Saturday, August 29, 2020

 

ஒற்றுமைக்கு எது வழி?

 

ஆனந்தபோதினி பங்குனிமாத வெளியீட்டுத் தலையங்கத்தினிறுதியில், ஆசிரியர்'' பொய்யாமொழிப் புலவரும் - சீநக்க முதலியாரும்'' என்னும் கதையின் மூலமாக உண்மை ஒற்றுமையை விளக்கிச்,'' சிலர் அங்ஙன மின்றிப் போலித்தனமாக ஒற்றுமை காட்டுகின்றனர்'' என சந்தர்ப்பத்திற் கேற்பப் போலி ஒற்றுமை என்ற அளவில் சுருங்கக் காட்டியுள்ளார். அதுவும் மிக முக்கிய விஷயங்களி லொன்றாமாகலின் அதைப்பற்றி ஈண்டுச் சிறிது ஆராய்வாம்.

 

ஒற்றுமையின் தன்மை: - ஒற்றுமை என்பதற்கு ஒன்றுபட்டிருக்குந் தன்மை -வேற்றுமையின்றி யிருக்குந்தன்மை - ஐக்கியபாவத்தோடிருக் குந்தன்மை என்பது திரண்ட பொருளாம். கடவுள் படைப்பிலடங்கிய சகல ஜீவராசிகளுக்கும் இஃது இன்றியமையாத குணமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ந்து பார்க்குமிடத்து ஒவ்வொருவரிடத்தும், ஒவ்வொன்றினிடத்தும், இக்குணம் இயல்பாகவே அமைந்துள்ளதென்பதும், இக்குணமில்லாமல் எவ்வுயிரும் உலகத்தில் வாழமுடியா தென்பதும், உலகமும் இதனாலேயே நிலைபெற்றுள்ள தென்பதும் இனிது விளங்கும்,

 

ஒற்றுமையின் அவசியம்: - 'இரண்டுபட்ட வூரில் குரங்கும் குடி யிராது' , 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்', 'ஒற்றுமையில்லாக் குடும்பம் உருக்குலைந்து போம்' , 'ஒற்றுமையில்லாப் பட் டணம் சிறப்படையாது', ஒற்றுமையில்லாச் சமூகம் சீர்கெடும்', ஒற்றுமை யில்லா நாடு மேன்மையடையாது' ஆகலின் குடும்பமாயினும், பட்டணமாயினும், சமூகமாயினும், நாடாயினும், இவற்றைப் போன்ற வேறெதுவாயினும் ஒற்றுமையாலேயே உன்னத நிலையடைய வேண்டும். ஐக்கியபாவமுள்ள ஐரோப்பா ஒப்புயர்வற்று விளங்குவதும், அஃதில்லாத இந்திய நாடு ஏழ்மையடைந்திருப்பதும் நியாயந்தானே. இராமபிரான் காடு சென்றதும், பாரதப்போர் நிகழ்ந்ததும் குடும்பக் கலகத்தாலல்லவா?

 

ஓர் வயோதிகன் தன் பிள்ளைகளை யழைத்து ஓர் விறகுக்கட்டைக் காட்டி அதிலுள்ள விறகுகளைத் தனித்தனியாக எடுத்து உடைக்கும்படி சொல்ல அவர்கள் அவ்வாறே எடுத்து ஒவ்வொன்றையும் மிக்க இலேசாக உடைத்து விட்டார்கள். மீண்டும் அவற்றைச் சேர்த்து உடைக்கும்படியாகச் சொல்ல அது அவர்களால் முடியவில்லை. அதன்மூலமாக அவ்வயோதிகன் தன் பிள்ளைகளுக்கு ஒற்றுமையைக் காட்டினது எவ்வளவு விவேகம்.

 

'ஒரு காட்டில் நான்கு எருதுகள் வசித்து வந்தன. அவற்றைக் கொன்று தின்ன ஒரு சிங்கம் பலமுறை முயன்றும் அவைகள் ஒற்றுமையாயிருந்து எதிர்த்து வந்தமையால் முடியவில்லை. முடிவில் ஒரு நரியின் தந்திரத்தால் அவ்வெருதுகள் ஒற்றுமை யிழந்து விரோதப்பட்டன. அச்சமயம் பார்த்துச் சிங்கம் அவற்றைக் கொன்று தின்றது' என்னும் கதை
வளவு அழகானது!

 

சரீரத்திலுள்ள கை கால் முதலிய அவயவங்கள் வெவ்வேறு உருவங்களை யுடையவைகளாயும், வெவ்வேறு தொழில்களைச் செய்பவைகளாயு மிருந்தாலும், எல்லாம் ஒரு சரீரத்தைச் சேர்ந்தவைகளாய் அதற்குரிய காரியங்களை ஒற்றுமையாய்ச் செய்கின்றனவல்லவா? அப்படிச் செய்யா விட்டால் அச்சரீரத்தின் கதி யாதாம். அவ் அவயவங்களின் கதிதான் யாதாம். "ஒருகாலத்தில் எல்லா அவயவங்களும் வயிறோடு பிணங்கிக் கொண்டன. கால்கள் இந்த வயிற்றை நாங்கள் ஏன் சுமந்து கொண்டு திரி யவேண்டும். எங்களுக்கென்ன தலையெழுத்தா? என்று சும்மா இருந்து விட்டன. கைகள் நாங்கள் பாடுபட்டுக் கொடுக்க நன்றாய்த் தின்றுவிட்டு வண்ணான் சால்போலப் பருக்கின்றது இந்த வயிறு. இனி அடக்குகிறோம் அதன் கொழுப்பை என்று ஒன்றும் செய்யாமலிருந்து விட்டன. அப்படியே வாய் நான் ஒன்றையும் வாங்கி வயிற்றிற்குள் தள்ள மாட்டேன் என்றும், பற்கள் நாங்கள் ஒன்றையும் மெல்லமாட்டோம் என்றும் கூறி விட்டன. இரண்டு நாட்களாயின; வயிற்றில் ஒன்றுமில்லை. கை கால்கள் பல மற்றுச் சோர்ந்தன. கண் பார்வை இழந்தது. காதடைப்புண்டது. எல்லா அவயவங்களும் வாட்டமடைந்தன. கடைசியாக எல்லாம் கூடி யோசித்து 'ஓ ! நமக்கே ஆபத்தாய் முடியும் போலிருக்கிறதே' யென்று முன் போலவே வயிற்றோடு நட்புக்கொண்டு அதற்குத் தீனி கொடுப்பதன் மூலமாக அவைகள் சுகமாக விருந்தன.'' அப்படியே,

 

நாடும், நகரமும், குடும்பமும், ஜாதியும், சமூகமும், சங்கமும் முதலான சரீரங்களில் பல ஜாதியாரும், பல மதத்தினரும், பல தொழிலாளரும், பல வகுப்பினரும், பல அபிப்பிராய முடையவர்களு மிருப்பினும் அவற்றின் முன்னேற்றத்திற்குரிய விஷயங்களில் பொதுவாகச் சகலரும் ஒன்றுபட்டிருத்த லத்தியாவசியமாகும்.

 

உண்மை ஒற்றுமையும், போலி ஒற்றுமையும்: - உண்மைப் பொருளே உயர்வுள்ளது. போலி யென்பது ஒன்று வேறொன்றைப் போலத் தோன்றி ஆராய்ச்சியில் அப்பொருளாகாதது; உண்மையில் ஒற்றுமையில்லாமலும், ஆனால் ஒற்றுமை போலக் காணப்பட்டுக்கொண்டு மிருப்பது போலி ஒற்றுமையாம். மிக்க ஆழமாகத் தோண்டப்பட்ட கிணற்றினுள்ளிருந்து வரும் நீரூற்றானது வற்றாது நின்று பலர்க்கும் பயனளிக்கும்; மேற்போக்காகத் தோண்டப்பட்ட மேலூற்றுநீர் அங்ஙனம் பயனளி யாது. அதுபோல, உள்ளத்தின்கண் தோன்றி நிகழும் ஒற்றுமையே உண்மை ஒற்றுமையாம். மன ஒற்றுமையே ஒற்றுமை. மேலாடம்பரங்களால் உண்டாகும் ஒற்றுமை போலி ஒற்றுமையேயாகும்.

 

அன்பே ஒற்றுமைக்கு ஆதிகாரணம்: - உண்மையான ஒற்றுமைக்கு முதற்காரணமாயுள்ளது அன்பு. அன்பாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா வுயிர்கள் மேலும் செல்வதாகலின் அன்பே ஒற்றுமையுண்டாதற் கேற்ற வழியாம் என்பர் பெரியோர். அது எவ்வாறாயினும், ஒவ்வொருவரிடத்தும் என் ஊரார், என் ஜாதியார், என் நாட்டார்' என்னும் அபிமானமும், தம்மைப் போலவே பிறரையும் மதிக்கும் குணமும் இருத்தல் ஒற்றுமைக்கு இன்றியமையாதனவாம். இவற்றையே முன் சொன்னபடி பெரியோர் அன்பு அருள் என்ப. உதாரணமாக, ஒருவன் தன் பெற்றோரிடத்தாயினும், தன் குடும்பத்தினிடத்தாயினும் இவர்கள் என் பெற்றோர், இது என் குடும்பம்' என்னும் ரேசம் அல்லது அபிமானமில்லாதவனாயின் அவன் அவர்களுடைய க்ஷேமத்தில் சிறிதேனும் கவலை கொள்வானா? அங்ஙனமில்லாத போது அவர்களுக்குள் பரஸ்பரம் ஒற்றுமையுண்டாகுமா? என்னமோ அவர்கள் ஒரு வீட்டிலிருக்கின்றார்களே; ஒன்றாய்ச் சாப்பிடுகிறார்களே; பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறார்களே ஒற்றுமை யில்லாம லிருக்குமா? எனின், அதுதான் போலி ஒற்றுமை.

 

இதுதானா ஒற்றுமைக்கு வழி: - சிலர் வேறு வழிகளும் கூறுவர். அவ்வழியிலுள்ளவர்களுக்கும் உள்ளன்பு வேண்டுமென்பது உடன்பாடேயாயினும், அவ்வன்பை வெளிப்படுத்திக் காட்டவேண்டுமென அவர்கள் சில முறைகளைக் கையாளாநிற்பர். அன்பை வெளிப்படுத்திக் காட்டவேண்டு மென்பது நியாயமே. அன்பு என்பதொன்றிருந்தால் அது உள்ளே அடைபட்டுக் கிடவாது. நாம் அதைப் பலவந்தமாய் வெளிப்படுத்த வேண்டுவ தின்று. அது நம்கட்டிலடங்காது. இதுபற்றியே அன் பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்' என்றார் பொய்யாமொழியார். இனி,

 

அவர்கள் கூறும் வழிகளாவன: - எல்லோரும் ஒரே ஜாதியாராகவும், ஒரே மதத்தினராகவும் இருத்தல் வேண்டும். அப்படி யிருக்க முடியாவிட்டாலும் சமபந்தி போச னம் செய்தல் வேண்டும். யாவரும் ஜாதிமதபேதம் பாராட்டாமல் சமபோசனம் செய்யப் பழகிவிட்டால் ஒற்றுமைதானாகவே உண்டாய்விடும் என்று அதற்காகச் சில சங்கங்களை ஆங்காங்குத் தாபித்து வருகின்றனர். ஒற்றுமையின் பொருட்டு இவ்வளவாயினும் செய்யப்படுகின்றதே என்பதுமட்டில், அக்காரியம் மெச்சத்தகுந்ததேயாயினும், எண்ணிய இலக்கு எய்தப்படுமோ என்பதுதான் சந்தேகம். ஆனால் அதுவும் முற்கூறிய அன்பையும் அதன் பயனாகிய அருளையும் அடிப்படையாகக் கொண்டிருக்குமானால் பொன்மலர்மணமும் பெற்றது போலாம். அன்பின்றிச்செய்யும் ஏனைய காரியங்கள் நிஷ்பிரயோஜனமாம். அடியற்றால் நுனிவிழாமலிருக்குமா? அவ்வாறின்றி ஒத்த அந்தஸ்தையுடைய சிலர், மாதம் ஒரு முறையோ இருமுறையோ ஓரிடத்திற் கூடி, சிற்றுண்டியருந்திச் சிறிதுநேரம் வேடிக்கையாகச் சம்பாஷித்துக்கொண்டோ, பந்தாட்டம் முதலாகிய விளையாடல்களைப் புரிந்து கொண்டோ இருந்துவிட்டுப் போய்விட்டால், அது களியாட்டுச் சங்கமென்னும் பெயர்க்குரியதாகுமே யன்றி, ஒற்றுமையை வளர்க்கும் சங்கமாகாது. அதனால் உண்டானதாகக் காணப்படும் ஒற்றுமையும் உண்மை யொற்றுமையாகாது போலி ஒற்றுமையே யாகும். ஒரே ஜாதியாராகவும் ஒரே மதத்தினராகவும் இருந்தால் ஒற்றுமை உண்டாவதாயின், ஒரே ஜாதியினராயும் ஒரே மதத்தினராயுமுள்ள ஐரோப்பியருக்குள் விரோதமுண்டாவதேன்? கடந்த ஐரோப்பா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரே ஜாதியினரும் ஒரே மதத்தினருமல்லவா? அன்றியும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்து வளர்ந்த சகோதரர்க்குள் ஒற்றுமையில்லாம லிருப்பதென்ன? ஒற்றுமையின் பொருட்டு அன்னிய மதத்தாருடனும் அன்னிய ஜாதியாருடனும் கலந்துண் டுறவாடினவன் தன் வீட்டையடைந்ததும் தாய் தந்தையரையும் சகோதரரையும் வைது அடிக்கப்புகுந்தால் அவன் சங்கத்தின் பயனென்ன?

ஆகையால்,


 'புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமைதரும்.''
 முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்
 தகநக நட்பது நட்பு.''

 

என்றும் கூறியுள்ள தமிழ்மறையின்படி, புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி யென்னும் மூன்றில் உணர்ச்சியே நட்பிற்குச் சிறந்த காரணமாமென்பது போல் அன்பும் அருளுமுடைமையே ஒற்றுமைக்குச் சிறந்த வழிபாடாம்?

 

குடும்பமே ஒற்றுமைமைக் கற்குமிடம்: - அறையிலாடிய பிறகே அம்பலத்திலாட வேண்டும்','சிறியதைச் செய்து பழகியபின்பே பெரியதைச் செய்ய முயலவேண்டும்' , 'அ - அ - இ - ஈ முதலிய எழுத்துக்களைக் கற்றுச் சிறிய புத்தகம் படித்துப் பயின்ற பிறகுதான் பெரிய புத்தகம் படிக்கப் பிரயத்தனம் பண்ணவேண்டும். ஆகவே ஒற்றுமையை விரும்புபவன் அதைத்தான் குடும்பத்தில் தான் முதல் முதலாகக் கற்க வேண்டும்; சகோதரர், பெற்றோர், மனைவி, சுற்றத்தார் முதலானவர்களிடம் ஒற்றுமையா யிருக்க வேண்டும். 'உள்சுவர் உப்புலுக்கப் புறஞ்சுவர் கோலஞ்செய்வதிற் பயனில்லை.''

 

நம் தேச ஒற்றுமை நிலை. - நம் இந்து தேசத்தில் இந்த ஒற்றுமையானது எந்த நிலையிலிருக்கிற தென்பதை யாராயின் பெருநகைப்பிற்கிடமாம். ஒற்றுமையானது தனக்கு எதிர்மறையாகிய ஜன்மசத்துருவை நேசித்திருக்கிறது நம் தேசத்தில். இது எத்தனை வியப்பு! அதாவது, ஒற்றுமையானது வேற்றுமையினிடத்திற் சேர்ந்து அதற்கு மேன்மையுண்டாக்குகின்றது.
 

இயல்பாகவுள்ள ஜாதிமதப் பிரிவுகளன்றி, பிராமணர் - பிராமணரல்லாதார், தீண்டாதார் - தீண்டப்படாதார், ஹிந்து - முஸ்லீம், வைணவர் - சைவர், வடகலை - தென்கலை, வேதாந்தம் - சித்தாந்தம், முன் தீர்த்தம் - பின் தீர்த்தம், ஒத்துழைப்போர் ஒத்துழையாதார், மாறுதல் வேண்டுவோர் - மாறுதல் வேண்டாதார் முதலிய எத்தனையோ கட்சிகள் தோன்றி ஒற்றுமையை அலைக்கழிக்கின்றன. அவற்றை எண்ணத் தொலையுமோ ஏடிடங்கொள்ளுமோ?

 

பிரிவுகள் பகையுண்டுபண்ண வேண்டுமோ? - ஜாதிப் பிரிவுகளும், மதப் பிரிவுகளும் ஒரு விஷயத்தில் பலவகைப்பட்ட அபிப்பிராய பேதங்களும் இருப்பது சாதாரணமே. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஜாதி முன்னேற்றத்திற்கும், மதாபிவிருத்திக்கும், தேசாபிவிருத்திக்கும் பாடுபடுவதும் நியாயமே. ஆயினும் ஒன்றையொன்று பகைத்து முதலுக்கே மோசமுண்டாகும்படி செய்யலாகாது. உதாரணமாக ஓர் பெருமாள் கோவில் உற்சவத்தில் சுவாமி புறப்பாட்டில் வடகலைக்கும் தென்கலைக்கும் அபிப்பிராய பேதமுண்டானால் அதற்காகச் சுவாமியை நடுவீதியில் போட்டு விட்டு மண்டை உடைத்துக்கொண்டு நியாயத்தீர்ப்பிற்குப் போகலாகாது.

 

எந்தச் சுவாமியின் அருளையடைய இவர்கள் பக்தியோடு வேதபாராயணஞ் செய்தனரே அந்தச் சுவாமியை யவமதிப்பது அழகல்லவே. பானையை யல்ல பாலையே பார்க்கவேண்டும் பிள்ளை வரத்திற்குப் போய்ப் புருஷனை யிழக்கலாமா? 'இதைக் கூர்ந்து நோக்கி நடக்க வேண்டும்.

 

விட்டுக் கொடுப்பது அவமானமல்ல: - ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயமே சரியெனச் சொல்வதற்கும், அதன்படி நடப்பதற்கும் உரிமை யுடையவர்களாயினும் ஒற்றுமைப் படவேண்டிய விஷயத்தில் தங்கள் பிடியைச் சிறிது தளர்த்தி விட்டுக்கொடுக்கலாம். அது அவமான மல்ல. யாவரும் போற்றத்தக்க பெருந்தன்மையேயாகும்.
 

எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்: - முன்னர்க் கூறிய சரீர அவயவ நியாயத்தின்படி நம்தேசத்தில் பல ஜாதியாரும், பல மதத்தினரும், பல கொள்கையாளருமா யிருப்பினும் நாம் எல்லோரும் ஒரு தாய்கட் டிற் பிறந்த பிள்ளைகளே யென்னும் உணர்ச்சியை நழுவ விடலாகாது. பாரத தாயின் பிள்ளைகளே. இந்தியமாதாவின் மைந்தர்களே. மாதாவை மகிழ்விப்பது புத்திரர் கடமை. மைந்தர்கள் யாவரும் ஒற்றுமையாயிருக்க வேண்டுமென்பதையே ஒரு தாய் விரும்புவாள். (நாம் எல்லோரும் சகோதரரைப் போலிருக்கவேண்டும் என்று கூறும் பொழுது ஒரு விஷயம் கவனத்திற்கு வருகிறது. அந்த உவமை பொருத்தமில்லாததாகவும் காணப்படுகிறது. ஏனெனில், சகோதரரைப்போல் இருக்க வேண்டுமென்பது, 'சண்டை போட்டுக்கொண்டு ஒற்றுமையின்றி யிருக்கவேண்டு' மென்று கூறுவது போலாகும். அஃதெப்படியெனில் நூற்றுக்கு எத்தனை குடும்பங்கள் சகோதரவொற்றுமையுடைய குடும்பங்களாயிருக்கும் என்பது ஆராய்ந்து பார்ப்போர்க்கு இனிது விளங்குமாகலின் என்க. ஆகையால் கோதரர் ஒற்றுமை என்பதற்கு நியாயமாக முறைப்படி இருக்க வேண்டிய சகோதர ஒற்றுமையின்படி என்று அர்த்தங்கொள்ள வேண்டும். தற்போது எங்கும் காணப்படும் போலிச் சகோதர ஒற்றுமையின்படி அல்ல.)

 

ஒருவன் கிறிஸ்தவனா யிருக்கலாம், ஒருவன் முகம்மதியனா யிருக்கலாம், ஒருவன் வைணவனா யிருக்கலாம். ஒருவன் சைவனாயிருக்கலாம். பிராமணனாபினும் சரி, பஞ்சமனாயினும் சரி, ஏழையாயினும் சரி, பணக்காரனாயினும் சரி, நமது அபிப்பிராயத்தை அனுசரிப்பவனாயினும் சரி, நமது அபிப்பிராயத்தோடு மாறுபடுபவனாயினும் சரி, வேறெவனாயினும் சரி, கடவுள் படைப்பில் எல்லாம் ஒன்றே. அவர் பார்வையில் அவர் பிள்ளைகளாகிய நாமனைவரும் சகோதரரே. பாரத மாதாவாகிய ஒரு தாய் வயிற்றிற் பிறந்த சகோதரரே என்னும் எண்ணத்தைக் கொண்டிருப்போமானால் ஒற்றுமை தானாகவே உண்டாகும், அதன்பிறகு ஒற்றுமை யென்பதொன்று உண்டாகுமென்பதில்லை. அதுவே ஒற்றுமை. அதுவே உண்மை ஒற்றுமை; யாராலும் அசைக்க முடியாத ஒற்றுமை; எதனாலும் பிளவுபடாத ஒற்றுமை.

 

இதுகாறும் கூறியவாற்றால் ஒற்றுமை மிக்க அவசியமானதென்பதும், அந்த ஒற்றுமையும் உண்மை ஒற்றுமையாக இருக்க வேண்டுமேயன்றிப் போலி ஒற்றுமையாக இருக்கலாகாதென்பதும், அன்பையும் அருளையும் அடிப்படையாகக் கொண்டு பிறப்பதே உண்மை ஒற்றுமையாமென்பதும், சமபந்தி போஜனம் முதலியவற்றால் மாத்திரம் அவ்லொற்றுமை உண்டாகிவிடாதென்பதும், அவயவங்கள் பலவாதல் போலப் பல பிரிவுகள் தோன்றினும் ஒன்றையொன்று பகைக்கலாகாதென்பதும், ஒற்றுமையைக் கற்பதற்கு வீடே சிறந்த விடமென்பதும், யாவரும் ஒரே தாய் வயிற்றிற் பிறந்த சகோதரர்களே யென்பதும் பிறவும் பெற்றாம்.

 

ஆகையால் அத்தகைய ஒற்றுமை யுண்டாகுமாறு யாவரும் முயல்வோமாக. எல்லாம் வல்ல இறைவனருளும் துணைநிற்பதாக

 

பூ. ஸ்ரீநிவாசன், தமிழ்ப்பண்டிதர்,

சித்தூர்.

 

குறிப்பு: - ஒற்றுமையின் ஆவசியகத்தை நாம் பன்முறை, பல தலையங்கத்தின் கீழ் வரைந்து வந்துண்மையின், தற்கால மகத்துவத்தைச் சிறிது பேசப்புகுந்த இடத்தில் அதனை விரிக்காது விட்டனம். நமது தேசமுன்னேற்றத்தையும், ஐக்கியபாவத்தையும் விரும்பி, அவ்விஷயமாக நம்மவர் ஆங்காங்கே வாசாகயிங்கரியமாய்ப் பேசி விட்டுக் காரியசித்தியைக் கவனியாதிருத்தலால், எடுத்துக்கொண்ட அப்பேச்சு படுத்துக் கொண்டிருக்கிறதே யொழிய, பயன் பெறவில்லையே என்னும் நோக்கத்தை யுட்கொண்டு, உண்மை யொற்றுமை இவ்வாறிருக்க வேண்டுமென்று சீநக்க முதலியாரின் சரித்திரத்தைக் குறிப்பிட்டு வற்புறுத்தலானோம்.

 

இதை ஆதாரமாகக் கொண்டு நமது நண்பர் சித்தூர் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமான் பூ. ஸ்ரீநிவாசலு நாயுடு அவர்கள் ஒற்றுமையைப் பற்றி விஸ்தாரமாகவும் படிப்பவர் மனதைக் கவருந் தன்மையாகவும் எழுதிய இவ்வியாசம் ஒவ்வொருவருங் கவனிக்கத் தகுந்தது; நடத்தையில் அதைக் கொண்டு வரவும் சிரத்தை யெடுத்துக்கொள்ள வேண்டியது. அப்போதுதான் நமது எண்ணம் நிறைவேற வழியுண்டாகும்.

 

ப - ர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment