்டத்தை 1480 ஆண்டாக்கினர். 20 ஆண்டில் எஞ்சிநின்ற 100 நாட்களையும் முன்பு மீந்துகின்ற ஓராண்டினையும் எண்ணவில்லை. ட்ட்1480 ஆண்டு கொண்ட காலவெல்லையினைக் கருவியாகக் கொண்ட மூன்று சங்கங்களு மிருந்த காலம் நிச்சயிக்கப்பட்டது. பழைய எகிப்திய சரித்திரத்திலும் சோதிவட்டம் கருவியாகவே
காலவெல்லை கணிக்கப்பட்டது.

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment