Wednesday, August 26, 2020

 

 ஆரிய சித்தாந்தம்

 

ஆசிரியர்:

சிவானந்தசாகர யோகீஸ்வரர்.

 

மாத இதழ்

1923 ஜுலை யில் இருந்து 1930 மே வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

                                                                         

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

(குரு) 3

தெய்வம்.. 13

பக்தியோகம்.. 15

மானசயோகம். 23

ஞானயோகம்.. 29

கர்மவிபாகம்.. 32

சர்வசத்தி.. 37

சத்தியம்.. 46

ஆசாரம்.. 50

இலௌகிகம் - பொருள். 57

ஆரியாசாரம் - செல்வத்தாலாம் பயன். 61

சிஷ்டாசாரம்.. 68

உலகக்ஞானம். 125

வேதாகம புராணம். 216

மத பேதம். 218

இல்லற வொழுக்கம்.. 224

கலிகாலக் கலியாணக் கோலாகலம் ............................................................................................................230

 


 

ஆரிய சித்தாந்தம்

(குரு)

''குரு'” என்பது அஞ்ஞானாந்தகாரத்தைப் போக்குகிறவர் என்று பொருள் தரும்: "கு" என்பது இருதயகுகை என்றர்த்தமாம். "ரு'' ஒழிக்கிறவர் என்று பொருளாம்: அது இருதயமாகிய குகையின் கண்ணுள்ள அஞ்ஞானமாகிய அந்தகாரத்தை நீக்குகிறவர் என்ற பொருளில் கலந்து நின்றது. அஞ்ஞான இருளை நீக்குகிறவர் எனவே மெய்ஞ்ஞான ஒளியை அளிப்பவர் என்பது தானே யமைாம். ஏனெனில் இருளற்ற இடமே ஒளியாவதும், ஒளியற்ற இடமே இருளாவது மாதலால் என்க. இதனால் " குரு'' என்பவர் மனதின் கண்ணுள்ள இருளை நீக்கி மெய்ஞ்ஞான ஒளியை அளிப்பவராம். மெயஞ்ஞானம் பரப்பிரமத்தினுடைய சரீரமாம். பிரமத்துக்கு வேறு சரீரமில்லை. அகண்டஞானமே பிரம்மத்தின் சொரூப மென்று வேதங்கள் கூறுகின்றன. அது சத்து சித்து ஆனந்த மென்கிற முப்பகுதியாயுள்ளது. ஆயினு மொன்றுக்கொன்று வேறுபட்டதல்ல. எங்ஙன மெனின், "சத்து" என்பது உணமை, நித்தியமெனப் பொருள்படும். ''சித்து' என்பது ஞானமாம். ஆனந்த மென்பது அவற்றாலாகிய குணமாம். சித்து என்கிற ஞானமே நித்தியமாயுள்ளது. அழிவற்றது. குறைவில்லாதது. தளராதது. அதுவே யானந்த மயமானது. இதனால் ஞானமென்ப தொன்றே முத்திறத்தாய்க் கூறப்படுவதன்றித் தனித்தனியாய் வேறுபட்டுள தல்ல. இதுபற்றியே பிரமத்தைச் சாத்துச்சித்தானந்த சொரூபி யென்று கூறுவது. இந்த ஞானத்துக்கு வேறுபட்டன வெல்லாம் அசத்தென்று கூறப்படும். அதாவது அநித்தியம், அழிவுள்ளது என்பது. சத்து அசத்தென்பவற்றின் இயல்பை யுணர்வதே ஞானமாம்.

 

ஞானமே பிரமத்தின் சொரூபமானால் அதனையிருளாகிய மாயாகாரிய கருவிகளைக் கொண்டு காண்பது கூடாது. ஏனெனில் இருளும் ஒளியும் போல் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிற்பது. இருளுள்ள இடத்தில் ஒளி நில்லாது, ஒளியுள்ள இடத்தில் இருள் நில்லாது. ஒளிமயமான மெய்ஞ் ஞானத்தை ஒளியினாலேயே யறிய வேண்டும். இருதயகமலத்தில் பந்தத் தினால் சிற்றறிவனான ஆன்மா பரமான்மாவைக் காண முடியவில்லை. இருதயம் சுத்தமானால் அது ஒளியுள்ளதாகும். அப்போது ஆன்மா தன்னையுணர்ந்து பின் தலைவனாகிய பிரமத்தை அறியும். அறியவே அந்த மெய்ஞ்ஞானாக்கினியினால் பந்தம் தகிக்கப்பட்டு ஆன்மா பேரொளியான பிரமத்தொடு கலந்து மோட்சமென்னு மீளாநிலைமையை அடைந்து விடும். இதற்காகவே முன்பு கூறிவந்த வாணாசிரமங்களும் அவற்றினாலியற்றப்படுங் கன்மங்களும் விதிக்கப்பட்டன. இவற்றை யெல்லாம் ஒருவன் எத்தனை நூல்களைக் கற்றாலும் அறியமாட்டான். ஏனென்றால் சிற்றறிவனாகிய ஜீவன் ஒருவன் உணர்த்த உணரும் வன்மையை இயல்பாகவுடையவனேயன்றித் தானே யுணர்ந்து கொள்ளு மியல்புள்ளவனல்ல. உலகத்தில் ஒருவன் செய்ததைப்பார்த்து அல்லது கேட்டு மற்றொருவன் அதுபோலச் செய்வது சுபாவம். அற்ப காரியங்கள் கூட ஒருவனாற் சுயமாகவே யறிய முடியாது. எல்லாம் ஒருவனைக் கேட்டே தெரிந்து கொள்ள வேண்டும். இது ஜீவான்மாவி னியற்கையாதலால் அதனை மாற்ற முடியாது. ஒருவன் தானே யுணர்ந்து கொண்டா னென்றால், அது முன் ஜன்மத்தின தொடர் பாகும். எல்லாவற்றுக்கும் குருவுபதேசம் வேண்டும். அறிவு என்ப தெல்லாம் பிரமத்தினுக்குரியதே யாதலால் எந்த அறிவை ஒருவன் போதித்தாலும் அவன் குரு எனப்படுவான். அக்குரு சக கலைகளையும் குரு முகத்தா லோதி யுணர்ந்தவரும், சத்து அசத்துக்களின் தன்மை யுணர்ந்த வரும், அதனால் மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்றவரும், மெய்ஞ்ஞானத்தி னால் பிரமானுசந்தானம் செய்து நிஷ்டை கூடினவரும், ஐம்புலன்களையும் வென்றவரும், ஆசையற்றவரும், நிர்மலச்சித்தமுடையவரும், காலதேச வேறுபாட்டால் மனநிலைத் தளராதவருமா யிருத்தல் வேண்டும். இத் தன்மை யுடையவரது உபதேசம் பசுமரத்தாணிபோலச் சீடன் மனத்தில் உறுதியாய் நிலைபெற்று மோட்சானந்த மயமாக்கும்.

 

குருவைச் சீடன் தெய்வமாகவும் பிதாவாகவும் பாவித்துச் சோம்பலில்லாமல் அவரிட்ட பணிவிடைகளைச் செய்யவேண்டும். அப்படி யிருந்தால் குரு சீடனைத் தமது புத்திரனாகப் பாவித்து யாவற்றையும் போதிப்பார். பூர்வகாலத்தில் கல்வி ஞானமுடையவன் தன் குருவின்பேரைப் பிரசித்தம் செய்து தனது கீர்த்தியைப் பரவச் செய்வன். குருவின் பேரைக் கூறாதவனை ஒருவருமதிக்கமாட்டார்கள். ஒரு வித்துவானை நோக்கி மற்றவர்கள், நீ யாரிடம் கல்வி கற்றாயென்று வினவுவார்கள். பிரசித்தி பெற்ற குருவின் பேரை அவன் சொன்னால் எல்லாரும் அவனுக்கு மரியாதை செய்து அவனை வித்துவானென்று ஒப்புக்கொள்வார்கள். குரு வறியாதவனை ஒரு அற்பன் கூட மதியான். சீடனது பெருமை யெல்லாம் குருவைப்பற்றியே நின்றது. ஆதலால் சீடன் குருவைத் தெய்வமாகக் கருதி வழிபாடு புரிந்து கல்விகற்க வேண்டியதா யிருந்தது.

 

பூர்வகாலத்தில் குருமார்கள் பொருளிலாசை யற்றவர்களா யிருந்தார்கள். ஆதலால் அவர்கள் சீடரிடத்தில் பொருள்களை யெதிர் பார்க்கவில்லை. இவ்விஷயத்தில் நாம் அந்தணர்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தணர்களிடத்திலேயே சகலகலைகளும் ஞானமும் நிறைந்திருந்தன. பிராமணர்களும் க்ஷத்திரிய வைசியர்களும் தத்தம் புத்திரர்களைக் குருவிடம் கல்வி கற்கும்படி விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். உபனயனம் செய்தவுடனே இப்படிச் செய்யப்படும். அக்காலம் அதிக பால்யமாதலால் கல்வி கற்பதில் புத்தி நன்றாய்ப்பதியும். பொருளில் ஆசையில்லாத குருமார்கள் தம் சீடருடைய ஒழுக்கம் குணம் பணிவிடை இவைகளையே பெரிதாக மதித்து அவருக்கு வேதாதி கலைகளைப் போதிப்பார்கள். காரியங்களினாலும் சற்பாத்திரங்களில் யாசிப்பதினாலும் குருமார்கள் போஜனக் கவலை யற்றிருப்பார்கள். அரசர்களும் அவர்களுக்குக் குறைவில்லாமற் கொடுப்பார்கள். இதனால் வேதாதி கலைகளில் வல்ல அந்தணர்களுக்குப் பொருள் தேடவேண்டு மென்கிற அவசியமில்லை. அதனால் அவர்கள் சீடர்களிடத்தில் பொருளை யெதிர்பார்க்கவில்லை. இது பற்றிச் சீடர்களிடத்தில் குருமார்களுக்குச் சர்வாதிகாரமுண்டு. தம திஷ்டம் போல் நடத்துவார்கள். சீடர்கள் நெறிதவறாமல் நல்லொழுக்கத்தில் நிலைத்திருக்கச் செய்வார்கள். சீடர்களும் உணவுக்குக் கவலைப்பட வேண்டுவதில்லை. ஏனென்றால் பிரமசாரிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் அவசியம் பிக்ஷையிட வேண்டுமென்கிற கட்டாய விதியுள்ளது. அதிதி யாராதனையுஞ் சிறப்பிக்கப்பட்டது. இவ்விரண்டு தர்மங்களும் அநாதியாகவே நமது தேசத்தில் நிலைபெற்றுள்ளன. இதனால் பிரமசாரிகளாகிய வித்தியார்த்திகள் கவலையற்றுக் குருவின் பணிவிடைகளைச் சோர்வின்றிச் செய்து ஞான சித்தியை யடைந்தார்கள். சூத்திரர்களும் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்து ஞானத்தை யடைந்தார்கள். எப்பொழுதும் குருவின் சந்நிதானத்திலேயே யிருக்க வேண்டியிருந்ததனால், அந்த வித்தியார்த்திகளுக்கு உலக வியாபாரத்தில் சித்தம் செலுத்த அவகாசமில்லை. இளம் பெண்களுடன் சம்பாஷிக்கவும் நேராது. ஊர் வம்புகளைக் கேட்கவும் சமயமகப்படாது. குரு பணிவிடைகளைச் செய்யவும், கலைகளை யாராயவுமே யவர்களுடைய காலம் செல்லும். குரு பணிவிடை யொன்றே சகலகலை ஞானங்களையுந்தரும். இவ்வாறு குரு சந்நிதியில் வசிப்பதற்குத்தான் குருகுலவாசமென்று நூல்கள் கூறும். ஸ்ரீகண்ணபிரான் கூடக் குருகுலவாசம் செய்து சகல கலைகளையு மோதியுணர்ந்தாரென்று பாரதம் பாகவதம் முதலிய நூல்கள் கூறுகின்றன. துருபதன் முதலிய அரசர்கரும் குருகுல வாசத்திலிருந்து சகலகலைகளையும் கற்றுணர்ந்தார்களென்று தெரியவருகிறது. குருபணிவிடை செய்து செருக்கில்லாமல் அவரை யாராதித்தவர்களே மஹாஞானிகளாய்த் தவசித்தியும் ஞானசித்தியும் பெற்றவர்களாம். எந்தச சீடன் வெறுப்பின்றிச் செய்யும் பணிவிடைகளினாலும் வழிபாட்டினாலும் குருவை மகிழச்செய்கிறானோ அந்தச் சீடன் ஒன்றையும் ஓதாதவனாயிருந்தாலும் சகலஞானங்களினாலும் நிரம்பின மஹாத்மாவாவான். இத்தனை காலம் குருகுலவாசம் பண்ணவேண்டுமென்கிற வரையில்லை. எப்பொழுது குருவுக்குச் சீடனிடத்தில் மகிழ்ச்சியுண்டாகிறதோ அப்போதே அவனுக்குச் சகலகலா ஞானங்களுமுண்டாய்விடும். இது காரணம் பற்றியே அநேக மஹாத் மாக்கள் குருபணிவிடைகளிலே மனமகிழ்ந்து தவறுதலின்றி நடந்து வந்தார்கள். இதைப்பற்றி ஒரு இதிகாசமுண்டு.

 

பூர்வகாலத்தில் அபோத தெளமியர் என்று ஒரு மஹரிஷி யிருந்தார். அவருக்கு ஆருணி, உபமன்யு, பைதர் என்று மூன்று சிஷ்யர்களிருந்தார்கள். அவர்கள் குருகுலவாசம் செய்து குரு பணிவிடைகளைச் செய்வதி லேயே விருப்பமுள்ளவர்களா யிருந்தார்கள். இவர்களுடைய குரு பக்தியைப் பரிக்ஷித்து அவர்களுக்கு அநுக்கிரகம் செய்யக்கருதிய அபோத தெளமியர் ஆருணியை அழைத்து நமது வயலின் மடையை அடைத்துவா வென்று கட்டளையிட்டார். ஆருணி சென்று மடையை எவ்வாறு அடைத்தும் அது அடைப்படவில்லை. ஆருணி இதற்கென்ன செய்வதென்று சற்று யோசித்துப் பின் அந்தமடையில் தான் படுத்துக்கொண்டான். மடை கட்டுப்பட்டது. இவ்வாறு இரண்டு மூன்று தினங்கள் சென்றன. குரு மற்றவரை நோக்கி ஆருணி யெங்கே என்று வினவினார். அவன் தமது கட்டளையின்படி வயல்மடையை அடைக்கச் சென்றானென்றார்கள். அப்படியானால் அவனைப் பார்ப்போம் வாருங்கள் என்று அவர்களையும் அழைத்துக்கொண்டு வயலின் கிட்டப்போய்க் குழந்தாய் ஆருணி! எங்கே யிருக்கிறாய் வா என்று அழைத்தார். அவன் மடையை உடைத்துக் கொண்டு வந்து குருவை வணங்கி, மடை அடைபடாமையால் நானே மடையிற் படுத்து அடைத்துக்கொண்டிருந்தேன். தமது சப்தம் கேட்டதும் இதோ வந்துவிட்டேன் என்றான். குரு மகிழ்ந்து நீ மடையை உடைத்துக்கொண்டு கிளம்பி வந்ததனால் உனக்கு உத்தாலகன் என்ற பெயர் உலகத்திற் பிரசித்தி பெறக்கடவது. உனக்கு சகல வேதங்களும் சுயமாகவே பிரகாசிக்கும். இனி நீ விரும்பின விடத்துக்குப் போகலா மென்று விடை கொடுத்தார். உத்தாலகனென்றால் உடைத்துக்கொண்டு வந்தவன் என்று பொருள்.

 

 

இந்த ஆருணி யென்பவரே உத்தாலகரென்று நூல்களாற் புகழ்ந்து கூறப்பட்டவர். வெறுப்பின்றிக் குரு பணிவிடை செய்து சகலகலா ஞானங்களையும் பெற்றுச் சிறப்பு அடைந்தார்.

பிறகு தெளமியர் தமது மாணாக்கர்களுட் சிறந்த உபமன்யு என்பவனை நோக்கி நீ நமது பசுக்களை மேய்த்துக் கொண்டிரு என்று கட்டளையிட்டனர். அவன் அப்படியே பசுக்களை மேய்க்குந் தொழிலைச் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் குரு அவனை யழைத்து நீ யெடுத்து வரும் பிக்ஷான்னத்தை யெனக்குக் காட்டிப் பின் புசி யென்றார். அவன் அப்படியே பிக்ஷான்னத்தைக் கொண்டுவந்து வைத்தான். அவர் அவ்வன்னத்தைத் தாமே உண்டுவிட்டார். இவ்வாறே தினந்தோறும் புசித்து வந்தார். பிறகொருநாள் ''உபமன்யு! நீ பிக்ஷை யெடுத்து வரும் அன்னத்தை நான் புசித்து விடுகிறேனே; நீ புஷ்டியா யிருக்கிறாயே எவ்வாறு ஜீவனம் செய்கிறாய்'' என்று கேட்க, அவன் நான் இரண்டாம் தடவை பிக்ஷை யெடுத்து ஜீவிக்கிறேன் என்று விடை பகர்ந்தான். " குரு நீ செய்தது தவறு. உன்னைப்போல் பலபேர் பிக்ஷை யெடுப்பார்கள். நீ யிரண்டாம் முறை பிக்ஷை யெடுத்தால் மற்றவர்களுக்கில்லாமற் போகும். அதனால் நீ திருடனாவாய். இனி யப்படிச் செய்யாதே'யென்று கூறினார். இன்னும் சின்னாட்கள் கழிந்தபின் ஒருநாள் உபமன்யு நீ யிரண்டாம் முறை பிக்ஷை யெடுப்பதில்லையே எப்படி ஜீவிக்கிறாயென்று கேட்டார். உபமன்யு நான் பசுவின் பாலைக் குடித்து ஜீவிக்கிறேன் என்றார். பசுவின் பாலைப் புசிக்கும்படி நான் உனக்குக் கட்டளையிடவில்லை. அப்பசுவின் பால் அக்கினிஹோத்திரம் யக்ஞங்களுக்கு உபயோகமாவது. அதை நீ குடிக்கத் தகாது என்றார்.

 

இன்னும் சிலநாட்கள் கழித்து உபமன்யூ! நீ யிப்பொழுது எவ்வாறு ஜீவிக்கிறாய்? பசுவின் பாலையும் குடிப்பதில்லையே என்று கேட்டார். சுவாமீ! இப்பொழுது பசுவின் கன்றுகள் ஊட்டின பிறகு அவற்றின் கடைவாயில் ஒதுங்கி யிருக்கும் நுரையால் ஜீவிக்கிறேன் என்றான். குரு அப்பா குழந்தாய்! கன்றுகள் உன்னிடத்தில் பிரியமாயிருக்கின்றன. அதனால் அதிகமாக நுரையை ஒதுக்கும். நீ யதை யருந்தினால் கன்றுகளுக்கு ஆகாரங் குறைந்து அவைகள் இளைத்துப்போகும். இது பசுவின் கன்றுகளுக்குத் துரோகம் செய்வதாகும். இனி யப்படிச் செய்யாதே என்றார். உபமன்யு புசிப்பதற்கு ஒன்றுங் கிடையாமையால் காட்டில் தானாகவே முளைத்திருக்கும் எருக்கம் செடிகளின் இலைகளைத் தின்று ஜீவிக்கத் தொடங்கினான்.

 

எருக்கிலை தின்பதனால் சரீரத்தில் வெப்பம் அதிகரித்துக் கண்பார்வைகள் மறைந்து போயின. கண் தெரியவில்லை. அதனால் வழியை யறியாமல் ஒரு பாழ்ங்கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். மாடுகள் வீடு போய்ச் சேர்ந்தன. அதைக் கண்ட குரு வித்தியார்த்திகளை நோக்கித் உபமன்யு எங்கே யென்று கேட்டார். அவர்கள் " சுவாமி அவனைப் பசுக்களை மேய்க்கும்படி கட்டளை யிட்டீர்களே! அவன் வனத்துக்குப் போயிருப்பான். பசுக்கள் வந்துவிட்டன. அவன் இன்னமும் வரவில்லை " என்று சொன்னார்கள். அப்படியானால் நாமும் வனத்துக்குப்போய் அவனை அழைத்துக்கொண்டு வருவோம் வாருங்களென்று சீடர்களுடன் குருவானவர் அரண்யத்தில் பிரவேசித்தார். அங்கே போய்'' அப்பா குழந்தாய்! உபமன்யு! நீ எங்கே யிருக்கிறாய்? இங்கே வா " என்று அழைத் தார். அது கேட்ட உபமன்யு சுவாமி நான் இந்தப் பாழுங்கிணற்றில் விழுந்திருக்கிறேன்; கரையேற முடியவில்லை யென்று சொன்னான். குரு, அப்பா! நீ யேன் கிணற்றில் விழுந்தா யென்று கேட்டார். அவன் சுவாமீ! புசிப்பதற்கு யாதொன்றுங் கிடையாமையால் எருக்கிலைகளைத் இன்று ஜீவித்தேன். அதனாற் கண்பார்வை கெட்டுப்போனமையால் வழி காண முடியாமல் கிணற்றில் விழுந்து விட்டேன்'' என்று கூறினான். குரு குழந்தாய்! நீ வேதமந்திரங்களால் அசுவினி தேவர்களைத் தோத்திரம் செய். அவர்கள் வந்து உனக்குக் கண்ணளிப்பார்கள் என்று சொல்லி விட்டு மாணாக்கர்களுடன் ஆச்ரமம் போய்ச் சேர்ந்தார்.

 

உபமன்யு அசுவினி தேவர்களைத் துதிக்கத் தொடங்கினான். சூரியனுக்கு முன் செல்கிறவர்களே! சிறகுள்ளவர்களே! அழிவில்லாதவர்களே! தேவலோகத்திற் பிறந்தவர்களே! ரஜோகுணமற்றவர்களே! விமானத்திற் சஞ்சரிப்பவர்களே! ஆபத் பந்துக்களே! நீங்கள் பக்தர்களைக் காப்பாற்றுகிறவர்கள். ஆபத்தினின்றும் விடுவிப்பவர்கள். அஸத்தியமில்லாதவர்கள். நரஸத்தியர் என்று புகழப்படுகிறீர்கள். மோட்சங் கொடுக்கிறீர்கள். கர்ம பலனை விருத்தி செய்கிறீர்கள். தாமரை மலர் மாலையை யணிந்த உங்களைத் துதிக்கிறேன்" என்று வேதமந்திரங்களால் துதித்து எனக்குக் கண் கொடுத்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தான்.

 

இவ்வாறு துதித்துப் பிரார்த்திக்கப்பட்ட அசுவினிகள் பிரத்தியட்சமாய். இதோ நாங்கள் வந்து விட்டோம். உனக்குச் சிறிது பட்சணங் கொண்டு வந்திருக்கிறோம். இதைப் புசி, உனக்குக் கண் தெரியும் என்று கூறினார்கள். உபமன்யு குருவின் கட்டளையின்றி நான் எதையும் புசிப்ப தில்லை என்று கூறினான். தேவர்கள் மருந்துக்கு அது அவசியமன்று, நீ உண்ணு என்று சொன்னார்கள். உபமன்யு நான் குருவின் உத்தரவில்லாமல் எதையும் உண்ணமாட்டேன் என்றான். அவர்கள் "முன் ஒரு தரம் நாங்கள் இதைக் கொண்டு வந்து உன் குருவுக்குக் கொடுத்தோம். அவர் தம் குருவின் உத்தரவில்லாமலே உண்டார்'' என்றார்கள். உபமன்யு "எனக்குக் கண்ணில்லாமல் போனால் போகட்டும். நானிதை உண்ணமாட்டேன்; நீங்கள் விரும்பிய இடத்துக்குப் போங்கள்" என்று சொன்னான். அசுவினி தேவர்கள் சந்தோஷித்து "நாங்கள் உனது குரு பக்தி விசுவா சத்துக்காக மகிழ்ச்சி அடைந்தோம். உன் குருபக்தி உன்னைப் பாதுகாக்கும். உன் கண்பார்வைகள் விளங்கும். சகல சாஸ்திரார்த்தங்களும் உனக்கு விளங்கும்" என்று அநுக்கிரகம் செய்துவிட்டு மறைந்துபோனார்கள். உபமன்யுவுக்குக் கண்பார்வை விளங்கிற்று.

 

அவன் மனமகிழ்ச்சியுடன் குருவினிடம் போய்த் தனக்கும் அசுவினி தேவர்களுக்கும் நடந்த சம்பாஷணைகளையும், அவர்கள் தனக்குக் கண்பார்வை யருளியதையும் சவிஸ்தாரமாகச் சொன்னான். தெளமியர் அதைக் கேட்டு மகிழ்ந்து "உனக்குச் சகல வேதசாஸ்திர இரகசியங்களெல்லாம் விளங்கும்படி நான் அநுக்கிரகம் செய்து விட்டேன். நீ விரும்புகிற இடத்துக்குப் போய் உன் இஷ்டம் போலத் தவசுசெய் " என்று கூறி விடை யளித்தார். உபமன்யு விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார். பைதர் என்பவர் குருவின் கடினமான பணிவிடைகளை யெல்லாம் செய்து கொண்டிருந்து, குருவுக்கு மகிழ்ச்சி யுண்டாக நடந்து விடை பெற்றுச் சென்று கிரகஸ்தாச்சிரமத்தை அனுஷ்டித்துக்கொண் டிருந்தார். அவருக்கும் மூன்று சிஷ்யர்களுண்டு. அவர்களுள் உதங்கர் என்பவர் சிரேஷ்டமானவர். குரு பக்தியிற் சிறந்தவரென்று நூல்களாற் புகழப்பட்டவர். குருபக்தி விஷயத்தில் உதங்கரையே எல்லாரும் உபமானமாக எடுத்துக் கூறுவார்கள். இவர் குரு பக்தியினால் சர்வ ஞானத்தையும் அடைந்து தவச்சிரேஷ்டராய் விளங்கினார்.

தர்மபுத்திரர் செய்த அசுவமேத யாகத்துக்குச் சென்றிருந்த கிருஷ்ணபகவான் மீண்டுந் துவாரகைக்குப் போகும்போது இந்த உதங்கர் ஆச்ரமத்தை யடைந்து, அவருக்கு வந்தனை வழிபாடுகளைச் செய்து பேசிக் கொண்டிருக்கும்போது உதங்கர் " கிருஷ்ணா நீ பாரத யுத்தத்தை முன்னிட்டு அநேக பிரஜைகளை அழித்துவிட்டாய். உன்னால் உலகமே அழிந்து போயிற்று என்னலாம். அதனால் நான் உனக்குச் சாபங்கொடுக்கக் கருதுகிறேன் " என்று கூறினார். கண்ணன், "தபோநிதியே பாரத யுத்தம் நடந்ததற்கு விதியே காரணம். என்னால் ஒன்றும் நடக்கவே யில்லை. பாரத யுத்தத்தில் பிரஜைகள் அழிந்த குற்றம் என்னுடையதன்று. விதியைக்கடக்க வல்லவர் யார்? நீர் சாபம் கொடுக்க விரும்பினாற் கொடும். நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று வணக்கமாய்க் கூறினார். உதங்கர் மனமகிழ்ந்து கண்ணனை உபசரித்து விடை கொடுத்தனுப்பினார். கூட விருந்த தம்பியாகிய சாத்தியகி அண்ணனை நோக்கி "அண்ணா! இவர் யார்? இவர் உமக்குச் சாபங்கொடுக்கிறேனென்று கூறியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக விருக்கிறது " என்று கூறினான். கிருஷ்ணபகவான், "அப்பா! இவர் தான் குரு பக்தியிற் சிறந்த உதங்க மஹாரிஷி என்பவர். மஹா மகிமையுள்ளவர். சபிக்கத் திறமையுள்ளவர். நானும் சாந்தீபினி முனிவரிஷ்டப்படி கஷ்டமான வேலைகளை யெல்லாம் செய்து நிறைவேற்றினதினாலே தான் மஹாமகிமையோடு புகழப்பட்டு விளங்குகிறேன். குரு பக்தியால் ஆகாதது ஒன்றுமில்லை'' என்று கூறியருளினார். ஆதலால் குருபக்தி ஒன்று தான் சகல ஞானங்களுக்கும் காரணமாக இருக்கிறதென்று நன்கு விளங்குகிறது.

 

பூர்வகாலத்திலிருந்த தவச்சிரேஷ்டர்கள் எல்லாரும் குரு பக்தியாலேயே சகல சித்திகளையும் பெற்று விளங்கினார்கள். எந்த வித்தையையும் குருவினிடத்திற் கேட்டே தெரிந்துகொள்ள வேண்டும். கிஞ்சிஞ்ஞர்களாகிய ஜீவர்கள் தாமே யுணர்ந்து கொள்ளு மியல்பில்லாதவர்கள். முன்கூறியபடி குரு சிஷ்யர்களிடத்தில் பொருளை அபேட்சிப்பதில்லை. அவர்கள் தங்களுக்குரிய அறு * தொழில்களாலேயே ஜீவித்தார்கள். ஆகாராதிகளுக்குக் குறைவில்லாத சிஷ்யர்களும் கவலையின்றிக் குருவினா லிடப்பட்ட பணிவிடைகளைச் செய்து கொண்டு ஓதிச் சாஸ்திரங்களின் கரையைக் கண்டார்கள். பிரமசாரிய தர்மம் தவறாமல் நடந்து வந்தது அவர்கள் குருகுலவாசஞ் செய்து சதா குருவின் சந்நிதியிலேயே யிருந்த மையால் சதாசாரப் பிரவர்த்தகர்களாகவே யிருந்தார்கள். ஒழுக்கந் தவறியவர்களைக் குருகுல வாசத்திலிருந்து விலக்கி விடுவார்கள். சிஷ்யரிடம் தவறு கண்ட குருமார்கள் அப்பொழுதே யவர்களைத் தண்டித்து நல்வழிப்படுத்தி வந்தார்கள். அன்ன வஸ்திரங்களுக்குக் குறைவில்லாமையால் மாணாக்கர்களுக்கு ஆசை யென்பதில்லை. சதா வேதசாஸ்திரங்களை ஓதுவதால் மனம் ஒரு நிலைப்பட்டு நிற்கலாயிற்று. மனம் வசப்படவே தெய்வசிந்தனை யுண்டாயிற்று. தெய்வ தியான மகிமையால் ஞான சித்தியைப் பெற்றார்கள். கல்வி யறிவும் சாஸ்திரஞானமும் எளிதிற் கைகூடின. குருகுலவாசத்தில் கல்வியைவிட சதாசாரமே மிகுதியாகக் கவனிக்கப்படும். குருமார்கள் தமது சிஷ்யர்களுக்கு நல்லொழுக்கங்களையே புகட்டி வந்தனர். இது காரணமாகவே முன்னோர்கள் சீருஞ் சிறப்பும் பெற்றுச் சிறந்து வாழ்ந்தார்கள்.

 

* 1. ஓதல், 2. ஓதுவித்தல், 3. வேட்டல், 4. வேட்பித்தல், 5. ஈதல், 6. ஏற்றல்.

 

 

பிறகு நமது பரதகண்டத்திற்குக் கஷ்டகாலம் கிட்டியது. ஒரு சாராரால் பிரமம் என்று புகழ்ந்து கொண்டாடப்பட்ட காலம் நிர்விசாரமாய்ச் சலனமற்று நிற்பினும், ஜீவாத்மாக்களுடைய கர்மத்தை யனுசரிக்கும் வியாதியை முன்னிட்டு மாறிக் காணப்படுவது அதனியல்பு. ஒரே தன்மையான ஒரு கூட்டத்தார்க்கும் ஒரு தேசத்தார்க்கும் நன்மையாகவும் ஏனையர்க்குத் தீமையாகவும் மாறிக் காணப்பட்டுப் பலனளிக்கு மியல்புள்ளது. ஆயினும் அது கர்மத்தைப் பொறுத்தே யாகின்றது. பரதகண்டவாசிகளுக்குத் தங்கள் குலாசார ஒழுக்கங்களில் அசிரத்தை யுண்டானதே யிந்த மாறுதலுக்கு முக்கிய காரணமாம். கர்மத்தில் அசிரத்தை யுண்டாகவே ஒழுக்கங்கள் பிறழ்ந்தன. அதனால் பலவகையான ஆசைகளு முண்டாயின. இத்தருணத்தில் நாஸ்திகர்களும் சமண பௌத்தர்களும் பரவலாயினர். அவர்கள் உபதேசமே ஜனங்கள் மனதுக்கு இனிப்பாயிருந்தது. கலி பிறந்த மூவாயிர வருஷங்களுக்குப் பின்னரே இம்மாறு பாடுகள் தோன்றின.

 

பெளத்த மதத்தைச் சாக்கியபுத்தர் என்றவர் பரப்பினார். விஷ்ணுவே ஒரு காரணார்த்தமாகப் பெளத்தராக அவதரித்ததாகவும் சரித்திரமுண்டு. எவ்வாற்றானும் ஒரு காலத்தில் பௌத்த மதம் நம் நாட்டில் அதிகமாகப் பரவி யிருந்தது. இங்கிருந்தே சீனா, ஜப்பான், திபேத் முதலிய நாடுகளுக்குக் கொண்டுபோகப்பட்டது.

 

வைதிக மதம் தலை யெடுக்கும் போது இந்த மதங்கள் ஒடுங்கி மறைந்து கிடக்கும். வைதிக மதத்தில் சிரத்தை குறையும் போது இம்மதங்கள் பிரபலப்படும். இந்தப் புறமதங்களேயன்றி வைதிகமதமே பல பிரிவுகளாகப் பிரிந்தது. அவற்றுள் சைவம், வைணவம், சாக்தேயம், பாசுபத மென்பனப் பிரதானம். சைவ வைணவங்களே யிப்போது மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விதக் குழப்பங்களாலே வைதிகத்தில் எல்லாருக்கும் சிரத்தை குறைந்து வந்ததனால் குரு சிஷ்ய பரம்பரையும் மாறுபடத் தொடங்கியது. குருமார்களுக்கு வேறு மார்க்கமில்லாமையால் சிஷ்யர்களிடத்தில் பொருளை அபேட்சிக்கத் தொடங்கினார்கள். அதனால் சிஷ்யர்களைக் கண்டித்துச் சிக்ஷித்து நடத்த முடியாமற் போயிற்று. சிஷ்யர்களும் பணம் கொடுப்பதனாலே தம்மை யுயர்வாகவும் குருவைத் தாழ் வாகவுங் கருதத் தொடங்கினார்கள். அந்நிய நாட்டுப் புதிய நாகரிகமும் கலந்து கொள்ளவே குருவை யொரு வேலைக்காரனாகவும் தங்களை எஜமா னர்களாகவும் மதித்துக் குருவின் மேல் அதிகாரம் செலுத்தவும் தொடங்கினார்கள். குருமார்களும் சிஷ்யர்களுக்குப் பயந்து அடங்கி நடக்கலானார்கள். மானத்துக்குப் பயந்த சில கல்விமான்கள் குருத்தொழிலை வெறுத்து ஜீவனத்தை யுத்தேசித்து வெவ்வேறு தொழில்களிற் பிரவேசித்து விட்டார்சுள். இக்காரணங்களால் நியாயமான கல்வி போதனை சீர் குலைந்தது. அந்நிய நாகரிகமே மேலாயிற்று. குரு சிஷ்யர்கள் என்கிற பேரே மறையக் குயுக்தியும் குதர்க்க வாதமும் மிகுந்தன. ஒரு குருவினிடத்தில் பாடங்கேட்பது மிகவுங் குறைவாகக் காணப்பட்டது.

 

தற்காலத்தில் அச்சுக்கூடம் அதிகப்படவே புஸ்தகங்களும் ஏராளமாகப் பிரசுரமாயின. அந்தப் புஸ்தகங்களே பேருக்குக் குருவாயின. குருவின் பேர் சொல்வார் எவரையும் காணோம். நானே படித்துக் கல்வியில் தேர்ச்சியடைந்தே னென்பதே பெருமையாகக் கொள்ளப்பட்டது. ஒரு குருவினிடத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன் என்றால் அது பெருங் குறைவென்று கருதப்படுகிறது. தானே படித்த கல்விமான்களே ஏராளமாகக் காணப்படுகின்றனர். குரு முன்னிலையில் ஓதித் தெளிந்தவர்கள் மிகவும் சொற்பமாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் பொருளீட்டுந் தொழிலிற் பிரவேசித்திருப்பதினால் கல்வி போதிக்க அவகாசமில்லை. இதனால் உண்மையான கல்வியும் உபதேசமும் ஒழிந்து போயின.

ஆயினும் நெறி தவறாதவர்களும், பக்திமான்களும், வைதிக சம்பிரதாய முணர்ந்தவர்களும் முற்றும் ஒழிந்து போகவில்லை. நீறுபூத்த நெருப்பைப்போலக் காலக் கொடுமைக்கஞ்சி மறைந்திருக்கிறார்கள். அவர்களை யாராய்ந்து தெரிந்து கொண்டு அவர்களுக்குப் பணிவிடை செய்து மெய்யான கல்வியையும் உண்மை ஞானத்தையும், தெய்வ மகிமையையும் உணர்ந்து கொள்வது அறிஞர் கடமையாம். இவ்வாறு உணர்ந்து கொண்டாலன்றி உண்மை ஞானம் விளங்காது.

 

சத்தியம், ஞானம், சந்தோஷம், வெறுப்பின்மை, கருணை, போதிப்பதில் ஆவல், இந்தக் குணமுடையவர்களே குருவாக அடைவதற்குரியார். இந்த ஆறு குணங்களும் ஈசுவரனுக்குரிய குணங்களாம். ஆதலால் தெய்வ பக்தியுள்ள உண்மை ஞானிகளுக்கு இக்குணங்கள் உரியவைகளாம். அகண்டமாய், ஏகமாய், சர்வ வியாபகமாய், சர்வஞானமாய், நித்தியமாய், மனோவாக்குகளுக் கெட்டாததாய், உண்மையான ஞானிகளின் அறிவில் அறிவுருவாக விளங்குவதான ஏகரச பரம்பொருளைப் பிறருக்குபதேசிப்பது சிற்றறிவினராகிய மனிதர்களாலியலாது. அந்தப் பரப்பிரமத்தோடு ஏகமாய்க் கலந்து நிற்கும் மெய்ஞ்ஞானிகளே யுபதேசிக்கும் வல்லமை யுடையவராவார். அந்தக் குருவும் பரப்பிரம்மமும் வேறான பொருள்களாகா. ஆதலால் சிஷ்யர்கள் குருவைப் பரமாத்மாவாகவே கருதி வழிபட வேண்டும். குணங்குறி கடந்த அந்தப் பரம்பொருளே மனித உருவங் கொண்டு குருவாக எழுந்தருளும் என்று கொள்ளும் பட்சத்தாரும் பலர் உளர். இவர்கள் தமது குருவையன்றி மற்ற எதனையும் வணங்குவதில்லை.

 

இதில் உண்மையிது. பல கோடி ஜன்மங்களிற் செய்த பூஜா பலத்தால் பரசிவனிடத்தில் உண்மையான பக்தி யுண்டாகும். அந்தப் பக்தியின் முதிர்ச்சியால் ஞானம் கிட்டும். அந்த ஞானத்தில் நிலைபெற்று நிற்பவர் அந்த ஞானாக்கினியால் மல மாயா கன்மங்களைத் தகித்து விடுவர். அதனால் அவர்களது கரணங்கள் எல்லாம் சிவகரணங்க ளாய்விடும். அவர்களும் பிரமத்தில் ஒடுங்கி நிற்பதினால் பிரமமே யாய்விடுவார்கள். அத்தகைய பெரியோரது அனுக்கிரகத்தினாலாகாதது ஒன்றுமில்லை. அவர்கள் தமது கடாட்ச வீட்சண்யத்தினாலும், ஹஸ்த ஸ்பரிசத்தினாலும் திருவடிகளை முடிமேல் சூட்டுதலாலும் தமது சிஷ்யர்களுடைய மலமாயா கன்மங்களை நசிப்பித்து, அஞ்ஞானாந்தகாரந் தொலையுமாறு மெய்ஞ்ஞானத்தைக் கொடுத்தருள்வராதலால் அவர்களுக்கும் பரமாத்மாவுக்கும் வேறுபாடு கிடையாது. வேறாகக் கருதுகிறவன் பிறவிக்கடலைக் கரைகாணமாட்டான். இதுபற்றியே குரு, லிங்கம், சங்கமம் என்று மூன்று வித சொரூ பங்களை நூல்கள் விதித்தன. இவற்றுள் மனித வடிவாய் நின்று உபதேசிப்பவர் குரு. பாணலிங்கம், விக்கிரக சொரூபம், இவையே லிங்கம் தேவனடியாரே சங்கமர். இம்மூன்று சொரூபங்களையும் வணங்கி ஞானம் பெற்று முத்தி பெற்றவர் பலர். இவற்றுள் ஒவ்வொன்றைத் தனித்தனியே வணங்கி முத்தி பெற்றவர்கள் பலர். இவ்வாறு வழிபட்டு குரு பக்தியால் முக்தி பெற்றவர்களே நமது தேசத்திற் பிறந்த மகாத்மாக்கள்.

 

குரு பக்தி செய்கிற புண்ணிய புருஷர்கள் மாதா பிதாக்களையுங் குரு வாகக்கருதிப் பக்தி செய்யவேண்டும். இவ்விருவருள் மாதாவை யதிக உயர்வென்று நூல்கள் புகழ்கின்றன. ஜீவான்மாக்கள் அறிவித்தா லறியுமியல் புள்ளனவென்று முன்னர்க் கூறினோம். தாமேயறியச் சக்தியில்லா தவையேயாம். தந்தையிடமிருந்து ஜீவ சொரூபமே கருப்பாசயத்திற் பதிவது. அது தாயின் உதிராம்சத்தைக் கிரகித்து விருத்தியடைகின்றது. ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி யென்னும் மூன்றவஸ்தைகளுள் ஜாக்கிரமே சிறப்புடையது. ஏனெனில் ஜாக்கிராவஸ்தையிலிருந்து தான் சால ஞானங்களையும் பெற வேண்டும். அதற்கு மனமாதி கருவி கரணங்கள் தாயினிடத்திலிருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றன. பூமியிற் பிறந்து சிசுக்களாயிருக்கும் போதும் தாய்ப்பால் குடிப்பதனாலேயே சரீரம் விருத்தியடைவது பிரத்தியட்சம். இவ்வாறு கருவிகளெல்லாங் கொடுத் தருளிய தாயே உலக அறிவையும் புகட்டுகின்றாள்.

 

''அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்" என்ற உபதேசத்திற் கூறப்பட்ட இருதெய்வங்களுள் தாயே முதல் தெய்வமும் குருவுமாவாள். குருவானவர் தமது சிஷ்யனுக்குக் காட்டுவது போலத் தாயே, தன் குழந் தைக்கு அதன் தந்தையாகிய தெய்வத்தைக் காட்டுகின்றாள். ''அப்பா'' என்று அழைக்கக் கற்றுக்கொடுக்கின்றாள். சாதம் பால் முதலியவற்றின் பேர் சொல்லி அப்பொருள்களைத் தெரிவிக்கின்றாள். பரம்பொருள் உண்டென்பதைத் தாயே குழந்தைக்குத் தெரிவிக்கின்றாள். சுவாமியைக் கும்பிடவும் தொழவுங் கற்றுக் கொடுக்கின்றாள். பாவபுண்ணியங்களுண்டென்று அறிவிக்கின்றாள். பாவத்தொழிலைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றாள். புண்ணிய செய்கைகளைத் தெரிவித்து அவற்றைச் செய்யக்கற்பிக்கின்றாள். சரீர போஷணைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் பெயர்களோடு தெரிவித்து உபயோகப்படுத்தவும் போதிக்கின்றாள். தேவாராதனை செய்யப்படும் விசேஷ தினங்களில் ஸ்நானஞ் செய்து சுத்த வஸ்திரந் தரித்துப் பரிசுத்தராயிருக்கும்படி போதிக்கின்றாள். ஐந்து வயதாவற்குள் ஒரு குழந்தைக்கு உலக வாழ்க்கைக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுந் தாயின் உபதேசமேயாகும். இந்த உபதேசத்தினால் குழந்தைகள் பிறர் சொல்வதைத் தெரிந்து கொள்ளவும், தம் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்கவும் அறிந்து கொண்டு சிறப்படைகின்றன. அதற்குமேல் தந்தை கல்வி போதிக்கத் தொடங்குகிறான். தாயினுபதேசத்தினால் பிறர் கூறுவதை யறிந்து கொள்ளச் சக்திபெற்ற குழந்தை கல்வியிற் சிறப்படைகின்றது. இக்காரணங்களால் சகல அறிவிற்கும் தாயே காரணமாகிறாள். இதனால் தான் "ஈன்றாளி லென்ன கடவுளுமில்" என்று பெரியோர் கூறியருளினார்கள். இவற்றால் தாயே மேலான தெய்வமும் குருவுமாயிருக்கிறா ளென்று வேதாதி நூல்கள் கூறுகின்றன.

 

இதனாலே தான் தந்தையைவிடத் தாய் சிறந்தவளென்று கூறுகிறார்கள். தாய் பாபியானாலும் அவளை நிந்திக்கப்படாது என்கிற விதியுமுண்டு. புத்திரன் சந்நியாசியாக இருக்கிறான். அவன் தகப்பன் அந்தச் சந்தியாசியான புத்திரனை வணங்க வேண்டும். சந்நியாசம் பெற்ற புத்திரன் தாயையே வணங்கவேண்டும். இதனால் தாயின் சிறப்பு மிகப் பெரிது என்றறியலாம். ''அன்னை பிதா'' என்று கூறுவது போல ஸம்ஸ்கிருதத்திலும் "மாதா பிதா'' வென்றே தாயை முன்வைத்துக் கூறப்படுகின்றது. இதனால் தாயே சிறந்த தெய்வமும் குருவுமாமென்று அறிவுள்ளவர்கள் அறிந்துகொள்வார்கள்.

 

கல்வியைத் தானே போதித்து வேதாதி கலைகளையும் முறைப்படி உபதேசித்தால் அந்தப் பிதாவும் சிறந்த குரு தெய்வமாகவே மதிக்கப்படுகிறான். பிதாவை விடக் கல்வி போதித்தவன் சிறந்தவன். அவனை விட வேதாதிகலைகளை யோதுவித்தவன் சிறந்தவன். அவனைவிட மந்திரம் முதலிய வுபதேசித்துத் தேவாராதனை செய்யக் கற்பித்தவன் சிறந்தவன். பிரம ஞானோபதேசம் செய்து பிரமத்தை யறிவிப்பவன் எல்லாரையும் விடச் சிறந்தவன். தந்தை சரீரத்தை மாத்திரம் கொடுக்கிறான். ஞானோப தேச குருவோ ஜனன மரணங்களற்ற நித்தியாநந்த பேரின்ப மோட்சத்தை யளிக்கிறான். ஆதலால் ஞானோபதேச குருவை யெல்லாரினு மேலானவனென்று நூல்கள் கூறுகின்றன. பிரமஞானம் பெற்றவனாயினும் முதற்றெய்வங்களாகிற மாதா பிதாக்களை அலட்சியம் செய்யக் கூடாது.

 

முற்காலத்தில் தர்ம சந்தான விருத்தியைக் குறித்தே விவாகம் செய்யப்பட்டது. அதனால் அந்த மாதா பிதாக்கள் தர்ம சந்தானத்தையுற்பத் தியாக்கித் தர்மாபி விருத்தி செய்தார்கள். அதனால் புத்திரர்களைச் சதாசாரத்தில் பிரவிருத்தி யுள்ளவர்களாக நடத்தி வந்தார்கள். மாதா பிதாக்களுக்கு அபரக்கிரியை செய்வதே புத்திரர்களுக்குச் சிறந்த தர்மமாகக் கருதப்பட்டது. அது மாதுர்யக்ஞம், பிதுர் யக்ஞமென்று நூல்களாற் புகழ்ந்து கூறப்பட்டது. மாதா பிதாக்களைப் போஷிப்பதே புத்திரர்களுக்குச் சிறந்த தர்மமா மென்பர் பெரியோர். இல்லறத்திலோ அதற்கு மாறாகத் தன் சுகத்தைக் கருதியே விவாகம் நடத்தப்படுகிறது. தர்மாபி விருத்திக்காகப் புத்திரர்களைப் பெறுவதென்பதில்லை. தமது வயோதிக காலத்தில் தம்மைப் போஷிப்பதற்காகவே புத்திரர்களை விரும்புகிறார்கள். எந்த வழியிலாவது பணம் சம்பாதிப்பவனே சிறந்த புத்திரனாகப் புகழப்படுகிறான். கல்வியும் ஞானமுமுள்ள புத்திரன் பெருமை பெறுவதில்லை. இதனாலும் வேறு காரணங்களாலும் அதிதி பூஜையாதி பஞ்சமகா யக்ஞங்களும் மறக்கப்பட்டன. காசு சம்பாதிப்பதையே முக்கியப் பொருளாகக் கொண்டு புத்திரர்களைப் படிப்பிப்பதினால் சமய நூலுணர்ச்சி மறைந்தே போய்விட்டது. தெய்வ முண்டென்பது சந்தேகமே; அதைக் கவனிப்பாரில்லை. தெய்வ சிந்தனை குறைந்ததனால் தர்ம சிந்தை குறைந்து போயிற்று.

 

தெய்வநிச்சயமும் தர்ம சிந்தனையுங் குறையவே பஞ்சமும் தரித்திரமும் பரவின. அதுகாரணமாகவே பலவகையான நூதன நோய்கள் உற்பத்தியாகின்றன. வானம் மழை பொழிதலை மறந்தது. அகால மழை பெய்து பயிரை யழிக்கின்றது. காலமழை யில்லை. சூரியன் காய்ந்து கொல்கிறான்.

 

இனியாவது பிரஜைகள் தமது புத்திரர்களுக்கு மத நூல்களைப் போதித்துத் தெய்வ ஞானமும் தர்மசிந்தையு முண்டாகும்படி செய்வார்களாயின் ஈடேறுவார்கள். பிராமணர்களிற் பலர் சுஜாதி தர்மத்தைக் கவனிப்பதில்லை. முன்பு அவர்களாலேயே உலகம் நடைபெற்று வந்தது. பிராமணர்கள் தமது குலாசாரந் தவறாமல் நடப்பதற்காகவே பலவகையான ஆபத்தர்மங்கள் நூல்களால் விதிக்கப்பட்டுள்ளன. சமைய நூல்கள் போதிக்கப்பட்டால் அவர்கள் ஆபத்தர்மங்களை யுணர்ந்து, தமது குலாசார ஒழுக்கம் கெடாமலிருந்து, தர்மத்தையும் செய்வார்கள். பிராமணர்களுடைய தவறுதலாலேயே ஏனைய வருணத்தாரும் நெறிகடந்து நடக்க நேரிட்டது. பூசுரர்களென்று நூல்களாற் புகழப்பட்டு யாவருக்கும் நன் மார்க்கத்தை யுபதேசித்துக் குருமார்களென்று சிறந்து விளங்கின பிராமணர்கள் இப்பொழுது தாங்களிருக்கும் நிலைமையை யோசித்து, முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட சன்மார்க்கத்தைக் கைக்கொண்டு நடக்க முயல்வார்களானால் அப்பொழுதே பரத கண்டத்துக்கு க்ஷேமம் பிறந்ததென்னலாம்.

 

(குரு) முற்றிற்று.

தெய்வம்

முன்கூறியவாறு மானாபிமானங் கருதாமல் குருவுக்குப் பணி விடை செய்வதால் பெறும் பேறு யாதெனின், ஜீவான் மாக்கள் மெய் யறிவின்மையினால் பிரபஞ்ச பாசத்திற் கட்டுண்டு, கன்மங்களைச் செய்து, அதனால் இறந்தும் பிறந்தும் பற்பல வண்டங்கடோறும் பற்பல வுரு வங்கொண்டுழன்று களைத்த களை தீரப் பரமபதியின் திருவடி நிழலை யடைந்து என்று மழிவில்லாத பேரின்பந் துய்த்திருப்பது வேயாம். அன்றியும் இம்மையிற் புகழும் சுகமும் மகிமையுமுண்டாம். அதனாற் குரு பணிவிடை செய்து அவருக்கு மகிழ்ச்சியுண்டாக நடந்து, அவர் அருமையாய்ச் சம்பாதித்து வைத்திருக்கும் பொருளில் ஏதாவது ஒன்றைப் பெறுவது குரு பணிவிடைக்குப் பிரயோசனமாம். அப்பொருள்களாவன: - ஞான யோகம், மந்திரயோகம், பக்தியோகம், மானசயோகம் முதலியவையாம். இவையெல்லாம் மனதை யொரு நிலையில் நிறுத்தும் சக்தியுடையனவாம். மனம் ஒரே நிலையில் நிலைத்து நில்லாவிடில் அதிக சூட்சுமமாய் மனவாச கங்கடந்து நிற்கும் பரம்பொருளையறிவது கூடாதாம்.

 

இனித் தெய்வமென்பது யாது? பதார்த்தமா? குணமா? பதார்த்தமெனின் எவ்வித ஆராய்ச்சிக்கும் புலப்படாமையேன்? குணமெனின் ஒரு பொருளைப்பற்றி நிற்கும் தன்மையுடையதேயன்றித் தனித்த ஒருபொரு ளாகாது. பொருளாகாதது எல்லாம் இன்மையிற் கொள்ளப்படுமாதலால் தெய்வமுண்டென்று நம்புவதெப்படி? எவ்வகையாலுங் காணப்படாத தோர் பொருளை யுண்டென்று நம்புவதினாற் பயன் யாது? அது காரண மாகத் தவமுதலிய செய்து கஷ்ட நஷ்டங்களை யடைவது வியர்த்தமல் லவோ? பதார்த்த சோதகர்கள் சோதனை செய்து பார்த்ததில் அவ்விதமான பொருள் ஒன்றுண்டென்று ஒப்பவில்லையெனின், பரிசோதகர்கள் எல்லாரும் ஜடப்பொருள்களையே பரிட்சித்தறிகின்றார்கள். இது ஜடப்பொருளன்று ஆதலால் அவர்களது சோதனைக்ககப்படவில்லை. பொருள்கள் மூவகையென்று நமது வேதாதி நூல்கள் கூறுகின்றன. இதனைப் பதிபசு பாசமென்று சைவாகமங்கள் கூறும். ஜகஜீவபரம் என்பர் அத்வைதிகள். சித் அசித் ஈசுவரனென்பது வைணவாகமம். இவற்றுள் பதியென்பதே பரம், ஈசுவரன் என்பனவற்றால் ஓதப்படும். சித்து ஜீவன் என்பன பசுவையுணர்த்தும். பாசம், ஜகம், அசித் மூன்றும் ஒரு பொருளனவாம். இவற்றுள் பாசம், ஜகம், அசித் என்பன ஜடப்பொருளைக் குறிக்கும். ஆன்மாவே சித்து, பசு, ஜீவனென்பனவற்றால் விளக்கப்படும். ஜடப்பொருள்களை இந்திரியங்களாலறியலாம். கண்ணாற் காணப்படுவது உருவப்பொருளாம். இந்தப் பொருளே கண்களாலும் அவற்றுக்கு உதவி யாயிருந்து நுண்ணிய பொருளைத் தெரிவிக்கும் கருவிகளாலும் காணப்படுவனவாம். ஏனைய சித்துப் பொருள் எவ்விதமான கருவிகளாலும் இந்திரியங்களாலுங் காணப்படுவதல்லவாம்.

 

இப்பொருளைக் காண்பதற்கு நூல்களும், மனசும், யோகமுமே கருவிகளாம். மனம் இந்திரிய ராஜனென்று வியந்து கூறப்படுகின்றது. ஐம்புலன்களாலு மறிவிக்கப்படும் விஷயவறிவை மனமேயறிந்து ஜீவ னுக்குத் தெரிவிக்கின்றது. இந்திரியங்களாலும் கருவிகளாலு மறியப் படாத சில லௌகிக விஷயங்கள் கலக்கமற்று நிர்மலமாயிருக்கும் மனதினாற் கண்டு கொள்ளப்படுவது பிரத்தியட்சம். நூல்களாற் கூறப்படும் அரிய விஷயங்களையும் மனமாராய்ந்து அறியுமியல்புள்ளது. விஷயவாசையால் அழுக்கடைந்து மலினமான மனதினாற் காண்பதரிது. சுத்தமா யுள்ள மனங் காணவல்லது.

 இனிப் பரம்பொருள் என்பது யாதெனின், ஒரு பொருளில் ஒருவித சக்தியையும், சில பொருள்களில் பல சக்திகளையும் காண்கின்றோம். எல்லாச் சக்திகளுக்கும் இருப்பிடமான ஒரு பொருளுமுண்டென்பது நூல்களின் கருத்து. அந்நூல் கூறியவழி யொழுகி அப்பொருளையுணர்ந்து களித்து இறுமாந்திருக்கும் மஹாத்மாக்களுக்கு மிதுவே யபிப்பிராயம். அது அளவிறந்த சக்திகளையுடையதாதலால் எல்லாப் பொருள்களிலும் அடங்கி நிற்கும். அவற்றுக்கு மேலும் வியாபகமாயிருக்கும். சர்வசக்தி யுடையதாதலால் சர்வ ஞானமுள்ளதுமாம். எக்காலத்தும் எவ்விடத்தும் ஏற்றக்குறைச்சலின்றி ஒரே தன்மையதாய் நிறைந்து நிற்றலால் அதைச் சத்து என்று நூல்கள் கூறும். சத்தும் சித்தும் ஒன்று பட்டது ஆனந்த மயமாம். ஆதலால் நாம் கூறும் பிரமம் சத்து சித்து ஆனந்த (சச்சிதானந்த) சொரூபமுடையது என்பது நூல்களின் கருத்து. சத்து என்பது என்று மழியாது முக்காலத்துமுள்ள உண்மை; சித்து என்பது ஞானம்; அதாவது அன்னிய பிரகாசத்தை விரும்பாமல் சுயப்பிரகாசத்தால் யாவற்றையும் பிரகாசிப்பிப்பது; ஆனந்தம் என்பது துக்கமற்றது; இன்பம். இம்மூன்றும் ஒன்றுபட்டதானால் லௌகிக சோதனையாற் காண்பதெங்ஙனம்! ஆயின் இதனைக் காண வியலாதாயின் முயற்சியாற் பயன் யாதெனின், இந்திரியங்களுக்கு எட்டாமையினாலேயே உள்ள ஒரு பொருள் இல்லாமற் போய் விடாது. உள்ள பொருள் உள்ள பொருளேயாம். எதெதற்கு எந்தெந்த வகையான பிரயத்தனம் செய்யவேண்டுமோ அத்தனை யுணர்ந்து முயற்சிப்பதே முயற்சியாம். இந்திரியங்களாற் காண வியலாத வுலகப் பொருள்களைப் பற்பல கருவிகளைக் கொண்டு பரிசோதிப்பது போல, உலகங்கடந்த பொருளை உலகங்கடந்த ஞானமாகிய கருவியைக் கொண்டே யறியவேண்டும். ஞானத்தின் முன் ஜடம் நில்லாது. ஜடத்தின் முன் ஞானம் நில்லாது. ஆகையால் யோகக்காட்சி யென்னுங் கருவியினாலே ஜடசித்துக்களைப் பிரித்தெடுத்து ஞானமாகிய கருவியினாலே ஞான சொரூபியான பரம்பொருளை யறியவேண்டும்.

 

யோகமென்பது மனம் ஞானத்தோடு கலப்பதேயாம். ஞானமென் பிரமசொரூபமென்பது நிச்சயம். அது அசைவற்ற பொருளாம். மனமென்பது சதா புலன் வழியே சென்று அலைந்து திரியுமியல்புள்ளது. அதனால் அது அசைவற்ற ஞான சொரூபத்தைக் காணாது. ஆயினும் அதை யுதவியாகக் கொண்டே யறியவேண்டும். அதற்காகவே மந்திராதி யோகங்கள் நூல்களாற் கூறப்பட்டுள்ளன. அவற்றைத் துணையாகக் வகை கொண்டே நமது முன்னோர் பிரமப்பொருளைக் கண்டு தரிசித்தார்கள், ஞானமென்பது யாதெனின், பாச சம்பந்தமில்லாததே மெய்யறிவாகிய ஞானமாம். நாத சொரூபமாகிய வர்ணங்களும் ஞானமயமாம். நாத மென்பது பாசமற்ற சுத்த மாயா சொரூபமாம். அது சத்தமாகக் காணப் படுதலால் அதனை சத்தப் பிரமம், நாதப் பிரமமென்று நூல்கள் கூறும். ஞானமயமான இந்த நாதம் பிரமத்துக்கு ஒரு சொரூபமாதலால் இதனை யுபாசித்தால் அது பிரமோபாசனையாம். பல வர்ணங்கள் கூடியது ஒரு மந்திரம் என்னப்படும். வர்ணங்கள் என்பது எழுத்து. எழுத்துக்கள் ஒலி வடிவமென்றும், வரி வடிவமென்றும் இருவகைப்படும். இவ்விரு வகை சொரூபங்களையும் உபாசிப்பதே மந்திரயோகமாம். ஒலிவடிவம் தியானத்துக்கும் வரிவடிவம் பகிர் பூஜைக்குமாம். தியானிக்கும் பொழுது வேதங்களாற் கூறப்பட்ட உபாசனா மூர்த்தியையும், தனக்குபதேசித்த குருவையும் மறவாமல் தியானிக்க நாவசையாமல் மந்திரத்தையு முச்சரிக்க வேண்டும். இதனால் ஒரே காலத்தில் குருவையும் உபாசனா மூர்த்தியையுந் தியானிப்பதிலும், மந்திரத்தையுச்சரிப்பதிலும், மனங் கட்டுப்பட்டு நிற்கும். ஏககாலத்தில் மூன்றிலும் மனதைச் செலுத்த முடியாவிட்டால் ஒன்றிற் செலுத்தவேண்டும்.

குரு சொரூபம், உபாசனாமூர்த்தி சொரூபம், வர்ண சொரூபம் இம் மூன்றிலும் சிந்தை செல்லும்படி பழகவேண்டும். விஷயப் பொருள்களில் மனதைச் செலுத்தக்கூடாது. வர்ண சொரூபம் உபாசனாமூர்த்தியினிடத்தில் மனதைச் செலுத்தும். குரு சொரூபம் அதற்குண்டாகும் இடையூறுகளைக் களையும் உபாயங்களைப் புலப்படுத்தும். பொருள் சொரூபம் மனதைத் தன்னிடத்தில் ஆகர்ஷிக்கும். இதனால் மனதின் அஞ்ஞான விருள் ஒழியும். அஞ்ஞானத்தை ஒழிப்பதே மந்திரமாமென்க. (மந்) மந்த அறிவாகிய அஞ்ஞானத்தைக் குறிக்கும். (திரம்) என்பது அவ்விருளைத் திரஸ்கரித்தல் (நீக்குதல்) என்று பொருள்படும். இரண்டையுங் கூட்ட அஞ்ஞானத்தை யொழித்தல் என்பது போந்த பொருளாம். மந்திரயோகத்தால் மனதிலுள்ள அஞ்ஞான களங்கமொழியவே, அது நிர்மலமாய் உபாசனாமூர்த்தி சொரூபத்தையுணரச் சக்தியுடையதாம். அந்த மனமே மனோ வாக்காதிகளாற் காணப்படாதென்ற பொருளைக் காணக் கூடிய சிறந்த கருவியாம். மந்திரயோகம் சித்தியானபின் அவனால் அடையப்படாத தொன்றுமில்லை. இம்மந்திரயோகத்தில் வழுவாமல் ஒழுகத்தானே ஞானயோகம் கைவரும். இந்த மந்திரயோகமாகிய கருவி குரு பணிவிடையா லடையப்படுவதே யன்றி வேறெவ்வகையாலும் சித்திப்பதரிது.

 

தெய்வம் - பக்தியோகம்

 

பக்தியோகம் என்பது கடவுளினிடத்தில் மனதைச் செலுத்துவதா கிய அன்பு. பக்தியென்பது அன்பு என்று பொருள் தரும். இதனால் பக்தி என்பது வடமொழியும் அன்பு என்பது தென்மொழியுமாமென்றறியக் கூடும். அன்பு என்பது ஒருவகையான உள்ளத்தின் நெகிழ்ச்சியாம். அது புத்திரன் மனைவி சகோதரர் சிநேகர் இவர்களிடத்திலுண்டாகும் அன்புபோல்வதன்று. அறியப்படாத உலகங்கடந்த பரம்பொருளிடத்து வைக்கும் ஆசையே பக்தியாம். எல்லாவற்றுக்கும் எல்லாருக்கு மேற் பட்ட சச்சிதானந்தப் பரசிவத்துக்கு நாம் அடிமையாயிருக்கிறோம் என்கிற உள்ளக் கிளர்ச்சியா லுண்டாவதாம்.

 

உலகவின்பமெல்லாவற்றிலும் வெறுப்புண்டாய்ச் சப்த தாதுக்களாலாக்கப்பட்ட தன் சரீரத்தினிடத்தும் வெறுப்புண்டாய்ப் பரம்பொருளின் கண் சித்தத்தைச் செலுத்துவதே பக்தியாம். இவ்வன்புந் தலையன்பு, இடையன்பு, கடையன்பு என்று மூவகையாம். இவை முறையே ஒன்றி னொன்று தாழ்ந்தது. தலையன்பே பக்தியோகத்துக்குரியதாம். இவ்வன்பு பல ஜன்மப் பழக்கங்களினாலுண்டாவது. பூர்வ ஜன்மங்களிற் செய்த புண்ணியத்தின் பயனாகவும் உண்டாகும்.

''உலகர்சே ருறுதிப் பயனெவற் றினுக்கு
      முறைவிடமாய்த் துயர முழுதும்
விலகுறத் துமிக்குங் கணிச்சியா நின்றாள்
      விரைமலர்க் கியற்றுமெய்ப் பக்தி
அலகிலாப் பிறவி தொறும் புரி தவத்தா
      லல்லதெவ் வாற்றினு மரிதே
லேமதொன் றடைதற் குறுமிடை யூறு
      நாதனே பலவுள வன்றே.''

 

என்ற ஆன்றோர் வாக்கானுணரப்படும். ஏனெனில் மனைவி மக்கள் அன்னை பிதா முதலிய சுற்றத்தாரானும், பொருளீட்டுந் தொழின் முயற்சியானும் நேரிடக்கூடிய இடையூறுகள் பல. பகைவருந் தீங்கிழைப்பர். இவைகளையெல்லாம் பொருள் செய்யாமல் சிந்தை தடுமாற்ற மடையாது நிற்பது வெகுகடினம். புண்ணியாத்மாக்களுடைய சகவாசத்தாலுங்கூட பக்தி உண்டாகும். இந்தப் பக்தியானது வம்ச பரம்பரையா யாராதிக்குந் தெய்வத்தினிடத்திலுண்டாகும். குரு உபதேசித்த சொரூபத்தினிடத்திலுண்டாகும். அல்லது தன் மனது விரும்பிய தெய்வ சொரூபத்தினிடத்தி லுண்டாகும். நேர்ந்தபோது அந்தச் சொரூபத்தை யெப்போதுஞ் சிந்திப் பதினாற் பக்தியுண்டாகும்.

 

இந்தப் பக்தியைக் குருபக்தி, இலிங்க பக்தி, சங்கமபக்தி யென்று மூவகையாகக் கூறுகின்றார்கள். குருபக்தியாவது தனக்குபதேசஞ் செய்த குருவின் சொரூபத்தையே தெய்வ சொரூபமாகக் கருதி வழிபடுவது. இலிங்க பக்தியாவது ஆலயங்களி லெழுந்தருளியிருக்கும் விக்கிரக சொரூபம், பாணலிங்கம், சாளக்கிராம முதலியவற்றில் தெய்வபாவனை செய்தலாம். சங்கமபக்தியாவது தெய்வத்தைப் பக்தி செய்யு மடியாரையே தெய்வமாக வழிபடுவது. உயிரில்லாத பொருள்களினிடத்தில் வேதமந்திர தந்திரங்களால் பிரதிஷ்டிக்கப்படும் இலிங்க பக்தியை விடச் சங்கமபக்தி சிறந்தது. அதைவிட குருபக்தி சிறந்தது. ஏனெனில் சச்சிதானந்த பரம்பொருளின் பிரகாசம் ஜடப்பொருள்களில் விளங்குவதைவிடச் சித் பொருள்களில் அதிகமாக விளங்கும். ஏனெனில் ஜீவான்மாவே சிவ சொரூப மாதலால். கலிகாலத்தில் தம்மைப் போன்ற மனித சொரூபத்தைத் தெய்வமெனக் கருத அநேகருக்கு மனம் நாணும். ஜடப் பொருள்களைக் களங்கமற்று வணங்கித் துதிப்பார்கள். இதனைக் கலிகாலவியல் பென்று விட்டு விடுவோம். எந்தச் சொரூபத்தினிடத்தில் தன் மனம் உருகுகிறதோ அந்தச் சொரூபத்தையே வழிபடவேண்டும். அதுவே பெரும்பயனளிக்கும்.

 

இனியிம் மூன்றையும் விடச் சிறந்த தெய்வ சொரூபமுமுண்டு. அது மாதா பிதாக்களின் சொரூபமாம். இதனையே மாதுர்ப்பக்தி, பிதிர்ப்பக்தி யென்று நூல்களாற் புகழ்ந்து கூறப்பட்டது. இதன் மகிமை யளவு கடந்தது. இதனையொரு குருவினிடத்தில் உபதேசம் பெறவேண்டியதில்லை. ஆயினும் இந்தச் சொரூபங்களும் தெய்வவாராதனைக்குச் சிறந்த உருவங்க ளாமென்று நூல்களாலும் குருவினாலுமே யறியத்தக்கது. மாதா பிதாக்க ளிடத்தில் புத்திரர்களுக்கு இயற்கையிலேயே பக்தி யுண்டாயிருக்கும். அதனுண்மையை யுணர்ந்து அவர்களிடம் பக்தி செலுத்துவது எளிதாம். இந்தப் பக்தியினால் சகலமும் எளிதிற் கைகூடும். இதனைக் சிறுபொழுதி லேயே உணர்ந்து உய்யும் பொருட்டே " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்)) என்றும் "ஆலயந் தொழுவது சாலவு நன்று" என்றும் அன்னையார் உபதேசமொழி விளக்குகின்றது. மாதா பிதாக்களின் சொரூபத்துக்குப் பிற்பட்டதே மற்றது. ஏனெனில் ஜகதீசனுக்குக் கருணையே சொரூபமும் குணமுமாகும். அந்தக் கருணையினாலேயே ஜீவான்மாக்களுக்கு முக்தியளிக்கும் பொருட்டுத் தனு கரண புவன போகங்களைக் கடவுள் சிருஷ்டித்தளித்தார். இந்தக் கருணையினாலேயே சிஷ்டர்களைப் பரிபாலித்தும் துஷ்டர்களைச் சிக்ஷித்தும் வருகின்றார். கருணையினாலேயே பக்தர்களுக்கிரங்கிப் பிரத்தியக்ஷமாய் வந்து அனுக்கிரகிக்கின்றார். மாதா பிதாக்களது சொரூபத்தில் மறைந்து நிற்கும் சைதன்யப் பொருளுக்கும் கருணையே சொரூபமாமல்லவா? தாங்கள் பெற்ற குழந்தைகளிடத்தில் அவர்களுக்கும் அன்பும் கருணையு மளவுகடந்ததாம். தங்கள் புத்திரர்கள், தங்களை வழிபடும் குழந்தைகளினிடத்தில் கருணை யதிகமாகப் பெருகும். பெருகவே அந்தச் சைதன்னியங்களின் அனுக்கிரகம் புத்திரர்களிடத்தில் நிலைபெற நிற்கும். ''பாசபத்தஸ்தாஜீவ: பாசமுக்தஸ்ததாசிவ:'' என்று எழுந்த வேத வசனத்தால் ஜீவான்மாவும் பரமான்மாவும் வேற்ற்றதென்று விளங்குகிறபடியால் மாதா பிதாக்கள் மனமகிழ்ந்து செய்யும் அனுக்கிரகம் சிவானுக்கிரகமேயாம். இதனால் மாதா பிதாக்களை யாராதிப்பதால் கடவுள் கருணையைச் சீக்கிரம் பெறலாகுமென்று கொள்ள வேண்டும். இதைப் பற்றி ஒரு சிறிய இதிகாசோபாக்கியான மிங்கெழுதவேண்டிய அவசிய மிருக்கிறது.

 

கௌசிகன் ஒரு பிரமசாரிப் பிராமணன். கடுந்தவம் செய்துகொண்டிருந்தான். ஒரு பெரிய ஆல விருட்சத்தின் நிழலில் தவம்புரிந்தான். ஒருநாள் ஒரு கொக்கு அவன் மேலெச்சமிட்டது. பிராமணன் கோபத்தோடு கொக்கை நோக்கினான். உடனே கொக்குச் சாம்பலாய்விட்டது. அதனால் தனது தவத்தை மதித்து மகிழ்ச்சியடைந்து பக்கத்திலுள்ள கிராமத்திற்குப் பிக்ஷையெடுக்கச் சென்று ஒரு பதிவிரதை வசிக்கும் கிரகத்துக்குட் புகுந்து "பவதி பிக்ஷாந்தேகி'' என்று கூறிப் பிக்ஷை கேட்டான். அந்தப் பதிவிரதை தன் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபடியால் உடனே வராமல் சற்றுத் தாமதித்து வந்தாள். பிராமணன் மிக்கக் கோபங்கொண்டு இப்படிக் காக்கச் செய்தது நியாயமல்லவென்று அவளை யெரித்துவிடுவது போல நோக்கினான். மாது "பிராம்மணா! நான் பதி விரதை. எனக்குக் கணவனே தெய்வம். அவர் பணிவிடையிலிருந்த என்னை, நீர் கொக்கை யெரித்தது போல எரித்துவிட முடியாது. உமக்கு இன்னம் தர்ம இரகசியந் தெரியாது. ஆகையாற் கர்வங்கொண்டு விட்டீர். மிதுலைமாநகரத்தில் தர்மவியாதரென்று ஒரு வேடர்குலத்து மஹாத்மா விருக்கிறார். அவரிடம் போய்த் தர்மந் தெரிந்து கொண்டுவந்து பின் செய் யவேண்டிய தவசைச் செய்யும்" என்று கூறினாள். பிராமணன் திடுக்கிட்டு நாம் கொக்கை யெரித்தது இந்தம்மாளுக்கு எப்படித் தெரிந்ததோ வென்று வியப்படைந்து உடனே மிதுலையை நோக்கிப் புறப்பட்டான்.

 

மிதுலைபோய்ச் சேர்ந்ததும் தர்மவியாதரிருப்பிடத்தை விசாரித்துக் கொண்டு போனான். அவர் ஒரு கடையில் மாமிசங்களை வெட்டி விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு மனதுக்குள் வெறுப்படைந்து சற்று தூரத்தில் நின்றுகொண் டிருந்தான். கொஞ்ச நேரம் பொறுத்துத் தர்மவியாதர் கௌசிகனிடம் வந்து, பதிவிரதையினால் அனுப்பப்பட்ட நீர் என்னுடன் என் கிருகத்திற்கு வாருமென்று அழைத்துக்கொண்டு சென்றார். பிராமணன் மிக்க வியப்படைந்து அந்தப் பதிவிரதை அனுப்பியதை யிவர் எப்படித் தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை, இது மிகவும் ஆச்சரிய மென்று சிந்தித்துக்கொண்டே அவர் பின் சென்றான்.

வீட்டுக்குப் போனவுடன் பிராமணனுக்கு ஒரு பீடமிட்டு உட்கார வைத்து விட்டுச் சற்றுச் சிரமபரிகாரம் செய்துகொள்ளுங்கள், நான் சீக்கிரமாய் வருகிறேனென்று சொல்லி மனைக்குட் புகுந்தார். அங்கே ஒரு அறையில் அவருடைய மாதா பிதாக்களிருந்தார்கள். வயது முதிர்ச்சியினால் நடக்கவும் சக்தியற்றவர்களா யிருந்தார்கள். அவர்களிடம் சென்று முறைப்படி அவர்களுக்கு வணங்கிப் பிறகு ஸ்நானம் செய்வித்து, நல்ல சுத்தியான வஸ்திரந் தரிப்பித்து, உபசாரத்துடன் அடிசிலூட்டி மறுபடியும் அவர்களைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டுப் பக்கத்தில் நின்று கொண்டு, கௌசிகன் வந்த செய்தி கூறி, "அவர் ஏதோ சில சந்தேகங்களைப் பற்றிக் கேட்க வந்திருக்கிறார். அவரிடம் சிறிதுநேரம் பேசவேண்டும். அதன் பிறகுதான் நான் போஜனம் செய்யவேண்டும்'' என்று கூறி உத்தரவு பெற்றுக்கொண்டு கௌசிகனிடம் வந்து மரியாதையாய் உட்கார்ந்து கொண்டு என்ன கேட்க வேண்டுமோ அவற்றைக் கேளும் என்று கூறினார். கௌசிகர், நீர் மஹா ஞானியாயிருந்தும் மாமிசத்தை வெட்டி விற்பது நியாயமாமோ என்றார். தருமவியாதர், " நான் ஜீவஜெந்துக்களைக் கொல்வதில்லை கொல்பவரிடத்தில் விலைகொடுத்து வாங்கி லாபத்திற்கு விற்கிறேன். அந்த லாபத்தைக் கொண்டு மாதா பிதாக்களையும், மனைவி மக்களையும் போஷிக்கிறேன். தான தருமங்களும் செய்கிறேன். ஏனென்றால் மாமிசம் விற்று ஜீவிப்பதே எங்கள் குலதர்மம். குலதர்மத்தை விடக் கூடாது. அன்றியும் இந்த மிதிலையில் ஒருவரும் தமது ஜாதியாசாரம் கடந்து நடக்கக்கூடாது. நடந்தால் ஜனக மஹாராஜா அவர்களைக் கொடுமையாய்த் தண்டிப்பார். இராஜாக்கினைக்கு அடங்கி நடக்க வேண்டுவது அவசியமானது. அதனால் பாபம் அணுகாது'' என்றார். கௌசிகர் அந்தப் பதிவிரதை யென்னை உம்மிடம் அனுப்பினதை நீர் எப்படி அறிந்து கொண்டீர்? அந்தம்மாள் உம்மை யெவ்வாறு அறிந்து கொண்டார்? இது வெகு ஆச்சரியமாயிருக்கிறது; அதை விளங்கக் கூறவேண்டு மென்றார்.

 

தருமவியாதர், "குலாசார முறை தவராமல் நடந்து தெய்வத்தை யாராதிப்பதினாலே தான் நாங்களிருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். குலதர்மமும் சாதியாசாரமும் கர்மபந்தங்களை யொழிப்பதற்காகவே தெய்வத்தினால் நிருமிக்கப்பட்டன. அதனை இரிஷிகளுணர்ந்து வெளியிட்டார்கள். அரசர்கள் அந்தத் தருமங்களைச் சிதையாமல் பரிபாலிக்கிறார்கள். அப்படிப் பரிபாலிப்பது க்ஷத்திரியகுலாசாரம். அந்தம்மாள், ஸ்திரீகளின் தருமத்தை நன்றாயுணர்ந்து பதிவிரதாதருமத்தின் நெறிதவராமல் நடந்து தெய்வபக்தி செய்வதினாலே பூர்ணஞானத்தை யடைந்திருக்கிறார். அதனாலேதான் நீர் கொக்கை யெரித்ததையு மறிந்து கொண்டார். உம்மையும் வென்றார். உம்மிடத்தில் இரக்கங்கொண்டு என்னிடம் அனுப்பினார். நானும் குலாசார நெறி கடவாமல் நடந்து, தெய்வத்தை யாராதிப்பதினாலேயே நீர் வந்த காரணத்தை யறிந்து கொண்டேன். நீர் தவத்தையே பெரிதாகக் கருதி மாதா பிதாக்கள் படுகிற கஷ்டத்தைச் சிறிதும் கவனியாமல் வனவாசம் செய்து கொண்டிருக்கிறீர். அது பயன்தராது. அதனாலே தான் அந்தம்மாளிடம் தோல்வியடைந்தீர். இனியாவது முறையறிந் தொழுகி மெய்த்தவம் புரிவீரானால் பரமஞானம் சித்திக்கும், முத்தியும் எளிதில் கைகூடும்'' என்றார்.

 

கௌசிகர், "அந்தம்மாள் எந்தத் தெய்வத்தை யாராதிக்கின்றார்? நீர் எந்தத் தெய்வத்தை யாராதிக்கின்றீர்?'' என்று கேட்டார். தருமவியாதர், பதிவிரதைகளுக்குத் தமது நாயகன்மாரே தெய்வம். பிரமசாரிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் குருவே தெய்வம். புத்திரர்களுக்கு மாதா பிதாக்களே தெய்வம். மற்றவர்களுக்குப் பரம்பரையாக ஆராதிக்கப்பட்டுவருந் தெய்வமே தெய்வம். இது வேதவிதியாகும். இது பக்தியோகமெனப்படும். யோகங்கள் என்பவை யெல்லாம் மனம் ஒரு வழிப்பட்டுப் பிரமதியானத்தில் நிலைத்திருப்பதற்காகச் செய்யப்படும் ஒரு அப்யாசமே யாகையால், இந்த யோகங்களெல்லாம் ஞானசித்திக்கு மூலங்களாகின்றன. இந்தப் பக்தியோகம் எளிதிற் செய்யக்கூடியது. இதற்கு உபதேசக் கிரமம் வேண்டுவதில்லை. எந்த விஷயத்திலும் குருவை மறவாமல் தியானிக்க வேண்டும். குரு தியான மில்லாத பக்தி சிறப்படைவதில்லை. குருபக்தியிருந்தாலும் மாதா பிதாக்களை வழிபடாவிடில் அது பயன்தராது. நீர் மாதா பிதாக்களை அலட்சியஞ் செய்து தவமுயற்சியிலிருந்தமையால் பெரும் பயனாகிய ஞானசித்தியை யடையவில்லை'' என்றார்.

கௌசிகர், நீர் வழிபடுந் தெய்வம் யாது? அதை யெனக்குத் தெரி வத்தால் நானும் அந்தத் தெய்வத்தை ஆராதிப்பேன் என்றார். தருமவியா தர், நான் வழிபடும் மெய்யான தெய்வத்தை உமக்குப் பிரத்தியட்சத்தில் காட்டுகிறேன் வாரும் என்று அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கே ஒரு அறையிருந்தது. அந்த அறையில் பரிமள சுகந்தம் வீசியது. மந்தமாருதம் உலாவிக்கொண்டிருந்தது; போதுமான பிரகாசம் நிறைந்திருந்தது. அங்கே ஒரு கட்டிலில் வெண்மையான வஸ்தி ரத்தினாற் போர்த்த ஒரு மெத்தையிட்டிருந்தது. அதன்மேல் மிக்க வயது முதிர்ந்த ஒரு கிழவனும் கிழவியுமாகிய தம்பதிகள் சாய்ந்து கொண்டு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வறைக்குள் தருமவியாதா நுழைந்து அவ்விருவருக்கும் மரியாதையாக வணங்கிக் கௌசிகர் வரவைத் தெரிவித்து அஞ்சலியஸ்தராய் நின்றுகொண்டிருந்தார். அவர்கள் ஆசீர்வசனங் கூறிக் கௌசிகரை நோக்கிச் சுவாமிகாள்! நாங்கள் எழுந்திருக்கச் சக்தியற்றவர்களா யிருக்கிறோம். எழுந்து வந்தனம் செய்ய முடியாது என்று தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்து மரியாதையாக ஒரு ஆசனத்தில் உட்காரச் செய்து, யோக க்ஷேமங்களை விசாரித்து உபசார வசனங் கூறினார்கள். பிறகு தருமவியாதரை நோக்கி உட்காரு என்று கூறிய பின் அவர் உட்கார்ந்து கொண்டு கௌசிகரை நோக்கிச் சொல்லுகிறார்.

 

சுவாமீ! இவ்விருவரும் எனது தாயுந் தந்தையுமாம். இவர்களே நான் வழிபடும் தெய்வம். இவர்களைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறிய வில்லை. காலை மாலை பகலாகிய திரிகாலங்களிலும் இவர்களை வழிபடுகிறேன். இவர்கள் பாதங்களில் மலர் சொரிந்து அர்ச்சித்துப் பூசிக்கிறேன். மத்தி யானத்தில் இவர்களுக்கு ஸ்நானம் செய்வித்து சுத்த வஸ்திரமுடுத்தி சந்தனாதிகளால் அலங்கரித்து, இனிமையான உணவு புசிப்பித்துப் படுக் கையி லுட்காரவைத்துச் சற்றுக் களையாறச் செய்து அதன் பிறகுதான் நான் புசிப்பேன். இரவில் அவர்களைப் புசிப்பித்துப் படுக்கவைத்து அவர்கள் தூங்கின பிறகு நான் புசிப்பேன். காலையில் எழுந்திருந்ததும் அவர்களுக்குச் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்துவிட்டுச் சிறிது ஆகாரம் கொடுத்துப் படுக்கையில் வைத்துவிட்டு அதன்பிறகு நான் என் தொழிலைச் செய்கிறேன். எனக்கு மாதா பிதாக்களைத் தவிர வேறு தெய்வ மில்லை. அவர்களை யுபசரித்து மகிழச்செய்வதே தெய்வாராதனை. இந்த ஆராதனையினாலேயே நான் முடிவற்ற மெய்ஞ்ஞானத்தையும் பெற்றேன். நீர் மாதா பிதாக்களை யலட்சியம் செய்துவிட்டு வனத்துக்குப் போய்த் தவம் செய்கிறீர். அந்தத் தவம் சரியான பலனளியாது. இனி நீர் உமது ஊர் போய்ச் சேர்ந்து நல்ல குணமும் அழகுமுள்ள கன்னிகையை விவாகம் செய்து கொண்டு மாதா பிதாக்களை ஆராதனை செய்யும், என்று கூறி அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியான சமாதானங் கூறித் திருப்தி செய்வித்து அனுப்பிவிட்டார். கௌசிகர் ஊருக்குப் போகும் போது அந்தப் பதிவிரதையைக் கண்டு வந்தனம் செய்து தருமவியாதரிடம் சென்றதும் அவரால் சந்தேகங்களெல்லாம் நிவர்த்தியானதும், அவர் உபதேசம் செய்ததையும் கூறி விடை பெற்றுக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்து மாதா பிதாக்களை வழிபட்டு மெய்ஞ்ஞான சித்திபெற்றுச் சிறந்து விளங்கினான்.

 

மாதா பிதாக்களைத் தெய்வமாகக் கருதி வழி படாவிட்டாலும், அவர்களைக் கஷ்டதசையில் வையாமல் கூடியவரையில் அன்ன வஸ்திராதிகளா லுபசரிக்க வேண்டும். அப்போது தெய்வம் அனுக்கிரகம் செய்யும். ஆராதனை செய்யும் போது மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒத்திருக்க வேண்டும். அதை வேறு இலௌகிக வியாபாரத்திற் செலுத்தக்கூடாது. அதற்காக ஆவாகனாதிக்கிரியைகள் ஏற்பட்டன. மனம் சொரூபத்தைச் சிந்திக்க வேண்டும். வாக்கு மந்திரங்களைச் சொல்லவேண்டும். கைகள் அபிஷேகாதிக் கிரியைகளைச் செய்யவேண்டும். மந்திரங்கள் சரியாய்க் கிடையாத பட்சத்தில் ஆராதிக்கிற தெய்வத்தின் மூலமந்திரங்களைச் சொல்லிச் செய்ய வேண்டும். சைவர்கள் பஞ்சாட்சர மந்திரமும் வைணவர் அஷ்டாட்சர் மந்திரமும் பிரதானமாய்க்கொள்ள வேண்டும். அல்லது தங்களுக்கு உபதேசமாயிருக்கிற வேறு மந்திரங்களைக் கொண்டும் செய்யலாம். பூசை முறை பலவகையாகும் ஆயினும் எல்லாருக்கும் பொதுவில் சோடசோசார பூஜை யென்று சிறந்த பூஜை முறை ஒன்றுண்டு, அது சிறப்புடையது.

 

அவையாவன: - சொரூபத்தில் ஆவாகனஞ்செய்தல், ஆசனமிடல், பாத்தியம் (கால்கழுவ நீர் தரல்), அர்க்கியம் (கைகழுவ நீர் தரல்), ஆசமனம் (மூன்று தரம் நீரையுட்கொள்ளுதல்), ஸ்நானம் செய்வித்தல், வஸ்திரம் சாத்துதல், பூணூலிடல், சந்தனமிடல், புஷ்பமாலை சாத்தல், அட்சதை சாத்தல், தூபம் (வாசனைப்புகை) காட்டல், தீபம் காட்டல், நைவேத்தியம் செய்தல், தாம்பூலமளித்தல், அர்ச்சனை செய்தல், கர்ப்பூர ஆர்த்தி காட்டல் என்பனவாம். இவைகளை யெல்லாம் அவ்வத் தெய்வத்திற்குறிய மூலமந்திரங்களைச் சொல்லிச் செய்து பின்பு மந்திரம் ஜபித்துத் தியானம் செய்யவேண்டும். தான் ஆராதிக்குந் தெய்வத்தின் சொரூபம் எப்போதும் தன் மனதிலிருக்கும்படி பழகவேண்டும். எப்போதும் மந்திரத்தையும் நாவசையாம லுச்சரிக்க வேண்டும். தெய்வத்தின் புகழ்ச்சியாகிய சரித்திரங்களையும், ஸ்தோத்திரப் பாடல்களையும் படிக்கவேண்டும். கெட்ட சகவாசங்களையும் பொய் பொறாமையாகிய குற்றங்களையும் விலக்கவேண்டும். சர்வ ஜீவன்களிடத்தும் அன்பு பாராட்ட வேண்டும்.

 

சரீரமுள்ளவர்க்கு (தேகாபிமானமுள்ளவர்க்கு) இந்திரியங்களுக் கெட்டாத பரம்பொருள் கிட்டுவதில்லை. பக்தியும் ஆராதனைகளும் கர்மத்திலே சேர்ந்தனவேயாம். அதனாலே தான், தாம் செய்கிற சர்வ கர்மங்களையும் எனக்கு ஒப்புவித்துவிட்டு, என்னையே பிரதானமாகக் கருதிப் (பிரதி) பலனை எண்ணாமல் தியான முதலியனவற்றால் என்னைப் பக்தி செய்கிறவனை மிருத்தியு சொரூபமான சம்சாரத்தினின்றும் நான் கரை யேற்றி விடுவேன்'' என்று கண்ணன் கீதையில் அருளிச்செய்தார். அன்றியும்'' என்னிடத்தில் உன் மனதையும் புத்தியையும் நிலையாக நிறுத்தி என்னிடத்திலேயே (என் அருள் வெளியில்) குடியாக வசித்திரு. இப்படி மனதையும் புத்தியையும் என்னிடத்தில் நிறுத்த அப்பியாசஞ்செய். அப்பியாசம் செய்யச் சக்தியில்லாவிடின், என்னைக் குறித்துக் கர்மங்களைச் (முற்கூறிய ஆராதனையாகிய சற்கருமம்) செய். என்னைக் குறித்து கர்மங்களைச் செய்வதனால் நீ மோட்சசித்தி பெறுவாய் (இந்தக் கர்மங்களினால் மனம் அடங்கி நிற்குமென்பது). என்னிடத்தில் மனதை நிறுத்திக் கர்மங்களைச் செய்யச் சக்தியில்லாவிட்டால், சித்தசுத்தியுடன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனை இச்சியாமல் விட்டுவிடு (அந்தக் கர்மங்களைப் பலனோடு எனக்கு அர்ப்பணம் செய்து விடு). அப்பியாசத்தை * விட ஞானம் சிறந்தது, ஞானத்தைப்பார்க்கினும் தியானம் மேலானது, தியானத்தை விடப் பலனைக் கருதாத கர்மம் மேலானது. இந்தக் கர்மபல தியாகத்தால் சித்த சாந்தியுண்டாம் " என்றும் அருளிச்செய்தார்.

 

[* ஞானத்திற்காகச் செய்யும் சிரவணம் யோகம் முதலிய அப்பியாசம்.

இங்கு ஞானம் என்பது ஆன்ம நிச்சயத்தை யுணர்த்தும் பரோக்ஷ ஞானம்.]

 

எல்லாப் பிராணிகளிடத்திலும் துவேஷமில்லாமலிருக்க வேண்டும். எல்லாச் சீவன்களிடத்திலும் சினேகத்துவம் பாராட்டவேண்டும். எல்லாப் பிராணிகளிடத்திலும் கருணை பாராட்ட வேண்டும். சரீரேந்திரியங்களிற் பற்றற்றிருக்க வேண்டும். அகங்காரத்தை ஒழித்திருக்க வேண்டும். சுகதுக்கங்களில் சமபுத்தியிருக்க வேண்டும். பொறுமையையடைந் திருக்க வேண்டும். தன் உபாசனாமூர்த்தியை எப்போதும் சிந்தித்துக் கொண் டிருக்கவேண்டும். விஷயங்களில் செல்லும்மனதைத் தடுக்க வேண்டும். ஸ்திரசித்தமுடையவனாய் உபாசனா மூர்த்தியினிடத்தில் மனதை நிறுத்தவேண்டும். இச் செய்கைகள் பக்தியோகத்திற்கு அவசியம் வேண்டியவைகளாம். இதைக்குறித்த விஷயத்தில், ''பிரமத்திற்கு அன்னிய பொருள்களில் விருப்பமற்றவனாயிருக்க வேண்டும். மாம்சபட்சணாதித் தாமச ஆகாரங்களை ஒழிக்க வேண்டும். சாஸ்திர விகிதமான ஆகாரத்தைப் புசிக்க வேண்டும். இவற்றைக் கைக்கொண்டால் அவன் மனம் பரிசுத்த மாகும். க்ஷமையுண்டாம். சத்துரு மித்திரர்களென்கிற வேறுபாடு தோன்றாது. சாஸ்திரம் விதித்த கர்மங்களில் சிரமமின்றி அனுஷ்டிக்கலாம். சாஸ்திர விரோதமான கர்மங்கள் ஒழிந்து போகும். அப்போது என்னிடத்தில் ஸ்திரமான பக்தியுண்டாகும். அவனே எனக்குப் பக்தனாவான்'' என்று கண்ணன் கீதையில் கூறியருளினார்.

 

"சத்துரு மித்திரர்களிடத்திலும், மானாவமானங்களிலும், சீதோஷ்ணங்களிலும், சுகதுக்கங்களிலும், நிந்தாஸ்துதிகளிலும் சமசித்த முடையவனாயிருக்க வேண்டும். எதிலும் பற்றில்லாதவனாயும், மௌனவிரத முடையவனாயும், திருப்தியுடையவனாயும், ஆத்ம சொரூபத்தையன்றி மற்றொன்றையும் ஆசிரயிக்காதவனாயு மிருக்க வேண்டும். இதுவே ஸ்திர பக்தியாம். இப்படிப் பக்தி செய்கிறவனே எனக்குப் பிரியமானவன்'' என்றும் கூறியருளினார். இவ்வாறு கண்ணன் கூறியவற்றைக்கைக் கொண்டொழுகாமற்போனால் பக்தியோகம் சித்திப்பது கஷ்டமாம். மோட்சாபேட்சையுடைய புண்ணியாத்மாக்களுக்கு இது எளிதாம். மற்ற யோகங்களைவிடப் பக்தியோகம் சிலாக்கியமுடையதே. இந்திரியங்களா லுணரும் விஷயங்களையே மனம் பற்றி நிற்கும். அதிலும் கண் காதுகளாகிய இந்திரியங்களாலறியப்பட்ட பொருள்களை மனது மறப்பதில்லை. அதிலும் கண்களாற் கண்டறிந்த பொருள்கள் மறக்கப்படுவதேயில்லை. கண்களால் கண்டறிந்த விஷயங்களைத் தியானிப்பது எளிது. ஆகையாலே நாம் கண்களால் கண்டு தரிசிக்கும் தெய்வ சொரூபங்களைச் சந்தித்துக் கடைத்தேறும்பொருட்டு நூல்கள் விதித்தன.

 

இவ்வாறு சிந்தித்து பக்தி செய்யத் தக்கவை குரு, இலிங்கம், சங்கமம் என்று கூறும் மூவகைச் சொரூபங்களாமென்று முன்னரே கூறப்பட்டது. மூவகைச் சொரூபங்களுள் குரு, சங்கமம் என்பன சரப்பொருள்களாம். லிங்கம் அசரப்பொருளாம். இதனால் சரம் அசரமாகிய இருவகைச் சொரூபங்களையும் சிந்தித்துப் பக்தி செய்யலாமென்பது விளங்கும். இதைக் கூர்ந்து நோக்கச் சராசர பேதங்களாகிற இருவகைப் பொருள்களும் பிரம சொரூபமேயாமென்பது நன்கு புலப்படும். எல்லாப் பொருள்களும் பிரம சொரூபங்களேயாமென்பது ஸ்திரப்பட்டால் கண்ணன் கீதையிற் கூறிய வழிபற்றி நடப்பது மிகவும் எளிதாகும். ஸ்திரப்படுவது அருமையாதல் பற்றியே இவ்வழியை அப்பியாசம் செய்து கொள்ள வேண்டுமென்று கண்ணன் கூறியருளினார். அப்பியாசத்தினாலேயே எல்லாமாக வேண்டும். அப்பியாசம் செய்யாவிட்டால் ஒன்றும் கைகூடாது. பழக்கமென்கிற அப்பியாசத்தினாலேயே இலவுகிக விவகாரங்களெல்லாம் நடந்தேறி வருவதை நாம் பிரத்தியட்சத்திற் காணலாம். பழக்கத்தினால் எதையும் சித்தியாக்கிக் கொள்ளலாம் என்பது நிச்சயம். அப்பியாசம் செய்ய முடியாவிட்டால் கர்மங்களைச் சிரத்தையுடன் செய் என்று பகவான் விதித்தருளினார். ஏனென்றால் ஆசை எதிலிருக்கிறதோ அதில் மனமும் பற்றுதலாயிருக்கும். மனம் பற்றி நிற்குமாயின் அக்கர்மமும் இடையூறுகளின்றி ஒழுங்காய் நடத்தப்படும். கர்மங்களெல்லாம் கருதிய பலனைக் கொடுத்து அழியும் இயல்புடையனவாதலால் பலனைக் கருதாமல் செய்ய விதித்தார். பலனைக் கருதாமற் செய்வது சாத்தியமில்லை யாகையால் அந்தக் கர்மத்தைச் செய்து அதைத் தனக்கு அர்ப்பணம் பண்ண விதித்தார். ஒருவன் தான் ஆராதிக்கும் கடவுளுக்கு அர்ப்பணம் பண்ணினதைத் தான் அனுபவிக்க விரும்பான் என்பது நிச்சயம். இதனையே கர்மபலத் தியாகமென்று நூல்கள் வியந்து கூறின. இதனால் வேதம் விதித்த கர்மங்களும் செய்யப்படு கின்றன. அவற்றின் பலன் தன்னை யடைவதில்லை. இந்தக் கருமபலன் கர்த்தாவை ‡ அடைவதே கருமபந்தம் (கர்மக்கட்டு) என்னப்படும். இந்தப் பந்தமே ஜனன மரணங்களுக்கும் இன்ப துன்பங்களுக்கும் ஆதாரமாய் நிற்பது. இதுவே அறிவை மறைத்து நின்று அஞ்ஞானமென்று பெயர் பெறுவது. கர்மபலனைத் தான் ஆராதிக்கும் தெய்வத்தினிடத்தில் ஒப்பு வித்து விடுவதினால் அவன் அஞ்ஞானமற்றவனாகிறான். அஞ்ஞானம் அறவே மெய்ஞ்ஞானம் தானே பிரகாசிக்கும். ஞானவொளி தோன்றவே அவ்வொளியினால் தான் வழிபடும் தெய்வத்தின் அற்புதானந்த சொரூபம் வெளிப்படும் ஒன்றனைப்பற்றியே நிலைபெறும் மனது அந்தச் சொரூபத்தைப் பற்றிக்கொள்ளும். அது ஆனந்த சொரூபமாதலால் மனம் அதில் ஆனந்தானுபவம் பெற்று நிற்கும். அப்போது பயனற்ற உலகப் பொருள்களையும் சிற்றின்பத்தையும் விரும்பாது. தான் புதிதாய்க்கண்ட சொரூ பத்தையே தரிசித்துக்கொண்டிருக்கும். அதையே பெரிதாகச் சிந்தித்துக் கொண்டிருந்தால் உலகம் மறக்கப்படும். உலகை மறந்து அதையே தரிசித்துச் சிந்தித்துக்கொண்டிருக்க, அந்த மாயசபள சொரூபம் கொஞ்சங்கொஞ்சமாய் மறைந்து கடைசியில் தனது இயற்கைச் சொரூப தரிசனம் தரும். அதைத் தரிசிப்பதுவே யோகஞானங்களால் பெறத்தக்க பயனாம். அதுவே மோட்சம், வீடு என்று வழங்கப்படும் முக்தியாம். ஆதலாற்றான் பக்தியோகத்தினால் எளிதிற் பேறு பெறலாமென்று நூல்கள் கூறின. இத்தகைய பக்தியோகம் எந்த வருணத்தாரும், எத்தகையாரும் செய்யக்கூடும். ஆனால் சோம்பலென்கிற ஒரு குணத்தை ஒழித்து ஊக் கத்துடன் செய்யவேண்டும், சோம்பலென்பது மனிதருக்குப் பெரிய சத்துருவாம். அதனால் எல்லாக் காரியங்களும் கெடுகின்றன. அசிரத்தை, அலட்சியம், மனச்சலிப்பு, களைப்பு முதலியவற்றினா லுண்டாகும் ஓர் வகை யான துர்க்குணமே சோம்பலாம். இதற்கு மூலமாகிய அசிரத்தை முதலியவற்றைப் பற்றற களைந்து விட்டால் சோம்பலுண்டாகாது. சோம்ப லின்மையும், தொடுத்த காரியத்தைத் தடையற முடிக்கவேண்டுமென்கிற விருப்பமும் அவசியம் இருக்க வேண்டும். மேற்கூறிப் போந்த துர்க் குணங்களை ஒழித்து, நன்னெறி பற்றி நின்று பரம்பொருளை ஆராதித்துப் பூசித்து வழிபட்டு, இடைவிடாமல் தியானித்துக்கொண் டிருப்பதே பக்தி யோகமாம்.

[ ‡ கர்மத்தைச் செய்தவரை.]

 

 

மானசயோகம்.

 

யோகமென்பவை யெல்லாம் மனதை யடக்கி வசப்படுத்தித் தன் இச்சைபோல நடத்த முயற்சிப்பதேயாம். மானசயோகமென்று ஒன்று தனியே பிரித்துச் சொல்லப்படவில்லை. சில விடங்களில் மானதயோக மென்கிற பிரஸ்தாபம் மட்டும் உண்டு. ஞானயோகமும் இதுவும் ஒன்றாகவே காணப்படும். எல்லா யோகங்களும் ஞானத்துக்கு ஆதாரமே யாதலால் அவைகளையும் ஞானயோகம் என்னலாம். இப்படியே சித்தர்கள் வாசியோகமாகிய ஹடயோகத்தை ஞானமென்பர். அந்தந்த யோகங்கள் அததை ஞானமென்றுதான் கூறும். ஞானத்தையடைவதற்கே யோக மேற்பட்டது. யோகத்தினால் பெறும் முக்கிய பயன் மனதை வசப்படுத்துதலாம். ஞானயோகம் பூர்வ ஜென்மங்களில் செய்த புண்ணியபயனாலன்றிக் கிடைக்கப்பெறாது. ஞானமின்றி மோட்சம் கிடையாது. அந்த ஞானத்தை யோக அப்பியாசத்தினால் அடையும்படி விதிக்கப்பட்டது. அப்பியாசங்க ளெல்லாவற்றுள்ளும் மானசயோகம் மிகச்சிறப்புடையது. அது மனதை விஷயங்களில் செல்லவிடாமல் தடுத்தலாம். வாயு அடங்கினால் மனம் அடங்கும் என்பது வாசியோக நூலின் கருத்து. மனம் அடங்கினால் வாயுவும் அடங்கும் என்பது இராஜயோக பரமாசாரியர்களின் கருத்து. அத்துவைத சித்தாந்த பரமாசாரியராகிய ஸ்ரீ சங்கர முனீந்திரர் கொண்ட கருத்தும் இதுவே. இன்னும் பல சிவராஜ ஞானயோகச் செல்வர்களுடைய கருத்தும் இதுவேயாம்.

 

இதற்கும் அப்பியாசம் சிறிது வேண்டப்படும். அது ஆசையை ஒழிக்கு முபாயமேயாம். முதலாவது நாவுக்கு உருசியை விரும்பாமல் ஒழிப்பது. உருசியுள்ள பதார்த்தங்களையே புசிக்கவேண்டுமென்கிற ஆசையை ஒழிப்பது. இதில் சித்திபெற்றவன் இரண்டாவதாக அதிசயமான பொருள்களை நோக்கவிடாமல் சக்ஷ இந்திரியத்தை யடக்க வேண்டும். இந்த இரண்டு அப்பியாசங்களுமே கஷ்டமானவை. இவை சித்தியானபின், சுரோத்திரேந்திரியத்தை அடக்க முயலவேண்டும். அது சங்கீதம், வாத்தியம், கதை, ஆசியம் முதலியவற்றைக் கேட்க விரும்பாதபடி செவிப் புலனையடக்குவதாம். அதை அடக்கிக்கொண்டால் மற்றைய பிராணேந்திரியம் பரிசேந்திரியமும் எளிதிலடங்கிவிடும் என்று பெரியோர்கள் கூறி யிருக்கின்றனர். நூல்களுக்கும் இந்த அபிப்பிராயமுண்டு. ஆசைக்குக் கார ணமாகிய இந்திரியங்களில் மனதைச் செலுத்தாமலிருப்பதே மானதயோகம் என்று தெரிந்து கொள்ளலாம். இதற்குத் தெய்வபக்தியே பெரிய உதவியாம். அதனாலே தான் பக்தியோகத்துக்குப் பின் இது கூறப்பட்டது. முறைப்படி தெய்வபக்தி செய்பவர்களுக்கு, இடைவிடாத தெய்வச்சிந்தனையில் பழகின மனம் வேறொன்றிலும் பற்றுவையாது இயல்பாக ஆசை யொழிந்து விடுதலால் இதனையே


 ''காட்டிற் குறத்தி பிரான்பதத்தே கருத்தைப் புகட்டின்
 வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசி வைத்து
 மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே
 ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே''


ஆசையை யடக்கி மனதைத் தடுத்துக் கடவுளின் திருவடியில் நிலைபெற நிறுத்தல் எளிது. அதுவே மோட்சமார்க்கமாமென்பது கூறிக் கஷ்டப்பட்டுப் பிராணவாயுவை யடக்கிப் பிரமரந்திரத்தின் வழியே செலுத்தித் துவாதசாந்தத்திற் சேரச்செய்வது மிகவும் கஷ்டமானது என்பதை விளக்கி யருளினார். இதனால் சிவராஜ ஞான யோகமென்பது ஆசையை யொழித்தலாலேயே யாமென்பது நன்கு புலப்படும்.

 

மனிதருக்கு அகக்கருவிகளில் மனமே பிரதானமாம். அதற்கு விருப்பம், பற்றுதல் என்று இருவகைக் குணங்களுண்டு. விருப்பமென்பது தான் சந்தித்த விஷயப் பொருளில் ஆசைப்படுதல். பற்றுதல் என்பது ஆசை கொண்ட பொருள்களை மறவாமலிருப்பதும் அதை விடாமல் நிற்பதுமாம். விஷயப் பொருள்களை மனதுக்குப் புலப்படுத்த ஐந்து மார்க்கங்களுண்டு. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி யென்பனவாம். இவைகளே ஐம்புலன்கள் எனப்படும். இவற்றுள் ஒவ்வொன்றும் தன் வசப்படும்படி மனதை இழுக்கும் சக்தியுடையது. அவற்றுள்ளும் கண்ணும் வாயும் மிக முக்கியமானவை, ஏனெனில் கண்ணினால் கண்ட பொருளை மனம் ஒருபோதும் மறப்பதில்லை. கண்ணை மூடி நோக்கும் போது அப்பொருள் பிரத்தியத்தில் காணப்படுவது போல எதிரில் தோன்றும். அதனால் அப்பொருளினிடத்திலுண்டான ஆசை ஒழிவதில்லை. அப்பொருள்களில் முக்யமானவை மனைவி மக்கள்களாம். இப்பொருள்களைக் காணும் போது மனம் சஞ்சலப்படாம லொழியாது. அப்படியே வாயினால் உண்ட பொருள்களைச் சிந்திக்கும் போதும், உண்ணத் தக்க பொருள்களைக் கண்களாற் காணும்போதும் வாயில் நீர் ஊறுதலாகிய விகாரப்பாடு தோன்றும். அப்பொழுது அந்தப் பொருளை உண்ணுதற்கு விருப்பமுண்டாகும். அதனால் ஆசை மிகும். இந்த ஆசையினால் பல கர்மங்கள் செய்ய நேரிடும். சில சமையம் காதினால் கேட்ட தொனி வடிவான பொருளும் பிரத்தியட்சத்தில் தோன்றுவது போலக் காணப்படும். கண் வாய்களைப் போலக் காதும் ஒரு கொடிய இந்திரியமே. மனைவி மக்கள் கூறிய இனிமையான வசனங்களை நினைக்கும் போது மனம்பூரிப்பதை யாவரும் அறியலாம். இதைப்போல மணமும் பரிசமும் உணரப்படுவனவல்ல வென்பதையும் அனுபவத்திற் கண்டறியலாம். ஆயினும் மூக்கும் துவக்கும்கூட மனதுக்குச் சலனமளிப்பனவேயாம். மனதை இவ்விந்திரியங்களினிடத்தில் செல்லவொட்டாமல் தடுப்பதே மானசயோகமாம். இது மஹாத்மாக்களிடத்திற் காணப்படு மரிய செயலாம்.


 "ஆயின்மிக்க வறியோர் செயலெலாம்
 நேயமிக்க மனதை நிறுத்தல் காண்''


என்ற ஆன்றோர் கட்டுரையே சான்றாம். மனதைப் புலன்களின் வழியிற் செல்லாமல் தடுப்பதே இந்திரிய நிக்கிரக மெனப்படுவதாம். ஜனன மரண சம்சார துக்கங்களை உள்ளவாறுணர்ந்து வருந்திச் சென்ற ஜன்மங்களில் தவம் புரிந்து பிறந்திருக்கும் புண்ணியாத்மாக்களுக்கே யிந்த இந்திரிய நிக்கிரக சக்தியுண்டாம். மற்றவர்களுக்குக் கிடைப்ப தரிது. இதற்கு ஹடயோகக்காரர்கள் பிராணவாயு சதா சலிப்பதனால் மனதும் சலிக்குமென்றும், அப்போது புலனுக்கு நேர்பட்டு அவ்வப் பொருளைப் பற்றுமென்றும், அதற்குப் பிராணவாயுவை அசையாமல் நிறுத்துவதே மனதையடக்கும் வழியாமென்றுங் கூறுவர். ''வாயு நிற்க மனமு முடனிற்கும், தோயநின்றிடில் நிற்குந் துரும்புமே" என்பது ஆன்றோர் கூறிய பிரமாண வசனமாம். அதாவது பிராண வாயுவுடன் கூட மனஞ் சஞ்சரித்தலால் அவ்வாயுவைச் சலியாமல் நிறுத்தினால், நீரிலோடுந் துரும்பு நீர் நின்ற விடத்தில் நிற்பது போலப் பிராணவாயு நின்றவுடன் மனம் ஒரு நிலையில் நின்றுவிடுமென்பது. பிராணவாயுவை ஓடாமல் நிறுத்தி மனதை யடக்குவது மிகவும் கடினமாமென்பது சிவராஜ யோகிகளின் அபிப்பிராயம். (அதுவுமன்றி பிராணவாயு மறுபடி சலிக்கத் தொடங்கியதே மனமும் சலிக்கத் தொடங்கும்.) அது முன்னறே கூறப்பட்டது.

 

ஆசையை யடக்கினால் மனம் தானே யடங்குமென்பது அத்வைத சித்தாந்த பரமாசாரியராகிய ஸ்ரீமத் சங்கர முனீந்திரர் முதலியோர் அபிப்பிராயம். இவ்வாசையை யடக்குவதற்காகவே கேளிக்கை பார்த்தல், நாடகம் காணல், சங்கீதம் கேட்டல், விகடம் கேட்டல், கதாபிரசங்கங்களில் மனதைச் செலுத்தல், விநோத வேடிக்கைகளைப் பார்க்க விரும்புதல், வேசை தாசிகளை யுற்று நோக்குதல், சுகந்த பரிமளங்களை யணிதல் முதலியவைகள் கூடாவென விலக்கப்பட்டன. சுவையுள்ள பதார்த்தங்களைப் புசிக்க விரும்புதலும் விலக்கப்பட்டது. கண்ணுக்கினிய வஸ்துக்களைக் காண விரும்பாதொழிவதே நேத்திரேந்திரியத்தை ஜயித்தலாம். வாய்க்கு இனிய வஸ்துக்களைப் புசிக்க விரும்பாதொழிவதே ஜிஹ்வேந் திரிய ஜயமாம். மனதுக்கு இன்பந்தரும் மாதர் மக்கள் சம்பாஷணை, கதாப்பிரசங்கமாதிகளைக் கேட்க விரும்பாதொழிவதே சுரேந்திரேந்திரிய ஜயமாம். இந்த மூன்று இந்திரியங்களையும் அவை தாந்தாம் செலுத்தும் விஷயங்களை விரும்பாதொழித்து மனதைக் களங்கமறச் செய்து கொண்டால் ஏனைய இந்திரியங்களும் எளிதில் ஜயிக்கப்பட்டனவாம்.

 

ஆசையே ஜனன மரண சம்சாரதுக்கத்திற்குக் காரணமாம். கோபம்
 பொறாமையாதி துர்க்குணங்களுக்கும் காரணமாகும். ஆசையே கொலை களவாதி பஞ்சமஹாபாதகங்களுக்கும் காரணமாம். இந்த ஆசையே மன துக்கு ஒழியாத அழுக்காம். ஆசை மோட்ச நாசத்துக்கு எதுவுமாம். இந்தக் களங்கமொழிந்தால் மனம் பரிசுத்தமாய்ப் பிரகாசிக்கும். அம் மனதில் பரமாத்மாவின் பிரதிபிம்பம் தோன்றும். அப்போது மனம் அத னிடத்தில் பற்றுதல் வைத்து அதனிடத்தில் தங்கும். அதனால் பிரபஞ்சம் மறையும். பரமாத்மா ஒன்றே மனதுக்கு விஷயமாகும். மனம் அதனையே நோக்கி நிற்கும் போது பிரபஞ்சமெல்லாம் பரமாத்மாவாகவே காணப் படும். இவ்வாறு எங்கும் பரமாத்மாவாகவே கண்டு தற்செயலற்று நிற் பதே மானசயோகமாம். அப்போது பிராணவாயுவும் சலியாது. அதனால் ஆயுசும் நீடித்திருக்கும். பிராணவாயு இயங்காதடங்கவே சரீரமும் மரம் போல நிலைத்து நிற்கும். பிரணவாயுவுமடங்கி, மனமுமொடுங்கிச் சரீர மும் செயலற்று நிற்கவே ஜீவாத்மா பரமாத்மாக்கள் என்கிற பேதமற்று இரண்டு மேகமாகும். இதுவே முத்திநிலைமையாம். மானசிகயோகத் துக்கு ஆசையை ஒழிப்பதே யோக முயற்சியாகும். இம்முயற்சியில் வாசி யோகத்தைப் போன்ற கஷ்டமில்லாமையால் இதனையே பல வான்றோர் கைக்கொண்டனர்.

 

பூர்வகாலத்தில் பிரஹலாதர் பக்திமார்க்கத்தில் நின்று பரம்பொருளை யாராதித்தார். அவ்வாறு ஆராதித்தும் மனமடங்கி நில்லாமையால் இதற்கு யாது செய்யலாமென்று ஆலோசித்தார். பிறகு அன்னபனாதிகளிலும், ஆடையாபரண பரிமள சந்தனாதி யலங்கிருதங்களிலும் ஆசையை ஒழித்தார். இராஜ்ய பரிபாலனத் தொழிலையும் விட்டார். தனிமையான ஓரிடத்திலிருந்து கொண்டு, எப்பொருள்களிலும் ஆசையற்றவராய்ப் பரமாத்மாவைச் சிந்தித்துக்கொண்டிருந்தார். சிறிது காலத்துக்குள் மனமும் பிராண வாயுவு மொடுங்கிச் சலனமற்று ஒரே நிலையில் நின்றுவிட்டார். பரமாத்மா ஒன்றையே தரிசனம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலைமையில் ஐயாயிர வருஷங்கள் கடந்து போயின. அரசனில்லாமையால் இராஜ்யம் சீர் குலையலாயிற்று. இவரது யோகாக்கினி எங்கும் பரந்தமையால் சர்வ பிராணிகளும் வருந்தின. தேவர் தானவர்களும் மனிதர்களும் வருந்தினார்கள். பிரகலாதருடைய இதய கமலத்திலிருக்கும் பரமாத்மாவாகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தி இதை யறிந்து உலக துன்பத்தை நீக்கக் கருதி, அவருடைய இதயத்தினின்றும் வெளிப்பட்டுப் பூமியில் வந்து நின்றார். இதனாற் பிரகலாதர் யோகம் கலைந்து வெளியில் நிற்கும் பரம் பொருளை நோக்கி மனங்களித்து அவரை வணங்கிப் பலவாறு துதித்து மகிழ்ந்தார். ஸ்ரீமந் நாராயணமூர்த்தி பிரகலாதரை நோக்கி நீ யெல்லாப் பொருள்களையும் பரமாத்மாவாகக் காணும் பெருந்தன்மை பெற்றிருத்தலால், புளியம்பழத்தைப் போலப் பிரபஞ்சத்தில் பற்றுதலில்லாமல் இராஜ்யபரிபாலனஞ் செய்து யோகநெறி தவறாதிரு என்று அனுக்கிரகம் செய்துவிட்டு மறைந்தருளினார். அன்று முதல் பிரகலாதர் இராஜ்யபரி பாலனஞ் செய்து கொண்டு தாமரையிலைத் தண்ணீர்போலப் பிரபஞ்சத்தில் தாக்கற்று நின்றார் என்று நூல்கள் கூறுகின்றன. இவர் செய்தது மானசிக யோகமேயாம். ஹடயோகமல்ல. பிராணவாயுவை இடைகலை பிங்கலை வழியாகச் செல்லாமல் தடுத்துச் சுழிமுனை வழியே செலுத்தி மூலாதாரக் கனலை மூட்டி, மூலவாயிலைத் திறந்து அதன் வழியே பிரமரந்திரத் தேற்றித் துவாதசாந்தம் சேர்வதும், ஆராதாரங்களையும் போதிப்பதும், முக்கிரந்திகளையும் போதிப்பதும் நெருப்பாறு* மயிர்ப்பாலங்களைக் கடப்பதுமாகிய பெரிய கஷ்டம் இந்த யோகத்தில் இல்லை. இது மனதை ஒன்றிலும் ஆசைப்படவிடாமல் தடுப்பதேயாம். இது எளிதிற் செய்யக்கூடிய தாயினும் இதற்குப் பூர்வஜன்மத்திற் செய்த பெரும் புண்ணியம் வேண்டும். ஹடயோகம் மிக்க கஷ்டமானதாகையால் இந்த எளிய யோகத்தை யாவரும் கைக்கொண்டுய்வதே கடமையாம்.

 

* நெருப்பாறு மயிர்ப்பாலம் = சகல கேவலங்கள்.

 

இவ்வாறு பலவகை யோகங்களிலே நிலைபெற்று நின்று மனதை அடக்கி, இந்திரியங்களை ஜயித்து, உயிர்ச்சார்பு பொருட்சார்புகளாகிய இருவகைப் பற்றுகளையும் ஒழித்து ஞான மயமாய்ச் சமாதி கூடி நிற்பதே ஞானயோகமாம். இந்த ஞானயோகம் எளிதிற்கை வருவதன்று. முன் சென்ற பல ஜன்மங்களில் செய்த பெரும் புண்ணிய பலத்தினால் சிலருக்குக் கைகூடும். இவர்களுக்குக் கர்மங்கள் கிடையா. மாயா பிரபஞ்சத்தை யொழித்து ஞானத்தில் நிலைத்து நிற்பவர்களுக்குக் கன்மங்களில்லை. ஞானத்தை அடையவேண்டுவது அவசியமே. கன்மபந்தந் தொலைந்தாலன்றி ஞானம் பிறவாது. அந்தக் கன்மபந்தத்தைத் தொலைக்கவே கன்மங்கள் விதிக்கப்பட்டன. கன்மம் கன்மத்தாலேயே யழியும். அது அழுக்கை அழுக்கினாற் போக்குவது போலாகும். பலவகைச் சரக்குகளைப் பூசிப் புடமிடுவதால் செம்பின் களிம்பு நீங்குவது போலவாம். களிம்பு நீங்கினால் அச்செம்பு தங்கமாகும். அதன்பிறகு அதற்குப் புடம் வேண்டுவதில்லை. அது போலக் கன்மத்தைக் கன்மத்தாலொழித்தால் ஞானம் பிரகாசிக்கும். அதில் நிலைத்து நிற்பவர்கள் கன்மங்கள் செய்ய வேண்டுவதில்லை. ஞானத்தைப் பெற்றாலும் பூர்வ வாசனை சிறிது காலம் ஒழியாமலிருக்கும். அது மேலிடும் போது பிரபஞ்சந் தோன்றும். அது தோன்றும் போது அறிவிற்சிறந்த பெரியோர் கன்மத்தைச் செய்வர். இது உலகிலுள்ள மாந்தர்களை நல்வழிப்படுத்தி முத்தி நெறிகாட்டவேயாம்.

 

ஞானம் முயற்சியாலடையப்படும். அம்முயற்சி யாது எனின்? முன் மானச யோகத்திற் கூறியவாறு ஆசைகளை யறுத்தலாம். ஆதலாற்றான்மான சிகயோகம் ஞானயோகத்துக் கடுத்தபடியென்று பெரியோர் கூறுகின்றனர். ஆதலால் மனதை ஐம்புலன்களின் வழியிற் செலுத்தி விஷயங்களில் அழுந்தாமையே ஆசையறுத்தலாம். ஆசைகள் எல்லாவற்றையும் முற்றத் துறத்தல் வேண்டும். அவ்வாறு துறப்பது கூடாதபோது ஒவ்வொன்றாய் விடவேண்டும். இதனையே, "யாதனின் யாதனினீங்கியானோதல், அதனி னதனினிலன்'' என்று கூறினார் தேவர். எந்தெந்தப் பொருள்களில் ஆசையை ஒழிக்கின்றானோ அவ்வப்பொருள்களாலுண்டாந் துன்பத்தை அவன் அடைவதில்லை. இவ்வாறு புறப்பற்றாகிய பொருள்களைத் துறக்கவே அவனுக்குப் பூலோகத்தில் துன்பம் நீங்குவதன்றி மனம் அலையாமல் முத்திநெறிப்படுவதாலும் பேரின்பம் உண்டாகும். புறப்பற்றை யொழித்தபின் யான் என்னும் அகப்பற்றை யொழித்தல் வேண்டும். யான் என்பது ஆன்மா தானல்லாத தத்துவக் கூட்டத்தாலாகிய வுடலைத்தானென மயங்கி யதனிடத்துப் பற்றுவைத்தலும், உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்று வரும் பற்றுதலுமாம். இப்பற்றுதலால் உடம்புக்குண்டாகுந் துன்பங்களையும் சீவான்மா நுகரவேண்டி வரும். இப்பற்று ஒழியாதார்க்குத் துன்பமொழிவதில்லை. ஆதலால் புறப்பற்று அகப்பற்றுகளாகிய இரண்டனையுமே விடவேண்டும். புறப்பற்றுக்களை முயற்சியால் ஒழித்தல் கூடுமாயினும் அகப்பற்று விடுவது கடினம். இவ்வகப்பற்று புறப்பற்றுக்களே உயிர்ச்சார்பு பொருட்சார்பு என்றும், யான் எனது என்றும் விவகரிக்கப்படும். அகப்பற்றை அகங்காரம் என்றும், புறப்பற்றை மமகாரம் என்றும் வடமொழி நூல்கள் கூறும். இவ்விருவகைப் பற்றுகளையும் முற்றுந் துறப்பதே வீட்டு நெறியாம்.

 

இந்திரிய ஜயமே புறப்பற்றை யொழிப்பதற்குக் காரணமாகும். அகப்பற்று கொஞ்சத்தில் ஒழியாது. சாஸ்திரப் பயிற்சியானும், குருவருளிய உபதேச மொழியானும் யான் உடல் அல்லவென்கிற திடச்சித்தி வரவேண்டும். அது திடப்பட்டபின் யோகப்பயிற்சியால் சுயானுபவமாகக் கண்டு தெளியவேண்டும். ஜோதிஷம், வைத்தியம், மந்திரம், யோகம் என்கிற இந்த நான்கு சாஸ்திரங்களும் பிரத்தியட்சப் பிரமாண சாஸ்திரங்களாம். வாயுவின் முயற்சியால் ஆன்மாவை முறையே மூலாதாரமாதி ஆறுதலங்களினும் வைத்து ஒவ்வொன்றாய்த் தாண்டிச்செல்ல, அவ்வான்மா பரமாகாயத்தையடையும். அந்நிலையில் தான் வேறு உடல் வேறு என்பது ஆன்மாவுக்குப் பிரத்தியட்சத்தில் புலப்படும். அப்பொழுது சிவ சொரூபமாகிய ஞானத்தைப்பற்றி யான்மா நிலைபெறும். அந்நிலை கைவந்தால் யோகமும் அநாவசியமாம். யோகமுங் கன்மமேயாதலால் அதனையும் விட வேண்டும். விட்டபின் ஞானத்திலேயே நிலைத்துப் பரப்பிரமத்தையே நோக்கியிருக்க வேண்டும். இதனையே,


 "பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
 பற்றுக பற்று விடற்கு "


என்று தேவர் அருளிச்செய்தார். இவ்வாறு சமாதி கூடிப் பிரமத்தைச் சிந்தித்து அதில் இலயித்து நிற்பின் தனக்கு வேறான பொருள்களெல்லாம் நிலையற்றன; பிரமம் ஒன்றே நிலையான பொருள் என்கிற அறிவு உதிக்கும். சிற்சட பிரபஞ்சத்துக்கு ஆதாரமாய் நிற்பது அந்தப் பரமே யென்பது விளங்கும்.

 இவ்வாறு முறையாகத் துறந்து ஞானத்தில் நிலைபெறினும் அநாதியாகவே ஆன்மாவை விட்டு நீங்காமல் உடன் நின்ற வாசனையாகிய அவா (ஆசை) நீங்குவது அருமை. சமாதி கலைந்தால் அவ்வாசை மேலிட்டு மீண்டும் ஆன்மாவைப் பந்தத்துக்குள்ளாக்கும். ஆதலால் சமாதி கலைந்த காலத்தில் மனதைப் புலன் வழியில் விடாமல் அடக்கியாள வேண்டும். நெடுங்காலத்துப் பழக்கம் பொல்லாது. ஆசை கொள்ளுதலே அநாதிப் பழக்கம். அநாதிக்குக் காலவரையறையில்லை. எல்லையற்ற காலப்பழக்கம் எல்லாவற்றினும் கொடிதும் வலிமையுடையதுமாம். அதனால் அதனை வெல்வதரிது. இச்சமையத்தில் சாஸ்திர ஆராய்ச்சி, தெய்வத்தியானம் முதலியவற்றில் மனதைச் செலுத்தி யடக்கவேண்டும். இதுபற்றியே தேவர்,


      ''ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு'

 

என்று கூறியருளினார். ஐம்புலன் வழி நடக்கும் மனதை யடக்கிக்கொண்டாலும் மெய்மையை அறியாதார்க்கு அது பயன் தருவதில்லையாம் என்பது கருத்து. மெய்மையாவது அநாதி முத்தசத்து சித்தானந்த நித்திய சொரூபம். அதுவே பிரமம் சிவம் என்ற பரியாய நாமங்களானுங் கூறப்படும். மெய்மை என்பதனைத்தான் வடமொழி நூல்கள் ''சாத்து'' என்று கூறும். அதனை யுணர்தலாவது, எல்லாப் பொருள்களிலும் பிரமத்தைக்
காணுதல். இதனையே,


 "எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு''


எனத் தேவர் விளக்கி யருளினார். எவ்வாறு விளக்கினார் எனின், சரம் அசரமாகிய சகல பொருள்களு மாயா காரியமாகிய தத்துவக்கூட்டத்தாலாயவையேயாம். காரியமெல்லாம் அழியுந்தன்மை யுடையன. நிலையற்றனவாம் என்பது சாஸ்திர வாராய்ச்சியா னெய்தப்படும். இந்தச் சாத்திர வாராய்ச்சியால், நிலமுதல் உயிரிறுதியாயுள்ளன வெல்லாந் தத்துவக் கூட்டமாமென்றறிந்து அவற்றைத் தத்தங் காரணங்களில் ஒடுக்கி யுணரவேண்டும். தத்துவக் கூட்டங்களெல்லாவற்றையும் தத்தம் காரணங்களில் முறையே ஒடுக்கிச் சென்றால், கடைசியில் காரணகாரியங்களிரண்டுமின்றி நிற்பது எதுவோ அதுவே மெய்ப்பொருளாம். அதுவே ஜீவான்மா அடைய வேண்டிய பரம்பொருளாம். இவ்வாறு காணப்படும் பொருள்களெல்லாம் தத்துவக்கூட்டமேயாதலால் அவை யெல்லாவற்றையும் சோதித்து அறிந்து அவற்றின் கண் விஞ்சி நின்ற காரணப்பொருளைக் காண அவையெல்லாம் பரப்பிரமமாகவே தோன்றும். தோன்றவே எல்லாம் பிரமமயமாகவே யிருக்கும். எல்லாவற்றையும் பிரமமாய்க் காணுங்கால் மாயை விலகும். மாயை ஒழியவே அது காரணமாயீட்டப்படும் கன்மக் குவியல் எரிந்து போகும். கன்மந்தொலைந்தால் அஞ்ஞானமாகிய அவித்தையாவிருள் தனக்குத்தானே கழிந்துவிடும். அவ்விருள் நீங்கினால் பரப்பிரமத்தின் இயற்கைச் சொரூபம் அனந்தகோடிச் சூரிய பிரகாசம் போலப் பிரகாசிக்கும். அந்தப் பிரகாசத்தின் முன் பிறப்புக்குக் காரணமாகிய பிரபஞ்சமே தோன்றாது. பிரபஞ்சம் தோன்றாமையால் எல்லாப் பொருளும் எவ்விடமும் பிரம சொரூபமாகவே தோன்றும். இந்தக் காட்சியைக் காண்பதே முத்தியுமாம். இதைத் தரிசித்த ஆன்மா மீண்டும் பிரபஞ்சத்திற் புகாது. இது இராப்பகலற்ற விடமாம். இதுவே நினைப்பு மறப்பற்றதும், பிறப்பிறப்பற்றதுமான விடமாம். இந்த நெறியையடைந்தவரே ஜீவன் முத்தராவார். இந்நெறியை உணர்தற்குப் பல வுபாயங்களுள. இதனையே தேவர்,

 
 ''காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
 நாமங் கெடக்கெடு நோய்''
           எனக் கூறியருளினார்.

 

மேற்கூறிய வுபாயங்களுள் இதுவுமோருபாயமாம்.

 

ஞானயோகம்

 

அவ்வுபாயம் வருமாறு: - காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் ஞானத்துக்கு மறுதலையாய் வீடுபேற்றுக்கு இடையூறு செய்வனவாம். வீடடைய விரும்புவோர் அவற்றின் பெயருடன்கூட அவைகளைத் தொலைக்க வேண்டும். பெயரையும் கெடுத்தலென்பது முழுமையும் அழிக் கவேண்டுமென்பது. இவற்றுள் காமம் என்பது பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை யென முத்திறத்தாய் நின்று ஜீவனைப் பந்திக்கு மியல்புள்ளது. ஆசையென்பது அவர்கட்கெல்லாம் பொதுப் பெயராயினும் பெண்ணாசையையே மிகுதியாய்க் குறித்து வரும். இது நூல்களின் துணிபாம். பொன்னாசை மண்ணாசை யென்பன இப்பெண்ணாசையைக் காரணமாய்க் கொண்டு பெரும்பாலுந் தோன்றுதலால் பெண்ணாசையையே நூல்களும் பெரியோரும் கூறுவது. பெண்மேற்கொண்ட ஆசை நிமித்தமாக ஒருவன் தன் பெருஞ் செல்வத்தையும், வீடு நிலங்களையும் இழந்து விடுதல் கண்கூடாதலின் பெண்ணாசையே ஆசைகட்கெல்லாம் பெரிய ஆசையாம். இது பற்றியே ''பெண்ணாசையே எனது பேராசை" என்று ஆன்றோர் அருளிச்செய்தார். பெண்ணுக்கு மகிழ்ச்சியுண்டாக்கும் பொருட்டே வீடுகளும், வயல்களும், ஆடுமாடுகளும் ஈட்டப்படுகின்றன. இம்மூன்றும் ஓரினமாய் நிற்றலின் ஆசையென்பது மூன்றுக்கும் பொதுவாகவே ஞானிகளால் கொள்ளப்படும்.

 

மயக்கம் என்பது அநாதியாகவே ஜீவனைப் பந்தித்து நிற்கும் அவித்தையாம். அவித்தை யென்பது ஞானத்துக்கு மறுதலையான அஞ்ஞானம். இது ஆணவம், காமியம், மாயை என மூவகையாய் ஆன்மாவை அநாதியாகவே பந்தித்து நிற்கும் என்று சாஸ்திரங்கள் கூறும். இந்த அவித் தையே எல்லாவற்றுக்கும் மூலமாம். ஆயினும் அதைக் கடைசியில் நிறுத்தியது, காமத்தால் வெகுளியும், அவ்வெகுளியால் செய்வதும் தவிர் வதும் உணரப்பெறாத அறிவின்மையும் வெளிப்படு மியல்புபற்றிக் கூறினார். இந்த அவித்தையே மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் மாறுபடத் தோற்றுவிப்பது. அதுபற்றியே மெய்யான பரம் பொருளையுணராமையும், பொய்யான நிலையற்ற பொருள்களினிடத்தில் மதிப்பும் உண்டாய்ப் பிரபஞ்சத்தில் உழல்வதுமாம். வெகுளி என்கிற கோபம், தான் இச்சித்த பொருளையடைய முடியாதபடி இடையூறு செய்தாரைத் தண்டிக்கும் பொருட்டுத் தோன்றுவதாகிய ஒரு துர்க்குணமாம். "அவித்தையால் நான் என்கிற அகங்காரமும், அதனால் எனக்கு இது வேண்டுமென்னும் அவாவும், அவாவினால் அப்பொருளை அடையவேண்டு மென்னும் ஆசையும், அவ்வாசை கைகூடாமையால் கோபமும் உண்டாகு மெனவும், ஆதலால் அவித்தை, அகங்காரம், அவா, ஆசை, கோபம் எனக் குற்றம் ஐந்தாமென்றும் வடமொழி நூல் கூறும். அகங்காரம் அவித்தை யென்கிற மயக்கத்திலும், அவா ஆசையிலும் அடங்குதலால் குற்ற மூன்றென்று தேவர் கூறினார். இதனாற் கூறப்பட்டவுபாயம் யாதெனின், இம் முக்குற்றங்களையும் முற்றும் ஒழிக்கவேண்டும் என்பதாம். கூறிய முறையே ஒன்றொன்றாக ஒழிக்க அவை நீங்கும். அதாவது ஆசையை ஒழித்தலால், கோபம் தோன்றாது கெடும். கோபம் ஒழியவே மயக்கம் தானே யழியும். இவை மூன்றும் ஒழிந்தால் ஜீவனுக்கு விஞ்சி நிற்பது பிராரப்த கர்மமும், அக்கர்மத்தால் வந்த சரீரமுமேயாம். இந்தப் பிராரப்தகர்மமும் சரீரத்துடனே ஒழிவதாதலால், அவற்றால் துன்பமடையாமலிருப்பதற்கு ஞானயோகத்தில் இடையறாது நிலைபெற்று நிற்பதே உபாயமாம். காரணங்களாகிற இந்த முக்குற்றங்களு மொழிந்தால் அவற்றாலாகும் காரியமாகிய இருவினைகளையும் அக்குற்றமொழிந்தார் செய்யாராதலால் கன்ம பந்த மெளிதில் நீங்கும்.

 

கன்மம் ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என மூவகையாகும். இவற்றில் ஆகாமியம் என்பது இச்சென்மத்தில் செய்யும் ஒவ்வொரு கர்மமாகும். சஞ்சிதம் (கூட்டம்) என்பது பிறந்தது முதல் செய்த கர்மங்களின் கூட்டம். பிராரப்தம் என்பது முன் சன்மத்தில் செய்த சஞ்சிதமாயிருந்து, இச்சன்மத்தில் நாம் அனுவித்துக் கொண்டிருப்பது. அப்பிராரப்த கன்மமே தேகமாய் வந்தது. பிராரப்தத்தை யனுபவிக்கும் போது புது புது கர்மத்தை (ஆகாமியத்தைச் செய்வதால் மேல் வரும் சன்மத்திற்கு விதையுண்டாக்கிக் கொள்கிறோம். ஞானயோகப் பயிற்சியினால் சஞ்சித கன்மமும் ஆகாமிய கன்மமும் தகிக்கப்பட்டொழிந்து போம். பிராரப்தம் சரீரத்துடன் நிலைபெற்று நிற்கும்; சரீரத்தோடொழியும்.

 

கன்மங்களுக்கு ஆசையே காரணமாதலால் அவ்வாசனா ரூபமாகப் பிராரப்த கன்மங்களுடன் கலந்து நிற்கும். அநாதி தொடங்கி நெடுங்காலப் பயிற்சியாய் வாசனாரூபமாய்ப் பிராரப்த கன்மத்துடன் கலந்து நிற்கும் அவ்வாசை ரானொரு காலத்தில் மேலிடுவதும் சகஜம். அது மேலிடுமாயின் பண்டைய விஷயானுபவங்கள் நினைவுக்கு வரும். அப்போது மனம் புலன்களின் வழியை நாடிச் செல்லும். செல்லுமாயின் பிரமாதம் நேரிடும். ஆதலால் அவ்வாசை மேலிடாதபடி கண்டித்துக்கொண்டே யிருக்க வேண்டும். தன்னைத்தவிர வேறு பதார்த்தங்களுமுளவெனுங் கருத்தாலேயே யித்தீங்கு நேரிடுவதால், எல்லாம் பிரமப்பொருளே; பிரமத்தைத் தவிர வேறு பதார்த்தங்களில்லையென்று நிச்சயித்துத் தீர்மானித்து, அந்தப் பிரமப் பொருளையே பொருள் எனக் கருதிச் சமாதி நிஷ்டைகூடி யிருப்பதே இந்த வாதனை வாராமலொழியும் மார்க்கம். இதுபற்றியே,


 ''ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
 பேரா வியற்கை தரும்.''

 

நிலையற்ற பொருள்களை விரும்பி அபிவிருத்தியாகும் இயல்பினையுடைய ஆசையை ஒருவன் ஒழித்தானானால் அதுவே அவனுக்கு முத்தி நிலைமையாம் என்பது. ஈண்டு அவாவென்றது வாசனாரூபமாக நிற்கும் ஆசையையாம். ஒன்றிலும் ஆசைவையாமல் பரிசுத்தனாயிருப்பது தான் முத்தியென்பது நூல்களின் கருத்து. இவன் பிராரப்த கன்ம சரீரத்துடன் கூடியிருப்பினும் முத்தனேயாவான் என்பதில் ஐயமேயில்லை. இந்நிலைமை கைவந்தவனையே சீவன் முத்தனென்று ஆன்றோர் கூறுகின்றனர். நூல்களும் வியந்து கூறுகின்றன. இதுகாறுங் கூறியவாற்றால் காமம் வெகுளி மயக்க மென்னும் முக்குற்றங்களையும் பற்றற ஒழிப்பதுவே வீடுபேற்றுக்குக் காரணமாகிய உபாயமாமென்பது பெறப்பட்டது.
 

இவ்வுபாயங்களெல்லாம் கைவரப்பெற்றுச் சித்தியடைந்தாலும் பிராரப்த கன்மபயனை யிச்சரீரத்தால் அனுபவித்தே தீரவேண்டும். நல்வினைப் பயனால் இன்பங்களும், தீவினைப்பயனால் பலவகையான துன்பங்களும் நேரிடும். அவற்றினால் மதிமயங்காதிருத்தல் வேண்டும். மதிமயக்கமாவது இன்பத்தில் மகிழ்தலும் துன்பத்தில் வாட்டமடைதலுமாம். சரீரம் எடுத்ததற்குக் காரணமாயிருந்த நல்வினை தீவினைகளின் பயனை இன்னின்ன காலத்தில் இப்படியாக அனுபவித்தே தீரவேண்டுமென்பது சர்வவல்லமையுள்ள கடவுளால் நியமிக்கப்பட்ட நியமமாம். இதனை விதி என்பர் வட நூலோர். தென்மொழியில் ஊழ் என்று கூறப்படும். விதியால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்தொழிந்தால் பிராரப்த கன்மமும் தொலையும். அதனை அனுபவிப்பதற்கு இடமாயிருந்த சரீரமும் ஒழியும். ஒழிந்தால் அந்தச் சீவன் முக்தன் பந்த முற்று மற்றுப் பிரமத்துடன் ஏகமாய்க் கலந்து போவதாகிய சாயுஜ்ய முத்தியை அடைந்துவிடுவான்.
 

கொடிய பிராரப்த கன்மப்பயனாகிய கொடுந்துன்பத்தை அனுபவிக்கும் போது எத்தகையருக்கும் சற்றுச் சித்தம் கலக்கமுறுவ தியல்பாதலால் அச்சமையம் ஆகாமிய கன்மம் உண்டாவதற் கேதுவான கன்மங்களைச் செய்யக்கூடும். அதனாற் பிரமாதம் உண்டாகும். அக்காலத்திலும், புண்ணிய கன்மபலனை யனுபவிக்கும்போதும் அவ்விருபயன்களையும் ஒரு தன்மையாகக் கருதி இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் துயருறாமலும் திடசித்தமுடையவனாயிருத்தல் வேண்டும். விதி மஹாவலிமையுடையது எவரானும் வெல்லற்கரியது. இதுபற்றியே


 "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
 சூழினுந் தான்முந் துறும்''


என்று ஊழின் வலியைப் புகழ்ந்து கூறினார் பொய்யாமொழியார். ஒருவ ரானுந் தடுக்கமுடியாத விதியின் வலியை யுணராதிருப்பதற்கு இன்பத்திற் களியாமையும் துன்பத்தில் வருந்தாமையுமே உபாயமாம். இவ்வுபாயத் தினாலன்றி வேறுவகையான உபாயம் இலதென்று நூல்கள் கூறும். ஆயினும் பெரியோர் சுயானுபவத்தாற் கண்டறிந்து கூறிய உபாயமொன்றுண்டு. அதாவது தான் வழிபடு தெய்வத்தைத் தியானித்திருப்பதாம். அத்தெய்வத்தைச் சதா சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். கவலையற்று ஞானயோக சமாதி கூடியிருக்க வேண்டும். ஞானயோக சமாதியால் புளியம்பழமும் அதன் ஓடும் போல சரீரத்துடன் தாக்கற்று நிற்கும் தன்மையுண்டாகும். சரீரத்தோடு தாக்கற்று நின்றால் அச்சரீரத்துக்கு விதியால் நேரிடும் இன்பதுன்பங்களை ஆன்மாவுணராது. ஞானசமாதிகலைந்திருக்கும் சமயத்தில் வழிபடுங் கடவுளாகிய உபாசனாமூர்த்தியை மனமொழி மெய்கள் வேறுபடாமல் ஒன்றிச் சிந்திக்க அத்தெய்வம் விதியால் வருந் துன்பங்கள் தோன்றாதபடி தாங்கிக்கொள்ளும். அதாவது ஞானமயமான தெய்வ சொரூபத்தின் முன் மலமயமான கன்மப்பயன்கள் எதிர்த்து நில்லா. அந்த ஞானாக்கினியால் எரிந்து போகும். தெய்வத் தியானமும் ஞான யோகமுமன்றி விதியை வெல்லும் உபாயமில்லை யென்று பக்தியிற் சிறந்த பெரியோர் கூறுகின்றனர்.

 ''நாளென் செயும் வினைதா னென்செயு மெனைநா டிவந்த
 கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங் குமரே சரிரு
 தாளுஞ்சி லம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
 தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்து தோன் றிடினே''


என்றதனால் சகல சொரூப திருவுருவச் சிந்தனையால் விதியையும் வெல்ல லாமென்பது தோன்றவும்,


"சிந்திக்கி லேனின்று சேவிக்கி லேன் றண்டைச் சிற்றடியை
வந்திக்கி லேனொன்றும் வாழ்த்துகிலேன் மயில்வா கனனைச்
சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கிலே னுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே "


என்றதனால் விதியால் வரும் சரீர துன்பத்தையும் மனோவியாகுலத்தையும் வெல்லக்கூடும் என்று அருணகிரிநாதர் கூறியருளினார். ஞானயோக சமாதிகலைந்து பிரபஞ்சந் தோன்றும் போது தனது உபாசனாமூர்த்தியாகிய சகுண பிரமத்தைச் சிந்தித்திருப்பதே விதியின் வலியை வென்று ஞானயோகத்தில் நிலைத்து நிற்பதற்குத் தகுந்த உபாயமாகும். சகுண நிர்க்குண சொரூபங்களிரண்டும் பரப்பிரமத்துக்கு உரியனவேயாதலால் என்க.

தெய்வம் - முற்றிற்று.

 

கர்மவிபாகம்

 

இதுகாறும் கூறிவந்த பலவகையான சற்கருமங்களினாலும் எய்தும் பயன் முத்தி என்னப்படும். முத்தி, மோக்ஷம் என்பன ஒருபொருட்கிளவி கள். இதனைத் தமிழில் வீடு என்று நூல்கள் கூறும். ஆகவே முத்தி, மோட் சம், வீடு என்பன ஒரே பொருளையே கூறும். ''வீடு'' என்பது விடு என்னும் வினைப்பகு தியடியாகப் பிறந்த முதல்நிலை திரிந்த தொழிற்பெயராய் விடுபடுதல் என்னும் பொருள் தரும். முத்தி, மோட்சம் என்பனவற்றிற்கும் இது வேபொருளாம். விடுபடுதல் என்றால் எதில் நின்றும் விடுபடுதல் என்னில் நரை, திரை, மூப்பு, ஜனனம், மரணம், ஆதியாத்மிகம், ஆதிதெய்விகம், பசி, நோய் முதலிய பிரபஞ்ச சம்பந்தமான துன்பங்களினின்றும் விடுபடுதலாம். இவை யெல்லாம் கர்மவிபாகத்தால் வருவன. பாப்புண்ணியங்களுக்குப் பொதுவான கர்மமென்னும் சொல் ஈண்டு பாபத்தையே குறிக்கும். அதன் விபாகமாவது அக்கன் மமானது தனது பலனைக் கொடுக்கும் தசையாகும். அது ஜன்மம், ஆயுள், போகமென்று மூவகைப்படும் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. ஒருவன் செய்த பாபகன்மமானது முற்கூறிய ஞானயோகாக் கினியால் தகிக்கப்படாத பட்சத்தில் அது ஜன்மம், ஆயுசு, போகம் என் னும் பலன்களை அளிக்கின்றது. ஜன்மம் புழுவாதி யிழிந்த ஜன்மத்தைத் தருதல்; ஆயுள் என்பது அற்பாயுசாகச் செய்தல்; போகம் என்பது எமலோகத்தில் நரக வாதனையைச் செய்தல்.

 

இப்பாபகன்மம் மனம், வாக்கு, காயம் என்கிற திரிகரணங்களாலும் செய்யப்படுகின்றது. அது அற்பமானதாயிருந்தாலும் அவன் எமலோகத்தில் அதிக கோரமான நரகவாதனையை அனுபவிக்கிறானென்று பிரமபுராணம் கூறுகின்றது. பாபம் செய்தவன் ரிஷிகள் விதித்திருக்கிற பிராயச் சித்தங்களைச் செய்து கொள்ள வேண்டும். செய்து கொண்டால் அதனின்றும் விடுபடுவான். இல்லாவிடில் நரகவாதனையை அடைவானென்று விஷ்ணு புராணம் கூறுகின்றது. பிராயச்சித்தம் செய்துகொள்ளாதவனும், இராஜ தண்டனையால் பாபம் நீங்கப் பெறாதவனும் நரகங்களை அனுபவித்துப் பின்பு பலவகையான இழிந்த ஜன்மங்களை யடைவானென்று விஷ்ணு தர்மோத்தரம் கூறுகின்றது. இதனால் சரியான இராஜதண்டனையும் பாபத்துக்குப் பிராயச்சித்தமாமென்று விளங்குகின்றது

     

மூவகையான கர்மவிபாகங்களில் பிறர் பொருளை யிச்சித்தல், பிறருக்குத் துன்பம் உண்டாக்கக் கருதல், வீணான எண்ணங்களைக் கொள்ளுதல் இவை போல்வனவெல்லாம் மனதினால் செய்யப்படும் பாவங்களாம். பௌருஷம் பேசுதல், பொய்சொல்லுதல், கோள் சொல்லுதல், தன் மனதுக்குத் தோன் றினபடியே பேசுதல், சிநேகிதர்களுக்குள் பகையுண்டாகும்படி பேசுதல், இவை போலவன வாக்கினால் உண்டாகும் தோஷங்களாம். பிறனுக்குத் தெரியாமல் அவன் பொருளை யெடுத்துக்கொள்ளுதல் (திருடுதல்), பிறரை அடித்தல், இம்சித்தல், பரதாரகமனம் செய்தல் முதலியவைகள் சரீரத்தினால் செய்யப்படும் பாவங்களாம். இவைகள் மிகுதியும் பெரிதாயின் இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் தீமை பயக்கும். கொஞ்சம் குறைவுள்ளதாயின் பரலோகத்தில் துன்பம் அளிக்கும். இப்பாவங்கள் ஓர் அழுக்காய்த் தோல், நரம்பு, எலும்பு முதலியவற்றில் நின்று சூட்சும சரீரத்திலும் பிரவே சித்துவிடும். அதனால் இந்தத் தூலசரீரத்தினால் அனுபவித்தது போக எஞ்சியிருந்தது சூட்சும சரீரத்தைப்பற்றி வேறு சரீரங்களுக்கு காரணமாக வருமாதலால் இகலோக பரலோகங்க ளிரண்டிலும் துன்பத்தையே பயக்கும்.

 

இவற்றை ஒழித்துக்கொள்வதற்காக யாம் கூறி வந்த நித்திய விதியாதி கர்மங்கள் ரிஷிகளால் விதிக்கப்பட்டன. இவற்றுள் ஸ்நானம், ஜபம், தியா னம், தேவாராதனை, ஆலயதரிசனை, தேவபிதிர்தர்ப்பணம் முக்கியமானவை கள். இவைகளுக்குள் சரியை கிரியையாதிகள் அடங்கி நிற்கின்றன. யோகஞானங்களும் விளக்கப்பட்டன. சரியை கிரியைகளை விட யோகம் சிறந்தது. யோகத்தை விட ஞானம் சிறந்தது. ஆதலால் மோட்சத்துக்குச் சோபானமாம் (படிகள்) இந்த முறையை ஒவ்வொன்றாய் அனுஷ்டித்து வந்து ஞானமாகிய படியில் ஏறினால் அது அழிவற்ற ஞானமாகும். இந்த ஞானத்தினால் அடையப்படுவதே முத்தியென்பது.

     

முத்தியென்பது இன்னதென்பதை எளிதில் கண்டறிய முடியாது. ஏனெனில் உலகத்தில் பலவிதங்களான மதங்கள் உள. அவைகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகக் கூறும். அதனால் உண்மை காண்பதரிது. சமயமோ ஈசுவர சமயம் நீரீசுவர சமயமென இருவகைப்படும். ஈசுவர சமயம் ஆஸ்திகம் என்னப்படும். நிரீசுவர சமயம் நாஸ்திகம் என்னப்படும். ஆஸ்திக சமயமே உலகில் பெரும்பாலாரால் அனுஷ்டிக்கப்படும். ஆஸ்திக மதத்துக்கு வேதாகம புராண ஸ்மிருதிகளே பிரமாணங்களாம். வேதபுராண ஸ்மிருதிகளை அனுசரித்த மதங்கள் வைதிகமென்னப்படும். ஆகமானுசார மான மதங்கள் தாந்திரிகமென்னப்படும். வைதிகர் வைதிகத்தையே அனுஷ்டிக்க வேண்டுமென்றும், தாந்திரிகர் தாந்திரிகத்தையே அனுஷ்டிக்க வேண்டுமென்றும் சூதசங்கிதை வரையறுத்துக் கூறியது. நிற்க,

ஆதிகாலத்தில் வைதிகமென்று ஒரே மதமிருந்தது. அது சிரௌதம் ஸ்மார்த்தம் என்று இருவகையாய் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. சிரௌத மென்பது வேதங்கூறிய வாசாரமுறை. ஸ்மார்த்த மென்பது வேதத்தை மூலமாகக் கொண்ட ஸ்மிருதி கூறிய ஆசாரமுறை. வைதிகத்தில் அதிகார மில்லாத சிலருக்கு ஆகமாசாரம் விதிக்கப்பட்டு இருக்கிறது. வைதிகர் வைதிகத்தையே அனுசரித்தார்கள். ஆகமத்துக்குத் தந்திரமென்று ஒரு பேருண்டு. அதுபற்றி அது கூறிய ஆசாரம் தாந்திரிகாசாரம் என்னப்படும். வைதிகநெறிபற்றினோர் தமக்குக் கிடைத்த உபதேசமுறைப்படி சிவன், விஷ்ணு, தேவி, கணபதி, சூரியன், சுப்பிரமணியர் இவர்களை ஆராதித்து வந்தார்கள். இவர்களுக்கு மதமொன்றேயாதலால் முக்தியென்பதும் ஒரே விதமாகவிருந்தது.

 

பிறகு ஆகமநெறி பற்றியது சைவம், வைணவம், சாக்தேயம், காணாபத் தியம், கௌமாரம், சௌரம் (சூரியமதம்) என்று ஆறு மதங்களாயின. இவை ஆகம முறை வைதிகமுறை இரண்டாலும் அனுஷ்டிக்கப்பட்டு வந்தன. ஆகம முறைக்கும் வைதிக முறைக்கும் சிறிது வேறுபாடுண்டாதலால் அவ்விரு நெறிபற்றி முத்தியும் வேறுபட்டது. ஒவ்வொரு மதத்தரும் தத்தம் கொள்கையென நிலைபெறுவித்தற்குப் பல நூல்களை வெளியிட்டனர். சில நூல்கள் தாமாராதிக்கும் தெய்வத்தின் உலகமே முக்தியுலகமென்றும் அதை யடைவதே முத்தியென்றுங் கூறும். சில மதம் அவ்வுலகத்தில் சென்று அக்கடவுளுக்குப் பணிவிடை செய்து கொண்டு தெய்வத்தின் சமீபத்திலிருப்பதே முக்தியென்று கூறும். சில கடவுளின் சொரூபத்தைப் பெற்று அக்கடவுளுலகத்திலிருப்பதே முக்தியென்று கூறும். இவை முறையே சாலோக சாமீப சாரூபம் என்ற பதமுத்தியாவனவே யன்றி அழிவற்ற பரமுத்தியாகிய சாயுஜ்ய முக்தியாகாதென்று வைதிக நூல் கூறும்.

 

இந்தச் சாயுஜ்யமென்பது தான் அழிவற்றதென்றும், அதுவே மீளா முக்தியென்றும் கூறும் வைதிக நூல்கள். முற்கூறிய சாலோக சாமீப சாரூபமென்கிற பதமுத்திகளும் சர்வ சங்காரத்தில் எல்லாம் அழிந்த போது மூவகை முக்தர்களும் சாயுஜ்யமுக்தியை அடைவார்களென்றும், அதனால் இந்தப் பதமுக்தி மோட்ச சோபானங்களாமென்றும் கூறித் தழுவுகின்றனர். ஆதலால் இந்த நால்வகையான முக்திகளில் எதை யடைந்தாலும் முக்தியே யாமென்று கொள்ளலாமாயினும் தோற்றமுள்ள வெல்லாம் அழியும் தன்மையவே என்னும் வேதத்தொடுமாறுகொள்ளுமென்று மறுத்துச் சாயுஜ்ய மொன்றையே பொருளெனக் கொள்வர் ஞான நூலோர்.

 

ஏனெனில், சாலோகாதி பதமுத்திகளைப் பெற்ற சிலர் மீண்டும் பூலோகத்தில் ஜனனமெடுத்து வந்தார்கள் என்று புராணங்களிற் காணப்படுகின்றன. ஆதலால் அவைகளுக்கும் ஒரு பெருங்கால வரையறை யிருக்கலா மென்பர். ஆயினும் அது போக விருப்ப முடையவர்களுக்கேயன்றி ஏனையர்களுக்குக் கேட்கப்படாமையால் அது சர்வ சம்மதமல்லவென்பர் சிலர். புராணங்களும் இதிகாசங்களும் பதமுக்தி பெற்றவர்கள் யாதாவதோர் காரணம்பற்றியே மீண்டும் பூவுலகில் ஜனிப்பார்களென்றும், அவர்கள் மீண்டும் தம்பதத்தையடைந்து அங்கிருந்தே சாயுஜ்யத்தை யடைவார்களென்றும் கூறுகின்றன. ஆதலால் பதமுக்திகளும் சிறப்புடையனவென்றே நாம் கொள்ள வேண்டும்.

 

இணையற்ற சாயுஜ்யமென்கிற முக்தியே மோட்சம் என்று நூல்களாற் புகழ்ந்து கூறப்படுவது. அது நாமரூபகிரியையற்ற பரப்பிரமப்பொருளொடு வேற்ற ஒன்றாய்க் கலப்பதாம். இதிலும் வேதாகமங்கள் மாறுபடுகின்றன. நட்சத்திராதிஜோதிகள் சூரியன் ஒளியிற் கலந்து அவ்வொளிக்கு வேறாகாமலும் வேறாயும் விளங்குவது போலப் பரம்பொருளின் பரமபிரகாசத்தில் ஜீவன் அடங்கி நிற்பதே சாயுஜ்யமுக்தியென்று சிவாகம சாஸ்திரங்களிற் சில கூறுகின்றன. வேறுசில இதை மறுத்துப் பரசிவனைப் போலவே அச் சிவனுக்குச் சமானமாயிருப்பதேயாமென்று கூறும். இது ஆகமமாறுபாடு. எங்ஙனமாயினும் இவைகள் மீளாக்கதியே யாமென்று கொள்ளத்தக்க தென்பர் பெரியோர்.

 

இனி வைத்திய நூல்கள் பாலொடு பாலும், நீரொடு நீரும் ஒன்றுபடுவது போலப் பரப்பிரம்மப் பொருளொடு வேற்றக் கலப்பதே சாயுஜ்ய முத்தியென்று கூறும். அவ்வாறு கூறுவதனால் பாசத்தினின்றும் விடுபட்டுள்ள ஜீவான்மா பரமான்மாவேயாகுமென்பது புலப்படும். இதுபற்றியே சிவஜீவர்களுக்குப் பேதங்கூறி விளக்கவெழுந்த உபநிஷத் "பாசபத்தஸ்ததாஜீவ: பாசமுக்தஸ்ததாசிவ:" பாசத்தினாற் பந்திக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஜீவன் என்று பேர். இயற்கையிலேயே பாசத்தினின்றும் நீங்கியிருக்கும் பொருளுக்குச் சிவன் என்று பேர் என்றது. இதனால் பசு என்ற பெயரும் ஜீவனுக்குப் பந்தத்தினால் உண்டான பெயரேயாகும் என்பது விளங்கும். பிரமத்துக்குரிய எண்குணங்களில் "இயல்பாகவே பாசமற்றிருப்பது" என்பது ஒன்று. இதனால் பாசமில்லாதிருப்பதே சிவமும் பாசம் பற்றியிருப்பதே ஜீவன் என்பதும் விளங்கிற்று. இனிக் கர்மத்தினாலும், தவத்தினாலும், யோகத்தினாலும், ஞானத்தினாலும் பாசபந்தங்களைத் தகித்தெழுந்து நிர்மலமாய் விளங்கும் ஆன்மாவும் பரசிவப் பொருளே யாகுமென்பது வைதிக நூற்றுணிபு. ஏனெனில் ''பாசமுக்தஸ்ததாசிவ:" என்று உபதேசித்ததனாலென்க. பாசநாசத்தினால் நிர்மலமான சீவன் சிவத்தொடு கலந்துசர்வ வியாபகனாய் விடுவன் என்பது புலப்படும். அணுரூபியான ஜீவன் சர்வவியாபி யாவதெப்படியெனில் ஒரு குடம் நீரில் ஒரு பிடி உப்பையிட்டால் அவ்வுப்புச் சிறிய வளவினதாக இருந்தாலும் அக்குடநீர் முழுவதிலும் கலந்து நிற்பது போலாம் என்பது. அக்குடத்திலிட்ட உப்புத் தன்னளவை ஒழித்து நீரினளவாகவே நிற்பது போலச் சீவனும் பரபிரமத்தினளவாகவே வியாபித்துத் தன்னளவொழிந்தே நிற்கும். அதாவது ஒரு படி நீரில் அரைப்படி உப்பைக் கலந்தால் அவ்விரண்டுஞ் சேர்ந்து ஒன்றரைப்படி நீராகாமல் ஒருபடி நீராகவே நிற்பது போலவென்று வைதிக தூல்கள் கூறும். இவ்வாறு பிரமத்தொடு வேற்றக் கலந்த ஜீவாத்மா மீண்டும் பிறப்பதில்லை அதற்கு இரவு பகலென்கிற காலவரையறையில்லை. விருத்தியாய் நிறைவதும் க்ஷணித்துக் குறைவதுமின்றி என்றும் ஒரு தன்மையாகவே யிருக்கும். அதற்குத் துன்பமென்பதே கிடையாது. எப்போதும் ஆனந்தமேயாம். அது சச்சிதானந்த சொரூபமாகவே விளங்குமென்றும் வைதிக நூல்களெல்லாம் கூறும். இதுவே முத்தியென்பதாம். இவ்விஷயத்தில் வேதாகமங்கள் சிறிது மாறுபடவுரைப்பினும், துன்பமற்ற நிலைமையே முத்தியென்பதில் மாறுபடாமையால் வீடு, மோட்சம், முக்தி என்பன ஜனன மரண சம்சார பந்தத்தினாலாய துன்பங்களினின்றும் விடுபடுதலென்கிற ஒரே பொருளில் அமைந்துள்ளனவாதலால் நாம் ஐயப்பட வேண்டுவதில்லை. சகல துன்பங்களில் நின்றும் விடுபடுதலே முத்தி, மோட்சம், வீடு யென்பனவற்றின் பொருளெனக் கொள்க.

 

இந்த நிலைமையை அடைவதற்கே ''நித்தியவிதி'' என்று தொடங்கியது முதல் ஞானயோகம் என்ப திறுதியாக நியமங்களை ஆரிய சித்தாந்தங்களினின்றும் திரட்டியெடுத்து எழுதினோம். யாமாக ஒன்றும் கூறியதில்லை. இனி முற்கூறிப் போந்தவற்றிற் சில முக்கியாம்சங்களைச் சிறிது கூறி முடித்து வேறு விஷயங்களைக் கவனிப்போம்.
 

மனம் வாக்கு காயம் மூன்றும் சுத்தியாயிருந்தாலன்றிப் பந்தத்தைத் தகிக்கும் ஞானமுதியாது. அதுபற்றி முக்கரணங்களையும் சுத்தி செய்ய வேண்டும். இதை விளக்கவே கன்மகாண்டமாகிய ஸ்மிருதிகள் எழுந்தன. அந்த ஸ்மிருதியின் வன்மை கொண்டே கன்மங் கூறப்பட்டது. அவற்றுள் சரீரசுத்திக்கு நித்தியந்தவறாமல் ஸ்நானம் செய்வதே விதிக்கப்பட்டது. பாலர் விருத்தர் நோயாளிகள் வெந்நீரிலும் ஸ்நானம் பண்ணலாம். ஏனையவர்கள் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்வதே சுத்தியாம். அவருள்ளும் ஸ்திரீகள் பிரமசாரிகள் சந்நியாசிகள் இவர்கள் வெய்யிற் புறப்பட்ட பின்னரே ஸ்நானம் செய்யவேண்டும். மற்றைய கிருகஸ்தர்கள் சூரியோதயமாவதற்கு முன் ஸ்நானம் செய்ய வேண்டும். இவற்றுக்குரிய காரணங்கள் முன்னரே கூறப்பட்டன.

 

இதன்பின் சுத்தமான வஸ்திரந் தரித்தல் வேண்டும். நூலாலாய வஸ்திரம், நாரினால் நெய்த வஸ்திரம், பட்டினாற் செய்த வஸ்திர மிவற்றில் சுத்தமான ஏதேனுமொன்றைத் தரித்தல் வேண்டும். ஈர வஸ்திரத்தை உடுத்தியிருப்பதும், அழுக்குப் படிந்த பழைய வஸ்திரமுடுப்பதுங் கூடாது. பிறகு தங்கள் குலாசார மதாசாரங்களுக்குத் தக்கபடி நெற்றியில் உரித்தான மதக்குறியைத் தரித்தல் வேண்டும். அதன்பின் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்து காயத்திரி மகாமந்திரத்தை இயன்ற மட்டில் ஜபித்தல் வேண்டும். ஏனையவர்கள் தங்கள் தங்கள் குலாசாரப்படி சற்குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை ஜபித்தல் வேண்டும். பூர்வான்னத்தில் இந்தக் கன்மங்களை முடித்துக் கொண்டு, பரான்ன காலத்தில் ஜீவனார்த்தத்துக்கு வேண்டிய பொருள் சேகரிப்பதில் முயல வேண்டும்.

 

மத்தியான்ன காலத்தில் பொருண்முயற்சியில் பிரவேசித்திருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியிற் சென்றிருந்தால் மறுபடியும் ஸ்நானம் செய்து மத்தியான்ன கடமைகளை முடித்துப் பிறகு தமது குலாசார தர்மப்படி தேவபூஜை செய்யவேண்டும். பூஜை செய்து தேவனுக்கு நைவேத்தியம் செய்த உணவை அதிதிகளுடன் புசிக்கவேண்டும். இவற்றுக்குரிய கிரமங்கள் முன்னரே விரிவாகக் கூறப்பட்டன. காகம் நாய் முதலிய ஜந்துக்களுக்கும் சிறிதுணவளித்தல் வேண்டும். போஜனம் செய்தபின் கிருகஸ்தர்கள் தாம்பூலந்தரித்தல் வேண்டும்.

 

அபரான்னகாலத்தில் தன் பந்துவர்க்கங்களுடன் சிறிதுநேரம் இதிகாசபுராணங்களைக் கேட்டுக்கொண்டு நித்திரை செய்யாமலிருக்க வேண்டும். உண்டகளையாறினபின் இலௌகிகத் தொழிலில் பிரவேசிக்கலாம். சாயான்னகாலம் வரையில் இலௌகிக் காரியம் செய்தபின் அந்திக்கு முன்னாகவே கிருகத்திற்கு வந்து விட வேண்டும். ஆறு குளங்களிலாயினும் கிருகத்திலாயினும் சந்தியாவந்தனாதிகளை முடித்துவிட்டுத் தேவாராதனை செய்துவிட்டுப் புசித்தல் வேண்டும். ஒரு ஜாமத்துக்குள்ளாகவே உண்ண வேண்டும். அதன்பின் இதிகாச புராணங்களைக் கேட்டுக் கொண்டிருந்து இரண்டாவது ஜாமத்தில் நித்திரை செய்ய வேண்டும். படுத்துக் கொண்டு தான் வழிபடுங் கடவுளைச் சிந்தித்துக் கொண்டே தன்னை மறக்க வேண்டும். பகற்காலத்தைச் சரியாய் ஐந்தாகப் பங்கிட்டால் ஒரு பங்குக்கு ஆறு நாழிகையாகும். ஒவ்வொரு பங்கும் ஒவ்வொரு அன்னமென்னப்படும். அன்னமென்பது பகல். இதில் சூரிய உதயகாலமுதல் ஆறு நாழிகை பரியந்தம் பூர்வான்னமாம்; மேல் பன்னிரண்டு நாழிகை வரை பரான்னமாம்; அதற்குமேல் பதினெட்டு நாழிகை வரையில் மத்தியான்னகாலமாம்; மேல் இருபத்து நாலு நாழிகை மட்டும் அபரான்னகாலம் என்னப்படும்; அதன்பின் முப்பது நாழிகை வரைக்கும் சாயான்னமாம். இவையே ஐவகை அன்னங்கள் என்று பகலின் பகுப்பு ஜோதிட நூல்களிற் கூறப்படும். ஆரியர்கள் தங்களுடைய தொழிலுக்குத் தக்கவாறு பகலை யிவ்வாறு பகுந்துக் கொண்டார்கள். இரவில் முன்னிரா பின்னிரா நடுரா என மூன்றே பகுப்பாம். அஸ்தமித்து ஒரு ஜாமம் வரையில் முன்னிராவாம்; இரண்டு மூன்றாம் ஜாமங்கள் நடு இராவாம். இதற்கு மேல் பின் இரா. அதுவுங் கன்மத்துக் கேற்றவாறே வகுத்துக் கொள்ளப்பட்டது. இப்பிரிவுகளில் செய்யப்படும் கன்மங்கள் முன்னர்க் கூறப்பட்டன.

 

இதுகாறுங் கூறிப்போந்த கன்மங்கள் அந்தக்கரண புறக்கரணங்களைச் சுத்தி செய்யும். மந்திரஜபம் தெய்வ தியானம் இவ்விரண்டும் மனதைப் பரிபாகப்படுத்தும் வன்மையுள்ளன. இவ்விரண்டும் நீங்கிய கன்மங்கள் பயன் தருவது அரிதேயாம். மனச்சுத்திக்கு இவ்விரண்டு மட்டிற் போதுவதன்று. சத்தியம், பொறுமை, ஜீவகாருண்யம், கள்ளாமை, புலாலுண்ணாமை, பொய் கூறாமை, பிறன்மனை விழையாமை, பிறர் பொருளையிச்சியாமை, பிறர்க்குத் துன்பம் செய்யாமை, ஞான நூல்களை யோதல், அசூயையின்மை முதலியவாகக் கூறப்பட்டவைகளைத் தவறாமல் அனுஷ்டித்தல் வேண்டும். இவைகளே மானசிக ஸ்நானம் என்னப்படும். சரீரசுத்தி மனிதகுணம் என்றும் முற்குறித்தவைகள் தெய்வகுண மென்றும் கூறப்படும். இவ்விரண்டு சுத்திகளையும் அனுஷ்டியாதவர்களுக்கு எவ்வித கன்மங்களும் பயன்தரா. தீர்த்த யாத்திரை க்ஷேத்திரயாத்திரைகளும் பயன்றருவதில்லை. இந்த இருவகைச் சுத்திகளாலும் அகக்கருவி, புறக்கருவிகளைச் சுத்தி செய்து கொண்டு யோக நெறியில் நின்று மெய்ஞ்ஞானத்தைப் பெறவேண்டும். அது பெற்றால் முற்கூறி வந்த முத்தி யெளிதில் கைகூடும். இதுகாறும் நித்தியவிதிகளில் கூறிய நெறிகளை நினைவுக்குக் கொண்டு சுருக்கியெடுத்துக் கூறப்பட்டது. இவைகளைக் கசடறவுணர்ந்தவர்களுக்குத்தான் அப்பிரத்தியட்சமாய் உள்ளது இல்லதென்று வழக்கிடப்பட்ட தெய்வவுண்மை புலப்படும். அல்லாதார் எத்தனை காலம் வழக்கிட்டாலும் காண்பதரிது. இனி இதற்குச் சம்பந்தமாயுள்ள வேறு விஷயங்கள் வரையப்படும்.

 

சர்வசத்தி

 

இதுகாறும் கூறிவந்தவைகளை விளக்கும் பொருட்டு சிலவிஷயம் வரைவது, அவசியம். அதாவது ஆன்மா அந்தத்தில் அடையும் இடமேயாம். இதையே மோட்ச ஸ்தலமென்று முன்னர்க் கூறப்பட்டது. அதுயாது? பொருளா? குணமா? இடமா? என்பனவாதிப் பல கேள்விகளுக்கு இடமாய் நிற்பது. அது சத்து சித்து ஆநந்தம் எனப் பல பெயர் பெறும். இதைப்பொருள் என்றே வேதங்கள் கூறும். பொருளாயின் மனவாக்காதி இந்திரியங்களுக்கும், நுட்பப் பொருள்களைப் பெரிதாக்கித் தெளிவாகப் புலப்படுத்தும் எவ்விதக் கருவிகளின் ஆராய்ச்சிக்கும் அகப்படாம லிருக்குமா? அது சர்வசக்திகளையும் தன்னுள் அடக்கிக்கொண்டு நிற்கும் ஒரு அதிநுட்பமான பொருள். எங்கும் வியாபித்து எல்லாவற்றையுந் தனது வியாபக சக்திக்குள் நிலைபெற நிறுத்தி, அவற்றினுள்ளும் தான் வியாப்பிய மாய் நிற்பதொன்று. அது அணுவுக்கு அணுவாயும் மேருவுக்கு மேருவாயும் உள்ளதென்று வேதம் வியந்து கூறும். அது எல்லாவற்றிலும் வியாபித்து பரமாணுக்களுக்குப் பரமாணுவா யிருப்பதினால் கருவிகளுக்கு அகப்படுவதில்லை. புலன்களுக்குப் புலப்படுவதில்லை. ஆயினும் பக்தர்கள் பாவனைப்படி அவ்வப் பொருளாய் வெளிப்படும் சக்தியுள்ளது. அப்பொருளின் சக்திகள் எல்லாவற்றையும் மூன்று வகையாக்கி அதன் மகிமையை விளக்குவார் ஆரிய சித்தாந்திகளான பதார்த்தகுண சோதகர்கள். அவை சலனம், நிச்சலனம், கிராகியம் என்பனவாம்.

 

சலனம் என்பது அசைத்தல், அசைதல்; நிச்சலனம் என்பது நிறுத்தல், நிற்றல்; கிராகியம் என்பது கவர்ச்சி, இழுத்தல் என்பனவாம். இம்மூன்றனுள் சர்வசக்திகளும் அடங்கும் என்பர் ஞானத்திற் சிறந்த ஆரியர். எல்லாச் சக்திகளும் ஒருங்கே கூடி நிற்பதினாலே தான், காண்பது காணப்படுவது எல்லாம் அதுவேயென்று வேதம் கூறுகின்றது. அது எங்கு மிருந்து சகல பொருள்களுக்கும் ஆதாரமாகியும், அவற்றைத் தொழிற் படுத்துவதாயும், அவற்றை நிலைபெயராமல் நிறுத்துவதாயுமிருக்கின்றது. தனது வியாபகத்துக்கு உட்பட்ட பொருள்களை நிச்சலனம் அல்லது நிறுத்தல் என்னும் நிலைவிட்டுப் பெயராமல் நிற்கும்படியும், சலனம் - அசைத்தலென்னும் சுழலும்படி இயக்கியும், கவர்ச்சி - இழுத்தல் என்னும் சக்தியால் தான் அவைகளைத் தரித்துத் தாங்கிக் கொண்டும் சர்வாண்ட சராசரங்களையும் நடத்திக் கொண்டு தான் சலனமற்று நிற்கின்றது. அதனாலே தான் உலகம் அநாதி நித்தியமாய் நடை பெற்று வருகின்றது. சர்வசக்தியும் உடைய பொருளாதலால் குணமென்றாவது பொருளென்றாவது கண்டறி யச்சாத்தியப் படாமலிருக்கின்றது. அதுவே பொருளாகவும் பொருளின் குணமாகவும் காணப்படுகின்றது. நீரினின்றும் பாலைப் பிரித்துக் கொள்ளும் அன்னத்தைப் போல யோகிகள் அதனை யுணர்கின்றார்கள். ஏனென்றால் ஞானமென்று ஒன்றையே அவர்கள் அதையுணரும் கருவியாகக் கொண்டனர். ஞானத்தை அன்றி வேறெதனாலும் அதைக்காண முடியாது. அது ஞானமே சொரூபமாயுள்ளது ஆதலால் ஞானத்தை ஞானத்தினாலேயே காணவேண்டும். எதுபோல வென்றால் நுட்பமான பூதப்பொருள்களைக் கண்ணாடி முதலிய பூதக் கருவிகளாலேயே காண்பது போலவாம்.

ஆயின் சர்வசக்தியும் ஒரு இடத்தில் ஒருங்கே நிற்குமென்பது எப்படி?
 பிரத்தியட்சமா? அனுபவமா? யுக்தியா? எதனால் அறிவது எனின், ஞானி
 கள் அனுபவத்தினாலே பிரத்தியட்சமாகவே காண்பார்கள். அவரொழிந்த வர்கள் அனுமானம் உபமானம் ஆகிய யுக்திகளினாலே கண்டறிந்து நிச்ச யிக்க வேண்டும். நிச்சயித்தபின் அனுபவத்துக்குக் கொண்டுவந்து கண்டு கொள்ள வேண்டும். ஒரு உபமானத்தை யெடுத்து ஊகித்து ஆராய்ந்தால் கண்டு கொள்ளலாம். அதாவது பூமியை ஆராய்ந்தால் அறியத்தகும். இது ஏகதேச வுபமானந்தான். பூமியினிடத்தில் சர்வசக்தியும் அடங்கிய மூவ கைச் சக்தியும் உண்டு. கிராகிய சக்தியினால் சகல பதார்த்தங்களையும் தாங்கி நிற்கின்றது. நிறுத்தும் சக்தியினால் மலை, மரம், கொடி, செடி முதலிய அசரப் பொருள்களை நிலைபெறச் செய்கின்றது. இயக்கும் சக்தி யால் சரப்பொருள்களை ஓடித் திரியச்செய்கின்றது. எல்லாவற்றுக்கும் தான் ஆதாரமாய் நின்று சகல பொருள்களையுந் தரித்துக் காக்கின்றது. தன்னிடத்தில் விழுந்து கிடக்கும் வித்து முதலியவைகளைத் தன் கிராகிய சக்தியால் வேரூன்றச் செய்து, இயக்கும் சக்தியால் மேலே முளைகிளம்பச் செய்து விருத்தியாக்கிப் பரிபாலிக்கின்றது. தான் தனது சக்தியால் அவற்றினுள்ளும் வியாபித்து நின்று அவற்றைப் பருத்து உயர்ந்து தழைத்துச் செழித்து வளர்ந்து முதிர்ந்து பலன் தரச் செய்கின்றது. இத்தொழிலுக்கு அப்பு, வாயு, அக்கினியாகிய சூரியன் இவைகளும் உதவி புரிகின்றன. ஆயினும் தானே அப்பொருள்களாகவும், அவைகளே தானாகவும் நின்று, அவற்றிற்குரிய ருசி, மணம் முதலிய குணங்களையும் விளக்கி யுபகரிக்கின்றது. பொருள் அநந்தம்வகை, அவ்வவற்றிற்கும் அவ்வவை யாய் நின்று சிருஷ்டிஸ்திதி லயம் என்கிற முத்தொழில்களையும் செய்கின்றது. பூமியில் ஏனைய பூதங்களாகிற அப்பு, தேயு, வாய்வு, ஆகாயமென்கிற பூதங்களின் கூறுகளும் சிறிது அடங்கி நிற்கிற படியால் அவற்றின் சக்தியையும் அவாவி வேண்டிய அளவு கிரகித்துக்கொண்டு சராசரமயமான பிரபஞ்சத்தைப் பாதுகாக்கின்றது. பூமியிலுதித்த பொருள் பூசாரத்தை உண்டே ஜீவிக்கின்றது. இது பூ அண்டத்தைப் பற்றியது. இப்படியே பஞ்சபூதங்களிலும் இந்தச் சக்தி நிறைந்து இருந்து அங்கங்குள்ள பொருள்களைப் பரிபாலிக்கின்றனவென்பது ஆரியசித்தாந்திகளின் கொள்கை. சூரியன், அங்காரகன், குரு, கார்த்திகை முதலிய அண்டங்களை அக்கினி அண்டங்கள் என்பர். இது நிற்க.

 

இப்பொழுது காட்டிய திருஷ்டாந்தத்தினால் பூமியானது தன்னிடத்தில் உற்பவிக்கும் பொருள்கள் தோறும் வியாபித்துக் கலந்து நின்று தானே அப்பொருள்களாகியும், அப்பொருள்களே தானாகியும் கலந்து நிற்பது போலவும், அதனிடத்தில் அவ்வப்பொருள்களுக்குரிய பற்பல சக்திகளை யவ்வவற்றுக்குக் கொடுத்தும் தான் அவற்றுக்கு வேறாகியும் நிற்பது போலவும் பரமான்மாவும் எல்லாப் பொருள்களினிடத்தும் தான் அவை யென்கிற வேறுபாடின்றிக் கலந்து நிற்கும். இதனால் பூமியினிடத்தில் அனந்த சக்திகளுண்டென்றும் அவை பதார்த்தங்களுடன் கலந்தே தோன்றா நிற்குமென்பதும் புலப்படும். பொருள்களின் குணங்கள் எல்லாம் பரிபாக முதிர்ச்சியினால் பூமி காரணமாக வெளிப்படுவதேயன்றிப் பூமியினிடத்திலிருந்து உண்டாகிறதல்ல வாதலால் பூமியினிடத்தில் சர்வ சக்தியும் உண்டாகும் என்பது எப்படிப் பொருந்துமெனின், அதுபற்றியே ஏகதேசவுமமானம் என்று கூறித் தொடங்கினோம். ஒரு முளையானது சிறிய உளுந் தைப்போலக் காணப்படுகின்றது. இரண்டொரு தினங்களில் ஒரு விரலள வாகின்றது. நாளடைவில் சாகோபசாகைகளாய்ப் பரந்து வெகு பெரி தாய்விடுகின்றது. அது எப்படியாயிற்று? நென்மணியளவாயிருந்த ஒரு விதை முளைத்துப் பத்துப்பாரம் இருபது பாரம் அளவுள்ள பெரிய விருட்ச மாவதெப்படி? பூமியானது சாராம்ச சக்தி ரூபமாய் அதனுள் தினந்தோறுஞ் சிறிது சிறிதாகப் பிரவேசித்து நிற்பதனால் அல்லவோ அது அவ்வளவு பெரிதாயிற்று. ஆதலால் பூமியினிடத்தில் தான் அதன் மயமாக மாறும் சக்தியும் அந்த வித்துக்கு அதைக் கொண்டு விருத்தியாகவும் உண்டென்பதே சித்தம். பூமியினிடத்தில் அநந்த சக்திகளும் சூட்சும ரூபமாயுண் டென்பது கொள்ளற்பாலது. "உள்ளது போகாது இல்லது வாராது" என்கிற பிரமாண வசனத்தினால் அவ்விரு பொருள்களினிடத்திலும் உள்ள சக்தியே இவ்வாறாயிற்று.

 

இனி ஒரு பொருளினிடத்தில் ஒரே குணமும், இரண்டு மூன்று முதலிய ஒன்றுக்கொன்று மறுதலையான குணங்களுமுள்ள வென்று பதார்த்த பரிசோதகர்களும் கூறுகின்றார்கள். பிரத்தியட்ச நூலாகிய வைத்திய சாஸ்திரங்களும் கூறுகின்றன. இதுகாறுங் கூறியது ஒரு பொருளினிடத்தில் பல குணங்களிருக்கலா மென்பது விளக்குதற்கே. பூசாரங் குறைந்த சில விடங்களில் பயிர்கள் விருத்தியாவதில்லை. விருத்தியானாலும் பலன் தருவதில்லை. விருத்தியானாலும் அவ்வவற்றிற்குரிய சரியான ருசியும், மணமு மிருப்பதில்லை. இதனாற் பூமியின் சக்தி பலவெனப்படும். இப்படியே ஏகரசமான ஒரு பொருளினிடத்தில் அனந்த குணங்களுமுளவாமென்று கொள்க.  

 

இவ்விதமாகவே பரமான்மாவினிடத்தில் அனந்த சக்திகளுமுள. பூமியைப் போலவே அதுவும் எவ்வெப்பொருளோடு கலந்து நிற்கிறதோ அவ்வப் பொருள்களாகவே காணப்படும். அவ்வப் பொருள்களின் குணங்களை விருத்தியாக்கி அவற்றைப் பரிபாகப்படுத்தும். இதனையே தெய்வம், என்று கூறும் நூல்கள்.

 

மூன்று பொருள்கள் அனாதிப் பொருள்களாம். இப்பொருள்களை அத்வைத சித்தாந்திகள் ஜகம், ஜீவன், பரம் என்பார்கள். சைவ சித்தாந்திகள் பதி, பசு, பாசம் என்பார்கள். வைணவர்கள் சித்து, அசித்து, ஈசுவரன் என்பார்கள். இவற்றுள் ஜகம், பாசம், அசித்து என்பவற்றினிடத்திலிருந்தே சராசரங்களுண்டாகின்றன. பரம், பதி, ஈசுவரன் என்பது, இவற்றை அதிஷ்டித்து நின்று ஜகத்தை நடத்தும். ஜீவன், பசு, சித்து என்பது பாசம், அசித்து ஜகம் என்பதிலிருந்து உருவத்தைப் பெற்றுக் கட்புலனுக்குப் புலப்படாநிற்கும். இதுவே ஜீவான்மா, கிஞ்சிக்ஞன் முதலிய பெயர்களாற் கூறப்படும். போக போக்கியங்களெல்லா மிதற்கேயாம். பரமான்மா என்கிற சர்வசக்தி இவற்றொடு கலந்து நின்று ஜீவான்மாவைப் பரிபாகப்படுத்தித் தன்னுடைய நிறுத்தும் சக்தியால் கவர்ந்து தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்ளும். இதுதான் மீளாக்கதியாம். அவ்விடம் சேர்ந்த பொருள் மீண்டும் வருவதில்லை. அதுதான் சாயுஜ்ய முக்தி யென்னப்படும். எல்லாப் பொருள்களிலும் கலந்து அவற்றுக்குத்தான் வேறாகாமலும் தான் அதுவாகாமலும் தனித்தும் நிற்பதே பரமான்மாவென்கிற பரம்பொருளினியல்பு. ஆகவே அதற்கென ஒரு சொரூபம் ஏற்படாமையால் அதை ஒன்றாலும் அறியக்கூடாது. பாவனை செய்கிறவர்களின் பாவனா சொரூபமே அதற்கும் சொரூபமென்பர். அதனாலே தான் அதைக் காணலாம். இயற்கைச் சொரூபம் ஞானத்தால் உணரப்படும்.

 

உலகம் அநாதி நித்தியமாயுள்ளதென்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்குக் கர்த்தனுமில்லை யென்கிறார்கள். ஆதலால் பிரபஞ்சத்தை ஆக்குவ தற்கு ஒரு கர்த்தனை விரும்புவது அநாவசியமே யாமென்பர். சகல பிரபஞ்சமும் பஞ்சபூதக்கலப்பே யென்பது நிச்சயம். பஞ்சபூதங்களும் ஒரே தன்மையுடையனவல்ல. ஒன்றுக் கொன்று வேறு தன்மையையுடையன வென்பது பிரத்தியட்சம். ஆகாசபூதம் கண்ணுக்குப் புலப்படாதாயினும் அது தன்னை யொழிந்த நான்கு பூதங்களுக்கும் தன்னிடத்தில் இடம் கொடுத்து அவற்றைப் பரிபாலிக்கின்றது என்பதை யுக்தி யனுபவங்களால் நன்குணரலாம். அது எல்லாப் பூதங்களிலும் கலந்து நின்று எல்லாவற்றையும் பரிபாலிக்கின்றது. ஆகாசம் என்பது வெறும் வெளியேயாம். அதற்கு அதுவே சொரூபமாம். ஆதலாற்றான் அது கட்புலனாற் காணப்படுவதில்லை. அது எல்லாப் பூதங்களுள்ளும் புறம்பும் கலந்து நிற்கும் என்பதைப் பிரத்தியட்சத்தில் காணலாம்.

ஆறேழு இழைகளுள்ள நூலை சிறிது நீரில் போட்டுவைத்தால் அந்த நீர் சிறிது நேரத்தில் காணாமற்போய் விடுகிறது. அந்த நீர் எங்கே போயிற்று? நூலுக்குள் சுவறி நிற்கின்றது. நூலுக்குள் எப்படிச்சென்றது? அதனுள் நமக்குப் புலப்படாத வண்ணம் ஆகாயபூதம் இவ் வெளியை யுண்டாக்கிக்கொண்டு நிற்கின்றது. அந்த ஆகாயத்தில் நீர் சென்று தங்கிவிட்டது. அந்த நூலை முறுக்கிப் பிழிந்தால் அதனுள்ளிருந்த நீர் சிறிது வெளிப்படும். சிறு பான்மை அதனுள்ளேயே தங்கிவிடும்.

 

இரண்டு பாரம் பஞ்சைக்குவித்தால் அது ஒரு சிறு குன்றுபோல் உயர்ந்து அகன்று நிற்கக்காணலாம். அதன் மேல் ஏறித்துகைத்தால் அது குறைந்து போனதாகத் தோற்றும். அதை மறுபடியும் ஒரு யந்திரத்தில் வைத்து அழுத்தினால் மிகவும் குறைந்ததாகக் காணப்படும். என் அப்படிக் குறைந்து காணப்படுகின்றது! அதற்குள் ஆகாயம் இடை வெளியை யுண்டாக்கிக் கொண்டிருந்தது. யந்திரத்திலிட்டு அழுத்தின மாத்திரத்தில் அது சுருங்கிற்று. அதனாலே குறைந்ததாகக் காணப்படுகின்றது.

 

இன்னும் வெண்கலம், வெள்ளி, பொன், தாம்பிரங்களிலும், கல் முதலிய கடின பதார்த்தங்களிலும் ஆகாயங்கலந்து நிற்கின்றது. நன்றாய் நெருப்பில் காய்ச்சி இடை வெளிகாணாமல் அடிக்கப்பட்ட பாத்திரங்களில் நீர் முதலிய திரவபதார்த்தங்களையிட்டுக் காய்ச்சினால் அப்பாத்திரத்துக்குட் சிறிது சிறிதாக உஷ்ணம் ஏறி அந்த நீர் சுட்டுக் கொதிக்கின்றது. அது எப்படிச் சூடுகொண்டது. அதனுள்ளிருக்கும் இடை வெளியாகிய ஆகாயத்திற் சிறிது சிறிதாக உஷ்ணம் பிரவேசித்து அதைக் கொதிக்கச் செய்தது. இப்படியே அவற்றை நீரில் போட்டுவைத்தால் அது குளிர்ச்சியைக் கிரகித்துக்கொள்கின்றது. இப்படியே நீருக்குள்ளும் மண்ணுக்குள்ளும் மரம் செடி கொடிகளிலும் ஆகாயபூதம் நிறைந்தே நிற்கும். ஆதலால் ஆகாயம் எல்லாவற்றையும் வியாபித்து அவற்றைத் தன்னிடத்தில் நிலைபெறச் செய்தும், அவற்றுக்குள் வியாப்பியமாய் இடைவெளி உண்டாக்கிக் கொண்டும் நிற்கின்றது. அதனாலே தான் காற்றானது எல்லாவற்றுக்குள்ளும் பிரவேசித்து அவற்றை ஜீவிக்கச் செய்கின்றது.

 

இனி இப்பொருள்களேயன்றிச் சர்வாண்ட சராசரங்களுக்கும் ஆகாயம் இடங்கொடுத்துத் தன்னுள் நிலைபெறச் செய்யுமென்பது நூல்களின் கருத்து. இவ்வாறு சர்வ பதார்த்தங்களையும் வியாபித்து அவற்றுக்குள் வியாப்பியமாயும் நிற்கிற ஆகாயபூதம் பரப்பிரமத்து ஓர் வடிவமாய் நிற்கும். எனவே அந்த ஆகாயபூதத்துக்குள் சர்வசக்தியாய் பரப்பிரமம் அந்தர்யாமியாய் அதைப் பிரேரேபித்துக் கொண்டு நிற்கின்றது. இதனாலே தான் வேதம் "ஆகாச மத்யகதயிதி'' என்றும், ஆகாச சொரூபி என்றும் அந்தச் சர்வசக்தியை வியந்து கூறியது. இதனால் சர்வ சக்தியானது ஆகாயபூதத்தினுள்ளும் புறம்பும் நிறைந்தும் நிற்கும். ஆகாயத்தை வியா பித்து நிற்கும் என்றதனால் சர்வ வியாபியாயிருக்கும் என்பது புலப்படும். ஆகாயம் எல்லாவற்றையும் விட அதிக சூட்சுமமானது. அதனிலும் நுட்பமான பதார்த்தம் " பரம்'என்ற சர்வசக்தி. அப்படி அதிக சூட்சுமப் பொருளாயின் பிரமாண்ட முதலிய பெரிய பொருள்களை எப்படி நடத்தும் வல்லமை பெறும் எனின், அதிக சூட்சுமமான பிராணவாயு ஒரு பெரிய சரீரத்தை இயக்குவது போல் நடத்தக்கூடும். சிறிய பொருளென்னப்படும் நுட்பமான பொருளும் பெரிய பொருள்களை நடத்துவது பிரத்தியட்சம். நுட்பப் பொருளாகிய நீராவி, மின்சாரம் முதலியன அதிக பெரிதான ஸ்தூல பொருள்களை நடத்துவதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். ஆதலால் அதிக சூட்சுமப் பொருளான சர்வசக்தியும் பிரமாண்ட கோடிகளைத் தனது மஹாசக்தியால் தடையின்றி நடத்தும். இந்த ஆகாய பூதத்தில் மண் நீர் அக்கினி வாயுவாகிய பூதங்கள் தங்கியிருக்கின்றன. மஹாசக்தியும் அவ்வாகாய பூதத்தின் உள்ளும் புறம்பும் வியாபித்து எங்கும் வியாபகமாய் நின்று சகல பதார்த்தங்களையும் பரிபாகப்படுத்தி யிரட்சிக்கின்றது.

ஆதலால் இதனை அக்கினி சொரூபி என்று வேதம் கூறும். அதனாலேயே சர்வாண்டங்களையும் தன் சக்தியை விட்டு நீங்காமல் நிறுத்திக் கொண்டு, அவற்றைத் தனது இயக்கும் சத்தியால் சுழற்றிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சமையத்தில் ஒவ்வொரு அண்டங்களின் சக்தி குறையும். குறைந்தால் நிலை கொள்ளாமல் அலைந்து தனக்கு மேற்பட்ட தாயும் அக்கினி சொரூபமாயுமுள்ள சூரியனை நோக்கி விரைந்து செல்லும். சூரியன் அதைக் கிரகித்துக்கொள்ளும். அங்கே சென்றபின் கட்டுக்கு லைந்து அணுரூபமாய் விடும். இதனையே அக்கினிப்பிரளயம் என்று நூல்கள் கூறும். அவ்வணுக்கள் பரிபாகப்பட்டபின் பரிபாகத்துக்கேற்றபடி வேறு அண்டமாகும். இப்படி மாறி வருதலாலே உலகம் அநாதி நித்திய பிரவாகமென்று வேதங்கள் கூறும். இதனாலே தான் உலகம் அநாதி நித்தியமென்று ஒரு சாரார் கூறுவது.

 

இவ்வாறு சக்திகுறைந்து மாறும் இயல்புடைய பல அண்டங்களும் சக்தி குறைந்து மாறும் இயல்புடையனவே யாமென்று கொள்க. இதனால் ஒரு காலத்தில் சர்வாண்டங்களும் மாறிமாறி வருதலால் சக்தி குன்றி விடும். சக்தி குன்றிவிடவே அவை தமக்குப் புகலிடமாகிய சர்வ சக்தியை நோக்கிச் செல்லும். அது அவற்றையெல்லாம் கிரகித்துக்கொண்டு தனது அக்கினி சொரூபமாகிய பேராற்றலால் பஸ்மமாகச் செய்துவிடும். அப்போது சூரியன் முதலிய சர்வாண்டங்களும் நீறாய்விடும். இதுவே சர்வ சங்காரகாலமென்று நூல்களால் புகழ்ந்து கூறப்படும் சமையமாம்.

 

இந்தச் சமையத்தையே "ப்ரத்யக்ஜநஸ்திடதி ஸஞ்சு கோசாந்த காலே, ஏக ஏவருத்ரோ நத்வி தீயாயஸ்தே, நப்ரம நவிஷ்ணுர் நஸர் யோநாக்நி சந்த்ரதாரகா:'' என்று ஜாபால சுருதி புகழ்ந்து கூறியது. இந்தக் காலத்தில் பரம்பொருளாகிய சர்வசக்தி ஒன்றே தன் இயற்கையாகிய நிர்விகார சொரூபத்துடன் நிலைபெறும். ஏனைய தோற்றப் பொருள்களெல்லாம் மறைந்துபோகும். சர்வசங்கார காலத்திலே பிரம், விஷ்ணு, ருத்திரன், இந்திரன் முதலிய தேவர்களும், அஷ்டதிக்கு பாலகர்களும், சூரிய சந்திரர்களும், தாரகாகணங்களும் கிடையாவென்று மேற்குறித்த ஜாபால சுருதி சர்வசங்கார காலத்தை விளக்கிக் கூறிற்று. இதனை சதா ஜனன மரண சம்சார துக்கங்களால் நொந்து வாடியிருக்கும் ஜீவர்களின்களை யாற்றுங்காலமென்று வேதாதி நூல்கள் கூறும். தொழில் செய்வதற் குரிய கருவி கரணங்களின்றி யிருத்தலால் செயலொன்றுமின்றி ஆன்மாக்கள் களையாறும். சரீரோற்பத்திக்குக் காரணமாயிருந்த அணுக்க ளெல்லாம் மறு ஜனனத்துக்காகப் பரிபாகப்படும். சர்வசங்கார காலத் துக்குப் பின் போகுமிடமொன்று மில்லாமையால் அவ்வணுக்கள் என்ன செய்கின்றன? எங்கே போயடைந்தன? என்ற சில கேள்விகளுண்டாவ தற்கு ஆதாரமுண்டு. இவ்வணுக் கூட்டங்களின் சக்திகளெல்லாம் மஹா சக்தியாகிய சர்வசக்தியை நோக்கிச் செல்லும். நிறைவு குறைவு இல்லாத தாய் என்றும் ஒரே தன்மையதாய், நிர்விகாரமாய், சொரூபவிலக்கணங் கூறப்படாததாய், எங்கும் நிறைந்துள்ள அந்தச் சர்வசக்தியே அவைகளை யெல்லாம் தான் கிராகியம் செய்துகொண்டு அவற்றைப் பரிபாகப்படுத் தும். ஜனன மரணங்களினால் நொந்த ஜீவான்மாக்களைத் தன்னிடத்தில் களையாறச்செய்து அவற்றின் கன்மங்களையும் பரிபாகஞ் செய்யும். எல்லாம் பரிபாகமடைந்த பின் மறு சிருஷ்டியுண்டாகும்.

 

இதுவே பிரதம சிருஷ்டியாம். இதனால் சகல பதார்த்தங்களிலுமிருக்கும் சக்திகளெல்லாம் ஓர் இடத்தில் நிறைதலும், குறைதலும், பெருகுதலும், சுருங்குதலும், உற்பத்தியும், நாசமும் இல்லாமற் சிறந்து நிற்கும். அவ்விடமாகிய பொருளே சர்வசக்தியாம். சூரியன் தான் இருந்த இடத்திலேயே நிற்க அதன் கிரணங்கள் எல்லாவற்றுக்கும் ஒளியையும் வெப்பத்தையுங் கொடுத்துப் பிரபஞ்சத்தைக் காப்பதுபோல அந்தச் சர்வசக்தியும் தன்னிலை பெயராது நிற்க, அதன் சக்தி எங்கும் வியாபித்துச் சந்திரன், சூரியன் இவற்றுக்கு ஒளியையும் தண்மை வெப்பங்களையும் கொடுத்து உலகத்தை நடத்தும். அந்தச் சக்தியில்லாவிடில் சூரிய சந்திரர்களுக்கு ஒளியாதியும், வாயு முதலியவற்றுக்கு இயங்கும் சக்தியும் இல்லையாம். இதனால் தான் சர்வசங்கார காலத்தில் சூரியசந்திரர்களும் நட்சத்திரங்களும் இல்லை யென்று சுருதி கூறிற்று. பஞ்சபூதங்களிலும் இந்தச்சக்தி வியாபித்து அந்தர்யாமியாய் நிற்கும். அதனாலே தான் “வானெரியன்ல் கான் மண்ணென வகுக்க வரும்பெரும் பூதமோரைந்தும், ஆனமுக்குணமும் காணமோர் நான்கு மனைத்துமா யாதீயீறின்றி, யூனுசை யுடலுக் குயிருமாயுயிருக்குணர்வுமா யொன்றினுந்தோயா, ஞானநாயகனே கருவையம் பரனே நானறிந்துரைக்குமா றெவனோ” என்று முன்னோர் பஞ்ச பூதாதிகளையும் பரத்துக்குச் சரீரமாகக் கூறியுள்ளார். அது ஊனக்கண்களுக்குப் புலப்படாத நிலைமையை யுடையதாதலால் பஞ்சபூதங்களையும் அதற்குச் சொரூபமாகக் குறித்து வணங்குவார் அறிவிற்சிறந்தோர். பிரபஞ்சதோற்ற நாசங்களுக்கு ஆதாரமாய் நிற்பதாதலால் அந்தப்பரத்துக்குச் சர்வசக்தி யென்றும், என்றும் உள்ளதாகையால் சத்தியமென்றும், ஞானமயமாதாலால் சித்து என்றும், துன்பமற்ற சுகவடிவமாதலால் ஆனந்தமென்றும் வேதம் அதற்குப் பல பெயர்கள் கூறின. இவ்வாறு சர்வத்திலும் நிறைந்தும், அவற்றைப் பிரேரேபிப்பது மாதலால் அதனைச் சர்வசக்தி யென்றும் கூறும்.

 

இவ்வாறு சிற்சடபேத பிரபஞ்சம் முழுமையும் நிறைந்து நிற்பது சர்வ சக்தி. இந்தச் சக்தி என்பது குணம் என்றும் கூறப்படும். இதனை உரிமையாகக் கொண்ட பொருள் பிரமமென்றும், சத்து என்றும், சிவமென் றும் கூறப்படும். இதனாற் சக்தி சிற்சக்தி ஜடசக்தி என்று இருபாலாகும். இது "சிற்சக்திச் சேதனாரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா'' என்று சிவசக்தி யாகிய உமாதேவியாரை நூல்கள் புகழ்ந்து கூறியதனால் விளங்கும். சக்தியாகிய குணம் பொருளை விட்டுத் தனித்து நில்லாது. பொருளும் சக்தியை விட்டுத் தனித்து நில்லாது என்பது பிரத்தியட்சம். ஆதலால் அதனை சக்தி என்றும் சிவமென்றும் கூறலாம். இவ்விரண்டும் ஒன்றாய்க் கூடியிருப்பதே ஆனந்தமாம். இதனை "மூலமணி பூரகத்தோடிலிங்கமார்பு, முதுகளம்விற் புருவநடு பொழிவதாறு, ஞாலமுமென்புனலு மனற்பிழம்புங் காற்றும், நாதமுறு பெருவெளியு மனமுமாக, மேலணுகிக் குளபதத்தைப் பின்னிட்டப்பால், மென்கமலத்தாயிரந்தோட்டருணபீடத், தானந்தமுறும் பொருளையறியலாமே'என்று கூறிய யோக நூற் பிரமாணத்தாலுணரலாம். சத்துக்கு ரூபம் ஒளி. அதுவே ஞானமெனப்படும். அதுவே அக்கினியுமாம்.

  

சக்தி குணமாதலால் அது வண்ணம் வடிவு பண்பு தொழில் என நாலு வகையாயிருக்கும். வண்ணமென்பது வெண்மை, கருமை, செம்மையாதி களாம். வடிவு வட்டம், கோணம், குட்டை, நெட்டை முதலியவாம். பண்பு இனிப்பு, புளிப்பு முதலியவாம். உலகத்தில் காணப்படும் பொருள்கள் எல்லாம் சத்து சித்து ஆனந்தமயமான பிரமரூபமேயாமென்று வேதங்கூறிய உண்மை இதனால் விளங்கப்பெறும். எவ்வாறென்னில் புலன்களால் அறியப்படுதலால் சாத்தாம் (உண்மையாம்). அறிவுக்குப் புலப்படுத்தலால் சித்தாம். மனதுக்கு மகிழ்ச்சி தருதலால் ஆனந்தமாம். ஆதலால் பிர பஞ்சமெல்லாம் பிரமசொரூபமேயாம். அது புலப்படாமை யேன் எனில், ஜடவடிவமான மாயாகரணங்களுக்குப் புலப்படாமையே அதனியல்பாம். ஆதலாற் புலப்படுவதில்லை. மாயாபரிணாமமான ஜடப்பொருளே புலப்படும். அவையெல்லாம் சக்தியின் கூறாம். மாயையும் சுத்தம் அசுத்த மென விருவகையாம். சுத்தமாயா சொரூபமும் ஞானமெனப்படுதலால் மலரகிதமான அந்தச சொரூபமும் அசுத்தமாயாகருவிகளுக்குப் புலப்படாது. ஆதலாற்றான் சிவவிஷ்ணுவாதி சுத்தமாயா சொரூபங்களும் ஊனக் கண்களாற் காணக்கூடாமலிருக்கின்றன. இதனால் சர்வ சக்தியாகிய பிரமசொரூபம் மாயைகளைக் கடந்துள்ள தென்பது விளங்கும். இயக்கமாதிகளாலேயே தெய்வவுண்மை காணவேண்டும். இயக்கல், நிறுத்தல், இழுத்த லென்பன இச்சை. ஞானம், கிரியை என்னும் தெய்வ சக்திகளென்று முன்னரே கூறினோம்.

 

ஆயின் பிரமசொரூபம் எவ்வகையிலும் காணக்கூடாததேயாம். காணக் கூடாத பொருள் ஒன்று உண்டென்று கொள்வது எவ்வாறடுக்கும் எனின், ஒருபோதும் ஒருவிதத்தாலும் காணக்கூடாத பொருள் என்று கூறவில்லை. காண்பதற்குரியதேயாம். ஆனால் அதைக் காணுதற்குரிய முறைமையால் முயற்சித்தால் காணக்கூடும். பிரம்சொரூபம் ஞானாக்கினிமயமென்று கூறியன நூல்கள். அவ்வக்கினியே ஜீவ சொரூபங்கடோறும் நின்று இயக்கலாதித் தொழில்களைச் செய்கின்றது. சிவாக்கினி எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பதால் உலகங்கடந்த ஞானிகள் ஞானக்கண்களால் கண்டு தரிசிப்பார்கள். சிவசொரூபமாகிய அக்கினி எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்றாலும் சில பொருள்களில் விசேஷமாய்ப் பிரகாசித்து விளங்கும். சில பொருள்களில் அதிக விளக்கமாயிருப்பதில்லை. அது அவ்வப்பொருள்களின் குணத்தை யனுசரித்ததாம். ஆயினும் சில பொருள்களைக் கைகளால் தேய்த்தால் அக்கினியின் குணமாகிய உஷ்ணத்தைப் பரிசிக்கலாம். சில மரங்களில் கட்டை மேலிட்டுக் கடைந்தால் அக்கினி ஜ்வாலித்து விளங்கும். சக்கி யென்னும் கல்லை மற்றொரு கல்லாலாவது இருப்புக் கருவிகளாலாவது தட்டினால் தீயுண்டாம். இதனால் எல்லாப் பொருள்களிலும் தீ வடிவமான பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்பதைப் பிரத்தியட்சமாய்க் கண்டறியலாம். சக்கிக் கற்களிலும் வன்னியாதி விருட்சக் கட்டைகளிலும் அக்கினி புறப்படுவது அதை யடைய வேண்டுவதற்குரிய முறைப்படி முயற்சி செய்தால் தான். அக்கினி பரிசத்திற்கும், கட்புலனுக்கும் எட்டக்கூடியதாயினும் கட்டையாதிகளில் மறைந்து நிற்கும் போது தொட்டாலும் சுடாது. கண்ணுக்கும் எட்டாது. அதுகொண்டு அவற்றினிடத்தில் அக்கினி யில்லை என்று சொல்லக்கூடுமோ? கூடாது. ஏனெனில் அரணிகொண்டு கடைதலாலும், கருவிகளைக் கொண்டு தட்டுதலாலும் அதனுள் மறைந்து கிடக்கும் தீ வெளிப்படுவது தவறுபடுவதில்லை. ஆதலால் அவற்றினுள் அக்கினி உண்டென்று நிச்சயமாகவே கொள்ள வேண்டும் அல்லவா? இவ்வக்கினியே பிராணாக்கினி என்று வேதம் கூறும். இந்தப் பிராணாக்கினியே ஜீவாத்மாக்களை வியக்கும். ஜீவாத்மாவோடு கலந்து நின்று அவை கன்மத்தால் பெற்ற சரீரத்தைப் பரிபாகப்படுத்தும். பரிபாக முதிர்ச்சியால் சக்தி கெட்டுப்போன சரீரத்தை ஜீவாத்மா விட்டு விலகும் போது அந்தச் சர்வ சக்தியும் தன் சக்தியில் அடங்க விடும். இதனையே மரணமென்று வேதாதி நூல்கள் புகலாநிற்கும்.
 

அரணிக்குள் தீயைப்போலவே பரமாத்மாவும் ஜீவாத்மாக்களிடம் மறைந்து நிறைந்து நிற்கும். இதயமாகிய கட்டையில் மனமாகிய அரணியை இட்டுப் பக்தியாகிய கயிறு பூட்டிக் கடைந்தால் அவ்விதயத்தில் பரம் பொருளாகிய அக்கினி ஒளிவீசிப் பிரகாசிக்கும். நன்றாய்த் துலக்கி வெண்கல அகலில் திரியும் நெய்யும் பெய்து ஏற்றிய தீபம் போல தவத்தால் மலமாசகன்ற இதய தாமரையில் பரஞ்சோதி களங்கமற்றுப் பிரகாசிப்பதை ஆரியப் பெரியோர் சுயானுபவத்தாற் கண்டு தரிசித்து, அந்த முறையை வெளிப்படுத்தி உலகத்துக்குப் பேருபகாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறிய நெறிமுறை தவறாமல் ஜாக்கிரதையாக நடந்தால் நாமும் காண் பதற்கையமில்லை. அப்போது தெய்வமாகிய ஒரு சர்வசக்தி உண்டென்று கொள்வதில் எவரும் ஐயப்படமாட்டார்கள்.

 

ஒருவன் வழிதெரிந்து முயலாமையால் கண்டறியப்படாதிருக்கிற தெய்வவுண்மை பொய்படுமாறெங்ஙனம் அறியாமையால் ஒருவன் நான் மாதா பிதாக்களின்றியே தோன்றினேன் என்று கூறிக்கொண்டானாயின் அதனை யெந்தப் புத்திமான் ஒப்புக்கொள்வான்? ஒருவன் ஒரு மாந்தோப்பைக்கண்டு அதிற் சில பழங்களைத் தின்று களித்து வந்து தன் சிநேகிதனுக்கு அத்தோப்பு இருக்கும் இடத்தையும் அதை அடையும் மார்க்கத்தையும் கூறுகிறான். கேட்டவன் அவ்வழியை விட்டு வேறுவழி சென்று பல விடங்களிலும் அலைந்தும் அந்தத் தோப்பைக் கண்டறியாமல் களைத்துப் பயன் அடையாமற் போகிறான். அதனால் அத்தோப்பு உண்டென்பதைப் பொய்யென்று கொள்வது உசிதமாகுமோ? ஆகாது அல்லவா?

 

அதுபோலவே முன்னோர்கள் கூறிய நெறியைவிட்டு மாறுவழி சென் றலைந்து களைத்து அன்னோர் கூறியவாறு தெய்வமேயில்லை என்று கூறியத னால் தெய்வமில்லாமற் போய்விடாது. உண்மையானது ஒருபோதும் இல் லாமற்போவதில்லை. உண்மை எப்போதும் உண்மையேயாம். இதுவுமன்றி யிந்தச் சர்வ சக்தியானது இரச (உருசி) மயமாய் எல்லாப் பொருள்களிலும் கலந்து நிற்கிறது. ஆதலால் இந்த இரசமே பரம்பொருள் என்று கூறுவதும் உண்டு. இதனால் அகண்ட ஏகரசமென்று பரம்பொருளைப் புகழ்வார் பெரியோர். இந்த இரசம் அறுவகைப்படும். உப்பு, உறைப்பு, புளிப்பு, தித்திப்பு, கசப்பு, துவர்ப்பு என்பனவாம். இந்த அறுவகையான சொரூபங்களால் பரம்பொருள் எல்லாப பொருள்களிலும் வியாபித்து நிறைந்து நின்று ஜீவாத்மாக்களுக்கு உபகரிக்கின்றதென்று சில நூல்கள் கூறும். அதற்கு இரசவைத்திய சாஸ்திரம் என்று பேராம். ஆறு இரசமும் ஏற்றக்குறைவில்லாமல் அவற்றிற்கு ஏற்படுத்தியிருக்கும் அளவு குறையாமல் இருப்பதே நோயற்ற வாழ்வென்றும், ஒன்று குறைந்து ஒன்று மிகுந்தாலும் நோயுண்டாமென்றும் அந்த வைத்தியம் கூறும். ஏறியதை அளவுக்குத் தக்கபடி குறைத்தும், குறைந்ததைச் சரிவர நிரப்பியும் வந்தால் அந்நோய் நீங்கிச் சுகமுண்டாகும் என்று கூறுகின்றது. இன்ன சுவை குறைந்தால் இவ்வகை வியாதி உண்டாகுமென்றும், இது மிகுந்தால் இந்த வகையான நோயுண்டாகுமென்றும் கூறுகின்றது.

 

இந்த இரசவைத்திய சாஸ்திரம் இக்காலத்தில் காண்பதரிது. ஏனெனில் அதில் பழகுவது கடினமாயிருப்பதனாற்போலும். ஆயினும் யோகப் பழக்க மிகுந்திருக்கும் சில பெரியோர் பரம்பராக் கிரமமாகத் தெரிந்து கொண்டு உபயோகித்து வருகிறார்கள். அவர்கள் நோய்காணுமாயின் மருந்து உண்பதில்லை. அந்நோயின் காரணத்தை உணர்ந்து அதற்குரிய இரசமுள்ள மூலிகைகளைத் தின்று வருகிறார்கள். சாதாரண வைத்திய நூல்களிலும் சில வியாதிகளுக்குச் சுத்தக் கசப்பாகிய வேம்பு முதலிய கஷா யங்களையும், சிலவற்றிற்கு உறைப்பான சுக்குத்திப்பிலியாதி கஷாயத்தையும், சிலவற்றிற்குத் தேன் கரும்பு முதலிய இனிப்பு வஸ்துக்களிட்ட கஷாயத்தையும், சிலவற்றிற்கு இந்துப்பு முதலிய உவர்ப்புக் கஷாயத்தையும், சிலவற்றிற்குத் துவாப்பான கஷாயத்தையும் கொடுக்க விதித்திருப்பதும் இந்த இரசவைத்திய முறைபற்றியேயாம்.

 

இந்தச் சர்வசக்தியென்னும் விஷயம் மஹா சக்தியுள்ள பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்று பிரபஞ்சத்தில் பஞ்சகிருத்தியங்களையும் நடத்தி வருவது என்றும், அது எப்போதும் உள்ள பொருளேயென்றும், முறைப்படி முயன்று கண்டால் அதனை யெளிதில் காணலாமென்றும், வேறுவழியாற் காண்பது கூடாதென்றும், அதற்காகவே பெரியோர் நித்தியவிதி முதலாகக் கூறிப்போந்த கன்மவிதிகளையும், ஞான நெறிகளையும் அருளி உபகரித்திருக்கிறார்களென்றும், அந்நெறியே யொழுகி நாமும் நற்கதி பெறவேண்டுமென்றும் விளக்குகின்றது.


 சர்வசக்தி முற்றிற்று.

 

சத்தியம்

முன்னர்க் கூறிய மஹா சக்தியானது வருஷம், மாசம், நாள், நாழிகை, விநாடி, தற்பரை, விதற்பரை முதலிய கண்டிதமான காலவரையி லடங்காமல் என்றும் ஒரே படியாய் நிறைதலும், குறைதலும், விரிதலும், சுருங்கலும், ஏற்றமும், தாழ்வுமின்றி எவ்விடத்தும் எப்பொருளிலும் நிறைந்து நின்று ஜீவான்மாக்கள் செய்கிற இருவகைக் கன்மங்களுக்கும் சாட்சி மாத்திரமாயிருந்து அவ்வக்கர்மபலனை அவ்வவற்றுக்குப் பரிபாக முதிர்ச்சியிற் கொடுத்து உபகரித்து வருவதாதலால் இதற்கு வேதம் ''சத்தியம்" என்று பேரிட்டது. பரம்பொருளை நிரூபிக்குமிடத்து வேதம் ஓம், ருதம், சத்தியம், பரம், பிரம்மம், புருஷம், தத், சத்து, சிவம் என்கிற திருநாமங்களைக் கொண்டே நிரூபிக்கின்றது. ஆதலால் பரபிரமத்துக்கு இவையெல்லாம் பரியாய நாமங்கள் என்று கண்டு கொள்ளலாம். நித்தியம் என்கிற பேரும் உண்டு. இவற்றுள் ருதம், சாத்தியம், நித்தியம் என்பன ஒரு பொருளன. எவ்வாற்றானும் எவற்றானும் போதிக்கப்படாததாய்த் தன்னிலை கெடாமல் தன்னொளியால் விளங்கி நிற்பதனால் இப்பெயர்கள் கூறப்பட்டன. இதனால் எவனாவதொருவன் தனக்குத் தெரிந்ததை நிச்சயமாய்த் தவறாமல் சொல்லும் போது "சத்தியமாய்ச் " சொல்லுகிறேன் என்பன். நான் சொல்வது உண்மை யென்று நிச்சயிப்பதற்காகச் சத்தியப் பொருளைச் சாட்சியிட்டுக் கூறுவதாகும். இவ்வாறு சத்தியம் செய்து ஒருவன் கூறுவது பொய்யாயிருந்தால் உலகம் அவனை நிந்திக்கும். இழிந்தவனாகக் கருதும். இது மிகவும் மானங்கெட்ட செய்கையாதலால் நல்லோர்கள் சத்தியம் செய்ய அஞ்சுவார்கள். இதனால் உண்மை பேசுவதே சத்தியமாமென்பது விளங்கும். இந்தச் சொல்லை இழிந்த விஷயங்களில் உபயோகிக்கக் கூடாது.

 

இந்தச் சத்தியம் காலதேசங்களுக்குத் தக்கபடி வேறுபட்டிருக்கும். அவ்வாறு வேறுபடுவது அவர்கள் கண்ட பிரமலட்சணங்களைப் பற்றியதாதலால் அது குற்றமாகாது. அங்ஙனங் கொள்ளாக்கால் பூலோகத்தில் சத்தியவான் ஒருவனும் இரான். ஏனென்றால் ஒருவன் ஒரு விஷயத்தை நன்றாய் அறிந்திருக்கிறான். அதைக்குறித்து அவனைக் கேட்கும்போது யாது காரணம் பற்றியோ எனக்குத் தெரியாது என்கிறான். மற்றொருவன் தான் அறிந்ததை உள்ளபடி கூறினால் பிறனுக்குப் பெரிய தீமை நேரிடுமெனக் கருதி மறைத்துச் சொல்கிறான். இவைகளெல்லாம் பொய்யென்றுதான் கொள்ளப்படும். இவைபோன்ற பல விஷயங்களுள. ஆயினும் கால தேச வர்த்தமானங்களால் அவைகளைச் சத்தியமென்றும் அசத்தியமென்றும் கொள்ள வேண்டும். பொதுவாக யாதொரு பயனும் இல்லாமல் உண்மையை மறைப்பதும், பொய் கூறுவதும், பிறருக்குத் தீமையுண்டாக்கும் நோக்கத்தைக் கொண்டு இல்லாதவற்றைக் கூறுவதும், நல்லோர்கள் இடத்தில் இல்லாத பழியைக் கற்பித்துக் கூறுவதும், தான் ஒரு நன்மையை அடையும் பொருட்டு இல்லாததைக் கூறுவதும் அசத்தியமேயாகும். பிறருக்குத் தீங்கில்லாதபடி கூறுவது சத்தியமாகும்.

 

இதனைத் திருவள்ளுவர், வாய்மையென்றும், இதன் மறுதலையைப் பொய்ம்மை யென்றுங் கூறுவர். வாய்மை, மெய்ம்மை, உண்மை என்பன ஒரு பொருட்கிளவிகள்.

 

''வாய்மை யெனப் படுவதியாதெனின் யாதொன்றுந், தீமையிலாத சொலல்'' என்று மெய்ம்மையாகிய சத்தியத்திற்கு இலக்கணங் கூறினார். வேறொரு சீவான்மாவுக்கு ஒரு கெடுதியும் உண்டாகாதபடி பேசுவதே வாய்மையாம் என்பது. பிறருக்குத் தீமை பயப்பது நடந்ததாயினும் அது கூறுவது மெய்ம்மையாகாதென்பது விளங்கக் கூறியது. ஆதலால் நமது பெரியோர் கொண்ட கொள்கை பிற ஜீவனுக்குத் தீமையுண்டாகாமையே சத்தியமாம் என்பது.


 ''பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கு மெனின்''


என்றது அதனை விளக்கவெழுந்தது. என்னெனின், பிறருக்குக் குற்றமில்லாத நன்மையை யுண்டாக்குமாயின் அதுபற்றிக் கூறும் பொய்ம்மையும் வாய்மையென்று கொள்ளப்படும் என்பதாம். இவற்றால் நடந்தது கூறுவது தான் சத்தியம் என்பதும், இல்லாதது கூறுவது பொய்ம்மை என்பதும் விலக்கப்பட்டன. பிறஜீவனுக்கு நன்மையுண்டாகக் கூறுவன வெல்லாம் மெய்ம்மை. தீமையுண்டாகக் கூறுவன வெல்லாம் பொய்ம்மையேயாம் என்பது நமது முன்னோர்களின் கொள்கையாம் என்று கொள்ள வேண்டும். அங்ஙனமாயின் உண்மையே மெய்ம்மை யென்றும், இன்மையே பொய்ம்மை என்றும் கூறும் நூல்களொடு மாறுபடுமே எனின், பொருந்தும். ஆயினும் ஈண்டாராயற்பாலதிது.

 

ஜீவான்மாக்கள் இகம், பரம் என்ற இருவகைப் பயன்களை அடைவ தற்குரியன. அவற்றுள் பொருள் இன்பம் என்பன இகத்துக்கேயுரியன இகம் என்பது இவ்வுலக வாழ்வு. பரம் என்பது மறுஉலக வாழ்வு. அதற்கு அறமும் வீடும் பயனாம். அறம் பரலோக வாழ்வுக் குரியதாயினும் உலகங் கடந்த பேரின்பமான மோட்சமும் மறு உலக வாழ்வின் கண்ணாவது யாண்டையதெனின், வீடு என்பது பரிபாகத்துக்கு ஏற்றவாறு பதமுத்தி, சாயுஜ்யமுத்தி என இருவகைப்படும். பரமுத்தி யென்பது மறுமை உலகம்; எல்லாவற்றினும் சிறந்ததாய்ச் சகுணப் பரம்பொருள் வாழும் உலகமாம். அது மீளா உலகமாம். அவ்வுலகத்தை யடைவதற்கு அறமும் ஒரு சாதனமாவது பற்றிக் கூறியதாம். இகவாழ்வையே பொருளெனக் கொண்டு நடப்பவர் நடந்ததை நடந்தபடி கூறுவதே மெய். நடவாதது கூறுவது பொய்யாம். காமம் பொருள் என்பன பற்றி நிகழும் விவகாரம் அரசராலும் பிறராலும் தீர்க்கப்படும் போது அதுபற்றி நிகழ்ந்ததைக் கூறுவதே மெய். அது கூறாக்கால் பொருளிழந்தானுக்குத் தீமை விளையுமாதலால் அது பாவமாய் நரக துன்பத்தையே தரும். ஆதலால் அவர்கள் நிகழ்ந்ததையே கூற வேண்டும்.

 

பரம் ஒன்றையே கருதி இகவாழ்வை வெறுத்துத் தெய்வசிந்தனையி லிருந்து தவம் புரிவார் எல்லாவற்றையும் சமனாகக் கருதவேண்டும். அங் ஙனம் கருதுங்கால் ஜீவான்மாக்களின் துன்ப நிவர்த்தியே அவர்களுக்குப் பெரிய புண்ணியமாம். அவர்கள் கூறுவது பட்சபாதகம் பற்றி யன்றாத லால் அது பொய்யின் பாற்படாது. மெய்யின் பயனையே தரும். இப் பொருள்கள் ஸ்மிருதிகளின் கருத்தைத் தழுவியன. விருப்பும் வெறுப்பு மின்றி ஜீவான்மாக்களிடத்திலுள்ள கருணையினாற் சொல்லப்படுவது ஆத
 லால் பாவமாவதில்லை. இதுபற்றியே,

 
 ''அருளிலார்க் கவ்வுலகமில்லை பொருளிலார்க்
 கிவ்வுலக மில்லா தியாங்கு''

 
என்று கூறினார். இந்த உலக வாழ்வுக்குப் பொருளே சிறந்தது. அது இல்லாவிடில் உலக இன்பத்தை அனுபவிக்க வியலாது. அதுபோலக் கருணை யென்னும் அருளிலாக்கால் மறுமையின்பந் துய்த்தலில்லையாம். பொருளில்லாமையே இவ்வுலகத்தில் துன்பமாதலால் அதுபற்றி நிகழ்ந்ததையே கூறவேண்டும். மறுமையை வேட்டவர்கட்கு உலகநெறி அவசிய மில்லையாதலால் அவர்கள் அருளையே முக்கிய சாதனமாகக் கொண்டு தவம் புரிதல் வேண்டும். அங்ஙன மொழுகுவார்க்கு ஜீவான்மாக்களின் துன்ப நிவர்த்தியே பேரின்பமளிக்குமாதலால் அவர்கள் கருணை பற்றிக் கூறும் பொய்ம்மையும் மெய்ம்மையின் பாற்படுவதாம் என்றருளினார். இதனால் அருணெறிப்பட்டார் கருணை காரணமாக நிகழ்ந்தது கூறாது மாறுபடக் கூறினும் அது வழுவாகாது. ஆதலால் நிகழ்ந்தது கூறுவதே மெய்ம்மையென்று கூறும் நூல்களின் கூற்றொடு மாறுபடுவதில்லை யென்று கொள்க. மாறுபடாததாகவே அது வாய்மை யென்பது தெளியப்பெறும். இவையெல்லாம் ஒவ்வொரு நெறிபற்றிக் குற்றமாகாவாயினும் சத்தியம் என்பது உண்மை கூறுதலையே உணர்த்தும். இதனை யுணர்த்துதற்கே,

"தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்''


என்றார். இதன்படி ஒருவன் தன் மனதினால் நன்றாக அறிந்திருக்கிர விஷயத்தை மறைத்துப் பொய் சொல்லக்கூடாது. சொன்னால் பிறர் தன் மனமே தன்னை நெருப்பு போலக் கொளுத்தும். பிறர் அறியாரென்று கருதி உண்மையை மறைத்துப் பொய் கூறினால் அவன் நெஞ்சில் வசிக்கின்ற சத்தியப்பொருளே உண்மையை வெளிப்படுத்திவிடும். வெளிப் படுமாயின் உலகத்தார் அவனை மதியார். பொய்யனென்று இகழ்ந்து நிந்திப்பார்கள். அப்பொழுது அவன், தான் பொய் பேசினதற்காக வருந்தித் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு துக்கிப்பான். இராஜாதியரும் பிறரும் அவன் சொல்லில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இவைகளால் பல தீமைகள் நேரிடுவதற் கிடமுண்டாகையால்'' தன்னெஞ்சே தன்னைச் சுடும்'' என்றார்.


 ''உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
 ருள்ளத்து ளெல்லா முளன்''

என்றதனால் மனமறியப் பொய் கூறாமல் தான் அறிந்ததையறிந்தபடி கூறுபவன் அடையும் பயன் கூறியதாயிற்று. ஒருவன் தன் மனமறியப் பொய் சொல்லாது உண்மையையே கூறுவானாயின் அவனை யெல்லாரும் தம் உள்ளத்தாற் புகழ்வார்கள். பொய் கூறாமை மேலான அறமாதலால் அந்த அறவுருவனாகிய இறைவன் எல்லார் உள்ளமும் ஒத்து அவனைப் புகழும்படி செய்வன். அவனுடைய வார்த்தைக்கு எங்கும் மதிப்புண்டு. செல்வாக்கு முண்டாகும். அரசர்களும் சன்மானிப்பார்கள். இது பொருளின்பங்களையே பெரிதெனக் கொண்டொழுகுவார் கைக்கொள்ள வேண்டிய முறைமையாம். இதுவே உலகத்தார் மெய்யென்றும் கூறுவது. உலகங் கடந்த துறவிகளாகிய ஞானிகளுக்கு இந்நெறி அவசியமின்று. சர்வ ஜீவாத்மாக்களுக்கும் ஆதாரமாயும் கர்மசாட்சியாயும் நிற்கும் இறைவன் இவன் பாபியென்றும் இவன் புண்ணியவான் என்றும் வேறுபாடு கருதாமல் இருவரையும் ஒப்பக்கருதி அவரவர்களுக்குத் தக்கவாறு அநுக்கிரகம் செய்து வருவது நிச்சயம். அதுவே கருணையென்று புகழ்ந்து கூறப்படுவது. அவனையே பொருளாகக் கருதி உலக பாசத்தைப் பற்றற ஒழித்திருக்கும் ஞானயோகியரும் அந்தக் குணத்தையே சிறப்பாகப் பெறவேண்டியவர்கள். அவர்கள் ஒழுகும் நெறி ஞானநெறி. அந்த நெறியில் உலக விவகாரங்கள் வந்து குறுக்கிடுவதில்லை. உலகநெறியை அனுசரிப்பதே பெரிய பாபமாய் வீட்டு நெறியை அடைக்கும். ஆதல் பற்றி அவர்கள் வீட் டுக்குரிய கருணையையே பெரிதாகக் கொண்டு எவ்வாற்றானும் ஜீவ இம்சை நேரிடாமல் நடக்க வேண்டும். இதனை விளக்குவதற்கு அர்த்தவாதமாக இதிகாசங்கூறிய ஒரு சிறிய சரித்திரத்தையும் இங்கு எழுதுகிறோம்:

 

ஒரு காட்டில் ஒரு முனிவர் உக்கிரமான தவஞ் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் ஒரு வேடன் ஒரு ஆட்டை அறுப்பதற்காகக் கொண்டு வந்து அம்முனிவர் தவச்சாலைக்குச் சமீபத்தில் நின்றான். ஆடறுக்கும் கத்தியை வீட்டில் வைத்து மறந்துவிட்டான். கத்தியை எடுக்கும் பொருடு வீட்டிற்குச் சென்றான். அந்த ஆட்டை ஊணாங்கொடியால் ஒரு மரத்தில் கட்டிவிட்டுச் சென்று கத்தியை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தான். ஆட்டைக் காணோம். நாலா பக்கத்திலும் தேடினான். எங்கும் காண வில்லை. அந்த முனிவரிடத்தில் வந்து கேட்டான். அப்பொழுது அம் முனிவர், சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தவர், கையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு தலையைப் பிரதட்சிணமாகச் சுற்றினார். வேடன் தென் முகமாய்க் கையைக் காட்டுகிறார் என்று தெற்கே தேடிக்கொண்டுபோய் ஆட்டைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து வெட்டி விட்டான். சிறிது காலத்துக்குள் முனிவர் தேகவியோகமாயினார். ஒரு ஆடாக ஜனித்தார். வெட்டுப்பட்ட ஆடு வேடமனிதனாகப் பிறந்தது. அம்மனிதன் முனிவரை வெட்ட வந்தான். அதைக்கண்ட முனிவர் இந்த ஆச்சரியத்தைப் பார்த்துக் கடகட வென்று சிரித்தார். வேடன், ஆடே! நீ ஏன் சிரிக்கிறாயென்று கேட்க ஆடு, ''முன்ஜன்மத்தில் மனிதனாகப்பிறந்து பெருந்தவம் செய்து கொண்டிருந்தேன். நீ ஆடாக இருந்தாய். உன்னை வெட்ட வந்த வேடன் உன்னைத்தேடித் திரிகையில் என்னிடம் வந்து ஆடு எம்மார்க்கமாய்ச் சென்றதென்று கேட்டான். நான் மௌனச் சந்தியாவந்தனம் செய்யும் போது ஜலத்தினால் தலையைச் சுற்றினேன். வேடன் என்கை சென்ற வழியே சென்று உன்னைப்பிடித்து வெட்டிவிட்டான். அந்தப் பாவத்துக்காக நான் ஆடாய்ப் பிறந்தேன். நீ மனிதனாய்ப் பிறந்து பழிக்குப்பழி வாங்குகிறாய். நான் ஒரு பாபத்தையும் அறியாமல் இருந்தும் இந்தக் கதியை அடைந்தேன். ஞான திருஷ்டியாலதை யறிந்து சிரித்தேன். நீ என்னை வெட்டிவிட்டு நன்னெறிபற்றி நடந்து நற்கதியை அடை யென்று கூறினார். வேடனும் அவ்வாறே வெட்டிவிட்டு நன்னெறி ஒழுகி நற்கதியடைந்தான். ஆதலால் உலகநெறி வேறு, வீட்டு நெறி வேறு என்று கொள்க.

 

ஆசாரம்

நித்தியவிதி முதலாகக் கூறிவந்தவைகளெல்லாம் ஆசாரமே. அவ்வாசாரம் சிறப்பும் பொதுவுமென இருவகைப்படும். அவற்றுள் பொதுவென்பது எல்லா வருணத்தாரானும், எத்தேசத்தாரானும் அனுஷ்டிக்கத் தக்கது. இதுவரை கூறிய ஆசாரம் பொதுவேயாம். அவற்றுள் சிறப்பும் சில கலந்து கூறப்பட்டன.

 

ஈண்டுச் சிறப்பாகிய ஆசாரங்களையும் தனியே யெடுத்துச் சிறிது கூறவேண்டியது அவசியமேயாம். அதில் பிறருக்குப் பாதகமில்லாமலிருக்கும் பாகத்தை யீண்டெடுத்து உரைப்போம். அந்தச் சிறப்பு என்பது நான்கு வருணத்தாருக்கும் பொதுவாகாமல் ஒரு வருணத்தார் மாத்திரம் அனுஷ்டிக்கத்தக்கது. நான்கு வருணத்தார்க்கும் தனித்தனியே சிறப்பு விதிகளுண்டு.

 

ஆசாரமென்பது வடமொழி, தென்மொழியில் ஒழுக்கம் என்று கூறப் படும். ஒழுக்கம், நடை, என்பன ஒரு பொருளிலேயே உபயோகிக்கப்படும். திருக்குறள் அருளிய தேவனார் ஒழுக்கமுடைமை ஒன்றையே ஓர் அதிகாரமாக வகுத்துக்கொண்டு அதன் பெருமையை விரித்துக் கூறினார்.


 "ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
 முயிரினு மோம்பப் படும்”

 

எல்லாருக்கும் ஒழுக்கமாகிய ஆசாரம் மேன்மையைக் கொடுப்பதான படியால் அந்த ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாகக் காப்பாற்ற வேண்டும் என்பது. இழிந்தவரை மேன்மைப்படுத்திச் சிறப்பளிப்பதும், உயர்ந் தோர் பெருமையை மேன்மேலும் பிரகாசிக்கச் செய்யும் இயல்புள்ளதும் ஆதலால் அதனை உயிரினும் சிறந்ததென்று கூறினார். அன்றியும், கணத்தில் அழியும் தன்மையுள்ள உடல் ஒழிந்தபின், அது தானே அவ்வுயிர்க்கு உடலாக நின்று பூவுலகில் ஊழிகாலம் புகழை நிலைபெறச் செய்தலாம். உடலைவிட்ட ஆன்மாவுடன் குணரூபமாய்ப் பரலோகம் சென்று சிறந்த போகப்பயனை ஊட்டுதலாலும் ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாயிற்று. உயிர் எல்லாப் பொருள்களிலும் மேன்மையுடையதாயினும் இம்மை மறுமைப் பயனை அளிக்கும் ஆற்றல் அற்றது. ஆதலால் அவ்விரண்டையும் ஒருங்கே தரவல்ல ஒழுக்கம் மிகவும் சிறப்புடையதாயிற்று. சிறப்பு விதி கூறத் தொடங்கியவர்,


 "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
 பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்''


என்றார். பிராமணன் வேதத்தை மறந்துவிட்டாலும் மறுபடியும் ஓதிப் பெற்றுக் கொள்ளக்கூடும். ஆசாரத்தை இழந்துவிட்டாலோ அவன் பிராமணன் என்கிற உயர்பிறப்பை யிழந்துவிடுவான் என்பது. ஓதுதல் முதல் வருணத்தாராகிய அந்தணர்க்குச் சிறப்பிலக்கணமாம். ஏனைய நூல்களைப் போலாது குருமுகத்தான் ஓதியே கற்றுக்கொள்ளப்படுதற் சிறப்பு நோக்கி வேதம் என்று கூறப்பட்டது. வேதம் சிறந்ததாயினும் ஓதற் சிறப்பு நோக்கி அது ஸ்மிருதி, கற்பம், இதிகாசம், புராணம், ஜோதிடமாதி சாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் உபலட்சணமாம். இதனால் வேதவேதாங்கங்களையும் மற்று முள்ள சாஸ்திரங்களையும் கற்பதே முதல் வருணத்தார்க்குச் சிறப்பிலக் கணமாகக் கூறப்பட்டது.
 

வேதம் ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணமென நான்கு பகுதியாகக் கூறப்படுகின்றது. ரிக்கு வேதம் இருபத்தொரு சாகைகளுள்ளது. யஜுர் வேதம் நூற்றொரு சாகைகளுள்ளது. சாமவேதம் ஆயிரம் சாகைகளையுடை யது. அதர்வணம் ஒன்பது சாகைகள் கொண்டது. அதர்வணம் என்று தனியாக ஒரு வேதம் கிடையாது. முதல் மூன்று வேதங்களினுமுள்ள மந்திரங்களை யெடுத்துத் திரட்டி அதற்கு அதர்வணமென்று பேரிட்டு வியாசமுனிவர் வேதத்தை நான்காகச் செய்தார். இந்த அதர்வணம் தநுர்வேத மென்று சிறப்புப் பெயர்பெறும். இதில் அரசர்கள் யுத்தம் செய்வதற்குரிய பல மந்திரங்களடங்கியிருக்கின்றன. அபிசார ஓமங்களுக்குரிய அநேக மந்திரங்களும் உள்ளன. இதனை முறையோடு கற்றவர்கள், துரோணர், கிருபர், அசுவத்தாமர் என்கிற மூவர்களுக்குப் பின்னால் இருந்ததாகத் தெரியவரவில்லை. அந்த மந்திர இரகசியங்களும் யந்திரங்களோடு மறைந்து விட்டனவென்றே கருதப்படுகின்றன. சிலர், அவை பரிச்சித்துக் குமாரனாகிய ஜனமேஜயன் காலம் வரைக்கு மிருந்தனவென்பர். இந்த வேதம் வட நாட்டில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தென்னாட்டிலது அனுஷ்டானத்தில் இல்லை. வேதத்தில் ரிக்கு, யஜுர், சாமமாகிய மூன்றுமே அனுஷ்டிக்கப்படுகின்றன. ஆயினும் அதாவணவேதம் மந்திர ரூபமாய் இவற்றுள் அடங்கியிருப்பதால் இல்லையென்று சொல்லவும் கூடாது. ஆயினும் அவ்வேத மந்திரங்களுக்குரிய தந்திரயந்திரங்களையும் பிரயோக முறையையும் அறிவார் யாருமேயில்லை.


      இந்த மூன்று வேதங்களும் அற்பசுருதி, பிரபல சுருதி என்று இருவகைப்படும். சுருதி என்பது வேதம். ஏனைய நூல்களைப்போலப் படித் துணர முடியாமல் காதினாற் கேட்டே ஓதப்படுகிறபடியால் அப்பெயர் பெற்றது. சுரோத்திரேந்திரியத்தால் உணரப்படுவது என்பது பொருள். அற்ப சுருதி என்பது கன்மங்களைக் கூறுவது. இதுவே கன்மகாண்டம் என்னப்படும். பிரபல சுருதி என்பது உபநிஷத்துச் சொரூபமாய் ஞான மார்க்கத்தை உணர்த்தும். வேதம் என்பது அறிதலுக்குரிய கருவியாகிய நூல் என்று பொருள் தரும்.

 

இந்த வேதங்களுக்கு ஆறு அங்கங்களுண்டு. அவை முறையே சிட்சை, வியாகரணம், நிருத்தம், ஜோதிடம், கற்பம், சந்தோபிசிதி என்பனவாம். வேதோச்சாரண முறையை விளக்குவது சிட்சையாம்; வேதத்திலுள்ள பதங்களுக்கு இலட்சணங் கூறுவது வியாகரணமாம்; வேதத்தின் விவரணங்களைக் கூறுவது நிருத்தமாம். ஜோதிஷம் என்பது வைதிகங்களுக் குரிய காலத்தை யறிவிப்பது. காலமாவது இலக்கினம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பனவாம். கற்பம் என்பது வைதிக கர்மங்களைப் பிரயோகிக்கு முறையைக் கூறுவது. அவை ஆசுவலாயனம், போதாயனம் ஆபஸ்தம்பம் என்கிற கற்பசூத்திரங்களேயாம். சந்தோபிசிதி என்பது உக்தை முதலிய சந்தோபேதங்களுக்கு அக்ஷர சங்கியை கூறுவது. இவற்றை யோதியுணராக்கால் வேதங்களை யோதுதலும், அவற்றின் பொருளை அறிதலும், அந்த வேதவிதிப்படி நடத்தலும் கூடாவாம். இவற்றை யோதியுணராதவர் வேதத்துக்குச் சரியான பொருளையும் உணரமாட்டார்கள். இவற்றை முறைமையாக ஓதியுணரவேண்டும். முறைமையாக ஓதுதலாவது நன்றாயுணர்ந்த குருமுகத்தால் சந்தேக விபரீதங்களறத் தெரிந்துகொள்வது. இவ்வாறு வேதமோதுவதற்குத் துவிஜர்களுக்கே அதிகாரமுண்டு. பிராமணர்களே முற்றும் ஓதவேண்டியவர்கள். மற்றைய துவிஜர்களோ தங்களுக்கென்று ஏற்பட்ட பாகத்தை ஓதினாற் போதும்.

 

வேதமோதுவதற்கு நிர்ப்பந்தமான சில விதிகளுண்டு. முதலில் உபநயன தீட்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அது பெற்றால் தான் அவன் துவிஜன் என்னப்படுவான். பிறகு வேதமோதவேண்டும் இந்த நிலைக்குப் பிரமசரியம் என்று பேர். இதனையே பிரமசரியாசிரமமென்றும், முதலாம் ஆசிரமம் என்றும் கூறுவது இவ்வாசிரமத்தை அடைவதற்கு ஐந்து வயது ஏழு வயதுகளே பிராமணர்களுக்குக் குறிக்கப்பட்டுள்ளன. தன் தகப்பனா ரிடத்திலாவது நன்றாய்க் கற்றுணர்ந்த பிற ஆசிரியரிடத்திலாவது ஓதலாம். உபநயனமானவுடனே, வேறு ஆசிரியரைத் தேடி அவரிடம் சென்று பயில வேண்டும். நிர்ப்பந்தம் மிகவுமுண்டு.

 

இக்காலத்தில் பிட்சையெடுத்தே புசிக்கவேண்டும். அதுவும் தனக்கு மட்டும் போதுமான உணவையே பெற்றுவரவேண்டும். ஆசிரியர் கட்டளையிருந்தால் அவருக்காகவும் பிட்சையெடுக்கலாம். எடுத்த பிட்சையைக் கொண்டு வந்து குருவுக்குக் காட்டவேண்டும். அவர் புசி என்று உத்தர வளித்தபின் புசிக்க வேண்டும். பகலில் ஒரு வேளை பிட்சையெடுப்பதே சிறப்பானது. பகலில் பிரமசாரிகளுக்கும், யாதிகளுக்கும் அவசியம் பிட்சையிட வேண்டுமென்பது விதி ஆதலால் எல்லாப் பிராமணர்களும் பிட்சையிட வேண்டுமென்பது விதி. ஆதலால் எல்லாப் பிராம்மணர்களும் பிட்சையிட்டே தீரவேண்டும். இரவில் பிரமசாரி பிட்சையெடுத்தால் அதற்குத் தரும் பிட்சையென்று பேர். அந்தப் பிரமசாரி தரும பிட்சையென்றே கேட்க வேண்டும். பகலில் அப்படி அல்ல. " பவதி பிக்ஷாந்தேஹி'' என்று அதிகாரத்துடன் கேட்கலாம். சந்நியாசிகள் ஒரு வேளை பிட்சையெடுத்துப் புசிக்கலாமே தவிர இரவில் பிட்சைக்கு வரக்கூடாது. வேதமோதுகிற பிரமசாரி வேண்டிய அளவு புசிக்கலாமென்றும், வேண்டிய போது புசிக்கலாமென்றும் விதி உளதாதலால் அவர்கள் இரவிலும் பிட்சை யெடுக்கலாம். பிரமசாரிக்குக் குருபணிவிடையே முக்கியம். பணிவிடையாவது அக்கினிஹோத்திரம் முதலிய அக்கினி காரியங்களுக்கு வேண்டிய சமித் துக்கள் தர்ப்பைகள் கொண்டு வந்து வைத்தலும், வைதிக்கிருத்தியங்களு க்கு உடனிருந்து உதவி செய்தாலும், அவர் ஏவின வேறு வேலைகளைச் செய்தலுமாம். இவன் வஸ்திரத்தைப் பாதம் வரையிலும் தாழவிட்டுக் கட்டிக் கொள்ளக்கூடாது. முழங்கால் வரைக்குந்தான் கட்டலாம். அங்க வஸ்திரம் தரிக்கவேண்டிய அவசியமில்லை. சந்தனம் பூசிக்கொள்ளக் கூடாது. புஷ்பங்களைத் தரித்துக்கொள்ளக்கூடாது. வெற்றிலை பாக்குத் தின்னக்கூடாது. வேடிக்கை வினோதங்களைப் பார்க்கக்கூடாது. விருந்து பிராமண போஜனமாகிய சமாராதனை முதலியவைகளிற் புசிக்கக் கூடாது. கல்யாண வீடுகளில் புசிப்பதும் தட்சிணை வாங்குவதும் கூடா நாடகம் பார்ப்பதும், விகடம் கேட்பதும் கூடா. பரிகாசப் பேச்சுக்கள் பேசக்கூடாது. பெண்களிருக்கிற இடத்துக்குப் போகக்கூடாது. தனித்துப் பெண்களிடத்தில் பேசக்கூடாது. அவர்களுடன் பரிகாசம் செய்யக்கூடாது. அதிகாலையில் எழுந்திருந்து தந்த சுத்தி முதலிய செய்து கொண்டு ஸ்நானம் செய்து ஸந்தியாவந்தன ஜபங்களை முடித்துக்கொண்டு சமிதாதானம் என்கிற அக்கினி காரியத்தைச் சிரத்தையுடன் செய்யவேண்டும்.

 

அதன்பிறகு வேதாத்தியயனம் செய்யவேண்டும். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறவரையிலும் ஓதி, அவர் போ என்று சொன்னபின், மாத்யான்ஹிகங்களை முடித்துவிட்டுப் பிட்சையெடுக்கச் செல்லவேண்டும். புசித்தபின் குருவின் உத்தரவின் மேல் வேதம் ஓதவேண்டும். வேதம் ஓதுகிற பொழுதே இதர சாஸ்திரங்களையும் கற்கவேண்டும். காலமறிந்து குரு உத்தரவு தரும்போது காவியாதிகளையும் இதிகாச புராணங்களையும் கற்க வேண்டும். பிறகு ஆறு அங்கங்களையும் பொருளோடு ஓதி உணரவேண்டும். வேத வேதாங்கங்களை ஓதிய பின்னரே காவியாதிகளைக் கற்க வேண்டு மென்பதும் உண்டு.

 

இவ்வாறு நாலு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓத நாற்பத்தெட்டு வயது வரையும் செல்லும். "அறுநான்கிரட்டி யிளமை நல்யாண், டாறினிற்கழிப்பர் அறநவில் கொள்கை, மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வர்'' என்று தமிழ்மொழிப் பெரியார் அந்தணரைச் சிறப்பித்துக் கூறினார். எல்லா வேதங்களையும் ஓதாவிட்டாலும் தன் மரபுக்குரிய வேதத்தை மாத்திரமாவது ஓதவேண்டும். இதனாலே தான் ரிக்வேதி, யஜுர் வேதி, சாமவேதி என்று அந்தணர் மூன்று பகுதிப்பட்டவராயினார்.

 

பிறகு ஸமாவர்த்தனகிரியை செய்து பிரமசரிய விரதத்தை முடிக்க வேண்டும். செய்து முடித்தபின் தாம்பூலாதிகளும் சந்தன பரிமளங்களும் தரித்து, வெண்மையான அழகிய வஸ்திர முடுத்துக்கொண்டு காலங்கழிக்கலாம். ஸ்திரீ சம்பந்தம் மட்டும் கூடாது. இந்த நிலைக்கு ஸ்நாதகதர்மம் என்று பேர். இதையுடையவன் ஸ்நாதகப் பிராமணன் என் னப்படுவான். இவ்வாறின்றிக் குருபணிவிடை செய்து கொண்டு அவரை விட்டு அகலாமலிருக்கலாம். இவன் பிரமசரியத்தை முடிக்கும் கிரியை செய்ய வேண்டியதில்லை. இவன் பிரமசாரியே. இவனை நைஷ்டிகப் பிரமசாரி என்று கூறுவார்கள்,

இந்த முதல் ஆச்சிரமத்திலிருந்தே வானப்பிரஸ்த சந்நியாச ஆச்ரமங்களை யடையலாம். ஆயினும் அந்தத் தர்மங்கள் நிறைவேறுவது கஷ்டம். ஆதலால் முறைப்படியே செல்வது தான் சரியானது. அதாவது பிரமசரியத்தை முடித்தவுடனே கிரகஸ்தாசிரமம், பின் வானப்பிரஸ்தம், அதன் பின் சந்நியாசம் இவற்றை முறையே அடையவேண்டும். மன அடக்கமும் இந்திரிய அடக்கமும் உடையவன் பிரமசரியத்திலேயே யிருந்து விடலாம்.

 

அது இருப்பதற்கு மிகவும் அருமையானது. தவறுதல் அநேகமாய் நேரும். நேரிடும் பல பல இடையூறுகளை வென்று அவ்வாசிரமத்தைக் காத்துக் கொள்வது உலகமாயா சக்கிரத்துக்குள் சிக்கி உழலும் எல்லாருக் கும் இயலாது பூர்வபுண்யமுடையார்க்கு அகத்துறவுண்டாகும். அகத்துறவே சந்நியாசமாம். பிரமசரியமும் அதை ஒத்தது தான். இவ்வாசிரமங்களில் நின்று சிறிது தவறினால் நித்திய நரகவேதனை நேரும். ஆதலால் முன்னோர் வகுத்த சோபான மார்க்கப்படி முறையாகச் செல்வதுதான் நன்று. சோபானமென்பதுபடி அம்மார்க்கமாவது பிரமசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசமென்பனவாம். இவை நான்கும் மோட்சத்துக்கு சோபானமார்க்கமெனப்படும்.

 

இக்கஷ்டங்களை நோக்கியே "இல்லறமல்லது நல்லறமன்று'' என்று அன்னையாரும், " அறனெனப்பட்டதே யில்வாழ்க்கையஃதும், பிறன்பழிப் பதில்லாயினன்று'' எனப் பொய்யாமொழியாருங் கிருகஸ்த தர்மமாகிய இல்லறதர்மத்தைப் புகழ்ந்து கூறினார்கள். இல்லறம் முதன் மூன்று வரு ணத்தாரும் அனுஷ்டிக்கத்தக்கதென்று நூல்கள் விதித்தன. முதல் வருணத்தார்க்கு நாலு ஆசிரமங்களும் உரியன. நாலாம் வருணத்தாருக்குக் கிருகஸ்தாச்ரமமட்டுமே வேதம் வகுத்தது.

 

வேதங்களில் நாலாம் வருணத்தாருக்குச் சந்நியாசம் விதிக்கப்பட வில்லை யென்றாலும் ஆகமங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆகமவிதியும் வேதவிதியும் ஒன்றோடொன்று ஒன்று பட்டனவென்பர். ஆயினும் இரண்டும் மோட்சமார்க்கமேயாம். ஆயினும் தாந்திராசாரம் என்கிற ஆகமானுஷ்டான முடையவர்கள் வைதிக மார்க்கத்தை அனுஷ்டிக்கக் கூடாதென்றும், வைதிகமார்க்கத்தர் ஆகமமார்க்கத்தை அனுஷ்டிக்கக்கூடாதென்றும் சூத சங்கிதை வரையறுத்துக் கூறியிருக்கின்றது.

 

பிரமசாரிக்கு வேதமோதலும், சமிதாதானம் என்னும் அக்கினி காரியம் செய்தலும், குருபணிவிடை செய்வதில் வழுவாமலிருப்பதும், பிட்சை யெடுத்து உண்பதும் முக்கிய ஆசாரமாம். கிருகஸ்தர்களுக்கு அக்கினி ஹோத்திரம், ஒளபாசனம் என்கிற அக்கினி காரியங்களைச் செய்யவேண்டும். ஒளபாசனம் என்பது ஸ்மிருதி மார்க்கம். அன்புடைமையும், அதிதிகளை உபசரித்தலும், தேவபூஜை செய்தாலும் முக்கிய தர்மமாம். வானப் பிரஸ்தர்களுக்குச் சடைமுடி நகம் இவைகளை வளர்ப்பதும், மனிதசஞ்சார மில்லாத வனத்தில் வசிப்பதும், காய், கனி, கிழங்கு, சருகு முதலிய வனத்திலுண்டாகும் பதார்த்தங்களைப் புசிப்பதும், சாஸ்திரங்களை ஆராய்வதும், உடல் வருந்தத் தவம் புரிவதும் ஆசாரமாம். சாஸ்திர ஆராய்ச்சி முதன் மூன்று ஆச்சிரமத்தாருக்கும் உரியது. சந்நியாசிகளுக்குப் பகலில் மூன்று வேளையிலும் ஸ்நானம் செய்வதும், காஷாய தண்டுகமண்டலந் தரிப்பதும், பிரணவ ஜபம் செய்வதும், பிரமதியானத்திலிருந்து நிஷ்டை கூடுவதும், பிட்சை யெடுத்துப் புசிப்பதும், ஒரு கிராமத்திலும் ஒரு நகரத்திலும் நாலு நாட்கள் தங்கியிருப்பதும், ஒருவருடனும் கூடாமல் தனித்து வசிப்பதும், ஆற்றங்கரை குளத்தங்கரை மரத்தடிகளில் தங்குவதும், பிட்சாகாலந் தவிர மற்ற காலங்களில் கிராம நகரங்களுக்குள் செல்லாமலிருப்பதும் சந்நியாசிக்குரிய ஆசாரமாம். இவ்வாசாரங்களினின்று சிறிது வழுவினாலும் சந்தியாசாச்சிரமம் கெட்டு நரகப்பிராப்தியை உண்டாக்கும். இவற்றில் வழு வாமலிருப்பவன் பிரமமேயாவான்.

 

நான்கு ஆசிரமத்தாருக்கும் நாலு வருணத்தாருக்கும் பொதுவாக உபவாசமென்று ஒன்றுண்டு. உபவாசம் என்றால் ஆகாரங்கொள்ளாமல் இருப்பது என்பதுதான் சாதாரணமாக எல்லாராலும் கொள்ளப்படுங் கருத்து. அப்படியல்ல. ரிஷிகளாலும் கிருகஸ்தாச்சிரமத்தாராலும் அனுஷ்டிக்கப்படும் உபவாசம் இந்தக் கருத்துக்கு மாறாகவே யிருக்கிறது.

 

பகலில் காலை முதல் பகல்காலம் வரைக்கும் தண்ணீர் கூடக் குடியாமல் இருக்க வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் ஒரு வேளை புசித்துப் பிறகு மறுநாள் பகற்காலம் வரைக்குந் தண்ணீர் கூட அருந்தாமலிருக்க வேண்டும். இது ஒருவகை உபவாசம். இப்படி மூன்று வருஷம் நடந்தால் அவன் சொர்க்கம் அடைவது நிச்சயம் என்று நூல்கள் கூறுகின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை புசித்திருப்பது ஒருவகை உபவாசம். பகல் பதினைந்து நாழிகைக்கு மேல் புசிப்பதும் அதுவரை நீர் கூட அருந்தாமலிருப்பதும், அதன்பின்னும் நீர்கூட அருந்தாமலிருந்து இரவு ஜாமத்துக்குள் புசிப்பதும் ஒருவகை உபவாசம். இந்த உபவாசம் ஆறு வருஷம் செய்யத்தக்கது. இவனுக்கும் சொர்க்கம் எளிதில் கிடைக்கும். வனத்தில் வசிப்போர் காய், கனி, கிழங்குகளைப் புசித்து இந்த உபவாசத்தைச் செய்வார்கள். கிருகஸ்தாச்சிரமத்தாரும் காய் கனிகளைப் புசித்து உபவாசம் செய்யலாம். பகலில் ஒரு வேளை புசித்து மேற்குறித்த நெறிதவறாமல் இரவில் கனிகளைப் புசித்து இருப்பதும் உபவாசமாம். இருவேளை அல்லது ஒரு வேளை பலாகாரம் புசித்தும் உபவாசமிருக்கலாம். பலம் என்பது செடி, கொடி, மரங்களிலுண்டாகும் காய் கனிகளுக்குப் பெயராம். இது பழம் என்று தமிழில் கூறப்படுகிறது. அடை, தோசை, உப்புமா, இட்டலி, கொழுக்கட்டைகளைப் புசிப்பது பலாகாரமாகாது.

 

பூரணை, அஷ்டமி, சதுர்த்தசி, ஏகாதசி, திரயோதசி, சஷ்டி ஆகிய இந்தக் காலங்களில் ஒருவேளை புசிப்பதும், அல்லது பலாகாரங் கொள்வதும் கிருகஸ்தருக்குரிய உபவாசங்களாம். மற்றைய நாட்களில் இருவேளை மேற்குறித்த விதி தவறாமல் புசிப்பதும் நன்றே. இதை வைத்திய நூல் களும் கூறுகின்றன. ஆனால் சிறிது விசேஷம் கூறுகின்றது. புசிக்கும் அளவும் ஒன்றும் தின்னக்கூடாது. புசிக்கும் போது அன்னம் கறிகள் எல்லாம் சேர்ந்து அரை வயிற்றுக்குப் புசிக்க வேண்டுமென்றும், கால் வயிறு நீரால் நிரப்பவேண்டுமென்றும் ஆக முக்கால் வயிறு நிறைய உணவு கொண்டு பிராணவாயு சஞ்சரிப்பதற்குக் கால்வயிறு விட்டுவிடவேண்டும் என்றும் கூறுகின்றது. இப்படி முக்கால் வயிற்று உணவு கொண்டு போஜனகாலங்களுக்கு இடையில் ஒன்றும் புசியாமலிருப்பவன் நோயற்றுத் தீர்க்காயுசுடையவனாய் அந்தத்தில் நற்கதியை அடைவான் என்றும் கூறுகின்றது. ஸ்மிருதிகளும் இதை அனுசரித்தே கூறுகின்றன. இவையன்றி மாத உபவாசம், பட்ச உபவாசம், வார உபவாசம், ஒன்றுவிட்டொருநாள் புசித்தல் முதலிய உபவாசங்களும் உண்டு. அவைகள் ரிஷிகளுக்கே உரியன.

 

இனி தேவோபாசனை செய்கிறவர்கள் அந்தத் தேவதைக்குரிய கிழமை, நட்சத்திரம், திதிகளிலும், இவ்வுபவாசத்தை அனுஷ்டிக்க விதியுண்டு. அமாவாசை, மாதப்பிறப்பு, அயனப்பிறப்பு, பிதா மாதா இறந்த திதி, அதற்கு முன்னாள் பின்னாள் இவற்றிலும் உபவாசமிருக்க விதியுண்டு. இது பிதிர்த்தேவதைகளைக் குறித்துச் செய்யப்படுவது.

 

ஆசாரம் கூற வந்தவிடத்து உபவாசம் கூறிய தேன் எனில், உபவாசமும் தீர்த்தயாத்திரையும் ஆரியாசாரங்களில் சிறந்தவை யென்று கூறிப் பாரதம் இவற்றையும் ஆசாரத்தில் சேர்த்தது. ஆகையால் இவைகளும் ஆரியாசாரமேயாம். சற்குலத்திற் பிறந்தவர்கள் இவ்வாசாரங்களையும் அவசியம் கைக்கொள்ள வேண்டுமென்று பாரதம் கூறுகின்றது.

 

தேவாசுரர்களுக்கு யுத்தம் உண்டாயிற்று. அப்போது தேவர்கள் தோற்றார்கள். அசுரர்கள் ஜயித்து மூவுலகங்களையும் கைக்கொண்டு எதிரின்றி அரசு புரிந்தார்கள். தேவர்கள் மனம் வருந்தி யாது செய்வது என்று ஆலோசித்தார்கள். அப்போது பிருகஸ்பதி பகவான் இந்திரனை நோக்கி அரசனே! ஒரு இரகசியம் சொல்கிறேன் கேளும். இந்த இரகசியம் ரிஷிகளிடத்தில் மாத்திரமிருக்கிறது. யாகயக்ஞங்கள் செய்யத்தக்க பொருள் இல்லாதவர்கள் தீர்த்தயாத்திரை செய்து ஆலயதரிசனமும் செய்தால் அநேக அசுவமேதம் இராஜசூயம் செய்த பலன் சித்திக்கும். அதனால் பாபங்கள் ஒழியும். பாபம் ஒழிந்தவனுக்கு எல்லாம் சித்தியாகும். அசுரர்களுக்கு இது தெரியாது. அவர்கள் பாபத் தொழிலையே செய்கிறவர்கள். அவர்களுக்குப் பாபம் ஏறும். அதனால் தவப்பலன் குறையும். அப்போது தீர்த் தயாத்திரையால் பாபமொழிந்த தேவர்கள் ஐயம்பெறுவார்கள் என்று கூறினார். அதுகேட்ட இந்திரன் மகிழ்ந்து தேவர்களுடன் தீர்த்தங்கள் தோறும் சென்று புலனை யடக்கிக் காமக்குரோதாதிகளை வென்று தீர்த்தயாத்திரை செய்தான். பிறகு பிரகஸ்பதியின் உத்தரவின் மேல் அசுரர்களை வென்று மூவுலகங்களையும் கைக்கொண்டு அரசு புரிந்தான். ஆதலால் ஏ யுதிஷ்டிரா! நீயும் தீர்த்தயாத்திரை செய். உன் பாபங்கள் ஒழிந்து உன் சத்துருக்களை வெல்வாயென்று நாரதமஹாமுனிவர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகப் பாரதங் கூறுகின்றது.

 

இந்தத் தீர்த்தயாத்திரை செய்கிறவன் மித போஜன நியமத்துடனிருக்க வேண்டு மென்று நூல்கள் கூறும். அந்த மிதபோஜனமென்பது தான் முன்னே சொன்ன உபவாசம். மத்தியான்னம் புசிக்கிறவரைக்கும் தண்ணீர்கூட அருந்தாமலிருந்து போஜனம் செய்வதும், போஜனம் செய்த பின்னும் இந்தவிரதத்தைக் கைக்கொண்டு இரவில் புசிப்பதும் ஒருவகையான உபவாசமென்றும், இந்த உபவாசம் தவறுவாராமல் ஆறுவருஷம் செய்கிறவன், ஆயிரம் அன்னங்களால் சுமக்கப்படும் தெய்வ விமானத்தில் ஏறிக்கொண்டு சொர்க்கம் போகிறான் என்றும், நியமந்தவறாமல் ஒருவேளை மாத்திரம் புசித்து மூன்று வருஷம் விரதம் இருப்பவன் மயில்களால் சுமக்கப்படும் விமானத்தில் ஏறிக்கொண்டு சொர்க்கலோகம் போவான் என்றும், ஆயுள் பரியந்தம் இந்த விரதங்களில் ஒன்றைத் தவறாமல் செய்துகொண்டிருப்பவன் பிரமலோகத்தை அடைந்து பின் மோட்சத்தை அடைவான் என்றும் பாரதத்தில் வியாசர் கூறினார். இது சதாசாரமென்று நூல்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதலால் இந்த உபவாசத்தையும் ஆசாரத்தோடு சேர்த்து எழுதினோம். இரண்டு வகையான இந்த விரதங்கள் பிறருக்கு இம்சையில்லாமலும், தன் சரீரசுகத்துக்குக் குறைவில்லாமலும் எல்லாராலும் அனுஷ்டிக்கத்தக்கதாதலால் அவ்விரண்டையுமே கூறினோம். இது வேதவாக்கியமாம். ரிஷிகள் இதனை அனுஷ்டித்தே சர்வ சித்திகளையும் பெற்றார்கள். அறிவுருவமான பராபரப்பொருளையுந் தரிசித்து வாழ்ந்தார்கள்.

 

இந்தத் தவம் கிருகஸ்தாச்சிரமத்தாரால் எளிதில் அனுஷ்டித்துப் பெரும்பயன் பெறத்தக்கது. இதைப்பற்றி நித்தியவிதியில் விவரித்து எழுதினோம். ஈண்டும் சிறிது கூறி அதை ஞாபகப்படுத்துகிறோம். இதுவும் ஆரியாசாரத்தில் சிறந்ததொன்றாதலால் என்க.

 

"அற்ற தறிந்தாங் கறப்பசித்துத் தீபனத்துக்
குற்றதறிந் துண்ண லுணவு.''

 

என்று தேரைய முனிவர் கூறினார். இதனையே தேவரும் திருக்குற ளில் மருந்து என்னும் அத்தியாயத்தில் கூறினார். அதாவது முன்னாள் உண்ட உணவு ஜீரணமானதை அறிந்து கொண்டபின், நன்றாய்ப் பசி உண்டாகும் போது, தன் ஜீரணசக்திக்கும், சுகத்துக்கும் ஏற்ற பதார்த்தங்களை உண்பதே உணவாம் என்றார். ''அறப்பசித்து'' என்றதனால் போஜனம் செய்யும் அளவும் ஒன்றும் புசிக்கக்கூடாது என்பது விளக்கப்பட்டது காண்க. "அற்றதறிந்து" என்றதனால் அகாலத்தில் புசிக்கப்படுவது தண்ணீர், வெந்நீரானாலும் பசியை மந்தப்படுத்தும் என்பது கூறப்பட்டது. அப்படியானால் நல்ல பசியுண்டாகாது. அதனாலே திருக்குறளுரையாசிரியர், பரிமேலழகர் "முன்னாள் உண்ட சோறு ஜீரணமானாலும் அவ்வுணவின் சக்தி வாசனா ரூபமாய் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது புசித்தால் அது விஷமாய் மாறும் என்பதைக் குறித்து அதனாலே தான் அறப்ப சித்து என்றார் " என்று கூறினார். ஆதலால் சரியான உணவு கொள்ளுமளவும் யாதொன்றையும் உட்கொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது காண்க.

 

உணவு உண்டல், பருகல், நக்கல், மென்றல் என்று நால்வகைப்படும். உண்டல் சோறு, பருகல் பாயசம் முதலான திரவபதார்த்தம், நக்கல் துகையல் பச்சடி முதலியன, மென்றல் கறி அப்பளம் வற்றல் வடை முதலியன. இவற்றுள் கறி முதலியவற்றையே மென்று தின்ன வேண்டும் என்றும், அன்னத்தை உருண்டையாகவே விழுங்க வேண்டும் என்றும், மென்று தின்றால் அஜீர்ணம், குன்மம் முதலிய நோய்களுக்கிடமாம் என்றும், மலச்சிக்கல் அவசியம் உண்டாகும் என்றும் வைத்திய நூல்கள் கூறுகின்றன. ஆதலால் அன்னத்தை ஒருபோதும் மென்று தின்பது கூடாது. இதன் விரிவை நித்திய விதி போஜனப் பிரகரணத்தில் கூறினோம். ஆண்டுக் காண்க. இதனால் ஆரியர் காலையில் எழுந்திருந்தது முதல் இரவில் தன்னை மறந்து நித்திரை செய்யுமட்டும் செய்கிற சன்மார்க்கச் செய்கை களெல்லாம் ஆசாரமென்றே கூறப்படும். ஆரிய வம்சத்தில் பிறந்தவர்கள் இந்த ஆசாரங்களில் வழுவாமல் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சரியான ஆரியர்களாவோம். ஆயுட்காலத்தை நமது சாஸ்திர ஆராய்ச்சியால் கழிக்க வேண்டும். உண்மையுணர்த்தும் ஆசிரியரைத் தேடியடைந்து அவர் மூலமாக இதிகாச புராண சாஸ்திரங்களின் உண்மைக் கருத்தைக் கேட்டுத் தெளிய வேண்டும். தெளிந்ததைச் சிந்தித்து உண்மையை உணரப் பிரயாசைப்பட வேண்டும். அந்நிய தேசத்தாரால் கண்டு அறியப்படாத அளவற்ற இரகசியங்கள் நமது சாஸ்திரங்களில் நிறைந்திருக்கின்றன வாதலால் அவற்றின் உண்மைகளைக் கண்டறிய முயல்வதும் ஆரியர்களுக்கு இன்றியமையாத கடமையேயாம்.

 

ஆசாரம் முற்றிற்று.

 

 

இலௌகிகம் - பொருள்.

 

இலௌகிகம் என்பது உலக சம்பந்தமானது என்று பொருள் தரும். அதாவது உலக வாழ்க்கை இனிது முடிதற் பொருட்டுச் செய்யப்படும் தொழில்களாம். அங்ஙனமாயின் வைதிக நெறியோடு இதற்குச் சம்பந்தம் யாது எனின் நமது இலௌகிகங்களும் வைதிகநெறிக்கு மாறுபடாமலே செய்யப்படவேண்டு மாதலால் வைதிகத்துக்கும் இலௌகிகத்துக்கும் நெருங்கின சம்பந்தமுண்டு. இலௌகிக நெறிதவறாமல் ஒருவன் நடப்பா னானால் அவன் சொர்க்காதிபோக உலகங்களைப் பெறுவான் என்று ஸ்மிரு தியாதி நூல்கள் கூறுகின்றன. ஆதலால் வைதிகத்துக்கு விரோதமாகாத உலக வாழ்க்கையே இலௌகிகமென்று நூல்கள் கூறுகின்றன. வைதிகத்தால் இலௌகிகமும், இலௌகிகத்தால் வைதிகமும் சிறந்து விளங்கி நற்பயன் தரும். ஆதலால் நமது ஆரியசித்தாந்தங்கூறும் இவ்விரண்டும் சன் மார்க்க சீலர்களால் அனுஷ்டிக்க வேண்டுவது அவசியமாம்.
     

இலௌகிகம் அறம் பொருள் இன்பம் என்று மூன்று வகைப்படும். இவற்றை தர்மம், அர்த்தம், காமம், என்று வடநூல் கூறும். இவற்றுள் தர்மம் முன்னரே விரித்துக் கூறப்பட்டது. காமம் என்பதும் ஆண்டுக் கூறப்பட்டது. பொருள் என்பது தான் கூறாதொழிந்து நின்றது. ஆதலால் அதனைச் சிறிது கூறுவோம்:


 ''அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
 கிவ்வுலக மில்லாதி யாங்கு''


என்பதனால் உலகானுபவத்துக்குப் பொருள் இன்றியமையாததென்று தேவர் விளக்கியருளினார். அன்றியும் பொருளில்லையானால் தர்மவிருத்தி யும் எய்தாதாம். இன்பமும் கிட்டுவது அருமை. அறத்துக்கும் இன்பத்துக்கும் பொருளே மூலமாம். அறமின்றிப் பொருள் கிட்டாது. பொருளின்றி அறம் விருத்தியாகாது. பொருளால் அறம் செய்யப்படுகின்றது. அவ்வறம் இம்மை மறுமைப் பயன்களை அளிக்கின்றது. ஆதலால் அறத்துக் கும் இன்பத்துக்கும் காரணமான பொருளை ஏராளமாக ஈட்டுவதே தகு தியாம். பொருளின்றித் தேவபிதிர்க் காரியங்களும் நடைபெறாவாம். இப்போது கூறியவற்றால் வைதிகத்துக்கும் இலௌகிகத்துக்கும் அதிக சம்பந்த முண்டென்பது புலப்படும். இத்தகைய சிறப்புவாய்ந்த பொருளை யீட்டு மார்க்கமும் சிறிது கூறுவாம்:

 

அறநெறிக்கு மாறுபடாமல் ஈட்டும் பொருளே இம்மை மறுமைப்பயன் களைத்தரும். பாபத்தால் வந்த பொருள் உலகத்தில் துன்பத்தையும் மறு மையில் நரகத்தையும் தரும். ஆதலால் தர்மநெறிதவறாமலே பொருள் சேகரிக்க வேண்டும். அந்தப்பொருள் உண்டாகும் மார்க்கங்களை ஐந்துவகையில் அடக்கி நூல்கள் கூறுகின்றன. அவையாவன: வித்தை, கிருஷி, வர்த் தகம், சிற்பம், சேவகாவிருத்தி என்பனவாம்.

 

இவற்றுள் வித்தை என்பது - "எண்ணெழுத்திகழேல்'' என்றும், ''எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'' என்றும் அன்னையாரால் புகழ்ந்து கூறப்பட்ட கலவியாம். இக்கல்வியில் இலக்கண இலக்கியங்களும் கணிதமும் அடங்கும். இவற்றைப் பிறருக்குப் போதித்துச் சம்பாதிப்பது பாபமற்ற தொழிலாம். இதனால் சம்பாதிக்கப்படும் பொருள் இம்மை மறு மைப்பயன்களைக் கொடுத்து அதன் மூலமாக உலக ஆசையின் வேரை யறுத்து மோட்சத்தையும் கொடுக்கும். அன்றியும் இவற்றைக் கற்றுக் கொள்பவர்களும் நற்கதி பெறுவார்கள். இந்தக்கல்வி அஞ்ஞானத்தை ஒழிப்பதற்கும் மெய்ஞ்ஞானத்தைப் பெறுவதற்கும் காரணமாய் நிற்றலால் இது கற்பவர்களையும், கற்றுக் கொடுப்பவர்களையும் நற்கதி பெறுவிக்கும். ஆதலால் வித்தியாதானத் தொழிலை மிகவும் விசேஷமென்று நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன. "எண்" என்றதில் கணிதம், ஜோதிஷம், பூகோள, ககோள சாஸ்திரங்களும் அடங்கும். இதைக் கற்பதனால் பல அண்டங்களின் இயல்பும் அவற்றை அடையும் மார்க்கமும் உணரப்படும். இதில் நவக்கிரகங்களினியல்பும் அவற்றுக்குரிய மந்திர யந்திரங்களும் பீஜாட்சரங்களும் விளக்கப்படுதலால் இந்தச் சாஸ்திரம் சிலாக்கியமுடைய தென்பதற்குத் தடை யில்லை. ''எழுத்து' என்ற இலக்கண விலக்கியங்களில் அறநூல், பொருணூல், இன்பநூல், வீட்டு நூல்கள் என்பனவெல்லாம் அடங்குதலால் இதனைக் கற்பவர்கள் இகபரபோகங்களையும் வீட்டையும் பெறுவார்கள். ஆதலால் இது சர்வசிலாக்கியமுடைய தென்பதில் ஒருவருக்கும் ஆக்ஷேபனை யிராது. இதுபற்றியே,


 "எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர
 மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
 முட்டறுத்த மேலோன் முதனூற் பொருளுணர்ந்து
 கட்டறுத்து வீடு பெறும்''


என்று கூறினார். ஒருவன் இத்தகைய சிறப்புவாய்ந்த கல்வியில் வஞ்சனை யின்றித் தனக்குத் தெரிந்ததைப் பிறர்க்கு உபதேசித்துப்பெறும் பொருள் பாபமற்றது. ஆதலால் இந்தத் தொழிலைச் செய்து ஜீவிப்பதும் இதைக் கொண்டு தானதர்மங்களைச் செய்வதும் நற்கதி பெறுவதற்கு ஏதுவாம் என்பதில் ஐயமில்லை. இது சிறந்த மார்க்கமாம். ஆயினும் இது பூர்வபுண் ணிய முடையவர்க்கே யன்றி எல்லாராலும் செய்வது கூடாது.
 

இரண்டாவது கிருஷி. - கிருஷி என்பது பூமியை உழுது பண்படுத்திப் பலவகைத் தானியங்களைப் பயிரிட்டு ஜீவிப்பதாம். இத்தொழில் தனக்கேயன்றித் தன் தேசத்துப் பிரஜைகளுக்கும் அந்நிய நாட்டாருக்கும் பயன் தருவதால் "உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர், பழுதுண்டு வேறோர் பணிக்கு.'' என்று அன்னையாரால் புகழ்ந்து கூறப்பட்டது. அவரே, "பூமி திருத்தியுண்'' " நெற்பயிர் விளை'' " தொழுதூண் சுவை யினுழுதூணினிது'' என்றும் கிருஷித்தொழிலை அடிக்கடி புகழ்ந்தார். யாது காரணம் பற்றி எனின், ஏனையதொழில்களுக்குப் பற்பல இடையூறு கள் உளவாம்; கிருஷித்தொழிலோ முயற்சிக்குத் தக்க பயனைக் கொடுத்தே தீரும். அன்றியும் பிறதொழில் செய்வார் அந்நிலையிலுயாந்தோருடைய தயவையும் தாட்சண்யத்தையும் எதிர்பார்க்க வேண்டும். அதனால் சுதந்திர ஹானியுண்டாகும். சுதந்திரமில்லாதவன் மனிதனாக மாட்டான். அதனால் வெகுகுறைவு நேரிடும். கிருஷித்தொழில் உடையான் சுதந்தரனாய், ஒரு வரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மற்றவர்கள் எல்லாரும் அவன் கையையே எதிர்பார்க்க வேண்டியவர்களாவார்கள். சுதந்தரமுடைமை மோட்சாநந்தத்தை ஒக்கும். ஆதலால் கிருஷித்தொழில் மிகவும் சிறந்ததே யாம். ஆயினும் நிலத்தை உழுவதனாலும், எருமுதலிய இடுவதனானும், பயிர்க்குத் தண்ணீர் பாய்ச்சுவதனாலும் அநேகஜந்துக்கள் மடியும். அதனால் அஞ்ஞான கிருதபாபம் (அறியாமற் செய்த பாபம்) உண்டாகும். தானியத்தைக் களத்தில் அடிப்பதனாலும் இந்தப்பாபம் உண்டாகும். இந்தப்பாபங்கள் களதானத்தினாலும், ஏழைகளுக்குப் பிட்சை யிடுவதனாலும், அதிதியாராதனையாலும் நிவிருத்தியாகும். தேவபிதிர்க்களை யாராதிப்பதனால் சகலபாபங்களும் தீரும். இவ்வாறு பயிரிட்டுத் தன்கடமையைச் செய்து ஜீவிப்பவன் இகலோக பரலோக மிரண்டிலும் பெருமை பெறுவான். ஆதலால் வித்தியாதானத்துக்கு அடுத்த உத்தமமான சிறந்த தொழில் கிருஷி என்று புகழப்படும். இத்தொழிலால் வரும் பயனும் உத்தமமேயாம்.

 

மூன்றாவது வர்த்தகம் - இது வாணிபம் வியாபாரம் என்கிற பெயர்களையும் பெறும். இத்தொழிலால் ஏராளமாகப் பொருள் சம்பாதிக்கலாம். ஆயினும் இத்தொழிலாளர் பொய் பேசியே தீரவேண்டும். அன்றியும் முதலாகப் பொருளை வைத்து அதனால் பற்பல பண்டங்களையும் வாங்கி மேலே இலாபம் வைத்து விற்றுப் பொருள் சம்பாதிக்க வேண்டும். பண்டங்களின் விலை காலந்தோறும் வேறுபடுதலால் சில சமையம் நஷ்டமும் நேரிடும். புத்தியுள்ள வியாபாரிகள் அதனைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். சிற்சில சமையங்களில் முதலையே யிழந்து விட நேரிடும். இதனால் பல கஷ்டங்கள் உண்டாகும். வெயில், மழை, குளிர் முதலியவற்றைப் பாராட்டக் கூடாது. பாராட்டினால் சரியான இலாபம் கிடைக்காது. சில சமையங்களில் உணவு கொள்ளவும் நேரமில்லாமற்போகும். இதனால் வியாபாரி சுதந்தரனேயானாலும் சுதந்தரம் போலவே கஷ்டப்பட நேரிடும். இவ்விடையூறுகணீங்கித் தெய்வானுகூலத்தால் வாணிபம் சரியாக நடந்தேறினால் வர்த்தகமும் சிறந்ததொழிலேயாம். இதனால் வரும் பாபங்கள் அதிதி பூஜையாலும், தேவபிதிர் ஆராதனையாலும், தானதர்மங்களாலும் தீரும். பொருளை வட்டிக்குக் கொடுத்துச் சம்பாதிப்பதும் ஒரு தொழிலாம். இது வாணிபம் செய்யும் சக்தியில்லாதவருக்கே சிறந்தது. ஆனாலும் இத்தொழிலை நூல்கள் மிகுதியும் இகழ்கின்றன. கற்றுணர்ந்த பெரியோர்களும் நிந்திக்கின்றார்கள். இத்தொழில் நரகத்தையும் தரும் என்பது நூல்களின் கருத்து. ஆதலால் இதை ஒழித்துப் பொருள் முதல் வைத்துப் பண்டங்களைக் கொண்டு இலாபத்துக்கு விற்று ஜீவிக்கும் வியாபாரம் சிறந்ததொழிலாம்.

 

நாலாவது சிற்பம் - இதில் கட்டிடம் அமைத்தல், ஆலயம் செய்தல், விக்கிரகம் வார்த்தல், சித்திரமெழுதல், சித்திரப் பதுமைகள் செய்தல், சூத்திரங்கள் செய்தல், ஆபரண வேலைகளும் மரவேலைகளும் புரிதல் ஆகிய எல்லாம் அடங்கும். இத்தொழிலால் ஜீவிப்பது நல்லது. ஆயினும் இத்தொழிலாளர்களுக்குச் சில சமையம் வேலை கிடையாமற்போகும்; செய்த பொருள்களை ஈனக்கிரயத்துக்கு விற்கும்படியும் நேரிடும்; சிலகாலம் தொழிலே யில்லாம லிருக்கவும் சம்பவிக்கும். இத்தொழில் நான்காவதாக நியமிக்கப்பட்டது. சில சமையம் இத்தொழிலில் திரண்ட திரவியம் கிடைப்பது முண்டு. இத்தொழிலாலும் ஜீவிக்கலாம்.

 

ஐந்தாவது சேவகாவிருத்தி - அதாவது உத்தியோகம் செய்தல். உத்தியோகத்தில் பொருள் நன்றாகச் சம்பாதிக்கவும் கூடுமானாலும், உத்தியோகஞ் செய்பவன் முற்றும் சுதந்தரமில்லாதவனே யாவான். சுதந்தரஹீன முடைமை நரகவேதனையை ஒக்கும். இதனை "சுவானவிருத்தி'' என்று ஸ்மிருதிகள் இகழும். சுவானவிருத்தி என்றால் நாய்த்தொழில் என்பது பொருள். நாயானது எஜமானனுடைய மனம் கோணாமல் நடந்து அவனிடும் சோற்றை யுண்டு மகிழும். அதுபோலச் சேவகாவிருத்தியி லிருப்பவனும் தன் எஜமானனுடைய சமையமறிந்து, அவன் தயவுக்குக் காத்திருந்து ஊழியம் செய்து ஜீவிக்க வேண்டும். ஆதலால் மாதத்துக்கு ஐயாயிர ரூபா சம்பளம் பெறுவதானாலும் அது இழிவானதே. சேவகனுக்கு நல்ல நாள் விசேஷநாள் கிடையாது. அவன் தன் குடும்பத்துக்கு அவசியமான காரியத்தை நினைத்த உடனே முடிக்க முடியாது; நேரம் தவறாமல் செல்ல வேண்டும்; அன்றன்று செய்ய வேண்டிய வேலையைச் செய்துவிட்டே வீடு வரவேண்டும். தாய் தகப்பன் பெண்டாட்டி பிள்ளைகள் வியாதியினால் கஷ்டப்படும் போது அவர்களைப் பராமரிக்கவும் அவனுக்கு நேரமிராது. ஆதலால் சுவானவிருத்தியாகிய உத்தியோகத்தால் ஜீவிப்பது நன்மார்க்க மாகாது. அவன் தேவ ஆராதனையையும் அலட்சியம் செய்ய நேரிடும். ஆதலால் சேவகாவிருத்தி ஈனமுடையது. ஆயினும் எவ்வகையிலாவது பொருள் சம்பாதித்துக் குடும்பபோஷணை செய்யவேண்டும். இத்தொழில் சுதந்தரமற்றதேயன்றிப் பாபத்தொழிலல்ல. ஆயினும் எஜமானனது தயவைப் பெறுவதற்காகப் பொய் பேசுதலும், பிறர்க்குத் தீங்கிழைத்தலும் ஆகிய பாபச்செய்கைகள் செய்ய நேரிடும். இத்தொழிலால் பொறாமை முத லிய துர்க்குணங்க ளுண்டாகும். இந்தக் குற்றங்கள் நேரிடாமல் தன் தொழிலை வஞ்சனையின்றிச் செய்து சன்மார்க்க நெறிகடவாமல் நடந்தால் அவன் பொருளும் அறமியற்றுதற் குரியதாய் நற்பயனைத்தரும். ஏழைகளுக்குப் பிட்சையிடுதல், அதிதிகளை உபசரித்தல், தேவபூஜை செய்தல் இவற்றால் பாபம் ஒழியும். தன்வரும்படியில் நாலில் ஒருபாகம் தர்மத்தில் செலவழிய வேண்டும்.

 

கூறிவந்த இத்தொழில்களில் தன் சக்திக்குத் தக்கதொன்றைக் கைப் பற்றி நடந்து பொருள் தேடவேண்டும். தன்குலத்துப் பெரியோர் எந்தத் தொழில்களைப் பரம்பரையாகச் செய்து வந்தார்களோ அந்தத் தொழில் களையே செய்வது மிகவும் உத்தமம். "உத்தமம் குலவித்யானாம் மத்திமம் பிதிரார்ஜிதம், அதமம்பிராதுர் வித்தஞ்ச ஸ்திரீவித்தம் அதமாதமம்.'' என்றதனால் தன் குலவித்தையால் சம்பாதிப்பதே உத்தமமாம். எவ்வகையி லாவது பொருளைச் சம்பாதித்து இகபரசாதகமான தர்மகர்மங்களைச் செய்ய வேண்டும் என்பது நூல்களின் கருத்து. இப்பொருளீட்டல் என்பதை விரித்து எழுதினால் இது மிகவளருமாதலால் சுருக்கமாகவே எழுதப்பட்டது. இதைக் கொண்டு விரிவாய் உணர்ந்து கொள்வது எளிதாம்.


 இலௌகிகம் - பொருள் - முற்றிற்று.

 

 

ஆரியாசாரம் - செல்வத்தாலாம் பயன்.

 

"சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.''

"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.''

முன்னர் நித்தியவிதியில் தர்மப்பிரசம்சையில் அதிதிபூசை முதலியன கூறப்பட்டன. தானம் வாங்குதற்குரிய சிஷ்டர்களும் அங்குக் கூறப்பட் டார்கள். அவற்றுள் அடங்காத சுற்றத்தாரை யாதரித்தலையும், சுற்றத்தா ரல்லார்க்கும் உபகாரம் செய்வதையும் ஈண்டுச் சிறிது கூறுவாம். சுற்றத்தார் என்பது பந்துவர்க்கங்களே யாவார். சிநேகபந்தத்தாற் கட்டுப்பட்டுச் சுற்றத்தாரைப்போல் ஒழுகு மியல்புடையாரையுங் கொள்ளலாம். “கிளையுட்
கழிந்தாரை யெடுக்க'" என்ற நீதிவாக்கியமும், பந்துவர்க்கத்தாரையே குறிக்கும். இவருள் தாயாதிகளும் அடங்குவர். செல்வமுடையவனா யிருப்பவன் தன்சுற்றத்தாரை முதலில் காப்பாற்றவேண்டும். இது பற்றியே ஸ்மிருதிகளிலும் ஞாதியர் மாமன், சகோதர சகோதரிகளையும் ஆதரிக்க வேண்டு மென்பது கூறப்பட்டது. மறு கோத்திரத்தில் விவாகம் செய்து கொடுக்கப்பட்ட புத்திரிகள் சகோதரிகள் எல்லாரும் சுற்றத்தாருள் அடங்குவார்; தான் பெண் கொண்ட வம்சத்தாரும் இதிலடங்கியவர்களே. இவர்கள் எல்லாரையும் துன்பப்படாதபடி உபசரித்துக் காப்பதே செல்வத்துக் கழகாமென்க.

 

பொருள் தேடும் மார்க்கத்தில் கூறப்பட்ட தொழின் முயற்சிகளில் எதையாயினும் ஒன்றைக் கைப்பற்றித் தர்மநெறிதவறாமல் பொருளீட்டிய ஒருவன் தன் சுற்றத்தாரைத் தழுவி யாதரிப்பதையும் தன் கடமையாகக் கொண்டு ஒழுகல் வேண்டும். தன் பந்துக்கள் வறுமையினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற போது அவர்களை அலட்சியஞ் செய்து பிறர்க்கு உபகாரம் செய்கிறவனும், தன் ஊரில் படித்தவர்களும் யோக்கியர்களும் இருக்கையில் அவர்களை விட்டுப் பிறர்க்குத் தானங்களைச் செய்கிறவனும் நரகத்தை அடைவார்களென்று மனுதர்மாதி நூல்கள் கூறுகின்றன. ஆதலால் முதலில் தன் சுற்றத்தாரில் வறுமையுற்று வருந்துபவர்களுக்கு உபகாரம் செய்து பிறகே மற்றவர்களுக்கு உபகாரம் செய்யவேண்டும். தன் சுற்றத்தாரை எப்பாடுபட்டாவது முன்னுக்குக் கொண்டுவந்து அவர்களை மேன்மைப் படுத்த வேண்டும். இது புத்தியுள்ளவனாய்ப் பொருளீட்டுபவனுக்கு முக்கியமான தருமமாம். இதுபற்றியே,

 

“ஙப்போல்வளை'” என்று அன்னையார் கூறிச் சுற்றந்தழுவுதலை விளக்கியருளினார். அதாவது 'ங்'' என்ற மெய்யெழுத்தானது தனது முயற்சியால் தான் மொழிக்கு முதலாகுந் தன்மையை அடைந்து தன் இனமாகிய ஏனைய உயிர்மெய் யெழுத்துக்களை மேன்மைப்படுத்தி, ஙகர உயிர்மெய் வருக்க வரியினின்றும் விலக்கப்படாமல் நிலைநிறுத்தி, ஙகரமும், மொழி க்கு முதலா மேன்மையைத்தானும் அடைந்து சிறப்புற்றது போலத் தான் சிறப்படைந்து தன் சுற்றத்தாரை மேன்மைப்படுத்த வேண்டும் என்பது இச்சிறிய வாக்கியத்தின் கருத்தாமென்று கற்றறிந்தபுலவர் கூறுகின்றனர். ஆதலால் பிரயாசப்பட்டு முயற்சி செய்து தானும் முதன்மை பெற்றுத் தன் சுற்றத்தாரையும் பெருமைப்படுத்துவதே அறிவுள்ள ஆடவனுக்கு அழகா மென்க.

 

இவ்வாறின்றி இந்த வாக்கியத்தை மாற்றி'ஙப்போர்விளை'” என்று கொண்டு, இது சேனாதிபதியை நோக்கிக் கூறப்பட்ட தென்றும், சேனாதி பதியானவன் சேனைகளுக்கு முந்தியும், பிந்தியும் நின்றும் யுத்தம் நடத்தக் கூடாதென்றும், ஙகரமானது மொழிக்கு முதலிலும் கடையிலும் வாராமல் மொழிக்கு நடுவில் மாத்திரம் வருவது போலச் சேனாபதியானவன் தன் சேனைகளுக்கு நடுவிலிருந்து கொண்டு யுத்தம் நடத்தவேண்டு கூறுவர் சிலர். இது பொருந்தாத உரையேயாம். ஏனெனில் இவ்வாறு யுத்தம் செய்வது சேனாபதிக் கியல்பாகாது.

 

எங்ஙனமென்னில், அதிரதர், மஹரதர், சமரதர், அர்த்தரதர் எனச் சேனாதிபதிகளை நான்குவகையாகப் பகுத்துத் தன்னையும் தன் சேனைகளையும் தனக்குப் படைத்துணையாக வந்தவர்களையுங் காப்பாற்றிக்கொண்டு யுத்தம் செய்து எதிரிகளை ஜயித்து வெற்றிகொள்பவ னென்று கூறும் வீர ரிலக்கணத்தோடு மாறுபடுதலா லென்க. அர்ஜுனன் பக்கத்துணையில்லா தவனாய்ச் சென்று காலகேய நிவாதகவசரென்கிற மூன்றுகோடியே அறு பதினாயிரம் தானவரோடும் போர் செய்து வெற்றியடைந்தா னென்றும், விராடபுரத்தில் உத்தரகோகிரஹணச் சண்டையில் ஒன்று மறியாத உத்தரனைச் சாரதியாகக் கொண்டு யுத்தகளம் புகுந்து பீஷ்ம துரோணர்களையும் கர்ணன் முதலானவர்களையும் தானொருவனாகவே வென்று ஜயங்கொண்டா னென்றும், பதினான்காம் நாளின் பாரதப்போரில் துரோணரும், கிருதவன்மன் முதலிய வீரரும் தூசிமுனையில் (படையின் முன்னணியில்) முன் நின்றார்களென்றும், பாரதங் கூறுகின்றது. கரதூஷ சங்காரகாலத்தில் இராமர் இலக்ஷ்மணரைப் பின்னாக நிறுத்திப் பதினாலாயிரம் பேர்களையும் தாமொருவராகவே யெதிர்த்தாரெனவும், மூலபல சங்காரகாலத்தில் சகல படைகளையும் தம்பியையும் பின்னாக நிறுத்தித் தாமொருவராகவே கணக்கிடப்படாத சேனையுட்புகுந்து யுத்தம் செய்தார் எனவும் இராமாயணமுங் கூறுகின்றது. இதனால் சேனாபதி சேனையின் மத்தியிற் பதுங்கி நின்று போர் செய்வது சுத்த வீரரிலக்கணமல்ல வென்று புலப்படுகின்றது. சேனாதிபதிகள் சேனையின் நடுவிலும் முன்னும் பின்னும் சமையம் போல் நின்று போர் செய்ய வேண்டும் என்பதே நமது யுத்ததந்திர விதியாம்.

 

இங்கிலாந்து தேசத்திலும் மூன்றாம் எட்வர்ட் என்ற அரசன் பிராஞ்சில் படையெடுத்துச் சென்றபோது "கிரிஷி" என்னுமிடத்தில் பதினாறு வயதுள்ளவனும் இளவரசனுமாகிய பிளாக்பிரின்ஸ் என்பவனைத் தனியாக்கிச் சண்டை செய்ய விடுத்துத் தான் ஒரு மலையின்மேலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தானென்றும், இளவரசனாகிய சேனாபதி தன் கத்தியை உருவிக்கொண்டு பகைவர் சேனை நடுவிற் புகுந்து யுத்தம் செய்கையில் பகைவர் படைத்தலைவரில் பலர் அவனைச் சூழ்ந்துகொண்டு கொடும் போர் புரிகையில், சில இங்கிலீஷ்காரர்கள் அரசனிடம் சென்று குமரனுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டபடியால் தாமே நேரில் வந்து படைகளை நடத்தவேண்டு மென்று வேண்டிக் கொண்டபோது அரசன், இன்றைய தினம் யுத்தம் அவனுடையதே; அவனே வெற்றிக்கொள்ள வேண்டும்; நான் வரமாட்டேன் என்று சொல்ல இதைக் கேட்ட இளவரசன் மஹா உற்சா கத்தோடும் வீராவேசத்தோடும் யுத்தம் செய்துகொண்டான் என்று இங்கிலாந்து தேசசரித்திரங் கூறுதலால் அந்நிய நாட்டாருக்கும் அது கருத்தல்லவாம். இதுபோலச் சேனாபதிகள் தாமே யுத்தம் செய்த சரித்திரம் பிற தேசத்திலும் அளவில்லாதன உண்டு. இவ்விஷயம் ரைஹவுஸ் பிளாட், மிஸ்டரீஸ் ஆவ் லண்டனிலுங் காணலாம். சேனாதிபதி முன்னும் பின்னும் நிற்காமல் நடுவில் மறைந்து யுத்தம் செய்தல் தற்காலத்துப் பீரங்கி யுத்தக்காரர்களுடைய கொள்கையே தவிர, வாளாலே ஜீவிக்கும் யுத்த வீரர்களிலக்கணமல்லவாம். ஆதலால் அதனை அன்னையார் இவ்விடத்து வியந்து கூறிப்
பிள்ளைகளுக் குபதேசிக்க மாட்டார்.

இனி ஒருசாரார் மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வருமியல் பில்லாத ஙகரமெய் வல்லினத்தின் முதன்மை பெற்ற ககரமெய்யை அண்டிச் சீவிப்பது போலச் சக்தியற்றவன் வல்லமையுள்ள பிரபுக்களை யண்டிப் பிழைக்க வேண்டுமென்பதே யிதன் கருத்தென்றும், அதனால் சக்தியில்லாதவர் ஜீவிக்கும் முறைமை கூறவெழுந்த தென்றுங் கூறுவர். இதனை "ஒரு வனைப்பற்றி யோரகத்திரு'' என்ற வாக்கியமும் விளக்குமென்பர். இதுவும் அனுசிதம். பின்யாதெனிற் கூறுதும்:

 

ஙகர உயிர்மெய் யெழுத்துகள் பனிரண்டில் ஒன்றாயினும் மொழிக்கு முதலில் வருவதில்லை யாதலால் அவற்றை நெடுங்கணக்கினின்றும் எடுத்து விடலாம். ஏனெனில் அவை பயன்படுவதில்லை யாதலால், ஙகரமெய் ஒன்றே போதுமானது. தன்னினமாகிய உயிர்மெய் வர்க்கம் மொழிக்கு முதலாகாமையால் இழிவடைந்ததை யறிந்த நகரம் அவ்விழிவை நீக்கிக் கொள்ள வெகுமுயற்சி செய்து மொழிக்கு முதலாய்த்தானும் மேன்மையை யடைந்து தன்னினத்தையும் மேன்மைப் படுத்திற்று. அது எவ்வாறென்னில் கூறுதும்:

 

எழுத்திலக்கணங் கூறும் இலக்கண நூலே யதற்குப் பிரமாணம். மொழிக்கு முதலாமெழுத்துக்களைக் கூறும்போது,


 "பன்னீருயிருங்கசத பமவய
 ஞங் வீரைந்துயிர் மெய்யுமொழிமுதல்''

 

என்று கூறிய சூத்திரத்தினால் ஙகரமும் ஓரிடத்து மொழிக்கு முதலாமென்பது பெறப்பட்டது. அது எவ்வாறு மொழிக்கு முதலாம், பிரத்தி யட்சத்தில் காணும் சொற்களில்லையே யெனில், அது கூறுதற்கே எழுந்தது,


 ''சுட்டியா வெகர வினாவழியவ்வை
 ஒட்டிஙவ்வு முதலாகும்மே''


யென்ற சூத்திரம். இச்சூத்திரத்தின் கருத்தை யொட்டியே யிச்சிறு வாக்கியமும் சுற்றந்தழால் என்பதை விளக்கவெழுந்ததாம்.

 

மொழிக்கு முதலாம் வன்மையற்ற ஙகரம் சுட்டெழுத்துக்களையும், வினா வெழுத்துக்களையும் அடுத்துத் தெய்வத் தன்மையுள்ள அகரவுயிரோடு கூடி, அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் எனவும், யாங்ஙனம், எங்கனம் எனவும் மொழிக்கு முதலாஞ் சிறப்பினைத்தான் அடைந்து, ஙகரமெய்யும் மொழிக்கு முதலாம் என்னும் பெருமையையும் தன்னினத்துக்குத் தந்து மேன்மை பெற்றது.

 

      சுட்டு வினாக்களை விலக்கிவிட்டால்'ஙனம்” என்னும் சொல்லுக்குப் பொருளில்லை. அவற்றோடு கூடி நின்றபோது இடம், படி என்னும் பல சொற்பொருளையும் தரும். அப்போது அப்படி, அவ்விடம் என்னும் பொருள்படும். இவ்வாறு சுட்டு வினாக்களையும் அகரவுயிரையும் அடுத்துத் தானும் ஒரு சொல்லுக்கு முதலாய் வந்தமையால் ஙகர உயிர்மெய்கள் நெடுங்கணக்கில் நிலைபெறலாயின என்பது காண்க.

இதனால் ஒருவன் சத்தியற்றவனானால் தெய்வத்தையும் உலகத்தில் உபகரிப்பதற்குரிய பிரபுக்களையும் அடுத்துத் தானும் மேன்மையடைந்து தன் சுற்றத்தாரையு மேன்மைப்படுத்த வேண்டு மென்பது புலப்படுகின்றது. சுட்டு வினாக்கள் பிரபுக்களுக்கு உபமானமாயும் அகரவுயிர் தெய்வத்துக்கு உபமானமாயுங் கூறப்பட்டன. அகரம்தெய்வத்துக்கு உபமானமாவ
தெவ்வா றென்னில்,


 "அகர முதல வெழுத்தெல்லா மாதி
 பகவன் முதற்றே யுலகு.''


 “அகரவுயிர் போல அறிவாகி யெங்கும்
 நிகரிலிறை நிற்கு நிறைந்து''

என்பனவற்றால் அகரம் தெய்வத்துக்குவமிக்கப்பட்டது காண்க.

 

இங்ஙனம் ஙகரம் தெய்வம்போலும் அகர வுயிரைத் தனக்கு உயிராகக் கொண்டு, சுட்டு வினாக்களை யடுத்துத் தான் மொழிக்கு முதலாய்த் தன்னையும் தன்னினத்தையும் மேன்மைப் படுத்தியது போல, மனிதனும் தெய்வத்தை இதயத்திலிருத்திச் சிந்தித்து அரசன் முதலிய தகுந்து விளங்கும் பிரபுக்களை யடுத்துத் தன் சக்திக்கேற்ற தொழிலைச் செய்து தான் செல்வ வந்தனாய்ச் சிறந்து விளங்கி அதனால் தன் சுற்றத்தாரையும் வருந்தாமல்
காப்பாற்றி மேன்மைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தலே செல்வம் பெற்றதனாலாகும் பயனென்பது போதரும். இதன் பொருளை விரித்தெழுத இச்சிறுவியாசம் மிகவும் விரியுமாதலால் இதனை இம்மட்டோடு சுருக்கி முடித்துவிடுவோமாக. இன்னும் சமையம் நேருமாயின் ஆண்டும் சிறிது விரிப்போம்.

 

அகாம் சிவத்துக்கு ஒப்பாகக் கூறப்படுவது எவ்வாறெனின், அது கூறுவாம். பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹேசுவரன், சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவம் எனப் பரசிவத்துக்கு ஒன்பது வடிவங்களுள. அவற்றுள் சிவம் தன் இயற்கை நிலை திரியாமல் விகாரமற்று நிற்பதே பரப்பிரமம் என்று கூறப்படும். அந்தச் சிவம்பிரபஞ்ச அபிவிருத்தியின் நிமித்தம் சர்வ வியாபகமாய் நிற்கும் அவசரம் சத்தி என்னப்படும். இந்தச் சத்தி நாதத்தை வெளிப்படுத்தும். நாதம் விந்துவைத் தோற்றுவிக்கும். இதனை நாதப்பிரமம் என்றும் கூறுவர். இதுவே சுத்தமாயையாம். இதற்குச சொரூபம் ஒலியேயாம். இதுவே ஐம்பத்தோரட்சரங்களாயும் சொற்களாயும் வேதாதி கலைகளாயும் விரிந்தது. இதற்குச் சப்த பிரபஞ்சம் என்று பேராம். இதன் அதோபாகமே, அசுத்தமாயையாம். அதினின்று சராசர பிரபஞ்சபேதங்க ளுண்டாயின. சதாசிவ மகேசுவரர்கள் இந்தச் சுத்தமாயையில் சொரூபம் கொண்டே அடியார்களுக்குக் காட்சியளிப்பதுமாம். ஆதலால் சத்தம் வேறாகாமல் சிவசொரூபமேயாம். இதனாலேயே மஹாதேவன் நாதவடி வனென்று நூல்கள் கூறுகின்றன.

 

இந்தநாதம் வர்ணசொரூபங் கொள்ளும்போது வரிவடிவம் ஒலி வடிவ மென்று இரண்டு சொரூபங்களா யிருக்கும். அவற்றுள் வரிவடிவம் யாவர் கட்புலனுக்கும் புலப்படும்படி ஏட்டில் எழுதப்படுவதாம். இவ்வரிவடி வெழுத்துக்கள் பாஷைகள் தோறும் உருத்திரிந்து புலப்படும். ஒலிவடிவம் எல்லாப் பாஷைகளிலும் ஒரே தன்மையதாய் விகாரப்படாமலிருக்கும். அவ்வப்பாஷையோர் உச்சரிக்கும் முறையால் எழுத்துக்கள் வேறுபட்டாற் போற் காணப்படினும் சொற்களில் வேறுபடாமலே உச்சரிக்கப்படும். இதனால் ஒலிவடிவமாகிய நாதபிரம்மம் எவ்விடத்தும் தன்னிலை திரியாமல் ஒரே தன்மையாக நிறைந்து நிற்பதை யணரலாம். இவற்றை மிருகபட்சிகளிடத்தும், ஊர்வன விடத்தும் ஊகித்து அறிந்து கொள்ளலாம். சராசர பேதங்கள் எல்லாவற்றிலும் இந்த நாதம் வியாபித்து நிறைந்தேநிற்கு மென்பது கண்டு கொள்ளலாம்.

 

இனி இந்தநாதப் பிரமத்தின் இயற்கைச் சொரூபமாவது " அ'' என்பதேயாம். எப்படிப் பரப்பிரமம் தன்னியற்கைச் சொரூபமாகிய அறிவில் படாமல் நிற்குமோ அப்படி நாதமும் தன்னியல்பிற்றிரியாது " அ'' என்கிறதொனி வடிவமாகவே நிற்கும். பிரமம் பிரபஞ்சமாய் விரியும் போது பலபல சொரூபங்களாக விகாரப்பட்டுத் தோன்றுவது போல நாதமும் வர்ண சொரூபங்களாக விரியும் போது பலவிதமாய் விகாரப்பட்டு நாநாவித எழுத்துக்களாகும். இனி நாமிங் கெடுத்துக் கொண்டது உயிரெழுத்துக்களையேயாம். அவற்றுள் நாதவடிவாகிய அகரம் அங்காத்தலின் மாத்திரையால் தோன்றும். அவ்வகரமே நாதத்தின் ஆதி ஒலி வடிவாம். அது நீண்டு விகாரப்படுதலே'' ஆகாரமாம் ". அண்பல்லும் நாவிளிம்பும் சேர்ந்து அங்காத்தல் முயற்சியால் இ ஈ எ ஏ ஐ என ஐவகையாக விகாரப்பட்டுத் தோன்றும். அவற்றொடு இதழைக்குவித்தலால் அகரம் " உ ஊ ஒ ஓ ஔ'' என்ற ஐவகை எழுத்துக்களாக விகாரப்படும். இதனால் அகர உயிர் ஒன்றே தன் விகாரப்பாட்டினால் பதினோர் உயிர்களுமாய் அவற்றுக்கு முதலில் தனித்து நின்றும் முதன்மை பெற்றிருத்தலால் உயிரெழுத்துப் பன்னிரண்டாயின. இதனால் அகரம் எல்லா உயிர் எழுத்துக்களிலும் நிறைந்து நிற்கு மென்பது பெறப்படும். அன்றியும் தனி தியங்கு மாற்றலில்லாத மெய் யெழுத்துக்களிலும் வியாபித்து அவற்றை இயங்கச் செய்யும் ஆதலால் உயிர் மெய் எல்வாவற்றுள்ளும் அகரம் வியாபித்து நிற்குமென்பது புலப்படும்.
ஆதலால் சிற்சடப் பிரபஞ்சமுற்றிலும் வியாபித்து நின்று அவையேதானாகியும், தானே அவையாகியும், அவற்றுக்கு வேறாய்த் தனித்து நின்றும் சகல பிரபஞ்சத்தையும் நடத்தும் இயல்புள்ள பரப்பிரமத்துக்கு அகரம் உவமையாயிற்று. இக்கருத்து பற்றியே வேதாதி கலைகளும் அவற்றை யோதியுணர்ந்த மேலோரும் பரசிவப் பிரபுவை வேதசொரூபி யென்றும், நாத சொரூபியென்றும் கூறுவது. சர்வபிரபஞ்ச சொரூபியாகிய பிரமத்துக்குச் சர்வசப்தபிரபஞ்ச சொரூபியாகிய அகர உயிரைத்தவிர வேறுவமை கூறுதல் அருமையேயாம். இந்த நாதமும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பதும் ஊகிக்கத்தக்கது. இனி சுற்றந்தழுவுதலுடன் சேர்த்துக் கூறப்பட்ட "ஒப்புரவு'' என்பதைக் கவனிப்போம்.

 

ஒப்புரவு என்பது உலக நடையினையறிந்து செய்தல் என்று பரிமேலழ கர் கூறினார். இதனையே, " ஒப்புரவொழுகு, ஊருடன் கூடிவாழ், தேசத் தோடொத்துவாழ், நாடொப்பன செய்'' என்றவாக்கியங்களால் விளக்கியருளினார் அன்னையார். அதாவது உலகநடை இனிது நடத்தற்பொருட்டு ஒருவருக்கொருவர் உபகாரஞ்செய்து கொள்ளுதல். அங்ஙனஞ் செய்து கொள்ளாக்கால் உலக்காரியம் இனிது நடவாது. உபகாரம் செய்தவனை உலகம் வாயார வாழ்த்தும். அவனுக்குச் செல்வாக்கும் உண்டாகும். அவனை எல்லாரும் பெரியவனாகவும் மதிப்பார்கள். இந்த உபகாரமும் பிரதிபலனை யிச்சித்துச் செய்தலும். இச்சியாமற் செய்தலுமென இருவகையாம். பிரதி பலனை இச்சித்துச்செய்வது தன் பலனைக் கொடுத்து அழியும், ஆயினும் புகழ்ச்சிக்குரியதே. அதுவும் இம்மையோ டொழியும். பலனை விரும்பாமற் செய்வது இம்மையிற் புகழையும் மறுமையில் நல்லகதியையுந் தரும். அது பற்றியே,


 ''கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
 டென்னாற்றுங் கொல்லோ வுலகு''

 

என்று தேவர் கூறினார். கைம்மாறு வேண்டாமல் மழை பெய்து உபகரிக்கும் மேகத்துக்கு உலகம் என்ன பிரதி உபகாரத்தைச் செய்யும். அது போலப் பிரதிபலனை வேண்டாமற் செய்யும் உபகாரத்துக்கும் மனிதரால் ஒன்றுஞ் செய்யவியலாது என்பதாம். உபகாரம் செய்தலாவது, பிறர் வரும்துதல் கண்டவழி அவர்களுக்கு அன்னவஸ்திராதிகளை உதவி அவரது துயர மொழித்தலாம். மற்றவர்க்கு அவசியமாக வேண்டுமவற்றை அறிந்து
கொடுத்தலுமாம்.

"புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.''

 

இந்த ஒப்புரவைக்காட்டிலும் மேலான செயல் விண்ணுலகத்தும் மண்ணுலகத்து மில்லை யென்பதாம். என்றதனால் இதற்கு ஒப்பும் உயர்வும் எவ்வுலகத்திலு மில்லை யென்ற தாயிற்று. இது உலகத்தில் அழியாத புகழ் உடம்பை நிலைபெறச்செய்யும், மறுமையிற் பேரின்பந்தரும்.      

 

அங்ஙனமாயின் இது நித்திய விதியிற் கூறிய நித்திய நைமித்திக கன்மங்களி லடங்காதோ எனின் அடங்காது நித்தியம் என்பது தெய்வத்தை உத்தேசித்து வேதவிதிப்படி மந்திரபூர்வகமாகச் செய்யப்படுவது. நைமித்திகமும் இன்னின்ன காரணங்களால் இக்கருமங்கள் செய்யவேண்டுமென்று நூல்களால் உணர்ந்தபடி மந்திரபூர்வமாகச் செய்யப்படுவது. இந்த ஒப்புரவு அவ்வாறின்றிப் பிறரைக் கண்டவழி அவரது கருத்தைத் தன்னறிவா லறிந்து செய்யப்படுவது. ஒப்புரவு என்பதற்குப் பொருள் கூற வெழுந்த பரிமேலழகர் உரை, உலகநடை அறநூல்களாலறிந்து கொள்ளாமல் தாமே யறிந்து செய்யப்படுவது என்று கூறிற்று. பிறர் துயர்கண்ட வழி அதையறிந்து மனமகிழ்ச்சியொடு செய்யப்படும் உபகாரமே ஒப்புரவு என்பதாம். இவ்வொப்புரவினால் அடையப்படும் பயன் புகழ் என்று பரிமேலழகர் கூறினார். புகழ் இம்மையோடொழிவதே யாதலால் மறுமையிற் பேரின்ப மெய்துவது யாங்ஙனமெனின் ஒருவன் புகழுடம்பு எதுவரையில் உலகத்தில் நிலைபெற்றிருக்குமோ அதுவரையிலும் அப்புகழுடம்புடையான் மறுமையிற் பேரின்ப நுகர்வான் என்று கூறுதலால் என்க.

 

ஒரு அரசன் அளவற்ற தான தருமங்களைச் செய்து பூலோகத்தில் தன் புகழை நாட்டிப் பரலோகம் சென்றான். அவ்விடத்தில் அளவிடப் படாத காலம் இன்பங்களை நுகர்ந்திருந்தான். பிறகு தேவர்கள் அவனை நோக்கி உன் புண்ணியங் குறைந்தது இனி நீ மண்ணுலகம் செல் என்றார்கள். அவன் இல்லை என் புண்ணியங் குறையவில்லை யென்றான். அப்படியானால் பூலோகம் போய் அவ்விடத்தில் உன் பேர் இருக்கிறதாவென்று தெரிந்து கொண்டுவா வென்று அனுப்பினார்கள்.

 

அவன் வெகுகாலங் கண்டவராகிய மார்க்கண்டேய முனிவரிடம் சென்று தன்வரலாறு கூறிக் கேட்டான். அவர் எனக்குத் தெரியவில்லை. என்னிலும் பெரியவராகிய காகமுனிவர் ஒருவர் இருக்கிறார். அவரைக் கொண்டு தெரிந்து கொள்வோம். அவர் விந்தியமலைச்சாரலி லிருக்கிறார் என்றார். மார்க்கண்டேயருடன் அரசன் தான் ஒருவடிவம் எடுத்துக் கொண்டுபோய் விந்தியமலையை அடைந்தான். மார்க்கண்டர் காக முனிவரை விளித்து வந்த காரியங்கூறி நீர் அறிந்திருப்பீரே, அறிந்தால் சொல்லும் என்று கேட்டார். அவர் நான் அறியமாட்டேன். குரண்ட முனிவர் என்பவர் எனக்குச் சிநேகிதர். அவர் வெகுகாலங் கண்டவர். அவரைக் கேட்க வேண்டும் என்றார். அரசன் அவ்விருவரையுந் தூக்கிக்கொண்டு குரண்ட முனிவரிடம் போய்க் கேட்டான். அவர் எனக்குத் தெரியாது என்னைவிட வெகுகாலங்கண்ட கூர்மரிஷியென்பவ ரிருக்கிறார். அவரைக் கேட்போமென்ன, அரசன் மூவரையுஞ் சுமந்துகொண்டு கூர்மரிஷி வசிக்கிற மடுவை அடைந்தான். குரண்டர் அம்முனிவரை விளித்து வினாவினார். அவர் சற்று நேரம் யோசித்துக் கண்களில் ஆனந்தபாஷ்பம் பெருக முனிவர்களை நோக்கி முனிவர்களே! இவ்வரசனை நான் அறிவேன். இவன் மஹா தர்மிஷ்டன். அளவில்லாத பசுக்களைத் தானம் செய்தான். அவன் நீரோடு தானம் செய்த பசுக்களின் காலடிச் சுவட்டினால் உண்டான பள்ளமே இந்தமடுவாயிற்று என்று சொன்னவுடனே வானத்தில் தெய்வவிமானம் ஒளிவீசிக் கொண்டு தோன்றியது. அதில் வந்த தேவேந்திரன் அரசனே இதை நான் அறிவேன். பூலோகத்தில் அதன் பேர் மறக்கப்பட்டிருக்கிறது. அதைப் பரவச்செய்யவே உன்னை அனுப்பினேன். விமானத்தில் ஏறிக்கொள் என்றான். அரசன் சற்றுப் பொறும், இம் முனிவர்களை அவரவர் ஆச்சிரமத்தில் சேர்த்து விட்டு வருகிறே னென்று கூறி, அவர்களைக் கொண்டு போய் அவர்களிடத்தில் சேர்த்து விட்டுப் பின் விமானத்திலேறிக்கொண்டு சொர்க்க லோகம் போய்ச் சேர்ந்தான். அந்த மடுவும் புண்ணிய தீர்த்தமாயிற்று என்று இதிகாசங் கூறுகின்றது. இந்தச் சரித்திரத்தை வியாசமுனி வரும் பாரதத்தில் விரித்துக் கூறியிருக்கிறார். ஆதலால் இகலோகத்தில் தன் புகழுடம்பை நிலைபெறச் செய்கிறவன் மறுமையில் புண்ணியலோகங்களில் சென்று இன்பம் நுகர்வான் என்பது திண்ணம். ஆதலால் கைம்மாறு கருதாமல் பரோபகாரஞ் செய்வது, இம்மையிற் புகழையும் மறுமையில் புண்ணியலோகங்களையும் அடையச் செய்யும். அதுவே ஒப்புரவின் பயனாம். சுற்றந் தழுவுதலுடன் கஷ்டப்படுகிறவர்களுக்கும் தன்னாலியன்றவரை உபகாரம் செய்யவேண்டும். இதனாலேயே


      "தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற்பொருட்டு "
      '' ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்

விற்றுக் கோட்டக்க துடைத்து''


 என்று தேவர் கூறியருளினார்.

ஆரியாசாரம் முற்றிற்று.

 

சிஷ்டாசாரம்

 

சுற்றந்தழால் ஒப்புர வொழுகுதலாதியால் தர்ம பலனையடைவது சித்தமாயின், அரியகன்மங்களைக் கஷ்டப்பட்டுச் செய்து வருந்துவதினும் இத்தகைய கன்மங்களே சாலும். அவை யெற்றுக்கெனின், சுற்றந்தழால் ஒப்புர வொழுகலாதி கன்மங்கள் உலக நடை சீர்பெற்று நடைபெறுமாறு கல்வி கேள்விகளாற் சிறந்தோரான் ஏற்படுத்திய நியமங்களாம். இந்நியமங்க ளில்லாவிடின் உலகாசாரம் சீர்பெறாது. உலகாசாரம் சிறப்புற நடவாதாயின் கடவுளால் நியமிக்கப்பட்ட வைதிக கன்மங்கள் நிலைகெடும். ஜனங்கள் ஊரைவிட்டு அந்நிய தேசங்களுக்கும் பிற ஊர்களுக்கும் செல்லும்படியான பல சந்தர்ப்பங்கள் நேரிடும். அப்போது ஒருவருக்கொருவ ருபகாரம் செய்யாமலிருந்தால் கஷ்டம் நேரிடும். வைதிக கன்மங்களும் தடை படும். அவ்விதக் கஷ்டங்களை நீக்கிக்கொள்வதற்கே இவை நியமிக்கப்பட்டன. இவை சிஷ்டாசாரம் என்று கூறப்படும்.

 

சிஷ்டாசாரமாவது, அவ்வத்தேசத்திலுள்ள கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோர், தேசகால வியல்புகளையும் அங்குள்ள பிரஜைகளின் குணா குணங்களையும் ஆராய்ந்தறிந்து வைதிக நெறியோடு முரண்படாதவாறு நியமிக்கப்படும் கன்மநெறியாம். இந்நெறிகளும் நன்மைதருவனவாம். ஏனெனில் வேதவிதிக்கு மாறுபடாமல் நியமிக்கப்பட்டிருத்தலால் இதுவும் வைதிகநெறியேயாம். ஒப்புரவொழுகலாதிகள் உலகிற்கு உபகாரார்த்த மாகவே நியமிக்கப்பட்டபடியால் வைதிகநெறிக்கு ஒப்பாகா. உபகாரத்தினால் வரும் பயனே ஒழிய மற்றைய கன்மங்களைப் போலப் பாவநிவாரணம், சித்தசுத்தி, ஞானம் முதலியவற்றைக் கொடுப்பதில்லை. ஆதலால் வைதிக கன்மங்களை அவசியம் செய்தலே வேண்டும். வறிஞர் முதலியோர் ஒப்புர வொழுகலாதி கன்மங்களை விட்டு விடலாம். வைதிக்கன்மங்களை ஒருபோதும் விடக்கூடாது.

 

வடதேசங்களில் அத்தை, மாமன் மக்களாகிய ஆண் பெண்களுக்கு விவாகம் செய்வதில்லை. அது இத் தென்தேசத்தில் குற்றமில்லையென்று இவ்விடத்திய சான்றோரால் நியமிக்கப்பட்டது. பூர்வகாலத்திலிருந்த அரசர்கள் உத்தரதேசத்திலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து குடியேற்றினார்கள். அப்போது விவாகம் செய்வதில் சிறிது இடையூறு நேர்ந்தமையால் அத்தை மகளையும் மாமன் மகளையும் விவாகம் செய்து கொள்ளலாமென்று சிஷ்டர்களால் விதிக்கப்பட்டபடியால், அந்தச் சிஷ்டாசாரம் இங்கே நிலைபெற்றுவிட்டது. நேற்றைய தினம் சமையல் செய்த அன்னம் முதலியவற்றை மறுநாள் புசிக்கக்கூடாதென்பது ஸ்மிருதி விதித்த விதியாம். இங்குள்ள சீதோஷ்ணத்தை யுத்தேசித்து இவ்விடத்திய சிஷ்டர்கள் அவற்றைப் புசிக்கலாமென்று விதித்தார்கள். அதுவும் நடைபெற்று வருவதும் பிரத்தியட்சம் வடதேசங்களில் பூணூல் போடப்படாத பிராமணப் பிள்ளைகள் பந்திபோஜனத்துக்கு அனருகர் என்று விதிக்கப்பட்டது.

 

இதுவும் ஸ்மிருதி விதியாம். ஆயினும் அது குற்றமில்லையென்று இத் தேசத்துப் பிராமண சிரேஷ்டர்கள் கூறினார்கள். ஆதிகாலத்தில் பிராமணர்கள் அகப்படுவது இவ்விடத்தில் துர்லபமான துபற்றி இவ்விதி ஏற்பட்டது போலும். இவைகளெல்லாம் கல்விமான்களாகிய சிஷ்டர்கள் ஸ்மிருதி யாதி சாஸ்திரங்களை யாராய்ந்து தமது பேரறிவினால் காலதேச பிரஜைகளின் இயல்புகளை நோக்கி வேதவிதியோடு முரணாதவாறு இயற்றப்பட்ட படியால் இவைகள் சிஷ்டாசாரம் என்று புகழப்படுகின்றது. ஒப்புரவாதிகளும் உலகநெறி பிறழாதவாறு சிஷ்டர்களால் நியமிக்கப்பட்டபடியால்
இதுவும் சிஷ்டாசாரமேயாம்.

 

இனி தேசங்கடோறும் ஆசாரம் மாறுபடும். அது சாகாபேதங்களாலும் தேச அனுஷ்டான முறைமையாலும் மாறுபட்டதாதலால் குற்றமாவ தில்லை. ஆயினும் பிரதேசத்தார் அதை அனுஷ்டிக்கக்கூடாது. அத்தேசத்தாரே அனுஷ்டிக்கலாம். சில அசந்தர்ப்பங்களினால் நாம் அத்தேசங்களில் வைதிக கன்மங்களை அனுஷ்டிக்க நேரிடும். அப்போது உபாத்தியாயர் கிடைப்பதரிதாதலால் அத்தேச வழக்கம் போல அனுஷ்டிக்க வேண்டுமே தவிர நித்திய கன்மங்களை விட்டுவிடக்கூடாது. நமது தேசம் வந்தபின் அதை அனுஷ்டிக்கக்கூடாது. நமது முறையைப் பற்றியே அனுஷ்டிக்க வேண்டும். இவ்விதிகள் ஸ்மிருதிகளோடு மாறுபடுமாயின் மனுஸ்மிருதியினால் திருத்திக் கொண்டு நடத்தவேண்டும். மனு ஸ்மிருதியோடு மாறுபடுமாயின் அது தவறேயாம். வேதவிதி வாக்கியங்களாலேயும் அறிஞர் சீர்திருத்திக் கொள்வர். ஆதலால் சிஷ்டாசாரங்கள் மனுஸ்மிருதியோடும் வேதவிதியோடும் மாறுகொள்ளாமல் இருக்க வேண்டும்.

 

இதுபற்றியே ஸ்மிருதிகள் ஒன்றுடனொன்று மாறுபட்ட போது வேதவிதியால் சந்தேக நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று மீமாம்ஸா சாஸ்திரம் வரையறுத்தது. ஸ்மிருதிகள் சாகாபேதம்பற்றிக் கூறியிருத்தலால் அது வேதவிதிக்கு மாறுபட்டதாகாது. நமது சாகைக்குப் பிரமாணங் கொள்ளக்கூடாதானாலும் இதர சாகைக்குப் பிரமாணமாதலால் அது தவறு என்பது இல்லை. இவ்விடங்களில் நமது சிஷ்டாசாரத்தையே தழுவிக் கொள்ள
வேண்டும். அவர்கள் சாகைக்கு ஒத்தபடி வைதிக விதிக்கு மாறுபடாமற் செய்திருப்பார்களாதலால் அதுவே பிரமாணமாம்.

 

இனி கிருஹ்ய சூத்திரங்கள் என்று ஒரு சாஸ்திரம் உண்டு. இது கற்ப சூத்திரமென்றும் பேர் பெறும். இக்கற்ப சூத்திரங்கள் பதினெட்டு. ஸ்மிருதிகளில் மனு ஸ்மிருதி தலைமை பெற்றது போலக் கற்ப சூத்திரங்களில் போதாயனம் தலைமையானது. ஏனைய சூத்திரக்காரர்கள் இதைக் கொண்டே தங்கள் சாகைக்கு ஒத்தவாறு சுருக்கியும் விரித்தும் செய்து கொண்டார்கள். கற்ப சூத்திரமென்பது வைதிககன்மங்களைச் செய்யும் முறை கூறுவது. இது அடிப்பட்ட சான்றோரால் செய்யப்பட்டதாதலால் தங்கள் தங்களுடைய கற்ப சூத்திரத்தைக் கொண்டே வைதிகக்கன்மங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வைதிகக் கன்மங்களில் யாதொரு தவறும் நேரிடாது.

 

கற்ப சூத்திரங்கள் தர்மசாஸ்திரங்களை விடச் சிறந்தன. ஸ்மிருதிகளாகிய தர்மசாஸ்திரங்களில் தர்ம சொரூபமும், இந்தக் கர்மத்துக்கு இது பயன் என்றும் கூறும். அதைப் பிரயோகிக்கும் முறையும் மந்திர தந்திரங்களும் அவற்றுள் கூறப்படவில்லை. அந்த முறை கற்ப சூத்திரங்களிலேயே யுள்ளன. வைதிக கர்மங்களுக்கு விதியும் மந்திரப் பிரயோகங்களும் வேதாந்தங்கள் ஆறனுள் ஒன்றாய்க் கணக்கிடப்பட்டன. இது சர்வபிரசித்தம். வேதங்களில் பல சாகைகள் (பிரிவுகள்) உள. அவ்வச்சாகைக்குரிய மந்திரங்களைக் கொண்டே அவ்வச்சாகைக்காரர்கள் தங்கள் வைதிக்கர்மங்களைச் செய்யவேண்டியது அவசியமாதலால் கற்பசூத்திரங்கள் பதினெட்டாயின. அவை பூர்வ சூத்திரங்கள், அபர சூத்திரங்கள் என இருவகைப்படும். போதாயனம், ஆபஸ்தம்பம், ஸத்தியாஷாடம், திராஹ்யாயனம், ஆகஸ்தியம், சாகல்யம், ஆசுவலாயனம், சாம்பவீயம், காத்தியாயனம் இந்த ஒன்பதும் பூர்வசூத்திரங்களாம். வைகானஸம், சௌனகீயம், பாரத்வாஜம், ஆக்னி வேசியம், ஜைமினீயம், மாதுன்யம், மாத்தியந்தினம், கௌண்டின் யம், கௌஷீதகம், இந்த ஒன்பதும் அபரசூத்திரங்களாம்.

 

வடநாட்டில் பதினெட்டுச் சூத்திரங்களும் அனுஷ்டானத்தில் இருக்கின்றன. நமது தேசமாகிய இத்தென்னாட்டில் போதாயனம், ஆபஸ்தம்பம், ஸத்தியாஷாடம், திராஹ்யாயனம் இச்சூத்திரக்காரர்கள் பெரும்பான்மையோர். ஆசுவலாயனிகள், காத்யாயினிகள் சிறுபான்மையர். இவற்றுடன் வைகானஸம், பாரத்வாஜம், அக்கினிவேசியம், ஜைமினீயம், மாத்தியந் தினம் சேர்ந்து பதினொரு சூத்திரங்கள் வழங்குகின்றன. கன்னட தேசத்திலும் தெலுங்கு தேசத்திலும் சாம்பவீயம், கௌஷீதகம் என்னும் இரண்டு சூத்திரங்கள் அதிகமாய் வழங்குகின்றன. ஆகத் தென்னாட்டில் பதின்மூன்று சூத்திரங்களை அனுஷ்டிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கற்பசூத்திரங்களின் விசேஷங்களைச் 'சரணவியூகம்' என்ற நூலில் விரிவாய்க் காணலாம். இவற்றால் வைதிகக் கன்மங்களுக்கு வேதவிதி முறை யுண்டென்பது பிரசித்தம். ஏனைய ஒப்புரவாதிகள் ஜனங்கள் தத்தம் விருப்பம் போல நடத்தப்படுவன. ஆதலால் அது செய்ததனால் மாத்திரம் சித்தசுத்தியையும் ஞானத்தையும் அடைய முடியாது. வைதிகக்கன்மங்களை முறைப்படி யனுஷ்டிப்போர்க்கு இக்கன்மங்களும் பயன் தரும் என்பதே யாம். இவ்வைதிகக் கன்மமுறைகளை உபாத்தியாயர்கள் அறிந்தே கர்மம் செய்விக்கின்றார்கள். ஆதலால் நமக்குக் கன்மலோபம் நேரிடுவதில்லை.


 சிஷ்டாசாரம் முற்றிற்று.

 

 

கர்மமும், ஞானமும்.

 

சிலர் கர்மமே சிறந்தது என்பர்; சிலர் ஞானமே சிறந்தது என்பர். இவற்றில் நாம் இரண்டையுமே அங்கீகரிக்கின்றோம். கர்மத்தை முக்கிய மாகக் கொண்டவர்கள்,'கர்மத்தை முறை தவறாமற் செய்வதனால் ஞானம் தானேயுண்டாகும். அந்த ஞானமே மோட்சத்தைத் தரும் " என்பர்; ஞானத்தை மேலாகக் கொண்டவர்கள், " கர்மத்தினால் யாதொரு பயனுமில்லை. ஞானமே மோட்ச சாதனம். ஆதலால் கர்மத்தை விட்டு ஞானத்தையே ஆசரிக்க வேண்டும்'' என்பர். இந்த விஷயத்தில் நாராயணாவதாரமாகிய கண்ணபிரான் பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு விரிவாய்க் கூறியிருக்கின்றார். அதை வியாசபகவான் சுலோக ரூபமாகச் செய்து பாரதத்தில் சேர்த்தருளினார். இருவரும் மஹாவிஷ்ணுவின் அம்சமாதலால் இவர்களே நமக்குச் சிறந்த பிரமாண புருஷர்களாவார்கள். இவர்களைத் தவிர வேறு பிரமாண புருஷர்கள் கிடையார்கள்.

 

இனி அர்ஜுனன் தன் வருண தர்மத்தை விட்டு யுத்தம் செய்யமாட்டேனென்று கூறி யுத்தமுயற்சியைவிட்டுத் துக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, கண்ணபிரான் அவனை நோக்கி, "ஏ அர்ஜுனா! துக்கத்தை ஒழித்து உன் சுயதர்மமாகிய யுத்தத்தைச் செய். இந்தக் கர்மத்தைச் செய்யா விட்டால் உனக்கு நற்கதி கிட்டாது. யாதொரு சங்கல்பமுமில்லாமல் தன் குலதர்மமாகிய கர்மத்தைச் செய்கிறவன் பரப்பிரமத்தையே அடைவான். ஆதலின் உன் குலதர்மமாகிய யுத்தத்தைச் செய். கர்மயோகமே சிறந்தது. கர்மபலனை விரும்பாமற் செய்யப்படுகிற எந்தக் கர்மமும் மோட்சத்துக்குக் காரணமாம். ஞானத்துக்கும் காரணமாகும். ஞானமின்றி மோட்சம் கிட்டாது. பரப்பிரமத்தினிடத்தில் மனம் லயித்திருப்பதும், விருப்பும் வெறுப்பும் இல்லாமலிருப்பதும், சுகதுக்கங்களைக் கருதாமலிருப்பதும், எல்லாப் பிராணிகளையும் சமனாகக் கருதுவதும் ஞானமாம். ஆதலால் கருமயோகத்தைச் செய், கர்மயோகமாவது பலாபேட்சையில்லாமல் கர்மங்களைச் செய்து அதைப் பிரம்மார்ப்பணஞ் செய்தலாம்'' என்று கூறி யருளினர்.

 

அர்ஜுனன், " ஞானமே சிறந்ததானால் கொலை செய்வதாகிய இந்தக் கொடிய கர்மத்தைச் செய்யும்படி சொல்வதேன்? இதனால் புத்தி மயங்குகிறன்து. மோட்சஹேதுவான ஒரே மார்க்கத்தைச் சொல்லும் " என்றான்.

கண்ணன் - 'முற்காலத்தில் இந்தக் கருமயோகம் ஞானயோகமாகிய இரண்டும் என்னாலே சொல்லப்பட்டனவே. கருமத்தை விட்டதனாலே ஒருவன் மோட்சத்தை யடையமாட்டான். மோட்ச காரணமாகிய ஞானத்தைக் கர்மத்தியாகத்தாலே அடைய முடியாது. கருமத்தைச் செய்வதே சிலாக்கியம். விடுவது சிறந்ததாகாது. சுதந்தரமில்லாதவன் ஒருவனும் கருமஞ் செய்யாமலிருப்பதில்லை. நற்கருமமோ துர்க்கருமமோ ஒன்றைச் செய்யாமலிருப்பதில்லை.
 

பிரமதேவர் ஆதியில் யக்ஞத்தோடு பிரஜைகளைச் சிருஷ்டித்து, அவர் களை நோக்கி "இது உங்களுக்கு இஷ்டபோகங்களைத் தரும். இந்த யக்ஞத்தாலே தெய்வங்களை ஆராதியுங்கள். அந்தத் தேவர்கள் இஷ்டபோகங்களைக் கொடுத்து உங்களை இரட்சிப்பார்கள். இவ்வாறு நீங்கள் ஒருவரை ஒருவர் அபிவிருத்தி செய்து கொண்டு வாழுங்கள்'' என்று சொன்னார். ஆதலால் தேவாராதன ரூபமாகிய கர்மத்தைச் செய்து அவர்களாற் கொடுக் கப்பட்டவைகளை அவர்களுக்கு உதவவேண்டும். அப்படிச் செய்யாதவன் திருடனாவான். தேவாராதனம் செய்து மிகுந்தவற்றைப் புஜிக்கிறவன் சகல பாபங்களினின்றும் விடுபடுவான். தன் குலதர்மத்தை விடாமல் சற்கருமங்களைச் செய்ய வேண்டும். முற்காலத்திய பெரியோர்கள் எல்லாரும் கர்மத்தைச் செய்தே மேன்மையை அடைந்தார்கள். கர்மஞ்செய்யவேண்டாத ஞானியும் லோகோபகாரார்த்தமாகக் கர்மங்களைச் செய்யவேண்டும். அங்ஙனம் செய்யாதவன் உலகத்தைக் கெடுத்தவனாவான். பெரியோர் செய்ததையே உலகம் செய்யுமாதலால் உலகத்தாருடைய நன்மைக்காக ஞானிகளும் கர்மத்தைச் செய்யவேண்டும்.

 

கர்மத்தை விடவேண்டுமென்றது அதன் பலனை விடவேண்டுமென் பதேயாம். அதாவது கர்மத்தைப் பலாபேட்சையின்றிச் செய்து அதன் பலனைப் பிரம்மார்ப்பணஞ் செய்வதேயாம். அங்ஙனமன்றிக் கர்மத்தைச் செய்யாமலே விட்டுவிட வேண்டுமென்பதில்லை. பலாபேட்சையின்றிச் செய்யப்பட்ட இந்தக் கன்மமே ஞானமாம். ஞானஹேதுவாம்.

 

சிலர் கர்மஞ்செய்யாமல் ஞானியாகவே பிறந்திருப்பார்கள். அவர்கள் முன்ஜன்மங்களில் கர்மங்களைச் செய்து பூர்த்திபெற்றவர்களாதலால் அவர்களுக்குக் காமம் வேண்டுவதில்லை. அவர்களைப் பிரமாணமாகக் கொண்டு மற்றவர்கள் கர்மத்தை விடக்கூடாது. விட்டுவிட்டால் பாபத்தை அடைவார்கள். கன்மம் ஞானகாரணமும், ஞானம் மோட்சகாரணமுமாதலால் இரண்டும் அனுஷ்டிக்கத்தக்கனவே. ஒன்றையொன்று அனுசரித்திருப்பதினாலே ஞான நிஷ்டையால் உலகத்தை மறந்திருக்கும் போது கர்மம் செய்ய வேண்டுவதில்லை'' என்று கூறியருளினர். இவ்வாறு கூறியதனால் கர்மமே மோட்ச காரணமாதலால் அதைச் செய்தே தீரவேண்டுமென்று கண்ணபிரான் தமது அபிப்பிராயத்தைக் கூறினார். இதனால் மனிதர்கள் தத்தம் குலாசாரப்படி கர்மம் செய்யவேண்டுமென்பது விளங்கும்.

 

ஒரு நகரத்தில், அசுவதன்' என்ற பிராமணனும், பிரதத்தன் என்ற அரசகுமாரனும் ஒரே ஆசிரியரிடத்தில் ஓதிக் கலையை யுணர்ந்தார்கள். பிரதத்தன் மகுடாபிஷேகம் செய்யப்பட்டு அரசனானான். அசுவதன் தீர்த்த யாத்திரை போய்விட்டான். வெகுநாட்கள் சென்றபின் அவ்விருவரும் அகஸ்மாத்தாய் ஓரிடத்தில் சந்தித்தார்கள். அப்போது அவர்களுக்குள் கர்மஞானங்களைப்பற்றி விவாதம் உண்டாயிற்று. அதில் அசுவதன் என்ற பிராமணன் தோல்வி அடைந்து வெட்கமுற்றான்.

 

அசுவதன் தன் குருவையடைந்து அவர் பாதத்தில் பணிந்து, " சுவாமீ! விவாதத்தில் பிரதத்தன் என்னை ஜயித்துவிட்டான். நான் தோற்றுப் போனேன். அவனைவிட நான் அதிகப் படிப்புள்ள வனல்லவா! அப்படி யிருந்தும் அவன் ஜயிப்பானேன்? நான் தோல்வி யடைவானேன்? இதன் காரணத்தை எனக்கு விளக்கிக் கூறியருள வேண்டுகிறேன்'' என்று பிரார்த் தித்தான்.

 

அதற்குக் குரு, " அப்பா! பிரதத்தன் அரசுரிமைபூண்டு தன் குலதர்மத்தைக் குறைவறச் செய்து வருகின்றான். அதனால் அவனுக்கு மெய்ஞ் ஞான முதயமாயிருப்பதினாலே தான் உன்னை வென்று ஜயங்கொண்டான். நீயோ உன் குலதர்மத்தை அனுஷ்டிக்கவில்லை. பிராமணன் பிரமசாரியாயிருந்தால் அவனுக்குக் குருபணிவிடை செய்வதே முக்கிய தர்மம். இல்லாவிட்டால் கிரகஸ்தாச்சிரமத்தை யடைந்து அதற்குரிய தர்மங்களைக் குறைவறச் செய்யவேண்டும், அவ்வாசிரமத்தில் பிரியமில்லாவிட்டால் சந்தியாசத்தையடைந்து அவ்வாசிரம தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். அன்றேல் வானப்பிரஸ்தாச்சிரமத்தை அடைந்து அந்தத் தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். நீயோ உன் குலதர்மத்தில் ஒன்றையாவது அனு சரியாமல் காலத்தைக் கழித்துவிட்டாய். அதனால் உனக்கு ஞானம் பிறக்கவில்லை. ஞானமில்லாதவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க மாட்டான். ஆதலால் நீ கிரகஸ்தாச்சிரமத்தை அடைந்து அக்கினிஹோத்திராதி நித்திய கர்மங்களைச் செய்'' என்று சொன்னார்.

 

அசுவதன் அப்படியே கிரகஸ்த தர்மத்தை அனுஷ்டித்தும், பிறகு பிரதத்தனைக் காணச்சென்ருன். அவன் வருவதைத் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த அரசன் அர்க்கிய பாத்யாதிகளால் அவனை உபசரித்துப் பூஜித்து,

 

"பகவானே! இப்போது குலாசார தர்மத்தை அனுசரித்து வருகிற நீர் எனக்குக் குருவாகத் தக்கவர். ஆதலால் குருவாக இருந்து என்னையும் இந்த இராஜ்யத்தையும் காப்பாற்றும்" என்று கூறி அவனுக்கு அநேக வெகுமதிகள் செய்து அவனைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். அவனும் மனங்களித்தான். குலதர்மமாகிய கர்மத்தைச் சரிவர நியமத் தோடு செய்கிறவன் இம்மை மறுமையாகிய இரு பலன்களையும் பெறுவான்.

 

கர்மமும், ஞானமும் முற்றுப் பெற்றன.

 

 

ஸ்மிருதிகள்.

 

நாம் நித்தியவிதி தொடங்கி யிதுகாறும் எழுதிவந்தவைகளெல்லாம் ஸ்மிருதிகளிற் கூறப்பட்டவைகளேயாம். புராண இதிகாச ஆகமங்களிலிருந்தும் சில கூறப்பட்டன. ஆயினும் முக்கியமாய் ஸ்மிருதிகளே ஆதாரம். ஆதலால் ஸ்மிருதி என்பது யாது? அது எவ்வாறுண்டாயிற்று? என்பனவாதி சங்கைகளுண்டாம், அதுபற்றிச் சிறிது கூறிப் பின் வேறு விசேஷங்களை விரிப்பாம்.

 

அநாதி நித்திய சுவயம்புவாகிய வேதம் ஒருபோதும் அழிவதில்லை. அது நித்தியமாயுள்ளது. கல்பாந்தங்களில் பிரம்மத்தில் ஒடுங்கிக் கல்பாரம் பத்தில் தோன்றும். மஹா கல்பாரம்பத்தில் பரமசிவன் பிரமதேவருக்கு வேதத்தைச் சொன்னார். அவர் அதைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரது தியானத்தில் அவருக்குப் புலப்பட்ட தர்மகர்மங்களே ஆதிஸ் மிருதியாம். ஸ்மிருதி என்றால் சிந்திக்கப்பட்டது என்றர்த்தம் தரும்.

 

அவருக்கடுத்தவர் மனு. இவரே ஸ்வாயம்புவ மனு என்று பிரசித்திபெற்றவர். இவர் பிரமதேவரிடமிருந்து வேதாதிகளைப் பெற்றுக்கொண்டு தவம் செய்தார். அவருக்கு வேதவிதிகளின் அர்த்தம் தியானத்தினால் விளங்கியது. அதைக்கொண்டு அவர் ஒரு நூல் இயற்றினார். அதுவே மனுஸ்மிருதி என்று புகழப்படுவது. இவரே ஆதிஸ்மிருதிகர்த்தர் எனப்படுவர். ஏனெனில் இவரே ஆதியிற் பிறந்தவர். இவருக்குப்பின்னரே மற்றவர் தோன்றினார்கள். இவ்வாறு தபோபல மகிமையால் வேதவிதிகளை யறிந்து தர்மங்களைக் கூறினவர் பதினெண்மர் என்பர்.

 

அவர் - மனு, அத்திரி, விஷ்ணு, ஹாரீதர், யாக்ஞவல்கியர், உசனர், அங்கிரஸ், யமன், ஆபஸ்தம்பர், ஸம்வர்த்தர், காத்தியாயனர், பிரகஸ்பதி, பராசரர், வியாசர், சங்கர், லிகிதர், தட்சர், கௌதமர், சாதாதபர், வசிஷ்டர் என்பவர்களாம். மனுவே மற்ற ஸ்மிருதிகர்த்தர்களுக்கு ஆதலால் அவரையும், ஸ்மிருதி கர்த்தர்களைக் கணக்கிட்ட யாக்ஞவல்கியரையும் வேறாக எடுத்துக்கொண்டால் ஸ்மிருதிகர்த்தர்கள் பதினெண்மர் என்று கணக்கிடப்படும். ஆயினும் யாக்ஞவல்கியர், சங்கர் இவ்விருவரும் கூறியபடி ஸ்மிருதிகர்த்தர்கள் இருபத்தொரு பேர்களாம். யாங் கூறியவாறு பதினெண்மர் என்றே கூறுவது வழக்கம். சங்கர் கூறியதிலும் மற்றவர்கள் கூறியவைகளிலும் இருபத்தொருவரே காணப்படுகிறார்கள். ஆகையால் ஸ்மிருதிகர்த்தர்கள் இருபத்தொருவர் என்பதே பொருத்தமாம். இவைகளே மூலஸ்மிருதிகளெனப்படும். இவ்வாசிரியர்களும் மூலஸ்மிருதி கர்த்தர்கள் என்று கூறப்படுவார்கள். இவைகள் சப்பிரமாண நூல்களாம். இவற்றுக்கு மாறுபட்டவைகள் அப்பிரமாணங்களாம்.

 

இவற்றுக்கு உபஸ்மிருதிகளும் உண்டு. அவைகளை இயற்றினவர்கள். ஜாபாலி, நாசிகேதர், ஸ்கந்தர், லோகாக்ஷி, காசியபர், வியாசர் சனற்குமா ரர், சந்தனு, ஜனகர், வியாக்கிரர், காத்தியாயனர், ஜாதுகரணி, கபிஞ்சலர், போதாயனர், காணாதர், விசுவாமித்திரர், பைடீனஸி, கோபிலர் என்ப. இப்பதினெண்மர்களும் உபஸ்மிருதிகளை யியற்றிய ஸ்மிருதிக் கர்த்தர்கள் என்று அங்கிரஸ்முனிவர் கூறினார். இந்த உபஸ்மிருதிகளில் மூலஸ்மிருதிகளுடன் மாறுபடாமலிருக்கும் வாக்கியங்களே பிரமாணங்களாகக் கொள்ளப்படும். மாறுபாடுளதாயின் அவ்வாக்கியம் பிரமாணமாவதில்லை. அப்படியே மூலஸ்மிருதிகளும் மனுஸ்மிருதி வசனங்களுடன் மாறுபடாமலிருப்பவைகளே சப்பிரமாணங்களாம். மனுஸ்மிருதிக்கு மாறுபடுவது எதுவானாலும் அது பிரமாணமாவதில்லை. மனுஸ்மிருதி சிறப்புடையது. மற்றையவை அதை அனுசரித்தே பிரமாணங்களாம். இவை வேதங்களிற் கூறப்படும் விதிவாக்கியங்களின் இரகசிய அர்த்தங்களை வெளிப்படுத்தவே யெழுந்தனவாம். அப்பொருள்களே மோட்சாருகமான கர்மங்களாம். அக்கர்மங்கள் விதி எனவும் விலக்கு எனவும் இருவகைப்படும். விதித்த கர்மங்களைச் செய்தே தீரவேண்டும். விலக்கியவற்றைச் செய்யாமல் ஒழிக்க வேண்டும். இந்த ஸ்மிருதிகள் சற்கருமங்களிவை என்றும், அவற்றைச் செய்வதனால் இன்ன பலன்களுண்டாகும் என்றும் விரித்துக் கூறும். விதித்தகர்மங்களைச் செய்யும் முறைமை கூறப்படவில்லை. அதற்கென்றே கற்பசூத்திரங்கள் பதினெட்டுந் தோன்றின. அதுமுன்னரே கூறப்பட்டது. இக்கருமங்களைச் செய்வதனாலாகும் பயன்களைப் பிரமாணத்துடன் சிறிது கூறுவாம்.

 

''இந்தத் தருமசாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டு அது கூறிய விரதங்களை யனுஷ்டிப்பவன் மனோவாக்குக் காயங்களால் உண்டாகும் பாவங்களை யடையமாட்டான்'' என்று மனு கூறினார். அவன் பிரமலோகத்தை அடைவான் என்றும் சொன்னார். ஆகையால் வித்துவானாகிய அந்தணன் இந்தச் சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டு அதன் பொருள்களைத் தன் சீடர்களுக்கும் நன்றாய்ப் போதிக்க வேண்டு மென்றார். தருமசாஸ்திரத்தைப் பயின்ற துவிஜன் தனக்கு முன்னேழு பின்னேழு தலைமுறைகளைப் பரிசுத்தமாக்குகிறான். வியாதிகளுக்கு மருந்து எப்படிப் பயன் தருமோ அப்படியே ஸ்மிருதிகளும் விதிதவறினவர்களுக்கும், புலன்களும் அந்தக்கரணங்களும் நிலை தப்பினவர்களுக்கும் பெரும் பயனை யளிக்கும். சுருதியும் ஸ்மிருதிகளும் துவிஜர்களுக்கு இரண்டு கண்களாகச் சொல்லப்படுகின்றன. அவ்விரண்டு மில்லாதவர்கள் வழி அறிந்து நடவாமல், தப்புவழியிற் சென்று வருந்துவார்கள். அவர்கள் பதிதர் என்று இகழப்படுவார்கள்'' என்றார் மனு. சுவர்க்கத்தையடைய விரும்புகிறவனுக்கு வேதாத்தியாயனத்தைப் போலவே ஸ்மிருதியுமாம் என்று ஹாரீதர் கூறினார். ராகதுவேஷங்களென்கிற நெருப்பினாற் சுடப்பட்டவர்களுக்கும் அக்ஞானவிஷமுண்டவர்களுக்கும், வியாதிகளுக்கு மருந்துகளைப் போலவே தர்மசாஸ்திரமும் சிகிச்சை கூறுகின்றன என்று சங்கலிகிதர் சொன்னார். வெளிச்ச மில்லாதபோது பொருள்களொன்றும் புலப்படாதது போல ஸ்மிருதி யில்லாவிட்டால் தர்மஞானமும் உண்டாவதில்லை என்று ஸ்மிருதி ரத்னாவளியிற் கூறப்பட்டது. புராணம், தர்க்கம், மீமாம்சை, தர்மசாஸ்திரங்கள், ஆறங்கங்கள், நாலுவேதங்கள் ஆகிய இவை பதினான்கும் ஞான ஏதுவாகிய வித்தியாஸ்தானங்களாம். துவிஜர்களுக்கு இந்தப் பதினான்கும் அவசியமான வளவைகள் என்று யாக்ஞவல்கியர் கூறினார். ஆதியில் மனுவா லியற்றப்பட்ட சர்வோத்தமமான தர்மசாஸ்திரத்துக்கு விரோதமான எதுவானாலும் அது பிரமாணமாகாது. அது நன்மையையும் செய்யாது. வேதத்திலிருந்து எடுத்துச் சொன்னதனால் மனுதர்மம் சர்வ சிலாக்கியமுடையது. ஆதலால் மனுஸ்மிருதிக்கு விரோதமான வசனங்கள் அங்கீகரிக்கப்படமாட்டா. வியாதிகளுக்கு மருந்து போலப் பவப் பிணிக்கு மனுஸ்மிருதி மருந்து என்று வேதம் கூறியது. உத்தமனான துவிஜன் மனுஸ்மிருதியாதி சாஸ்திரங்களையும் வேதோக்தமான நியமங்களையும் வேதவேதாங்கங்களையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். வேதமும் ஸ்மிருதியும் மக்களுக்கு இரு கண்கள் போல்வன. இவற்றுள் ஒன்றை அறியாதவன் ஒரு கண் குருடன். இரண்டும் அறியாதவன் முழுக்குருடன் என்று வியாசரும் ஹாரீதரும் சொன்னார்கள். மனுநூல், அங்கங்களுடன் கூடின வேதம், புராணம், சிகிச்சாசாஸ்திரம் இந்நான்கும் ஈசுவராக்ஞையினால் நிலைபெற்றன வாதலால் இவற்றை எக்காலத்திலும் விடக்கூடாது என்று விஷ்ணுபுராணம் கூறியது. வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாமையும், ரிஷிகள் வசனத்தை யிகழ்தலும் கட்டுப்பாடில்லாமலிருப்பது மாகிய மூன்றும் கேடு விளைப்பனவாம் என்று வசிஷ்டர் சொன்னார். ஸ்மிருதிகளுக்கு இவ்வளவு மகிமை எப்படியுண்டாயிற்று என்றால் அதற்கு மனு கூறுவது:

 

ரிஷிசுவரர்கள் வேதத்தைப் பிரத்தியட்சமாக அறிந்து ஸ்மிருதியை எழுதினார்கள். ஆதலால் அவையிரண்டும் சப்பிரமாணங்களாம். தர்க்கயுக்திகளைக் கொண்டு அவற்றை நிந்திப்பவன் நாஸ்திகனேயாவான். சாதுக்கள் அவனை விலக்கி விடவேண்டும். வேதங்கள், ஸ்மிருதிகள், பெரியோர் வசனம் ஆகிய இவற்றைப் பிரமாணமாகக் கொள்ளாதவன் தருமங்கெட்டவன். அவனுக்குத் தன் ஆத்மாவே பிரமாணமாகாது என்றார் ஹாரீதர். தேவலர் - மனு முதலியோர் தருமசாஸ்திரங்களை இயற்றினர்; கல்பசூத்திரக்காரர் அக்கருமங்களின் முறையை மந்திரப் பிரயோகங்களுடன் இயற்றினர் என்றார். ஆதலால் இவையிரண்டும் ஒன்றையொன்று பற்றி நிற்பனவாம். இவை யின்றியமையாதவையாம். இவையெல்லாம் ரிஷிகளாலும் மஹாத்மாக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவைகளாம். இதனால் தரும சாஸ்திரங்கள் மனிதர்களுக்கு இன்றியமையாதவை என்று உணர்ந்து கொள்ளலாம். இதிகாசங்களாலும் புராணங்களாலும், வேதங்களாலும், பெரியோர்களாகிய ரிஷிகளாலும் புகழ்ந்து பாராட்டி அனுஷ்டிக்கப்பட்ட தர்மசாஸ்திரவிதிகளை அறிந்தோரால் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி நடந்து நற்கதி அடைய விரும்புவதே மனிதராகிய நமக்குப் பெருமையாம்.

 

ஸ்மிருதி - தரும் இலக்கணம்.

 

இனி தருமம் என்பது யாது? அதன் சொரூபம் எப்படிப்பட்டது? என வினா நிகழக்கூடும். அதற்கு விடையாக ஸ்மிருதிகளிலிருந்து சிலவற்றை யெழுதுவாம்:
 

வாக்கு மனங்களாலுண்டாவதும், இகபரங்களுக்குக் காரணமாயிருப்பதும், அபூர்வம் என்ற பேர் பெற்றதுமான ஓர் ஆத்மகுணமே தருமம் என்பது என்று அரதத்தாசாரியர் கூறினார். வேதாந்தம் அறிந்தவர்களும் விருப்பு வெறுப்பு இல்லாதவர்களுமான பெரியோர்களால் சோகம் மோகம் இல்லாமல் நித்திய தருமமென்று கொண்டாடப்படுவதும், இதுவே அரிய பயனைக் கொடுப்பது என்று மனம் ஒத்து அங்கீகரிக்கப்படுவதும் எதுவோ அதுவே தருமமாம். ஓ முனிவர்களே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். சிஷ்டாசாரமும், சுருதி ஸ்மிருதிகளில் கூறப்படுவனவுமான இந்த மூன்று கருமங்களும் முக்கியமான தருமங்கள். ஆதலால் இம்மூன்றிலும் அறிவிற் சிறந்த மறையோர் பற்றுதலுள்ளவர்களா யிருக்க வேண்டும் என்று மனு கூறினார். இது மனதின் குணம் என்பதாயிற்று. அதனாலே தான் குரு க்ஷேத்திரத்திலும் சற்பாத்திரமறிந்து மனப்பூர்வமாய்க் கொடுப்பதும் தர்மமாம் என்றார் யாக்ஞவல்கியர். இத்தருமம் சுத்தத்தைச் செய்து பரம் பரைக்கிரமத்தில் முத்திக்கு ஏதுவாகும் என்று அவரே கூறினார். அதனாலே தான் விருப்பும் வெறுப்புமற்ற பெரியோர்களே தருமத்துக்கு அதிகாரிகள் என்றார். காமமற்ற நற்சித்தமுடையவர்களையே அதிகாரிகள் என்றதனால், அவர்கள் பரமேசுவரனையன்றி வேறு எப்பொருளையுங் கருதார்கள். ஆதலால் மோட்ச பரியந்தமான சகல ஐசுவரியங்களையும் கொடுத்தருளுவரென்பது கருத்து. உனக்கு எக்கருமத்திலாவது ஐயம் உண்டானால் வேதமோதியுணர்ந்த சிஷ்டர் அவர் வேதங்களிற் கண்ட வழியை அனுஷ்டித்துத் தருமநெறியில் நிற்பராதலால், அவர் செல்லும் வழியைப் பற்றி நட என்று வேதம் ஆக்ஞைதந்திருக்கிறது. மனம் ஒத்து உண்டாகும் உள்ளக் கிளர்ச்சியாகிய குணமே தர்மம் என்று கூறுவர் பெரியோர். எதைச் செய்தால் வேதமுணர்ந்த பெரியோர் புகழ்வார்களோ அதைத் தருமமென்றும், எதைச் செய்தால் பெரியோர்கள் நிந்திக்கிறார்களோ அதை அதருமமென்றும் சொல்வர் என்று விசுவாமித்திரர் சொன்னார். உண்மை, புலனடக்கம், சுத்தம், களிப்பு, வெட்கம், நெறியுடைமை, ஞானம், சாந்தி, கருணை இவை எப்போதும் வேண்டிய தர்மங்கள் என்று வியாசர் கூறினார். இவற்றுடன் கூடிச் செய்யப்படும் கர்மமே தர்மசொரூபமென்பது கருத்து. ஞானம், யாகம், பெரியோரைப் பூசித்தல், வேதத்தில் ஆசை இவை தர்மமா மென்று பிரகஸ்பதி கூறினார். போக்கியப் பொருள்களில் விருப்பமில்லா மையும், ஆத்மஞானமும் பெருமையை யளிக்கும் தன்மையன என்று பஞ்சசிக முனிவர் கூறினார். யாகம், சிஷ்டாசாரம், புலனடக்கம், ஜீவஹிம்ஸை செய்யாதிருத்தல், வேதமோதல் இவற்றுளெல்லாம் சித்த விருத்தியை யடக்கி ஆத்மஞானம் பெறுதலையே முக்கியதர்மமாமென்று யாக்ஞவல்கி யார் மீண்டும் கூறினார். ஆபஸ்தம்பர், - தர்மாதர்மங்களிரண்டும் சரீரத்துடன் வந்து நாங்கள் தர்மம், நாங்கள் அதர்மம் என்று சொல்லி நிற்பதைக் கண்டதில்லை. தேவகந்தர்வ பிதிர்களும், இது தர்மம் இது அதர்ம மென்று குறிப்பிட்டுச் சொல்லவுமில்லை. ஆதலால் ஆரிய சிரேஷ்டர்கள் எதைப் புகழ்கிறார்களோ அதைத் தர்மம் என்றும், எதை நிந்திக்கிறார்களோ அதை அதருமமென்றும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். ஆதலால் பாபமற்ற மனதிலுதிக்கும் நற்கிரியையே தர்மசொரூபமாமென்பது விளங்கும். இதனால் அறியத்தக்கது சிஷ்டர் உறவும், சகவாசமும், அவர் கூறுவதைக் கேட்டு நடப்பதுமாகிய தர்மகுணமாம். இதற்கு மாறுபடுவது அதர்மமாம். ஆதலால் எப்போதும் சன்மார்க்கருடன் கூடி அவர் மார்க்கத்தை -அனுஷ்டிப்பதே தர்மாசாரமாம். இதைப்பற்றி ஒரு இதிகாசக் கதையை வரைவோம்:

 

கௌசிக நதிக்கரையில் விசுவாமித்திர முனிவர் ஒரு சிறந்த யாகம் செய்தார். அந்த யாகத்திற்காக வசிஷ்டர், வாமதேவர், காத்தியாயனர் முதலிய பிரமரிஷிகளும், அநேக ராஜரிஷிகளும், நாரதாதி தேவரிஷிகளும் வந்து கூடினார்கள். யாகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. வேள்வியை முடித்து அபவிருதஸ்நானம் செய்த பிறகு ரிஷீசுவரர்களுக்கும் மற்றைய அந்தணர்களுக்கும் ஸமாராதனை செய்தார். கடைசியில் வந்தவர்களுக்குத் தகுந்தபடி மரியாதை செய்தார். பின் வசிஷ்டரிடம் வந்து தமது கர்வத்தினால் அவரை நோக்கி ''வசிஷ்ட மஹாமுனிவரே! நான் உமக்கு என்ன மரியாதை செய்யப்போகிறேன். அநேக ஆயிரவருஷம் கொடுந்தவம் செய்தேன். அதில் ஒரு ஆயிரவருஷ தவப்பலனை உமக்குக் கொடுக்கிறேன்" என்று இறுமாந்து கூறிக்கொடுத்தார். வசிஷ்டர் அந்த மரியாதையைப் பெற்றுக்கொண்டு இவன் கர்வத்தை அடக்க வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டு போய்விட்டார்.

 

பிறகு வசிஷ்ட முனிவரும் ஒரு பெரிய வேள்வி செய்தார். அதற்கு விசுவாமித்திரர் முதலிய சகல ரிஷிகளும் வந்திருந்தார்கள். யாகத்தை நிறைவேற்றிப் பூர்த்திசெய்தபின் காமதேனுவினால் எல்லாருக்குந் தெய்வ போஜனம் அளித்துத் திருப்தி செய்வித்தார். அதன்பின் முறைப்படி எல்லாருக்கும் மரியாதை செய்தார். விசுவாமித்திரரிடம் வந்து ''முனிபுங்கவரே! நீர் தபோநிதியாயுள்ளவர். உமக்குச் சமானமான தவசிரேஷ்டர்
மூவுலகத்திலும் இல்லை. உமக்கு நான் எப்படி மரியாதை செய்வதென்று தோன்றவில்லை. ஆயினும் ஒன்றே ஒன்று இருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்ளும். அதாவது ஒருகாலத்தில் நான் தேவலோகம் போயிருந்தேன். அவ்விடத்தில் இந்திரன் சிஷ்டர்களை வரவழைத்து ஒரு சபை கூட்டினான். அந்தச் சபையில் நானும் ஒருநாழிகை தங்கியிருந்து அந்த மஹாத்மாக்க ளாகிய சிஷ்டசங்கத்தில் சகவாசம் செய்தேன். அந்த ஒரு நாழிகை சகவாச பலனில் உமக்குக் கால் நாழிகை பலனைக் கொடுக்கிறேன்'' என்று தாரை வார்த்தார்.

 

விசுவாமித்திரருக்கு மஹாகோபம் வந்துவிட்டது.'' வசிஷ்டரே! நான் ஏதாவது கேட்டேனா? நான் வேள்வியைத் தரிசிக்க வந்தவனேயன்றி உம்மிடம் பரிசு பெற வரவில்லை. என் வேள்வியில் உமக்கு நான் ஆயிரவருஷ தவப்பலனைக் கொடுத்தேன். நீர் அதற்குப்பதிலாகச் சிஷ்டர்கள் கூடிய சற்சங்கத்தில் கூடியிருந்த ஒரு அற்பநாழிகைப் பலனில் கால் நாழிகைப் பலனைக் கொடுத்தேன் என்று கூறி என்னை அவமானம் செய்தீரே! இப்படி என்னை அவமதிக்கலாமா? " என்று கடுகடுத்துக் கூறிச் சபையாரை நோக்கி " இது நியாயந்தானா? நீங்கள் சொல்லுங்கள்'' என்று கேட்டார். அதற்குச் சபையார் இன்னது சொல்வதென்று தோன்றாமல் மௌனமா யிருந்தார்கள். விசுவாமித்திரரோ விடுவதாயில்லை. அடிக்கடி சபையாரைக் கேட்டார். அப்போது வாமதேவர், '' வசிஷ்டமுனிவரே! தக்க சமாதானங்கூறி இவரைச் சாந்தப்படுத்தும் " என்று கூறினார். வசிஷ்டர் விசுவாமித்திரரை நோக்கி முனிவரரே! நீர் சென்று சூரியனையும் ஆதிசேஷனையும் அழைத்துக்கொண்டு வாரும். அவ்விருவருமே நமது வழக்கைத் தீர்க்க வல்லவர்கள்" என்று சொல்லி அனுப்பினார். விசுவாமித்திரர் அதிக கோபத்துடன் சூரியனிடம் சென்றார்.
 

''சூரியபகவானே! எனக்கும் வசிஷ்டருக்கும் ஒருவழக்கு நேர்ந்திருக்கிறது. அந்த வழக்கைத் தீர்க்கும் பொருட்டு நீர் யாகசபைக்கு வரவேண்டும். தயவு செய்து எழுந்தருளும்" என்றார். சூரியன் 'விசுவாமித்திரரே! உமது மகிமையை நான் அறிவேன். உம்மை மனத்துப் பேசும் வல்லமை எனக்கு இல்லை. என் தொழிலைச் சற்றுக்கவனியும். ஒரு க்ஷணத்துக்கு நான் நூறுகாதம் செல்லவேண்டும். இந்தத் தேரைவிட்டு நான் இறங்கி வந்தால் என் வேலை நடவாதே. நடவாவிட்டால் உலகத்துக்கு எவ்வளவு கெடுதி உண்டாகும். அதற்கு ஒரு வழி செய்தால் நான் வரத் தடையில்லை'' யென்றார். விசுவாமித்திரருக்கு ஒன்றுந் தோன்றவில்லை. உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு ஆதிசேஷனிடம் போய் அவளிடம் தமது சங்கதியைக் கூறி அவனை அழைத்தார்.

 

அவன் "முனிவரே! இந்தப் பூமி என் தலைமேல் நிலைபெற்றிருக்கின்றது. நான் வருவதாயிருந்தால் எனக்குப் பதிலாக இந்தப் பூமியைத் தாங்க ஒருவர் வேண்டுமே. அதற்கு ஒரு உபாயம் செய்தால் நான் வரத் தடையில்லை'' என்று சொன்னான். விசுவாமித்திரருக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. சற்று நேரந் திகைத்து நின்று பின் யாகசபை வந்து சூரியனும் சேஷனும் கூறியதைச் சொல்லி யாது செய்வது என்றார்.

சபையார் வசிஷ்டரை நோக்கி ''வசிஷ்டரே! சூரியனும் ஆதிசேஷனும் வரவேண்டியது அவசியமானால் நீரேபோய் அழைத்து வாரும்" என்று கூறினார்கள்.

 

வசிஷ்டர் தமது யோக வலிமையால் வானமார்க்கமாய்ச் சென்று சூரியனுக்கு எதிரில் நின்றுகொண்டு " பகவானே! எங்களுடைய வழக்கைத் தீர்க்கும் பொருட்டு எங்கள் சபைக்கு எழுந்தருள வேண்டுகிறேன். உமது உத்தியோகத்துக்குத் தகுந்த ஏற்பாடு செய்கிறேன். இரதத்தை விட்டு இறங்கியருளும்; நாம் முன்பு ஒருகாலத்தில் சிஷ்டர்கள் கூடிய சபையில் ஒருநாழிகையிருந்தோமல்லவா? அந்தப் பலனில் கால் நாழிகைப் பலனை விசுவாமித்திரருக்குக் கொடுத்துவிட்டேன். மீதியிருப்பதில் கால் நாழி கைப்பலனை உமக்குப்பதிலாக வைக்கிறேன் " என்று கூறிக் கால் நாழிகைப் பலனைத் தேரில் ஆவாகனம் செய்தார். அது சூரியனைப்போல ஒளிவீசிக் கொண்டு திவ்விய சொரூபமாய் நின்றது. அருணன் தேரை ஓட்டிக் கொண்டு போய்விட்டான்.

 

பிறகு இருவரும் ஆதிசேஷனிடம் போய் அவனிடம் பேசி அவனுக்குப் பதிலாக முனிவர் கால் நாழிகைப்பலனை அவன் ஸ்தானத்தில் ஆவாகனம் செய்தார். அது ஒரு பெரிய உருவங்கொண்டு பூமியைத் தாங்கிக்கொண்டு நின்றது. பிறகு மூவரும் வானமார்க்கமாய்ப் புறப்பட்டுச் சபையில் வந் திறங்கினார்கள். விசுவாமித்திரரும் சபையாரும் ஆச்சரியத்துடன் ''வசிஷ்டமுனிவரே! இவர்களை யெப்படி அழைத்துக்கொண்டு வந்தீர்?'' என்று கேட்டார்கள். வசிஷ்டர் 'முனிவரர்களே! விசுவாமித்திரருக்குக் கொடுத்தது போக மீதியாயிருந்த என் சற்சங்கசகவாசபலனில் கால் நாழிகைபலன் சூரியனுடைய அதிகாரத்தைச் செலுத்துகின்றது. மற்றொரு கால் நாழிகை பலன் பூமியைச் சுமந்து கொண்டு நிற்கின்றது. மிச்சமான கால் நாழிகை பலன் இகபரசாதகார்த்தமாக எனது ஆத்மாவில் கலந்து விட்டது'' என்றார். எல்லாரும் சந்தோஷமாக வசிஷ்டரைக் கொண்டாடி 'முனிவரே! தங்களால் நாங்கள் ஒரு அற்புதமான விஷயத்தைத் தெரிந்து கொண்டோம்'' என்று கூறிப் புகழ்ந்தார்கள்.

 

விசுவாமித்திரரும் வசிஷ்டரைப் புகழ்ந்து 'நான் உமக்குக் கொடுத்த ஆயிரவருஷ தவப்பலன், நீர் எனக்குக் கொடுத்த சற்சங்கசகவாச பலனில் கால் நாழிகை பலனில் கோடியில் ஒரு பங்குமாகாது. என் குற்றத்தை மன்னித்தருளும்" என்று பிரார்த்தித்து வேண்டினார். பிறகு இருவரும் உறவாயினர். எல்லாரும் தத்தம் ஆசிரமம் போய்ச் சேர்தார்கள். ஆதலால் சிஷ்டருடைய ஆசாரமும் வசனமும் பெரும்பயன் அளிப்பன என்று தெளியலாம். இந்தக் கதை குணார்த்தவாதமாம். சற்சங்க சகவாசத்தையும் சத்துக்களுடைய மகிமையையும் விளக்க எழுந்ததேயாம். இதனால் நாம் சிஷ்டாசாரத்தைப் புகழ்ந்து அவர்கள் சென்ற வழியே சென்று உய்வோமாக. சிஷ்டர் இலக்கணத்தைக் கொஞ்சம் பின்னால் வரைவோம்.


சிஷ்ட விலக்கணம்.

 

மாற்சரியம், அகங்காரம், ஆசை, இடம்பம், தருப்பம், லோபம், மோகம். குரோதம் இவைகளை ஒழித்திருப்பவர்களே சிஷ்டர்கள் எனப்படுவார்கள். அந்தப் பிராமணர்கள் தர்மசாஸ்திரமாகிய இரதத்தில் ஏறிக்கொண்டு வேதமாகிய கத்தியைத் தரித்திருப்பார்கள். அவர்கள் விளையாட்டாகப் பேசுவது கூடத் தர்மமாகவே யிருக்கு மென்பர் கற்றுணர்ந்த பெரியோர்கள் என்று போதாயனர் கூறினார். வேதசாஸ்திரங்களைக் கற்றறிந்த நாலு பிராமணர்கள் கூடியிருந்தாலும், மூன்று சாஸ்திரங்களைக் கற்றவர் கூடியிருந்தாலும் அந்தக் கூட்டத்துக்குப் பரிஷத்து என்றுபேர். அந்தப் பரிஷத்தால் சொல்லப்படுவனவே தர்மமாகும். ஆத்மஞானியும் தருமசாஸ்திரம் அறிந்தவருமான ஒரே ஒருவர் சொல்வதும் சிறந்த தர்மமாகும் என்று யாக்ஞவல்கியர் சொன்னார். வேதங்களைக் கரை கண்டவர்ளான நாலுபேர் அல்லது மூன்றுபேர் சொல்வது எதுவோ அதைச் சிறந்த தருமமென்று அறியவேண்டியது. வேதசாஸ்திரம் அறியாதவர்கள் ஆவிரம்பேர்கள் சொன்னாலும் அது தர்மம் ஆவதில்லை என்று பராசரர் சொன்னார். மிகுந்த வணக்கமும், விருத்தாப்பியமும் ஆத்மஞானமும் உள்ளவர்களும், இடம்பம் பொறாமையில்லாதவர்களுமான பாதகண்டத்தின் எல்லாத்தேசத்திலும் உள்ளவர்களால் அனுஷ்டிக்கப்படும் ஆசாரம் சிறப்புடையது. அதை மனப்பூர்வமாய் அனுஷ்டிப்பவன் இகபரங்களாகிய இரண்டுலோகங்களையும் தன் வசமாக்கிக்கொள்வான் என்று ஆபஸ்தம்பர் கூறினார்.

 

இவ்வாறு கூறியதன் கருத்தியாதோவெனின், சிற்சில ஆசாரங்கள் பூர்வயுகங்களில் அனுஷ்டிக்கப்பட்டன. யுக தர்ம வலிமை தாழ்மையை நோக்கி இந்த யுகத்தில் அனுஷ்டிக்கப்படவில்லை. பூர்வ யுகங்களில் அனுஷ்டிக்கப்படாவென விலக்கப் பட்டவைகளிற் சில இந்த யுகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. அவை அகங்கார மமகார குரோத வசப்படாத சிஷ்டர்களால் யுகதரும வலிமையை நோக்கி ஒப்புக் கொள்ளப்பட்டன. ஒப்புக்கொண்டவர் வேதவே தாங்கங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் நன்குணர்ந்த மஹாத்மாக்களாதலால் அது தர்மமேயாம் என்று விளங்கிற்று. உதாரணமாக பூர்வ யுகத்தில் மாமன் மகளை அத்தை மகனும், அத்தைமகனை மாமன் மகளும் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. அவர்கள் தாய் தகப்பனுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்குப் பிறந்தவர்களாதலால் அந்தப் பெண்ணும் பிள்ளையும், சிற்றப்பன் பெரியப்பன் மக்களைப்போல சகோதர முறையுடையவர்களே யாவர். ஆதலால் அவர்களுக்கு விவாகம் செய்விக்கக் கூடாதென்று கூறி விலக்கப்பட்டது. இந்த யுகத்தில் அது தடையின்றி அனுஷ்டிக்கப்படுகின்றது. விலக்கப்படுவதில்லை. இது பூர்வ காலத்தில் சில தாழ்ந்த ஜாதியாரால் முறைமையெனக் கொண்டனுஷ்டிக்கப்பட்டு வந்தது. உயர் குலத்தாரால் அனுஷ்டிக்கப்படவில்லை. பிறகு பிராமணர் நீங்கிய உயர் குலத்தாராகிய மூவருணத்தாரும் அனுஷ்டித்து வந்தார்கள். தற்காலத்தில் பிராமணர்களும் அது முறையென்றே அனுஷ்டிக்கிறார்கள். சில வேதியர் இதை அனுஷ்டிப்பதில்லை. இது நிஷித்தமான தாயிருந்தாலும் விருப்பும் வெறுப்புமில்லாத வேதபண்டிதராகிய சிஷ்டர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட படியால் விலக்காகாது என்பது. இன்னும் சில காலத்தில் அந்நிய தேச வாசிகளைப் போலச் சிற்றப்பன் பெரியப்பன் மக்களுக்கு விவாகம் செய்வதும் விதியாய் விடும் போலும்.

 

பூர்வ யுகங்களில் அண்ணன் தம்பிகளில் எவரேனும் சந்ததியின்றியிறந்து போனால், இறந்தவனுடைய சகோதரன், இறந்தவன் மனைவியைக் கூடிப் புத்திர சந்தானம் உண்டாக்குவது விதியாயிருந்தது, இவ்விதி பாண்டவர் காலம் வரைக்கும் (துவாபரயுகம் முடிய) அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. கலியுகத்தில் இவ்விதி விலக்கப்பட்டது. பூர்வ யுகங்களில் சிராத்தகாலத்தில் மாம்சம் உபயோகிக்கப்பட்டது. இக்காலத்தில் விலக்கப்பட்டது. முற்காலத்தில் உபாயனம் செய்யப்படாத பிள்ளைகளைப் பந்தியில் வைத்துக்கொண்டு புஜிப்பதில்லை. இக்காலத்தில் புஜிக்கிறார்கள். முற்காலத்தில் சிறுவர்களுக்குப் பழைய அமுது படைப்பதில்லை. இக்காலத்தில் குற்றமில்லையென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. முற்காலத்தில் மூத்த புத்திரனுக்கு ஜேஷ்டபாதமென்று ஒருகூறு அதிகம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது. அது இக்காலத்தில் விலக்கப்பட்டது இப்படியாகப் பல விஷயங்கள் பூர்வ காலத்தில் விதியாக ஏற்பட்டிருந்தவை இக்காலத்தில் விலக்கப்பட்டன. இவையெல்லாம் காலபேதங்களை உத்தேசித்து விருப்பும் வெறுப்புமில்லாத சிஷ்டர்களால் கலியுகாரம்பத்திலேயே ஏற்படுத்தப்பட்டன. இக்காலத்தில் அகங்கார மமகார குரோதாதிதோஷங்கள் அற்றவர்களும், விருப்பு வெறுப்பில்லாதவர்களும், சாஸ்திரங்களையும் வேதங்களையும் கசடறக் கற்றுணர்ந்தவர்களும் அகப்படுவது அரிதினுமரிதே. கிடைத்தாலும் தாக்ஷண்யம், அச்சம், ஆசை இம்மூன்றுமில்லாதவர்களும் சுயநலங்கருதாதவர்களும் கிடைப்பதரிது. இக்காலத்து வைதிகர் பலர் காசாசையினாலும் தாட்சண்யத்தினாலும் விதி கடந்து நடப்பது பிரத்தியட்சம். ஆதலால் இக்காலத்தில் சிஷ்டர்களென்று நூல்களாற் புகழப்பட்ட பெரியோர்கள் இரார்களென்றே கூறவேண்டும். ஆதலால் பராசர ஸ்மிருதியாதி நூல்களிற் கூறப்பட்ட விதிவிலக்குகளையே நாம் அனுஷ்டிக்க வேண்டும். பராசராதிஸ்மிருதிகளால் கலியுகத்துக்கு ஏற்பட்ட விதி விலக்குகளே கூறப்பட்டனவாதலால் அதைப்பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை.

 

எல்லா வருணத்தாரும் தத்தம் வருணாசிரமங்களுக்கடுத்த தர்மத்தையே அனுஷ்டிக்கவேண்டும். அதனால் குறைவற்ற சுகம் கிடைக்கும். அன்றியும் மனிதன் மறுஜன்மத்திலும், தான் இந்த ஜன்மத்தில் அனுபவியாமல் விட்டிருக்கும் புண்ணிய பலனை அனுபவிப்பான். மறுஜன்மத்தில் செல்வம் கல்வி புகழ் இவற்றால் சிறக்க உயர் குலத்திலே பிறந்து சற்கருமானுஷ்டானங்களையே செய்வான். அழகு அறிவு வலிமை முதலியவற்றையும் பெறுவான். சக்கரம்போலச் சுழன்று வரும் இகபரமென்கிற இரண்டு லோகங்களிலும் அவன் சுகத்தைப் பெறுவானே யன்றித் துன்பத்தை அடையவே மாட்டான் என்று ஆபஸ்தம்ப முனிவர் கூறினார்.

 

தர்மத்தினால் இவ்வுலகம் நிலைநிற்கின்றது. அந்தத் தருமத்தைத் தவிர அனுஷ்டிக்கத் தக்கது மற்றொன்றுமில்லை ஆதலால் தருமத்தையே விரும்பிசசெய்ய வேண்டும் என்று தைத்தரீய வேதம் கூறுகிறது. இதன் தாற்பரியம் யாதென்றால், நித்திய நைமித்திக சிரௌதஸ்மார்த்த கருமங்களே தருமம் என்று சொல்லப்படுவனவாம். இந்தத் தருமத்தினாலே பலவித வேற்றுமையாயுள்ள உலகங்கள் நிலைபெறுகின்றன. ஆதலால் இந்தப் பயனையடைய விரும்புவோரும் இந்தத் தருமத்தையே அனுஷ்டிக்க வேண்டு மென்பது. அவ்வேதத்தில் உள்ள மற்றொரு வசனம் முன் விவரித்துக் கூறிய தருமமே சகல ஜகங்களையும் நிலைநிறுத்துகின்றது. உலகத்திலும் தர்மானுஷ்டானம் செய்பவனையே எல்லாரும் புகழ்ந்து அவனையடைகிறார்கள். விதித்த கருமத்தைச் செய்வதனாலே ஒருவன் தான் செய்த பாவங்களையெல்லாம் தொலைக்கிறான். சர்வமும் தருமத்தையே அடுத்திருக்கின்றது. அஃதில்லாவிட்டால் எல்லாம் ஒழிந்துபோகும். ஆகையாலேதான் தர்மசாஸ்திரம் உணர்ர்தவர்கள் தருமமே உயர்ந்ததென்று சொல்கிறார்களென்று வெளிப்பட்டது. ஜாதி ஒன்றை மாத்திரம் அடுத்து ஏற்பட்ட தருமம் வருண தருமமென்னப்படும். உதாரணம் உபநயனம். அதுவே ஆசிரமத்தை அடுத்திருந்தால் ஆசிரமதருமம் என்னப்படும். உதாரணம்: பிக்ஷை தண்டம் முதலியவை; இவை வர்ணத்தையும் ஆசிரமத்தையும் அடுத்திருந்தால் வர்ணாசிரம தருமம் என்னப்படும். உதாரணம்: முஞ்சி அரைநாண் முதலியனவும் அவைபோன்றனவே என்று ஸ்மிருதி சந்திரிகை கூறுகின்மது. 

 

கறையான் புற்றை விருத்தியாக்குவது போல எந்தப் பிராணியையும்
வருத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தருமத்தை ஒருவன் சேர்க்கவேண்டும். அது பரலோகத்துக்கு உதவியாகும். தன் பிதாவாவது புத்திரனாவது மனைவியாவது பரலோகத்தில் வந்து உதவி செய்வதில்லை. பர்துக்களும் அணுகார். தான் செய்த தருமமே உதவிசெய்யும். ஒருவனே பிறந்து இறப்பது போல ஒருவனே சுகதுக்கங்களை அனுபவிப்பான். மரித்தவன் சரீரத்தைக் கட்டையைப் போலவும், மண்கட்டிகல் முதலிய போலவும் மனிதர் பூமியில் விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் போய் விடுவார்கள். அவன் செய்த புண்ணிய பாபங்கள் மட்டும் அவனைப் பின் தொடர்ந்து செல்லும். ஆகையால் தனது சொந்த நன்மைக்காகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தருமத்தைத் தினந்தோறும் செய்யவேண்டும். தரும சகாயமிருந்தால் கடக்கக் கூடாத அந்தகாரத்தை யெளிதில் கடந்து செல்லலாம். தர்மானுஷ்டானம் செய்பவனும், தபசினால் பாபமற்றவனுமான புருஷனை மேலான பரலோகம் தானே அடைகிறதென்று மனு எடுத்துக் கூறினார்.
 

இதனால் அகங்காரம், பொறாமை, பொய்ம்மை இல்லாதவர்களும், எல்லாப் பிராணிகளிடத்திலும் இரக்கமும் தயவும் உடையவர்களும், கலங்காத சித்தமுடையவர்களும், சகல சாஸ்திரங்களையும் கசடறக் கற்றுணர்ந்தவர்களும் அவற்றின் பொருளைத் தெளிவாயெடுத்துக்கூறி உலகத்துக்கு உபகாரம் செய்கிறவர்களும், ஆஸ்திக புத்தியும் தெய்வசிந்தையும் உள்ளவர்களும், தர்மானுஷ்டான சீல முடையவர்களும், சாஸ்திரங்களில் உண்டாகும் சாதேகங்களை நிவிர்த்தி செய்யக் கூடியவர்களும் பட்சபாதக மற்றவர்களும், ஜபதபங்களைச் சரியாய்ச் செய்து வருகிறவர்களும், எப்போதும் ஹிதத்தையே சிந்திப்பவர்களுமாயுள்ளவர்களே சிஷ்டர்கள் என்னப்படுவார்களென்பது எல்லா ஸ்மிருதிகளுக்கும் ஒப்ப முடிந்த கருத்தாம் என்க.


ஆரியாசாரம் – பிதிருயக்ஞம்

 

முன்பு நித்திய விதி கூறிய சந்தர்ப்பத்தில் இதைப்பற்றிச் சிறிது கூறப்பட்டது; விரித்து எழுத அவகாசம் நேராமையால் சுருக்கிக் கூறப்பட்டது. ஈண்டு அதனைச் சிறிது விரிவாக எழுதுவாம்:
 

இந்தப் பிதிர்யாகத்திற்கு மேற்பட்ட கருமம் யாதொன்றும் காணப்படவில்லை. யாகாதிகருமங்களும் இதற்கு மேலாகா. யாகாதிகளையும் மற்றுமுள்ள தேவகாரியங்களையும் ஒருவன் செய்யாமல் விட்டுவிடலாம். இந்தக்கர்மத்தை ஒருபோதும் விடக்கூடாது. பிரமசாரி, கிருகஸ்தன், வானப்பிரஸ்தன் இந்த மூன்று வருணத்தாரும் தத்தம் ஆச்ரமமுறைப்படி செய்தே தீரவேண்டும். இதைவிட்டவனுக்கு எந்தக் கர்மமும் பயன் படாது. அவனைத் தேவ பிதிர் ரிஷிகளாகிய மூவினத்தாரும் வெறுப்பார்கள். இது தான் பிதா மாதா, பிதாமகன் பிதாமகி, பிரபிதாமகன் பிரபிதாமகி இயர்களுடைய திருப்தியைக் குறித்துப் பிதிர்த்தேவர்களை ஆராதிப்பதாம். இதற்குக் கிருதக்ஞை என்று பேர் கூறப்படும். அதென்னவென்றால் "நன்றியறிவு" என்பதாம்.

 

கேவலாவஸ்தையில் யாதொன்றையும் அறியாமல் மயங்கிக் கிடந்த ஜீவான்மாவைப் புருஷன் இரண்டு மாதம் கருவிருந்து பரிபாகப்படுத்தி ஸ்திரீயின் கர்ப்பாசயத்திலிட்டுக் கருவிகாணாதிகளை நல்கிச் சகலாவஸ்தையிற் கூட்டி, நன்மை தீமைகளைப் பகுத்தறியும் மெய்யறிவைப் பிரகாசிப்பித்து அதனால் தேவாராதனை முதலிய சற்கருமங்களை உணர்த்தி, அதுமூலமாகச் சொர்க்காதிபுவனங்களையும், ஜன்மாந்தரத்தில் மீளாக்கதியாகிய மோட்ச கதியையும் அடையும்படி மாதா பிதாக்கள் உபகரித்தார்கள். இதற்கு மேற்பட்ட ஒன்றுமே யில்லையல்லவா? இந்த உபகாரத்தை மறவாமல் அவர்களுக்குப் பிரதி உபகாரம் செய்வதே இதுவாதலால் மிகச் சிறந்தது. இதைச் செய்யாதவனுக்குத் தேவாராதனை தானாதிதர்மங்கள் யாவும் ஒருபயனுங் கொடா. ஆதலால் எப்பாடுபட்டாவது. பிச்சையெடுத்தாவது இதனைச் செய்தே தீரவேண்டும். இதைச் செய்வதனால் நன்றியறிதலாகிய பயன் எப்படி வரும்? பிதிர்க்களுக்கு யாது பயன்? என்னின், இது பயனாம்.

 

அதாவது, பிதிர்த்தேவதைகள் சிராத்த பலனைப் பிதிர்க்களிடம் சேர்ப்பித்து விடுவார்கள். பிதிர்க்கள் அதனால் தாங்களிருக்கும் நரகாதி துன்ப உலகங்களை விட்டு வேறிடம் சென்று வேறு ஜன்மத்தை அடைவார்கள். நரக துன்பத்தினின்றும் பிதிர்க்களை விடுவிப்பதே பிதிர்யாகத்தின் பயனாம். அப்படி விடுபட்டவர்கள் தம் சந்ததியாரை மனமொத்த அன்புடன் ஆசீர்வதித்து வாழ்த்துவார்கள். அதனால் கர்த்தாவின் சந்ததி கெடாமல் விருத்தியாகும். இது மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுவதாதலால் அதற்குச் சிரார்த்தமென்று நூல்கள் பெயரிட்டு வழங்கும்.

 

அத்திரி புத்திரர், தத்தாத்திரேயர்; அவர் புத்திரர் நிமியென்பவர். நிமிக்கு ஸ்ரீமான் பிறந்தான். ஆயிரவருஷகாலஞ் சென்றபின் காலகதியை அடைந்தான். அதனால் நிமிக்குத் தாங்கமுடியாத துக்கம் உண்டாயிற்று. துக்கம் மிகுந்த நிமி தன்புத்திரனுக்கு நன்மை செய்வதைக் குறித்து வெகு நாள் ஆராய்ந்தார். பிறகு கிருஷ்ணபட்ச சதுர்த்தசியின் இரவில் தூங்காமல் யோசித்துச் சிரார்த்தம் செய்யும் முறையைத் தீர்மானித்துக் கொண்டார். மறுநாள் அமாவாஸை தினத்தில் தம் புத்திரனுக்குப் பிரியமான காய் கனி கிழங்குகளைச் சேகரித்துக்கொண்டு சிறந்த பிராமணர்களை வருவித்துத் தெற்குமுக நுனியாக இலைகளைப் போட்டு, ஏழுபிராமணர்களையும் உட்காரவைத்துப் போஜனமிட்டார். அப்போது உப்பில்லாச் சாமை அரிசிச் சாதமே போடப்பட்டது. அவர்கள் புஜித்தபின் தெற்கு நுனியாகப் போடப்பட்ட தர்ப்பையில் தன்புத்திரனுக்குப் பிண்டப்பிரதானம் செய்தார். அவருக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்று.
 

பிறகு தாம் செய்த காரியத்தைப்பற்றி வருந்தி இது தர்மமோ அதர் மமோவென்று கவலைப்பட்டார். இதற்கு முன் ரிஷிகளால் செய்யப்படாத இந்தக்காரியத்தை நான் என் செய்தேன்! ரிஷிகள் சாபமிட்டு என்னைவிட்டு நீங்கிவிட்டால் என்ன செய்கிறது? என்று சிந்தித்துத் தமது குலோத்தமராகிய அத்திரிமுனிவரைச் சிந்தித்தார். உடனே அத்திரிமுனிவர் வந்து நிமிக்கு ஆறுதல் சொல்லி நீ செய்தகாரியம் எனக்குச் சம்மதம். ஏனென்றால் ஆதிகாலத்தில் பிரமதேவர் இந்தத் தர்மத்தை நியமித்திருக்கிறார். பிரமாவைத் தவிர வேறு யாவர் சிரார்த்த விதியை ஏற்படுத்தும் சக்தியுள்ளவர்? பிரமாவினால் நியமிக்கப்பட்ட தர்மவிதியையே நீ அனுசரித்தாய். துக்கப்படவேண்டாம். பிரமாவினால் ஏற்படுத்தப்பட்ட சிரார்த்தவிதியை உனக்குச் சொல்வேன். நீ அதைத் தெரிந்து கொண்டு செய் என்று சொல்கிறார்.''

 

“ஆதிகாலத்தில் பிரமதேவர் மந்திரத்தோடு ஓரிடத்தை உண்டாக்கினார். அவ்விடத்தில் அக்கினியுடன் கூடியிருக்கும் ஸோமன், பிதிர்க்கள் இவர்களுக்கு ஹவிர்ப்பாகங்களை ஏற்படுத்தினார். சிரார்த்தத்தில் பூமிதேவி யையும் வருணனையும் துதிக்கவேண்டும். பிறகு அக்கினியையும் ஸோமனையும் ஆராதிக்க வேண்டும். பிரமதேவரால் படைக்கப்பட்டவர்களும் சூரிய கிரணங்களையே புசிப்பவர்களுமான பிதிர்த்தேவதைகளையும் ஆராதிக்க வேண்டும். காலகதியை நடத்துகிறவர்களும், எந்நாளுமுள்ளவர்களும், மஹாத்மாக்களுமான விசுவ தேவர்களே பிரதானமானவர்கள். இவர்கள் ஸஹன் என்பவர் முதல் ஈசுவரன் என்பவர் ஈறாக அறுபத்து நாலு பேர்கள் என்று நூல்கள் கூறுகின்றன.

 

சிரார்த்தத்தில் கேழ்வரகு முதலிய இழிந்த தானியங்களை உபயோகிக்கப்படாது. பெருங்காயம், உள்ளி, வெண்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் முதலிய காய்களு மாகா. துப்புதல், இரு முதலும் ஆகா. காஷாயம் உடுத்தினவன், சண்டாளன், சக்கிலியன் முதலியவர்களையும் சேர்க்கலாகாது. என்றால் அவர்கள் சம்பந்தம் எவ்வகையிலும் ஆகாது என்பது. பாபிகளையும் பாபிகளோடு சேர்ந்தவர்களையும் ஒதுக்க வேண்டும். குஷ்டரோகியை விலக்கவேண்டும். அமாவாசையில் சிரார்த்தம் செய்யவேண்டும்'' என்று கூறி அத்திரிமுனிவர் பிரமலோகம் போய்விட்டார். இப்படித்தான் சிரார்த்தகிரியை தொடங்கப்பட்டது.

 

அதன்பிறகு எல்லா ரிஷிகளும் விதிப்படி சிரார்த்தம் செய்யத் தொடங்கினார்கள். சிரார்த்தம் செய்த பின் தர்ப்பணமும் செய்தார்கள். நாலுவருணத்தாரும் செய்தார்கள். இப்படிச் செய்யப்பட்ட சிரார்த்தத்தில் புஜித்த தேவர்களும் பிதிர்க்களும் புஜித்த உணவை ஜீரணிப்பித்துக்கொள்ள சக்தியற்றுப் போயினர். சந்திரனிடம் போய் " ஸோமனே ! நாங்கள் சிரார்த்த போஜனத்தினால் வருந்துகிறோம். எங்களுக்கு நன்மையைச் சொல்'' என்றார்கள். ஸோமன் " நீங்கள் பிரமாவினிடம் போய்க் கேளுங்கள். பரிகாரம் அவர் கூறுவார்'' என்றான். அப்படியே தேவர்களும் பிதிர்க்களும் மேருமலைச்சிகரத்தில் வீற்றிருக்கும் பிரமதேவரைக்கண்டு தம் குறைகளை கூறினார்கள். அதுகேட்ட பிரமா " என்பக்கத்தி லிருக்கும் அக்கினி உங்களுக்குப் பரிகாரம் செய்வான்'' என்றார். அக்கினிதேவனும் அவர்களை நோக்கிச் ''சிரார்த்தகாலத்தில் நாம் சேர்ந்தே புஜிப்போம்; என்னுடன் கூடியிருப்பதினால் உங்களுக்கு அஜீர்ணம் உண்டாகாது'' என்றான். பிரமதேவர், புலஸ்தியர், வசிஷ்டர், புலகர், அங்கிரஸ், கிரது, காசியபர் என்னப்பட்ட மஹாயோகேசுவரர்களாகிய இவ்வேழுபேருமே பிதிர்த்தேவதைகள் என்னப்படுவார்கள். சிரார்த்தம் செய்து ஸபிண்டீகரணம் செய்வதனால் இறந்த வர்கள் பிரேதத்தன்மையினின்றும் விடுபடுகிறார்கள். முதலில் பிதாவுக்கும், இரண்டாவது பிதாமகருக்கும், மூன்றாவது பிரபிதாமகருக்கும் பிண்டப்பிரதானம் செய்யவேண்டும். ''ஸோமாய பிதிருமதே'' என்று கூறிப் பிதிர்க்களுக்கு அதிகாரியான ஸோமனுக்கு என்றும் கூற வேண்டும். தன்னினத்தாருக்கும், தன் வம்சப்பித்திருக்கும் தர்ப்பணம் செய்யவேண்டும். கிருஷ்ணபட்ச முடிவாகிய அமாவாசையிலேயே சிரார்த்தம் செய்ய வேண்டும்.

 

எல்லா ரிஷிகளும் அமாவாசையில் சிரார்த்தம் செய்து வந்தமையால் நிமிந்திரணம் புசிக்கப் பிராமணர்கள் அகப்படுவது அருமையாயிற்று. ஒரு அமாவாசையில் நிமிந்திரணம் புசித்தவர்களே மறு அமாவாசையிலும் புசிப்பது கூடாது என்ற விதியினாலும் பிராமணர்கள் கிடைப்பதில்லை. அநேக ரிஷிகள் உபவாசமிருப்பதும் காரணமாம். பிறகு ரிஷிகள் எல்லாரும் பிரம்மதேவரை அடைந்து இந்தக் கஷ்டத்தை நிவர்த்தியாக்கும்படி வேண்டினார்கள். அவர் ''நீங்கள் எல்லாரும் ஒரே திதியில் சிரார்த்தம் செய்வதால் இந்தக்கஷ்டம் நேர்ந்தது. இன்று முதல் அப்படிச் செய்வதை விட்டு இறந்தவருக்கு அவரவர் இறந்ததிதியில் சிரார்த்தம் செய்வதை விதியாகக் கொள்ளுங்கள். அமாவாசை தினத்தில் பிதிர்க்களுக்குத் தவறாமல் திலதர்ப்பணஞ் செய்யுங்கள்'' என்று விதி ஏற்படுத்தி அவர்களை அனுப்பி விட்டார். ரிஷிகள் மனமகிழ்ச்சியுடன் அப்படியே செய்யத் தொடங்கினார்கள். அதுமுதல் நாலுவருணத்தாரும் தத்தம் பிதிருக்கள் இறந்த தினத்திலேயே சிரார்த்தம் செய்து வருகிறார்களென்று ஸ்ரீ மஹாபாரதம் கூறுகின்றது. அநேக ஸ்மிருதிகளும் கூறுகின்றன. பிதிர்யாகமாகிய இந்தச் சிரார்த்தகிரியையைச் செய்யாமல் விட்டவனைத் தேவர்களும் பிதிர்க்களும் சபிப்பார்கள். அதனால் அவன் இகபரமிரண்டிலும் துன்பத்தையே அனுபவிப்பான். சன்மார்க்கசீலர்கள் இதை விடாமல் செய்யவேண்டும்

.
குரு.

 

பிதிர்யக்ஞம் கூற வெடுத்துக்கொண்ட யாம் அதைச் சற்று நிறுத்தி வைத்து வேறு விஷயத்தைப்பற்றிச் சிறிது கூறிப் பிறகு தொடர்வோம். எல்லா விஷயத்துக்கும் குரு பிரதானம். குருலில்லாத வித்தை எதுவும் பயன்படாது. குரு வில்லாதவன் தன் புத்தியினாற் செய்யும் கருமம் ஒன்றும் பயன்படாது. ஈண்டு வித்தை என்றது நமது மதத்தைப் பற்றிக் கூறும் வேதம், வேதாங்கம், ஸ்மிருதி, புராணம், இதிகாசம், வேறு கலைஞானங்களுமாம். இதைக் கூறினால் இக்காலத்தாருக்குப் பரிகாசமாகத் தோன்றும். நாம் உண்மையை வெளியிட வெழுந்தோமாதலால் அதைக் கவனியாமல் கூறுகிறோம். ஏனெனில் இந்தச் சாத்திரங்கள் இந்த ஜன்மத்தில் அல்லது ஜன்மாந்திரத்திலாவது பரமானந்த மோட்ச சுகத்தைக் கொடுக்கக்கூடி யனவாதலால் இந்தச் சாஸ்திரங்களையே ஆரியர் அப்பியாசிக்க வேண்டியவர்கள். இதைக்கல்லாமல் பிறர் கூறும் சாஸ்திரங்களைக் கற்றுக் குதர்க்க வாதியாய்த் தர்மார்த்த மோட்ச நூல்களை யிகழ்கிறவன் நரகத்தையே அடைவான். வேதத்தை ஓதவும் சாஸ்திரங்களைப் படிக்கவும் இக்காலத்தவர்க்கியலாது. ஏனெனில் ஜீவனார்த்தத்துக்காகப் பொருள் தேடவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. ஆதலால் பொருள் தேடுவதற்கு வேண்டியவைகளையே கற்கவேண்டியிருக்கிறது. இப்போது ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தமும் ஆபத்துமான காலமாம். ஆதலால் வேதாதி கலைகளைக் கற்க அவகாசமில்லை என்னலாம். அது உண்மையே. அதற்கு முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட விதிகளுமுண்டு.

 

அது ஒவ்வொருவரும் பரம்பராக்கிரமமாக வரும் குலாசார தர்மங்களைக் கைவிடாமல் அனுஷ்டிப்பதேயாம். பிராமணன் வேதாதிகளை யோதாதவனாயினும் சந்தியாவந்தனாதி நித்தியகருமங்களைத் தவறாமல் அனுஷ்டித்துக் காயத்திரி மஹாமந்திரத்தை முறைப்படி ஜபித்து வருவானேயானால் அவன் வேதாதி சகல கலைகளையும் ஓதின பலனை அடைந்து, சொர்க்காதி புவன போகங்களையும் அனுபவித்து ஜன்மாந்திரத்தில் முத்தியையும் பெறுவான். காயத்திரி, மந்திரங்களுக்கு மாதாவாகவும், வேதத்துக்கு மூலமாகவும் உள்ளது. ஆதலால் அதை மாத்திரம் விடாமல் திரிகாலங்களிலும் ஜபித்து வந்தால் அவன் நற்கதி பெறுவான். ஏனையவர் தத்தம் வானத்துக்கும் குலாசாசத்துக்கும் ஒத்தபடி அனுஷ்டானங்களைச் செய்து வாவேண்டும் இது செய்தால் அவர்கள் புண்ணிய சாலிகளாவார்கள். இரவும் செய்யமுடியாதென்றால் அது அவர்கள் கர்மவசம் என்று கமிக்கவேண்டியது இவ்விதம் ஓதி யுணர்ந்தவர்கள் குருபக்தி யுடையவர்களா யிருக்கவேண்டும். குரு இன்னார் என்பது கீழே கூறப்படும்.

 

நிஷேகம் முதலிய கிரியைகளை முறைப்படி செய்து அதனால் பிறந்த பிள்ளைக்கு அன்னம் ஊட்டிவளர்ப்பவன் அந்தப்பிள்ளைக்குக் குரு என்று மனு கூறினார். இதனால் பெற்ற பிதாவே குரு என்று விளங்கும், உபநயனம் செய்வித்து வேதங்களையும் கல்ப சூத்திரங்களையும் இரகசியார்த்தங்களுடன் உபதேசிக்கிறவனும் குருவாவான். ஆசாரியன் பத்து உபாத்தியாயருக்கும், பிதா நூறு ஆசாரியனுக்கும், தாய் ஆயிரம் பிதாவுக்கும் சமானமாகிறார்கள் என்று மனுவே கூறினார். குருமார் எல்லாரையும் விடத் தாய் சிரேஷ்டமானவள் என்பது நூல்களின் கருத்தும், நூல்களை யோதியுணர்ந்த பெரியோர்களின் கருத்துமாம். அது எதனால் எனில் ஈண்டு விரிக்கிற் பெருகுமாதலால் மற்றொரு தடவையில் அதை விளக்குவோம். இதனாலேயே மனிதர் தாயினிடத்தில் மிக நன்றியறிதலுள்ளவர்களா யிருக்க வேண்டுமென்று மனுவே கூறினார். ஸம்ஸ்காரகிரியைகள் எல்லாவற்றையும் செய்து வேதோபதேசம் செய்தவனே குருவாவான. (இதனாலும் பிதாவே குரு என்பது பெறப்படுகின்றது). உபநயனமானபின் வேதத்தை ஓதுவிக் கிறவன் ஆசாரியன் எனப்படுவான்; ஏதாவது சில பாகத்தைப் படிப்பிக்கின்றவன் உபாத்தியாயன் எனப்படுவான் என்று யாக்ஞவல்கியர் கூறினார். தனக்கு மூத்த தமையனும் பிதாவுக்குச் சமான குரு. ஆதலால் அவன் தனது தம்பிமார்களைத் தகப்பனைப்போலவே இரட்சிக்கக் கடமைப்பட்டவனாம். தம்பிகள் பயபக்தி விசுவாசத்துடன் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டும். புத்திரனுக்குப் படிப்பு முதலியன கொடுத்து உதவாத அயோக்கியனான தகப்பன் குரு ஆகமாட்டான் என்று மனு முதலியோர் சொன்னார்கள்.

 

காசு வாங்கிக்கொண்டு வித்தையைக் கொடுக்கிறவன் தான் உபாத்தியாயன். விஷ்ணுவும் இப்படியே கூறினார். தேவலர், குரு இருவகைப்படுவர் என்று கூறி விஸ்தரித்தார். இருவகையாவது ஸ்திரீ புருஷர்களாம். உபாத்தியாயன், பிதா, பெரியதகப்பன், அரசன், மாமன், மாமனார், பயத்தினின்றும் விடுவித்தவன், மாதாமகன், பிதாமகன், முதல் வருணத்தார், தகப்பனுடன் பிறந்தவர்களாகிய இவர்கள் புருஷர்களிற் குரு வாவார். மாதா, மாதாவைப்பெற்றவள், இவர்கள் பெண்களுள் சிரேஷ்டகுருவாவர். தகப்பனுடன் கூடப் பிறந்தவள், தாயுடன் பிறந்தவள், மாமியார், பிதாமகி, அக்காள், பால்கொடுத்து வளர்த்தவள் இவர்களும் பெண்களில் குருவாவார்கள். இவ்வாறு குருவர்க்கம் இருவகைப்படும் என்றும், இவர்களுள் ஐந்து பேர் உத்தமர்கள் என்றும், அவர்கள் யாரெனில் மந்திர முதலியன உபதேசித்தவரும், தாயும், வேதாதி வித்தைகளை உபதேசித்தவரும், மூத்ததமையனும், எஜமானனுமாவர்; அவர்களுள் மந்திரோபதேசஞ் செய்தவரும், வித்தையை அளித்தவரும், தமையனும் சிறந்தவர்கள்; தாய் இவர்கள் எல்லாரையும் விடச் சிறந்தவளாவாள் என்றும் தேவலர் கூறினார். தகப்பன், தாய், இவர்களின் சகோதரி, மூத்த சகோதரி இவர்களைத் தாயைப் போலவே கருதவேண்டும். ஆனாலும் தாய் எல்லாரையும் விட அதிகமாய்ப் பூஜிக்கத்தக்கவள். தாயானவள் சிசுவைப் பத்துமாதகாலம் சுமந்து, அதனால் ஆகாராதிகளின்றி வருந்திப் பிரசவகாலத்தில் கடுந்துன்பமடைந்து பின் பிரசவிக்கிறாள். குழந்தையினால் சகிக்கப்படாத துன்பமடைந்தும், அதனிடத்தில் மிக்க ஆசையுள்ளவளாய்த் தன்னுயிரைவிட மேலானதாகப் பாவித்து அதைக் காப்பாற்றி வளர்க்கிறாள் ஆதலால் புத்திரன் நூறு வருஷகாலம் கஷ்டப்பட்டுத் தாய்க்குப் பணிவிடை செய்துவந்தாலும், அவள் தன்னிமித்தம் பட்ட துன்பத்துக் கீடாகாது என்று வியாசர் தாய் எல்லாரிலும் சிறந்தவள் என்பதைக் காரணத்தோடு விளக்கினார். மாதா பிதாக்களை விடச் சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் உபதேசித்த குரு சிரேஷ்டராவார் என்று மனு கூறினார். ஏனென்றால் மாதா பிதாக்களின் சம்போக சம்பந்தத்தால் கருவிற்பதிந்து, கைகாலாதி அவயவங்களைப் பெற்று வரும் சிசு பின் ஜனன மரணாதி துன்பங்களை யடையும். வேதோப தேச குருவோ வேதமந்திர ஸம்ஸ்காரத்தினால் மறு ஜனனம் வருவித்து எல்லாவற்றையும் உபதேசித்துப் பிரமஞானத்தை யுண்டாக்குகிறான். இதனால் குருவினால் கொடுக்கப்பெற்ற ஞானசரீரம் ஜனன மரண மற்றதும், புகழுடன் விளங்குவதுமாதலால் தகப்பனை விடக் குருவே சிரேஷ்டன் என்று மனுவே கூறினார். இந்தக் குரு வயதில் சிறியவனானாலும் வயதில் முதிர்ந்த குருவைப்போலவே பாவித்து அவரைப் பூஜிக்க வேண்டும். இது விஷயமாக மனு ஒரு சிறிய கதை சொல்கிறார். அதாவது, அங்கிரஸ் முனிவர் எல்லாவற்றையும் கற்று வல்லவராயிருந்தார். அவருடைய சிறிய தகப்பன் பெரிய தகப்பன், அவரவர்களுடைய புத்திரர்களாகிய இவர்கள் அவரிடம் வித்தியாப்பியாசம் செய்து வந்தார்கள். வசந்தகாலத்தில் ஒரு நாள் அங்கிரஸ் தமது சிஷ்யர்களுக்குப் படிப்பிக்கும் போது அங்கிரஸ் அவர்களை நோக்கிப் பிள்ளைகளே! தெரிந்துகொண்டீர்களா?' என்று கூறினர். அதைக் கேட்ட சிற்றப்பன் பெரியப்பன் முதலானவர்கள் அவரை வெறுத்துத் தேவர்களிடம் போய் இதைச் சொன்னார்கள். தேவர்கள் அவர்களை நோக்கி '' அங்கிரஸ் உங்களைப் பிள்ளைகாள்! என்று கூப்பிட்டது நியாயமேயாம். ஏனென்றால் படிப்பில்லாதவன் வயதில் முதிர்ந்தவனாயிருந்தாலும் அவன் பாலனுக்குச் சமானமானவனே " என்றார்கள். கற்றறிந்தவன் வயதிற் சிறியவனானாலும் வெகுபேர்களுக்குக் கல்வியைப் போதித்துப் பிதாவாகிறான். வயது முதிர்ச்சியாலும், தலை நரைத்ததனாலும், அதிகம் சம்பாதித்ததனாலும் ஒருவன் குருவாகிறதில்லை. கற்றுணர்ந்தவனே பெரியவனும் குருவுமாகிறான் என்று கூறினார்கள். ஆசாரியன், பிதா, தாய், மூத்த சகோதரன் இவர்களை அவமானம் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. ஏனென்றால் இவர்கள் முறையே ஈசுவரன், பிரமா, பூமி தேவி, பிதிருதேவதை இவர்களை ஒப்பாவார்கள். மாதா பிதாக்கள் இவன் விஷயமாக மிக்க கஷ்டப்பட்டவர்கள். வித்தையைக் கொடுப்பவன் மறு ஜனனத்தை உண்டாக்குகிறான். ஆதலால் இவர்களுக்கு வந்தனை வழிபாடுகள் செய்து உபசரிக்க வேண்டும். இவர்கள் மகிழ்ந்தால் அவனுக்குச் சித்தியாத தொன்றுமில்லை. இந்த வழிபாடு, தவங்கள் எல்லாவற்றிலும் சிறந்த தவமாம் என்று நூல்கள் எல்லாம் கூறுகின்றன.


மந்திரம்.

 

பெற்ற பிதாவைக் குருவாகக் கொண்டு சாஸ்திரங்களையும் வேதங்களையும் ஓதுவதும், தெய்வமந்திரோபதேசம் பெறுவதுமே மிகுதியும் சிரேஷ்டமாம். அவர் ஒன்றும் அறியாதவராயிருந்தால் வேறு குருவை அடைய வேண்டும். அடையும் குரு உபதேசிப்பதில் சிரத்தையுடையவராகவும் பொறாமை ஆசைகளற்றவராகவும் இருக்க வேண்டும். சற்குலத்தில் பிறந்தவராகவும் குலாசார ஒழுக்கந்தவறாதவராகவு மிருக்கவேண்டும். நற்குண முடையவராகவும், சிஷ்யர்களிடத்தில் பிதாவைப் போன்ற பிரியமுடையவராகவும், சந்தேகங்களைத் தெளிவிப்பவராகவும், மயக்கமற்றவராகவும், இரண்டு மூன்று சாஸ்திரங்கள் பயின்றவராகவுமிருக்க வேண்டும். கோபமும் வெறுப்பு மில்லாதவராயிருக்க வேண்டும். எல்லாக் கருமங்களும் ஒத்திருப்பது மிகவும் அருமையாதலால் பாடம் சொல்வதில் உற்சாகமும், பொறுமையும், பொருளாசையில்லாமையும், உபதேசிக்கும் வல்லமையும், விஷயங்களை எடுத்து விளக்கிக் காட்டும் சக்தியும், மாணவர்களிடத்தில் பிரியமும் உள்ளவராயிருந்தால் போதும்.

குருவும் இருவகையராவார்: இலவுகிகத்துக்குரிய இலக்கண விலக்கியங்களை உபதேசிப்பவரும், பரலோக மோட்ச சாதனமான கல்வியை உபதேசிப்பவருமாவர். இந்த இகலோக பரலோகங்களுக்குரிய இருவகைக் கல்விகளுக்கும் சாதகமாயுள்ளது தெய்வபக்தி. குருபக்தியுமாம். தெய்வமும் குருவும் வேறுபட்டவரல்லர். குருபக்தி செய்வதும் தெய்வபக்தியேயாம். இலவுகிகக்கல்வியை உபதேசிப்பவரை விட ஞானகுரு அநந்த மடங்கு உயர்ந்தவராவார். ஏனெனில் இலவுகிகக்கல்வி சரீரத்தைப் பருக்கச்செய்வது; ஞானம் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கி மோட்சத்துக்கு அருகமாக்குவது. இவற்றுக்குச் சாதகமான தெய்வபக்தியில்லாவிட்டால் ஒன்றும் பலியாது. பூர்வஜன்ம புண்ணிய பலத்தால் சித்தியாவதும் உண்டு. அது சர்வசாதாரணமல்ல. ஆதலால் மனிதர்கள் எவ்வகையிலும் தெய்வ உபாசனை செய்யவேண்டியவர்கள்

 

இந்த உபாசனையும் சொரூப உபாசனை, மந்திரோபாசனை என இரு வகையாம். சொரூப உபாசனை யென்பது தனது குருவின் சொரூபத்தையும், தனது குலத்தார் பரம்பரையாக ஆராதித்து வந்த தெய்வத்தின் திவ்ய மங்கள விக்கிரகசொரூபத்தையும் சதாசிந்தித்துக் கொண்டிருப்பது. மந்திரம் இந்தத் தெய்வத்துக்கு இது சொரூபமென்று வேதம் விதந்து கூறிய அக்ஷர சொரூபங்களாம். அக்ஷரம் நாதப்பிரமமாதலால் அதுவும் தெய்வத்துக்குச் சொரூபமாயிற்று. அது பஞ்சாட்சர, ஷடாக்ஷர, அஷ்டாக்ஷரங்க ளென்று சைவ வைணவர்களால் ஜபிக்கப்பட்டு வருவன போல்வனவாம். "மந்த்ரம்" என்பதற்கு அஞ்ஞானாந்தகாரத்தை விலக்குவது என்பது அர்த்தம். இது தெய்வத்துக்கு வர்ணசொரூப மென்னப்படும். இந்த மந்திரத்தை முறைதவறாமல் சதாஜபிப்பதால் சர்வகாரியங்களும் சித்தியாகும். பூர்வகாலத்தில் ரிஷிகள் என்று பிரக்கியாதி பெற்றவர்கள் எல்லாரும் மந்திர ஜபத்தினாலேயே சர்வசித்திகளையும் பெற்றுச் சிறந்தார்கள்.

 

முன்னே கூறிய குரு இலட்சணங்கள் பொருந்திய சற்குருவைத் தேடியடைந்து பூஜித்து மந்திரோபதேசம் பெறவேண்டும். அந்தக்குருவும் தாம் சித்தி பெற்ற மந்திரத்தையே உபதேசிக்கவேண்டும். சித்தியாக்கப்படாத மந்திரம் தனக்கும் பிறர்க்கும் பயன் தராது. அந்த மந்திரத்தை யந்திரத்துடனும் ஆராதனைக் கிரமத்துடனும் அடைய வேண்டும். யந்திரம் என்பது மந்திர அக்ஷரங்களை அடைத்துப் பூஜிப்பதற்கு வரைகளினாலாகிய சொரூபமாம். மந்திராட்சரங்களை அடைத்து முறைப்படி பிராண பிரதிஷ்டை செய்து ஆவாகனாதி ஷோடசோபசாரங்களாலும் பூஜித்து மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அக்ஷரலட்சம் ஜபித்தால் மந்திரசித்தி என்பர்.

 

ஜபிக்கும்போது அனுஷ்டிக்கத்தக்க சில விதிகளுண்டு: பிறர் செவியிர் படும்படி ஜபித்தால் பலன் தாராது. உதடு மட்டும் அசையும்படி ஜபித்தால் அது ஒருமுறை ஜபிப்பது நூறு முறை ஜபிப்பதற்குச் சரியாகும். உதடும் அசையாமல் நாக்கு மாத்திரம் அசையும்படி ஜபித்தால் ஆயிரமடங்காகும். அதையும் அக்ஷரம் அக்ஷரமாக மனதுக்குள் தியானிப்பதால் இலட்சமடங்காகும். ஜபிக்கும் போது அவ்வம்மந்திரங்களுக்கு மாலைகளைக் கொண்டு கணக்கிட்டு ஜபிக்க வேண்டும். கணக்கிடப்படும் போது பிறர் திருஷ்டியிற் படாதபடி வஸ்திரத்துக்குள் மறைத்துக்கொண்டு ஜபிக்க வேண்டும். ஜபிக்கும் போது ஜபமாலை பிறர் கண்ணில்பட்டால் பலன் தாராது. மந்திரத்துக்குரியமாலைகள் அகப்படாத போது ருத்திராட்சமாலையைக் கொண்டு ஜபிக்க வேண்டும். ருத்திராட்சம் எல்லாவற்றுக்கும் பொது வான மாலையாம். மாலையைத் தர்ஜனி மத்திமை விரல்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு அங்குஷ்டத்தால் மேல் முகமாக மணிகளைத் தள்ள வேண்டும். இப்படிச் செய்வது இகவாழ்வுக்குச் சிலாக்கியமானது. இக லோகத்திற் சிறந்த வாழ்வையும் ஐசுவரியத்தையும் கருதி ஜபிப்பவர்கள் இவ்வாறு ஜபிப்பது முறையாம். இப்படி ஜபிப்பதால் கொஞ்சநாழிகை அதிகமாகும். கீழ்முகமாகத்தள்ளுவது மோட்சத்தைக் கொடுக்கும் என்பர். இரண்டு விதத்தையும் சேர அனுஷ்டிப்பவரும் உண்டு. எவ்வாறு என்னில் ஒருமாலையில் ஐம்பத்து நான்கு மணிகள் உள்ளனவாகக் கொள்வோம். இதை ஒருமுறை மேல் முகமாகத்தள்ளி ஜபித்தால் ஐம்பத்து நான்கு கணக் காகும். நடுநாயகமணியை நீக்கிக் கீழ்முகமாக மணிகளைத்தள்ளி ஜபித் தால் இரண்டும் சேர்ந்து நூற்றெட்டாகும். இப்படி மணிகளைக் கீழும் மேலுமாகத் தள்ளி ஜபித்தால் இகபரமிரண்டுக்கும் சாதகம் செய்யுமென்பது சிலரது கருத்து. குரு எப்படி ஜபிக்கும்படி கட்டளையிடுகிறாரோ அப்படி ஜயிப்பதே சர்வ சிலாக்கியமாகும்.

 

எல்லா மாலைகளையும் விட அகூரமாலிகை என்று ஒரு மாலையுண்டு. ருத்திராட்சமாலையை விட அக்ஷரமாலிகை மிகச் சிறந்தது. இந்த மாலையால் ஜபிக்குங்கால் கரசரணாதி அவயவங்களுக்கும், தந்ததாலோஷ்டங்களுக்கும் வேலை வைக்க வேண்டியதில்லை. மனதாலேயே ஜபிக்கலாம். அப்போது மனம் ஒன்றுக்கே வேலையாம். அப்போது யந்திரம், குரு, ஆராதனைத் தெய்வம், எண்ணிக்கை யிவற்றிலே மனம் ஒன்றி நிற்கும். இந்த நாலுக்குள் ஒன்றில் மனம் பதிந்தாலும் மிக உத்தமமான பலன் தரும். பழக்கமதிகமானால் மனம், யந்திரம், குரு, தெய்வசொரூபம் இவற்றுள் ஒன்றிலேயே நிலைத்து நிற்கும். எண்ணிக்கையும் தவறுபடாது. கணக்கிட்டு ஜபிக்கப்படாத மந்திரம் பலன் கொடாது. ஆதலால் இந்த அக்ஷரமாலைக்கு மேற்பட்ட ஜபமாலை ஒன்றுமே கிடையாது. ஏனைய மாலைகளால் ஜபிக்கும் போது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே ஜபிக்க வேண்டும். இந்த அக்ஷரமாலையால் நடக்கும் போதும், நிற்கும்போதும் ஜபிக்கலாமென்பது மந்திர சாஸ்திரமுணர்ந்த மஹாத்மாக்களின் அபிப்பிராயம். இவ்வாறு முறை தவறாமல் ஜபிப்பவர்களுக்கு மந்திரசித்தி கைவரத் தெய்வம் பிரத்தியட்சமாகும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. தமது வம்சபரம் பரையில் ஆராதித்து வந்த தெய்வ மந்திரமே நற்பலன் தருமென்பது பெரியோர் கருத்து.

 

இப்படி மந்திரசித்தி பெற முயல்கிறவன் அகம்புறம் இரண்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புறம் சுத்தமான நீரினாலும், அழுக்கற்ற சுத்த வஸ்திரங்களாலும் அமையும். நூல்களாலும் பெரியோராலும் கொண்டாடப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் புறச்சுத்தத்துக்குச் சிறந்தவை. வஸ்திரங்களில் நாராலும், பட்டாலும் நெய்யப்பட்ட வஸ்திரங்களும், பஞ்சு நூலால் நெய்யப்பட்டு அழுக்கற்றிருக்கும் வஸ்திரமும் சிறந்தவை. காலை நடுப்பகல் இருபோதும் ஸ்நானம் செய்வது உபாசகர்களுக்குச் சிறப்பு என்பர். சிலர் மாலையிலும் வெய்யில் மறைவதற்கு முன் ஸ்நானம் செய்யலாமென்பர். வெய்யில் மறைந்தபின் முழுகுதல் ஸ்நான பலனைத் தராதென்றும் அது விழுப்புக்குச் சமானமே என்றும் நூல்கள் கூறுகின்றன. ஆதலால் மாலையிலும் ஸ்நானம் செய்து விதிப்படி மந்திரஜபம் செய்ய விரும்புகிறவர்கள் சிறிது மஞ்சள் வெய்யில் இருக்கும் போதே ஸ்நானம் செய்துவிடவேண்டும்.

 

அகத்தூய்மையைப்பற்றி நித்தியவிதி ஸ்நான பிரகரணத்தில் விரித்துக் கூறப்பட்டது. அது சாத்தியம், பொறுமை, கபடமற்ற நிஷ்களங்க சித்தம், ஜீவகாருண்யம், இரக்கமாதி குணங்களேயாம். இந்த மானசிக ஸ்நானம் செய்து சுத்தராயிருப்பவர் புறத்தூய்மையிற் சிறிது தவறுதலுடையவராயினும் குற்றமில்லை, அந்தக் குற்றம் பஸ்மதாரணத்தாலும் சந்தியாவந்தன கர்மத்தாலும் விலகிப்போகும். மந்திர தியானாதிகள் யாவருக்கும் பொதுவேயானாலும் பிராமணர்களுக்கு முக்கியமான தர்மமென்று வற்புறுத்திக் கூறுகிறோம். பூர்வகாலத்தில் மந்திரசித்தியில்லாத பிராமணன் ஒருவன் கூட இருந்ததில்லை. எல்லாராலும் மந்திரசித்தியாக்கப்பட்டிருந்தது. அதனாலேயே ஏனைய வருணத்தார் மூவரும் பிராமணனுக்கு மரியாதை செய்து அவனுக்கு அடங்கி நடந்து வந்தார்கள். இந்தக் கற்பக விருட்சம் பிராமணன் ஒருவனிடத்தில் கூட இல்லை. அதனாலே தான் பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போலப் பிராமணன் எல்லாராலும் அவமதிக்கப்படுகிறான். வேண்டாத வேறு விஷயங்களில் புத்தியைச் செலுத்திப் பயன் பெறமுயல்கிறான். அது பலிப்பதில்லை. ஷத்திரிய சூத்திர தர்மங்களையே தானும் செய்ய விரும்புகிறான். தன் குலாசார தர்மத்தை விட்டு ஒழித்து, பிரம தர்மபரிபாலனம் செய்ய முயலாமல் இதர தொழிலையே விடாது செய்து கொண்டு முயன்றால் பலன் எளிதில் எங்ஙனம் கிடைக்கும்?


குரு

 

தகப்பனும் மூத்த தமையனும் உபதேசம் செய்தாலும் செய்யாவிட்டாலும் குருமரியாதைக் குரியவர்களேயாவர். இவர்கள் அவ்வதிகாரத்துடன் பிறந்தவர்களாதலால் இவர்களைப் படித்தவர்கள் படியாதவர்கள் ளென்று கவனியாமலே மரியாதை செய்யவேண்டும். இது பற்றியே வேதமும் "மாதாவே தெய்வம் பிதாவே தெய்வம்' என்று கூறி அவர்களுடைய மகிமைகளை விளக்கியது. பிதாவை விட மாதா அதிச்சிலாக்கியமானவள். அதனாலே தான் நூல்களெல்லாம் பெற்றோர்களை யெடுத்துப் பேசும்போது தாயை முன்கூறிப் பிதாவைப் பின்வைத்துக் கூறுகின்றன. " மாதா பிதா குருதெய்வம்'' இது முறை கூறியது. " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பனவாதி நீதி வாக்கியங்களும் தாயை முன்னிட்டே கூறின ஆதலால் மாதா சர்வ சிரேஷ்டமானவள்.

 

அதற்குக்காரணம் யாதோவெனில் கூறுதும்: ஆத்மாக்களுக்குள் தூல சூட்சும காரணமென மூவகைச் சரீரங்களுண்டு. காசரணாதி அவயவங்களுடன் கட்புலனுக்கு விஷயமாகும் சரீரமே ஸ்தூலசரீரம். அது எல்லாராலும் காணக்கூடியது. சூட்சுமசரீரம் மலத்திலழுந்திக்கிடக்கும் உணர்ச்சியற்ற சரீரமாம், அது ஈசுரகிருபையால் தன்மாத்திரை ஐந்து, வாசனை இரண்டு, மனம் ஒன்று ஆக எட்டுக்கருவிகளுடன் கூடிய சரீரம். இதுவே ஸ்தூலசரீரத்துக்குக் காரணமாகும். இந்தச் சூட்சும சரீரந்தான் கனவில் காணப்படுவது. இது புரியஷ்டகசரீரம் என்றும் கூறப்படும். இதுவே பிரதமசிருஷ்டியில் ஜீவான் மாக்களிடத்தில் கருணை கூர்ந்த மஹேசுவரன் கர்மமல் சம்பந்தமான மாயாமலத்துடன் கலந்து செய்யப்பட்ட சரீரம். பிரமஞான நிஷ்டர்கள் ஸ்தூல சூட்சும காரணமென்கிற முச்சரீரங் களையும் தகித்து விடுவார்கள். ஆதலால் அவர்கள் அர்ச்சிராதிமார்க்க மென்னும் சூரியமார்க்கமாகப் பிரமபதத்தையடைந்து விடுவார்கள். அவர்களை விட்டு மற்றவர்களையே நாம் கவனிக்க வேண்டியது.

 

ஏனைய ஜீவர்கள் உத்தமர், மத்திமர், அதமர் என்று மூவகைப் படுவார்கள். நித்திய கர்மாநுஷ்டானங்களைத் தவறாமல் செய்து கொண்டும், தேவபிதிர்க் கர்மங்களைச் சிரத்தையுடன் செய்து கொண்டும், அதிதிகளை ஆராதித்துக்கொண்டும், இயன்ற அளவு பரோபகாரம் செய்து கொண்டும், பொய், களவு, வஞ்சனையாதிகளை விட்டும் இருப்பவர் உத்தமர் என்னப் படுவார். பிறர்க்குத் தீங்கு தேடாமலும், சன்மார்க்கத்தினால் ஜீவித்துக்கொண்டும் வைதிகநெறி ஒழுகுவோர் மத்திமராவர். பாயத்தொழில்களை வெறுப்பின்றிச் செய்து கொண்டு துர்நெறி ஒழுகுவோர் அதமர் எனப்படுவார். இவர்கள் முறையே சொர்க்காதி புவனங்களையும் அதில் தாழ்ந்த போக பூமிகளையும், அதமர் நாகலோகத்தையும் அடைவார்கள். இவர்கள் வியாதி முதலிய காரணங்களால் ஸ்தூல சரீரத்தை விட்டுச் செல்வார்கள். இவர்களை எமதூதர்கள் பற்றிக்கொண்டு போவார்கள். உத்தமர்கள் சொர்க்கத்திலிருப்பார்கள், மத்திமர் ஆசையொழியாதவர்களாதலால் திரிலோகங்களிலும் தத்தம்கர்மத்துக்குத் தக்கபடி ஜனித்துச் சுழல்வார்கள். அதமர்கள் நகரத்திலிருந்து விடுபட்டபின் திரியக் ஜந்துக்களாக ஜனிப்பார்கள்.

 

இந்த மூவகை மனிதரும் ஸ்தூல சரீரத்தை விட்டபின் பரலோகம் போகும் மார்க்கம் மூன்று, அவை இரமணீயம், நிராபாதம், தூர்த்தர்சம் என்று முறையே பெயர் கொண்டவைகள். இரமணீயம் உத்தமர் செல்லும் வழி. நிராபாதம் மத்திமர் செல்லும் பாதை. துர்த்தர்சம் பாபிகளாகிய அதமர் போகும் மார்க்கம். உத்தமர்கள் மரணம் அடையும் போது எமதூதர்கள் திவ்யாலங்காரத்துடன் மகிழ்ச்சியாய் வந்து அவர்களை யெடுத்துக்கொண்டு இரமணீயம் என்னும் மார்க்கமாகப் போவார்கள். அந்தப் பாதை இருபுறத்திலும் மலர் தரும் விருட்சங்கள் நிழல் செய்து கொண்டும் வாசனை வீசிக்கொண்டுமிருக்கும். பாதையில் பரிமளநீர் தெளிக்கப்பட் டிருக்கும். சுத்தமான குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும். மத்திமர்களை நிராபாதமார்க்கமாகக் கொண்டு போவார்கள். அந்த மார்க்கம் ஒளியுள்ளதாயும் நடக்கச் சிரமமில்லாததாகவு மிருக்கும். அதமர்கள் செல்லும் தூர்த்தர்சம் என்னும் வழி துர்க்கந்தம் வீசிக் கொண்டும், கரடு முரடாகவும் நடக்கமுடியாததாகவு மிருக்கும். எமதூதர்கள் அதமர்களுக்கு வெளிப்படும் போது சண்டாள ரூபமாகவும் பார்க்கப் பயங் கரமாகவும் தோன்றுவார்கள். மத்திமர்களுக்குப் போர்வீரர் கோலத்துடன் தோன்றி அவர்களை நிராபாத மார்க்கமாகக் கொண்டு போவார்கள். இம் மூவர்களுக்கும் கர்மவசியம், போகவசியம், யாதனாவசியம் என்று மூவ னகச் சரீரங்களுண்டு. உத்தமர்களைப் போக வசிய சரீரத்தில் சேர்த் துக்கொண்டு போவார்கள், மத்திமர்களைப் கர்மவசிய சரீரத்தில் பொருத் திக்கொண்டு போவார்கள் அதமர்களை யாதனாவசிய சாரத்தில் சேர்த்து எமலோகத்துக்குக் கொண்டுபோவார்கள். இவர்களை இம்சித்துக் கொண்டு போவார்கள்.

 

எமலோகத்தில் சிறந்த சபையில், எமதர்மராஜா தர்மாசனத்தில் விற்றிருந்தருள்வார். மந்திரி முதலானவர்களும் சூழ்ந்திருப்பார்கள். தூதர்கள் தாங்கள் பிடித்துக் கொண்டு வந்தவர்களை அவருக்குக்காட்டுவார்கள். தர்ம ராஜா உத்தமர்களை மரியாதையுடன் உபசரித்து வரவேற்று அவர்கள் செய்த நற்கர்மங்கள் அவர்களுக்குச் சித்திக்கத்தக்க உலகங்களை அடையும் படிகட்டளையிடுவார். அவர்கள் சொர்க்காதிபதவிகளை அடைவார்கள். கர்ம வசிய சரீரமுடையவர்களை உபசரித்து மீண்டும் மானிட சரீரத்தையே அடையும்படி செய்வார். யாதனா சரீரம் பெற்ற அதமர்களைத் தாம் பார்க்கவே மாட்டார். அவர்களுக்கு நரகத்தையடையக் கட்டளையிடுவார். எம தூதர்கள் அவர்களைப் பலவகையான நரகத்தில் வீழ்த்தி வருத்துவார்கள். இந்த யாதனாசரேம் எமலோகத்திலே தான் உண்டு. வேறெங்கும் இல்லவே இல்லை. பாவிகளே யாதனாசரீரத்துடன் நரக துன்பத்தை அனுபவித்து அவ்விடங்களில் வசிப்பார்கள். பாவம் ஒழிகிறவரையில் நரகாவஸ்தை ஒழிவதில்லை. இந்தநரகலோகங்கள் ரௌரவம், மஹாரௌரவம், கண்டகாவனம் அக்கினி குண்டம், அமாநுஷம் என ஐந்து வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.

 

இவற்றுள் அநேகம் பிரிவுகளுண்டு. அமானுஷம் என்பது பஞ்சஷட்கம் என்றும் சொல்லப்படும். மிகக் கொடிய பாவங்களை வெகுகாலம் செய்தவர்கள் இந்த நரகலோகத்தில் பஞ்சபூதங்களாலும் வருந்துவதனால் இதற்குப் பஞ்சஷட்கம் என்று பெயர் வந்தது. இவற்றை விரிப்பதினால் பயனில்லை. மேலே செல்வோம்.

 

இந்த நரகங்கள் ஜீவர்களுக்குப் பாவ நிவாரணமாகக் கருதப்படுகின்றன. பாவமொழிந்தபின் மீண்டும் கர்ம உலகத்தில் சரீரமெடுப்பார்கள். பாவிகள் பாவசேஷத்தினால் பசுபட்சியாதி ஜந்துக்களாகவும், மனிதர்களில் தாழ்ந்தகுலத்தில் தரித்திரர்களாகவும் ஜனித்துக் கஷ்டப்படுவார்கள். உத்தமர்கள் புண்ணிய விசேஷத்தால் உத்தம குலத்தில் கல்விகளிற் சிறந்தவர்களாகவும் செல்வவான்களாகவும் ஜனிப்பார்கள். நரகத்தினின்றும் விடுபட்டவர்கள் பிதிர்லோகம் என்னப்படும் சந்திரமண்டலத்தை அடைவார்கள். சந்திரமண்டலம் உவர்மண் அண்டமென்று கருதப்படுகிறது. அவ்விடத்தில் அடைந்த சூட்சுமசரீரங்கள் பரிபாகத்தை அடையும். சிலகாலமானபின் அவை பனித்துளிகளின் வழியாகக் கீழிறங்கும்.

 

இறங்கி மரங்கள் செடிகள் கொடிகளிற் பிரவேசிக்கும். அவ்வாறு பிரவேசித்தவை கர்மங்களுக்கேற்றபடி மிருகபட்சிகளுக்கும் மனிதர்களுக்கும் உணவாகும். அவ்வுணவினால் ஆண்சரீரத்தில் சென்றவை இரண்டு மாதம் பரிபாகப்பட்டுச் சுக்கில ரூபமாகப் பெண்ணினது கர்ப்பாசயத்திற் பதிந்து அவளுடைய சோணிதத்தினால் கரசரணாதி அவயங்களையும் ஞானேந்திரிய கருமேந்திரியங்களையும் உருக்கொண்டு பூமியில் ஜனிக்கும். இந்தக்காரணத் தினாலேயே பிதாவைவிட மாதா சிரேஷ்டமானவளென்று நூல்கள் கூறுகின்றன. இதுகாறுங்கூறியது முன் நித்தியவிதி கூறுமிடத்தில் பிதிர் கிருத்தியமாகிய சிராத்தகிரியை கூறும் பிரகரணத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் விரிக்கவில்லை. இது கூறாக்கால் மாதா எவ்வாறு குருவா வாள் என்பது விளங்காது. அதற்காகவே இங்கே சிறிது கூறினோம்.

 

இனி பிதா கல்வியைப் போதிக்கிறான். ஞான சாஸ்திரங்களை உபதேசிக்கிறான். தெய்வபக்தியை விளக்குகிறான். அவனைக் குருவென்பது பொருந்தும். அன்னத்தை ஊட்டி வளர்க்கும் மாதா குருவாவதெப்படி என்னும் சந்தேகம் உண்டாகக்கட்டும். அதுபற்றிச் சிறிது கூறுவோம். தகப்பனிடத்திலிருந்து ஜீவனே வெளிப்பட்டது. முதுகெலும்பு தகப்பன் சுக்ககிலத்தினாலே தான் உண்டாயிற்று என்று நூல்கள் கூறுகின்றன. இலென்கிக வைதிகங்களை அறியவும் அவற்றைச் செய்யவும் கூடிய ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் தாயால் பெற்றவைகளே. இக்கருவிகள் இல்லாவிடில் ஜீவாத்மாக்கள் மரமட்டை கற்களைப் போலவே பயனற்றுக் கிடக்கும். சகல விஷயங்களையும் அறியக்கூடிய ஞான கருங்களையும் தொழில்களைச் செய்யக்கூடிய கர்மேந்திரியங்களையும் தந்த தாயானவள் தகப்பனை விட எத்தனையோமடங்கு சிறந்தவள்.

 

இவ்வாறு கருவிகரணாதிகளைப் பெற்றுத் தாயின் வயிற்றிலிருந்து பூமியிற் பிறந்து முதலில் அறிவது தன் தாயையே. தாயே அதற்குத் தன் சாத்தாகிய பாலை ஊட்டி போஷித்து வளர்க்கிறாள். ஆணெல்லாம் சிவசொரூபம், பெண்களெல்லாம் உமா சொரூபம் என்கிற வேதசாஸ்திர சம்மதத்தினால் உமா சொரூபமாகிய தாய் அந்தச் சிசுவுக்குத் தெய்வமேயாகிறாள். தெய்வத்தின் சிறந்த குணமாகிய கருணையே வடிவமாயிருந்து அந்தக் குழந்தைக்கு எவ்விதக் கெடுதியும் சம்பவியாதபடி பாதுகாத்துப் போஷிக்கிறாள். இவ்வாறு போஷித்து களர்ப்பதனால் ஞானக் கருவிகள் பலப்பட்டு எல்லாவற்றையும் பார்க்கவும், கேட்கவும் சக்தி பெறுகின்றன.

 

தாய்க்குத் தன் கணவனே தெய்வம் என்பது நூல்களின் சம்மதமும் நூல்களை யுணர்ந்த பெரியோர்களின் சம்மதமுமென்பது மறக்கப்படாத உண்மை. தாயாகிய தெய்வத்தையே முதலில் குழந்தை அறியும். பிறகு தாயானவள் தான் வழிபடுந் தெய்வமாகிய தன் நாயகனைக் குழந்தைக்கு ''அப்பா'' என்று கூறித் தெரிவிப்பாள். அது இரண்டாவது தன் தந்தையாகிய தெய்வத்தையும் அறியும். தாய் காட்டாவிடிற் சிசு தகப்பனை யறியாது. தாய் பலமுறை காட்டி "அப்பா " வென்று கூறித் தெரிவிப்பதினாலேயே அது பிதாவைத் தெரிந்து கொள்ளும். மாதா பிதா இருவரும் கருணை வடிவமாயிருந்து புத்திரனைப் பரிபாலிப்பதால் அவ்விருவரும் குழந்தைக்குத் தெய்வமாகிறார்கள். இதனாலேதான் "அன்னையும் பிதாவும் முன் னறி தெய்வ " மென்று ஒளவையார் கூறி யருளினார். குழந்தை முதலில் தாயையும் தாய்மூலமாய்ப் பிதாவையும் அறிவதனாலேயே நூல்களெல்லாம் தாயை முன்னிட்டுத் "தாய் தகப்பன் ", " மாதா பிதா'', " அன்னை தந்தை'' எனவும் புகழ்ந்து கூறின. தாய் பிதாவை அறிவிப்பது மாத்திரமல்லாமல் இலவுகிக வழக்கத்துக்கு வேண்டிய வார்த்தைகளெல்லாம் அவளாலேயே போதிக்கப்படுகின்றன. அவளாலேயே குழந்தை பேசப் பழக்கப்படுகின்றது. இது இன்ன பொருள் என்று அவளே பதார்த்த ஞானத்தை உண்டாக்குகிறாள். சர்வ சக்தியுள்ள ஒரு பரம்பொருள் உண்டென்பதைத் தாயே விளையாட்டாகவே தெரிவிக்கிறாள். பாபம் புண்ணியம் என்கிற நல்வினை தீவினைப் பாகுபாடுகளையும் வாசித்துத் தெரிவிக்கின்றாள். பாபத்தைச் செய்தால் தெய்வம் கோபிக்குமென்றும், புண்ணியத்தைச் செய்தால் அனுக்கிரகிக்கு மென்றுங் கூறித் தெய்வமகிமையையும் விளக்கிக்காட்டுகின்றாள். தீட்டு மடி யென்று சுத்தாசுத்தங்களையும் தெரிவிக்கின்றாள். இகபரம் இரண்டுக்கும் வேண்டிய விஷயங்களெல்லாம் சிறு வயதிலேயே தாயால் போதிக்கப்படுகின்றன சரீரபோஷணைக்கு வேண்டிய உணவுகொள்வதையும் தாயே தெரிவிக்கின்றாள்.

 

தர்மார்த்தங்களுக்குரிய அறிவும் பரலோக தெய்வமுண்டென்கிற ஆஸ்திகஞானமும் தாயினால் போதிக்கப்படுகின்றன. இவையெல்லாம் கல்வியறிவு உண்டாவதற்கு முன்னாலேயே தாயினால் உபதேசிக்கப்படுகின்றன. கல்வி பயிலத் தொடங்கும் ஒரு புத்திரனுக்கு எல்லா அறிவுமுண்டு. தாயினாலே போதிக்கப்பட்ட அறிவையே பிதா கல்வி அறிவால் பிரகாசிப்பிக்கின்றானே அன்றிப் புதிதாய் ஒன்றையும் அவன் போதிப்பதில்லை. இதனால் தாயே பரம குருவாகிறாளென்பது புலப்படும். இந்தச் சிறந்த காரணத்தை உத்தேசித்தே தாய் குருவர்க்கத்தில் சேர்த்துப் படிக்கப்பட்டாள். சிறிய தாயார் பெரிய தாயார் அக்காள் முதலிய பெண்கள் குருவைப்போல மரியாதை செய்வதற் குரியவர்களேயன்றி உண்மையில் குரு ஆவதில்லை. தமையனும் பிதாவைப் போலக் கல்வியறிவை விருத்தியாக்கும் அதிகாரமுடையவனாதலால் அவனும் குருவர்க்கத்தில் சேர்க்கப்பட்டான். ஊகித்துப்பார்த்தால் - ரு குழந்தை பிறந்து கல்விபயிலத் தொடங்கும் வரையில் அக்குழந்தை அடைந்திருக்கும் ஞானமெல்லாம் தாயால் பெற்றதேயென்று நன்கு விளங்கும். அந்த அறிவே விருத்தியாய் அற நூல், பொருள் நூல், இன்பநூல், வீட்டு நூல் எல்லாவற்றை யும் உணர்வதற்கும், வீடடைவதற்கும் காரணமாகும். ஆதலால் தாயே எல்லாக் குருவையும் விட மேலானவள். அதனாலே ஸ்மிருதிகள் தானப்பிரகரணத்தில் பிதா குரு முதலியவருக்குக் கொடுக்கும் தானத்துக்கு ஒரு எல்லை வகுத்துத, தாய்க்குக் கொடுக்குந் தானத்துக்கு எல்லை கூறாமல் அருந்த பலன் என்றும் அக்ஷய பலன் என்றும் கூறின. ஒரு புத்திரன் சந்நியாசம் பெறுகிறான். அவனைப் பிதா வணங்க வேண்டும். சந்நியாசியோ தாயைக் கண்டவுடனே எழுந்திருந்து தாய்க்கு வணங்கிப் பூசித்து மரியாதை செய்ய வேண்டு மென்றும் நூல்கள் கூறுகின்றன.

 

இதனால் தாய் எவ்வளவு சிறந்தவளென்பதை ஊகித்தறிந்து கொள்ளலாம். கல்வியறிவினால் இயற்கைஞானத்தைப் பிரகாசிப்பித்து உண்மை ஞானத்தை விளக்கிய பிதா குரு என்பதை ஆக்ஷேபிப்பார் இல்லை. இதனால் ஒருவனுக்குத் தாயுந் தகப்பனுமே குருவும் தெய்வமுமாகிறார்களென்று கூறும் நூல்களின் அபிப்பிராயம் ஆக்ஷேபனையின்றிப் புகழ்ந்து கொள்ளத் தக்கதேயாம்.

 

"குரு" கு = அஞ்ஞான இருள்; ரு = அதை அழித்தல். இதனால் குரு என்பதற்கு அஞ்ஞானத்தைப் போக்கடிப்பவர் என்பது பொருள். மெய்ஞ் ஞானத்தை விளக்குகிறவர் என்று கொள்ளப்படும். மெய்ஞ்ஞானமாவது பரம்பொருளைக் கண்டு அதை அடைவதற்குரிய கருவி. பரம்பொருளை அடைவதற்குரிய மெய்ஞ்ஞானத்தைப் பெறுதல், தாய் தன் குழந்தைகளுக்கு இளவயது முதற் போதித்து வந்த அறிவினாலேயே. அதை விளக்கிக்காட்டக் கல்வியைப் போதிக்கின்ற பிதாவை விட மாதாவே யிது விஷயத்தில் சிறந்தவள் சிறந்தவள் என்றதனாற் பிதா தாழ்ந்தவரென்பதல்ல. இருவருமே பூஜிக கத்தக்கவர்கள். மாதா பிதாக்கள் கல்வியுடையவர்களாயினும் இல்லாதவர்களாயினும் குருவேயாவார்கள். ஏனெனில் கல்வியாற் பெறப்படும் அறிவைத் தாய் முதலிலிருந்தும், அதன்பின் தகப்பனும் விளக்கிவிடுகிறார்கள் ஆகையால் என்க. இதுபற்றியே "தாய் சொற்றுறந்தால் வாசகமில்லை", "தந்தை சொன்மிக்க மந்திரமில்லை'' என்ற நீதிவாக்கியங்க ளெழுந்தனவென்க. "எழுத்தறிவித்தவ னிறைவனாகும்" என்று பிறரும் கூறிக் குருவைத் தெய்வமென்றே நிரூபித்தார்கள்.

 

சிருஷ்டி காலத்தில் நான்கு வருணத்தாராகிய பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களைப் பிரமன் சிருஷ்டித்தார். பிராமணர்களிடத்தில் அறிவு நூலாகிய வேதங்களை அங்கங்களுடன் கொடுத்தார். தண்டநீதி சாஸ்திரத்தை க்ஷத்திரியர்களிடத்தில் கொடுத்துப் பிரஜைகளை நீதியாய்ப் பரிபாலிக்க நியமித்தார். இராஜர்களைத் தெய்வமென்றே கூறுவார்கள். தெய்வமே குருவாதலால் அரசனும் குருவேயாவான். தண்டத்தினால் துஷ்டர்களைச் சிக்ஷித்து நல்வழிப்படுத்துகிறான். நீதிசாஸ்திரமாகிய சட்டத்தினால் இது நன்மை யென்றும் இது தீமையென்றும் விளக்கிக் காட்டுகிறான். விதி விலக்குகளை நியமிக்கின்றான். விதிவழி தவறாமல் நடப்பவரை அனுக்கிரகிக்கின்றான். தவறினவர்களைத் தாக்ஷண்யமில்லாமல் தண்டிக்கிறான். பாடசாலைகளாலும் வித்வ சங்கத்தாலும் பிரஜைகளுக்குக் கல்வி அறிவைப் புகட்டுகிறான். கருப்பு (பஞ்சம்) முதலிய துர்ப்பிக்ஷகாலங்களில் அந்நிய நாட்டிலிருந்து தானிய தவசங்களை வரவழைத்துத் தன் குடிகளைப் போஷிக்கிறான். தண்டநீதியால் மங்கையர் கற்பு நெறி கடவாதிருக்கச் செய்து சற்சந்தான அபிவிருத்தி செய்து தன்னாட்டில் நல்ல பிரஜைகள் நிறைந்திருக்கச் செய்கிறான். தேவாலயங்களுக்கு உற்ச வாதிகளைச் செய்வித்துத் தன் பிரஜைகளுக்குத் தெய்வபக்தியை விளக்குகிறான். சம்பாதித்துப் புசிக்கச் சக்தியில்லாத சப்பாணி, முடவர், குருடர், நொண்டி முதலானவர்களுக்கு அன்னசாலைகளை ஏற்படுத்தியும், அவர்களைத் தன் சொந்தக் கிருகத்தில் வைத்துக் கொண்டும் போஷித்துக் காப்பாற்றுகிறான். இதனைப் பாரதம், இராமாயணம் முதலிய நூல்களைப் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். இவ்வாறு பல படியாலும் உபசரித்துப் பிரஜாபாலனம் செய்கிற அரசனும் குருவேயாவான் என்று கூறிய நூல்களின் கொள்கை எல்லாராலும் அங்கீகரிக்கப்படத்தக்கதேயாம்.

 

மெய்ஞ்ஞானத்தை விளக்கிப் பரம்பொருளைத் தரிசிப்பிக்கும் ஞானகுரு, மற்ற குருமார்கள் எல்லாரையும் போன்றவனல்லன். தன் நிஷ்டையினால் பரம்பொருளை, தான் பிரத்தியட்சமாய்க் கண்டு அதனுடன் ஏகமாய்க் கலந்திருப்பவனாதலால் அவன் பரம்பொருளேயாவான். மலமுள்ள வரைக்கும் பிரமத்தைக் காணமுடியாது. மலமற்ற அனந்தரமே பரம்பொருள் வெளிப்படும். தன் நிஷ்டையால் பரம்பொருளைக் கண்டவன் நிர்மலனாவான். ஆதலால் ''பாசபத்த ஸத்தாஜீவ: பாச முக்தஸத்தா சிவ:'' என்ற உபநிஷத் வாக்கிய பிரமாணத்தால் மலமற்ற ஞானகுருவும் பதிப்பொருளேயாம். ஆதலால் அவன் மகிமை அளவிடற்கரிதேயாம். இவ்வாறு குருவின் தன்மையை அறிந்து அவனை வழிபடுகிறவன் நிச்சயமாகவே மீளாக்கதியாகிய சாயுஜ்ய பதவியை அடைவான். இந்தக் குருபக்தி, மாதா பிதாக்களை அலட்சியம் செய்யாமல் அவர்களை வழிபடுவதனால் எளிதிற் கிடைக்கும். மாதாபிதாக்களை அலட்சியம் செய்கிறவனுக்குச் சற்குரு கிடைப்பதருமையேயாகும். இப்படித் தாய் தந்தை குரு தெய்வமென்கிற நாற்பொருளையும் ஏகமாய்க் கருதி மனோவாக் காயங்களால் வழிபடும் சற்புருஷன் பரம்பொருளையே யடைவான் என்பதிற் சந்தேகமில்லை.


 
குரு முற்றிற்று.

 

 

பிதிர்யக்ஞம்.

 

பிதிர்யக்கும் கூறத்தொடங்கிய யாம் அதைச்சற்று நிறுத்தி வைத்துக் குரு என்ற விஷயத்தைச் சிறிது கூறினோம். மாதா பிதாக்களைப் போலவே சந்ததியற்ற குருவுக்கும் அபரகிரியைகளை ஒருவன் செய்ய வேண்டு மாதலால் அந்தக் குருமார் யார் என்கிற சந்தேகம் ஜனிக்கக்கூடும். ஆதல் பற்றி அதை விரித்தோம். மாதா, பிதா, தமையன், சிற்றப்பன், பெரியப்பன், தாய்மாமன், பெண்கொடுத்தமாமன், பெண்களில் குருவர்க்கத்தில் சேர்த்துக் கூறப்பட்டவர்கள் இவர்களுக்கும் அபரகிரியைகளைச் செய்ய வேண்டும். ஆயினும் பிதிர்யக்ஞம் என்று புகழ்ந்து கூறப்படுவது மாதா பிதாக்களுக்குச் செய்வதையே.

இதைச் செய்வதனால் மாதாபிதாக்களை நரக துன்பத்தினின்றும் விடுவிக்கின்றான். இந்தக்கிரியை செய்ந்நன்றி மறவாமையாகிய சற்கிரியையாம். இதை "வடமொழியில்" கிருதக்ஞை என்று புகழ்ந்து கூறும். கரசரணாதி கருவிகளையும் கல்வியறிவாகிய ஞானத்தையும் தந்து, அன்னபானாதிகளைக் கொடுத்து வளர்த்து நாலுபேர்களும் மனிதனென்று மதிக்கும்படி செய்து புகழ் புண்ணியங்களை உண்டாக்கிய மாதாக்களுக்குப் புத்திரன் இந்த நன்றியறித லாகிய கிரியையைச் செய்யாக்கால் அவன் தேவபிதிர் சாபங்களுக்குப் பாத்திரனாய் நெடுங்காலம் நரகில் வருந்துவான்.


 ''எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா - முய்வில்லை
 செய்ந்நன்றி கொன்ற மகற்கு'' என்று தமிழ்வேதம் கூறுவதும் காண்க.

 

      அபரகிரியை என்பது இறந்தபின் செய்யப்படும் கர்மங்கள். அவை தகனகிரியை அல்லது புதைத்தல் முதலிய கிரியையிலிருந்து சபிண்டீகரணம் என்று கூறப்படும் கிரியை வரையிலும் செய்யப்படுவனவாம். தகனம் செய்யு நாள் பனிரண்டு நாள்களில் செய்யப்படும். முன் சந்திரமண்டலத்தில் பிரிவாக்கப்பட்டுப், பனித்துளிவழியாய்ப் பூமியிலிறங்கிச் செடி கொடி முதலியவற்றிற் பிரவேசித்துப் பிதாவின் மூலமாகமாதாவின் கர்ப்பத்தில் பதிந்து உருக்கொண்ட சரீரம் விருத்தியாய்ப் பால் யௌவன கௌமார பருவங்களை யடைந்து ஓடியாடித் திரிந்து சரீர விருத்தாப்பிய பருவத்தை யெய்திப்பின் வியாதியாதி காரணங்களால் சரீரத்தை விடுவன். விட்ட பின் தன்னுடைய புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி சொர்க்கநரகங்களை அடைவன். சொர்க்கத்தை யடைந்தவன் பண்ணியபலனுள்ள வரைக்கும் சுகபோகங்களை அனுப்விப்பன், நரகத்தை யடைந்தவன் சதாதுக்கத்தையே அடைவன். அபாகிரியைகள் கிரமப்படி ஒழுங்காகச் செய்யப்பட்டால் சொர்க்கத்தை அடைந்தவனுக்குப் புண்ணியம் விருத்தியாகும். நரகத்தையடைந்தவனுக்குப் பாபம் குறையும். களையும் தீரும். உருடந்தோறும் செய்யப்படும் பிரத்யாப்திக சிரார்த்தகிரியையால் நரகவாதனையடைகிறவர்களுக்கு அன்னபானாதிகளால் திருப்தி யுண்டாவதுந் தவிர சீக்கிரத்தில் பாபம் ஒழிந்து நரகத்தினின்று விடுபட்டு வேறு ஜன்மத்தையும் அடைவர். இதனால் பெற்று வளர்த்த மாதா பிதாக்களுக்கு நரகாதி துன்பங்களை ஒழித்து நற்கதியை அளிப்பதே பிதிர்யக்ஞமாம். இதனால் செய்ந்நன்றி மறவாமையாகிய பெரும் புண்ணியத்தைக் கர்த்தா அடைவன். எல்லாப் புண்ணியங்களிலும் இது சிறந்த புண்ணிய மாதலால் கர்த்தா நல்லகதியையே அடைவன். ஆதலால் ஆரிய சந்ததியிற் பிறந்தவர்கள் இந்தக்கிருத்தியத்தை அவசியம் செய்தே தீரவேண்டும். இல்லா விட்டால் அவன் ஆரிய வம்சத்தனாக மாட்டான். இனி அபரகிரியைகளைச் செய்ய வேண்டிய முறைகளை நூலாதாரம் கொண்டு கூறுவோம்.

 

ஒருவன் மரணதறுவாயில் இருக்கும் போது அவன் சக்தியுள்ளவனாயிருந்தால் கிருச்சிராதி சில கிருத்தியங்களை அவன் செய்து கொள்ள வேண்டும். சக்தியில்லாதவன் பிறரைக்கொண்டு செய்வித்துக் கொள்ளலாம். சுத்தமா கவே சத்தியில்லாதவனுக்கு எளிய பிராயச்சித்தாதிகளைச் செய்விக்க வேண்டும். சத்தியுள்ளவன் தானே செய்து கொள்ள வேண்டும்.

பிறகு தன் சக்திக்குத் தக்கபடி வேதமுணர்ந்தவர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டும். அன்னம், பானீயம் (குடிநீர்), கோதானம், வஸ்திரம், பூமி, படுக்கை, ஆசனம், எள், உப்பு, பொன், வெள்ளி, நெல் இவைகளைத் தானம் செய்ய வேண்டும். வானப்பிரஸ்தனுக்கு வித்தை சிநேகிதம், கிருகஸ்தாசிரமிக்குப் பத்தினி சிநேகிதம், வியாதிக்கு ஒளஷதம் மித்திரம், மரணம் அடைபவனுக்குத் தானமே மித்திரமென்று பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகப் பாரதம் கூறுகின்றது. ஆகையால் மரணத்தறுவாயில் இருப்பவன் அவசியம் தானம் செய்ய வேண்டும். மரணமடைபவன் ஞாபகத்தை இழந்து விட்டாலும், மரணத்தையடைந்து விட்டாலும் அவனுடைய புத்திரராதியோர் அவனுக்காகத் தானம் செய்ய வேண்டும். இந்தத்தானங்களை ஸ்நானம் செய்தபின் செய்ய வேண்டும். ஸ்நானம் செய்யாமல் செய்யும் தானம் பலன் தாராது. ஸ்நானம் செய்ய சக்தியில்லாதவர்கள் மந்திரஸ்நானம், பெளமஸ்நானம், ஆக்னேயஸ்நானம், திவ்யஸ்நானம், மானசஸ்நானம், யௌகிகஸ்நானம், வாயவ்யஸ்நானம் என்கிற ஏழுவகைகளில் ஒருவகைஸ்நானம் செய்யலாம். மந்திரஸ்நானமாவது "ஆபோஹிஷ்டாதி'' மந்திரங்களை யுச்சரித்து நீரைப் புரோக்ஷணம் செய்து கொள்வது. மண்ணைப் பூசிக்கொள்வது பௌமஸ்நானம், சரீரம் முழுவதும் விபூதியைப் பூசிக்கொள்வது ஆக்னேயமாம். பசு மாட்டின் புழுதியை உடம்பில் பூசிக்கொள்வது வாயவ்யஸ்நானமாம். வெய்யிலெறிக்கும் போது பெய்யும் மழையில் நனைவது திவ்யஸ்நானமாம். பரப்பிரம தியானமே மானசிகஸ்நானம். விஷ்ணுவைச் சிந்திப்பது யௌகிகஸ்நானம். சக்தியில்லாதவன் தன் சக்திக்குத் தக்கபடி இந்தஸ்நானங்களை அனுசரிக்க வேண்டியது.

 

பிறகு தங்கள் குலாசாரப்படி ஊர்த்துவபுண்டரம், திரிபுண்டரம் தரித்துக் கொள்ள வேண்டும். கோபிசந்தனம் தரித்தலே ஊர்த்வபுண்டரமாம். விபூதி தரித்தல் திரிபுண்டரம் என்னப்படும். இவற்றில் ஒன்றைத் தரித்துக் கொண்டு தானம் செய்ய வேண்டும். தவளைகள் பாம்பைக் கண்டு நடுங்குவது போல ஊர்த்துவபுண்டரத்தைப் பார்த்து எமதூதர்கள் நடுங்குவார்கள் என்று மரீசி கூறினர். ஊர்த்துவ புண்டரம் தரித்தவன் எவ்விடத்தில் இறந்தாலும் அவன் வைகுண்டத்தை அடைவான் என்று விஷ்ணுகூறினார். விபூதிருத்தி ராட்சதாரணம் செய்து கொண்டு இறந்தவன் ருத்திரசாரூபத்தை அடைவான் என்று ஸ்காந்தபுராணத்தில் கூறப்பட்டது. துளசியைத் தரித்தவன் வைகுண்டத்தை அடைவான் என்றும் ஸ்காந்தம் கூறியது. பிறகு சர்வ பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இதனால் அந்த பாபங்கள் நீங்கும். இதற்கு பிராஜாபத்திய கிருச்சிரமே பிராயச்சித்தமாக விதிக்கப்பட்டது. பிராஜாபத் தியாகிருச்சிரமாவது மூன்று நாள் புசிக்காமலிருப்பது. அல்லது மூன்று நாட் காலையிலாவது மாலையிலாவது கேளாமல் வந்த உணவைப் புசிப்பது. இது செய்யச் சக்தியில்லாதவன் கன்றுடன் கூடின பசுவைத் தானம் செய்ய வேண்டும். பசு அகப்படாவிட்டால் அந்தப் பசுவுக்குள்ள கிரயத்தைக் கொடுக்க வேண்டும். அதற்குச் சாத்தியில்லாதவன் ஒரு நிஷ்கம் (ஒருவராகன்) தானம் செய்யவேண்டும். அதற்கும் சக்தியில்லாதவன் அரைவராகன், அதற்கும் சாத்தியில்லாதவன், கால்வராகன் கொடுக்க வேண்டும். அதற்குக் குறைந்த பொருளைக் கொடுக்கக்கூடாது. அல்லது உபவாச மிருக்க வேண்டும்.

 

இவற்றுக்குச் சக்தியில்லாதவர்கள் மஹாத்மாக்களான பிராமணர்களுடைய ஆசீர்வாதத்தினால் அனுக்கிரகிக்கப்பட வேண்டும். அதனால் அவன் சகல பாபங்களினின்றும் விடுபட்டு நற்கதியை அடைவான் என்று ஸ்மிருதி கூறுகின்றது. அதர்வண வேதத்தில் ஒருவன் மஹாத்மாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும். அதனால் அவன் சர்வபாபங்களினின்றும் விடுபட்டுக் கரமசித்தியையும் அடைவான் என்று கூறப்பட்டது. மாஹத்மா என்றது வேத வேதங்களை யோதியுணர்ந்து பற்றற்றிருக்கும் பிரமஞானியையேயாம். நியமங்களைச் செய்யச் சக்தியில்லாமல் படுக்கையி லிருப்பவனுக்குத் தெய்வநாம உச்சாரணம் சர்வபாபங்களையும் போக்கும். அதையே செய்யும்படி அவனுக்குச் சொல்லவேண்டும். அன்றிப் பிராஜாபத்தியம் முதலிய கர்மங்களைச் செய்யச் சொல்கிறவன் நரகத்தை அடைவான் ஆதலால் அவனை தேவநாமங்களையே ஸ்மரிக்கச் சொல்ல வேண்டும்.

 

அந்தியகாலத்தில் "கோவிந்தா'' என்கிற நாமத்தை உச்சரித்தவன் சகல பாபங்களையும் ஒழித்து மோட்சத்தை அடைவான். காதாற் கேட்டவனும் நற்கதியையே அடைவான். தன் பிராணன் நீங்குவதற்கு முன் சிவ, சிவ, சிவ என்று எவன் சொல்லுகிறானோ அவன் சம்சாரபந்தத்தை விட்டு மோட்சத்தை அடைகிறான். ஒருதரம் சிவ என்று சொல்வதினாலேயே அவன் மீளாக்கதியை அடைந்து விடுகிறான். மற்றைய இருநாமங்களும் வேண்டப்படாமல் போகின்றன என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. இதனால் சரீரத்தை விடுவதற்கு முன் ஒருதரம் "சிவ'' என்றாலே போதுமென்று கூறப்பட்டது காண்க. மரணகாலத்தில் ஒருவன் எதைச் சிந்தித்துக்கொண்டு தனது பிராணனை விடுகிறானோ அவன் அந்தப்பயனையே மறுமையிலடைகிறான். மரண காலத்தில் மஹாத்மாக்களைத் தரிசிப்பது சகல பாபங்களையும் ஒழித்து மேலான பதவியைத் தரும். இனி முற்கூறிய தசதானத்தைக் கவனிப்போம்.

 

கோதானம், பூதானம், திலதானம், ஹிரண்யதானம், நெய்தானம், வஸ்திரதானம், தானியதானம், வெல்லதானம், வெள்ளிதானம், உப்புதானம் இவைகளைத் தசதானமென்று சான்றோர் கூறுகிறார்கள். ஒரு குடும்பத்துக்குச் சாப்பாட்டுக்குப் போதுமான அளவுள்ள பூமியைத்தானம் செய்ய வேண்டும். ஒருபதக்கு (எட்டுப்படி) எள்ளைத்தானம் செய்யவேண்டும். இரண்டு வராகனெடை தங்கம். நெய்நாலுபடி (படி என்பது பட்டணம் படியளவில் அரைப்படி கொண்டது. இது ஒருநாழி என்னப்படும்.) இது நாலு கொண்டது குறுணி, இரண்டு கொண்டது பதக்கு என்னப்படும். தானியம் ஒன்றரைக்குறுணி, உப்பு ஒன்றரைக்குறுணி அளவு தானம் செய்யவேண்டும்.  வெள்ளி நாலுவராகனெடை, வெல்லம் ஆறுபலம் (ஒன்றரைவீசை) இரண்டு வஸ்திரம் இவைகளைத் தானம் செய்ய வேண்டு மென்று பிரசேதஸ் ஸ்மிருதி கூறுகின்றது.

 

பாலுள்ள பசுவைத்தானம் செய்தால் அது பிரமலோகத்துக்குப் போகிறவழியைக் காட்டுகிறது. அவன் பிரமலோகம் சென்று மேன்மையை அடைவான். சாளக்கிராம தானமானது நாற்கடல் சூழ்ந்த பூமியைத்தானம் செய்வதற்குச் சமானமாகும். சிவலிங்க தானமானது கோடி பிரமாண்டங்களைத் தானம் செய்த பலனைத் தரும். ஜபதபங்களைச் செய்து கொண்டிருக்கிற ஏழையாகிய சுரோத்திரிய பிராமணனுக்குச் செய்கிறதானம், சொர்க்கலோகம் போவதற்குக் காரணமாகும். ஆதலால் அவனுக்குக் கோதானம், பூதானம், திலதானம் இவைகளைக் கொடுக்க வேண்டுமென்று மஹாபாரதம் கூறுகின்றது. பிராணன் போகும்போது உத்கிராந்தி கோதானம் செய்ய வேண்டும். ''மரணத்தறுவாயிலிருக்கிற இவனுடைய பிராணன் சுகமாய்ப் போகும் பொருட்டு இந்தப்பசுவை உமக்குக் கொடுக்கிறேன்" என்று மந்திரத்தைச் சொல்லி உத்கிராந்தி கோதானம் செய்ய வேண்டும். இந்தத் தானங்களை இறக்கிறவனுடைய புத்திரனாவது, சகோதரனாவது, நெருங்கின பந்துக்களாவது செய்ய வேண்டும்.

 

உத்தராயணத்திலும், அதில் சுக்கிலபட்சம் பகலிலும் மரித்தவன் உத்தம கதியை அடைவான். சுக்கிலபட்சமானாலும் கிருஷ்ணபட்சமானாலும் ஏகாதசியில் மரணம் நேரிட்டால் அவன் மோட்சத்தை அடைவான். பூர்வபாத்ரை உத்தரபாத்ரை, பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை இவைகளில் மரித்தாலும் தகனம் செய்தாலும் அந்தக்கர்மம் மூன்றுதரம் செய்ய வேண்டும். அப்படியென்று சொன்னால் அடுத்தடுத்து மூன்று சாவு நேரிடும். இந்தத் தோஷம் நீங்குவதற்காக, கோதான பூதானங்களையும், மேற்குறித்த கிழமைகளில் மரித்தால் அந்தந்த வார கிரகங்களுக்குரிய பொருள்களையும் தானம் செய்தால் அந்தத் தோஷம் நீங்கும். எள்ளினால் ஒரு பதுமை செய்து அதை முதலில் தகனம் செய்யவும் வேண்டும். ஆனால் இந்தத் தோஷங்கள் தூரதேசத்திலிருந்து மரித்தவர்களுக்கே யென்றும். எதிரில் மரித்தால் திதிவாரநட்சத்திர தோஷங்கள் சிறிதுமில்லை யென்று லோகாட்சி முதலியோர் கூறுகின்றார்கள். ஆதலால் இதனை அனுஷ்டான முறையறிந்து செய்ய வேண்டும்.

 

பிறகு மரணம் அடையும் தருணத்தில் இருப்பவனை அவனுடைய புத்திரன் தூக்கி அவன் தலையைத் தனது வலது தொடையில் வைத்துக் கொண்டு அவன் வலது காதில் புண்ணிய மந்திரங்களைச் சொல்லவேண்டும். இப்படிச் செய்தால் அந்தப்புத்திரன் தன் கடனிலிருந்து விடுபடுகிறான். இவையெல்லாம் பூமியிற்பரப்பிய தர்ப்பாசனத்தில் படுக்கவைத்தே செய்ய வேண்டும். பிராணன் இருக்கிறதோ இல்லையோ என்கிற சமையத்தில் தான் இந்தக் கிரியை செய்யப்பட வேண்டும்; மரித்தபின் தெற்கு நுனியாகத் தர்ப்பைகளை யிட்டு அதில் படுக்கவைத்து விடவேண்டும். பிறகு கர்த்தாவானவன் தனக்குக் கருமம் செய்ய யோக்கியதை யுண்டாவதற்காகத் தானங்கள் செய்ய வேண்டும். இந்தத் தினத்தில் செய்யப்படும் தானங்கள் மிகச் சிரேஷ்டமானவை இதைப்பற்றி ஸ்மிருதி சந்திரிகையில், ஆயிரம் சூரிய சந்திர கிரகணங்களும், பதினாயிரம் விதிபாதங்களும், இலட்சம் அமாவாசைகளும் துவாதசியின் பதினாறில் ஒரு பாகத்துக்குச் சமானமாகமாட்டா; அப்படிப்பட்ட துவாதசியில் மூன்றரைக்கோடி துவாதசி சேர்ந்தாலும் மாதா பிதாக்கள் மரித்ததினத்தின் பதினாறில் ஒரு பங்குக்குச் சமானமாகமாட்டா என்று புகழ்ந்து கூறப்பட்டது. ஆதலால் மாதா பிதாக்கள் இறந்ததினம் மஹாபுண்ணிய தினமாதலால் எவ்வகைக் கஷ்டப்பட்டாவது அன்று தானாதிகளைச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதனால் இறந்தவர்களும் கர்மம் செய்கிற கர்த்தாவும் பரிசுத்தர்களாய் நற்கதி பெறுவார்கள் என்பது ஸ்மிருதிகர்த்தர்களின் அபிப்பிராயம் என்று விளங்குகிறது.

 

பகலில் இறந்தவன் சவத்தை இருபத்தைந்து நாழிகைக்குள் தகனம் செய்யவேண்டும். புத்திரன் முதலானவர்களுக்கு எதிரில் ஒருவன் மரித்தால் திதிவார நட்சத்திர தோஷங்களைக் கவனிக்க வேண்டியதில்லை. தூரத்தில் மரித்தவர்களுக்கே அந்தத் தோஷங்கள் கவனிக்கத்தக்கன. இரவில் ஆறு நாழிகைக்குள் மரித்தால் உடனே தகனம் செய்துவிட வேண்டும். அந்தக் காலத்துக்கு மேலானால் தகனம் செய்யக்கூடாது. இரவில் ஒருபோதும் தகன சமஸ்காரம் செய்யத்தகாது. சில சமயங்களில் பிராணவாயு மூக்கு நுனியில் மறைந்து நிற்கும்; அவன் மரித்தவனைப் போலக் காணப்படுவான். ஆதலால் உடனே அடக்கஞ் செய்யக்கூடாது. செய்துவிட்டால் கர்த்தாவுக்குப் பிரமஹத்தி தோஷம் சம்பவிக்கும். ஆகையால் இறந்த பின் ஒருஜாமம் அல்லது இரண்டு ஜாமம் வரையில் பிராணன் வருகிறதோ வென்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சமயம் வீட்டில் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்த பிறகாவது, மயானத்துக்குக் கொண்டு போகும் வழியிலாவது, மயானங் கொண்டு போன பிறகாவது உயிர்வந்து எழுந்திருப்பதுண்டு. அப்போது அதற்குத்தக்க பிராயச்சித்தத்தைச் செய்யவேண்டியது. ஆகையால் இறந்து போனானென்று நிச்சயமாகத் தெரிந்த பின்புதான் கர்மத்தைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இராத்திரி ஆறுநாழிகைக்கு மேலிறந்து போனால் விடிந்தபின் மறுநாள் தான் தகனம் செய்ய வேண்டும். அப்போது பிரேதத்துக்குத் தோஷம் சம்பவிப்பதில்லை என்று வியாசர் கூறினார். பிரேதத்துக்குத் தீட்டு முதலிய தோஷங்கள் நேர்ந்தால் வைசானச் சூத்திரத்தில் சொல்லியிருக்கிறவிதிப்படி பிராயச்சித்தம் செய்து பின் பிரேத கர்மங்களை ஆரம்பிக்க வேண்டும்.


பிதிர்யக்ஞம் - சஞ்சயனம்.

 

இவ்வாறு பிரேத சரீரத்தைத் திவ்ய சரீரமாக்கிப் பிதிர்லோகம் அனுப்ப வேண்டும். அதற்கு முன்னாலேயே அஸ்தி சஞ்சயனம் செய்ய வேண்டும். அஸ்தி சஞ்சயனமென்பது இறந்தவர்களுடைய எலும்புகளை யெடுத்து ஸம்ஸ்காரம் செய்வது. வெகு புண்ணியமான இந்தக் கிருத்தியம் தகனம் செய்யப் பட்டவர்களுக்கே பிரதானம்: இதனால் பிதிர்க்கள் சொர்க்க முதலிய புண்ணிய உலகங்களை அடைவார்கள். புதைக்கப்பட்டவர்களுக்கு மிது உண்டு.

 

இவ்விஷயத்தில் பாரஸ்கர் பிராமணர்கள் இறந்தவனைத் தகனம் செய்த நாலாம் நாளிலும், ஆறாம்நாளில் க்ஷத்திரியர்களும், எட்டாம் நாளில் வைசியர்களும், பத்தாம் நாளில் சூத்திரர்களும் செய்யவேண்டுமென்றார். விஷ்ணுபுரா ணத்தில் நான்காம் நாளில் அஸ்திகளைச் சேர்த்தெடுத்துக் கங்கையிற் போட வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. ஸ்மிருதிரத்தினத்தில் ஒருநாள் உபவாசமிருந்து அல்லது யாசிக்காமல் வந்ததைப் புசித்து அஸ்திகளை எடுக்கவேண்டு மென்று கூறியிருக்கின்றது. அஸ்தி சஞ்சயனத்தை அபரான்னத்திலும் சந்தியா காலத்திலும் இராத்திரியிலும் செய்யக்கூடாது. காலை ஆறுநாழிகைக்கு மேல் பனிரண்டு நாழிகைக் குட்பட்டதாகிய பூர்வான்னத்திலேயே செய்ய வேண்டு மென்று வேறு ஸ்மிருதி கூறுகின்றது. பூர்வான்னத்தில் செய்யப்படும் அஸ்தி சஞ்சயனம் சுபபலனை அளிக்கும். மத்தியான்னத்திலானால் மத்திமபலன். மற்றக்காலங்கள் அசுபபலனைத் தருமாதலால் அப்போது செய்யக்கூடாது என்று ஸ்மிருதி சங்கிரகம் கூறுகின்றது. இறந்த மறுதினமாகிய இரண்டாம் நாள் மூன்றாம் நாள் ஐந்தாம் நாள் இந்தத் தினங்களில் அஸ்தி சஞ்சயனம் செய்ய வேண்டுமென்று ஆபஸ்தம்பர் கூறினார். ஸ்மிருதிகள் நாள் விஷயத்தில் மாறு படுகின்றமையால் நாலாம் நாள் செய்வது நலமென்று சிஷ்டர்கள் ஒப்புகின்றார்கள். ஆயினும் இரண்டாம் நாளில் செய்வதே வழக்கமாயிருக்கிறது. தீ நன்றாய் அணைந்து போன பிறகு செய்வது தான் உத்தமம்.

 

பிரம்மபுராணத்தில் ஆஹிதாக்கினிக்குத் தஹன தினத்திலிருந்தும், மற்றவர்களுக்கு இறந்ததினத்திலிருந்தும் நாட்களைக் கணக்கிட வேண்டும். தன்னுடைய சாகையில் சொல்லியிருக்கிறபடியே ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். வேறுவகையாகச் செய்யக்கூடாது. இறந்ததினமே திதி எனப்படும். இந்தத் தின முறைப்படி நாட்களைக் கணக்கிட்டுச் சஞ்சயனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. வேறு ஸ்மிருதியில் ஆஹிதாக்கினிகளுக்கு (அக்கினி ஹோத்திராதி வைதிக் கிருத்தியங்களைச் செய்கிற பிராமணன்) தகனதினத்திலிருந்தும், மற்றவர்களுக்கு இறந்ததினத்திலிருந்தும் தீட்டு காக்க வேண்டும். ஆயினும் இருவர்களுக்கும் சஞ்சயனமாத்திரம் தஹனதினத்திலிருந்து தான் நாட்களைக் கணக்கிட வேண்டும். திதி என்பது மரண தினமே.

 

இறந்த பத்துத்தினத்துக்குள் அமாவாசையாவது மாதப்பிறப்பாவது வந்தால் சஞ்சயனத்தையும் சமிண்டீகரணத்தையும் அவற்றுக்கு முன்னாலேயே செய்யவேண்டும். முதல் நாளிலாவது இரண்டாம் நாளிலாவது அமாவாசை மாதப்பிறப்பு வந்துவிட்டால் அப்போதே அஸ்திசஞ்சயனம் செய்துவிட வேண்டுமென்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. எலும்புகளை நாயாவது, வேறு யாராவது தீட்டுள்ளவர்களாவது தொட்டுவிட்டால் அதைப் பாலால் அலம்பி மூன்று கிருச்சிரம் செய்யவேண்டியது. இதுவே பிராயச்சித்தமாம்.

 

அஸ்தி சஞ்சயனம், கனனம் தியாகம் என இருவகைப்படும். கன்னமாவது பூமிக்குள் புதைத்தல், தியாகம் நீரில் விடுவது. கனனவிதியாவது ஒரு ஆள் ஆழமாகவாவது ஒருயானை அளவு ஆழமாகவாவது ஒரு குழியை வெட்ட வேண்டும். எலும்பை யெடுத்து அடைத்துவைத்திருக்கும் குடத்தை அதற்குள் இட்டு அர்ச்சனை செய்து மேலே மண்ணைத்தள்ளி நன்றாய் மூடிவிடவேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் குழிக்குள் எலும்பு இருக்கும் வரைக்கும் அந்தப் பிரேதமும் சுவர்க்கத்தில் வசிக்கும் என்று போதாயனர் கூறினார். சாம்பலிலிருந்து அஸ்தியை எடுத்து நெய்யில் நனைத்துப் பின் பாலிலும், பிறகு சந்தனத்திலும் நனைத்து அதன்பின் ஒரு மண் பானையில் போட்டு அதன் மேலே ஒரு சட்டியால் மூடி அல்லது வஸ்திரத்தாலாவது மூடி, குசம் தர்ப்பைகளுள்ள இடத்தில் ஒரு குழிவெட்டித் தென்முகம் நோக்கி நின்று அந்தக் குழியில் அதை வைத்து மேல் மண்ணைத் தள்ளி மூடவேண்டுமென்று காத்தியாயனர் சொன்னார்.

 

முழங்கால் ஆழமுள்ள ஒரு குழிவெட்டி அந்த ஜிதையின் வலதுபக்கத்தில் குழியில் எலும்புக் குடத்தைவைத்து மண்ணால் மூடவேண்டுமென்று வைகானஸ சூத்திரத்தில் கூறியிருக்கின்றது.

 

தியாக (எறிந்துவிடுதல்) விதி - எலும்புகளைக் கம்பளம், மான்தோல், வஸ்திரம், பட்டு இவைகளில் வைத்துக் குசத்தால் திரித்த கயிற்றினால் நன்றாய்க் கட்டிக் கங்கை நீரில் போட்டுவிடவேண்டும். அந்த எலும்புகள் முழுகும் வரையில் அகமர்ஷண ஜபம் செய்ய வேண்டும். அந்த எலும்புகள் எத்தனை நாள் கங்கையில் இருக்கின்றனவோ அத்தனை ஆயிரவருஷம் இறந்தவன் சொர்க்கத்தில் சுகமாய் வாழ்வான் என்று வேறு ஸ்மிருதிகள் கூறுகின்றன. தாய், தகப்பன், அம்மான் முதலானவர்களுடைய எலும்புகளை யெடுத்துப் புரட்டாசி மாசம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில் அவைகளைப் பஞ்சகவ்வியத்தில் நனைத்து ஒரு மண்பாண்டத்தில் சொர்ணம், தேன், நெய், எள் இவைகளைப் போட்டு, அந்த எலும்புகளையிட்டு மேலே சட்டி மூடி "நமோஸ்து தர்மாய " என்ற மந்திரத்தை உச்சரித்து அதை ஜலத்தில் போட்டுவிட வேண்டியது. பின் பத்தியுடன் ஸ்நானம் செய்து, சூரியனைத் தரிசித்துப் பிறகு தன் சக்திக்குத் தக்க படி தட்சிணை கொடுக்க வேண்டும். இப்படிச் செய்து பிதுருக்களைப் பிரம்ம லோகத்துக்கு அனுப்பவேண்டுமென்று பிரம்மபுராணம் கூறுகின்றது. கங்கையிலாவது காவேரியிலாவது, யமுனை சித்துருசிந்திகளிலாவது, ஸரஸ்வதி நதியிலாவது அஸ்திகளைப் போடவேண்டுமென்று யோகயாக்ஞவல்கியர் கூறினார். காவேரிதீரத்தில் வாசம் செய்தவனும், அங்கே மரித்தவனும், அங்கே தகனம் செய்யப்பட்டவனும், காவேரியில் போடப்பட்ட எலும்புகளையுடையவனும் பாவங்களெல்லாம் நீங்கிச் சுவர்க்கத்தை அடைகிறானென்று பிரம்மகைவைர்த்த புராணம் கூறுகின்றது.
 

அஸ்தி சஞ்சயனத்துக்குத் திதிவார நட்சத்திர தோஷங்கள் கூறப்படுகின்றன. செவ்வாய், ஞாயிறு, சனிவாரங்களிலும், துவிதியை முதலிய இரட்டைத் திதிகளிலும், கார்த்திகை, புனர்பூசம், மிருகசீர்ஷம் கர்த்தாவினுடைய ஜன்ம நக்ஷத்திரத்திலும், அனுஜன்ம நக்ஷத்திரத்திலும் அஸ்தசஞ்சயனம் செய்யக்கூடாது என்று யமஸ்மிருதி கூறுகின்றது. ஷஷ்டி, சதுர்த்தசிதிதிகளிலும், ஞாயிறு வெள்ளிக்கிழமைகளிலும், ஜன்மம், ஜன்மானுஜன்மம், பிருகஸ்பதியைத் தேவதையாக உடைய நட்சத்திரம், கேட்டை, பூசம், ஹஸ்தம் முதலிய நட்சத்திரங்களிலும் அஸ்தி சஞ்சயனம் செய்யக்கூடாது. பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி இவைகளிலும் செய்யக்கூடாது. செய்தால் குலத்துக்குக் கெடுதி நேரிடும். இவைகள் நீங்கின நாட்களில் செய்யலாமென்று ஸ்மிருதிரத்தினத்தில் கூறப்பட்டுள்ளது. கொஞ்ச தோஷமுள்ள நாட்களில் செய்யலாமென்று ஆத்திரேயர் கூறினார். அதிக தோஷமுள்ள காலத்தில் செய்யக்கூடாது என்றார். ஜன்மானு ஜன்மநாள் நந்தை (பிரதமை ஷஷ்டி ஏகாதசித்திகள்) பூரணை தவிர மற்றைய நாட்களில் செய்யலாம். குணதோஷங்கள் இரண்டும் கலந்தேயிருக்கின்றன. குற்றமில்லாமல் குணமட்டு முள்ள நாள் தேவர்களுக்கும் அகப்படுவதரிது என்று ஸ்ரீதரீயம் கூறுகின்றது. சகலகர்மங்களையும் பிராமணர்களிடம் அனுக்ஞை பெற்றுக்கொண்டு செய்யலாம். இதனால் எல்லாத் தோஷங்களும் நீங்கும் என்று ஹரீதர் கூறுகின்றார். விலக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட நாட்களில் மாதாபிதாக்களுக்கு அஸ்தி சஞ்சரயனம் செய்யலாம். பிரத்தியட்ச மரணத்தில் எல்லாருக்கும் செய்யலாம். அதனால் அதிக தோஷமில்லை யென்று கார்க்கியர் கூறினார். அஸ்தி சஞ்சயனமானது மயானவாசிகளாகிய தேவதைகளுக்கு யாகமாகிறது. பிரேதத்தை உத்தேசித்துச் சுத்தனாயிருந்து கொண்டு இந்தத் தேவயாகம் செய்யாதவனை அந்தத் தேவதைகள் சபிக்கிறார்கள். மயானவாசிகளான தேவர்களாவது அந்த மயானத்தில் முன்னாலே தகிக்கப்பட்டவர்களாம். மசானத்தில் வசிப்பவர்கள் பிரேதங்களுக்குத் தேவர்களாகிறார்கள். அந்தத்தேவர்களையும் புதிய பிரேதத்தையும் உத்தேசித்து அப்பம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும் என்று விஞ்ஞானேசுவரீயம் கூறுகின்றது.
 

பத்தாம் நாள் பிரேதத்துக்கு அதிக பசியுண்டாகும். பிரபூதபலி செய்தால் அந்தப்பசி தீரும். அதன்பிறகு பிண்டம் திலோதகங்களைச் செய்வித்து முன் நட்டகல்லை எடுத்துவிட்டுப் பிரேதத்தன்மையை நீக்க வேண்டும். சனி, செவ்வாய், வியாழன் முதலிய வாரங்களில் பத்தாம் நாள் வந்தால் பிரபூதபலி கொடுக்கக்கூடாது. கொடுத்தால் அந்தக்குலம் நசிக்கும் என்று சில ஸ்மிருதிகள் கூறுகின்றன. இது மாதா பிதாக்கள் தவிர மற்றவர்கள் விஷயத்தில் அனுஷ்டிக்க வேண்டியதென்று சிஷ்டர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். அதனாலே தான் பிரபூதபலி விஷயத்தில் கிழமை நாள் முதலிய தோஷங்களைக் கவனிக்க வேண்டியதில்லை. பிரேதத்தின் பசியைத் தணிப்பதற்காகவே இந்தப் பிரபூதபலி செய்யப் படுவதாலும், பத்தாம் நாளிலேயே செய்யவேண்டு மென்று விதிக்கப்பட்டிருப்பதாலும், வேறுதினங்களில் செய்வதனால் பிரயோஜன மில்லாமையாலும், பிண்டோதக தானங்களைப் போல இதற்குத் தோஷமில்லாமையாலும், ஸ்மிருதிகளில் நிஷேதிக்கப் படாமையாலும் பத்தாம் நாளிலேயே பிரபூதபலி கொடுக்க வேண்டியது. பிரேதத்தின் பசியைத் தீர்த்தால் அந்தக்குலம் விருத்தியை அடையும். ஆகையால் மாதா பிதாக்கள் விஷயத்தில் வெள்ளி முதலிய வார தோஷங் கவனியாமல் பிண்டம் உதகம் இவைகளைக் கொடுப்பது போல மற்றவர்கள் விஷயத்தில் பிரபூதபலியை நாள்களை நோக்காமல் பத்தாம் நாளிலேயே செய்யவேண்டு மென்று வசிஷ்டர் கூறினார். பத்தாம் நாளில் பிரபூத பலியைச் செய்து கல்லைப் பிடுங்கி நதியிலாவது குளத்திலாவது போட்டுவிட்டு பிரேதத்தன்மையை ஒழிக்க வேண்டும்.

 

பிறகு பதினோராம் நாளில் ஏகோதிஷ்ட சிராத்தத்தைச் செய்யவேண்டும். பிதிர்க்களோடு சேர்க்கப்படாமலிருக்கிற பிதாவைக் குறித்து ஒருவனை மாத்திரம் வைத்துப் போஜன மளிப்பதற்கு ஏகோதிஷ்ட மென்று பேர். இது தான் முதலாவது சிராத்தம். அதன்பின் பனிரண்டாம் நாளில் சபிண்டீகரத்தைச் செய்து இறந்தவனை பிதிர்க்களோடு சேர்த்துவிட வேண்டியது. இதுவே பிதிர்யக்ஞமாம். அதன்பிறகு ஊனமாஹிகங்களைச் செய்ய வேண்டும். நாலுமாவிகங்ஙளாம். ஒருமாதத்துக்குள் ஒன்றும், நாற்பத்தைந்து நாட்களுக்குள் ஒன்றும், ஆறுமாதத்துக்குள் ஒன்றும், ஆப்திகத்துக்குள் ஒன்றும் ஆக நாலுமாசிகங்கள் செய்யவேண்டும். இவற்றைச் சிஷ்டாசாரத்தை அனுசரித்துக் குறைந்தநாட்களிலும், செய்யலாம். பிறகு ஆப்திகசிராத்தத்தைச் செய்ய வேண்டும். இதற்குள் மாதந்தோறும் திதிமாலிகத்தையும் சோதோகும்பத்தையும் செய்யவேண்டியது. வருஷம் முடிந்தபின் இறந்து போனதிதியில் வருஷாப்திக சிராத்தத்தைச் செய்து முடித்தால் பிதிர்யக்ஞம் முடிவாகிறது. அதற்குமேல் மாதந்தோறும் அமாவாசை தர்ப்பணத்தையும் வருஷந்தோறும் திதிசிராத்தத்தையும் தவறாமல் செய்துவரவேண்டும்.

 

அமாவாசையில் செய்யப்படும் தர்ப்பணம் சிராத்தமுதலானவை உடனே பிதிர்க்களைச் சென்றடைந்து திருப்தி செய்விக்கும். இதற்குக்காரணம் முன்னாலே சில சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இதுவும் பிரகரணமாதலால் சிறிது கூறிப் பிதிர்யக்ஞத்தை முடித்துவிடுவோம். சந்திரலோகமே பிதிர்லோகம் எனப்படும். அவ்விடத்தில் பிதிர்யக்ஞத்தால் பிரேதத்தன்மை நீங்கின பிதிர்த்தேவர்கள் வசிக்கிறார்கள். பிதிர்த்தேவதைகளுக்குள் சிரேஷ்டமான சந்திரனும் அவ்வுலகத்தில் வசிக்கிறார். இந்தச் சந்திரமண்டலம் சாந்திரமானமாத முடிவாகிய கிருஷ்ணபட்ச அமாவாசையில் சூரியனுக்கு நேரில் வந்து சூரியனில் மறைந்து நிற்கும். இப்படிச் சந்திரன் சூரியனில் மறைவதையே அமாவாசை யென்று கூறுகிறார்கள்.

 

பாரத யுத்த ஆரம்பத்தில் துரியோதனன் ஆயுதமெடுப்பதற்குத் தகுந்த முகூர்த்தம் வைத்துத் தரும்படி பீஷ்மரைக் கேட்டான். அவர் நாள் வைப்பதற்குச் சகாதேவனைத் தவிர வல்லவர்களில்லை. அவனைக் கேள் என்று கூறினார். துரியோதனன் ஆச்சரியமடைந்து, அப்படியே ஓர் இரவில் சூத்திர வாகனத்தில் ஆரோகணித்துக் கொண்டு சகாதேவனிடம் போனான். சகாதேவன் தமையனுக்கு மரியாதையுடன் வணங்கி வந்த காரியம் யாது என்று கேட்டான். துரியோதனன், தொடங்கப் போகிற இந்தப் பாரதயுத்தத்தில் நான் தர்ம புத்திரரை வென்று ஜயம்பெற விரும்புகிறேன். அதற்காக ஆயுதமெடுப்பதற்குத் தகுந்த முகூர்த்தங் கேட்க வந்தேன் என்றான். சகாதேவன் களங்க மற்ற சித்தத்துடன் நாளனன்று அமாவாசை. அன்று தினம் காளிக்குப் பலியிட்டு ஆயுத மெடுத்தால் சத்துருவை ஜயிப்பது நிச்சயம். இது தவறாதென்று உண்மையாக நாளிட்டுக் கொடுத்தான். இதையுணர்ந்த கண்ணன் மறுநாள் விடிந்ததும் இன்று தினம் அமாவாசை எல்லாரும் பிதிர்த்தர்ப்பணம் செய்ய வேண்டுமென்று கூறினார். எல்லாரும் கிருஷ்ணசாமியின் வார்த்தையை நம்பி அமாவாசை தர்ப்பணம் செய்தார்கள். சூரிய சந்திரர்கள் இந்திரனிடம் போய் நாங்களிருவரும் சேருகிற தினம் அல்லவா அமாவாசை. நாளைக்கல்லவோ நாங்க ளிருவரும் ஒன்று கூடுவோம். பூலோகத்தில் இன்று அமாவாசைதர்ப்பணம் செய்கிறார்களே. இது என்னவென்று கேட்டார்கள். இந்திரன் ஆலோசித்து கண்ணன் செயலாகவே யிருக்கும். பூலோகம் போய்க் கண்ணனைக் கேட்போ மென்று கருதி சூரிய சந்திரர்களை முன்னிட்டுக் கொண்டு கண்ணனிடம் சென்றான். அப்போது சூரியன் முதலிலும் அவனுக்குப் பின்னால் சந்திரனும் நின்றார்கள். மற்றவர்கள் அவனுக்குப் பின்னால் நின்றார்கள். சூரியன் கண்ணனை நோக்கி இங்குள்ளவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்கிறார்களே, இதற்குக் காரணம் யாது என்று கேட்டான். கண்ணன் அமாவாசை யென்பது என்ன என்றார். சூரியன், நானும் சந்திரனும் ஒன்று சேர்வது என்றான். அப்படியானால் இப்போது நீங்கள் என்னமாய் நிற்கிறீர்கள் என்று கேட்டார். சூரியன்: நான் முன்னும் எனக்குப்பின் சந்திரனுமாக நிற்கிறோமென்றான். சூரியனில் சந்திரன் மறைவதே அமாவாசையானால், இப்போது நீயும் சந்திரனும் கூடியிருக்கிறீர்கள். சந்திரன் உன்னில் மறைந்து நிற்கிறான். ஆதலால் இன்று அமாவாசை யென்பதில் ஐயம் யாது? ஒரு ஆக்ஷேபனையும் இல்லாதபடியால் இன்று தான் அமாவாசை. நீங்கள் போகலாமென்றார். சூரியன், சுவாமி அப்படியானால், எங்களுக்கு ஒரு நாளைய கதி தவறிப் போகிறதே. நாங்கள் எப்படி அதைச் சரிப்படுத்திக்கொள்கிறது என்று கேட்டான். கண்ணன் இன்று முதல் திதிகள் ஏறியும் குறைந்தும் வருவதால், பிச்சதிதிகள் உண்டாகும். அந்தப் பிச்சத்தில் உங்கள் திதி சரிப்பட்டுப் போகும் என்று கூறினார். அது முதல் பிச்ச திதிகள் ஏற்பட்டனவென்று பாரதம் கூறுகின்றது. இதனால் சூரியனும் சந்திரனும் கூடுவதே அமாவாசை யென்பது விளங்கும்.

 

ஆதலால் அமாவாசையில் சூரியனுக்குக் கீழே சந்திரன் நிற்கிறான். அவனுக்குக் கீழாக நாம் இருக்கிறோம். ஆதலால் இன்று செய்யயப்படும் பிதிர்த் தர்ப்பணம் சிராத்தம் முதலியன சீக்கிரத்தில் பிதிர்லோகத்தை அடைந்து பிதிர்த்தேவதைகளைத் திருப்தி செய்விக்கும். எள்ளும் தர்ப்பையும் சரீர சக்தியை வெகு சீக்கிரமாய் வெளிப்படுத்தும் வல்லமை யுள்ளவை. அவற்றுடன் கலந்த நீர் சூரியகிரணத்தில் ஆவிரூபமாய் மேல்நோக்கிச் செல்லும். சூரியகிரணம் வேகமாய் அந்த ஆவியை மேலேயிழுக்கும். ஆவியானது வெகு சீக்கிரத்தில் பிதிர்லோகத்தை அடையும். அது தத்தம் பிதிர்க்களையே அடையும். இறந்தவர்களுடைய சரீரமும் கர்த்தாவின் சரீரமும் ஒன்றாதலால் இருவர் சரீரகுணமும் ஒன்றாகவே யிருக்கும். இனம் இனத்தோடு சேரும் என்கிற நியாயத்தால் தர்ப்பணாதிகள் செய்பவனுடைய சரீரகுணமானது தன் பிதிர்குணத்துக்கு ஒத்த குணமுள்ள பிதிர்க்களை யடையும். சொர்க்க நரகங்களிலிருக்கிற ஆன்மாவின் சூட்சும சரீரத்தையும் சூரிய கிரண வழிபற்றிச் சென்றடையும். அதனால் சொர்க்கத்தில் உள்ளவர்கள் அதிக புண்ணியத்தையும் நாகத்திலுள்ளவர்கள் விடுதலையையும் அடைவார்கள். இதனால் புத்திரர்கள் தம்மைப் பெற்று வளர்த்து அறிவையுண்டாக்கி மேன்மை பெறச் செய்த மாதா பிதாக்களுக்குப் பெரிய உபகாரம் செய்தவர்களாய், நன்றி மறவாமை என்னும் பெரிய தர்மத்தைச் செய்தவர்களாய்ச் சொர்க்காதி புண்ணிய உலகங்களை யடைவார்கள். தேவாராதனையும் பிதிராராதனையுமாகிய இரண்டுமே மனிதர்களை நற்கதிசேர்க்கும் சாதனங்களாம். தேவாராதனை செய்யாதவனாயிருந்தாலும் பிதிர் கர்மத்தைச் செய்தே தீரவேண்டும். அதனாலேயே எதைவிட்ட வரும் பிதிர்க்கிருத்தியத்தைத் தவறாமல் செய்து வருகிறார்கள். தேவாராதனை செய்யாதவனைத் தூஷிப்பதில்லை. பிதிராராதனை செய்யாதவனைப் பாதகனென்று எல்லாரும் தூஷிப்பார்கள். ஆதலால் எப்பாடுபட்டாவது, எவ் வகையிலாவது பிதிர்க்கிருத்தியத்தைச் செய்து தீரவேண்டும். சுபம்.


 
பிதிர்யக்ஞம் முற்றும்.

 

 

பொதுத் தர்மம்.

நித்தியவிதிழதல் பிதிர்யக்ஞம் வரையில் கூறப்படாமல் விடுபட்டிருக்கும் தர்மங்களிற் சிலவற்றை யீண்டெழுதுகின்றோம். ஆதலாலிது பொது தர்மமென்று கூறப்பட்டது. விசேஷமாய் நான்கு வருணத் தாருக்கும் பொதுவான தர்மங்களையே கூறுகின்றோம். அவை பலவகையாம்.

 

ருக்வேதத்திற்குப் பிருகஸ்பதியும், யஜுர்வேதத்திற்குச் சுக்கிரனும், சாமவேதத்திற்குச் செவ்வாயும், அதர்வண வேதத்திற்குப் புதனும் அதி தேவதைகளாவார்கள். இவ்வேதக்காரர்கள் தத்தம் சாகாதிபர் கிழமைகளில் உபநயனம் செய்வது உத்தமம். இந்தக் கிரகங்கள் பலமுடையவர்களாய்க் கேந்திர கோணங்களிலிருக்கும் போது உபநயனம் செய்யவேண்டும். இலக்கினத்திற்கு நாலு, ஏழு, பத்து கேந்திர ஸ்தானங்களாம். இலக்கினத்திற்கு ஐந்து, ஒன்பது திரிகோண ஸ்தானங்களாம். இவைகளில் சாகாதிபர்களிருக்கும் போது உபநயனம் செய்தல் விசேஷம். குறித்த ஸ்தானங்கள் மேற்கண்ட கிரகங்களுக்குப் பகை நீசங்களாயின் சிறப்புடையனவாகா.

 

எப்போதும் கிருகஸ்தர்கள் மூன்று வஸ்திரங்களைத் தரித்திருத்தல் வேண்டும். மூன்றாம் வஸ்திரமில்லாமலிருக்கக்கூடாதாகையால் அதற்குப் பதிலாக மூன்று பூணூல்களைத் தரிக்க வேண்டும். இவ்விரண்டுமில்லாமலிருந்தால் அவன் இழிந்த ஜாதியாய்விடுவான். பூணூலாக்கும் நூலை வேதப்பிராமணர்களே நூற்க வேண்டும். கன்னிகா பெண்களும், சுமங்கலிகளும், விதவைகளும் நூற்கலாம். கிருகஸ்தனும் பிரமசாரியைப் போல அரைநாண் கட்டிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவன் நிர்வாணியென்று கருதப்படுவான்.

 

பிராதக்காலத்தில் எழுந்திருக்க வேண்டும். எழுந்தவுடனே தெய்வ சொரூபங்களையாவது கண்ணாடியையாவது பார்க்க வேண்டும். சிவன், விஷ்ணு பளான பிரமா, இந்திரன் முதலான திக்பாலகர்கள், சூரிய சந்திராதி கிரகங்கள், சப்த ரிஷிகள், அஷ்டநாகங்கள், தர்மிஷ்டர்களான அரசர்கள், தன்குலப் பெரியோர்கள், தன் குலதெய்வம், இஷ்ட தெய்வம், கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள் இவர்களைத் தியானிக்க வேண்டும். பிறகு ஆசமனம் செய்துவிட்டுப் போய் மலஜலவிசர்ஜனம் செய்து சௌசம் செய்து கொண்டு பல்லைத் துலக்க வேண்டும். குக்கிடாசனத்திலிருந்து கொண்டு அதாவது குந்தி உட்கார்ந்து கொண்டு, இரண்டு முழங்கால்களுக்கும் இடையில் கைகளை வைத்துக்கொண்டு ஆல், வேல், அத்தி, நாயுருவி, பூலா, வேம்பு, கருவேல் முதலிய பாலும் முள்ளு முள்ள மரங்களிலிருந்து எடுத்த குச்சிகளாலாவது, மாவிலை, கரிசலாங்கண்ணி முதலிய இலைகளினாலாவது, துவர்ப்புள்ள பொடிகளினாலாவது பல் துலக்க வேண்டும். பல் துலக்கும் போது மௌனமாகவே யிருக்க வேண்டும். பேசிக் கொண்டும், நாய், கழுதை முதலிய ஜந்துக்களையும், சண்டாளராதி யீன ஜனங்களையும் பார்த்துக் கொண்டும் பல் துலக்கக்கூடாது. பார்வையை மூக்கு நுனியிற் செலுத்தித் தெய்வ சிந்தனையுடன் பல் துலக்க வேண்டும். பின் வாய் கொப்பளித்து முகத்தைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

 

தினந்தோறும் கட்டாயம் ஸ்நானம் செய்ய வேண்டும். கிருகஸ்தர்கள் சூரியனுதிக்கும் முன்பே ஸ்நானம் செய்துவிடவேண்டும். பிரமசாரி, சந்நியாசி, ஸ்திரீகள், விதவை இவர்கள் சூரியனுதித்த பிறகே ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் விரிவு நித்திய விதியிற் கூறப்பட்டுள்ளது; ஆண்டுக் காண்க. ஓடுகிற நதியில் ஸ்நானம் செய்வது உத்தமம். நதிநதங்களில் ஸ்நானம் செய்யும் போது பிரவாகத்திற்கு எதிர்முகமாக நின்று கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும். குளம், ஏரி, கிணறு முதலியவற்றில் ஸ்நானம் செய்வதாயிருந்தால் சூரியாபி முகமாக நின்று கொண்டு ஸ்நானம் செய்தல் வேண்டும். பிராமணர்களுக்கு ஸ்நானாங்கக் கிரியைகள் ஐந்துண்டு. அவை : ஸங்கல்பம், வருணவினாகத்ஜபம், மார்ஜனம், அகமர்ஷராஜபம், ஸ்நானாங்கத் தர்ப்பணம் என்பவைகள். பிரமசாரிகளும், சந்நியாசிகளும் சங்கல்பம் முதலிய செய்யாமலே ஸ்நானம் செய்ய வேண்டும். பிரமசாரிகள் காலை வேளையில் மட்டும் ஸ்நானம் செய்ய வேண்டும். கிருகஸ்தர்கள் காலையிலும், மத்தியான்னிகவேளையிலுமாக இருமுறை ஸ்நானம் செய்யவேண்டும். சந்நியாசிகள் காலை, மத்தியான்னம், மாலை முப்போதும் ஸ்நானம் செய்யவேண்டும்.

 

தர்மத்துக்காகப் பிறரால் வெட்டப்பட்ட குளம், கிணறுகளில் ஸ்நானம் செய்யக்கூடாது. ஸ்நானம் செய்யும்படி நேரிட்டால் அவற்றிலிருந்து பத்துக் கை அல்து ஐந்துகை மணலை வாரிக் கரையில் போட்டுப் பின் ஸ்நானஞ் செய்யலாம். கற்களை யெடுத்து வெளியிலெறிந்து விட்டும் ஸ்நானம் செய்யலாம். ஸ்நானம் பண்ணும் போது சித்தத்தைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். அசுத்த ஹ்ருதயத்துடன் ஸ்நானம் செய்வது பயனற்றதாம். ஸ்நானம் செய்த பின் தலைமயிரை உதறுதல் கூடாது. ஈர வஸ்திரத்தால் தலை துவட்டக் கூடாது. உலர்ந்த வஸ்திரத்தினாலேயே தலை துவட்ட வேண்டும். உடம்பையும் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆசமனம் செய்துவிட்டு உலர்ந்த மடி வஸ்திரம் உடுக்க வேண்டும். ஆடவர்கள், சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் முதலிய நிறமுள்ள வஸ்திரங்களைத் தரித்தல் கூடாது. சுத்தமான வெள்ளை வஸ்திரம், வெண்பட்டு, நார்மடி இவைகளைத் தரிக்கலாம். வர்ண வஸ்திரங்கள் சுமங்கலிகளும், கன்னியா ஸ்திரீகளும் தரிப்பது சிலாக்கியம். விதவைகளுக்கு வெள்ளை வஸ்திரமே சிறப்புடையது. வெண்பட்டும் உடுக்கலாம். பிறர் வஸ்திரம், நனைக்காத வஸ்திரம், வண்ணானால் வெளுக்கப்பட்டு நனைக்கப்படாத வஸ்திரம், சண்டாளர் நெய்த வஸ்திரம் இவைகளை உடுக்கக் கூடாது. இவை எந்தக் கர்மங்களுக்கும் பயன்படா. ஆடு முதலியவற்றின் ரோமங்களால் நெய்த வஸ்திரம், தலைப்பில்லாத வஸ்திரம், கிழிந்து போய்த் தைக்கப்பட்ட வஸ்திரம் இவைகளும் ஆகாவாம். கிழியாததும், தைக்கப்படாததும், வெண்மையானதும், தோய்த்துலர்த்தப்பட்டதுமான சுத்த வஸ்திரங்களையே தரிக்க வேண்டும். இடையில் வஸ்திரம் தரித்துக் கொண்டு மேலே அங்கவஸ்திரமில்லாம லிருக்கக்கூடாது. அங்கவஸ்திரமும் தரித்துக்கொண்டே ஜபாதிகளைச் செய்ய வேண்டும்.

 

பிறகு ஆசமனம் செய்துவிட்டு ஜபம் செய்ய வேண்டும். தத்தம் மதாசாரியரால் குறிக்கப்பட்டதும், குலபரம்பரையாக வந்ததும், சற்குருவினிடமாக உபதேசம் செய்யப்பெற்றதுமான மந்திரங்களைச் சக்தியானுசாரம் சௌகரியப்படி செய்யவேண்டும். பிராமணர்களுக்குக் காயத்ரீ மஹாமந்திரமே ஜபிக்கத்தக்கது. அதைவிட்டு வேறு எந்த மந்திரங்களையும் ஜபிக்கக்கூடாது. காயத்ரீஜபம் முடிந்தபின் பஞ்சாக்ஷராதி மந்திரங்களை ஜபிக்கலாம். ஓடுகிற ஆறுகள் சமீபத்திலிருக்கும் போது ஏரி, குளங்களில் ஸ்நானம் செய்வது தகாது. பெரிய ஏரி குளங்களை விட்டுச் சிறிய குட்டை முதலிய நீர் நிலைகளில் ஸ்நானம் செய்வது கூடாது. கிணற்று ஸ்நானம் சிறந்ததல்ல, ஆறு குளங்களில்லாத இடங்களில் கிணறுகளில் ஸ்நானம் செய்யலாம். ஸ்நான பேதங்கள் ஆறுவகையாம்; இவை நித்திய விதியில் விரித்துக் கூறப்பட்டன. பிராமணர்கள் மந்திர உச்சாரணத்துடன் ஸ்நானம் செய்யவேண்டும். சூத்திரர்கள் மௌனமாயிருந்து ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்திரீகளுக்கு நியமமில்லை. சமுத்திரம் பெரிய நீர் நிலையேயாயினும் அதில் எப்போதும் ஸ்நானம் பண்ணுவது தகாது. அயனப்பிறப்பு, வருஷப்பிறப்பு, பர்வம், கிரகணம் முதலிய புண்ணிய தினங்களில் மாத்திரம் செய்யலாம். ஞாயிறு, செவ்வாயில் வரும் பர்வகாலங்களில் ஸ்நானம் செய்யக்கூடாது. விலக்கப்பட்ட இவற்றில் கிரகணமுண்டானால் ஸ்நானம் பண்ணலாம், தோஷமில்லை. பர்வசம்பந்தமில்லாத கிருஷ்ணாங்காரக சதுர்த்தசியில் ஸமுத்திர ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் நீங்கும். ஸேது, காவேரிஸங்கமம், கங்காஸங்கமம் இவற்றுக்கு எந்தத் தோஷமுமில்லை. இவற்றில் எப்போதும் ஸ்நானம் செய்யலாம். இரவில் முன் ஜாமமும், கடைசிஜாமமும் நீங்கலான இரண்டு ஜாமங்களும் நிசி என்னப்படும். இந்த நடு ராத்திரியில் எவ்விதத்திலும் ஸ்நானம் செய்யக்கூடாது. கிரஹண முண்டானால் ஸ்நானம் செய்வது கட்டாயம். எவ்விடத்திலும் ஸ்நானம் செய்யலாம். வியாதியஸ்தர்கள் வெந்நீரில் ஸ்நானம் செய்யலாம். ஹிரண்ய சிராத்தமும் செய்ய வேண்டும்.

 

கிரஹணம் தொட்டுவிடுகிறவரைக்கும் நித்திரை செய்யக்கூடாது. கிரஹணம் பிடித்தவுடனே ஸ்நானம் செய்ய வேண்டும். விடத்தொடங்கும் போது தானம், ஜபம், தர்ப்பணம் செய்யவேண்டும். முற்றும் விட்டபின் ஸ்நானம் செய்யவேண்டும். ஞாயிற்றுக் கிழமையில் வரும் சூரியகிரஹணம், திங்கட்கிழமையில் வரும் சந்திரகிரஹணம் இவற்றுக்குச் சூடாமணி கிரஹண புண்ணிய காலமென்று பேராம். இவை மற்றைய கிரஹண காலங்களைவிடக் கோடிபங்கு புண்ணியமுள்ளன.

 

இரண்டு அயனப்பிறப்புகளும் புண்ணியகாலங்களாம். சித்திரைப்பிறப்பு, ஐப்பசி மாதப்பிறப்பு இவை விஷபுண்ணியகாலம் என்னப்படும். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி இம்மாதப்பிறப்புகள் ஷடசீதி புண்யகாலம் என்னப்படும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி இம்மாதப்பிறப்புகள் விஷ்ணு பதி புண்ணியகாலம் என்னப்படும். அயனம் - உத்தராயணம், தக்ஷிணாயனம் என இரண்டு. தைமாசம் முதல் ஆனி முடிய உத்தராயணம். ஆடிமுதல்
 மார்கழி முடிய தக்ஷிணாயனம். உத்தராயணம் பிறந்தபின் இருபது நாழிகை வரையும் புண்ணியகாலமாகும். தக்ஷிணாயனம் பிறக்குமுன் இருபது நாழிகையும் புண்ணிய காலமாகும். இதனால் அயனப்பிறப்புகளிரண்டிற்கும் புண்ணிய காலம் உத்தராயணத்திலேயே கொண்டாடப்பட வேண்டுமென்பதாயிற்று. சித்திரை ஐப்பசிக்குப் பிறப்புகளுக்கு முன் பத்து நாழிகையும், பின் பத்து நாழிகையும், ஷடசீதிக்குப் பிறந்த பின் முழுமையும் (அறுபது நாழிகையும்) விஷ்ணுபதியாகிய ரிஷபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இம்மாதப் பிறப்புகளுக்குப் பிறக்குமுன் பதினாறு நாழிகையும், பிறந்தபின் பதினாலு நாழிகையும் புண்ணிய காலங்களாம். இவையிரவின் பிற்பகுதியிலானால் மறுநாளே காலமாகும். முன்பாதியிலானால் முதல் நாளே புண்யகாலமாம். முதல் நாள் புண்ணிய காலத்தை மாத்தியான்ஹித்தில் அனுஷ்டிக்க வேண்டும். மறுநாள் அனுஷ்டிப்பதானால் உதயாதி ஐந்து நாழிகைக்குள் அனுஷ்டிக்க வேண்டும். அயனம் நீங்கின பத்துப் பிறப்புகளுக்கும் குறிக்கப்பட்ட நாழிகை மூன்றாகப் பகுத்து ஷடசீதிவிஷுக்களில் மூன்றாம் பாகத்திலும், விஷ்ணுபதியில் மத்தியப்பாகத்திலும், அயனத்தில் முழுமையும் புண்ணிய காலமாகக் கொண்டு அனுஷ்டிக்க வேண்டும். அயன புண்ணியகாலங்களிற் செய்யப்படும் ஸ்நானம் தானம் முதலியன கோடிபங்கு பலன திகமாகும். மற்றையவற்றில் ஆயிரம்பங்கு அதிகமாகும். ஆடி, கார்த்திகை, மாகம் (மாசி) வைகாசி இம்மாதங்களில் வரும் பௌர்ணமைகளுக்கு ஆகாமாவை என்று பேர். இவையும் புண்ணியகாலங்களாகும். இவற்றிலும் செய்யப்படும் ஸ்நானதானாதிகள் வெகு பலனைத் தரும்.

 

சித்திரைமாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் சிவசந்நிதியிலிருக்கும்
குளத்தில் ஸ்நானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். மாசிமாதம் வரும் பூர்வபட்ச சப்தமி ஸ்நானம் அதிக பலனை யளிக்கும். துலாமாதத்தில் புண்ணிய நதிகளிலும் தடாகங்களிலும் ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கிப் புண்ணியம் விருத்தியாகும். வியாழக்கிழமையும் அமாவாசையும் கூடின தினத்தில் அரச நிழலிலிருந்து எதில் ஸ்நானம் செய்தாலும் பிரயாகையில் ஸ்நானம் செய்தபலன் கிடைக்கும். தைமாதச் சுக்கில ப்ரதமை தொடங்கி மாசி அமாவாசை வரையில் சாந்திரமானப்படி மாகமாத (மாசிமாத) மாகும். இது மாகமாத மென்னப்படும். இம்மாதம் சூரியனுதிக்கும் போது புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது மிகுந்த புண்ணிய பலனைத் தரும். இக்காலத்தில் ஸ்திரிசூத்திரர்களே ஸ்நானம் செய்யலாம், பிராமணர்கள் நித்திய கர்மானுஷ்டானத்தை முடித்துக் கொண்டு உதித்தபின் ஒன்றரை நாழிகைக்குள் மாகஸ்நானம் செய்யலாம். மாகஸ்நான முதல் நாள் தொடங்கி முப்பது நாளும் தவறாமல் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்நானம் செய்யத் தொடங்கும் முதல் தினத்திலே முப்பது நாளும் ஸ்நானம் செய்கிறேனென்று சங்கல்பம் செய்து ஸ்நானத்துக்கு ஆரம்பிக்கவேண்டும். ஸ்நான முடிந்தபின் பிராமண போஜனமும் தம்பதி பூஜையும் செய்யவேண்டும். தானமும் செய்ய வேண்டும். போர்வை தானம் உத்தமம். இங்கே கூறப்பட்டவைகளெல்லாம் காமிய ஸ்நானங்களாம்.

 

மாகசுக்லஸப்தமிக்கு ரதஸப்தமி என்று பேர். இது வெகு விசேஷ தினம். இத்தினம் அருணோதய காலத்தில் ஏழு எருக்கிலைகள், அது கிடைக்காவிட்டால் இலந்தை இலைகளை தலைமேலே வைத்துக்கொண்டு, அதன்மேல் பசுவின் சாணத்தினால் செய்த பிள்ளையாரையும் அதன் மேல் அறுகம் புற்களை யம் அக்ஷதையையும் வைத்துக்கொண்டு அருணோதய காலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இந்தத்தினம் சூரிய கிரகணத்துக்குச் சமானமாகும். இவ்வாறு செய்யப்படும் ஸ்நானம் கோடிபங்கு புண்ணியந் தரும். இதில் செய்யப்படும் தர்ப்பணம் வெகு பலன் தரும். இன்று தினம் ஸ்நானம் செய்தபின் சூரியனை ஆராதிக்க வேண்டும். பால் பழம் சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல் இவைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். அன்னதானமும் செய்ய வேண்டும். பிறகு புத்திரமித்திர பந்து வர்க்கங்களுடன் போஜனம் செய்யவேண்டும். ஒருவேளை புசிப்பதே உத்தமம். இரவு உபவாஸமிருக்கவேண்டும்.

 

கிருதயுகத்தில் மனுதர்மம் சிறந்தது. திரேதாயுகத்துக்குக் கௌதம ஸ்மிருதி சிறந்தது. துவாபர யுகத்தில் சங்கலிகிர ஸ்மிருதியும், கலியுகத்தில் பராசர ஸ்மிருதியும் பிரமாணமாகும். கிருதயுகத்தில் தாமாகவே சன்மார்க்கர்களிடம் சென்று தானங் கொடுப்பார்கள். திரேதாயுகத்தில் தன் வீட்டுக்கு வரவழைத்துக் கொடுப்பார்கள். துவாபரயுகத்தில் கேட்பவனுக் குத் தானங் கொடுப்பார்கள். கலியுகத்தில் தனக்கு ஊழியம் செய்கிறவனுக்குத்தான் தானம் கொடுப்பார்கள். இது யுகமகிமை. தானாகவே போய்க் கொடுக்கிற தானம் உத்தமம். அழைத்துக் கொடுப்பது மத்திமம். கேட்பவருக்குக் கொடுப்பது அதமம். சேவிப்பவனுக்குக் கொடுப்பது நிஷ்பலம். கிருதயுகத்தில் பதிதன் இருக்கும் தேசத்தை விட்டுவிட வேண்டும். திரேதாயுகத்தில் அவனிருக்கும் ஊரை விட்டுவிட வேண்டும். துவாபரயுகத்தில் பதிதனுடைய குலத்தைத் துறக்க வேண்டும். கலியுகத்தில் பதிதனை விலக்க வேண்டும். குலத்தை விடுதலாவது அவன் வீட்டில் போசனம் செய்தல், அவனுடன் சம்பாஷித்தல் இவைகளை விட்டிருத்தலாம். கிருதயுகத்தில் பதிதனுடன் பேசுவதாலும், திரேதாயுகத்தில் அவனைத் தொடுவதாலும், துவாபரயுகத்தில் பதிதன் வீட்டில் போஜனம் செய்வதாலும் ஒருவன் பாபியாவான். கலியுகத்தில் பாபகாரியங்களைச் செய்பவனே பாபியாவான். கிருதயுகத்தில் பெரியோரிட்ட சாபம் அப்பொழுதே பலித்துவிடும். திரேதாயுகத்தில் பத்து நாட்களுக்குப் பின் பலிக்கும். துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் பலிக்கும். கலியுகத்தில் ஒரு வருஷத்தில் பலிக்குமென்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. பிராணவாயுக்கள் கிருதயுகத்தில் எலும்பைப் பற்றி நிற்கும். திரேதாயுகத்தில் மாமிசத்தைப் பற்றி நிற்கும். துவாபரயுகத்தில் இரத்தத்தையும், கலியுகத்தில் அன்னத்தையும் பற்றி நிற்கும்.

 

கலியுகத்தில் அதருமத்தால் தருமமும், பொய்யால் மெய்யும், திருடர்களால் அரசர்களும், பெண்களாற் புருஷரும் அடக்கப்பட்டுத் தாழ்வார்கள். கலியுகத்தில் அக்கினிஹோத்திராதி வைதிகக்கிருத்தியங்கள் அழிந்து போகின் றன. குரு பூஜைகள் குறைந்து விடும். கன்னிகைகளும் புத்திரரைப் பெறு வார்கள். அதருமம் மூன்று பங்கும், தருமம் ஒரு பங்குமாயிருக்கும். கலியுகத்தில் தர்மானுஷ்டானம் செய்யமாட்டார்கள். காமிகளும் போஜனப் பிரியர்களுமாகவே யிருப்பார்கள். எல்லாம் பிரமமென்று சொல்வார்கள். தர்மானுஷ்டானம் செய்கிற பெரியோர்கள் எப்பொழுது தாழ்த்தப்படுகிறார்களோ அப்போது கலியுகத்துக்கு விருத்திகால மென்று தெரிந்து கொள்ள வேண்டும். கலியுகத்தில் பரான்னத்தினால் முகமும், தானம் வாங்குவதால் கைகளும், ஸ்திரீகளால் மனசும் தகிக்கப்படுகின்றன. வருணாசிரமங்களுக்கு உரியன வென்று வேதங்களால் கூறப்பட்ட விதிகளையும் தருமங்களையும் அனுஷ்டிப்பதற்குப் புத்தியுண்டாகாது. குருசிஷ்ய மரியாதையற்றுப்போம். தம்பதிகளுக்குள் சிரமம் இராது. ஒளபாசனம் தேவாராதனை யில்லாமற் போய்விடும். ஒவ்வொருவனும் தன் மனதுக்குத் தோன்றியதையே ஸ்திரமாகவும் பிரமாணமாகவும் கொள்வான். (என்றால் சாஸ்திரங்களையும் பெரியோர் வசனங்களையும் அவமதிப்பான் என்பது.) மனதுக்குப் பிடித்ததெல்லாம் சாஸ்திரமாகும். தோன்றியவையெல்லாம் தெய்வமாகும். தங்களுடைய நிலைமையே ஆசிரமமாகும். தமக்குத் தோன்றியபடியே தர்மங்களைச் செய்து மகிழ்வார்கள். அற்பப் பணமுடையவனும் தன்னைப் பெரிய பணக்காரனாக மதித்திருப்பான். பணமில்லாத புருஷனை மனைவி மதியாமலிருப்பாள். அவனையும் விடுவாள். பணம் பெருத்தவனே பெண்களுக்குப் புருஷனாவான். பொருள் போகங்க ளிவற்றைத் தாமாத்திரம் அனுபவிப்பார்கள். பெண்கள் சம்போக ஆசையினால் வியபிசாரிகளாவார்கள். பிராமணர்கள் ஸ்நானம் செய்யாமல் போஜனம் செய்வார்கள். தேவ பிதிர் கிருத்தியங்களை விட்டு விடுவார்கள். பஞ்ச மதிகமாகும். ஜனங்கள் பரதேசங்களை நாடிச்சென்று அற்ப தானியத்தைப் புசிப்பார்கள். வேதாகமங்கள் அழிந்து ஜனங்கள் பாஷண்டர்களாவார்கள். அதர்மத்தால் ஆயுசு குறையும். மாமனாரும் மாமியாருமே ஒருவனுக்குக் குருவாவார்கள். மைத்துனன் மச்சினியே சிநேகராவார். மாதா பிதாக்களை மதிக்கமாட்டார்கள். தன் காரியமே பெரிதென்று கருதுவார்கள். வேதம், ஒளபாசனம், யாகம், சிராத்தம் முதலியவைகளில்லாமற் போய்விடும். அதனால் தருமங் குறைந்துவிடும். எங்கேயாவது ஓரிடத்தில் சிறிது தருமம் இருக்கும். ஆனால் கிருதயுகத்தில் பெரும் தவசால் அடையும் பலனைக் கலியுகத்தில் சொற்பகாலத்தில் அடையலாம். வீரஹத்தி, புரூண (சிசு) ஹத்தி முதலிய கொடிய செய்கைகள் நிறைந்திருக்கும். அரசர்கள் பெரும்பாலும் சூத்திரர்களாயிருந்து கொண்டு பிராமணர்களை வருத்துவார்கள். பிரமா, விஷ்ணு, சிவன், வேதம், புராணம் இவைகளை நிந்திப்பார்கள். சூத்திரர்கள் சந்நியாசி வேஷம் தரிப்பார்கள். தருமோபதேசம் செய்வார்கள். ஆசாரங்களை அனுஷ்டிப்பார்கள். பெரும் பாலும் இராஜசேவை செய்யும் சூத்திரர்கள் பிராமணர்களை அடிப்பார்கள். பிராமணர்கள் அரசனுடைய சமையத்தை எதிர்பார்த்துக் கொண்டு வாசற்படியிற் காத்திருப்பார்கள். பல்லக்கு ஏறும் சூத்திரர்களை அண்டிப் பிராமணர்கள் அவர்களைச் சேவிப்பார்கள். சூத்திரர்களுக்கு வேதம் ஓதுவிப்பார்கள். நாஸ்திகர்கள் வேத பதங்களை வெகு கோரமாகப் படிப்பார்கள். சிஷ்டர்கள் தவசு முதலியவற்றின் பலனை விற்பார்கள். சந்நியாசிகள் அநேகரிருப்பார்கள். வேதார்த்தம் அறியாமல் அவற்றைக் கெடுப்பார்கள். தேவர்களை இலௌகிக கானங்களால் துதிப்பார்கள். பிராமண க்ஷத்திரியர்கள் சாக்தர்களாகவும் பாசுபதர்களாகவும், பாஞ்சராத்திரிகளாகவு மிருப்பார்கள். தக்ஷயாகத்தில் ததீசி முனிவரால் சபிக்கப்பட்டவர்களும், கௌதமரால் சபிக்கப்பட்டவர்களும் சிவ விஷ்ணுக்களை நிந்திப்பார்கள். இவர்கள் பிராமண குலத்தில் பிறப்பார்கள்.

 

யுகந்தோறும் தருமம் வேறானதால் கலியுகத்தில் அவ்வவ் யுகதர்மங்களே அனுஷ்டிக்கப்படும். கலியுகம் பாபயுகமாதலால் அந்த யுகத்தில் பாபம் செய்தவர்கள் நிந்திக்கப்படமாட்டார்கள் என்று பராசரர் சொன்னார். தருமவிய வஸ்தை செய்யும் சாஸ்திரமும் வீணாய்ப் போய்விடும். ஆகையால் அவர்களை நிந்திக்கப்படாது. அநேக ரிஷிகள் அந்தந்த யுகத்துக்கு ஏற்ற தருமங்களைச் செய்திருக்கிற படியால் அதை அறிந்து வியவஸ்தை செய்து கொள்ள வேண்டும். யுகதருமத்தை யறிந்து விதி நிஷேதங்களை யுணர்ந்து தருமத்தைச் செய்யவும், நிஷேதத்தைத் தள்ளவும், பிராயச்சித்தம் செய்விக்கவும் சாமர்த்திய முள்ளவனாக இருக்கிறவன் அவைகளைச் செய்யாமலிருந்தால் அவன் நிந்திக்கத் தக்கவனாவான். அவனைக்குறித்தே புரூணஹத்தியாதி நிந்தா வசனங்கள் ஏற்பட்டன. சக்தியில்லாதவர்களுக்கு இல்லை. கிருதயுகத்தில் பத்து வருஷத்தில் செய்யப்படும் தவப் பயனை, திரேதாயுகத்தில் ஒரு வருஷத்தில் அடைவான். துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் அடைவான். கலியுகத்திலோ ஒரே நாளில் அடைவான். கிருதயுகத்தில் தியானத்தால் பலனடையலாம். திரேதாயுகத்தில் யாகத்தாலும், துவாபரயுகத்தில் பூஜையினாலும், கலியுகத்தில் தெய்வநாமங்களைச் சொல்வதாலும் பலனடையலாம். அநேக துர்க்குணங்கள் நிறைந்த கலியுகத்துக்கு இந்த அற்புதகுணம் நிறைந்திருக்கிறது. ஆதலால் புத்திமான்கள் எளிதிற் பலனடையலாம். இந்த யுகத்தில் நல்ல நடக்கையும், பரிசுத்தமான திரவியமும், மனச்சுத்தியும் இல்லாமற்போம். ஆனாலும் சாத்தியம் மட்டும் தவறாமலிருந்தால் அதுவே அவனைக்காக்கும்.

 

முக்கிய காலத்தில் அவசியம் செய்யவேண்டிய கர்மம் அக்காலத்தில் செய்யப்படாவிட்டால் கௌணகாலத்தில் செய்ய வேண்டும். செய்யும் போது பிராயச்சித்தம் செய்து கொண்டு செய்ய வேண்டும். பகலில் செய்ய வேண்டிய கர்மம் தவறினால் இரவு ஜாமத்துக்குள் அதைச் செய்ய வேண்டும். முக்கிய காலத்தில் கர்மங்களைச் செய்யவேண்டிய சாதனப் பொருள் கிடைக்கா விட்டால் கௌணகாலத்தை யெதிர்பார்க்கக்கூடாது. தான், புத்திரன், பெண், உபாத்தியாயர், கூடப்பிறந்தவன், தகப்பன், சிநேகன் இவர்கள் யாகத்திலும் தர்மகாரியத்திலும் சமானஸ்தர்கள் ஆகிறார்கள். என்றால் இவர்களாற் செய்யப்பட்ட கர்மம், தான் செய்தது போலாகிறது என்று ஸ்காந்த புராணம் கூறுகின்றது. கலியுக இலக்கணம் இதுகாறும் கூறியது. யுகவலிமையினால் பிரஜைகள் கர்மாகர்மங்களை அறிந்து செய்ய மாட்டார்கள். அவர்களைத் தூஷிக்கப்படாது. யோக்கியனா யிருக்கிறவன் தூஷித்தால் அவனும் பாபியாய்விடுவான். இந்தக் கலியுகத்தில் பிறரை நிந்தை கூறுவதில் ஜனங்களுக்குப் பிரியம் உண்டாகும். அதனால் யோக்கியர்களை நோக்கிக் கூறப்பட்டது. ஆதலால் சிஷ்டர்கள் இவ்விஷயத்தில் ஜாக்கிரதையா யிருக்க வேண்டுமென்பது ஸ்மிருதிகளின் கருத்தாதலால் அதையறிந்து அடங்கி நடப்பது தான் சிஷ்டர்களுக்குத் தகுதியென்பதை விளக்குதற்கே ஸ்மிருதிகளிலிருந்து பொறுக்கி எழுதப்பட்டது.

 

பிரமயக்ஞம் சூரியார்கமான காரியங்களைத் தானே செய்ய வேண்டும். எந்த அங்கத்தினால் கர்மத்தைச் செய்யவேண்டுமென்று விதிக்கப்படவில்லையோ அந்த அங்கத்தால் அதைச் செய்யலாகாது; வலது கையினாலேயே செய்ய வேண்டும். தாழ்ந்த காரியங்களை இடது கையாலும், உயர்ந்த கர்மங்களை வலதுகையாலும் செய்யவேண்டும். உட்கார்ந்து கொண்டாவது நின்று கொண்டாவது குனிந்து கொண்டாவது செய்ய வேண்டுமென்று விதிக்கப் படாதகர்மங்களை உட்கார்ந்து கொண்டே செய்ய வேண்டும். எந்தக் கர்மங்கள் இன்ன திசையை நோக்கியிருந்து செய்ய வேண்டுமென்று விதிக்கப்படவில்லையோ அந்தக் கர்மங்களைக் கிழக்கு வடக்கு அல்லது ஈசானிய திசையை நோக்கியிருந்து செய்யலாம் என்று காத்தியாயனர் கூறினார். ஸ்நானம், தவம், ஜபம் ஆசமனங்களால் சுத்தி செய்து கொண்டு இன்ன கர்மத்தைச் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு கர்மங்களைச் செய்யவேண்டும். பிரதானமான கர்மம் செய்யப்படா விட்டால் அதை மறுபடியும் பூர்ணமாய்ச் செய்ய வேண்டும். அங்கமான கர்மம் செய்யப்படாமலிருந்தால் பிராயச்சித்தமாத்திரம் செய்து கொள்ளவேண்டும். ஆரம்பித்த கர்மத்தைத் தெரியாத்தனத்தால் தவறுதலாகச் செய்யப்பட்டால் தவறினதை மாத்திரம் மறுபடியும் சரியாகச் செய்ய வேண்டும். கர்மத்தைச் செய்து முடித்தபின் கர்மம் தவறாகச் செய்யப்பட்டதென்று தெரிந்தால் தவறின இடத்திலிருந்து மறுபடியும் செய்ய வேண்டும் என்று ஸ்மிருதிசந்திரிகை கூறுகின்றது. அதிகமாயிருந்தாலும் குறைவாயிருந்தாலும் தன்னுடைய கிருஹ்ய சூத்திரத்தின்படி செய்தால் எல்லாம் செய்ததாகவே ஆய்விடும். சிரௌத சூத்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்கள் எந்தச் சாகைக்குரியனவாயிருந்தாலும் அவை எல்லாச் சாகைகளுக்கும் பொதுவாகும். அப்படியே கிருஹ்ய சூத்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்கள் எந்த ஸ்மிருதியில் சொல்லப்பட்டனவாயிருந்தாலும் எல்லாருக்கும் பொதுவாகும் என்று சாதாதபர் சொன்னார். முக்கிய பட்சத்தை அனுஷ்டிக்கத்தக்க ஒருவன் கௌணபட்சத்தை அனுஷ்டித்தால் அவன் அந்தக்கர்மபலனை அடைய மாட்டான். ஜாதிகுலம் சமையம் கிரமாசாரம் இவைகளுக்கு ஒத்த கர்மத்தையே செய்ய வேண்டும். தன் சாகையில் சொல்லப்படாததும் பிறர் சாகையில் சொல்லப்பட்டதுமான கர்மம் தன் சாகைக்கு விரோதமில்லாமலிருந்தால் அதைச் செய்யலாம். தன்னுடைய தந்திரத்தில் சொல்லப்படாததைப் பரதந்திர முறைப்படி செய்யவேண்டும். தன் சூத்திரத்தில் சொல்லியதை விட்டுப் பிறர் சூத்திரத்தில் சொல்லியதைச் செய்வது குற்றமாகும் என்று காத்தியாயனர் சொல்கிறார். தன்னுடைய சூத்திரம் அகப்படாவிட்டால் பிறர் சூத்திரப்படி செய்யலாம். போதாயன சூத்திரப்படி செய்வது விசேஷம். கர்மத்தை விதிப்படி செய்யாதவன் அதன் பலனை அடையமாட்டான் என்று மனுதர்மம் கூறுகின்றது.

 

சூரியகிரகணம் பிடிப்பதற்கு நாலுஜாமத்துக்கு முன்பும், சந்திரகிரகணத்துக்கு மூன்றுஜாமத்துக்கு முன்பும் போஜனம் செய்துவிட வேண்டும். இந்த நாழிகைகளில் சாப்பிடக்கூடாது. இரவு கடைசி ஜாமத்தில் சந்திரகிரஹணம் பிடித்து கிரகணம் விடாமலிருக்கும் போதே உதயமாய்ச் சந்திரன் மறைந்து விட்டால் கிரஸ்தாஸ்தமன சந்திரகிரகணமென்று பேர். அன்று பகல் உபவாஸ மிருந்து சந்திரனைத் தரிசித்து ஸ்நானம் செய்து விட்டுப் பிறகு போஜனம் செய்ய வேண்டும். கிரஸ்தாஸ்மன சூரியகிரகணத்திலும் இரவில் உபவாசமிருந்து மறுநாள் விடிந்தபின் சூரியனைத் தரிசித்து ஸ்நானம் செய்த பிறகு போஜனம் பண்ண வேண்டும். அர்த்தோதய மஹோதயங்களைப் பற்றிய விஷயம் முன்பே யெழுதியிருக்கிறது. அது ஒரு பட்சம். மறுபட்சம் தை அல்லது மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் திருவோணம், அமாவாசை, வியாதி பாதம் கூடினால் அர்த்தோதயம் என்பர். மேற்படி மாதங்களில் திங்கட்கிழமை உதயத்தில் திருவோணம், வியதிபாதம், அமாவாசைகூடினால் மகோதயமாம்; துவாதசியில் திருவோணம் கூடினால் சிரவதுவாதசியாம். இது மஹாபுண்ய காலம். இதில் உபவாசமிருந்து செய்யப்படும் ஸ்நானதான தர்மங்கள் அருந்த பலனைத் தரும்.

 

வைதிருதி, வியதிபாதமாகிய யோகங்கள், புஷ்யம், ஜன்ம நட்சத்திரம், அமாவாசை, ஞாயிறு இவைகளில் ஓடுகிற நதி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் சிறந்த பலனுண்டாகும்; சித்திரைமாதம் சுக்கில பக்ஷத்தில் புதன்கிழமையும் புனர்பூசமும் கூடிய தினத்தில் புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தால் யாகம் செய்த பலன் கிடைக்கும். கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி இவை ஸப்தகங்கையென்று நூல்களாற் கூறப்பட்டவை. துங்கபத்திரை, கிருஷ்ணவேணி, பிநாகி இவற்றைச் சேர்த்துத் தசகங்கை என்றும் பெரியார் கூறுகின்றனர். இவற்றுடன் தாம்பிரபர்ணியையும் சேர்த்துக்கொள்வது முண்டு. இவைகளெல்லாம் கங்கைகளே. புண்ணிய காலங்களில் இவைகளில் ஸ்நானம் செய்வது மஹா உத்தமம். சிவசந்நிதி, விஷ்ணுசந்நிதிகளிலுள்ள தீர்த்தங்களும் புண்ய தீர்த்தங்களென்று சிஷ்டர்களால் புகழப்படுகின்றன. இவைகளில் ஸ்நானம் செய்து தானதர்மங்களை இயன்றவரையிற் செய்து சிவ விஷ்ணுக்களைத் தரிசிப்பவன் ஒருபோதும் நரகங்களைப் பார்க்கவே மாட்டான். ஐப்பசி மாதம் முதல் நாள் தொடங்கிச் சங்கல்பத்துடன் காவேரியின் புண்யகட்டங்கள் தோறும் ஸ்நானஞ் செய்து கொண்டு சென்று கடைசி தினத்தில் காவேரி சமுத்திரத்தில் கலக்கிற சங்கமுகத்தில் ஸ்நானம் செய்வது வெகுபுண்யமென்று கூறப்படுகிறது. இந்தக் காவேரி ஸங்கமத்தில் ஸ்நானம் செய்து பண்ணப்படும் தானதர்மங்கள் அந்த பலனைத்தரும். இவ்விடத்தில் எந்தநாளிலும் ஸ்நானம் செய்யலாம்.

 

பிறகு தங்கள் குலாசாரத்துக்கு ஒத்தபடி ஊர்த்துவபுண்டரமோ, திரிபுண்டரமோ எதையாவது தரித்துக்கொண்டு ஜபங்களைச் செய்ய வேண்டும். ஜபம் செய்யும் விதிப்படி கிழக்கு முகமாயாவது வடக்கு முகமாயாவது இருந்து ஜபம் செய்ய வேண்டும். காயத்திரிக்கு மாத்திரம் காலையில் கிழக்குமுகமாக நின்று கொண்டு ஜபிக்க வேண்டும். பகலில் சூரியன் சாய்ந்துவிட்டால் வடக்கு முகம் உட்கார்ந்து ஜபம் செய்யவேண்டும். சாயுங்காலத்தில் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டே செய்யவேண்டும் என்கிற நியமம் உண்டு. மற்றைய ஜபங்களை யெப்போதும் கிழக்கு அல்லது வடக்கு முகமாக இருந்து கொண்டே செய்ய வேண்டும். ஜபிக்கும் போது வாசிகம், மானஸிக முதலிய விதிகளிலொன்றை யனுசரித்தே செய்ய வேண்டும். இவை நித்தியவிதியில் செவ்வனே விரித்து எழுதப்பட்டுள்ளன. ஆண்டுக்காண்க. ஜபம் செய்யும்போது ஒருவரோடும் பேசக்கூடாது. இலௌகிக காரியங்களைக் கவனித்துக் கொண்டு ஜபிக்கக்கூடாது. ஜபாவர்த்திகளைக் கணக்கிடாமல் ஜபிக்கக் கூடாது. இரண்டு கைகளையும் ஜபமாலையையும் மூடிக்கொண்டே ஜபிக்க வேண்டும். கணக்கிடாமல் ஜபிப்பது பலன் அளியாது. ஜபிக்கும் போது ஜபமாலையைத் தன் ஆசானுக்குக்கூடக் காட்டக்கூடாது. இவ்வாறு ஜபித்தால் பலனுண்டாகும்.

 

ஸரஸ்வதி, திருதவதி என்கிற இரண்டு தெய்வந்திகளுக்கும் நடுவிலிருக்கிற தேசம் தேவதைகளாற் செய்யப்பட்ட பிரமாவர்த்தமென்று சொல்லப்படும். இந்தவிடத்தில் தான் சங்கரஜாதிகளுள்படப் பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் என்கிற உத்தமவருணங்களுக்கும், அனுலோமர் பிரதிலோமர் அந்தராளரென்கிற மத்திம வருணத்தார்க்குமுரிய ஆசாரங்கள் பிறந்தன. அவ்வாசாரங்களே பிரமாணமாகும். குருக்ஷேத்திரம், மச்சதேசம், பாஞ்சால தேசம், சூரசேனதேசம் ஆகிய இவைகள் பிரமரிஷி தேசங்கள். பிரமாவர்த்த தேசத்தைவிடக் கொஞ்சம் தாழ்ந்தவை. இந்தத் தேசத்திலிருக்கிற பிராமணர்களிடத்தி லிருந்து தான் சகலதேசத்தாரும் தத்தம் தேச சரித்திரங்களைத் தெரிந்துகொண்டார்கள். இமயமலை விந்தியமலைகளுக்கு நடுவிலும் வினசத்துக்குக் கிழக்கிலும் பிரயாகைக்கு மேற்கிலும் உள்ள தேசம் மத்திய தேச மென்று சொல்லப்படும். வினசமென்பது சரஸ்வதி அந்தர்த்தானமான இடம். கீழ்க்கடல் மேல் கடல் இமயமலை விந்தியமலை இவைகளுக்கு மத்தியிலிருக்கும் தேசமானது ஆரியாவர்த்தமென்னப்படும். இந்த விடங்களில் பிராமணர்கள் பிரயத்தனப்பட்டாவது வசிக்க வேண்டும் என்று மனு கூறினார். பிரமாவர்த்தம் உத்தமதேசம்; ரிஷிதேசம் அதைவிடத்தாழ்ந்தது; மத்திய தேசம் அதிலுந்தாழ்ந்தது; ஆரியாவர்த்தம் அதிலும் தாழ்ந்தது என்று வியாசமுனிவர் கூறினார். இவ்விடங்கள் யாகயக்ஞங்கள் செய்வதற்கும் தவசு செய்வதற்கும் யோக்கியமானவைகள். எந்தவிடங்களில் நாலுவருணத்தார்க்கும் வியவஸ்தை கிடையாதோ அந்த இடம் மிலேச்சதேசம் என்னப்படும். மிலேச்சதேசங்களில் சிரார்த்தம் செய்யவும் கூடாது; அவ்விடத்துக்குப் போகவும் கூடாதென்று விஷ்ணு கூறினார்.

 

மாதா பிதாக்களின் வார்த்தையைத் தட்டக் கூடாது. ஆரியா வர்த்தத்தைக் கடந்து போகவும் கூடாது. இப்படிச் செய்தவன் சாந்திராயண விரதானுஷ்டானஞ் செய்தால்தான் சுத்தனாவான் என்று ஸ்மிருதி கூறுகின்றது. ஆனால் தீர்த்தயாத்திரைக்காகப் போகலாம். எவ்விடத்தில் ஜலம் விறகு ஏராளமாகவும் சௌசாதிகளுக்குச் சௌகரியமாகவும் இருக்குமோ அவ்விடத்தில் வசிப்பது உத்தமம். அது புண்ணியத்தைத் தரும். அநேகமான கிணறுகளிலிருந்தும் ஜலம் சுலபமாய்க் கிடையாமலிருந்தால் அவ்விடம் வரசம்பண்ண யோக்கியமன்று என்று ஆபஸ்தம்பர் கூறினார். கேணித்தண்ணீரையன்றி வேறு தண்ணீர் எவ்விடத்தில் அகப்படாதோ அவ்விடத்தில் தருமசீலனான பிராமணன் பனிரண்டு வருஷம் வசித்தால் அவன் தாழ்ந்தஜாதியாய் விடுவான் என்று போதாயனர் கூறினார். எந்தப் பிராமணன் பனிரண்டு வருஷம் கிணற்றுத் தண்ணீரிலேயே ஸ்நானம் பண்ணுகிறானோ அந்தப் பிராமணன் அதே சரீரத்துடன் சூத்திரனாவான் என்று ஸ்மிருதிசங்கிரகம் கூறுகின்றது. தர்மானுஷ்டானம் செய்யாதவர்கள் உள்ள இடத்திலும், ரோகம் உண்டாகிற இடத்திலும் வாசம் கூடாது. ஒருவனாய் வழி நடப்பதும் மலையில் வெகுநாள் வசிப்பதும் கூடாவென்று மனு சொன்னார்.

 

பாபிகளிருக்கும் தேசத்திலும் அபுண்ணியமான தேசத்திலும் வசிப்பவர்கள் பாவிகளேயாவார்கள் என்று வியாசர் சொன்னார். சௌராஷ்டிரம், ஹிந்து, சௌவீரம், அவந்தி, தக்ஷிணாபதம், களிங்கதேசம் ஆகிய இவ்விடங்களில் வசிப்பவர் பதிதராவார் என்று சந்திரிகை கூறுகின்றது. இவ்விடங்களிற் போய் வசித்தவர்கள் வைசுவாநரம் என்னும் யாகத்தைச் செய்தால்தான் பரிசுத்தராவார்கள். நதிகளிலுத்தமமான கங்காநதி ஓடுகிறதேசமும், மலைகளும் புண்ணிய ஸ்தலங்களாம். தருமத்தை விரும்புவோர் பிரபாஸம், புஷ்கரம், காசி, நைமிசம், நாகண்டகம், கங்காதீரம், சாயூதீரம், அந்தர்வேதி, பிரமாவிருத்தம், மத்திய தேசம், மிச்சிரகம் ஆகிய இவைகளிலேயே வசிக்க வேண்டும். கங்கை ஓடாத இடத்தில் பிராமணன் வசிக்கக்கூடாது என்று வியாசர் சொன்னார். காவேரி, துங்கபத்திரை, கிருஷ்ணவேணி, கௌதமி, பாகீரதி, நர்மதை, யமுனை ஆகிய இவைகளும் கங்கையே. சில நூல்களில் தாம்பிரபரணி, பிநாகிநி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய இந்த நதிகளும் கங்கையேயாதலால் இந்த நதி தீரங்களிலும் வசிக்கலாமென்பது கூறப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் புண்ணிய க்ஷேத்திரங்களாகவும் கங்காதீரமுமாகவே கருதப்படும். சமையலுக்கு விற்கும், ஸ்நானத்துக்கு நீரும், பசுவுக்குப் புல்லும், யக்ஞாதிகளுக்குத் தர்ப்பமும், பூஜைக்குப் புஷ்பமும் எங்கே நிரம்பக் கிடைக்குமோ அவ்விடம் புண்ணிய க்ஷேத்திரமென்று பிதாமகர் சொன்னார். இவ்விடங்களில் தர்மானுஷ்டான நிரதர்கள் வசிப்பார்கள் ஆதலால் இவை புண்ணிய ஸ்தலங்களாயின.

 

மனிதர்களுக்குரிய ஒருவருஷம் தேவர்களுக்கு இரவும் பகலுமாகிய ஒரு நாளாம். உத்தராயணம் பகற்காலம், தக்ஷிணாயனம் இரவாம். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்களுண்டு. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து தேவ்வருஷத்தில் 12,000 - வருஷங் கொண்டன. கிருதயுகத்திலுள்ள மனிதர் நானூறுவருஷம் ஜீவித்திருப்பார்கள்; ரோகமற்றவர்களாயும் மனோரத பூர்த்தியுள்ளவர்களாயு மிருப்பார்கள். திரேதாயுகத்து மனிதர்களுக்கு வயது முந்நூறு; துவாபரயுகத்தில் இருநூறு, கலியுகத்தில் வயது நூறு என்று மனு சொன்னார். இதிகாச புராணங்களில் அநேகமாயிரவருஷம் ஜீவித்திருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே யெனின், அது சிரத்தையைப் பொறுத்தது என்று பாரதம் கூறுகின்றது. சிரத்தையாவது தேகத்தை நிறுத்திவைத்துக் கொள்வதற்குரிய முயற்சி; அதுவே யோகமென்னப்படும். மனிதர்களுக்குத் தேகத்தை நிறுத்தி வைத்துக் கொள்ள எவ்வளவு சிரத்தை ஏற்படுகிறதோ அவ்வளவு காலம் அவர்கள் ஜீவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எமபயம் இல்லையென்று அந்தப் பாரதமே கூறியது. மனு மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட ஆயுளும், கர்மபலன்களும், நிக்கிரகானுக்கிரகசக்தியும், அந்தந்த யுகத்துக்குத் தக்கபடி யுண்டாகின்றன என்றார். அதாவது கிருதயுகத்தில் பூர்ணமா யிருக்கும்; திரேதாதியுகங்களில் காற் காற் பங்கு குறையுமென்பதாம். இந்த நான்கு யுகங்களுக்கும் தருமமும் வேறுபடும். கிருதயுகத்தில் தபசுபிரதானம். திரேதாயுகத்தில் ஞானமும், துவாபரயுகத்தில் யாகமும், கலியுகத்தில் தானமும் பிரதான தருமங்களாம்.


 கலியில் நிஷித்தமான கர்மங்கள்.

 

மூத்தகுமாரனுக்கு அதிக பாகம் கொடுப்பது, புத்திரோற்பத்திக்காகச் சகோதரன் மனைவியைச் சேர்வது, சந்நியாஸம் செய்து கொள்ளுதல் இவை கலியுகத்தில் கூடாவென்று பராசர மாதவீயம் கூறுகிறது. புருஷன் மரித்த பிறகு அவனுடைய மனைவியானவள் சந்ததி விருத்திக்காக மைத்துனனைச் சேர்வதும், வானப்பிரஸ்தாச்சிரமத்தை அடைவதும், கடலைக் கடந்து செல்வதும், ஸந்நியாஸம் கொள்ளுவதும், மஹாபிரஸ்தான யாத்திரை செய்வதும், ஸுராபானம் செய்தாலும், அக்கினிஹோத்திரத்துக்குரிய ஹவணியென்னும் பாத்திரத்திலிருப்பதை நாக்கினால் நக்குவதும், அஸவர்ண விவாகம் செய்வதும், அத்யயனம் ஆசாரமிவைகளுக்காக ஆசௌசத்தைக் கொள்ளுவதும், அஸ்தி சஞ்சயனத்துக்குப் பிறகு தீண்டலுள்ளவர்கள் ஒருவரை யொருவர் தொட்டுக்கொள்வதும், பிராமணர்களுக்கு மரணாந்திக பிராயச் சித்தம் செய்தலும், பாபிகளோடு சேர்வதாலுண்டாகும் தோஷமும், மதுவர்க்கத்துக்காகப் பசுவைக் கொல்லுதலும், தத்தனாயும், ஒளரஸனாயு மில்லாதவனைப் புத்திரனாகக் கொள்ளுவதும், ஸோமவிக்கிரயம் செய்வதும், நெடுங்காலம் பிரமசாரியாகவேயிருப்பதும், நரமேத அசுவமேதயாகங்கள் செய்வதும் கூடாவென்று ஸ்மிருதியர்த்தசாரம் கூறுகின்றது. மாதாவின் கோத்திரத்திலும் தன் கோத்திரத்திலும் விவாகம் செய்வது, கப்பல் யாத்திரை செய்த பிராமணனைப் பிராயச்சித்தம் செய்து சேர்த்துக் கொள்வது, எல்லாரும் யஜமானரா யிருந்து கொண்டு சத்ரயாகம் செய்வது, கமண்டலத்தைத் தரிப்பது, சொர்ணத்தைத் திருடினவனோடு சேர்வதாலுண்டாகும் தோஷம், மஹா பாதகங்களுக்குப் பிராயச்சித்தம் செய்வது, அந்நிய புருஷனைக் கூடாமல் மனதால் விபசாரம் செய்த பெண்ணைத் தள்ளுவது, சிஷ்யன் குருபத்தினியின் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்வது, பிராமணர்களுக்கு ஆபத்விருத்தி, வைதிகாக்கினியை வாயாலூதுவது, கற்பழிந்த பெண்ணைப் பிராயச்சித்தம் செய்து சேர்த்துக் கொள்வது, யதிகள் எல்லா ஜாதியாரிடத்திலும் பிக்ஷையெடுப்பது, புதிதாய்வந்த ஜலத்தில் பத்து நாளைக்குள் ஸ்நாநம் செய்வது, பசுக்கள் குடித்து மிகுந்த ஜலத்தை ஆசமனம் செய்வது, தகப்பனுக்கும் பிள்ளைக்கும் நடந்த விவாதத்தில் சாட்சி சொன்னவர்களைத் தண்டிப்பது, யதிகள் சாயங்காலத்தில் வீட்டிலிருப்பது இவைகளெல்லாம் கலிகாலத்தில் விலக்கப்பட்டனவென்று தர்மசாஸ்திரசுதாநிதியில் கூறப்பட்டுள்ளது. பெண், தன் கொழுந்தன் மைத்துன னிவர்களைச் சேர்ந்து புத்திரசந்தானம் பெறுதல், அவர்களில்லா விட்டால் பர்த்தாவின் ஸபிண்டகரைச் சேர்தல் முதலியன தேஜோபலமுடைய பூர்வப் பெரியோர்களுக் குரியன. இப்பொழுதுள்ளவர்கள் தேஜோபலம் இல்லாதவர்களாதலால் அனுஷ்டிக்கக்கூடாதென்று ஆபஸ்தம்பர் கூறினார். கொழுந்தன் முதலானவர்களுடைய கை, தன் பர்த்தாவின் கைக்கு வேறுபட்டதேயாமென்பது அவரது கருத்து.

 

தனக்குத் தோன்றின நியாயத்தையும், அதைச் செய்வது போல் இந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும் என்று கருதுவதும் கூடாது. ஆனால் பிரமாணவசனம் துர்ப்பலமாயிருந்தால் தனக்குத் தோன்றின நியாயம் அனுமானமிவைகளை அனுசரித்துச் செய்யலாம் என்று ஆசுவலாயனர் கூறினார். எந்தச் சமையத்தில் எந்தக்கர்மத்தை யெப்படிச் செய்ய வேண்டுமென்று பிரமாணவசனம் கூறுகின்றனவோ அதை அப்படியே செய்ய வேண்டியது. அப்படிப்பட்ட பிரமாண வசனம் கிடைக்காவிட்டால் கர்மானுஷ்டானம் செய்கிறவன் வித்வானாயிருந்தால் அவன் தனக்குத் தோன்றிய நியாயத்தையும் அனுமானத்தையும் கொண்டு செய்யலாம் என்று அவரே கூறினார்.

 

ஜபம் செய்வோர் ஸ்வஸ்திகம், குசேசயம், வீரம் என்கிற ஆசனங்களில் ஒன்றிலிருந்தே செய்ய வேண்டும். ஸ்வஸ்திகம் என்பது வலது முழங்காலுக் கிடையில் இடது பாதத்தையும், இடது முழங்காலுக்கிடையில் வலது பாதத்தையும் இறுக வைத்துக்கொண்டு நிமிர்ந்து இருப்பது. வீராஸனம் என்பது வலது பாதத்தை இடது துடைமேலும், இடது பாதத்தை வலது துடை மேலும் வைத்துக்கொண்டு சரீரம் கோணாமல் நிமிர்ந்திருப்பது. குசேச யாஸனமென்பது வீராஸனத்தைப் போல இரண்டு துடை மேலும் பாதங்களை வைத்துக்கொண்டு அவ்விரண்டு பாதங்களின் கட்டைவிரல்களை இருகையாலும் மாறிப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்திருப்பதேயாம். இவ்வாசனங்கள் எல்லாராலும் பூஜிக்கத்தக்கதேயாம். இதில் ஒன்றை அனுசரித்திருந்து கொண்டு ஜபாதிகள் செய்ய வேண்டுமென்று பரத்துவாஜர் கூறினார். பிரதக்ஷிணம் ஹோமம் நமஸ்காரம் பூஜை ஜபம் இவைகள் செய்யும்பொழுதும் குருதெய்வ தரிசனம் செய்யும் பொழுதும் தோளிலாவது கழுத்திலாவது வஸ்திரத்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது என்று சாண்டில்யர் சொன்னார். வேதாத்தியாயனம் செய்யும் பொழுதும், அத்தியானோற்சர்க்கம் செய்யும் பொழுதும், தானம் செய்யும் பொழுதும், போஜன ஆசமனியங்கள் செய்யும் பொழுதும் உத்தரீய வஸ்திரமில்லாமலிருக்கக்கூடாது. ஹோமம், போஜனம், தானம், உபசாரம், பிரதிகிரகம், ஆசமனம் இவைகள் செய்யும்பொழுது முழங்காலுக்கு வெளியில் கையை வைத்துக்கொண்டு செய்யக்கூடாது. சிலர் முழங்காலை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு செய்யலாமென்பர். ஸ்நானம், ஆசமனம், ஹோமம், போஜனம், தர்ப்பணம், தெய்வாராதனை, அத்தியயனம் இவைகளைச் செய்யும்போது பிரௌடபாதனாக இருக்கக்கூடாது. ஆசனத்தின்மேல் காலைவைத்துக் கொண்டாவது, கணைக்கால் அல்லது முழங்காலில் வஸ்திரத்தைச் சுற்றிக்கொண்டாவது இருக்கிறவனுக்குப் பிரௌட பாதனென்று பேர் என்று போதாயனர் சொன்னார்.

 

இனி முற்கூறிவந்தவற்றுள் ஆசனம் என்று கூறியது அஷ்டாங்க யோகத்தைக் குறிப்பிக்கும். அஷ்டாங்கயோகமென்பது பிராணவாயுவை ஒடுக்கிச் சமாதியிலிருப்பதாம். இதைச் செய்ய முயல்பவர் முதலில் சரீரத்தைச் சுகமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முக்கியம் உபவாசம் என்று பூர்வ ரிஷிகள் கண்டு கொண்டார்கள்; உபவாசம் என்றால் பட்டினியா யிருப்பதென்று கருத்தல்ல. மித போஜனம் என்பதே அதன் கருத்தாம். இதை வியாசபகவான் தமது பாரதத்தில் விரித்துக் கூறினார். உபவாசமென்பது சுத்தப்பட்டினியென்பதல்ல. காலை முதல் பகற்கால பரியந்தம் ஒன்றையும் புஜிக்கக்கூடாது. தண்ணீர் கூட அருந்தக்கூடாது. மத்தியான்னத்தில் நிரம்ப புஜிக்கலாம். பிறகு இராப்போஜனகாலம் வரையில் தண்ணீர் கூட அருந்தக்கூடாது. இரவில் ஜாமத்துக்குள் வேண்டிய அளவு புஜிக்கலாம். இந்த விரதத்தை ஆறுவருஷம் அனுஷ்டிப்பவன் அன்னத்தால் சுமக்கப்படும் விமானத்திலேறிக் கொண்டு சொர்க்கலோகம் போவான். மற்றொரு உபவாசம் முன்போலக் காலை முற்பகல் வரையில் ஒன்றும் புஜியாமலிருந்து பகலில் ஒருவேளையே புஜிக்க வேண்டும். இரவில் உண்ணக்கூடாது. இந்த உபவாசத்தை மூன்று வருஷம் அனுஷ்டிப்பவன் மயிலால் சுமக்கப்படும் விமானத்திலேறிக் கொண்டு சொர்க்கலோகம் போவான். இப்படி உபவாசமிருந்து புஜிக்கும் போது மத்தியில் நீரருந்தக்கூடாது. அன்னம் கறி முதலியவற்றினால் அரைவயிற்றை நிரப்பி மேல் கால்வயிறு நிரம்பும்படி தண்ணீரை ஒரே தடவையாக அருந்தவேண்டும். இப்படிச் செய்வதனால் மலஜலச் சிக்கலுண்டாகாது. அது இல்லாத போது நாடிகள் ஒழுங்காய் நிற்கும். நாடி கிரமமாயிருக்கக் கூடியவர்களே வாசியோகம் செய்வதற்கு அருகர்களாவார்கள். இவ்வாறின்றிக் கண்டபடி புஜிப்பதாலும் பலவேளை புஜிப்பதாலும் இடையிடையே சிற்றுண்டி உண்பதாலும் நாடிகள் ஒழுங்குதப்பி நிற்கும். இந்த உபவாசவிரதத்தை அனுஷ்டிக்கச் சக்தியில்லாதவர்கள் யோகப்பயிற்சிக்கு உபயோகமாகார். இதிலும் அமாவாசை, பௌர்ணை, அஷ்டமி, சதுர்த்தசி, ஷஷ்டி முதலியவைகளில் பலாகாரம் செய்யவேண்டும். பலாகாரம் என்பது கிழங்குகளையும் பழங்களையும் புஜிப்பதாம். இக்காலத்தில் பலாகாரமென்பதற்கு இட்டலி, தோசை, உப்புமா, அடை முதலியவைகள் பொருள்களாயிருக்கின்றன. பலம் என்பது மரம் கொடி செடிகளிலுண்டாகும் பழங்களையே குறிக்கும். பலாகாரம் செய்வதனால் இளைப்புக் களைப்பு நீங்குமென்பர். மாதத்தில் ஒருவாரம் பலாகாரம் செய்யவேண்டும். இதனால் அநேகமான வியாதிகள் ஒழியும். இந்த உபவாசத்தாலும் பலாகார விரதங்களாலும் சரீரம் நிர்மலமாய் வியாதியற்றுச் சுகசௌக்கிய முண்டானதாயிருக்கும். அப்போது நாடிகள் வசப்படும். இவ்வாறு வியாதியற்று நிர்மல சரீரமுடையவனாய் சற்கருமங்களை அநுஷ்டிக்கிறவனே யோகப்பயிற்சி செய்யவேண்டும். இவனுக்கு இடைகலை பிங்கலை என்ற நாடிகள் வசப்பட்டிருக்குமாதலால் இவன் தடையின்றிப் பிராணாயாமம் செய்யலாம். பிராணாயாமமே முதலங்கமாம். அது ரேசகம் பூரகம் கும்பகமென்று மூன்று வகைப்படும். பூரகமாவது பிராணவாயுவை உள்ளுக்கிழுத்துப் பூரித்தல்; கும்பகமாவது பூரித்த வாயுவை உள்ளேயே நிறுத்தல்; ரேசகமென்பது கும்பித்த வாயுவைப் பொதுவாய் வெளிவிடுதல். இவற்றுக்குப் பொதுவில் நாடி சோதனையென்று பேர். இந்த ரேசகபூரக கும்பகங்களால் வாயுவை அடக்கிச் சுழுமுனையில் செலுத்துவதே நாடி சோதனையின் பயனாமென்பர். இடைகலை பிங்கலை வழியாகப் பிராணவாயுவை இழுத்து நிறுத்துவதற்கும் சுழுமுனை வாயில் திறப்பதற்கும் உபவாசமென்பது அவசியம் அநுஷ்டிக்கப்பட வேண்டும். யோகப்பயிற்சியை விரும்பின முன்னோர் ஒருநாள் விட்டு ஒருநாள் புசித்தும், மூன்று நாட்களுக்கொருநாள் புசித்தும், வாரத்துக்கு ஒருதரம் புசித்தும், பட்சத்துக் கொருதரம் புசித்தும், மாதத்துக் கொருதரம் புசித்தும், நீரை மட்டும் அருந்தியும் வாயுவை அருந்தியும் யோகசித்தி பெற்றார்கள்.

 

 

 

யோகம்

 

முன் நித்தியவிதி முதலியவற்றில் யோகம் சுருக்கப்பட்டது. ஜபம் பூசைகளைப் பேசுமிடத்துப் பாரத்வாஜர் " ஆவநம் ஸ்வஸ்திகம் ப்ரோக்தம் ஜபா தீநிப்ர குர்வத:, குசேசயாஸநம்வாபி வீராஸநம் தாபிவா'' என்ற வசனத்தால் ஜபதபாதிகளுக்கு யோகம் அவசியம் வேண்டப்படுமென்று தமது ஸ்மிருதியில் குறிப்பித்தார். எல்லாராலும் அனுஷ்டிக்கத்தக்க மூன்று ஆசனங்களையே கூறினார். யோக அப்பியாசத்துக்கு முதலங்கமாகிய ஆசனத்தை எடுத்துக் கூறினமையால் மற்றையவையும் முறையே கொள்ளப்படும். யாவராலும் பொதுவில் அப்பியாசிக்கப்படும் இயமம் நியமங்களும் யோகாங்க மென்று கூறுவர். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதியென்று கூறப்படும் எட்டும் யோகாங்கமாம். இதையே அஷ்டாங்க யோகமென்றும், ஹடயோகமென்றுங் கூறுவர் பெரியோர்.

 

இவற்றுள் இயமநியமங்களிரண்டும் யோகாப்பியாசத்துக்கேயன்றி எல்லாரும் எப்போதும் அனுஷ்டிக்க வேண்டியவை. இவை முன்னரே கூறப்பட்டனவாயினும் சந்தர்ப்ப நோக்கி யீண்டும் கூறுகின்றோம். ஜீவ இம்சை செய்யாமை, சத்தியம், பிறர் பொருளை விரும்பாமை, பிரமசரியம், பொறுமை, தைரியம், தயை, நேர்மை, மிதாகாரம், சௌசம் என்ற பத்தும் இயமமாம். இவற்றுள் பிரமசரியம் என்பது காமத்தை வெறுத்து ஒதுக்குதல். மிதாகாரம் என்பது அரைவயிறு சோறு கறியும், மேல் கால்வயிறு தண்ணீரும் அருந்தி மற்றக் கால்பங்கைப் பிராணவாயு சஞ்சரிக்கும்படி விடுதல்.

 

நியமம் - சந்தோஷம், தவம், ஆஸ்திகபுத்தி, தானம், விசுவாசம், தேவா ராதனை, வேதாந்த சித்தாந்த சிரவணம், நாணம், மதி, ஜபம், விரதம் இவை களாம். இவற்றுள் ஆஸ்திகபுத்தி என்பது தெய்வம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி இவைகளில் நம்பிக்கைவைத்தல், நாணம் என்பது செய்யத்தகாத காரியங்களைச் செய்வதற்கு அஞ்சுதல், மதி என்பது நித்திய நைமித்திக கன்மங்கள் செய்வதில் சிரத்தை, விரதம் என்பது முற்கூறிய உபவாசம்.

 

இயமநியமங்களில் சித்திபெற்றவன் யோகப்பயிற்சிக் குரியவனாம். இவன் கர்மானுஷ்டானங்களைச் செய்கிறவனாயும், சிற்றின்பத்தில் வெறுப் புள்ளவனாயும், சர்வசங்கப்பரித்தியாகனாயும், கற்றுணர்ந்தவனாயும், சத்திய தர்மங்களில் உறுதியுள்ளவனாயும், கோபமில்லாதவனாயும், குருபணிவிடையில் விருப்பமுள்ளவனாயும், யௌவன்னாயும், பலமுள்ளவனாயும், சாந்தம் வைராக்கிய முள்ளவனாயும், மோட்ச விருப்பமுள்ளவனாயும் இருக்க வேண்டும். அதிக போஜனம், அதிகநடை, விவகாரம், அதிகப்பேச்சு, அதிகாலையில் ஸ்நானம் செய்தல், இரவில் புசித்தல், நியமமற்ற போஜனம், துஷ்ட சகவாசம் இவைகள் கூடா. ஞானம், திடம், உற்சாகம், சாந்தி இவைகள் யோகசித்தியைத் தரும். இப்படிப்பட்டவனே யோகம் செய்யத்தக்கவனாம். சில நூல்களில் ஸ்திரீ சூத்திரர்கள் யௌவனர் விருத்தர் எல்லாரும் யோகாப்பியாசம் செய்யலாமென்று கூறப்பட்டிருக்கின்றது. ஆயினும் அவர்களும் முற்கூறிய இலக்கணமுள்ளவர்களாகவே யிருக்க வேண்டும்.

 

யோகத்திற்கு ஆசனமே முதலங்கமாம். ஸ்ரீ ரமேசுவரர் ஒருகாலத்தில் ஒரு தீவிலிருந்து கொண்டு உமாதேவிக்கு இந்த பாகத்தை உபதேசித்தார். ஒருவருமறியாவண்ணம், தனிமையாயிருந்து கொண்டு உபதேசித்தார். அருகிலிருந்த ஜலத்திலுள்ள ஓர் மீன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதனால் அது நிச்சலனமான ஏகாக்கிர சித்த முடையதாயிற்று. அதையறிந்த பரம சிவன் அதற்குத் திவ்ய சொரூபமளித்து மச்சேந்திரரென்று அழைத்தார். அதனால் அவருக்குப் பூமியில் மச்சேந்திரரென்று பேர் வழங்குகின்றது. மச்சேந்திரர் கைகால் குறைந்த சௌரங்கியென்னும் ஒரு முடவருக்குக் கைகால்களை அளித்து யோகோபதேசம் செய்தார். இவர்களாலும், பதஞ்சலி கோரக்கர் முதலியவர்களாலும் பூலோகத்தில் யோக சாஸ்திரம் பரவப் பெற்றது. இவர்கள்ளிடமிருந்து யோகம் பரம்பரையாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

யோகத்துக்கு ஆசனம், கும்பகமென்னும் சித்திரம், முத்திரையாகிய கரணம், நாதானு சந்தானம் என்னும் நாலும் யோகாங்கமாம். பிரத்தியாகாரம் முதல் சமாதி வரையிலுள்ளவைகள் நாதானு சந்தானத்தில் அடங்கும். எண்வகை யோகங்களில் ஆசனமே முதலாவது. ஆசனத்தை அப்பியாசித்துத் தனக்கு ஒத்த ஆசனத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

 

எண்பத்து நாலு இலட்சம் ஜீவபேதங்களிலிருந்து ஆசனங்கள் அறியப்பட்டன. அவை ஸ்ரீ பரமேசுவரனே அறிவார். எணபத்துநாலு இலட்சங்களிலும் இலட்சத்துக்கு ஒவ்வொன்றாகப் பொறுக்கி எண்பத்து நாலு ஆசனங்களே யோக சாஸ்திரங்களில் கூறப்பட்டன. இவை பரமேசுவரனால் சொல்லப் பட்டவை. ஆசனங்களாவன - ஸ்வஸ்திகம், கோமுகம், வீரம், கூர்மம், குக்குடம், உத்தான கூர்மம், பச்சிமதானம், மயூரம், மச்சேந்திரம், தனுராசனம், சித்தாசனம், பத்மாசனம், பத்திராசனம், சிம்மாசனம், சவாசனம் என்பனவாம். இவற்றுள்ளும் சித்தாசனம், பத்மாசனம், பத்திராசனம், சிம்மாசனமென்பன சிறந்தனவாம். சித்தாசனம் மச்சேந்திரராலனுட்டிக்கப் பட்டிருப்பதனால் இது மச்சேந்திரசித்தாசன மென்னப்படும். இவ்வாசனங்களெல்லாம் குரு உபதேசக் கிரமத்தால் பழகவேண்டும். இவற்றுள்ளும் மதாந்தர பேதங்களுண்டு. இவற்றையும் குருமூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கு ஆசனங்களையும் யோக நூல்கள் மிகவும் புகழ்ந்து பேசுகின்றன. இவையெல்லா ஆசிரமிகளாலும் அனுஷ்டிக்கத்தக்கனவாயினும் பதுமாசனம் கிருகஸ்தர்களாலும் மற்றைய ஆசனங்கள் எனைய ஆசிரமிகளாலும் அனுஷ்டிக் கத்தக்கனவாம். இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தனக்கு ஏற்றவாறு தெரிந்து பழகிப் பின்னரே யோகப் பயிற்சி செய்ய வேண்டும். சிறந்த இவ்வாசனங்களைச் சிறிது விரித்துக் கூறுவாம். யோகி எப்போதும் சித்தாசனத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று நூல்கள் கூறுகின்றமையால் நான்காசனங்களிலும் சித்தாசனம் சிறந்தது. மச்சேந்திரரால் அனுஷ்டிக்கப்பட்டமையால் இது மச்சேந்திர சித்தாசனமென்று கூறப்பட்டது. சித்தாசனமென்பது சித்தர்களுக்குரிய ஆசனமென்று பொருள் தரும்.

 

குதத்திற்கும் உபஸ்தத்திற்கும் மத்தியில் இடது காலின் பாதமூலத்தால் அழுத்திக்கொண்டு இடது பாதத்தை லிங்கஸ்தானத்தில் வைத்துக்கொண் டிருக்கவேண்டும். இருதயத்திற்கும் இடையில் நாலங்குலம் இருக்கும்படி மோவாய்க் கட்டையை நிறுத்திப் புருவமத்தியிற் பார்வையை வைத்து இறு மாந்திருப்பதாம். இதுவே மச்சேந்திர சித்தாசனமாம். இதனைப் பலர் பலபடியாக அனுஷ்டிப்பார்கள். இடது பரட்டை இலிங்கத்தின் மேல் வைத்து இடது பாகத்தின் மேல் வலது பாட்டை வைத்துக்கொண்டிருப்பதும் சித்தாசனமாம். இது மதபேதமாகையால் வேறுபடாது. ஏனெனில் யோகிகள் தத்தம் சௌகரியத்துக்கேற்க அறிந்து செய்து கொண்டார்களாதலால் பேதமில்லை. இப்படிப்பட்டவைகள் வருமாறு. வஜ்ராசனம், முக்தாசனம், குப்தாசன மென்று கூறப்படுவனவாம். சிலர் இடது கால் பரட்டை யோனிஸ்தானத்தில் வைத்து, வலது பரட்டை (முளி) இலிங்கத்தின் மேல் வைத்தலைச் சித்தாசனமென்பர். இதை மாறி வைப்பது வஜ்ராஸனமென்னப்படும். வலது கால்பரடு இடது பரடுகள் இரண்டையும் கீழும் மேலுமாகச் சேர்த்து யோனிஸ்தானத்தில் வைத்திருப்பது முக்தாசன மென்னப்படும். மேலும் கீழுமாகச் சேர்க்கப்பட்ட பாடுகளை இலிங்கஸ்தானத்தில் வைப்பது குப்தாசன மெனப்படும்.

 

இயமத்தில் மிதாகாரமும், நியமத்தில் ஜீவ இம்ஸை செய்யாமையும் பிரதானம். அதுபோல ஆசனங்களில் சித்தாசனம் சிறந்ததாம்.

 

எழுபத்தீராயிரம் நாடிகளையும் சோதிப்பதாதலால் சித்தாசனம் எல்லா ஆசனங்களிலும் சிறந்தது. மிதாகாரமுடையவனும் பிரமதியானம் செய்து கொண்டு சித்தாசனத்தைப் பன்னிரண்டு வருஷம் அப்பியாசித்தால் அவன் யோகியேயாவான். வேறு பழக்கங்கள் வேண்டுவதில்லை. இந்தச் சித்தாசனத்தால் பிராணவாயு கட்டுப்பட்டுக் கும்பகத்தில் அடங்கி நிற்கும். மூலபந்த முதலியவற்றால் வருத்தமில்லாமல் உன்மனாவஸ்தை சித்தியாம். பிராண வாயு ஆக்கினையைக் கடத்தல் உன்மனி அவஸ்தையாம்.

 

பத்மாசனமாவது பிரயத்தனத்தால் இருபுறங்கால்களையும் தொடையின் மேல் நிறுத்தி, இரண்டு கைகளையும் தொடையின் மேல் வைத்துக் கொண்டு மூக்கு நுனியில் பார்வையைச் செலுத்தி, இருபக்கங்களின் மூலத்தில் நாவை வைத்து மார்பில் மோவாய்க்கட்டையை வைத்துக்கொண்டு வாயுவைப் போலெழும்புதல் பத்மாசன மென்னப்படும். இதனால் வியாதிகளெல்லாம் ஒழியும். இதுவே ஜிஹ்வாபந்தமும் மூலபந்தமுமாம். இதனைக் குருமூலமாய்த் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வப்பியாசத்தால் பிராணவாயு மேலெழும் பிச்சுழுமுனை மார்க்கமாய்ச் செல்லும். அந்த வாயுவை பூரகம் செய்து அபானத்துடன் ஐக்கியம் செய்வதால் ஞானசித்தியுண்டாகும்.
 

பீஜத்தின் கீழுள்ள நரம்பின் வலது புறத்தில் இடது பரட்டையும், இடது புறத்தில் வலது பரட்டையும் சேர்த்துவைப்பது சிம்மாசனமாம். முழங்கால்களின் மேல் இரண்டு கைகளையும் பொருந்தவைத்து விரல்களை விரித்துக் கொண்டு வாயைத் திறந்து நாவை நீட்டிக்கொண்டு புருவமத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது மொன்று. இதனால் மூலபந்தம் ஜிஹ்வாபந்தம் ஜாலந்தரபந்தம் மூன்றையும் சம சித்தியாக்கும்.

 

பீஜஸ்தானத்தின் கீழிருக்கும் நரம்பின் வலது புறத்தில் வலது பரட்டையும் இடது புறத்தில் இடது பரட்டையும் சேர்த்து இருப்பது பத்திராசனமாம். இதனைக் கோரக்ஷணாசனமென்றும் கோரக்காசனமென்றும் கூறுவர்.

 

மிதாகாரம் கொள்ளும் யோகிகள் சில பொருள்களைத் தள்ளிப் புசிக்க வேண்டும். கசப்பு, புளிப்பு, உறைப்பு, உப்பு, வெப்பமான பொருள் (வெல்லம் முதலியவை), கீரை, எண்ணெய், கொள், கள், எள், கடுகு, மீன், ஆடு முதலியவற்றின் மாமிசம், தயிர் மோர், இலந்தைப்பழம், பெருங்காயம், பிண் ணாக்கு, வெண்காயம், வெள்ளைப்பூண்டு, உளுந்து, கடலைமுதலிய விருத்திக் குரிய பதார்த்தங்களும் ஆகாவென்று விலக்கப்பட்டன. சோளம், வரகு, மறுபடியும் சுடவைத்த அன்னம் குழம்பு இரசம் காந்தின சோறு நெய் முதலிய சேராத பதார்த்தங்களும் விலக்கப்பட்டன. அவசியம் வேண்டுமானால் கொஞ்சமாய் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
 

யோகாப்பியாசகாலத்தின் ஆரம்பத்தில் நெருப்புக்காய்தல், ஸ்திரீஸம்போகம், தீர்த்தயாத்திரை நடை இவற்றை ஒழித்து விடவேண்டும். குளிர் உண்டாதலால் அதிகாலை ஸ்நானம் உபவாசம் அதிக பாரஞ் சுமத்தல் சூரிய நமஸ்காரம் சரீரப்பிரயாசந்தரும் மற்றைய செய்கைகளும் ஆரம்பயோகிகள் விலக்கி விட வேண்டும். அப்பியாசத்தில் சித்திபெற்றபின் நெருப்புக்காய்தல், இல்லறத்தான் ருதுகாலத்தில் தன் மனைவியுடன் கூடுதல், தீர்த்தயாத்திரை முதலியன செய்தல் கூடும் என்பதாம்.

 

கோதுமை, நெல், யவம், அறுபதாம் குறுவை நெல்லரிசி இவற்றாலாகிய சாதம், பால், நெய், சர்க்கரை, கற்கண்டு, சுக்கு, பேய்ப்புடல், பாசிப்பயறு, குற்றமற்ற நீர் இவைகள் கொள்ளத்தக்கனவாம். தேகத்திற்குப் புஷ்டி தருவனவும், மதுரமுள்ளனவும், மெதுவானவையும், நெய்சேர்ந்ததும், மனதுக்குப் பிரியமுள்ளதும், விலக்கப்படாதவையான பதார்த்தங்களையும், தாதுவை வளர்ப்பதுமான பதார்த்தங்களையும் புசிக்கலாம். கூடாவென்று விலக்கப் பட்டலை மனதுக்குப் பிரியமுள்ளவையானாலும் கொள்ளலாகாது.

 

      முற் கூறியபடி அப்பியாசித்து ஆசனங்களில் சித்திபெற்றவன் யோகத்திற்கு முதலங்கமான பிராணாயாமத்தை அப்பியாசிக்க வேண்டும். சித்தித்த ஆசனங்களில் தனக்குச் சுகமாயிருக்கும் ஆசனத்திலிருக்க வேண்டும். சித்தாசனம் முதலிய நான்கு ஆசனங்கள் சிறப்புடையன வென்பதை மறக்கப்படாது. பிராணாயாமத்தை அப்பியசிக்கிறவன் இந்திரியநிக்கிரகம் மிதாகார போஜனங்களை அனுசரிக்க வேண்டும். பின் குரு உபதேசித்தபடி முறை தவறாமல் பிராணாயாமஞ் செய்ய வேண்டும். மனதை நிறுத்துவதே யோகத்தாலாகும் பயனாம். வாயு சலித்தால் மனமும் அசையும். வாயு அடங்கி நின்றால் மனமும் அசையாமல் நிற்கும். மனமும் வாயுவும் அசையாமல் நிலையாய் நிற்குமானால் அதுவே யோகசித்தியாம். அவன் நீடித்த ஆயுசையும் சகல சித்திகளையும் பெறுவான். பிராணன் சரீரத்தை விட்டுப் பிரிவதே மரண மென்னப்படுமாதலால் வாயுவை நிறுத்துவதால் ஆயுசும் விருத்தி யாகும். நாடிகளெல்லாம் மலத்தால் வியாபிக்கப்பட்டிருக்கும். அம்மல நீங்கினால் நாடிகள் சுத்தப்படும். அப்போது பிராணாயாமம் எளிதில் கைகூடிப் பிராணவாயு சுழுமுனை நாடியை நோக்கிச் செல்லும். பிராணாயாமத்தால் நாடிகள் மல நீங்கிச் சுத்தமாகும். அதனால் பிராணாயாமத்துக்கு நாடி சோதனை யென்பதும் ஆன்றோர் வழக்கு. மலசோதனை யென்பது முண்டு.

 

பிராணாயாமம், பூரகம், கும்பகம், ரேசகம் என முத்திறத்ததாம். பூரக மென்பது வெளிவாயுவை உள்ளுக்கு இழுத்தல். கும்பகமென்பது இழுத்த வாயுவை உள்ளே நிறுத்துதலாம். இரேசகம் என்பது நிறுத்தின வாயுவை மெதுவாக வெளியில் விடுதல். இந்தப் பூரக இரேசக கும்பகங்கள் மூன்றும் பிராணாயாமாங்கம் என்னப்படும். இம்மூன்றும் சேர்ந்ததே பிராணாயாமம்.

 

இடகலை (சந்திரநாடி) பிங்கலை (சூரிய நாடி) சுழுமுனை என மூன்று நாடிகள் பிரதானங்களாம். முதலில் பிங்கலை (சூரியநாடி) யால் வாயுவை உள்ளே இழுத்து வயிற்றை நிரப்பவேண்டும். இப்படி நிரப்பி நிறுத்துவதே பூரகமாம். பூரித்துக் கும்பித்த வாயுவை இடகலையால் மெதுவாய்விடவேண்டும். இந்தப் பிராணாயாம யோகத்தை வாலிபன் விருத்தன் எல்லாரும் ஜாக்கிரதையுடன் செய்யலாம். சரீரத்தில் வேர்வை நடுக்கம் உண்டாகும் வரையில் கும்பகம் செய்யலாம். எந்த நாடியால் பூரகம் செய்யப்படுகிறதோ அந்த நாடியால் ரேசிப்பது (வாயுவை விடுதல்) கூடாது. மறுநாடியினாலேயே விட வேண்டும். அதாவது பிங்கலையால் பூரித்தால் இடகலையாலும், இடகலையால் பூரித்தால் பிங்கலையாலும் விடவேண்டும். பூரித்த நாடியால் ரேசித்தால் வாயு வெகு வேகமாய் வெளிவரும். வந்தால் அது சரீரபலத்தைக் குறைக்கும். ஆதலால் மறுநாடியால் விடவேண்டும். எந்த நாடியால் இரேசகம் செய்யப்படுகிறதோ அதனாலேயே மறுபடி பூரகம் செய்ய வேண்டும். இவ்வாறு இடைகலை பிங்கலைகளால் மாறி மாறிப் பிராணாயாமம் செய்து பழகி னால் மூன்று மாசகால அளவில் நாடிகள் சுத்தமாகும்.

 

ஒருநாளில் நாலுதடவை அல்லது மூன்று தடவை செய்ய வேண்டும். காலை, நடுப்பகல், சாயங்காலம் நடுராத்திரி ஆகிய நாலுவேளைகளில் செய்ய வேண்டும்.

 

காலையில் அறுபது பிராணாயாமம், பகலில் நாற்பது, சாயங்காலம் இருபது, நடுராத்திரியில் இருபது செய்து பழகவேண்டும். மாதாந்தரத்தில் தடவைக்கு எண்பது செய்யலாமென்று கூறப்பட்டுள்ளது. உதித்து ஆறு நாழிகை வரையில் பூர்வான்னம்; அதற்குமேல் பன்னிரண்டு ராழிகை வரையில் பரான்னம்; மேல் பதினெட்டு நாழிகைவரையில் மத்தியான்னம்; மேல் இருபத்து நாலுநாழிகை வரையில் அபரான்னம்; மேல் அஸ்தமான பரியந்தம் சாயான்ன மென்று பகல் ஐந்து பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பகலில் பூர்வான்னமும், மத்தியான்னமும், சாயான்னமும் பிராணாயாமஞ் செய்வதற் குரிய காலமாம். நடுராத்திரியில் செய்வதே இரவுக்குக் காலமாம்.

 

பிராணாயாமமென்பது பிரணவ சொரூபமாம். அகார, உகார, மகாரம் கள் ஒன்று கூடியதே பிரணவ ஏகாட்சரமாம். இந்த மூன்றெழுத்துக்களும் பிரம விஷ்ணு ருத்திர சொரூபமாகவும், காயத்திரி சாவித்திரி சரஸ்வதி சொரூபமாகவும் கூறப்படும். இச்சொரூபங்களைத் தியானித்துக்கொண்டு பூரக கும்பக ரேசகங்களைச் செய்யவேண்டும். எப்பொழுதும் ஒன்றைப் பற்றியே நிற்கும் இயல்புள்ள மனம் தனித்து நில்லாதாகையால் இவற்றைத் தியானிக்க வேண்டும். அகாரமூர்த்தி செந்நிறமுடையது; அன்ன வாகனத்தி லிருப்பது; கையில் தண்டமுடையது; இதுவே காயத்திரியாம்; வாலை யெனவும் படும். உகாரம் பெண்ணிறமும் கருடவாகனமு முடையது; கையில் சக்கரமுடையது; யௌவன பருவமுடையது; இதுவே சாவித்திரி எனப்படும். மகாரமூர்த்தி கருமைநிறமும் வயது சென்றதும், கையில் சூலாயுத முடையதுமாம். இதுவே சரஸ்வதியாம். இம்மூன்றிற்கும் பிரணவமே மூலம் ஆதலால் பிரணவத்தைச் சிந்தித்துக் கொண்டு பிராணாயாமம் செய்ய வேண்டும். இடைகலையால் வாயுவைப் பூரித்து (பதினாறு மாத்திரையளவு) அகாரத்தைத் தியானிக்க வேண்டும். அறுபத்து நாலு மாத்திரையளவு கும்பித்து உகாரத்தைச் சிந்திக்க வேண்டும். கும்பித்ததை மகாரத்தைத் தியானித்து முப்பத்திரண்டு மாத்திரையளவு ரேசித்தல் வேண்டும். இமை கொட்டுமளவே ஒரு மாத்திரையளவாம். ரேசகத்தை அதிகமாகச் சொன்னது மெதுவாக வாயுவை வெளியில் விட வேண்டும், வேகமாய் விடக்கூடாது என்பதை விளக்குதற்கே. பிரம க்ஷத்திரிய வைசியர்களாகிய துவிஜ கிரகஸ்தர்களுக்கு வியாகிருதி காயத்திரி சிரசுகளுடன் கூடின காயத்திரி மஹாமந்திரமே பிராணாயாம மந்திரமாக விதிக்கப்பட்டது. இதை யுச்சரித்துக் காலையில் பத்தும், பகலிற் பத்தும் மாலையிற் பத்தும் செய்யவேண்டும். இதைத்தான் செய்ய வேண்டுமென்கிற நிர்ப்பந்தமில்லை. சௌகர்யமும் சாத்தியுமுள்ளவர்கள் இந்தப் பிரணவோச்சாரண பிராணாயாமமே செய்யலாம்.

 

இந்தப் பிராணாயாமம் சகற்பம் அகற்பமென இருவகைப்படும். சகற்ப மென்பது மந்திர உச்சாரணம், மூர்த்தி தியானங்களுடன் செய்வது. அகற்பம் என்பது அவைகள் இல்லாமற் செய்வது. இதுபூர்வஜன்மங்களிற் செய்த அனந்த புண்ணியமுடையவர்களுக்கே யன்றிச் சித்திப்பது அருமை. ஆதலால் நூதன அப்பியாசிகள் சகற்ப யோகம் பயில்வதே நன்று. மந்திரோச்சாரணம் மூர்த்தி தியானமாகிய இரண்டு தொழில்களையும் செய்தலால் மனம் வேறு வழியிற் செல்லாமல் அடக்கலாம். பிரணவமே மந்திரம். முன்கூறிய காயத்திரி சரஸ்வதி சாவித்திரிகளே மூர்த்தி. பிரம விஷ்ணு ருத்திரர்களையுந் தியானிக்கலாம். புருவமத்தியில் பார்வையைச் செலுத்த வேண்டும். அதுவே ஞானஸ்தானமாம். இதுவே ஆக்ஞையுமாம். இனி மாத்திரை யென்பது கைந்நொடி கண்ணிமைப்பொழுதே யாயினும் யோக நூலோர் கூறும் வழியாவது, நடுவிரலையும் பெருவிரலையும் சேர்க்து நொடிக்கிற காலத்தை ஒரு மாத்திரை யென்பர் சிலர். முழங்காலை மூன்றுதரந் துடைத்தலை ஒருமாத திரை யென்பர். தூங்குகிற புருஷனுடைய சுவாசம் போய்த் திரும்புகிற காலமே ஒருமாத்திரை யளவென்பர். ஆதலால் இம்மாத்திரைகளை யறிந்து பிராணாயாமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

 

      பிராணாயாமம் உத்தமம், மத்திமம், அதமம் என மூவகைப்படும். அதமம் பன்னிரண்டு மாத்திரையளவு. மத்திமம் இருபத்துநாலு மாத்திரை அளவுள்ளது. உத்தமம் முப்பத்தாறு மாத்திரை அளவுள்ளது. பனிரண்டு மாத்திரை யளவை ஒரு உத்காதம் என்றும், இருபத்துநாலை இரண்டு உத்காதமென்று பெரியார் கூறுவர். முப்பத்தாறு மூன்று உத்காதமாம். பிராணவாயுவினால் அபானவாயு பீடிக்கப்பட்டு மேல் எழும்பித் திரும்புகிற காலம் உத்காத மென்னப்படும். இப்படிப் பிராணாயாமம் செய்வதால் முதல் வியர்வை யுண்டாகும். பிறகு சரீரநடுக்கம் உண்டாகும். புத்தி மயக்கமுமுண்டாகும். இவை அடங்குகிற காலமே யோகம் சித்தியாகிய உத்தமபிராணாயாமமாம். இந்த மாத்திரை பலபடியாகக் கூறப்பட்டிருந்தாலும் விரோதப்படாமல் ஒத்திருப்பதை ஊகித்து அறிந்து கொள்ள வேண்டும். பிராணாயாமம் சித்தியாகாவிட்டால் யோகசித்தியேயில்லை. பிரத்தியாகாரம் தாரணை முதலியவும் சித்தியாகாவாம்.

 

ஏனென்றால் பிராணாயாமத்தின் விருத்தியே பிரத்தியாகாரம், தாரணை, சமாதி, தியானங்கள் என்று பெயர் பெறுகின்றது. இதனால் பிராணாயாமமே யோகமென்று தெரிந்து கொள்ளலாம். பிராணாயாமம் பனிரண்டானால் ஒரு பிரத்தியாகாரமாகும். பன்னிரண்டு பிரத்தியாகாரம் ஒரு தாரணையாம். தாரணை பனிரண்டு சமாதியாம். சமாதி பன்னிரண்டு ஒரு தியானமாம். இதனாலும் பிராணாயாமமே யோகமென்று அறியலாம். ஆதலால் பிராணாயாமமே யோகமாமென்பது தெரிந்து கொண்ட ஒருவன் பிராணாயாமத்தைச் சிரத்தையோடும் பக்தியோடும் செய்ய வேண்டும். இவ்வாறு பிராணாயாமஞ் செய்கிறவனுக்குத்தான் பிரமரந்திரவழி திறக்கும். பிரமரந்திரவழி திறந்தால் பிராணன் அதில் பிரவேசிக்கும். ஒரு முகூர்த்தகாலம் பிராணன் அதில் நிற்பது தாரணை. அறுபது நாழிகை - ஒருநாள் நின்றால் தியானமாம். பனிரண்டுநாள் வரையில் பிரமரந்திரத்தில் பிராணன் நின்றால் அதுவே சமாதியாகும். இதன் விரிவு பின்னர்க் கூறப்படும். இந்த யோகம் இயமநியமாதிகளிலிருந்து நெறி தவறாமல் ஒழுகுகிறவனுக்குத் தான் சித்தியாகுமென்று நிச்சயமாய் அறிய வேண்டும்.

 

இருதயஸ்தானத்தில் அநாகதச் சக்கரம் இருக்கின்றது. அது திலகம் போன்ற செந்நிறமுள்ள விந்துவுடன் கூடியது;

என்னும் பன்னிரண்டு எழுத்துக்களுள்ள பன்னிரண்டு இதழ்களை யுடையது. அதன் பொகுட்டில் புகைநிறமுள்ள, அறுகோண வடிவமான வாயுமண்டல மிருக்கின்றது. அதன் நடுவில் மின்னல் கொடி போன்ற முக்கோணமுண்டு. அதன்மேல் ய0 என்னும் வாயுபீஜம் இருக்கின்றது. அது கருநிறமுடையது; கிருஷ்ணமான்மே லேறியிருக்கும் புகை போலும் கருநிறமுடையது; சதுர்ப்புஜமும் கையில் அங்குசமுமுடையது. அதன்மத்தியில் இரண்டு புஜங்களும் வரதாபய கரமுடையவராய் முக்கண்களுடையவராய் அன்னம் போன்ற வண்ணமுடையவராய் மஹேசன் இருக்கிறார். அக்கர்ணிகையின் நடுவில் சிவந்த பத்மமிருக்கின்றது. அதன்மத்தியில் கங்காளமாலையணிந்த காகினி என்னும் சக்தியிருக்கின்றது. அது மஞ்சள் வர்ணமும் நாலுபுயமும், பாசம், கபாலம், வரம் அபயமும் உடையதாயிருக்கும்; மஞ்சள் வர்ணமுள்ள வஸ்திரம் உடுத்தியிருக்கும்; சர்வாலங்கார முடையதாயிருக்கும்; அமிர்தத்தால் நனைந்த இருதயமுடையது. நடுவிலுள்ள திரிகோணத்தில் அர்த்தசந்திர பிந்துஸ்வரூப மஸ்தமுடையதும், ஒளியுள்ளதும், சொர்ண வர்ணமுடையதுமான பாணலிங்க சிவமிருக்கின்றது. அதன் மேல் சலனமற்ற தீப மொட்டுப் போன்ற வடிவமுள்ள ஹம்ஸஸ்வரூபிய சீவாத்மா விருக்கின்றது. இதன்கீழ் சிவந்த வர்ணமுள்ள ஊர்த்துவமுகமான எட்டிதழ்த்தாமரையுண்டு. அதில் கற்பகமரமும், இரத்தின மேடையும், சூரியன் சந்திரனுமாகிய இவற்றால் அலங்கரிக்கப்பட்ட மானதபூஜா ஸ்தானமிருக்கின்றது. இதையறிந்து பூஜித்துத் தியானித்து நிஷ்டைகூடும் யோகி வாயுவை ஜயிப்பான். வாயுமண்டலத்தில் யதேச்சையாய்ச் சஞ்சரிப்பான். வாயுவினால் அவனுக்குப் பயம் நேராது.

      கழுத்தினடியில் அனாகதசக்கரமிருக்கின்றது. இது சிவந்த மகரந்தமுள்ள பதினாறிதழ்களுடன் கூடிய பத்மம். இதழ்களில்

ஆகிய பதினாறு வர்ணங்களையுடையது. எழுத்துக்களும் சிவந்தநிறமாகவே தோற்றும்
கர்ணிகையின் நடுவில் வட்டமாயும் வெண்ணிறமாயுமுள்ள ஆகாய மண்டல மிருக்கின்றது. அதன் மத்தியில் ஒரு திரிகோணமுண்டு. நடுவில் சந்திரமண்டல மிருக்கின்றது. அதன்மேல் வெள்ளை வஸ்திரமுடுத்து வெண்ணிறமுடை யதாய், நான்குதோள் பாசம் அங்குசம் வரதம் அபயம் என்பவற்றைத் தரித்த ஹ என்னும் ஆகாச பீஜ மிருக்கின்றது. அது வெள்ளையானையின் மேலிருக்கும். அதன்மத்தியில் ரிஷபம் இருக்கின்றது. அதன் மேல் மஹா சிம்மாசன மிருக்கின்றது. அதில் சதாசிவன் எழுந்தருளியிருக்கிறார். அவர் அர்த்தநாரீசுவரஸ்வரூபமாயிருப்பதால் பாதிசரீரம் தங்கவர்ணமாயும் பாதிசரீரம் பால்வண்ணமாயுமிருக்கும். அவர் ஐந்து முகம் முக்கண்கள் பத்துக்கரங்க ளுடையவராயிருப்பர். பத்துக்கைகளிலும் சூலம், டங்கம், வாள், வஜ்ஜிரம், தீமணி, நாகம், அங்குசம், பாசம் இவைகளைத் தரித்திருப்பர். சர்வாங்கமும் விபூதி அணிந்திருப்பர். நாகாபரணங்களை அணிந்திருப்பர். அமுதமொழுகும் அதோமுகமான அர்த்த சந்திரனைச் சூடியிருப்பர். இதன் கர்ணிகையில் சந்திரமண்டல மத்தியில் ஸாகினியென்னும் சக்கரசதை நடத்தும் சக்தி வசிக்கின்றது. இது நாலு புயங்களும் வெண்ணிறமுமுடையதாயிருக்கும். பாசம், அங்குசம், வில், பாணம் என்பவற்றைக் கையில் தரித்திருக்கும். பீதாம்பர மணிந்திருக்கும். ஐந்து முகங்களும் மூன்று கண்களுமுள்ளதாயிருக்கும். இவ்வாறு இந்தச் சக்கரக்தையும் அதில் விளங்கும் சதாசிவத்தையும் சக்தியையும் தரிசித்த யோகியானவன் ஆகாயபூதத்தை ஜயித்தவனாவான். இவன் தடையின்றி ஆகாயத்தில் சஞ்சரிப்பான். இவனுக்கு அஷ்டமஹாசித்திகளும் பணிவிடைக்கரரர்களைப் போல ஏவல் செய்து காத்துக் கொண்டிருக்கும். ஆயினும் அந்த யோகி அதில் மயங்கிக் கிடக்கமாட்டான். மோட்சத்திலேயே கருத்தா யிருப்பான்.

 

      சரியான பிராணாயாமத்தால் வியாதிகள் நீங்கும்; சரீரதிடமுண்டாகும்; நாடிகள் வசப்படும். அயுக்தமான பிராணாயாமத்தால் காசம், ஜுரம், காது வலி, கண்வலி, தலைநோவு முதலிய பல வியாதிகளுண்டாகும். ஆதலால் இரேசகபூரக்கும்பகங்களைக் குருவுபதேசித்த முறைதவறாமல் சரியாய்ச் செய்ய வேண்டும். இரேசகபூரகங்களுடன் செய்யப்படும் கும்பகம், சகித கும்பகமென்னப்படும். இரேசகபூரகங்களில்லாமல் செய்யப்படும் கும்பகம் கேவல்கும்ப்கமென்னப்படும். இந்தக் கேவல கும்பக சித்தியின் பொருட்டே இரேசகபூரகங்கள் அப்பியாசிக்கப்படுவன. இந்தக் கேவல கும்பகம் சித்தித்து விட்டால் யோகசித்தியாம். இதனால் சகல சித்திகளும் உண்டாகும். இராஜயோகம் சித்திக்கும். குண்டலி என்னும் ஆதாரசித்தியும் நித்திரையினின்றும் விழிக்கும். விழித்தலால் சுழிமுனை நாடி யாதொரு கெடுதியுமின்றிநிமிர்ந்து நிற்கும். அப்போது பிராணவாயு பிரமரந்திரமார்க்கத்தில் செல்லும்.

 

குண்டலி விழிக்கும் போது ஆறு ஆதார சக்கரங்களும் தோற்றும். பிரமகிரந்தி விஷ்ணுகிரந்தி ருத்திரகிரந்தி (முடிச்சு) ஆகிய மூன்று கட்டுகளும் போதிக்கப்படும். இந்தக் கும்பகம் வேறு எட்டுவகையாகவும் சொல்லப்படும். அவை முறையே சூரியபேதி, உஜ்ஜீயினி, சீத்காரி, சீதலி, பஸ்திரிகை, பிராமரி, மூர்ச்சை, பிலாவினி என்பனவாம். இவை கேவல கும்பகசித்தியால் செய்யத்தக்கனவாம்; ஏனெனில் இவை கேவல கும்பகசித்திக்குப் பரம்பரா காரணங்களாகின்றன.

 

சூரியபேதி சித்தியால் (சூரிய நாடியால் வாயுவை யிழுத்துச் சந்திரநாடியில் மெதுவாக விடுதலாம்) ஜலதோஷம் சில்விஷம் தலைநோய் முதலியவற்றை நீக்கலாம். சரீரத்திலுள்ள எண்பது வாதங்களையும் நீக்கிக்கொள்ளலாம்.

 

உஜ்ஜயினி - வாயை மூடிக்கொண்டு இரண்டு நாடிகளாலும் பூரித்துக்
 கும்பித்துப் பின் சந்திரநாடியால் மெதுவாக இரேசிப்பது. இதனால் சிலேத்தும் தோஷம் நீங்கும்; ஜாடராக்கினி விருத்தியாகும்.

 

சீத்காரி - கொட்டாவிவிட்டு இரண்டு நாசிகளாலும் ஜலத்தை இழுத்துப் பூரித்துக் கும்பித்து இரண்டு நாசியிலும் விடுத்தலாம். பூரிக்கும் போதுஇரண்டு பல் வரிசைகளையும் ஒன்று சேர்த்துக்கொண்டு உஸ் என்று சப்தமுண்டாகும்படி பூரித்தலால் இது சீத்காரி என்னப்பட்டது. இதனால் சரீரம் வலுக்கும், பசிதாகம் சோம்பல் நித்திரை நீங்கும்.
  

சீதலி - நாவின் நுனியை உண்ணாவில் சேர்த்து இரண்டு நாசியாலும் நீரை ரேசித்து நாக்கு தொண்டை இவற்றின் உதவியால் பூரித்துக் கும்பித்து இரண்டு நாசிகளாலும் மெதுவாகவிடுதல். இதை ஒரு மாதம் அப்பியசித்தால் பிராணவாயு வசப்படும். ஜுரம் ஜுரக்கட்டி முதலிய நோய் நீங்கும். பாம்பைப் போலச் சட்டையுரித்து அன்னாகாரமின்றி நெடுங்காலம் ஜீவிக்கும் சக்தியுண்டாகும். ஒரு வருஷம் பழகினால் ஆத்மதரிசனமும் செய்யலாம்.

 

பஸ்திரிகை - இடது பாதத்தை வலது துடையிலும் வலது பாதத்தை இடது துடையிலும் மாற்றி வைத்துக்கொண்டு சரீரத்தை நிமிர்ந்திருக்கச் செய்து இரண்டு கைகளையும் முழங்காலில் வைத்துச் சின்முத்திரையுடன் சுழுமுனையில் பார்வையைச் செலுத்தி, ஒரு நாசியால் நீரை இழுத்துப் பூரித்து இரேசித்துப் பின் சூரியனால் பூரித்துச் சந்திரனால் விடுத்துப் பின் சந்திரனால் பூரித்துச் சூரியனால் விடுதல். இதனால் சரீரத்தைக் கனத்திருக்க வும் லேசாக இருக்கவும் செய்யலாம். பிரம விஷ்ணு ருத்திரன் என்னும் மூன்று கிரந்திகளையும் போதிக்கலாம்.

 

பிராமரி - சுகாசனத்தி லிருந்து கொண்டு நாடிகளைப் படபடப்பாக ஓடச் செய்து உஷ்ணமுண்டாகாமற்படி சவாசத்தை இழுத்து விடுத்து நாடிகளைப் படபடப்பாக ஓடச் செய்யவேண்டும். சரீரத்தில் சூடுண்டாகும்படி சுவாசத்தை விரைவாக இழுத்துவிடவேண்டும். பின்பு வியர்வை உண்டாய்ச் சரீரம் குளிர்ந்ததும் நாசித்துவார மிரண்டினாலும் நிதானமாக வாயுவை இழுத்துப்பின் விரைவாக இழுக்க வேண்டும். சரீரம் வியர்வையால் நனைகிறவரையிலும் சுவாசத்தை இழுத்துவிடவேண்டும். பின்னும் இரண்டு நாசிகளாலும் இழுத்துப் பூரித்துக் கும்பிக்க வேண்டும். பின் நிதானமாய் இரேசிக்க வேண்டும். இந்தக் கும்பகம் நெடுங்காலம் பழகப்பட்டால் அந்த யோகிக்கு முதுமை நீங்கி யௌவனமுண்டாகும். அஷ்டமாசித்திகளும் கைகூடும். பிறருக்குண்டாகும் வியாதிகளையுங் கையால் தொட்டு நீக்கலாம்.

 

மூர்ச்சை - சித்தரசனத்திலமர்ந்து மூர்ச்சை உண்டாகும் வரையில் கும்பிக்க வேண்டும். மெதுவாய் இரேசிக்க வேண்டும். இது சித்தித்த பின் இரு காதுகளையு மூடிக்கொண்டு கும்பகம் செய்ய வேண்டும். அப்போது வலக்காதில் சப்தம் கேட்கும். அதை இடக்காதுக்குக் கேளாதவரையில் செய்து பழகவேண்டும். இதனால் மிருகவசிய முண்டாகும். மரணத்தையும் தாண்டலாம். நினைத்த சித்திகளையும் அடையலாம். சகல கலைகளையும் ஓதாமலே உணரலாம். இதை இருபத்து நாலு வருஷம் அனுஷ்டித்தால் சரீரத்தில் பால்மயமாய் அமிர்தம் ஊறும். முப்பது வருஷம் அப்பியசித்தால் தேவசொரூபம் சித்திக்கும்.

     

பிலாவினி - சதா வாயுவால் வயிற்றை நிரப்பிக் கொண்டிருத்தல் - என்றால் எப்போதும் கும்பகம் கொண்டிருத்தலாம். இதனால் தண்ணீரின் மேல் தாமரை யிலையைப் போல மிதந்து கொண்டிருக்கலாம். இவையெல்லாம் பிராணாயாமமே. இவைகளை யோகப்பயிற்சியுள்ள மஹாத்மாக்கள் மூலமாகச் சந்தேகமறத் தெரிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டும். இல்லாவிடின் விபரீதப்பட்டுக் கெடுதி சம்பவிக்கும்.

 

ஆதாரதரிசனை - மூலாதாரமானது குதத்துக்கு இரண்டு விரற்கடைக்கு மேல் தாமரைக்கிழங்கு வடிவமாயுள்ளது. சிவப்புவர்ணமுள்ள நாலு இதழ்களை யுடையது. சொர்ணமயமான பீஷஸ என்னும் அக்ஷரங்களை யுடையது. இந்தக் கமலத்தின் பொகுட்டில் நாற்கோணவடிவாய் எட்டுச் சூலங்களாற் சூழப்பட்டதாய் மஞ்சள் வர்ணமுள்ளதான பூமண்டலம் இருக்கின்றது. இதன்மத்தியில் நாலுபுஜங்களுள்ளதாய் வஜ்ராயுதந் தரித்துக்கொண்டு ஐராவதத்தின் மேல் ஏறினதான பொன்னிறமுள்ள (ணம்) என்னும் பூமிபீஜம் இருக்கிறது. அந்தப் பீஜமாகிய விந்து வின்மத்தியில் நான்கு முகம் நான்கு புஜங்களுடன், தண்டகமண்டல அக்ஷமாலாதாரியாய் அபயமுடையராய், இரத்தவர்ணமுள்ள சிசுவடிவாகப் பிரமா வசிக்கிறார். இந்த இரத்தபத்மத்தில் இரத்தவர்ணமுள்ளவளாய் நான்கு புஜங்களுடன் சூலம், கட்வாங்கம், வாள், பாளபாத்திரம் என்பன தரித்த டாகினி சக்தி விளங்குகிறாள். இவளே அந்தச் சக்கரத்தை நடத்துகிற சகதி. கர்ணிகையின் மத்தியில் மின்னல் வடிவமாக முக்கோணம் விளங்கும். அதன்மத்தியில் காமலாயுவும் செந்நிறமான காமபீஜமும் இருக்கும். இதன் மேல் கறுத்தநிறமுள்ள சுயம்புலிங்க மிருக்கும். அதற்குமேல் தான் மூன்றரை வலயவடிவாய்க் குண்டலிசக்தி யிருக்கின்றது. அதன்மேல் லிங்கத்தின் மேல் தண்டாகாரமாகச் சிற்கலை யிருக்கின்றது. இந்த மூலாதாரத்தில் கணபதி யிருக்கிறார் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. பிராணாயாமத்தின் மகிமையால் இந்த மூலாதாரத்தைக் குரு திருவருளால் தரிசிக்க வேண்டும்.

 

மூலாதாரத்துக்கு இரண்டரை விரற்கடைக்கு மேல் இலிங்கமூலத்தில் சுவாதிஷ்டான மிருக்கின்றது. இது அப்புஸ்தலம். மின்னலொளி போன்ற விந்துவுடன் கூடிய வஹ யோனா என்கிற ஆறு அக்ஷரங்கள் பொருந்திய ஆறு இதழ்ச்சக்கரமாம். இவ்விதழ்கள் சிந்தூரவடி வுள்ளனவாம். அதன்கர்ணிகையில் அர்த்தசந்திர வடிவாய் எட்டுத்தளங்களுள்ள வெண்ணிற ஜலமண்டல மிருக்கின்றது. அதன்மத்தியில் (வம்) என்னும் அப்புபீஜம் இருக்கின்றது. மகரவாகனத்தின்மேல் பாசத்தைத் தரித்துக் கொண்டிருக்கும். அதன்மத்தியில் சதுர்ப்புஜங்களுடனும், சங்கு, சக்கரம், கதை, பத்மங்களைத் தரித்துக் கொண்டு விஷ்ணுமூர்த்தி யிருப்பர். பீதாம்பரம், வனமாலை, ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம் இவைகளைத் தரித்துக்கொண்டு கருடவாகனத்தின் மேலிருப்பர். யௌவன வடிவமுடையவரா யிருப்பர். அந்தப்பொகுட்டின் மத்தியில் கரியநிறமும், நான்கு கைகளும், மூன்று கண்களு முள்ளவளாய்ப் பயங்கரமான உருவமுடையவளாய் வளைந்த பற்களை யுடையவளாய் ராக்கினி யென்னும் சக்தி யிருக்கிறாள். அந்தச் சக்கரத்தை நடத்துந் தேவதை யிதுவேயாம். வெள்ளையன்னம் ரக்ததாரை யிவைகளில் பிரியமுடையவள். சூலம் சங்கு உடுக்கை உளிகளைத் தரித்திருப்பள். இந்தச்சக்கரத்தில் இருக்கும் விஷ்ணுவைத் தரிசித்த யோகிக்கு ஒருபோதும் ஜலத்தினால் பயம் உண்டாகாது. அவன் அப்புபூதத்தை ஜயித்தவனாவான்.

 

மணிபூரகம் - நாபிஸ்தானத்திலுள்ளது. மேகவர்ணமுள்ள பத்துத் தளங்களை யுடையது. தளந்தோறும் முறையே

பத்து அக்ஷரங்களை யுடையது. அதன்மத்தியில் மூன்று சுவஸ்திகைகளோடு கூடிய திரிகோண மிருக்கின்றது. இதுவே அக்கினி மண்டலம். அதன் மத்தியில்  என்னும் அக்கினி பீஜ மிருக்கின்றது. நான்கு புயங்களுள்ளது. வரம், அபயம், வஜ்ரம், சக்தி என்பன தரித்து மேஷவாகனத்தில் வீற்றிருக்கும். அந்தப் பீஜத்தில் செந்நிறமுடையவராய் இரண்டு புஜங்களுடன், வரதம் அபயமுடையவராய், வெண்ணீறும் வெண்மையான ஆபரணமணிந்தவராய், விருத்தரான ருத்திரமூர்த்தி ரிஷபவாகனத்தில் வீற்றிருப்பர். இந்தக்கர்ணிகையில் சிவந்ததாமரையில் மூன்று முகம் மூன்று கண்கள், நான்கு புயங்களுள்ளதும், கோரப்பற்களையுடையதும், நீலவர்ணமுள்ளதும், வஜ்ரம் சக்தி வரம் அபயம் என்பன தரித்து மானலாகினி என்னும் சகதியிருக்கின்றது. இந்தச் சக்திக்கு இரத்தத்தோடு கூடிய தேகரான்னம் மாமிசம் இவற்றில் பிரியமாம். இந்தச் சக்கரத்தையும் இதில் விளங்கும் ருத்திரபகவானையும் கண்டு தரிசித்த யோகி அக்கினி பூதத்தை ஜயித்தவனாவான். அவனுக்கு அக்கினியால் ஒருபோதும் பயம் நேராது.


மஹா முத்திரை

 

பத்து முத்திரைகளுள் மஹாமுத்திரை யென்பது, அப்பியசிப்பவனுக்குப் பஞ்ச கிலேசங்களையும், சோக மோகங்களையும் நீக்குதலாலும் மரணத்தை ஒழிப்பதாலும் இது மஹாமுத்திரையென்று கூறப்பட்டது. இதுவெகு சிலாக்கியமானது. இதை அப்பியாசஞ் செய்யாதவன் குண்டலி என்னும் ஆதாரசக்தியை நித்திரையினின்றும் விழிக்கச் செய்யமாட்டான்.

காலை மடித்து இடதுகாற் குதியை யோனி ஸ்தானத்தில் அழுந்த வைத்து வலதுகாலை நீட்டிக்கொண்டு அந்தக் காலின் பெருவிரலைச் சுட்டுவிரலாற் பிடித்துக் கொள்ள வேண்டும். வாயுவைப் பூரிக்க வேண்டும். அப்போது பூரித்தவாயு இடது பக்கத்தில் தங்கும். வலது குதியை யோனிஸ்தானத்தில் அழுந்தவைத்துப் பெருவிரலைச் சுட்டுவிரலாற் பிடித்துக் கொள்ள வேண்டும். இதனால் வாயு வலப்பக்கத்தில் நிற்கும். இம் முத்திரையை அனுஷ்டிப்பவர்களுக்குப் பத்தியா பத்தியமில்லை. எல்லாவற்றையும் புசிக்கலாம். எல்லாப் பதார்த்தங்களும் எளிதில் ஜீரணமாகும். இப்படி அப்பியசித்தபின் வாயுவை மெதுவாக வெளிவிட வேண்டும்; வேகமாய் விட்டால் 'லங்குறையும். இந்த அப்பியாசத்தால் க்ஷயம், குஷ்டம், குன்மம், மஹோகரமாதி நோய்கள் நீங்கும். இந்த முத்திரையை இரகசியமாய் வைத்துக் கொள்ள வேண்டும். அந்திகாரிகளுக்குச் சொல்லக்கூடாது. இந்த முத்திரையின் இரகசியத்தைக் குருமுகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முத்திரையால் நித்திரை யிலிருக்கின்ற ஆதாரசக்தி விழித்துக் கொண்டு தடியால் அடிபட்ட பாம்பு நிமிர்ந்து நிற்பது போல நிமிரும். இடைகலை பிங்கலைகளின் செய்கை ஒழியும். பிராணவாயு சுழுமுனாநாடியிற் பிரவேசிக்கும். சகல சித்திகளு முண்டாகும். இந்த முத்திரையில் மூலபந்தம் ஜிஹ்வாபந்தமாகிய இரண்டும் உபயோகப்படும்.

 

மஹாபந்தம்.

 

இதை அப்பியாசித்த யோகி சகல சித்திகளையும் பெறுவான். எமபாசத்தை யெளிதில் விலக்கிக் கொள்வான். அமிர்தவாரியைப் பெறுவான். சிவன் வசிக்கும் புருவமத்தியில் மனதை நிறுத்துவான். ஆதலால் இதைமுயற்சியுடன் அப்பியசிக்க வேண்டும்.

 

அனுஷ்டிக்கும் முறை இடது பாதத்தின் குதியை யோனிஸ்தானத்தில் வைத்துக்கொண்டு வலது தொடையை இடது தொடையின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாயுவைப் பூரிக்க வேண்டும். பின் மோவாய்க்கட்டையை இருதயத்தில் நன்றாய் வைக்க வேண்டும். பின் யோனிஸ்தானத்தைச் சுருங்கச் செய்து மனதைப் புருவமத்தியில் நிறுத்தவேண்டும். வாயுவைப் பூரித்துக் கும்பகம் செய்ய வேண்டும். பின் வாயுவை மெதுவாய் விடவேண்டும். இப்படி இடப்பக்கத்தில் செய்து பிறகு வலது பக்கத்திலும் செய்யவேண்டும். இதுவே மஹாபந்தமாம்.


 மஹா வேதம்.

 

மஹாபந்தத்திலிருந்து நிச்சலமான சித்தமுடையவன் ஜாலந்தர முத்திரையால் அசையாமல் நிறுத்திக் கும்பிக்க வேண்டும். ஜாலந்தர முத்திரை யென்பது கழுத்தைச் சுருக்குதலாகிய முத்திரையாம். பிறகு இரண்டு கைகளையும் பூமியில் சரியாய் ஊன்றிக்கொண்டு யோனிஸ்தானத்தில் இடதுகாற்குதியைச் செலுத்தி இருபக்கத்து இடுப்பையும் மேலெழுப்பி மெதுவாய்ப் பூமியில் தட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் பிராணவாயு இடைகலை பிங்கலை நாடிகளை விட்டுச் சுழுமுனா சாடியிற் பிரவேசிக்கும். அதுவே மோட்சமார்க்கமாதலால் நரைதிரை மூப்புகள் ஒழியும். மரணபயம் சேராது. சகல சித்திகளும் உண்டாகும். ஆகையால், இது சர்வ சிலாக்கியமானது. மஹாமுத்திரை மஹாபந்தம் மஹாவேதம் இம்மூன்றையும் நாள்தோறும் செய்ய வேண்டும். ஜாமத்துக் கொருதரமாக எட்டுத்தரம் செய்ய வேண்டும். குரு உபதேச முறை தவறாமல் செய்யவேண்டும். இதனால் பாபங்களெல்லாம் ஒழியும். புண்ணியம் வளரும். இம்முத்திரைகள் யோகிகளால் மிகவும் இரகசியமாகக் காப்பாற்றப்படுகின்றன. இவைகளை அனுஷ்டித்தே பூர்வ காலத்து ரிஷீசுவரர் நரை திரை மூப்பு மாரணங்களை அடையாமல் நெடுங்காலம் (பலயுகம்) வாழ்ந்து வந்தார்கள். இவைகளை அப்பியாசிக்கிறவன் வெகு இரகசியமாய் வைத்திருக்க வேண்டும். அந்திகாரிகளுக்கு வெளியிடக் கூடாது.

 

 

கேசரி.

 

நாவைப் பாலத்துவாரத்திலிட்டுப் பார்வையைப் புருவமத்தியில் செலுத்துதலே கேசரியாம். கேசரி என்பது ஆகாயம். அதற்குச் செல்லும் தொடுதல் கேசரி என்பதாம். இதற்கு மிகுந்த பிரயாசத்துடன் முயற்சி செய்தாலன்றி இது சித்தியாகாது. சாலனம், தோகனம், சேதனம் என்னும் தொழில் முயற்சியால் நாவை நீளச் செய்ய வேண்டும். இவை கடினப் பிரயாசத்தாலாகவேண்டுவன.

 

சாலனமாவது - சுட்டுவிரல் பெருவிரல் இரண்டினாலும் நாவைப் பிடித்துக் கொண்டு இடம் வலமாகச் சுழற்றுதலாம். இங்ஙனம் செய்தலால் நாக்குச்சி றிது நீண்டு வசப்படும்.

 

தோகனம் என்பது - பசுக்கறத்தல்போல பெருவிரல் சுட்டுவிரல்களால் நாவை உருவி இழுத்தலாம். இவை யிரண்டும் முறையே ஒன்றின் பின் ஒன்றாகச் செய்து பழகவேண்டும். இப்படிப் பழக்கம் செய்யாவிட்டால் கேசரி சித்தியாது. அதன்பின் முறையே சேதனம் செய்யவேண்டும்.
 

சேதனமென்பது - அறுத்தல். அதாவது மிகவும் கூர்மையான கத்தியால் நாக்கின்கீழ் அடியில் உள்ள நரம்பை அறுத்தலாம். முதல் நாள் ஒருமயிர் அளவு சேதிக்கவேண்டும். அப்படி அறுத்த இடத்தை உப்பு கடுக்காய்த்தூள்களைக் கொண்டு நன்றாய்த் தேய்க்க வேண்டும். இந்தப் பொடியால் ஏழுநாள் வரைக்கும் தேய்க்கவேண்டும். ஏழுநாட்களானபின் எட்டாவது நாள் மறுபடியும் ஒரு மயிரளவு சேதிக்கவேண்டும். சேதித்தபின் முன் சொன்ன பொடியால் தேய்க்க வேண்டும். முன்போல ஏழுநாள் தேய்க்க வேண்டும். இப்படி ஆறுமாதகால பரியந்தம் செய்யவேண்டும். அப்போது நாவானது அடிநரம்புக் கட்டறுபட்டுக் கபாலகுஹத்தை அடையும் தன்மையை அடையும்.

 

அதன்பின் நாவை உட்புறமாகத் திருப்பி, இடைகலை பிங்கலை சுழுமுனையென்னும் மூன்று நாடிகளின் மார்க்கத்தில் நன்றாய் வைக்க வேண்டும். இதனையே கேசரி முத்திரையென்று நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன. ஏனெனில் இம்முத்திரை அமிர்தபானம் செய்வதற்குச் சாதனமாதலால், இந்த முத்திரையால் மூப்பு மரணம் ஒழியும். பசிதாகம் நித்திரைகளும் நீங்கும். மூர்ச்சையாதி சோகமயக்கங்களும் உண்டாகாவாம். எமனும் அணுக மாட்டான். சுர முதலிய ரோகங்களும் அணுகா. கர்மபந்தமும் இல்லை. சம்போகத்தால் விந்துவும் ஸ்கலி தமாகாது. நழுவி விழுந்தாலும் மேலே ஏறி விந்துஸ்தானத்தை அடையும்படி செய்து கொள்ளலாம். சோசத்தைச் சுருக்குதலாகிய முத்திரையால் ஆக்ருஷிக்கலாம். சோசத்தைச் சுருக்குதலுக்கு வஜ்ரோலி முத்திரை யென்று கூறுவர் அறிஞர். யோகி கபாலமார்க்கத்தில் நாவைச் செலுத்தி அசைவற்ற மனமுடையவனாயிருந்தால், புருவத்தின இடது பக்கமாகிய சந்திரகலையினின்றும் அமிர்தம் உருகிப் பெருகி ஒழுகும். அதைக்குடிப்பதே அமிர் தபானம் என்பர் அறிஞர். சோமபானமென்றும் இதற்குப் பேர். இதை அமரவாருணி யென்று நூல்கள் கூறும். இந்த அமிர்த பானமே யோகத்தால் பெறும்பேறாம். இதனால் மரணத்தை வெல்லலாம். எதிரியால் எறியப்படும் ஆயுதங்களை விலக்கலாம். வியாதியில்லாமல் நெடுங்காலம் ஜீவிக்கலாம். அந்தக் கபாலத் துவாரத்தினின்றும் சந்திராமிர்தம் ஒழுகிச் சரீரத்திலுள்ள அக்கினி மண்டலத்தில் சேர்ந்து வியர்த்தமாகின்றது. கேசரி முத்திரையால் அமிர்தம் ஒழுகாமல் தடுக்கப்படுதலால் இதனைச் செய்பவனுக்கு மரணமே யில்லையாமென்று நூல்கள் கூறுகின்றன. இந்த யோகியால் அடையப்படாதது ஒன்றுமில்லை. இவன் தனக்கு இஷ்டமான காலபரியந்தம் உலகத்தில் விளையாடிப் பின் கற்பார்தத்தில் சாயுஜ்ய பதவியையும் அடைவான்.

 

உட்டியான பந்தமுத்திரை - உட்டியான மென்பது பறத்தல் என்று பொருள் தரும். அதாவது பிராணவாயு இடைகலை பிங்கலைகளை யடையாமல் சுழுமுனை நாடியின் மார்க்கமாக மேலே பறந்து செல்லுதலைச் செய்யும் முத்திரையாம். நாபியின் மேற்பாகத்தையும் கீழ்ப்பாகத்தையும் முதுகுடன் ஒட்டுமாறு செய்வது தான் உட்டியான பந்தம். இதைக் குரு முகத்தால் நன்குணர்ந்து செய்ய வேண்டும். ஆறுமாசகாலம் அப்பியாசம் பண்ணினால் இந்த முத்திரை சித்திக்கும். சித்தித்தால் மரணத்தை ஜயிக்கலாம். கிழவனானவனும் யௌவனனா யிருக்கலாம். இந்த உட்டியான பந்தத்தால் பிராணன் முக்திமார்க்கமாகிய சுழுமுனையிற் பறந்து செல்லுதலால் அவன் முத்தி அடைந்தவனே. ஆதலால் முத்திரைகள் எல்லாவற்றிலும் இந்த உட்டியான பந்த முத்திரை மிகவும் சிறந்ததென்று யோகிகளும் சித்தர்களும் கூறுகிறார்கள்.

 

மூலபந்தம் - இரண்டு குதிக்கால்களால் குதஸ்தானத்தைச் சுருங்கும்படி அழுத்திக்கொண்டு மூலத்தை மேலேறும்படி செய்யவேண்டும். இதனால் பிராணவாயுவும் அபானவாயுவும் ஒன்றுபட்டுச் சேரும். சேர்ந்து சுழு முனையில் செல்லும். அப்போது நாதம் தோன்றும். இம்மூன்றும் சேர்ந்து இதயத்தைக் கடந்து சென்று விந்துவுடன் கலைந்து பிரமரந்திரத்திற் பிரவேசிக்கும். இதுவே யோகசித்தியாம் என்பர் மேலோர். இதனால் அபானன் மேல் நோக்கிச் சென்று அக்கினிமண்டலத்தை அடையும். பின் அபானனும் அக்கினியும் பிராணனை யடையும். அப்போது பிராணவாயுவுடன் கூடின அக்கினி கொழுந்து விட்டெரியும். அப்படி யெரியும் அக்கினியின் வெப்பத்தால் குண்டலிசத்தி நித்திரையை விட்டு எழுந்திருந்து அவற்றுடன் கூடிச் சுழுமுனையிற் செல்லும். சத்தி பிராணன் நாதம் அக்கினி மனம் இவை ஒன்று சேர்ந்து பிரமரந்திரமாகிய அமிர்தமார்க்கத்தை அடைதீலால் மரணமில்லாமல் எத்தனை யுகங்களாயினும் ஜீவித்திருக்கலாம். நிஷ்டைகூடியிருக்கலாம். இதுவே யோகசித்தியாம். ஆதலால் மூலபந்தம் எப்போதும் செய்யவேண்டும்.

 

அக்கினிமண்டலம் நாபியின் கீழுள்ளது. அது மனிதர்களுக்கு முக்கோணவடிவமாயிருக்கும். பட்சிகளுக்கு வட்டவடிவாயிருக்கும். மிருகங்களுக்கு நாற்கோணமா யிருக்கும். உருக்கின சொர்ணத்தைப் போல ஒளிவீசிக் கொண்டிருக்கும். மூலபந்தனத்தால் அபானன் பிராணனோடு கலந்து மேற்செல்லும். அப்போது நாதசம்பந்தமும் உண்டாய் சுழுமுனை வழியிற்சென்று பிரமரந்திரத்தை யடையும். அதுவே யோகசித்தியாம். யோகசித்தியுண்டானால் அந்த யோகியால் அடையப்படாதது யாதொன்றுமில்லை. இதனால் மூலபந்த முத்திரை மஹா முக்கியமானது. இதை யோகிகள் விடாமல் அனுஷ்டிக்க வேண்டியது.

 

ஜாலந்திரம் கண்ட துவாரத்தைச் சுருக்கவேண்டும். இருதய ஸ்தானத்துக்கு நாலு அங்குலம் மட்டும் முகவாய்க்கட்டையைத் தாழ்த்தி ஸ்திரமாயிருக்கும்படி செய்யவேண்டும். இதனால் கழுத்தைச் சுருக்கிக் குனிந்து கட முகவாய்க்கட்டையை இதயஸ்தானத்துக்கு நாலு அங்குல மிடை வெளியிருக்கும்படி நிறுத்துதல் ஜாலந்திரமாம் என்று புலப்படுகின்றது. இந்த ஜாலந்திரபந்தத்தால் கபாலகுகரத்திலுள்ள அமிர்தம் அக்கினியில் விழாது. பிராணவாயுவும் வேறு நாடியிற் பிரவேசியாது. இடைகலை பிங்கலை நாடிகளின் செயலறும். இந்தக் கண்டஸ்தானத்தில் தான் விசுத்தி என்னும் மத்திம சக்கர மிருக்கின்றது. இதனால் பதினாறு ஆதாரங்களும் பந்திக்கப்படுகின்றன.

அங்குஷ்டம் முதல் பதினாறு ஸ்தானங்களிலும் வாயுதாரணை செய்கிறவனே யோகிகளிற் சிறந்தவனென்று நூல்கள் கூறுகின்றன.

 

பதினாறு ஸ்தானங்களாவன: - அங்குஷ்டம், பாடு (கால் முளிகள்), முழந்தாள், தொடை, பீஜத்தின் அடி, இலிங்கஸ்தானம், நாபி, இதயம், குரல்வளை, கழுத்து, நாக்கு, மூக்கு, புருவநடு, நெற்றி, சிரசு, பிரமரந்திரம் என்பவைகளாம். உட்டியான பந்தத்தால் வாயு இடைகலை பிங்கலை நாடிவிட்டுச் சுழுமுனை வழியாகச் செல்லும். சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று பிரமரந்திரத்தில் சேர்ந்து நிற்பதே வாயுலயமாம். மூலபந்தம், உட்டியான பந்தம், ஜாலந்திரம் ஆகிய இந்தப் பந்தங்களினால் நரை, திரை, மூப்பு, மரணம் முதலியவை ஒழியுமென்று முன்னரே கூறப்பட்டமையால் யோகிகள் இவற்றை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். இவைகளை அனுஷ்டித்ததனாலேயே சித்தர்களும் மஹரிஷிகளும் மேன்மை பெற்றார்கள்.

 

புருவத்தின் இடது புறத்தில் சந்திரனிருக்கின்றது. அதினின்றும் அமிர்தம் பெருகி ஒழுகும். அந்த அமிர்தத்தை நாபியில் இருக்கிற சூரியன் குடித்து விடுகின்றது. அந்த ஸ்தானத்தில் சூரியன் அக்கினி வடிவமாயிருக்கின்றது. அது அமிர்தம் முழுவதையும் குடித்துவிடுவதால் நரைதிரை மூப்பு மரணங்களுண்டாகின்றன. அமுதம் சந்திரனிடமிருந்து சூரியனிடம் செல்லாமல் யோகி தானே அதை யருந்தவேண்டும். அதற்காக விபரீதகரணியை அனுஷ்டிக்க வேண்டும். விபரீதமுறை தவறுதல் என்பது பொருள். மேலேயிருக்கும் சந்திரனைக் கீழும் கீழிருக்கும் சூரியனை மேலும் இருக்கும்படி மாற்றுத்லாகிய கரணம் விபரீத கரணியாம். இதனால் சந்திராமிர்தம் அக்கினியில்வீழ்ந்து சரியாமல் சரீரத்தில் நாடிகளின் வழியாகப் பரவும். அப்போது சரீரம் அழியாத தன்மையை அடையும். இதனை அப்பியாசிப்பது சற்றுக் கடினமானதே. யோகத்தை முறையாக அப்பியாசித்து வரும் சாதர்களுக்குக் கைகூடும்.

 

அனுஷ்டிக்கும் முறையாவது, சிரசைப் பூமியில் வைத்து இருகைகளாலும் இடுப்பைப் பற்றிக்கொண்டு, பிடரி தலையின் புறம் புஜங்களாலும் பூமியை அழுத்திக் கொண்டு இரண்டு கால்களையும் மேலே தூக்கி நீட்டிக்கொண்டிருத்தலாம். இவ்வாறு ஒரு கணப்போது இருக்க வேண்டும். நாளுக்கு நாள் ஒரு கணம் அதிகப் படுத்திக் கொண்டே போக வேண்டும். இவ்வாறு கொஞ்சங் கொஞ்சமாக அப்பியாசித்து ஒரு நாளுக்கு ஒரு ஜாமநேரம் அப்பியாசிக்கக்கூடியவன் மரணத்தை நிச்சயமாகவே ஜயிப்பான். இவனுக்கு மரணமில்லை. தனக்கிஷ்டமான போது சரீரத்தை விடுவான். ததீசி முதலியோர் தமதிஷ்டம் போலச் சரீரத்தை விட்டது புராண பிரசித்தம். சரபங்கரரும் யோக வலிமையால் கபாலத்தைப் பிளந்து கொண்டு சரீரத்தை விட்டுப் பிரமபதத்தை அடைந்தாரென்று இராமாயணம் கூறுகின்றது. அவர்களுக்கு மரணதுன்பமே யில்லை. இதனால் இதை அனுஷ்டித்த யோகிக்குப் பிராரப்த கர்மபந்தமில்லை யென்பது விளங்கும். இந்தச் சரீரத்துக்குக் காரணமானதும், சரீரமுள்ள வரைக்கும் அந்தச் சரீரத்தை விட்டு நீங்காமலிருந்து பலபல வியாதிகளையும், இன்ப துன்பங்களையும், அந்தத்தில் மரண துன்பத்தையும் கொடுத்து ஒழிவதுமாகிய பெரும் பந்தமான பிராரப்த கர்மத்தையும் யோகிவெல்லக் கூடுமென்பது நன்கு புலப்படும். இதை அப்பியாசிக்கிறவனுக்கு ஜாடராக்கினி விருத்தியாகும். ஆதலால் அவன் நிரம்ப ஆகாரம் கொண்டால் தான் நல்லது. இல்லாத பட்சத்தில் ஜாடராக்கினி அதிகரித்துச் சரீரத்தைக் கெடுத்துவிடும். ஆகையால் புஷ்டியான ஆகாரம் புசிக்க வேண்டும். இவனது மேலண்ணத்திலிருந்து சந்திராமிர்தத்தைப் பானம் பண்ணுதலால் இவனுக்கு மரணமில்லை யென்று நூல்கள் கூறுகின்றன. இவன், எத்தனைகாலமானாலும் ஜீவனோடிருக்கலாம்.

 

இது சித்தியானபின் வஜ்ரோலி முத்திரை அப்பியாசிக்கத் தக்கதாம். இந்த முத்திரை மன அடக்கமும் பிராணாயாம் சித்தியும் உடையவனுக்கே சித்தியாம். ஸ்திரீகளுக்கு முரியது. பிராணாயாமாதியோக சித்தி ஸ்திரீகளும் அப்பியாசிக்கலாமென்று நூல்கள் கூறுதலால் என்க. இது விந்து நழுவி விழாதபடி காத்தலாம். அப்படியே ஸ்திரீகளுக்கும் ஒழிந்து போகாதபடி காத்தலாம். விந்து நாதங்களிரண்டையும் ஐக்கியப்படுத்துவதே இந்தமுத்திரையின் முக்கிய சாதனமாம். பிராணாயாம சித்தியால் வாயுவின் பலங் கொண்டு விந்து நாதங்களைக் கீழ் நோக்கிச் செல்லாதபடி மேலே யிழுத்துக் கொள்வதாம். இதற்குத் திடசரீரமும், அழகும் ரோகமற்றதுமான சரீரமும்யௌவன பருவமுமுடைய ஸ்திரீயும், நிரம்பப்பாலும் சாதனப்பொருள்களாகும். இவ்விரண்டு முடையவன் தான் இந்த முத்திரையை அப்பியாசிக்கவேண்டும். ஆடவர்க்குக் கூறியபடியே பெண்களுக்கும் கொள்க. பிராண வாயுவை மேலே இழுக்கவும் வெளியில் விடவும் நன்றாய் அப்பியாசித்திருக்க வேண்டும். இது, உலையில் துருத்தி ஊதுவது போல வாயுவை இழுக்கவும், வேண்டும் போது ஸ்திரீ புணர்ச்சிக்கும், பால் புணர்ச்சியிற் குடிப்பதற்குமாம். புணர்ச்சியால் விந்து பலவீனப்படுமாதலால் அதனை நீக்கும் பொருட்டுப்பாலருந்துவது நியாயமாம். இதனால் நழுவின விந்துவை மேலே ஆகருஷிக்கும் சக்தியுண்டாகும்.

 

அப்பியசிக்கும் முறையாவது: - ஈயத்தால் மெல்லிய குழல் செய்து கொள்ள வேண்டும். அது இலிங்கத்துக்குள் புகத்தக்கதா யிருக்க வேண்டும். பதினாலு அங்குல அளவுள்ள நீளமுடையதா யிருக்க வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட ஈயச்சலாகையைப் பிரயத்தன பூர்வமாக இலிங்கத்துக்குட் செலுத்த வேண்டும். ஒருநாளுக்கு ஒரு அங்குல அளவு செலுத்த வேண்டும். மது ஒழிந்து கொண்டு விகய சாதனமார்டையும்
இப்படியே பன்னிரண்டு அங்குல அளவு உள்ளே செலுத்த வேண்டும். பன்னிரண்டும் சென்றால் இலிங்கஸ்தானம் வஜ்ரோலிக்குத் தகுதியுள்ளதாயிருக்கும். பதினாலு அங்குல நீளமுள்ள ஈயச்சலாகையைப் பன்னிரண்டு அங் கலம் விட்டு மிச்சமாயுள்ள இரண்டு அங்குலத்தையும் வளைத்து விடவேண்டும். இந்தச் சலாகை குழல் போல் உள் துவாரமுள்ளதாகச் செய்யப்படுவதால் உள்ளே வாயு புகவும் வெளிவரவும் சௌகரியமாயிருக்கும். இதனால் பிராணாயாம பலங்கொண்டு வாயுவை வெளியில் விடவும், உள்ளே இழுக்கவும் பழக வேண்டும். கொல்லன் துருத்தி ஊதுவது போல ஊதிப் பழக வேண்டும். வாயு நன்றாய் வெளிப்படவும் மீண்டும் உள்ளே வரவும் பழகின பிறகு அந்த மார்க்கம் சுத்தமாகும். அதன்பின் இலிங்கத்தினால் ஜலத்தை உள்ளே யிழுக்கவும் வெளிவிடவும் பழக வேண்டும். இந்த அப்பியாசம் கைகூடினபின் விந்துவை மேலே இழுத்துக்கொள்ளப் பழக வேண்டும்; இது கைகூடினால் வஜ்ரோலி சித்தித்ததாம். கேசரியும் பிராணனும் வசப்பட்டவனுக்குத்தான் இது சித்தி யாகும்.

 

இது சித்தித்த பின் புணர்ச்சி காலத்தில் நழுவுமுன் விந்துவை மேலே யிழுத்துக் கொள்ள வேண்டும். அது தவறினால் விழுந்த பின் இந்த முத்திரையின் பலத்தால் மேலே யிழுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நாதம் என்னப்படுகிற ஸ்திரீயின் இரஜஸையும் இழுத்துக்கொள்ள வேண்டும். விந்து ஒழிந்து போவதால் மரணமும், அது சரீரத்தில் நிலைத்து நிற்பதால் அழியாமையு முண்டாகுமாதலால், இது சித்தியானவன் மரணத்தை ஜயித்த வனாம். எத்தனை காலம் வரையில் சரீரத்தில் விந்து அழியாம லிருக்கிறதோ அதுவரையில் அவன் மிருத்தியுவை ஜயிக்கிறான். அதுவரையில் அவனுக்கு மரணபயமேயில்லை. பிராணன் சுக்கிலத்தில் நிலைத்திருக்கிறது. அந்தச் சுக்கிலம் சலனமற்ற மனதின் வழிப்பட்டது. அவ்விரண்டும் நிலைகெடாமல் அடக்கிவைத்திருப்பதே யோகிகளுக்கு இலக்ஷணமாம்.

 

இவ்வாறு வஜ்ரோலியாப் பிரயாசத்தால் விந்து தாரணம் செய்யும் யோகியின் சரீரத்தில் திவ்யமணம் உண்டாகும். எத்தனை காலம் மட்டும் சரீரத்தில் விந்து நிலைத்திருக்கிறதோ அத்தனை காலம் வரையில் எமபயம் அவனுக்குக் கிடையாது. ஸ்திரீயின் ரேதஸையும் கூடச் சேர்த்து மேல் இழுக்க வேண்டியிருப்பதால் அந்தப்பெண் ருது ஸ்நானம் செய்து பரிசுத்த முள்ளவளாயிருத்தல் வேண்டும். நோயற்றவளாகவு மிருக்க வேண்டும்.

 

வஜ்ரோலிகரணம் முடிந்தபின், சுத்தமான விபூதியை நீரிட்டுக் குழைத்துநெற்றி, சிரசு, கண், இதயஸ்தானம் (மார்பு), புஜம், கை முதலிய உறுப்புக்களில் பூசிக்கொள்ள வேண்டும். இந்தக் கிரியைக்குச் சகஜோலி என்று பேர். இது யோகாங்கமேயாயினும் மோட்சத்துக்கு ஏதுவாம். ஆதலால் யோகிகள் இந்தச் சகஜோலி முத்திரையைச் சர்வசிலாக்கியமாகக் கொள்வார்கள். பொறாமையற்றவர்களும், உண்மையுணர்ந்த தத்துவஞானிகளும், தைரியமுள்ளவர்களும், புண்ணியசீலர்களுமான மஹான்களே யிந்த யோகத்தில் சித்தி பெறுவார்கள்.

 

இனி யிந்த யோகம் ஆடவர் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டுமென்கிறநி யதியில்லை. ஸ்திரீகளும் யோகாப்பியாசம் செய்யலாம். அவர்கள் சரீரத்திலும் மூலாதார முதல் துவாதசாதாரங்களும், சந்திரசூரியாக்கினிகளும், அப்பு மண்டலமும், அவ்வாதாரங்கள் தோறும் அதற்குரிய மந்திரயந்திர மூர்த்திகளும் இருத்தலால் யோகம் இருபாலார்க்கும் பொதுவேயாம்.

 

யோகத்துக் காதாரமாகிய ஆசனம் பிராணாயாம முதலியவற்றை அப்பியசித்து முறையே எல்லா முத்திரைகளுடனும் யோகம் செய்து சித்தி பெறலாம். அவஜ்ரோலியால் புருஷர்களது விந்துவை ஆக்ரஹித்துக் கொண்டு யோகி யாகலாம். அதனால் அந்தப் பெண் ஆகாயத்தில் பறக்கவும், நினைத்த இடங்களுக்குச் செல்லவும், நினைத்த காரியங்களை முடிக்கவும் சக்தியுள்ளவளாவாள்

.

அமரோலி என்பதும் சிறப்பினை யுடையது. இதனை அமரி, சிவாம்பு (சிவதீர்) என்று தமிழ்ச்சித்தர்கள் பதினெண்மரும் வழங்குகிறார்கள். சிவநீரைத் திருமூலர் திருமந்திரம் கூறுகின்றது. முதல் தாரையையும் கடைசித் தாரையையும் ஒழித்து நடுத்தாரையைக் கொள்ள வேண்டும். முதல் தாரை பித்தத்தையதிகமாகவுடையது. கடைசிதாரை இரசமற்றது. ஆதலால் நடுத்தாரையே சிலாக்கியமாம். அமிர்தமயமாகும். இந்த அமரியை (சிறுநீரை) அருந்துவதும், பஸ்மத்துடன் கலந்து மூக்கில் நசியம் போல இழுப்பதும் வஜ்ரோலிக்கு விசேஷமென்பது மதாந்தரம். இதனால் நசியமிட்டு வஜ்ரோலியை அனுஷ்டிப்பதும் அமரோலி என்று கொள்க. இத்தன்மைத்தான வஜ்ரோலியை ஆண் பெண் இருதிறத்தாரும் அனுசரித்து யோகசித்தி பெறலா மென்பதும் மதாந்தரம்.

 

இந்த அமரோலி அப்பியாசத்தால் வெளியிட்ட அமிர்தத்தைத் திருநீற்றோடு சேர்த்துக் கலந்து தலை, கபாலம், கண், தோள், கழுத்து, இருதயம், கை முதலிய அவயவங்களில் தரிக்க வேண்டும். இப்படிச் செய்வதனால் அந்தயோகிக்கு ஞான திருஷ்டி யுண்டாகும். இந்த முறைப்படி ஒரு ஸ்திரீயானவள் புருஷனது விந்துவை யிழுத்துச் சரீரத்தில் நிறுத்தினால் அவளும் யோகியாவாள். அவளது தேஜஸ் கெடாது. அவளுடைய சரீர ரஜஸம் விந்து வாய்விடும். அது இதயஸ்தானத்துக்கு மேற் சென்று நாதத்தன்மையொழிந்து விந்து வாகுமென்று நூல்கள் கூறுகின்றன. பிந்து நாதங்கள் ஒன்று சேர்வதால் பரமபதம் உண்டாகும். சகல சித்திகளையும் தரும். இதனால் அழகும் பலமும் விருத்தியாகும்.

 

சக்திசாலனம் - அதாவது குண்டலிசக்தியின் அனுக்கிரகத்தினால் சுழுமுனையாகிய மோட்சவாயிலைத் திறத்தல். மோட்சத் துவாரமாகிய சுழுமுனைவாயிலைக் குண்டலிசக்தி முகத்தால் மூடிக்கொண்டு தூங்குகின்றது முன்னமே கூறப்பட்டது. அதை யீண்டுச் சிறிது விஸ்தரிக்க வேண்டுவ தவசியமாதலால் சிறிது கூறுகின்றோம். பரமேசுவரியாகிய குண்டலிசக்தி ஞானயோகிகளுக்கு மோட்சத்தையும் அஞ்ஞானிகளுக்குப் பந்தத்தையும் கொடுத்தருளும். ஆதலால் குண்டலிசக்தியை அறிவதே ஞானமாம். அறிந்தவன் பந்தத்தைக் கடந்தவனாவான். அந்தச் சக்தி பாம்பின் வடிவாய் இருப்பது. இந்தச் சக்தியை மூலாதாரத்தினின்றும் எழுப்பி மேலே ஏறிச் செல்லும்படி செய்ய வேண்டும். இடகலை கங்கை என்னப்படும். பிங்கலை யமுனை யென்தான் குண்டலி மூடிக்கொண்டிருக்கின்றது. அந்தச் சுழுமுனையே பிரமரந்திர நாடியாம். குண்டலிசக்தியை யோகபலத்தால் அவ்விடத்தை விட்டு விலக்க வேண்டும். யோகபலத்தால் மூலாக்கினியை மூட்டிச் சுடர்விட்டெரியும்படி செய்தால் அந்த வெப்பம் தாங்காமல் குண்டலி அவ்விடம் விட்டு விலகி மேல் நோக்கிச் செல்லும்.

 

மூலாதாரத்துக்கு மேல் ஒரு சாண் பன்னிரண்டு அங்குல அளவில் கந்தஸ்தானமிருக்கின்றது. நாபிக்கும் இலிங்கஸ்தானத்துக்கும் மத்தியில் நாலு அங்குல விஸ்தீர்ண முள்ளதாயிருக்கும். பறவைகளின் முட்டையைப் போன்ற வடிவுள்ளது. அதில்தான் எழுபத்தீராயிரம் நாடிகள் தோன்றிப்பரவுகின்றன. இது பசுபட்சிகளுக்கு நடுவயிற்றிலிருக்கும். இதினின்றே இடைகலை பிங்கலை சுழுமுனை நாடிகள் உண்டாகின்றன. இதிலுள்ள சுழுமுனாநாடித் துவாரத்தில் தான் குண்டலிசக்தி படத்தினால் துவாரத்தை மறைத்துக் கொண்டு நித்திரை செய்கின்றது. இதை மேலெழுப்புவதற்குச் சக்திசாலன முத்திரையை அனுஷ்டிக்க வேண்டும். வஜ்ராசனத்தி லிருந்து கொண்டு இரண்டு கால்களையும் பரட்டிற்கு மேல் கைகளால் பிடித்துக் கொண்டு மேற்படி கந்தஸ்தானத்தை நெருக்க வேண்டும். அதன்மேல் முற் கூறிய பஸ்திரையென்னும் கும்பகத்தைச் செய்ய வேண்டும். இப்படிச் சக்தி சாலனம் செய்தலால் சக்தி விழித்துக் கொள்ளும். நாபிஸ்தானத்திலுள்ள சூரியனை மேலே யிழுக்க வேண்டும். இவையெல்லாம் பிராணாயாமம் சித்தித்த வனுக்கே கைகூடும். இப்படி நாலு நாழிகை செய்ய வேண்டும். அதனால் சக்தி மேல் நோக்கிச் செல்லும். குண்டலி சுழுமுனைத் துவாரத்தை விட்டு விலகுவதால் வாயில் திறக்கப்படவே பிராணவாயு தடையின்றிச் சுழுமுனையில் பிர வேசிக்கும். இந்த யோகியை ரோகமும் மரணமும் அணுகா. அணிமா முதலிய அஷ்டசித்திகளையும் அடைவான். காலனை விளையாட்டாகவே வெல்வான். இந்த யோகி எப்போதும் இந்திரியங்களை அடக்கியிருக்க வேண்டும். மிதபோஜன முள்ளவனாயிருக்க வேண்டும். மிதபோஜன மின்ன தென்பது முன்னமே கூறப்பட்டது. ஆயினும் ஈண்டும் ஒரு தடவை கூறுகின்றோம். காய் கறி சோறு முதலியன அரைவயிறும், தண்ணீர் கால்வயிறும் ஆக முக்கால்வயிறு நிரம்ப உண்பதேயாம். பிராணவாயு சஞ்சரிப்பதற்குக் கால் வயிறு விடவேண்டும். இந்தச் சக்தி சாலனத்தை ஒரு மண்டலம் அனுஷ்டிக்க வேண்டும். பஸ்திரையென்னும் கும்பகத்தையும் செய்யவேண்டும். இதனால் யோகி தன் சரீரத்தை வசப்படுத்திக்கொள்கிறான். சரீரத்தை வசப்படுத்திக் கொண்டவனுக்கு மரணாதி பயங்கள் ஒருபோது மில்லையாம்.

 

இந்தச் சக்தி சாலனத்தினால் எழுபத்தீராயிரம் நாடி சுத்தமாகும். உறுதி யோடு அப்பியாசிப்பதாலும், ஆசனங்களினாலும், பிராணாயாமத்தாலும், முத்திரைகளினாலும் சுழுமுனை வசமாக்கப்படும். அந்தக்கரண அடக்கத்தாலும் சாம்பவி உன்மனி முத்திரைகளும் யோகிகளுக்குச் சித்தியைத் தருவனவாம். இதுவே இராஜயோகம் என்னப்படும். நிர்விகற்ப விருத்தியாலேயே இராஜயோகம் சித்தியாக வேண்டும். வேறு விஷயங்களில் சித்தத்தைச் செலுத்தாமல் கும்பகத்தைச் செய்ய வேண்டும்.

 

அநாதி சுயம்புவாகிய ஸ்ரீ பரமேசுவரனால் முத்திரைகளும் மற்று முள்ளவைகளும் கூறப்பட்டன. இவற்றைக் குரு பரம்பரையாக உபதேசம் பெற்றுச் சிறப்படைந்திருக்கும் குருமுகத்தால் தெரிந்துகொள்ள வேண்டும். முறைப்படி உபதேசிக்கும் குருவை யீசுவரனாகவே கருதி வழிபட வேண்டும். குரு சேவை செய்து ஆசன பிராணாயாமங்களையும், முத்திரைகளையுந் தெரிந்து கொண்டு முறை தவறாமல் அப்பியாசிக்கிறவன் யோகத்தில் சித்தி பெறுவான்.

 

குருவே பிரம விஷ்ணு ருத்திராதி தேவர்களும் ஈசுவரனுமாவார் என்கிற வேதவாக்கியத்தில் நம்பிக்கை வைத்து அவரை அலட்சியம் பண்ணாமல் பூஜிக்க வேண்டும்; குருவும் பரமேசுவரனும் ஒருவரேயாவார். வேறாகமாட்டார். எந்தக் காரணத்தினாலும் குருவோடு வாதம் செய்வது கூடாது. அவர் கூறும் வாக்கியத்தை வேதவசனமாகவே மதிக்க வேண்டும். அத்துவைத பாவனையால் குரு ஈசுவரனே யாகிறார் என்பதை நிச்சயமாகக் கொண்டு குருபக்தி செய்கிறவனுக்குச் சித்தியாகாதது ஒன்றுமில்லை. ஆதலால் யோகசித்திபெற்று முக்தியை அடைய விரும்பும் புருஷன் மறவாமல் குருவைப் பூஜிக்க வேண்டும்.

 

சமாதி

 

இனி சமாதி கூறவேண்டும். இச்சமாதியில் பிரத்தியாகாராதிகளும் அடங்கும். பிரத்தியாகாராதி சொரூபமே சமாதி யென்பதாம். யோக சாதனைகளுக்குள் சமாதியே சிறந்தது. ஆசனம் முத்திரைகளெல்லாம் இதற்கு அனுசரணையாயிருப்பவை என்பர். ஆசன கும்பக முத்திரைகள் சித்தித்த பின் சமாதி யனுஷ்டிக்கத்தக்கது. இதுவே ஜீவன் முத்தி தருவது. ஆனந்தமளிப்பது. மரணத்தை ஒழிப்பது. ஜீவன் முத்தி என்பது சரீரத்துடனிருக்கும் போதே சுகதுக்காதிகள் ஒழிந்து பரமானந்த சொரூபியாயிருப்பது. இவன் சமாதியிலிருக்கும் போதும், ஜாக்கிராவஸ்தையில் இருக்கும் போதும் பிரமத்திலேயே லயித்து, எங்கும் பிரமமயமாகக் காண்பான். ஆதலால் இவனுக்குச் சுகதுக்கங்கள் இல்லை.

 

நீரிலிட்ட உப்பு கரைந்து போனபின் உப்பும் நீரும் ஒன்றாய்க் கலப்பதுபோல மனமும் பிரமமும் கலப்பது சமாதியாம். இதனால் ஜீவாத்மாவும் பர மாத்மாவும் ஒன்றாய்க் கலப்பது சமாதியாம். பிராணனும் மனதும் செயலற்று ஒடுங்குவது சமாதியாம். ஆகவே பிராணனும் மனதும் ஒடுங்கி ஜீவ பரமாத்மா இரண்டும் ஐக்கியமாவது சமாதி என்பது புலப்படும். இந்தச்சமாதி குண்டலிசக்தியைப் பிரயத்தனத்தினால் விழிக்கச் செய்தவனுக்கே சித்தியாகும். ஏனெனில் குண்டலிசக்தி நித்திரையைவிட்டு விழித்திருக்கும் போதுதான் பிராணவாயு சுழுமுனையாகிய பிரமரந்திரத்தில் பிரவேசிக்கும். அப்போது அந்தக்கரணம் பிரமத்தில் ஒடுங்கும். அதனால் சித்தம் அசைவற்றிருக்கும். இங்ஙனம் சித்தி பெற்ற யோகிக்குப் பிராரப்தாதி கர்மங்கள் நசிக்கும். பிராரப்தகர்மம் நசிக்கவே அந்த யோகியிடத்தில் காலன் அணுகான். இவ்வாறு அப்பியாசித்துச் சித்திபெற்ற யோகிக்குத்தான் அமரோலி வஜ்ரோலிகள் சித்திக்கும். ஏனையர்க்குச் சித்தியாகாது. இதனால் பிராணனையும் சித்தத்தையும் யிக்கப்பெற்றவனுக்குத்தான் வஜ்ரோலி அமரோலிகள் சித்திக்கும் என்றதாயிற்று.

 

இடைகலை பிங்கலை பிற் செல்லுதல் பிராணவாயுவின் இயற்கைத் தொழில்; விஷயங்களைப் பற்றுதல் புலன்களின் இயற்கைத் தொழில்; விஷய விருத்தியுண்டாதல் மனத்தின் இயற்கைத் தொழில். இவை தத்தம் தொழிலைச் செய்யாதிருப்பது அவற்றின் இலாபமாம். இந்தப் பிராண மனோலயமுண்டாகாத போது பரமாத்மாவை யறிய முடியாது. பிராணன் ஒடுங்கினால் தான் மனம் ஒடுங்கும். மன மொடுங்குதலே ஞானமாம். இந்த ஞானம் சித்தியாதபோது மோட்சம் அடையப்படாது. இந்த ஞானசித்தி யோக மார்க்கத்தாலன்றி அடையப்படுவதில்லை. ஞானமின்றி மோட்சமில்லை. இது பற்றியே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று மோட்ச சாதனமார்க்க முறை கூறப்பட்டதென்க, தலை கழுத்து உடல் இம்மூன்றும் நிமிர்ந்திருக்க இருந்து மன இந்திரியங்களை இருதயத்தில் செலுத்தினால் பிரமதரிசனம் எளிதிலாகும் என்பது நூல்களின் கருத்து, பிரணவ சொரூபமாகப் பிரமதியானம் செய்யவேண்டும். பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களுக்கும், ஸ்திரீகளுகும் இந்த யோகமே மோட்ச மார்க்கமாம். இதையன்றி வேறு மார்க்கமில்லை

அறிவுள்ளவனானாலும், படித்தவனானாலும் படியாதவனானாலும் ஸ்திரீகளானாலும் எத்தன்மையராயினும் இந்தயோகமார்க்கத்தை அனுஷ்டித்தால் அவர்கள் பரகதியை அடைவார்கள். இந்த மார்க்கத்தை யறியாதவர்கள் ஜனன மரணங்களைக் காக்க மாட்டார்கள் என்று வியாசர் கூறினார். கண்ணபிரானும் மனமடங்கிய யோகியானவன் நிர்வாணமென்னும் எனது நிலையை அடைகிறான் என்று கூறினார். பிரமஞானத்தால் முத்திகிட்டும்; அந்த ஞானம் யோகமின்றிக் கிட்டாது. யோகமோ நெடுங்கால அப்பியாசத்தினாலன்றிக் கிட்டாது என்று ஸ்காந்தபுராணம் கூறிற்று. யோகத்தானத்தால் ஞானம் பிறக்கும். யோகமென்பது பிரமத்தினிடத்தில் ஐக்கியப்பட்ட மன முடை மையாமென்று ஆதித்தபுராணம் கூறுகின்றது. யோகாக்கினி பாபக் கூட்டங்களை யெரிக்கும். அதனாலே ஞானமுண்டாகும். அந்த ஞானம் மோட்சத்தைத் தரும் என்று கூர்மபுராணம் கூறுகின்றது. அறிவுள்ளவன் மோட்சானந்தத்தை அடையும்படி முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சி யோகமேயாம். வேறொன்றினாலும் முக்தி அடையப்படுகிறதில்லை. தாபத்திரயங் களினாலே தகிக்கப்படுகிற நரர்களுக்கு யோகமே பரம ஒளஷதமாகும். உலகத்தை வெறுத்துப் பரப்பிரமத்தை அடைய விரும்புகிறவனுக்குத் துக்கம் நீங்கி நிர்வாணசுக முண்டாகிறது. யோகத்தில் பூர்ணசித்தி பெற்ற நரன் பரப்பிரமத்தை எங்கும் காண்பான். அவனுக்கு வேறொன்றும் தோன்றுவதில்லை. அவன் பிரமானந்த சுகத்தை யடைந்தவனாவான். அதனால் எல்லாவற்றிலும் வெறுப்புத் தோன்றும். இந்திரியங்களைத் தவத்தால் அடக்கிய யோகி யோகத்தினாலே சம்சாரமாகிய மஹாசமுத்திரத்தைத் தாண்டுகிறான் என்று கருடபுராணம் கூறுகின்றது. கபிலர் யோகமே ஸ்திரீ புருஷர்களுக்கும் எல்லார்க்கும் பெருமையையும் சுகத்தையும் தருவதாகு மென்றார். சம்சார மென்னும் விஷவேகமானது யோகமென்னும் காரூடமந்திரத்தினால் நிவிர்த்தியாமென்று வசிஷ்டர் இராமருக் குபதேசித்தார்.

 

உமை மஹாதேவனை நோக்கிக் கருணைக்கடலே மஹேசா! மரிக்கின்ற ஞானிகளின் நிலைமை எப்படியிருக்கும், அருள் புரிய வேண்டும் என்று வினவினாள். ஈசன், உமையே! அவர்கள் மரித்தபின் தத்தம் புண்ணிய பாவங்களின் பலனை அடைகிறார்கள். அதை அனுபவித்த பின் அந்த ஞானி மறுபடியும் பிறப்பான். பின் புண்ணிய பலனால் சித்தர்களுடன் சேர்வான். அவன் யோகியேயாவான். அவனுக்குச் சம்சாரம் நசிக்கும் என்றார். உமை, ஞானத்தினாலேயே மோட்சமுண்டாகும் என்று ஞானிகள் கூறுகின்றார்களே, யோகம் மோட்சத்தைத் தரும் என்பது எப்படி? என்றாள். ஈசன், ஞானத்தினால் மோட்ச மென்பது மெய்யே. யோகமின்றி மோட்சசாதனமான ஞானமுண்டாவதில்லை என்றார். உமை, ஜனகாதியர் யோகமில்லாமலே ஞானத்தையும் மோட்சத்தையும் அடைந்தார்கள் என்பதெப்படி? என்றாள். ஈசன், பூர்வஜன் மங்களில் அவர்கள் யோகானுஷ்டானம் செய்து ஞானம் பெற்றவர்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுவே யுண்மையாம். முன் ஜன்மத்தில் செய்த புண்ணிய பலத்தினால் அவர்கள் பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களாக ஜனித்துக் கிரமமாக முக்தியை அடைந்தார்கள். யோகத்துக்கு அந்தக்கிரமமில்லை. யாரும் அனுஷ்டிக்கலாம். யோகத்தில் நின்று நழுவினவன் மஹா ஐசுவரியவான் வீட்டிலாவது, மற்றொரு யோகியின் வீட்டிலாவது பிறப்பான். பிறந்து ஞானமெய்தி முக்தி பெறுவான். எல்லாரும் யோகத்தில் பழகி முக்தி பெறலாம்.

 

தகுதியான இடத்திலிருந்து கொண்டு சுழுமுனையை நிலைநிறுத்துந் தன்மையைக் குருவினால் தெரிந்து கொண்டு பிராணவாயுவை மத்தியிற் செலுத்தி பிரமரந்திரத்தில் பிரவேசிக்கச் செய்யவேண்டும். பிராணன் அசைவற்று நிலைத்தலால் மனமும் அசைவற்று நிற்கும். அப்போது பாவனாவிசேஷத்தால் அந்தக்கரணம் சமாதியோடு கூடுகின்றது. அப்போது பிரமதரிசனம் உண்டாய் அந்த யோகி ஜீவன் முத்தத்தன்மையை அடைகிறான்.

 

இனி யோகம் பயனற்றதென்றும், பிராணவாயுவை அடக்குதல் ஆசனம் முதலியவைகள் சிலம்பக்காரன் கரடி பழகுதல் போல்வதே யன்றி அதுமோட்சம் தாராதென்றும் சாஸ்திரங்களின் உண்மைக்கருத்தறியாத சில வைத்தியர்கள் (வேதாந்திகள்) கூறுவதுண்டு. அவர்கள் ஞானமே மோட்ச காரணமாவதன்றி வேறொன்றும் இல்லை யென்று கூறி யோகிகளைப் பழிப்பார்கள். அவர்கள் வேத உண்மை அறியாதவர்களாவார்கள். சரட்டில் கோத்த ஊசியைப் போலப் பிராணவாயுவில் மனமிருத்தலால் பிராணன் அசைந்தால் மனம் சலியாதிராது. மனம் விஷயப்பற்றில் செல்லாது செயலற்று நிற்பது தான் ஞானாதாரம். அதனால் மனம் பிரமத்துடன் இலயமாம். இலயமாவதே ஞானம்! அதுவே சமாதியாம். சமாதி கூறுவதில் அதன் மகிமையையும் பயனையும் உணர்த்திப் பின்பு அதனைக் கூறவேண்டுதலால் வேதாகம புராண இதிகாச ஸ்மிருதிகளால் சமாதியின் பெருமையைச் சிறிது விளக்கினாம்.

 

ஞானமின்றி மோட்சமில்லையென்பது யாவருக்கும் ஒப்ப முடிந்ததே. நூல்களின் சம்மதமுமாம். அந்த மெய்ஞ்ஞானம் யோகசாதனை யில்லாதவர்களுக்கு எவ்வகையிலும் சித்தியாகாது. யோகசாதனமின்றி ஞானம் பெறலாமென்று அவர்கள் கூறுவது மலடி மகன் கண்ட கனவு போல்வதாம். சரியை கிரியை யோகம் ஞானமென்று நூல்கள் கூறியதும் இதற்குச் சான்றாம். சரியை கிரியைகளை மனப்பூர்த்தியோடு செய்தவனுக்கே யோகத்தில் பிரவிர்த்தி யுண்டாகும். எவனும் சரியை கிரியைகளில் நின்று யோகத்தை அப்பியாசித்தே மோட்சஞானத்தைப் பெறவேண்டும். இவ்வாறன்றி நான் மனதை அடக்கிவிட்டேன், மெய்ஞ்ஞானத்தை யடைந்துவிட்டேன், பிரமத்தைத் தரிசித்து விட்டேன், எனக்கு யாதொரு கன்மமும் செய்ய வேண்டுவதில்லையென்று பொய்கூறிச் சிலர் இருமையும் இழந்து விடுகிறார்கள். இது மிகவும் பரிதாபம்.

 

இதனால் யோகமே மோட்சஞான காரணமாமென்று தெளிந்து நம்மவர்கள் பெருமையை ஒழித்து இறுமாப்பை விட்டுச் சரியை கிரியைகளை முறையாகச் செய்து ஞானசித்தியை யடைய வேண்டுமென்பதே யிதன்கருத்து.

 

சிலர் பக்தியாலும், சிலர் மந்திர சித்தியாலும் மோட்சம் அடைந்ததாகக் கேட்கப்படுகிறதே யெனின் கண்ணனும் பக்தியோகம், மந்திரயோகம், ஞானயோகம், சாங்கிய யோகமென வகுத்துக்கூறி இவை பூர்வஜன்மத்தில் செய்த தவமகிமையால் முயற்சியின்றியே உண்டாகும் என்றும் கூறுதலால் பூர்வஜன்மங்களில் செய்த யோகப் பயிற்சியால் அவர்களுக்குப் பக்தியாலும், மந்திரஜபத்தாலும் மனம் வசப்பட்டதாமென்று கொள்க. அவ்வாறில்லாதவர்கள் சரியை கிரியைகளையும் யோகத்தையும் அனுஷ்டித்தே ஞானம் பெற வேண்டும் என்பது தான் நூல்களின் கருத்தும், நூலுணர்ந்த ஆன்றோர்களின் கருத்துமாம். ஆதலால் மோட்சத்தை விரும்புகிறவர்கள் யோகப் பயிற்சி செய்தே ஞானம் பெறவேண்டுமென்க. இனி சமாதிக்கிரமம் வருமாறு.

சூரியன் சந்திரர்கள் பகல் இரவு வடிவமாய்க் காலத்தை உண்டாக்குகின்றன. சுழுமுனை அந்தக்காலத்தைப் புசிக்கின்றது. சூரியன் சந்திரன் என்றது இடைகலை பிங்கலைகளை. சூரியனில் இரண்டரை நாழிகை பிராணன் ஓடும். சந்திரனில் இரண்டரை நாழிகை ஓடும். சூரியனில் ஓடுகிற காலம் பகல் என்னப்படும். சந்திரனில் ஓடுகிற காலம் இரவு என்னப்படும். இதனால் சாதாரணமான ஒரு இரவு ஒருபகலில் யோகிகள் பன்னிரண்டு இரவு பகல்களைக் கணக்கிடுவர். இவ்வாறு ஓடுகிற பிராணன் சுழுமுனையில் ஓடினால் அந்தக்கால நிர்ணயம் நீங்கி விடுகின்றது. அதனால் தான் சுழுமுனை காலத்தைப் புசிக்கின்றது என்று கூறியது. இதையறிந்த யோகிகள் நெடுங்காலப் பழக்கத்தினால் பிரமரந்திரமாகிய சுழுமுனையில் பிராணனைச் செலுத்திக் காலத்தையும் மரணத்தையும் வென்று நெடுங்காலம் ஜீவித்திருக்கிறார்கள். இதனால் சுழுமுனை நாடியைச் சாம்பவி என்று புகழ்ந்து கூறுவார்கள்.

 

முதுகின் நடுவில் வீணாகண்டம் என்று சொல்லப்பட்ட ஒரு எலும்புக் கூடு இருக்கின்றது. இந்தக் கூடு மேரு என்னப்படும். இதன் மத்தியில் சிறுதுவாரம் ஒன்று உண்டு. அது சிரசின் வழி புகுந்து புருவ நடு வரையில் சென்று கூடும். இது சுழுமுனை. இதுவே பிரமரந்திரமாம். இதற்குச் சிவனாகிய சம்பு அதிதேவதையாதலால் அது சாம்பவி என்னப்பட்டது. அந்தநாடியில் பிராணன் பிரவேசித்தலால் உன்மணி அவஸ்தை சித்திக்கும். அஃதில்லாவிடில் யோகத்தால் யாதும் பயனில்லை. மனம் பிராணவாயு இரண்டில் ஒன்றை அடக்கினால் மற்றொன்று தானே அடங்கிவிடும். இதுபற்றியே ஞானிகள் அடக்குவதே போதும்; வாயுவைத் தடுப்பதாகிய ஹடம் அனாவசிய
 மாகுமென்பர். இதனாலேயே,


 "காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருக் தைப்புக்கட்டின்
 வீட்டிற் புகுதல் மிகவெளி தேவழி நாசிவைத்து
 மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
 ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே''


என்று சான்றோர் கூறினார். ஸ்ரீமத் சங்கரமுனி நாதருக்கும் இதுவே கருத்தென்பது அவர்களியற்றிய நூல்களாற் புலப்படும்.

 

சித்தம், வாசனை, பிராணன் மூன்றும் அடங்கினவிடமே முத்தியாம். இம்மூன்றில் ஒன்று கட்டுப்பட்டால் அம்மூன்றும் கட்டுப்படும். இந்த அப்பியாசமே யோகிகளுக்குச் சிறப்பைத் தருவது. வாசனை, மனம், பிராணன் என்னும் இம்மூன்றையும் ஒருங்கே அடக்கினவனே யோகியாவான். இதுசெய்யப்படா விடில் யோகியின் பிரயாசமெல்லாம் வீணாகவே முடியும். வாயுசித்தம் என்பவை பாலும் நீரும் போலவும், எள்ளும் எண்ணெயும் போலவும் கலந்து நிற்கும். இவையிரண்டும் அடக்கப்பட்டால் அவைகளே மோட்சத்தை யளிக்கும். இல்லாவிடில் பந்தத்தைச் செய்யும். ஏனெனில் இவை அடங்காத போது இந்திரியங்கள் விருத்தியாய்த் தத்தம் தொழில்களைச் செய்வதால் பிரபஞ்சவாசனை ஒழியாது. ஒழியாதாயின் மரணபவங்கள் மாறிமாறி வந்து கொண்டே யிருக்கும். அடங்கினால் மோட்சம் சித்திக்கும். வாயுபிராணாயாதி அப்பியாசத்தால் அடங்கும். மனம் குரு உபதேச மகிமையாலேயே அடங்க வேண்டும்.

 

சித்தலய மாவதற்கு சாம்பவி முத்திரையே சிலாக்கியமாம். சாம்பவி முத்திரை முன்னமே கூறப்பட்டதாயினும் யோகத்தின் பலனாகிய சமாதியைக் கூறுதலால் சமாதிக் காதாரமாய் நிற்பது சாம்பவி முத்திரையாம். அது பற்றி யிங்குச் சிறிது கூற வேண்டும். தனக்குள் மூலாதாரமுதல் பிரமரந்திரம் வரையிலுமுள்ள ஆதார சக்கரங்களில் ஒன்றைக் குறியாக வைத்து அதில் கருத்தை நிலைநிறுத்தி, அரைக்கண் மூடி அரைக்கண் திறந்து புருவமத்தியில் பார்வையைச் செலுத்துவது சாம்பவி முத்திரையாம். மனமும் வாயுவும் பிரமத்தினிடத்தில் ஒடுங்கும்படி நிற்க வேண்டியது. இவன் வெளிப்பார்வையுடையவனாயினும் உலகை அறியான். இந்த முத்திரையைக் குருசேவை செய்து நிச்சய முணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் பரம்பொருளைத் தனக்குள் தரிசிப்பது நிச்சயம். இது ஸ்ரீ பரமேசுவரனால் பார்வதி தேவியாருக்குச் சொல்லப்பட்டது. புருவமத்தியில் பார்வையை வைப்பது கேசரி முத்திரையாம். அகப்பார்வை சாம்பவியாம். சமாதிக்கு இவ்விரண்டு முத்திரைகளும் அவசியமாம். இவ்விரண்டு முத்திரைகளாலும் தன்னைமறந்து பிரபஞ்சத்தை உணராமையும், பரப்பிரமம் ஒன்றையே உணர்ந்து அதிலேயே இலயித்திருத்தலுமாகிய சமாதி சித்திக்கின்றது. இவ்வாறு கண்ணின் கருமணிகளைப் புருவமத்தியில் வைத்து, அதில் தோன்றும் ஜோதியில் கலக்கச் செய்ய வேண்டும். அப்போது அகப் புறப்பார்வைகள் ஒன்று பட்டுப் பரம்பொருளில் இலயிக்கும். இதுவே உன்மனாவஸ்தையென்று கூறப்படும் சமாதியாம்.

 

இரவு பகல் என்று கூறப்படும் சந்திர சூரியகலைகளை ஒடுக்குவதால் சித்தசலன மில்லாமை உண்டாகும். அதுவே யிராப்பகலற்ற விடமாம்.


 "இராப்பக லற்ற விடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
 குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்ட நாள்
 கராப்படக் கொன்ற கரிபோற்ற நின்ற கடவுண்மெச்சும்
 பராக்கிரம வேல் நிருதசங் கார பயங்கரனே "


என்று சான்றோர் கூறினார். இந்தவிடத்திலிருந்து கொண்டு பரமான்மாவைப் பூஜித்துத் தியானிக்க வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. ஏனெனில் மாறி மாறி வரும் இரவு பகலென்னும் சந்திர சூரியர்களி னியக்கத்தினால் வாயுசபலிக்கின்றது. அதனால் மனம் நிலைகொள்ளாமல் அலைகின்றது. மனம் நிலையில்லாவிட்டால் செய்யப்படும் தியான பூஜைகளினால் பயன் பெறுவதில்லை. வீண் பிரயாசமாகவே முடியும். சித்திபெற முயலுகிறவன் முதலில் மனம் வாயு இவ்விரண்டையும் அடக்கி ஸ்திரமுடையவனாயிருக்க வேண்டும். இதற்கு இந்த முத்திரைகளினாலன்றி ஒருமைப்படாது. இதனால்தான் இராப்பகலற்ற விடத்திலிருந்து கொண்டு பூஜை செய்ய வேண்டுமென்று நூல்கள் கூறுகின்றன. இந்தப் பூஜையிலாவது மனமடங்கித் தியானத்திலிருப்பதே பரமாத்ம பூஜையாம். இவ்வாறு வேத முதலிய சகல நூல்களும் கூறுகின்றன. சந்திர சூரிய கலைகளில் ஓடும் பிராணனை நடுநாடியிற் செலுத்துவதினால் உண்டாவதே சூனிய ஸ்தானமாம். அதாவது பரமாகாய ஸ்தானமாம். இந்த ஆகாயம் பரமான்மாவுக் குரிய ஸ்தானமாம். இந்த ஸ்தானத்தில் மனோவாயு ஒடுங்கும் போது துரியாவஸ்தை உண்டாகின்றது. அதாவது நான்காவது அவஸ்தை. அது ஜாக்கிரம் சொற்பனம் சுழுத்தியென்னும் மூன்றவஸ்தையும் நீங்கியதாம். இந்தவிடத்தில் சந்திர சூரியர்களில்லாமையால் காலமும் இல்லை. காலமில்லாத போது காலத்தை யெதிர்பார்த்திருக்கும் காலனுமில்லை. இவ்விடத்தில் ஒடுங்கி நிற்பதே யோக நித்திரையாம் என்று கூறப்படும். இது பிரமாகாரத்தில் முழுகியிருக்கும் அவஸ்தையாம். இந்த யோகி மேலிருந்து ஒழுகும் அமிர்தப்பிரவாகத்தில் முழுகுகிறான். அவன் சித்தனுமாகிறான். இதில் நிலைத்து நான் அதுவென்னும் பேதமற்றிருப்பதே சமாதியாம். இந்தநிலையில் சகல சிந்தனைகளையும் ஒழித்து விடவேண்டும். ஒழித்தால் பிரமத்தில் நிலைபெறுவான். இவன் தான் ஜீவன் முக்தன் என்று புகழ்ந்து கூறப்படுகிறவன்.

 

இல்வாறு இருப்பவன் நாதானு சந்தானம் செய்ய வேண்டும். இந்தநாதம் சுழுமுனை நாடியிலுள்ளது. சித்தாசனத்தி லிருந்து கொண்டு சாம்பவிமுத்திரையை அனுஷ்டித்து வலது காதினால் நாதத்தைக் கேட்க வேண்டும். இரண்டு கைப் பெருவிரல்களால் காதுகளை மூடவேண்டும். சுட்டுவிரல்களால் கண்களை மூடவேண்டும். பவுத்திர விரல்களால் மூக்குகளை அடைக்க வேண்எம். மற்ற விரல்களால் வாயை மூடவேண்டும். இப்படி மூடிக்கொண்டு நாதத்தைக் கேட்க வேண்டும்.

 

இப்படியிருந்து பிராணாப்பியாசம் செய்யும் போது பிரமகிரந்தி, விஷ்ணுகிரந்தி, ருத்திரகிரந்தி என்னும் முடிச்சுகள் பேதிக்கப்படுகின்றன். அநாகத முதலிய விடங்களிலிருந்து நாதம் கேட்கப்படும். அநாகதத்திலிருந்தே யுண்டாவதால் இது ஆரம்பாவஸ்தை என்னப்படும். விஷ்ணுகிரந்தியைப் போதிக்கும் போது உண்டாகும் நாதம் பலவிதமாயும் பேரிபோலவும் கேட்கப்படும். புருவமத்தியாகாசத்தில் நாதம் மத்தள ஓசை போலக் கேட்கப்படும். ஆரம்பாவஸ்தையைத் தரிசித்தவன் (கேட்டவன்) அழகிய சரீரத்தையும், கீர்த்தியையும் உடையவனாய் வாசனையுள்ளவனும் ரோகமற்றவனுமாவான். இரண்டாவது கடாவஸ்தையைக் கேட்கிறவன் புத்தி தீட்சண்யமுடையவனாய் அழகினால் தேவர்களுக்குச் சமானமானவனாயு மிருப்பான். புருவமத்தியாகாசத்தில் கேட்கப்படும் மூன்றாவதாகிய பரிசயாவஸ்தையால் (ருத்திரகிரந்தி பேதத்தால்) பசி வியாதி மரணம் மூப்பற்றவனாகிறான். பிராணன் பிரமரந்திரத்தை யடையும் போது வேணுநாதம் வீணாநாதம் போன்ற நாதம் கேட்கப்படும். இதற்கு நிஷ்பத்தி அவஸ்தைஎன்று பேர். இந்த அவஸ்தை யுடைய மனம் பிரமத்தில் ஒடுங்கி நிற்கும். இதுவே ராஜயோகமென்று புகழ்ந்து கூறப்படுவதுமாம். இந்த நாதத்தைக் கேட்ட யோகியானவன் முத்தொழில்களையும் செய்யும் சாமர்த்திய முடையவனாய் ஈசுவரனுக்குச் சமானமாவான்.

 

ஆக்கின சக்கரத்திலுள்ள ருத்திர கிரந்தியைப் பேதித்துக் கொண்டு பிராணன் சிவஸ்தானமாகிய புருவமத்தியை அடையும் போது விஷயாநந்தங்களை வென்று ஆத்மானந்த சுகமுடையவனாய் வாதபித்த சேத்துமதோஷங்களொழிந்து சகல துக்கங்களும் நீங்கி, பசி, தூக்கம், வியாதி, மூப்பு இல்லாதவனாவான்.

 

அதன்பின் நிஷ்பத்தி அவஸ்தை உண்டாகும். அதாவது பிராணன் பிரமரந்திரத்தில் செல்லும் அவசரமாம். அச்சமயம் வீணாகானமும் வேணுநாதமும் கேட்கப்படும். அவனது சித்தம் சிவமயமாகும். நிச்சலமாய் நிற்கும். இவ்வாறு சிவமயமாய் ஒன்றி அசைவற்று நிற்பதே சிவயோகமென்று புகழப்படுவதாம். சிருஷ்டியாதி தொழில்களைச் செய்யவும் வல்லவனாய் ஈசுவரனை ஒப்பாவான். இராஜயோகத்தை அடையாமல் வாயுவைக் கட்டுதல் முதலிய அப்பியாச சொரூபமாகிய யோகாப்பியாசி அந்த யோகத்தால் அடையும்பயனை அடையாமல் வீண் பிரயாசத்தையே அடைவான்.

 

இவ்வாறு யோகசித்தி பெறுவதற்கு முற்கூறிய நாதானுசந்தானமே துணைக் கருவியாம்.

 

சமாதி பிரத்தியாகார தாரணை தியானங்கள் வருமாறு: - பிரத்தியாகார மென்பது திருப்புதலென்று பொருள் தருவதாம். அதாவது விஷயாதிகளை அநுசரித்துப் பஞ்சேந்திரியங்களிலும் அலையும் மனத்தை அவற்றில் செல்லவொட்டாமல் தடுத்து பரம்பொருளினிடத்தில் செல்லும்படி திருப்புதலாம். அது நாதானு சந்தானத்தினாலன்றி வேறெதனாலும் முடியாது. நாதத்தில் மனம் லயிக்கும். சப்தாதி விஷயமாகிற வனத்தில் சஞ்சரிக்கிற மனமாகிய யானையை அடக்குவதற்கு நாதானு சந்தானம் அங்குசம் போல்வதாம் என்று நூல்கள் கூறுகின்றன. இங்ஙனம் நாதத்தினால் அடங்கி, பரம்பொருளில் இலயித்திருப்பதினால் தாரணை யுண்டாகின்றது. விஷயங்களில் செல்லும் மனதைப் பலாத்காரமாக இழுத்துத் திருப்புதலே பிரத்தியாகாரமாம். அப்போது எதைப் பார்த்தாலும் பிரமமாகவே தோற்றும். பாதம், கட்டை விரல், பாடு, கணைக்கால், முழந்தாள், தொடை, பாயு, இலிங்கம், நாபி, இருதயம், கழுத்து, மிடறு, அண்ணம், மூக்கு, கண், நெற்றி, தலை இந்தப் பதினெட்டு இடங்களிலும் மேலும் கீழுமாகத் தரித்தல் பிரத்தியாகாரமாம். நித்திய கர்ம பல தியாகம் செய்தலும் தன்னாயுள் பரியந்தம் செய்வனவெல்லாவற்றையும் பிரமார்ப்பணம் செய்வதும், சர்வ கர்மங்களையும் சிவாராதனைப் பத்தியாகச் செய்வதும் ஒன்றையும் கவனியாமலிருப்பதும் இவற்றினால் மனதைப் பிரமத்தினிடம் சேர்த்தலும் பிரத்தியாகாரமாம்.

 

சரீர மத்தியிலுள்ள ஆகாசத்தில் வெளி ஆகாயத்தையும், பிராணவாயுவில் வெளிவாயுவையும், உதராக்கினியில் புற அக்கினியையும், அப்புவில் அப்புவையும், பிருதிவியில் பிருதிவியையும் தரித்தல் தாரணையாம். பாதம் முதல் முழங்கால் வரையில் பிருதிவி ஸ்தானமாம். பிருதிவிக்கு வடிவு நாற்கோணம். நிறம் மஞ்சள், மந்திர எழுத்து லகாரம். இந்தப்பூமி அம்சத்தில் வாயுவை ஆரோபித்து, பொன்வண்ணமாகிய பிரமாவை லகாரத்தோடு நான்கு முக முடையவராய்த் தியானித்து ஐந்து நாழிகை அமர்ந்திருந்தால் பிருதிவி ஜயமுண்டாகும். இந்த யோகிக்குப் பிருதிவியினால் சேதமுண்டாகாது. முழங்காலுக்கு மேல் பாயுகரையில் அப்புஸ்தானமாம். அப்பு அர்த்த சந்திரவடிவமானது. வெண்ணிற முள்ளது. வகார பீஜாக்ஷர முள்ளது. இந்த அப்புஸ்தானத்தில் பிராணவாயுவை நிறுத்தி, நாராயணமூர்த்தியை நான்குபுயங்களுடன், கிரீடந் தரித்தவரும், படிக்கவண்ண முடையவரும், பீதாம்பரமணிந்தவருமாக வகார பீஜத்துடன் தியானித்து ஐந்து நாழிகையிருந்தால் அந்த யோகி அப்புவை ஜயிப்பான். அவனுக்கு ஜலத்தினால் நாசமுண்டாகாது. பாயுமுதல் இதயம் வரையில் அக்கினிஸ்தானம். அது முக்கோண வடிவமும், செந்நிறமும் ரகார பீஜமுமுடையது. இந்த அக்கினியில் பிராணவாயுவைச் சேர்த்து, அருணவண்ணமுடையவரும், மூன்று கண்களையுடையவரும், சர்வாங்கமும் விபூதியணிந்தவரும், பிரசன்னரும் வரமளிப்பவருமாகிய ருத்திர மூர்த்தியைச் சிந்திக்க வேண்டும். ரகார பீஜத்துடன் ஐந்து நாழிகை தியானிக்கிறவன் அக்கினியை ஜயித்தவனாவான். அக்கினியினால் அழியமாட்டான். அக்கினி குண்டத்தில் குதித்தாலும் அக்கினி அவனைத் தகிக்காது. இதய முதல் புருவம் வரையில் வாயுஸ்தானமாம். வாயு அறுகோண வடிவமும், கரியநிறமும், யகார பீஜமும் உடையது. இந்த ஸ்தானத்தில் வாயுவைச் சேர்த்து எங்கு முள்ள சர்வக்ஞராகிய மஹேசுவாரை யகாரத்தோடு தியானித்தால் அவன் வாயுவைப் போல் ஆகாயத்தில் சஞ்சரிக்க வல்லவனாவான். அவனுக்கு வாயுவினால் நாசமில்லை. பயமுமில்லை. புருவநடு முதல் சிரசுவரையிலும் ஆகாயஸ்தானமாம். அது வட்ட வடிவமும், புகை நிறமும், ஹகாரபீஜமுமுடையது. இந்த ஆகாயத்தில் பிராணவாயுவைச் சேர்த்துச் சுத்தஸ்படிக நிறமும், ஐந்து முகமும், பத்துத் தோள்களும், மூன்று கண்களும் உள்ளவரும் சர்வாயுதங்களைத் தரித்தவரும் உமாதேவியாரை ஒரு பக்கத்தில் உடையவரும், இளம்பிறை தரித்தவரும், சர்வகாரண காரணருமாகிய மஹாதேவரை, வியோம (ஆகாஸ) வடிவ சதாசிவத்தை ஹகார பீஜத்தோடு ஐந்து நாழிகை தியானிக்க வேண்டும். இவன் ஆகாஸ தாரணையால் ஆகாஸத்தில் சஞ்சரிக்கும் வல்லமையுடையவனாவான். எங்கே யிருந்தாலும் சுகத்தையே அனுபவிப்பான். புருஷனிடத்தில் பரசிவத்தைப் பாவித்துத் தாரணை செய்யவேண்டும். இவன் சகல பாவங்களினின்றும் விடுபடுவான். பிரமாதிகாரிய பொருள்களைத் தத்தம் காரணத்தில் ஒடுக்கி எல்லாவற்றிற்கும் காரணமான அவ்விபாகத்தைப் பிரணவ சொரூபமான பரமாத்துமாவினிடத்தில் ஒடுக்குவதுவே தரரணையாம்.

 

தியானமாவது- சத்தியமும் பரப்பிரமமும், சம்சார வியாதிக்கு ஒளஷதம் போல்பவருமாகிய மஹேசுவரரை நானென்று பாவித்துத் தியானிக்க வேண்டும். இதற்கும் நாதானுசந்தானமே துணையாம். மனம் ஒருமைப்படும் வரையில் சொரூப பாவனை செய்யவேண்டும். இந்தப் பாவனை சகுணம் நிர்க்குணமென்று இருவகைப்படும். சகுண வடிவபாவனையே முதலில் செய்ய வேண்டும். அது ஒன்றைப் பற்றியே நிற்கும் இயல்புள்ள மனதைக் கட்டும் பாசம் போல்வதாம். ஸ்தூலப்பொருள்களில் நின்ற மனது சூட்சுமப் பொருள்களில் பற்றி நிற்கும் சாமர்த்தியமுடையதாகும். இது தியானமாம்.

 

சமாதியாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஐக்கியப்படுவதேயாம் ஆத்மா ஒன்றாகவேயிருந்தும் மாயா மயக்கத்தால் பேதமாகக் காணப்படுகின்றது. ஆகாஸமொன்றே கடாகாயம் படாகாயமென்று பேதமாகவிருப்பது போல பரப்பிரமமொன்றே மயக்க வரிவினர்களால் ஜீவாத்மா பரமாத்மா வென்று வேறுபடுத்திக் கூறப்படுகின்றது. நான் இந்திரியாதிகளும், பிராணனுமல்ல; கேவல சிவமே. சாட்சி சொரூபமான சிவமேயான் என்று அறிதலே சமாதியாம். இப்படி ஜீவபரபேதமின்றி ஏகமான அத்வைத உணர்ச்சியே சமாதியென்று யோக நூல்கள் கூறுகின்றன. இதனால் நானே பிரமம் பிரமமே நானென்னும் ஞானமே சமாதியாம். தியானம் தியானிப்பவன் இரண்டையும் விட்டுத் தியானிக்கப்படும் பொருள் ஒன்றையே விஷயமாகக் கொண்டிருப்பது சமாதியாம். இந்தச் சமாதி சவிகற்பம் நிர்விகற்பம் என்று இருவகையாம். கரண மனோவிருத்திகள் ஒடுங்கிச் சித்தம் பிரமத்தில் இலயித்திருப்பது நிர்விகற்ப சமாதியாம். சவிகற்ப சமாதி சப்தா நுவித்தம் சப்தான நுவித்தம் என்று இருவகைப்படும். " அஹம்பிரமாஸ்மி' என்னும் சப்தோச் சாரண பூர்வமாகச் செய்யப்படுவது சப்தானுவித்தம்; அப்படி யுச்சரியாமலிருப்பது சப்தானது வித்தமாம்.

 

இவ்வாறு சமாதியிலிருந்து நாதானு சந்தானம் (நாதத்தை யெழுப்புதல்) செய்து, அநாகதத்தில் (இருதயஸ்தானம்) இருந்து உண்டாகும் தொனியைக் கேட்பதே சித்தலய உத்தம சமாதிக்குக் காரணமாம். இந்த அநாகத்தொனிக்குள் பிரமமிருக்கின்றது. அதனுள் மனமடங்கி நிற்கும். அதுவே சமாதிலயமாம். அப்போது யாதொரு செயலுமில்லாமையால் அது நிரூபாதிகப் பிரமசொரூபமாம். ஈண்டு மனத்தோடு சப்தம் இலயமாதலால் அது பரபிரமமென்று சொல்லப்படும் பொருளாம். இதனால் சகல விருத்திகளுமொடுங்கின விடமே பரப்பிரமம் என்று கூறப்படுகின்றது. இர்தநாதமே சக்தியாம். தத்துவங்கள் ஒடுங்கி நிராகாரமாயிருப்பதுவே பரமான்மா வென்றுஅறிய வேண்டும். இதுவே துரியாவஸ்தையாம். இந்த அவஸ்தையை அடைந்தவன் ஜாக்கிர சொற்பன சுழுத்திகளைக் கடந்து தன்னையும் மறந்து இறந்தவனைப் போலாய் விடுவான். இதுவே ஜீவன் முத்தி நிலையாம். இதனையே,


"சொன்னக்ர வுஞ்ச கிரியூ டுருவத் துளைத்தலைவேன்
 மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌனத்தையுற்று
 நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
 டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே”


என்று ஆன்றோர் கூறியுள்ளார். உயிரோடிருந்தும் ஸ்பரிச சுகங்களாகிற
பரிமள சுகந்த புஷ்பாலங்கிருத்தாலிங்கனாதிகளையும், அடித்தல், குத்தல், எரித்தல் முதலிய துன்பங்களையும் உணராது பிரமத்திலேயே இலயித்திருத்தலால் இறந்தே விட்ட திவ்வுடம் பென்றார். இவன் சுகதுக்கங்களையும் மானாவமானங்களையும் அறியமாட்டான்.

 

ஜாக்கிராவஸ்தையி லிருந்துகொண்டே தூங்குகிறவனைப் போல சகல வுணர்வுகளையும் மறந்து இருக்கிற இவனை அஸ்திர சாஸ்திரங்களும் மந்திர தந்திரங்களும் பாதிக்கமாட்டா. இறக்கவுமாட்டான். இவனுக்கு நினைப்பும் மறப்பும் உண்டாகா. சுவாசநிவாசங்களும் காணப்படமாட்டா. இதனையே,


 "ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மானந்தத்தே
 தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்
 ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
 தூங்கார் தொழும்பு செய்யாரென் செய்வாரெம தூதருக்கே''


என்று பெரியோர் கூறினார். ஓங்காரத் துள்ளொளி என்றது பிரணவ சொரூபமாகிய நாதத்தொனிக்குள் பிரகாசிக்கும் பரப்பிரம சொரூபத்தை. அது முன்னர் கூறப்பட்டது.


''ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மே
 லளியில் விளைந்ததோ ரானந்தத் தேனை யநாதியிலே
 வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
 தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே"


என்று பெரியோர் கூறினார். "ஒளியில் விளைந்தவுயர் ஞானபூதரம்" என்றது ஆக்ஞாசக்கிர நிலையை.'' வெளி' என்றது புருவமத்தியத்துக்கு மேல் பிரமரந்திரம் வரையில் ஆகாயஸ்தானமென்று முன்னரே கூறிய ஆகாயநிலையை. ''வெறும்பாழ்'' என்றது யாதொரு செயலுமற்று நிர்விகாரமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிர்விகற்ப பிரமத்தை. இவ்வாறு யோக நெறியையுோர்ந்து இராஜயோக சமாதி கூடுவதே மோட்சமென்று பெறப்படுதலால்
யோகமார்க்கமொன்றே முத்தி நெறி என்றும், மற்றவை யாகாவென்றும் யோக நூல் கூறும்.

 

வாயு, மனம், விந்து இவற்றை ஜயிக்காதவன் ஒருபோதும் ஞானத்தை அடையமாட்டான். ஞானத்தை அடையாத போது முத்தி அடைவது மில்லையாம். ஆதலால் பிராணாயாமத்தால் வாயுவை அடக்கி மனதை அசையாமல் நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவது கன்ம முதலியவற்றால் முடியாதாம். முத்தியை அடைய விரும்புகிறவன் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டுச் சற்குருவை அடைந்து சேவை செய்து முறைப்படி உபதேசம் பெற்றுக் கசடறத்தெளிந்து யோக முயற்சியால் சமாதி கூடி ஞானத்தில் நிலைத்து முத்தியை அடைய வேண்டும் என்பது யோக நூலோர் கருத்து.

 

இந்த யோக அப்பியாசத்துக்கு அநந்தம் இடையூறுகளுண்டாகும். அவை மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்கிற மூவாசைகள், பரிமளசுகந்த பிரியம், அறுசுவையுண்டி தின்பண்டங்களில் விருப்பம், மக்கள் துணைவர் சிநேகர் முதலியவர் அதிகாரப்பிரியம், கோபம் பொறாமை அகங்காரம், கீதம் இசை முதலியன, ஆடல் பாடல் நாடகம் பார்த்தல் வேறுவகையான வினோதங்களைப் பார்ப்பதிலாசை, காமியகர்மங்களைச் செய்வதில் பிரியம், பூஜையாதி கர்மங்களும் யாக யக்ஞாதிகளும், முப்பத்திரண்டு வகையான தர்மங்களைச் செய்ய விரும்புதல், சயனசுகம், புண்ணிய தீர்த்த க்ஷேத்திர யாத்திரை செய்யப் பிரியப்படுதல், யானை குதிரை வண்டிகளிலேறிச் சவாரி போதல், இவைபோல்வன பிறவுமாம். பக்தி செய்ய விரும்புதலும் ஆலயதரிசன விருப்பங்களும் யோகத்துக்குப் பிரதிபந்தங்களா மென்பர் யோக நூலோர். இவைகளெல்லாம் யோக விக்கினங்களாமென்பது மெய்யேயாம். இவைகளைப் பற்றற ஒழித்தாலன்றி யோகநிலை மேவுதல் கூடாததாம்.

 

வீட்டு நூலோர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னப்படும் நான்கும் மோட்சகாரணங்களாம். இவற்றுள் ஞானமே முக்கிய காரணமாம். சரியை இன்றிக் கிரியை இல்லை; கிரியையின்றி யோகமில்லை; யோகமின்றி ஞானமில்லை; ஞானமின்றி மோட்சமில்லை யாதலால் மோட்சத்துக்குச் சரியையாதி நான்கும் முறையே காரணங்களாம். இந்த நான்கு பாதங்களையும் கிரமமாய் அனுஷ்டிக்கிறவனே மோக்ஷத்தை அடைவான் என்பது வேதாகமாதி நூல்களின் கருத்தாதலால் யோகத்தாலும் பயனில்லை, ஞானமே சிறந்தது என்பர். ஆசனங்களாலும் வாயுவை அடக்குவதாலும் மோட்சம் பெற முயல்வதும், கழைக் கூத்தாடிகளின் ஜீவனோபாய முயற்சி போல்வதேயா மென்பர். ஆயினும் மோட்சத்துக்கு ஞானமே முக்கிய சாதனமென்பது இருவர்க்கு மொப்ப முடிந்ததாதலால் ஞானம் சிறந்த சாதனமென்பதுவே பொருத்தமுடையது.

 

வாசியோகத்தையன்றி மோட்சத்துக்கு வேறு காரணங்களில்லை யென்றால் குருலிங்க சங்கமபக்திகளால் முக்தியடையலாமென்கிற நூல்களும், பக்திஞானங்களை விசேஷித்துக் கூறும் இதிகாச புராணங்களும், கர்மத்தால் ஞானம் பெற்று மோட்சம் பெறலா மென்கிற ஸ்மிருதி நூல்களும் வியர்த்தமாகும். வைணவத்திற் கூறப்படும் பக்தவிஜயம் முதலியவும் வீணாவதன்றியும் பொய்யென்றும் கூற நேரிடும். சைவ நூலாகிய தொண்டர் புராணத்திற் கூறப்படும் பக்தர்களுள் முக்தி அடைந்ததும் பொய்யென்று கூற நேரிடும். ஜனங்கள் நன்மை யடையும் பொருட்டு ஞானயோகம், கர்மயோகம், பக்தியோக மென்று மூன்று மோட்ச சாதனங்களை நான் கூறினேன் என்ற பகவானாகிய கண்ணன் வாக்கியத்துக்கும் விரோதமாகும். இவற்றுக்கெல்லாம். மாறாக யோகமே மோட்ச சாதனமாம், ஏனைய வுபாயங்களால் பயனில்லையென்று யோக நூல் கூறியதை எவ்வாறு ஒப்பலாம்? அதற்கு நியாயம் வேண்டுமென்பது அன்னோர் கருத்தாகும். அதை நாமும் சற்று விசாரிக்கவேண்டியதே.

 

எந்நூலார்க்கும் ஞானமே முத்திசாதனமாமென்பது ஒவ்வுதலாம். பகவானும் அது கருத்தாதல் கீதையிற் காணலாம். கர்மமும் பக்தியும் ஞானாங்கமாய் நின்று ஞானமளித்து முத்திதருவனவாம். தானமோ நேரில் தானே தருமியல்புள்ளது. இந்த ஞானத்துக்கு ஏனைய அங்கங்களாம். அதுபற்றியே சரியை, கிரியை, யோகம் ஞானமெனச் சைவநூல் வகுத்துக் கூறியது. இதனால் யோகமும் ஞானாங்கமாகவே கொள்ளப்படும். நிச்சலமாகிய மெய்ஞ்ஞானம் பெறும் வரைக்கும் யோகமும் வேண்டியதேயாம். இதுவன்றி மோட்சம் பெறுவதற்கு யோகம் தான் காரணமென்பதை யோக நூலும் ஒப்பவில்லை. அது பிராணாயாமாதிகளால் சித்தநிலைத்து நிற்பதே முக்தி காரணமாம் என்று யோக நூல் கூறுதலால் பெறலாம். யோகக்கழற்றியென்று ஒழிவிலொடுக்கங் கூறியது. அது யோகத்தையும் விடவேண்டு மென்பதாம். யோகத்தாலன்றிச் சித்தத்தைச் சலியாமற் நிற்கச் செய்யும் உபாயம் வேறில்லை யென்பதே யோக நூலின் கருத்தாம். சித்தம் நிலைத்து நிற்பதே ஞானமாம். அதன் வாயிலாக ஞானத்தையும் முக்தியையும் அடையக்கூடுமென்பதே யதன் கருத்துமாம்.

 

யோகத்துக்குக் கூறப்பட்ட எட்டு அங்கங்களுள் இயம நியமாதிகளில் கர்மயோக பக்திகளும் அடங்கும். ஆசையை ஒழித்தலாகிய கர்மயோகம் சர்வசித்திகளையும் தரும் என்பது நிச்சயம். இதனாலேயே, " கன்மத்தால் ஞானமுண்டாம்'' என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன. கன்மம் காமியமென்றும், நிஷ்காமியம் என்றும் இருவகைப்படும். காமியகன்மமாவது ஒரு பிரயோசனத்தை விரும்பிச் செய்யப்படுங் கன்மம். இது விரும்பிய பலனைக் கொடுத்து ஒழிவதாம். நிஷ்காமியம் அங்ஙனமின்றி மன ஒழிவை யுண்டாக்கி மோட்சகாரணமாகிய ஞானத்தைக் கொடுத்து மோக்ஷ ஹேதுவாய் நிற்பது. இதனையே கண்ணபிரான் கீதை வாயிலாக அர்ஜுனனுக்கு உபதேசித்தருளினார். அது கர்மதியாகம் (கர்மத்தை விடுதல்) என்பதே. கன்மத்தைச் செய்யாமலே விட்டு விடுதல் கன்மத்தியாகமாகாதென்றும், அங்ஙனம் விடுகிறவன் பதிதனாவான் என்றும், வைதிக நூல்களிற் கூறப்பட்டுள்ள கன்மத்தைச் செய்தே தீரவேண்டுமென்றும், செய்த கன்மத்தின் பலனை விட வேண்டுமென்றும், இதுவே கன்மத்தியாகமாமென்றும் உபதேசித்தருளினார். கன்மபலனை விடுதலாவது செய்த கன்மபலனைத் தான் விரும்பாமல் ஈசுவரார்ப்பணம் செய்தலாமென்றும் கூறி, " ஏ அர்ஜுனா ! வைதிக்கன்மங்களைச் செய்; அதன் பலனை எனக்கு அர்ப்பணம் செய்து விடு " என்று கூறினார். இப்படிச் செய்யப்படும் கன்மமும் மோட்சகாரணமாமென்பது பகவான் அபிப்பிராயம். கன்மத்தைச் செய்யும் போது பொறாமை, குரோதம் முதலிய துர்க்குணங்களை ஒழித்தே செய்ய வேண்டும்.

 

இயமம், நியமம், சரியை, கிரியை, கர்மம், பக்தி என்பன எல்லாம் ஒன்றேயாம். என்றால் இயமநியமங்களும், கன்ம பக்திகளும் சரியை கிரியைகளுள் அடங்கும். அதனாலே தான் யோக நூல்களும் சரியா யோகம், கிரியா யோகம் என்று அவற்றைப் புகழ்ந்து கூறின. இந்தக் கிரியா யோகத்தில் கர்மயோகமும் அடங்கும். ஆதலால் கண்ணன் கூறிய கர்மயோக பக்தி யோகங்களை யோக நூல் நிந்திக்கவில்லை. ஒப்பியே கூறின.

 

கர்மத்தை ஸ்மிருதி நூல்கள் விரித்துக் கூறின. அவை கிருச்சிரம் சாந்திராயணம் முதலிய விரதங்களாம். இந்த விரதங்களே தபசு என்னப்படும். விரதங்களால் சரீரம் தபிக்கப்படுகிறபடி (உலர்த்தப்படுகிறபடி) யால் அது தபம் தபசு என்னப்படும். இந்தத் தவங்களால் தபிக்கப்பட்ட சரீரம் நிர்மலமாம். நிர்மலமான சித்தத்தில் தெய்வம் விளங்கும். அந்தத் தெய்வத்தைச் சிரவண மனன தியானங்களால் வழிபடுவதே பக்தியாம்.

 

சிரவணமாவது வேதாந்தாதி நூல்களையும், பக்தியை விளக்கும் ஸ்துதி ரூபமான பாடல்களையும் கேட்குதலாம். மனனம் என்பது கேட்டவற்றைச் சிந்தித்துத் தெளிதலாம். தியானமென்பது தெளிவடைந்தபின் அப்பொருளினிடத்தில் மனதைச் செலுத்தி இடையறாமல் (மறவாமல்) நினைத்துக்கொண்டிருப்பதாம். இந்தத் தியானமே பின் சமாதிஞானமாகும். சகுணப்பொருளைச் சிந்திப்பதனால் மனங்கரைந்துருகி அப்பொருளோடு ஒன்றுபடுவதேயாம். சமாதியால் ஒன்று பட்டபின் சகுணத்தையும் மறந்து நிர்க்குண பிரம்மமயமாக நிற்பதே மெய்ஞ்ஞானமாம். அதுவே முத்தியுமாம். இவனையே ஜீவன் முக்தனென்று முன் சமாதிஞானத்தில் கூறப்பட்டது. இயம நியமங்களில் கர்மயோக பக்தி யோகங்கள் அடங்கியிருத்தலால் யோக நூல் கண்ணபிரான் வசனத்தோடு கூறியதில்லையென்றுணர்க. அன்றியும் இதிகாச புராணாதி நூல்களுக்கு மாறாகக் கூறியதில்லையென்றறிக. இதனால் நிஷ்காமிய கர்மமும் நிச்சலபக்தியும் மோட்சசாதனங்களாமென்பது விளங்கும். ஆதலால் கர்மநூல்களும், யோக நூல்களும், ஞான நூல்களும் ஒரு பொருளையே விளக்குவனவாம். இதனாலேயே வேதாந்தஞான முணர்ந்த பெரியோர்கள் பிராணாயாமாதிகளால் பிரயாசைப்படாமல் மனதை அடக்குதலே மோட்சஹேதுவாம்; மனமடங்கும் என்பர். இது ஞானவாசிஷ்டம் முதலிய நூல்களில் விளக் கப்பட்டிருக்கின்றது. பிரகலாதர் பக்தியால் மனமடங்கிச் சிலையைப் போல இருந்தாரென்று ஞானவாசிஷ்டம் கூறியது காண்க.

 

இந்திரியங்களால் மனது நிலைதிரியுமென்பது யாவருக்கும் ஒவ்வுதலாம். மனமடங்குதலே ஞானமாம். இந்திரியங்கள் விஷயப் பொருள்களில் மனதை இழுக்கின்றன. இந்திரியங்களை அடக்குவதே மனவடக்கமாகும். அதற்கு ஆசையை ஒழிப்பதே கருவியாம், பஞ்ச இந்திரியங்களாலும் விரும்பப்படும் விருப்பத்தை ஒழிக்க வேண்டும். இவற்றுள் பொருள்களைக் கவரும் கண்களையும், சுவையை விரும்பும் நாவையும் முதலில் அடக்க வேண்டும். இவ்விரண்டையும் முயற்சியால் அடக்கிக்கொண்டால் மற்றவற்றை எளிதில் அடக்கலாம். இந்திரியங்களில் மனம் செல்லாமலிருந்தால் மனம் அசையாமல் நிற்கும். மனம் ஒன்றைப் பற்றியே நிற்கும் இயல்புடையதாதலால் அது உபாசிக்கப்படும் சகுணப் பரம்பொருளைப் பற்றிக்கொண்டு நிலைத்து நிற்கும். அது நிலைத்து நிற்குமானால் கருவிகரணங்கள் எல்லாம் தத்தம் தொழிலைச் செய்யாமல் ஒழிவுபெறும். அப்போது வாயுவு ஒடுங்கிப் பிரமரந்திரமார்க்கத்தை அடையும். பிரமரந்திரமார்க்கத்தை அடைதலே மோட்சமாதலால் வைதிக நூல்களெல்லாம் ஒரேபொருளில் முடிந்தனவாம். ஆதலால் யாவரும் தத்தம் சாத்திக் கிசைந்ததைக் கைக்கொண்டு அனுஷ்டித்து மோட்சான நரம் பெறலாமென்பதே வைதிக நூல்களின் கருத்தென்றறிக.

 

 

முடிந்த ஞானம்

 

பாண்டவர்கள், வனவாச, அக்ஞாத வாசங்களை முடித்து வெளிப்பட்ட பிறகு, துருபதமகாராஜன் குலகுருவாகிய உலூகமாமுனிவரை அஸ்தினாபுரம் போய்த் திருதராஷ்டிர மஹாராஜனைக் கண்டு, உமது கட்டளைப்படி பாண்டவர்கள் பிரதிக்ஞையை நிறைவேற்றி விட்டு வெளிப்பட்டுத் தங்கள் பாகமாகிய ராஜ்யத்தைப்பெற விரும்புகிறார்கள். நீங்கள் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்கச் சொன்னார்கள். அவன் முனிவரை அனுப்பிவிட்டுச் சஞ்சயனைப் பாண்டவர்களிடம் தூதாக அனுப்பி, நீங்கள் தவம் புரிந்து மோட்சத்தை அடையுங்கள். துரியோதனன் இராஜ்யத்தை ஆளட்டும் என்று சொல்லச் செய்தான். அதுகேட்ட பாண்டவர்களும், கண்ணபிரானும் மனம் வருந்தி, நாங்கள் " எங்கள் பாகத்தையே விரும்புகிறோம். கொடாவிட்டால் யுத்தம் புரிந்து எங்களுடைய பிரதிக்ஞையை நிறைவேற்றி விட்டுப் பிறகு தவஞ் செய்யப் போவோம். ஆதலால் யுத்தம், அல்லது இராஜ்பம் ஆகிய இரண்டிலொன்றுக்கு அனுமதி கொடும்'' என்றவார்த்தைகளைச் சஞ்சயனிடம் சொல்லி அனுப்பினார்கள். சஞ்சயன் மீண்டு அரசனிடம் போய்ப் பாண்டவர்கள் தங்களுடைய இராஜ்யம் அல்லது யுத்தம் ஆகிய இரண்டிலொன்றை விரும்புகிறார்கள். அவர்கள் கூறிய வசனங்களை நாளைய தினம் காலையில் சபையில் வந்து தெரிவிக்கிறேன் என்று சொல்லிப் போய்விட்டான். அதனால் திருதராஷ்டிர மஹாராஜன் இரவில் தூக்கமில்லாமல் வருந்தினான். அப்போது விதுரர் ஸனத்ஜாத முனிவரை அழைத்துத் திருதராஷ்டிர மஹாராஜனுக்கு மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்கும்படி பிரார்த்தித்தார். முனிவர் திருதராஷ்டிரனை நோக்கி, ''மஹாராஜாவே! நான் உமக்கு என்ன சொல்ல வேண்டும்? விரும்பியதைக் கேளும், சொல்லுகிறேன் " எனத் திருதராஷ்டிரன், "முனிபுங்கவரே! தாங்கள் மரணமென்பது ஒன்று இல்லையென்று கருதுகிறதாகக் கேள்விப்பட்டேன். அப்படியானால் தேவாசுரர்களும் ரிஷீசுவரர்களும் மரணம் உண்டென்று அதைக் கடப்பதற்காகக் கொடிய தவம் புரிந்திருக்கிறார்களே! இவ்விரண்டு அபிப்பிராயங்களில் எது உண்மை? அதனை முதலிற் கூற வேண்டுகிறேன்'' என்றான்.
 

முனிவர், "அரசனே! சற்கருமத்தால், மரணத்தை விலக்கக்கூடும் என்று சிலரும், மரணமே யில்லையென்று சிலரும் கூறுகிறார்கள். இவற்றுள் எது நிச்சயமென்று கேட்கிறீர்; கவனமாய்க் கேளும். இரண்டும் உண்மையேயாம். ஞானிகள் அறிவில்லாமையால் மரணம் உண்டாகிறதென்று கருதுகிறார்கள். அந்த அறிவில்லாமையாகிய அஞ்ஞானமே மரணமென்று நான் அபிப்பிராயப் படுகிறேன். அஞ்ஞானமின்மையே நித்யத்வம். அஞ்ஞானத்தால், தோல்வியையும், மரணத்தையும் அசுரர் அடைந்தார்கள். மரணம், புலியைப் போல மனிதர்களை விழுங்குவதில்லை. அம்மரணமும், மரணத்தின் உருவமும் நிச்சயமில்லாதவை. வேறு சிலர் எமனே மரணமென்று கருதுகிறார்கள். இது மனதின் பலஹீனமென்பது அறிஞர் கொள்கை. ஆத்மஞானமே நித்யத்வமாம். மரணமென்று எண்ணப்படுகிற எமன் பிதிர்லோகத்தை ஆள்கிறான். புண்யாத்மாக்களுக்கு வாழ்வையும் பாபாத்மாக்களுக்குத் துக்கத்தையும் கொடுக்கிறான். அவனுடைய கட்டளையால் மரணமானது கோபம், அறியாமை, பேராசை இவைகளின் சொரூபமாக மனிதரிடத்தில் உற்பத்தியாகின்றது. அகங்கார வசப்பட்ட மனிதன் எப்போதும் அதர்மமார்க்கத்தில் நடக்கிறான். தன் இயற்கையான சுபாவத்தை அடைவதில் ஒருவனும் சித்தி பெறுவதில்லை. ஏனென்றால் அவன் அறிவு மயங்கியிருக்கிறது. மனிதர்கள் காமவசப்பட்டுச் சரீரத்தையிழந்து அடிக்கடி நரகில் விழுகிறார்கள். எப்போதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவர்களாய் நடக்கிறார்கள். அதனாலே தான் அஞ்ஞானத்தை மரணமென்று அறிஞர் கூறுகிறார்கள். தர்மபலனை விரும்புகிறவர்கள் அப்பலனை அனுபவிப்பதற்காகக் காலம் வந்தபோது தம் சரீரத்தையிழந்து சொர்க்கம் போகிறார்கள். அவ்விடத்திலும் அவர்கள் மரணத்தைக் கடப்பதில்லை. சரீரம் உள்ள பிராணிகள் பிரமஞானத்தை அடையச் சக்தியற்று உலக போக சம்பந்தத்தால் ஜனன வசப்பட்டுக் கீழும் மேலுமாகச் சுழல்கின்றன. சுபாவத்திலேயே ஆசையுள்ள மனிதர்கள் அசத்தியத்தை அனுசரிப்பதே அவர்களுடைய இந்திரியங்கள் தவறான மார்க்கத்தில் பிரவேசிக்கிறதற்குக் காரணமாகின்றது. அசத்தியத்தை அனுசரிப்பதால் இடைவிடாமல் வருத்தப்பட்ட ஆன்மா அதிக பழக்கமானதையே அனுசரிக்கின்றது. அதையே நினைக்கின்றது. தன்னைச் சூழ்ந்திருக்கிற உலக இன்பங்களையே சேவிக்கின்றது. போகத்தை விரும்புவதே மரணமாய் மனிதனைக் கொல்கின்றது. மதமும் கோபமும் அதை வேகமாய்ப் பின் தொடர்ந்து வருகின்றன. போக இச்சை, காமம், கோபம் இந்த மூன்றும் மூட மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்குகின்றன. தம் ஆத்மாவை அடைந்தவர்கள் அடக்கமுள்ளவர்களாய் மரணத்துக்குத் தப்புகிறார்கள். தன்னை ஜயித்தவன் துன்பத்துக்கிடமான ஆசையின் தூண்டுதலால் வருந்தாமல் பிரமஞானத்தை அடைந்து, அதன் உதவியால் இவற்றை வெறுத்து ஒதுக்கிக் கொன்றுவிடுகிறான். இப்படி ஆசையைஅழிக்கிற ஞானியை அஞ்ஞானம் சொரூபத்துடன் வந்து விழுங்குவதில்லை. ஆசையை அடைகிறவன் ஆசையுடன் அழிந்து போகிறான். ஆசையை ஒழிக்கிறவன் சகல துக்கங்களையும் விட்டு விலகுகிறான். உண்மையில் ஆசையே அஞ்ஞானமும் இருளும் நரகமுமாம். ஏனென்றால் அதனால் ஆளப்பட்டமனிதன் அறிவை யிழக்கிறான். மதுவால் மயக்கமடைந்த மனிதர்கள் தெருவில் நடக்கும்போது பள்ளங்களில் இடறி விழுகிறார்கள். அதுபோல ஆசையினால் அநித்தியமான இன்பங்களை விரும்பி மனிதர்கள் மரணத்தை அடைகிறார்கள். கலக்கமும் ஆசையுமில்லாத மனிதனை மரணம் என்ன செய்யும்? வைக்கோலாற் செய்யப்பட்ட புலியைப் போல மரணம் அவனுக்கு அச்சத்தை உண்டாக்குவதில்லை. ஆகையால் அஞ்ஞான சொரூபமான ஆசையை அழிக்க வேண்டும். அரசனே! உமது சரீரத்திலிருக்கிற ஆத்மா கோபம், பேராசை, அஞ்ஞானம் இவைகளால் நிறைந்திருக்கிறது. அதுவே மரணமாம். இப்படி மரணம் உண்டாகிறதென்பதை அறிந்து ஞானத்தில் விசுவாசம் வைத்துள்ளவன் மரணத்துக்குப் பயப்பட மாட்டான். மரண வசப்பட்டபோது நிச்சயமாகவே சரீரம் அழிகிறது. ஞானத்தின் வசப்பட்ட போது மரணம் இல்லாமற் போகிறது.'' என்றார்.

 

திருதராஷ்டிரன், "முனிவரே! யாகத்தாலும், ஜபத்தாலும் அடையப்படுகிற பரிசுத்தமான நித்திய உலகத்தைப் பெறுவதே பந்த ஒழிவாமென்று வேதங் கூறுகின்றதே. இதை அறிந்து கற்றவர்கள் தர்மத்தைத் துணையாகக் கொண்டு என் அடையக்கூடாது? " என்று கேட்டான்.

 

முனிவர், "அரசனே! ஞானமில்லாதவன் நீர் சொன்ன வழியில் நடக்கிறான். சொர்க்கவாழ்வும், பந்த ஒழிவும் இவ்விடத்திலேயே யிருக்கின்றன வென்று வேதங்கள் கூறுகின்றன. ஜடசரீரத்தைத் தான் என்று எண்ணுகிறவன் ஆசையை ஒழித்தானானால் உடனே பந்தம் ஒழிகிறது. ஆசையை விடாமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் முன் குறித்த மார்க்கத்தில் நடந்து, தான் ஒருதரம் நடந்த மார்க்கத்தில் மறுபடியும் திரும்பாமல் வெகுஜாக்கிரதையாய் நடந்து செல்லவேண்டும்.'' என்றார்.

அரசன், " பிறவாதவனும் புராதனனுமான அவனை ஏவுகிறவன் யார்? எல்லாவற்றிலும் பிரவேசித்திருக்கிற அவனுடைய செய்கை என்ன? முனிவரே! இவைகளை உண்மையாக எனக்குச் சொல்ல வேண்டும். " என்றான்.

 

முனிவர், ''அரசனே! மாறுபட்ட இவ்விரண்டையும் துணிந்து சொல்வதில் பெரிய ஆக்ஷேபனை யிருக்கின்றது. ஜீவாத்மாக்கள் எப்போதும் குணங்களின் சேர்க்கையால் உண்டாகின்றன. அவற்றின் உண்மையான தத்துவமோ குணங்களற்றது. ஆகையால் இந்தத் தோற்றமானது பிறப்பில்லாததும் அநாதியானதுமான ஆத்மாவின் பிரதானத்துவத்தைக் குறைக்கமாட்டாது. மனிதர்களும் குணக்கலப்பினாலேயே பிறந்தவர்கள். தோன்றுவன வெல்லாம் நித்தியமான ஆத்மாவைத் தவிர வேறல்ல. உண்மையில் பரமாத்மாவே பிரபஞ்சரூபமாகத் தோன்றியது. இந்தச் சக்தியைப் பரமாத்மாவுக்கு இலக்கணமாகவே வேதம் கூறுகின்றது. இந்தச் சக்தியையும், அதை உடையவனையும் துணிந்து கூறுவதற்கு வேதமே காரணமாம்.'' என்றார்.

 

அரசன், - "இவ்வுலகிற் சிலர் தர்மத்தை அனுஷ்டிக்கிறார்கள். சிலர் தர்மத்தை விட்டுச் சந்நியாச யோகத்தை அனுஷ்டிக்கிறார்கள். தர்மம் பாபத்தை அழிக்கும் சக்தியுடையதா? அல்லது பாபம் தர்மத்தை அழிக்கும் சக்தி உடையதா? இவற்றை எனக்குச் சொல்லவேண்டும்." என்றான்.

 

முனிவர், - "பந்தநீக்க விஷயத்தில் தர்மத்தையும் சந்நியாசத்தையும் அனுஷ்டிக்க வேண்டும். இவ்விரண்டும் மோட்சத்துக்குச் சரியான வழிகளாகும். அறிவுள்ளவன் ஞானத்தினாலேயே சித்தி பெறுகிறான். ஜடவாதிதர்மத்தைச் செய்து முத்தி பெறுகிறான். அவனே பாபத்தையும் செய்கிறான். நிலையற்ற புண்ணியபாபங்களைச் செய்து அவற்றின் பயனாகச் சொர்க்க நரகங்களை அனுபவிக்கிறான். கர்மத்தைச் செய்கிற மனிதன் பூர்வஜன்ம புண்ணியபாபங்களுக்குத் தக்கபடி மறுபடியும் கர்மத்தையே செய்யப் பழகுகிறான். தர்மத்தைச் செய்கிற புத்திசாலியானவன் தன் புண்ணியத்தினால் பாபத்தை அழித்து விடுகிறான். ஆகையால் புண்ணியமே பலமுடையது. அதுவே மோட்ச சித்தியைத் தருவதாம்.'' என்றார்.

 

அரசன், "மறு பிறப்பை அடையத்தக்க மனிதர்கள் தங்களுடையபுண்ணிய பலத்தால் அடைகிற புண்ணிய உலகங்களை அவற்றின் தாரதம்மியப்படி எனக்குச் சொல்ல வேண்டும். அவற்றுக்குச் சமானமான உலகங்களையும் சொல்லவேண்டும். நான் கர்மபலனைக் கேட்க விரும்பவில்லை'' என்று கேட்டான்.

 

முனிவர், - “மறுபடியும் பிறந்த மனிதர்கள் தங்களுடைய யோகவல்லமையால் இங்கிருந்து புறப்பட்டுப் பிரமலோகம் போவார்கள். வேதங்கூறிய யாகாதிகர்மங்களைச் செய்தவர்கள் அவற்றிற்குப் பயனாகத் தேவலோகத்தை அடைவார்கள். வேதமுணர்ந்த வேறு சிலர் வேதம் கூறிய யாகாதிகர்மங்களைச் செய்வது கடமையாகுமென்று அபிப்பிராயப்படுகிறார்கள். இவர்கள் அதிக உயர்ந்தவராக மதிக்கப்படுவதில்லை. மழைகாலத்தில் புல்லும் நாணலும் முளைப்பது போலப் பிராமணர்களுக்கு அன்னபானாதிகள் எங்கும் கிடைக்கின்றன. யோகியான பிராமணன் பிறரை வருத்தாமல் ஜீவிக்கலாம். அவன் பசி தாகங்களால் வருந்த வேண்டியதில்லை. ஒருவனுடைய மேன்மையை வெளிப்படுத்துவதால் பொறாமை அடைகிற இடத்தில், மேற் குறித்த இரண்டுக்கும் அசௌகரியமாயும் அபாயகரமாயும் இருக்குமானால் அவ்விடத்தில் தன் மேன்மையை வெளிப்படுத்தாமலிருப்பதே நல்லது. பிறன் பெருமையைப் பார்க்கும் போது பொறாமை அடையாமல் இருப்பவனும், பிராமணர்களுக்கும் அதிதிகளுக்கும் அன்னமிட்டுப் புசிப்பவனும் கொடுக்கிற அன்னமே சிலாக்கிய முடையதென்று தார்மீகர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நாயானது துன்பத்தினால் தன்மலத்தைத் தானே விழுங்குவது போலத் தங்களுடைய பெருமையைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் தாங்கள் வாந்தி செய்ததைத் தாங்களே விழுங்குகிறார்கள். பந்துக்களுக்கு மத்தியிலிருக்கிற அறிவுள்ள பிராமணன் தன் யோகாப்பியாசத்தை அவர்கள் அறியாத படி செய்ய வேண்டுமென்று அறிவான்.

 

ஏனைய யாவரும் பரமாத்மா குறிகுணமற்றது; ஏகமானது; இரண்டற்றது விகாரமற்றது என்று தெரிந்து கொண்டு தியானிக்க வேண்டும். அப்படிப்பட்ட பழக்கத்தினாலே க்ஷத்திரியனும் பரமாத்மாவைத் தன் ஆத்மாவில் கண்டு தரிசிப்பான். அந்த ஆத்மாவே ஞானமாயும் கர்மமாயும் இருக்கிறதென்று கருதுகிறவன் எவனானாலும் பதிதனாவான். அவன் பிரமாவின் இலக்கணங்களை அபகரிக்கிறபடியால் சகல பாபங்களையும் துணிந்து செய் வான்.

 

பிராமணன் முயற்சியற்றவனா யிருக்க வேண்டும். ஒருபோதும் தானம் வாங்கக் கூடாது தர்மிஷ்டர்களுடைய ஆசாரத்தையே அநுஷ்டிக்க வேண்டும். எப்போதும் பிராமணன் சாந்தமுள்ளவனா யிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தபோபலத்தை இழந்து விடுவான். வேதம முற்றும் உணர்ந்தவனாயிருந்தாலும் அறியாதவனைப் போலிருக்க வேண்டும். கர்வம் அடையக் கூடாது. அதனால் அவன் பிரமஞானத்தை அடைந்து பரபிரமத்தை அறியக்கூடும். இலவுகிக விருத்தியில் ஏழையாயும் பரத்தில் ஐசுவரியவானாயும் யாகயக்ஞாதிகளைச் செய்து கொண்டிருக்கிறவன் பிறரால் ஜபிக்கப்படாதவனாயும் அச்சமற்றவனாயும் இருப்பான். அவனே பிரம சொரூபி யென்று அறிஞரால் மதிக்கப்படுவான்.

 

யாகங்களைச் செய்கிறவன் கூடச் சர்வாபீஷ்டங்களையுந் தருகிற தெய்வத்தைத் தரிசிப்பான். பிரமத்தைத் தரிசிக்கிறவனுக்குச் சமானமேயில்லை. ஏனென்றால் யாகம் செய்கிறவன் பிரமத்தைத் தரிசிக்கும் முயற்சியைச் செய்கிறான். கர்மத்தை விட்டிருக்கிற ஞானியும் மரியாதைக் குரியவன். அவனுக்குத் தேவர்கள் கூட மரியாதை செய்கிறார்கள். பிறரால் மரியாதை செய்யப்படுகிறவன் தன்னைத்தானே மதிக்கக்கூடாது. பிறரால் மதிக்கப்படாதபோது துக்கப்படக்கூடாது. மனிதர்கள் தங்களுடைய கண்களை மூடித் திறப்பது போலக் காரியங்களைச் செய்கிறார்கள். (என்றால் பிறரறியாமலும் சீக்கிரமாயும் செய்கிறார்கள்). கற்றறிந்தவனே பிறருக்கு மரியாதை செய்கிறான். மரியாதை செய்யப்பட்டவனும் அப்படியே நினைக்க வேண்டும் இவ்வுலகில் மூடர்கள் பாபிகளும் வஞ்சகருமா யிருக்கிறார்கள். அவர்கள் மரியாதை செய்யத்தக்கவர்களுக்கு மரியாதை செய்யமாட்டார்கள். எப்போதும் பிறரை அவமதிப்பார்கள். உலகப் பெருமையும் தவமகிமையும் ஒன்றாகச் சேர்வதில்லை. பெருமையைத் தேடுகிறவர்களுக்கே இவ்வுலகம் உரியது. தவசிகளுக்கு மறு உலகம் உரியது. அரசனே! இவ்வுலக இன்பம் இவ்வுலகப் பொருள்களிலேயே நிலைத்திருக்கிறது. மறு உலகத்தில் சொர்க்க வாழ்விருக்கின்றது. ஞான மில்லாதவர்களாலே சொர்க்க வாழ்வு அடைய முடியாது. சொர்க்க வாழ்வை அடைவதற்குப் பல வழிகளுண்டென்றும், அவைகளெல்லாம் கடினமானவைக ளென்றும் புண்ணியாத்மாக்கள் கூறுகிறார்கள். அம்மார்க்கங்கள் சாத்தியம், பொறுமை, உறுதி, ஆசாரம், மன அடக்கம், பரிசுத்தம் என்பவைகளாம். இவைகள் மாயையை ஒழித்து அஞ்ஞானத்தை நாசம்செய்வனவாம்.

 

அரசன்: - முனிவரே! மௌன விரதம் என்கிறார்களே அதன் உண்மையாது? பேசாம லிருத்தல், தியானம் செயல் என்னும் இரண்டு மௌன விரதங்களில் உமக்குச் சம்மதமானது எது? இந்த மௌன விரதத்தால் சாந்தத்தையும் மோட்சத்தையும் அடையலாமா? அந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்கிறது?

 

முனிவர் - அரசனே! பிரமம் வேதத்தாலும் பற்றப்படாதது. ஆகையால் அதுவே மௌனமென்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து வைதிக சப்தமான பிரணவமும் சாதாரண ஒலியும் உண்டாயின. அந்தப் பரமாத்மா வேசப்தமாகத் தோன்றுகிறது. என்றதனால் (பிரணவ தியானத்துடன் பிரமதியானத்திலிருக்கிற மௌனவிரதமே சிறந்ததென்பது).

 

அரசன்: - முனிவரே! ரிக்கு, யஜுஸ், சாமம், என்னும் வேதங்களை உணர்ந்தவன் பாவஞ் செய்தால் அவன் பாவியாகமாட்டானா?

 

முனிவர் - அரசனே! மன அடக்கமில்லாதவன் ரிக்கு, யஜுஸ், சாமவேதங்களை ஓதினதினாலே பாவத்தினின்றும் விடுதலை யாக மாட்டான். வஞ்சனையால் ஜீவிக்கிற வஞ்சகனை (பிரமதியான மில்லாதவனை) வேதங்கள் காப்பாற்ற மாட்டா. புதிதாய்ச் சிறகு முளைத்த பறவைக் குஞ்சுகள் தங்கள் கூண்டுகளை விட்டுப்போவது போல அந்திய காலத்தில் வேதங்கள் அவனைக்கை விட்டுப் போகின்றன.

 

அரசன்: - புலன்களை வென்றவரே! வேதமானது தர்ம சகாயமில்லாமல் பாவங்களைப் போக்காதாயின், வேதங்கள் எப்போதும் அழிக்கும் என்று பிராமணர்கள் சொல்கிறார்களே, ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

 

முனிவர் - அரசனே! விசுவம் எல்லாம் (பிரபஞ்சமெல்லாம்) பரமாத்மாவினிடத்திலிருந்து குணங்களுடனும் வேறு இலக்கணங்களுடனும் தோன்றின. வேதங்களும் இப்படியே சொல்கின்றன. பிரபஞ்சமும் பரமாத்மாவும் வேறுபட்ட பொருள்களென்றும் வேறு படாதவைகளென்றும் கூறுகின்றன. பரமாத்மாவை அடைகிறதற்காகவே தவசும் யாகமும் விதிக்கப்பட்டன. கற்றறிந்தவன் இவ்விரண்டினாலும் புண்ணியத்தைச் சம்பாதிக்கிறான். புண்ணியத்தால் பாவம் அழியும். ஞானத்தால் பிரமாவை அடைகிறான். அறிவுள்ள மனிதன் ஞானத்தின் உதவியால் பரமாத்மாவை அடைகிறான். தர்மார்த்தகாம மோட்சங்களை இச்சிக்கிறவன் இவ்வுலகிற் செய்தவைகளை மறு உலகத்துக்குத் தன்னுடன் கொண்டு போய் அனுபவிக்கிறான். போகானுபவ முடிவில் மறுபடியும் கர்ம உலகத்துக்கு வருகிறான். இவ்வுலகத்தில் செய்த தவப்பலனை மறு உலகத்தில் தான் அனுபவிக்க வேண்டும். ஆத்மஅடக்கமுள்ளவர்கள் இவ்வுலகத்திலும் தங்கள் தவப்பயனை அடைகிறார்கள். இதனால் வேதம் கூறிய கர்மத்தைத் தவறுபடாமல் செய்தால் அவ்விரண்டும் சேர்ந்து முத்தியை அளிக்கும். வேதத்தை விட்டுக் கர்மம் செய்தலும் கர்மத்தை விட்டு வேதமோதுதலும் பயன்தரா. ஆதலால் அந்தணர் மயங்கிச் சொல்லவில்லை யென்பது விளக்கப்பட்டது.

 

அரசன்: - முனிவரே! ஒரே தவம் சிலசமையம் சித்தி தருவதும் சிலசமையம் சித்தி தராமலிருப்பது மேன்? நான் அறிந்து கொள்ளும்படி இதைச் சொல்லவேண்டும்.

 

முனிவர்: - அரசனே! தவமானது ஆசை முதலியவற்றால் குற்றப்படாமலிருக்கும் போது மோட்சத்தைத் தருகிறது. மயக்கத்தாலும் உண்மையான பக்தி யில்லாமையாலும் மோட்ச சித்தியைத் தருவதில்லை யென்று கூறப்படுகிறது. கற்றுணர்ந்தவர்கள் தவசினாலே பிரமத்தை யறிந்து நித்தியத்துவத்தைப் பெறுகிறார்கள். (பக்தியுடன் கூடின தவமே முத்தி தரும் என்பதாம்.)

 

அரசன்: - முனிவரே! உம்மால் தவத்தைத் தெரிந்து கொண்டேன். அதனால் நித்தியத்துவத்தைப் பெறும் இரகசியத்தையும் தெரிந்து கொண்டேன். குற்றங்களால் மாசடைந்த தவம் எது? அதை விவரித்துச் சொல்ல வேண்டும்.

 

முனிவர் - அரசனே! கோபம் முதலிய பனிரண்டு குற்றங்களும் தன்பெருமையைப் பேசுதல் முதலிய பதின் தீமைகளும் தவத்தைக் கெடுக்கிற குற்றங்களாம். கோபம், மதம், ஆசை, அறியாமை, திருப்தியில்லாமை, கொடுமை, பொறாமை, அகந்தை, துக்கம், சிற்றின்பப்பிரியம், பகை, பிறர்நிந்தை கூறல் இப்பன்னிரண்டும் மனிதருடைய சாதாரண குற்றங்களாம். இப்பன்னிரண்டும் எப்போதும் ஒழித்து விடத் தக்கன. அரசனே! இவற்றுள் ஒவ்வோன்றே மனிதரை அழிக்கக் கூடியது. வேடன் மானைப் பிடிக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருப்பது போல இவற்றுள் ஒவ்வொன்றும் மனிதனைப் பற்றச் சமையம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தன் பெருமையைப் பேசிக் கொள்ளுதல், பாதாரத்தை விரும்புதல், அதிகக் கருவத்தினால் பிறரையிகழ்தல், கோபம், சஞ்சல புத்தி, ஆதரிக்கத்தக்கவர்களை ஆதரியாமை, இந்த ஆறும் கெட்டவர்களால் எப்போதும் அனுசரிக்கப்படுகின்றன. இவ்வாறும் இகபரமிரண்டிலும் அபாயத்தைச் செய்வனவாம். காமமே பிரதான இன்பமென்று கருதுவதும், மிகுந்த கருவமும், தானம் கொடுத்தபின் துக்கிப்பதும், பணத்தைச் செலவழியாமலிருக்கிற லோபத்தனமும், கொடிய வரிவிதித்துப் பிரஜைகளைத் துன்பப்படுத்துவதும், பிறர் நிந்தையால் மகிழ்வதும், தன் சொந்த மனைவியைப் பகைப்பதும் ஆகிய இவ்வேழும் துஷ்டர்கள் செய்கைகளாம். இங்ஙனம் கூறிய இருபத்தைந்தும் தவசுக்குப் பெரியகுற்றங்களாம். தர்மம், சாத்தியம், தன்னடக்கம், தவம், பிறருடைய வாழ்வில் மகிழ்தல், மரியாதை, பொறுமை பிறரை நேசித்தல், யாகம், தானம், உற்சாகம், வேத உணர்ச்சி இப்பனிரண்டும் மனிதர்களால் எப்போதும் அனுசரிக்கத்தக்கவைகளாம். இந்தப் பனிரண்டையும் ஆள்கிறவன் பூவுலகம் முழுவதையும் ஆள்வான். இவற்றுள் மூன்று, அல்லது இரண்டு, அல்லது ஒன்றையாவது உடையவன் சொர்க்கத்தை அடைகிறவனாக மதிக்கப்படுகிறான். தன்னடக்கம், துறவு, ஆத்மஞானம் இவைகளால் மோட்சமுண்டாகும். இவைகளிலிருந்து சத்தியம் விருத்தியடைகிற தென்று கற்றுணர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மஞானம் பதினெட்டுக் குணங்களால் உண்டாக்கப்படுகின்றன. அவை, விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்தல், பொய் சொல்லாமை, பொறாமை யின்மை, காம வெறுப்பு, தனத்தை விரும்பாமை, இன்பத்தை யிச்சியாமை, சினமின்மை, துக்க மின்மை, பொருளாசை யின்மை, எரிச்சல் கொள்ளாமை, வஞ்சனை செய்யாமை, பிறர் துக்கத்தில் மகிழாமை, பகை கொள்ளாமை, பிறரை இமிசியாமை, நற்செய்கைளில் மகிழ்ச்சி, தன்கடமையை மறவாமை, கோள் சொல்லாமை, அகங்காரமின்மை இந்தப்பதினெட்டும் உள்ளவனே தன்னடக்க முள்ளவளென்று கற்றோர் கூறுகின்றார்கள் இவை அகந்கையை ஒழிக்கும். பழக்கத்தினால் இவற்றை அடைகிறவன் எல்லாவற்றையும் ஜயித்தவனாவான்.

 

துறவு ஆறு வகை. இந்த ஆறும் புகழ்ச்சியை உண்டாக்குவனவாம். அவையாவன - வாழ்வு வந்த போது சந்தோஷப்படாம லிருப்பது, யாகம், கர்மம், ஜபம் இவற்றை விடாமை, ஆசையில்லாமை, (இந்த மூன்றா வதையுடையவன் எல்லாரினும் மேலானவனென்று கருதப்படுகிறான்.) பிறர் செல்வ முதலியவற்றால் துக்கப்படாமை, அல்லது மனதுக்கு வெறுப்பானது வந்தபோது வருந்தாமை, புத்திரன் மனைவி முதலிய பிரியமுள்ளவரிடத்திலும் வருந்திக் கேளாமை, யாசகர்களுக்குக் கொடுப்பதும் புண்ணியத்தைத் தரும் தானங்களைச் செய்வதுமாம். இவ்வாறு குணங்களையும் உடையவன் சிரேஷ்டனாவான். இவைகளால் ஆத்மஞான முண்டாகும். கடைசியிற் கூறியதுறவு எட்டுக் குணங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அவை சத்தியம், தியானம், சமாதானம், அனுமதிக்கும் சக்தி, உலக இன்பவெறுப்பு, பிறர் பொருளைக் கவராமை, பிரமசரிய அனுஷ்டானம், தானம் வாங்காதிருத்தல்.

 

மதமும் தோஷங்களை யுடையன. இவைகளையும் ஒழித்து விட வேண்டும். துறவையும் ஆத்ம ஞானத்தையும் உமக்குச் சொல்லி விட்டேன். ஆத்ம ஞானம் எட்டுத் தர்மங்களை யுடையது; இல்லாவிட்டால் எட்டுக் குற்றங்களை யுடையதாம். அந்தக் குற்றங்களை ஒழித்துவிட வேண்டும். புலன்களையும், மனதையும், இறப்பு எதிரவுகளையும் ஒழித்தவன் சுகம்அடைவான். அரசனே! உமது மனம் சத்தியத்தில் விசுவாசமுள்ளதாயிருக்க வேண்டும். உலகமெல்லாம் சத்தியத்திலேயே நிலை பெறுகின்றன. ஆத்ம அடக்கம், துறவு, ஆத்மஞானம் இவைகள் சத்தியத்தையே பிரதானஇலக்கணங்களாக உடையன. இவ்வகைப்பட்ட குற்றங்களை விலக்கியே ஒருவன் தவம் புரிய வேண்டும். புண்ணியவான்களுக்குச் சாத்தியத்தையே முக்கிய தர்மமாகவும் விரதமாகவும் தெய்வம் விதித்திருக்கின்றது இந்தக்குற்றங்களில்லாததும் இந்தக் குணங்களை யுடையதுமான தவம் பெருவாழ்வுக்கு மூலமாகின்றது. நீர் கேட்ட பாபஹரமான சிறந்த பொருளையும் ஜனன மரண மூப்புகளினின்று விடுபடுவதையும் சுருக்கமாய் உமக்குச் சொல்லி விட்டேன். இன்னம் நீர் எதைக் கேட்க விரும்புகிறீர்? அதைக்கேட்டால் அதையும் சொல்கிறேன் என்று முனிவர் கூற, அரசன் கேட்கிறான்.

 

அரசன்: முனிவரே! வேதங்கள் பரமாத்மாவே சராசரமயமான பிரபஞ்ச மென்று சொல்கின்றன. மற்றவை சிரேஷ்டமான நான்கு தெய்வங்களுண்டென்கின்றன. சில மூன்று என்கின்றன. சில இரண்டு என்கின்றன. சில ஒன்றே யென்கின்றன. இன்னும் சில பிரமம் ஒன்றே ஆத்மாவாக நிலைபெற்றிருக்கின்றது என்கின்றன. இவைகளுள் பிரமத்தை அறிகிற ஞானம் இதுதான் என்று எனக்குச் சொல்ல வேண்டுகிறேன்.

 

முனிவர்: ஒரே பிரமந்தான் உண்டு. இதுவே சத்தியம். பலதெய்வம் உண்டு என்று கருதுவது அறியாமையினாலே தான். அரசனே! அந்தப் பிரமத்தை அடைந்தவன் எவன்? அந்தப் பிரமஞானத்தை அறிந்து கொள்ளாமலே மனிதன் தன்னைப் புத்திமான் என்று மதிக்கிறான். இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்கிற விருப்பத்தினாலே வேதாத்தியயனம், தானம், யாகம் முதலியவற்றைச் செய்கிறான். இத்தகையோர் பிரமத்தினின்றும் நழுவிக் கன்மத்தில் விழுந்து வேதத்தை நம்பி யாகத்தைச் செய்கிறார்கள். சத்தியத்தினால் பிரமத்தைத் தேடுகிறவன் சீக்கிரத்தில் தன் விருப்பத்தைப் பெறுவான். எடுத்த காரியம் பலியாத போது அவன் மௌனவிரதத்தை ஆசரிக்க வேண்டும். தன்னை அறியும் அறிவு இருக்கிறவரிடத்தில் பிரமப் பொருளுமிருக்கும். ஞானத்தின் பலன் இப்பொழுதே அறியப்படுகிறது. தவம் பரத்தில் பலன்தரும். அதிகமாய்ப் படித்திருக்கிற பிராமணனை மனிதர் நன்றாய்ப் படித்தவன் என்று கருதுகிறார்கள். ஆனால் அவன் பிரமஞானியல்லன். வேதத்தை மாத்திரம் படித்தவன். சத்தியத்தினின்றும் வழுவாமல் இருக்கிறவனைப் பிரமஞானியென்று அறிய வேண்டும். அரசனே ! அதர்வண வேதத்தினாலும் முனிவர் கூட்டத்தாலும் படிக்கப்பட்ட வேத வசனங்களுக்கு முற்காலத்தில் சந்தஸ் என்று பேர் வழங்கிற்று. வேதத்தால் அறியப்படும் பிரமஞானத்தை அடையாமல் வேதத்தை மாத்திரம் படித்தவர்கள் சந்தஸை அறியாதவர்கள் என்று கருதப்படுகிறார்கள். சந்தஸானது வேறு உதவியில்லாமலே பிரமஞானத்தை அறியத்தக்க மார்க்கமாயிருக்கிறது. வேதம் விதித்த யாகத்தை மாத்திரம் அறிந்தவர்கள் சந்தஸை உணராதவர்களாவர். அரசனே! வேதத்தின் கருத்தை அறிந்தவர்கள் சிலரேயிருப்பார்கள். வேதத்தை மட்டும் கற்றவன் அறியவேண்டிய பொருளை அறிவதில்லை.

 

சத்தியத்தில் நிலைத்திருப்பவன் வேதத்தால் அறியப்படும் பொருளை அறிவான். மனோ சக்தியானது சரீர ஞானத்தை மாத்திரம் அறிவிக்கக் கூடியது. அதனால் பிரம ஞானத்தை அறிய முடியாது. ஒருவன் மனதினாலே மாத்திரம் ஆத்ம ஞானத்தையும் அனாத்ம ஞானத்தையும் அறிய முடியாது. ஆத்மாவை அறிகிறவன் அனாத்மாவையும் உண்மையாகவே யறிகிறான். அனாத்மாவை மட்டும் அறிகிறவன் ஆத்மாவை அறியவே மாட்டான். பிரமாணத்தை அறிகிறவன் அதனால் அறியப்படும் பிரமேயத்தை அறிவான். பிரமாணத்தால் அறியப்படும் பொருளின் உண்மையானது வேதத்தாலாவது வேதத்தை அறிந்தவர்களாலாவது அறியப்படுகிறதில்லை. வேதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்த பிராமணன் வேதத்தால் அறியப்படும் பொருளையும் அறிவான். ஒரு மரத்தின் கிளை பூர்வபட்சத்தின் முதல் தினத்தில் சந்திரகலையைக் குறிப்பாகக் காட்டுகிறதற்கு உபயோகப்படுவதுபோல வேதமும் பிரமத்தின் சிறந்த இலக்கணங்களைக் குறிப்பிட்டுக் காட் டஉபயோகப்படுகின்றது. தன் சந்தேகங்களை யெல்லாம் நீக்கிக்கொண்டு, பின், பிறர் சந்தேகங்களை நீக்குகிறவனும், ஆத்மஞான முள்ளவனுமே பிராமணனாவான் என்று அறிஞர் சொல்கிறார்கள். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு முதலிய திக்குகளிலும் திகந்தரத்திலும் தேடிப்பார்த்தாலும் ஆத்மா இன்னதென்று கண்டுபிடிக்க முடியாது. சரீரமே ஆத்மாவென்று கருதுகிறவனிடத்தில் அதைக் கண்டு அறியக்கூடாது. அது வேதத்தின் கருத்துக்கும் அப்பாற்பட்டது. யோகப்பயிற்சியுள்ள பிராமணனே அந்தப் பிரமத்தை அறிவான். அரசனே! உமது புலன்களையும் மனதையும் முற்றும் அடக்கிக் கொண்டு உமது ஆத்மாவில் வசிக்கிற பிரமத்தைத் தேடிப்பாரும். யோகத்தை மாத்திரம் பயின்றவன் முனிவனாக மாட்டான். வனத்தில் வசிக்கிறவனும் ஆகமாட்டான். தன்னை அறிந்தவனே முனிவனாவான். அவனே எல்லார்க்கும் மேலானவன். வியாகரண சாஸ்திரத்திலுண்டாகும் சந்தேகங்களை நீக்கக் கூடியவன் வையாகரணி என்று சொல்லப்படுகிறான். உலகத்திலுள்ளஎல்லாப் பொருள்களையும் கண்டறிகிறவன் சர்வதரிசி என்று கூறப்படுகிறான். சத்தியத்திலிருந்து பிரமத்தை அறிகிறவன் பிராமணன் என்னப்படுகிறான். ஆதலால் பிராமணன் சர்வஞான முள்ளவனாவான். இந்தத்தர்மங்களை அனுஷ்டிக்கிற க்ஷத்திரியனும் பிரமத்தைக் காணலாம். வேதத்தில் சொல்லியிருக்கிற சோபான முறைப்படி மேலான நிலைமையையும் அடையலாம். நான் நிச்சயமாயறிந்த இதை உமக்குச் சொன்னேன்.

 

அரசன்: - ரிஷீசுவரரே! இவைகளெல்லாம் சிறந்தவைகள்; மேலேசொல்லும்.

 

முனிவர்: - நீர் சந்தோஷத்துடன் கேட்ட அந்தப் பிரமம் எளிதில் அடையப்படுவது அன்று. புத்தியானது சுத்தமான ஞானத்தை அடைந்து உலக சிந்தனைகளெல்லாம் ஒழிந்த பின் சிந்திக்கத் தக்கது; அந்த ஞானமும் பிரமசரியத்தால் அடையத்தக்கது.

 

அரசன்: - பிரமஞானம் மனதிலேயே யிருக்கின்றது. அது பிரமசரியத்தால் அடையத்தக்கது. மனதிலிருப்பதினால் அது பிரசன்னமாவதற்கு முயற்சி வேண்டியதில்லை. பிரமசரியத்தினாலே ஆராயும் போது அது தானே வெளிப்படுகிறதென்று சொன்னீர். பிரமத்துடன் கூடுகிற நித்தியத்துவம் எப்படி அறியப்படுகிறது?

 

முனிவர்: - மனதிலிருந்தாலும் மனதுக்குச் சகஜமாயிருந்தாலும் பிரம்ஞானம் வெளிப்படுவதில்லை. பரிசுத்தமான புத்தியின் உதவியாலும் பிரமசரியத்தாலும் அந்தப் பிரமஞானம் வெளிப்படுகிறது. உலகத்தை விட்ட யோகிகளுக்கு அடையத் தக்கதாயிருக்கிறது. சிறந்த குருவின் மூலமாகவே அது அடையப்படுகிறது. அந்த அறிவைப்பற்றி நான் சொல்லுகிறேன்.

 

அரசன்: - கஷ்டப்படாமல் பிரமஞானத்தை அடைவதற்குரிய அந்தப் பிரமசரியத்தின் இலக்கணம் யாது? அதை எனக்குச் சொல்லும்.

 

முனிவர்: - குருகுல வாசம்பண்ணிக் குருவினுடைய நல்ல எண்ணத்தையும், அன்பையும் அடைந்து பிரமசரிய விரதத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறவன் இவ்வுலகத்திலேயே பிரமத்தினுடைய சரீரமாயிருக்கிறான். அவன் சரீரத்தை விட்டு பிரமமாகவே ஆய்விடுகிறான். இவ்வுலகத்திலேயே பிரமத்தின் தன்மையை அடைய விரும்பி ஆசைகளை அடக்கி, நன்னெறியில் ஒழுகித் தன் ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் உள்ள சம்பந்தத்தை ஒழித்து விட வேண்டும். அரசனே! இந்தச் சரீரம் மாதா பிதாக்களா லுண்டாக்கப்பட்டது. குருவின் உபதேசத்தால் கிடைக்கிற புதிய சரீரமானது பரிசுத்த மானதும், பிறப்பற்றதும், அழிவற்றதுமானது. பிரமத்துடன் சம்பந்தப் படுத்தி நித்தியத்துவத்தைக் கொடுத்துச் சத்தியத்தால் மூடுகிற குருவை மாதா பிதாக்களாக மதிக்க வேண்டும். அவர் செய்த நன்மையை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு யாதொரு தீமையும் செய்யப்படாது. சிஷ்யன் வழக்கமாய்க் குருவை நமஸ்கரித்து அவரை மகிமைப்படுத்த வேண்டும். மனம் சரீரம் இவைகளைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு, கவனமாயிருந்து படிக்க வேண்டும். குருவினுடைய எந்த வேலையையும் இழிவாக நினைக்கக் கூடாது. கோபத்துக்கு இடந்தரக் கூடாது. இது பிரமசரியத்தின் முதற் படியாம். விதிப்படி பிரமஞானத்தை அடைய விரும்புகிற சிஷ்யன் தன் குல தர்மத்தை அனுஷ்டிப்பதும் பிரமசரியத்திற்கு முதற்படியாம். சிஷ்யன் தன் ஜீவன், ஸ்திதி, எண்ணம், வசனம், தொழில் எல்லாவற்றினாலும் ஒத்துக்குரு பணிவிடை செய்ய வேண்டும். இது பிரமசரியத்தின் இரண்டாவதுபடியாம். குருவின் பத்தினி புத்திரன் இவர்களிடத்திலும் குருவினிடம் போலவே நடந்து கொள்ள வேண்டும். இதுவும் பிரமசரியத்தின் இரண்டாம் படியாம்.

 

குருவானவர் தனக்குச் செய்ததை மனதில் நன்றாய்ப் பதியவைத்துக் கொண்டு, அதன் கருத்தையும் உணர்ந்து மனமகிழ்ச்சியோடு இவர் எனக்கு உபதேசித்தார்; எனக்குப் பெரிய காரியத்தைச் செய்தார் என்று சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். இது பிரமசரியத்தின் மூன்றாம் படியாம். சரியான சிஷ்யன் குருவுக்குச் சரியான தட்சிணை கொடுத்துவிட்டு வேறு ஆசிரமத்தை அடைய வேண்டும். நான் இந்தத் தட்சிணையைக் கொடுக்கிறேனென்று வாயாலும் சொல்லக்கூடாது, மனதாலும் நினைக்கக்கூடாது. இதுபிரமசரியத்தின் நாலாவது படியாம். பிரமசரியத்தின் முதற்படியானது காலத்தின் உதவியால் அடையப்படுகிறது. இரண்டாவது குருவின் சம்பாஷணையால் அடையப்பகிறது. மூன்றாவது தன் சொந்த அறிவினால் அடையப்படுகிறது. நாலாவது விசாரணையால் அடையப்படுகிறது. பிரமசரியமானது பனிரண்டு தர்மங்களால் அடையப்படுகிறது. அவைகள் யோகங்கள் என்னப்படுகின்றன. யோகத்தில் ஊக்கமாயிருப்பது பலமென்று கூறப்படுகிறது. குருவின் உதவியாலும் பிரமத்தின் சேர்க்கையாலும் முயற்சியாலும் சித்தியாகிறது. இப்படிப்பட்ட சிஷ்யன் தான் சம்பாதிக்கிற எல்லாவற்றையும் குருவுக்குக் கொடுத்து விடவேண்டும். இதனால் குருவானவர் நல்ல வாழ்வை அடைவார். குரு புத்திரனிடத்திலும் இப்படியே நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரமசரியத்தில் நின்ற சிஷ்யன் இவ்வுலகில் எவ்வகையாலும் விருத்தியடைந்து, சந்ததியையும் புகழையும் அடைகிறான். எல்லாத் திசைகளிலு மிருப்பவர்கள் அவனுக்குச் செல்வத்தைச் சொரிவார்கள். அநேகர் பிரமசரியத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு அவனிடம் வந்து சேர்வார்கள். இந்தப் பிரமசரியத்தினாலேயே தேவர்களும் தேவத்துவத்தை அடைந்தார்கள். முனிவர்கள் பெருவாழ்வையும் ஞானத்தையும் பிரமலோகத்தையும் அடைந்தார்கள். இதனாலேயே கந்தர்வர்களும் அப்ஸரஸ்களும் அழகை அடைந்தார்கள். பிரமசரியத்தினாலேயே சூரியன் பகலைச் செய்யும் பொருட்டு உதிக்கின்றான். சிந்தாமணியைப் பெற்றவர்கள் விரும்பினவற்றைப் பெறுவது போலத் தேவர்களும் பிரமசரியத்தினால் இஷ்டமானவற்றைப் பெற்றுச் சுகம் அடைகிறார்கள். அரசனே! தவம் செய்கிறவன் பிரமசரியத்தை நிறைவேற்றி, அதனால் சரீரசுத்தியை அடைந்து உண்மை ஞானியாகிறான். இதனால் அவன் குழந்தைகளைப் போலாய்விடுகிறான். கடைசியில் மரணத்தையும் ஜயிக்கிறான். கர்மத்தால் சுத்தனான மனிதன் அழிந்து போவனவாகிய உலக போகங்களையே பெறுகிறான். பிரமஞானத்தை அடைந்தவன் பிரமத்தையே அடைகிறான். மோட்சத்தைக் கொடுக்கிற ஞானத்தை அடைவதற்கு வேறு மார்க்கமில்லை.

 

அரசன்: - நீர்சொன்ன அந்தப் பிரமம் இந்த ஆத்மாவிலிருந்தே அடையப்படுகிறது. அந்தப் பிரமமானது வெண்மையா, சிவப்பா, கறுப்பா, நீலமா, ஊதாவா? அந்தப் பிரமத்தினுடைய நிஜசொரூபத்தையும், நிறத்தையும் எனக்குச் சொல்லும்.

 

முனிவர்: - அந்தப் பிரமம் வெண்மையாயும், சிவப்பாயும், கறுப்பாயும், ஊதாவாயும் காணப்படலாம். ஒளியாயும் காணப்படலாம். ஆனால் இந்தஉலகத்திலாவது, வனத்திலாவது, சமுத்திர ஜலத்திலாவது அதை ஒத்தது ஒன்றுமில்லை. நட்சத்திரம், மேகம், மின்னல் இவற்றிலும் அதன் சொரூபம்காணப்படுவதில்லை. வாயு மண்டலத்திலும், தேவர்களிலும், சந்திர சூரியர்களிலும் இல்லை. ரிக்கு, யஜுஸ், சாமம், அதர்வணம் என்கிற வேதங்களிலுமில்லை. நிதந்தரத்திலும், பார்ஹத்ருதத்திலும், யாகங்களிலும் காணப்படுவதில்லை. யோசித்து அறியப்படாததாய் அறிவுக்கும் அப்பாற்பட்டதா யுள்ளது. பிரபஞ்சத்தை நாசம் பண்ணுகிறவன் கூடப் பிரளயகாலத்துக்குப் பின் அதில் லயமாகிறான். காணமுடியாததாய்க் கத்தி முனையைப் போல நுண்ணியதாயும், மலையை விடப் பெருமனாயுமுள்ளது. காணப்படுகிற எல்லாவற்றுக்கும் ஆதாரமாயுள்ளது. அது விகாரமில்லாதது. அதுவே இந்தப்பிரபஞ்ச சொரூபம். அகண்டமானது. ஆனந்தமாயுள்ளது. எல்லாப்பிராணிகளும் அதிலிருந்து தோன்றி அதிலேயே லயிக்கின்றன. அது தொந்தங்களற்றது. அதுவே பிரபஞ்சமாய் விரிகிறது. எங்கும் வியாபித்திருப்பது. அதை விவரித்துச் சொல்லுகிற போது வார்த்தை வேறுபாடே தவிர அதற்குயாதொரு வேறுபாடு மில்லையென்று கற்றோர்கள் சொல்லுகிறார்கள். உலகம் எதில் நிலை பெற்றிருக்கிறதோ அந்தப் பிரமத்தை அறிந்து ஞானிகள் மோட்சத்தை அடைகிறார்கள். துக்கம், கோபம், பொருளாசை, காமம், அறியாமை, சோம்பல், பொறாமை, தன்னயம், ஒழியாத ஆசை, எரிச்சல், மாயம், கொடுஞ்சொல் இந்தப் பனிரண்டும் மனிதர்களுடைய உயிரைப் போக்குகிற பெரிய தோஷங்களாம். இவைகளில் ஒவ்வொன்றும் மனிதனைப் பற்றச் சமையம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர் இவைகளால் துன்பமடைந்து, அறிவிழந்து போகிறார்கள்.

 

பொருளாசையுள்ளவன், மூர்க்கமுள்ளவன், கொடும் சொல் பேசுகிறவன், அலப்புகிறவன், கோபத்துக்கிடங் கொடுக்கிறவன், தற்புகழ்ச்சி செய்கிறவன், இந்த ஆறு பேரும் துஷ்டர்களாம். இவர்கள் ஐசுவரியத்தை அடைந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். ஜீவித் திருப்பதற்குப் பயன் சிற்றின்பமே என்று எண்ணுகிறவன், வஞ்சகன், தானம் கொடுத்த பின் தன்னைத்தானே புகழ்ந்து பேசுகிறவன், லோபி, மனத்திடமில்லாதவன், தன்னை மெச்சுகிறவன், தன் மனைவியைப் பகைக்கிறவன் இந்த எழுவரும் பாபஒழுக்க முள்ளவர்களாம். தர்மம், சாத்தியம, தவம், தன்னடக்கம், திருப்தி, மரியாதை, துறவு, பிறரை நேசித்தல், தானம், அத்தியயனம், பொறுமை, சாந்தம், இந்தப் பன்னிரண்டும் பிராமணர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன. இந்தப் பன்னிரண்டையும் தவறாமல் அனுஷ்டிக்கிறவன் உலகம் முழுவதையும் ஆள்வான். இவற்றுள் இரண்டொன்றையாவது உடையவன் பிறர் பொருளைத் தனதென்று நினைக்க மாட்டான். தன்னடக்கம், துறவு, ஞானம் இந்த மூன்றிலேயே மோட்சம் நிலை பெறுகின்றது. இவை ஞானத்தையும் பிரமத்தையும் எல்லாவற்றுக்கும் மேலான பொருளென்று எண்ணுகிற பிராமணருக்குரிய இலக்கணங்களாம். உண்மையாயிருந்தாலும் பொய்யாயிருந்தாலும், பிறர் குற்றத்தைச் சொல்வது புகழாகாது. இப்படித் தூஷிக்கிறவர்கள் நரகத்தையே அடைவார்கள். மதம் பதினெட்டுக் குற்றங்களை யுடையது.

அவையாவன. - பிறரைப் பகைத்தல், தர்மவிரோதம் செய்தல், அருவருப்பு, பொய் சொல்லுதல், காமம், கோபம், பிறரை அனுசரித்தல், பிறர்குற்றங்கூறல், பிறர் குற்றத்தையே நாடுதல், வீண்செலவு செய்தல், சண்டையிடல், இறுமாப்பு, ஜீவ இம்சை, தீமைகளை அறியுமதன்மை இல்லாமை, பிறருக்குத் துன்பம் செய்வதையே எண்ணுதல் என்பவைகளாம்.

 

ஆகையால் அறிவுள்ளவன் மதத்துக்கிடங் கொடுக்கக் கூடாது. இடங்கொடுத்தால் தோஷமுண்டாகும். சினேகிதத்துக்கு ஆறு அடையாளங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது. முதலாவது சினேகிதர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியடைதல், இரண்டாவது சினேகிதர்கள் கஷ்டப்படும் போது வருத்தப்படுதல், மூன்றாவது தன் நண்பன் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவன் விருப்பம் அறிந்து கொடுத்தல். நல்ல எண்ணமுள்ள சினேகிதன் தன் சொத்து, புத்திரன், மனைவி எல்லாவற்றையும் கொடுத்து விடுவான். இதுநாலாவது. ஐந்தாவது, தன்னால் உதவி செய்யப்படுகிற சினேகிதனுடைய வீட்டில் வசியாமல் தானே சம்பாதிக்கிறதைக் கொண்டு ஜீவனம் செய்தல். ஆறாவது தன் சினேகிதன் நிமித்தமாகத் தன்னுடைய நன்மைகளையும் இழந்து விடுதல். ஐசுவரியத்தையும் இந்த நல்ல குணங்களையும் அடையவிரும்புகிறவனும், தர்மம் செய்கிறவனும், நீதிமானாயிருக்க விரும்புகிறவனும், ஐம்புலன்களையும் தத்தம் விஷயங்களிற் செல்லாமல் அடக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் புலன்களை அடக்குவதே தவமாம். இந்தக் குணம் விருத்தியானால் அவன் மறுமையில் நல்ல குணங்களை அடைவான். சாந்தமில்லாதவன் ஞானத்தை அடையான். அவன் பரலோக வாழ்வை விரும்பித் தவஞ் செய்ய வேண்டும். யாக உற்பத்திக்கு மூலமான பிரமத்தை அறியும் வல்லமை யுள்ளவன் யோகி. அவன் மனதினாலே யாகம் செய்வான். சிலர் ஜபத்தினாலே யாகம் செய்வார்கள். வேறு சிலர் கர்மத்தினாலே யாகம் செய்வார்கள். பிரமத்தின் இலக்கணங்களை அறிகிறவனிடத்தில் சத்தியம் விளங்குகிறது. பிரமத்தை இலக்ஷண சூனியமென்று அறிகிறவனிடத்தில் அதிகமாய் விளங்கும். இன்னும் சிலவற்றைக் கேளும்.

 

சிறந்ததும் பெருமையுள்ளதுமான இந்தச் சாஸ்திரமே அனுஷ்டிக்கத் தக்கது. மற்ற சாஸ்திரங்களெல்லாம் சொற்கூட்டங்களேயாம். யோக சாஸ்திரத்திலேயே எல்லாம் நிலைபெறுகின்றன. யோகத்தை அப்பியாசித்தவர்கள் மரணம் அடைவதில்லை. அரசனே ! கர்மத்தால் பிரமத்தை அடைய முடியாது. ஞானமில்லாதவன் யாகங்களையும் ஓமங்களையும் செய்தாலும் அவன் நித்தியத்துவத்தை அடையமாட்டான். அவன் பேரின்பத்தையும் அடையமாட்டான். பகிரிந்திரியங்களை அடக்கியே பிரமத்தைத் தேடவேண்டும். புகழ்ச்சியால் மகிழ்ச்சியையும் இகழ்ச்சியால் கோபத்தையும் அடையப்படாது. வேதத்தில் சோபான முறைப்படி நடப்பானானால் அவன் இவ்வுலகத்திலேயே அடையவும் கூடும். கற்றறிந்த உமக்கு இதுதான் நான் சொல்லத்தக்கது.

 

பிரபஞ்சத்துக்கு மூலகாரணமான விதையானது மஹாயசவஸு என்று சொல்லப்படுகிறது. அது கண்டமில்லாதது. பரிசுத்தஞானமாயுள்ளது. சுயமாகவே பிரகாசிக்கிறது. அதனாலே தான் சூரியன் பிரகாசிக்கிறது. அந்தந்த தெய்வத்தன்மையுள்ள ஜோதியை யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். அதனாலேயே பிரமமானது சிருஷ்டியைச் செய்கிறது. அதனாலேயே பரவுகிறது. அதுவே ஜோதிரூபங்களுக்குள்ளிருந்து அவற்றுக்கும் ஒளியையும் வெப்பத்தையுந் தருகிறது. தான் மற்றெதனிடத்திலிருந்தும் ஒளியைப் பெறாமல் சுயமஜோதியாய் ஒளிகளுக்கெல்லாம் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நித்திய வஸ்துவையே யோகிகள் ஞானக்கண்ணால தாசிக்கிறார்கள். சூட்சுமபூதங்களினின்றும் உண்டான ஐந்து மஹாபூதங்களினாலே சரீரமுண்டாயிற்று. சூட்சுமபூதங்களோ ஒரே சுபாவமான பிரமத்திலிருந்து உண்டாயின. அந்தப் பிரமத்தினின்று ஜீவாத்மா ஈசுவான் என்கிற இரண்டு சைதன்னியங்களுண்டாகின்றன. இவ்விரண்டும் நித்திரை மஹாலயம் இரண்டிலும் உணர்ச்சியற்றிருக்கின்றன. எப்போதும் அறிவடனிருக்கிற பிரமமானது இவ்விரண்டுடன் ஆகாசம் பூமிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறது. அது சூரியனுக்குச் சூரியனாயும் இருக்கிறது. அந்தப் பிரமத்தையே யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். அந்தக் காரணவஸ்துவே பூமி ஆகாசமாகிய இரண்டு தெய்வங்களையும் தரிக்கிறது. திசைகளையும் விசுவத்தையும் தாங்குகின்றது. அந்தக் காரணவஸ்துவிலிருந்தே திசைகளும் நதிகளும், பெரிய கடலும் உண்டாகின்றன. அந்த நித்தியப் பொருளையே யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். இந்தச் சரீரமானது மரணத்தை நோக்கிச் செல்கிற ஒரு இரதத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அதனுடைய செய்கை அழியாமல் இருக்கிறது. அந்தத் தேர்ச்சக்கரங்களில் கட்டப்பட்ட இந்திரியங்களாகிற குதிரைகளினாலே அறிவுள்ள மனிதன் கனவுலகங்களின் வழியாக விகாரமற்ற பரம்பொருளினிடம் செல்கிறான். அந்தப் பரம்பொளையே யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். அந்தப் பரம்பொருளின் சொரூபமானது எவ்வகைப்பட்ட திருஷ்டாந்தங்களினாலும் அறிவிக்க முடியாது. அதை ஒருவனும் ஒரு போதும் கண்ணாற் கண்டதில்லை. அந்தக்கரணங்கள் பரவசமடைவதாலும், மனதாலும், இருதயத்தாலும் கண்டு மரணத்தைக் கடக்கிறார்கள். அதையே யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். மாயையாகிய நதியானது பயங்கரமானது. அது தேவர்களால் பாதுகாக்கப்படுகிறது. அது பன்னிரண்டு பலன்களை யுடையதாயிருக்கிறது. அந்த நதியின் நீரைப் பானம் செய்து கொண்டும் அதன் நடுவிலுள்ள பலவகையான வஸ்துக்களைப் பார்த்துக் கொண்டும் மனிதன் அதில் முன்னும் பின்னுமாக நீந்திக் கொண்டிருக்கிறான். இந்த நதியானது அந்த மூலகாரண வஸ்துவிலிருந்தே பெருகுகிறது. அந்தப்பரம் பொருளையே ஞானிகள் ஞானக்கண்களால் காண்கிறார்கள். போக்குவரவு செய்யும்படி நியமிக்கப்பட்ட ஜீவாத்மாவானது தன் கர்மத்தின் பலனில் பாதியை அனுபவிக்கிறது. நியமிக்கிறவன் ஈசுவரன் என்று சொல்லப்படுகிறான், அவன் பிரபஞ்சத்திலுள்ள சகல வஸ்துக்களிலும் வியாபித்திருக்கிறான். அவனே யாகங்களை விதிக்கிறான். இத்தன்மையான பிரமசொரூபத்தை யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். ஜீவாத்மாவானது சகல குணங்களையும் விட்டொழிந்து சொர்ண இலைகளுடன் கூடின விருட்சத்தைப் போலிருக்கிற அவிததையினின்று குணங்களைப் பெற்று, அந்தக்குணங்களுக் கேற்றபடி பிறப்பை அடைகின்றது. இதற்கு ஆதாரமாயிருக்கிற பரம்பொருளையே ஞானிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். பூர்ணமான பிரமத்தினிடத்திலுள்ள குணங்களே பூர்ணமான பிரபஞ்சத்தை உண்டாகச் செய்கின்றன. அந்தப் பரம்பொருளே தெய்வம். அதையே யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். அந்த மூலகாரணமான வித்திலிருந்தே பஞ்சபூதங்களும் உதித்தன. அவற்றை அடக்கியாளும் சக்தி அந்தப் பிரமத்திலிருக்கின்றது. அந்த வித்திலிருந்தே அக்கினியும் ஸோமனும் உண்டாயின. அதனிடத்திலேயே ஜீவகருவிகளிருக்கின்றன. சகல வஸ்துக்களும் அதனிடத்திலிருந்தே வருகின்றனவென்று கருதவேண்டும். அந்த வித்தைத்தான் வேதம் அது (தத்) என்று கூறுகின்றது. அதை ஒருவராலும் விரித்துச் சொல்ல முடியாது. அந்த நித்திய வஸ்துவையே ஞானிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள்.

பிராணவாயு அபானவாயுவை விழுங்குகிறது. அறிவு மனதை விழுங்குகிறது. அறிவு பிரமத்தில் ஒடுங்குகிறது. பிரமத்துக்கு ஜாக்கிரம், சொற்பனம், சுழுத்தி, துரியமென்று நான்கு பாதங்களுண்டு. அன்னம் போன்ற அந்தப்பிரமம் துரியம் என்கிற பாதத்தைக் கீழேவையாமல் மூன்று பாதங்களால் மேலே நின்றுகொண்டிருக்கிறது. மற்ற மூன்றையும் நடத்தும் நிமித்தம் அந்தப்பாதத்தைத் தூக்கிக் கொண்டிருப்பதினால் மரணம் மோட்சங்களுண்டாகின்றன. அந்தப் பரம்பொருளையே ஞானிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். அது அங்குஷ்டப் பிரமாணமாயுள்ளது. பூரணமாயிருக்கிறது. அதுபிராணவாயுவுடன் சேர்ந்து மனம், புத்தி, தசேந்திரியங்கள் இவைகளை நடத்துகின்றது. வேதத்துக்குரியதும், குணங்களற்றதுமான அந்தப் பிரமமே சகலத்துக்கும் மூலகாரணமாயிருப்பது. ஆத்மாக்களில் அறிவாய் விளங்கும் அந்தப்பிரமமே. அதையே யோகிகள் ஞானக்கண்ணால் காண்கிறார்கள். மனதை அடக்கிக் கொண்டவர்களிடத்திலும் அடக்காதவர்களிடத்திலும் உள்ளது. ஆகையால் எல்லா மனிதர்களிடத்திலும் அந்தப் பரம்பொருள் சமமாயிருக்கக் காணலாம். பந்தன் முத்தன் இருவரிடத்திலும் சமனாயிருந்தாலும் முக்தன் அதிலிருந்து பெருகுகிற தேனை அருந்துகிறான்; பந்தன் அருந்துவதில்லை. இதுதான் வித்தியாசம். அந்தப் பிரமத்தையே யோகிகள் ஞானக்கண்ணால் தரிசிக்கிறார்கள். ஆச்மாநாத்மா விவேகத்தை அடைந்து ஜீவனை நிலைபெறச் செய்தபின், அக்கினிஹோத்திரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் சமனேயாம்.

 

அரசனே! வேறு ஆக்ஷேபனை வேண்டியதில்லை. பிரமத்துக்கு ஞானம்என்று ஒருபேர். சகல பிராணிகளும் அதிலேயே ஒடுங்குகின்றன. பூரணமான அதை அறிகிறவன் இவ்விடத்திலேயே முத்தி அடைகிறான். அந்தப் பரம்பொருளையே ஞானிகள் ஞானக்கண்ணால் காண்கிறார்கள்.

 

ஆயிரம் ஆயிரமான சிறகுகளுடன் மனதைப் போலப் பறந்தாலும் முடிவில் அதனிடத்திலேயே வந்து அடைய வேண்டும். அதன் சொரூபம் கண்களுக்குக் கோசரமாகாது. பரிசுத்தமான இருதயமுடையவர்களே காணக்கூடும். பிறர் நலத்தைக் கவனித்து மனதை அடக்கித் துக்கத்தால் மனதை வருத்தாமல் இருக்கிறவனே பரிசுத்தமான இருதயமுடையவனென்று சொல்லப்படுகிறான். உலகத்தை விட்டவனே அமிர்தத்துவத்தை அடைகிறான். அழிவற்ற அந்தப் பிரமத்தையே யோகிகள் மனக்கண்ணால் பார்க்கிறார்கள். பிரமம் எல்லாரையும் பார்க்கிறது; அது நல்ல செய்கைகளால் மகிழ்வதுமில்லை; தீய செய்கைகளால் வெறுப்பதுமில்லை. பிரமத்தை அறிந்தவன் அமிரதன் என்று சொல்லப்படுகிறான். பிரமத்தை அறிகிறவன் துக்கப்படுவதுமில்லை; நான் வேதத்தைப் படிக்கவில்லையென்றாவது அக்கினிஹோத்திராதிகளைச் செய்யவில்லையென்றாவது கருதுவதுமில்லை. மனஅடக்கமுடையவனுக்கே பிரமஞானமுண்டாகிறது. பிரமமே ஜீவாத்மாக்களைத் துக்கம் அஞ்ஞானம் இவைகளினின்றும் விடுவிக்கின்றது. அந்தப்பிரமத்தையே ஞானிகள் ஞானக்கண்ணால் காண்கிறார்கள்.

 

அங்குஷ்டமாத்திரமாக இருதயத்தில் இருக்கிறதும், கண்களாற் காணமுடியாதது மன பிரமத்தை அறிகிறவனே வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களையெல்லாம் அடைகிறான். பிறப்பில்லாத அவன் நடக்கிறான்; இரவிலும் பகலிலும் விழித்துக் கொண்டிருக்கிறான். அவனை அறிகிறவன் படித்தவனும் பூர்ணமான மகிழ்ச்சியுடையவனுமாகிறான். நான் தாயாரும் தகப்பனுமாகிறேன். நானே மறுபடியும் புத்திரனாகிறேன். இருந்ததும் இருக்கிறதும் இருப்பதும் ஆகிய எல்லாம் பிரமமே. பாரதரே! நானே பிதாமகன், நானே பிதா, நானே புத்திரன், நீங்கள் என் ஆத்மாவில் இருக்கிறீர்கள். அப்படியிருந்தாலும் நீங்கள் என்னுடையவர்களாக மாட்டீர்கள்; நானும் உங்களுடையவனாக மாட்டேன்; ஆத்மாவே பிறப்பதற்கும் பிறப்பிக்கிறதற்கும் காரணமாகும். நானே உண்டையும் நூலும் நெசவுமா யிருக்கிறேன். நான் எதிலிருக்கிறேனோ அது அழிவற்றது, பிறவாது அசைக்கிறேன். நட்பத்திலும் நுட்பமானகண் இறப்பு எதிர்வுகளை அறியக்கூடும். இரவும் பகலும் விழித்து இருக்கிறேன். படிச்சவனையும் சந்தோஷ முடையவனையும் அறிகிறேன். பிரமம் எல்லாப் பிராணிகளிடத்திலும் விழித்துக் கொண்டிருக்கிறது. அவனை அறிகிறவன் எல்லாப் பிராணிகளின் இருதயத்திலும் இருக்கிற பிரபஞ்சத்தின் பிதாவை அறிவான். அரசனே! நீர் கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் சமாதானம் சொல்லி விட்டேன். இதைவிட நீர் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. ஒருவன் பிரமத்தை அறிந்து முத்தியை அடைவதற்குரிய ஞானமெல்லாம் சொல்லியாயிற்று.

 

அரசனே! மனதை அடக்கிப் புலன்களை ஜயித்துக் கவலையற்று நான் கூறிய இந்த நெறியில் தவமல் நடந்தால் நீர் மரணத்தை ஜயித்து விடுவீர். மரணத்துக்குப் பயப்படவேண்டியதில்லை. இதுவே முடிந்த ஞானம். முடிந்தஞானமென்றால் ஞானங்களுக்செல்லாம் முடிந்த இடமாகிய சிறந்த ஞானமாம். நீர் மிகுந்த கவலையுடன் கேட்டமையாலும், விதுரருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் உண்மையான ஞானத்தை உள்ளபடி உமக்குக் கூறிவிட்டேன்' என்று கூறிவிட்டு ஸநத்ஸுஜாத முனிவர் தமதிச்சைப்படி சென்றுவிட்டார்.

 

இந்த ஞானமும் பகவத்கீதையைப் போல வியாசரால் பாரதத்தில் கூறப்பட்டது. இதனைப் பகவத்கீதையின் சுருக்கமென்றே கூறலாம். பகவத்கீதை பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாகக் கூறப்பட்டது. இது வருத்ஸுஜாத முனிவரால் திருதராஷ்டிர மஹாராஜனுக் குபதேசித்ததாகக் கூறப்பட்டது. பகவத்கீதை அர்ஜுனனுக்கு உபதேசிப்பதற்கு முன்னாலேயே இது திருதாாஷ்டிர மஹாராஜனுக்குக் கூறப்பட்டது. இதுவே பகவத்கீதையில் விரித்துக் கூறப்பட்டது என்னலாம். பகவத்கீதையைப் போலவே இதிலும் ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் என்கிற மூன்றும் கூறப்பட்டுள்ளன. இதனால் இந்த மூன்றுமே முக்திக்கு ஆதாரமாயுள்ளனவென்பதும், இவற்றுள் தமது சக்திக்குத் தகுதியான ஒன்றை அனுஷ்டித்து எல்லாரும் முக்தி அடையலாமென்பதும் வியாசபகவானுடைய கருத்தாமென்று தெரிந்து கொள்ளலாம். அறிஞர் எந்த ஞான நூலிலும் இந்த மூன்றையுமே விசேஷித்துக் கூறியிருக்கிறார்கள். இது பாரதத்தில் ஸநஸுஜாதபர்வம் என்கிற பெயரால் வழங்கப்பட்டிருக்கிறது. இது பகவத்கீதைக்கு முந்தியதாதலாலும், இதுவே பகவத்கீதையாக விரிந்தமையாலும் இந்த ஞானத்தை முடிந்த ஞானமென்று பெரியோர் வழங்குகிறார்கள்.

 

இதில் பிரமத்தை அடைவதற்குக் குருகுலவாசமே சிறந்த மார்க்கமென்று விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. திருதராஷ்டிர மஹாராஜன் கஷ்டமில்லாமல் பிரமத்தை அடைகிற மார்க்கம் எதுவோ அதைக் கூறியருளும் என்று கேட்டபோது ஸநத்ஸுஜாத முனிவர் பின் வருமாறு கூறினார்.

முறைப்படி குருகுலத்தில் வாசம் பண்ணிக் குருவினுடைய கருணையைப் பெற்று சற்சிஷ்யனென்று மதிக்கப்படுகிறவன் சரியான பிரமசரிய விரதானுஷ்டானம் செய்கிறவனாவான். அவனிடத்தில் எப்போதும் பிரமம் பிரகாசிக்கிறது. அவன் தேகாந்தத்தில் பிரமமே யாய்விடுவான். அரசனே! இந்தச்சரீரம் மாதாபிதாக்களால் உண்டாக்கப்பட்டது, குரு உபதேசத்தால் பெறப்படுகிற புதிய சரீரமானது பரிசுத்தமுள்ளது; அழிவில்லாமலிருப்பது; பிறப்பினை யடையாதது. இதுவே ஞான சரீரமாம். பிரமத்துடன் சேர்க்கிறதும், நித்தியத்துவத்தைக் கொடுப்பதும், சத்தியத்தால் சரீரத்தை. மூடுவதுமான ஞானத்தைக் கொடுத்தருளிய குருவை மாதா பிதாக்களாகவே மதிக்க வேண்டும். அவர் செய்த நன்மையை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒருபோதும் மறக்கப்படாது. அவருக்கு யாதொருதீமையும் செய்யக் கூடாது. தவறாமல் குருவை நமஸ்கரித்து அவரை மகிமைப்படுத்த வேண்டும். தேகத்தையும் மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு அவரிடத்தில் பாடம் படிக்க வேண்டும். படிக்கும் போது வேறுகவனம் வைக்கக்கூடாது. குருவால் இடப்படுகிற எந்தப் பணிவிடையையும் குறைவாக நினைக்கப்படாது. கோபம் கொள்ளக்கூடாது. தன்குல தர்மத்தை விடாமல் அனுஷ்டிக்க வேண்டும். தன் ஜீவன், பொருள், எண்ணம், தொழில், பேச்சு எல்லாவற்றாலும் ஒத்துக் குருவுக்குப் பணிவிடை செய்யவேண்டும்; குருபத்தினி குரு புத்திரன் முதலானவர்களிடத்திலும் குருவிடம் நடப்பது போலவே நடந்து கொள்ள வேண்டும். குருவானவர் தனக்குச் செய்ததை நன்றாய் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதன் கருத்தை உணர்ந்து சந்தோஷப்பட வேண்டும். இவர் எனக்கு உபதேசம் செய்தார்; எனக்குப் பெரிய காரியத்தைச் செய்தார் என்று மகிழ வேண்டும். அதை மறவாமல் சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். வேறொரு ஆசிரமத்தையடைய விரும்பினால் சரியான தட்சணையை அவருக்குக் கொடுத்துவிட்டு அதன்பிறகு அடைய வேண்டும்; தட்சணை கொடாமல் வேறு ஆசிரமத்தை அடையக்கூடாது. என்றதனால் பிரமஞானோபதேசம் பெற்றவர்கள் விரும்பினால் கிருகஸ்தாசிரமத்தை அடையலாமென்றும் கிரமமான தட்சணையைக் கொடுக்க வேண்டுமென்றும், அதன்பின் கிருகஸ்தனாய்க் கர்மானுஷ்டானங்களைச் செய்து பிரம நிஷ்டாபரனாயிருக்கலா மென்றும் விளக்கப்பட்டது. வேறு ஆசிரமம் என்று கூறியதினால் கிருகஸ்தாசிரமமே யன்றி வானப்பிரஸ்த சந்நியாசாசிரமங்களில் விருப்பமானதை அடையலா மென்றும் கொள்ளக்கிடப்பது காண்க. தட்சணை கொடுக்கும் போது நான் இந்தத் தட்சணையைக் கொடுக்கிறேனென்று வாயாலும் சொல்லக்கூடாது, மனதிலும் நினைக்கக் கூடாது.

 

இங்ஙனங் கூறிப்போந்த பிரமசரியம் காலத்தாலும், குருவின் சம்பாஷணையாலும், தன் அறிவினாலும், விசாரணையாலும் அடையப்படுவது. இந்தப் பிரமசரியம் பனிரண்டு தர்மங்களா லுண்டாகின்றது. அவைகள் யோகங்கள் என்னப்படும். யோகத்தில் ஊக்கமாயிருப்பது பலங்களென்று சொல்லப்படுகின்றது. அது குருவின் உதவியாலும் பிரமத்தின் சேர்க்கையாலும் முயற்சியாலும் அடையப்படும். இத்தன்மையுள்ள சிஷ்யன் தான் சம்பாதிக்கிற எல்லாவற்றையும் தன் குருவுக்குக் கொடுத்து விட வேண்டும். குரு புத்திரனிடத்திலும் இப்படியே நடந்து கொள்ள வேண்டும். இந்தச்சிஷ்யன் உலகத்தில் எவ்வகையாலும் பெருமை, புகழ், சந்ததி விருத்திகளை அடைவான். எல்லாரும் அவனுக்குச் செல்வத்தைச் சொரிவார்கள். இந்தப் பிரமசரியத்தினாலேயே தேவர்கள் தெய்வதத்துவத்தைப் பெற்றார்கள். இப்படியாக ஸநத்ஸுஜாத முனிவர் பரமோத்கர்டைமாகிய அத்வைத பரமஞானத்தைச் சந்தேகமற உபதேசித்து விட்டுத் தமதாச்ரமம் போய்விட்டார். அதன்பின் திருதராஷ்டிர மஹாராஜன் விதுரரைச் சமீபத்தில் அழைத்துப் புத்திசாலியே! உன்னால் நான் சிறந்த ஞானோபதேசம் பெற்றேன். கவலை ஒழிந்தேன். உபல்லாவியம் போய்வந்த சஞ்சயன் என்ன சமாசாரம் சொல்வானோ என்று மதிமயங்குகிறது. யுதிஷ்டிரன் சமாதானத்தை விரும்பாமல் சண்டையையே விரும்பினானானால் கௌாவ வம்சம் முழுவதும் நாசமாய்விடும். உலகத்திலுள்ள க்ஷத்திரியர்கள் எல்லாரும் அழிவார்கள். இந்தப் பாதகம் என்னைத்தான் சேரும். அதைக் குறித்து என்மனம் தத்தளிக்கின்றது. நீ எனக்கு உலகஞானத்தைக் கூறி இந்த இராவைக் கழியச் செய் என்று கூறினான்.

 

விதுரர் - மஹாராஜாவே! நீர் இருதிறத்தாரையும் சமனாகப்பாராமல் பட்சபாதகம் செய்கிறீர். பாண்டவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்து விட்டீரானால் கவலையற்றுச் சுகமாய் ஜீவிக்கலாம். பாண்டவர்கள் தங்களுடைய பாதி ராஜ்யத்தையே விரும்புகிறார்கள். நீர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவர்கள் உயிரோடிருக்கிறவரையில் அவர்கள் பாகத்தை இந்திரனாலும் அடைய முடியாது. உமது கவலை வீண் கவலையே. யோசித்துப்பார்த்தால் உமக்கே இராஜ்யம் கிடையாது. முழுமையும் பாண்டவருடையதே. அவர்களுடைய இராஜ்யத்தை நீர் அபகரிக்க முயலுகிறீர். இதனால் உலகத்தில் பெரிய சங்கார முண்டாகும். பீமார்ஜுனர்கள் கதையையும் வில்லையும் ஏந்திக் கொண்டு யுத்தகளத்தில் வந்து நின்றால் அவர்களோடு சரியாக எதிர்த்து நிற்கிறவர்கள் உமது சைனியத்தில் ஒருவருமில்லை. காலகேய நிவாதகவசர்களை ஒருவனாக எதிர்த்து ஜயித்த அர்ஜுனனை ஜயிப்பவர் யார்? நீர் கேட்ட உலகஞானத்தைச் சொல்லுகிறேன் கேளும் என்று சொல்கிறார்.


உலகஞானம்.

 

உலகஞானமென்பது உலகத்துக்குரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுத்லாம்; ஆயினும் ஈண்டுக் கூறப்படுவது நீதிசாஸ்திரமே. இதனையே தமிழில் பொருட்பால் என்பர் பெரியார். வடமொழியில் அர்த்தம் என்பர். எனவே புருஷார்த்தம் நான்கனுள் (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) இது உலகத்துக்கு இன்றியமையாதது. அன்றியும் பொருள் இல்லாவிடில் தர்மகாமங்களெய்தப்பெறா. இம்மூன்றையும் அனுபவித்தொழியாவிடின் உலகப்பற்றறுத் தடையப்படுவதாகிய மோட்சம் அடையப்படுவதில்லை. தர்மகாமங்களுக்குச் சாதகமாய் நின்று மோட்சமார்க்கம் காட்டுவதே அர்த்த சாஸ்திரம். அதனாலேயே இந்த அர்த்தத்தைத் தர்மகாமங்களுக்கு இடையில் வைத்தார் பெரியார். தர்மத்தால் பொருள் சேரும்; அதனால் காமானுபவம் விருத்தியாகும். பொருளில்லாவிடில் அதற்காதாரமாகிய தர்மத்தைச் செய்ய முடியாது. ஆதலால் தர்மார்த்தங்கள் இரண்டும் ஒன்றுக் கொன்று சம்பந்தமுடையனவாயிருக்கின்றன. இவ்விரண்டும் கூடியே காமானுபவத்தைத்தரும். காமத்தையனுபவித்து நிராசையடைந்த மனம் பிறகு மோட்சத்தையே நாடும். ஆதலால் இம்மூன்றையும் அனுபவித் தொழித்தவனே மோட்சத்துக் குரியவனாவான். ஆதலால் அர்த்தசாத்திரமாகிய நீதிசாஸ்திரம் மோட்சத்துக்கும் ஆதாரமா யிருக்கின்றது. இக்கருத்துக்கொண்டே,


 "ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொரு ளெஞ்ஞான்றுங்
 காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
 பட்டதே யின்பம் பரனை நினைந் திம்மூன்றும்
 விட்டதே பேரின்ப வீடு.''

 

என்று பெரியார் கூறினார். ஆதலால் இந்த உலகஞானமாகிய அர்த்த சாஸ்திரத்தை அறிந்து கொள்ள வேண்டியது மனிதர்களுக்கு இன்றியமையாததொன்று. இது வடமொழியில் பிரமதேவர், வியாழபகவான், சுக்கிராசாரியார், தேவராஜன் முதலியவர்களால் விரித்துக் கூறப்பட்டது. பிரகஸ்பதிநீதி சுக்கிரநீதி என்பன உலகத்தில் பிரசித்தமானவையென்பது யாவரும் அறிந்த விஷயம். இவைகளின் சாரங்களைத் திரட்டி விதுரர் திருதராஷ்டிர மஹாராஜனுக்குக் கூறினார். ஆதலால் இது விதுரர் நீதி யெனப்படும்.

 

இந்த நீதியை ஜனங்கள் அவசியந் தெரிந்து கொள்ள வேண்டு மாகையால் யாம் இதனை வெளியிடுகின்றோம்.

 

சுயஞானத்தாலும், முயற்சியாலும், பொறுமையாலும், தர்மத்தில் நிலைத்திருப்பதினாலும் தன்வாழ்வை இழக்காமலிருக்கிறவனே புத்திசாலி என்னப்படுவான். புகழத்தக்க காரியங்களைச் செய்தலும், தோஷமானவைகளை ஒழித்தலும், பக்தியும், வணக்கமும் ஆகிய இவைகள் புத்திசாலிகளுக்கு இலக்கணங்களாம். கோபம், மகிழ்ச்சி, கர்வம், அவமரியாதை, மயக்கம், அகங்காரம் இவைகளால் எவன் தன் பெருவாழ்வை யிழவாமலிருக்கிறானோ அவன் புத்திசாலியென்று பெரியோர்களால் கருதப்படுவான். (என்றால் இக்குணங்கள் வாழ்வை அழிக்குமாதலால் இவைகளை விலக்கியிருப்பவன் புத்திசாலியென்பது கருத்து). செய்ய நினைத்திருக்கும் காரியங்களையும், தீர்மானிக்கப்பட்ட மந்திராலோசனையையும் சத்துருக்கள் அறியாத படி காப்பாற்றுகிறவனும், காரியம் செய்து முடிந்தபின் வெளிப்படுத்துகிறவனும் புத்திசாலியென்று மதிக்கப்படுகிறான். கருதப்பட்ட காரியங்கள் சீதோஷ்ணபயவிருப்பங்களாலும், வாழ்வு தாழ்வுகளாலும் கெடாமலிருக்கும் படி செய்கிறவனும் புத்திசாலியாம். ஒருவன் அறிவு ஆசையை விட்டும், தர்மார்த்தங்களை அனுசரித்தும், இக்பரங்களுக்கு விரோதமான இன்பங்களை விட்டும் இருக்கிறதானால் அவனும் புத்திசாலியாம். தன் சக்திக்குத் தக்கபடி முயற்சி செய்கிறவனும், தன் சக்திக்கு ஏற்ற காரியங்களைச் செய்கிறவனும், வியர்த்தமானவைகளை வெறுக்கிறவனும் புத்திசாலியாம். சீக்கிரத்தில் ஒன்றைத் தெரிந்து கொள்கிறவனும், பொறுமையோடு கேட்கிறவனும், ஆசையை விட்டு விவேகத்துடன் தன் கருத்தை யோசிக்கிறானும், தன்னைக் கேளாமலிருக்கும் போது பிறருடைய காரியங்களில் வீண்பிரயாசைப் படாமலிருக்கிறவனும் சிறந்த புத்திசாலியென்று கருதப்படுகிறான். அடைய முடியாதவைகளை அடைய வீணில் பிரயாசைப் படாமலிருக்கிறவனும், போனதைப் பற்றி வருந்தாம லிருக்கிறவனும், கஷ்டம் வந்த காலத்தில் புத்திமயங்காமலிருக்கிறவனும் நல்ல அறிவுள்ளவனென்று மதிக்கப்படுகிறான். ஒரு காரியத்தைத் தொடங்கி அது முடிகிறவரையில் விடா முயற்சியுடன் செய்கிறவனும், காலத்தை வீணாகக் கழிக்காமலிருக்கிறவனும், தன்னடக்கமுள்ளவனும் புத்திசாலியென்று கருதப்படுகிறான்.
 

சற்கருமங்களில் மகிழ்ச்சி யடைகிறவர்களும், தங்களுடைய சுகத்துக்கும் வாழ்வுக்கும் தகுந்தபடி காரியங்களைச் செய்கிறவர்களும், நன்மையானவைகளை வெறுக்காதவர்களுமான இவர்களும் புத்திசாலிகளாவர். பெருமையில் மகிழாதவனும், இழிவில் விசனப்படாதவனும், கங்கையில் குளிர்ச்சியாயும் கலங்காமலுமிருக்கிற மடுவைப் போன்றிருப்பவனும் புத்திசாலியாம். அரசனே! சகல பிராணிகளின் சுபாவத்தை உணர்ந்தவனும், எல்லாக் கர்மங்களின் சம்பந்தங்களையும் அறிந்தவனும், மனிதர்கள் தங்கள் எண்ணங்களை அடையக் கூடிய மார்க்கங்களை நன்றாயறிந்தவனும் புத்திசாலியாக மதிக்கப்படுகிறான். தைரியமாய்ப் பேசுகிறவனும், ககல விஷயங்களையும் நன்றாய்ப் பேசத் தெரிந்தவனும், தர்க்கமுறைகளை யறிந்தவனும், நல்ல குணத்தை யுடையவனும், சாஸ்திரங்களில் கூறப்பட்டவைகளுக்குச் சரியான பொருள் சொல்கிறவனும் புத்திசாலியாம். காரணங்களுடன் முறையாய்ப் படித்தவனும், வேதத்தை அனுசரித்து நடக்கிறவனும், நல்லோர்களைத் தவறாமல் வணங்கு கிறவனும் புத்திசாலியென்று சொல்லப்படுகிறான். வேதத்தை யுணராமலிருந்தும் செருக்குள்ளவனும், தரித்திரனாயிருந்தும் பெருமை பாராட்டுகிறவனும், பொருள் விருப்பமான தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தகுந்த காரணங்களைத் தேடுகிறவனும் மூடனெனப்படுவான். தன் காரியத்தை விட்டுப் பிறர் காரியத்தில் சம்பந்தப்படுகிறவனும், சினேகிதர்களிடத்தில் வஞ்கனையாக நடக்கிறவனும் மூடனென்று சொல்லப்படுவான். விரும்பத்தகாத பொருள்களை விரும்புகிறவனும், நியாயமாய் விரும்பத்தக்கவைகளை விலக்குகிறவனும், பலவானிடத்தில் பொறாமை கொள்கிறவனும் மூடனெனப்படுவான். தன் சத்துருவைச் சினேகிதனாகக் கருதுகிறவனும், சிநேகிதர்களைப் பகைத்து வெறுக்கிறவனும், துர்க்கர்மங்களைச் செய்கிறவனும் மூடனென்று சொல்லப்படுகிறான். தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறவனும், எல்லா விஷயங்களிலும் சந்தேகப்படுகிறவனும், சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாக நடத்துகிறவனும் மூடனாவான். பிதிர்ச்சிரார்த்தம் செய்யாதவனும், தேவாராதனை பண்ணாதவனும், நல்ல எண்ணமுள்ள சிநேகிதர்களுடன் கூடாதவனும் மூடனென்று சொல்லப்படுவான். அழைக்கப்படாத இடத்துக்குப் போகிறவனும், கேட்கப்படாமலிருக்கும் போதே அதிகமாகப் பேசுகிறவனும், நம்பத்தகாதவர்களை நம்புகிறவனும் மூடனெனப்படுவான். தான் குற்றமுள்ளவனா யிருக்கையில் பிறர்மேற் குற்றம் கூறுகிறவனும், பலமில்லாதவனாயிருந்தும் கோபத்துக்கு இடங் கொடுக்கிறவனும் பெரியமூடனென்று எண்ணப்படுகிறான். தன்பலத்தை யறியாமல் தர்மார்த்தங்களை விலக்குகிறவனும், செல்வத்தின் நிமித்தம் கடினமார்க்கத்தை எண்ணுகிறவனும், சரியான மார்க்கத்தை நாடாதவனும் மூடனாவான்.

 

அரசனே! தண்டிக்கத் தகாதவர்களைத் தண்டிக்கிறவனும், அறிவில்லாதவர்களை வணங்குகிறவனும், லோபியினிடத்தில் காத்துக் கொண்டிருக்கிறவனும் அற்பபுத்தியுள்ளவனென்று கூறப்படுவான். திரண்ட செல்வத்தையும், நல்ல வாழ்வையும், நிறைந்த கல்வியையும் உடையவனாய் அகந்தையில்லாதவன் புத்திமானாவான். திரண்ட செல்வமுடையவனாயிருந்தும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குப் பொருளைக் கொடாமல் தானே உண்டு உடுத்து மகிழ்கிறவனும் மூடனாவான். ஒரு மனிதன் குற்றம் செய்தால் அநேகர் அதன் பலனை அனுபவிக்கிறார்கள்; ஆயினும் குற்றம் செய்தவனே பாபத்தால் பீடிக்கப்படுகிறான். மற்றவர்கள் துன்பத்தினின்று தப்பித்துக் கொள்கிறார்கள். வில்லாளி ஒரு அம்பை யெய்தால் அதனால் ஒருவனைக் கொல்லவும் கூடும், கொல்லாமலிருக்கவும் கூடும். ஒரு புத்தியுள்ள மனிதன் தன் புத்தியைப் பிரயோகித்து ஒரு இராஜ்யத்தை இராஜனோடுகூட நாசம் பண்ணிவிடுவான். ஏகமான அறிவினாலே நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, சிநேகிதன், பலவான், பகைவன் ஆகிய மூவரைச் சாமதான பேத தண்டங்களால் அடக்கி, ஐம்புலன்களை வென்று, சந்தி, விக்கிரகமாதிஷட்வர்க்கங்களை உணர்ந்து, ஸ்திரீகள், சூது, வேட்டை, கொடுஞ்சொல், குடி, கொடுந்தண்டனை, வீண்செலவு ஆகிய ஏழையும் விலக்கிச் சுகிக்க வேண்டும்,

 

விஷமும் ஆயுதமும் ஒருவனைக் கொல்லும். துஷ்ட மந்திராலோசனையானது ஒரு இராஜ்யத்தை அரசன் குடிகளுடன் அழித்து விடும். செல்வத்தை ஒருவனாகவே அனுபவிக்க எண்ணக்கூடாது. ஒன்றியாகப் பிரயாணம் செய்யக்கூடாது. பலர் தூங்குகிற இடத்தில் ஒருவன் விழித்துக்டிருக்கக்கூடாது. மன்னிப்பதில் ஒரே ஒரு குறைவு இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் மன்னிக்கிறவனைப் பலமில்லாதவனென்று எல்லாரும் எண்ணுவார்கள். ஆயினும் அதைக் குறைவாக நினைக்கக் கூடாது. பொறுமையானது பரமசக்தியையுடையது. பொறுமை பலவீனர்களுக்குத் தர்மம்; பல வான்களுக்கு ஆபரணமாம். பொறுமை எல்லாரையும் வசப்படுத்துகிறது. பொறுமையால் ஆகாதது என்ன உண்டு? பொறுமையாகிய வாள் உடையவனைத் துஷ்டர்கள் என்ன செய்வார்கள்? புல்லில்லா ததரையில் விழுந்த நெருப்புத் தானாகவே அணைந்து போகிறது. பொறுமையில்லாதவன் பல பாதகஙகளால் அசுத்தனாகிறான். நீதியானது சிறந்த நன்மைகளில் ஒன்று. பொறுமையானது மேலான சமாதானம், ஞானமே மேலான திருப்தி. தயவு ஒன்றே மேலான பாக்கியம். யுத்தத்தில் சக்தியில்லாத அரசன், ஸ்தலயாத்திரை செய்யாத பிராமணன் இவ்விருவரையும் வளைக்குள்ளிருக்கிற பிராணிகளைப் பாம்பு விழுங்குகிறது போலப் பூமி விழுங்கி விடுகிறது. கொடுஞ்சொற் கூறாமலிருத்தல், துஷ்டர்களை அலக்ஷியம் செய்தல் இவ்விரண்டாலும் ஒருவன் உலகத்தில் புகழ்ச்சி பெறுவான்.

 

அரசனே! இப்போது சொல்லப்படுகிறவர்கள் தம் கருத்தை அடைதில்லை. ஒரு ஸ்திரீ ஒரு மனிதனைத் தான் மட்டும் நேசிக்கிறாள். அந்தமனிதனை மற்றப் பெண்களும் நேசிக்கிறார்கள். ஒருவன் மற்றொருவனை வணங்குகிறான். அவன் மற்றவர்களால் வணங்கப்படுகிறான். தரித்திரனுடைய ஆசை, சக்தியற்றவனுடைய கோபம் இவ்விரண்டும் முள்ளைப் போலச் சரீரத்தை வருத்தும். முயற்சியில்லாமலிருக்கிற கிருகஸ்தன், தந்திரமுள்ள யாசகன் இவ்விருவரும் ஒருபோதும் வாழ்வதில்லை. பொறுமையுடைய பலவான், தர்மமுள்ள ஏழையிவர்கள் சொர்க்கத்தை விட மேலான பதவியில் வசிப்பார்கள். நன்மார்க்கங்களில் சம்பாதித்த பொருளைப் பாத்திரமல்லாதவர்களுக்குக் கொடுப்பதும், பாத்திரமானவர்களை விலக்குவதுமாகிய இவ்விரண்டும் பெருங்குற்றமாம். தானங் கொடாத தனவான், கர்வமுள்ளயாசகன் இவ்விருவரும் பாரத்தைக் கழுத்தில் கட்டிக் கொண்டு நீரில் விழுந்தவராவர். அரசனே! யோகத்தை நிறைவேற்றின யோகி, சண்டையில் எதிர் முகமாய் நின்று இறந்த போர்வீரன் இவ்விருவரும் சூரிய மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு செல்வார்கள்.

 

பாரதோத்தமரே! வேதமுணர்ந்தவர்கள், "மனிதருடைய கருத்து உத்தமம், மத்திமம், அதமம் என்று மூவகைப்படும்; அதனால் மனிதர்களும் உத்தமர், மத்திமர், அதமர் என்று மூவகைப்படுவார்கள்'' என்று சொல்கிறார்கள். அவர்கள் தங்களுக் கேற்ற தொழிலைச் செய்ய வேண்டும். மனைவி, அடிமை, புத்திரன் இம்மூவரும் திரவியத்தைச் சொந்தமாக அடையத்தக்கவர்களல்ல. அவர்கள் என்ன சம்பாதித்த போதிலும் அது அவர்களுடைய எஜமானர்களுக்குச் சொந்தம். பிறர் சொத்தைத் திருடுதல், அன்னியன் மனைவியைப் பலாத்காரம் செய்தல், சிநேகபேதஞ் செய்தலாகிய இம் மூன்றும் பெரியபாபத்தை உண்டாக்கும். தன்னை அனுசரித்திருக்கிறவன், தன்னிடம் அடைக்கலம் புகுந்தவன், தன் வீட்டுக்கு வந்தவன் இம்மூவரையும் எப்படிப்பட்ட ஆபத்துக்காலத்திலேயும் கைவிடக்கூடாது. சாத்துருவைத் துன்பத்தினின்றும் விடுவித்தல், இராஜ்யத்தை அடைதல், புத்திரனை அடைதல் இவை மூன்றும் ஒத்தவை. அரசன் பலவானாக இருந்தாலும் சிற்றறிவுள்ளவன், காலதாமதம் செய்கிறவன், சோம்பேறி, முகஸ்துதி பேசுகிறவன் இந்த நாலுபேர்களுடன் ஆலோசனை செய்யக்கூடாது.

 

அரசனே! சம்பத்தை அடைந்து கிருகஸ்த தர்மத்திலிருக்கிறவன் இரத்த சம்பந்தமான பந்துக்கள், உயர்ந்த குடியிற் பிறந்து தரித்திரம் அடைந்தவர், ஏழையான சிநேகிதர்கள், சக்தியில்லாத சகோதரிகள் ஆகிய இந்த நால் வகையாரையும் கைவிடாமலிருக்க வேண்டும்.

 

தேவாரஜனாகிய இந்திரன் தன் குருவாகிய பிரகஸ்பதி பகவானை நோக்கி வினவிய போது அவர், தேவநிர்ணயம், பெரியோர் பிரபாவம், கற்றவருடைய அடக்கம், பாவிகளின் நாசம் இந்தநாலும் ஒரே நாளில் பலன் தருமென்று கூறினார். அக்கினி ஹோத்திரம், மௌன விரதம், யாகம், படிப்புஇந்த நான்கும் பயத்தை நீக்குவனவாம். இவைகள் சரியாய்ச் செய்யப்படா விட்டால் பயத்தை உண்டாக்கும். அரசனே! மாதா, பிதா, தெய்வம், ஆத்மா, குரு, இவ்வைவரும் நெருப்பை யொப்பர். ஆதலால் இந்த ஐந்து நெருப்புக்களையும் மரியாதை செய்து வணங்கவேண்டும். கடவுள், பிதிர், யாசகர், திதி இந்தால்வரையும் வணங்குகிறவன் இவ்வுலகில் மேலான புகழை அடைவான். சிநேகிதர், பகைவர், உபேட்சையா யிருப்பவர்கள், அடுத்திருக்கிறவர்கள், சம்ரக்ஷணை செய்வதற்குரியவர்கள் இவ்வைவரும் எங்கே போனாலும் கூடவே ஓரத்தக்கவர்கள்.

 

மனிதருடைய ஐம்புலன்களும் இளையுள்ளனவா யிருக்கின்றன. மனிதனுடைய அறிவு துளையுள்ள தோற்பையிலிருந்து தண்ணீர் ஓடுகிறது போல ஓடிக் கொண்டே யிருக்கிறது. நித்திரை, சோம்பல், பயம், கோபம், மயக்கம், தாமஸம் இவ்வாறையும் ஐசுவரியத்தை விரும்புகிறவன் நீக்கிவிட வேண்டும். வேதத்துக்கு வியாக்கியானம் செய்யத் தெரியாத குரு, படியாத குரு, காப்பாற்றச் சக்தியில்லாத அரசன், ஒவ்வாத விஷயங்களைப் பேசுகிற மனைவி, வெளியில் போக விரும்பாத இடையன், கிராமத்தை விட்டுப் போக விரும்புகிற அம்பட்டன் இவ்வறுவரும் கடலில் உடைந்து போன கப்பலைப் போல விடத்தக்கவர்கள். சத்தியம், தர்மம், முயற்சி, உபகாரம், பொறுமை, சாந்தம் இந்த ஆறு குணங்களையும் மனிதன் ஒருபோதும் விடக்கூடாது. உத்தியோகம், பயிர், மனைவி, கல்வி, பசு, சூத்திரனுடைய செல்வம் இவ்வாறும் ஒரு க்ஷணம் அலட்சியம் செய்தாலும் உடனே அழியும். பின் சொல்லப் போகிற அறுவரும் தங்கள் உபகாரிகளை மறப்பார்கள். கற்றறிந்த சிஷ்யன் தன் குருதிந்து விடுவான், விவாகம் செய்யப் பெற்றவன் தன் மாதாவை மறந்து விடுவான். தன் எண்ணம் நிறைவேறப் பெற்றவன் ஸ்திரீயை மறந்து விடுவான். காரியசித்தி பெற்றவன் தனக்கு உதவி செய்தவரை மறப்பான். நதியைக் கடந்தவன் ஓடத்தை மறப்பான். வியாதி நீங்கப் பெற்றவன் தனக்கு வைத்தியம் செய்தவரை மறந்து விடுவான் என்றறிக. சுகம், கடனில்லாமை, மனையிலே வசித்தல், நல்லவர்களுடைய சிநேகம், நிச்சயமான ஜீவனோபாயமுடைமை, அச்சமற்று வாழ்தல் இந்த ஆறும் எப்போதும் மனிதர்களுக்குச் சந்தோஷத்தைத் தருவனவாம். பகையுடைமை, பொறாமை, அதிருப்தி, சீக்கிரம் கோபம் கொள்ளுதல், எப்போதும் சந்தேகம், பிறர்பொருளால் ஜீவித்தல் இந்த ஆறும் எப்போதும் துக்கத்தையே தரும். ஐசுவரியத்தைச் சேகரித்தல், தடைபடாத சுகம், இனிய வசனமும் அன்புமுள்ள மனைவி, வணக்கமுள்ள புத்திரன், இலாபம் பெறத்தக்க அறிவு இவ்வாறும் எப்போதும் மகிழ்ச்சியைத் தருவனவாம். காமம், கோபம், துக்கம், புத்திமயக்கம், கர்வம், அகங்காரம் இவ்வாறையும் ஜயித்துப் புலன் அடங்கியிருக்கிறவன் ஒரு போதும் பாபத்தைச் செய்யமாட்டான். ஆகையால் அவன் ஒருபோதும் துக்கத்தை அடைகிறதில்லை. ஜாக்கிரதையில்லாதவனாலே திருடன் ஜீவிக்கிறான். வியாதிக்காரர்களாலே வைத்தியர்கள் ஜீவிக்கிறார்கள். காமம் கொண்டவர்களாலே ஸ்திரீகள் ஜீவிக்கிறார்கள். யாகம் செய்கிறவர்களாலே குரு ஜீவிக்கிறார். சச்சரவு செய்கிறவர்களாலே அரசன் ஜீவிக்கிறான். படிப்பில்லாதவர்களாலே படித்தவர்கள் ஜீவிக்கிறார்கள். ஸ்திரீகள், சூதாட்டம், வேட்டை, குடி, கொடும் சொற்கூறல், கொடுந்தண்டனை, பொருளைக் கெட்ட வழியில் உபயோகித்தல் இவ்வேழும் அரசனையும் அழிக்கும். ஆதலால் அரசனாயிருப்பவன் இவை துக்கத்தைத் தருவனவென்று அறிந்து இவைகளை விலக்கி விடவேண்டும். உத்தம பிராமணரைப் பகைத்தல், அவர்கள் பொருளைக் கவர்தல், அவர்களுடன் சண்டையிடுதல், அப்பிராமணரைக் கொலை செய்தல், அவர்களைத் தூஷிப்பது, பிராமணர் புகழைக் கேட்பதால் துக்கப்படுதல், சடங்குகள் செய்கையில் பிராமணர்களை மறப்பது, பிராமணர்கள் எதையாவது கேட்கும் போது அவர்களைப் பகைத்தல் இவ்வெட்டும் ஒருவனுடைய சீக்கிரமான அழிவைத் தெரிவிப்பவைகளாம். சினேகிதர்களைச் சந்தித்தல், திரண்ட பொருளைச் சம்பாதித்தல், தன் புத்திரனைத் தழுவிக் கொள்ளுதல், பந்துக்களுடன் சேர்ந்திருத்தல், சரியான காலத்தில் சினேகிதர்களுடன் சம்பாஷித்தல், தன்னைச் சேர்ந்தவர்களால் மதிக்கப்படுதல், சபையில் மரியாதை பெறுதல், முன் எண்ணினதைப் பெறுதல் இவ்வெட்டும் சுகத்தின் சாரமாம். ஆகையால் இவைகள் அடையத்தக்கன. ஞானம், உயர்பிறப்பு, தன்னடக்கம், கல்வி, சாமர்த்தியம், மிதபாஷணம், சக்திக்குத் தக்கபடி கொடுத்தல், நன்றியறிவு இவ்வெட்டும் மனிதனுக்கு மகிமையை உண்டாக்குவனவாம்.

 

அரசனே! ஆத்ம சரீர சம்பந்தங்களை யறிந்த கல்விமான் உண்மையாகவே ஞானியாவான். மது பானத்தால் மயங்கினவன், கவனத் தாழ்ச்சியுள்ளவன், துக்கப்படுகிறவன், களைத்தவன், கோபமுள்ளவன், பசித்திருக்கிறவன், அவசரப்படுகிறவன், பேராசையுள்ளவன், பயமடைந்திருக்கிறவன், காமி இந்தப் பத்துப்பேரும் தர்மத்தை அறியமாட்டார்கள். ஆகையால் புத்தியுள்ளவன் இந்தப் பத்துப் பேர்களுடனும் சேரக்கூடாது. இது பூர்வகாலத்தில் அசுரராஜனான பிரகலாதனுக்கும் சுதன்வாவுக்கும் நடந்த சரித்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சற்பாத்திரத்தில் தானம் கொடுப்பவனும், காமத்தையும் கோபத்தையும் விட்டவனும், பகுத்தறிவுள்ளவனும், படித்தவனும், சுறுசுறுப்புள்ளவனுமான அரசனை மனிதர்கள் எல்லாரும் பிரமாணமாக மதிக்கிறார்கள். பிறரை எப்படி நம்புகிறதென்பதையும், குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டவனைத் தண்டனை செய்வதையும், எப்பொழுது இரக்கம் காட்டவேண்டு மென்பதையும் அறிந்த அரசன் பெருவாழ்வு பெறுவான். அற்பப்பகைவரைக் கூட அலட்சியம் பண்ணாதவனும், பகைவரிடத்தில் புத்திசாலித்தனமாய் நடந்து கொள்கிறவனும், ஆசையுடன் சமயத்தை எதிர்பார்த்திருக்கிறவனும், தன்னைக் காட்டிலும் பலமுள்ளவர்களிடத்தில் பகை கொள்ள விரும்பாதவனும், சமயம் வந்தபோது தன் பராக்கிரமத்தைக் காட்டுகிறவனும் புத்திசாலியென்று மதிக்கப்படுவான். துன்பமடைந்திருக்கிற போது கலங்காமலிருக்கிறவனும், புத்தி ஒருமைப்பட்டு முயற்சி செய்கிறவனும், துன்பம் வந்த போது பொறுமையுடனிருக்கிறவனும், நிச்சயமாகவே மனிதர்களுக்குள் சிரேஷ்டமானவன். அவன் தன் சத்துருக்களைச் நிச்சயமாகவே ஜயிப்பான். வீணாக வீட்டை விட்டு வெளியில் போய் வசியாதவனும், பாபிகளுடன் சிநேகம் செய்யாதவனும், அகங்கார மில்லாதவனும், திருடாதவனும், நன்றி மறவாதவனும், குடிப்பதை விரும்பாதவனும் ஆகிய இவர்கள் எப்போதும் சந்தோஷமாயிருப்பார்கள். கேட் டபோது உண்மையைச் சொல்கிறவனும், சிநேகிதர்களின் நிமித்தமாகக் கூடச் சண்டையிடாதவனும், தான் தூஷிக்கப்பட்ட போது கூடக் கோபமடையாதவனும், புத்திசாலியென்று கருதப்படுவான். பொறாமையின்றி எல்லாரிடத்திலும் பிரியமாயிருக்கிறவனும், பலமில்லாதவனாயிருக்கும் போது பிறருடன் வாதாடாதவனும், அகந்தையில்லாமல் பேசுகிறவனும், சண்டையில் மன்னிக்கிறவனும் எல்லாராலும் எவ்விடங்களிலும் புகழப்படுவான். குரூரத் தோற்றமில்லாதவனும், பிறர் புகழை வெறுத்துத் தன்னைப் புகழாதவனும், தன்னை மறந்து பிறரைக் கொடுஞ் சொல் கூறாதவனும், எல்லாராலும் நேசிக்கப்படுவான். பழம் பகையைப் பாராட்டாதவனும், அகந்தையும் அதிக வணக்கமுமில்லாமலிருப்பவனும், கஷ்டம் வந்த போது கூட அக்கிரமம் செய்யாமலிருப்பவனுமான ஒருவனைப் பெரியோர்கள் நல்ல நடக்கையுள்ளவனென்று மதிக்கிறார்கள். தன் வாழ்வில் மகிழாதவனும், பிறர் துன்பம் கண்டு களியாதவனும், தானம் கொடுத்த பின் வருந்தாதவனும், நல்ல நடக்கையுள்ளவனென்றும் நல்ல குணமுள்ளவனென்றும் புகழப்படுவான். பல தேசங்களின் வழக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவனும், பலஜாதியாருடைய பாஷையைக் கற்க விரும்புகிறவனும், பல ஜனங்களின் கொள்கைகளை உணர விரும்புகிறவனும், உயர்வு தாழ்வுகளை அறிகிறவனும் எவ்விடத்துக்குப் போனாலும் அங்கெல்லாம் நல்லோர்களாற் புகழப்படுவான். கெருவம், பொய், அகந்தை, பாபச்செய்கை, இராஜதுரோகம், மாறுபாடான நடக்கை, பலபேர் பகை, குடித்தல், பித்தன், துஷ்டன் இவர்கள்ளுடன் சண்டையிடுதல் இவைகளை விலக்கியிருக்கிறவன் தன் குலத்துக்குள் மேன்மை பெற்றிருப்பான். மனதை அடக்கப் பழகினவனும், பரிசுத்தனும், நல்லொழுக்கமுள்ளவனும், தேவாராதனை, பிராயச்சித்தம், பொதுவான கர்மானுஷ்டானம் இவைகளைத் தினந்தோறும் செய்து கொண்டு வருகிறவனும் ஆகிய இவர்களுக்குத் தேவர்கள் சகல வாழ்வுகளையும் கொடுப்பார்கள். கற்றறிந்த பெரியோரால் நன்றாய் ஆராயப்பட்ட செய்கையைச் செய்தல், நன்றாய்ப் பரிசோதித்துத் தனக்குச் சரியான குலத்தில் விவாகசம்பந்தம் செய்தல், தாழ்ந்தவர்களோடு சம்பந்தம் செய்யாமை, சற்பாத்திரமானவர்களைத் தன்னிடத்தில் வைத்திருப்பது, தனக்குச் சமானமானவர்களுடன் சம்பாஷித்தல், அவர்களுடன் பழகுதல், அவர்களுடன் சினேகிதம் செய்தல், இவைகள் தேவகிருபைக்குப் பாத்திரமானவைகளாம். தன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாருக்கும் பகுத்துக் கொடுத்தபின் மிதமாய்ப் புசிப்பவன், அதிகமாக வேலை செய்தபின் கொஞ்சநேரம் தூங்குகிறவன், பகைவர்கள் கேட்டாலும் கொடுப்பவன், ஆத்மநியமன முள்ளவன், இவர்கள் ஒருபோதும் துக்கப்பட மாட்டார்கள். யோசனையைப் பத்திரமாய்க் காப்பவன், ஒழுங்காய்ப் பழக்கத்துக்குக் கொண்டு வருகிறவன், தன் நடக்கைகளைக் கெட்ட மனிதர்கள் அறியாதபடி நடக்கிறவன், இவர்கள் எல்லாக் காரியங்களிலும் சித்தி பெறுவார்கள். பிராணிகளுடைய துன்பத்தை நீக்க விரும்புகிறவனும், உண்மையுள்ளவனும், பெருந்தன்மையுள்ளவனும், தர்மசாலியும், சுத்தமான எண்ணமுள்ளவனும் உயர்ந்த சுரங்கத்தினின்றும் எடுக்கப்பட்ட இரத்தினத்தைப் போலத் தன் சுற்றத்தார்க்கு நடுவில் பிரகாசிப்பான். தன் குற்றத்தைப் பிறர் அறியாமல் இருந்தாலும் அதைக் குறித்து நாணுகிறவனும் எல்லாருக்குள்ளும் சிறந்தவனாக மதிக்கப்படுவான். பரிசுத்தமான இருதயமுள்ளவனும், மிகுந்த சக்தியுள்ளனும், பகுத்தறிவுள்ளவனும் தன் காந்தியால் சூரியனைப் போலப் பிரகாசிப்பான். அரசனே! பாண்டுராஜன் பிராமணருடைய சாபத்தால் வனத்தில் இறந்தான். அவனுக்கு இந்திரனைப் போல ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களை நீர் வளர்த்துச் சகல கல்விகளையும் கற்பித்தீர். அவர்கள் உமது கட்டளைக்கு அடங்கி நடந்தார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பாதிராஜ்யத்தை அவர்களுக்குக் கொடுத்து விடும். உமது புத்திசர்களுடன் நீர் சுகமாயிரும். மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் நம்பிக்கையும் நட்பும் ஏற்படும் என்று கூறினான்.

 

திருதராஷ்டிர மஹாராஜன் சொல்லுகிறார்; ஏ குழந்தாய் விதுரா! எங்களுக்குள் நீ ஒருவன் தான் தர்மார்த்தங்களை உணர்ந்தவன். எனக்கும் அவர்களுக்கும் நன்மை யுண்டாவதான லிஷயத்தை நீ சொல் என்று கேட்டான்.

 

விதுரர் - அவமானத்தை விரும்பாமலிருக்கிறவன் ஒருவன் தன்னைக் கேளாமலிருக்கும் போது சொல்லக்கூடாது. கேட்டபின் தான் சொல்லப் போவது ஒருவனுக்கு வெறுக்கத்தக்கதாயிருந்தாலும், நல்லதாயிருந்தாலும், கெட்டதாயிருந்தாலும் உண்மையைச் சொல்லவேண்டும். இருவருக்கும் நன்மையானதையே சொல்கிறேன். நீதியில்லாததும், சரியில்லாததுமானதில் வெற்றியடைய மனதைச் செல்ல விடாதேயும்; சிறந்ததல்லாததும், ஒழுங்கற்றதுமான காரியங்களைச் செய்து விட்டுச், சித்தியடையாமையால் அதைக் குறித்து வருத்தப்படக் கூடாது. ஒருகாரியத்தைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னாலேயே செய்கிறவனுடைய சாமர்த்தியம். அந்தக் காரியத்தின் சுபாவம், அதைப்பற்றிய அபிப்பிராயம், அதன் பிரயோசனம் இவைகளை யோசித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லாக்காரியங்களும் இவைகளிலேயே நிலைபெறுகின்றன.

 

கையால் இவைகளை யோசித்த பிறகுதான் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். திடீரென்று ஒன்றும் செய்யக்கூடாது. ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குகிறவன் முதலில் தன்னுடைய சக்தி, காரியத்தின் சுபாவம், பல சிததி இவைகளை யோசித்துப் பின் அதைச் செய்யவாவது விடவாவது வேண்டும். இராஜ்யத்தின் அளவு, இலாபம், நஷ்டம், பொக்கிஷம், குடிகள், தண்டனை இவைகளை அறியாத அரசன் தன் இராஜ்யத்தை நெடுங்காலம் வைத்திருக்க மாட்டான். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட தருமாதருமங்களுக்குரிய அறிவாதியவைகளை யுடையவன் தன் இராஜ்யத்தில் நெடுங்காலம் நிலைபெற்றிருப்பான். அரசன் இராஜ்யம் தன்னுடையதென்று நினைத்துக் கொண்டு ஒழுங்கீனமாய் நடக்கக்கூடாது. ஏனென்றால் மூப்பானது அழகை அழிப்பது போலக் கொடுங்கோன்மை அரசனுடைய வாழ்வை அழித்துவிடும். ஒரு மீன் தூண்டிலில் கோககப்பட்ட மாமிசத்தை விழுங்குகிறது. அந்த மாமிசத்தின் நிலைமையையாவது அதனாலுண்டாகும் பயனையாவது யோசிப்ப தில்லை தன்க்ஷேமத்தை விரும்புகிறவன் எதை யெடுத்துக் கொள்ள வேண்டுமோ அதையே விரும்பவேண்டும். அப்படி எடுத்துக் கொண்டதும் ஜீரணிக்கவேண்டும். அப்படிச் செய்தால் க்ஷேமத்தை அடையலாம். பழுக்காதகாய்களை மரத்திலிருந்து பறிக்கிறவன் அதனுடைய இரசத்தை அனுபவிப்பதில்லை. அதன் விரையையும் நாசம் பண்ணுகிறான். சரியான காலத்தில் நன்றாய்ப் பழுத்த பழத்தைப் பறிக்கிறவன் அதன் இரசத்தை அனுபவிக்கிறதும் தவிர மேலே பழங்களை விருத்தி செய்வதற்குரிய விரைகளையும் அடைகிறான். தேனீயானது புஷ்பத்தைக் கெடுக்காமல் அதன் தேனை மாத்திரம் குடிப்பது போல அரசனும் குடிகளை வருத்தப்படுத்தாமல் வரிப்பணத்தை வாங்கவேண்டும். பூஞ்செடியை வேருடன் பறியாமல் அதன் புஷ்பத்தை மாத்திரம் பறித்துக் கொள்ள வேண்டும். கறி வியாபாரம் செய்கிறவர்களைப் போல் வேருடன் பறிக்கக்கூடாது. இதைச் செய்தால் நமக்கு என்ன நேரிடும்? செய்யாவிட்டால் என்ன வரும்? என்பதை நன்றாய் யோசித்துக் கொண்டபின் ஒருவன் அந்தக் காரியத்தைச் செய்யவாவது விடவாவது வேண்டும். மனிதப் பிரயத்தனத்தால் பயன்படாதென்று தெரியவருகிறதை ஒரு போதும் செய்யக்கூடாது. ஆண்மையில்லாத புருஷனை ஒரு பெண்தனக்கு நாயகனாக விரும்பாமலிருக்கிறது போலக் கோபமுள்ளவனும் தயவீல்லாதவனுமான ஒருவனை ஜனங்கள் தங்களுக்கு அரசனாகக் கொள்ள விரும்ப மாட்டார்கள். சிறிய முயற்சியால் பெரிய லாபம் வருவதாயிருந்தால் புத்திசாலியானவன் உடனே அதைச் செய்ய வேண்டும். தாமதிக்கக் கூடாது. எந்த அரசன் உண்மையுள்ளவனாயும், எல்லாரிடத்தும் அன்புள்ளவனாயும் இருக்கிறானோ அவன் சும்மா இருந்தாலும் பிரஜைகள் அவனை நேசிப்பார்கள். மரம் கனி கொடாததாயிருந்தாலும் நிரம்பப் பூத்திருக்க வேண்டும். கனி கொடுப்பதாயிருந்தாலும் தன்மேல் ஏற முடியாததா யிருக்க வேண்டும். பழுக்காமலிருந்தாலும் பழுத்திருப்பது போலத் தோன்ற வேண்டும் இவைகளைப் போலிருக்கிற அரசன் ஒரு போதும் கெடமாட்டான்.

 

மனம், வார்த்தை, கண்கள், செய்கை ஆகிய இந்த நாலுவகையாலும் எல்லாரையும் பிரியப் படுத்துகிறவனை ஜனங்கள் எப்போதும் நேசிக்கிறார்கள். மிருகங்களை வேட்டையாடுகிற வேடன் அவைகளைப் பயமுறுத்துகிறது போல எல்லாருக்கும் அரசன், கடல் சூழ்ந்த பூமி முழுமையும் ஜயித்த போதிலும், தன்நிலை கையினின்றும் நழுவி விடுவான். பெருங்காற்றானது மேகங்களைச் சிதற அடிக்கிறது போலத் துற்செய்கையுள்ளவன் தன் பிதிரார்ஜித சொத்துக்களைத் தானே போக்கடித்துக் கொள்கிறான். நெடுங்காலமாக மனிதர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிற தருமங்களைத் தவறாமல் கைப்பற்றிக் கொண்டு நடக்கிறவனுக்குப் பூமியானது ஐசுவரியத்தையும் பெருவாழ்வையும் கொடுக்கிறது. தருமத்தையும் நீதியையும் கைவிட்டு விடுகிறவனை, நெருப்பானது தோலைத் தகிக்கிறது போலப் பூமியானது தரித்திரத்துக் குள்ளாக்கி வருத்துகிறது. பகை மன்னருடைய நாட்டை வருத்துகிறதை விடத் தன் நாட்டைப் பாதுகாப்பது நல்லது. தருமமாகவே இராஜ்யத்தை அடைய வேண்டும்; தருமமாகவே பரிபாலிக்க வேண்டும். தருமத்தை ஆதாரமாகவுடைய வாழ்வு ஒரு போதும் தாழ்வடைவதில்லை. உடையவனும் தன் வாழ்வை இழந்து விடமாட்டான். பைத்தியங் கொண்டவன் கூவுகிறதிலும், குழந்தைகளின் மழலைச் சொற்களிலும் இன்பம் காண்பது போலவும் கல்லிலிருந்து தங்கத்தை எடுப்பது போலவும் உண்மையைக் கிரகிக்க வேண்டும். பயிர்த்தொழில் செய்கிறவன் வயல்களிலிருந்து தானியங்களைச் சேகரிப்பது போலப் புத்திசாலியானவன் நல்ல ஒழுக்கங்களையும், நல்ல வசனங்களையும் நாலாபக்கங்களிலிருந்தும் தெரிந்து கொள்ள வேண்டும். பசுக்கள் மணத்தால் பொருள்களை யறிகின்றன. வேதியர்கள் வேதத்தால் அறிகிறார்கள். அரசர்கள் தூதர்களால் அறிகிறார்கள். மற்றவர்கள் கண்களால் காண்கிறார்கள். பாற் கறக்க முடியாமலிருக்கிற பசு மிகவும் வருத்தப்படுகிறது. எளிதாகக்கறக்கக் கூடிய பசு வருந்துகிற தில்லை. சுடவேண்டாமல் வளைகிற பொருள்கள் சுடப்படுகிறதில்லை. எளிதில் வளையக் கூடிய கழிகள் பலாத்காரத்தால் கஷ்டப்படுத்தி வளைக்கப்படுகிறதில்லை. புத்திசாலியானவன் இப்படித் தன்னை விடப் பலசாலியான அரசனுக்கு வணங்கியிருக்க வேண்டும். பலசாலிக்கு
முன் வணங்கியிருக்கிறவன் இந்திரனையே வணங்குகிறவனாகிறான். ஜீவப்பிராணிகள் மழையால் ஜீவிக்கின்றன. ஸ்திரீகள் தங்களைக் காப்பாற்றுகிற கணவர்களால் பிரகாசிக்கிறார்கள். பிராமணர்கள் வேதத்தால் விளங்குகிறார்கள். தருமம் சத்தியத்தால் காக்கப்படுகிறது. உபயோகப்படுத்துவதார் கல்வி விருத்தியாகின்றது. சரீர சுகத்தால் அழகு பிரகாசிக்கிறது. உயகுலம் நல்ல ஒழுக்கத்தால் விளங்குகிறது. தானியம் அளவையால் பரிபாலிக்கப்படுகின்றது. குதிரை பழக்கத்தால் சிறப்படைகிறது. இடைவிடாத கவனிப்பினால் பசு மேன்மையடைகின்றது. கந்தை வஸ்திரத்தினால் ஸ்திரீகள் தாழ்வடைகிறது போல இழிகுலமானது கெட்ட நடக்கையால் வருவதே. இழிந்த குலத்தில் பிறந்தவர்களாகுலும் நல்ல நடக்கை யுள்ளவர்களா யிருந்தால் எல்லாராலும் மதிக்கப்படுவார்கள்.

 

பிறருடைய செல்வம், அழகு, வல்லமை, உயர்குல வாழ்வு, அதிர்ஷ்டம், பெருமை இவைகளைக் கண்டு பொறாமை அடைகிறவன் தீராத வியாதி கொண்டவன போல வருந்துகிறான். கெட்ட செய்கைகளைச் செய்வதற்கு அஞ்சுகிறவனும், நல்ல செய்கைகளை விடுகிறதற்குப் பயப்படுகிறவனும், தான் உத்தேசித்த காரியங்களை அவை முடிகிறதற்கு முன் வெளியிடப் பயப்படுகிறவனும் ஒருபோதும் துக்கமடைய மாட்டான். அற்ப புத்தியுள்ளவர்கள் கல்வியாலும், செல்வத்தாலும், துணை வலியாலும் இறுமாப்பு அடைகிறார்கள். நல்லவர் அவர்களைத் தடுத்தாலும் கவனிக்கமாட்டார்கள். தாமிஷ்டர்கள் தம்மிடம் வந்து ஏதாவது உதவி கேட்டால் அறிவீனர்கள் அற்ப உதவியைச் செய்து விட்டுத் தங்களை மஹாதர்மிஷ்டர்களாகவே எண்ணிக் கொண்டு இறுமாப்பு அடைவார்கள். உலகமெல்லாம் தங்களை அதர்மிகள் என்று இகழ்வதை அவர்கள் அறிவதில்லை. உண்மையில் நீதிமான்களுக்கு நீதிமான்களே உதவியாவார்கள். இந்திரிய நிக்கிரகம் செய்த மஹாத்மாக்களுக்கும், மஹாதுஷ்டர்களுக்கும் கூடத் தர்மிஷ்டர்களே உதவியாவார்கள். துஷ்டர்கள் நீதிமான்களுக்கு ஒருபோதும் ஆதரவாவதில்லை. உயர்ந்த ஆடையால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறவர்கள் ஒரு சபையை மேற்கொள்கிறார்கள். பசுவையுடையவன் இனிய பதார்த்தங்களை உண்பதை வெல்கிறான். வாகனத்தையுடையவன் வழியை வெல்கிறான். நல்ல நடக்கையை யுடையவன் எல்லாவற்றையும் வெல்கிறான். நல்லொழுக்கமெ மனிதனுக்குச் சாரமாயுள்ளது. அதை இழந்தவன் செல்வத்தையும் நண்பர்களையும் இழக்கிறான். ஏ பாரதோத்தமா ! தனவான்களுடைய போஜனத்தில் மாமிசமே சிறப்படைகிறது. நடுத்தரமானவர்களுடைய போஜனத்தில் நெய் சிறப்படைகிறது. ஏழைகளுடைய போஜனத்தில் எண்ணெய் மேன்மையுடையது. எளியவர் போஜனமே மிகுந்த சுவையுள்ளது. ஏனென்றால் ஐசுவரியவான்களிடத்தில் அரிதாயிருக்கிற பசியே போஜனத்துக்குச் சுவை கொடுப்பது. இவ்வுலகில் வாழ்வையுடையவர்கள் சரியான அளவு புஜிக்கிறதில்லை. எளியவர்களோ மரத்துண்டுகளையும் ஜீரணமாக்கிக் கொள்கிறார்கள். தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் தங்கள் ஜீவனத்துக்குண்டாகும் கெடுதிக்கு அஞ்சுவார்கள். நடுவகுப்பார் மரணத்துக்குப் பயப்படுவார்கள். நல்லவர்கள் அவமானத்துக்குப் பயப்படுவார்கள். செல்வ மயக்கமானது சாராய மயக்கத்தை விட மேலானது. ஏனென்றால் செல்வமுள்ளவன் அதையிழந்தாலன்றிப் புத்தி அடைகிறதில்லை. நட்சாத்திரங்கள் கிரகங்களால் இழுக்கப்படுவது போல இந்த உலகம் அறிவுள்ள புலன்களால் வழிகாட்டி நடத்தப்படுகிறது. இந்திரியங்களால் மேற்கொள்ளப்பட்டுக் காரியங்களை நடத்துகிறவனுக்குப் பூர்வபட்ச சந்திரனைப் போலத் துன்பமும் துக்கமும் விருத்தியாகின்றன.

 

முதலில் தன்னை அடக்கிக் கொள்ளாமல் தன் மந்திரிகளையும், புத்தி சொல்கிறவர்களையும், பகைவர்களையும் அடக்க விரும்புகிறவன் தன்பலமிழந்து இழிவடைவான். புலன்களையே சத்துருக்களாக எண்ணி அவற்றை முதலில் அடக்குகிறவன் தன் மந்திரிகளை அடக்கவும் பகைவர்களை வெல்லவும் தவறுதலடைய மாட்டான். தன்புலனை அடக்கினவனும், நீதியாய் நடக்கிறவனும், கோபிக்கிறவர்களைத் தண்டிக்கிறவனும், தான் அடங்கி நடக்கிறவனும், பொறுமை யுடையவனும் எவனோ அவனைப் பாக்கியங்கள் தாமாகவே வந்தடைகின்றன. மஹாராஜனே! ஒருவனுடைய சரீரமே இரதம்; அதிலிருக்கிற ஆத்மாவே சாரதி. ஐம்புலன்களும் அதில் பூட்டப்பட்ட குதிரைகள். அந்தக் குதிரைகள் நன்றாய்ப் பழக்கப்பட்டிருந்தால் அவைகள் அந்தத் தேரை நன்றாய் இழுத்துக் கொண்டு செல்லும். ஆகையால் புத்திசாலியானவன் அப்படிப்பட்ட தேரிலேறிக் கொண்டு சுகமாய்ப் பிரயாணம் செய்வான். அவன் எப்போதும் ஜாக்கிரதையாயும் சமாதானமாயும் இருப்பான். நன்றாய்ப் பழக்கப்படாததும், அடக்க முடியாததும், சாமர்த்தியமற்ற சாரதியால் நடத்தப்படுபவையுமான குதிரைகள் நடக்கிற வழியில் நாசத்தை யுண்டாக்குகின்றன. அதுபோல் இந்திரியங்களை அடக்கிக் கொள்ளாதவன் நாசத்தை அடைவான். பழக்கமில்லாத ஒருவன் தன் புலன்களால் நடத்தப்பட்டு, நன்மையினின்று தீமையையும், தீமையினின்று நன்மையையும் கிரகிக்க முயன்று சுகதுக்கங்களைக் கலக்குகிறான். தருமார்த்தங்களை விட்டு நடக்கிறவன் தன் வாழ்வையும், மனைவியையும் ஜீவனையும் இழந்து விடுவான். செல்வத்துக்கு மாத்திரம் அதிகாரியாய்ப் புலன்களுக்கு அதிகாரியாகாமலிருக்கிறவன் புலன்களை அடக்கியாளும் திறமையில்லாமையால் தன் செல்வத்தை நிச்சயமாய் இழந்து விடுவான். மனம், புலன், புத்தி இவைகளை அடக்கித் தானே தன்னை ஆராய்ந்து தேடவேண்டும். தேடி யறியவும் வேண்டும். ஏனென்றால் ஒருவன் தானே தனக்குக் சத்துருவும் சினேகிதனுமாயிருக்கிறான். தன்னைத்தானே அடக்கிக் கொள்கிறவன் தனக்குத்தானே சினேகிதனாகிறான். தன்னை அடக்கிக் கொள்ளாதவன் தனக்குத்தானே சத்துருவாகிறான். ஒரு பெரிய மீனானது மெல்லிய நூலைக் கிழித்து விடுவது போல விருப்பத்தையும் கோபத்தையும் அறிவால் அழித்து விட வேண்டும். இவ்வுலகத்தில் தருமத்தையும் அருத்தத்தையும் மதிக்கிறவன், சித்தி பெறும் மார்க்கத்தை யுணர்ந்து, பாக்கியத்தையும் தான் விரும்பின எல்லாவற்றையும் பெறுகிறான். எண்ணத்துக்கு மூலமான ஐந்து புலன்களையும் அடக்காமல் மற்றப் பகைகளை அடக்க முயல்கிறவன் தன பகைவர்களால் வெல்லப்படுவான். துர் எண்ணமுள்ள அரசர்கள் புலன்களை அடக்கிக் கொள்ளச் சக்தியில்லாமையால், இராஜ்ய மதத்தால் பிழைகளைச் செய்து அழிந்து போனதாகத் தெரியவருகிறது. உலர்ந்த கட்டையுடன் கூடின பச்சைக்கட்டையும் எரிக்கப்படுவது போலப் பாபமற்றவனும் பாபியுடன் கூடுவதால் தண்டிக்கப்படுகிறான். ஆகையால் பாபியின் சினேகத்தை ஒழித்து விட வேண்டும். வெவ்வேறான ஐந்து விஷயங்களைக் கிரகிக்கிறவைகளும், பகையுமான ஐந்து புலன்களை எவன் அடக்காமலிருக்கிறானோ அவன் துக்கத்தால் ஜயிக்கப்படுவான். கபடமின்மை, நேர்மை, பரிசுத்தம், திருப்தி, இனிய பேச்சு, தன்னடக்கம், சத்தியம் உறுதி இவ்விலக்கணங்கள் துஷ்டர்களிடத்தில் காணப்படுவதில்லை.

 

பொய்யான நிந்தனைகளாலும், கொடுஞ் சொற்களாலும் மூடர்கள் புத்திமான்களை வருத்தப்படுத்தப் பார்ப்பார்கள். இப்படிச் செய்து புத்தியீனர்கள் புத்திசாலிகளுடைய பாபத்தை அபகரிக்கிறார்கள். அறிவுள்ளவர்கள்பொறுமையாயிருப்பதில்லை. துஷ்டர்களுக்கு எரிச்சலேபலமாயிருக்கிறது. குற்றவாளிகளைத் தண்டிக்கிற சட்டமே அரசர்களுக்குப் பலமாகும். சபலசித்தமே ஸ்திரீகளுக்குப் பலம். புண்ணியவான்களுக்குப் பொறுமையே பலம். பேச்சை அடக்குவது வெகு கஷ்டம். அர்த்தம் நிறைந்ததும், கேட்பவர்களுக்கு இனிமை தருவதுமான பேச்சைப் பேசுவது அரிது. நன்றாய்ப் பேசப்படுகிற சம்பாஷணை அளவில்லாத பலனைத்தரும். கெட்ட பேச்சுக்களைப் பேசுவது தீமைக்கே காரணமாகும். அம்பினாலே பிளக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்டமரம் மீண்டும் வளரும். அவமானமான வசனங்களால் புண்ய இருதயம் ஒரு போதும் புண்ணாறிச் சுகமடையாது. அம்பு, ஈட்டி, சூலம் முதலியன சரீரத்தில் தைத்தால் எளிதிற் பிடுங்கிவிடலாம்; இதயத்தில் தைத்த கொடுஞ் சொல்லாகிய ஆயுதம் ஒரு போதும் எடுக்கப்படுவதில்லை. சொல்லம்பு வாயினால் எய்யப்படுகிறது. அதனால் அடிப்பட்டவர்கள் இரவும் பகலும் துக்கப்படுவார்கள். ஆகையால் புத்தியுள்ள மனிதர்கள் சொல்லம்பைப் பிரயோகிக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் பிறரை வருத்தப்படுத்தக் கூடாதல்லவா? விதியால் தோல்வியடைந்தவனுடைய புத்தி போய் விடுகிறது. அதனாலே அவன் இழிவான காரியங்களையெல்லாஞ் செய்கிறான். அறிவு மழுங்கும் போது அழிவு சமீபத்தில் வருகிறது. அதனால் தப்பிதங்க ளெல்லாம் சரியாகவே தோன்றும். அரசனே! நீர் இதைச் சரியாய் அறியவில்லை. உமது மந்தபுத்தியினாலே பாண்டவர்கள் துன்பம் அடைந் திருக்கிறார்கள் என்றார்.

 

அரசன் - பேரறிவுள்ளவிதுரா! தர்மத்தையும் அர்த்தத்தையும்பற்றி எனக்கு இன்னமும் சொல் நீ சொல்வனவெல்லாம் ஆநந்தமாயிருக்கின்றன. கேட்கக் கேட்க ஆசை தணியவில்லை என்றான்.

 

விதுரர் - தீர்த்தங்களிலெல்லாம் ஸ்நானம் செய்வதும், சகல பிராணிகளிடத்திலும் அன்பாயிருப்பதும் சமபலனைத்தரும். அவற்றுள் ஜீவகாருணியமே சிறந்ததாயிருக்கிறது. எதுவரைக்கும் ஒருவனுடைய புண்ணிய கருமமும் உலகத்தில் பேசப்படுகிறதோ அதுவரைக்கும் அவன் சொர்க்கத்தில் சுகமாய் வசிப்பான். ஆகையால் புண்ணியகருமமே செய்யத்தக்கது. இந்த விஷயத்தில் கேசினியை வரித்த விரோசனன் சுதன்வா என்ற இருவருடைய சரித்திரம் திருஷ்டாந்தமாகக் கூறப்படுகிறது.

 

முன்னொரு காலத்தில் கேசினி என்ற அழகான கன்னிகை ஒருத்தியிருந்தாள். அவள் ஒப்பற்ற அழகுள்ளவள். அவள் நல்ல கணவனை அடைய விரும்பிச் சுயம்வரம் நியமித்தாள். திதி வமிசத்தில் பிறந்த விரோசனன் அந்தக்கன்னிகையை அடையுமாறு அவ்விடத்துக்குப் போனான். கேசினி அவனை நோக்கி விரோசனா! க்ஷத்திரியர் அந்தணர் இருவருள் உயர்ந்தவராரென்று கேட்டாள். விரோசனன், நாங்கள் பிரஜாபதிவமிசத்தில் பிறந்தவர்கள். ஆகையால் நாங்களே சிறந்தவர்கள். சகல பிராணிகளுக்கும் நாங்களே மேலானவர்கள் சந்தேகமில்லாமல் இந்த உலகமே எங்களுடையது, ஆகையால் தேரைகள் யார்? அந்தணர் யார்? என்றான். கேசினி அப்படியானால் நீ இங்கேயேயிரு; நாளைக்குச் சுதன்வா வருவான்; நீங்கள் இருவரும் சேர்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பேன் என்றாள்; விரோசனன் அப்படியே நாளைக் காலையில் நானும் சுதன்வாவும் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார் என்றான்.

 

இரவு கழிந்து சூரியோதயமாயிற்று. கேசனியும் வீரோசனனும் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சுதன்வா வந்தான். விரோசனன் கேசினியிருவரையும் கண்டான். கேசினி அந்தணனாகிய சுதன்வாவுக்கு அர்க்கியபாத்தியங்கள் கொடுத்து உபசரித்து ஆசனத்தில் உட்காரச் சொன்னாள். விரோசனன் சுதன்வாவைத் தன்னுடன் ஒரு ஆசனத்தில் உட்காரும்படி கேட்டான். சுதன்வா, பிரகலாத குமாரனே! உன் சொர்ண ஆசனத்தைநான் தொட்டாலும், அதில் உட்கார்ந்தாலும் உனக்குச் சமானமாக மதிக்கப்படுவேன். ஆதலால் நான் அதில் உட்காரமாட்டேனென்றான். விரோசனன், சுதன்வா! மரப்பலகையும், மிருகத்தின் தோலும், தருப்பைப் புற்பாயும், வைக்கோலாசனமுமே நீ உட்காரத்தகுந்தவை. ஆகையால் நீ எவ்விதத்திலும் என்னுடன் ஒரு ஆசனத்தில் உட்காரத்தக்கவன் அல்லையென்றான். சுதன்வா, விரோசனா! பிதாவும் குமாரனும், ஒத்த வயதும் ஒத்தபடிப்புமுள்ள இரண்டு அந்தணர்கள், இரண்டு க்ஷத்திரியர்கள், இரண்டு வைசியர்கள், விருத்தர்களான இரண்டு சூத்திரர்கள் இவர்கள் ஒரே ஆசனத்தில் சேர்ந்து உட்காரக்கூடும். இவர்களைத் தவிர மற்றவர்கள் உட்காரக்கூடாது. உன் பிதா எனக்கு மரியாதை செய்கிறார். நான் உட்காருகிற ஆசனத்துக்குத் தாழ்ந்த ஆசனத்தில் உட்காருகிறார். நீ குழந்தையாயிருப்பதினாலும் செல்வமாய் வளர்க்கப்பட்டமையாலும் இதை அறியவில்லை என்றான். விரோசனன், சுதன்வா! சொர்ணம், பசு, குதிரை என்னிடத்தில் இருக்கின்றன ஆகையால் நானுயர்ந்தவன் என்றான். பின்னும் விரோசனன், சுதன்வா! உன்தங்கம், பசு, குதிரை முதலியன உன்னிடத்திலிருக்கட்டும், இந்தக் கேள்விக்குத் தகுதியுள்ளவர்களைப் பதில் கூறும்படி கேட்போம். இந்த விஷயத்தில் நாம் நமது பிராணனையே பந்தயம் வைத்துக் கேட்போம். தக்கவர்கள் மறுமொழி சொல்லட்டும் என்றான். விரோசனன், நமது பிராணனைப் பந்தயம் வைத்து விட்டு யாரிடம் போய்க் கேட்பது; தேவர்களிடத்திலும் மனிதர்களிடத்திலும் நான் வரமாட்டேன். அவர்கள் எனக்குத் தாழ்ந்தவர்கள் என்றான். சுதன்வா, நாம் பிராணனைப் பந்தயம் வைத்து விட்டு உன் பிதாவினிடம் போய்க் கேட்போம். ஏனென்றால் பிரகலாதன் தன் புத்திரனுக்காகக் கூடப் பொய் சொல்ல மாட்டார் என்றான். விரோசனன் சரியென்று ஒப்புக் கொண்டான்.

 

இப்படிப் பிராணனைப் பந்தயம் வைத்துக் கொண்டு இருவரும் பிரகலாதனிடம் போனார்கள். அவர்களிருவருக்கும் கோபம் மிகுந்திருந்தது.

 

பிரகலாதன் இவ்விருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்தான். இவ்விருவரும் முன்பு ஒரு போதும் சேர்ந்து வந்ததில்லை. இப்போது சேர்ந்து வருகிறார்கள். கோபங்கொண்ட இரண்டு சர்ப்பங்களைப் போல வருகிறார்கள். ஒரே பாதையில் வருகிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டு அவர்களை நோக்கி நீங்கள் இருவரும் முன்பு ஒரு போதும் சேர்ந்திருந்ததில்லை. இப்போது இருவரும் கூடி வருகிறீர்கள். ஏ விரோசனா! நீங்கள் இருவரும் சினேகிதர்களா வென்று உன்னைக் கேட்கிறேன் என்றான். விரோசனன், எனக்கும் சுதன்வாவுக்கும் சினேகிதமில்லை. நாங்களிருவரும் எங்கள் பிராணனைப் பந்தயம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். இராட்சத சிரேஷ்டரே! நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பொய்யான மறு மொழி சொல்லக்கூடாது என்றான்.

 

பிரகலாதன் சுதன்வாவுக்காகத் தண்ணீரும் தேனும் கொண்டுவர் வேண்டும். அந்தணரே! உமக்காக நல்ல பசு வொன்று விட்டிருக்கிறேனென்றான். சுதன்வா, தண்ணீர் தேன் தயிர் இவைகளை நான் வரும் வழியிலேயே பெற்றுக் கொண்டேன்; நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். நீர் உண்மையைச் சொல்ல வேண்டும். நான் உயர்ந்தவனா? இந்த விரோசனன் உயர்ந்தவனா? என்று கேட்டான். பிரகலாதன், அந்தணரே! இவன் எனக்கு ஒரே குமாரன்; நீரும் எனக்கு எதிரில் வந்திருக்கிறீர். நீங்களிருவரும் சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கிற இந்த விஷயத்தை என்னைப் போன்றவர்கள் எப்படித் தீர்க்கத் துணியக்கூடும்? உமக்குப் பசு முதலிய வஸ்துக்கள் இதோ இருக்கின்றன. இவைகளைப் பெற்றுக் கொள்ளும் என்றான். சுதன்வா, உமக்குரிய பசு முதலிய சிறந்த வஸ்துக்களை உமது புத்திரனுக்குக் கொடும். நாங்களிருவரும் எந்த விஷயத்தைப் பற்றி வழக்கிட்டு வந்திருக்கிறோமோ அந்த விஷயத்தில் உண்மையைச் சொல்லும் என்றான். பிரகலாதன் ஏ ஹம்ஸ! தரும் சூட்சுமமானது சிவப்போ, கறுப்போ, கபில் வருணமோ அறியோம். பசுவின் பால் தாரையிலும் சிறிது, ஆகையால் நான் அதை எப்படிச் சொல்லக்கூடும் என்றான். சுதன்வா, நீர் உண்மையைச் சொல்லாவிட்டால் உமது தலை வெடிக்கும் என்றான். பிரகலாதரே! நாக்குத் தவறுகிறவனும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாதவனும், பொய் அல்லது சத்தியம் இவைகளைப் பேசாமலிருக்கிறவனும் எந்த இடத்தை அடைவான்? இதைப்பற்றி உம்மைக் கேட்கிறேன் என்றான்.

 

பிரகலாதன், நாக்குத் தவறினவன் ஒரு ஸ்திரீ தன் கணவன் சக்களத்தியுடன் கூடியுறங்குகிறதைப் பார்த்து அந்த இரவை எப்படிக் கழிப்பாளோ அது போலவும், சூதாட்டத்தில் திரவியத்தை யிழந்தவனைப் போலவும், தாங்க முடியாத சுமை யேற்றப்பட்டு வருந்துகிற எருதைப் போலவும் துன்பத்தைக் கொடுக்கும் இடத்தை அடைவான். அன்றியும் சத்துருவானவன் கோட்டை வாயிலைக் கைப்பற்றிக் கொண்ட போது ஒரு அரசனுடைய மனம் என்னபாடுபடுமோ அது போலவும் வருந்தும் இடத்தை யடைவான். பொய்ச் சாட்சி சொல்கிறவன் பகைவர்களாலே சதா துக்கத்தையே யடைவான். ஒரு மிருகத்தின் விஷயத்தில் பொய் சொல்கிறவன் தன் பிதிர்களில் ஐந்து பேரைச் சொர்க்கத்தினின்றும் நரகில் வீழ்த்துகிறான். ஒரு பசு விஷயத்தில் பொய் சொல்லுகிறவன் பத்துப்பிதிர்க்களை நரகத்தில் வீழ்த்துகிறான். ஒரு குதிரை விஷயத்தில் பொய் பேசுகிறவன் நூறு பிதிர்க்களை நரகத்தில் தள்ளுவான். ஒரு மனிதன் விஷயத்தில் பொய் சொல்கிறவன் ஆயிரம் பிதிர்க்களைச் சொர்க்கத்தினின்றும் நரகத்தில் வீழ்த்துவான். சொர்ண விஷயமாகப் பொய்பேசுகிறவன் பிறந்திருப்பவர்களும் இனிப் பிறக்கப் போகிறவர்களுமான எல்லாப் பிதிர்க்களையும் நரகத்தில் தள்ளுவான். பூமி விஷயமாகச் சொல்லப்பட்ட பொய் எல்லாவற்றையும் நாசம் செய்து விடும். ஆகையால் பூமி விஷயத்தில் பொய் பேசவே கூடாது என்றான்.

 

அதன்பின் விரோசனனை நோக்கி விரோசனா! ஆங்கீரசன் என்னை விடமேலானவன். இந்தச் சுதன்வா உன்னிலும் மேலானவன். சுதன்வாவினுடைய தாயார் உன் தாயாரை விட மேலானவள். நீ சுதன்வாவினால் ஜயிக்கப்பட்டாய். இந்தச் சுதன்வா இப்போது உன் ஜீவனுக்குத் தலைவன் என்று சொல்லி விட்டுச், சுதன்வாவை நோக்கி அந்தணரே! விரோசனனுடைய ஜீவனைக் கொடும் என்று கேட்டான். சுதன்வா, பிரகலாதரே! நீர் தர்மத்தை அனுசரித்து நடந்தீர். கெட்ட எண்ணத்தினால் பொய் சொல்லவில்லை. உமக்கு அருமையாயிருக்கிற விரோசனனுடைய ஜீவனைக் கொடுத்தேன். உமது புத்திரன் இதோ இருக்கிறான். ஆயினும், இந்த விரோசனன் கேசினிக்கு முன்னால் என் பாதங்களைக் கழுவ வேண்டும் என்று சொன்னான். அரசரே! பூமியின் விஷயமாகப் பொய் பேசுவது உமக்குத் தகுதியல்ல என்றார்.

 

பசுக்களுக்குப் பின்னால் தடியை எடுத்துக்கொண்டு போகிற இடையனைப் போலத் தேவர்கள் பொய் பேசுகிறவனைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆயினும் அவர்கள் அறிவைக் கொடுத்துக் காப்பாற்றுவார்கள். தன்னுடைய தருமத்துக்கும் நீதிக்கும் தக்கபடியே அவன் தன் காரியங்களில் சித்தி பெறுகிறான். பொய் பேசி ஜீவிக்கிறவனை வேதம் இரட்சிக்க மாட்டாது. பட்சிகள் தங்கள் கூட்டைவிட்டு ஓடிப்போவது போல வேதமும் மரணகாலத்தில் அவனை விட்டுப் போகின்றது. மதுபானம், சண்டை, பலபேர்பகை, விவாகத்தைப்பற்றின வழக்கு, குடும்பக் கலகம், இராஜதுரோகம், புருஷன் மனைவிகளைப் பற்றிய கலகம் இவைகள் பாபிகளுடைய மார்க்கங்களாகும்; இவைகளை அறிவுள்ளவன் விலக்க வேண்டும். ஜோதிடன், வர்த்தகன், திருடன், வேடன், வைத்தியன், சிநேகிதன், விகடன் இவர்களைச் சாட்சிகளாகக் கொள்ளக் கூடாது.

 

பெருமைக்காக அக்கினி ஹோத்திரம் செய்தல், டம்பத்துக்காக அடங்கியிருத்தல், டம்பத்துக்காக யாகம் செய்தல், டம்பத்துக்காக அத்தியயனம் செய்தல் ஆகிய இவை பயன் தரா; பயங்கரமான தீமையைத் தரும். குடியிருக்கிற வீட்டில் தீ வைக்கிறவன், விஷ மூட்டுகிறவன், மனைவியால் ஜீவிக்கிறவன், மது விற்கிறவன், அம்பு செய்கிறவன், சோதிடன், சினேகிதர்களுக்குத் துரோகம் செய்கிறவன், விடன், கருவழிக்கிறவன், மதுபானம் பண்ணுகிறவன், குறும்பாகப் பேசுகிறவன், புண்களை அறுக்கிறவன், நாஸ்திகன், வேததூஷகன், பரிதானம் வாங்குகிறவன், காலங் கடந்தபின் உபநயனம் செய்யப்படுகிறவன், இரகசியமாகப் பசுவதை செய்கிறவன், அடைக்கலம் புகுந்தவனைக் கொலை செய்கிறவன் - இவர்கள் எல்லாரும் பிரமஹத்தி செய்தவர்களுக்குச் சமானமானவர்கள். சொர்ணம் தீயினால் பரீட்சிக்கப்படுகிறது; மனிதன் குணத்தினால் அறியப்படுகிறான். யோக்கியன் நடக்கையினால் அறியப்படுகிறான். பயமுண்டான காலத்தில் தைரியம் அறியப்படுகிறது. மன அடக்கமுள்ளவன் தரித்திர காலத்தில் அறியப்படுகிறான். சினேகிதர்களும் சத்துருக்களும் துக்க காலத்திலும் அபாய காலத்திலும் அறியப்படுகிறார்கள். நரை அழகை அழிக்கிறது. கவலை பொறுமையை அழிக்கிறது. மரணம் உயிரைப் போக்குகிறது. பெருமை தர்மத்தை அழிக்கிறது. கோபம் வாழ்வை அழிக்கிறது. ஈனர் உறவு நல்லொழுக்கத்தை அழிக்கிறது. காமம் மானத்தை அழிக்கிறது. கருவம் எல்லாவற்றையும் அழிக்கிறது.

 

சற்கருமங்களினாலேயே வாழ்வுண்டாகிறது. ஜாக்கிரதையினால் அது காப்பாற்றப்படுகிறது. சாமர்த்தியத்தினின்றும் அது உண்டாகிறது. மன அடக்கத்தினால் அது நிலை பெறுகிறது. ஞானம், உயர்ந்த வமிசம், மனஅடக்கம், வேத உணர்ச்சி, சாமர்த்தியம், மௌனம், சக்தி, நன்றி யறிவுஆகிய இந்த எட்டுக் குணங்களும் உடையவனைப் பிரகாசிப்பிக்கின்றன. அரசனே! இந்த எட்டுக் குணங்களும் உண்டாவதற்கு ஒரே வழிதானுண்டு. அரசன் விசேஷித்த ஒருவனைப் பெருமைப்படுத்தினால் அந்த அரசன் தயவானது ஒருவனுக்கு இந்த எட்டுக்குணங்களையும் உண்டாக்குகின்றது. பூலோகத்திலுள்ள மனிதர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்பதற்கு இவை அறிகுறிகளாக இருக்கின்றன. இவ்வெட்டுக் குணங்களில் முதலிற் சொன்ன நான்கும் நல்லவர்களுடன் கூடவே யிருக்கின்றன. மற்றைய நான்கும் நல்லோர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன. முதலிற் சொன்ன நான்கு குணங்களாவன, யாகம், கொடை, அத்தியயனம், தவம் என்பனவாம், மற்றவை தன்னடக்கம், கபடமின்மை, பரஹிம்சை செய்யாமை, விரதம் என்பனவாம்.

 

எவ்விடத்தில் விருத்தர்கள் இல்லையோ அது சபையாகாது. நீதியை எடுத்துச் சொல்லாதவர்கள் விருத்தர்களாக மாட்டார்கள். சத்தியத்தை விட்டு விலகினது நீதியாகமாட்டாது. வஞ்சனையுடன் கூடினது சத்தியமாகாது. சத்தியம், அழகு, வேத உணர்ச்சி, அறிவு, உயர்ந்த வமிசம், நல்லநடக்கை, பலம், செல்வம், தைரியம், பலவற்றையும் இன்பமாகப் பேசுகிற சாமர்த்தியம் ஆகிய இந்தப் பத்தும் மோட்சத்துக்கு மூலமானவைகளாம். தார்மிகன் தருமத்தை அனுஷ்டிப்பதினாலே ஆனந்த மடைகிறான். ஆகையால் மனிதன் பாபத்தினின்றும் விலகு மார்க்கத்தையே அனுஷ்டிக்க வேண்டும். பாபம் அடிக்கடி அனுஷ்டிக்கப் பட்டால் அது அறிவை அழித்து விடும், அந்த ஞானத்தை யிழந்தவன் அடிக்கடி பாபத்தையே செய்கிறான். அடிக்கடி தருமத்தைச் செய்தால், ஞானம் விருத்தியாகிறது. ஞானம் விருத்தியாவதனால் அவன் புண்ணிய லோகத்தை அடைகிறான். ஆகையால் மனிதன் தருமத்தை உறுதியாகச் செய்ய வேண்டும். பொறாமை யுள்ளவனும், பிறரைத் துன்பப்படுத்துகிறவனும், கொடியவனும், ஒயாமல் சண்டை யிடுகிறவனும், ஆகிய இவர்கள் நரகத்தை அடைவார்கள். பொறாமை யில்லாதவன், ஞானமுள்ளவன் ஆகிய இவர்கள் எப்போதும் நல்லவைகளையே செய்வதனால் ஒரு போதும் துக்கத்தை அடைய மாட்டார்கள். இவர்கள் எங்கும் பிரகாசிக்கிறவர்களாவார்கள், ஞானமுள்ளவர்க ளிடத்திலிருந்து அறிவைப் பெற்றுக் கொள்ளுகிறவன் உண்மையாகவே புத்திமானும் படித்தவனுமாவான். அறிவள்ளவன் தர்மார்த்தங்களிரண்டையும் அனுஷ்டிக்கிறவனாகையால் ஒருபோதும் துக்கத்தை அடைவதில்லை. இரவை எதனால் சுகமாய்க் கழிக்கக்கூடுமோ அதைப் பகலிலேயே செய்து கொள்ள வேண்டும். விருத்தாப்பியத்தில் எதனால் சுகமாய்ச் சீவிக்கலாமோ அதை இளைமையிலேயே செய்து கொள்ள வேண்டும். பரலோகத்தில் எதனால் சுகமாய் ஜீவிக்கலாமோ அதை வாழ்நாட்களுக்குள்ளாகவே செய்து கொள்ள வேண்டும். அறிவுள்ளவன் ஜீரணமாகிற உணவைப் புகழ்கிறான். இளமை கழிந்த மனைவியும் மெச்சப்படுகிறாள். யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரன் புகழப்படுகிறான். சித்தி பெற்றதவசி புகழப்படுகிறன். தீய வழியால் சம்பாதித்த பொருளாலுண்டாகுந் தீமையைத் தடுக்கவேண்டும். புலனடக்கமில்லாத சிஷ்யனைக் குரு சிட்சிக்கிறான். துஷ்டர்களை அரசன் சிட்சிக்கிறான். இரகசியமாய்ப் பாவம் செய்கிறவனை எமன் சிட்சிக்கிறான், ரிஷிகளுடைய மகிமை, மஹாத்மாக்களின் பெருமை, ஸ்திரீகளின் கொடுமை இவைகளை அறிய முடியாது. அந்தணரிடத்தில் பக்தியுள்ளவனும், தானம் கொடுக்கிறவனும், பந்துக்களிடத்தில் நீதியாய் நடக்கிறவனும், பெருந்தன்மை யுள்ளவனுமான க்ஷத்திரியன் பூமியைப் பரிபாலிக்கத் தக்கவனாகிறான். தைரிய முள்ளவன், படிப்புள்ளவன், பிறரை இரக்ஷிப்பதை அறிந்தவன் ஆகிய இந்த மூவரும் எப்போதும் பூமியிலிருந்து சொர்ண மலரைப் பறிக்கிறார்கள். அறிவினாலே செய்யப்படுகிற கருமங்கள் உத்தமம். புஜங்களால் செய்யப்படுவது மத்திமம். தொடையால் செய்யப்படுவது அதமம். தலையால் சுமந்து செய்யப்படுவது அதமாதமம்.

இந்த விஷயத்தில் அத்திரி முனிவர் குமாரருக்கும் சாத்தியர் என்கிற தேவர்களுக்கும் நடந்ததைக் கேளும். பூர்வகாலத்தில் அத்திரி குமாரராகியஞான முள்ளவரும், மஹாரிஷியும், பிக்ஷை யெடுத்துப் புசித்தவருமான நோன்புள்ள ரிஷி, பிக்ஷைக்காக அலைந்து கொண்டிருந்தார். அவரைச் சாத்தியர் எனகிற தேவர்கள் கண்டார்கள். அவர்கள் முனிவரை நோக்கி, "முனிவரே! நாங்கள் சாத்தியர் என்னுந் தேவர்கள். உம்மை யின்னாரென்று தெரிந்து கொள்ளச் சக்தியற்றவர்களாயிருக்கிறோம். ஆயினும் வேதமுணர்ந்து ஞானத்தை யடைந்து புலனை வென்றவரென்று அறிகிறோம். ஆதலால் அறிவு நிறைந்த சிறந்த வசனங்களால் எங்களுடன் பேசும்'' என்றார்கள்.
 

முனிவர், "தேவர்களே! மன அடக்கத்தினாலே இருதயத்திலுள்ள முடிச்சுக்களை அவிழ்த்துக், கோபத்தை ஜயித்து, சத்தியமான தருமத்தை அனுசரித்து, விருப்பு வெறுப்பில்லாமல் எல்லாவற்றையும் சமனாய்ப் பார்க்கவேண்டுமென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிறருடைய குற்றத்தையாவது அபவாதத்தையாவது எடுத்துச் சொல்லக்கூடாது. சிநேகிதர்களுடன் சண்டையிடக் கூடாது. தாழ்வானவருடைய உறவை விட்டுவிட வேண்டும். கோப முள்ளவைகளும், கொடுமை யுள்ளவையுமான வசனங்களைப் பேசக்கூடாது. இழிவானதும், அகந்தையுள்ள துமான நடக்கையை விடவேண்டும். கொடுஞ் சொற்கள் மனிதருடைய இருதயத்தையும், மருமஸ்தானத்தையும், எலும்பையும், பிராணனையுந் தகிக்கும். ஆகையால் கொடுஞ் சொற்களைப் பேசக்கூடாது. கொடிய வசனங்களைப் பேசுகிற மனிதன் பிறருடைய உயிர் நிலையைச் சொற்களாகிய முட்களால் குத்துகிறான். அவன் நாக்கிலேயே நரகத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். பிறருடைய கூரிய முனையுள்ள தீப்போன்ற சொல்லம்பினால் பிளக்கப்பட்ட இருதயத்தையுடைய அறிஞன் வருத்தத்தால் மனம் புண்பட்டவனாயிருந்தாலும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். பொறுத்துக் கொள்ளாவிட்டால் நிந்திக்கிறவனுடைய பாபம் தன்னை வந்தடையும். நல்லவர்களைச் சேவிக்கிறவனும், கெட்டவர்களைச் சேவிக்கிறவனும், தவசிகளைச் சேவிக்கிறவனும், திருடர்களைச் சேவிக்கிறவனும், வஸ்திரம் எதில் நனைக்கப்படுகிறதோ அந்த நிறத்தையே பெறுவது போல அவ்வவர்களுடைய குணங்களையே பெறுவார்கள்.

 

நிந்தனைகளால் வருத்தப்பட்டு நிந்தித்தவனை நிந்தியாமலும், பிறரைக் கொண்டு நிந்திக்கச் செய்யாமலும், அடிக்கப்பட்டவன் அடித்தவனை அடியாமலும் பிறரைக் கொண்டு அடிக்கச் செய்யாமலும் இருக்க வேண்டும். தனக்குத் துன்பஞ் செய்தவனைக் கொஞ்சங் கூட வருத்தப்படுத்தாமலிருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய நட்பைத் தேவர்களும் விரும்புவார்கள். பேசுகிறதை விடப் பேசாமல் மௌனமாயிருப்பது நல்ல தென்று சொல்லப்படுகிறது. ஏன் என்றால் நீ பேசினால் உண்மையையே சொல்ல வேண்டும். உண்மையா யிருந்தாலும் எது ஒவ்வத்தக்கதோ அதையே சொல்ல வேண்டும். ஒவ்வத்தக்கதா யிருந்தாலும் நீதி நிறைந்ததா யிருக்கவேண்டும். ஒரு மனிதன் எவனுடன் பழகுகிறானோ அவனைப் போலவே ஆகிவிடுகிறான், அல்லது தான் யாரை மதிக்கிறானோ அவனைப் போலாகிறான், அல்லது தான் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறானோ அப்படி யாகிறான். ஒருவன் எதைவிட்டு விலகுகிறானோ அதினின்றும் விடுபடுகிறான். எல்லாவற்றினின்றும் விடுபடுகிறவன் ஒருபோதும் துக்கத்தை அடையான். அவன் ஒருவனை மேற்கொள்வது மில்லை, அவன் மேற்கொள்ளப்படுவதுமில்லை. அவன் பிறரை ஒரு போதும் வருத்தப்படுத்த மாட்டான். பிறரை எதிர்க்கிறதுமில்லை. இகழ்ச்சி புகழ்ச்சிகளை மதிப்பது மில்லை. அவன் பிறரால் அசைக்கப்படுகிறது மில்லை, அவன் துக்கப்படுவது மில்லை, மகிழ்வது மில்லை.

 

எல்லாருடைய க்ஷேமங்களையும் விரும்புகிறவனும், பிறரை வருத்தாதவனும், பேச்சில் உண்மை யுள்ளவனும், நடக்கையில் வணக்க முள்ளவனும், கோபத்தை அடக்கினவனும் தன் இனத்தாருக்குள் உத்தமனென்று மதிக்கப்படுகிறவனாவான். பொய்யினால் பிறருக்கு ஆறுதல் சொல்லாதவனும், வாக்குத்தத்தம் செய்ததைக் கொடுப்பவனும், பிறருடைய பலஹீனத்தை அறிகிறவனுமான ஒருவன் மத்திமனென்று கருதப்படுகிறான். கோபத்தை அடக்க முடியாமையும், ஆபத்தால் வருந்த ஏதுவாயிருத்தலும், கோபத்தை வெளியிடுகிறதும், நன்றி யில்லாமையும், பிறருக்குச் சினேகமாகா திருப்பதும், கெட்ட இருதய முடைமையும் ஆகிய இவைகள் கெட்ட மனிதர்களுக்கு இலக்கணமாம். பிறர் செய்த நன்மையால் திருப்தி யடையாதவனும், சந்தேகப்படுகிறவனும், உண்மையான சினேகிதர்களை விலக்குகிறவனும் கெட்ட மனிதனே யாவான். தன் க்ஷேமத்தை விரும்புகிறவன் நல்லவர்களுடன் கூடவேண்டும். தன் பலத்தாலும், சாமர்த்தியத்தாலும், புத்தியாலும், இடைவிடா முயற்சியாலும், பொருள் சம்பாதிக்கிறவன் சிரேஷ்டனாவான் என்பார்கள். ஆனால் அவன் மத்திமனே. ஏனென்றால், அவன் உலகில் புகழ் அடைவதுமில்லை, தருமத்தைச் செய்வது மில்லை, உயர்ந்த வமிசத்துக்குரிய நடக்கைகளைப் பெறுவது மில்லை. உயர்ந்த வமிசத்திற் பிறந்தவனுக்கு எப்போதும் தரும் சிந்தையும் நல்ல எண்ணங்களும் இயல்பாகவே யுண்டாகின்றன. அவன் ஒரு போதும் தாழ்வடையான்; ஆதலால் விவாகாதி சம்பந்தங்கள் செய்ய வேண்டும்.

 

தவசு, மன அடக்கம், வேதம், அறிவு, யாகம், நல்ல விவாகம், அன்னதானம் ஆகிய இவைகள் எந்தக்குடியில் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றனவோ அது உயர் குடியென்று மதிக்கப்படுகிறது. நன்னெறியினின்று வழுவாதவர்களும், பரம்பரையான வியாதி யற்றிருப்பவர்களும் உயர்குடியினராம். எல்லாத் தருமங்களையும் மகிழ்ச்சியுடன் செய்கிறவர்களும், தம் வமிசாத்தைப் பிரகாசிப்பிக்கத் தக்க பரிசுத்தமான விருப்பமுள்ளவர்களும், பொய் சொல்லாமலிருக்கிறவர்களும் உயர்ந்த வமிசத்தினராம். துஷ்ட சகவாசத்தாலும், பிறர் தம்மிடம் கொடுத்து வைத்த பொருளில் கெட்ட எண்ணம் கொள்வதாலும், அறிஞரை நிந்திப்பதாலும் உயர்குடி தாழ்வடைகின்றது. சுற்றத்தாரோடு செல்வம் பசுக்களை யுடையவர்களாயிருந்தாலும் உயர்ந்தவமிசமாக மதிக்கப்படும். நாகரிகமும் நல்ல ஒழுக்கமும் இல்லாதவர்களாயிருந்தால் மதிக்கப்படுவதில்லை. செல்வமில்லாமலிருந்தாலும் நாகரிகமும் நல்லொழுக்கமும் உள்ளவர்களாயிருந்தால் அவர்கள் உயர்குடியினராக மதிக்கப்பட்டுப் பெரும்புகழடைவார்கள். நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். செல்வமில்லாதவனாயிருந்தால்அவன் இல்லாதவனல்லன். நாகரிகமும் ஒழுக்கமும் இல்லாதவனாயிருந்தால்அவன் தரித்திரனேயாவான். பசு, தானியம், மிருக முதலியவைகளை ஏராள்மாகவுடையவனாயிருந்து ஒழுக்க மில்லாதவனா யிருப்பவன் மதிப்பையும் புகழையு மடையான்.

 

நம்முடைய வமிசத்தில் ஒருவரும் சண்டை மூட்டி விடாமலிருக்கட்டும். ஒருவனும் இராஜதுரோகி யாகாம லிருக்கட்டும். ஒருவனும் பிறர் பொருளைக் கவராமலிருக்கட்டும். ஒருவனும் உட்கலகம் விளைவிக்காம லிருக்கட்டும். ஒருவனும் வஞ்சகனாகவாவது பொய்யனாகவாவது ஆகாமலிருக்கட்டும். ஒருவனும் கொலை செய்யாமலும், பெரியோர்கள் மேற் பொறாமை கொள்ளாமலும், பிறரைக் கெடுக்காமலு மிருக்கட்டும். நமது வீடுதேடி வந்தவர்களுக்குப் படுக்க வைக்கோல், உட்கார இடம், கைகால் முகம் கழுவுதற்கு நீர் இவைகள் சித்தமா யிருக்கட்டும். புண்ணியசாலிகள் நல்ல நடக்கையில் விசுவாசமுள்ளவர்களா யிருக்க வேண்டும். விருந்தாளிகள் வந்தபோது இவைகளெல்லாம் சித்தமாயிருக்கவேண்டும். சயந்தமரம் மெல்லிதாயிருந்தாலும் பாரத்தைச் சுமக்கச் சக்தியுள்ளதாயிருக்கிறது. பருமனாயிருக்கிற மற்ற மரங்கள் சுமக்கமாட்டா. உயர் குடியிற் பிறந்தவர்கள் சாதாரணமனிதர்களால் தாங்க முடியாத பாரத்தைத் தாங்கத் தக்கவர்களா யிருக்கவேண்டும். எவன் கோபத்தால் பயமுண்டாகுமோ அவனைச் சிநேகமாகக் கொள்ளக்கூடாது. எவன் பயத்தால் சேவிக்கப்படுகிறானோ அவனுடைய சிநேகமுமாகாது. எவன் பிதாவைப் போல நேசிக்கத்தக்கவனோ அவனே சிநேகனாவான். மற்றவர் சிநேகம் சொன்மாத்திரமே. எவனுடைய இருதயம் உறுதியற்றதாயிருக்கிறதோ, எவன் பெரியோர் சேவை செய்யாமலிருக்கிறானோ, எவன் சாந்த மில்லாத குணமுள்ளவனோ அவன் சிநேகிக்கத் தக்கவனல்லன். உறுதியில்லாத நெஞ்சு உடையவனையும், மன அடக்க மில்லாதவனையும், புலனுக்கு அடிமைப் பட்டவனையும், நீரற்ற குளத்தை அன்னம் விடுகிறது போல் விட்டு விட வேண்டும். பல ஈனமான மன முள்ளவர்கள் திடீரென்று கோபித்துக்கொள்கிறார்கள். காரணமில்லாமலே பிரியப்படுகிறார்கள். துக்கம் பலத்தை அழிக்கும். துக்கம் அறிவைக் கெடுக்கும். துக்கம் வியாதியை உண்டாக்கும். துக்கம் நினைத்த பொருளைக் கொடாது. அன்றியும் பகைவர்களுக்குச் சந்தோஷத்தை யுண்டாக்கும். ஆகையால் துக்கத்துக்கு இடம் தரக்கூடாது. மனிதன் அடிக்கடி சாகிறான்; அடிக்கடி பிறக்கிறான். அடிக்கடி வளர்கிறான். அடிக்கடி கேட்கிறார்கள். அடிக்கடி கேட்கப்படுகிறார்கள். அடிக்கடி புலம்புகிறார்கள். சுகம் துக்கம், குறைவு நிறைவு, இலாபம் நஷ்டம், ஜீவித்தல் மரணமடைதல், இவைகளை எல்லாரும் விதிவசத்தால் முறைப்படி அனுபவிக்கிறார்கள். ஆகையால் மன அடக்கமுள்ளவன் துக்கத்தையும் சந்தோஷத்தையும் ஒருபோதும் அடையக்கூடாது. ஆறுபுலன்களுக்கும் ஒருபோதும் ஓய்வு இல்லை. ஒரு பாத்திரத்தின் வாயின் அளவுக் கேற்றபடி தண்ணீர் வருகிறது போல, அந்தப் புலன்களின் வழியாகஅறிவும் வெளிப்படுகிறது.

 

கவலையை ஒழிப்பதற்குப் பேராசையையும் புலனுக்கு வசப்பட்டிருப்பதையும் முற்றும் ஒழித்துத் தவத்தையும் ஞானத்தையும் அடைய வேண்டும். சுய அறிவினாலேயே பயம் ஒழிகிறது. தவசினாலே மதிப்புள்ள பெரியபொருள் அடையப்படுகிறது. பெரியோர்களை அடுத்ததினாலே கல்வியுண்டாகிறது. மன அடக்கத்தினாலே சமாதானம் உண்டாகிறது. யோக்கியதையில்லாமல் இரட்சிப்பை விரும்புகிறவர்கள் தானத்தைச் செய்ய வேண்டும். அல்லது வைதிக கருமானுஷ்டானத்தைச் செய்யவேண்டும். கோபத்தையும் பேராசையையும் ஒழிக்க வேண்டும். ஆயுள் முழுமையும் தீர்த்தயாத்திரை செய்ய வேண்டும். தருமத்தையும் கொடிய தவசையும் செய்யவேண்டும். இவற்றினால் சந்தோஷம் உண்டாகும்.

 

தங்கள் பந்துக்களுடன் சமாதானமா யிராதவர்கள் நல்ல படுக்கையை உடையவர்களாயிருந்தாலும் நித்திரை செய்யமாட்டார்கள். அவர்கள் பெண்களாலும் வந்தியர்களின் பாடல்களாலும் மகிழ்ச்சி யடையமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் தருமம் செய்யமாட்டார்கள். இந்த உலகத்தில் அவர்களுக்கு இன்பமே கிடையாது. ஒருபோதும் பெருமையுமில்லை. அவர்களுக்குச் சமாதானமும் மகிழ்ச்சியும் ஒருபோதுமில்லை. அவர்களுடைய நன்மைக்காகச் செய்யப்படுகிற மந்திரா லோசனையும் பிரியத்தைச் செய்யாது. அவர்கள் தங்களிடத்தில் இல்லாததை ஒருபோதும் அடைய மாட்டார்கள். தம்மிடத்தில் உள்ள பொருள்களைப் காப்பாற்றிக் கொள்வது மரிது. அவர்கள் ஆபத்திலிருந்து தப்புவதற்கும் மார்க்கம் கிட்டாது. பசுவினிடத்தில் பாலிருக்கிறது. அதுபோலப் பந்துக்களிடத்தில் பயமிருக்கிறது. சமநீளமுள்ள அநேக நூல்களை ஒன்றாகச் சேர்த்து முறுக்கினால் அது இடைவிடாமற் சுழலும் அநேக விளையாட்டுக் கருவிகளைத் தாங்கும் சக்தியை யுடையதாகும்; அது போல பந்துக்களுடன் கூடினவன் பலமுள்ளவனாவான். பலகொள்ளிக் கட்டைகள் தனித்தனியே பிரிந்தால் அது எரியாமல் புகையை மாத்திரம் உண்டாக்கும். அவைகள் ஒன்றாய்க் கூடினால் ஜுவாலை வீசிக் கொண்டு எரியும். உறவினரிடத்திலும் இப்படியே அறியத்தக்கது. அரசனே ! பெரியோர், பசு, ஸ்திரீகள், உறவினர் இவர்களைக் கொடுமையாக நடத்துகிறவன், பழுத்த பழங்கள் காம்பினின்றும் நழுவுவது போலத் தன்னிலையினின்றும் சீக்கிரம் விழுந்துவிடுவான். தனியாக நிற்கிற மரம் பெரிதாயும் பலமுள்ளதாயிருந்தாலும் பெருங்காற்றினால் வேர் அறுந்து கீழே விழும். பலவற்றினுடன் கூடியிருக்கிற மரம் பெருங்காற்றை எதிர்த்து நிற்கும் வல்லமையுடையதாயிருக்கும். ஏனென்றால் எல்லாம் சேர்ந்து ஒற்றுமையா யிருக்கிறமையினால் தான். தனியாயிருக்கிறவன் தருமங்களைச் செய்தாலும் தனிமரத்தைப் போலச் சத்துருக்களால் ஜயிக்கப்படுவான். உறவினருடன் சேர்ந்து ஒற்றுமையாயிருக்கிறவன் தடாகத்திலிருக்கிற தாமரையைப் போல விருத்தியடைவான்.

 

பெரியோர்கள், பசுக்கள், ஸ்திரீகள், பந்துக்கள், குழந்தைகள், புசித்துக் கொண்டிருக்கிறவர்கள், அடைக்கலம் புகுந்தவர்கள் இவர்களைக் கொல்லக் கூடாது. செல்வமும் நற்குணமும் இல்லாதவர்களாயிருந்தாலும் இதைச் செய்யக்கூடும். ஒருவன் சுகமாயிருந்தால் சசல நன்மைகளையும் தேடிக்கொள்ளலாம். சுகமில்லாதவனும் வியாதியா யிருக்கிறவனும் செத்தவனேயாவான். கோபம் என்பது கசப்பும் உறைப்பும் சிவப்புமுள்ள ஒரு இனமாயிருக்கிறது. அதன் பலனும் துன்பமேயாம். கோபமானது சரீரத்திலிருந்து உற்பத்தியாகாத ஒருவிதமான கொடிய தலைவலியா யிருக்கிறது. புத்தியில்லாதவர்கள் அதைத் தடுக்க முடியாது. அதைத் தடுக்கிறவன் சுகமாயிருப்பான். வியாதியாயிருக்கிறவர்கள் எவ்வகைச் சுகத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். வியாதிக்காரர்கள் துக்கத்தினால் நிறைந்திருக்கிறபடியால் சந்தோஷமின்னதென்று அறியமாட்டார்கள். செல்வத்தை யெப்படி அனுபவிக்கிறதென்றும் அறியமாட்டார்கள். பலமானது மிருதுவானதற்கு ஒரு போதும் இடைஞ்சல் செய்வதில்லை. ஆனால் அது மிருதுவான துடன் கலந்திருக்கிறது. துர்வழியில் அடைகிற வாழ்வு சீக்கிரம் அழிகிறது. மிருதுவினாலும் பலத்தினாலும் அடையப்படுகிற வாழ்வு புத்திர பௌத்திரர்களும் பரம்பரையாய் அனுபவிக்கத்தக்கதாயிருக்கிறது.

பிரஜாபதியின் புத்திரனான வைவசுதன் பதினாறு பேர்கள் ஒன்றுமில்லாத இடத்தில் கரமுஷ்டியால் அடித்துக் கொள்கிறவர்களாகவும், நீராவிரூபமான இந்திரதனுசை வளைக்க முயற்சிக்கிறவர்களாகவும், தொடமுடியாத சூரியகிரணத்தைப் பிடிக்கிறவர்களாகவும் இருப்பார்களென்று சொன்னான் அவர்கள் யாரென்றால் அடக்கமுடியாதவர்களை அடக்க முயல்கிறவன், சொற்ப இலாபத்தால் திருப்தியடைகிறவன், பகைவர்களை வணங்கி உபசரிக்கிறவன், ஸ்திரீகளைச் சிறைப்படுத்துகிறவன், கேட்கத்தகாதவர்களிடம் யாசிக்கிறவன், ஏதாவதொன்றைச் செய்துவிட்டுப் பெருமை பாராட்டுகிறவன், உயர்ந்த வமிசத்தில் பிறந்தும் துர்க்கருமங்களைச் செய்கிறவன், சக்தியில்லாதவனாயிருந்தும் பலவானோடு பகைத்துக் கொள்கிறவன். பரிகாசம் பண்ணிக்கொண்டு கேட்கிறவனிடத்தில் பேசுகிறவன், அடையமுடியாத பொருளை அடைய விரும்புகிறவன், மருமகளுடன் சரசமாய்ப் பேசுகிற மாமனார், பிறனுடைய வயலில் தன் விதைகளைத் தெளிக்கிறவன், தன் சொந்த மனைவியைப் பற்றி இழிவாகப் பேசுகிறவன், பிறனிடமிருந்து வாங்கிக் கொண்டதை மறந்து விட்டே னென்கிறவன், புண்ணிய க்ஷேத்திரங்களில் கொடுக்கிறே னென்று வாக்குத்தத்தம் செய்துவிட்டுப் பின் கொடாதவன், பொய்யை மெய்யென்று ரூபிக்க முயல்கிறவன், ஆகிய இந்தப் பதினாறு பேர்களுமாம். ஒருவன் பிறனிடத்தில் நீதியாக நடந்தால் அவனும் நீதியாகவே நடப்பான். இது இராஜநீதி முறையாம். எவன் தன்னிடத்தில் வஞ்சனையாக நடக்கிறானோ அவனிடத்தில் தானும் வஞ்சனையாக நடக்க வேண்டும். யோக்கியமாக நடக்கிறவனிடத்தில் யோக்கியமாகவே நடக்க வேண்டும். மூப்பு அழகைக் கொல்லும். பொறுமை கவலையை அழிக்கும். மரணம் ஜீவனைக்கொல்லும். தருமாசரணை உலக இன்பத்தை அழிக்கிறது. காமம் மானத்தைஅழிக்கிறது. துஷ்டருடைய சினேகிதம் நல்லொழுக்கத்தை அழிக்கும். கோபம் செல்வத்தை அழிக்கிறது. பருவம் எல்லாவற்றையும் அழித்துவிடும்.

 

ஒருவன் தன்னிடத்தில் நம்பிக்கையாக ஒப்பு வித்த மனைவியை அபகரிக்கிறவனும், குருதல்பகமனம் செய்கிறவனும், மதுபானம் செய்கிறவனும், அந்தணர் பொருளை அபகரிக்கிறவனும், அடைக்கலம் புகுந்தவர்களைக் கொல்கிறவனும், ஆகிய இவர்கள் எல்லாரும் பிரமஹத்தி செய்த பாபிகளுக்குச் சமானமானவர்கள். இவர்களுடன் சேர்ந்தவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமென்று வேதம் கூறுகின்றது.

 

புத்திமான்களுடைய உபதேசத்தைக் கேட்கிறவனும், நீதியை அனுசரிக்கிறவனும், சுயாதீனமாயிருக்கிறவனும், தேவ பிதிர்க்களுக்கு நைவேத்தியம் செய்து பின் புசிக்கிறவனும், பொறாமையில்லாதவனும், பிறருக்கு யாதொரு துன்பமும் செய்யாதவனும், நன்றியுள்ளவனும், உண்மையுள்ளவனும், வணக்கமுள்ளவனும், படித்தவனுமாகிய இவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். எல்லாருக்கும் பிரியமான வசனங்களைப் பேசுகிறவன் நிறைந்த செல்வத்துடன் எப்போதும் வாழ்வான். நன்றாய்ப் பேசுகிறவன் கிடைப்பது அரிது. அப்படிப் பேசுகிறதைக் கேட்கிறவன் அகப்படுவதும் அரிது. ஒவ்வாத வார்த்தைகளே எல்லாருக்கும் சாதாரணமாயிருக்கின்றன. எஜமானனுக்குப் பிரியமானதையாவது அப்பிரியமானதையாவது பேசாமல் தர்மத்தையே நோக்குகிறவன் சொல்கிற இனிமையற்ற வசனங்களே உண்மையில் சிறப்பாகும். அவனே உண்மையில் பலத்தைச் சேர்க்கிறான். ஒரு குடும்பத்துக்காக ஒரு மனிதனை விட்டு விடலாம். ஒரு இராஜ்யத்துக்காக ஒரு கிராமத்தை அழித்து விடலாம். தன் நிமித்தம் பூமி முழுவதையும் விட்டு விடலாம். தனக்கு ஆபத்து வரும் என்கிற நோக்கத்தால் தன் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். செல்வத்தினாலே தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். மனைவி செல்வ மிரண்டாலும் தன்னைக் காப்பாற்ற வேண்டும். ஆதிகாலத்திலிருந்து சூதாடுகிறது சண்டையை உண்டாக்குமென்று அறியப்பட்டிருக்கிறது. ஆகையால் புத்திமான்கள் விளையாட்டுக்காகக் கூட அதை அனுசரிக்கக் கூடாது. வெறுப்பு இல்லாத தன்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனும் தன் நன்மையை நாடுகிறவனுமான வேலைக்காரனை எஜமான் நேசிக்கிறான். அதனால் வேலைக்காரன்தன் எஜமானுடைய கஷ்ட காலத்திலும் அவனை விட்டு விலகாமலிருக்கிறான். வேலைக்காரனுடைய மானியத்தைப் பிடுங்கிக்கொண்டாவது அவன் சம்பளத்தை நிறுத்தியாவது ஒருவன் திரவியம் சேர்க்கப்படாது. ஏனென்றால் பிரியமுள்ள மந்திரிகள் கூடத் தமது ஜீவனாதாரம் கெட்டுப்போனால், தங்களுடைய எஜமானனுக்கு விரோதியாய்க் கஷ்ட காலத்தில் அவனைக் கை விடுகிறார்கள்.

 

உத்தேசித்திருக்கிற காரியங்களை நினைத்து வேலைக்காரர்களுக்குச் சம்பளத்தையும், உபகாரச் சம்பளத்தையும் கொடுத்து, வேண்டும் செலவுக்கும் பணம் கொடுத்து அவர்களைத் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும். ஏனென்றால் துணைவர்களால் நிறைவேற்றப்படாதது ஒன்றுமில்லை. தன் அரசனுடைய எண்ணத்தை நன்றாய் அறிந்து கொண்ட உத்தியோகஸ்தன் சகல காரியங்களையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பான். தன் எஜமானனுடைய எண்ணத்தை அறிந்து அவனிடத்தில் விசுவாசமும் மரியாதையு முள்ள வேலைக்காரன் தன் எஜமானுடைய நன்மையைப் பற்றியே எப்போதும் பேசுவான். தன் சொந்த வல்லமையையும், தான் யாருக்கு விரோத மாய்க் காரியம் செய்யத் தொடங்குகிறானோ அவனுடையதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அரசனுடைய இரண்டாவது வேலை. தன் எஜமான் கட்டளையை அவமதிக்கிறவனும், இட்ட வேலையைச் செய்யமாட்டே னென்று மறுக்கிறவனும், தன் புத்தியினாலே இறுமாந்திருக்கிறவனுமான வேலைக்காரனை உடனே விலக்கிவிட வேண்டும்.

 

கர்வமின்மை, வல்லமை, தாமதம் பண்ணாமை, பட்சம், சுத்தம், பிழை செய்யாமை, வியாதில்லாத உயர் குடிப்பிறப்பு, நல்ல பேச்சு என்கிற இந்த எட்டுக் குணங்களையும் உடையவர்களே வேலைக்காரர்களாயிருக்கத் தக்கவர்களாம். அஸ்தமித்த பிறகு தன் பகைவனுடைய வீட்டுக்கு எவ்வகையிலும் போகக்கூடாது. இரவில் ஒருவனுடைய வீட்டு முற்றத்தில் பதுங்கி யிருக்கக்கூடாது. அரசனால் விரும்பப்பட்டிருக்கிற ஸ்திரீயை இச்சிக்கக் கூடாது. இழிந்த சேர்க்கையுள்ளவனும், தான் கண்டவற்றைப் பற்றி யோசனை கேட்கிறவனுமான ஒருவனுடைய தீர்மானத்துக்கு விரோதமாகப் பேசக் கூடாது. நான் உன்னை நம்பமாட்டேனென்று அவனிடத்தில் சொல்லக் கூடாது. ஏதாவதொரு சாக்கைச் சொல்லி அவனை அனுப்பிவிட வேண்டும். மிகுந்த இரக்கமுள்ள அரசனானவன் துர் நடக்கையுள்ள ஸ்திரீ, அரசனுடைய சேவகன், மிகுந்த கஷ்டத்தையடைந்தவன், அரச குமாரன், அரசன் சகோதரன், இளம்பிள்ளையைப் பெற்றுவைத்துக் கொண்டிருக்கிற விதவை, போர்ச் சேவகன், மிகுந்த நஷ்டத்தை அடைந்தவன், ஆகிய இவர்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் முதலிய வியாபாரம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஞானம், உயர்குடிப் பிறப்பு, வேதஉணர்ச்சி, மன அடக்கம், சாமர்த்தியம், மிதபாஷணம், சக்திக்குத் தக்கபடிதானம் செய்தல், நன்றியறிவு இந்த எட்டு குணங்களும் ஒருவனுக்கு வரத்தினால் கிடைக்கத்தக்கவை. அரசன் ஒருவன் மேல் தயவாயிருந்தால் அவனுக்குஇவைகளெல்லாம் சேர்கின்றன. பலம், அழகு, நல்ல குரலோசை, அக்ஷரங்களைச் சுத்தமாயுச்சரித்தல், மென்மைத் தன்மை, நல்ல மனம், சுத்தம், நன்றியறிவு, மிருதுவான அவயவங்கள், அழகான ஸ்திரீ இந்தப்பத்தும் யாகம்செய்த ஒருவனுக்குக் கிடைப்பவைகளாம். மிதமான போஜனம் செய்கிறவன், சுகம், தீர்க்காயுசு, சௌக்கியம், சந்ததி சுகம், இகழ்ச்சியில்லாமை, பெருந்தீனியின்மை, இவைகளையும் அடைவான். துர்ச்செய்கையுள்ளவன், அதிகமாயுண்பவன், எல்லாராலும் பகைக்கப்பட்டவன், மகாவஞ்சக முள்ளவன், கொடியவன், காலம் இடம் பொருள் இவைகளை அறியாதவன், விகாரமான உடை உடுப்பவன், இலர்களுக்கு வீட்டில் இடம் தரக்கூடாது. உலோபி, பிறர்குற்றங்களை எடுத்துச் சொல்கிறவன், வேதத்தை அறியாதவன், வனத்தில் வசிக்கிறவன், வஞ்சகன், மதிக்கத்தக்கவர்களை மதியாதவன், துஷ்டன், வழக்கமாய்ப் பிறருடன் சண்டையிடுகிறவன், நன்றியறி வில்லாதவன், இவர்கள் கெஞ்சிக் கேட்ட போதிலும் அவர்களுக்குத் தானம் கொடுக்கக்கூடாது. பகைவன், எப்போதும் பிழை செய்கிறவன், பொய்யாக விவாகம் செய்து கொண்டவன், தெய்வபக்தி யில்லாதவன், அன்பில்லாதவன், எல்லாக் காரியங்களையும் செய்யவல்லவ னென்று தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறவன், இவர்களிடத்தில் ஒருபோதும் சேவகம் செய்யக்கூடாது. காரியங்களெல்லாம் சரியான காரணத்தையே அனுசரிக்கின்றன. எல்லாக் காரணங்களும் காரியங்களின் சுபாவத்தை அனுசரிக்கின்றன. காரண காரியங்களிரண்டும் ஒன்றை யொன்று அனுசரிக்கின்றன. காரியசித்தியோ இரண்டையும் அனுசரிக்கின்றது. புத்திரர்களை அடைந்து அவர்களுக்குச்சரியான ஜீவனாதாரங்களைக் கற்பித்துச் சுயாதீனமாயிருக்கச் செய்து, தக்க கணவனுக்குக் கன்னிகையைக் கொடுத்து, வனத்துக்குச் சென்று முனிவனாயிருத்தல் வேண்டும். கடவுளின் அருளை அடைய வேண்டும். எல்லாப் பிராணிகளுக்கும் பிரியத்தைச் செய்ய வேண்டும். தன் சுகத்துக்கும் தகுந்ததைச் செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதுதான் ஒருவன் தன்எண்ணத்தில் சித்தி பெறுவதற்கு மூலமாயிருக்கின்றது. ஜீவனத்துக்காகக்கவலைப் படுகிறவன், அறிவு, உற்சாகம், சாமார்த்தியம், சக்தி, விடா முயற்சி இவைகளை அனுசரிக்க வேண்டும்.
 

அரசனே! பாண்டவர்களைப் பிரித்து விட்டதனால் உண்டான தீமையைப்பாரும். அது இந்திரனுடன் கூடின சகலதேவர்களுக்கும் துக்கத்தை உண்டாக்குகிறது. முதலாவது பாண்டவர்களுக்கும் பகை, இரண்டாவது ஆயுசுள்ள வரைக்கும் தீராத் துயரம், மூன்றாவது கௌரவர்களுடைய சிறந்த புகழ் இகழப்பட்டது, நாலாவது உமது சத்துருக்கள் எல்லாருக்கும் சந்தோஷம். பீஷ்மர், துரோணர், நீர், இராஜாவாகிய யுதிஷ்டிரர் இந்நால்வருடைய கோபமும் ஒரு பெரிய தூமகேது பூமியின் மேல் குறுக்காய் விழுந்தது போல இந்த உலகம் முழுவதையும் எரித்துவிடப் போகின்றது. உமது புத்திரர்கள், கர்ணன், பாண்டு குமாரர்கள் இவர்கள் எல்லாரும் சேர்ந்தால் சமுத்திரத்தை மேகலையாகத் தரித்த பூமி முழுதையும் ஆளக்கூடும். அரசனே தார்த்தராஷ்டிரர்கள் ஒரு பெரியகாடு. பாண்டவர்கள் அந்தக்காட்டில் வசிக்கிற புலிகள் என்று நான் கருதுகிறேன்; புலிகளுடன் கூடின காட்டை அழித்து விடாதேயும்; காட்டிலிருந்து புலிகளைத் துரத்திவிடாதேயும். புலிகளில்லாமல் காடுகளில்லை; காட்டையின்றிப் புலிகளுமில்லை; காடு புலிகளுக்கு இருப்பிடம்; புலிகள் காட்டுக்குக் காவல்

 

பாபிகளாயிருப்பவர்கள் பிறருடைய குணங்களை ஆராய்ந்து அறியமாட்டார்கள். குற்றங்களையே ஆராய்வார்கள். உலக வாழ்க்கையில் மேலானநிலைமையை அடைய விரும்புகிறவன் முதலில் தர்மத்தை அனுசரிக்க வேண்டும். ஏனென்றால், உண்மையான அந்தச் செல்வம் சொர்க்கத்துக்கு வேறானதில்லை. எவனுடைய ஆத்மா பாபத்தை ஒழித்துப் புண்ணயத்தில் நிலைத்து நிற்கிறதோ அவன், எல்லாப் பொருள்களின் இயல்பையும், இடையிலுண்டாகும் கலைமையையும் அறிவான். எவன் தர்மார்த்த காமங்களைச் சரியானகாலத்தில் அனுசரிக்கிறானோ அவன் இம்மூன்றின் பயனையும் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் அனுபவிப்பான். எவன் கோபத்தையும் சந்தோஷத்தையும் ஜயித்து விடுகிறானோ அவன் துக்கத்தினால் புத்தியை இழக்கிறதில்லை; வாழ்வையே அடைகிறான்.  

 

மனிதர்கள் வெவ்வேறான ஐந்து வகைப் பலன்களை உடையவர்களாயிருக்கிறார்களென்று சொல்லப்படுகிறது. இவ்வைந்துக்குள் புஜபலம் இழிவுடையதாகக் கருதப்படுகிறது. நல்ல மந்திரிகளைத் தேடியடைவது இரண்டாவது பலமாகக் கருதப்படுகிறது. திரவியத்தை அடைவது மூன்றாவது பலமாகக் கற்றோர்கள் சொல்கிறார்கள். பிதா பிதாமகன் இவர்கள் வழியாலே அடையப்படுகிற பிறப்பு நாலாவது பலமாம். இவைகளாலே அடையப்படுவதும், எல்லாப் பலன்களையும் விட மேலானதாக மதிக்கப்படுவதுமான பலன் அறிவேயாகும். தன்னை ஒத்தவர்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய பகையை எழுப்பிவிட்டு, அவர்கள் தூரத்தில் வசிக்கிறார்களென்னும் எண்ணத்தை உறுதியாகக் கொள்ளக் கூடாது. புத்திசாலியாயிருக்கிறவன் அரசன், சர்ப்பம், தன் எஜமான், சத்துரு, சுகானுபவம், தீர்க்காயுசு இவைகளிடத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது. அறிவாகிய அம்பினால் அடிக்கப்பட்டவனுக்கு மருந்துமில்லை, வைத்தியனுமில்லை. இவ்விஷயத்தில் அவன் ஹோமமந்திரங்கள், மங்களமான சடங்குகள், அதர்வண வேத மந்திரங்கள், விஷத்தை மாற்றும் மருந்து இவைகளாலும் பிரயோசனத்தையடைய மாட்டான்.

 

பாம்பு, சிங்கம், நெருப்பு, இரத்தக்கலப்பான உறவு இவைகளில் ஒன்றையும் அலக்ஷியம் பண்ணக்கூடாது. ஏனென்றால் இவைகளில் ஒவ்வொன்றும் மஹா பல முள்ளதாயிருக்கின்றது. இவ்வுலகத்தில் நெருப்பு மஹா சக்தியுள்ள பொருள். இது விறகில் கலந்திருக்கிறது. பிறரால் மூட்டிவிடப்படாதிருக்கிற வரையில் அது அந்த விறகை எரிக்கிறதில்லை. கடைதல் முதலியவற்றால் அதை வெளிப்படுத்தினால் அது தன் சக்தியால் அந்தக் காட்டையையே யன்றி வேறு பல பொருள்களையும் எரித்துவிடுகிறது. உயர்ந்தவம்சத்தில் பிறந்தவர்கள் அந்த நெருப்பைப் போன்ற சக்தியுடையவர்களாயிருக்கிறார்கள். பொறுமை யுள்ளவர்களா யிருப்பார்கள். கோபக் குறியை வெளிக்குக் காட்ட மாட்டார்கள். காட்டில் மறைந்திருக்கிற நெருப்பைப் போல அடங்கி யிருப்பார்கள். அரசனே! நீரும் உமது புத்திரர்களும் புண்ணியத்தின் கொடியைப் போல இருக்கிறீர்கள். பாண்டவர்கள் சால விருட்சங்களைப்போ லிருக்கிறார்கள். கொடியானது தான் படர்வதற்குரிய மரம் பக்கத்திலிருந்தாலன்றிப் படராது. உமது புத்திரகள் ஒரு வனம்; பாண்டவர்கள் அந்த வனத்தில் வசிக்கிற சிங்கங்கள். சிங்கங்கள் இல்லாமற் போனால் வனம் அழகு அழிந்து கெட்டுப்போகும்; வனம் இல்லாவிட்டால் சிங்கங்களும் அழிந்து போகும். கிழவனும் மரியாதை யுள்ளவனுமான ஒருவன் தன் வீட்டுக்கு விருந்தாக வந்தால், அப்போது யௌவன புருஷனுடைய மனமானது உயரப்பறக்கிறது. அவன் எதிர்கொண்டு போய்விருந்தாளியை வணங்கின பின் அந்த மனதை மீண்டும் அடைகிறான். மன அடக்கமுள்ள அந்தப் பாலியன் விருந்தாளிக்கு ஆசனமிட்டு அர்க்கிய பாத்தியங்கள் கொடுத்து கிரமப்படி யோக க்ஷேமங்களை விசாரிக்கிறான். அதன் பின் தன் விஷயங்களைப் பேசுகிறான். எல்லாவற்றையும் யோசித்துப் பின் அதிதிக்குப் போஜனமிடுகிறான். அந்தணன் எந்த வீட்டில் மந்திரத்துடன் தண்ணீர், தேன் முதலியவற்றைப் பெறுகிறதில்லையோ அந்தவீட்டில் வசிக்கிறவன் பயன் அடைகிறதில்லை. வைத்தியன், அம்பு பண்ணுகிறவன், பிரமசரிய விரதத்தை அனுசரிக்க முடியாமல் விட்டவன் ஆகிய இவர்களும் விருந்தினர்களானால் உபசரிக்க வேண்டும்.

திருடன், திருடு நெஞ்சுள்ளவன், குடிக்கிற பிராமணன், தப்பொழுக்கமுள்ளவன், படைச்சேவகன், வேதத்தை விற்கிறவன் இவர்கள் தண்ணீர் கொடுக்கக்கூடத் தகாதவர்களாயிருந்தாலும், விருந்தாக வந்தால் பிரியமாகவே நடத்த வேண்டும். உப்பு, சமைத்த சாதம், தயிர், பால், தேன், நெய், எண்ணெய், எள், மாம்சம், கனி, கிழங்கு, கீரை, வாசனைத் திரவியம், பாகுமுதலியவைகளைப் பிராமணன் ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது. ஒருபோதும் கோபத்துக்கு இடந்தராதவன், களிமண், பொன், கல் இவைகளைச் சமனாய்ப் பார்க்கிறவன், துக்கத்தை அடக்கியவன், சிநேகம் பகைகளை விரும்பாதவன், புகழ் இகழ் இரண்டையும் சமமாக மதிக்கிறவன், விருப்பு வெறுப்புகளைக் கடந்தவன், பிட்சுக்களில் சிறந்த யோகியாவான். வனத்தில் தானாகவே உண்டாகிற தானியம் கிழங்கு இலைகளைப் புசித்து ஜீவிக்கிற தவசி, ஆத்மாவை அடக்கினவன் (தன்னடக்க முள்ளவன்) ஆராதிக்கிற அக்கினியைப் பத்திரமாகக் காப்பாற்றுகிறவன், வனத்தில் வசித்துக் கொண்டு அதிதிகளை உபசரிக்கிறவன், இவர்களும் முன் சொன்னவர்களுக்குச் சரியான யோகியாவார். அறிவுள்ள மனிதனுக்கு இடைஞ்சல் செய்து விட்டுத் தூரத்திலிருந்து கொண்டு அவன் சமாசாரங்களை விசாரிக்கக் கூடாது. ஏனென்றால் தீங்கு செய்யப் பட்டவனுக்குப் புஜங்கள் நீண்டிருக்கின்றன. ஆகையால் அவன் தீமைகளை எளிதில் செய்யக் கூடியவனாவான். நம்பத்தகாதவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. நம்பக் கூடியவர்களிடத்திலும் அதிக நம்பிக்கைவைக்கக் கூடாது. ஏனென்றால் நம்பிக்கை வைக்கப்பட்டவனிடத்திலிருந்து உண்டாகும் தீமை நம்பினவனை வேரோடு அழித்து விடும். பகையை விட்டு விட வேண்டும். தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். பிறருக்குச் சொந்தமானதை அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். இனிமையாகப் பேசவேண்டும். ஒருவன் இனிய பேச்சை யுடையவனாய், மனைவியைக் கூப்பிடும் போது மரியாதையாய் மதுரமான வசனத்தால் கூப்பிட வேண்டும். ஆனால் அவளுக்கு அடிமையா யிருக்கக்கூடாது. புண்ணியவதியும் வாழ்வுள்ளவளுமான மனைவி மரியாதை செய்யத்தக்கவளும், அந்த வீட்டுக்கு ஆபரணமுமாயிருக்கிறவளுமாவாளென்று கூறப்படுகிறாள். அவளே குடும்ப வாழ்க்கைக்குச் சிறந்தவள் ஆகையால் அப்படிப்பட்டவர்களை விசேஷமாகக் காப்பாற்ற வேண்டும். தன் பிதாவினுடைய அந்தப்புரத்தையும், மாதாவினுடைய சமையல் அறையையும், பசுவையும் தன்னுடைய பொருள் போலக் கருதிப்பார்க்க வேண்டும். பயிரைத் தன்னைப் போலவே கருதிப் பார்க்க வேண்டும். வைசியர்கள் அதிதிகளை வேலைக்காரர் மூலமாகத் தேடவேண்டும்; பிராமணன் தன் புத்திரனைக் கொண்டு தேடவேண்டும்.

 

நெருப்புக்குத் தண்ணீர் உற்பத்திஸ்தானம். க்ஷத்திரியர்கள் பிராமணரிடத்தில் உற்பத்தியாகிறார்கள். இரும்புக் கல்லில் உற்பத்தியாகிற தீ, இரும்பு, க்ஷத்திரியன் இம்மூன்றின் சக்தி மற்ற எல்லாவற்றையும் தாக்கக்கூடும். ஆனாலும் தங்களுக்கு உற்பத்தி ஸ்தானங்களிடத்தில் மாத்திரம் சக்திகுன்றிப் போய் விடுகின்றன. தீயானது கட்டைக்குள் மறைந்து வெளிப்படாமலிருக்கின்றது. நல்லவர்களும் பொறுமை யுள்ளவர்களும் உயர் குடியிற் பிறந்து அக்கினி போன்ற சக்தியுடையவர்களா யிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கிற சக்தியை வெளியாகும் படி புலப்படுத்துகிறதில்லை. தன் ஆலோசனையைப் பிறர் அறியாமல் காத்துக் கொண்டு பிறர் யோசனையைத் தூதர் மூலமாகத் தெரிந்து கொள்கிற அரசன் நெடுங்காலம் சுகத்துடன் வாழ்வான். தான் செய்ய நினைத்திருக்கிறதைப் பிறர் அறியாமல் காப்பாற்ற வேண்டும். ஒருவருக்கும் சொல்லக் கூடாது. தர்மம் அர்த்தம் இவைகளைப்பற்றி நீ யோசித்திருப்பதை அது முடிகிறவரைக்கும் வெளியிடக்கூடாது. உன் மந்திராலோசனையை ஒருபோதும் பகிரங்கப் - டுத்தாதே. மலைச் சிகரத்தின் மேலிருந்தாவது, மாளிகையின் மேல் நிலையிலிருந்தாவது, செடிகொடி மரங்களடர்ந்த வனத்திலிருந்தாவது யோசனையை முடிக்க வேண்டும். கல்வி அறிவில்லாத சினேகிதனும், படித்திருந்தும் மன அடக்க மில்லாத சிநேகிதனும் பொக்கிஷஸ்தான இரகசியங்களை அறியத்தகாதவர்கள். பரிக்ஷித்து அறியாமல் ஒருவனையு மந்திரியாக நியமிக்கக்கூடாது.

 

ஏனென்றால் அரசிறை வருமானம், மந்திராலோசனை யிவைகள் மர்திரியையே அனுசரிக்கின்றன. தர்மம் அர்த்தம், காமம் இவைகளுக்கொத்துக்காரியத்தைச் செய்கிறவனும், அந்தச் செய்கை முடிந்தபின் வெளிப்படுத்துகிறவனுமான மந்திரியையுடைய அரசன் இராஜாக்களுள் மேலானவன். அடக்கமான மந்திரியையுடைய அரசன் நிச்சயமாகவே காரியசித்தி பெறுவான். அறிவில்லாமையால் காரியங்கள் குறைவை அடையும்படி செய்கிறவன், அது சரியாய் முடியப் பெறாமையால் தன் ஜீவனையும் இழப்பான். புகழ்ச்சித்தரக் கூடிய காரியங்களை மகிழ்ச்சியுடன் செய்யவேண்டும். அப்படிப்பட்ட காரியங்களை விட்டுவிட்டால் பின்னால் வருத்தப்பட நேரிடும். வேதாத்தியாயனம் பண்ணாத பிரமாணன் சிரார்த்த காரியத்துக்கு உபயோகப்பட மாட்டான். அது போலவே ஆறுவிதமான அரசாங்க விஷயங்களை அறியாத அரசன் அரசாட்சிக்கு உபயோகப்பட மாட்டான். விருத்தி, குறை, நிலுவை, இவைகளை கண்ணோட்டம் செய்கிறவனும், ஆறு உபாயங்களை உணர்ந்தவனும், தன் நிலைமையை உணர்ந்தவனுமான அரசன் உலகம் முழுமையும் தன் குடைக்கீழ் கொண்டு நெடுங்காலம் அரசு புரிவான். எப்போதும் புகழப்படுகிற காரியங்களையே செய்ய வேண்டும். கோபத்தையும் மகிழ்ச்சியையும் சரியாக உடையவனும், செய்ய வேண்டிய காரியங்களைத் தானே நேரில் பார்க்கிறவனும், பொக்கிஷத்தைத் தன் அதிகாரத்துக்குள் வைத்துக் கொண்டிருக்கிறவனுமான அரசன் உலகம் முழுமையும் தன் அரசாட்சிக்குள் அடக்கி ஆளுவான். அரசன் தன்னுடைய கீர்த்தியாலும் தன் தலையின் மேல் பிடிக்கிற குடையாலும் திருப்தி அடைய வேண்டும். தன் வேலைக்காரர்களுக்கு அரசிறை வரியில் பாகம் கொடுக்க வேண்டும். எந்தப் பொருளையும் அவன் தனியாக அடையப்படாது. பிராமணன் பிராமணனை அறிவான், கணவன் தன் மனைவியை அறிவான், அரசன் மந்திரியை அறிவான். சக்கரவர்த்தி சக்கரவத்தியை அறிவான். கொல்லத் தக்கவன் தன்னிடம் சிறையானால் அவனை விட்டு விடக் கூடாது. பலஹீனனாயிருக்கிறவன், தன் சத்துரு கொல்லத்தக்கவனாயிருந்தாலும் அவனுக்கு மரியாதை செய்து வணக்கமாயிருக்க வேண்டும். ஆனால் தனக்குப் பலமுண்டான போது அவனை உடனே கொல்லவேண்டும். கொல்லா விட்டால் பெரிய அபாயம் நேரிடும். தேவர்கள் அரசன் பிராமணர்கள் விருத்தர் குழைந்தைகள் ஆகரிப்பார் இல்லாதவர்கள் இவர்களிடத்தில் பிரயத்தனப்பட்டாவது கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். அனாவசியமாகச் சண்டை செய்யக்கூடாது. அது மூடர்கள் செய்யத்தக்கது. இப்படிச் செய்தால் இந்த உலகத்தில் பெரியகீர்த்தியையும் துக்க நிவர்த்தியையும் சந்தோஷத்தையும் அடைவான். பயனில்லாத தயவையுடையவனும், பயனில்லாத கோபத்தை யுடையவனுமான அரசனை ஸ்திரீகள் நபும்ஸகனை வெறுக்கிறது போல ஜனங்கள் வெறுப்பார்கள். அறிவே செல்வம் அடைவதற்குக் காரணமாவதில்லை. தரித்திரத்துக்கு தரித்திரமும் காரணமாகாது. அறிவுள்ளவன் உலகத்தின் பேதாபேதங்களை அறிவான். மற்றவர்கள் அறியமாட்டார்கள். வயதினால் பெரியவர்களையும், நல்ல நடக்கையையும், கல்வியையும், அறிவையும், ஐசுவரியத்தையும், உயர் குடும்பத்தையும் மூடர்கள் எப்போதும் அலக்ஷியம் பண்ணுவார்கள். துர்க்குணங்கள், அறிவில்லாமை, பொறுமை, பாவம், கோட்சொல்லல், கோபம் இவைகளை யுடையவர்கள் சீக்கிரத்தில் கேடு அடைகிறார்கள். வஞ்சனையில்லாமை தானம் லௌகிக விதிகள் அடக்கமான பேச்சு இவைகள் எல்லாரையும் வசமாக்குகின்றன. கபடமில்லாதவன், முயற்சியுள்ளவன், நன்றியுள்ளவன், வஞ்சகமில்லாதவன் இவர்கள் பொக்கிஷத்தில் திரவியமில்லாதிருந்தாலும் மந்திரிகள் சிநேகிதர்கள் வேலைக்காரர்கள் இவர்களை அடைகிறார்கள். புத்தி, மன அடக்கம், புலனடக்கம், பரிசுத்தம், கொடுஞ் சொற் கூறாமை சிநேகிதர்களுக்குப் பிரியமில்லாததைச் செய்யாமை இவைகள் ஐசுவரியமாகிற நெருப்புக்கு விற்குகளென்று சொல்லப்படுகின்றன. பிறருக்கு சொந்தமானதை அவர்களுக்குக் கொடுக்க விரும்பாதவன், வெட்கமில்லாதவன், துஷ்டன் இவர்களை அவசியம் விலக்கி விடவேண்டும். குற்ற மற்றவனுக்குக் கோபம் மூட்டுகிற துஷ்டன் ஒரே அறையில் பாம்புடன் கூடி வசிப்பவனை ஒப்பான். இரவில் அவன் சமாதானத்துடன் தூங்கமாட்டான். தங்கள் நிலைமையை இழந்தவர்களையும், பொருள் வரும் வழியை இழந்தவர்களையும் தேவர்களைப் போலக் கருதிச் சந்தோஷப்படுத்த வேண்டும். ஸ்திரீகளைப் பற்றிய அபிப்பிராயமுடையவர்கள், ஜாக்கிரதை யில்லாதவர்கள், துஷ்டகுணமுள்ளவர்கள், குலாசாரத்தினின்றும் தவறினவர்கள் இவர்கள் காரியசித்தி பெறுவது சந்தேகம். ஸ்திரீ, வஞ்சகன், பாலர் இவர்கள் வழிபற்றி நடப்பவர்கள் கல்லால் செய்த ஓடத்தில் ஏறி ஆற்றைக் கடப்பவர்களைப் போல முழுகிப் போவார்கள். காரியத்தின் விசேஷ இயல்பை அறியாமல் சாதாரண இயல்பை அறிந்தவர்களையும் நான் புத்திமானென்று கருதுகிறேன். ஏனென்றால் விசேஷ இயல்பை அறிவதற்கு ஒத்தாசை வேண்டப்படுகிறது. சோரன் விகடகவி நிந்திக்கப்பட்ட ஸ்திரீ இவர்களால் புகழப்படுகிறவர்கள் உயிரோடிருந்தும் செத்தவர்களேயாவார்கள். அரசனே! நீர் அளவில்லாத சக்தியையுடைய பாண்டவர்களை விலக்கி விட்டு உமது புத்திரனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறபடியால் நீரும் துன்பப்படுவீரென்று விதுரர் சொன்னார்.

 

அரசன் - விதுரா! வாழ்வு தாழ்வுகளை மனிதன் தானாகவே செய்து கொள்கிறதில்லை. அவன் சூத்திரக் கயிற்றினால் ஆட்டப்படுகிற மரப்பதுமையை ஒத்து இருக்கிறான். கடவுள் மனிதனை விதியின் வசத்தில் விட்டிருக்கிறார். ஆகையால் மேலே சொல் என்றான்.

 

விதுரர் - அகாலத்தில் பேசுவதினாலே பிரகஸ்பதிகூடப் புத்தியீனனாய் அவமானம் அடைகிறான். ஒருவன் கொடையினால் வசமாகிறான். மற்றொருவன் ஒளஷதத்தினால் வசப்படுகிறான். ஆயினும் சுபாவத்தில் வசப்படுகிறவனே நிலையாயிருப்பான். பிறராலே வெறுக்கப்படுகிறவன் யோக்கியன் என்றாவது, புத்திசாலி என்றாவது, ஞானி என்றாவது மதிக்கப்படுகிறதில்லை. நேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் செய்கிறார்கள். வெறுக்கப்படுகிறவனுக்குத் தீமையே செய்கிறார்கள். லாபந்தரும் சிறிய நஷ்டத்தைப் பெரிதாக எண்ணப்படாது. ஏன் என்றால் இலாபத்தைத் தருவது ஒருபோதும் நஷ்டமாகாது. மேலும் நஷ்டத்தைக் கொடுப்பது எதுவோ அதுவே நஷ்டமாகும். சிலர் செல்வத்தாற் பெரியவர்களா யிருக்கிறார்கள். சிலர் குணத்தால் சிறந்தவர்களா யிருக்கிறார்கள். செல்வத்திற் சிறந்தவர்களை விட்டுக் குணத்தாற் சிறந்தவர்களையே அங்கீகரிக்க வேண்டும். குணங்கள் நிறைந்து வணக்க முள்ளவனாயிருக்கிறவன் ஒருபோதும் பிறருக்குத் தீமை செய்யான். பிறர் குற்றங்களையே பார்க்கிறவர்கள் பிறருடன் சண்டையிடுவதிலேயே முயற்சியாயிருக்கிறார்கள். எல்லா விஷயத்திலும் பிறருக்குத் தீமையே செய்கிறார்கள். கொடியதோற்றத்தை யுடையவர்களும், சகவாசத்தினாலே அபாயத்தை யுண்டாக்குகிறவர்களுமானவர்களுக்குப் பொருள் கொடுப்பது தகாது. கொடுப்பது பாபமாகும். அவர்களிடத்திலிருந்து ஒன்றை வாங்குவதும் அபாயத்துக்கிடமாகும். சண்டையிடுகிறவர்களும், பேராசையுள்ளவர்களும், நாணமற்றவர்களும், வஞ்சனையுள்ளவர்களும் நெறி கெட்டவர்கள். ஆகையால் அவர்களுடன் ஒரு போதும் சிநேகம் செய்யக்கூடாது. மந்த சுபாவமுள்ளவர்களையும் அப்படியே விலக்கி விடவேண்டும். ஈனர்களுடைய சிநேகிதம் ஒழிந்தபோது அதனால் அடையத் தக்க இலாப நஷ்டங்களுங் கூடவே ஒழிகின்றன. பிறகுஅந்த ஈனர்கள் பழைய சிநேகிதர்களைப் பற்றி யிழிவாகவே பேசுவார்கள். அவர்களுக்கு நஷ்டத்தையும் உண்டாக்குவார்கள். அந்த நஷ்டம் சிறிதா கஇருந்தாலும் மன அடக்கமில்லாமையால் எப்போதும் சமாதானமில்லாமலே யிருப்பார்கள். புத்திசாலியானவன் எல்லாவற்றையும் நன்றாய் யோசித்துச் சிந்தித்து இந்தக் கொடியவர்களுடைய சிநேகத்தை முற்றும் ஒழித்து விடவேண்டும். எளியவர்களும் ஆதரவில்லாதவர்களுமான பந்துக்களுக்கு உதவி செய்கிறவன் புத்திரர்களையும் பசு முதலியவைகளையும் பெற்று இன்பத்துடன் நெடுங்காலம் வாழ்வான். தன் பந்துக்கள் நல்ல குணங்கள் இல்லாதவர்களாயிருந்தாலும் அவர்களை ஆதரிக்க வேண்டும். தன் சொந்த நன்மையை விரும்புகிறவன் தன் பந்துக்களுடன் ஒருபோதும் சண்டையிடக் கூடாது. தன் பர்துக்களுடன் கூடியே சுகத்தை அனுபவிக்க வேண்டும். ஒருவரோடொருவர் சேர்ந்து புஜிக்க வேண்டும். சேர்ந்து சம்பாஷிக்க வேண்டும். விரோதப்படக் கூடாது.

 

பந்துக்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒரு போதும் சண்டைபோட்டுக் கொள்ளக் கூடாது. அரசனே இதுவே உறவினர் செய்யத் தக்கசெய்கையாம். தன் சொந்த நன்மையை விரும்புகிற எவனும் தன் பந்துக்களுடன் பகை வைக்கக்கூடாது. உலகத்தில் பந்துக்களா யிருக்கிறவர்கள் ஒருவரை இம்சிக்கிறார்கள். ஒருவரைத் துக்கத்தில் முழுகுவிக்கிறார்கள். தர்மாத்மாவா யுள்ளவனே யிரக்ஷக்கிறான். அதர்மி கெடுக்கிறான். வேடனைக் கண்டு பயப்படுகிறதைப் போல எந்தப் பந்துவைக் கண்டு ஒருவன் பயப்படுகிறானோ அந்தத் தனவந்தனான பந்து பயப்படுகிறவனுடைய பாவங்களை யெல்லாம் வாங்கிக் கொள்கிறான். பெரியோர்களால் கூறப்பட்டிருக்கிற இந்த வசனங்களை நன்றாய் யோசித்துக் காரியத்தைச் செய்யத் தொடங்குகிறவனுக்கு எப்போதும் கீர்த்தியே உண்டாகும். நன்றாய்ப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறவர்களிடத்திற் கூட இந்த ஞானம் குறைவு படுகிறது. இந்த ஞானமிருந்தாலும் அதை அனுபவத்துக்குக் கொண்டு வருவது அரிது. பாவமானதும் துக்கம் தருவதுமான காரியத்தை அறிவுள்ளவன் செய்யக்கூடாது. அவன் செல்வம் எப்போதும் விருத்தியாகின்றது. பூர்வ ஜன்மத்தில் நடந்த பாப மார்க்கத்தையே மூடத்தனத்தினால் பற்றி நடக்கிறவன் ஈனனுமாவான். அவன் ஆழான சேற்றில் மூழ்குகிறவனுமாவான். இந்த ஆறையும் புத்திமான் கைக்கொள்ள வேண்டும். தன்வம்சம் நெடுங்காலம் விளங்க வேண்டுமென்று விரும்புகிறவன் பின் வரும் ஆறையும் விலக்க வேண்டும். அவை மதம், மனோராஜ்யம் செய்தல், பொறாமை, தூதர்களை அனுப்பும் விஷயத்தில் உபேக்ஷையாயிருப்பது, தன் ஒருவனுக்காகவே யோசித்தல், தூர்த்தர்களிடத்தில் நம்பிக்கை வைப்பது என்பனவாம். இந்த ஆறும் அனர்த்தத்திற்கு வாயில்களாக இருப்பதனால் அவசியம் இவைகளை விலக்க வேண்டும். இவைகளைச் சரியாய் அனுஷ்டிக்கிறவன் தன் பகைவருடைய சிரசில் விளங்குவான். வேதத்தில் பழக்கமில்லாமலும், பெரியோர்களை அடுக்காமலு மிருக்கிறவன் பிருகஸ்பதிக்குச் சமமான அறிவுள்ளவனாயிருந்தாலும் அவன் அர்த்த காமங்களை அடைய மாட்டான். அவைகளை அறியவுமாட்டான்.

 

சமுத்திரத்தில் எறிந்த பொருள் இழக்கப்பட்டதேயாம். தன்னடக்கமில்லாதவனுக்கு வேதம் பயன் தராது. கேளாதவனுக்குச் சொல்வதும் பயன்படாது. சாம்பலில் ஓமம் செய்த நெய் பயன்படுவதில்லை. அறிவுள்ளவன் அறிவுள்ளவனிடத்திலேயே சிநேகிதம் செய்வான். தன் அறிவினாலும், யோசனையாலும் முதலில் பரிட்சித்தே சிநேகிதம் செய்வான். கண்ணாலும் காதாலும் பரிட்சியாமல் சிநேகிதம் செய்ய மாட்டான். வணக்கமானது இழிவுரைகளை அழிக்கும். சாமர்த்தியம் தவறுதலை அழிக்கும். பொறுமை எப்போதும் கோபத்தை ஜயிக்கும். நல்ல செய்கை துன்மார்க்கத்தை நாசம் பண்ணும். ஒருவனுடைய உயர் பிறப்பை அவனது போகானுபவம், பிறப்பிடம், குடும்பம், நடக்கை, ஆகாரம், உடை, இவைகளால் பரிட்சித்து அறிய வேண்டும். அனுபவிக்கத் தக்க பொருள் கிடைத்தால் அவன் சிறையிலிருந்தாலும் அதை அனுபவிக்கத் தவறமாட்டான்; என்றதனால் அவன் சகல மங்கள காலங்களிலும் அதை அனுபவிப்பான் என்பது விளங்கும். அறிவுள்ளவர்களுக்கு அடங்கியிருக்கிறவனும், படித்தவனும், தர்ம முள்ளவனும், சரியான தோற்றமுள்ளவனும், நல்ல சிநேகித முள்ளவனும், இனிமையாகப் பேசுகிறவனும், நல்ல இருதயமுள்ளவனுமான மனிதனையே மந்திரியாக அரசன் நியமிக்க வேண்டும். தாழ்ந்த வம்சத்தில் பிறந்தவனானாலும் மரியாதையும், வணக்கமுள்ளவனும், லஜ்ஜையுள்ளவனுமா யிருக்கிறவன் உயர் குலத்தில் பிறந்த நூறு பேர்களை விட மேலானவன். மனம், இரகசியம் காத்தல், இன்பம், செல்வம் இவைகளில் ஒத்திருக்கிறவருடைய சிநேகிதம் ஒரு போதும் விடுபடுகிறதில்லை. புல்லால் மூடப்பட்டிருக்கிற கிணறு போன்ற வாயை யுடையவர் துஷ்டர்களிடத்தில் ஒருபோதும் சிநேகிதம் செய்யக்கூடாது. அவர்களுடைய சிநேகிதம் நிலை நில்லாது. அறிவுள்ளவன் கர்வமுள்ளவர்கள், அறிவில்லாதவர்கள், கொடுமை யுள்ளவர்கள், முரட்டுத்தன முள்ளவர்கள், தர்மங்கடந்தவர்கள் இவர்களுடன் சிநேகிதம் செய்யக்கூடாது. நன்றி, தர்மம், பக்தி, புலனடக்கம், தன் அந்தஸ்தைக் காப்பாற்றுதல், சிநேகிதர்களை விடாமை ஆகிய இவைகளை யுடையவனிடத்தில் சிநேகம் செய்யவேண்டும். புலன்களை விஷயங்களினின்றும் மீட்பது மரணம் போன்ற கஷ்டத்தைத் தரும். இந்திரிய விஷயங்களை அதிகமாகப் பாராட்டுவது தேவர்களைக் கூட அழிக்கும். எல்லாப் பிராணிகளிடத்திலும் பிரியமாயிருப்பது, வணக்கம், பொறுமை, சிநேகிதர்களிடத்தில் மரியாதையாயிருத்தல் இவைகள் நீண்ட ஆயுளைக் கொடுக்குமென்று அறிஞர்கள் சொல்கிறார்கள். விடப்பட்ட தர்மங்களை மறுபடியும் உறுதியாக அனுஷ்டிக்கிறவனை ஆண்மையுள்ளவனென்று கூறுகிறார்கள். இனிமேல் வரும் இடையூறுகளைத் தடுக்கத் தெரிந்தவனும், நிகழ் காலத்தில் உறுதியான காரிய நிச்சயத்தை யுடையவனும், தொடங்குவதற்கு முன்னமே இப்படிச் செய்தால் இது இப்படியாகுமென்று அறிகிறவனும் தன் மனோரதங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறான். வாக்காலும் செய்கையாலும், எண்ணத்தினாலும் எது அதிகமாகப் படுகிறதோ அது மனிதனைத் தன் வசப்படுத்திக் கொள்கிறது. ஆகையால் மனிதன் தனக்கு நன்மையான விஷயங்களிலேயே பழகவேண்டும். எது நன்மையானது என்பதையும், கால தேசங்களின் நன்மையையும், காரியம் செய்யும் மார்க்கத்தையும், வேதஉணர்ச்சி, சுறுசுறுப்பு, முயற்சி, அடிக்கடி நல்லவர்களுடன் பழகுதல் இவைகளையும் அறிந்து செய்வதனால் நல்ல வாழ்வுண்டாகும். விடாமுயற்சியே, இலாபம் வாழ்வு பலன் இவைகளுக்கு மூலம். தன் எண்ணத்தை விடா முயற்சியுடனும் இடையூறினால் விட்டு விடாமலும் செய்கிறவன் பெரியதும் முடிவற்றதுமான வாழ்வை யடைவான்.

 

பொறுமையே மனிதனுக்குத் தேஜசையும் சுகத்தையும் எக்காலத்திலும் கொடுப்பதாம். அதைத் தவிர வேறொன்றுமில்லை. பலவீனன் எல்லா விஷயங்களிலும் பொறுமையாக இருக்க வேண்டும். சக்தி யுள்ளவன் தர்மத்தை உத்தேசித்துப் பொறுமையா யிருக்க வேண்டும். காரியங்களிலும் ஜயாபஜயங்களிலும் சமான புத்தியுள்ளவனே பொறுமையுள்ளவனா யிருக்கிறான். தன்னுடைய தர்மார்த்தங்களுக்கு விரோதமில்லாம லிருக்கிற இன்பமே திருப்தியாய் அனுபவிக்கத் தக்கதாம். புலன்களை இஷ்டப்படி செல்ல விட்டு மூடனைப் போல நடந்து கொள்ளக்கூடாது. துக்கத்தால் துன்பமடைந்து வருந்துகிறவன், துன்மார்க்கத்தில் பழகுகிறவன், சோம்பேறி, புலனடக்க மில்லாதவன், முயற்சியை விட்டவன் இவர்களிடத்தில் வாழ்வு நிலைத்திருப்பதில்லை. மரியாதையும், வணக்கமும் அடக்கமுமுள்ளவனை துன்மார்க்கர்கள் சக்தியில்லாதவனென்று நினைத்து வருவார்கள்.

 

மிதமிஞ்சின தானம், அளவில்லாமல் கொடுப்பது, அபூர்வமான வீரம், உக்கிரமான நோன்பு, தன் ஞானத்தால் கர்வித்தல் இவைகளை யுடையவனை வாழ்வு நெருங்க அஞ்சும். அதிகமான காரியசித்தி யுள்ளவன், காரியசித்தியில்லாதவன் இவர்களிடத்தில் வாழ்வு நிலைத்திருப்பதில்லை. சகல தர்மங்களாலும் நிறைந்தவனையும், தர்மமே யில்லாதவனையும் வாழ்வு அடைவதில்லை. செல்வமானது குருட்டுத் தனமாய்ப் பெருமையற்றவனிடத்தில் வசிக்கிறது. வேதத்துக்குப் பயன் அக்கினியால் ஓமம் செய்வது. வேதப் பயிற்சிக்கு நற்குண நற்செய்கைகளை யடைவது பயன். பெண்களாலாகும் பயன் இன்பம், சந்ததி விருத்தி. செல்வத்தாலாகும் பயன் போகானுபவம் தானம். பாபத்தால் சேர்ந்திருக்கிற செல்வத்தினால் பரலோகத்துக்குரிய தர்மத்தைச் செய்கிறவன் மறுமையில் அதன் பயனை அடைவதில்லை. ஏனெனில் பாபத்தால் தேடின அப்பொருள் மறுமை இன்பத்தைக் கொடாது. மனோபல முடையவன் வனத்திலும், துர்க்கத்திலும், பலவகை அபாயங்களிலும், பயகாலத்திலும், தன்னைக் கொல்வதற்காகத் தூக்கப்படுகிற ஆயுதங்களைப் பார்ப்பதிலும் ஒரு போதும் பயப்படுகிறதில்லை.

 

முயற்சி, அடக்கம், சாமர்த்தியம், ஜாக்கிரதை, உறுதி, ஞாபகம் முதிர்ந்த யோசனை இவைகள் ஐசுவரியத்துக்குக் காரணங்களாகின்றன. பொறுமையே தவத்துக்கு வலிமை கொடுப்பது. வேத முணர்ந்தவர்களுக்கு வேதமே பலம். துஷ்டர்களுக்குப் பலம் பகைமையில். தார்மிகர்களுக்குப் பலம் பொறுமையில். ஜலம், கிழங்கு, கனி, பால், நெய், பிராமணர்கள் இஷ்டப்படி செய்வது, குருவின் கட்டளைப்படி செய்தல், ஒளஷதம், இந்தஎட்டும் விரதங்களை அழிப்பதில்லை. தனக்கு விரோதமாயிருக்கிறதைப் பிறரிடத்தில் உபயோகிக்கக் கூடாது. சுருக்கமான தர்மம் இதுவே. அநேகவிதமான தர்மங்களிருந்தாலும் அவைகள் எண்ணத்திலிருந்து தோன்றுகின்றன. பொறுமையாலே கோபத்தை ஜயிக்க வேண்டும். துஷ்டர்களை யோக்கியத்தால் ஜயிக்க வேண்டும். உலோபியைக் கொடையால் ஜயிக்கவேண்டும். அசத்தியத்தைச் சாத்தியத்தால் ஜயிக்க வேண்டும். ஸ்திரீகள், சோரன், சோம்பேறி, அச்சமுள்ளவன், கொடியவன், தன் சக்தியைத் தானே மெச்சிக் கொள்கிறவன் இவர்களிடத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது. திருடன், நாஸ்திகன், நன்றியில்லாதவன் இவர்களையும் நம்பக்கூடாது. ஆண்மை, ஆயுசு, புகழ், வல்லமை இந்த நாலும் பெரியோரை வணங்குவதாலும், சேவிப்பதாலுமே விருத்தியாகின்றன. மஹா கஷ்டமான முயற்சியால் சம்பாதிக்கப் படுகிறதும், தர்மத்தை இழப்பதினால் சம்பாதிக்கப் படுகிறதும், சத்துருக்களை வணங்குவதால் சம்பாதிக்கப்படுகிறதுமான பொருளை இச்சிக்கக்கூடாது. அறிவில்லாதவளைப் பற்றித் துக்கிக்க வேண்டும். பலன் கொடாத காரியத்தைப் பற்றித் துக்கிக்க வேண்டும். அரசனில்லாத நாட்டைப்பற்றித் துக்கிக்க வேண்டும். பலமில்லா சரீரமுடையவர்களுக்கு நடக்கிற வழியானது துன்பந்தரும். மழையானது மலைகளுக்குத் துன்பமாகும். பெண்களுக்கு நாயகனில்லாம லிருப்பது துன்பமாகும். கொடுஞ்சொல் மனதுக்குத் துன்பந்தரும். பழக்கமில்லாமலிருக்கிறது வேதத்துக்குக் குறைவு. நோன்பில்லாம லிருப்பது பிராமணர்களுக்குக் குறைவு. பூமிக்கு வால்ஹிகளிருப்பது குறைவு. வினோதங்களைக் காண்பது கற்புடையபெண்களுக்குக் குறைவு. மற்றைய ஸ்திரீகளுக்கு வீட்டைவிட்டு வெளியில் போயிருப்பது குறைவு. தங்கத்துக்கு வெள்ளி அழுக்கு, வெள்ளிக்கு இரும்பு அழுக்கு, இரும்புக்கு ஈயம் அழுக்கு, ஈயத்துக்கு வண்டல் படிதல் அழுக்கு. ஒருவனும் படுத்துக்கொண்டு நித்திரையை ஜபிக்கமாட்டான். ஸ்திரீகளை விருப்பத்தினால் ஜயிக்க முடியாது. சிநேகிதர்களைத் தானத்தினாலும், சாத்துருக்களை யுத்தத்தினாலும், அன்னபானாதிகளால் மனைவியையும் அடக்கிக் கொள்கிறவன் காரியசித்தி பெற்றுச் சுகமாய் வாழ்வான். ஏதாவதொரு காரணத்தால் ஜீவியாதவன் ஒருவனுமில்லை. நெல், கோதுமை, தங்கம், பசுக்களை யோசித்துப்பார்த்து இராஜ்யம் முழுமையும் தனக்கு வேண்டுமென்றுஒருவனும் துக்கிக்கமாட்டான்.

 

நல்லவர்களால் மரியாதை செய்யப்பட்டுக் கர்வத்தை ஒழித்துத் தன் சக்திக்குத் தக்கபடி முயற்சிக்கிறவன் சீக்கிரத்தில் கீர்த்தி பெறுவான். நல்லவர்கள் ஒருவனிடத்தில் மகிழ்ச்சியா யிருந்தால் அவர்கள் சுகத்தையே தேடிச் செய்வார்கள். நீதியற்ற தன் எண்ணம் பெரிதாயிருந்தாலும் அதை விட்டு விடுகிறவன் சட்டை யுரித்த பாம்பைப் போலப் பகைவர்களைத் தொலைத்து விட்டுச் சுகத்தை அனுபவிப்பான், அசத்தியத்தால் பெற்ற ஜயம், அரசனிடத்சில் வஞ்சனையாக நடத்தல், குருவினிடத்தில் வஞ்சனையாகப் பேசுதல் இந்த மூன்றும் பிரமஹத்திக்குச் சமானமான தோஷமுடையவைகள். அதிக பகை, மரணம், தற்புகழ்ச்சி இம்மூன்றும் ஐசுவரியத்தை அழிக்கும்கருவிகளாம். குருவைச் சேவிப்பதில் அஜாக்கிரதையா யிருத்தல், அவசரம், தற்புகழ்ச்சி யிவை மூன்றும் அறிவின் சத்துருக்கள். சோம்பல், கவனியாமை, புத்தி மயக்கம், சாந்தியின்மை, கூட்டம் கூடி வீண் பேச்சு பேசுதல், கொடுமை, பேராசை இந்த ஏழும் கல்வி கற்கிற மாணாக்கர்களுக்குக் குற்றங்களாம்.

 

நல்லவர்களால் மரியாதை செய்யப்பட்டுக் கர்வத்தை விட்டொழித்துத் தன் சக்திக் கேற்றபடி முயற்சி செய்கிறவன் நல்ல மனிதனாம். அவன் சீக்கிரத்தில் கீர்த்தியை அடைவான். ஏன் என்றால் நல்லவர்கள் மகிழ்ச்சியை அடைந்தால் ஒருவனுக்குச் சுகத்தைக் கொடுக்கச் சக்தியுள்ளவர்களாயிருக்கிறார்கள். நீதியற்ற தன் எண்ணம் பெரிதாயிருந்தாலும் அதை விட்டு விடுகிறவன் சட்டையை யுரித்து விட்ட பாம்பைப் போலப் பகைவர்களைத் தொலைத்து விட்டுச் சுகத்தை அனுபவிப்பான். அசத்தியத்தால் பெற்ற ஜயம், அரசனிடத்தில் வஞ்சனையாக நடத்தல், குருவினிடத்தில் வஞ்சனையாகப் பேசுதல், இந்த மூன்றும் பிரமஹத்திக்குச் சமானமாகும் அதிகப்பகை, மரணம், தற்புகழ்ச்சியிவை மூன்றும் ஐசுவரியத்தை அழிக்கும் ஆயுதமாம். குருவைச் சேவிப்பதில் அஜாக்கிரதை, அவசரம், தற்புகழ்ச்சி யிம் மூன்றும் அறிவக்குச் சத்துரு. சோம்பல், கவனியாமை, புத்தி மயக்கம், சாந்தியின்மை, கூட்டம் கூடி வீண்காலம் போக்குதல், கொடுமை, பேராசை, இந்த ஏழும் கல்வி கற்கிற மாணாக்கர்களுக்குக் குற்றங்களாம். இன்பததை விரும்புகிறவன் ஞானத்தை அடையமாட்டான். கல்வி பயிலும் மாணாக்கன் இன்பத்தில் மனம் செலுத்தக்கூடாது. இன்பத்தை விரும்புகிறவன் ஞானத்தைவிடவேண்டும். ஞானத்தை விரும்புகிறவன் இன்பத்தை விட வேண்டும். நெருப்பு விறகினால் தீயடைவதில்லை. ஏனென்றால் நெருப்பு எவ்வளவு விறகானாலும் எரித்துவிடும் சத்தியை யுடையது. சமுத்திரம் ஆறுகளால் திருப்தியடையாது. எமன் சகல பிராணிகளையும் அழிகது விட்டாலும் திருப்தி அடைய மாட்டான். அழகான ஸ்திரீ எத்தனை புருஷர்களை அடைந்தாலும் திருப்தி அடைவதில்லை.

 

எண்ணமானது பொறுமையை அழிக்கிறது. எமன் விருத்தியை அழிக்கிறான். கோபம் ஐசுவரியத்தை அழிக்கிறது. கோபகுணம் கீர்த்தியை அழிக்கிறது. பழக்க மில்லாமை பசுக்களை அழிக்கிறது. கோபங்கொண்ட பிராமணன் கிராம முழுமையும் அழித்து விடுவான். ஆடுகள், வெண்கலம், வெள்ளி, தேன், விஷத்தை நீக்கும் ஒளஷதங்கள், பட்சிகள், வேதம் உணர்ந்த பிராமணர்கள், பழைய உறவினர், உயர் குலத்தில் பிறாது தரித்திரம் அடைந்தவர்கள் இவர்கள் எல்லாரையும் அரசன் ஆதரிக்க வேண்டும்.

 

ஆடுகள், ரிஷபங்கள், சந்தனக் கட்டைகள், வீணை, கண்ணாடி, தேன்,நெய், இரும்பு, செம்பு, சங்கம், சாளக்கிராமம், கோரோசனை யிவைகள் மங்களகரமான வஸ்துக்கள் என்றும், இவைகள் தெவர்கள் பிராமணர்கள் அதிதிகள் இவர்களைப் பூஜிப்பதற்காக ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டு மென்றும் ஸ்மிருதிகள் கூறுகின்றன. பெரும் பயன் தரக்கூடியதும், சகல உபதேசங்களுக்கு மேலாயுள்ளதுமான மற்றொன்று சொல்கிறேன். காமத்தினாலாவது பயத்தினாலாவது தூண்டுதலாலாவது ஒரு போதும் தர்மத்தை விடக் கூடாது. தன் ஜீவனைக் காப்பாற்றுவதற்காகக் கூட விடக் கூடாது. தர்மம் நித்தியமானது. இன்ப துன்பங்கள் நிலையற்றன. ஜீவன் நித்தியமானதா யிருந்தாலும், அதன் தோற்றம் அநித்தியமேயாம். நிலையற்றவைகளை விட்டு நித்தியமானதைக் கைப்பற்ற வேண்டும். திருப்தி யடைந்திருக்க வேண்டும். திருப்தி எல்லா ஐசுவரியங்களிலும் மேலானது. கீர்த்தியும் மகிமையு முள்ளவர்களாயிருந்த அரசர்கள் எல்லாரும் இராஜ்யத்தையும் யோகானுபவப் பொருள்களையும் விட்டுவிட்டு இறந்துபோனதை உலகம் அறியும். கவலைப்பட்டுப் புத்திரனை ஜாக்கிரதையாக வளர்க்கிறார்கள். அந்தப் புத்திரன் இறந்து போனால் அவனைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய் அங்கே தலைமயிரை விரித்துக் கொண்டு பரிதாபமாய் அழுகிறார்கள். பின் சிதையி லேற்றிச் சுடுகிறார்கள். அந்தச்சரீரத்தை அக்கினியும் பறவைகளும் பட்சிக்கின்றன. அவன் செல்வத்தை மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதன் இறந்தால் அவன் தன் சரீரத்துடன், உறவினர், சினேகிதர் இவர்களை புஷ்பமும் பலமும் இல்லாத மரத்தைப் பட்சிகள் விடுவது போல விட்டு விட்டுத் தான் மாத்திரம் தனியாகச் செல்கிறான். தர்மம் ஒன்றே அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது. ஆகையால் ஜாக்கிரதையாகவும் கொஞ்சங் கொஞ்சமாகவும் தர்மத்தைச் செய்யவேண்டும். இவ்வுலகத்திற்கு மேலும், கீழ்ப்புறமும் மேற்புறமும் இருளடைந்த உலகங்களிருக்கின்றன. இவ்வுலகங்களில் மனிதர்களுடைய இந்திரியங்கள் மிகுந்த துன்பத்தையே யடைகின்றன. மனிதன் இந்த உலகங்களை அடையாமலிருக்க வேண்டும். இப்பொழுது சொன்னவைகளை மனதில் வைத்துக் கொண்டு கவனமாய்ச் சிந்தித்து ஜாக்கிரதையாக நடக்கிறவன் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் சிறப்பாக வாழ்ந்து சுகப்படுவான். கவனியாதவன் நிச்சயமாகவே முற்கூறிய இருளுலகத்தில் துன்பப்படுவான்.

 

ஆத்மாவே நதி. சத்தியமே அந்த நதியின் ஜலம். தர்மமே ஸ்நானம். புலனடக்கமே அந்நதியின் கரை. ஆசையே அலைகள். தார்மிகன் அதில் ஸ்நானம் பண்ணிப் பரிசுத்தனாகிறான். ஆத்மா பரிசுத்தமானது. இச்சையில்லாமலிருப்பதே சிறந்த தர்மம். ஜீவிய காலமே ஒரு ஆறு. பஞ்சேந்திரியங்களே அதன் ஜலம். காமமே முதலை. கோபமே திமிங்கிலம். தன்னடக்கமே படகு. அந்தப் படகின் மேலேறியே பிறவிகளாகிய அலைகளை யுடைய அந்த நதியைக் கடக்க வேண்டும். அறிவிற் சிறந்தவர்களும், தார்மிகர்களும், படித்தவர்களும், வயதில் பெரியவர்களும் சிநேக குணமுள்ளவர்களுமானவர்களைப் பணிந்து, சினேகிக்கிற சினேகிதர்களை உபசரித்துத் திருப்தி செய்வித்துச், செய்யத்தக்கவைகளும் செய்யத் தகாதவைகளுமானவைகளை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நடக்கிறவன் தன் காரியங்களில் ஒருபோதும் தவறுதல் அடையான். 

 

பொறுமையினால் வயிற்றையும் காமத்தையும் அடக்க வேண்டும். கண்களாலே கைகளையும் கால்களையும் அடக்க வேண்டும். மனதினாலே கண்களையும் காதுகளையும் அடக்க வேண்டும். மனதையும் பேச்சையும் கல்வியாலே யடக்க வேண்டும். தவறாமல் ஓமம் செய்கிறவனும், எப்போதும் உபவீதம் தரித்திருப்பவனும், எப்போதும் வேதரத்தியயனம் செய்பவனும், பாவிகள் அன்னத்தைப் புசியாதவனும், சத்தியத்தைப் பேசுகிறவனும், குருபணி விடைகளைத் தவறாமல் செய்கிறவனுமான பிராமணன் எப்போதும் பிரமலோகத்தில் வசிப்பான். வேதத்தை அத்தியயனம் செய்தவனும், யாகம் செய்கிறவனும், குடிகளைக் காப்பாற்றுகிறவனும், பசுக்களையும் பிராமணர்களையும் காப்பாற்றுகிறதற்காக ஆயுதமெடுத்து யத்தம் செய்து பரிசுத்தனா யிருக்கிறவனும் தன் குடிகளைக் காப்பாற்றுகிறவனும், யுத்தத்தில் ஜீவனை விடுகிறவனுமான க்ஷத்திரியன் சொர்க்கத்தை அடைவான். வேதாத்தியயனம் செய்து சரியான காலத்தில் தன் செல்வத்தை க்ஷத்திரியர்களுக்கும் அந்தணர்களுக்கும் பகிர்ந்துகொடுத்து, மூன்று வகையான அக்கினிகளின் புகையை முகர்கிற வைசியனும் சொர்க்கத்தை அடைவான். முதன் மூன்று வருணத்தாரையும் திருப்தி செய்விப்பதினால் தன்பாபங்களைத் தகித்துப் பரிசுத்தனானநாலாம் வருணத்தான் சொர்க்கத்தில் சிறந்த வாழ்வைப் பெறுவான். நாலுவருணத்தாருடைய தொழில்களும் முன்னாலே சொல்லப்பட்டன.

 

அரசனே! கலியுகத்தில் சகல தர்மங்களும் மாறுமென்று நூல்கள் கூறுகின்றன. யுகம் மாறுதலாவது அரசனுடைய செங்கோலின் மாறுதலேயாம். அதனால் அரசனானவன் யுகங்களுக்கும் காரணமாக விருக்கிறான். அரசன் தானும் தர்மங்களைச் செய்து, குடிகளையும் தர்மநெறியில் ஒழுகச்செய்து, பட்சபாதக மின்றி நீதி செலுத்தினால் அதுவே கிருதயுக திரேதாயுகங்களாம். குடிகளைப் பரிபாலியாமலும், தர்மங்களை அனுஷ்டியாமலும், அதர்மத்திலும் அநீதியிலும் மனதைச் செலுத்தித் தன்மனம் போன வழியிலே நடக்கிற அரசனாலே கலியுகம் உண்டாகிறது. ஆகையாலே அரசனுடைய நடக்கையினாலேயே நாலுவகை யுகங்களும் உண்டாகின்றன வென்று தெரிந்து கொள்ளும். அரசனே உமது செய்கைகள் கலியை அழைக்கின்றன.

 

அரசனே! இதுகாறும் நமது முன்னோர்களாகிய மகரிஷிகளும், இராஜரிஷிகளும் அனுஷ்டித்து வந்ததும் சாஸ்திரங்களினால் புகழ்ந்து சொல்லப்பட்டவைகளுமான நீதி நியாயங்களாகிய உலகஞானத்தைச் சொன்னேன். இதன்படி நடந்து பாண்டவர்களுக்கு அவர்களுடைய பாகத்தைப் பகிர்ந்து கொடுத்து, மற்றப்பாதியை நீர் கைக்கொண்டு சுகமாய் அரசுபுரிய வேண்டுமென்பது என் கருத்து. இதற்குமாறாக நடந்தால் பாவமும் பழியும், மானக்கேடும் உண்டாகும். உமது பெருமை கெடுவது மல்லாமல் புதன்முகலாகந டைபெற்று வாழையடி வாழையாக விருத்தியாய் வருகிற நமது சந்திரவம்சத்துக்கும் இழிவுண்டாகும். உய்த்து நோக்கும் போது உமக்கு இராஜ்யமேயில்லை. எல்லாம் பாண்டவர்களுக்கே சொந்தம். அவர்கள் பிதிரார்ஜித முறைப்படி தங்கள் இராஜ்யத்தை அடைந்தார்கள். பிறகு தங்களுடைய புஜபலத்தாலே பூமி முழுவதையும் ஜயித்துத் தங்களுக்கு அடங்கியிருக்கச் செய்து கொண்டு சக்கிரவர்த்தி யானார்கள். அவர்கள் தர்மத்தினாலும் புஜபலத்தினாலும் அடைந்த இராஜ்யத்தை வஞ்சனையான சூதாட்டத்தால் அபகரித்துக் கொண்டு பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு வருஷம் அக்ஞாத வாசமும் செய்து வந்தால் உங்கள் பாகத்தை நீங்கள் அடைவீர்களென்று நீர்கூறினீர். அவர்கள் தங்கள் பிரதிக்ஞையை நிறைவேற்றி வந்த பின்னும் நீர் அவர்கள் பாகத்தைக் கொடாமலிருக்கிறீர். இது சரியல்ல. தர்மப்படி நியாயத்தைச் செய்து சுகப்படும்.

 

 அரசன், விதுரா! எல்லாரும் கலிகாலம் என்பதை நிந்தித்துக் கூறுகிறார்கள். அது ஏன்? அப்போது என்னென்ன சம்பவிக்கும். அந்த விசேஷங்
களை அறிந்த படி சொல், நான் கேட்க விரும்புகிறேன். அது பிறவாமலிருக்கும் போதே உலகம் சீர்குலைந்து இந்தப்பாடு படுகிறது. பிறந்து விட்டால் எப்படியாம் சொல் என்று கேட்டான். அப்போது உலகம் அழியுமாமே அது ஏன் என்றான். விதுரர் மஹாராஜாவே! இது கேட்கத் தக்கது தான். இந்த விஷயத்தை நான் மார்க்கண்டேயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன், அதைச் சொல்கிறேன்.

 

சில வருஷங்களுக்கு முன்னால் நான் இமயச் சாரலில் தவ தியானத்திலிருந்தேன். அப்போது மார்க்கண்டேய முனிவர் என்னிடம் வந்தார். நான் அவருக்கு வந்தனை வழிபாடு செய்து உபசரித்து முனிவரே! நீர் உமாகாந்தனைப் பூசித்து எமனை வென்று நெடுங்காலமாக ஜீவித்து வருகிறீர். அநேகமாயிர வருஷங்களைக் கண்டிருக்கிறீர். உம்மைப்போல் நெடுங்காலமாக வசித்திருப்பவர் ஒருவருமில்லை. இந்த விஷயத்தில் பிரமாவைத் தவிர உமக்கு ஒப்புச் சொல்லத் தக்கவர்கள் ஒருவருமில்லை. பிராமணரே! பூமி ஆகாயம் தேவர் தானவர் ஒருவரு மில்லாத சங்கார காலத்தில் நீர்மாத்திரம் பிரமத்தைத் தொழுது இருக்கிறீர். பிரளயம் நீங்கிப் பிரமா விழித்துக் கொண்டு திக்குகளை உண்டாக்கிக் காற்றால் நிரப்பி, ஜலத்தை சரியான ஸ்திதியில் நிறுத்தி, நாலு வருணங்களையும் மறுபடி சிருஷ்டித்த போதும் நீர் ஒருவரே அந்தப் பிரமாவைத் தரிசித்திருக்கிறீர். உக்கிரமான தவசினாலே மறு உலகத்தில் நாராயணனைப் போல இவ்வுலகத்தில் நீர்பிரகாசிக்கிறீர். பரமசிவனுடைய கருணையால் ரணத்தையும் பிறப்பையும் வென்று விளங்குகிறீர். சந்திரன் சூரியன் பூமி அக்கினி வாயு இவை ஒன்றுமில்லாமல் இருந்த போதும் நீர்மாத்திரம் பிரம் தரிசனம் செய்து கொண்டிருந்தீர். உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆகையால் வரும் கலியுக விசேஷங்களை நான் நன்றாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று பணிவுடன் கேட்டேன்.

 

முனிவர், சம்பு நாராயணன் என்று பேர் கொண்ட ஒருவனே நித்தியன். அவனே எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறான், அழிக்கிறான். யுகங்கள் நாலு. இவற்றுக்குச் சதுர்யுகம் என்று பேர். இவை தேவ வருஷத்தால் பன்னீராயிர வருஷங்கள் கொண்டன. கடைசி யுக முடிவில் எல்லாந் தலைதடுமாறும். அப்போது மனிதர்கள் எல்லாரும் பொய்யரா யிருப்பார்கள். உபதேசக் கிரமத்தில் சீர்திருத்தப்பட்டு நாலு வருணங்களும் கொஞ்ச காலம் கிராமமாய் நடக்கும். யாகங்களையும் தானங்களையும் செய்வார்கள். விரதானுஷ்டானங்களையும் செய்வார்கள். பிராமணர்கள் சூத்திரர் நடக்க விதிகளை யேற்படுத்துவார்கள். ஆயினும் சூத்திரர்கள் ஐசுவரியம் சம்பாதிக்கத் தொடங்குவார்கள். க்ஷத்ரியர்களும் பிராமண தர்மங்களைக் கொள்வார்கள். பின் பிராமணர்கள் வேதத்தையும் யாகத்தையும் விடுவார்கள். தண்டத்தையும் மான் தோலையும் ஒழிப்பார்கள். எல்லாவறறையும் புசிப்பார்கள். ஜபம் செய்யாமல் விட்டு விடுவார்கள். அவற்றைச் சூத்திரர்கள் கைக்கொள்வார்கள். நாளடைவில் உலக நடை மாறிப் போகும். இதுவே உலக முடிவுக்கு அடையாளமாகும். அப்போது அநேக மிலேச்சர்கள் இராஜர்களாவார்கள். இவ்வரசர்கள் பாபிகளாய்ப் பொய் பேசுவார்கள். பொய்யினாலேயே அரசு புரிவார்கள். அவர்களே தைரியசாலிகளாய் பூமிக்கு அதிபதியாவார்கள். அப்போது ஒரு பிராமணன் கூடத் தன் குலாசார தர்மத்தை அனுஷ்டிக்க மாட்டான். கலியுக முடிவில் இப்படி யெல்லாம் நடக்கும். இது யுக வலிமையாம். இதனால் பிரஜைகளைக் குற்றங் கூறலாகாது.

 

க்ஷத்திரிய வைசியர்களும் தங்கள் குலாசார நெறி கடந்து மாறாய் நடப்பார்கள். மனிதர்கள் அற்பாயுசு உள்ளவர்களாய் ஊக்கம், பலம், சக்தி இவை குன்றிப் போவார்கள். சரீரம் சிறுத்து அற்ப பலமுள்ளவர்களா யிருப்பார்கள். எல்லாரும் பொய்யர்களாகவே யிருப்பார்கள். துஷ்ட மிருகங்களும் துஷ்ட ஜந்துக்களும் எங்கும் வசிக்கும். அப்போது வேதம் அரிதாய விடும். சூத்திரர்கள் " அடே'' என்று அழைப்பார்கள். பிராமணர்கள் "கனமுள்ள ஐயாவே'' என்று அழைப்பார்கள். மிருகங்கள் ஏராளமாய் விருத்தியாகும். வாசனைத் திரவியங்கள் நன்மணங்கமழா. பதார்த்தங்கள் உருசிப்பாயிரா, சிறிய சரீரமுள்ள பல புத்திரர்களை ஸ்திரீகள் பெறுவார்கள். அவர்கள் நல்லொழுக்க மில்லாதவர்களாய் நெறிகடந்து நடப்பார்கள். பெண்கள் உலக விவகாரத்தையே பேசுவார்கள். எங்கும் பஞ்சம் உண்டாகும். துர்நடக்கை யுள்ள பெண்கள் தெருவில் உலாவுவார்கள். தங்கள் கணவனைப் பகைப்பார்கள். கற்பையிழந்து விடுவார்கள். பசுக்கள் பால் கறப்பது கொஞ்சமாயிருக்கும். மரங்கள் காக்கைக் கூட்டங்களால் நிறைந்திருக்கும். அவைகள் பலன்களையும் கனிகளையுங் கொடா. பிராமணர்கள் எல்லாரும் பிரமஹத்தி தோஷத்தால் நிறைந்திருப்பார்கள். பொய்யர்களான அரசர்களிடத்தில் தானம் வாங்குவார்கள். பொறாமையும் அறிவின்மையும் உள்ளவர்களாயிருப்பார்கள். மதாசாரத்துக்கு விரோதமான சின்னங்களைத் தரித்துக் கொண்டு பிச்சை யெடுப்பார்கள். குடும்பத்தி லிருப்பவர்கள் வரிகளால் கஷ்டப்பட்டு வஞ்சகர்களாவார்கள். தவத்தை வெறுத்து வர்த்தகத்தால் அந்தணர் பொருள் தேடுவார்கள். ஆசையினால் சந்நியாசி யாவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் மனிதர்கள் ஆசாரத்துக்கு மாறாகவே நடப்பார்கள்.

 

ஜனங்கள் மதுபானம் பண்ணுவார்கள். பலாத்காரமாகப் பரதாரகமனம் செய்வார்கள். உலக இன்பத்தில் மதிமயங்கிக் கிடப்பார்கள். மாம்சத்தையும் இரத்தத்தையும் விருத்தியாக்குகிற பொருள்களையே தேடுவார்கள். ரிஷிகள் ஆச்சிரமத்தில் பாபிகளும் துஷ்டர்களும் சோம்பேறிகளும் நிறைந்திருப்பார்கள். பிறனைப் பற்றி ஜீவிப்பதையே ஜனங்கள் பெருமையாக நினைப்பார்கள். சரியான காலத்தில் மழை பொழியாது. நிலத்தில் விதைகளும் சரியாய் முளையா. மனதாலும் செய்கையாலும் கெடுதியே செய்வார்கள். பகையும் பொறாமையும் உள்ளவர்களாயிருப்பார்கள். உலக முற்றும் பாபங்களும் துன்பங்களும் நிறைந்திருக்கும். துன்மார்க்கமே பரவும். அக்காலத்தில் தர்மிஷ்டன் அற்பாயுசாய் விடுவான். தர்மம் எல்லா விதத்திலும் கெடும். வர்த்தகர்கள் வஞ்சகர்களாயிருப்பார்கள். பண்டங்களைக் குறைவாகவே நிறுத்தும் அளந்தும் கொடுப்பார்கள். தர்மசாலி க்ஷேமத்தை அடைய மாட்டான். பாபியானவன் மிகுந்த செல்வத்துடன் வாழ்ந்திருப்பான். தர்மம் பலஹீனப்படும். பாபம் மஹா பலமுடையதா யிருக்கும். தர்மத்தை அனுசரிக்கிறவன் ஏழையாயும் அற்பாயுசுள்ளவனாயுமிருப்பான். பாபி ஐசுவரியவானாயும் நீண்ட ஆயுசுள்ளவனாயு மிருப்பான். விருந்து முதலிய தர்மங்களில் கூடப் பாபம் கலந்திருக்கும். பாபத்தினாலே மனிதர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக கொள்ள முயல்வார்கள். மனிதர்கள் சொற்பப் பணம் சம்பாதித்தாலும் கர்வித்து இறுமாந்திருப்பார்கள். மகா பிரபுக்களைப் போலப் பாசாங்கு செய்வார்கள். தம்மிடத்தில் கொடுத்திருக்கும் பொருளை அபகரிக்க எவ்வகையிலும் முயலுவார்கள். வெட்கமில்லாமல் வாங்கின பொருளை யில்லையென்று மறுப்பார்கள்.

 

மாமிச பட்சணிகளான மிருகங்களும் பட்சிகளும் எவ்விடத்திலும் நிறைந்திருக்கும். நகரங்கள் பட்டணங்கள் தேவாலயங்களும் அப்படியே நிறைந்திருக்கும். யுகமுடிவு காலத்தில் ஏழு எட்டு வயதுள்ளவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். பத்து அல்லது பன்னிரண்டு வயதுள்ள ஆண்கள் பிள்ளைகளைப் பெறுவார்கள். பதினாறு வயதில் மனிதர்கள் விருத்தாப்பியத்தை அடைவார்கள். மனிதர்களுடைய ஜீவியகாலம் சீக்கிரத்தில் ஒழிந்து போய்விடும். மனிதர்கள் மிகக் குறைந்த ஆயுசுள்ளவர்களா யிருப்பார்கள். இளமையிலேயே பெரியவர்களைப் போல நடிப்பார்கள். புத்தியும் இளம் புத்தியாகவே யிருக்கும். பெண்கள் கெட்ட நடத்தை யுள்ளவர்களாகவே யிருப்பார்கள். கெட்ட பேர் பெற்றுச் சிறப்படைந் திருப்பார்கள். நல்லகுணமுள்ள கணவனுக்கு வஞ்சனை செய்வார்கள். வேலைக்காரர் அடிமைக்காரர் முதலியவர்களிடம் பிரியத்தை வைத்திருப்பார்கள். மிருகங்களையும் கலப்பார்கள். புருஷனிருக்கும் போதே மறு புருஷனோடு கலந்து உறவாடுவார்கள். யுகமுடிவின் ஆயிர வருஷம் குறைந்த வயதுள்ள மனிதர்களே யிருப்பார்கள். அந்த வருஷமும் அநேக ஆயிர வருஷங்கள் போலத் தோன்றும். பட்டினியாலும் நோயாலும் ஆயிரக் கணக்கான ஜனங்கள் மடிவார்கள்.

 

அப்போது ஏழு சூரியர்கள் வானத்தில் காணப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய உக்கிர கிரணங்களால் ஆற்றையும் கடலையும் வற்றச் செய்வார்கள். புல் செடி கொடி மரங்கள் எல்லாம் உலர்ந்து காய்ந்து சாம்பலாய் விடும். பிறகு ஸம்பஸ்தகம் என்னும் நெருப்பு காற்றின் உதவியால் தோன்றும். அக்கினி பற்றி எரிந்து பூமியை ஊடுருவிப் பாதாளத்தை அடையும்.

 

அதனால் தேவ தானவ அரக்கர்களும் அஞ்சி நடுங்குவார்கள். சகல பொருள்களையும் தகித்து விடும். மஹா தேஜசுடன் விளங்குகிற அந்த நெருப்பு தேவர், தானவர், அசுரர்கள், இராட்சதர்கள், யட்சர்கள், நாகர்கள் எல்லாரையும் எரித்து விடும். அதன் பின் கரிய யானைக் கூட்டங்களைப் போல் மேகங்கள் வானத்தில் தோன்றும். அந்த மேகங்கள் மின்னல்களை மாலையாகத் தரித்துக் கொண்டு கண்களுக்கு அழகாய்க் காணப்படும். அந்த மேகங்களில் சில நீலோத்பல மலர் போலவும், சில அல்லி மலர்களைப் போலவும், சில தாமரைநூல் போன்ற நிறமுள்ளவைகளாகவும், சில செந்தாமரை போலவும் காணப்படும். சில மஞ்சள் நிறமாயிருக்கும். சில காக்கை முட்டை போன்ற நிறமுள்ளவைகளா யிருக்கும். சில தாமரை யிலை போன்ற நிற முள்ளவைகளாயிருக்கும். சில ஜாதிலிங்கம் போலச் சிவந்திருக்கும். சில மேகங்கள் நகரங்களைப் போலவும், சில யானைகளைப் போலவும் வடிவுள்ளவைகளா யிருக்கும். சில பல்லிகளைப்போலவும், சில முதலைகளைப் போலவு மிருக்கும். சில சுறாமீன்களைப் போன்றிருக்கும். இப்படிப்பட்ட மேகங்கள் மின்னல்களை மாலைகளாகத் தரித்துக்கொண்டு வானத்தில் பரவிப் பயங்கரமாய்க் கர்ஜிக்கும். சமுத்திரம் போல் வானத்தில் பரவி மழை பொழியும். இது வெகு பயங்கரமாயிருக்கும். அந்தப் பெருமழை வெள்ளம் பெருகிப் பூமி மலைகளையும் மூடும். இந்த வெள்ளத்தால் ஸம்பஸ்தகாக்கினி அணையும். இப்படிப் பன்னிரண்டு வருஷம் மழை பொழியும். பிறகு கடல் கரை கடந்து பெருகும்.

 

அரசனே! இவ்வாறு மனிதர்கள் மரம் செடி கொடி பசு பட்சிகள் ஒன்றும் இல்லாமல் ஆகாயம் அளாவ வெள்ளம் பரந்திருந்த அந்தக் காலத்தில் நான் ஒருவனாகவே அந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தேன். நீண்ட காலம் அலைர்து களைத்துப் போனேன். இளைப்பாற ஒரு இடமும் அகப்படவில்லை. பிறகு அந்த வெள்ளத்தில் நடுவில் ஒரு ஆலமரத்தைக் கண்டேன். அம்மரத்தின் ஒரு பெரிய கிளையில் ஒரு கட்டிலும் அதன் மேல் ஒரு அழகான படுக்கையும் விளங்கியது. அதன் மேல் சந்திரனைப் போன்ற அழகுள்ள முகத்தையும் தாமரை மலரின் இதழ்போன்ற அழகிய கண்களையும் உடைய ஒரு சிறிய பிள்ளையைக் கண்டேன். கண்டதும் எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாயிற்று. சர்வமும் அழிந்து போயிருக்கிற போது இந்தப் பெரிய வெள்ளத்தில் ஒரு சிறிய பிள்ளை எப்படிப் படுத்துக்கொண்டிருக்கக் கூடுமென்று என் மனதுக்குள் வியந்து யோசித்துக் கொண்டிருந்தேன். தபோ மகிமையால் நான் எல்லாவற்றையும் அறியக் கூடியவனாயிருந்தும் இந்த சிறு பிள்ளையின் விஷயத்தில் எனக்கு ஒன்றுந் தோன்ற வில்லை. அந்தக் குழந்தை ஸ்ரீ வத்ஸ மறுவையும் துளசி மாலையையும் உடையவனாபிருந்த படியால் இவன் இலட்சுமிகாந்தனாகிய விஷ்ணுவாக இருக்கலாமென்று கருதினேன். மிகுந்த காந்தியையும் உடைய அந்தச் சிறுவன் என்னைப் பார்த்து இனியவசனங்களாலே ஏ குழந்தாய்! நீ களைப்படைந்திருக்கிறாயென்றும், களைப்பாற இடந் தேடுகிறாயென்றும், எனக்குத் தெரியும். பிருகு குலத்தவனே! மார்க்கண்டேயா! உனக்கு இஷ்டமான வரைக்கும் இங்கே இளைப்பாறு. மஹாரிஷியே, என் வயிற்றுக்குள்ளே புகுந்துகளைப்பாறு. இஷ்டமான வரைக்கும் களைப்பாறு. அந்த இடத்தைத்தான் உனக்கு களைப்பாற வைத்திருக்கிறேன். உன்னிடத்தில் யான் பிரியமாயிருக்கிறேன் என்றான்.

அரசனே! நீண்ட ஆயுள் உள்ளவனும் மனுஷத்துவ முடையவனாயு மிருக்கிற என்னை மரியாதை யில்லாமலும் மதியாமலும் பேசினவுடனே தன்வாயைத் திறந்தான். நான் என் செயலற்று அவன் வாயினுள் புகுந்தேன். புகுந்ததும் நாடு நகரங்களுடன் கூடினதான உலக முழுமையும் பார்த்தேன். அவனுடைய வயிற்றுக்குள் அலைந்து கொண்டிருக்கையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கௌசிகி, வேத்திரவதி, சிந்து, கோதாவரி, நர்மதை முதலிய பல நதிகளையும் பார்த்தேன். சுறாமீன்கள், முதலைகள், பலவகை இரத்தினங்களுடன் கூடின சமுத்திரத்தையும் பார்த்தேன். சந்திரன் சூரியன் நட்சத்திரங்களுடன் கூடி பிரகாசிக்கிற வானத்தையும் பார்த்தேன். அழகிய அரணியங்கள் வனங்களுடன் கூடின பூமியையும் பார்த்தேன். அதில் அநேக பிராமணர்கள் யாகம் செய்துகொண்டிருக்கிறதையும் பார்த்தேன். மற்ற வருணத்தவர்க்கு நன்மையையே செய்கிற க்ஷத்திரியர்களையும் பார்த்தேன். விவசாயம் செய்து கொண்டிருக்கிற வைசிய சூத்திரர்களையும் கண்டேன். இமய மலை, ஹேமகூடம், நிஷதம், சுவேதம், கந்தமாதனம், மந்தரம், நீலம், மேரு, விந்தியம் முதலிய மலைகளையும் கண்டேன். சிங்கம் புலி கரடி முதலிய பிராணிகளையுங் கண்டேன். தேவர்கள், இந்திரன், சாத்தியர், ஆதித்தியர், பிதிரர்கள், நாதர்கள், வசுக்கள், கந்தர்வர், ரிஷிகள், தானவர்கள், பன்னகர்களையும் கண்டேன். தேவர்களுக்குச் சத்துருவான எல்லாரையும் பார்த்தேன். சகல பிராணிகளுடன் கூடின உலகத்தில் அலைந்து கொண்டு அவன் வயிற்றில் நெடுங்காலம் வசித்தேன். ஆயினும் அவன் சரீரத்தின் எல்லையை நான் காணவில்லை. அவன் சரீரத்தின் எல்லையைக் காண விரும்பி ஆவலுடன் அலைந்தும் காணவில்லை. பிறகு இவர் தான் மூலகாரணரென்று தெரிந்து கொண்டு வளமளிப்பவரான அவருடைய ஆதரவை நாடினேன். உடனேஒரு பெருங் காற்று வீசினதினாலே அவருடைய திறந்த வாயினின்றும் வெளியில் வந்தேன்.

 

வந்த பின் சகல உலகங்களையும் விழுங்கின அந்தச் சிறுவன் ஸ்ரீ வத்ஸமறுவுடன் ஆலமரத்தின் ஒரு பெரிய கிளையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அவர் என்னைப் புன்முறுவலுடன் நோக்கி ரிஷியே மார்க்கண்டேயா! நீ சில காலம் என் வயிற்றில் வசித்ததனால் நான் உன்னிடத்தில் பேசுகிறேன் என்றார். உடனே நான் ஞான திருஷ்டியை அடைந்தேன். அதனாலே நான் உலக மாயை ஒழிந்து மெய்ஞ் ஞானத்தை அடைந்தேன். அவருடைய மஹா சக்தியை அறிந்து அவர் பாதங்களில் வணங்கினேன். கைகளைக் கூப்பிக் கொண்டு பக்கத்தில் நின்று தரிசித்தேன். அவரைத்துதித்து 'தேவனே! உம்மையும் அற்புதமான உமது மாயையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்று கூறி வணங்கினேன். 'உமது வாயின் வழியாக உமது வயிற்றில் புகுந்து முற்றும் பார்த்தேன். தேவ கந்தர்வர், யட்சர், தானவர்களுடன் கூடின சராசர மயமான உலகம் முழுமையும் பார்த்தேன். உமது சரீரத்தில் முற்றும் உலாவித் திரிந்தேன். உமது கருணையால் நான் ஞாபக சக்தியை இழக்கவில்லை. உமது இச்சையின் படியே நான் வெளியில் வந்தேன். என் இச்சையால் வரவில்லை. ஆகையால், குற்றமற்றவராகிய உம்மை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உலகம் முழுமையும் விழுங்கின நீர் ஒரு சிறிய பிள்ளையைப் போல் என் உட்கார்ந்திருக்கிறீர். இவைகளை யெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும். உலகம் என் உமது வயிற்றில் இருக்கிறது? எத்தனை காலம் நீர் இங்கே யிருப்பீர்? தேவ தேவனே! இவைகளை எனக்கு விரிவாய்ச் சொல்லவேண்டும். நான் கண்ட காட்சி மனதுக்கு எட்டாததாயும் அதிசயமாயு மிருக்கிறது. அதனால் கேட்கிறேன்' என்று சொன்னேன். தேவ தேவனாகிய அவர் எனக்குச் சமாதானம் சொல்லிப் பிறகு சொல்கிறார்:  

ஏ பிராமணா! தேவர்கள் கூட உண்மையை அறிய மாட்டார்கள்; நான் உம்மிடத்தில் பிரியமாயிருப்பதனாலே சொல்கிறேன். நான் உலகத்தைச் சிருஷ்டித்த வகையைக் கேள். நீ உண்மையான பக்தன். என்னுடைய ஆதரவை நீ விரும்புகிறாய். உன் தோற்றத்தினாலே நீ பெரிய பிரமசாரியா யிருக்கிறா யென்று தெரிய வருகிறது. நான் பூர்வத்தில் ஜலத்துக்கு நாரம் என்று பேரிட்டேன். அந்த ஜலம் எனக்கு அயனமாய் (இருப்பிடமாய்) இருக்கிறபடியால் எனக்கு நாராயணன் என்று பேர் வந்தது, பிராமணா! ஆகையால் நாராயணன் எல்லாவற்றுக்கும் காரணமானவன்; நித்தியன், விசார மற்றவன். எல்லாவற்றையும் சிருஷ்டித்துச் சங்கரிக்கிறவன் நானே. நானே விஷ்ணு, சிவன், பிரமா, இந்திரன், யமன், குபேரன், முதலியோராவேன். நான் தாதா விதாதா. நான் யக்ஞ சொரூபி. என் வாய் அக்கினி. நான் சோமன், எல்லாவற்றையும் நடத்துகிறவன். பூமி எனக்குப் பாதம், சந்திர சூரியர்கள் என்னுடைய கண்கள், வானம் என்னுடைய தலை, ஆகாயமும் திசைகளும் எனக்குக் காதுகள், ஜலம் என்னுடைய வேர்வை, வெளியே எனது சரீரம். வாயு எனது மனம். தட்சிணையோடு கூடிய அநேக யாகங்களை நான் செய்திருக்கிறேன். தேவர்களுடைய யாகத்தில் நான் எப்போதும் பிரசன்னமாயிருக்கிறேன். வேத முணர்ந்தவர்கள் எனக்கு அற்பணமாக வேள்விகளைச் செய்கிறார்கள். பூமியிலுள்ள க்ஷத்திரியர் வைசியர்கள் என்பாரும் சொர்க்கத்தை விரும்பி என்னை வணங்குகிறார்கள். மேருமந்தர மலைகளால் அலங்கரிக்கப்பட் டிருப்பதும் கடல் சூழ்ந்துள்ளதுமான இந்தப் பூமியைச் சேஷன் வடிவமாயிருந்து நான் தாங்குகிறேன், பூர்வ காலத்தில் ஜலத்தில் முழுகியிருந்த பூமியை நான் வராக உருவம் கொண்டு தூக்கி யெடுத்தேன். நானே வடவாமுகாக்கினியா யிருந்து ஜலத்தைக் குடிக்கிறேன். அவைகளை மறுபடியும் உண்டாக்குகிறேன். என்னுடைய சக்தியினாலே எனது முகம் புஜம் தொடை பாதங்களிலிருந்து நாலு வருணங்களும் உண்டாயின. ரிக்கு யஜுஸ் சாமம் அதர்வணமென்கிற வேதங்கள் தோன்றி என்னிடத்திலேயே ஒடுங்குகின்றன. தவம் பண்னுகிறவர்களும், சாந்தமுள்ளவர்களும், முற்றும் அடங்கினவர்களும், ஞானத்தை விரும்புகிறவர்களும், காமம், கோபம், பகை இவைகளை ஒழித்தவர்களும், தர்மத்தைச் செய்கிறவர்களும், கர்வமில்லாதவர்களும், உலக ஆசையை முற்றும் விட்டவர்களும், ஆத்மஞான முள்ளவர்களுமான பிராமணர்களும் எல்லோரும் ஆழ்ந்த பக்தியுடன் என்னை வணங்குகிறார்கள். ஸம் வர்த்தகம் என்கிற அக்கினியும், ஸம் வர்த்தகம் என்கிற காற்றும் நான் தான். வானத்தில் காணப்படுகிற நட்சத்திரங்களெல்லாம் என் சரீரத்திலுள்ள ரோமத்தின் துவாரங்கள் என்று அறி. நாலு திசைகளும் சமுத்திரங்களும் எனக்கு வஸ்திரமும் படுக்கையும் இருப்பிடமுமாகும் என்று தெரிந்து கொள். அவைகள் தேவ காரியத்திற்காக என்னாற் பரப்பப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள். ஆசை, கோபம், மகிழ்ச்சி, பயம், அறியாமை இவைகளெல்லாம் என்னுடைய பலவகையான சொரூபங்களாமென்று தெரிந்து கொள். சத்தியம், தவம், தர்மம், சமாதானம், ஜீவ இம்சை செய்யாமை, மற்றுமுள்ள சத் கருமங்களினால் மனிதர்கள் அடைவனவெல்லாம் என்னால் நியமிக்கப்பட்டன வென்று தெரிந்து கொள். என்னுடைய விதியால் நடத்தப்பட்டு, என்னிடத்தில் உலாவுகிற மனிதர்கள் எல்லாரும் என்னாலேயே மயங்குகின்றனர். அவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்க முடியாது.

 

வேதங்களை உணர்ந்தவர்களும், ஆத்மாவில் திருப்தி அடைந்திருப்பவர்களும் கோபமில்லாதவர்களுமான பிராமணர்கள் தவம் செய்து பெரிய பயனைப் பெறுவார்கள். துர்நடத்தை யுள்ளவர்களும், பொருளாசை யுள்ளவர்களும், இழிந்தவர்களும், அசுத்தமானவர்களும் அப்படிப்பட்ட பயனை அடைய மாட்டார்கள். புலனடக்க முள்ளவர்களே அப்படிப்பட்ட பயனை அடைவார்களென்றும், மூடர்கள் அடையமாட்டார்களென்றும் தெரிர்துகொள். தபஸே அந்தப் பயனைத் தருவதென்றும் தெரிந்து கொள். எப்போது நீதியும் தர்மமும் குறைந்து, பாபம் அதிகரிக்குமோ அப்போது நான் அவதாரம் பண்ணுவேன். பயங்கரமானவர்களும், துஷ்ட சித்த முள்ளவர்களுமான தைத்திரியர்கள் பூமியிற் பிறந்து தேவர்களால் கூடச் சங்கரிக்கப்படாதவர்களா யிருக்கிற காலத்தில் நான் புண்ணிய குலத்தில் அவதரிப்பேன். பாவிகளைச் சங்கரித்துத் தீமைகளை ஒழித்துச் சமாதானத்தை நிலை நிறுத்துவேன். என்னுடைய சொந்த மாயையாலே தேவர் கந்தர்வர் அரக்கர்களையும் மற்றுமுள்ள சராசரங்களையும் நான் சிருஷ்டிப்பேன். காலம் வந்த போது அவைகள் எல்லாவற்றையும் சங்கரிப்பேன். கிருதயுகத்தில் நான் வெண்ணிறமுள்ளவனா யிருப்பேன். திரேதாயுகத்தில் மஞ்சள் நிறத்துட னிருப்பேன். துவாபர யுகத்தில் செம்மை நிற முள்ளவனாயிருப்பேன். கலியுகத்தில் தர்மம் கால்பங்குதா னிருக்கும். அந்த யுகமுடிவில் நான் மரணதேவதை வடிவங்கொண்டு எல்லாவற்றையும் சங்கரிப்பேன். சகல சராசரங்களுடன் மூன்று உலகங்களையும் அழித்து விடுவேன். மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் மூடிவிடுவேன். நான் தான் உலகத்திற்கு ஆத்மா. சகல சுகங்களுக்கும் நான் தான் மூலம். சகல கர்வங்களையும் அடக்குகிறவன் நான் தான். நான் சர்வவியாபகன், நான் அகண்டன், நானே புலன்களுக்கு அதிபதி, நான் சர்வ வல்லமை யுள்ளவன். காலச் சக்கரத்தை நடத்துகிறவன் நானே. நானே உருவமற்றவன்; சகலத்துக்கும் காரணமானவன். நான் எல்லாவற்றையும் வியாபித்திருப்பேன். என்னை ஒருவரும் அறிய மாட்டார். நானே பக்திரூபமானவன். எல்லா உலகத்தாராலும் வணங்கப்படுகிறவன். நீ என் வயிற்றுக்குள் அடைந்ததுன்பமெல்லாம் உனது நன்மைக்கென்றே நினை. நீ என் வயிற்றுக்குள் பார்த்தவைகளெல்லாம் என் ஆக்கினைக்குட்பட்டவைகள். சகலலோகபி தாமகனான பிரமதேவன் என் சரீரத்தில் பாதியாயுள்ளவன், நான் சங்கு சக்கரம் வாள் தரித்த நாராயணன், நாலுயுகங்களையும் விட ஆயிரநாலு மடங்கு அதிகமான காலம் தூங்குவேன். ஜீவாத்மாக்கள் எல்லாம் அப்போது அறிவற்றிருக்கும். அக்கால மெல்லாம் நான் இங்கே வசிப்பேன். உனக்கு வரம் கொடுத்தவனும் நான் தான். பெரிய வெள்ளத்தையும் அதனால் சகல பிராணிகளும் அழிந்து போனதையும் குறித்து நீ வருத்தப்பட்டாய். அதைநான் அறிவேன், அதற்காகவே என்வயிற்றுக் குள்ளிருக்கிற சகல சராசரங்களையும் நான் உனக்குக் காட்டினேன். நான் உன்னிடத்தில் பிரியமா யிருக்கிறேன். நீ அதைப் பார்த்து அதிசய மடைந்து மயங்கினாய். அதனாலே தான் சீக்கிரமாக உன்னை வெளியில் கொண்டு வந்தேன். தேவர்களாலும் அசுரர்களாலும் அறியப்படாத பொருளைப் பற்றிச் சொன்னேன். பிரமதேவன் விழித்துக் கொள்கிற போது சகல பிராணிகளையும் ஆகாயம் பூமிகளையும் சந்திர சூரியர்களையும் சிருஷ்டிப்பேன். வாயு மண்டலத்தையும் தண்ணீரையும் உண்டாக்குவேன், என்று சொன்னார்.

 

இப்படிச் சொல்லிவிட்டு அந்த அற்புத தெய்வம் மறைந்து விட்டது. அதன் பின் பலவகையான ஜீவசிருஷ்டிக ளுண்டானதையும் பார்த்தேன். புண்ணியவானே! பூர்வகாலத்தில் இந்த அதிசயங்களை யெல்லாம் கண்டேன். பூர்வகாலத்தில் நான்கண்ட அந்தத் தெய்வந்தான் இந்தக் கிருஷ்ணமூர்த்தி சொரூபமாக வந்து ஒன்றும் அறியாதவர் போல நடித்துக்கொண்டிருக்கிறது. யதுவம்சத்தவரான அந்தக் கண்ணனே பரமாத்மா. அவர் நித்தியர், அழிவற்றவர்; மேலானவற்றுக் கெல்லாம் மேலானவர். இவர் கொடுத்த வரத்தினாலே எனக்கு மறதி கிடையாது. ஞாபகசக்தி குறைவதில்லை. இவரைக் கண்டவுடன் பூர்வத்தில் நான் கண்ட காட்சிகளெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றன. கௌரவ சிரேஷ்டராகிய இவரை நீ சரணமடை, யென்று சொன்னார். யுதிஷ்டிரர் பத்தினி தம்பிமார்களுடன் கிருஷ்ணன் திருவடிகளில் பணிந்தார். நானும் வணங்கினேன். கண்ணன் இனியவசனங்களால் பாண்டவர்களைத் தேற்றினார்.

 

பிறகு யுதிஷ்டிரர் மார்க்கண்டேயரை நோக்கி, 'நீர் சொன்னவைகளெல்லாம் அற்புதமும் ஆச்சரியமுமாகவே யிருக்கின்றன. கலியுகத்தில் என்னென்ன சம்பவிக்கும்? தர்மம் எப்போது அழியும்? என்ன மிகுந்திருக்கும்? அப்போது மனிதர்களுடைய சக்தி எவ்வளவாயிருக்கும்? அவர்களுக்கு உண்டி யாது? அவர்களுக்கு மகிழ்ச்சி எதில்? ஆயுள் எவ்வளவு? நடை உடைகள் எப்படியிருக்கும்? கிருதயுகம் எப்போது பிறக்கும்? முனிவரே இவைகளை யெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும். உமது வசனங்களெல்லாம் வினோதமாயும் மதுரமாயு மிருக்கின்றன, என்றார். மார்க்கண்டேயர் எங்களுக்கு மகிழ்ச்சியுண்டாக்கும் பொருட்டு மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

 

அரசனே! தேவதேவனுடைய கிருபாகடாக்ஷத்தினால் நான் அறிந்திருக்கிற வைகளைச் சொல்கிறேன் கேளும். அரசனே நான் அறிந்த மட்டில் பாபம் நிறைந்த காலம் எப்போது வருமென்பதைச் சொல்கிறேன். கிருதயுத்தத்தில் எல்லாரும் வஞ்சனையற்றிருந்தார்கள். லோபமும் பொறாமையும் கிடையாது. அப்போது பசு வடிவமான தர்மதேவதை நாலு மாதங்களில் நடந்தது. திரேதாயுதத்தில் பாபம் தோன்றித் தருமத்தின் ஒரு காலை முறித்து விட்டது. ஆகையால் அப்போது அது மூன்று பாதங்களால் நடந்தது. துவாபர யுகத்தில் பாபம் அரைப் பங்கும் புண்ணியம் அரைப்பங்குமாயிருந்தது. இருண்ட கலியுகத்தில் பாபம் தர்மத்தின் மூன்று பங்கை விழுங்கி விடும். ஆகையால் கால் பங்கு தர்மந்தான் மனிதரிடத்தில் இருக்கும். அரசனே! மனிதருடைய ஆயுசு, பலம், சரீரம், சக்தி, அறிவு இவைகள் யுகத்துக்கு யுகம் குறையும். நாலு வருணத்தாரும் வஞ்சனையாகவே தருமம் செய்வார்கள். வஞ்சகர்கள் தர்மம் செய்ய விரும்புகிறவர்களை வஞ்சகமான தர்ம வலைக்குள் சிக்குப்படுத்துவார்கள். எல்லாரும் படித்தவர்களைப் போல நடிப்பார்கள். சத்தியத்தை இழந்து விடுவார்கள். அதனால் அவர்களுக்கு வாணாள் குறையும். ஆயுசு குறைகிறபடியால் அதிகமான அறிவை அடையச் சக்தியற்றுப் போவார்கள். கல்வி அறிவு குறைந்திருக்கிற படியால் அவர்களுக்கு ஞானமும் குறையும். அதனால் லோபமும் பொறாமையும் அதிகரிக்கும். அப்போது மனிதர்களுக்குப் பொறாமையும், லோப்மும், காமமும், கோபமும் அதிகரிக்கும். இவ்வாறிருப்பதினால் மனிதர்கள்ஒருவரை யொருவர் பகைத்துக் கொலைத் தொழிலையும் செய்வார்கள். இப்படித் தர்மம் குறைவுபடும். தவமும் சத்தியமும் வைசியரை அடையும். அந்தணரும் க்ஷத்திரியரும் தாழ்ந்த வருணத்தாராகக் கருதப்படுவார்கள். உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களாயும், தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்படுவார்கள். யுகமுடிவு காலத்தின் நிலைமையி லிப்படி யிருக்கும். அக்காலத்தில் சணலால் நெய்த வஸ்திரம் சிறந்ததாகக் கொள்ளப்படும். புருஷர்கள் ஸ்திரீகளையே சிநேகிதர்களாக மதிப்பார்கள். ஆட்டு மாம்சமும் ஆட்டுப் பாலும் அவர்களுக்கு உணவாகும். ஏனென்றால் அப்போது பசுக்கள் இல்லாமற் போய்விடும். அப்போது செய்யப்படுகிற தர்மமெல்லாம் வஞ்சனையாகவே யிருக்கும். யுகமுடிவு காலத்தில் ஜனங்கள் பகை கொண்டு ஒருவரை யொருவர் கொல்ல முயல்வார்கள். நாஸ்திகர்களா யிருப்பார்கள். பூமியும் வாட்டு நிலமாய்ப் பலன் கொடாது. தேவ பிதிர்கர்மங்களில் பிரியமுள்ளவர்களும் லோபத் தனத்தால் பிறர் சொத்தைக் கவர்ந்து கொள்வார்கள். புத்திரனுக்குச் சொந்தமானதைப் பிதாஅனுபவிப்பான், பிதாவுக்குச் சொந்தமானதைப் புத்திரன் அனுபவிப்பான். சாஸ்திரங்களினால் விலக்கப்பட்டவைகளெல்லாம் மனிதர்களால் அனுஷ்டிக்கப்படும். பிராமணர்கள் வேதத்தை நிந்திப்பார்கள். நோன்புகளை அனுஷ்டிக்க மாட்டார்கள். அவர்கள் அறிவு தர்க்க யுக்திகளால் மறைக்கப்பட்டிருக்கும். யாகங்களையும் ஹோமங்களையும் செய்யமாட்டார்கள்.

 

தர்க்க யுக்திகளால் மறைக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய அறிவுஈனமும் தாழ்வுமான விஷயங்களையே நாடும். மனிதர்கள் தாழ்ந்த நிலங்களை உழுவார்கள். ஒரு வயதுள்ள இளங் கன்றுகளையும் கட்டி ஏரில் உழுவார்கள். அவைகளின் மேல் பெரும் சுமைகளை யேற்றுவார்கள். புத்திரன் பிதாவைக் கொல்வான். பிதா தன் புத்திரனைக் கொலை செய்வான். அது அவர்களுக்கு அபகீர்த்தி உண்டாகாது. இப்படிப்பட்ட ஈனச் செய்கைகளால் மகிழ்ச்சியடைவார்கள். உலகமெங்கும் மிலேச்சாசாரம் பரவி நிறைந்திருக்கும். மிலேச்சருடைய அபிப்பிராயங்களே நிறைந்துவிடும். வைதிக மதாசாரங்களும் யாக யக்ஞங்களும் விலக்கப்படும். எவ்விடத்திலும் மகிழ்ச்சியிராது. உற்சவக் கொண்டாட்டங்களெல்லாம் ஒழிந்து போய்விடும். மனிதர்கள் ஆதரவற்றவர்களுடைய சொத்தைக் கவர்ந்து கொள்வார்கள். சினேகிதர் இல்லாமல் இருக்கிறவர்களுடைய சொத்துக்களையும், விதவைகளின் சொத்துக்களையும் அபகரித்துக் கொள்வார்கள். மனிதர்கள் அற்ப ஊக்கமும் பலமும் உடையவர்களாய், அறிவற்றவர்களாய்ப் பொருளாசையும் அறிவீனமும் உள்ளவர்களாய்ப், பாவச் செய்கை யுடையவர்களாய்த் துஷ்டர்களால் கொடுக்கப்படும் தானங்களை இகழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.

 

அரசனே! இராஜாக்கள் பாபச் சிந்தை யுடையவர்களாயும் அறிவில்லாதவர்களாயு மிருப்பார்கள். அப்படி யிருந்தும் அறிவுள்ளவர்களைப் போலநடிப்பார்கள். அவர்கள் இறுமாப்புக் கொண்டு ஒருவரை யொருவர் கொல்ல முயல்வார்கள். அடிக்கடி சண்டை யிடுவார்கள். யுக முடிவில் இராஜாக்களே போக கண்டகர்களாவார்கள். பிரஜைகளைத் தண்டிப்பதிலேயே பிரியமுடையவர்களாய் இருப்பார்கள். அப்படித் தண்டிப்பதினாலே மகிழ்சியாயிருப்பார்கள். நல்லவர்களும் யோக்கியர்களுமா யிருக்கிறவர்களை யெதிர்த்து வருத்துவார்கள். அவர்கள் கதறினாலும் இரக்கமில்லாதவர்களாய் அவர்களுடைய செல்வத்தையும் மனைவியையும் அபகரிப்பார்கள். அந்தக் காலத்தில் ஒருவரும் பெண்களை விவாகம் செய்து தரும்படி கேட்க மாட்டார்கள். பெற்றவர்களும் பெண்களை விவாகம் செய்து கொடுக்கவுமாட்டார்கள். பெண்கள் தாமாகவே கணவர்களைத் தேடிக் கொள்வார்கள். அரசர்கள் அஞ்ஞானத்தினால் புத்தி மயங்கித் தாங்கள் அடைந்திருக்கிற பொருளால் திருப்தியடைய மாட்டார்கள். எவ்வகையிலாவது குடிகளை வருத்தி அவர்கள் பொருளை அபகரிக்க முயல்வார்கள். நிச்சயமாகவே உலக முழுமையும் மிலேச்சத் தன்மையால் நிறைந்துவிடும். கலியுகம் வந்தபோது வலக்கை இடக்கையை மோசம் செய்யும். ஜனங்கள் படித்தறிந்தவர்களைப் போல நடந்து உண்மையைக் கெடுப்பார்கள். கிழவர்கள் யௌவனர்களைப் போல நடித்துப் புத்தி மழுங்கி யிருப்பார்கள். யௌவனர்கள் கிழவர்களைப் போலப் புத்திமயங்கிக் கிடப்பார்கள். கோழையாயிருப்பவன் தைரியசாலியாயிருப்பவர்களைப் போலப் புகழப்படுவார்கள். தைரியமுள்ளவன் கோழைகளைப் போல மனங்கலங்குவான். மனிதர் ஒருவரை யொருவர் நம்பமாட்டார்கள். பொருளாசையாலும் அறிவீனத்தினாலும் உலகமெல்லாம் ஒரே உணவை உண்ணும். பாபமே விருத்தியாகும். புண்ணியம் மழுங்கிப்போகும். பிராமணர் க்ஷத்திரியர் வைசியர்கள் இல்லாமற் போவார்கள். அந்த ஜாதிகளின் அடையாளமே இல்லாமற் போய்விடும். எல்லாரும் ஒரே ஜாதியாய் விடுவார்கள். பிதாக்கள் புத்திரர்களை மன்னிக்க மாட்டார்கள். புத்திரர்களும் பிதாக்களை மன்னிக்க மாட்டார்கள். மனைவிமார்கள் தங்கள் கணவர்களுக்கு அடங்கிப் பணிவிடை செய்ய மாட்டார்கள். இக்காலத்தில் மனிதர்கள் வாற்கோதுமை யையும் கோதுமையையும் தேடியுண்பார்கள். அவை விளையும் தேசங்களைத் தேடியடைவார்கள்.

 

அரசனே! அக்காலத்தில் ஸ்திரீகளும் புருஷர்களும் சுயேச்சையாய் நடப்பார்கள். ஒருவர் செய்வதை மற்றொருவர் செய்யமாட்டார்கள். மிலேச்சாசாரமே யெங்கும் பரவி யிருக்கும். மனிதர்கள் சிராத்தாதி கிரியைகளால் தேவர்களை ஆராதிக்க மாட்டார்கள். ஒருவர் மற்றொருவருடைய வார்த்தையைக் கேட்கமாட்டார்கள். ஒருவர் மற்றொருவருக்குக் குருவாக இருக்கமாட்டார்கள். ஒருவரும் குருவைத் தேடி யடையமாட்டார்கள். குருவை மதித்து மரியாதை செய்யமாட்டார்கள். உலகம் முழுமையும் அஞ்ஞானாந்தகாரத்தால் மூடப்பட்டிருக்கும். அப்போது மனிதர்களுடைய ஆயுசுகாலம் பதினாறு வருஷமாக இருக்கும். இந்தக்குறைந்த வயதுக்குள் மரிப்பார்கள். பதினாறு வயதே பூர்ணாயுசாகக் கருதப்படும். ஐந்து ஆறு வயதுடைய பெண்கள் புத்திரர்களைப் பெறுவார்கள். புருஷர்கள் ஏழு எட்டு வயதில் புத்திரர்களுக்குப் பிதாவாக இருப்பார்கள். இந்தக் காலத்தில் ஸ்திரீகள் தங்களுடைய கணவர்களால் மட்டும் திருப்தியடைய மாட்டார்கள். அப்போது மனிதர்களுக்குத் திரவியம் சொற்பமாகவே யிருக்கும். மனிதர்கள் பொய்யாக மதச் சின்னங்களைத் தரிப்பார்கள், எரிச்சலும் பொருளாசையும் எங்கும் நிறைந்திருக்கும். ஒருவனும் பிறனுக்குக் கொடுக்கமாட்டான். வஞ்சனையும் துரோகமும் மிகுந்திருக்கும். சாலைகளெல்லாம் காமுகர்களாலும் வியபசாரப் பெண்களாலும் நிறைந்திருக்கும். பெண்கள் தங்கள் கணவர்களைப் பகைப்பார்கள்... மனிதர்கள் எல்லாவற்றையும் புசிப்பார்கள். மனிதர்கள் எல்லாச் செய்கைகளையும் சுயேச்சையாகவே செய்வார்கள். பொருளாசையால் கொள்ளல் விற்றல்களிலும் ஒருவரை யொருவர் மோசம் செய்வார்கள். தாங்கள் விரும்பியபடி நடப்பார்கள். துர்நடக்கையுடையவர்களாய் ஒருவரை ஒருவர் நிந்திப்பார்கள். இரக்கமில்லாமல் மரங்களையும் சோலைகளையும் அழிப்பார்கள். தங்களுடைய ஜீவனத்தைக் குறித்துக் கவலை அடைந்திருப்பார்கள். பொறாமையினால் பிராமணர்களைக் கொன்று அவர்களுடைய சொத்துக்களை அபகரித்து அனுபவிப்பார்கள். பிராமணர்கள் துன்பம் அடைந்து ஐயோ வென்று கதறி அழுவார்கள். அந்தப்பிராமணர்களை உலகத்தில் ஒருவரும் காப்பாற்ற மாட்டார்கள்.

 

மனிதர்கள் எப்போது ஒருவரை யொருவர் பகைத்துக் கொல்லுகிறார்களோ, எப்போது அவர்கள் துஷ்டர்களாய் இதர பிராணிகளை வதைக்கிறார்களோ அப்போது கலியின் முதிர்ச்சியென்று கருத வேண்டும். அரசனே! இக்காலத்தில் பிராமணர்களுடைய சொத்துக்களை யெல்லாம் திருடர்கள் கவர்வார்கள். அவர்கள் காக்கைகளைப் போலக் கதறிக் கொண்டு ஆறுகளையும் தகாத இடங்களையுந் தேடிக்கொண்டு ஓடுவார்கள். அந்தப் பயங்கரமான காலத்தில் அரசர்கள் பிராமணர்களுக்குக் கடினமான வேலைகளை யிடுவார்கள். அவர்கள் தகாத வேலைகளையும் செய்வார்கள். சூத்திரர்களுக்கு வேலைக்காரர்களாவார்கள். சூத்திரர்கள் மத உபதேசம் செய்வார்கள். பிராமணர்கள் அதைக் கேட்டு அவர்கள் சொன்னபடி செய்வார்கள். தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் ஆவார்கள். எல்லாம் மாறுதலை வடையும். மனிதர்கள் தேவாராதனையை விட்டு எலும்புகளை வணங்குவார்கள். அப்போது சூத்திரர்கள் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்யமாட்டார்கள். பிராமணர்களுடைய ஆச்சிரமங்களிலும், பள்ளிக்கூடங்களிலும், சர்வ கலாசாலைகளிலும், தேவாலயங்களிலும், புண்ணியஸ்தலங்களிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் கல்லறைகள் கட்டப்படும். அவைகள் அவலட்சணமா யிருக்கும். இவைகளெல்லாம் கலியுக முதிர்ச்சிக்கு அடையாளமாம். அப்போது மனிதர்கள் பிராமணர்களுடைய புண்ணிய ஸ்தலங்கள் முதலியவற்றில் பிரேதங்களை அடக்கம் செய்வார்கள். இவைகள் கலியுகத்தில் நடக்கும்.

 

அரசனே! எப்போது மனிதர்கள் துஷ்டர்களாயும், பாமிகளாயும், குடியினால் வெறிகொண்டவர்களாயும் இருக்கிறார்களோ அப்போது கலியுகம் பிறந்ததென்று அறிந்து கொள்ள வேண்டும். அரசனே! எப்போது ஒருபுஷ்பத்தில் மற்றொரு புஷ்பம் உண்டாகிறதோ அப்போது கலியுகம் பிறந்து விட்டதென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒருகாயில் மற்றொரு காயும் உண்டாகும். அந்த யுகத்தில் சரியான காலமழை பொழியாது. கர்மங்கள் முறைப்படி சரியாய்ச் செய்யப்படமாட்டா. பிராமணர்களும் சூத்திரர்களும் சண்டையிடுவார்கள். சூத்திரர்களே சண்டை தொடங்குவார்கள். மிலேச்சர்கள் நிறைந்து விடுவார்கள். பிராமணர்கள் வரிக்குப் பயந்து திசைகள் தோறும் சிதறி ஓடுவார்கள். மனிதர்களுக்குள் வேற்றுமையிராது. அவர்கள் காடுகளுக்குப் போய்க் காய் கனி கிழங்குகளைத் தின்று ஜீவிப்பார்கள். இந்தக் கஷ்டகாலத்தில் மனிதர்களிடத்தில் சரியான நடக்கைகளிரா. சிஷ்யன் குருவின் உபதேசத்தை மதிக்கமாட்டன். குருவை இம்சிக்கவும் தொடங்குவார்கள். குருமார்கள் தரித்திரர்களாய்ப் பிறரால் அவமதிக்கப்படுவார்கள். சிநேகிதர்களும் சுற்றத்தார்களும் பொருளாசையாலேயே நேசமாயிருப்பார்கள். அக்காலத்தில் ஒவ்வொருவனும் தரித்திரனாயிருப்பான். திக்குகளெல்லாம் எரிந்து கொண்டிருக்கும், நட்சத்திரம் முதலியன ஒளியற்றுப் போகும். கிரகங்களும் கிரகசம்பந்தங்களும் கொடுமையாயிருக்கும். காற்று பலமாய் வீசும். விண்கொள்ளிகள் அநேகமாய் தோன்றிப் பயமுறுத்தும். ஜனங்கள் பயப்படுவார்கள். சூரியன் வேறு ஆறு சூரியர்களுடன் சேர்ந்து உதிப்பான். எவ்விடத்திலும் பெரிய சத்தமுண்டாயிருக்கும். எங்கே பார்த்தாலும் பெரு நெருப்பாயிருக்கும். சூரியன் அஸ்தமிக்கிற வரைக்கும் இராகுவால் பீடிக்கப்படுவான். அச்காலத்தில் தானியங்கள் நன்றாய் விளையா. பெண்கள் எப்போதும் கொடுமையாகப் பேசுவார்கள். கணவனுக்கும் அடங்கமாட்டார்கள். அவர்கள் இரக்க மில்லாதவர்களாய் எப்போதும் அழுது கொண்டிருப்பார்கள். தங்கள் குழந்தைகளைக் கொல்வார்கள். இவைகள் கலியின் முதிர்ச்சியாம். பிரயாணிகளுக்கு ஆகாரம் அகப்படாது. யாசித்தாலும் குடிக்கத் தண்ணீரும் தங்க இடமும் அகப்படாது. காக்கைகள் சர்ப்பங்கள் கழுகுகள் பருந்துகள் முதலியவை மாறுபாடாகக் கத்திக் கொண்டிருக்கும். மனிதர்கள் சுற்றத்தாரையும் சிநேகிதர்களையும் விட்டுவிடுவார்கள். தங்கள் வீடுகள் ஊர்கள் நாடுகள் இவைகளை விட்டு வேறு இடங்களைத் தேடுவார்கள். அப்பா, அம்மா, குழந்தா யென்கிற சத்தங்கள் எங்கும் கேட்கப்படும். துன்பங்கொண்டு பல தேசங்களிலும் அலைந்து திரிவார்கள்.

 

இப்படிப்பட்ட பயங்கரமான காலம் நீங்கிப் போனபின் பிராமணர்களை முன்னிட்ட சகல பிராணிகளும் முன் போல உண்டாகும். தெய்வச் செயலால் எல்லாம் சுலபமாயுண்டாகும். சூரியன் சந்திரன் பூச நக்ஷத்திரத்துடன் கூடின பிரகஸ்பதி எல்லாம் கிரமமாய்த் தோன்றும். மேகம் இடைவிடாமல் மழை பொழியும். நட்சத்திரங்களும் கிரகங்களும் சுபமாய்த் தோன்றும். கிரகங்கள் மண்டலத்தில் சுபமாய்ச் சுழல்வதினால் எல்லாம் சுபமாயிருக்கும். எங்கும் க்ஷேம முண்டாயிருக்கும். எவ்விடத்திலும் ஏராளமான செல்வமும் சமாதானமும் நிறைந்து சுகமாயிருக்கும். இது எப்படி உண்டாகும் என்றால், காலம் வேறுபட்ட அப்போது கல்கி என்கிற ஒரு பிராமணன் பிறப்பான். அவன் மஹாகாந்தியும் சக்தியும் ஞானமும் உள்ளவனா யிருப்பான். உலம்பலா என்கிற கிராமத்தில் பாக்கியவந்தனான ஒரு பிராமணன் குடும்பத்தில் பிறப்பான். அவன் நினைத்த மாத்திரத்தில் வாகனங்கள் ஆயுதங்கள் போர்வீரர்கள் அஸ்திரங்கள் கவசங்கள் எல்லாம் வந்து அவனுடைய கட்டளையால் நிற்கும். அப்போது அவன் அரசனாய் உலகத்தை ஆளுவான். தர்ம பலத்தினாலே ஜயம் பெற்றுப் பூமியைப் பரிபாலிப்பான். பிரஜைகள் நிறைந்த உலகத்துக்குச் சட்டங்களை உண்டாக்கிச் சமாதானத்தை நிலை நிறுத்துவான். மகிமையும் வலிமையுமுள்ள அந்தப் பிராமணன் எல்லாவற்றையும் அழித்துவிடுவான். அவனே எல்லாவற்றையும் சங்கரிப்பான். அவனே புதிய யுகத்தை உண்டாக்குகிறவன். அவன் பிராமணர்களால் சூழப்பட்டிருப்பான். எவ்விடத்திலும் மிலேச்சர்களைக் கண்டவிடத்திலே சங்கரிப்பான்.

 

கல்கி எல்லாத் திருடர்களையும் சங்கரித்து விட்டு ஒரு பெரிய அசுவமேத யாகம் செய்வான். அந்த யாகத்தில் பூமியைப் பிராமணர்களுக்குத்தக்ஷிணையாகக் கொடுத்து விடுவான். பிரமாவினுடைய கட்டளையை நிறைவேற்றி விட்டுப் புகழத்தக்க நற்கருமங்களையுடைய அந்தக் கல்கி வனத்துக்குப் போய் விடுவான். அவனுடைய ஆசாரங்களை உலகத்து ஜனங்கள் அனுசரிப்பார்கள். பிராமணர்களால் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் நிர்மூலமான பின் எங்குமாயிருக்கும் உலகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்ட பின் கல்கி ஈட்டி சூலம் முதலிய ஆயுதங்களை விட்டுப் பிராமணர்களுக்கு மரியாதை செய்து கொண்டிருப்பான். பிராமணர்களால் வணங்கப்பட்டுப் பூமியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பான். கல்கி திருடர்களையும் பாபிகளையும் அதியாயக்காரர்களையும் சங்கரிக்கிறபோது அப்பா! அம்மா! குழந்தாய் என்று கதறுகிற சப்தம் எங்கும் கேட்கப்படும்.

 

அரசனே! கிருதயுகம் தோற்றுகிற போது இப்படிப் பாபம் ஒழிக்கப்படும். மனிதர்களிடத்தில் தருமம் பெருகி விளங்கும். மதாசார ஒழுக்கங்கள் சரியாய் நடத்தப்பட்டு வரும். பயிரிடப்பட்ட நிலங்களும் தோட்டங்களும் குளங்களும் எங்கும் மலிந்திருக்கும். வேத பாடசாலைகளும் யாகசாலைகளும் கோவில்களும் எங்கும் விளங்கும். பலவகையான யாகங்களும் தொடங்கிச் செய்யப்படும். பிராமணர்கள் யோக்கியர்களும் நல்லவர்களுமாயிருப்பார்கள். தவசு செய்து ரிஷிகளாவார்கள். துஷ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஆச்சிரமங்களில் உண்மையான ரிஷிகள் வசிப்பார்கள். ஜனங்கள் எல்லாரும் சத்தியவந்தர்களும் யோக்கியர்களுமா யிருப்பார்கள். பூமியில் விதைக்கப்பட்ட விதைகள் நன்றாகப் பயிராகும். அந்தந்தப் பருவங்களில் அத்தற்குரிய தானியங்கள் விருத்தியாகும். மனிதர்கள் எல்லாரும் நோன்புகளையும் மதாசாரங்களையும் சரியாய் ஆசரிப்பார்கள். பிராமணர்கள் பக்தியுடன் யாகங்களையும் கருமங்களையும் செய்வார்கள். தெய்வபக்தியுள்ளவர்களாயும் ஆஸ்திகர்களாயும் நற்குண முடையவர்களாயும் யோக்கியர்களாயுமிருப்பார்கள். தர்மாத்மாக்களாயுமிருப்பார்கள். பிராமணர்களுடைய அறுவகைத் தொழில்களும் தவறாமல் நடந்து வரும். அந்தக் கிருதயுகத்தில் அரசர்கள் தர்மமாய்ப் பூமியைப் பரிபாலிப்பார்கள். சௌரிய வீரபராக்கிரம முள்ளாராயிருப்பார்கள். வைசியர்கள் வர்த்தகத்தில் பிரியமுள்ளவர்களாயிருப்பார்கள். நாலுவருணத்தாரும் தத்தம் குலதர்மங்களைப் பரிபாலித்து நல்லொழுக்கமுள்ளவர்களாய் நன்னெறியில் ஒழுகுவார்கள். அரசனே இவ்வாறு தர்மம் கிருதயுக திரேதாயுக துவாபரயுகங்களில் நடக்கும். நான் அழிவற்ற சிரஞ்சீவியாயிருப்பதால் அநேக தடவைகளில் உலகத்தில் நடந்தவற்றைப் பார்த்திருக்கிறேன். நான் நேரில் பார்த்து இருப்பவைகளையே உனக்குச் சொன்னேன். நான் உனக்கு இப்பொழுது கூறிய வருங்கால சம்பவங்களெல்லாம் ரிஷிகளால் கொண்டாடப்படும் வாயுபுராணத்தில் வாயுபகவானால் நன்றாய் விளக்கப்பட்டிருக்கின்றன. நான் படித்து அறிவித்ததும், பிறரிடம் கேட்டுத் தெளிந்ததுமான யுகதருமங்கள் எல்லாவற்றையும் உனக்குச் சொல்லி விட்டேன். நீ தர்மத்தில் மனதைச் செலுத்தி நீதியாய் நட; தர்மமே இகலோக பரலோகங்களுக்குப் பயன் அளிப்பது என்றார்.

 

திருதராஷ்டிரன், விதுரா! நீ சொன்னவைகளெல்லாம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இன்பமாயும் செவிக்கு இனிமையாயும் இருக்கின்றன. ஆயினும் இவைகள் யுகத்தின் முடிவில் உண்டாவனவாயிருக்கின்றன. இந்தக் கொடிய செய்கைகள் எப்பொழுது தொடங்கும் என்று கேட்டான்.

 

அரசனே கேளும்: கலியுகம் பிறந்த இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் ஆரம்பமாகும். அப்போது யுக்திவாதங்களைப் பேசுகிறவர்கள் தோன்றுவார்கள். அவர்களால் சில அவைதிக மதங்கள் ஸ்தாபிக்கப்படும். அந்த மதங்களே உலகக் கேட்டுக்கு ஆதாரமாகும். ஏனென்றால் அந்த மதங்கள் அனுஷ்டிப்பதற்குச் சுலபமானவையாக இருப்பதால் அநேகம் பேர் அவற்றைக் கைக்கொள்வார்கள். அரசர்கள் தங்களுக்கு இச்சையான மதத்தைப் பற்றி நடப்பார்கள். அவன் பற்றுகிறதையே பிரஜைகளும் பின் பற்றும். பிறகு வைதிக மதங்களிலேயே பல பிரிவினையுண்டாகும். ஒவ்வொருவரும் தாம் தாம் பெருமை பெறக் கருதி தர்க்க யுக்திகளைக் கொண்டு போலி வைதிகங்களை உண்டாக்குவார்கள். இவற்றால் பிரிவினையுண்டாய்க் கலகங்களும் குழப்பங்களு முண்டாகும். ஜனங்களுக்குள் ஒற்றுமையிராது. அரசர்களும் இந்த மதக்கலகத்தில் புகுந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவார்கள். எங்கும் சண்டை சச்சரவுமா யிருக்கும். அச்சமயம் பிற நாட்டரசரும் மிலேச்சர்களும் நாட்டில் பிரவேசித்து இந்தச் சண்டைகளில் கலந்து கொள்வார்கள். கலி ஐயாயிரத்துக்குள் பரதகண்டம் மிலேச்சர்களால் நிறைந்து விடும். அந்த ஆசாரங்களும் நாட்டில் கலந்து போகும். நாளடைவில் வைதிக சொரூபம் மறைந்து குறைவு படும். இதனால் தர்மாசாரங்கள் தலை தடுமாறிப் போம்.

 

கலியுகம் பிறந்து ஐயாயிர வருஷங்களுக்குள்ளாக இவ்வளவு தீமைகளும் உண்டாய்விடும். ஐயாயிரம் பிறந்தபின் பற்பல அதிசயங்களுண்டாகும். படியாதவர்கள் எல்லாரும் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள். மிலேச்ச பாஷையும் மிலேச்ச ஆசாரமும் பரவும். மிலேச்சர் கொண்ட மதமே பரவும். வைதிக மதம் மிகவும் குறைவு படும். குரு முகமாய் வித்தையைத் தெரிந்தவர்கள் அகப்படுவது அரிது. ஒவ்வொருவரும் தமக்குத்தாமே குருவாக இருப்பார்கள். நாஸ்திக மதமும் நாஸ்திக வாதமும் பரவும். தெய்வ ஆராதனை மறக்கப்படும். தர்மம் மிகுதியும் குறையும். தர்மமெல்லாம் டம்பத்தைப் பற்றியே செய்யப்படும். வைதிகச் சடங்குகள் வெறுக்கப்படும். பாவமே சிறந்ததாகக் கருதப்படும். பாபமே புண்ணியம் போலத் தோன்றும். புண்ணிய மெல்லாம் இழிதொழிலாகக் கருதப்படும். புண்ணிய மிதுவென்றும் பாவ மிதுவென்றும் பகுத்தறியும் அறிவு மனிதர்களிடம் குறைந்து தோன்றும். இதனால் தங்கள் மனதுக்குப் பிரியப்பட்டவை யெல்லாம் புண்ணியமாகவும் பிரியப்படாதவையெல்லாம் பாபமாகவும் கருதப்படும். தெய்வ நிந்தனை அதிகமாகப் பரவும். பகிரங்கமாகப் பிரசங்கமும் செய்வார்கள். அந்தப் பிரசங்கத்தினால் அதேக மந்தமதிகள் தெய்வசம்பத்தை யிழந்து விடுவார்கள். வேகமும் இதிகாச புராணங்களும் இகழப்படும். ஜனங்கள் வேதசாஸ்திரங்களை வெறுப்பார்கள். பெரியோர்கள் இகழப்படுவார்கள். மூடர்களும் அவைதிகர்களும் புகழப்படுவார்கள். வைதிகாகளும் புத்திமயங்கி தத்தம் கர்மங்களைச் செய்ய நாணுவார்கள். பெண்கள் டம்பத்தில் பிரியப்படுவார்கள். சரியான நெறியில் நடக்க மாட்டார்கள். கல்விமான்கள் என்று பேர் பெற்றவர்களும் கற்புடைமையை வெறுத்துப் பேசுவார்கள். இவைகளால் பெண்கள் மனம் தடுமாறும். தங்கள் கணவர்களை மதிக்கமாட்டார்கள். நகைகள் பூண்பதிலும் உயர்ந்த ஆடைகளை அணிவதிலுமே மனதைச் செலுத்துவார்கள். கணவர்களிடத்தில் வஞ்சனையாகவே நடப்பார்கள். ஏழைகளுக்குப் பிச்சையிட மாட்டார்கள். யாசகர்களைக் கடின வசனங்களைக் கூறித் தூஷித்து மிரட்டுவார்கள். அடிக்கடி பஞ்சமும் பொருட் சேதமும் உண்டாகும். அதிவிருஷ்டி அனாவிருஷ்டிகள் அதிகமாகும். அகால மழை பொழியும், மழையினாலும் வெள்ளத்தினாலும் பயிர்கள் குறைந்து பஞ்சம் உண்டாகும். பிரஜைகள் தங்களுக்குள்ளே கலகம் செய்து சண்டையிடுவார்கள். வருணாசிரம ஜாதிமத சம்பந்தமாக அடிக்கடி போராட்டம் உண்டாகும். இவை யெல்லாம் அடிக்கடி நிகழும். இடைக்கிடையே ஒரு அவதார புருஷன் தோன்றிச் சீர்படுத்துவான். சிலகாலம் சரியாய் நடக்கும். இப்படி மூன்றரை லட்சம் வருஷங்கள் கலக்முண்டாவதும் அவதார புருஷர்கள் கோன்றிச் சீர்படுத்தித் தர்மத்தை நிலைநிறுத்துவதுமாக இருக்கும். அதற்குமேல் முன் சொன்னபடி முழுமோசமாகும்.

 

அரசனே! கலியுகத்துக்கு வருஷம் நாலு இலட்சத்து முப்பத்தீராயிரம். இதில் நாலாவது பாகம் மிகக் கொடியது. அதைப்பற்றித் தான் இப்பொழுது நான் சொன்னது. முதல் முக்கால் பாகமாகிய மூன்று இலட்சமும் கொடியதே யாயினும் அடிக்கடி அவதார புருஷர்கள் தோன்றி உலகத்தைத் திருத்தி நன்னெறி காட்டுவார்கள்; ஆகையால் வைதிக நெறி முற்றும் மாறுபடாமலே இருக்கும். இருந்தாலும் தர்மம் நிலை தடுமாறிக் கொண்டே வரும். நெறிதவறாத வேந்தர்களும் தோன்றி தரும் பரிபாலனம் புரிவார்கள். அதனால் தருமங்கள் தலை யெடுக்கிறதும் தலை இறங்குகிறதுமாகவே இருக்கும். சதாசாரம் குறைந்து கொண்டு தானிருக்கும். கடைசிபாகத்தில் அண்ணனுக்குத் தம்பியும், பிதாவுக்குப் புத்திரனும், புருஷனுக்கு மனைவியும், எஜமானுக்குச் சேவகனும் பகிரங்கமாகத் துரோகம் செய்வார்கள். அந்தக் காலத்தில் தான் மறையவர்க்குப் பெரிய ஆபத்து நேரும். அவர்கள் மலைகளிலும் வனங்களிலும் ஒளிந்து கொண்டு அன்னந் தண்ணீர் கூடக் கிட்டாமல் தெய்வத்தைச் சிந்தித்துக் கதறிப் புலம்புவார்கள். அப்பொழுது தான் கல்கி உதிப்பார். அவர் பாவிகளைச் சங்கரித்துப் புதியதான கிருதயுகத்தை உற்பத்தி யாக்குவார். அரசனே! அரசனாலேயே நல்லயுகங்களும் கெட்ட யுகங்களும் உண்டாகின்றன. நீர் நீதிதவறாமலிருந்து உலகத்தைப் பரிபாலனம் செய்யும். அரசனாலே ஜகம் காக்கப்படுகிறது. பிரஜைகள் சுகப்படுகிறார்கள். இது விஷயமாய் நான் சொல்வதைக் கேளும்.

வைனியன் என்ற ஒரு இராஜரிஷி அசுவ மேத யாகம் செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அத்திரி என்ற ஒரு பிராமணன் உலகத்தை வெறுத்துக் காட்டுக்குப் போய்த் தவம் புரியக்கருதித் தமது கருத்தைத் தமது பத்தினிக்குக் கூறி உன் கருத்தென்ன வென்றார். அவள் நீர் சொன்னதே சரி, நானும் கூட வருகிறேன், அசுவமேதயாகம் செய்கிற வைனிய ராஜனிடம் போய்ப் பொருளை யாசியும், அவ்வசரன் நீர் விரும்பியபடி பெரும் பொருள் கொடுப்பான், அதை நமது பிள்ளைகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டு நாம் வனத்துக்கு போகலா மென்றாள். முனிவர்," பெண்ணே! அவ்வரசன் சபையில் எருக்கு விரோதிகள் பலரிருக்கிறார்கள். ஆயினும் உனக்காக நான் போகிறேன்' என்று சொல்லிப் புறப்பட்டுப் போய், "அரசனே! நிச்சயமாகவே நீர் பாக்கியவந்தர்; நீர் சகல பிராணி களுக்கும் இறைவர்; முனிவர்கள் உம்மை வந்தனம் செய்கிறார்கள். உமக்கு மேற்பட்டவர்களில்லை" என்று சொன்னார்.

 

இதைக் கேட்ட கௌதமர் என்ற ரிஷி கோபம் கொண்டு, "அத்திரிமுனிவரே! இப்படிப்பட்ட மூடத்தனமான வசனங்களை மறுபடியும் பேசாதேயும். மஹேந்திரனே எல்லாப் பிராணிகளுக்கும் இறைவன். அவனே எல்லா அரசர்களுக்கும் மேலான அரசன்'' என்றார். அத்திரி "இந்த அரசனும் தேவேந்திரனைப் போலவே நமக்குப் பாக்கியத்தை நியமிக்கிறார். நீர் அறியாமையால் மயங்கிப் பேசுகிறீர்'' என்றார். கௌதமர், "அத்திரிமுனிவரே! நீர் தப்பாகப் பேசுகிறீர். பொருள் சம்பாதிப்பதற்காக வீணாக அரசனைப் புகழ்ந்து பேசுகிறீர். செய்யத்தக்க மேலான கருமம் இன்னதென்று உமக்குத் தெரியாது. உமக்கு நல்லறி வில்லாமையால் மயங்கிப் பேசுகிறீர்'' என்றார். கௌதமர் நான் அறியாதவனல்ல. இவ்விஷயத்தில் நீர் தான் தப்பு அபிப்பிராய முள்ளவராயிருக்கிறீர். அரசனுடைய தயவைச் சம்பாதிப்பதற்காக அவனை வீணாகப் புகழ்ந்து பேசுகிறீர். உமக்கு வயது மட்டும் ஆயிற்று; மரம் போல வளர்ந்து இருக்கிறீர் " என்றார். இச்சச்சரவைக் கேட்டு யாகம் செய்யும் முனிவர்கள், " அவ்விருவரும் என் வழக்கிடுகிறார்கள்? இந்தராஜ சபையில் அவர்களை யார் விட்டது?'' என்றார்கள். சர்வக்ஞராகிய காசியபர் அவர்களிடம் வந்து நீங்கள் எதைக்குறித்துத் தர்க்கம் பண்ணுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு கௌதமர் இந்த அத்திரி முனிவர் வைனியன் என்பவன் எங்களுடைய அதிர்ஷ்டத்துக்கும் அரசனா யிருக்கிறான்'' என்று சொல்லுகிறார் என்றார். காசியபர் ஸனத் குமார முனிவரை அழைத்து அவர்கள்ளுடைய வழக்கைத் தீர்க்கும்படி சொல்லிப் போய்விட்டார்.

 

தெய்வத் தன்மையுள்ள சனத்குமாரர் அவர்களை நோக்கி உண்மையான வசனங்களைச் சொல்லுகிறார்.'' நெருப்பானது காற்றுடன் சேர்ந்த போது காட்டை யெரிக்கின்றது. பிராமண தேஜசு க்ஷத்திரிய தேஜசுடன் கூடினால் சத்துருக்களை தகிக்கின்றது. அரசன் வைதிக நெறியை ஸ்தாபிப்பதில் பிரசித்தி யடைந்திருக்கிறான். தன் குடிகளைக் காப்பாற்றுகிறான். அதனால் அவன் எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுகிற இந்திரனை யொப்பா யிருக்கிறான். நீதியைப் போதிப்பதினால் சுக்கிரனை ஒத்திருக்கிறான். புத்தி கூறுவதினால் பிருகஸ்பதியை ஒத்திருக்கிறான். ஆகையால் அரசன் நமது அதிர்ஷ்டத்தை ஆளுகிறான். எல்லா மனிதராலும் வணங்கப்படும் எல்லாருக்கும் மேலானவனா யிருப்பதினாலே பிரஜாபதி, விரா, ஸ்வராட் பூபதி முதலியவர்கள்ளாலே புகழப்படுகிறான். சகலருக்கும் விதிகளைக் கற்பிக்கிறதினாலும், யுத்தத்தில் வெற்றி கொள்வதினாலும், சமாதானத்தை உண்டாக்குவதினாலும், உலகத்தைப் பரிபாலிப்பதினாலும், தன் பிரஜைகளைச் சொர்க்கத்துக்குச் செலுத்துகிறதினாலும் விஷ்ணுவை ஒப்பாகிறான். கோபத்தினாலும், யுத்தத்தில் வெற்றி கொள்வதினாலும், உண்மை நெறியை நிலைநிறுத்துகிறான். ரிஷிகள் கூட ராஜனுக்குப் பயந்தே பாவம் செய்யாம லிருக்கிறார்கள். தேவர்களுக்குள் சிறந்த சூரியன் தன்னுடைய கிரணங்களினாலே உலகிற் பரந்த இருட்டை அழிக்கிறது போல் மனிதனுட் சிறந்த அரசன் உலகிலுண்டாகும் பாவங்களை அழிக்கிறான். சாஸ்திரப் பிரமாணங்களினாலே அரசனுடைய மகிமை நிலை நிறுத்தப்படுகிற படியால், அரசனுக்குச் சார்பாகப் பேசினவர் பட்சத்தை நான் அங்கீகரித்துப் பேசுகிறேன்'' என்றார்.

இதைக்கேட்ட நல்ல மனமுள்ள அரசன் மகிழ்ந்து இராஜ மேன்மையாகப் பேசி வெற்றி கொண்ட பட்சத்தைச் சார்ந்து களிப்புடன் சொல்கிறான், "பிராமண ரிஷியே! நீர் என்னைப் பெரியவன் என்றும், மனிதர்களுக்குள் சிறந்தவனென்றும் நிலை நிறுத்திய படியாலும், என்னைத் தேவனுக்குச் சமானமாகக் கூறினபடியாலும், உமக்குப் பலவகையான திரண்ட ஐசுவரியத்தைக் கொடுக்கிறேன். நல்ல ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பணி விடைப் பெண்களையும், பத்து இலட்சம் தங்க நாணயங்களையும், பத்துப் பாரம் தங்கமும் கொடுக்கிறேன். நீர் எல்லா விஷயங்களிலும் தேர்ச்சி யடைந்தவ ரென்று நம்புகிறேன் " என்று கூறி அவரைச் சன்மானித்தான். மகிமையுள்ள அத்திரி முனிவர் அரசனால் இப்படிப் பெருமைப் படுத்தப்பட்டார். அவர் அரசன் கொடுத்தவைகளைப் பெற்றுக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்து தம்முடைய புத்திரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டுத் தவம் புரியும் விருப்பத்துடன் வனத்துக்குப் போய்விட்டார்.

 

''அரசனே! கேட்டீரா? நெறி தவறாமலிருந்து பிரஜைகளுக்கு நன்மை செய்வதினால் சூரியன், இந்திரனாதி தேவர்களையும் மஹா விஷ்ணுவையும் ஒப்பாகிறா'' னென்று ஸனத் குமார முனிவர் சாஸ்திரப் பிரமாணங்களால் நிறுத்தினார். நெறி தவறின அரசனை உலகத்தார் மதிக்க மாட்டார்கள். அவனுக்குப் பூலோகத்தில் இகழ்ச்சியும் அவமானமுமே யுண்டாகும். அதனால் அவன் மறுமையிலும் நல்ல கதியையும் அடையமாட்டா னென்று நூல்கள் கூறுகின்றன. பெரியோர்களும் அப்படியே அபிப்பிராயப்படுகிறார்கள். நான் உம்மிடத்தில் அதிகப் பிரியமுள்ளவனாகையால் உண்மையைக் கூறினேன். இவை யெல்லாம் மனு முதலியவர்களால் அங்கீகரிக்கப் பட்டவை. பாண்டவர்களை அழைத்து அவர்களையும் பரிபாலியும்.

 

திருதராஷ்டிரராஜன் 'விதுரா? எனக்கும் அப்படித்தான் விருப்பமிருக்கிறது. ஆயினும் விதி வலிது. இப்பொழுது மனுவென்று கூறினையே இப்பொழுதிருக்கும் வைவசுவத மனு என்பவர் யார்? அவர் எப்படி இந்தப் பதவியைப் பெற்றார்? அதை விளங்கச் சொல்'' என்றார்.

 

விதுரர், ''மகிமையுள்ள ஒரு பெரிய ரிஷியிருந்தார். அவர் வைவசுவதன் என்ற ரிஷியின் புத்திரர்; பலத்தாலும், பராக்கிரமத்தாலும், தவசாலும் மிகச் சிறந்தவர். அவர் பதரிகாசிரமத்தில் ஒரு காலால் நின்று கொண்டும், இருகரங்களையும் மேலே தூக்கிக் கொண்டும் உக்கிரமான தவசு புரிந்தார். இரண்டு கண்களையும் மூடாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டு பதினான்கு வருஷம் கடுந்தவம் புரிந்தார். அவர் ஒரு காலத்தில் சடைமுடி தரித்துக் கொண்டு அருவியின் கரையில் தவசு செய்தார். அப்போது ஒரு மீன் வந்து அவரைப் பார்த்துச் சொல்லுகிறது, " மகிமை யுள்ளவரே! நான் ஆதர வற்ற ஒரு சிறிய மீன். பெரிய மீன்களுக்குப் பயப்படுகிறேன். பெரிய ரிஷியே நீர் என்னைக் காப்பாற்ற வேண்டும். சின்ன மீன்கள் பெரிய மீன்களுக்கு ஆகாரமாகிற கெட்ட வழக்கம் எங்கள் ஜாதியிலிருக்கிறது. ஆகையால் இந்தப் பயங்கரமான சமுத்திரத்தில் நான் முழுகிப் போகாதபடி என்னைக் காப்பாற்றும், நீர் செய்கிற உபகாரத்துக்கு நான் பதில் உபகாரம் செய்வேன் என்றது.

 

அந்த மீன் சொன்னதைக் கேட்ட வைவசுவத மனு அதைத் தமது கையில் எடுத்துக் கொண்டார். அதன் சரீரம் சந்திரனுடைய நிலவைப்போலப் பிரகாசித்தது. நீர் நிறைந்த ஒரு மண் பாண்டத்தில் அதை விட்டு வைத்தார். அது பெருத்தது. மனு அதைத் தன் சொந்தப் புத்திரனைப் போல வளர்த்தார். நெடு நாளைக்குப் பின் அது வளர்ந்து விட்டபடியால் அந்த மண்பாண்டம் அதற்குப் போதவில்லை. அது மனுவை நோக்கி, மகிமையுள்ளவரே! என்னை வேறோரிடத்தில் வையும் என்றது. மனு அதை ஒரு நீர் நிறைந்த குளத்தில் விட்டார்.

 

அந்தக் குளம் இரண்டு யோசனை நீளமும் ஒரு வோசனை அகலமும் உள்ளது. மீன் பெரிதாய் விட்டபடியால் அந்தக் குளமும் அதற்குப் போதாமற் போயிற்று. மீன் மனுவை நோக்கி "மகிமையுள்ளவரே! சமுத்திர ராஜனுக்குப் பிரிய பத்தினியான கங்கையில் என்னைக் கொண்டு போய்விடும். உமது கருணையால் நான் மிகப் பெரிதாக வளர்ந்து விட்டபடியால் நீர் என்ன கட்டளையிட்ட போகிலும் அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன்'' என்றது. மனு அதைக் கங்கையில் கொண்டு போய் விட்டார். சில நாளைக்குப் பின் மீன் மனுவை நோக்கி " இந்தக் கங்கை எனக்குப் போதவில்லை; என்னைக் கடலில் கொண்டுபோய் விடும்'' என்றது. அவரும் அப்படியே அதைச் சமுத்திரத்தில் கொண்டு போய் விட்டார். விட்டவுடன் அது அவரை நோக்கி '' நீர் செய்ய வேண்டுவதைச் சொல்லுகின்றேன் கேளும்" என்று சொல்கிறது.

 

''பெரியவரே! மஹானுபாவரே! இந்தச் சராசரப் பொருள்களெல்லாம் அழிந்து போகிற காலம் வந்து விட்டது. ஆகையால் உமக்கு நன்மையானதைச் சொல்கிறேன். ஒரு பெரிய பெட்டி பண்ணும்; அதில் நீளமான ஒரு கயிற்றைக் கட்டிவையும்; அதில் சப்த ரிஷிகளுடன் நீரும் ஏறிக்கொள்ளும்; எல்லாவகையான தானியங்களையும் எடுத்துக் கொள்ளும்; அதைத் தனியா கவைத்துக் காப்பாற்றும்; பிறகு நான் ஒரு கொம்புள்ள ஜந்துவாக உமக்கு முன்னால் வருவேன், அப்போது என்னைத் தெரிந்து கொள்ளும். பயங்கரமான பிரளயமுண்டாகும், அதில் என் உதவியில்லாமல் நீர் தப்பித்துக் கொள்ள முடியாது " என்று கூறிற்று. மனு மீனை நோக்கி "இறைவனே! நீர்சொன்னவற்றில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. ஆகையால் நீர் சொன்னபடியே செய்வேன்'' என்றார். பிறகு இருவரும் பிரிந்து போய்விட்டார்கள்.

 

பிறகு மனு ஒரு கப்பல் செய்து அதில் சகல தானியங்களையும் ஏற்றிக் கொண்டு கடலில் சென்றார். மனு இப்போது அந்த மீனை நினைத்தார். அதை அறிந்த மீன் தலையில் இரண்டு கொம்புகளுடன் அவர் முன்னால் வந்தது. அதன் கொம்புகளில் மனு கயிற்றைக் கட்டினார். கட்டினதும் மீன் அந்தப் பெரிய பெட்டியைப் பலமாக இழுத்தது. புயற்காற்று வீசிற்று. அப்போது பூமியின் திசை ஒன்றுந் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் நீர்மயமாயிருந்தது. ஜலமானது பூமி ஆகாயம் இரண்டையும் மூடிக் கொண்டது. இப்படிப்பட்ட பெரிய வெள்ளத்தில் மனு சப்த ரிஷிகள் மீன் இவர்களைத் தவிர வேறொன்றும் காணப்படவேயில்லை. பல வருஷகாலம் வரைக்கும் மீன் கப்பலை இழுத்துக் கொண்டிருந்தது. கடைசியில் கப்பலை இமயமலையின் சிகரத்துக்கு இழுத்துக் கொண்டு வந்தது. பின் அந்த மீன் சப்த ரிஷிகளை நோக்கிச் சொல்லுகிறது.

 

"தாமதம் பண்ணாமல் இந்தக்கப்பலை இந்தச் சிகரத்தில் கட்டுங்கள்'' என்றது. அவர்களும் அப்படியே கட்டினார்கள். அந்த நாள் இமய மலைச்சிகரம் நௌ பூதானம் என்று கூறப்படுகிறது. மீன் சப்த ரிஷிகளை நோக்கி "சிருஷ்டிக் கர்த்தாவாகிய பிரம்மா முதல் எனக்கு மேற்பட்டவர் ஒருவருமில்லை. நானே மீன் வடிவங் கொண்டு இந்த ஆபத்தினின்றும் காப்பாற்றினேன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்களாகிய சகல சராசரங்களையும் மனு சிருஷ்டிப்பார். உக்கிரகமான தபசு செய்து மனு உலகத்தைச் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெறுவார். என்னுடைய அனுக்கிரகத்தால் மனுவை மாயை மறைக்காது'' என்று இப்படிச் சொல்லிவிட்டு ஒரு க்ஷணத்துக்குள் திடீரென்று மறைந்து போயிற்று. வைவசுவத மனுவும் உலகத்தைச் சிருஷ்டிக்க எண்ணங் கொண்டார்.

 

சிருஷ்டிக்கிற போது மனுவை மாயை மறைத்து விட்டது. ஆகையால் அவர் உக்கிரகமான தபசு செய்தார். தவத்தில் சித்திபெற்றபி ன் மனு சரியானபடி சிருஷ்டிக்கத் தொடங்கினார். இந்தக் கதைக்கு மீனோபாக்கியானம் என்று பேர். இதைச் சிரத்தையுடன் படிக்கிறவர்கள் எண்ணின எண்ணங்களெல்லாம் நிறைவேறும். சகல பாக்கியங்களையும் பெறுவார்கள். அந்தத்தில் சொர்க்கத்தையும் பெறுவார்கள்.

 

அரசன், "விதுரா! உலகத்தில் எவ்வகையான ஆகாரங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன? அவை யாரால் உண்டாக்கப்பட்டன? அவற்றுள் சிறந்தது எது? தெய்வானுக் கிரகத்துக்குச் சரியான மார்க்கம் எது? இவைகளைச் சரியானபடி எனக்குச் சொல்லு. நீ எல்லாவற்றையும் அறிந்திருக்கிறாய். உன் வசனங்கள் கேட்பதற்கு இன்பமாயிருக்கின்றன. இந்த வம்சத்தில் நீ ஒருவனே சகல சாஸ்திர இரகசியங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறாய் " என்று கேட்க விதுரர் சொல்கிறார்.

 

சிரௌதம், ஸ்மார்த்தம், பௌராணம், சித்தாந்தம் என நால்வகையாய ஆசாரங்களுண்டு. அவற்றுள் முதற் கூறிய சிரௌத ஸ்மார்த்தங்க ளிரண்டும் சிரேஷ்ட முடையன. இவைகளையே எல்லா வைதிகர்களும் ஆசரிக்கின்றார்கள். சிரௌதம் என்பது வேத நெறி. வேதத்துக்குச் சுருதி என்று ஒருபெயர் உண்டு. சுருதி என்றால் காதினால் கேட்கப்படுவது என்பது பொருள். அதாவது சுரோத்திரம் என்கிற காதுக்கு விஷயமாவது என்பது. வேதத்தை எழுதிப் படிப்பதில்லை. அது ஆசிரியன் வாயினாற் சொல்லிக் கொடுக்க காதால் கேட்டுப் பாடம் பண்ணப்படுவது. இதனால் வேதத்துக்கு எழுதாமறை என்று ஒரு பேர் கூறப்படும். ஏனென்றால் எழுதவும் சாத்தியப்படாது. அதற்கு ஸ்வரமே காரணமாம். இத்தகைய வேதத்திற்கு அனாதி ஸ்வயம்பு என்று நூல்களில் கூறப்படுகிறவரும் கர்த்தன் இல்லை. பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களும் இதனை உண்டாக்கினவர்களில்லை. அதனாலேயே ஸ்வயம்பு என்பர். பரமேசுரன் இதை வெளிப்படுத்தினவர். அவரும் இதை உண்டாக்கினவரில்லை. சிவம் உள்ள போதே இதுவும் உள்ளது. ஆதலால் அநாதியாம் என்பர். இதையே நாத பிரமம் என்பர். இது சிவத்துக்குச் சொரூபமாயுள்ளது. ஆதலால் இதற்குக் கர்த்தர் ஒருவருமில்லை. வேதம் என்பதற்கு அறிவு நூல் என்று அர்த்தம். இத்தகைய வேதநெறியாகிய ஆசாரமே சிறப்புடையது. யாகம், யக்ஞம், ஹோமம் முதலிய வெல்லாம் சிரௌதமே. இதையே அந்தணர்கள் அனுஷ்டிக்கின்றார்கள்.

 

இரண்டாவது ஸ்மார்த்தம் என்பது ஸ்மிருதி நெறியாம். ஸ்மிருதி என்பது பிரமதேவர் மனு முதலியவர்கள் நெடுங்காலம் தவத்திலிருந்து சிந்தித்து, வேதப் பொருளைத் திரட்டிக் கூறியதேயாகும். ஸ்மிருதி என்பதற்கு நினைக்கப்பட்டது என்பது பொருள். ஸ்மிருதம் என்றால் நினைத்தல். வேதப்பொருள் நெடுங்காலம் சிந்தித்து எடுக்கப்பட்டது. இதுவும் வைதிகமேயாம். இந்த நெறியே எல்லாராலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நெறிபற்றி ஒழுகு வோர் ஸ்மார்த்தர் என்று அழைக்கப்படுவார்கள். இந்த நெறி சிரௌதத்தை விடச் சற்று எளிதானது.

 

மூன்றாவது பௌராணிகம். அது புராண நெறியாம். புராணங்களிலும் ஆசாரங்கள் கூறப்படுகின்றன. "இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்தப் பிரகாச்யதே' என்ற வசனத்தால் புராணம் வேதாந்தப் பொருளாகிய ஞான காண்டத்துக்குச் சிறப்புடையதே யன்றிக் கர்மானுஷ்டானங்களுக்கு அவ்வளவு சிறப்புடையதல்ல வென்பர். கர்மாசாரத்துக்கு ஸ்மிருதியே பிரமாணமுடையது. ஞானத்துக்குப் புராணம் பிரமாணமுள்ளது. ஆதலால் ஞானத்துக்கு ஸ்மிருதியும், கர்மத்துக்குப் புராணமும் பிரமாணமாவதில்லை. ஆயினும் சிலர் புராணாசாரம் பற்றி நடக்கிறார்கள். வைதிர்கள் இந்நெறியைச் சிறப்பாகக் கொள்ளுகிறதில்லை. ஆயினும் வேதத்துக்கு மாறுபடாதிருப்பதை மாத்திரம் பிரமாணமாகக் கொள்வார். இதனால் வேத நெறியோடு மாறுபடாமல் இருக்கிறவைகளெல்லாம் பிரமாணமுள்ளனவாம். சிலரே இந்த ஆசாரம்பற்றி ஒழுகுகின்றார்கள். அவர்களும் சிரௌத ஸ்மார்த்த நெறிகளை அலட்சியம் செய்வதில்லை. ஆதலால் சிரௌத ஸ்மார்த்தம் இரண்டும் மிக்க சிலாக்கியமான நெறிகளாம்

 

வேதாகம புராணம்.

 

வேதம் என்பது அறிவு நூல் என்று பொருள் தரும் என்று முன்னமே கூறினோம். ஆகமம் என்பது வந்தது என்று பொருள் தரும். எங்கிருந்து வந்ததென்றால் வேதத்திலிருந்து வந்தது, அல்லது அவற்றைக் கூறிய தேவர்களிடமிருந்து வந்தது என்பர். வேதநெறி பற்றி ஒழுகவியலாதவர்களை அனுக்கிரகிக்கும் நிமித்தம் சிவன், விஷ்ணு, பிரமா இவர்களால் கூறப்பட்ட நூல்கள் ஆகமம் என்னப்படும்.

 

சிவனால் கூறப்பட்ட ஆகமங்கள் சிவாகமம் என்னப்படும். இவை காமிகம் முதல் வாதுளமீறாகிய இருபத்தெட்டாம். இவ்வாகம நெறி பற்றி யொழுகுவோர் சைவர் என்று கூறப்படுவார்கள். இவை வேதப் பொருளை விளக்குவதால் வேதம் சூத்திரமும், இவ்வாகமங்கள் அதன் பாஷியமும் (உரையும்) ஆமென்பர்.

 

இவ்வாகமங்களில் சரியை கிரியை யோகம் ஞானம் என்று நால்வகை ஒழுக்கங்களையும் அவற்றால் அடையும் பயனையும் விரித்துக் கூறப்பட்டிருக்கிறது. இவற்றுள் பதி, பசு, பாரம் என்ற பதார்த்தங்கள் (பொருள்கள்) கூறப்படும். பதி = சிவன், பசு = ஜீவான்மா, பாசம் ஆன்மாவின் அறிவை மறைத்து நிற்பதாகிய பாசம். இதனை மலம் என்றும் கூறுவர். மலம் என்றால் அழுக்கு என்பது பொருள். இது அறிவை மழுங்கச் செய்து, சிவத்தை அறியாமல் ஆன்மாவை மறைத்து நிற்பதனால் இப்பெயர் கூறப்பட்டது.
 

மூன்று பொருள் கூடி ஒன்று போல நின்று தத்தம் தொழிலைச் செய்வதனால் மும்மலமென்றும், ஒன்றையொன்று நீங்காமல் கலந்திருப்பதால் மலமென்று ஒருமையாகவும் கூறப்படும். மும்மலமாவது ஆணவம், காமியம், மாயை என்பனவாம். ஆணவம் என்பது செம்பிற் களிம்பு போல அநாதியாகவே ஆன்மாவைப் பற்றி நிற்கும் இயல்புள்ளதாதலால் சகசமலம், மூலமலம், சாரணமலம், என்னும் பெயர்களைப் பெற்றிருக்கும்.
 

காமியம் (கார்மியம்) என்பது கர்மம். கர்ம சம்பந்தம் கார்மியம் என்னப்பட்டது. இது காமியம் என்று மருவி வழங்குகின்றது. ஆன்மாவினால் செய்யப்படும் கன்மமே அதுவாம். மாயை என்பது ஒளியால் ஆன்மாவுக்குத் தனு கரண புவன போகங்களை உண்டாக்குவது. இது சிவதியாகவும் கூறப்படும். இம்மூன்றுங் கூடிய மலம் பாசம் என்னப்படும். இது எவ்வாறு உண்டாயது எப்பொழுது உண்டாயதென்று அறிந்து கூறப்பட முடியாமையால் அநாதி என்பர். இப்படியே பதி, பசு, பாசம் என்னும் திரிபதார்த்தங்களும் அநாதி என்னப்படும்.

 

ஆன்மா அநாதியாகவே மல சம்பந்தப்பட்டிருப்பதால் அது பசு என்னப்படுகின்றது. பாசசம்பந்தத்தால் சுதந்தரமிழந்து விட்ட ஆன்மாவைப் பரதந்திரன் என்பர்.
 

இந்தப் பாசம் ஒழிந்தால் தன் சுயாதீனத்தைப் பெற்று நித்தியாநந்த சொரூபியாக விளங்கும். இது பற்றியே கருணாகரனாகிய பதி (சிவன்) சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கினான். சிருஷ்டியாவது மாயையினால் தொண்ணூற்றாறு தத்துவங்களோடு கூடிய சரீரத்தை உண்டாக்கிக் கொடுத்து உபகரித்தல். இதனால் ஆன்மாவின் அறிவு பிரகாசிக்கும். அதனால் பதியை உணர்ந்து தவம்புரிந்து மலத்தைத் தொலைத்து முத்தியை அடையும். முத்தி இத்தன்மையது என்பதை முன்னாலேயே யோக ஞானப் பிரகரணங்களில் விரித்துக் கூறினோம் ஆண்டுக் காண்க.

 

பதிப் பொருளாகிய சிவனுக்கு ஐந்து தொழில்கள் கூறப்படுகின்றன. அவை சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்பன. பதிப்பொருள் இவ்வைந்து தொழில்களையும் ஐந்து சொரூபங்கொண்டு நடத்துகின்றார் என்று நூல்கள் கூறுகின்றன. அதாவது சிருஷ்டிக்கும் அவசரத்தில் பிரமன், ஸ்திதியில் விஷ்ணு, சங்காரத்தில் ருத்திரன், திரோபவத்தில் மஹேசுவரன், அனுக்கிரகிக்கும் போது சதாசிவன் என்றுமாம். சிவன் என்கிற ஒன்றே அவசரபேதத்தால் ஐந்து பெயர்களைப் பெற்றதென்க.

 

முக்தியானது பதமுக்தி என்றும், சாயுஜ்ய முக்தி என்றும் இருவகையாம். பத முக்தி சாலோக, சாமீப சாரூபம் என்று மூவகை. சாலோக மென்பது கடவுளின் உலகத்தில் வசிப்பது; சாமீபமென்பது கடவுளின் அருகிலிருப்பது; சாரூப மென்பது கடவுளின் சொரூபத்தைப் பெறுவது. சாயுஜ்யம் என்பது தான் என்றும் அதுவென்றும் வேறுபாடு காணப்படாமல் கடவுளோடு ஒன்றாய்க் கலந்து விடுதலாம். இந்தச் சாயுஜ்ய விஷயத்தில் வேதமும் ஆகமும் மாறுபடும்.

இந்தச் சைவாகமத்தில் சிரௌதாகமம் என்று மற்றொரு வகை கேட்கப்படுகின்றது. அது நால்வகைப்படும். ருரு, ததீசி, அகஸ்தியர், உபமன்யு என்பவர்களால் சொல்லப்பட்டன. சிரௌதம் என்றால் வைதிகம் என்பது பொருள். ஸ்மார்த்தாசாரம் பற்றி ஒழுகும் அந்தணர் இவ்வாகம முறைப்படியும் பூஜிப்பார்கள். அவர்களுக்குச் சாம்பவர் என்று பெயர்.

 

விஷ்ணு கூறிய ஆகமத்தில் பாஞ்சராத்திரம் ஒன்றே பிரபலமாகக் காணப்படுகின்றது. ஆனால் விஷ்ணுவும் பல ஆகமங்கள் கூறினார் என்று நூல்களால் தெரிய வருகின்றது. பாஞ்சராத்திரம் ஒன்றே இப்பொழுது அனுஷ்டானத்திலிருக்கின்றது. பாரதத்திலும் பாஞ்சராத்திரங் கூறிய முறைப்படி விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

பிரமனால் கூறப்பட்ட ஆகமம் ஹிரண்யகர்ப்ப மென்னும் பெயரால் அழைக்கப்பட்டது. அவ்வாகமப்படி ஆராதிப்போரைக் காணோம். அவ்வாகமமும் இப்பொழுது காணப்படுவதில்லை.

 

இவையெல்லாம் ஒவ்வொரு காரணம் பற்றிக் கூறப்பட்ட படியால் எல்லாம் அனுஷ்டிக்கத் தக்கனவே. ஆயினும் தத்தம் குலப் பெரியோர் எந்தமுறைப்படி அனுஷ்டித்தார்களோ அவ்வாறே அனுஷ்டிக்க வேண்டும்.

 

இனிப் புராணங்களைக் கவனிப்போம். இவை " இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்த ப்ரகாச்யதே'' என்று சாந்தோக்யாதி உபநிஷதத்தில் புகழ்ந்து கூறப்பட்ட சர்வசிலாக்கிய முடையனவே. இந்தப் புராணங்கள் வேதத்தின் ஞானபாகத்தை விளக்குவதாமென்று கூறுவர். கருமத்தை விளக்குவது ஸ்மிருதிகளும் ஞானத்தை விளக்குவது புராணமுமாம்.

 

அதனால் ஞானமார்க்கத்தை அடைய விரும்புவோர் புராணங்களைக் குருமுகத்தால் கசடறத் தேர்ந்துணர்தல் வேண்டும். இப்புராணங்கள் வியாச மஹாரிஷியால் வெளியிடப்பட்டன. இவை மஹா புராணங்களென்றும் உப புராணங்கள் என்றும் இரு பகுதியனவாம். மஹா புராணங்கள் பதினெட்டு, உபபுராணங்கள் பதினெட்டு. இவற்றுள் மஹா புராணங்களே வியாச முனிவரால் கூறப்பட்டன. உபபுராணங்கள் வேறு பல ரிஷிகளால் கூறப்பட்டனவாம். ஆதலால் அவை அவ்வவ்விருடிகளின் பெயர்களால் விளங்கும். மஹா புராணங்களே சிலாக்கியமுடையன; அவைகளே வேதத்தின் ஞான பாகத்தைச் செவ்வனே விளக்குவன. மஹா புராணங்கள் பதினெட்டுள் சிவமகிமையை விளக்கும் புராணங்கள் பத்து, விஷ்ணு மகிமை கூறும் புராணங்கள் நாலு, பிரமனுக்குரிய புராணங்கள் இரண்டு, சூரியனுக்கு ஒன்று, அக்கினிக்கு ஒன்று ஆகப் பதினெட்டாம். இவற்றுள் ஒவ்வொன்றும் பூர்வகாண்டம் உத்தரகாண்டம் என்று இரு பகுதியாய் விளங்கும். இந்தப் புராணங்கள் கூறிய வழியில் நின்று அவ்வாசாரம் பற்றி ஒழுகுவோர் பௌராணிகர் என்று கூறப்படுவார். அவர்கள் அதிக சொற்பமானவர்கள். இப்பௌராணிக மதாவலம்பிதர்களில் பாகவதர் என்போர் மிகுதியானவர். வப்பிரபட்டர் என்ற உத்தர தேச வித்துவானால் கூறப்பட்ட விஷ்ணு பாகவதமே இவர்களுக்குப் பிரமாண நூலாகும். அதிலும் தசமஸ்கந்தம் என்கிற பாகமே முக்கிய பிரமாணமாம். அதில் கிருஷ்ணனுடைய சரித்திரமே முற்றுங் கூறப்பட்டது. இதைப் பிரமாணமாகக் கொண்டு நடப்பவரே இக்காலத்தில் பாகவதர் என்பவராம்.

மத பேதம்.

 

கமத்தைத் தந்திரம் என்பர். அது பற்றி வரும் ஆசாரம் தாந்திரீகம் எனப்படும். ஸ்மிருதி ஸ்மார்த்தம் எனப்படும். அவ்வாசாரம் பற்றி ஒழுகுவோர் ஸ்மார்த்தர் எனப்படுவார். புராணாசாரம் பௌராணிகம் எனப்படும். அவ்வாசார முடையார் பௌராணிகர் எனப்படுவார். வேதாசாரம் வைதிகம் எனப்படும். அவ்வாசார முடையார் வைதிகர் என்றும் சிரௌதர் என்றும் கூறப்படுவார். இவர்கள் எல்லாரும் ஆதியில் அத்வைத மதக்கொள்கை யுடையவர்களாயிருந்தார்கள். பிறகு அவர்கள் தத்தம் ஆசாரம் பற்றி ஒழுகும் மதங்கள் வேறுபட்டன. இவ்வேறுபாட்டினால் ஜனங்களும் வெவ்வேறு ஜாதியாராயினர். இவர்களுள் சைவர்வைணவர், ஸ்மார்த்தர் என்பவர்களே முக்கியமானவர்கள். சைவர் ஆகமமுறைப்படி சிவாராதனை செய்வோர். வைணவர் விஷ்ணுவை வழிபடுவோர். ஸ்மார்த்தர்களில் பிராமணர்களே அதிகமானவர்கள். இவரது கொள்கை அத்வைத மதமாம். சைவ மதத்தில் சாக்தேயம், காணுபத்தியம், கௌமாரம் என்பன பிரதான உட்பிரிவு மதங்களாம்.

 

இவற்றுள் சாக்தேயம் சக்தியே (உமாதேவி) தெய்வ மென்றும், அந்தச்சக்தியே சகல சராசர மயப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்துக் காத்து அழிக்கும் பரம்பொரு ளென்றும், அந்தச் சக்தியை வழிபடுவதே முக்தி மார்க்கமென்றும், அந்தச் சக்தி துர்க்கா இலட்சுமி ஸரஸ்வதி என்று போக ஐசுவரிய மோட்சங்களை அளிப்பதாய் ஏகமாய் விளங்குகிறது என்றும் சாஸ்திரம் கூறும்.

 

காணுபத்தியத்தில் கணபதி என்கிற விநாயக மூர்த்தியே பஞ்ச கிருத்தியங்களையுஞ் செய்து ஜகத்தை நடத்தும் பரம் பொருளென்றும், அதனை வழிபடுவதே சிறந்த மோட்ச சாதனமாமென்றும் கூறும்.

 

கௌமார மதத்தில் குமாரக் கடவுள் என்கிற சுப்பிரமணியரே சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், த்ரோபவம், அனுக்கிரகம் என்கிற ஐந்தொழிலையும் நடத்தி ஜகத்துக்கு மூலகாரணமாய் விளங்கும் பரம்பொருளென்றும், அந்தக் குமாரக் கடவுளை வழிபடுவதே முக்திக்குச் சிறந்த மார்க்கமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

வைணவத்தில் விஷ்ணுமூர்த்தியே பிரத்யும் நன், சங்கர்ஷணன், அநிருத்தன் என்கிற மூன்று சொரூபமாயிருந்து ஜகத்துக்கு மூலகாரணமாய் முக்தியளிக்கும் பாதெய்வமென்றும், அதனை வழிபடுவதே முக்தி மார்க்கமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஹிரண்யகர்ப்பமென்று ஒரு ஆகமம் உண்டு. அதுஹிரண்யகர்ப்பன் என்கிற பிரமதேவனே ஜகத் காரணப் பொருளென்று கூறும். அந்த ஆகமத்தையும் அதனைக் கொண்டு பிரமனை வழிபடுவோரையும் இக்காலத்தில் காண்பது அரிது.

 

இவ்வாகமக் கொள்கைகளைப் பற்றி வழிபடுவோர் துநந்தம் பேர்களாம். இந்த வழிபாடு சவ்யம், அபசயம் என இருவகையாம். சவ்யம் என்பதுவைதிக நெறி வழுவாமல் சத்துவ போஜனாதிப் பொருள்களை இட்டுத்தேவனை வழிபடுவதாம். அபசவ்யம் என்பது மதுமாம்ஸம் முதலிய பொருள்களை உபயோகித்து வழிபடுவதாம்.

கௌமார மதத்தில் ஐயனார் முதலிய மதங்கள் அடங்கும். காளி, துர்க்கை முதலியன சாக்தேயத்தில் அடங்கும். காபாலம், களாமுகம், வைரவ முதலியன சைவத்திலடங்கும். இவை சவ்யாபசல்ய மார்க்கங்களால் தத்தம் குலாசார முறை தவறாமல் ஆராதித்துத் துதிக்கப்படுவனவாம். ஆயினும் சவ்யமார்க்கமே சிறந்ததென்று வேதமுணர்த்த வைதிகர்களாலும் வைதிகநூல்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாம்.

 

இனி, குரு, ததீசி, அகஸ்தியர் உபமன்யு என்கிற இந்த நால்வராலும் கூறப்பட்ட சைவாகமங்களுமுள. அவை அந்தணர் செய்யும் சிவாராதனைக்குஆதாரமாய் வைதிகமென்று பிரசித்தி பெற்று விளங்குகின்றன. ஆயினும்? இவ்வாகமங்கள் காணப்படுவது அரிதாம். அவை உபதேச மூலமாய் அந்தணரிடம் பரம்பாரக் கிரமத்தில் வழங்கி வருகின்றன. இந் நெறி ஆஸ்திகம் எனப்படும். இக்கொள்கை யுடையாரும் ஆஸ்திக ரெனப்படுவார்.

 

இவ்வாஸ்திகத்துக்கு மறுதலையாய் நாஸ்திகமென்று ஒருமதமும் கேட்கப்படுகின்றது. இக்கொள்கை யுடையாரும் நாஸ்திக ரெனப்படுவார். ஜகம் அநாதி, சிருஷ்டிகர்த்தாவென்று ஒருவன் இல்லை, பாவ புண்ணியங்களுமில்லை, அவற்றின் பயனாகிய நரக சொர்க்கங்களுமில்லை, அதைக் கொடுக்கிற தெய்வமுமில்லை, ஒன்றுமில்லை யென்பதனால் இவர்கள் நாஸ்திகர் எனப்பட்டார்கள். பூர்வ காலத்தில் நவபங்கி, சாத்தபங்கி, திரி யென்று சில நாஸ்திகரிருந்தார்கள். தற்செயல்வாதி என்றும் சுபாவவாதி யென்றும் சிலநாஸ்திகர்களிருந்தார்கள். இவர்களுள் சுபாவவாதியையே வேதம் புகழ்ந்தது இவர்கள் பிரபஞ்சம் சுவபாவமாகவே உண்டாகிறதென்றும், அதற்கு ஒரு கர்த்தனில்லை யென்றும் கூறுவார்கள். தற்செயல் வாதிகள் ஜடஜீவ அணுக்கள் தற்செயலாகக் கூடி பிரபஞ்சம் உண்டாயிற்று என்பார்கள். இவர்களாலியற்றப்பட்ட பல நூல்களுமுள. சாத்தபங்கி நவபங்கிகளில் சேர்ந்தவர்களே க்ஷமண பெளத்தர்கள் என்பார்கள். இனி மதக் கொள்கைகளை விரித்து எழுதுவதானால் நூல் மிகவும் விரியும். ஆதலால் அவற்றை விடுத்து நாம் எடுத்துக் கொண்ட ஆஸ்திக நாஸ்திகத்தை மாத்திரம் கவனிப்போம். சமயம் நேர்ந்த போது மற்றவற்றை ஆங்காங்கு விரித்துக் கூறுவோம்.

 

உலகத்துக்கு அரசரா யிருந்தவர்களும், கொஞ்சங் குறைய உலகத்திலுள்ள ஜனங்கள் எல்லாரும் ஆஸ்திகராகவே இருந்தார்கள். நாஸ்திகர்கள் மிகச் சிறு பான்மையோரேயாவர். நாஸ்திகர்களாலேயே நிறைந்த தேசம் எங்குங் கிடையாது. ஆஸ்திகர்களாலேயே நிறைந்து விளங்கிய தேசம் எங்கு முண்டு. சொற்பஜனங்களுடைய கொள்கையே நாஸ்திகமாம், ஆதலாலந்த வாதம் சிறப்புடைய தல்ல.

 

அப்படியானால், உலகத்தி லெங்கும் கல்விச் சிறப்பும் பேரறிவும் இல்லாதவரே பெரும்பான்மையோர்; கல்வியிற் சிறந்த அறிஞர் சிலரே. சொற்ப தொகையினராகிய அறிஞரை விலக்கிப் பெரும்பாலராகிய அஞ்ஞானிகளையே நாம் பின்பற்ற வேண்டி வருமல்லவா? ஆதலால் இந்த வாதம் பொருத்த முடையதன்றா மெனின், நன்று, பெரும்பாலோராகிய சிற்றறிவுடையோரும் சிறுபாலாராகிய அறிஞரை மேன்மைப்படுத்தித் தங்களைத் தாழ்த்திப் பேசிக்கொள்வதை எங்கும் காணலாம். நாஸ்திகர் கூடக் கல்விமான்களை மெச்சிப் பெருமைப்படுத்துவதைப் பார்க்கிறோம். மற்றவர் பட்சத்தில் அவ்வாறு காணப்படவில்லை. அறிஞரையும் மற்றவரையும் திருஷ்டாந்தம் காட்டிப் பேசுவது பொருந்தாது. பெரும்பாலோர் கொள்கையினையே நாம் கைக்கொள்ள வேண்டும். இன்றேல் பலராலுந் தாழ்வாக மதிக்கப்படுவோம்.

 

தனக்கு மேற்பட்டவர் ஒருவருமில்லை என்று கருதுகிற ஒருவன் பலகொடுந் தொல்லையும் துணிந்து செய்வான். தாய், தந்தை, தமையன், குரு, அரசன் இவர்களுக்கு அடங்கி நடப்பவனே உலகத்தில் கீர்த்தி பெற்று வாழ்வது பிரத்தியட்சம். எப்போதும் சுதந்தர மில்லாத ஒருவன் சுதந்தாமுள்ளவன் போல நடப்பது இழிவாம். அஃதெங்ஙன மெனின், ஒவ்வொருவரும் ஜீவனாதார நிமித்தம் மற்றவரிடம் வணங்கி நிற்பது பிரத்தியட்சம். தமக்குத் தெரியாதவைகளைக் கற்றவரிடங் கேட்டுத் தெரிந்து பேசுவதே அறிவுடைமையாம்

 

பலராலும் புகழ்ந்து கொண்டாடி அங்கீகரிக்கப்பட்டதை இல்லையென்று மறுப்பவன் புத்திமானாக மாட்டான். ஆதலால் பலராலுங் கொண்டாடப்படும் ஆஸ்திகத்தை இகழ்ந்து சிலராற் கூறப்படும் குதர்க்க வாதத்தைக் கைக்கொள்ளுவது தகுதியாகாது.

 

ஆயின் ஆஸ்திகத்தாற் பயனுண்டென்பதும் நாஸ்திகத்தாற் பயனில்லையென்பதும் எப்படித் தெரிய வரும்? ஆஸ்திகர்கள் கூறுகிற தெய்வம்முதலியன உண்டென்பதற்குப் பிரத்தியட்சமில்லை. நாஸ்திகர் கூறுவதற்கும் பிரத்தியட்சமில்லை. ஆதலால் இவ்விரண்டனுள் உண்மையுடையதெது! உண்மையில்லாதது எது? கொள்ளத்தக்கது எது? தள்ளத்தக்கது எது? சரியான நியாய மென்ன?

 

இந்தக் கேள்வி பொருத்த முடையதே. அதற்கு இங்ஙனம் விடைவிடுக்க. ஆஸ்திகர் நல்வினைகளும், அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களும் சொர்க்க நரகங்களும், அவற்றைக் கூட்டு விக்குந் தெய்வமும் உண்டென்று கூறுகின்றார்கள். அவர்களுக்கு வைதிக நூல்களே பிரமாணமாம். நாஸ்திகர் மேற்கூறியவை ஒன்றுமில்லையென்று கூறுகிறார்கள். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்கள் எழுதி வைத்த நூல்களே பிரமாணமாம். இவற்றுள் எந்த நூலைக் கொள்வது எந்த நூலைத் தள்ளுவது எனின்? கூறுதும்.

 

புத்திமானா யுள்ளவன் ஆஸ்திகத்தையே கைக்கொண்டு ஒழுகவேண்டும். ஏனெனின், நாஸ்திகர் கொள்கைப்படி தெய்வம் முதலியன இல்லையென்று கொள்வதனால் பல தீமைகள் விளைந்து மறுமையில் துன்பப்படநேரும். எவ்வாறெனின், நாஸ்திகர் கொள்கைப்படி தெய்வ மில்லாமற் போனாலும், மறுபிறப்பு மில்லாமல் போனாலும், ஆஸ்திக மதாசார முடையவர்களுக்கு ஒரு கெடுதியுமில்லை. தான தர்மங்களால் அவர்களடைந்த கீர்த்தியும் பெருமையும் உலகத்தில் நீடூழி நிலை பெற்று நிற்கும்.

 

ஆஸ்திகர் கொள்கைப்படி தெய்வமும், சொர்க்க நரகாதிகளும் இருந்து விட்டால் அந்தோ! நாஸ்திகர் கதி அவகதியேயாம்! நரகத்தில் வேதனைப்பட வேண்டிவரும். மறு பிறப்பால் பல அண்டங்கள் தோறும் சுழன்று திரிய நேரும். இப்படிப்படுங் கஷ்டம் அளவிடப்படாது. ஆதலால் தெய்வாதிகள் இல்லா விட்டாலும் ஆஸ்திகத்தைத் தழுவி நடப்பதால் கெடுதி யொன்றும் சம்பவியாது. பிரத்தியட்ச மில்லாத விரண்டு கொள்கைகளின் நன்மை தீமைகளைப் புத்தியாலாராய்ந்து தீமையில்லை யென்று காணப்படுகிறதையே கொள்ள வேண்டும். அதுவே புத்திக் கிலக்கணமாம். இல்லையென்பதற்குப் பிரத்தியட்சம் கிடையாது. உண்டென்பதற்கு யாது பிரமாணம்? அதுவே பிரமாணத்தால் சாதிக்கப் படுவதாம் எனின்.

 

அநாதி தொடங்கிப் பலராலும் அனுஷ்டிக்கப் படுவதும், அவர்கள்தாங்கள் கண்ட காட்சியை எழுதி வைத்திருக்கும் நூல்களும் ஸப்தப் பிரமாணங்களாம். வேறு பிரத்தியட்ச மில்லையோ வெனின்? உண்டு. அதுவேயோகக் காட்சியாம். ஆஸ்திக ஒழுக்கத்தைக் கைக்கொண்டு பெரியோர்களை அடுத்து உபதேசம் பெற்று யோக அப்பியாசம் செய்தால் பிரத்தியட்சமாய்த் தெய்வத்தையும் காணலாம். ஆஸ்திகத்துக்குப் பிரமாணம் யோக மார்க்கமே யாம் என்று தெளிக.

 

சவ்ய பூஜையே விசேஷமானது. வைணவருள்ளும் இவ்வகைப் பேத முண்டென்பார். திருக்கடவூரில் அபிராமிபட்டர் என்னும் பெரியாரொருவர் இருந்தனர். அவருடைய சந்ததியாருக்கு இன்றைக்கும் செய்குறுணி அளிக்கப்படுகிறது. அவர்கள் அபிராமியந்தாதி என்று ஒருபிரபந்தம் பாடி அமாவாசையில் சந்திரனை வரப்பணித்தவர். அந்த அந்தாதி இன்னும் பிரசித்தியுட னிலங்குகின்றது. அதனைச் சக்தி பூஜை செய்யும் பக்தர்கள் பாராயணம் செய்வது பிரசித்தம். திருவானைக்காவில் ஐயளுஐயர் என்பவர் ஒருவரிருந்தார். இவர் சந்ததி பூதலூரிலுமிருந்தது. மதுரையில் மீனாட்சி தாசர் என்பவர் ஒருவரிருந்தார். இவை யெல்லாம் ஜகத்பிர சித்தம்

 

சவ்ய அபசவ்ய பூஜைகளில் சவ்ய பூஜைக்குச் சமானம் ஒன்றுமில்லை. சித்த நிலைபெற்றவர்கட்கு எல்லாம் சரியாய் நடக்கும். இப்படியே சுப்பிரமணிய மதத்திலுமுண்டு. அதில் ஐயனார் முதலியவர்களின் பூஜை சொல்லப்பட்டிருக்கிறது.

 

இவை நித்தியமல்ல. நித்தியமாயுள்ளது சவ்ய பூஜையேயாம். இதில் குறைபாடு நேராது. இவை யெல்லாம் சற்குரு. சேவையிஞலே அடையத்தக்கவை.

 

நக்கீரதேவர், அருணகிரிநாதர், பொய்யா மொழிப் புலவர் முதலியோர் சுப்பிரமணிய பக்தர்கள். இவர்களில் நக்கீரரும் அருணகிரிநாதரும் பாசுரங்களால் வழிப்பட்டுப் பேறு பெற்றவர்கள். இது பற்றிப் பிறகு விவரிப்போம்.

 

உபதேசக் கிரமமின்றி ஒன்றும் நடவாதாகையினால் புத்திமான்கள் சதாசாரியனை அடைதல் வேண்டும். அவருடைய திருவருளால் யாவற்றையும் பெறவேண்டும். சற்குரு கடாட்சம் பெற்றவர்க்கு எல்லா நலனும் கை கூடும்.

 

பொய்யா மொழிப் புலவர் தஞ்சை வாணன் கோவை யென்றொரு நூல் இயற்றியருளினார். அந்நூல் மிகப் பிரசித்தியா யிருப்பது யாவரும் அறிந்த விஷயம்.

 

இவர் ஒரு சமயம் பாண்டியன் முன் –

 

'உங்களிலே யானொருவ னொவ்வுவனோ ஒவ்வேனோ
திங்கட் கறியச் செப்புங்கள் - சங்கத்துப்
பாடுகின்ற முத்தமிழ்க்கென பைந்தமிழு மொக்குமோ
ஏடெழுதா தேழெழுவீரின்று''


என்று பாடிச் சங்கப் புலவர்கள் திருவுருவம் சிறக்கம்ப முறச் செய்தனர். பின்,

''பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்
 பாவேந்த ருண்டென்னும் பான்மைதான் - மாவேந்தன்
 மாறனறிய மதுராபுரித் தமிழோர்
 வீறனையே சற்றே மித''


என்று பாடிச் சங்கப் பலகையை மிதக்க வைத்தனர்.

 

இத் துணைச் சிறப்புடைய இப்புலவரைப் பாண்டிய மன்னர் சரியாய்ச் சன்மானிக்கவில்லை. பாண்டியனுடைய மனைவி நல்ல ஞானமும் பக்தியமுடையவள். அவள் பொய்யா மொழிப் புலவரைச் சன்மானிக்க வெண்ணி அவர் பல்லக்கைச் சுமந்தனள். அதை யறிந்த புலவர்,


            "உமையவளும் நீயும் "


என்னும் முதற் குறிப்புள்ள செய்யுளைப் பாடி அவ்வம்மையைச் சிறப்பித்தனர்.

 

நக்கீரர் மலையைப் பிளந்து பூதத்தைக் கொன்று அநேக புலவர்களைக் காப்பாற்றியதும் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஆற்றுப்படையைப் பாராயணம் செய்து பக்தர்கள் இஷ்ட காமியார்த்தங்களை யடைவதும் பிரசித்தமாம். அருணகிரியாரின் மகிமையை அறியாதாரில்லை. அவர் பாடிய திருப்புகழைப் பாடாத சங்கீத வித்வான்களுமில்லை. அந்த இனிய பாடலைக் கேளாத செவிகளுமில்லை யென்னலாம்.

 

அருணகிரிநாதரும் ஒளவையாரும் வேத இரகஸ்யங்களை வெளியிடத்துணிந்தவர்கள். மகாவிஷ்ணுவை ஆராதனை செய்து பேறு பெற்றவர்கள் அநந்தம். ஆயினும் அவர்கள் வைகாநஸம் போதாயனம் என்னும் முறைகளையே அது சரித்தனர். இக்காலத்து வைணவர் பாஞ்சராத்ர முறைப்படி ஆராதிக்கின்றனர். அத்வைதிகள் வேதநெறிப்படியே பூஜிக்கின்றனர். அத்வைதத்தில் அடங்காத மதமில்லையாதலால் அதனையே சிலாக்யமாகக் கொண்டாடுகிறார்கள். பாகவதம் என்னும் நூல் கண்ணனை அத்வைத பரமாகவே துதிக்கின்றது. எந்த முறை பற்றியாவது தேவனை யாராதிக்க வேண்டுமென்பதே வேதாதி நூல்களின் துணிபு.

 

மகாதேவனாகிய பரமசிவனைப் பூஜை செய்வது உசிதம். சிவபூஜைக்கு அகஸ்தியர், ததீசி, உபமன்யு, குரு என்பவர்களியற்றிய ஆகமங்கள் சிறப்புடையவைகளாம். உபமன்யு இதைப்பற்றி ஸ்ரீ கண்ணனுக்கு உபதேசித்திருக்கிறார். இந்த உபமந்யுவே திருப்பாற்கடலைக் குடித்தவரென்று பாரதம் கூறுகின்றது. மகாதேவரைப் பிரத்யட்சமாய்க் கண்டவர்களில் இவரை மேற்பட்டவர்களில்லை. ஆக வைதிக சிவாகமங்கள் இந் நான்குமேயாம்.

 

பத்திர புஷ்பங்களால் ஆராதிக்க முடியாத போது அரிசி அக்ஷதைகளால் அர்ச்சிக்கலாம். இந்தப் பூஜையில் பார்த்திய லிங்க பூஜை யென்று ஒரு பூஜையுண்டு. அது சர்வ சிலாக்யமானது. எல்லோராலு மாராதிக்கத் தக்கது. இதற்குப் பொருளாதி எதுவும் தேவையில்லை. எந்த இடத்தில் நினைத்தாலும் அங்கிருந்தே செய்யத்தக்கது. அர்ஜுனன் செய்தது பார்த்திப பூஜையேயாகும், அந்தப் பூஜையே அவனடைந்த பெருமைகளுக்கெல்லாம் ஆதாரமா விருந்தது.

 

இல்லற வொழுக்கம்

 

உலகமெல்லாம் புகழ்பெற்ற லோகம் ராகமாதாவான ஒளவையார் தாம் லோகோபகாரார்த்தமாக இயற்றிய ஆத்திசூடி யென்ற நீதி நூலின் முதல் வாக்கியமாகிய அறஞ் செய விரும்பு' என்றதின் முதற் கண்ணின்ற "அறம்'' என்பதை விளக்குவதற்கே, இவ்வாக்கியத்தை அருளிச் செய்தார். அறம் என்பது தருமம் என்று வேதபுராணேதிகாச ஸ்மிருதியாதி நூல்களிலேயே புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஆதலால் அறம் தர்மம் என்பன ஒரு பொருட் சொற்கள்.

 

இவ்வறம் ஜீவவர்க்கங்கள் எல்லாவற்றினும் மேம்பட்ட மானிட ஜீவாத்மாவினிடம் நிகழ்வதாகிய ஒரு விசேஷாதிசய குணமென்று நூல்கள் கூறுகின்றன. ஆதலால் இதர ஜீவவர்க்கங்களிடம் இது காணப்படாது; மானிடர்க்கே உரியது. இது புருஷார்த்தம் நான்கனுள் முதலில் வைக்கப் பெற்ற சிறப்புடையது. புருஷார்த்த மென்பது மானிடர் பெறவேண்டுவனவாகிய நான்கு செல்வங்கள்; ஆண் பெண் இருவர்க்கும் பொதுவாயுள்ளன. அவை அறம் பொருள் இன்பம் வீடு (கர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்) என்பன. தருமம், பொருள் காமம் வீடெனும் நான்கும் உருவத்தாலாய பயன்'' என்று அன்னையாரே கூறி யருளினர்.


'ஈதலறம் தீவினைவிட் டீட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு'

 

என்று கூறிப் புருஷார்த்தங்களின்னவையென்று விளக்கி யருளினர். புருஷார்த்தத்துள் முதல் மூன்றும் உலக வாழ்க்கைக் கின்றியமையாதன. இம் மூன்றனுள்ளும் முதற் கூறிய கருமம் அர்த்தம் (அறம் பொருள்) என்பனஇரண்டும் மிக சிறந்தன. ஏனெனில் அவை விரண்டும் இணை பிரியா நேசரைப் போல் ஒன்றை யொன்று கூட்டு விக்கும் திறலுடையன. அறம் பொருளைத் தரும்; பொருள் அறத்தைத் தரும். இதனை,


'திரையவித் நீராடலாகா உரைப்பார்
உரையவித் சொன்றுஞ் சொல் லில்லை-- அரைசராய்ச்
செய்துமா மென்னினு மாகா துளவரையாற்
செய்தவர்க்கே யாகுந் திரு'


என்பதனா லுணர்க.

 

உலக வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. ‘அருளில்லார்க்கவ்வுலக மில்லை, பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாதியாங்கு'என்ற தேவர்வாக்காலும் அனுபவத்தாலு முணர்க. அப்பொருளும் நன்னெறி யொழுதிஅறம் புரிந்தார்க்கன்றி எய்தப் பெறுவதில்லை.

‘சிறப்பீனும் செல்வமுமீலு மறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு'


'அறத்தாறிது வெெைவண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தானிடை


என்பனவற்றால் அறமே பொருளுக்குக் காரணமாகு மென்பது நன்கு விளங்கும். அந்தப் பொருளால் அறமும் இன்பமும் சிறட் பவுண்டாகும்.


 ‘ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கெண்பொருள்
 ஏனையிரண்டு மொருக்கு'


*அரனீனு மின்பமுமீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்'

 

‘அருளென்னும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியா லுண்டு'


என்பனவற்றால் பொருள் தரும காமங்களைத் தரும் என்பது விளங்கிற்று. தருமம், பொருள் இன்பங்களையும், பொருள், தரும வின்பங்களையும் தருவதுண்மையானால், பொருளொன்றே போதுமான தாதலால் அறம் புரிதல் வேண்டா வெனின், 'உளவரை யறஞ்செய்த வர்க்கே யாகுந் திரு' என்றதனால் அறம் புரிந்தார்க்கே செல்வ முண்டாகும் என்பது காண்க.

 

அப் பொறாளைக் கொண்டு தருமத்தை மேன்மேலும் அதிகந் தேடின்பாவமொழிந்து, நல்லறிவுதிக்க முத்தி கிடைக்கப் பெறுமாதலால் அரமேமுக்கியமா மென்க. இதனை,


'செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருங்திய --வையத்
தறும்பாவ மென் றன் றறிந் திடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்'

என்று கூறி யிருத்தலாலு முணர்க.

ஒரு ஜன்மத்திற் செய்த தருமமே மறு ஜன்மத்தில் அர்த்தகளை அளிக்கும். தருமத்திலும் புத்தியை யுண்டாக்கும். அது காரணமாகஞான முதித்து முத்தியின்ப முண்டாம், அறத்தானேனைய மூன்றும் எய்பெறலால் அறம் புரிவதற்காக மனிதப் பிறப்புசடாயிற்றென்று கொள்க. இதனை,


 ‘அரியது கேட்கின் பரிதவழ் வேலோய்
 அரிது அரிது மானிடராத லரிது
 மானிடரா யினும் கூன் குருடு செவிடு
 பேடு நீக்கிப் பிறத்த லரி
 பேடு நீக்கிப் பிறந்த காலையும்
 ஞானமுங் கல்வியும் நயத்த லரிது

 

ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான் செய லரிது

தானமும் தவமும் தான் செய்வாராயின்

வானவர் நாடு வழிதிரந் திடுமே'

 

என்ற அன்னையார் திருவாக்கா லுணர்க. அரம் இகபர போகங்களையும் பர் தமற்ற மோஷத்தையும் கொடுப்பதாயின் அதன் பெருமை அளவிடற் சரியதா மென்க. அதன் பெஜமைனய உள்ள படி உணர்ந்த அன்னையார், “அரஞ்செய விரும்பு' என்று கூறிப் பின்னும் 'அரனை மரவேல்' என்று வற்புறுத்திக் கூறினர். அதனை விளக்கவே - 'இல்லறமல்லது நல்லறமன்று'- என்று ஈண்டுக் கூறினர்.

 

ஈண்டு அரமென்பது அறம் புரியும் நெறியை. அவ்வரந்தான் இல்லறம் துறவறம் என்று இருவகைப் படும். அவற்றுள் பின்னர்க் கூறிய துறவறம் எல்லாராலும் இயற்றத் தக்க தன்று. கீழ்ச் சென்ற அநந்த ஜன்பங்களில் நெறிபிறழாது அறம் புரிந்தார்க்கன்றி இயற்றலரிது. எல்லாராலும் இயற்றக் கூடியதும் பெரும்பயனைத் தரத்தக்கதும் இல்லறமே யாம்.


 ‘துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
 திறந்தாரை யெண்ணிக் கொண் டற்று'


என்ற தாதியால், துறவறம் புரிவான் மகிமையை அளவிறந்த தென்று கூறியிருக்க அதனை நன்றன்று என்று கூறவ தெங்ஙனம் பொருந்து மென்னின், பல ஜனங்களுக்கு முறை பிரழாது இல்லற மியற்றுநர்க்கு, அதனாற் சித்தசுத்தியும் ஞானமுமுண்டாகும். அதனால் ஜனன மரண துன்பங்களும் மோக்ஷ இச்சயுந் தோன்றும். தோன்றவே தானே அகத்துற வுண்டாகும். ஏனைவர்க் கெய்தாது. ஆதலால் ஆதலால் துறவுண்டாவதற்கும் உலரமே காரணமாம்.  இதனை


 “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
 வேண்டும் பனுவற் றணிபு'

என்றதனா வறிக. இல்லறந் துறவரத்துக்குக் காரணமா யிருப்பதுமன்றி
 ஓம்மையிலேயே அகத் துரவையும் மோட்சத்தையும் கொடுக்கும் ஆற்ற
 எடையது. இதனை.


 *அரத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
 போஒய்ப் பெறுவ தெவன்'


என்றதனா லறிக. இவ்வாற்றான் இல்லறத்தின் மகிமை ஈண்டு கூறப்பட்டதே யன்றித் துறவறத்தை இகழ்ந்ததில்லை என்று கொள்க. அன்றியம் துறவு பூண்டான் அந்நெறியிற் சிறிதும் எழுவாதொழுக வேண்டும். வழுவின் பயன் கொடாமல் நரக துன்பத்தி எழுத்தி விடும். இல்லறமோ அவ்வாறன்று. வழுவுதஒண்டாயின் அதற்கென ஏற்பட்டுள்ள பிராயச்சித்த விதியாற் பரிகரித்துக் கொள்ளவும் கூடும். பிறகு நெறிபிறழா தொழுகி நற்கதி பெறலு மாகும். அதனாலேதான் –


 ‘ஆற்றிளெழுச்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
 நோற்பாசி னோன்மை யுடைத்து '


அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று –


என்றுந் தேவர் கூறினர். இகனால் இல்லறம் சாதாரணமாய் எல்லாராலும் இயற்றிப் பயன் பெறத் தக்க தென்றும் அதில் வழுவுதலுண்டாயினும் பரிகரித்துக் கொள்ளக்கூடு மென்பதும் துறவறம் சர்வ சாதாரண மல்ல வென்பதும் இயற்றுதற் கரிதென்பதும் துறவறத்தில் வழுவுறப் பெறின் நரகப்பிராப்கயே கிடைக்கு மென்பதும் பெறப்பட்டன. இதனால் துறவறம் இகழப்பட வில்லை யென்றும் துறவறத்தின் பெருமையே கூறப்பட்ட தென்றும் கொள்க.

 

      அன்றியும் கல்வி யுணர்ச்சியால் ஜனன மரண துன்பங்களை யுணர்ந்து, லீட்டு ஏலோதிச் சிரவண மன்னாதிகனாற் றெளிவுபெற்று, இகபர போகங்களை வெறுத்துப் புறப்பற்றுக்களைக் கஷ்டப்பட்டொழித்து, வேதாந்த சிரவணாகிகளாலும் சமதமங்களாலும் மனதை வசப்படுத்திப் பசி, தாகம், காற்று, மழை வெய்யில், குளிர், இன்ப துன்பாதிகளைச் சமனாக மதித்துச் சகித்துப் பிராணன் நீங்காதிருப்பதற்குப் போதுமான உணவை இல்வாழ்வாரிடம் ஐயமேற்றுண்டு கண்ட இடங்களிலே படுத்துறங்கிச் சதா பிரமத்தியானத்லிருந்து நிஷ்டைகூடி ஜகத்தை மறந்திருப்பதான கஷ்ட நெறியாம். இது ஒருவகையான தெய்வ வழிபாடான முத்தி செறி. இதுவே துறவற மெனப்படும். குருகுலவாசஞ் செய்து கலைகளை யோதியுணர்ந்த பின் குருவின் ஆநுக்ஞை பெற்றுச் சன் மார்க்கத்திற் பொருளீட்டி மனமொத்த மனைவியோடு கூடி இன்ப மநுபவித்துக் கொண்டு இல்லற விதி வழுவாமல் அறம் புரிந்து மனமொழி மெய்களால் தெய்வத்தை வழிபட்டு முத்தி பெறுத்லாம். இது ஒரு முறை; இருநெறியும் தெய்வவழிபாடே யாயினும் இல்லறம் கஷ்ட மிலாமல் இயற்றக் கூடிய தென்றும் துறவறம் மிகுந்த கஷ்டத்துடன் செய்யத்தக்க தென்றும் ன்கு புலப்படும். ஆகலால் அன்னையார் இல்லறத்தைப் புகழ்ந்து கூறினார்.

 

இல்லற வொழுக்கம்

இல்லற மல்லது நல்லற மன்று

 

இதனை, இல்லறம் (நன்று) அல்லது நல்லற மன்று என்று இரண்டு வாக்கியங்களாக்கிக் கொள்க.

 

(இதன் பொருள்) இல் அரம் (நன்று) - இல்லற மென்கிற நெறியேகல்லதாம். அல்லது சல் அறம் அன்று. அது வல்லாத (மற்றொன்றாய) துறவறம் நல்ல அறநெறி அல்லவாம்.

 

இல்லறம் - இது வடமொழியில் கிருஹஸ்த தர்மம் எனப்படும். இல் கிருகம் என்பன ஒரு பொருளன. இல் என்பதற்கு மனைவி யென்றும் பொருளுண்டு. ஆதலால் வீட்டிலிருந்து மனைவியுடன் வாழ்ந்து செய்யப்படும் தருமமே இல்லறம் எனப்படும். குலத்தானும் கோத்திரத்தானும் தனக்கொத்த குடும்பத்திற் பிறந் வேதவிதிப்படி இனிசாட்சியாக மணம் புரிர்து காள்ளப்பட்டவளே மனவி யெனப்படுவாள். விவாகம் மணம் என்பன ஒரு பொருளன விலாகா என்பதற்கு வகித்தல் என்பது பொருள். அதாவது ஆன் சரீரகுணத்தைப் பெண்ணும் பெண் சரீரகுணத்தை ஆணும் பெற்றுக் கொள்வதாம். இதனாலே தான் புருஷன் சரீரத்தில் பாதிசரீரம் மனைவியாவாள் என்பது, இதனால் இருவர் சரீரத்தையும் ஒரு சரீரமாக்குகூடே விவாகத்தின் பயனாம். இந்த விவாகம், தெய்வம், பிராமம், ஆரிஷம், பிராஜாபத்தியம், காந்தர்வம், ஆசுரம், இராக்ஷஸம், பைசாசம் என என் வகைப்படும். இவற்றுள் முதற் கூறிய நான்கும் சிறப்புடையனா. மற்றைய ஒன்றுக்கொன்று தாழ்ந்துள்ளன. இத் துணைச்சிறப்பு மின்று. அவற்றுள்ளும் பைசாசம் ஒரு பொழுதும் செய்யத் தகாபிராமம் என்கிற விவாகமே எப்பொழுதும் எல்லோராலும் செய்யப்படுவது. நான்கு வருசத்தாரும் தத்தம் வருணத்திற்குக் கூறிய விதிவழுவாமல் குலகோத்திரத்தானொத்த குடும்பத்திற் பிறந்து நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணந்து இல்லறநெறி நின்று எங்கும் நிறைந்த பரம்பொருளை வழிபட்டு இம்மை, மறுமை, வீடு என்னும் சுகபோக வாழ்வுகஜம் பெறுவதே இல்லறத்தாலாகிய பயனாம்.

 

நற்குலம் அதாவது இருவழியிலும் குற்றமற்றதான குலத்திற் பிறந்த பிதாக்களுக்குப் பிறத்தல். கோத்திரமாவது தன் கோத்திர மல்லாத கோத்திரம். இத் தம்பதிகளுக்குப் பிறந்தவளே நற்குண முடைய வள். இதனை ஆடவனுக்குக் கொள்க. அயல் வீடு செல்ல விருப்பமில்லாத வளும், வம்புகள் பேசப் பிரியமில்லாதவளும், மாதாபிதாக்களுக்குப் பணிந்து நடப்பவளும், ஆஸ் திகபுத்தி யுள்ளவளும் மிதபோஜன முன்னவளும், அதிக நித்திரை இல்லா தவளும், அதிகாலையி லெழுந்திருப்பவளும், வீட்டு வேலை கள் செய்வதில் சோம்பலில்லாதவளும், நன்றாய் அடிசிலாக்கும் வல்லபமுடை யவளும், எப்பொழுதும் மசர்ந்த முகமுடையவளும், கோபமில்லாதவளும், இனிமையாகப் பேசுகிறவளும், டம்பத்தில் விருப்பமில்லாதவளும், ஏழைகளி டத்தில் இரக்க முன்ளவளும், வீட்டுப் பொருள்களில் கவலையுள்ளவளும், விருந்தினரைக் கண்டு மகிழ்பவளும், குஷ்டரோகாதி கொடிய நோயுள்ள வம் சத்திற் பிறவாதவளும், சுசியுள்ளவளும், அசுசியை அருவருப்பகளும், தெய்வ பக்தியுடையவளும் எல்லாருக்கும் நல்லவளா யிருப்பவளுமான பெண்ணே விவாகம் புரிவதற் குரியவள்.

 

சகல கலைகளையும் குரு மூலமாகத் தெரிந்து கொண்டு ஸமாவர்த்தன முடித்துள்ளவனே விவாகத்துக் குரியவனாம். உபநயனம் ஸமாவர்த்தனம் என்கிற சடங்குகள் துவிஜர்களுக்கே உரியன. பிரமத்தைத் தரிசிப்பித்த லாகிய உபநயனம் துவிஜர்களுக்கே விதிக்கப்பட்டது. பின் குருகுலவாசம் செய்து வேதாதிகலைகளை யோதிய பின் ஸமாவர்த்தனம் நடத்தப்படும். நாலாம் வருணத்தவர்க்கு விவாகத்திலேயே உபநயனகிரியையும் அடங்கியிருக்கிறது. பெண்களுக்கு விவாகமே உபநயனமாம்.

 

இத்தகைய ஆடகரே விவாகத்துக் குரியவராவர். பெண்ணின் பிதாவும், நற்குலத் துதித்துக் கல்வி கேள்விகளிலே தேர்ந்து ஆஸ் திகபுத்தியுடையவனாய், வியாதியற்ற திட காத்திர முடையவனாய், அழகு குணங்களிலே சிறந்தவனாய், இவ்வுலகத்திற்குரிய பொருளீட்டும் வல்லமை யுடையவனாய், பழிபாவங்கட்குப் பயப்படு மியல்புடையவனாய் பிறர் துன்பத்திர்கு இரங்குகிறவனாய்த் தெய்வ குரு பழிபாடு செய்பவனாய், காமம் வெகுளிகளில்லாதவனாய் இன்சொற் புகல்பவனாய் எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பவனைக்கூடிய வரையிற் பரீக்ஷித்தறிந்து அவனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்கவேண்டும்.

 

உபாயனம் என்பது ஒத்தாசைக் கண், மனமொழிகளுக் கெட்டாததெய்வத்தைத் தரிசித்தற்குரிய ஞானக்கண்ணை யுண்டாக்குவதாம். பிராணயாமாதி செறியைக்கூறித் தன் குருவையே பிரமசொரூபமாகத்தீயானிக்கக் கூறுவது. மனமொழிகளுக்கு எட்டாத்தும் தனக்கென ஓர்வடிவமில்லாததுமான தெய்வத்திற்குக் குருவின் வடிவத்தையே வடிவமாகக்காட்டித் தெய்வ வழிபாட்டைப் போதிப்பது. பின்னர் அவன் குருவையே தெய்வமாகக் கருதிக் குருகுலவாசஞ் செய்து வேதாதிகளை ஓத வேண்டும். குருபக்தியிற் சிறந் திருப்பின் அவனே தெய்வ வழிபாட்டிற் சிறந்தவனாம்.

 

தனக்கென ஓர் உருவமில்லாத பரம்பொருள் மனித ரூபங்கொண்டு வந்து தான் தனது நிஜசொரூபத்தை வெளிபடுத்தும். ஆதலால் குருவையே தெய்வமென்று கொள்ள வேண்டு மென்பது ஆரியர் சித்தாந்தம் அதனாலே தான் குருபக்தி, லிங்கபக்தி, சங்கமபக்தி - என்று பத்திமார்க்கம் மூன்றாயிற்று.

 

குருபக்தி கூறினம். லிங்க பக்தி யென்பது பிரம சொரூபமென்று நிருமிக்கப்பட்ட விக்ரகாதிகளில் ஆராதிப்பதாம். சங்கமபக்தியாவது, தேவனடியார்களை ஆராதிப்பது. ஜடப்பொருளாகிய சிலை லோகங்களை விடச்சைசன்ய சொரூபமாகிய குரு சங்கமங்களில் தேவஸாந்நித்யம் அதிகமாயிருக்கும். சங்கமத்தை விடக் குருசொரூபமே சிலாக்கியம். குருவைத் தெய்வமாகக் கொண்டு வழிபடுவது மிகவும் சிறந்தது. அதனால் தேவாநுகரகத்தை உடனே பெறலாகும். இந்தக் குருபக்தி இருவருக்கும் பொதுவாகும்.


      பெண்களுக்கு விவாகமே உபாயனெமன்று கூறினோம் –

 

என்ற மநுஸ்மிருதி வசனத்தினால் விவாகமே பெண்களுக்கு உபநயனமெனவும் பதிஸேவையே குருசேவையாகு மெனவும் க்குஹ கிருத்தியமேஅக்னி காரியமா மென்றும் பெறப்படுவது காண்க.

 

இதனால் புருஷனையே குருவாகவும், தெய்வமாகவும் கொள்வது விவாக காலத்திற் பெண்களுக்கு உபதேசிக்கப்படுமென்பது கொள்க. ஆதலால் கணவனையே குரு தெய்வமாகக் கொண்டு வழிபடுவதே ஸ்திரீகளுக்குப் பக்தி நெறியாமென்க. இந்நெறியற்றி வழுவாது நடப்பவளே கற்புடையாளென்று புகழப்படுவாளென்க.

 

இதனையே 'கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை'' என்று அன்னையார் கூறினர். 'கற்பு' கற்றுக் கொள்ளப்படுவது. அதாவது பாலிய காலத்தில் மாத பிதாக்களாலும், வம்ச குருவாலும், விவாகத்தின் பிறகு கணவனாலும், சொல்லப்படுபவைளைக் கற்றுக் கொண்டு அவ்வழி நிற்பதாம். இதுவே பெண்களுக்குக் கல்வியுமாம். கணவன் சொல்லைக் கடந்து நடவாமையே கற்பெனப்படுவது என்றதனால் அவன் சொல்வழி தவறாமல் நடப்பதே கற்பென்ற தாயிற்று.

 

இந்நெறி நிற்பவளைப் பதிவிரதை யென்று நூல்கள் வியந்து கூறின. '' பதி'புருஷன், தெய்வம், கணவன். பக்தி, பணிவிடைகளைச் செய்வதையே விரதமாகக் கொண்டவன் என்பது அதன் பொருள்.

 

கலிகாலக் கலியாணக் கோலாகலம்

(ஆனந்த போதினி – 1931 ௵ - ஜுலை ௴)

 

ஐயன்மீர்! மேற்குக் கடற்கரையோரத்தி லிருக்கும் மலையாள நாட்டைப் பற்றி நீங்கள் கேள்வியுற்றிருக்கலாம். அந்நாட்டில் நம்பூதிரிப் பிராமணர் என்ற ஒரு வகுப்பினருண்டு. அவர்களுடைய குடும்பங்கள் மலை நாடெல்லாம் விசாரித்தால் எழுபது அல்லது எண்பதே யிருக்கும். இக் குடும்பங்களுக்குள் அநேக வேற்றுமைகளுண்டு. இவற்றில் சகோத்திரம் என்பதை யொழித்திட்டால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவாக சம்பந்தத்திற்கு யோக்கியமான வீடுகள் நான்கு அல்லது ஐந்தே இருக்கும். மேலும் ஒரு குடும்பத்தில் வயதில் மூத்தவனுக்கே விவாகம். மற்றவர்களுக்குக் கூடாது என்ற கட்டுண்டு.

 

மேற்கண்டபடி ஒவ்வொருவர்க்கும் சம்பந்தம் புரிவதற்கு யோக்யமானவீடு நான்கு. ஒரு வீட்டிற்கு ஒருவனே விவாக யோக்கியன். ஆகவே ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்க வேண்டுமானால் அவசியம் ரூ. 1000 - க்குக் குறையாமல் வாதக்ஷணை கொடுக்க வேண்டும். ஒரு பொழுதும் பெண்கள் பத்து வயதுக் குட்பட்டு மணஞ் செய்யப்பெறார். சில விடங்களில் பல்லுதிர்ந்து தலை நரைத்த நாயகிக்கும், கோலூன்றி நடக்கும் நாயகனுக்கும் விவாகம் நடைபெறுவதுண்டு. வேதங்களைக் கற்று ஸ்மிருதிகளை அறிந்து சதாசாரங்களை நடப்பிக்கும் ஆற்றல் பெற்று சம்ப்ரதாயம் உழுவாது நற்புகழ் வேண்டி நீண்டகால தேசாசாரியாய் அக்னிஹோத்ராதிகளை அனுஷ்டித்து, பல யாகங்களைச் செய்து பரவனர்களான அவ்வந்தணர், உயிர் துறந்தவுடனே பெண் பிணங்களுக்கு ஓர் விவாகம் செய்விக்கின்றனர். ஆனால் பழைய பிணத்தை விவாகம் செய்வதில்லையாம். மற்றோ இறந்தவுடனே விவாகமாம்.

 

இப்பிரேத விவாகத்தில் வரதக்ஷிணை சொற்பங் கொடுத்தால் போதுமாம். ஆகையினால் ஆண்கள் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் வேண்டுமானால் உடனே மரித்தால் அந்த க்ஷணம் கழுத்தில் அக்னி சாட்சியாகத் தாலிகட்டப் பட்டதாகும். உடன் பிறந்தவர்கள் பந்துக்கள் அழிவதே வைதிக மந்திரங்கள். பிரமசரி விரதங் கெட்டவனே சுத்தவான். பிரேதவாஹகர்களே, ரித்து விக்குகள். தகனாக்கிநியே சாட்சி. அச்சமயம் பிணக்கொட்டே மங்கள வாத்தியம். மணக்கோல பீடம் பாடையே. 'இவ்வருண பாசத்தை விட்டு உன்னை நீக்குவேன்' என்ற மந்திரத்தால் கன்னி விரதத்தை யொழித்துக் கழுத்தில் கட்டும் திருமங்கல்ய சூத்திரத்துக்குப் பதிலாகத் தருமராஜன் பாசம் முன் சம்பந்தப்பட்ட கழுத்தில் இப்பிரமசாரி பிராமணன் கட்டும் இரண்டாம் பாசம் திருமங்கலியமாம். அச்சமயம் வாரி இறைக்கப்படும் புஷ்பங்களும் பொரிகளுமே கல்யாணாங்கங்கள். கல்மிதிப்பது எரி முட்டையிலேற்றுவதேயாம். பெரியார் ஆசீர்வாத மென்பது இப்புதிய பிரேத விவாகவிதி அநுஷ்டிக்க நேர்ந்ததைக் கொண்டாடும் கொடூர மொழிகளும் கூவென்றசப்தமுமேயாம். கன்யாலங்காரமோ பிரேதாலங்காரமேயாம். ஆச்சரியம்! இவ் விவாக விதியை எந்த முனிகளும் அறியார். வேதங்களும் அறியா. தரும சாஸ்திரங்களும் அறிந்தில. கன்யாதானத்தில் உள்ள பலன் இதில் இவ்வளவென அளவிட முடியாது. வரனோ விஷ்ணுரூபனல்ல, ருத்ரரூபனே. அவனைச் சாக்ஷாத் தென்னாட்டுக்கோன் எனலுங்கூடும்.

 

ஒரு வழியில் சிறிது வித்தியாசம் செய்தல் வேண்டும் - யாதெனில் -விவாக மந்திரத்தில், 'ஸோமன் கந்தர்வனுக்குக் கொடுத்தான்; கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான்' என்பதை மட்டில், 'ஸோமன் கந்தர்வனுக்குக் கொடுத்தான், கந்தர்வன் எனக்குக் கொடுத்தான், நான் உன்னை அக்னிக்குக் கொடுத்தேன்' என்று மாற்ற வேண்டும் போலும். புமானாகிய சந்தானத்தை நோக்கி, 'உன்னை மணம் புரிவேன்' என்பதற்குப் பதிலாக, ‘புத்தன் எனும் காசுக்காக' என்று சொல்ல வேண்டும் (புத்தன் என்பது கோள தேசத்துள்ள ஒரு நாணயம்.) ஆனால் பயன் மட்டில் கிழவிக்கும் பிணத்துக்கும் விவாகத்தில் ஒன்றேயாயினும் அக் கிழவிகளுக்கு மூச்சு மட்டிலாவதிருப்பதால் இதிலும் அது மிகவிசேஷம்.

 

பண வாசையினாலே ஒரு பெண்ணை விவாகஞ் செய்து விட்டு அவர்களிடம் பெண்கள் பிறந்து விடுமோ என்கிற பயத்தால் அவர்களைத் தனி மனைச் சிறையில் அடைத்துவிட்டுத் தமது ஆசிரம தருமத்தையுங் கடந்து ஸ்திரீகளிடம் தமது காமத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவர்கள் நடையைக் கவனியுங்கள். ஒரு வீட்டில் ஒரு புறத்திலே கன்னிகைகளுக்குச் சிறை. மற்றோர் புறம் கைம்பெண்களுக்கு. வேறொருபுறம் சுமங்கலிகளுக்குச் சிறை.

 

கன்னிகைகள் ஐயோ எங்களுக்குக் கணவ னெவனுங் கிடைக்கவில்லையே யென வருந்துங்கால் அங்குள்ள மற்ற சுமங்கலிகள், 'அம்மா! உங்கள் துயரம் ஒன்றே. எங்களுக்குப் பிறந்த வீட்டையும் விட்டுப் பரதந்திரப்பட்ட துயரமும்கூட விருக்கின்றதே என் செய்வோம். வீட்டில் இவ்விதமே காலஞ் செல்கின்றது. திருமணம் செய்த கணவன் சரீரத்தின் சுகுமாரத் தன்மையை அறியக் காலமும் வருமோ?'' என ஏக்கமுற்று எதிர்பார்க்கும் பெண்களும் எங்களுக்குப் பெயர் மட்டிலாவது ஒரு கணவனும் பண்டாவனோஎன மற்றவரும் வருந்துங்காலத்தில் அன்னிய ஸ்திரீகளிடம் காலதேசங்களை நோக்காது மிருகங்களைப்போல் சஞ்சரிக்கும் தகப்பன், சகோதரன், கணவன் இவர்களையுங் கண்டால் அத்துயரம் எப்பாடுபடும்.

 

இங்ஙனம் சுமங்கலிகள், கன்னிகைகள், அமங்கலிகள் மூவருக்கும் துயரம் சமமேயாம். அந்தோ, கலி மகாராஜன் செய்யும் ஆடம்பரம் மிகக் அன்னிய பகொடிது.

 

இவ்விதம் நாயக னின்றிக் கிழவிகளாய்ச் சாவதும், அவனிருந்தும் காமசுகமின்றிச் சாவதும், செத்த பிணமாய்த் திருமணக் கோலமடைவதும் எவ்விதத் தீவினைப் பயனோ தெரியவில்லை. இவற்றுள் இரண்டாவதற்கு ஏதேனுமிருக்கலாம். முதலாவதற்கும் மூன்றாவதற்கும் எவ்வித எதுவும் தெரியவில்லை. ஐய, கன்ம விபாக சாஸ்திரத்தைக் கடைசி வரையில் படித்தாலும் எக் கன்மத்தின் பயன் பிரேத விவாகம் என்று சொல்லப்படவில்லை. ஜன்மகன்னிகையாய் நிற்றலும் பலம் எனப்பட்டதில்லை. அங்ஙனம் சோதிடத்திலும் எவ்வித கிரக நிலை இவ்வித மாவதற்குக் காரணமென்று குறிக்கப்படவில்லை. இவ் வுபத்திரவம் கோள தேசாசாரம் என்றும் எடுத்துத் தரும நூல்களிலும் ஓதப்படவில்லை. மேலும் புருஷர்களுக்காவது எந்த தர்ம சாஸ்திரத்திலும், எந்தக் கற்ப சூத்திரத்திலும், எந்தப் புராணத்திலும் எந்த ஆப்தவாக்யத்திலும், எந்தத் தந்திரத்திலும், இவ்விதப் பிரேத விவாக விதி சொல்லப்படவில்லை.

 

விவாகங்கள் ஆறுவகைப்படு மென்றும் எண் வகைப்படுமென்றும் வகுத்தருளிய சூத்திரக்காரர் இவ் விஷயத்தில்மட்டில் தீர்க்கதரிசனத்தை யொழித்தார் போலும்!

 

 

சிவானந்தசாகர யோகீஸ்வரர்.

 

ஆனந்த போதினி.

1923 ௵ ஜுலை முதல் 1930 ௵ மே வரை.

 

குறிப்பு:-  மூல இதழ்கள் 1930 ஜூன் முதல் இல்லாமையால் இந்த தொடரின் பிற பகுதிகளை தொகுக்க இயலவில்லை.

 

No comments:

Post a Comment