Wednesday, August 26, 2020

 ஆரம்பக் கல்வி

 

ஆரம்பக்கல்வி போதிக்கும் தற்கால முறையை அடியோடு மாற்றிப் பண்டைய முறையில் போதிக்க வேண்டு மென்றும், அதிலும் நம்மக்களுக்கு சட்டமூலமாகக் கட்டாய இலவசக்கல்வி போதிக்கும்படி கூக்குரல் இடவேண்டுமென்றும் திருவண்ணாமலை தாலூகா அக்கினி குல க்ஷத்திரிய வாலிபர் சங்கக் காரியதரிசி இராஜ ஸ்ரீ பொ. குப்புசாமிக்கண்டர் அவர்கள். செஞ்சி தாலூகா புலிப்பட்டு கிராமத்தின் போர்டு பாடசாலைத் திறப்பு விழாவில், ஜில்லாபோர்டு மெம்பர் ராஜ பெரியண்ண கண்டர் அவர்கள் தலைமையில் கூறினதாகத்தெரிகிறது.

 

இக்கால முறையைச் சரியாகக் - கவனமாய் - ஊக்கமாய். உண்மை உழைப்பால் கையாடின் சரியான - நல்ல படிப்பு ஏற்படா தென்பதில்லை. ஒருநாள் வந்த பிள்ளைகள் மறுநாள் வந்தாலன்றோ புது முறை ஏற்ற பலனளிக்கும். ஒருநாள் வந்த பிள்ளை ஒருநாள் வருவதில்லையே. வீடு பார்த்துக் கொள்ளவும், நெல்பார்த்துக் கொள்ளவும், பிள்ளை வைத்துக் கொள்ளவும், விவசாய - வேலை செய்யும் பெற்றோர் உற்றோர் முதலியவர்களுக்குச் சாதம் கொண்டு போகவும், ஆடு, மாடு ஒட்டிக்கொண்டு போகவும் - பார்த்துக்கொள்ளவும், ஊர்களுக்குப் போய்வரவும், கட்டிக் கொள்ள வேஷ்டியில்லை யென்றும், விளையாட்டுகளுக்காகவும் இடையிடையே நின்றுவிடுவதால் புதுமுறை எந்தவிதம் அந்தமாகப் பிரகாசிக்கும்? இவைகளை யெல்லாங் கவனியாமல், புதுமுறை புதுமுறை என்று போராடும் பரீட்சாதிகாரிகளுக்குப் பயந்து, புது முறையோடு போராடிப் போதிப்பதில் கல்வி விருத்தி நல்விருத்தியாவ தெங்ஙனம்? குறைவான விருத்தியே ஏற்படக்கூடும். இதைக்காணும் நேரமில்லாத பெற்றோர் தம்பிள்ளை கட்குப் படிப்பு வரவில்லை யென்று மத்தளத்தைப் போல் உபாத்தியாயரை இம்சிப்பார்களானால் – உபாத்தியாயர்கள் என்ன செய்யக்கூடும்? உபாத்தியாயர்களின் நிலைமை என்ன என்பதை உணருங்கள். பெற்றோரின் விருப்பப்படி பழைய முறையை ஆசிரியர்கள் அதுசரிப்பார்களானால் பரீட்சாதிகாரிகளின் குறை கூறுதல் - ரிப்போர்ட்டுகளுக்கும், தாலூகா போர்டு முதலிய ஸ்தல ஸ்தாபனத்தார்களின் கண்டிப்புகளுக்கும் எதற்காக வருந்த வேண்டி நேருகிறது? மேலும் புதுமுறையின் சரியான அமைப்பின்மையாலோ, போதிப்பின் பலம் சரியாயிராததாலோ, மேல்வகுப்புகளுக்குள் உணர்ச்சியே யில்லா திருக்கின்றது.
 

தமிழ் எழுத்துக் கற்பிக்கும் பழைய முறை மனத்தில் பசுமரத்தாணி போல் பதியக்கூடியது தான். நாட்சென்று பொருள் விளங்கவும் படிப்பு ஏற்படக் கூடியதுமானதா யிருக்கின்றது தான். உலகநீதி, ஆத்தி சூடி கொன்றை வேந்தன் ஆகிய தெளிவான, சில வருஷங்கள் சென்றதும் தானே தெரிந்து கொள்ளக்கூடிய நீதிவாக்கியங்களைப் பதம் பிரித்து உரையோடு கற்பிக்கவேண்டும். வருஷ முழுவதும், 20 - 30 - வரி தெரிந்தாலும் போது மென்ற புதுமுறைக்காரர்களும் இருக்கின்றனர். புதுமுறைக்காரர்களில் அனுபவசாலிகள் இதனை ஒருபோதும் ஒத்துக் கொள்ளார்கள். வருஷ முழுவதற்கும் ஆகாரதானியங்கள் சேகரித்து வைத்துக் கொண்டு கிடைக்காத காலங்களில் சிரமப்படாமல் காலந்தள்ளுபவர்களைப் போல், மேற்கூறிய எளிய நீதி வாக்கியங்களை ஏராளமாய்ச் சிறு வயதில் - பாடம் பண்ணக் கூடிய பருவத்தில் பமத்து மனப்பாடம் செய்து கொண்டால், இவர்கள் பெரியவர்களான பின்னர் தானே இலகுவில் தெரிந்து கொள்ளக்கூடும் என்பதை அநுபவசாலிகள் ஒருக்காலும் மறுக்க மாட்டார்கள். இது இக்காலத்துப் புதுமுறைக்காரரது புத்தியில் நுழைவதே யில்லை. இவை, பரீட்சாதிகாரிகளா யிருந்தவர்கள் - இருப்பவர்களுடைய அபிப்பிராயங்களாகும். என்ன செய்வது? ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக் குக்கோபம் உபாத்தியாயர்களோ, இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு நெருக்குற்று இம்சைப்பட்டு, கலக்க யில்லாத - சாந்தமான இருதயத்தோடு தொழிலைக் கவலையில்லாமல் செய்வதற்கில்லாதும் போகின்றது. காரணர் எவர்? பெற்றோரும் பரீட்சாதிகார நிர்வாகிகளும் ஆகியவர்கள் தான். இவர்கள் ஒன்று கூடி இவ்விஷயங்களை முடிவு செய்து ஒவ்வொருவர் மனத்திலும் ஊடுருவச் செய்யாமலிருப்பதால் பல அபிப்பிராயங்கள் தான் ஏற்படும்; கருதிய பயன் காணக் கஷ்டமாகத் தானிருக்கும். கடைசியில் "ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவிலாண்டி'' என்பது போல், இவர்களுக் குழைத்த பள்ளிக் கூட வாத்தியார் மேல் குறை கூற வேண்டியதும் - குற்றம் சொல்வதும் பரம்பரை வழக்கமாய்ப் போய்விட்டது.

 

நாள் தவறாமல் பள்ளிக்கூடம் வராமல் மேலே கண்ட காரணங்களினால் நாள் தவறிக். தவறி - விட்டு - விட்டுப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளையும் ஒருங்கே வைத்துக் கொண்டு போதிப்பது - ஒவ்வொரு பதத்தின் தாத்பரியன்களை விளக்கிப் போதிப்பது இயலாதே. என்றாலும், விட்டு விட்டு வருங் காரணத்தால் தனித் தனியாய்ப் பாடங்கேட்டு கற்பிக்கலாம். இம்முறையில் சாவ்காசமாய் ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித் தனி பாடத்தில் – கவ்வவர்களது பாடத்தில் உள்ள வார்த்தையின் பொருள்களையும் விளக்கிக் கற்பித்தல் அசாத்தியமே. கால அட்டவணையில் குறிப்பிட்ட 25 அல்லது 30 – மிஷம் போதவே போதாது. எல்லாப் பிள்ளைகளையும் அவர்கள் ஒப்புவிக்க - சொல்லவேண்டிய பாடத்தைப் பார்த்து எழுதி – அப்பியசிக்கச் சொல்லி விட்டு, ஒவ்வொரு பையனாக - முதலில் எழுதி முடித்து விட்டிருக்கும் பையன் ளாகக்கூப்பிட்டுக் கூப்பிட்டு பாடங்கேட்டுக் கேட்டு புதுப்பாடம் சொல்லிக் கொடுத்து புதுப்பாடத்தினை எழுதச் செய்து அப்பியாசிக்கச் செய்து கொண்டு வரலாம். இவ்வகையில் 3 - பாடம் நடைபெறுகிறது என்றாலும் இச்சமயங்களில் இம்முறையில் பரீட்சாதிகாரிகள் வந்து பார்த்து விடின் காலதேச வர்த்தமானத்தை யறிந்து வேலை நடக்கிறது நடந்து கொண்டிருக்கிறது என்று திருப்தி கொள்ளாமல் அட்டவணைப் படி பாடம் நடக்கவில்லை. உபாத்தியாயர் எதோ தம் இஷ்டம் போல் பொழுது போக்கிக் கொண்டிருந்தார் என்று எழுதி விடுவர். இப்படி எல்லா பரீட்சாதிகாரிகளுமே யிருக்கிறார்கள் என்பதில்லை. இப்படியும் சிலர் இருக்கின்றனரென்றே குறிப்பிடுகின்றோம்.

 

இங்கு குறிப்பிட்ட வழியில் முதல் வகுப்பினராகிய பாலர்களுக்கு இடை விடாமல் பாடம் போதிக்க 2 - அல்லது 3 - பீரீயட் செல்லும். இந்த இரண்டு மூன்று பீரியடும், மற்ற வகுப்புகளைக் கவனிப்பதும், ஒரு வேலை கொடுத்து விடுவதும், புதிய முறைக்கு முற்றும் விரோதமானதாகும் ஆகவே இப்பிள்ளைகள் ஒரே வருஷத்தில் தங்களுக்கேற்றவற்றைக் கற்று அடுத்த (2 - வது) வருஷத்தில் 2 - ம் வகுப்புக்கு வந்துவிட வேண்டுமானால் - பாடசாலைப் படிப்பு – பள்ளிப் பிள்ளைகளின் மனோ அறிவு - அஸ்திவாரம் - பலமுள்ளதாய் அமைய - ஏற்பட வேண்டுமானால், இந்த முதல் வகுப்புக்கு மட்டும் 20 - பிள்ளைகளா யிருந்தாலும் தனி உபாத்தியாயராய் இருந்தாலே - புதிய முறையிலும் போதிய விருத்தியைக் காணலாம்.

 

ஒரு வகையில், கட்டாயக் கல்வி முறை ஏற்பட்டாலே, பிள்ளைகளை ஒழுங்காய் தவறாமல் பாடசாலைகளுக்கு அனுப்பப் பெற்றோர்களுக்கு அக் கரை ஏற்படுமெனலாம். இப்போது இந்த அக்கரை மிகக்குறைவே. பிள்ளைகளாய் இஷ்டப்பட்டு பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும், இல்லையேல் உபாத்தியாயர் இதர பிள்ளைகளை அனுப்பி வராத பிள்ளைகளை அழைத்து வரச் செய்யவேண்டும். அதற்கும் வராத பிள்ளைகளை உபாத்தியாயரே நேரில் சென்று கொண்டு வரவேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காய் வராமலிருப்பதற்கும், உபாத்தியாயர் வீடுகட்குச் சென்று அழைத்து வருவதற்கும் உபாத்தியாயர்களே காரணம். இவர்கள், பிள்ளைகள் தானே பள்ளிக் கூடத்திற்குப் பிரியங் கொண்டு ஓடி வரும்படி செய்ய ஏற்பட்டிருக்கும் கிண்டர் கார்ட்டன் முறைகளைக் கையாளுவதில்லை யென சில புது முறைக் காரர்கள் இயம்பலாம். இப்படிச் சொல்லுகிறவர்கள் வந்து இருந்து புது முறைப்படியும் கால அட்டவணை பிசகாதபடியும் நடத்தினால் அந்த அருமை அப்போது தெரியும்'' சொல்லுவது எளிது செய்வது அரிது " என்பது அறிந்திருந்தும் இவர்கள் இப்படி யெல்லாம் சொல்வது சொல்லுகிற விஷயத்தில் நேர் அனுபவமில்லாமல் தாம் படித்ததைக் கொண்டு மட்டும் சொல்வ தென்றே சொல்வோம். இவர்கள் தம் வீட்டுத் தம் குழந்தைகளை இரண்டொருவரைப் பாடசாலைக்கு அனுப்ப எவ்வளவு முயற்சி, சமாதானம், தந்திரம் முதலியன கையாள வேண்டியிருக்கிற தென்பதை நினைத்துப் பார்த்தால் பல குழந்தைகளை வைத்துக் கொண்டு பராமரிப்பது, ஒருவர்க் கொருவர் செய்து கொள்ளும் விஷமங்களை - சச்சரவுகளை – விளையாட்டுக் குற்றங்களை சீர்திருத்தம் செய்து – அடக்கிக் கொண்டு வருவதே எவ்வளவு சிரமமென்பதையும், இதற்குமேல் அவர்களுக்கு ஒழுக்கம், ஒருவர்க் கொருவர் ஒற்றுமை, அடக்கம் பள்ளிக் கூடத்தில் பிரியமுண்டாக்குதல், அறிவு வளர்ச்சிக்கான பேச்சுகள் படிப்புகள் ஆகியவைகளைக் கதைகள் வேடிக்கை விளையாட்டுகள் மூலமாய் உபாத்தியாயர் செய்ய வேண்டியிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

கட்டாயக்கல்வி ஏற்பட்டால் சில ஏழைப் பெற்றோர்க்குச் சிரமமே ஏற்படும். தங்கள் வயிற்றுப் பிழைப்பில், தங்கள் ஆடு மாடுகளைப் பார்த்துக் கொள்ளவோ, குழந்தைகளை வைத்துக்கொள்ளவோ, பார்த்துக்கொள்ளவோ இன்னும் மேலே ஆரம்பத்தில் சொல்லியவற்றையோ கவனித்துக் கொள்ள உதவி செய்ய ஏதுவில்லாமற் போகக்கூடும். இவ்வளவு நிர்ப்பாக்கிய நிலைமையில் உள்ளவர்களின் குழந்தைகளுக்குப் புத்தகமும் சிலேட்டுகளும் ஒரு வேளை பகல் ஆகாரமேனும் உதவினால் அவர்களுக்கும் ஒரு ஆதரவாக இருக்கும்; மனச் சமாதானம் - சாந்தி ஏற்படும். தங்களுடைய கஷ்டத்தில் சிரமமும் தோன்றாமல் ஒரு சிறிது பொறுப்பு சர்க்கார் பாடசாலை வழியில் ஏற்றுக் கொண்டு விட்டார்களென்ற மன நிம்மதி ஏற்பட்டு விடும். நிர்ப்பாக்கிய நிலைமையிலுள்ளவர்களைக் கல்வி சம்பந்தமாய்ச் சர்க்கார் கவனிக்கும் கடமையும் கவனித்ததாக ஏற்படும். இதனையும் நம் பிரதிநிதிகளும் பொதுஜன நன்மைக் கென்றே பாடுபடுவதாகச் சொல்வோர்களும் சங்கங்களும் கவனித்துத் தக்கது செய்து சீரும் சிறப்பும் எய்தி சிறந்துறுவார்களாக.

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

 

 

 

 

No comments:

Post a Comment