Thursday, August 27, 2020

 

உலக அமைப்பின் விநோதம்

 

"இருவே றுலகத் தியற்கை திருவேறு
 தெள்ளிய ராதலும் வேறு "


என்னும் பொதுமறையின் முதுமொழியை நாம் சிறிது சிந்திப்போமானால் உலகத்தின் அமைப்பு நமக்கு வியப்பைத் தராமற் போகாது. ஒருவர் தனவந்தராதலும் மற்றொருவர் அறிவாளராதலும் உலகத்தின்கண் அவரவர் செய்த வினைப்பயனால் ஏற்படும் இயற்கையைச் சார்ந்தவையா யிருக்கின்றன.

 

ஆனால் பொருளைச் சம்பாதித்தலும், பாதுகாத்தலும், பயன்படச் செய்தலும் அறிவாளர்க்கே சாத்தியமானவை. ஆயினும் பெரும்பான்மையும் அறிவாளர் வறிஞராயும், அஃதில்லாதார் செல்வராயும் இப்பிரபஞ்சத்திற் காணப்படுவது விநோதமாகவே யிருக்கின்றது. இதனால் அறிவாளராவதற்குரிய ஊழ் செல்வராதற்கும், செல்வராவதற்குரிய ஊழ் அறிவாளராதற்கும் பெரிதும் பொருந்துவதின்மை வெள்ளிடை மலையாம். ஆகவே இம்முறையால் மக்களுக்கு உயர்வு தாழ்வு என்னும் வித்தியாசப் படிகள் தலையெடுக்கின்றன.

 

பொதுவகையில், மக்களனைவரும் ஒத்த நிலையினரென்பது நமக்குடன்பாடே. அங்ஙனமிருந்தும், உலக அமைப்பானது ஒழுங்குடன் நடைபெற வேண்டியே மக்களுக்கு உயர்வு தாழ்வுகளையுண்டாக்கும் வினைப்பயன் துணைக் காரணமாகின்றது. இன்றேல், உலகத்திற்கும் உயிரில்லாத பொருட்காட்சிச் சாலைக்கும் வேறுபாடேது? எல்லோரும் ஒரே அந்தஸ்தினராய் விடின் உலகவியல் ஒழுங்குபெறக் கூடுமோ? அனைவரும் சிவிகையேறின் சுமப்பவனின்றி அச்சிவிகை எவ்வாறு செல்லும்? இத்யாதி காரணங்களை முன்னிட்டே நமது முன்னோர் சமத்துவத்திற்குரிய மக்களிற் சிலரைத் தனிப்படுத்தி, வேதாகம முதலிய சாஸ்திராராய்ச்சியி லமர்த்தி, உலகத்தில் நேரக்கூடிய சுபாசுப விஷயங்களை நமக்கப்போதைக் கப்போது அறிவிக்கவும் அவற்றிற்கான பரிகார முதலிய உபகரணங்களைச் செய்துவரவும் வைத்தனர். இவ்வேலையி லமர்ந்த இவர்களின் சீவனோபாயத்தை ஏனையோர் கவனித்துவரலாயினர். இந்த வகுப்பினர்க்குப் பிராமணரென்னும் பெயர் இடப்பட்டது.

 

இவ்வண்ணமே உலக பாதுகாப்பின் பொருட்டுச் சிலரைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு க்ஷத்திரியரென்றும், உண்ண உடுக்க வேண்டியவற்றைக் கவனிக்க வேறுசிலரைப் பிரித்து அவர்களுக்கு வைசியரென்றும், இம்முத்திறத்தார்க்குங் குற்றேவல்புரிய மற்றவரை நியமித்து அவர்களுக்குச் சூத்திரரென்றும் பெயரிட்டனர். இந்த வகுப்புக்கள் நாளடைவில் பெருகி, பற்பல கிளைகளைக் கொண்டன. கொண்டபோதிலும் இவ்வித்தியாசம் உலகவொழுக்கிற்கே யன்றி மற்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் சமத்துவமும் அன்பும் பாராட்டி வரவேண்டு மென்பதே ஆன்றோரின் கருத்தாம்.

 

ஆகையால் ஒவ்வொருவரும் அழிதற்குரிய தம்தம் பூதவுடம்பின் சுயநலத்தையே சாசுவதமெனக் கருதாது என்றும் அழியா திருக்கக்கூடிய பொதுநல சம்பந்தமான புகழுடம்பின் காப்பாகிய அறத்தையே மதித்தொழுக வேண்டும். காலக் கடவுளின் முன் புலவன், பூபாலன், சமர்த்தன், வல்லமை யற்றவன், தனவந்தன், வறிஞன் ஆகிய இவர்களெல்லோரும் சமமே. ஆதலின் நிலையற்ற காயமுள்ள போதே நிலையான தருமத்தை நாம் நாடவேண்டும். ஏனெனில் அறிவுள்ள நண்பரே இதமான அமிழ்தம் போன்றவ ராவர். நிற்க,

 

"இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்" என்று தருமசாஸ்திரம் முறையிடுவதால், நாம் உயர்வடைய "தீவினைவிட் டீட்டல் பொருள்' , 'திரைகடலோடியும் திரவியந்தேடு'' என்கிறபடி நல்வழியில் பொருளீட்டி யுதவும் உபாயத்தைக் கைப்பற்ற வேண்டும்.

 

பொருளிலார்க் கின்ப மில்லை
            புண்ணிய மில்லை யென்றும்
      மருவிய கீர்த்தி யில்லை
            மைந்தரிற் பெருமை யில்லை
      கருதிய கரும மில்லை
            கதிபெற வழியு மில்லை
      பெருநிலந் தனிற்
* சஞ் சாரப்
            பிரேதமாய்த் திரிகு வாரே "
                      என்றும்,


 "அளப்பரும் விஞ்சையே யன்றி மேன்மையும்
 உளப்படு தன்மையும் உயர்ந்த சீர்த்தியும்
 கொளப்படு
கொற்றமும் பிறவுங் கூட்டலால்
 § வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே"                என்றும்,

 

"$ கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும் கடல் ஞானம்
 பித்துடைய வல்ல பிற"

 

[* நடைப்பிணம்.; வித்தை (கல்வி).; ‡ வெற்றி.; § பொருள்.; $ தனவந்தன்.]


என்றும் பொருளின் ஏற்றத்தை நூல்கள் பலவாறு புகழ்ந்து பேசுகின்றன.

 

பொருளீட்டுவது பெரிதல்ல. அப்பொருள் அநுபவித்தற்கும், பிறர்க்கிட்டுக் காட்டுவதற்கும் பயனாதற்குரிய தென்பதை யறிய வேண்டும். தானும் அநுபவியாது, பிறர்க்கும் உதவாது சேமித்த பொருள் அழியும் பொருளாம். கொள்ளுங் குணமே மிகுந்திருக்கும் ஆழமுள்ள கடல் பாதலம் வரையில் கீழ்நோக்கியே செல்லுகின்றது; கொடுக்குந் தன்மைவாய்ந்த மேகமல்லவா வானத் தின் மேற் கிளம்பிக் கர்ச்சனை செய்கிறது.

 

பேடி பெண்களைத் தொட்டுப் பார்ப்பது போல லோபி திரவியத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயனாகாதபடி சேமித்து வைக்கிறான்.

 

புருஷருக் குண்டாம் பாக்கியமும், குதிரைகள் குதூகலித்து மேற்கிளம்புவதும், மேக கர்ச்சனையும், பெண்களின் மனமும், மழை பெய்யாமையும், மழை அதிகமாய்ப் பெய்தலும் மகாதேவனுக்கே தெரியாவெனின் அவற்றை மனிதர் தெரிந்துகொள்ள வல்லரோ?

 

மாந்தரது சிநேகத் தன்மையின் அளவு ஆபத்தில்தான் அறியக்கூடும். காற்றடியாவிடின் பஞ்சுப்பொதியும் பருவதமும் வேறு பாடின்றியன்றோ விளங்கும்? ஆதலால், மித்திரர், சுற்றத்தார், சொந்தமானவராகிய இவர்களின் பேரறிவும், பெருஞ்செல்வமும் இத்தன்மையனவென்று அறிந்துகொள்ள ஆபத்தே உரை கல்ல   யிருக்கின்றது.
 

உலக அமைப்பில் அடங்கியுள்ள மேற் கூறியவை போன்ற விநோதங்களை நாம் அறிந்து, ஆத்மார்த்தமான உறுதியைக் கைப்பற்றிவாழ நமக்குப் பலவுண்மை நூல்களை வெளியிட்டருளிய பெரியோர்களின் மகிமையே மகிமை.

 

அகஸ்தியர்க்கு ஜன்மஸ்தானம் மட்குடம், பரிஜனம் விலங்குகள், ஆடை மரவுரி, வாசஸ்தலம் வனம், ஆகாரம் கந்தமூலம். இப்படியிருந்தும் அவர், கரையற்ற கருங்கடலைத் தமது உள்ளங்கையி லடக்கி யுட்கொண்டார். இதை நோக்கும்போது பெரியோர்களுக்குக் காரியசித்தி மகிமையாலன்றிக் கருவியாலன்றென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகின்றதல்லவா?

 

ஸ்ரீராமபிரான் ஜெயிக்கவேண்டியதோ இலங்கை, தாண்ட வேண்டியதோ கடல், எதிரியோ இராவணன், யுத்தகளத்தில் சகாயமோ வானரம், தானோ பாதசாரியான மனிதன். அவ்வண்ணம் இருந்தும் இராக்ஷஸகுலத்தை வேரறுத்தார். இதுவும் பெரியோரின் மகிமையை வெளிப்படுத்துகின்றது.

 

இப்படி உலக அமைப்பானது பெரியோர்களின் மகிமையால் விநோதக் காட்சியைக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் நாம் உய்த்துணர்ந்து, அருள், அடக்கம், பரோபகாரம், ஜீவகாருண் யம் முதலிய உத்தம குணங்களைப் பெற்று, எல்லோரிடத்தும் இதமாக நடந்து, இறைவன் திருவருளுக்குப் பாத்திரராய் வாழ ஜெகதீசன் கருணை பாலிப்பானாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment