Wednesday, August 26, 2020

 

இந்நாளைய இந்தியா

 

எங்கும் ஒரே சப்தம்.

 

பல கோடி ஜனங்களால் நிறையப்பெற்ற நமது தேசம் இந்நாளில் படுங் கஷ்டங்களையும், அவஸ்தைகளையும் எடுத்துரைத்து அவற்றை நீக்குதல் என்பது கடினமே. ஒரு சிறிய கிராமத்திலும் பல மதங்கள்; அம்மதங்களிலும் பல்வேறு ஜாதிகள்; இந்த ஜாதிகளிலும் பல பல பிரிவுகள்; ஒரு குடும்பத்திலும் ஒற்றுமை என்பது அபூர்வம். கடவுளைத் தொழும் வகையிலும் இதர பழக்க வழக்கங்களிலும் ஒரு சிலர்கூட வேறு கூட்டத்தினரை ஒத்திருப்ப தில்லையென்றால், ஒருவரது எண்ணமும் விருப்பமும் பிறரால் ஒப்புக்கொள்ளப்படுமோ? அறிவிற்சிறந்த பெரியாரொருவர் அமிர்தம் போன்ற அழகிய வார்த்தைகளை அன்புடன் உபதேசித்திடினும் அதனை எதிர்த்தும் தடுத்தும் பேசுவோர் எத்தனைபேர்? பொதுவான விஷயமென்றால் தம்காதிலும் அதை வாங்காமற் செல்வோர் எவ்வளவு? நாட்டின் முன்னேற்றத்தைப்பற்றியதென் றால்' அதுவேலையற்ற வீணர் செய்கை' என்று வெறுப்புடன் கூறி வாளாவிருப்போரின் எண்ணிக்கை எவ்வளவு? வாளாவிருத்தலும் நன்மையைத் தருமே. வேறு சிலர் அங்ஙனம் சும்மாவுமிராமல் நாட்டிலுள்ள நல்லதோர் கட்சிக்கு விரோதமான கட்சியொன்றை ஸ்தாபிதம் செய்து அவர்களுடன் முஷ்டியுத்தம் செய்யத் தொடங்குகின்றனரே! இவர்கள் தன்மை வாய்ந்தோர் நம் தேயத்தில் எவ்வளவுபேருளர்? நற்செய்கைகள் செய்யப்படும் பொழுதும், ஸத்விஷயங்கள் உபதேசிக்கப்படும் வரையிலும் "ஆ! மிகவும் சரி!'' என்று தலையை ஆட்டி விட்டுப் பிற்பாடு அவ்வுபதேசங் கட்கு எதிர்மாறாக நடப்போரின் எண்ணிக்கைக்கும் குறைவுண்டோ? நாடகமும் கூத்துமென்றால் நான்! நீ!' என்று முன்வரும் வீரர்கள் 'கதர்' என்றால் 'அது தூக்கமுடியாத சாக்கு மூட்டை' என்று கூறுவதை நாம் எத்தனை முறை எவ்வளவு பேரிடமிருந்து கேட்டிருப்போம்?

 

இவற்றினின்றும் நாம் அறிவதென்ன? புதியதோர் விஷயமொன்று மல்ல; அதாவது எல்லாவிஷயங்களிலும் நாம் எல்லோரும் வேற்றுமையான நன்மையையும் எண்ணத்தையும் கொண்டிருக்கிறோம் என்பதே. ஆனால் இப்படிப்பட்ட வேற்றுமை கொண்ட நம் எல்லோரிடமிருந்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒரேமாதிரியான ஒலி உண்டாகுமாயின், அதனைக்கண்டு நாம் ஆச்சரியமடையாமற் போவோமோ? 'எங்கும் ஒரே சப்தத்தை' ஒருவன் என்றும் காண்பானாயின் அவன் ஆச்சரியமடையாமற் போவனோ? ஆனால் தற் போது நாம் அறிய வேண்டிய விஷயமாவது எங்கும் உண்டாகும் ஒரே சப்த
 மாவது யாது என்பதே யன்றோ?


முன்னொருகாலத்தில்.

 

நவீன நாகரீக வழக்க ஒழுக்கங்களுக்கு ஏற்றவாறு ஏற்படுத்தப்பட்டுத் தினே தினே பலவிதங்களிலும் அதிகரித்து வருகின்ற தற்காலத்திய பள்ளிக் கூடங்களில் பயிலும் நமது சிறுவர்களின் தமிழ்ப்பாட புத்தகமொன்றை வாங்கிப் பாருங்கள். அப்புத்தகத்தில் ஏதாவது ஒரு கதையோ அல்லது ஒரு வீரனது வீரியம் மிகுந்த செயலோ கூறப்பட்டிருக்குமாயின், அது முதலில் "முன்னொருகாலத்தில் ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்'' என்று ஆரம்பஞ் செய்யப்பட்டிருக்கும்.

 

அஃதேபோல முன்னொருகாலத்தில், அன்னியர் கூட்டமும் ஏனைய அநாகரீக அவதிகளும் அடியோடு இல்லாமலிருந்த முன்னொரு காலத்தில் நாம் முதலில் கூறிய ஒரு சப்தம் எங்கும், குடிகொண்டிருக்கவில்லை. அதற்குக் காரணம் அக்காலத்தினர் அக்காலங்களில் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட தலைவனது கட்டளைகளிலும் சொற்களிலும் மூடநம்பிக்கை கொண்டு நடந்து வந்தமையே என்போம்.


 மூடநம்பிக்கை.

 

சில காரணங்களைக்கொண்டு ஜனங்களுக்கு சில விஷயங்களில் மூடநம்பிக்கை இருத்தலே நலம் பயக்கு மென்போம். குதர்க்கமான எண்ணங்கள் உண்டாகக்கூடிய ஸ்வதந்திரம் கொடுக்கப்படுவதால் தான் ஒரு மனிதன் விபரீத விஷயங்களுக் காளாகிறான் என்றும் சொல்லலாம். ஆனால் மூடநம்பிக்கையும் ஆபத்தை அதிகமாய்ப் பயக்கத்தக்கதே யெனினும் விபரீத எண்ணங்களையும் வேற்றுமையான யோசனைகளையும் கொண்டு அதன்படி நடப்பதை விட முன்னொரு காலத்தில் சிறந்தவோர் உத்தமனைத் தலைவனாகக்கொண்டு அவனது வார்த்தைகளில் திடமானதோர் நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து வந்தோரது செய்கையையே மேலென்போம். ஆகவே மகாத்மா வென்றும், புத்தியிற் சிறந்தவனென்றும், ஒழுக்கத்தில் உயர்ந்தவனென்றும் அழைக்கப்படும் ஒருவனது வார்த்தைகளிலேனும் நம்பிக்கை வைத்து அவனை அனுஸரித்து நாம் நடந்து வருவதும் நலம் பயக்குமன்றோ?


விபரீத எண்ணங்களினால்.

 

விபரீத எண்ணங்களினாலும் வேற்றுமையான நடத்தைகளினாலும் ஏற்படும் கேடுகளைக் கவனியுங்கள். இவைகளினால் தான் 'ஒரு சப்தம் எங்கும்' உண்டாகிறது என்போம். நாம் இவ்வுலகில் ஜனித்து புத்தி தெளிந்தது முதல் எவ்வளவோ மனிதரைக் கண்டிருப்போமன்றோ? அவர்களுள் எவராகிலும் ஒருவர், "எனக்கு நோயொன்று மில்லை'' என்று கூறியதைக் கேட்டிருப்போமா? அல்லது வேறு எவரேனும் ஒருவர், "எனக்குப் பணத்தடை என்பது கிடையாது" என்று சொல்லியிருப்பதை நம் செவிகள் கேட்டிருக்குமா? அல்லது, "மனக் கவலையொன்றும் எனக்குக்கிடையாது'' என்று எவரேனும் ஒருவர் சொல்லி யிருப்பரா?


 "ஹா! என் தலைவிதி இக்கஷ்டம்!
 ஹா! என் தலையெழுத்து இவ்வியாதி!!
 ஹா! என் கதி தரித்திரகதி!! !''


என்ற சொற்களை அல்லது சப்தத்தை நாம் எந்நாளிலாவது, எவரிடமிருந்தாவது எவ்விடத்திலாவது, கேட்காதிருந்த துண்டா?

ஆதி காரணம்.

 

எவ்வித விஷயமும் அடிப்படை யானதோர் ஆதிகாரணமின்றி ஏற்படாது; அஃதேபோல் எங்கும் ஒரேசப்தம் உண்டாவதற்குங் காரணமொன்றிருத்தல் வேண்டு மன்றோ? அக்காரணந்தான் என்ன? விபரீத எண்ணங்களேயன்றோ? ஆனால் விபரீத எண்ணங்கள் ஏற்படுவது எதனால்?

 

ஆங்கிலக்கல்வி இந்தியாவில் அதிகமாயிற்று; இளமையில் விவாகங்கள் செய்வதோ இயல்பாகி விட்டது; குஸ்தி பழகுதலோ கூண்டுடன் அகன்றது; வண்டி முதலிய வாகனங்களில் ஏறுவதே வழக்கமாயிற்று; கனவாலிபனாயிருக் கையிலேயே கண்ணாடி போடுதல் கௌரவமாயிற்று; நாடகஞ்செல்லுவது நற்காரியமாயிற்று; இரவு முழுதுஞ் சீட்டாடுவது சகஜமாயிற்று; சுருட்டுப் பிடித்தலே சுறுசுறுப்பான செய்கையாயிற்று; பொடிபோடுதலே புருஷல ஷணமாயிற்று; கேளிக்கையும் இடம்பமும் தவிர ஸன்மார்க்கங்கள் சரிந்தே போயின.

 

ஆகவே இந்நிலையிலா நம் இந்தியா இந்நாளில் இருக்கிறது? முனிவர்களாலும் மகான்களாலும் நிறையப் பெற்றிருந்த இந்தியாவா இது? நமது பூர்வீக ஆசாரங்களையும் அற ஒழுக்கங்களையும் அறவே அறுத்தெறிந்து விட்டு அன்னிய அநாகரிக அவதிகளை ஆர்வத்துடன் ஆபரணமாய் அணியும் அபலைகளே அன்ன நாம் செய்வதென்னை? நமது நாட்டுப்பொருள்களை அயல்நாட்டார் அடித்துக் கொண்டு போக, அதற்குப் பிரதியாக நாம் அவர்தம் நாகரிக மெனும் 'அநாகரிக வழக்கங்களைத் தான் திருடுகிறோம். இது நம்விதியா? - மதியா? - கதியா?


 இப்பொழுது என்ன தெரியும்?

 

இந்தியாவிலுள்ள தற்போதைய இந்தியர் அறிந்திருப்பதென்ன? மூன்று விஷயங்களே: அம்மூன்று விஷயங்களும் 'வறுமைப் பிணி, மெய்ப்பிணி, மனப்பிணி' எனப்படுபவையேயாம். முதலாவதைத்தான் வறுமை நோயென்போம்; இரண்டாவதைத்தான் உடம்பிலேயே யுள்ள நோயென்போம்; மூன்றாவதை மனோவியாதி யென்னலாம். இந்துக்கள் திரிமூர்த்திகளைத் துதிப்பர்! ஆனால் இந்தியராய நாமனை வரும் இவ்விஷயத்தில் மட்டும் ஜாதிமத வேற்றுமையின்றி இந்துமத தர்மத்தை அனுஷ்டிப்பதே போல திரிமூர்த்திகள் போன்ற மேற்கூறிய மூன்று வியாதிகளையும் துதிக்கின்றோம். இதுதான் நமக்கு இப்பொழுது தெரிந்திருப்பது!


 
நாளைய தினம்.

 

நாளைய தினம் அயல்நாட்டு நெசவு சாலைகள் நின்றுவிட்டால் நாம் நான் கர்வதுழர்த்தி யொன்றைக் 'கும்பிட நேரிடுமென்பதிலும் ஐயமுண்டோ? ஆகவே மறுநிமிடமே அயல்நாட்டு நெசவு சாலைகள் நின்று விடுமானால் நாம் ''மனோவியாதி, தேகவியாதி, வறுமைநோய்'' ஆகிய மூன்று தெய்வங்களைக் கும்பிடுவதுடன் "நிர்வாணமாய் நிற்றல்' என்ற தேவதையையும் கைகூப்பித்தொழ நேரிடுமென்பதில் சந்தேகம் கிடையாது.

 

மூன்று நோய்களால் ஏககாலத்தில் எதிர்க்கப்படும் இந்நாளைய இந்தியா கைத்தொழிலை விர்த்தி செய்யுமா? தேசநலத்துக்கு சிரமப்பட்டுழைக்குமா? சத்தியாக்கிரஹ நெறியைக் கடைப்பிடிக்குமா? நாட்டிற்கு அவசியமா யிருக்கவேண்டிய ஏனைய முன்னேற்றங்களைக் குறித்துப் பாடுபடுமா.


 
ஆனால் எது முக்கியம்?

 

ஒரு மனிதன் இம்மண்ணுலகில் விருத்திக்கு வரவேண்டுமாயின் அவனுக்கு எது முக்கியம்? 'சுவரிருந்தாலன்றோ சித்திரம் எழுத முடியும்?' ஆகவே நமக்கு திடமானதேகமே முக்கியமென்று ஏற்படுகிறதன்றோ? திடகாத்திர சரீரத்துடன் கூடி ஆரோக்கிய வாழ்வை நாம் நடாத்துவோமாயின் நாம் நமக்கு வேண்டிய ஏனைய சௌகர்யங்களை எளிதில் செய்து கொள்ளுதல் கூடும். இருக்கும் குறைகளையும் குற்றங்களையும் நீக்கிக்கொள்ளவும் கூடும். இது உலகறிந்த உண்மையாதலின், நாம் பின்னும் வற்புறுத்திக் கூறுதல் அனாவசியமே.


 மகாத்மாவின் வாக்கியம்.

 

ஆயினும் பலத்துடன் கூடிய சுத்தமான தேகத்தை அடைய மகாத்மாவாம் காந்தி மஹான் கூறும் அழகிய வாக்கியத்தைக் கவனியுங்கள்:

 

"Perfect health can be attained only by living in obedience to the laws of God and defying the powers of Satan"

அதாவது "கடவுளால் நமக்கு இடப்பட்ட கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நடந்து, தீயகருமங்களைத் தூரவிலக்குதலே பலத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கத்தக்க அருமையான மார்க்கம் என்று கூறுகிறார்.

 

இனியேனும் நமது நாட்டுப் பெரியோர் நயம்பட உரைக்கும் நலந்தரும் வார்த்தைகளை நாம் கேட்டு அதற்குத் தக்கபடி நடக்க எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியுமாறு அவனை நாம் எஞ்ஞான்றும் வழுத்துவோமாக.


 வ. கிருஷ்ணஸ்வாமி சர்மா.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - நவம்பர் ௴

 

 

No comments:

Post a Comment