Saturday, August 29, 2020

 

ஒற்றுமையி னுயர்வு

 

 இந்த இடமகன்ற பூமியில் பல பிரிவுகள் உள்ளன. இவைகளைக் கண்டங்கள் என்பர். அக்கண்டங்கள் பல தேசங்களையும், தேசங்கள் பல ஜில்லாக்களையும், ஜில்லாக்கள் பல கிராமங்களையும் கொண்டிருக்கின்றன. இப்பிரிவுகளில் மாநுடர்களும் பற்பலவிதமான பேச்சு, குணம், ஒழுக்கம் ஆகிய இவைகளையுடையவர்களாக இருக்கின்றார்கள். தொழில், நேர்மை முதலியனவும் வேறுபாடேயாம். தேவ வழிபாடு, அடியார் பக்தி, சாஸ்திர ஞானம் இவைகளால் இந்தியவாசிகள் மேம்பாடுடையவர்கள். பொன்விளை பூமி இந்தியாவே. அதில் எடுத்த காரியத்தை ஒற்றுமையாகச் செய்து முடிக்காத ஒரு குறையே பெருங்குறை. என்னை? பல சமயங்களில் நம்மவர் ஏதாவதொரு விஷயமாக கூட்டங்கூடுவது ஒன்றேயன்றிக் காரியசித்தியடையாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மாறுபாடடைவது கண்கூடு, தொடங்கும் போது ஆரம்ப சூரத்தன்மையே யன்றிப் பெருமுயற்சி வரவரக் குறைந்து போய்விடும்.'' பழகப் பழகப் பாலும் புளிக்கும்'' என்றவாறே ஒவ்வொரு காரியமும் உவர்த்து நீக்கப்படுகின்றது. இதனையறிந்தே மேலை நாட்டவர்கள் இந்தியாவில் நாட்டம் வைத்து எல்லோரையும், அடிமைகளாக்கி விட்டனர். சுதந்தரம் வேண்டும் என்று விரும்பினோரும் தம்முள்ளே பிரிவு கொண்டு பலத்தை யிழக்க நேரிட்டிருக்கிறது. பற்பல ஜாதி, பற்பல மதம், பற்பல தொழில் முதலியவை நேற்று இன்று உண்டாயிருக்கப்பட்ட வையன்று. இவைகளை இப்போது ஒன்றாக்கிவிட்டால் சுதந்தரங் கைகூடி விடுமாம்! என்ன மயக்கம் இது? இவற்றை யார் ஒன்றாக்குவது? இவை போன்ற பற்பல பேதங்கள் மேலைநாடுகளிலுமிருக்கின்றனவே! ஆங்கில பாஷா சிரோமணிகள் இவைகளை ஏன் கூர்ந்து நோக்கவில்லை? ஒற்றுமை வருதற்காகச் சமபந்தி போசனமும் வித்தியாசமற்ற கல்யாணமும் வேண்டுமா? மனப் பரிசுத்தம் ஒன்று போதாதா? போதும்; அன்றியும் இரக்கம் வேண்டும்! தன்னுயிரைப் போல மன்னுயிரைச் சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தியடிகளும் மன ஒற்றுமையைத்தான் பொது விஷயங்களில் உபயோகிக்கக் கூறுகின்றனர்.

 

"பருந்தையடித்துக் கழுகுக்கு விருந்திடுவது' போல, தற்போது வல்லமை குறைந்தோரைப் பேராற்றலுடையோர் வருத்துவதே சகசமாயிருக்கிறது! இப்படியிருந்தால் ஒற்றுமையை எந்தக் கடையில் விலை கொடுத்து வாங்குவது! வாயில்லாப் பிராணிகளானால் ஒரே வெட்டுத்தான்!

 

ஐயையோ! பாவம்!! பெரும்பாவம்!!! ஒற்றுமைக்கு எதிராக முன்னிற்பது மாச்சரியம். இது ஒரு பெரும் பாழான கெட்டவழி. இதனால் ஒற்றுமைச் சரக்கு முற்றாக விலையாகிவிட்டது. கல்வி, கேள்வி, நல்லறிவு மிகவுங் குறைந்துவிட்டன. பிறரைக் கெடுக்க வேண்டும் என்பது பலரிடத்திலும் தோன்றிவிட்டது. கடவுளைத் தியானஞ் செய்தற்குப் பதிலாக, மித்திரபேதத்தியானம் குடிகொண்டு விட்டது. பாராயணமும் அதுவே! இனிமேல் அடைய வேண்டுவன யாவை? மநுடரை மநுடர் வெட்டி வயிறு நிறையத் தட்டிக் கொள்வதுதான்! இதனை எழுதவும் மனங் கூசுமல்லவா? இந்த இழிவான நிலைமை அடியோடு மாறவேண்டும். ஜீவஹிம்சை நீங்க வேண்டும். வருணாச்சிரம தர்மங்கள் தழைக்க வேண்டும். அந்நியமதப் பிரவேசஞ்செய்தவர்களைப் பிராயச்சித்தஞ் செய்து நம்மதத்திற் சேர்த்தல் வேண்டும். ஆதிதிராவிடர் என்றவர்கள், நமது சைவாகம முறையான ஆலயங்களில் வெளியில் நின்று நந்தனார் போலப் பிரார்த்தனை செய்தல் வேண்டும். கோயில்களைக் கொலைக்களமாக்காதிருத்தல் வேண்டும். மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களினாலும் ஜீவகாருண்யத்தை வளர்க்க வேண்டும்; பொதுத் தர்மங்களில் நமது சகோதரர்களின் ஒற்றுமையும், திரவிய உதவியும் குறைவுறாது வளர்ந்து வரச்செய்தல் பெரும் நன்மையா கும். கோயில், திருமடம், கலாசாலை, பத்திரிகாபிவிருத்தி ஆகிய இவற்றிலும் ஒற்றுமை வளரவேண்டும். ஒற்றுமை பெருமைக்கு மார்க்கமாகும்.


 "எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்.''

 
 பண்டிதர், வ. மு. இரத்தி நேசுவரையர்,

 கண்டரமாணிக்கம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment